28 ஜனவரி 2017

“கை கொடுக்கும் கை…!”

 

27.11.2016 y தினமணி கதிரில் வெளிவந்த சிறுகதை

 

15170883_10205913015063115_3425716333671627912_n

நாயுடு காம்பவுன்டைக்“ கடக்கையில் தற்செயலாய்ப் பார்வை போனது. மனுஷன் இருந்தால் பிடித்துக் கொள்வார். நிச்சயம் தப்பிக்க முடியாது.

ஏய்….! நாகு….அம்பி வந்திர்க்கு பாரு….என்று உள் நோக்கிக் குரல் கொடுப்பார். கையில் டீயோடு ஓடிவரும் அந்தம்மா. அந்த அளவிலான மதிப்பிற்கு, தான் என்ன பண்ணினோம் என்று தோன்றி இவனைக் கூச வைக்கும். இதைத் தவிர்ப்பதற்காகவே அந்த வழியைத் தவிர்ப்பான்.

ரெண்டு மூணு மாதங்கள்தான் இருக்கும் இப்படி ஆரம்பித்து. உட்காரும்போதெல்லாம் டீ கொடுத்து உபசரித்து….அது தனக்காக இல்லையோ…அம்மாவுக்காக…அப்பாவுக்காக…சாமி அண்ணாவுக்காக என்று கூடச் சொல்லலாம்….தான் சின்னப் பையன் என்பதாகத்தான் நாயுடு நினைப்பு இருக்கும். அம்பி…அம்பி….என்று அவர் வாய்விட்டு அழைப்பதில்தான் பிரியம் சொட்டும்….

அம்மா நல்லாயிருக்காகளா…!...அய்யா? சாமி வந்திருச்சா……? கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகும் நாயுடம்மா. பிறர் மீது அன்பு செலுத்துவதற்கு கொள்ளை கொள்ளையாய் மூட்டை கட்டி வைத்திருப்பார்களோ என்று தோன்றும்.

மில் மேம்பாலத்தில் ஏதோ விபத்து என்று இரு பக்கமும் நெடுந்தொலைவிற்கு வாகனங்கள் நின்று போயிருந்தன. அதுதான் அவனது வழக்கமான வழி. இரண்டாவது கேட்டின் எதிர்ப்புறச் சாலையில் நுழைந்து, சற்று தூரத்திலான இடது சந்தில் வளைந்தால் தங்கும் விடுதி.

ஆரம்பத்தில், சந்தில் திரிந்த ரெண்டு மூன்று நாய்கள் கூடி நின்று குலைக்க ஆரம்பித்தன. கொஞ்ச நாளைக்குப் பெரிய தலைவலியாய்த்தான் இருந்தது. தினமும் உள்ளுக்கும் வெளிக்குமாகப் போய் வந்தும் கூட இன்னுமா தன்னை அடையாளம் தெரியவில்லை. என்று இவைகளிடமிருந்து மீள்வது? கடித்து வைத்தால்?

தாங்க முடியாமல்தான் வார்டனிடம் சொன்னான். அப்டியா? என்று கேட்டுவிட்டு இவன் கிளம்பும்போது கூடவே வந்தார். வழக்கம்போல் அவை குரைக்க ஆரம்பிக்க…யேய்…யேய்….போ…போ…என்றவாறே ஆளுக்கொன்றாக பிஸ்கட் துண்டுகளை ஒடித்து ஒடித்து வீசியெறிந்தார். அன்றிலிருந்து இவனும் அதை வழக்கமாய்க் கொண்டான். சில நாட்கள் போடுவதில்லையாயினும் வாலை வாலைக் குழைத்துக் கொண்டு என்னமாய் பம்முகின்றன? பிஸ்கட் போடாமல் இருக்க மனசு வருகிறதா? என்ன ஒரு தீர்க்கமான பார்வை, மனுஷாள் பார்ப்பதுபோல்? உலகமே அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது என்பது எத்தனை உண்மை?

பொன்னகரம் மெயின்ரோட்டில் புகுந்து கிராஸ் ரோடு தாண்டி படித்துறைப் பக்கமாய் வந்து வளைந்தான். வளைந்த பின்னால்தான் மனதுக்குள் சுருக்கென்றது. போச்சுறா…மாட்டிக்கிட்டமா?

ஏய்…அம்பி…! எங்கப்பா ஓடுற….? – குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தால் ஆளைக் காணோம். அடுத்த நிமிடம் வாசலில் எட்டிப் பார்ப்பது தெரிந்தது. வீட்டுக்குள்ளிருந்து கொடுத்த சப்தம் வீதியில் கலகலக்கிறது. அத்தனை கனமான சாரீரம்…சரீரமும் அப்படித்தான். பாட்டுக் கேட்கும் பரம ரசிகன். அதிலும் பழைய பாடல்கள் என்றால் தித்திக்கும் தேன்.

பொன்னே புது மலரே….பொங்கி வரும் காவிரியே….

மின்னும் தாமைரையே…வெண்மதியே….!

ரசனையாய் வரிகளை முனகிக் கொண்டு கைகளை நீட்டிச் செய்யும் ஆக் ஷன், பழம் பெரும் நடிகர்களை நினைவு படுத்தும் நமக்கு. ஐம்பதில் வெளிவந்த நல்லதங்காள் படத்தின் பாட்டு அது என்று இவனுக்குச் சொன்னார். பலருக்கும் நினைவில் இல்லாத, யாராலும் ஞாபகத்தில் நிறுத்த முடியாத வரிகளை மறக்காது வைத்திருந்து பாடுவது அதிசயமாய்த் தோன்றும்….

நல்ல கருத்த உருட்டுக் கல்போல் பரந்த தேகம். அதற்கேற்ற விரிந்த மனசு. அந்த அம்மாளுக்கும்தான். எப்படித்தான் ஒன்று சேர்ந்தார்கள் இத்தனை ஒற்றுமையாய்? இல்லையென்றால் அங்கு வாடகைக்கு வீடு கிடைக்குமா?

அம்மா சொன்ன கதையைக் கேட்டுக் கண்ணீர் சிந்தி அன்று மாலையே சட்டி பானையை எடுத்துக் கொண்டு இங்கு வந்து சேருங்கள் என்று சொல்லும் மனசுதான் வருமா? ஆனாலும் அம்மாவின் உருக்கம், மற்றவரையும் கரையத்தான் செய்து விடுகிறது. சொல்லும்போதே கண்களில் நீர் முட்டும் அம்மாவுக்கு. அதிலேயே எதிராளி பாதி விழுந்து விடுவான். மீதிக்குக் கேட்க வேண்டுமா? அந்தக் கணமே காரியம் பலிதம் என்று எண்ணிக் கொள்ள வேண்டியதுதான்.

நீங்க ஏன் கவலைப்படுறீங்க மாமி…? நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம்… பார்த்துக்கிட மாட்டமா? அப்டி என்ன பெரிஸ்ஸா ஆர்ப்பாட்டம் பண்ணிடப் போறாரு…? நான் பேசுறேம் பாருங்க அவர்ட்ட….அப்புறம் கேளுங்க….சொன்ன பேச்சுக் கேட்டு அடங்கியிருக்காரா இல்லையான்னு…பிறகு சொல்வீங்க….? – எந்த மூன்றாமவர்கள் இப்படி தைரியம் கொடுப்பார்கள்? சுற்றமும், நட்பும் என்கிறோமே…அது மட்டும் ஒருவனுக்கு வசமாய் அமைந்து விட்டால் பிறகு வாழ்க்கையில் அவன்தான் ராஜா….அம்மாவின் கருணை பொங்கும் மனசும், இதமான பேச்சும், பணிவும் அன்பும் மிளிரும் நடப்பியல்புகளும் யாரைத்தான் ஒதுக்கும்?

கேசுத் தம்பி…..நல்லாயிருக்கீகளா…? – கேட்டவாறே மாணிக்கமும் வந்து நிற்க…நீ போய் வேலையைப் பார்றா….காலைலயே வண்டி என்னாச்சுன்னு வந்து கேட்குது ஆளுக….பேச்சுக்கு நிக்காத….என்று சொல்லிக் கொண்டே நாயுடு வர, வர்றன் தம்பி…என்றவாறே அப்பாவை முறைக்காத குறையாய் அகன்றான் மாணிக்கம்.

வாங்க…உக்கார்ந்து பேசுவோம்….என்ன ஆளையே பார்க்க முடில….? அப்டியே வந்து அப்டியே போயிடுறீங்களாக்கும்…என்று மில் ரோடுப் பக்கம் கையைக் காண்பித்தார்.

இல்ல நாயுடு….ஆபீஸ்ல வேல ஜாஸ்தி….அந்த வழி கொஞ்சம் சுருக்கு…அதான்….

இருக்கட்டும்…எங்களயும் கொஞ்சம் ஞாபகத்துல வச்சிக்கிடுங்க…என்றவாறே அருகிலுள்ள இரும்பு முக்காலியை இழுத்துப் போட்டார்.

அமர்ந்தமேனிக்கே அந்தப் பகுதியை அப்படியே கொஞ்சம் நோட்டம் விட்டான் கேசவன். சற்றுத் தள்ளியிருக்கும் மாரியம்மன் கோயிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவிற்கு அந்தத் தெருவே அல்லோல கல்லோலப் படும். அங்கிருந்து நூறடி தள்ளித்தான் திரை கட்டுவார்கள். பொழுது இருட்டும் ஆறரை மணி போல் ஆரம்பித்தால் விடிகாலை நாலரை, அஞ்சுக்குத்தான் முடியும். குறைந்தது மூன்று சினிமாக்கள்….…காம்பவுன்டுக்கு வெளியே நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு விடிய விடியப் படம் பார்ப்பது அத்தனை ஷோக்கு. கடைசியாகக் கர்ணன் படமும், படகோட்டியும் போன வருஷம் பார்த்தது. மூன்றாவது சினிமாவுக்கு நேரமில்லாமல் போயிற்று. போதும்…இதுவே…என்ற திருப்தியோடு சனம் எழுந்து கலைந்தது. மறுநாள் தெருவே வெறிச்சோடிக் கிடந்தது. வீட்டுக்குள் சுருண்டு விழுந்த ஆட்கள் ஒன்றுகூட எழுந்திரிக்கவில்லை. சாயந்தரம் போல்தான் அங்கங்கே தலைகள் தெரிந்தன.

இந்த வருடம் அந்தச் சந்தோசம் இல்லாமல் போகும் என்று இவன் கனவிலும் நினைக்கவில்லை.

எதுக்கு அம்பி…உங்கள விட்டிட்டு மெட்ராசுக்குப் போறாக….? உங்க அண்ணாச்சி அப்பப்ப வந்திட்டுப் போக வேண்டிதான…? ரெண்டு தங்கச்சிகளும் இங்கதான வேல பார்க்குது…அந்த வருமானமும் இல்லாமப் போகும்தான…? சின்ன வேலையானாலும் அங்க மெட்ராசுக்குப் போயி…வேலை தேடி…..செரமம்தான…? ஏன் நீங்க சொல்லலியா…?

சொன்னேன் நாயுடு…..அவுக என்னவோ பெரியவன்ட்டத்தான் இருக்கணும்ங்கிற ஒரே எண்ணத்துல இருக்காங்க….மூத்த பிள்ளைட்டத்தானே பெத்தவங்களுக்கு நோங்குது… இவனத் தனியா விட்டிட்டுப் போறமேன்னு நினைக்கல….என்னை என்ன பண்ணச் சொல்றீங்க…? மூத்ததுன்னா ஒரு கரிசனதான்….

அதுக்கில்லய்யா…நீங்க என்னவோ அடிக்கடி கோபப்படுறதாவும், சண்டை போடுறதாவும் சொல்லிச்சு அம்மா…..நாகுட்டச் சொல்லி மாமிதான் அழுதிட்டிருந்தாங்க… அப்டி என்னா சொன்னீக….? தாயார அழ வைக்கலாமா சாமீ….?

எங்கம்மா தொட்டதுக்கெல்லாம் அழத்தான் செய்வாங்க…நாயுடு….நானும் கோபப்பட்டிருப்பேன்தான். இல்லைன்னு மறுக்கல….அதுக்காக அவுகளப் பிடிக்காமப் போயிருச்சின்னு நெனச்சாங்கன்னா…..எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணுமாம்…அதுக்காகத்தான் மறைமுகமா நா இப்டியெல்லாம் கத்துறேனாம்…சண்டை பிடிக்கிறேனாம்…வெறுத்துப் பேசுறேனாம்…

அப்டீன்னா அதத்தான செய்யணும்…ஊரை விட்டுப் போனா….?

அது ஏன்னு நீங்க அவுங்ககிட்டத்தான் கேட்கணும்….அப்பாவை எதிர்த்து என்னால எதுவும் கேட்க முடியாது…நாங்க சின்னப்புள்ளைலேர்ந்து அவுங்க நேரா நின்னு பேசினதே கிடையாது…தங்கச்சிகளுக்குக் கல்யாணம் முடிச்சித்தான் நான் பண்ணுவேன்னு எத்தினியோ வாட்டி சொல்லியிருக்கேன்…அப்டியும் இப்டி நினைச்சாங்கன்னா…? போகட்டும்னு விட்டிட்டேன்…

வீட்டுச் சாமான்கள் அத்தனையையும் பேக் பண்ணி லாரியில் ஏற்றி சென்னைக்குக் கொண்டு சேர்த்தது இவன்தான். சின்னக் குழந்தைபோல் நானும் வர்றேன் அம்பி என்று கிளம்பி விட்டார் நாயுடு.

பத்துப் பன்னெண்டு மணி நேரம் ஆகும்..நாயுடு…தாங்குவீங்களா? உட்கார்ந்தே வரணுமே….வயசான காலத்துல எதுக்கு ரிஸ்க்கு? லாரிப் பயணம் தேவையா?

என்னா நீங்க நம்மள அப்டி நெனச்சுப்புட்டீங்க…அதல்லாம் வருவேன்…அங்க உங்க அண்ணாச்சி எப்டி வீடு பார்த்திருக்காரு…உங்க அப்பாம்மாவுக்கு சவுரியமா இருக்குதான்னு நான் பார்க்க வேணாமா? வாடகைக்கு இருந்தவுகதானன்னு விட்டிட முடியுமா? நாம அப்டியா இத்தன நாள் இருந்தோம்? – கேட்டுவிட்டு லாரியில் தொற்றிக் கொண்டதும் அங்கு வந்து…சாமீ…நானும் வந்திட்டேன்….என்று ஒங்கிக் குரல் கொடுத்தவாறே வீட்டுக்குள் நுழைந்ததும், அவரும் அப்பாவும் அருகருகில் ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடியதும் மறக்கக் கூடிய காட்சிகளா?

ராத்திரி வந்ததும்….நான் அப்டிப் படுக்கையப் போடுறேன்…என்று நாயுடு திண்ணைக்கு ஓட…அப்பா அதிர்ந்து போய், என்ன நீங்க? நீங்க நம்ப குடும்பத்துல ஒருத்தராக்கும்னு நான் நெனச்சிண்டிருக்கேன்…வாசல்ல படுக்கறேன்ங்கிறீங்.க…அதெல்லாம் முடியாது…இங்க எங்க கூடத்தான் படுக்கணும்…என்று சொல்லி அருகருகே படுத்துக் கொள்ள…அன்று நாயுடு விட்ட ஜெட் வேகக் குறட்டைச் சத்தத்தில் கூடத்தில் படுத்த ஒருவரும் தூங்கவில்லை என்பது தனிக்கதை. அவர் ஊர் போன பிறகு தங்கைமார்கள் சொல்லிச் சொல்லிச் சிரிக்க…அப்பாவும்..பொறுக்க மாட்டாமல்… …அன்னைக்கு ராத்திரி நானும் பொட்டுக் கூடத் தூங்கலதான்….என்றார்.

கிளம்பும்போதுதான் நாயுடு அப்பா கையைப் பிடித்துக் கொண்டு கேட்டார்.

சாமி வந்திடுவாருல்ல…….? – எத்தனை முக்கியமான கேள்வி.

அப்பாவின் கண்கள் கலங்கி வார்த்தைகள் வர மறுத்தன. “உங்கள மாதிரிப் பிரியம் உள்ளவா இருக்கச்சே…அவன் எங்க போயிடப் போறான்…வந்துருவான்…” என்றார்.

வரட்டும் சாமி…அங்க வந்தாலும் நா வச்சுப் பார்த்திட்டுப் போறேன்…எம் பிள்ளமாதிரி இருந்துட்டுப் போறாரு….உங்களுக்காச்சும் கொஞ்சம் பாரம் குறையுமில்ல…. – அவரின் கைகளை ஏந்தி முகத்தில் பொத்திக் கொண்டார் அப்பா. ஆத்மார்த்தமான அன்பு இதுதானோ என்று தோன்றியது.

காம்பவுன்ட் நுழையும் இடத்தின் இடது புறமிருந்த ஒர்க் ஷாப் திறந்து கிடந்தது. நாயுடு பையன் மாணிக்கம் ஆளைக் காணோம். மூன்று வண்டிகள் வேலைக்காய்க் கழற்றிப் போடப்பட்டிருந்தன. அங்கங்கே நட்டுக்களும், ஸ்குரூகளும், செயின்களும், ஸ்பேனர்களும் இரைந்து கிடந்தன. அழுக்குத் துணிகள் பிசிர் பிசிராய்க் சிதறிக் கிடந்தன. எண்ணெய்க் கசடு விசிறி ஊற்றப்பட்ட பிசு பிசுப்பு அங்கங்கே…!

இப்டிப் போட்டுட்டுப் போனான்னா என்ன பண்றது இவனை….ஒரே சமயத்துல ரெண்டு மூணு வண்டியப் பார்க்கிறேன்னு கிளம்பிடுறான். ஒண்ணு முடிச்சவுடனே இன்னொண்ணைத் தொடுடான்னு ஆயிரம் வாட்டி சொல்லிட்டேன்…கேட்டாத்தானே…! எதுக்கு எத முடிச்சோம்னு தெரியாமப் போயிடும்டா…வேலைக்கு ஆளா வச்சிருக்கே…ஒவ்வொருத்தனை ஒண்ணொண்ணைச் செய்யச் சொல்றதுக்குன்னு சொல்லிப் பார்த்துட்டேன்…அவன் மண்டைல ஏற மாட்டேங்குது….இவனப் பார்க்கைல நம்ம சாமி எம்புட்டோ பரவால்ல போலிருக்கு….சொன்னாக் கேட்டுக்கிடுவாரு…இவன எவனும் அசைச்சிக்க முடியாது…எல்லாம் அவன் இஷ்டந்தான்….

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாச் சரியாயிடும் நாயுடு…புலம்பாதீங்க….என்றான் இவன்.

சாமி அண்ணா ஊர் உலகமெல்லாம் சுற்றி விட்டு ராத்திரி ஒன்றுக்கும் ரெண்டு மணிக்கும் என்று வருகையில் உறங்கிக் கொண்டிருக்கும் அம்மாவையோ, அப்பாவையோ எழுப்பாமல் தன் மனைவியை எழுப்பி அவருக்குச் சாப்பாடு போட்டிருக்கிறார் நாயுடு….படுக்கை கொடுத்துப் படுக்கச் செய்திருக்கிறார்.

புத்தி சரியில்லாத இந்தப் பிள்ளையை வச்சிக்கிட்டு எவ்வளவு வேதனை உங்களுக்கு….அதுல ஒரு பொண்ணை வேறே கல்யாணம் பண்ணி, அதுக்குப் பிறகு இவருக்கு இப்படி ஆகி, அந்தப் பொண்ணு வாழ்க்கையும் போயி….என்னா கொடுமை….? உங்க சங்கடத்துல துளியாச்சும் பங்கெடுத்துக்கிருவோமேன்னுதான்….

சாமி அண்ணா நடு ராத்திரிக்கு மேல் வீடு வந்த விபரத்தை நாயுடு அம்மாவிடம் இப்படிச் சொன்ன போது….உங்களுக்கு ரொம்பக் கடமைப் பட்டிருக்கோம் நாங்க…..தெய்வம் மாதிரி….இத்தனை பேர் குடியிருக்கிற, மேலுக்கும் கீழுக்கும் பத்துப் பன்னெண்டு வீடு இருக்கிற இந்தக் காம்பவுன்ட்ல யாராச்சும் இப்டி ஒருத்தனை வச்சிருக்கிற எங்கள மாதிரி மனுஷாளுக்கு எடம் விடுவாங்களா…குழந்தேள் பயந்துக்கும்…யாரும் சம்மதிக்க மாட்டாங்கன்னு மழுப்பி அனுப்பிடுவாங்கதான்….உங்க மனசு யாருக்கும் வராது…. – அம்மா கண்கலங்கி நின்ற காட்சி மறக்க முடியாதது.

ஏன் அம்பி…எங்க போயிருப்பாரு சாமி….? – பழையபடி அடியப்பிடிறா என்று அவர் ஆரம்பிப்பதாய்த் தோன்றியது கேசவனுக்கு.

என்னன்னு சொல்வீங்க நாயுடு…இருந்திருந்தாப்ல இப்டித்தான் கிளம்பிப் போயிடுவாரு….நாங்க தேடப் போவோம்…ஆரம்பத்துல இப்டித்தான் தொட்டதுக்கெல்லாம் ஓடிட்டிருந்தோம்…அப்புறம் எங்களுக்கும் பழகிடுச்சி…போன மாதிரித் தானே வருவாருன்னு விட்டிட்டோம்…

எப்டி அவருக்கு இப்டி ஆச்சு…அதச் சொல்லுங்களேன்….? ரொம்ப நாளாக் கேட்கணும்னு ஆசை….மாமிட்ட…உங்கப்பாருட்டக் கேட்கத் தயக்கம்…தெரிஞ்சிக்காமயே அவுகளும் ஊரக் காலி பண்ணிட்டுப் போயிட்டாக…இப்ப இருக்கிறது நீங்கதான்…சொல்லுங்களேன்….

நாயுடுக்கு மொத்தப் புராணமும் சொல்லி விடுவது என்று ஆரம்பித்தான் இவன். கேட்கக் கேட்க…சிலையாய் அசையாது இவனையே உறுத்துப் பார்த்தவாறு அவர் அமர்ந்திருந்தது இவனை ஆச்சரியப்படுத்தியது. இந்தக் கதையெல்லாம் எங்களுக்கெதுக்கு என்று ஒதுங்கிப் போனவர்கள்தான் அதிகம். சுற்றமும் நட்பும் கூட அப்படித்தான் விலகியிருந்தன. பால்யகால சிநேகிதம்…கட்டினால் என் பெண்ணை உன் பிள்ளை சாமிநாதனுக்குத்தான் தருவேன் என்று ஒற்றைக் காலில் நின்ற அண்ணியின் தந்தை….மனதுக்குப் பிடிக்காமலேயே நடந்த கல்யாணம் என்பதற்கடையாளமாய் மணக்கோலத்தில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அண்ணி…இப்டிப் பாழுங்கிணற்றில் பிடித்துத் தள்ளுகிறீர்களே என்று கலங்கி நின்ற எதிர்த்தரப்பு உறவுகள்….எது எப்படியானால் என்ன…எனக்கு அழகான மனைவி என்று அகமகிழ்ந்திருந்த சாமிநாதன்….கல்யாணம் பண்ணி ஒரே மாதத்தில் நான் தனிக்குடித்தனம் போகிறேன் என்று கிளம்பி நின்ற வேகம்….போன வேகத்திலேயே திரும்பி வந்த கதையாய்…வாடகைக்குப் பிடித்த வீட்டில் நாண்டு கொண்டு செத்திருந்த பெண்ணின் ஆவி அடித்துவிட்டதென்று புத்தி கலங்கிப் போன அண்ணா….சாமி நாதன் வெறுமையான சாமியாகிப் போன அந்த அவல நாட்கள்….மனைவியும் பிரிந்தால்? .யாருக்குத்தான் மறக்கும்? எப்படி அந்த வேதனையைப் புறந்தள்ள முடியும்?

சரி அம்பி…அவருக்கு எங்கெல்லாம் வைத்தியம் பார்த்தீங்க…? அதக் கொஞ்சம் சொல்லுங்க….என்ற நாயுடுவை பரிதாபத்தோடு நோக்கினான் கேசவன்.

எங்கெல்லாம் பார்க்கலன்னு கேளுங்க நாயுடு…..ஒரு மலையாள வைத்தியரக் கூட்டிட்டு வந்து…மாசக் கணக்குல உக்காத்தி வச்சு….பூஜை புனஸ்காரமெல்லாம் பண்ணி, என்னென்னவோ யாகமெல்லாம் நடத்தி….எதுவுமே எடுபடல நாயுடு….எங்க வீட்டுல இருந்த பண்ட பாத்திரமெல்லாம் அத்தனையும் ஒண்ணொண்ணா வெளில போயி நாங்க ஓட்டாண்டியா நின்னதுதான் மிச்சம்….பார்க்காத வைத்தியம்னு எதுவுமில்லே…இத்தன வயசுக்கு மேலே அவர் இப்படித்தான் இருப்பாருன்னு ஜாதகத்துல இருக்குன்னு கடைசியாச் சொல்றாரு அவுரு…அம்புட்டுச் செலவையும் பண்ணிப்புட்டு…வாழ்க்கைல கஷ்டம்ங்கிறது எல்லாருக்கும் இருக்கும்தான்…ஆனா அதுவே வாழ்க்கையாரதுங்கிறது எங்க வீட்டுலதான்….அத்தனை வறுமை….அவ்வளவு துயரம்…..என் தங்கச்சிக…நானுன்னு ஆளுக்கு ஒரு சின்னச் சின்ன வேலைன்னு வெளில கிளம்பி…ஏதோ கொஞ்சம் மூச்சு விட்டிட்டிருந்தோம்….இப்பத்தான் பெரியண்ணனுக்கு வேலை கிடைச்சு…கொஞ்சம் நிமிர்ந்திருக்கோம்…ஆனாலும் பார்த்து அனுபவிக்க ஒரு கொடுமை கண் முன்னாடி ஆடிட்டிருக்கே…அந்த வினையை என்னன்னு சொல்றது….? நியாயமாப் பார்த்தா இந்த வேதனைலயே எங்கம்மா என்னைக்கோ செத்திருக்கணும்…என்னவோ கடவுள் புண்ணியம்…ஓடிட்டிருக்கு……!

மேல் துண்டை எடுத்து முகத்தோடு பொத்திக் கொண்டிருந்தார் நாயுடு. உள்ளுக்குள் அழுகிறாரோ? விசும்புகிறாரோ? – கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தான் கேசவன்.

அடுத்து அவர் ஏதாவது சொன்னால்தான்…இல்லையென்றால் பேசுவதில்லை என்பது அவன் எண்ணமாயிருந்தது.

சரி…அம்பி….நீங்க புறப்படுங்க….உங்கள ரொம்பக் காக்க வச்சிட்டேன்… என்றவாறே எழுந்தார். முகம் உப்பிப் போனது போலிருந்தது. சொந்த வாழ்க்கையில் அதுபோல் நிறையத் துயரங்களைச் சந்தித்திருப்பாரோ, இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு இத்தனை பொறுமையிருக்குமா என்று தோன்றியது.

எல்லாத்துக்கும் கடவுள் இருக்கார் அம்பி….ரொம்பக் கஷ்டப்பட்டோம்னா…அப்புறம் சொகப்படணும்னும் இருக்கும்ல….சக்கரம் சுத்திக்கிட்டேதான இருக்கும்….ஒரே எடத்துல நின்னுடப் போறதில்லையே…? நீங்க கௌம்புங்க….பெறவு சந்திப்போம்…..என்று எழுந்து விடையளித்தார்….

கலங்கிச் சிவந்திருந்த அவரது விழிகளைப் பார்த்துக் கொண்டே வெளியே வந்தான் இவன்.

வண்டியைக் கிளப்பிய போது…அது எழுப்பிய சத்தத்தைக் கண்டு….ரொம்ப எரைச்சலா இருக்குதே….மாணிக்கத்துக்கிட்டே சர்வீசுக்கு விட்டு வாங்கிக்குங்க….என்றவாறே விடை கொடுத்தார் நாயுடு. தனித்து விடப்பட்டோமோ என்று நினைத்திருந்தவனுக்கு சற்றே ஆறுதல் பிறந்தது.

அவர் சொன்ன பிறகு அந்தச் சத்தம் தாங்க முடியாததாய் உணர, அந்த வீதியே அலறுவது போல் தான் செல்வதை எண்ணியவாறே கடந்து சந்துக்குள் திரும்பி, விடுதியை நெருங்கியபோது….பின்னாலேயே ஓடி வந்தன நாய்கள். மாடிப்படிக்குக் கீழே வண்டியை நிறுத்தி விட்டுப் பூட்டித் திரும்பி, பாக்கெட்டில் தயாராய் வைத்திருந்த பிஸ்கட்டுகளைப் பிரித்து ஒவ்வொன்றாய் வீசினான். பாய்ந்து பாய்ந்து அவை கவ்விக் கொண்டதும், நின்று நிதானமாய் சவைத்ததும்….பார்ப்பதற்கு அனுசரணையாய்த் தோன்றியது கேசவனுக்கு. மனம் சற்று நிதானப்பட்டது.

போ..போ…ஓடு…ஓடு..இனிமே நாளைக்குத்தான்….என்றவாறே மாடிப்படிகளைத் தாவி ஏறியபோது…..கேசு….யாரோ உன் ரூம் வாசல்ல வந்து படுத்திருக்காகய்யா …பதிலே பேசல…யாருன்னு பாருங்க ……என்றவாறே ஆபீஸ் அறைக்குள்ளிருந்து வெளிப்போந்த வார்டனைப் பார்த்தவாறே பதட்டமாய் ஏறினான் இவன்.

கட்டியிருந்த வேட்டியைத் தலையோடு சேர்த்து இழுத்துப் போர்த்தியவாறு ஒரு மூட்டை போல் அறை வாசலில் எலும்புக் கூடாய்ச் சுருண்டு கிடந்தார் சாமிநாதன் என்கிற சாமி…அண்ணா…!!

-------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  ”மதிப்பு”                   சிறுகதை - பிரசுரம் - தாய்வீடு இதழ் ஜூன் 2024                                         ---------------    எ து...