13 அக்டோபர் 2018

“அமுதம் விரித்த வலை - குறுந்தொடர் -


                          
     அமுதம் விரித்த வலை“    -குறுந்தொடர்
     -------------------------------------
     ன்று பிரேம்குமாருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. குறிப்பிட்ட காட்சிக்கு இன்று ஐந்து டேக்குகள். புதிதாகத் திரைக்குள் புகுந்த புது முகங்கள் கூட இன்று தப்புவதில்லை. அடித்துத் தூள் கிளப்புகிறார்கள். ஆனால் எனக்கு என்ன வந்தது? ஏன் இன்று கவனம் இப்படிச் சிதறுகிறது?  அந்தக் காட்சியில் அந்தப் புதுமுகப் பெண்ணும்தான் எத்தனை முறை தன்னிடம் அடி வாங்கும்?
    
     பரவால்லண்ணே…போதும்…சரியாத்தான் வந்திருக்கு…- தயங்கிக்கொண்டே கூறிய துணை இயக்குநர் விதேந்திரனை முறைத்தான் பிரேம். இவன் யார் இதைச் சொல்ல? எப்படி வந்தது தைரியம்? யார் கொடுத்தது? எது கொடுத்தது? இவனெல்லாம் பேச ஆரம்பித்து விட்டானா? எனக்கான காலக்கேடுதானா இது? சே…! என்னவெல்லாம் தோன்றுகிறது இந்த மனதில்?  இருக்கும் இடம் தெரியாமல் நிற்கும் ஆளெல்லாம் வாயைத் திறக்கிறான்கள்?
    
     மனசு சலித்தது பிரேம்குமாருக்கு. இருந்தாலும் வெளிக்காண்பித்துக் கொள்ள அவன் அப்போதைக்கு விரும்பவில்லை.
    
     உனக்குப் போதும்யா…நீ கூடவே இருந்து எப்பவும் என்னைப் பார்க்கிறவன்…ஆனா என் ஆட்களுக்கு? அவுங்களுக்கு சரியான தீனி போட்டாகணுமே…எதிர்பார்த்திட்டே உட்கார்ந்திருப்பாங்களே…மனசில அவ்வளவு ஆசையைத் தேக்கி வச்சிட்டுக் காத்திருப்பாங்களே…அவுங்கள நான் ஏமாத்தக் கூடாதுல்ல….- வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஒரு உதவி இயக்குநரிடம் சகஜமாகப் பேசியிருக்கிறான் பிரேம்குமார். அவனுக்கே ஆச்சரியம். இவனின் நெருங்கிய பேச்சில் அவன் முழித்துப் போனான். மேற்கொண்டு வார்த்தைகளே வரவில்லை அவனுக்கு.
    
     ஒவ்வொரு முறையும் தனக்குத் திருப்தி ஏற்படாத காட்சிகளில், இப்படித்தான் சொல்வான் பிரேம். அப்படியே பார்த்துப் பார்த்து, உயிரைக் கொடுத்து உழைத்து மேலே வந்தவன் அவன். உண்மையான உழைப்புக்கு என்றும் பலனில்லாமல் போகாது என்பதில் அதீத நம்பிக்கை உள்ளவன். ஆனால் அதற்கும் ஒரு காலம் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது போலும்…அதனால்தான் தனது முந்தைய இரண்டு சொந்தப் படங்களும் பின்னுக்கு இழுத்துக் கொண்டனவோ…அதற்கும் முந்தைய பிற கம்பெனிப் படங்கள் ஊத்திக் கொண்டனவோ? திரும்பத் திரும்ப மனதுக்குள் தோன்றித் தோன்றித் துடிக்க வைக்கும் அவமானங்கள் இவை. அடுத்தடுத்து எத்தனை வெற்றிகளைக் கொடுத்தவன் அவன். வரிசையாகப் பதினைந்து இருபது என்று வெற்றி மேல் வெற்றி வந்து என்னைச் சேரும் என்று அயராது உழைத்துக் களைத்தவனாயிற்றே! அவனுக்கா தோல்வி? யாரிட்ட சாபம் இது? எவரிட்ட பொல்லாங்கு?
     களைத்தவனா? நானா களைத்துப் போனேன்? அன்று போல்தானே இன்றும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். பின் எது என்னை இப்படிப் பின்னுக்குத் தள்ளியது? விடை தெரியா கேள்விகள் பல. அதற்கு முக்கிய காரணம் அவள். அந்த மேகலா. நான் கை பிடித்து அழைத்து வந்தவள். கூடவே வைத்துக் கொண்டு உயரத்தைக் காண்பித்து மேலே போய்விடு என்று தூக்கி உச்சிக்கு அனுப்பி இப்பொழுது அங்கிருந்து என்னைப் பார்ப்பவள். என்னவொரு கொடுமை? காலம் இப்படியுமா வேடிக்கை காட்டும்?அவளோடு கை கோர்த்த படங்கள் அத்தனையும் வெற்றி. என்னுடன் சேர்ந்து அவள் மார்க்கெட் பிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விட்டது. கைக்கு எட்டாத தூரம் போய்விட்டாள் அவள்.    
     நெஞ்சுக்குள் இனம் புரிந்த குரூரம்…! பொறாமை அறுத்தது நெஞ்சை. பார்ப்பவர் எல்லாரிடமும் அநாவசியமாய் குற்றம் கண்டு பிடித்தது. தீக்குழம்பு மனதுக்குள். கொதித்துக் கொண்டிருக்கிறது தளதளவென்று. எதை ஊற்றி அணைப்பது என்று புரியாமல் தவிக்கிறேன் நான். இவன் என்னடாவென்றால் எனக்கு ஆறுதல் சொல்கிறான். நான் மட்டும் பழைய பிரேமாய் இருந்திருந்தால் இவன் வாய் இப்படி நீண்டிருக்குமா? அல்லது இந்த இடத்தில்தான் இந்நேரம்வரை நின்றிருக்க முடியுமா? எல்லாம் காலத்தின் கோலம்…நேரக் கொடுமை…!
    
     அப்படி என்ன வீழ்ச்சி வந்து விட்டது தனக்கு. வெளியே ஒன்றும் அதற்கான பரபரப்புத் தெரியவில்லையே….? எல்லாம் வழக்கம்போல்தானே நடந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்றாவது முயற்சியும் தோல்வியில் முடிந்து விடுமோ? வந்தது வரட்டும், போனது போகட்டும் என்று இறங்கியாயிற்று. வெற்றி இலக்கை மீண்டும் தொட்டாக வேண்டும். அதை நோக்கித்தான் ஓடிக் கொண்டிருக்கிறேன். இடையில் எது வந்து வந்து தடுக்கிறது? என்ன பயம் அது? ஏன் வந்தது? இரண்டு தோல்வி மூன்றாவது வெற்றிக்கான படியாக அமையக் கூடாதா? அதுவும் தோற்றுத்தான் போகும் என்று ஏன் இப்பொழுதே மனதுக்குள் மண்டிப் போக வேண்டும்?   ஏன் ஊமையாய் அழ வேண்டும். தாழ்வுணர்ச்சி வெற்றியைப் பூமிக்குள் புதைத்து விடுமோ?      என் முனைப்பு மழுங்கிப் போய்விட்டதோ?

     நினைப்பது சரி? ஆனால் உலகம்? அந்த ரசிகர்கள் உலகம்? என்னையே நினைத்துக் கொண்டிருக்குமா? என்னை மீண்டும் எழுப்பி நிறுத்துமா? சும்மாவானும் தூக்கி நிறுத்து என்றால் எப்படி? கொடுப்பதைக் கொடுத்தால்தானே தூக்கும்? கொடுப்பதைக் கொடுத்தால் அவர்கள் என்ன தூக்குவது, அது தானே உயர்ந்துதானே நிற்கும்? அப்படியானால் இதுநாள்வரை தான் அவர்கள் மூலம் நிற்கவில்லையா? அவர்கள்தானே கூட்டங்கூட்டமாய்ப் போய் அதிர வைத்தார்கள்? அதை மறந்து விட முடியுமா? அந்தப் பரபரப்பை உலகறியச் செய்தவர்கள் அவர்கள்தானே? அப்படித்தானே நான் உச்சிக்குப் போனேன்? பிறகு எப்படிக் கீழே விழுந்தேன். ஏன் இன்னும் எழமுடியாமல் தவிக்கிறேன்? என்னை இந்த ரசிகர் உலகம் மறந்துவிட்டதா? போதும் என்று அலுத்துவிட்டேனா நான்?
     உன்னைப்பற்றியே இந்த உலகம் நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமா? மற்றவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா? இப்போது எந்தப் பத்திரிகைக்காரனாவது எழுதுகிறானா? எதிலாவது உன் செய்திகள் வருகின்றனவா? காலம் மாறிப்போச்சுய்யா… தோல்விப்படமாக் கொடுத்தேன்னா? எவன் கவனிப்பான் உன்னை? சரக்கு நல்லாயிருந்தாத்தானே விலை போகும்? சும்மாவானும் வித்துப்புடணும்னு குதியாட்டம் போட முடியுமா? இது குதிரை ரேசு. தெரியும்தானே…? ஜெயிக்கிற குதிரை மேலதான் கட்டுவாங்க….அது ஆம்பளையா, பொம்பிளையா கணக்கில்லே….காசப்போட்டா டபுளா எடுக்கணும்….அவ்வளவுதான்….உனக்குப் போட்டியா பறந்தடிக்கிறாளே ராக்கி…அவ மார்க்கெட் இப்போ எங்க இருக்கு தெரியுமில்ல? நீ பண்ணுன போலீஸ் வேஷத்தப் பூராவும் இப்போ அவுளுக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க….பொம்பளப் போலீசு எங்கயாவது இத்தனை சாகசம் செய்ய முடியுமா? முடியும்….ஏன் முடியாது? சினிமாவுல செய்யலாமுல்ல….யாரு தடுக்கப் போறா? தீமையை அழிச்சிட தீயாப் புறப்பட்டவடா நா….ன்னு அவ பேசுற வசனம் இன்னைக்கு ஒவ்வொருத்தன் வாயிலயும்…..இப்போ இதுதாம்ப்பா டிரென்ட்….ஒரு படம் வெற்றியாச்சின்னா வரிசையா முப்பது படம் எடுத்திட்டுத்தான் ஓய்வாங்க ஃபீல்டுல…உனக்குத் தெரியாதா? நீ பார்க்காத பரபரப்பா? எல்லாம் பார்த்து ஓய்ஞ்சுதான இன்னைக்கு இப்டி நிக்கிறே…? திரும்ப நிமிரணும்னா அந்த முயற்சி எந்தளவுக்கு இருக்கணும்னு உனக்குச் சொல்லியா தரணும்?
    
     மனசு தொடர்ந்து எச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறது.-ஆனாலும் எதுவோ காழ்ப்புணர்ச்சியைத் தூண்டியது. இல்லையென்றால் கேரளத்திலிருந்து இப்படியொரு ஜோடியைத் தேர்ந்தெடுக்க ஓட வேண்டி வந்திருக்குமா?
                                ( 2 )
     அங்கிருந்தபடியே சற்றுத் தள்ளி வேறொரு காட்சிக்குக் கோணம் பார்த்துக் கொண்டிருந்த டைரக்டர் நவீனை நோக்கிக் கை தட்டினான் பிரேம். சுற்றிலுமிருந்த மலைச்சாரல் பகுதியும், அந்தப் பண்ணை வீடும், அவனுக்குப் புதிய உற்சாகத்தை அளித்திருந்தன. அப்படியும் மனதைப் பழைய நினைவுகள் புரட்டிப் போட யத்தனிக்கின்றன. மொத்தக் கதைக்கும், அந்தக் குறிப்பிட்ட இடத்திலும், சுற்றுப் பகுதிகளிலுமான காட்சிகளை ஒரேயடியாக எடுத்து முடித்துக்கொண்டு பிறகு சென்னைக்குக் கிளம்பலாம் என்று சொல்லி அவன்தான் மொத்த யூனிட்டையும் அங்கு தங்க வைத்திருந்தான். பணம் ஆறாய்ப் பெருகி நீராய் ஓடியது. இனி அடகு வைப்பதற்கு ஒன்றுமில்லை. சென்னை பங்களாவையும் எழுதிக் கொடுத்திருப்பது இதுவரை யாருக்கும் தெரியாது. துணிந்தவனுக்குத் துக்கம் இல்லை என்று இறங்கியாயிற்று. ஆனால் இறங்கி நடக்க நடக்கத்தான் துக்கம் பெருகுகிறது. பயப்பேயைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டே செல்வது போன்ற பிரமை.
    
     வந்திட்டேன்….என்ன ஓ.கே.தானே? – கேட்டவாறே பரபரப்பாய் நெருங்கியவரை, திருப்தியில்ல…இன்னொரு டேக் எடுத்திருவோம் என்றான் பிரேம். அவர் விதேந்திரனைப் பார்த்தார். அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் நிற்பதைக் கண்டு ஏதோ புரிந்தவராய், நோ, ப்ராப்ளம்….முடிச்சிருவோம்….என்றார்.
                                ( 3 )
     கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டான் பிரேம். ரொம்பவும் பொருத்தமாகத்தான் அந்தத் தந்தை காரெக்டரை அப்போது உணர்ந்தான். தலையில் மாட்டியிருந்த விக்  கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தது. முன் பக்க நரையும், இரு காதுப்பக்க நரைகளும், அவன் முதிர்ந்த முகத்திற்கு ஒரு தனி தேஜஸைக் கொடுத்தன. முகத்தின் வட்டத்திற்கு ஏற்றாற்போல, இரட்டை நாடிக்கு உகந்தாற்போல் கனமான மீசை. உறா…என்ன ஒரு கம்பீரம்? இனிமேல் வயதான வேடங்களை ஏற்றால் கடைத்தேறும் போலிருக்கிறதே?  அப்படிக் கொஞ்ச காலம் காசு பண்ணலாமா, தாங்குமா சினி உலகம்?
     மனசு இதற்கும் துள்ளிக் குதிக்கத்தான் செய்கிறது. இந்தப் படத்தின் மூலம் குறைந்த பட்சம் அதையாவது உறுதி செய்து விட வேண்டும். வில்லன் வேஷங்கள் கிடைத்தாலும் ஓ.கே.தான் என்று புறப்பட்டு விட வேண்டியதுதான். அப்படி ஒரு அம்பது படம் தன்னால் ஓட்ட முடியாதா என்ன? ஆனால் ஒன்று. அதற்கென்று ஏதேனும் விசேஷத் தன்மையை, ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை யாராலும் தொடப் படாத, தொட முடியாத நடிப்பு வகை. தீயாய் இருக்க வேண்டும்.
     என்ன இது? எதற்காகத் தன் சிந்தனை இப்படியெல்லாம் பாய்கிறது? என் தோல்வியை நானே ஒப்புக் கொள்கிறேனா? என் காலம் முடிந்து விட்டது என்று என்னையறியாமல் முடிவு செய்து விட்டேனா? அதனால்தான் சென்ற முறை ஊட்டியில் வைத்து  அந்தக் குறிப்பிட்ட காரெக்டரைப்  பண்ணுறீங்களா என்று அவர்கள் கேட்டார்களோ? என்ன ஒரு தைரியம்? என்னைப் பார்த்து அப்படிக் கேட்பதற்கு? இரண்டில் ஒன்றாய் நானும் இணைய வேண்டுமாம். ஒரு கதாநாயகன் பாத்திரம் வில்லத் தன்மை வாய்ந்ததாம். அது எனக்குப் பொருந்தும் என்று முடிவு செய்தே வந்தார்களாம்.
    
     அண்ணே, நீங்கதாண்ணே செய்யணும் இந்தக் காரெக்டர்…. உங்க காரெக்டருக்காகவே இந்தப் படம் டாப்புல போகும்ணே…நீங்க மொதப் படத்துல அப்ளை பண்ணுன ஸ்டைலை இதுல திரும்பவும் யூஸ் பண்ணிக்கலாம்ணே…இந்தக் கதைக்குப் பச்சுன்னு உட்கார்ந்துக்கும்….
    
     ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை? எது தடுத்தது? இன்னும் தனக்கு அந்த அளவுக்கான பின்னடைவு ஏற்படவில்லை என்று எந்த மனம் சொன்னது? இருந்தால் கடைசிவரை கிரீடம்தான். அதைக் கீழே இறக்குவதேயில்லை. இல்லையேல் எதுவும் வேண்டாம். என்னவொரு பிடிவாதம்? முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு போன அவர்களில் ஒருவன் முணு முணுத்தது இன்னும் காதில்…ரீங்கரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
     இன்னும் பத்துப் படம் அந்த மேகலா கூட நடிச்சாத்தான் தன் மார்க்கெட் பழையபடி எகிறும்னு நினைக்கிறாரு போலிருக்கு….அது என்னடான்னா இவர் பேரைச் சொன்னாலே ஓடுது… படமே வேண்டாங்குது…. அது மார்க்கெட் பிச்சிக்கிட்டு நிக்குது… தெரியுதா இவுருக்கு? புதுசு புதுசா எம்புட்டோ பசங்க வரானுங்க…அதுகளோட நடிச்சி தன் பேரை நிக்க வைக்கிற டிரிக்குல இருக்குது அது….அந்தம்மா ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகுது….இவரக் கவனிக்குமா?
    
     காண்பவர் எல்லோருமே அந்த மேகலாவைப்பற்றிப் பேசுவது எரிச்சலை ஏற்படுத்தத்தான் செய்கிறது இவனுக்கு. வெளியில் காண்பித்துக் கொள்ள முடியவில்லை. நாம கொண்டு வந்து விட்ட பொண்ணு…நல்லாயிருக்குன்னா அது நமக்குப் பெருமைதானே? – அவன் சொன்னதும், சொல்வதும்,  அவனுக்கே இப்பொழுதும் செயற்கையாகத்தான் இருக்கிறது. இந்த அளவுக்கான புழுக்கத்தை ஏற்படுத்தியவள் அவள்தான். அவளேதான். என் எத்தனையோ படங்கள் தோல்வியைத் தழுவியிருந்தாலும், கடந்த இரண்டு சொந்தப் படங்களில் அவள் நடித்திருந்தால் இந்த அளவுக்கான சரிவை அவை நிச்சயம் எட்டியிருக்காதுதான். நானும் கீழே போயிருக்க மாட்டேன்.
    
     ரசிகர்களின் கனவுக் காதல் ஜோடி நாங்களாகத்தானே இருந்தோம். உண்மையிலேயே நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று எத்தனை கிசு கிசுக்கள்? என்னமாதிரியெல்லாம் புரளிகள். மஉறாபலிபுரம் ரிசார்ட்டில் கபளீகரம் என்றெல்லாம் தலைப்புப் போட்டு எப்படியெல்லாம் உசுப்பேற்றினார்கள்? அந்தச் செய்தியை எல்லாம் பார்த்து விட்டு என்னிடம் ஒரு மாதிரியாய்ச் சிரிப்பாளே? அந்தச் சிரிப்புதானே என்னைக் கொள்ளை கொண்டது? என்னை மட்டுமா? இந்தச் சினிமா உலகத்தையே அல்லவா ஆட்டி வைக்கிறது. வளைத்து அவள் காலடியில் அல்லவா போட்டிருக்கிறது? அந்த மப்பில்தான் அவள் என்னை உதறியிருக்கிறாள். அந்த மண்டைக்கனம்தான் என்னைச் சந்திப்பதைக் கூடத் தவிர்த்திருக்கிறது. வீட்டின் உள்ளே இருந்து கொண்டே வெளியூர் படப்பிடிப்பு என்று சொல்ல வைத்தாளே….எனக்கே அல்வா கொடுக்கிறாள் பாவி? இந்த சினிமா உலகம் உன்னை உதறித் தள்ள எவ்வளவு நேரம் ஆகும்? உன்னிடமுள்ள படங்களைப் பிடுங்க எவ்வளவு நாளாகும்? நினைத்தால், செய்தால், எல்லாமும் தலை கீழாய் மாறிப் போகும். போகட்டும் என்று விட்டால் தலையில் ஏறி மிதிக்கிறாளே?
    
     அண்ணே…பிரேம்ணே…எடுத்திருவமா…இல்ல இன்னிக்கு இத்தோட முடிச்சிக்குவமா? – எதிரில் கேள்விகளோடு நின்ற இயக்குநரை வெறித்தான் இவன். அந்த முக பாவத்தில் எதுவும் புரியாமல் நின்றார் அவர்.
           நீங்க வேணா இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கண்ணே…நா இதோ வந்திடறேன். ஒரு லொகேஷன் ஃபிட் ஆயிடுச்சண்ணே….நாளைக்குக் காலைல அங்கதான் ஷூட் பண்ணப் போறோம்… - சொல்லிக் கொண்டே அவனின் நிலைமை கண்டு ஓடி ஒளிந்து கொண்டார் அவர். பிரேம் அப்படியே அமர்ந்திருந்தான். அவனுக்கும் மனது அப்படித்தான் சொல்லியது. கூடவே என்னவோ ஒரு திட்டம் அவனுக்குள் உருவாகிக்கொண்டிருந்தது. உள்ளுக்குள் அதுநாள் வரை இருந்த குரூரத்தை அப்பொழுதுதான் சட்டென்று உணர்ந்து கொண்டான்.                                                                           ( 4 )  

     டச் அப் பாயை அழைத்தான். கண்ணாடியைப் பிடுங்கி முகத்தைத் துடைக்கப்போனான். அப்படித் திடீரென்று துடைப்பதற்கு என்ன வந்தது? அப்படியானால் அன்று படப்பிடிப்பு அவ்வளவுதானா? தன்னை நம்பிக் காத்திருக்கும் மொத்த யூனிட்டும் தன்னைப் பற்றி என்ன நினைக்கும்? கண்ணாடியில் முகம் வித்தியாசமாய் இருப்பதை அப்பொழுதுதான் கூர்ந்து உணர்ந்தான் பிரேம்.
    
     உண்மையிலேயே தன் முகம் முற்றி விட்டதா என்ன? வயதான கதாபாத்திரத்திற்கு இப்படிப் பொருந்துகிறது? இரட்டை வேடத்தின் இன்னொரு பாத்திரமான கதையின் நாயகன் வேடத்தின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அப்போதே அவன் மனம் எச்சரித்தது. எப்படியும் இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கியே தீர வேண்டும். இதுவும் கைவிட்டுப் போனதென்றால் பிறகு தன்னை அடியோடு மறந்து விடுவார்கள் எல்லோரும். அதற்காகத்தான் ரிலீஸ் தேதியைக் கூட இன்னும் நிர்ணயிக்கவில்லை. திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து, திருத்தித் திருத்தி, சே…! என்னவாயிற்று தனக்கு? ஏனிப்படி இழுத்தடிக்கிறது? கெட்ட நேரத்திற்கு எல்லாமும் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு ஆடுமோ? எதைத் தொட்டாலும் பிசகு வருகிறதே? செய்ததையே திரும்பத் திரும்பச் செய்ய வைக்கிறதே? எவ்வளவுதான் செலவு செய்வது? பணம் அத்தனையும், கண்கொண்டு விரயமாகிறதே? ஏன் எது செய்தாலும் திருப்தி வரவேமாட்டேன் என்கிறது? பயம் படுத்தும் பாடா இது? படம் பெட்டிக்குள் முடங்கி விட்டால் என்ன செய்வது? என்ற பயம் இப்பொழுதே போட்டு உலுக்குகிறதே?  எச்சரிக்கை, எச்சரிக்கை…மனசுக்குள் மணி  அடித்தது. மேற்கொண்டு தொடர்வதுபற்றித் தீவிரமாய் யோசி. முடியுமானால் நிறுத்தி விடு. வீம்புக்குச் செய்யாதே. மற்றவர்களுக்கு உன் பணத்தைப் பற்றிக் கவலையில்லை. நீதான் கவலைப்பட்டாக வேண்டும். அதற்கு நீதான் மொத்தப் படத்திலும் கவனமாய், கருத்தாய், கண்ணுக்குள் எண்ணை விட்டுக் கொண்டு பார்த்திருக்க வேண்டும். மனம் குழம்பித் தவித்தது பிரேம்குமாருக்கு.
    
     கதையின் ஸ்வாரஸ்யம் குன்றாமல், காட்சிகள் போரடிக்காமல் இருக்கின்றதா என்பதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அதற்கு முழு லாயக்கானவன் அத்யந்த நண்பன் திவாகரன்தான். அவன்தான் ஆரம்பம் முதல் அவன் கூடவே இருப்பவன்.  தன் வெற்றிகளுக்கெல்லாம் காரணமாய் இருந்தவன். சில தோல்விகளுக்கான சரியான காரணங்களைக் கண்டு பிடித்தவன். சினி உலகைக் கரைத்துக் குடித்தவன்.  அடுத்தடுத்த படங்களில் அந்தக் குறைகளை முழுமையாக விரட்டியடித்தவன். அவனுக்குத் தன் மீது இருக்கும் அக்கறை இதுவரை வேறு எவனுக்கும் இருந்ததில்லை. என் வெற்றியே தன் வாழ்வின் லட்சியமாகக் கொண்டவன். அதற்காகக் கடுமையாகத் தன் உழைப்பைச் செலுத்தியவன்.
    
     ஆனால் விதி அவனைத் தன்னிடமிருந்து எப்படியோ பிரித்து விட்டது. உற்ற நண்பனைச் சந்தேகிக்கலாமா? கட்டின மனைவியைச் சந்தேகிக்கலாமா? எதெல்லாம் கூடாதோ அதையெல்லாம் செய்தேன் நான். வெற்றியின் எக்களிப்பில் போதை ஏறிப் போய்க் கிடந்தேன். அவனைக் கை நீட்டி அடிக்கும் அளவுக்கு வந்தேன். அந்தளவுக்கு ஏன் என் புத்தி சிதறியது? எதற்காக அப்படி நிதானமில்லாமல் போனது. தேவையில்லாமல் அவனை விரட்டியாயிற்று. விரட்டுவதென்ன? அவனாகவேதானே போய்விட்டான்? மானஸ்தன் அவன். உண்மையாய் உழைத்தவனைச் சந்தேகித்த பாவி நான். அதற்குப் பின் அவன் என்ன ஆனான் என்று கூட இன்றுவரை கண்டு கொள்ளவேயில்லையே? டைரக்டர் சித்தண்ணாவிடம் இருப்பதாக யாரோ சொன்னது காதுக்கு வந்ததுதான். ஏன் திரும்ப இழுக்க மனம் விழையவில்லை? அவர் எவ்வளவு திறமையான இயக்குநர். போய்ச் சேர்ந்த இடம் பொன்னான இடம். அவன் திறமைக்கு ஏற்ற இடத்தில்தான் போய் நின்றிருக்கிறான்.  இப்பொழுது அழைத்தால் வருவானா? கண்ணைக் கட்டிக் கொண்டு காட்டில் விட்டதுபோல் ஆகிப்போயிற்றே. ஒரு உற்ற நண்பனை இப்படியா பகைத்துக் கொள்வது, காலக் கேடு என்னை அப்படிச் செய்ய வைத்து விட்டதா? உச்சியில் நின்று கூத்தாடிய என் புகழ் போதை மனதிற்கு என் மனைவியையும் பலியாக்கினேன். என்னையே சதமாக வந்தவளை எப்படியெல்லாம் சந்தேகப்படுத்தினேன்? அவள் மனதை எப்படி நோக வைத்தேன்?  எல்லாம் இந்த மேகலாவால் வந்தது. அவள் தந்த மயக்கம். என்னை ஏணியாய்ப் பயன்படுத்திக் கொள்ள அவள் செய்த ரகசிய உத்தி.  அவள் மட்டும் என்னுடைய முந்தைய இரண்டு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தால் இந்த அளவுக்கான தோல்வியை நான் சந்தித்திருக்க நேர்ந்திருக்குமா? கண்களை மூடி அமர்ந்திருந்தான் பிரேம்.
                                ( 5 )
     டைரக்டர் நவீன் பேச வார்த்தை வராமல் காத்திருந்தார். பிரேமின் மனது அன்று என்னவோ ஒரே குழப்பத்தில் கிடந்தது. சரி செய்யவே முடியாமல் தவித்தான். மேகலாவை நினைக்க நினைக்க வயிறு பற்றியெறிந்தது. நான் அடையாளம் காண்பிச்ச நாயி? என்னையே போட்டுப் பார்த்திட்டாளே? அவ ஜோடி இல்லாம எத்தனை தோல்விகள் எனக்கு? என் பின்னாடியே சுத்தின ப்ரொட்யூஸர்ஸ் எல்லாம் காணாமப் போயிட்டாங்களே?என் சொந்தப் படத்துக்கே என் கூட நின்ன பார்ட்டனர்சும் மறுத்துட்டாங்களே? இந்தப் படத்துலயும் எனக்கு இன்னும் நம்பிக்கை வர மாட்டேங்குதே? என்கிட்ட இருக்கிற மீதிச் சொத்தை முழுங்கிறதுக்குத்தான் இவங்கல்லாம் என் கூடத் திரியறாங்களா? எது இருக்கு எங்கிட்ட, எல்லாத்தையும்தான் அடகு வச்சாச்சே…? அப்போ இவுங்கல்லாம் என் மூலமா எதை எதிர்பார்க்கிறாங்க? ஆத்மார்த்தமா என் வெற்றிக்குப் பாடுபடுவாங்களா? இல்ல காசுக்காக ஒண்டிக்கிட்டுக் கிடக்காங்களா?  எல்லாரும் வெறும் வேஷதாரிங்களா? நான் படத்துலதான் வேஷம் போட்டேன். இவுங்க நிஜ வாழ்க்கைலல்ல வேஷம் போட்டு என்னை ஏமாத்தறாங்க? எவ்வளவோ துட்டு கரைஞ்சு போச்சே…இனி பாதில நிறுத்த முடியுமா? அப்படி நிறுத்தினா எனக்குத்தானே நஷ்டம். அவமானம்.  இந்த நஷ்டத்தை சரி பண்ண முடியுமா என்னால? கைவசம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு படம்தானே வச்சிருக்கேன். அவனும் கழன்டுக்கிட்டான்னா? - நினைக்க நினைக்க அவன் உடம்பு மொத்தமும் பதற்றத்துக்குள்ளானது. மூளையின் கொதி நிலை ஆவியாய்ப் பிரிந்து தலை உச்சியில் சூடாய் வெளியேறுவது போலான பிரமை.
                                ( 6 )
     இந்த பாரும்மா,  காட்சி நேச்சுரலா இருக்கணும்னா கொஞ்சம் பொறுத்துக்கத்தான் வேணும். கை பலமாத்தான் இறங்கும். அது தெரியாதபடி நேக்கா விலகிக்க வேண்டியது உன் சாமர்த்தியம்…ஆனா சரியான அடின்னு கண்டிப்பாத் தெரிஞ்சாகணும்…அது தெரியாத அளவுக்கு விலகிடாதே…ஓ.கே….
    
     நவீன் கருத்தாகத்தான் அறிவுறுத்தியிருந்தார் அந்தப் புதுப் பெண்ணிடம்.  அதைப்போடுங்கள் என்று பிரேம்தான் சொல்லியிருந்தான். மலையாளத்தில் அந்தப் பெண் அறிமுகமாகி இரண்டு படங்கள் வெற்றிகரமாய்ப் போயிருந்தன. சூட்டோடு சூடாக அதை எப்படியாவது இங்கு இழுத்து வந்து நிற்க வைத்து விட வேண்டும் என்று மனதில் வன்மமான எண்ணம் தோன்றி பலநாளாய் பிரேமை உறுத்திக் கொண்டேயிருந்தது. நினைத்தாற்போல் அந்தப் ப்ராஜக்ட் அமைந்தபோது தனக்கு ஜோடியாகவே கூட்டி வந்து நிறுத்தியிருந்தான். அப்படித்தானே மேகலாவையும் அழைத்து வந்தது? அவள் அதிர்ஷ்டம், அவள் எங்கோ போய் விட்டாள். இன்று என்னையே உதைக்கிறாள். இவளை வைத்து அந்த மேகலாவைத் தோற்கடிக்க வேண்டும். காணாமல் போகச் செய்ய வேண்டும். அதுவரை இந்த மனசு பொறுக்குமா? யாருமில்லாத அநாதைப் பிணம் அவள். அவளுக்கா இந்தத் திமிறு? காலடியில் மண்டியிட்டுக் கிடக்க வேண்டியவள்.     இத்தனை வருஷத்திற்கு என்று ஒப்பந்தம் போட்டிருந்தேனேயானால் இப்படி வாலாட்டுவாளா? ஃபீல்டுக்கு வந்தே வெறும் ஆறு வருஷந்தான் ஆகிறது. அதற்குள் நாற்பது படங்கள் தாண்டி விட்டாள். திறந்து போட்டால் எவன்தான் வேண்டாம் என்பான்? கவர்ச்சியைப் பொழிகிறாள். கிறங்கிக் கிடக்கிறார்கள். அதுதானே? நடிப்புத்தானே நிற்க வைக்கும். திறமைதானே நிலை நிறுத்தும். எத்தனை நாளைக்கு இந்தப் பகட்டு? அது கிடக்கட்டும்.
    
     ஆனால் இந்த ஆறு வருஷத்தில் என் மார்க்கெட் ஏனிப்படிச் சரிந்து போனது? அவளுக்கு முன்பே பதினைந்து வருஷத்தைத் தொட்டவன் நான். யாரும் அசைக்க முடியாமல் மலையாய் நின்றவன். நான் ஏன் இப்படி ஆனேன்? என்னையே அசைத்துப் பார்த்து விட்டாளே….? அவள் என்னோடு நடிக்காமல்  போன பிற்பாடுதானே இந்த வீழ்ச்சி. என்னை மறுத்தபின்புதானே அவள் மேலே போனாள். மேலே போவதற்குத்தான் அப்படி மறுத்தாளா? ஏன் என்னால் அவளைக் கட்டிப்போட முடியாமல் போனது. எந்தக் கவர்ச்சியைக் காட்டி அவள் மேலே ஏறினாளோ, அதையே என் மேலேயும் ஏற்றிவிட்டு ஏமாற்றி விட்டாளே…படு பாதகி அவள்…விஷ நாகம்…..படமெடுத்து ஆடி ஆடி என்னை மயக்கி விட்டாள்.
    
     பேக் அப்…..என்று அவன் அலறிய போது மொத்த யூனிட்டும் பதை பதைப்போடு திரும்பிப் பார்த்தது.
                                ( 7 )
    
     ”என்னங்க…இந்தாளுக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சா? திடீர்னு பேக்அப்ங்கிறான்…” – தூரத்தில் கூடியிருந்த உதவி இயக்குநர்களில் ஒருவன் அங்கலாய்க்க, மற்றவர்கள் பிரேமையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். காதில் விழுந்திருக்குமோ என்கிற பயம் அவர்கள் கண்களில் தெரிந்தது. பெரிய ப்ராஜக்ட். கைவிட்டுப் போயிடக் கூடாது என்கிற ஏக்கம் அவர்களுக்கு.
     பாதிப் படத்தை முடிச்சிட்டுத்தான் நகரணும்னு நேத்து சொன்னாரு…இன்னும் ரேக்ளா ரேசு, ஃபைட்டு சீன்ஸ் எடுக்கலே…அப்புறம் மலையடிவாரத்துல ஒரு டூயட் வேறே இருக்கு…அந்தப் பொண்ணை வேறே இதுக்காகவே ரூம் போட்டு இருத்தி வச்சிருக்காரு…எதுவுமே முடியாம அதுக்குள்ளே பேக் அப் பண்ணினா எப்டி?
     நேத்துக் கூட ராம்ஜி சேட்டுக்கிட்ட அக்ரிமென்ட் போட்டதா சொன்னாங்கப்பா… சேத்துப்பட்டு பங்களாவை அடகு வச்சிட்டாராம். ரெண்டுல ஒண்ணு பார்த்துடறதுன்னு பேசிட்டிருந்த ஆளுதான், இப்ப என்ன வந்ததுன்னு தெரில…”
     எப்போ எது நடக்கும்னு சொல்ல முடிலப்பா…நாறப் பொழப்பு நம்ம பொழப்பு. இன்னும் ரெண்டு மூணு மாசத்த ஓட்டிடலாம்னு கற்பனைல இருந்தா அதுக்கே பங்கம் வந்திரும் போலிக்கே?
     ஆனாலும் அந்த டைரக்டர் ரொம்பவும் சாமர்த்தியமானவன். ஒண்ணும் பிரச்னையில்லண்ணே…நாளைக்குப் பார்த்துக்கிடுவோம்….-
     பிரேமைக் கைத்தாங்கலாய் அவர்கள் அழைத்து வந்து அறையில் விட்டது கூட அவனுக்குத் தெரியாது. தான் எப்பொழுது ஊற்றினோம். யூனிட்டில் வைத்து என்றுமே அதைச் செய்ததேயில்லையே…? பான்ட் பாக்கெட்டில் இருந்த அந்த உயர்ரக விஸ்கியை எடுத்து தூரத்தே வீசினான் பிரேம். அது வா…வா… என்பது போல் பரந்து கிடந்த அந்தப் பஞ்சு மெத்தையின் தலையணைக்கடியில் போய் பவ்யமாய் உட்கார்ந்து  கொண்டது. உனக்கிருக்கிற நன்றி கூட அவளுக்கில்லையே….! போதையில் பாட்டிலைப் பார்த்துப் புலம்பி அதை மீண்டும் கையிலெடுத்து முகத்தோடு முகம் வைத்துக் கொஞ்சினான். மனதுக்குள் இருக்கும் பாரத்திற்கு நினைவே இல்லாமல் கிடக்கலாம் போலிருக்கிறது. இந்த அளவுக்கான வீழ்ச்சியை எதிர்பார்க்கவேயில்லை. சொல்லி அழுவதற்கு ஆப்த நண்பனில்லை. அவனையாவது கூட வைத்துக் கொண்டேனா? உயிர் நண்பன் அவன். ஆனாலும் எவ்வளவுதான் அவமானங்களைப் பொறுத்துக் கொள்வான். தனிமையிலாவது அவனைத் திட்டியிருக்கலாம். கோபத்தைக் காண்பித்திருக்கலாம். யூனிட்டில் எல்லோர் முன்னிலையிலும் அவனை இகழ்ந்தேனே…எப்படிப் பொறுப்பான்? அனைவரையும் ஆட்டி வைக்கும் அவன் அவர்கள் முன் அவமானப்படுவதை ஏற்றுக் கொள்வானா? போய் விட்டான். போயே விட்டான். என்னை உதறித் தள்ளி அவள் பிரிந்தாள். கூடவே அவனும் பிரிந்து விட்டான். கெட்ட நேரம் வந்தால் எல்லாமும்தான் நடக்கும் போலும்.
     இந்த இயக்குநர் நவீன், தான் சொல்வதை மட்டும் செய்கிறான். அப்படியே செய்து விடுகிறான். வேறு மறு பேச்சே இல்லை. இல்லண்ணே நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்குங்க… நாளைக்குப் பார்த்துக்கலாம் என்று ஒத்திப் போடக் கூடாதா? பேக் அப் சொன்னால் உடனேயேவா மூட்டையைக் கட்டி விடுவது? கலைந்த கூடு போல் கணத்தில் பறந்து விடுகிறார்களே? என்னையே மதித்து நின்ற கூட்டம், என் அடுத்த வார்த்தைக்காகக் காத்திருந்த கும்பல், இப்போது என் வசம் இல்லை. என் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் நிற்கவில்லை. கலைந்த சித்திரம் ஆகி விட்டதா என் வாழ்க்கை? திட்டமிட்ட என் நியமங்கள் என்ன ஆயின? நில் என்றால் நில், செல் என்றால் செல் என்கிற கட்டுப்பாடுகள் எப்படிச் சிதறின?
     ”காலைல ஆறு மணிக்கு ஷூட்டிங் வருவாரு. சாயங்காலம் ஆறு, தவறினா ஏழுக்கெல்லாம் அவரை விட்டிடணும்…ஏழரைக்குள்ள அவர் வீட்டுல இருக்கணும். இதுக்கு சம்மதிச்சு அக்ரிமென்ட்…என்ன சொல்றீங்க?
     என் உடல் நலத்தில் எப்படி அக்கறை செலுத்தினாள் சாம்பவி. அவள் நம்பிக்கையாய்ச் சொன்னதினால்தானே திவாகரையே எனக்குப் பி.ஏ. வாக வைத்தேன். உன் நண்பன் மேலே உனக்கே நம்பிக்கை இல்ல போலிருக்கு…அதுக்காகத்தான் அண்ணியோட  ரெக்கமன்டேஷன் வேண்டிர்க்கு…என்று தமாஷாகச் சொன்னானே….இன்று எல்லாவற்றையும் உதறி விட்டு இப்படி நிர்க்கதியாய் நிற்பதற்கு யார் காரணம்? அந்த மேகலா மயக்கிய வலையில் வீழ்ந்ததுதான் காரணமா? தன் செழுமையான உடம்பை வைத்து என்னை ஆக்ரமித்து விட்ட காமப் பேய் அவள். எங்கோ சோற்றுக்கே திண்டாடிக் கொண்டிருந்தவளுக்கு, கனவிலும் கிட்டாத வாழ்க்கை தட்டுப் பட்டபோது ஏற்பட்ட கண்மூடித்தனமான வெறி. தன் முந்தானைக்குள் என்னை முடிந்து கொண்டு எனக்கே இன்று டேக்கா கொடுத்துவிட்டவள். என் மீது உண்மையான அக்கறை கொண்ட சாம்பவியை நம்பாமல் இவளின் பிருஷ்டங்களே கதி என்று கிடந்ததுதான் நான் செய்த மகத்தான் பிழை. என் பலவீனத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட துர் தேவதை அவள். அவளின் உள்ளார்ந்த குறிக்கோள் அறியாமல் முயங்கிக் கிடந்தேன் அவள் மடியில். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்.
     தன் தோல்விக்காக மனமுடைந்து தலையணையில் முகம் புதைத்து அழுது கொண்டிருக்கிறான் பிரேம். அதன் உச்சம் அவனை எங்கே கொண்டு விடப் போகிறதோ?
     சற்றே தன் நினைவு வந்தபோது, தடுமாறி எழுந்து வந்து ஜன்னல் வழி மலைச்சாரல் பகுதியை நோக்குகிறான். வெற்றிடம்தான் கண்ணில் படுகிறது. காக்காய்க் கூட்டம் பறந்து விட்டது. அடுத்த முறை புத்தி தெளிந்து அந்த இடம் மறுபடியும் தேவைப் பட்டால் மீண்டும் அத்தனை பேரையும் அங்கே அழைத்து வந்தாக வேண்டும். இப்போது கிளப்பியதற்கு எது காரணமில்லையோ அதுபோலவே மறுபடியும் அங்கே கூட்டுவதற்கும் வலுவான காரணமின்றித்தான் அழைத்துவர வேண்டியிருக்கும். சந்தேகிப்பார்கள். என்னய்யா, இந்தாளு இப்டி அலைக்கழிக்கிறான்? என் நிலைமை இன்று இதுதான். மதிப்பிழந்த நாட்கள். வெறித்தவனாய் வெற்றிடத்தை நோக்குகிறான் பிரேம். மொத்த யூனிட்டும் இப்போது சென்னையை அடைந்திருக்கும். ஒரு மறு யோசனையாவது எவனாவது சொன்னானா? எனக்கென்ன என்பதுபோல் நடந்து கொள்கிறார்கள். எவன் பணத்தை யார் வாரி இறைப்பது? மனம் உடைந்தது பிரேமுக்கு. தேற்றிக் கொள்ள என்ன செய்வது என்று புரியாமல் தவியாய்த் தவித்தான் அவன். ஆனாது ஆயிற்று. பார்ப்போம் என்று மட்டும் தனக்குள் சொல்லிக் கொண்டான். சற்றே நிதானத்திற்கு வந்தனாய் உணர்ந்தான்.
                           ( 8 )
     அந்த முறை சென்னை வந்தடைந்த போது கிஞ்சித்தும் நிறைவே இல்லை பிரேமுக்கு. பாதிப் படத்தை முடித்து விட வேண்டும் என்று போனவன் சில காட்சிகளோடு திரும்பியிருந்ததும், அந்தப் பெண் ஜீவனா கேரளாவுக்குப் போய்விட்டதும், டைரக்டர் சொல்லித்தான் இவனுக்கே தெரிய வந்தது. அதை அறிமுகம் என்று இழுத்து வந்ததே பெரிய விஷயம். அந்த அப்பன்காரன் எந்நேரமும் ஆந்தையாய் உட்கார்ந்திருக்கிறான். பத்திரிகையாளர் அறிமுகக் கூட்டம் என்றபோது கூட இப்போது வேண்டாம் என்று சொன்னான் அந்த ஆள்? என்ன பொருள் அதற்கு? வேறு ஏதேனும் திட்டம் இருக்குமோ? அல்லது தன் மீது நம்பிக்கை வரவில்லையா? தனது சமீபத்திய நிலையைத் துருவியிருப்பானோ? அதுதான் அப்படி நினைக்க வைத்துவிட்டதோ? நானாய் ஏன் இப்படியெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டும்?  தன்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே….சொல்லும் நிலையிலா தான் இருந்தோம்? அடுத்தாற்போல் ஷூட்டிங்கிற்குத் தவறாமல் வந்தால் சரி. அதுதான் இன்னும் தேதி நிர்ணயிக்கப்படவில்லையே?
     மெட்ராசுக்கு வந்தாச்சுல்ல…போய் அவுங்கவுங்க வேலையைப் பாருங்க…அடுத்த ஷெட்யூல் எப்பன்னு பின்னாடி சொல்றேன்…. – முகத்தில் ஈயாடவில்லையே யாருக்கும்? காலையில் பொழுது விடிந்ததுமே வந்து நின்று விட்டார்களே? எவனாவது ஒருத்தன் ஃபோனில் கேட்டுக் கொண்டால் போதாதா? மொத்தப் பேருமா இப்படிக் கூட்டமாய் வந்து வரிசை போட வேண்டும்? ஏண்டா தலையைக் கொடுத்தோம் என்று நினைக்கிறார்களோ? கழன்று கொள்வார்களோ? பழகிய பழக்கத்தில் அழைத்தாயிற்று. வந்தாயிற்று. அவர்களுக்குமே நம்பிக்கை இல்லை போல்தான் தெரிகிறது. உறுதிப் படுத்திக் கொள்ளும் ஆர்வம். அவனவனுக்கு அவனவன் பிழைப்பு.
     நம்பிக்கை இருந்திருந்தால்தான் எக்ரிமென்ட் போட்ருவமேண்ணே என்று அனத்தியிருப்பார்களே….ரெண்டு ஷெட்யூல் பார்த்துக் கொள்வோம் என்று விட்டுப் பிடிக்கிறார்களா? எல்லாம் என் நேரம்….என் மீது இத்தனை அவ நம்பிக்கை விழ, என் தோல்விகள்தான் காரணம். இந்தத் தொடர்ச்சியான தோல்விகளுக்கு அவள் காரணம். அதன் மூலமாய் பிரபலமாய் உள்ள வேறு சிலரும் என்னை வேண்டாம் என்று சொல்ல வைத்தது இன்னொரு காரணம். எல்லாச் சீரழிவுகளுக்கும் ஆதாரம் அந்த மாயப் பிசாசு. அவளின் மாயத் தோற்றத்தில் என்னைச் சீரழித்துவிட்டாள். அந்தக் கிடங்கில் வீழ்ந்து அழிந்துபட்டேன் நான். இன்று தன்னந்தனியனாய், ஒற்றை மரமாய்த் தனித்து நிற்கிறேன். என்ன அவலம் இது? ஒரு மனிதனுக்கு இத்தனை வேகமான ஏற்றமும் வேண்டாம். இத்தனை புயலான இறக்கமும் வேண்டாம். என் தோல்விகளே என்னை முடங்கச் செய்து விட்டனவா? என் முயற்சிகளை வீணடித்துவிட்டனவா? உடம்பில் வெறி ஏறியது. கண்கள் ஜிவ்வென்று சிவப்பேறின. தலை வெடித்து விடும்போல் கொதித்தது. கைகளும், கால் நரம்புகளும் முறுக்கேறி நின்றன. இருக்கும் மதர்ப்புக்கு என்னமாவது செய்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் இந்த ராட்ச்சசம் அடங்கும். புயலாய் எழுந்தான் பிரேம். இரண்டில் ஒன்று. இப்போது இதுதான் அவன் முடிவு. என்னை ஒருவனும் அல்லது ஒருத்தியும் ஏமாற்றியதாக, நான் ஏமாந்ததாக சரித்திரம் முடிவடையக் கூடாது. என் கதைக்கு நானே முதலும் முடிவும். எல்லாமும் என்னாலேயே துவக்கப்பட்டு, என்னாலேயே முடிக்கப்படவும் வேண்டும். அதுதான் என் வீழாத சரித்திரம். எழுந்து நின்று கைகளை அகல விரித்து ஓங்காரமாய்த் தனக்குள் சொல்லிக் கொண்டான் பிரேம். அடுத்த சில நாட்களில், அவன் மனம் எதிர்பாராத ஒரு தீவிர முடிவுக்கு வந்திருந்ததைத் தவிர்க்கவே முடியவில்லை அவனால். விளைவுகளைப்பற்றி சிந்திக்காத மனம் குறிப்பிட்ட புள்ளியில் நிலை குத்தியிருந்தது.

                           ( 9 )
    
     கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்… -அந்த நள்ளிரவில் சவமாய்த் தூங்கிக் கொண்டிருந்த நடிகை மேகலா பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது. வாட்ச்மேனை அழைக்க நினைத்தாள். மனைவிக்கு உடம்பு சரியில்லையென்று அவன் போயிருந்தது நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இப்போது கதவைத் திறப்பதா வேண்டாமா?  வாழ்க்கையே தனிமைதான். அதுவாகவே அப்படி அமைந்து போனதும் இப்போது பழகிப் போய்த்தான் கிடக்கிறது.   இனிமேல் எவனைத் துணை தேடுவது? எந்தத் துணையை நம்புவது?
    
     கிர்ர்ர்ர்ர்….. காது ஜவ்வு கிழிவது போல் அலறியது அது. வீடே ஆட்டம் காணுவதுபோல் பயம் எழுந்தது.
    
     “யாரது?“ கேட்டவாறே ஓடிப்போய் மாடிப்படி லைட்டைப் போட்டவள் தயங்கியவாறே இறங்கினாள். தாள முடியாத அயர்ச்சியில் உடம்பு கனத்தது. அவளையறியாமல் தள்ளாடியது தேகம்.  
    
     யாருன்னு சொல்றீங்களா? – மீண்டும் கேட்டுவிட்டுக் கதவை நெருங்கினாள். அப்போதும் திறக்கத்தான் வேண்டுமா என்று பயம் வந்தது. வாட்ச்மேனை அனுப்பியது மகாத் தவறு. யாரையேனும் பதிலுக்கு வைத்துவிட்டுப் போ என்று சொல்லியிருக்க வேண்டும். எப்பொழுதும் அவன் பெண்டாட்டி இருப்பாள்தான். உடம்பு முடியாமல் போனது தனது கெட்ட நேரமோ? உற்றம், சுற்றம் என்று தனக்கும் நாலு பேர் இருந்திருந்தால் இந்த நிலை வருமா? வெறும் அநாதைப் பிணம் நான். வந்த வாழ்வு தங்குமா என்பதுபோல் வாழ்க்கை பயமுறுத்திக் கொண்டேயிருக்கிறது. துணையின்றி இருப்பது எத்தனை பாதுகாப்பற்றது? யாரையேனும் இணைத்துக் கொள்ள முயன்றாலும் எல்லோரும் விலகிப் போகிறார்கள். ஏன்? எனது எந்தக் கதை அவர்களை அப்படிப் பயமுறுத்துகிறது? நினைத்த போது சர்வாங்கமும் நடுங்கி ஒடுங்கியது  அவளுக்கு.
    
     கதவைத் திற மேகலா…நான்தான்…. சத்தம் தீர்க்கமாய் வந்தது.
                                ( 10 )
    குரலைக் கேட்டவுடன் மேலும் பதற்றமடைந்தாள்.  பிரேம். இவன் எங்கே இந்நேரத்தில்? ஒரு நாளும் இப்படி வந்ததில்லையே? உடம்பெல்லாம் மேலும் வேகமாய் நடுங்க ஆரம்பித்தது அவளுக்கு. என்றோ ஒரு முறை என் வீட்டுப் பக்கம் வந்தவன். இதுதான் மறுமுறை. எப்படி இத்தனை நியாபகத்தோடு இந்த வேளையில்?
    
     நீங்களா? நீங்க அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கிறதால்ல சொன்னாங்க…? – வார்த்தைகள் உளறியது. என்ன செய்கிறோம் என்கிற நிதானமின்றித்  தன்னையறியாமல் கதவைத் திறந்து விட்டாள். சடாரென்று உள்ளே பாய்ந்தான் பிரேம்.
    
     போகலே…………..அந்த மாதிரி ஒரு புரளியைக் கிளப்பினேன்… - சொல்லியவாறே தடுமாறினான் பிரேம்குமார். கால்கள் பூமியில் பாவ மறுத்தன. அவனைப்பற்றி அவள் அறிந்த செய்தியை அவன் இப்போது புரளி என்கிறான். எதற்காக? என்னவோ செய்துவிட்டுப் போகட்டும். இங்கே, இந்த நேரத்தில் வந்து இதை ஏன் என்னிடம் உளறுகிறான்?
    
     உன்னைத் தீர்த்துக்கட்டுறதுக்காகத்தான் இப்டி ஒரு நாடகம். என் மீது இப்போ எவனுக்கும் கவனமில்லை..அதுதான் எனக்கு இப்போ ப்ளஸ். – சொல்லிவிட்டுக் கெக்கலியிட்டுச் சிரித்தான் பிரேம். அவனின் வழக்கமான சிரிப்பல்ல அது. மூளை அவன் வசம் இல்லைதான்.  நிதானமாய்ப் பேசுவதுபோல் நினைத்து   உளறுகிறான். முட்டக் குடித்திருக்கிறான். ஆனாலும் அதோடு வந்திருக்கிறான். அது ஆச்சரியம்.  இவனை என்னமாவது செய்து அப்படியே படுக்கையில் வீழ்த்தி விட வேண்டியதுதான். உள்ளேயே விட்டிருக்கக் கூடாது. விட்டாயிற்று. வேண்டாத வேளையில் வந்திருக்கிறான். அதுவும் கொஞ்சமும் நிதானமில்லாமல். இந்தக் குடிதான் இவனைச் சீரழித்திருக்கிறது. ஆளையே மாற்றியிருக்கிறது. திறமைகளை நசிந்து போகச் செய்திருக்கிறது. ஊக்கத்தைக் கரைத்திருக்கிறது. அத்தோடு முடங்கிக் கிடக்காமல் இங்கே பிரசன்னம் என்றால் காரணமில்லாமல் இருக்காது. அவளின் மனம் பயப்பிராந்தியில் சிக்கியது. அடக் கடவுளே…இந்நேரம் பார்த்து, ஒருவரும் இல்லாமல் போயினரே….! எப்படித் தப்பிப்பது இவனிடமிருந்து? அவள் மூளை மின்னலாய் வேலை செய்ய ஆரம்பித்தது.
    
     ஆமாண்டி…நாலு காசுக்கு ஓட்டல்ல உடம்பக் காண்பிச்சு டான்ஸ் ஆடிட்டிருந்த உன்னைக் கொண்டுபோய் பெரிய ஸ்டார் ஆக்கினேன் பாரு…நீ எனக்குக் காட்டின நன்றி இருக்கே…அதுக்கு ஏதாச்சும் பரிசு தர வேண்டாமா? அதுக்காகத்தான் வந்திருக்கேன்…..
     நீங்க என்ன சொல்றீங்க பிரேம்? எதுக்காக எப்பவோ நடந்ததை இப்போ ஞாபகப்படுத்துறீங்க?…எதுவானாலும் சரி…காலைல பேசிக்கலாம்….இப்போ நீங்க நிதானத்துல இல்லை…அதோ அந்த ரூம்ல போய்ப் படுங்க….நல்லாத் தூங்குங்க…காலைல பேசுவோம் – பதற்றத்தில் என்னத்தையோ சொன்னாள் மேகலா. அவள் மனம் ரிவால்வாரை எங்கே வைத்தோம் என்று தேட ஆரம்பித்திருந்தது. இதுவரை பயன்படுத்தியதில்லை. ஒரு பாதுகாப்பிற்குத்தான். இப்போதும் அப்படித்தான் யூஸ் பண்ண வேண்டும். அதற்காக அவனைச் சுடவா முடியும்? இதற்காகவா இத்தனை காலம் வீறு கொண்டு எழுந்தது? இவ்வளவு சம்பாதித்தது இப்படி வெறுமே அழிந்து போவதற்கா? போதும் என்று எல்லாம் உதறி, ஆர, அமர எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டாமா? இந்த நேரத்தில் வந்திருக்கிறானே சனியன்? கையிலெடுத்தால் அவன் அதைப் பிடுங்க எவ்வளவு நேரம் ஆகும்? சில கணங்கள் போதுமே…அவனை எதிர்த்து நிற்கும் துணிவு, திறன்  தனக்கு இருக்கிறதா? வெறியோடல்லவா வந்திருக்கிறான். அழகைக் காட்டி வீழ்த்தவும் முடியாதே?

     ஏய்…நிறுத்துடி….உன் வீட்டுல தூங்கிறதுக்கா நா வந்திருக்கேன்? என்ன பசப்புற? அதெல்லாம் நான் தெளிஞ்சு ரொம்ப நாளாச்சு….அதனாலதான் ஒரு முடிவோட வந்திருக்கேன்….
     முடிவா? என்ன முடிவு பிரேம்? என்னை ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? நா ரெடி. அன்னைக்கு சொன்னதைத்தான் இன்னைக்கும் சொல்றேன். நான் எப்பவும் உங்களோட மேகலாதான். நீங்கதான் என்னைத் தப்பா நினைச்சு விலகிட்டீங்க….உங்க கூட இருந்தவங்க, உங்களுக்கு நல்லது சொல்லலை…அவுங்க பேச்சைக் கேட்டு வீணாப் போயிட்டீங்க….என் கழுத்துல உங்க கையால தாலி ஏற நான் எப்பவும் தயார்….அது என் பாக்கியம் – ரொம்பவும் பேசுகிறோமோ என்ற உறுத்தலிலேயே அப்போதைக்கு அவனை எப்படியும் சமாளித்தாக வேண்டுமே என்று எதையோ உளறிக் கொட்டினாள் மேகலா. போதையில் அவன் மண்டையில் எதுவும் ஏறாது என்கிற உறுதி. மேலும் மேலும் உளறத்தான் செய்தான்.
     என்னடி, வசனமா பேசுற? உன்னோட மார்க்கட் டல்லாயிடக் கூடாதுன்னு என் படத்திலெல்லாம் உன்னை சிபாரிசு பண்ணினேனே… அது எதுக்கு? என் புகழை உயர்த்திக்கவா? நீ உச்சிக்குப் போகணும்னுதானே? அப்பல்லாம் உன்னைப் புரிஞ்சிக்கலடி…இப்போ நான் ஓய்ஞ்சு போன வேளைல எனக்குக் கிடைக்கிற ஒண்ணு ரெண்டு சான்சையும் கெடுக்கிறியே…ஏன்? என்கூட நடிச்சா குடி முழுகிடுமா உனக்கு? நடிக்க ஒத்துக்கிற சிலரையும் வேண்டாம்ங்கிறியாமே…இவ்வளவும் பண்ணிட்டு, இப்போ பசப்பவா செய்றே? தப்பிக்கிறதுக்கு கண்டபடி உளர்றே? மனசுல பயம் வந்திடுச்சோ…இப்டி மாட்டிக்கிட்டமேன்னு….உறிஉற்உறிஉற்உறி….
    
     நா கெடுத்தனா? உங்க வாய்ப்பை நான் ஏன் கெடுக்கணும்?எதுக்காக அப்டிச் செய்யணும்? எப்படி உங்க சான்சை நான் கெடுக்க முடியும்? யார் கேட்பாங்க? நீங்க எவர் க்ரீன் உறீரோ…உங்களுக்குன்னு ஒரு மவுசு இருக்கு…புகழ் இருக்கு…உங்களுக்குன்னு ஒரு கூட்டம் என்னைக்கும் உங்க பின்னாடி இருக்கு. .நீங்க அறிமுகப் படுத்தின ஆளு நா…மொத்த ஃபீல்டுக்குமே தெரியும்…யாராவது அப்டிச் சொன்னா கேட்பாங்களா? நீங்களா எதையாச்சும் கற்பனை பண்ணிக்குவீங்க போலிருக்கு…
    
     உன் பேரத்தானடீ சொல்றாங்க எல்லாரும்….அன்னைக்கு என் கூட நடிக்கிறதுல ஒரு இன்பம் இருக்கு…த்ரில் இருக்கு…நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குது…அது இதுன்னல்லாம் பேட்டி கொடுத்த நீ…பிரேம்குமாரைப் போட்டா நடிக்க மாட்டேன்னு சொல்றியாமே? ரேட்டைக் கூட்டிக் கொடுத்தாலும் ஒத்துக்க மாட்டேங்கிறியாமே? அவ்வளவு பெரிய ஸ்டாரா நீ?  பிடிவாதம் பிடிச்சு எனக்கு வர்ற சான்ஸையெல்லாம் கெடுக்க ஆரம்பிச்சிட்டியே…உன்னைச் சும்மா விடலாமா?    
     பிரேம்… வேண்டாம்…இப்போ நீ நிதானத்துல இல்லை…பிறகு நடந்ததுக்காக வருத்தப்படுவே…என்னை ஒண்ணும் செஞ்சிடாதே… போலீஸ்ல மாட்டிக்குவே…சொன்னாக் கேளு….பயந்து போய் ஒதுங்க ஆரம்பித்தாள் மேகலா. ஏதோ விபரீதம் நடந்து விடுமோ என்று அவள் உள்மனம் எச்சரிக்க ஆரம்பித்தது. கதவைத் திறந்து வெளியே ஓடி விடலாமாவென நினைத்தாள். நிச்சயம் முடியாது. கிராதகன் அவன். என்னை அப்படியே கோழிக் குஞ்சைப் போல் அமுக்கி விடுவான். காதல் காட்சியிலேயே காமத்தைக் காண்பித்தவன். படப்பிடிப்புத் தளத்திலேயே படமெடுத்து ஆடியவன். இந்த அத்வானத் தனிமையிலே விடவா போகிறான்?
    
     பயமுறுத்துறியா…உனக்கு வழி காண்பிச்ச எனக்கே புத்தி சொல்றியா…? அவுட்டோர் ஷூட்டிங்குக்கு இன்னைக்குப் பெங்களுரு போயிருக்கிறதா யூனிட்டையே நம்ப வச்சிட்டுத்தான் வந்திருக்கேன்…சந்திராலயா யூனிட்டே எனக்காக சாட்சி சொல்லும்…பெங்களுர்ல ஓட்டல் டிரடிஷன் தெரியுமா உனக்கு…இன்னை தேதிக்கு நா அங்க இருக்கேன்…ஆனா இங்கே உன்னைக் கொலை பண்றேன்… - சொல்லிக் கொண்டே அவளை நோக்கிப் புலியெனப் பாய்ந்தான் பிரேம்.
     பொறி கலங்கிப் போய் பேயாய்ப் பின் வாங்கினாள் மேகலா.
                                ( 11 )
     டைரக்டர் கோபிநாத் மேல் உத்தரத்தைப் பார்த்தவாறே மோவாயைச் சொறிந்தார். கூடவே அப்படி ஒண்ணும் மேகலாவுக்கு எதிரிகள் இருக்கிறதா தெரில இன்ஸ்பெக்டர்…என்றார். படப்பிடிப்பு நேரத்தில் இதென்ன தொல்லை என்று தோன்ற ஆரம்பித்திருந்தது அவருக்கு.
    
     நேத்து முழுக்க உங்க படத்தோட ஷூட்டிங்லதான் மேகலா இருந்திருக்காங்க…அப்போ யார் கூடவாவது ஏதாச்சும் தகராறு இருந்திச்சா? தொடர்ந்து தோண்டினார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்.
    
     சந்தேகம் வந்தால் உயிரிணை, அஃறிணை என்று எந்த வித்தியாசமும் இருக்காதே போலீசுக்கு. அவர் எழுதிய வசனம் அவருக்கு ஞாபகத்துக்கு வந்தது.
    
     நோ, நோ இன்ஸ்பெக்டர்….அவுங்க ஆக்டிங் டைம் தவிர மற்ற நேரத்துல யார் கூடவும் எதுவும் பேச மாட்டாங்க….ஏதாச்சும் புத்தகமும் கையுமாத்தான் இருப்பாங்க…சொல்லப் போனா அவுங்க நடிப்புத் திறமைக்கு அவுங்க படிப்பும் ஒரு முக்கிய காரணம்….குறிப்பா பல மொழி நாவல்களை விடாமப் படிப்பாங்க ஆர்வமா…அதுனால யார் கூடவும் அவங்களுக்குத் தகராறுங்கிற கேள்விக்கே சான்ஸ் இல்லை…
    
     ஐ…ஸீ…வேறே எப்போவாவது ஏதாவது யார்கூடவேனும் சண்டை, சச்சரவு இப்படி?
    
     என்ன இன்ஸ்பெக்டர்…எதுக்கு இப்டித் திரும்பத் திரும்ப? எனக்குத் தெரிஞ்சு இல்ல …அவுங்களுக்குத் துணைன்னு யாரும் கிடையாது. வீட்டு வேலைக்காரம்மா ஒருத்தவுங்கதான் கூடவே வருவாங்க…அவுங்களையும் எதுவும் பேச விடமாட்டாங்க….அவ்வளவு ஸ்டிரிக்ட் ட்டியூட்டில…..!
     இஸிட்…. சமீப காலமா அவுங்க யார் கூட அதிகமாச் சேர்ந்து நடிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா? எனக்கு அதுபத்தியெல்லாம் நாலெட்ஜ் கம்மி…. – சொல்லிக் கொண்டே சகஜம்போல் சிரித்தார் ரஉறீம். கோபிநாத்துக்கு மனதுக்குள் எரிச்சல் கிளம்ப ஆரம்பித்திருந்தது.
    
     வருஷத்துக்கு மூணோ நாலோதான் பண்ணுவாங்க…அதுவும் பெரிய பேனர், பெரிய பட்ஜெட் கம்பெனிங்கதான்…பிரபலமான உறீரோக்களோடதான் இருக்கும்…இப்போ முதன்முறையா என் டைரக் ஷன்ல அவுங்க ஒத்துட்டிருக்கிறதே ஆச்சரியம்தான். என்னாலயே இன்னும் நம்ப முடில…காரெக்டர் ரொம்பப் பிடிச்சிப் போச்சுன்னு சொன்னாங்க… கதை சொன்னப்போ தன்னை மறந்து அப்டியே கண்ணீர் விட்டிட்டாங்க….அதுதான் என் அதிர்ஷ்டம்னு வச்சிக்குங்களேன்….அவுங்களை அப்டியே பாத்திரமாவே மாத்துறதுக்கு இப்போ அந்த இன்வால்வ்மென்ட் எனக்கு ரொம்ப உதவுது…ரொம்ப டெடிகேஷன் ஆர்டிஸ்ட்….
    
     ஸாரி மிஸ்டர் கோபிநாத்…நா சினிமாவுல அதிகமாக் கவனம் செலுத்துறதில்லை…அந்தப் பிரபலமான உறீரோக்கள் யார் யாருன்னு சொல்லலாமா?
    
     பார்த்தீங்களா, என்னையே மாட்டிவிடப் பார்க்கிறீங்களே? சிக்கலான கேள்வி…ஸாரி இன்ஸ்பெக்டர்….இதுக்கு பதில் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது…ஃபீல்டுல இப்பத்தான் காலூன்றியிருக்கேன் நா….என்னை வம்புல சிக்க வச்சிடும்… இதுக்கு பதில் சொன்னேன்னா…சினிமாக்காரங்களைப் பத்தி செய்தி போடாத பத்திரிகைகளே கிடையாது…நீங்களே படிச்சுத் தெரிஞ்சிக்கலாமே.. - கூறியவாறே அங்கிருந்த பத்திரிகைகளை எடுத்து டேபிள் மேல் போட்டார் கோபிநாத்.
    
     சற்று நேரம் அவற்றை அக்கரையின்றிப் புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரஉறீமுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தி கவனத்தை ஈர்த்தது.
                         ( 12 )
                         
     பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது. சனங்களை ஒதுக்குவதே பிரயத்தனமாய் இருந்தது. எந்தக் காலத்திலும் சினிமா என்றால் மாநிலம் மாறினாலும், தனிப் பிரேமைதான் மக்களுக்கு.
     பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின் பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான்.
    
     ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் காட்சியைக் கவனிக்கச் சொல்லிவிட்டுத் திரும்பிய டைரக்டர் உறலோ சார்…என்றவாறே வரவேற்றார் வர்மாவை.
    
     என்ன டைரக்டர் சார்…பந்தோபஸ்து ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு? ஐ திங்க் யு ஆர் சாடிஸ்ஃபைட்…
    
     யெஸ்…யெஸ்…ஐ ஆம் ஃபுல்லி சாடிஸ்ஃபைட்…வெரி கைன்ட் ஆஃப் யூ….வெளி மாநிலத்துல வேலை பார்த்தாலும் தமிழர் பண்பாடுங்கிறதை மறக்காம எங்களுக்கெல்லாம் இவ்வளவு  ஆதரவா இருக்கீங்களே…அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்…
     நான் என்ன பெரிசா செய்திட்டேன்…மேலதிகாரி ஆர்டர்…அவ்வளவுதானே…என் ட்யூட்டியைச் செய்தேன்…

     இருந்தாலும் அவுங்ககிட்ட எடுத்துச் சொல்லி உதவியிருக்கீங்களே… இவ்வளவு சின்சியரா யார் செய்வாங்க… உங்களமாதிரியே நாங்க போற எடத்திலெல்லாம் போலீஸ் எங்களுக்கு உதவிச்சுன்னா எங்க டியூட்டி ரொம்ப சுலபமாயிடும்…உங்களுக்கு எவ்வளவோ பணிகள். அசெம்பிளி வேறே நடக்குது….அங்கேயும் போக வேண்டி வரலாம்….நாளைக் கழிச்சி ஏதோ பந்த் அறிவிச்சிருக்காங்க போலிருக்கு உங்களுர்ல…அதுக்கு முன்னாடி நாங்க ஷூட்டிங்கை முடிச்சாகணும்…மனசுல அந்த அவசரம் வேறே…

     அது சரி டைரக்டர் சார்…நம்ம பிரேம்குமார் எப்ப வந்தாரு…?
    
     அவருதான் ட்யூட்டியில் ரொம்ப ப்ராம்ப்ட் ஆச்சே சார்…காலைல ஆறு மணிக்குப் படப்பிடிப்புன்னா அஞ்சுக்கே தனியாளா வந்து உட்கார்ந்துக்கிடுவாராக்கும்….முந்தியே வந்திட்டாரே…
    
     ஐ. ஸீ….
    
     எதுக்குக் கேட்குறீங்க…?
    
     நத்திங்…முன்னே இருந்த மார்க்கெட் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டேன்…ஆள் இப்போ அவ்வளவு பிஸியில்லையோ? இருந்தாலும் அவருடைய ட்யூட்டி கான்ஷியஸைப் பார்த்தீங்களா? – எதிரே பார்வை போக பேச்சை நிறுத்தினார் இன்ஸ்பெக்டர்.
    
     இதற்குள் காட்சி முடிந்து பிரேம் குமார் அங்கே வந்து சேர்ந்தான்.
    
     உறலோ இன்ஸ்பெக்டர்…உறவ் ஆர் யூ…கேட்டவாறே வந்து உற்சாகமாய்க் கை குலுக்கினான்.
    
     வெரி ஃபைன் மிஸ்டர் பிரேம்…ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு? ஆர் யூ ஓ.கே? உங்க சினிமா வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு? ரொம்ப சீக்கிரமா பெங்களுரு வந்திட்டீங்களாமே? – கேள்விகள் போதும் என்பதுபோல் அவனைப் பார்த்தார்.
    
     ஆமா இன்ஸ்பெக்டர்…மெட்ராசிலே ஷூட்டிங் இல்லே…வேற வேலையும் இல்லே…சரி இங்கே வந்து ரெஸ்ட் எடுப்போமேன்னுதான் புறப்பட்டேன்…
    
     ஐ..ஸீ…எங்கே தங்கியிருக்கீங்க..வழக்கம்போல் Nஉறாட்டல் டிரடிஷன்தானே…
    
     யெஸ்…பெங்களுருவில் அதைவிட்டுட்டு வேறே எங்கேயும் நா போறதில்லே…எனக்குப் பிடிச்சமான எடம் அதான்….
    
     ஓகே. மிஸ்டர் பிரேம்…நீங்க ஒங்க ட்யூட்டியைப் பாருங்க…நான் புறப்படுறேன்…
    
     அச்சா…விடை கொடுத்தான் பிரேம்குமார்.
                                ( 13 )
    
     றுநாள் காலையே பொழுது புலரும் முன்பு  இன்ஸ்பெக்டர் வர்மா மீண்டும் தன்னைத் தேடி தன் அறைக்கே வருவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
    
     உறலோ…விஷயம் தெரியுமா? சென்னைல நடிகை மேகலா கொலையாம்…
    
     அப்படியா…? செயற்கையாய் அதிர்ந்தான் பிரேம்.
    
     தெரியாதா? கேட்டவாறே தினசரியை நீட்டினார்.
    
     பிரபல நடிகை மேகலா கொலை…சென்னையில் பயங்கரம்…முதல் நாள் மாலைப் பேப்பரின் அந்தத் தலைப்புச் செய்தியைப் படித்தபோது அவனை அறியாமல் கைகள் ஆட்டம் கண்டன. அடக்கிக் கொண்டான்.
    
     அப்புறம் இன்ஸ்பெக்டர்…எப்படி நடந்திருக்க முடியும் இந்தக் கொலை…? நேத்து சரியான ஒர்க். டைரக்டர் டிரில் வாங்கிட்டாரு…அப்டியே வந்து பொணமா விழுந்தவன்தான். என்னால நிக்கக் கூட முடிலன்னா பார்த்துக்குங்களேன்…பயங்கர ஃபைட் சீன் வேறே…நடந்தது எதுவும் தெரியாது எனக்கு. ரொம்பக் கவலையோடு கேட்டான். அவனின் பதற்றம் அவனுக்கே செயற்கையாய்த் தோன்றியது.
    
     உங்களை மாதிரித்தான் நானும்…யாருக்குத் தெரியும்..ஆமாம் மிஸ்டர் பிரேம்…உங்களோட சேர்ந்து சில படங்களில் நடிச்சவங்களாச்சே…அவங்க கேரக்டர் எப்படி?
     என்ன இன்ஸ்பெக்டர் நான் அறிமுகப்படுத்திய பொண்ணு அவங்க…இப்டிக் கேட்கிறீங்களே?
    
     சாரி…சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்…
    
     ஷூட்டிங் டயத்துலயே அவுங்க யார் கூடவும் பேச மாட்டாங்க…அவங்ககிட்ட யாரும் தப்பாப் பேச முடியாது…அவ்வளவு நல்ல பொண்ணு…சில பேர் ராங்கிக்காரின்னு சொல்வாங்க…ஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லே…
    
     ஐ.ஸீ…
    
     எனி ப்ராப்ளம் இன்ஸ்பெக்டர்?
    
     நோ…நோ..ஃபார் இன்ஃபர்மேஷன் கேட்டேன்…ஆனா ஒண்ணு மிஸ்டர் பிரேம்…கொலையாளி ரொம்ப சாமர்த்தியசாலி…
    
     ஏன் அப்டிச் சொல்றீங்க…? பிரேம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.
                           ( 14 )
     பாத்ரூம் வருவதுபோல் இருந்தது பிரேமுக்கு. அடக்கிக் கொண்டான்.
    கைக்கு கிளவுஸ் மாட்டிக்கிட்டு, ஃபிங்கர் பிரின்ட்ஸ் கூடக் கிடைக்காம… ஆனா ஃபூட் பிரின்ட்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன்.. இன்ஸ்பெக்டர் முகத்தில் அத்தனை தீர்மானம். அது பிரேமை மிரள வைத்தது.
    
     இசிட்…அது சரி…இதெல்லாம் உங்களுக்கு எப்டித் தெரியும்?
    
     இன்னிக்கு மாரினிங் நியூஸை வச்சித்தான் சொல்றேன்…
    
     பேப்பர்,டிவி., படிக்க, பார்க்க, எதுக்கும் இம்மியும்  டைம் இல்ல இன்ஸ்பெக்டர்…பயங்கர டைட்…
    
     நீங்க இருக்கிற பிஸிக்கு உங்களால முடியாதுதான்…. – ஏதோ கேலியாகச் சொன்னதுபோல் உணர்ந்தான் பிரேம். அமைதியாயிருந்தான்.   

     ஆல்ரைட் மிஸ்டர் பிரேம்…நா கிளம்பறேன்…
    
     தூக்கம் வராமல் புரண்ட பிரேம்குமார் துள்ளி எழுந்து அமர்ந்தான்.
    
     ஃபூட் பிரின்ட்ஸ்…ஃபூட் பிரின்ட்ஸ்…கொலை நடந்த இடத்தில் ஃபூட் பிரின்ட்ஸ்…வர்மாவின் வார்த்தைகள் அவனைப் பயமுறுத்த ஆரம்பித்தன. மனதிற்குள் யாரோ பிளேடால் அறுப்பதுபோல் இருந்தது. பயம் பூதாகாரமாய் உருவெடுத்தது. உடம்பெங்கும் வியாபித்து வியர்த்துக் கொட்டியது. தொப்பலாய் உடைகள் கணத்தில் நனைந்து விட்டன.
    
     எப்படி சாத்தியம்? எப்படி சாத்தியம்?  இருக்கலாம். நம் போதாத வேளைக்கு மாட்டிக் கொண்டாலும் போயிற்று. விபரீதம். எவ்வழியிலேனும்  அழித்துவிட வேண்டும். உடனே செய்தாக வேண்டும் அதையும். அதற்கு முன்னோடியாக சென்னை அறையில் வைத்திருக்கும் ஷூவை முதலில் அகற்றியாக வேண்டும். அதுவே ஒரு பெரிய சாட்சி.
    
     முடிவு செய்தான். பயணத்தை ரத்து செய்த ஒரு வி.ஐ.பி.யின்  இடத்தைக் கெஞ்சிப்  பிடித்துப் பறந்து சென்னை வந்து சேர்ந்தான். பரபரப்பான கூட்டத்தின் நடுவே புகுந்து புயலாய்க் கடந்து அறையை அடைந்த அந்தக் கணம் -
    
     வாங்க மிஸ்டர் பிரேம்குமார்…என்ன இவ்வளவு அவசரமா புறப்பட்டு வந்திட்டீங்க? – என்று வரவேற்றார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்.
                           ( 15 )

     அவரை அந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்க்காத பிரேமின் சர்வ நாடியும் ஒரு கணம் ஒடுங்கி மீண்டது.
     ஷூவை எடுத்து மறைக்கிறதுக்கா? மல்லேஸ்வரம் இன்ஸ்பெக்டர் வர்மா சொன்னதை நம்பிப் புறப்பட்டு வந்திட்டீங்களா? நாங்க சந்தேகப்பட்டது சரியாத்தான் போச்சு…உங்களை எப்படி திசை திருப்பறதுன்னு ஒரு ப்ளான் போட்டோம்…அது ஒர்க் அவுட் ஆயிடுச்சி….எதிர்பார்த்தபடியே வந்து நிக்கிறீங்களே? ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சொல்வாங்க…அதை அப்படியே நிரூபிச்சிட்டீங்க…!
    
     என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்…? - அவரைப் பார்த்துக் கத்தினான் பிரேம்.
     ஒய் ஆர் யூ ஷவுட்டிங்? நாங்க எதிர்பார்த்தது நடந்து போச்சுன்னு சொல்றேன்.அவ்வளவுதான்…ஜஸ்ட் லைக் தட்….எவ்வளவோ கேர்ஃபுல்லாத்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கீங்க மிஸ்டர் பிரேம்…இத்தனை க்ளவரா நடந்துக்கிட்ட நீங்க கொஞ்சம் இந்தக் காவல்துறையோட திறமையையும் நினைச்சுப் பார்த்திருக்க வேண்டாமா? அதென்ன எங்க மேலே அத்தனை அவநம்பிக்கை உங்களுக்கு? இவுங்களால என்னதான் முடியும்னு நினைச்சிட்டீங்களோ? குரலில் மிளிர்ந்த கேலியோடு அதை நீட்டினார் அவர்.
     சதுர வடிவமாக வைரத்துண்டு போல் பளபளத்தது ஒரு பட்டன். மனதிற்குள் புரிந்த்தை வெளியில் காட்டிக் கொள்ள விரும்பாமல் பார்த்தான் பிரேம்.
    
     இது எப்படி எங்க கைக்குக் கிடைச்சதுன்னு நினைக்கிறீங்களா? போஸ்ட் மார்ட்டத்துலதான்…நீங்க கொலை செய்தபோது உங்களோட ஏற்பட்ட போராட்டத்துல, என்ன செய்றோம்ங்கிறது தெரியாம மேகலா இதை விழுங்கியிருக்காங்க…சினிமா டெக்னிக் மாதிரி இல்ல? அப்படித்தான். ஆனா இது அவுங்க வயித்துக்குள்ள போனதுதான் உங்க துரதிருஷ்டம்…என்ன? இன்னும் சந்தேகமாயிருக்கா?  ஒரு பட்டனை வச்சு எப்படிடா இவன் நேரா நம்மளைத் தேடி வந்தான்னுதானே? சந்தேகந்தான்…என்னடா ஆயிரத்தெட்டு நடிகைகள் இருக்கிற போது நேரா நம்ம ரூமுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கானேன்னுதானே யோசிக்கிறீங்க…நீங்க கோலத்துக்குள்ள போனா போலீஸ் தடுக்குக்குள்ள போகும்…தெரியுமில்ல? காரணம் இல்லாமலா? இந்த பட்டனைக் கொண்டு வந்து திரும்பவும் உங்க சட்டைல வச்சுத் தைச்சுப் பார்க்கணும்னு  நான் எவ்வளவு அக்கறையா வந்திருக்கேன் பார்த்தீங்களா? ரியலி இடீஸ் பியூட்டி மிஸ்டர் பிரேம்…இத்தனை அழகான பட்டன்களோட இந்தச் சட்டையை எங்கே வாங்கினீங்க? என்ன விழிக்கிறீங்க? மேகலா வாங்கிக் கொடுத்தாங்களா? அவங்களுக்கும் உங்களுக்கும்தான் பிடிக்கிறதில்லியே….உங்க ரெண்டு பேருக்குள்ள சண்டைன்னு சொல்றாங்க…?  புரியலேல்ல…? இதோ பாருங்க… - கூறியவாறே அந்தப் புத்தகத்தை நீட்டினார் இன்ஸ்பெக்டர்.
     அமுதம் என்ற அந்த வாரப்பத்திரிகையில் இப்படி வெளியாகியிருந்தது அந்தச் செய்தி –
     பிரேமையான நடிகருக்கு இப்பொழுது மார்க்கெட் அவ்வளவு இல்லையென்று                          அவரோடு இனி சேர்ந்து நடிப்பதில்லையென முடிவு செய்து விட்டாராம் ஸ்கையையும்                    சட்டத்தையும் பெயராகக் கொண்ட அந்தப் பிரபல நடிகை. அவரோடு சேர்ந்து வரும்                      வாய்ப்புக்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறாராம். விடாப் பிடியாகத் தவிர்க்கிறாராம். ஒரு         காலத்தில் அவரைப் பற்றி பிரேமையோடு உளறித் தள்ளிய இந்த நடிகை இப்பொழுது அவரை      எதிரில் கண்டால் கூட கண்டு கொள்வதில்லையாம். இதனால் பிரேமையான நடிகர்         குமுறிக்        கொந்தளிக்கிறாராம்.. அது சரி…இவர்களின் சண்டையைக்       கவனிக்கவா நமக்கு நேரம்…”
       
     என்ன மிஸ்டர் பிரேம்…கிசு கிசுச் செய்தி கூட எவ்வளவு… உபயோகப்படுது பார்த்தீங்களா? சந்தேகப்படுறதுன்னு ஆரம்பிச்சா எதுவேணாலும் உபயோகப்படும். எப்படிக் கோர்த்துப் பார்த்து உண்மையைக் கண்டுபிடிக்கிறதுங்கிறதுதான் எங்க வேலை…? ஓ.கே…? இப்போ உங்க சந்தேகமெல்லாம் முழுக்கத் தீர்ந்திருக்குமுன்னு நினைக்கிறேன்…லேட்டாச்சு போகலாமா? கேட்டவாறே கம்பீரமாக எழுந்தார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்
    
     பிரேதமாய் பின் தொடர்ந்தான் பிரேம்குமார்.
                     ------------------------
                                                                                                                                                                                                                           

கருத்துகள் இல்லை: