அமெரிக்காவிலிருந்து, ஒரு நல்ல யுனிவர்சிடியில் கிடைத்த ப்ரொபஸர் வேலையை விட்டுவிட்டு சொந்த நாட்டிற்கு வருகிறான் நாயகன் ஜெயராமன். அரசியலில் பங்கெடுத்து நாட்டு மக்களுக்கு உண்மையான சேவையாற்றுவதற்கு தன் அறிவுத்திறன் முழுதையும் பயன்படுத்த வேண்டும் என்கிற லட்சியம் அவனுக்கு. ஆனால் அதற்கு இங்கேயிருக்கும் நடைமுறை அரசியல் பொருத்தமாய் இருக்குமா என்கிற முடிவிலே எடுத்த எடுப்பிலேயே தவறி விடுகிறான். எதிர்க்கட்சியில் சேர்ந்து, பிறகு அங்கிருந்து உடனே விலகி ஆளுங்கட்சிக்கு வந்து, முக்கியஸ்தனாகக் கருதப்பட்டு, மந்திரியாகி, சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் மண் விழுகிறது. மந்திரியானவன், தந்திரியாக முடியாமல் தவிக்கிறான். தந்திரியானால்தான் சரியாகுமோ என்கிற தவிப்பிலேயே நடைமுறை அரசியல் அவலம் அவனைப் புரட்டிப் போட்டு விடுகிறது. கடைசியில் திரும்பவும் வந்த இடத்திற்கே சென்று விடுவது என்பதான புள்ளிக்கு அவனை இட்டுச் செல்கிறது.
எத்தனையோ நாவல்கள் இன்று வதவதவென்று வருகின்றனதான். ஒன்றும் புத்திசாலித்தனமாய் இருப்பதாய்த் தோன்றவில்லை. வளவளவென்று ஒரு அழுத்தமும் இல்லாமல் பக்கங்களை நகர்த்திச் செல்கிறார்கள். இதுதான், இப்படித்தான் என்கிற முடிவோடு , பாதி வழியில்வாங்கிய புத்தகத்தை அப்படியே மூடி மூலைக்குத் தள்ளுவதோ, யாரிடமேனும் கொடுத்துவிடுவதோ தொடர்ந்து நிகழ்கிறது. முன்பு இலைமறை காயாகச் சொல்லப்பட்டதெல்லாம் இன்று அப்பட்டமாய், அசிங்கமாய் (அசிங்கம் இல்லை என்கிற உணர்வோடு) மனசைக் கசடாக்கும் அநி-யாயத்தோடு கண்டதையும், கண்டமேனிக்கு எழுதிக் குவிக்கிறார்கள். இதுதான் நவீனத் தமிழ் இலக்கியம் என்று நிறுவியே விட்டார்கள். ஓஉறா...இப்டித்தான் போலிருக்கு என்று பலரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். என்ன கண்றாவியோ...கஷ்டகாலமோ....!!!
இந்திராபார்த்தசாரதியின் இந்த மாயமான் வேட்டை கையில் வைத்துப் படிப்பதற்கே ஒரு கௌரவமானது. புத்திசாலித்தனமான எழுத்து....ஆழ்ந்த கருத்துக்களை அதற்குத் தகுதியான கதாபாத்திரங்க ளின் ஆழமான விவாதங்களோடு கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு பல இடங்களில் வியக்க வைக்கிறது.
ஒரு கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது நாவலின் ஆரம்பத்தில் என்ன நோக்கில் ஆரம்பித்ததோ அதே புள்ளியில் சிறிதும் பிறழாது, அதன் செயல்பாடுகளால் தோன்றும் பிரச்னைகளை மையமிட்டு, புயலாய் நகர்ந்து சென்று, அதற்கான தீர்வினை மிகச் சரியான கோணத்தில் சென்றடைவது என்பதான மிக இயல்பான சம்பவக் கோர்வைகள், அவரது எழுத்து அனுபவத்தைத் தலைநிமிர்த்திப் பறைசாற்றுகின்றன.
இன்று இவரின் இந்த நாவலை நான் படித்தேன் என்று வெளியில் கம்பீரத்தோடு நாம் சொல்லிக் கொள்ளலாம். இந்திரா பார்த்தசாரதி போன்ற படைப்பாளிகளை நாம் ஆய்ந்துணர்ந்து நமக்குள் போற்றி மகிழ்வது, சிறந்த வாசகனுக்கான பெருமை என்றே சொல்லலாம்.
இப்பத்தான் படிக்கிறீங்களா? என்பார்கள் சிலர். அதெல்லாம் எப்பயோ படிச்சாச்சு என்கும் சிலதுகள். அதெல்லாம் பழசு என்போர் சிலர். வேறுமே படிச்சு முடிக்கிறது வேறே. ஆழ்ந்து அனுபவிக்கிறது வேறே... நான் சொல்கிறேன். Old is gold. அவர்களுக்கு இணை அவர்கள் மட்டுமே...!!! இவர்களின் புகழாரங்களை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் நிஜம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக