11 அக்டோபர் 2018

20.5.2018 கல்கி இதழில் வெளி வந்த சிறுகதை ”ஆதங்கம்”


“ஆதங்கம்” 

****************
ங்களுக்கு சொரணையே கிடையாதா?”
பொழுது சுபமாக விடிந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் பசுபதி.
என்ன சொன்னே…? என்றார் மீண்டும். காதில் விழுந்ததுதான். விழாததுபோல் கேட்பதில் ஒரு சந்தோஷம். விஷயத்தை அல்லது சூழலை லகுவாக்கும் உத்தி.
எதுக்குமே உங்களுக்கு சொரணையே கிடையாதான்னு கேட்டேன்…
எதுக்கு அப்டிக் கேட்கிறே? ஒரு விஷயம் காதுல விழுந்தவுடனே கொதிச்சு எழணுமா? அப்பத்தான் நீ சொல்ற சொரணை இருக்கிறதா அர்த்தமா? அதுக்கு ஒரு வயசு, அனுபவம், நேரம் காலம்னு  ஏதும் கிடையாதா? – வெகு நிதானமாகக் கேட்டார் பசு.  
காபியை ஆற்றிக் கொண்டிருந்தார். சூடு கம்மியாய்க் குடிப்போம் என்று தோன்றுகிறது சமீபத்தில். வைத்து அரை மணி நேரம் கழித்துத்தான் குடிப்பாள் விசாலம். கழுநீர்த்தண்ணி மாதிரி ஆன பிறகு குடிக்கிறியே….வாயைத் திறக்க வேண்டியது…கடகடன்னு ஊத்த வேண்டியது… …ருசியெல்லாம் கணக்கில்ல போல்ருக்கு….-அவளைச் சொல்லிவிட்டு இப்போது தானும் அந்த நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது.
உறாலிலிருந்து அடுப்படியை அடுத்த பால்கனியில் அவர் பார்வை நிலைத்திருந்தது. ஒரு சிட்டுக் குருவி சிறு சிறு துரும்புகளாக அலகில் கவ்விக் கொண்டு வந்து அந்தப் பால்கனி ஓரத்தில் அது கட்டியிருக்கும் கூட்டில் போட்டுக் கொண்டிருந்தது. கூடு என்று கிடையாதுதான். இவர்தான் ஒரு அட்டைப் பெட்டியை அங்கு கொண்டு வைத்தார். அதுவே அதற்குக் கூடாகி விட்டது. மூன்றோ, நான்கோ குஞ்சுகள் பொறித்திருந்தது. அதுகளுக்கு இரையும் நேரம் தவறாமல் வந்து கொண்டிருந்தது.
நீங்கபாட்டுக்கு அட்டைப் பெட்டியை வைக்கப் போக இப்பப் பாருங்க…என்று சொன்னதோடு சரி…அவளுக்கும் அதை விரட்ட மனமில்லைதான். ஆனால் சமயங்களில் அந்த இடைவிடாத  கீச்சுப் பூச்சு சத்தங்கள்தான் தொந்தரவு.
மத்தியானம் லேசாத் தலையைச் சாய்ப்போம்னா, கண்ணசர விட்டாத்தானே… -அலுத்துக் கொண்டாள்.
என்னங்க..தூங்கிட்டீங்களா உட்கார்ந்தமேனிக்கே…. – கேட்டவாறே வந்து எட்டிப் பார்த்தாள் விசாலம்.
இன்னும் அந்தளவுக்கு மோசமாகல….சொல்லு… என்றார் காபியைக் குடித்துக் கொண்டே.
மறந்திட்டீங்களா…இன்னைக்கு நம்மள வெளில கூட்டிட்டுப் போறேன்னானே…. ஞாபகமிருக்கா…? என்றாள் விசாலம். பொழுது விடிந்ததிலிருந்து அதே நினைப்பாய் இருந்திருப்பாளோ…?
ஓ…அதுவா…? நீ அதையே நினைச்சிட்டிருக்கியா…? நான் அன்னியோட மறந்துட்டேன்….
அதானே பார்த்தேன்…. –ஞாபகப் படுத்தியதில் சிறு சந்தோஷம் அவளுக்கு.
அப்படீன்னா நீ இப்டித்தானே கேட்கணும்…எதுக்குச் சொரணை அது இதுங்கிறே….? –     உங்ககிட்டே எதுவும் சொன்னானான்னு கேட்டேன்….என்றாள் காதுக்கருகே வந்து. அவளின் ஆர்வம் புரிந்தது.  அடுப்படியில் மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை செய்து அலுத்து, வெளியில் எங்காவது அக்கடா என்று செல்ல மாட்டோமா என்கிற ஏக்கம். பையன் காதில் விழுந்து விடக் கூடாதே என்கிற பயம். பரிதாபம்தான் மேலிட்டது.
நானும் அவளும் பக்கத்தில் எங்காவது பொடி நடையாய் அருகிலிருக்கும் கோயிலுக்குச் சென்று வருவதோடு சரி…ரொம்பத் தள்ளியெல்லாம் செல்வதில்லை. அது அவளுக்குப் போதவில்லைதான். வயதான காலத்தில் பையனோடு இருக்க என்று இந்தச் சென்னையி்ல் வந்து அடைந்தது வருடம் மூன்றாகியும் இன்னும் அத்தனை பொருந்தி வரவில்லை. நகரம் நம்மோடு பொருந்தவில்லையா அல்லது நாம் அதனோடு பொருந்த மறுக்கிறோமா தெரியவில்லை. பையனோடு இருப்பது மட்டும்தான் மனதுக்கு சந்துஷ்டி..
சென்னைன்னா அது என்ன வேற்று நாடா…நம்ம மக்கள்தானே…இத்தனை அதிசயமாப் பார்க்கிறே…? வடபழனி முருகன் கோயில், நங்கநல்லூர் ஆஞ்சநேயர், மயிலை கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  என்று  ஒவ்வொன்றாய்ப் போக ஆசைதான். என்னிடம் கேட்டுத்தான் பார்த்தாள்.
எங்கடி….எதானாலும் ஆறு மலை கடந்து, ஏழு கடல் கடந்து…ங்கிற மாதிரில்ல தூரமா இருக்கு… ….நடந்து போய் பஸ்ஸைப் பிடிச்சு, இறங்கி நடந்து, பெறவும் எலெக்ட்ரிக் ட்ரெயின் ஏறி, அப்புறம் இறங்கி நடந்து…..என்னத்துக்கு இந்தப் பாடு? …இருக்கிற இடத்துலேர்ந்தே சாமியக் கும்பிட முடியாதா….? நம்ம மனசே ஒரு கோயில்தான்….அமைதியா ஒரு அரை மணி நேரம் கண்ணை மூடித் தியானம் பண்ணு….அதவிட வேறே என்ன இருக்கு? இருக்குமிடமே இன்பம்….என்றேன்.
அப்டியி்ல்லே…சும்மா இருப்பதே சொர்க்கம்….இதுதான் உங்களுக்குப் பொருந்தும்…என்றாள் பட்டென்று. கோபமான கோபம். இந்தக் கெழட்டு முண்டத்தக் கட்டிட்டு… மாறடிக்க வேண்டிர்க்கே…
என்ன…எதாச்சும் சொன்னானா…இன்னைக்கு உண்டா….? – மறுபடியும்.
எனக்கு அவளை நினைக்கப் பரிதாபம். என்ன மனசு இது? பெற்ற தாய்க்குப் பிள்ளையிடம் வாய்விட்டுக் கேட்க ஏலவில்லை. எதுவோ தடுக்கிறது. கல்யாணம் ஆகிவிட்டாலே ஒரு படி கீழேதான். ஒரு விலகல்தான்.  கேட்டால் ஏதேனும் திட்டுவானோ, கோபப்படுவானோ என்கிற பயம். தற்செயலாய்ப் பேச்சுவாக்கில் ஒரு நாள் அவன் சொல்லப் போக அதையே பிடித்துக் கொண்டு, மனதில் வைத்துக் கொண்டு இப்படி ஏங்குகிறாளே…? வயதுக்கேத்த மெச்சூரிட்டி இவளிடம் இல்லையா அல்லது அவனிடமா?
  இந்த வயதிலேயே அதையெல்லாம் அவனிடம் எதிர்பார்ப்பது சரியில்லைதான். இருபதுகளில் இருப்பவன் போகிற போக்கில் அல்லது பேச்சுக்கு நடுவே ஏதேனும் ஒன்றைச் சொல்லிச் சென்றிருக்கலாம். அப்படிச் சொன்னோமா என்று கூட நினைவின்றி மறந்திருக்கலாம். இளம் மனைவியோடு ஜாலி பண்ணும் காலமிது. தப்பில்லையே…!
பாவம் விசாலம்….! இந்த பார்…உன்னையும் என்னையும் கூட்டிப் போறதானால் டாக்சி வைக்கணும்…நாம நாலு பேரும் சேர்ந்து அப்பத்தான் போயிட்டு வர முடியும். அவங்க ரெண்டு பேர் மட்டும்னா டூ வீலர்லயே போயிட்டு வந்துடுவாங்க…செலவு மிச்சம்…நாலு பேருக்கு டாக்சிக்கு அறுநூறு ஆகும்…போக….வர…..யோசிச்சிருக்கலாம்…வெளில சாப்பிடுறதானா அதுக்கு வேறே தனிச் செலவு….அவங்க ரெண்டுபேர் மட்டும்னா அது ஒரு மாதிரி….அதெல்லாம் கண்டுக்கப்டாது….புரிஞ்சிதா….? ஏதோ…சிக்கன புத்தியாவது வந்திருக்கே…அப்டி நினைச்சுப் பெருமைப் பட்டுக்கோ…விடு அத்தோட…..தினசரி எவ்வளவோ ஸ்லோகம் சொல்றே…விழுந்து விழுந்து சாமி கும்பிடுறே…இதுக்குப் போய் மனசு அலையுதா?
சொல்வதை யோசித்துச் சொல்ல வேண்டும்…தப்பித் தவறி வார்த்தையை விட்டால் பிறகு அதைப் பிடித்துக் கொண்டு தொங்கும் வாய்ப்பு அதிகம்…எதற்காக, தேவையில்லாமல் அவர்கள் மனதைச் சலனப்படுத்திக் கொண்டு….என்கிற ஜாக்கிரதை உணர்வாவது வேண்டும்? விளையாட்டுப் போக்கில் அல்லது ஏதோவோர் உற்சாகத்தில்  பேசப் போக…ஐயையோ…சொல்லிட்டமே என்று சரி தொலையுது….என்றாவது ஒரு முறை கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்துவிட்டுக் கொண்டு வந்து விடலாம். அல்லது சொல்லாமலாவது பொத்திக் கொண்டு இருக்கலாம். கிருஷ்ணா…ராமா என்றிருப்பவளை போகிற போக்கில் எதற்கு ஆசைப்படுத்த வேண்டும்? மறந்தானா அல்லது மறந்ததுபோல் இருக்கிறானா? எவன் கண்டது? பூந்தா பார்க்க முடியும்?  இப்போது இது தன் தலையில் விடிந்திருப்பதாய்த் தோன்றியது. பசுபதிக்கு.
அவருக்கு இதிலெல்லாம் என்றுமே ஆசையிருந்ததில்லை. கூட வேலை பார்த்த பலரும்…எப்போதாவது சந்திக்கையில் என்னென்னமோ சொல்லத்தான் செய்கிறார்கள். காசி போனேன்…கயா போனேன், கங்கைல குளிச்சேன்… என்று. புண்ணியச் சேத்திரங்கள் என்று லிஸ்ட் போட்டுச் சுற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள் பலரும். இங்கெல்லாம் போனால்தான் வாழ்க்கை நிறைவடையுமா என்று தோன்றும் இவருக்கு.ஒருவாட்டியாவது போயிட்டு வந்திரணும்ங்க….! எல்லாருக்கும் அந்த வசதி இருக்கிறதா என்ன?  அப்படிப் போய் புண்ணிய நீராடினால் பாவங்கள் தொலைந்து விடுமா?அவரவர் நம்பிக்கைதானே?  மனதில் படிந்திருக்கும் அழுக்கை அகற்றுவது யார்? எது? முக்குளித்து எழுந்தால் நதியோடு போய் விடுமா எல்லாமும்?  பிறகு வந்து எவனும் தவறுகளே செய்வதில்லையா? செய்யச் செய்ய, நதி தீர்த்தம் போய் போக்கிவிட்டு, கழுவிவிட்டு வரும் நடைமுறையா? மனிதர்களின் நம்பிக்கை எதன் அடிப்படையிலானது?  ஏனிப்படி நிம்மதியில்லாமல் அலைகிறார்கள்? எது நிம்மதி என்று ஏன் எளிமையாக உணர மறுக்கிறார்கள்? தன்னைச் சுற்றியே அந்த நிம்மதி இருக்கத்தான் செய்கிறது என்பதை இவர்களுக்கு யார் சொல்வது? எப்படி உணர்த்துவது?  இந்த மனமே ஒரு கோயில் என்பதை உணரும் பக்குவத்தை விடுத்து மனம் ஒரு குரங்கு என்று ஏன் கண்டபடி அலைய விடுகிறார்கள்? அதுதானே எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறது…!
ஆசைகளே துன்பங்களுக்கெல்லாம் காரணம். எளிய ஆசையே ஆயினும் அதை நிறைவேற்றிக்கொள்ள இயலாத சூழலில் அதை வெட்டென மற என்று புறந்தள்ளுவதுதானே பக்குவம். பசுபதி இம்மாதிரி நேரங்களில் தன் தந்தையைத்தான் நினைத்துக் கொள்வார். பொட்டு ஆசை இருந்ததில்லை அந்த மனுஷனுக்கு. வெறும் ஒற்றை வேட்டி துண்டோடு வாழ்ந்து கழித்துச் சென்றவர். இந்த உலகத்துலயே சந்தோஷமான, நிறைவான விஷயம் எது தெரியுமா? எளிமையா இருக்கிறதுதான் என்று மகிழ்ச்சியோடு சொல்வார். குறைப்பட்டுக்கொண்டே எளிமையாய் இருந்து என்ன பயன்? உடைகளோடு சேர்ந்து மனசும் எளிமையாய்த் திகழ வேண்டுமே?அதுதான் அவர்.  பத்துப் பைசாக் கூடச் சொந்தம் கிடையாது. குடும்பத்திற்காகவே கடைசி மூச்சு வரை உழைத்து உயிரை விட்டவர். ஆனால் மனசில் அத்தனை நிறைவு. எத்தனை நிம்மதியான வாழ்க்கை?. எளிமையின் சின்னம். எந்தக் மனக் குறையும் இருந்ததில்லை. எதற்கும் ஏங்கியதேயில்லை. ஆசை இருந்தால்தானே ஏங்க? பற்றற்ற வாழ்க்கை என்பது அப்படி யாருக்கும் சாத்தியப்படாதுதான். அதற்கென்று தனிப்பிறவி எடுக்க வேண்டுமோ என்னவோ? அல்லது ஏதாவது வரம் வாங்கியிருக்க வேண்டும்.
இப்போது என்ன செய்வது? கேட்கிறாளே…! பையன் அவன் அறையில் இருந்தான். புதுப் பொண்டாட்டியோடு குசுகுசுவென்று இ்டைவிடாத பேச்சு….இருக்கத்தான் செய்யும்…தப்பொன்றுமில்லைதான். ஆனாலும் கல்யாணம் கட்டியாயிற்றென்றால் எப்படியோ ரகசியம் என்பது வந்து ஒட்டிக் கொள்கிறதுதான். எப்போ…எப்போ என்று காத்துக் கொண்டிருந்தது போல. எவனும் பப்ளிக்கா எதையும் பேசுறதில்ல… நடுவுல பெரிய்ய்ய்ய  திரை விழுந்துடுது…கிடக்கட்டும்…நமக்கென்ன நஷ்டம்? அவன் வாழ்க்கையை அவன் வாழ வேண்டாமா? அதற்குப் பேசித்தானே ஆக வேண்டும்? பிழை என்று கொள்ள முடியுமா? சொல்லத்தான் தகுமா? கண்டும் காணாமல் இருந்து கொள்ள வேண்டியதுதான். நம்மிடம் சொன்னால் சரி. சொல்லலையா.. அதுவும் சரி….எப்படியோ சந்தோஷமாய் இருந்தால் ஓ.கே., நாம் வாழ்ந்து முடித்தாயிற்று. அவனுக்கு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது. அவன் மகிழ்ச்சியாய் வாழ்வதைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும். அதுதான் சரி. அதுவே சரி.
நல்லதும் கெட்டதும், நன்மையும் தீமையும் எல்லாமும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதே அனுபவித்துப் பார்த்தால்தானே தெரியவரும்? எல்லாமும் நல்லதாகவே நடக்கட்டும், நன்மையாகவே முடியட்டும் என்று நாம் பிரார்த்திப்போம்தான். வழி காட்டுவோம்தான். அந்தப் பாதையில் எவ்வளவு தூரத்திற்கு அவன் பயணிக்கிறான், பயணிக்க வேண்டும் என்பதை அவன்தானே முடிவு செய்ய வேண்டும்? நன்மையும் தீமையும் பிறர் தர வாரா…..எல்லாமும் நமக்கு நாமே சம்பாதித்துக் கொள்வதுதான். யாரும் யார் சொல்லியும் கேட்கப் போவதில்லை. எவரையும் யாரும் எதுவும் சொல்லித் திருத்திவிட  முடியாது எதற்கும் வற்புறுத்தவும் ஏலாது.  அவரவர் அனுபவத்தின்பாற்பட்டே உய்த்துணர வேண்டும். அதுவே முழுமையான அனுபவ முதிர்ச்சியாக அமையும்…அதுவே சரியான மாறுதலைக் கொண்டு வரும்.
சிந்தனை எங்கெங்கோ பறந்து வியாபித்தது பசுபதிக்கு. அவர்கள் அறையிலிருந்து வெளிப்பட்டார்கள்.
அப்பா…நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றோம்….
கொஞ்சமென்ன, நிறையப் போய்ட்டு வாங்க…!.- வார்த்தைகளுக்கா பஞ்சம்…?
வெளில போறீங்களா….? அப்போ சமையல்……? – விசாலம் சத்தமாய்க் கேட்டாள். அவள் பாடு அவளுக்கு.
சமையல்லாம் இல்ல…மையல்தான்…. – நான் எனக்குள்…
இல்லம்மா….எங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு சமைக்க வேண்டாம். விட்ரு…வெளில பார்த்துக்கிறோம்….. – சொன்னான்.  அம்மாவுக்கு ஏதோ சலுகை பண்ணுகிறானாம்….
நீங்க ரெண்டு பேரும் போயிட்டா….? எங்களுக்கு வயிறில்லயா….? நாங்க பொங்கித் திங்க வேணாமா…? ஈரத் துணியா கட்டிட்டு நிக்க முடியும்….?
அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்.
என்னாச்சு…கேட்டீங்களா…கேட்கலையா….? உங்களத்தானே….தோளை வந்து இடித்தாள் விசாலம். இப்டிக் கோட்டை விட்டிட்டு நிக்கிறீங்களே…? என்பதுபோல.
என்னத்தக் கேட்கச் சொல்ற…? அவன்தான் கால்ல சக்கரத்தக் கட்டிட்டு நிக்கிறானே….அவன்ட்டப் போயி……
கைக்குள் வைத்திருந்த பிள்ளை….! – அவள் பெருமூச்சு உணர்த்தியது. பால்கனியில் தாய்க்குருவி குஞ்சுகளுக்கான இரையோடு உள்ளே நுழைந்தது.
வாசலையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு அடுப்படியை நோக்கிப் போனாள் விசாலம். லேசாய் விசும்பியது போல் கூட……!!                                           -------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...