29 செப்டம்பர் 2018

“கரிஷ்மா நடிகர்”


                                                                ------------------------------------
      வீட்டில் அடுப்பில் உலை ஏற்றிவிட்டு, இன்று நிச்சயம் சாப்பிட்டு வயிறாருவோம் என்ற நம்பிக்கையோடு ஒரு இடத்திற்குச் சென்று உதவிக்கு நிற்க முடியுமானால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் வீடாகத்தான் இருக்க முடியும் என்று ஒரு முறை பத்திரிகையாளரும், நடிகருமான திரு சோ..ராமசாமி அவர்கள் கூறியிருந்தார்.
     அதுதான் நாம் அவரைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் மனதில் தோன்றும் செய்தியாக இன்றுவரை உள்ளது. மக்கள் அவரைப்பற்றி அப்படித்தான் அறிந்திருந்தார்கள். எப்படியான பாத்திரங்களை ஏற்று அவர் தன் திரைப்படங்களில் நடித்தாரோ, தன் திரைப்படங்களின் காட்சிகளை அமைத்தாரோ,பாடல்களை என்ன கருத்தோட்டங்களில் எழுத வைத்துப் பாடினாரோ, அப்படியாகவே நிஜ வாழ்விலும் இருந்தார் என்பதுதான் உண்மை.
     நீ பத்து ரூபாய் சம்பாதித்தாயானால் அதில் இரண்டு ரூபாயையாவது தர்மத்திற்கு ஒதுக்கு என்பதான நீதி நாம் கேள்விப்பட்டதும், படித்து அறிந்ததும் ஆகும். அதை நடைமுறை வாழ்க்கையில் விடாமல் கடைப்பிடித்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அம்மாதிரியான மனநிலை அந்தக் கால கட்டத்தில் திரைப்படங்களில் கோலோச்சிய பிற நடிகர்களுக்கு இருந்ததா என்றால், இருந்தது…. ஆனால் இவரைப் போல் அது தாராளமாய், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் என்கின்ற மெய்ப்பாட்டில் நின்று மேன்மை எய்தவில்லை என்றுதான் சொல்லமுடியும்.  அதனால்தான் “பொன் மனச் செம்மல்” என்கின்ற பட்டத்தை இவரின் தர்ம சிந்தனைக்கு ஆதாரமாய் மகுடம் சூட்டியதுபோல் வழங்கி ஆசீர்வதித்தார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமி அவர்கள்.
     அந்தந்தக் கால கட்டங்களில் தமிழ்த் திரையுலகில் இருவேறு விதமான நடிகர்கள் புகழின் உச்சியில் நின்று கோலோச்சியிருக்கிறார்கள். எம்.கே.. தியாகராஜ பாகவதர், பி.யு. சின்னப்பா…… பிறகு வந்தவர்களில் திரு எம்.ஜி.ராமச்சந்திரன், நடிகர்திலகம் சிவாஜிகணேசன்…அதன் பிறகு திரு ரஜினிகாந்த், திரு கமல்உறாசன்….பிறகு இப்போதிருக்கும் இளைய தலைமுறை நடிகர்கள்…..
     இருவேறு நடிகர்களையும் அடையாளப் படுத்திய வெவ்வேறு நிலைகளில்தான் அவர்களின் திரையுலகப் பயணங்கள் கடந்திருக்கின்றன. ஒருவர் மக்களின் ஏகோபித்த செல்வாக்கைப் பெற்ற Charisma நடிகர் மற்றொருவர் திறமைசாலி.  அப்படியென்றால் அந்த வார்த்தைக்கு அப்படியே நேரடியாகப் பொருள் கொண்டு, “அப்டீன்னா எங்காளு திறமைசாலி இல்லேங்கிறீங்களா ?” என்று கேட்கக் கூடாது… ஒருவர் charisma நடிகராக…அதாவது மக்களின் அதீத, அன்பும், பாசமும் மிக்க செல்வாக்குப் பெற்ற நடிகராக இருந்தாரென்றால்,  அதற்கு நேரிடையான இன்னொருவர், தான்  ஏற்றுக் கொண்டிருக்கும் தொழிலுக்கு மிகவும் நியாயம் செய்பவராக, தன் திறமை முழுவதையும் படத்துக்குப் படம் வித்தியாசமாகக்  காண்பித்து, கடுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நடிப்பில் தன்னை முன்னிறுத்திக் கொண்டு அதன் மூலம் மக்களின் செல்வாக்கை, அன்பைப் பெற்றவரானார்  என்றே பொருள் கொள்ளலாம். பொருள் கொள்ள வேண்டும் என்பதே சரி.
     ராஜா ராணி கதைக் காலத் திரைப்படங்களிலிருந்து, பிறகு சமூகக் கதைகளை உள்ளடக்கிய திரைப்படங்களாக வர ஆரம்பித்துத் தொடர்ந்தது வரை படிப்படியாக எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்களை நாம் கண்ணுற்றோமானால் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கான கதையம்சங்கள் அவரை ஏழைப் பங்காளனாகவே காட்டி வந்திருக்கிறது. திரையுலகில் படிப்படியாகப் புகழ் பெற்றுக் கொண்டு வந்த காலங்களிலும் கூட ஆரம்ப கால சரித்திரப் பின்னணி கொண்ட புனைவுத் திரைப்படங்களில், அல்லது ராஜா ராணி கதைத் திரைப்படங்களில்  அவருக்கு அமைந்த கதா பாத்திரங்கள் நியாயத்தின் பக்கமும், நேர்மையான செயல்களை லட்சியமாகக் கொண்டதாகவும், பாட்டாளி மக்களின் பக்கம் நின்று குரல் உயர்த்திப் பேசுபவனாகவும், அவர்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும், போராடும் ஒருவனான கீழ்நிலைத்  தொண்டனாகவும், அவர்களால் மனமார ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவனாகவும் திரு.எம்.ஜி.ஆர்.. அவர்களை முன்னிறுத்தி வந்திருக்கிறது. இது அவராகவே விரும்பி ஏற்றுக் கொண்டதாகவும் இருக்கலாம், அல்லது அவருக்குத் தானாகவே அமைந்ததாகவும் கூட இருந்திருக்கலாம். தேசத்தின் மீது பற்றுக் கொண்ட இளைஞனாய், நாட்டைக் காக்கும் படைத் தலைவனாய், மக்களின் துயர் துடைக்கும் மன்னனாய் ஆன கதாபாத்திரங்கள் அவர் மீது மதிப்பையும், மரியாதையையும்,  நம்பிக்கையையும் படிப்படியாக மக்களின் மனதில் ஏற்றி வந்திருக்கிறது. அநீதியைக் கண்டு கொதித்தெழுந்து அவற்றை வேரோடு அழித்தொழிக்கும் பலம் கொண்ட உரம்பெற்ற கதாநாயகனாய் படத்துக்குப் படம் அவர் வந்து நின்ற போது மக்கள் சலிக்காமல் பார்த்தார்கள். சந்தோஷமடைந்தார்கள்….பாசமும், பற்றும், அன்பும் கொண்டு…தங்களையே தனது ஆத்மார்த்த நடிகருக்காக அர்ப்பணம் செய்பவர்களாக மாற ஆரம்பித்தார்கள்.
     படத்துக்குப் படம் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்கள் மக்களை எப்படிப் போய்ச் சேருகிறது, அவர்களின் மனங்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை தனது திரைப்படங்களுக்கான அபரிமிதமான வரவேற்பையும், கூட்டத்தையும், வசூலையும் கண்டு….இந்தத் தொழிலில் தன் கால் பலமாக ஊன்றப்பட வேண்டுமானால், நீண்ட காலத்திற்கு இந்தத் திரையுலக பிம்பத்தின் கீழ் நின்று கோலோச்ச வேண்டுமானால் இம்மாதிரியான சாதாரண, பாமர, நடுநிலை மக்களுக்குப் பிடித்த கதா பாத்திரங்களையே தான் ஏற்க வேண்டும்….அதிலேயே நிலைக்க வேண்டும் என்கின்ற தீர்மானம் அவருக்கு அவரின் ஆரம்ப காலங்களிலேயே மனதளவில் ஆழமாக விழுந்திருக்க வேண்டும் என்பதே அவரை ஊன்றிக் கவனித்தவர்களின் கணிப்பாகச் சொல்ல முடியும்.
     கதை, வசனம், பாடல்கள், இசை, காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் வார்ப்பு என்று ஒவ்வொன்றிலும் கவனத்தை ஊன்றிச் செலுத்தவில்லையானால் இந்த வெற்றி சாத்தியமில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையும் வரை வேண்டுமானால் வரும் வாய்ப்புக்களை மதித்து, தொழில் பக்தியோடு சீரிய முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு முன்னேறியிருக்கலாம். ஆனால் அதன்பின், தன் கால் பலமாக இந்தத் திரையுலகில் ஊன்றப்பட்டு விட்டது என்கின்ற தீர்மானம் வந்த வேளையில், அது தன்னை இந்த இடத்திற்கு உயர்த்திய ரசிகப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவின்பாற்பட்டதே என்கின்ற நன்றியுணர்ச்சியில், என் திரையுலக வாழ்க்கை எப்படி இந்த மக்களின் மனங்களை, எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிப்பதாக இருந்ததோ அது போலவே என் பொது வாழ்க்கையும் இந்த அன்பான மக்களுக்காகவே என்று தன்னை மேலும் நிலைப்படுத்திக் கொண்டு முன்னேறினாரே அங்கேதான் பொன் மனச் செம்மலின்  பொன்னான இதயம் இந்த நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு முன்னேறியதின் வரலாறு தன்னைப் பற்றிப் பெருமை கொள்கிறது.
     ஐம்பதுகளிலிருந்து கருப்பு வெள்ளைப் படங்கள் சமூகப்படங்களாக மாற ஆரம்பித்த கால கட்டங்களில் அந்தந்தக் கதாநாயக நடிகர்களுக்கென அமைந்த பொருத்தமான திரைக்கதைகள், அதனை வடிவமைத்த காட்சியமைப்புகள் எமஃ.ஜி.ஆர்., சிவாஜி போன்ற நடிகர்களை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. என் தங்கை, தாய்க்குப் பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி போன்ற ஆரம்ப கால சமூகப் படங்களிலேயே அவருக்கான கதாநாயக பிம்பம் அழுத்தமாக விழுந்து விட்டது எனலாம். அநியாயம் நடக்கும் இடத்தில் திடீரென்று தோன்றி அதனை எதிர்த்து நிற்றல், அதனிலும் எதிர்ப்பு வந்தால் அந்த ஆபத்தையும் எதிர் கொள்ளல், போன்ற காட்சியமைப்புகள் இவருக்குக் கனப் பொருத்தமாய் இருக்கின்றதே, சிறப்பான வரவேற்பைப் பெறுகின்றதே என்று ஆழமாய் உணர்ந்து, அப்படியான வீர தீரமிக்க காட்சிகளை அமைத்தே திரைக்கதையைப் பின்னி ஸ்வாரஸ்யப்படுத்தி எம்.ஜி.ஆர் நடிக்கும் படத்தை வெற்றிப் படமாக்கினார்கள் இயக்குநர்கள். தீமையைத் தடுக்கும், எதிர்க்கும், வஞ்சகத்தை முறியடிக்கும், வெற்றிவாகை சூடும் கதாநாயக பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும் சிறப்பான காட்சியமைப்புகள் மக்கள் திலகத்திற்கு கன ஜோராகப் பொருந்துவதை உணர்ந்த தயாரிப்பாளர்கள் அவரை வைத்துத் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார்கள். தனக்கான வெற்றிச் சித்திரம் மக்களால் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதைக் கண்கூடாக உணர்ந்து கொண்ட எம்.ஜி.ஆர் அவர்கள் அந்த மக்களின் நல்வாழ்வுக்கான கொள்கைகளை, கோட்பாடுகளைத் தன் படங்களில் தனது ஆளுமைக்கு உட்படுத்தி வெளிக் கொண்டுவர ஆரம்பித்தார். அவர் என்ன சொன்னாலும் சரி, எது செய்தாலும் சரி எல்லாமுமே இந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்கின்ற தீர்மானம் கிடைத்தபோது, அவரின் இஷ்டப்படியே அவரது ஒவ்வொரு திரைப்படங்களும் உருப்பெற ஆரம்பித்தன. அதுவே அவரது தொடர்ந்த வெற்றிக்கான காலம் கடந்த சரித்திரமாகத் திகழ ஆரம்பித்தது.
           Charisma நடிகர், திறமைசாலி என்ற இருவகை நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் என்றும் போட்டியுடனோ, பொறாமையுடனோ இருந்ததில்லை என்பதுதான் உண்மை.  காரணம் ஒருவருக்குப் பொருந்தும் வேஷங்கள், கதாபாத்திரங்கள் இன்னொருவருக்குப் பொருந்தாது என்பதும், கதையமைப்புகளே வித்தியாசங்கள் கொண்டவை என்பதும், இவருக்காக எழுதுவது ஒருவகை, அவருக்காக அமைக்கும் குடும்பக் கதைகள் இன்னொருவகை என்பதாகவே வெவ்வேறு வகையிலான திரைக்கதையமைப்புக் கொண்ட திரைப்படங்களை நம் மக்கள் எந்த வித்தியாசமுமின்றி சந்தோஷமாகத் துய்க்கும், அனுபவிக்கும் பழக்கத்தைக் கைக்கொண்டிருந்தனர். ஒரு ஷோவுக்கு மக்கள்திலகத்தின் திரைப்படங்களை ஓடிச் சென்று ஆர்வமாய்ப் பார்த்தார்களென்றால், அடுத்த மாலை நேரப்படத்திற்கு நடிகர்திலகத்தின் படத்திற்கு சந்தோஷமாய்ப் போய் நின்றார்கள் என்பதுதான் உண்மை. இருவருமே கொடிகட்டிப் பறந்தார்கள்தான். ஆனால் மக்கள் மனங்களில் எது நின்றது என்று பார்த்தால் மக்கள் திலகத்தின் கொடைவள்ளல் தன்மைதான் நின்றது. அந்த நடிப்பும் நின்றது. ஆனால் படத்தோடு முடிந்தது. என்றானாலும் அவர் தங்களுக்கானவர், தங்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனப்பாங்கு கொண்டவர், தங்களின் வாழ்வை உய்விக்க, உயர்த்தேந்த வந்த மகான் என்பதான நம்பிக்கை நம் ஏழை எளிய மக்களிடம் இருந்தது. அதுவே அவரைத் இந்த தமிழ்நாட்டின் முதல்வர் ஆக்கி அழகு பார்த்தது.சரித்திரத்தின் மாற்ற முடியா உண்மைகள் இவைகள்.  அவரின் புகழ் என்றென்றும் அழியாப்புகழ்.
                                -------------------------------   


    

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...