06 டிசம்பர் 2018

சோழன் மின்னூல் / பதிப்பகம் நேர்காணல்





சோழன் மின்னூல் பதிப்பகம்   (மலேசியா)              நேர்காணல்      
------------------------------------------------------------------------------------------------------------------------------------                                                                                       
கேள்வி – 1
தற்போது நீங்கள் எழுதத் தொடங்கியுள்ள நூலின் / புனைவின்  பெயர் என்ன?
பதில் -  முதலில் சோழன் மின்னூல் பதிப்பகத்திற்கு எனது அன்பான வணக்கங்கள். ஒரு படைப்பாளியிடம் அவன் எழுதத் தொடங்கியுள்ளதாக ஒரு சிறுகதையோ, நாவலோ, கட்டுரைத் தொடரோ என்று ஏதேனும் ஒன்று மட்டும் துவக்கப்பட்டு விரிந்து நடைபயின்று கொண்டிருப்பதில்லை. காரணம் சிறுகதைக்கான கருவும், அதற்கான துவக்கமும், ஒரு நாவலுக்கான பயணமும் அல்லது சமுதாயத்தில் பாதிக்கக் கூடிய விஷயங்களுக்கான கருத்துக்களும், எண்ண அலைகளின் ஓட்டங்களில்  விடாது இயங்கக் கூடிய ஒரு எழுத்தாளனிடம் தொடர்ந்து பயணம் செய்து கொண்டேயிருக்கின்றன. எந்தவொரு படைப்பாளியும் ஒரு சிறுகதையை எழுதிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் ஒரு நாவலிலும் கண்டிப்பாகக் கால் பதித்திருப்பார் என்றே பெரும்பாலும் கூற முடியும்.  ஆடிய கால்கள் நிற்பதில்லை என்பது போல் இது நடந்து கொண்டேயிருக்கும். கண்ணுக்கு முன்னால் நடைபெறும் அநியாயங்கள், தவறுகள் இவைகளின் உறுத்தலினால் இரண்டு சிறுகதைகள் நகர்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், எனது துறை சார்ந்த சர்வீஸ் அனுபவங்களை முன்னிறுத்தி நீல.பத்மநாபனின் “மின் உலகம்“ நாவலைப் போல் குறைந்த, நூற்றைம்பது பக்க அளவில் கட்டு செட்டாக ஒரு நாவலை எழுதி முடித்து விட வேண்டும் என்று இப்போது நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
கேள்வி – 2
அந்த நூல் ஆக்கம் எழுதத் தூண்டுகோலாக இருந்தது எது?
பதில் – இளம் பிராயம் முதல் பெற்றோர்களின் ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஒரு குறிப்பிட்ட நேர்கோட்டில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்பட்ட ஒருவன், வாழ்க்கைப் படகைச் செலுத்துவதற்கு பணம் சம்பாதித்தல் என்று இந்தச் சமுதாயத்தின் ஏதேனும் ஒரு தடத்தில் கால் பதிக்கும்போது, அங்கு இவன் அதுநாள் வரை வளர்ந்து ஆளாகியிருந்த ஒழுக்க நெறிகளுக்கு முற்றிலும் முரணான சூழல் நிலவுவதைப் பார்த்து விட்டுவிடவும் முடியாமல், இருந்து வெற்றி கொள்ளவும் இயலாமல், தன்னளவில் தனக்கு பாதிப்பில்லாமல் இருந்து மீள்வதே மிகப் பெரிய சவால் என்பதாக உணர்ந்து மாதச் சம்பளம் என்கிற வட்டத்துக்குள் கிடந்து உழன்று போகும் அவலமும் தன்னளவில் அவன் தன்னையே வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொள்வதுமான அனுபவங்களே இந்த நாவலுக்கான தூண்டுகோல்.
கேள்வி – 3
இதனை எழுதத் தொடங்கியபோது உங்களுக்கு ஏற்பட்ட சவால்கள் எது போன்றவை?
பதில் – சவால்கள் என்பது இந்த நாவல் வெளிவந்த பின்பு எழும் பிரச்னைகளின் மூலமாகத்தான் இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்போதைக்கு இந்த நிர்வாக அமைப்பின் சீர்கேட்டினை, அதாவது இருக்கும் விதி முறைகள் எல்லாமும் சரியாக இருந்தாலும்  அதை நிறைவேற்றம் செய்வதில் மனித வக்ரங்கள் ஊடாடுவதால் ஏற்படும் சீர்கேட்டினை, வழுவாது சொல்லிச் செல்வதுதான் இதற்கான சவாலாக அமையும்.
கேள்வி 4
முக்கிய சவால் எதுவாக இருந்தது? அந்த சவால்களைக் கடக்க என்னவெல்லாம் செய்தீர்கள்?
பதில் – சவால்கள் என்பதே நாம் கண்கூடாகக் காணும் விஷயத்தை அல்லது செயல்பாட்டை சீர்மையாக நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள்தான். இந்த சமுதாயத்துக்கு, மக்களுக்குப் பயன்படுவதுபோல் ஒன்றை நேர்மையாக, முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றால், அதற்கு என்னென்னவெல்லாம் தடையாக நின்று அதனை நீர்த்துப் போகச் செய்கின்றன என்பதான விஷயங்களை முழுமையாக உள்வாங்குதலும், அப்படியெல்லாம் நிறைவேற்ற இயலாது என்று எதிர்த்து நிற்றலும், அதனால் எதிர்கொள்ளும் சங்கடங்களும், கஷ்டங்களுமான அனுபவங்கள்தான். இதனைக் குறிப்பிட்டு, இது மட்டும்தான் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் சுட்டிக் காட்டி நகர்ந்து போக இயலாது. எதிர்கொள்ளப்படும் எல்லாமே சவால்கள்தான் எனும்போது அதை முழுமையாகப் பதிவு செய்வது என்பதே ஒரு மிகப்பெரிய சவாலாகத்தான் அமையும் என்று கருதுகிறேன்.
கேள்வி 5
சமூக ஊடகங்களில் உங்களது செயல்பாடுகளை எவ்வாறு வகுப்பீர்கள்?
பதில் – இலக்கியம் சார்ந்த செயல்பாடுகளுக்கே என்னைப் பொறுத்தவரை முன்னுரிமை. சமுதாயத்தைப் பாதிக்கக் கூடிய விஷயங்களுக்கு நியாயமான பார்வையில், ஏற்கப்படும் என்று கருதுவேனேயாகில்  ஆதரவைத் தெரிவித்தல்.
கேள்வி 6 –
ஃபேஸ்புக் எழுத்தாளர்களுக்கும் எழுத விரும்புவோருக்கும் எவ்வாறு உதவியுள்ளது? உங்களுக்கு?
 பதில் – எனது இலக்கியம் சார்ந்த தொடர்ந்த செயல்பாடுகள் ஃபேஸ்புக் எழுத்தாளர்களுக்கு உவப்பானதாயிருக்கின்றது என்பதை என்னால் உணர முடிகிறது. ஐயாயிரம் நண்பர்கள் வைத்திருந்தாலும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களே தொடர்ந்து ஃபேஸ்புக்கில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம் பதிவினை ரசிக்கிறார்கள்….கருத்துப் பதிவிடுகிறார்கள்…இதைவிட எழுத வேண்டும் என்கிற ஆர்வமுடையவர்கள் இதனால் ஊக்கமடைகிறார்கள் என்பது இங்கே முக்கியமாகிறது. இவர்களின் எதிர்பார்ப்பு இருக்கிறது என்கிற எண்ணமே நம் இலக்கியச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தவும், இதழ்களில் வந்துள்ள படைப்புக்களின் விபரங்களை அவர்களுக்குச் சொல்லவும், முடிந்தால் பதிவிடவும்…அதன் மூலம் இரு தரப்புமே ஊக்கம் பெறுவதும் முகநூலால் ஏற்பட்ட நட்பு வட்டத்தின்பாற்பட்ட ஊக்கச் செயல்பாடாக அமைந்து மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
கேள்வி 7
கிண்டிலில் மின்னூல் அல்லது பிடிஃப்பில் நீங்கள் வாசிப்பதுண்டா?
பதில் – பிடிஎஃப்பில் வாசிப்பது என்பது எப்போதோ வந்து விட்டது. டாப்லட் என்ற ஒன்று இருப்பதே அந்த வாசிப்பிற்காகத்தான். இதனால் வலைத் தளத்தில் கொட்டிக் கிடக்கும் ஏராளமானவைகளைத் தேடிக் கண்டடைந்து நமது டாப்லெட்டில் சேகரித்து வைத்துக் கொண்டு  தினசரி படித்து வருவதும், வெளியே கிடைக்காத பல புத்தகங்கள் குறிப்பிட்ட தலைப்பிலான வலைத்தளங்களில் காணக் கிடைப்பதும், ஒரு சிறிய கையகலக் கருவிக்குள் எண்ணிக்கையிலடங்கா பொக்கிஷங்களை வைத்திருப்பதும், நினைத்த போது நினைத்த நேரத்தில் சட்டென்று அந்தப் பக்கத்திற்குச் சென்று படிக்க உதவுவதும் இப்படியான ஏராளமான வாசிப்பு அனுபவம் பிடிஃஎப்  பதிவுப் புத்தகங்களால் கிடைத்திருக்கிறது. 
கிண்டிலில் மின்னூல் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது என்றே சொல்வேன். அதன் மூலமாக படைப்பாளிகள் தங்களது லேட்டஸ்ட் புத்தகங்களை ஏற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். சில பல பழைய புத்தகங்களும் கூட முழுவதுமாகத் தரவிறக்கம் செய்து சேமித்துப் படிக்கும் வகையில் கிண்டில் அமைந்திருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. புதிய புத்தகங்கள் சாம்பிளாகச் சில பக்கங்கள் கிடைப்பதும், கொஞ்ச நாள் கழிந்த பொழுதில் விலை குறைக்கப்பட்டு, குறைந்த விலையில் அதிகப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வசதியாக அமேசான் தளத்தில் கிடைப்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். எதிர்காலம் அச்சுப் புத்தகங்களிலிருந்து விலகி முழுவதுமாக இதற்குள் வந்து விடும் வாய்ப்பு இருக்கிறது என்றே தோன்றுகிறது.
கேள்வி – 8
கிண்டில் வாசிப்பதில் உங்கள் அனுபவம் எப்படி?
பதில் - பலருக்கும் கையில் அச்சுப் புத்தகமாக வைத்துப் படித்தால்தான் திருப்தி. காரணம் அவர்கள் விரும்பும் வரிகளைக் கோடிட்டு முக்கியப்படுத்துவதும், குறிப்பாகப் பயன்படுத்திக் கொள்ள உதவுவதுமாக அது உதவுகிறது. ஆனால் கிண்டில் வாசிப்பதில் சின்னச் சின்னப் பக்கங்களாக விறுவிறுவென்று நகர்ந்து போவதை உணர்ந்து நாம் படிக்கையில் ஒரு உற்சாகம் நம்மைக் கூடவே இழுத்துச் செல்கிறது. மிகப் பெரிய நாவலாயினும் கூட, அப்பாடி….இவ்வளவு பெரிசா….? என்ற பிரமிப்பு பார்வையளவில் ஏற்பட வாய்ப்பில்லை. சாம்பிளாகத் தரப்படும் சில பக்கங்களைப் படித்து விட்டுப் பிடித்திருந்தால் விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் விட்டுச் செல்லலாம். அதுபோல் விலை அதிகம் என்று கருதினால் பொறுத்திருக்கலாம். தமிழ்ப் புத்தகங்களுக்கு கிண்டிலின் ஆரம்ப காலம் இது என்பதால் சில மாதங்களிலேயே புத்தகங்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன என்பது இங்கே முக்கியத் தகவலாகிறது. இது எல்லாவற்றிலும் விட வீட்டில் லைப்ரரி என்று அலமாரியில் அடுக்கி வைத்து, அவை படிக்கப்படாமல் தூசியேறி, தினம் தினம் அவற்றை நாம் கடந்து செல்கையில் அவை நம்மைப் பார்த்துச் சிரிப்பதும், என்று என்னைப் படிக்கப் போகிறாய் என்று அவை நம்மோடு பேசுவதும்,  குறைபட்டுக் கொள்வதும், உன்னிடம் காசு இருக்கிறது என்கிற திமிரில்தானே இப்படி என்னை வாங்கி பெருமைக்கு அடுக்கியிருக்கிறாய் என்று அவை எள்ளி நகையாடுவதும் ஆகிய பழி பாவங்கள் இல்லாமல் போகின்றன இந்தக் கிண்டில் மூலம்.
கேள்வி – 9
சமகால இலக்கியத்தில் கிண்டில் மூலம் வாசிக்கும் பழக்கம் இப்போது எவ்வாறு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில் ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன. மிகவும் குறைவான அளவிலேயே புத்தகங்கள் நகர்கின்றன எனலாம். ஓரிரு மாதங்களிலேயே புத்தகங்களின் விலை குறைக்கப்படுவதே இதற்குச் சான்று. மக்கள் அச்சுப் புத்தகங்களைக் கையில் ஏந்திக் கொண்டு படிப்பதில்தான் இன்னும் சுகம் காண்கின்றார்கள். ஆனால் தமிழ்ப் புத்தகங்களுக்காக ஏங்கி நிற்கும் வெளிநாட்டில் வாழ்வோருக்கு இந்தக் கிண்டில் புதிய வெளியீடுகள் பெரிய மகிழ்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கலாம். புதிய புதிய படைப்பாளிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்க ஏதுவாக கிண்டில் அமையும். ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலமான படைப்பாளிகளின் புத்தகங்கள் கிண்டிலில் கிடைக்கின்றன. சமகால இலக்கியம் இப்போதுதான் சின்னச் சின்னப் புத்தகங்களாக கிண்டிலில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. இதிலும் முக்கியமாகக் குறிப்பிடப் பட வேண்டிய ஒன்றுஅச்சுப் புத்தகங்களை விட இவை விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதுதான். என்ன ஒன்று என்று நினைத்தால் வாங்கிப் பரிசளிக்க முடியாது….படித்து முடித்து அடுத்தவருக்கு தானமாகக் கொடுக்க முடியாது. மீள வராமல் போனாலும் பரவாயில்லை என்று தெரிந்தே  இரவல் வழங்க முடியாது. அப்படியான வாசிப்புப் பழக்கத்தைப் பரப்பும் வழிமுறைகள் சற்றுக் குறைவு இதில்.
கேள்வி 10 –
கிண்டில் வாசிப்பு அதிகரித்தால் அச்சில் வாசிப்பு பாதிக்கப்படுமா?
பதில் – கண்டிப்பாக. ஆனால் அதற்கு வெகுநாட்கள் ஆகும். இன்னும் புத்தகக் கண்காட்சிகளுக்குக் குறைவில்லையே தமிழ்நாட்டில். விற்பனையும் சொல்லிக் கொள்ளும்படியாகத்தானே இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் புத்தகங்கள் என்பதே வலைத்தளத்தில் படிப்பது என்பதாக அமைந்து விடும் என்றுதான் தோன்றுகிறது.
கேள்வி 11 – கிண்டில் வாசிப்பு, பதிப்புப் படைப்பாளியை எவ்வாறு பாதிக்கும் என்று கருதுகிறீர்கள்?
பதில் – கிண்டில் வாசிப்பு பதிப்பாளரை எவ்வாறு பாதிக்கும் என்று கேட்கிறீர்களா? பாதிக்கத்தான் செய்யும். ஆனால் அதற்கு சற்றுக் காலம் பிடிக்கும். ஏனெனில் காலம் காலமாகப் பதிப்புத்  தொழிலில் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதை ஒரு குலப் பெருமையாகவே கருதிச்  செய்து கொண்டிருக்கிறார்கள். சிறந்த புத்தகங்களை வெளியிடுவது, சிறந்த படைப்பாளிகளை அடையாளம் கண்டு அவர்களின் படைப்புக்களை வாங்கிப் போடுவது என்பதே பெருமையான விஷயமாகக் கருதுபவர்கள் இவர்கள். பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் இவைகளுக்கெல்லாம் அச்சுப் புத்தகங்களை வழங்குவதுதானே உகந்ததாக இருக்கும். அப்படியிருந்தால்தானே மாணவர்களை, ஆய்வாளர்களை எளிதில் அவர்களின் பணிகளைத் தடையின்றிச் செய்ய உகந்ததாக அது அமையும். அதற்குப் பதிப்பகங்கள்தான் பெரிதும் உதவி நிற்கின்றன. வலைத் தளங்களின் மூலமும் இதனிலும் அதிகமான வேகத்தில் எளிதில் எல்லோரையும் சென்றடையச் செய்யலாம்தான். ஆனால் அது கல்வியளவில் சற்றுக் காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது. ஆகையால் பதிப்பாளர்களை கிண்டில் போன்ற புத்தக வரவுகள் பாதிக்கவே செய்யும் கொஞ்சம் கொஞ்சமாக. பதிப்புப் படைப்பாளியை என்ற சொற்றொடரை, புத்தகமாகவே போட விரும்பும் படைப்பாளியை என்று கொண்டால் அவரையும் கிண்டில் வரவு மெல்ல மெல்ல பாதிக்கும்தான். ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும்.
கேள்வி – 12
ஒரு வாசகனாக கிண்டில் வாசிப்பு உலகத்தை எதிர்காலத்தில் நீங்கள் ஆதரிப்பீர்களா?
பதில் – எதிர்காலத்திலென்ன…இப்போதே ஆதரித்துக் கொண்டுதான் இருக்கிறேன். தரமான இலக்கியப் புத்தகங்களை வாங்குவதும், இலவசமாகக் கிடைப்பதைத் தரவிறக்கம் செய்து படிப்பதுமே இப்போது என் வழக்கமாக இருக்கிறது. எனது 13-வது சிறுகதைத் தொகுப்பான ”முரண் நகை” என்ற புத்தகத்தை முதன்முறையாக கிண்டிலில்தான் இப்போது நான் வெளியிட்டிருக்கிறேன். அதற்கு தமிழ்நாட்டில் விட வெளிநாடுகளில் எப்படி ஆதரவு கிடைக்கிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். அதைப் பொறுத்து அடுத்தடுத்து கிண்டிலில் என் படைப்பாக்கங்களைப் புத்தகமாக வெளியிடுவதுதான் என் எதிர்காலத் திட்டம். அத்தோடு எந்தப் பதிப்பகம் நம் புத்தகத்தைப் போடும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை இல்லை. ராயல்டி தரவில்லை என்கிற மனக்குறையும் கிடையாது. யாரிடமும் எந்த வருத்தமும் இல்லை என்கிற விட்டேற்றியான சந்தோஷம் நிலைக்கிறது.
கேள்வி – 13
கிண்டில் மின்னூலுக்கான எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில் – வளமாக இருக்கும். ஆனால் சற்றுக் காலம் பிடிக்கும். நம் மக்களை அவர்கள் காலம் காலமாய்ப் பழகிய பழக்கங்களிலிருந்து வெளியே கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. வீட்டில் ஒரு அறையையே முழுவதுமாய் அடைத்துக் கொண்டிருக்கும் மொத்தப் புத்தகங்களின் பல்லாயிரக் கணக்கான பக்கங்கள் ஒரு கையடக்க ஆன்ட்ராய்ட் மொபைலில் ஒரு ஓரமாய் சத்தமேயில்லாமல் அமிழ்ந்து கிடக்கும் வசதியை எல்லோரும் சீக்கிரமே உணரத்தான் போகிறார்கள். அந்தக் காலம் இது ஒன்று போதும் எனக்கு என்று ஒரு தீவிர வாசகனை, ஒரு புத்தக விரும்பியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும். அந்த நாள் இனிய நாளாக நம் எல்லோருக்கும் கட்டாயம் அமையும்.
கேள்வி 14 –
அச்சுப் பதிப்பகம் எவ்வாறு பாதிப்படையும் என்று கருதுகிறீர்கள்?
பதில் – மேற்குறித்த கேள்விகளுக்கான பதில்களிலேயே இக்கேள்விக்கான பதிலும் அடங்கியிருக்கிறது. அச்சுப் பதிப்பகம் படிப்படியாகத் தேவையின்றிப் போகும். அச்சுப் பதிப்பகத்தார்கள் படைப்பாளிகளின் மின்னூல்களை விற்பனை செய்து தரும் நிறுவனங்களாக மாறுவார்கள். படைப்புக்களை வாங்கி, மின்னூல்களாக  மாற்றும் பணியை அவர்களே செய்வார்கள். அதி்ல் பிற வியாபார நடைமுறைகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். ஆனாலும் பரவாயில்லை என்று வெவ்வேறு விதமான நடைமுறைகள் எதிர்காலத்தில் முளைத் தெழக் கூடும். இவ்வாறாக மின்னூல்களின் அவசியம் அதிகமாகி அச்சுப் பதிப்பு என்பது தன்னைத் தானே படிப்படியாக மறைத்துக் கொள்ளும்.
கேள்வி – 15
தொலை நோக்கில் மின்னூல் உலகம் நாம் வாழும் உலகை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்று நினைக்கிறீர்கள்?
பதில் – வாழும் உலகை எவ்வாறு பாதிக்கும் என்றால் புத்தகங்களா மொத்த உலகையும் ஆட்கொண்டிருக்கிறது? அது ஒரு பகுதி..அவ்வளவுதான். இந்த உலகம் அனுபவங்களால் சூழப்பட்டது. மனிதர்கள் சுய அனுபவங்களால் பக்குவப்பட்டவர்கள். வாழ்க்கை அனுபவ சாரங்கள் அவர்களைப் பட்டை தீட்டியிருக்கின்றன. அதனை எழுதி வைத்தவர்கள் குறைவு. அதைப் படிப்பவர்கள் அதனிலும் குறைவு. எனவே மின்னூல் உலகம் என்பது பதிப்பு உலகத்தைப் படிப்படியாகப் பாதிக்கும். காலத்திற்கேற்றாற்போல் பதிப்பாளர்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டியிருக்கும். நாம் வாழும் உலகு மின்னூல் உலகாக சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருப்பதை, விடாது கவனித்து உடன் பயணிக்கும் மக்கள் உலகின் போக்கினுக்கேற்றாற்போல் தங்களை எளிதாக மாற்றிக் கொள்வார்கள். மாட்டேன் என்றால் பின் தங்கி விடுவார்கள்.
கேள்வி – 16
கிண்டில், பிடிஎஃப்பில் நீங்கள் வாசித்த நூல்கள்….?
பதில் – கிண்டிலில் இப்போதுதான் நானும் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன் என்றே சொல்ல வேண்டும். விமலாதித்த மாமல்லனின் “புனைவு என்னும் புதிர்” என்ற நூல் என்னைக் கவர்ந்த முதல் புத்தகம். எழுத்தாளனால் அவன் காணாத உலகை எப்படித் தன் கற்பனையில் காண முடிகிறதோ அதே போல, தீவிர வாசகன் அவனுக்குக் காட்டப்படும் உலகை, அதுவரை அவன் கண்டிராத போதிலும் சட்டெனப் பிடித்துக் கொள்கிறான் என்கின்ற ஆழ்ந்த ரசனையின்பாற்பட்ட விஷயத்தை உள்ளடக்கிய புனைவு என்னும் புதிர் என்ற இப்புத்தகம் சமீபத்தில் நான் படித்ததில் என்னைக் கவர்ந்த முக்கியமான ஒன்று.
பிடிஎஃப்பில் நிறையப் படித்திருக்கிறேன். படித்துக் கொண்டுமிருக்கிறேன். மகா பெரியவரின் “தெய்வத்தின் குரல்” இன்றும் அனுதினமும் நான் படித்து அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய நூல்.
கேள்வி 17 – மிக அண்மையில் எழுத வந்திருக்கும் கவிதை, புனைவு வகைமைகளில் உங்களை மிகவும் கவர்ந்தவர்கள்?
பதில் – நான் மணிக்கொடிக் கால எழுத்தாளர்களிலிருந்து ஜெயகாந்தன் வரையிலும் பிறகு ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் என்றும் விடாது தொடர்ந்து படித்து வருபவன். அவர்களின் எழுத்து கவர்ந்த அளவு தற்போதைய இளம் படைப்பாளிகளின் எழுத்துக்கள் என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஓரொரு சிறுகதைகள் என்று வேண்டுமானால் சொல்லிப் போகலாம்.மேலும் பாலுணர்ச்சி சார்ந்த விஷயங்கள் கருத்தூன்றிச் சொல்லப்படுகின்றன. அதில் எனக்கு ஒப்புதல் இல்லை.  கவிதைகளில் என்னைக் கவர்ந்தவர் யவனிகாஸ்ரீராம். அவரது கவிதைகளுக்கு நான் எப்போதும் ஆழ்ந்த ரசிகன்.
கேள்வி 18
அவர்களுடைய ஆக்கங்களை நீங்கள் வாசித்தது அச்சிலா, கிண்டிலிலா…,?
பதில் - அச்சில்தான். காரணம் அவர்களின் அச்சில் வந்த புத்தகங்கள்தான் கிண்டிலில் வலம் வருகின்றன.
கேள்வி 19 –
கிண்டிலில் நீங்கள் வாசிக்க விரும்பும் நூல் வகைகள்…?
பதில் – அதிலென்றால் வகைமைகள் மாறி விடப் போகிறதா என்ன? கைக்கு சுமையில்லாமல் சேர்த்து வைக்கலாம் என்பதுதானே….பல்லாயிரம் பக்கங்களையும் சின்ன இடத்தில் அடக்கி விடலாம் என்கிற வசதிதானே…..அச்சில் எதையெல்லாம் படிக்க விரும்புகிறோமோ அதுவே கிண்டிலிலும் வரப்போகின்றன. வந்து கொண்டிருக்கின்றன….அப்படியான கதைகள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், ஆய்வு நூல்கள்… மொழி பெயர்ப்புகள் .என்கிற வகை மாதிரிதான்..கிண்டிலிலும் நான் வாசிக்க விரும்பும் நூல்கள்.
கேள்வி 20 –
நீங்கள் பல்லாண்டுகளுக்கு முன் வாசித்த, மீண்டும் கிண்டில்/ பிடிஎஃப்பில் வாசிக்க விரும்பும் நூல்…?
 பதில் - தி.ஜா.ரா. வின் “மோக முள்”, ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்….இப்படி நிறைய…உண்டுதான். நூல் என்றுதானே கேட்டிருக்கிறீர்கள்….! இரண்டே அதிகம்……
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
   .


கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...