‘விகாசம்“ உஷாதீபன், சுந்தர
ராமசாமி-சிறுகதை வாசிப்பனுபவம்-உஷாதீபன் ----------------------------------------------------- .“அன்புடன்…” தொகுப்பு
(தமிழின் சிறந்த படைப்பாளிகளின கதைகள்) சுப்ரமண்ய ராஜூ நினைவு வெளியீடு நர்மதா பதிப்பகம், தி.நகர்., சென்னை-600 017.
வாழ்க்கையில் நாம் எத்தனையோ பேரோடு பழக நேரிடுகிறது.
அப்படிப் பழகுபவரோடெல்லாம் நெருக்கம் ஏற்பட்டு விடுவதில்லை. ஒரு சிலர் மட்டுமே மனதுக்கு
மிகவும் நெருக்கமாகி, நம் வாழ்க்கையோடும் நெருங்கி
விடுகிறார்கள். அப்படி நெருங்கி விட்ட பின்னால் நமது குற்றங் குறைகள் அவர்களுக்கும்,
அவர்களது குற்றங் குறைகள் நமக்கும் தெரிவதில்லை. தெரிந்தாலும் அதைப் பெரிதுபடுத்திக்
கொள்வதில்லை. சகித்துக் கொண்டு செல்லப் பழகிக் கொள்கிறோம். குறைகளைச் சரி செய்ய உதவிக்
கொள்கிறோம். கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுக்கத் தயாராகி விடுகிறோம்.
மனதோடு ஒன்றி விட்ட சிலர் நம்
வாழ்க்கையோடும் ஒன்றிவிட்டவர்களாகிவிடுகிறா்கள். அவர்களுடனான பயணம் தவிர்க்க முடியாததாய்
கடைசிவரை தொடர்ந்து செல்கிறது. இருவரில் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டாலும் பரஸ்பரம்
அதைப் பெரிதுபடுத்தாமல், சமன் செய்து கொண்டு போகப் பழகிக் கொள்கிறோம். சந்தோஷ காலங்களில்
கூடிக் குலாவிக் கொள்கிறோம். அவர்களோடு ஏதேனும் பிணக்கு ஏற்பட்டாலும் அது தற்காலிகமானதாகி,
உரிமையோடு மீண்டும் கூடிக் குலாவப் பழகிக் கொள்கிறோம்.
அம்பிக்கு நன்றாகத் தெரிந்துதான்
இருக்கிறது ராவுத்தருக்கும் அப்பாவுக்குமான தற்காலிக மன வருத்தங்கள். இது அடிக்கடி
நிகழ்வதுதான்…பிறகு சரியாவதுதான்….என்று. அம்மாவுக்கும் இது தெரிந்த கதைதான். கேட்பதற்கு
உரிமை உண்டுதான்.
அவர் இல்லாம உங்களுக்கு முடியுமா,
முடியாதா? எத்தனை வருஷமா இந்தக் கூத்து? விலகறதும் சேர்த்துக்கறதும்…. – அப்பாவின்
முகம் சிவப்பதை அம்பி பார்க்கிறான்.
குளிச்சு சாப்டு, ஆனைப்பாலம்
போய் ராவுத்தரைக் கையோட கடைக்குக் கூட்டிட்டு வந்திடு….நான் போய் வண்டி அனுப்பறேன்
என்று மகனிடம் சொல்ல…அது பொறுக்கமாட்டாமல்தான் அம்மா கேட்கிறாள்.
ஓணம் வர்றது…நீ கடைக்கு வந்து
பில் போடு…. – என்று கோபமாய் இரைகிறார். உதடுகள் கோணி,வலித்துக் காட்டுவதுபோல் அப்படியொரு
கோபம். ராவுத்தரை இருக்கச் சொல்வதும், போகச் சொல்வதும், திரும்ப அழைத்து வரச் சொல்வதும்
என் உரிமை சார்ந்த விஷயம். அதில் யாரும் தலையிடக் கூடாது…என்பதன் அடையாளமான கோபம் அது.
அதை மனைவி கேட்டது பிடிக்கவில்லை.
இந்த லோகத்துல ராவுத்தர் ஒருத்தர்தான்
பில் போடத் தெரிஞ்சவரா? – மறுபடியும் அம்மாவின் கேள்வி.
வாயை மூடு….நீ எழுந்திருடா….போ…நான்
சொன்ன மாதிரி செய்….. – என்ன கேள்வி வேண்டிக் கிடக்கு என்கிற வேகம். வீடு வாயடைத்துப்
போகிறது.
பையன் அப்பாவுக்குக் கேட்காமல்
மெதுவாய் அம்மாவிடம்….ஏம்மா…முன் கோபின்னா பரவால்ல….முன்கோபமே அப்பான்னா எப்டி…? என்று
சொல்ல சிரிக்கிறாள் அம்மா. ஆனாலும் கருணை சுரக்கும் உள்ளம். தெரிஞ்சவாளையும், கூடவே
வந்துண்டிருக்கிறவாளையும் அவ்வளவு சாதாரணமா உதறிட முடியுமா? அது மனுஷத் தன்மையா என்ன?
ரொம்ப லட்சணந்தான்…புத்தியுள்ள
பிள்ளைன்னா ராவுத்தரைக் கூட்டிண்டு கடைக்குப் போ….என்று விட்டு, தன் நெஞ்சின் மீது
வலது கையை வைத்து….“அவர் என்ன பேசியிருந்தாலும் அதற்காக நான் வருத்தப்படறேன்னு அவர்ட்டச்
சொல்லு…” என்கிறாள்.
வீட்டு ஐயாவை விட வீட்டு அம்மாவின்
வார்த்தைகளுக்கு அதிக மதிப்பிருக்கும், அந்தக் கருணையை எதிராளி உணர வாய்ப்புண்டு என்கிற
நம்பிக்கை. பண்பாடு செறிந்த சமூகம் நிலவிய காலம். மனிதர்களுக்குள் ஏற்றத் தாழ்வுகள்
பேணப்படாத அன்பு மட்டுமே பிரதானமாய் கோலோச்சிய நாட்கள்.
அப்படி என்னதான் சண்டை அப்பாவுக்கும்…ராவுத்தருக்கும்….?
மின்னல் பொறியாய் மனக்கணக்கிடும் ராவுத்தரை அத்தனை சீக்கிரத்தில் ஒதுக்கிவிட முடியுமா?
அவரும் சரி, வரிசையாக ஐந்து பேர் உட்கார்ந்து காகிதத்தில் எழுதி கூட்டிக் கழிப்பதும்
சரி….சாதாரண மனித மூளையா அது? வாடிக்கையாளர்களே பார்த்து வியக்கும் அமானுஷ்யமல்லவா
அது?
சாதாரண மனுஷ ஜென்மந்தானா இவர்….?
காதால் கேட்டே இப்படி போடுறாரே….கண்ணால பார்க்க முடிஞ்சா…? இத்தனைக்கும் ஸ்கூல் படிப்பு
வெறும் மூணாங்கிளாஸ். கடையைக் கூட்டிச் சுத்தம் பண்ணித் தண்ணி எடுத்து வைக்கும் கோமதியை
விட ரெண்டு கிளாஸ் கம்மி…..ஆனா அவரது அனுபவத்துக்கு வயசுண்டா? அவரில்லாமல் ஓணம் விற்பனையை
எப்டிச் சமாளிக்கிறது?
ஆனாலும் இப்படிச் சண்டை வந்து
விட்டதே….!
தனக்கு வேண்டிய துணிகளை எல்லாம்
பொறுக்கித் தன் பக்கத்தில் குவித்து வைத்துக் கொண்டு, பிறகு ராவுத்தர் கடன் கேட்டதுதான் தப்பாய்ப் போயிற்று. கடனை இப்படி
ஏத்திட்டே போனா எப்படி, தொகை ஏறிப் போச்சே…? என்ற அப்பாவின் பேச்சுக்குப் பிறகும்….கோலப்பா…பில்
போட்டுக் கொடுத்திடு…என்கிறார். தான் சம்மதம் தரும்முன் பில் போடச் சொன்னால் எப்படி?
அவ்வளவு இளக்காரமா? மட்டுப் படுத்தறேன்….அவர் கறுவிக் கொள்கிறார். என்ன பண்ணச் சொல்றீக…வீடு
முழுக்கப் பொட்டைக…மகன் கூறில்ல…மாப்பிள்ளை கூறில்லே….மருமக நாலு, பேத்திக எட்டு, பேரன்க
எட்டு…ஆளுக்கொண்ணு எடுத்தாலும் தொகை ஏறிப் போகுதே….-வார்த்தைகள் காதில் விழவில்லை இவருக்கு.
இந்தத் தவா கடன் தரச் சந்தர்ப்பம்
இல்லை…..குரலில் கடுமை.
அப்டீன்னா நம்ம உறவு வேண்டாம்னுதானே
ஐயா சொல்றீங்க…குட்டீ….என்னைக் கொண்டு வீட்ல விட்டுரு….-கோமதியிடம் சொல்லிக்கொண்டே
எழுந்து விடுகிறார் ராவுத்தர். வழக்கமான வரேன் ஐயா கூட இன்று இல்லை. போகட்டும்…..விட்டு
விடுகிறார். அவர் கோபப்படுவதும், இவர் உடனே எழுந்து நடையைக் கட்டி விடுவதும் எல்லாமும்
சட்டுச் சட்டென்று நடந்து விடுகின்றன. மனதுக்குள் ஆழமான அன்பு உள்ளவர்களின்-இப்படி
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று வெளிப்பட்டு விடுகிறது.
இன்று…வியாபாரத்துக்கு ராவுத்தர்
இல்லாமல் முடியாது. என்ன செய்ய…?
அம்பி வந்திருக்கேன்…..ராவுத்தர்
வீட்டு வாசலில், “ நான்தான் அம்பி…“
வா…வா…. –உற்சாகம் கொப்பளிக்கும்
குரல். சாணி மெழுகிய தரையில் சப்பணம் கட்டி கம்பீரமாய் ராவுத்தர். துழாவும் கரங்கள். கண்கள் மலங்க மலங்க….இழந்துவிட்ட
ஜீவ ஒளியை மீண்டும் வரவழைக்க நினைக்கும் துடிப்பு….உணர்ச்சி வசப்பட்டதில் அதிக நெகிழ்ச்சி.
இன்னிக்கு என்ன வேட்டி…கட்டிக்கிட்டாப்ல…?
தோணிச்சி….
என்ன கரை…?
குண்டஞ்சி….
ஐயர் மாதிரியே….பார்க்கவும் ஐயர்
மாதிரியே…..இருக்கேன்னு கடைப்பையன்க சொல்வானுக….இப்படிச் சொல்லிவிட்டு அம்பியின் கன்னம், கழுத்து, நாடி,
வாய், மூக்கு, கண், நெற்றி, காதுகள் என்று தடவிப் பார்க்கிறார்…எல்லாம் கணக்கா வச்சிருக்கான்….என்றுவிட்டுச்
சிரிக்கிறார்.
அம்மா….. – ஆரம்பிக்கிறான் அம்பி.
எப்படியிருக்காங்க…உடம்பு சௌரியமா…?
அப்டியேதான்…
நம்மகிட்ட தூதுவளை, கண்டங்கத்திரி
லேகியம் இருக்கு. இழுப்புக்கு அதுக்கு மேலே மருந்தில்லே…
வந்த விஷயத்தைச் சொல்ல இதுவே
நல்ல தருணம். “அம்மா உங்களை கடைக்குக் கூட்டிண்டு போகச் சொன்னாங்க…ஏதாவது முன் பின்னாப்
பேசியிருந்தாலும் அம்மா வருத்தப்படுறதா சொல்லச் சொன்னாங்க….தட்டப் படாதுன்னும் சொன்னா…..
ராவுத்தர் முகத்தில் பரவசம். தாயே…நீ பெரிய மனுஷி….இரு கரங்களையும் மேலே உயர்த்தி
வணங்குகிறார். எழுந்திரு…இப்பவே போறோம்…..
-முடிந்தது விஷயம். அந்த வருடம்
ஓணம் விற்பனை நன்றாக இருக்கிறது. படு உற்சாகமாக
ராவுத்தர் சமாளித்து விடுகிறார். துணியின் அளவும், விலையும் காதில் விழுந்த மறு கணம்
விடை. பதினாறு அயிட்டங்களுக்குப் பெருக்கி விடை சொல்லிவிட்டு, அயிட்டம் பதினாறு, கூட்டுத்
தொகை ரூபா.1414, பைசா 25…அந்தப் பொறியை மனித மூளை என்று எப்படிச் சொல்ல முடியும்?
துள்ளல் கொஞ்சம் கூடிப் போச்சு
அந்த மனுஷனுக்கு…ரெண்டு தட்டுத் தட்டி வைக்கணும்… - அப்பா. இரவில் கண் விழித்ததுதான்
மிச்சம். ஒரு தவறைக்கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை.
ராவுத்தரின் வீடு ஏலத்திற்கு
வந்து விடுகிறது. சாமான்களைத் தூக்கி வீசுகிறானாம் அமீனா. தகவல். குழந்தை மாதிரி அழுகிறார். அழும்போதே கடைச் சிப்பந்தி
கோலப்பன் பில்லுடன் வந்து நிற்கிறான். 13 ரூபா. 45 பைசா…45 மீட்டர்…70 சென்டிமீட்டர்….
– எழுதிக்கோ…616 ரூபா…66 பைசா…
ஐயா…வட்டியும் முதலுமா ஐயாயிரத்துக்கு மேலே கோர்ட்டுல கட்டணும்…. அடுத்த
நாள் கடைக்கு வரவில்லை ராவுத்தர்.
என்ன அநியாயம்…இப்பத்தான் அவருக்காக
கோர்ட்ல பணம் கட்டிட்டு வர்றேன்…காலை வாரி விட்டாரே…நன்றி கெட்ட மனுஷன்…
கோலப்பனுக்கோ மித மிஞ்சிய கோபம்.“கணக்குப்
போடத் தெரியுமே தவிர…அறிவு கெட்ட ஜென்மமில்ல அது…இதோ போய் தர தரன்னு இழுத்திட்டு வர்றேன்…”
ரொம்பப் பொல்லாத உலகம் இது…பெத்த
தாயை நம்ப முடியாத காலம்… - சோர்ந்து போகிறார்.
சிறிது நேரத்தில் கோலப்பன்…சைக்கிள்
கேரியரில் ராவுத்தர்.
ஐயா…புத்தி மோசம் போயிட்டேன்
ஐயா…. – இரு கையையும் கூப்பிய நிலையில் ராவுத்தர்.
உம்ம கொட்டம் அடங்கிற காலம் வரும்….
-
அப்டிச் சொல்லாதீங்கய்யா…வேலைக்கு
வா…பணம் கட்டுறேன்னார் செட்டியார்…புத்தி மோசம் போயிட்டேன்…
உம்ம கொட்டம் அடங்குற காலம் வரும்…
- மீண்டும் சொன்னார் அப்பா.
என்ன ஒரு அன்பின் இறுக்கம்..?
ரத்தமும் சதையுமாய் உள்ளவர்களிடம்தான் சண்டை வரும்….சமரசங்கள் ஆகும்….படிக்கும் நாமோ
இந்தச் சின்னச் சின்ன வரிகளை….நெருங்கி அடங்கிய சம்பாஷனைகளை….வரி வரியாய்…வார்த்தை
வார்த்தையாய் உணர்ந்து நெஞ்சுருகிப் போகிறோம்..
ஆச்சரியம் நிகழ்கிறது அடுத்தாற்போல்…உம்ம கொட்டம் அடங்கும் காலம் வரும்….வந்து
விட்டதோ அந்தக் காலம்….
அந்தத் தடவை கொள்முதலுக்கு பம்பாய்
சென்று வந்த அப்பா…ஒரு சிறு மிஷினை அம்மாவிடம் காட்டுகிறார். இது கணக்குப் போடுமாக்கும்…
மிஷி்னா…?
போடும்…
அம்மா கணக்குச் சொன்னாள். அப்பா
பித்தான்களை அழுத்தினார். மிஷின் விடை சொல்லிற்று.
ராவுத்தர் மூளைய, மிஷினாப் பண்ணிட்டானா?
– அம்மாவின் கேள்வி.
மூளையில மூணு நரம்பு அதிகப்படியா
இருக்கு என்று சொன்ன ராவுத்தருக்கே அதிசயம்.
தாத்தாவை விட இது பொல்லாது…
- கோமதியின் அதிசயம் இது. வெளிறிப் போகிறது ராவுத்தரின் முகம். ஆண்டனே…இதென்ன சூட்சுமம்….?
விளங்கலியே….!!!-வாய் கெட்டித்துப் போகிறது ராவுத்தருக்கு. நடைப்பிணம் போல் கடைக்கு வந்து போய்க் கொண்டிருக்கும்
நாட்கள். சிரிப்பு, சந்தோஷம், கிண்டல், கேலி, குத்தல் எல்லாமும் இருக்குமிடம் தெரியாமல் மறைந்து போயின.
குரல் கம்மிப் போயிற்று. உடம்பு கூட சற்று இளைத்தாற்போல்….அப்பா அவரைப் பில் போடச்
சொல்லவேயில்லையே…!
அடடா…இதென்ன சோதனை….?-ஆனால் ஒன்று…அன்று
பிற்பகல் அது நடந்தது. முருகன் வெட்டியிருந்த துணிகளுக்கு நான் கணக்குச் சொல்ல…நடுவில்
“இந்தாப்பா நில்லு…” – குறுக்கிட்டார் ராவுத்தர்.
பாப்ளின் என்ன விலை சொன்னே…?
மீட்டர் 15 ரூபா…10- பைசா…
தப்பு….பீஸை எடுத்துப் பாரு….16
ரூபா 10 பைசா…. – பீஸைப் பார்த்த முருகனின் முகம் தொங்கிவிட்டது.
கிழித்த துணிகளுக்கு மிஷின் கணக்குப்
போடும்தான். ஆனால் எழுதிய விலையை தப்பாய்ச் சொன்னால்….? அந்தக் காசை எவன் கொடுக்கிறது….?
ஐயர் நஷ்டப்படுறதா? துணில எழுதினதக் கரெக்டாச் சொல்றதுக்கும் ஒரு மூளை வேண்டாமா? என்ன
ஒரு அபார ஞாபக சக்தி….?
பத்து மீட்டர் கொடுத்திருக்கே….பத்து
ரூபா போயிருக்குமே….ஐயர் முதல அள்ளித் தெருவுல கொட்டவா…வந்தே…? – அதட்டுகிறார் அவனை.
உங்களுக்கு விலை தெரியுமா…?
- அப்பாவின் கேள்வி ராவுத்தரை நோக்கி….அதிசயம்
அவருக்கு விலகியபாடில்லை. ஆஉறா…இப்படி ஒண்ணு இருக்கு போல்ருக்கே…இதுக்கு ராவுத்தர்
இல்லாம முடியாதோ? மனுஷன் கடையவே கணக்குல வச்சிருப்பார் போலிருக்கே…!
ஒரு ஞாபகம்தான் ஐயா…. - என்ன ஒரு அடக்கமான பதில்…. என்ன ஒரு முதலாளி பக்தி….என்ன
ஒரு மரியாதை…..
எல்லாத்துக்குமா….? அப்பா திரும்பவும்
கேட்கிறார்.
ஆண்டவன் சித்தம்…. – ராவுத்தரின்
பதில்.
சின்ன டவல்…?
4 ரூபா. 10 பைசா….
ஆகப் பெரிசு…?
36 ரூபா…40 பைசா…… - அப்பா கேட்கக் கேட்க, விடை உடனுக்குடன்…. ஆச்சரியத்தில்
விரிந்தார் அப்பா. சாதாரண மனுஷ மூளையா இது? இப்டியா எல்லாத்தையும் ஒருத்தம் மண்டைக்குள்ள
ஏத்தி வச்சிருப்பான்…?
இனி பில் போடறச்சே…விலை சரியா
இருக்கான்னும் பார்த்துக்கும்….சரியா….?
முடிஞ்ச வரையிலும்…. ஐயா, இன்னிக்கு
மின்சாரக் கட்டணம் கட்டியாகணும்…கடைசி நாள்….
ஐயோ…கட்டலியே….கோலப்பா…..!
அவன் வரலியே…இன்னிக்கு….
உமக்கு எப்படித் தெரியும்…வரலேன்னு…?
ஒவ்வொருத்தருக்கும் ஒரு குரல்
இருக்குய்யா…ஒரு மணம் இருக்கு…ரெண்டும் இல்லே இன்னிக்கு…முருகா…..!
நேத்து ஒரு வாடிக்கைக்கு ரெட்டை
வேட்டி இல்லேன்னான் இவன்…கண்டியுங்க ஐயா…
என்ன சொல்றீர்…?
பத்து வேட்டிக்கு விலை போட்டு வச்சீங்கல்ல…ஏழுதானே வித்திருக்கு…மூணு இருக்கணுமே…
தேடினால் மூணு சரியாக இருக்கிறது.
இருக்கிறத இல்லேன்னு சொல்றதுக்கா
உட்கார்ந்திருக்கோம் – ராவுத்தரின் கோணல் குரல்….
இதுதான் ராவுத்தர்….கடையே அதிசயித்து
வாயடைத்துப் போகிறது. அன்று மாலை அப்பா அருகில் பில் போடும் பகுதியில் ராவுத்தர். நெருங்கி
விடுகிறார்.
உங்க பக்கத்துல இருந்தா இன்னும்
கொஞ்சம் உபயோகமா இருப்பேன்….மின் விசிறியக் கொஞ்சம் கூட்டி வைக்கலாமே….அடியேனுக்கும்
கொஞ்சம் காத்து வரும்…. – கடமை சீராக நிறைவேறும் இடத்தில் தானே கிடைக்கும் உரிமை….அந்த
உரிமையின் உள்ளே பொதிந்திருக்கும் ஆழமான அன்பும் கௌரவமும்…மதிப்பும், மரியாதையும்….பண்பாட்டின்
எல்கை தாண்டாத பக்குவம்…
கடை சாத்தும் நேரம்.
ஐயா…அம்மாவுக்கு மருந்து வாங்கணும்னு
சொன்னீங்களே…வாங்கிட்டீங்களா….?
வாங்கறேன்….
ஐயா, தாயாருக்குத் திதி வருதுன்னு
சொன்னீங்களே…முருகன் கிட்ட சொன்னா…போகுற பாதையிலே புரோகிதர்ட்ட ஒரு வார்த்தை சொல்லிடலாமில்ல….
சொல்றேன்….
கடைச்சிப்பந்திகள் ஒவ்வொருவராக
நகர… கோமதி ராவுத்தரின் கைகளை எடுத்து தோளில் வைத்துக் கொண்டு நடக்கையில்…“தாத்தா…இனிமே
கணக்குப் போட வரவே மாட்டீங்களா…?
ராவுத்தரின் நிலை உயர்ந்து போகிறது.
இப்ராகீம் உறசன் ராவுத்தர் இப்போது
வெறும் கணக்கு மிஷின் இல்லை…மானேஜராக்கும்….
ஆண்டவன் சித்தம்…
சபாஷ்….!!! – சொல்லத் தோன்றுகிறதா…. உங்களுக்கு….தோன்றினால்தான்
நீங்கள் சிறந்த வாசகர். கலை இலக்கியங்களை ரசிப்பது என்பது என்ன சாதாரண நிகழ்வா? அதற்கு
ஒரு தனிப் பயிற்சி வேண்டுமய்யா…! பழகப் பழகத்தான் அது கைகூடும்….அந்த உலகமே தனி…!
எந்தப் பணியிலுமே முழுமையான ஈடுபாடு
கொண்டவனுக்கு என்றுமே எந்தக் குறைவும் ஏற்பட்டு விடாது…அது ஆண்டவனால் எழுதப்படும் கணக்கு…
ராவுத்தரின் கணக்கு…“ஆண்டவன் சித்தம்”
கதையா இது….காவியமய்யா…காவியம்…!!!!
எழுத்தாளர் சுந்தர ராமசாமி அவர்களின் பாதங்களுக்கு அன்பும் மரியாதையும் நிமித்தம் அனந்தகோடி
நமஸ்காரங்கள்….!!!
----------------------------------------------------------------------------------------------------.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக