10 மே 2019

“ஆண்” கோபிகிருஷ்ணன் சிறுகதை வாசிப்பனுபவம்- உஷாதீபன்,


“ஆண்”                                                                      சிறுகதை வாசிப்பனுபவம்-    உஷாதீபன்,             வெளியீடு: நற்றிணைப் பதிப்பகம்> வடபழனி, சென்னை.                 
               “கோபிகிருஷ்ணன் படைப்புகள்“          
     கோபிகிருஷ்ணனை எழுதுவோம் என்று அவர் முழுத் தொகுதியைக் கையிலெடுக்கப்போக, இன்றைய மே 10 அவரது நினைவு நாளாகத் தற்செயலாக அமைந்து போனது..
     ரு எழுத்தாளனுக்கு அவன் கதை எழுத கரு எங்கிருந்து தோன்றும், எப்படித் தோன்றும், எந்தப் புள்ளியிலிருந்து புறப்படும் என்று அறுதியிட்டு யாராலும் சொல்ல முடியாது. அது அவரவர் ரசனையைப் பொறுத்தது. வாசிப்பு அனுபவ முதிர்ச்சியைப் பொறுத்தது.  ஒரு கதை இன்ன இடத்தில்தான் துவங்க வேண்டும் என்று வேண்டுமானால் சொல்லி விடலாம். ஆனால் எடுத்துக் கொண்ட கருவை எப்படிச் சொன்னால் வாசகர்கள் மனதில் அதை இருத்த முடியும் என்பதை நிர்ணயிப்பவன் படைப்பாளிதான்.
தனக்கு, மனதில், தான்  பார்த்த ஒரு விஷயம் எப்படிப் பாதித்ததோ, பதிந்ததோ, அதே பாதிப்பை படிக்கும் வாசகர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்று கருதினால் ஒரு விஷயம் பாதித்த அந்தக் கணத்தி்லேயே  அல்லது அது மனதைச் சங்கடப் படுத்தும் அந்தப் பொழுதிலேயே உட்கார்ந்து ஒரே மூச்சில் சடசடவென்று எழுதி விட்டானென்றால் அது சிறப்பாக அமைந்து விடும் வாய்ப்பு நிறைய உண்டு. பிறகு ஒட்டுவது, வெட்டுவது, செதுக்குவது, நகாசு வேலை பார்ப்பது, வடிவமைப்பது என்று உருவ வெளிக்குக் கொண்டு வந்து நிறுத்துவது வரை அடுத்தடுத்த அக்கறையான பணிகள்.
ஐந்தறிவு விலங்குகள், ஆறறிவு மனிதர்கள் என்று இனம் பிரித்து வைத்திருக்கையில் (மனிதர்களுக்கு ஆறறிவு என்று யார் சொன்னார்கள்) ஆறறிவு மனிதர்களுடன் சேர்ந்து வாழும் வீட்டுப் பிராணிகளுக்கும் அந்த அறிவு எண்ணிக்கை தொற்றிக் கொள்கிறதோ என்று எண்ணும் வகையில் அல்லது அவைகள் ஆறறிவு கொண்ட மனிதர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் நடந்து கொள்ளும்போது, நாமெல்லாம் எவ்வளவு தவறி விடுகிறோம், எப்படியெல்லாம் சமயங்களில் பிணங்கி விடுகிறோம், நமது கடமைகளை மறந்து எங்ஙனமெல்லாம் முறுக்கிக் கொள்கிறோம் என்று எண்ணி வெட்கப்படவே வேண்டியிருக்கிறது.
இந்தக் கதையில் வரும் பெண் நாய் ஒரு குடும்பத் தலைவனைப் போலப் பொறுப்பாக நடந்து கொள்வது கண்டு மனித்தப் பிறவியின் ஆண் மனம் துணுக்குறுகிறது.
குடும்பத் தலைவனை இழந்த குடும்பங்களில் ஆணுக்கு ஆணாய், பெண்ணுக்குப் பெண்ணாய் இருந்து தாய் அந்தக் குடும்பத்தைத் தன் ஈடு இணையற்ற உழைப்பினாலும், அன்பு பாசத்தினாலும், தூக்கி நிறுத்துவதில்லையா?
பெற்றுப் போட்டுவிட்டு அத்தோடு தன் கடமை முடிந்தது என்றும் அதற்குப் பின் அந்தத் தாய்க்கும்  குட்டிகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று காணாமல் போகும் ஆண் நாயை என்னென்று சொல்வது? அதோட இயல்பு அது என்று சுலபமாய்ச் சொல்லிவிடுகிறோம். அப்படியே பார்த்ததனால் அது இயல்பாகிப் போயிருக்கிறது.
ஆனால் பெற்றெடுத்த மூன்று குட்டிகளில் இரண்டு காணாமல் போக, மீதி ஒன்றையேனும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று  அந்தத் தாய் நாய் செயல்படுகிறதே…
புதிய வீட்டிற்குக் குடி போகும் முன் அங்கே ஒரு நாய் இருக்கிறது  என்று முதலில் தொந்தரவாய் நினைக்கும் மனம் “அது ஒன்றும் செய்யாது…நீங்கபாட்டுக்குப் போய் வரலாம்” என்று உறுதிமொழி தர புது வீட்டுக் குடிபடலம் ஆரம்பிக்கிறது.
சொன்னதுபோல் “மில்லீ…” அதுபாட்டுக்குத்தான் இருக்கிறது. அது குரைத்துக் கூடப் பார்க்காதது இவர்களின் பயத்தை முற்றிலும் போக்கிவிடுகிறது. முகம் கழுவ கிணற்றடியில் ஒரு மக் நிறையத் தண்ணீர் தேக்கி வைக்க அதில் பாதியை அது வந்து குடித்து வைக்க, புதிய மக் ஒன்று வாங்கி அதற்குக் குடிக்கத் தண்ணீர் தவறாது வைக்கும் பழக்கம் ஆரம்பமாகிறது. தினமும் சோறு வைக்கும் பழக்கமும், பிரியாணி தின்ற அன்றைக்கு அதற்கும் பங்கு கொடுக்கும் பழக்கமும் என்றாகி, அது ஒரு பிரியமான பிராணியாகி விடுகிறது.
தான் அதன் மீது கொண்டிருக்கும் உறவை விட, தன் மகள், மில்லீ மீது கொண்டிருக்கும் உறவு இவனை வியக்க வைக்க, ஒரு மாலை வீடு திரும்பியபோது மில்லிக்குக் குழந்தைகள் பிறந்திருப்பதை மகள் சொல்ல, ரொம்பக் கிட்ட போய்க் கொஞ்ச ஆரம்பிக்காதே….குட்டி போட்ட நாய் கடிச்சிக் குதறிடும் என்று மகளை எச்சரிக்கிறான் இவன்.
அழகான குட்டிகள்….ஒன்று கறுப்பு வெள்ளை, இன்னொன்று ப்ரவுண் வெள்ளை, பிறிதொன்று முழுக்க ப்ரவுண். கீச்…கீச்…கீச்…என்ற சப்தம் மனதில் இனிமை சேர்க்கிறது அவர்களுக்கு.
மில்லியோடு சேர்த்து இனி அந்தக் குட்டிகளையும் பராமரித்தாக வேண்டும். குட்டிகள் சந்தோஷமாக வளர்ந்து கொண்டிருக்க…ஒரு நாள் மாலை அந்த சோக நிகழ்வு.  மில்லீயின் இரண்டு குட்டிகள் காணாமல் போய்விடுகின்றன. மில்லீயின் முகம் வருத்தமாக இருப்பதாகத் தோன்றுகிறது. எப்படி ஆறுதல் சொல்வது? அந்த முழுக்க முழுக்கவுள்ள ப்ரவுண் குட்டி மட்டும் தாயோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.
ப்ரவுண் குட்டி வளர்கிறது. இவன் பாத்ரூம் போனால் பின்னாலேயே ஓடுகிறது. வாசலுக்குப்போனால் அதுவரை வருகிறது. ஒரு நாள் இவன் செருப்புகள் காணாமல் போகின்றன. அடடா…வாங்கி நாலு மாசம் கூட ஆகாத புதிய செருப்புகள். நூறு ரூபாய் விலையுள்ள அவைகளைப் புதியதாய்ச் சம்பாதிக்க இன்னும் மூன்று மாதங்கள் வேண்டும் தனக்கு. வருந்திக் கொண்டே செருப்பில்லாமல் கழிவறை வரும் இவனுக்கு அங்கே ஒரு செருப்பு கிடப்பதைப் பார்த்து அதிசயம். இன்னொன்றை எங்கே…? ஒன்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அங்கும் இங்கும் பரபரப்பாகத் தேட பாதை ஓரத்தில் இன்னொன்று. அடுத்த நாள் காலையும் இதே போல். ஒரு செருப்பு மட்டும் கிடக்க…இன்னொன்று?   சுற்று முற்றும் பார்க்க, ப்ரவுண் குட்டி வாயில் கவ்விக்கொண்டு அந்த இன்னொரு செருப்பை அங்கும் இங்கும் போடவும், கவ்வவுமாக விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் களிக்கிறது. சிலமிஷம் செய்வது நீதானா?
குட்டிக்கு நம் செருப்புப் பிடித்துப் போய்விட்டது போலிருக்கிறது. இனி அது விளையாட புது ஜோடி ஒன்று வாங்கியாக வேண்டும். அதற்கு குறைந்தது ஒரு மாதமாவது வேண்டும். அதுவரை என்ன செய்வது? நாய் இயலாளரிடம் சென்று யோசனை  கேட்கலாமா?
ஒரு நாள்….வியாழன் காலை சந்து முக்கில் உள்ள டீக் கடையில் டீயை ருசித்துக் கொண்டிருக்கையில், சந்தில் கையில் கம்பி வளையத்தோடு ஒருவன் ஒரு நாயை வளைத்துப் பிடிக்க முயன்று கொண்டிருக்க…ஒரே கலவரச் சூழல்….அருகில் ஒரு வண்டி நின்று கொண்டிருக்க….பாதி டீ நிரம்பிய கிளாஸை அப்படியே வைத்து விட்டு மனம் பதை பதைக்க  வீட்டுக்கு அடித்துப் பிடித்து ஓடி வர, மில்லீ அமைதியாகப் படுத்திருக்க, குட்டி அதன் மடியை உறிஞ்சிக் கொண்டிருக்கும் காட்சி. அப்பாடா….! மனசு ஆறுதல்பட்டது. அன்று மாலைதான் காதிகிராமோத்பவனில் அந்தப் பொம்மையை வாங்கினான். ஓர் இளம் தாய் தன் மகவுக்குப் பாலூட்டும் காட்சி. அந்த பொம்மையை எழுதும் மேஜை மீது வைத்துக் கொள்கிறான்.
மறுநாள் காலை மகள் அலுமினியத் தட்டில் தயிர்ச் சோறும், ஊறுகாயும் வைத்து மில்லிக்குக் கொடுக்க எடுத்துச் சென்று கொண்டிருக்க…. மனம் மில்லீயைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. எவ்வளவோ சிரமப்பட்டு மில்லீ தன் குட்டிகளைப் பராமரித்து, இரண்டை இழந்து மீதி ஒன்றை எவ்வளவு பாசத்துடன் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. ஆனால் பெற்றுப் போட்டதோடு தன் கடமை முடிந்தது என்று காணாமல் போன, ஒரே ஒரு முறை கூட வந்து பார்க்காத  அந்த ஆண் நாய்?
சற்றுத் துயரமாகக் கூட…..!!! ஆண் என்பது வெறுமே பெயருக்கா அல்லது பொறுப்பிற்கா? எது ஆண்மை? வீரம் செறிந்ததா அல்லது விவேகம் சார்ந்ததா?
அநேகமாக எல்லாக் கதைகளையும் ஒரு முறைக்கு மேல் படித்தால் அவைகளின் கலா பூர்வமான தன்மைகளை நாம் நன்றாக ரஸிக்க முடியும்….இது கோபிகிருஷ்ணனின் கதைகளைப் பற்றி நகுலன் சொன்னது.
வாசிக்கும் நாமும் அந்த உணர்வை எட்டுகிறோம் என்பது உண்மை.
                                  ------------------------------------------------------------------

    
                                                                  

            
                    

கருத்துகள் இல்லை:

  வழி விட்டவள் - சிறுகதை - பிரசுரம் தினமணி கதிர் 07-04-2024 “ வழி விட்டவள் ” எ ன்னோட கொஞ்ச நேரம் அங்க உன்னால உட்கார்ந்திருக்க முடியுமாம்...