பெரியவர் திரு பாரதி மணி அவர்களின் கட்டுரைத் தொகுப்பு “புள்ளிகள் கோடுகள், கோலங்கள்” - சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக இப்போது வந்துள்ளது. அதில் அவரது “பல நேரங்களில் பல மனிதர்கள்“ (உயிர்மை பதிப்பக வெளியீடு) புத்தகம் பற்றி நான் எழுதிய ஒரு கட்டுரை ” மனோலயங்களின் தாலாட்டு “என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது. இந்த இரு புத்தகங்களும் அவசியம் அனைவரும் படித்து ரசிக்க வேண்டிய அனுபவசாரமான முக்கியப் புத்தகங்களாகும். ஆத்மார்த்தமாக இருந்தது என்று இக்கட்டுரைபற்றி அவர் சொன்னது எனக்கான பெருமை.
சில வரிகள் - உங்களுக்காக
-----------------------------------------------------------------------------
சில நேரங்களில் சில மனிதர்களைத்தான் நாம் நம் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறோம். ஏனெனில் பலருடைய வாழ்க்கையின் எல்கை மிகக் குறைவு. எனவே அவர்களின் அனுபவங்களும் குறைவு.
ஆனால் தலைப்புக்குப் பொருத்தமாய் பாரதிமணி அவர்களின் அனுபவ எல்கை எல்கையற்றது. ரொம்பவும் விரிவானது.பலருக்கும் கிட்டாதது. பலரையும் ஏங்க வைப்பது.
எவ்வளவு உற்சாகத்தோடும், ஊக்கத்தோடும் இந்த மனிதர் செயல்பட்டிருக்கிறார் என்று நாம் பிரமிக்கத்தான் வேண்டியிருக்கிறது.குறைந்தது ஐம்பது ஆண்டுகளிலான அவரது டில்லிஅனுபவங்கள் மிகவும் சுவையாகவும், கவனமாகவும், கருத்தோடும் முன் வைக்கப்பட்டுள்ளன. நம் மனதிற்கும் செயலிற்கும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கவல்லவை அவை.
ராஜீவ்காந்தியைச் சந்தித்ததும், ஷேக் முஜிபுர் ரஉற்மானுடனான அனுபவங்களும், அவரது மகள் ஷேக் உறசீனாவுடனான சந்திப்புகளும், சுப்புடுவுடனான பழக்கங்களும், தேசாய் அவர்களின் மகன் காந்தி தேசாயுடனான விபரீத சந்திப்புகளும் சுஜாதா, பூர்ணம் விஸ்வநாதன் இவர்களுடனான நினைவுகளும் மறக்க முடியாதவையாய் புத்தகம் நெடுகிலும் நம்மைக் கைகோர்த்து அழைத்துச் செல்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக