--------
அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது…. – சொல்லிக்
கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் பட்டாரென்று சாத்தும் சத்தம். அதனைத் தொடர்ந்து டொக், டொக்கென்று விளக்குகளை
சத்தமெழ அணைக்கும் சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம்தான். பதவாகம் என்பதே கிடையாது.
போவது கழிப்பறைக்கு. அதற்கு குளியலறை லைட்டையும்
சேர்த்து ஏன் போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் பட்டப் பகலில்? போதுமான வெளிச்சம் உள்ள இடம்தான்.
ஆனாலும் லைட்டை எரிய விடுவது என்பது வழக்கமாகிவிட்டது. இவனுக்கும் சரி, இவன் அம்மாவுக்கும்
சரி. ரெண்டு பேரும் சொன்னால் கேட்கமாட்டார்கள். அவர்கள் வழக்கப்படிதான் செய்வார்கள்.
போய்விட்டு வெளியே வந்து, டொக்கு டொக்கு என்று அந்த சுவிட்சை சத்தம் எழ அணைப்பார்கள். இப்டி பத்துதரம் செய்தா
வேறே சுவிட்ச் மாற்ற வேண்டிதான்…..அதைக் கொஞ்சம் பதவாகமா செய்தாத்தான் என்ன? அப்படி
அணைக்கிறது என்ன ஸ்டைலா?
மாத்து…..போனாப் போகுது….-சிரித்துக்கொண்டே சொல்கிறான்.
அவன் சொல்வதை இவளும் ஆமோதிப்பாள். எடுத்ததற்கெல்லாம் தான் குத்தம் சொல்வதாய்த்தான்
நினைக்கத் தெரியும். அதிலுள்ள நியாயத்தை எண்ணிப்பார்க்கத் தெரியாது. சர்வ சாதாரணமாய்
மாற்று என்கிறான். ஒரு சுவிட்ச் வாங்கப் போனால் அம்பது அறுபது ரூபாய். அதை மாற்ற ஒரு
எலெக்ட்ரீஷியனை வேறு கூப்பிட வேண்டும். அவனுக்கு எழுபது கூலி. ஆக நூற்றி இருபது, நூற்றி
ஐம்பது ஆகி விடும். ஒரே ஒரு சுவிட்ச் மாற்ற என்றெல்லாம் ஆட்கள் வருவதில்லை இப்போது.
படு கிராக்கியாகிப் போனது. ஏதேனும் ரெண்டு மூணு வேலை என்று சொன்னால்தான் பார்க்கலாம்
என்கிறார்கள். அப்போதுதானே ஐநூறு, அறுநூறு தேற்ற முடியும். இப்போதெல்லாம் இவர்களுக்கு, கட்டிடத் தொழிலாளர்களுக்கு என்றெல்லாம்தான் மவுசு.
நிர்ணயித்த கூலி. ஆனால் அவர்கள் செய்ததுதான் வேலை. அது பற்றி யாரும் கேட்டுவிடக் கூடாது.
சொன்னால் அடுத்த முறை வரமாட்டார்கள்.
இருக்கும் நிலைமைக்கு சின்னச் சின்ன வேலைகளெல்லாம்
கற்றுக் கொள்ளாமல் போனோமே என்றிருந்தது சிவராமனுக்கு. தெரிந்திருந்தால் எவனிடமும் போய்ப்
போய் இப்படித் தொங்க வேண்டாமே..! நாள்கணக்கு வேலைகள் என்றால் மட்டுமே கூப்பிட்டுக்
கொள்ளலாமே!
ஒரு நாளைக்கு, ஏழெட்டுத் தரம் இப்டி டாய்லெட்டுக்கும், பாத்ரூமுக்கும் குளிக்க,
கை கால் முகங்கழுவன்னு போயிட்டு வர்றோம்னா. அத்தனை தரம் நீங்க ரெண்டு பேரும் லைட்டை
யூஸ் பண்றீங்க…அதுவும் பகல்ல...யோசிச்சுப் பாருங்க….ரெண்டு மாசத்துக்கொரு தரம் இ.பி.
பில் வருது….இப்டிப் பகல்லயே லைட்டை எரிய விட்டா, கரன்ட் சார்ஜ் என்னாகுறது? ராத்திரிப்
போட்டுக்கிறதைப் பத்தி நான் எதுவும் சொல்லலை….அதுலயும் எங்க போறமோ, அந்த ரூம் லைட்டை
மட்டும் எரியவிட்டாப் போதுமில்ல? டாய்லெட் போனா, அந்த லைட்டை மட்டும்தானே போட்டுக்கணும்…
எதுக்காக பாத்ரூம் லைட்டையும் சேர்த்து எரிய விடணும்….வந்து கைகழுவறபோது போட்டுக்கலாமில்ல?
இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயங்கள்…நீங்களா செய்துக்கணும்…இதுக்கு ஒரு ஆள் சொல்லணும்ங்கிறதில்லை….ஆனா
சொல்ல வேண்டிர்க்கு….ரெண்டு மாசத்துக்கொரு தரம் ஐநூறு யூனிட்டுக்குள்ள வந்தா நல்லது.
அதுவே ஜாஸ்திதான். போகட்டும் பரவால்ல… இல்லன்னா ஐநூறுக்கு மேலே தண்டம்தான் கட்டணும்….ரெண்டாயிரம்,
மூவாயிரம்னு….பார்த்துக்குங்க…
இவர் பேச்சை பையன் கேர் பண்ணியதே இல்லை. அவளும்
கண்டு கொள்வதில்லை. நீயென்ன சொல்றது, நானென்ன கேட்குறது என்கிற கதைதான். இந்தாளுக்கு
வேறென்ன வேலை? இதுதான். செலவு செய்யலாம். விரயம் செய்யலாமா?
போதும்…இது ஒண்ணுதான் தெரியும் உங்களுக்கு…எதுக்கெடுத்தாலும்
இதைச் சொல்லிண்டு….இப்படிப் பையன் காது கேட்கவே சொன்னால் எப்படி? மதிப்பானா? சொல்லியும்,
இருந்தும் அவன் பார்த்ததனால்தானே அவனுக்கும் அந்தப் பழக்கம் படிந்திருக்கிறது?
இதோ, இப்போது லெட்ரீன் குழாய் ஒழுகுகிறது என்கிறான்.
ஊரிலிருந்து வந்ததும் எதடா சொல்லலாம் என்று குறிப்பாய்க் கவனித்துச் சொல்லியாயிற்று.
அதாவது அவன் சொல்வது தண்ணீர் நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு
என்ன அர்த்தம்? சரியாக மூடவில்லை என்று அர்த்தம். குழாய் சொட்டுது என்றாள் அவள். இழுத்து
மூடு என்றார் இவர். அதற்கு ஒரு வாஷர் மாற்ற வேண்டும்தான். இந்தக் காலத்தில் அதெல்லாமா
செய்கிறார்கள்? வேறே குழாய் போட்ருவோம் சார்….என்று ஆளையே அல்லவா மாற்றி விடுகிறார்கள்?
அதைக்
கொஞ்சம் அழுத்தி மூடினால்தான் என்ன? அழுகியா போய்விடுவோம்? ஏதோ அவ்வப்போது ரெண்டு சொட்டுச்
சொட்டினால், சொட்டிவிட்டுப் போகிறது…வாளியில்தானே விழுகிறது. வீணாகவில்லையே? இதற்குப்
போய் குழாயையே மாற்ற வேண்டுமா? முணுக்கென்றால் செய்துவிட வேண்டுமா?
நாளைக்கு நான் பழசானா, என்னையே மாத்திடுவேளா?
போரும்….நீங்களும் உங்க பேச்சும்……அச்சுப் பிச்சுன்னு….
அப்டித்தானே இருக்கு உங்க பேச்சு…..தொட்டதுக்கெல்லாம்
எல்லாத்தையும் மாத்துறதுன்னா….அதுக்கு ஒரு வரைமுறையே இல்லாமப் போயிடுமாக்கும்….ஒரு
பொருள் அதுக்கான முழு உபயோகத்தை அடைய வேண்டாமா? முக்கால் பங்காவது உழைக்க வேண்டாமா?
சட்டுச் சட்டுன்னு மாத்து, மாத்துன்னா? மாசா
மாசம் எதாச்சும்னு மாத்திண்டே இருக்க வேண்டிதான்… வெட்டியா செலவு பண்ணிட்டேயிருக்க
வேண்டிதான்…கடைசியா என்னையும் மாத்தி கதையை முடிச்சிடலாம்…
ஏன்…என்னைக் கூட மாத்திக்கலாமே….ப்டாதுன்னிருக்கா?
இனிமே எங்க மாத்துறது? அதான் காலம் போயிடுத்தே….நீயும்
நானும் புடவையும், வேஷ்டியும் மாத்திக்க வேண்டிதான்…அதான் சாத்தியம்….
பல சமயங்களில் பேச்சு படு தமாஷாகப் போகும்…இஷ்டத்துக்கு
அடிச்சு விடுவார் சிவராமன். நகைச்சுவை உணர்வு எப்போதுமே அவருக்கு அதிகம். அது அவர்
உடன் பிறந்தது. ஆனால் காயத்ரிக்கு அது துளியும் இல்லை…எப்போதும் சீரியஸ்தான்.
நீ இப்டி இருக்கிறதுனாலதான் ப்பீபி, ஷூகர்னு
எல்லாமும் வேணுங்கிற அளவுக்கு இருக்கு உனக்கு…என்னை மாதிரி விட்டேத்தியா இருக்கப் பழகிக்கோ….இனிமே
என்னத்தப் பழகுறது? கட்டையோட போனாத்தான் ஆச்சு….-இவரே சொல்லிக் கொண்டார்.
கழிவறைக்குள் நுழைந்து அந்தக் குழாயை இறுக்க
மூடி விட்டு வந்தார். தண்ணி நின்றிருந்தது. இவர் கைக்கு நிற்கும் தண்ணீர் அவன் கைக்கு
நிற்காதா? வயசுப் பையன் அதை அழுந்த மூட முடியாதா? செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும்
லைட்டாய்ப் பயன்படுத்தப் பழகியவர்கள். ஃபெதர் டச். அப்டித்…தொட்டாச்சுன்னா எல்லாமும்
ஃபங்ஷன் பண்ணனும்.நீடிச்சிருக்க வேண்டாமா? அது கேட்கப்டாது. எல்லாவற்றையும் யூஸ் அன்ட் த்ரோவுக்குப் பழகிப் போனவர்கள்.
இவர்களின் இந்தப் பழக்கத்தைப் பார்த்து, கம்பெனிக்காரன் பொருள் தயாரிக்கிறானா அல்லது
அவனின் தயாரிப்பிற்கு ஏற்ப இவர்கள் மாறிக் கொண்டார்களா? தரமற்ற பொருட்களை விலை அதிகமாய்
வாங்குவதுதானே ஃபேஷனாய் இருக்கிறது இப்போது! நாளைக்குத் தானும் அப்படித்தானோ?
இந்த முறை இவன் ஊருக்கு வந்திருப்பது இந்தக்
குழாயை மாற்றிவிட்டுப் போவதற்குத்தான் என்கிற அளவுக்குக் குறிப்பாய்த் தோன்றியது இவருக்கு.
வந்ததிலிருந்து அதையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறானே…! ஒன்றைத்
தொட்டால் அதைச் சாதிக்காமல் விட மாட்டான். அப்படித்தான் அவன் தன் வேலையையும் பிடித்திருக்கிறான்.
என்னைத் தேர்வு செய்றது உங்களுக்குத்தான் பெருமை என்று நின்றான். இவ்வளவு சாலரி வேணும்
என்று டிமான்ட் வைத்தான். வாங்கிக்கோ…ஆள் வந்தாப் போதும் என்றார்கள். எல்லாம் பெருமைதான்.
அந்தப் பெருமைகளுக்கு அப்பனையுமா இந்த ஆட்டு ஆட்டணும்? தான் வருவதே மூணு நாலு நாளைக்கு. ஏதோ ஸ்மூத்தாக இருந்து
விட்டுப் போவோம் என்றில்லாமல்…வயதான அப்பாவை எதற்கு சிரமப்படுத்திக் கொண்டு என்கிற கரிசனம் வேண்டாமா? ம்ம்ம்…அதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு
ஏது? இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்…அவ்வளவுதான்….நோ சென்டிமென்ட்ஸ்….மிஞ்சினா
இருக்கவோ இருக்கு விடுதிகள்….
இங்கதான் நல்ல சாப்பாடு இருக்கு, ரூம் இருக்கு,
டி.வி. இருக்கு., கோயில் இருக்கு., பஜனை இருக்கு…இத்தனை பேர் துணைக்கு இருக்கா…என்ன
கஷ்டம் உனக்கு…?
ஆனா நீ இல்லையே….! சொல்ல முடியுமா? – சிரிப்பான்கள்.
அப்பா…ப்ளேடு போடாத….சொல்றதக் கேளு…..நோ சென்டிமென்ட்ஸ்… எல்லாமும் பணம் என்கிற புள்ளியிலிருந்து
பிரியும் கிளைகள்….!
நம்ம சிரமமெல்லாம் உணரத் தெரியாது பசங்களுக்கு…
அப்டீன்னா…நான் இதைச் சொல்லக் கூடாதாப்பா…?
ஏம்ப்பா….குழாய் நிற்காம ஒழுகுது….அதை மாத்துன்னு சொன்னது ஒரு தப்பா? அப்டி ஒழுகிட்டிருக்கிறது
உனக்கு அசிங்கமாத் தெரிலயா? யாராவது நம்ம வீட்டுக்கு வந்தாங்கன்னு வையி…என்ன நினைப்பாங்க…?
என்னப்பா நீ இப்டி இருக்கே….?
ஏதோ இவர் ஒண்ணும் தெரியாத மண்டு போல் கேட்கிறான்
அவன். எங்கே போய்ச் சொல்ல? நொந்துகொண்டார். ஆனால் ஒரு கணம் ஆடியும்தான் போனார்.
அவன் கேட்ட கேள்விகளில் தலை சுற்றியது இவருக்கு.
உண்மையிலேயே தான் சரியாய்த்தான் இருக்கிறோமா என்று சந்தேகம்வேறு வந்து விட்டது. ஒரு
வேளை இவன் சொல்கிறார்போல், தான் இந்தக் காலத்திற்கேற்றாற்போல், இவர்களுக்கேற்றாற்போல் இன்னும் மாறவில்லையோ? இன்னும் பழைய பஞ்சாங்கமாய்த்தான்
இருக்கிறோமோ? திடீரென்று தான் அசடாகிவிட்டதுபோல்
கூடத் தோன்றியது. முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள நினைத்தார்.
அப்பா என் ஃப்ரென்டும் என் கூட வர்றான்…கொஞ்சம்
டாய்லெட்டெல்லாம் க்ளீன் பண்ணி வைக்கணும்ப்பா…. – சொல்லியிருந்தான். அதுவும் நேரடியாய்
அவரிடம். அதுதான் அன்றைய அதிசயம். பையன் சொல்லிட்டாண்டீ….பையன் சொல்லிட்டாண்டி…
உன் பையன் சொல்றாண்டி….அவன் நண்பனும் நம்ம
வீட்டுக்கு வர்றானாம்…எல்லாம் சுத்தமா இருக்கணும்ங்கிறான்…. சொல்லிக் கொண்டே ஓட்டமும்
நடையுமாய் எல்லாம் உற்சாகமாய்த்தான் செய்தார். இதுபற்றி அவன் அம்மாவிடம் சொல்லி, பிறகு
ஏவலாய் விஷயம் தனக்கு வராமல், நேரடியாய்த் தன்னிடமே சொன்னானே அதுவே பெரிய பெருமை. விழுந்து
விழுந்து ஒட்டடையெல்லாம் அடித்து, கக்கூஸ் கழுவி, உறார்பிக் போட்டு, ஃபினாயில் ஊற்றி
மணக்க வைத்தார். ஓடோனில்லை வாங்கித் தொங்கவிட்டார். இப்போதுதான் பலரும் அவர்கள் வீட்டில்
அவர்களே கழுவிக் கொள்வதுதானே…அதையெல்லாம் ஒன்றும் என்றுமே பெரிதாய் நினைத்துக் கொண்டதில்லை
இவர். நம்ம வீட்டுக்கு நம்ம செய்றோம்…இதிலென்ன இருக்கு….இவரைப் பொறுத்தவரை அது சரி.
ஆனாலும் அப்பாதானே செய்கிறார் ஒவ்வொரு முறையும்….இந்த முறை நாம் செய்வோமே என்று ஒரு
நாள் கூட அவன் பக்கத்தில் வந்ததில்லை. அவளும்தான். கண்டுக்கவே மாட்டாள் எதையும்.
சமையல் மட்டும் ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் நடந்தேறுகிறது.
இன்றுவரை அதற்கு பங்கம் வந்ததில்லை. அதுவும் பையன் வந்தால் ஷோக்குதான். இல்லையென்றால்
ஜனதா சாப்பாடுதான். ஞாபகமிருக்கிறதா? ஒரு ரூபாய்க்குப் போட்டார்களே…! தட்டோடு கொண்டு
வந்து பட்டென்று முன்னால் வைத்து விட்டு ஆள் மறைந்து போவானே…! நீயெல்லாம் என்னாத்துக்கு
Nஉறாட்டலுக்கு
வர்றே…! பார்வையே சொல்லுமே…!
அப்படி. வீடு என்றால் எல்லா வேலைகளையும்
எல்லாரும் செய்தால்தானே ஆயிற்று என்ற கொள்கை உடையவர் இவர். வளர்ந்த விதம் அப்படி. அது
எல்லாருக்கும் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
இன்னைக்கு நீங்க சமையுங்களேன்…..நான் ரெஸ்ட்
எடுத்துக்கிறேன்…..
ஓ யெஸ்…தாராளமா……என்றுவிட்டு காரியத்தில்
இறங்கி விடுவார். எந்தச் சந்தேகமும் அவளிடம் கேட்க மாட்டார். சமையலறை ஷெல்ப்பில் ஒரு
டைரி இருக்கும். ஏதாச்சும் என்றால் அதை ஒரு புரட்டு, புரட்டிக் கொள்வார். ஏகதேசம் அவள்
ருசிக்கு ஈடாக அவர் சமையல் இருந்து விடும். என்ன, சற்று புளிப்பு, உப்பு, காரம் தூக்கலாக
இருக்கும். அது அவளிடம் மட்டு. கேட்டால் இந்த வயசுக்கு இப்டித்தான் இருக்கணும் என்பாள்.
அவள் கைபாகத்திற்கே சாப்பிட்டுப் பழகிப் போனார் இவர். வெளியே எங்கேனும் கை நனைத்தாலும்,
உப்பும் உரைப்பும் அதிகமாய்த்தான் தோன்றுகிறது இவருக்கு. ஆத்தாடீ..நம்ம உடம்புக்கு
இது ஆகாதே…! ஜாக்கிரதை உணர்வு வந்துவிடும்…! அதற்குப் பழக்கியவள் அவள்தான்.
ஆனாலும் அப்பாவுக்கு வயசாச்சு என்கிற நினைப்பில்லையே
பையனுக்கு. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது? (என்ன கொடுமை சார் இது!) எதில் போய்
முட்டிக் கொள்வது? அன்று பள்ளியில் படித்தபோது எப்படி இருந்தானோ, இன்றும் அப்படியேதான்
இருக்கிறான். கருக்கழியாமல். என்ன மெச்சூரிட்டி வந்துள்ளது?. வேலைக்குப் போய்விட்டால்
எல்லாம் வந்து விட்டது என்று அர்த்தமா? உலக ஞானம் பிடிபட்டு விட்டது என்று பொருளா?
என்னமோ இவர்களும் தலையணை, தலையணையாய்ப் படிக்கிறார்கள்.
டிகிரி வாங்குகிறார்கள். அவனும் இந்தா பிடி என்று வளாகத்தை விட்டு வெளியேறும்போது வேலையைக்
கொடுத்து, வாங்கிக்கோ என்று ஆயிரக் கணக்கில் அள்ளி விடுகிறான். எவனுக்கும் எதிலும்
நிதானம் இருப்பதாய்த் தோன்றவில்லை. என்னவோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று
காலில் தட்டியும் விடுகிறார்கள். குப்புற விழுகிறார்கள். ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை
என்கிறார்கள்.
உட்காரும்போதே முப்பது, நாற்பது என்று தந்தால்
பிறகு அங்கே பணத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? முப்பத்து மூன்று வருஷம் சர்வீஸ் போட்டே
முப்பத்தி ஐந்தைத்தான் எட்டினார் இவர்.
இவ்வ்வ்ளவுதானாப்பா உனக்கு சம்பளம்? இவ்ளவுதானா?
அடப்பாவி…! இதுலதானடா உனக்கு கொள்ள கொள்ளையாப்
பணம் கட்டி, இவ்வளவு படிக்க வச்சிருக்கேன்….இன்னிக்கு நீ தாம்தூம்னு குதிக்கிற இந்தப்
பெரிய இந்தச் சம்பளத்துல லோன் வாங்கிக் கட்டி முடிச்சதுதானடா? .இதுக்கு மேல உனக்கு என்னடா வேணும்? இதல்லாம் சாதனையாத்
தெரிலயா உனக்கு? இன்னும் இத்தன லட்சம் சேவிங்ஸ் வச்சிருக்கனே…அதல்லாம் யாருக்கு? நானா
கொண்டு போகப் போறேன்…எல்லாம் நீ அள்ளிவிடுறதுக்குதானடா? என்ன கேள்வி கேட்குறாம்பார்
உம்பிள்ளை?
இவன்களுக்கு எடுத்த எடுப்பில் இப்படித் தூக்கிக் கொடுத்தால் கேள்வி வராமல் என்ன செய்யும்?
என்னவோ வாங்குகிறார்கள். என்னவோ செலவு செய்கிறார்கள்.
பணம் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. வாங்கும் நாற்பதில் பத்து மிஞ்சினால்
அதிகம். அப்படி ஒருத்தனுக்கு என்னதான் செலவோ…? ரூம் வாடகை, சாப்பாடு, துணி மணி, அது
இது என்று எப்படிப் போனாலும் பதினைஞ்சு, அட இருபதுன்னே வைப்போம்…அதுக்கு மேலயா ஒரு
ஆளுக்கு செலவாகப்போகுது? இல்லைங்கிறானே….
அப்டி என்னத்தத்தான் செலவு பண்ணினே…சொல்லு
கேட்போம்….
என்னப்பா நீ இதெல்லாம் கேட்டுட்டு….! கணக்கெல்லாம்
சொல்லத் தெரியாதுப்பா….உன்னைமாதிரி அதெல்லாம் எழுதிட்டிருக்க முடியாது…
தன் அப்பா, தான் வாங்கிய நாற்பது ரூபாய்ச்
சம்பளத்திற்கு, பைசா விடாமல் சாகும்வரை கணக்கு எழுதியது இவருக்கு நினைவு வந்தது. அந்த
நோட்டை இன்னும் வைத்திருக்கிறார். காலணாவுக்கு மூக்குப்பொடி வாங்கியது கூட அந்தக் கணக்கில்
வந்துவிடும். மைப்புட்டியில் தொட்டுத் தொட்டு எழுதிய கணக்கு காலத்தின் பெட்டகம்.
ஏதாச்சும் ஒரு அமௌன்ட் சேவ் பண்ணுப்பா….சேமிப்புங்கிறது
ரொம்ப முக்கியம்…சிறுகச் சிறுகச் சேமிச்சாத்தான், நாளைக்கு, ஒரு அவசரத்துக்கு, முக்கியமான
காரியத்துக்கு உதவுமாக்கும்….சேவ் பண்ணிப்பாரு…அப்பத் தெரியும் அதோட பெருமை…பேச்சோடு
பேச்சாய் சொல்லத்தான் செய்தார்.
எங்க சேவ் பண்றது…ஷேவ்தான் பண்ணனும்….தாடி
வளர்ந்து போச்சு…
கருத்தையும் மீறி சிரிப்புத்தான் வந்தது
இவருக்கு. தன்னின் நகைச்சுவை உணர்வு வாசனை அவனுக்கும்…..தாடிக்கு நடுவில் சிரித்தான்.
அப்படியில்லடா ராஜா….பணம் சேரச் சேர…இன்னும்
இன்னும்னு அதைப் பெருக்கத்தான்டா தோணும்…அப்டித்தாம்ப்பா சேமிப்புங்கிற பழக்கம் வந்திச்சு….எல்லாத்தையும்
தூள் தட்டிட்டு, வெறுங்கையை வீசிட்டு நிக்கிறதுல என்னடா பெருமை? சேவிங்க்ஸ்ங்கிறது
ஒவ்வொரு மனுஷனுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய நல்ல பழக்கம்ப்பா…..நான் சொல்றதை நீ
ஒரு வாட்டி கேட்டுத்தான் பாரேன்…செய்துதான் பாரேன்…அப்புறம் நீயே சொல்லுவ…..
என்ன தோன்றியதோ…சரிப்பா….என்றான் அந்த முறை.
இவருக்கா உச்சந்தலைக்கு ஏறிவிட்டது பெருமை. சரின்னுட்டாண்டீ….உம் பிள்ளை…சரின்னுட்டாண்டீ…பெருமை
தாளவில்லை. அவன் அனுப்பும் பத்தாயிரத்தை அப்படியே அவன் பெயருக்கு ஒரு ஆர்.டி. யைத் துவக்கி
போட ஆரம்பித்தார். அது இன்று ஒன்றரை லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது….
பார்த்தியா…இதையும் செலவு செய்திருந்தேன்னா
செலவோட செலவா அத்தனையும் போய்ச் சேர்ந்திருக்கும்… அதுல என்ன இருக்கு பெருமை? மனுஷன்னா
அவன் திட்டமிடணும்…அப்பத்தான் வாழ்க்கைங்கிறது ஒரு வட்டத்துக்குள்ள வரும்…நாம செய்ற
காரியங்கள் எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கணும்….நாலு பேர் பெருமையாப் பேசற மாதிரி
இருக்கப் பழகிக்கணும்ப்பா….என்னவோ வந்தோம், போனோம்னு இருக்கிறதுல என்னடா கண்ணா இருக்கு?
இப்போ இந்த ஆர்.டி. முடிஞ்சவுடனே இதை ஒரு எஃப்.டி.யா போடப் போறேன். அதுக்குத் தனியா
வட்டி சேர்ந்திட்டிருக்கும். புதுசா ஒரு ஆர்.டி. துவக்கி போட்டுண்டு வர்றோம்னு வச்சிக்கோ…அதுவும்
தனியா சேர்ந்திட்டிருக்கும்…ஓ.கே.யா….? நீ ஒண்ணுத்துக்கும் கவலைப் படாதே…அப்பா இருக்கேன்
எல்லாத்துக்கும்…எல்லாம் நான் சொல்லித் தரேன்…..உனக்கு ஒரு சரியான வாழ்க்கையை அமைச்சு,
நீ ஒரு நல்ல லைஃப் லீட் பண்ற மாதிரி செய்திடுவோம். இல்லாமே அப்பா கண்ணை மூட மாட்டேன், போதுமா? – எல்லாவற்றையும்
இவராகவே சொல்லிக் கொண்டார் என்னவோ அத்தனைக்கும் இவர் கையை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்
போல. எதுவோ சொல்றார் அப்பா…போட்டும்….என்று தலையைக் குனிந்து கொண்டு எல்லாவற்றையும் கேட்டுக்
கொண்டான் சதீஷ்.. லேசாகச் சிரித்துக் கொண்டானோ?
சிரிச்சா சிரிச்சிண்டு போறான்…நம்ம பையன்தானே….அவனை
நல்லா வச்சுப் பார்க்கிறதுதானே நம்ம கடமை.அதுலதானே நமக்கு சந்தோஷம். அதை ஒழுங்கா செய்து
முடிக்கணும்…அவ்வளவுதான்….
இதோ புதிய குழாய் வாங்கப் போய்க் கொண்டிருக்கிறார்
சிவராமன். அப்படியே ஒரு ப்ளம்பரையும் பார்த்துச் சொல்லி வர வேண்டும். முடிந்தால் கையோடு
கூட்டி வந்து விட வேண்டும். ஏற்கனவே போர்த் தண்ணி நேரடியாகப் பிடிக்கும் குழாய் நல்ல
நிலையில் இல்லை. அதில் தண்ணீரே வரமாட்டேனென்கிறது. லைனையே சரிபண்ண வேண்டும்.சட்டென்றுதான்
அது ஞாபகம் வந்தது அவருக்கு. கையோடு அதையும் மாற்றி விட வேண்டியதுதான். ஒரே செலவாய்ப்
போகும்.
இந்த முறை பையன் ஊருக்கு வந்திருப்பது ஒரு
வார விடுமுறையில். அந்த ஏழு நாட்களுக்கும் குழாயை ஒழுக விட முடியாது…எப்போ உள்ளே போவான்,
எப்போ வருவான்னு பார்த்துண்டிருந்து, தான் போய்ப் போய் கெட்டியாத் திருகி நிறுத்திண்டிருக்க
முடியாது. தன் பெருமை ஒழுகிப் போகும். நினைத்துக்
கொண்டே நடந்து கொண்டிருந்தார் சிவராமன். கைபேசி அலறியது. எடுத்து இணுக்கினார். பையன்தான்
பேசினான்.
அப்பா…ஞாயிறன்னிக்கு எனக்கு தட்கல் போடணும்…தேர்டு
ஏசி கூடப் போட்டுடுப்பா…..கிடைச்சிடுச்சின்னா பஸ் டிக்கெட்டை வழக்கம்போலக் கான்சல் பண்ணிடலாம்……மறந்திடாதே…..எங்க நீ மறந்திடுவியோன்னு
அட்வான்சா சொல்லி வைக்கிறேன்….ஓ.கே.யா? கண்டிப்பா போட்ருப்பா….
சரிப்பா என்று ஃபோனைக் கட் பண்ணினார் இவர்.
வீட்டில் வந்து சொன்னால் போதாதா? தோணும்போதே அப்பாவுக்கு ஆர்டர் போடுகிறான் பையன்.
நேரில் சொல்லத் தயக்கமான பலவற்றிற்கு ஃபோன்தானே வசதி. முதல் பத்து ஆளுக்குள் க்யூவில் நிற்க அப்போதே அவர்
மனம் திட்டமிட ஆரம்பித்தது.
இவன்களுக்கு டிக்கெட் போடவும், கான்சல் செய்யவும்னே
ஒரு ஆளு தனியா வேணும்……காசுக்கே மரியாதை இல்லாமப் போச்சு….எதுலயாச்சும் சுட்டுக்கிட்டாத்தான்
இவனுங்களுக்குப் புத்தி வரும் போல்ருக்கு….ரயில்வேக்காரனுக்கும் பஸ்காரனுக்கும் காசு
கொடுத்து மாளல….போடவும், கான்சல் பண்ணவும்…காச இப்டி அள்ளி எறைக்கிறான்களே…எந்த நேரமும்
வெளில போன்னு சொல்ற உத்தியோகத்துல இருந்துக்கிட்டே இந்தப் பாடு படுத்துனா…இவனுங்கள
என்னன்னு சொல்றது….எல்லாம் காலக்கிரகம்…
மகனை நினைத்து ஒரு கணம் அதீத பயமாகவும் இருந்தது
சிவராமனுக்கு. .
-----------------------------------------------
1 கருத்து:
good story.the present day boys should realise the realities of life
கருத்துரையிடுக