30 செப்டம்பர் 2018

அசோகமித்திரனின் “கரைந்த நிழல்கள்” - நாவல்


ஏற்கனவே சரியாகப் படிக்கவில்லையோ என்று மீண்டும் எடுத்தேன். இப்பொழுதும் அந்தப் பணியாளர்களோடு நானும் ஒரு வேலையாளாகப் பயணம் செய்யும் அனுபவம் எனக்குக் கிடைத்தது. சினிமாத் தொழிலை மேற்கொண்டவர்களின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களது தனிப்படுத்தப்பட்ட குணாதிசயங்களையும் இயல்பான போக்கில் அன்றாட நிகழ்வாகச் சொல்லிக்கோண்டே நீண்டு போகும் நாவல் இது. திரையில் பளபளப்பாக, அழகழகாகப் பார்க்கும், ரசிக்கும் விஷயங்கள் படம் எடுக்கையில் யதார்த்தத்தில் எவ்வளவு நாறும் என்பதைப் படிக்கும்போது அசோகமித்திரன் கூட இப்படியெல்லாம் சொல்கிறாரே என்றுதான் தோன்றியது. ஆனால் கடைநிலைப் பணியாளர்களின் அவல நிலை அங்கே முன் வைக்கப்படுகிறது. நாம் மனதில் ஒரு மதிப்பை வைத்துக் கொண்டு நகர்வதால் கூட அப்படித் தோன்றலாம். ஆனால் அந்த உலகத்தின் யதார்த்தத்தினை, அதில் கரைந்து போகக் கூடியவர்களைப் படம் பிடித்துக் காண்பிப்பதுதானே இந்நாவலின் நோக்கம். வெளிவந்த கால கட்டத்தில் நிச்சயம் இது அழுத்தமாகப் பேசப்பட்டிருக்கும் என்றுதான் தோன்றுகிறது. (அப்பொழுது இதுபற்றியெல்லாம், அதாவது இலக்கிய விசாரங்களைப்பற்றி அவ்வளவு அறியாத காலம். ) இன்று மீண்டும் படிக்கையிலும் நாவலின் அழுத்தம் உறுதிப்படுகிறது.
இன்னும் நிறையச் சொல்லலாம் என்று நாவல் நீளும் என்ற இடத்தில் போதும் என்று அதுவாகவே முடிந்து போகிறது. முடிந்து போவது கூட இல்லை. முடிக்கப்படுகிறது. அவ்வளவுதான். அசோகமித்திரனைப் படித்துப் படித்து அந்த எழுத்துக்கும், நடைக்கும் பழகிப்போனவர்கள் கண்டிப்பாக இதை ரசிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...