04 அக்டோபர் 2015

அக்டோபர் 2, 2015 காந்தி ஜெயந்தி விழா – மதுரை காந்தி மியூசியம் யோகா பயிற்சிக் குழு.

 

 

KVR 5 KVR 1

 

 

KVR 2 KVR 3

 

KVR 4

 

 

கடந்த ஆறு ஆண்டுகளாக மதுரை காந்தி மியூசியத்தின் யோகா வகுப்பிற்குத் தவறாமல் நான் சென்று வருகிறேன். காலை 4.30 மணிக்கு நடக்க ஆரம்பிப்போம். 5.40 வரை நடை. பிறகு 15 நிமிடம் ஓய்வு. சரியாகக் காலை 6.00 மணிக்கு யோகா வகுப்புகள் ஆரம்பிக்கும். ஏழு மணிவரை. பிறகு பத்து நிமிடங்கள் பிராணாயாமம். இந்த நியமங்கள் இன்று வரைசெம்மையாய் நடந்தேறி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி காந்திஜெயந்தி நாளன்று தவறாமல் எல்லோரும் கூடி அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கி, சமாதியில் மௌனம் அனுஷ்டித்து, பிறகு பிரிவது வழக்கம். அப்போது ஒரு பத்து நிமிடம் நான் உரையாற்றுவேன். இன்றுவரை என் மனதிற்குகந்த ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கிறது. மனம் தனிமையையும், அமைதியையும், விடுபடுதலையும் நோக்கி சதா பயணித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலிலும், விடுபடுதலிலும் இருக்கும் ஆனந்தம் உணர்ந்து அனுபவிக்க வேண்டியவை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
இந்த ஆண்டு 2015 அக்.2 வெள்ளியன்று காந்தி ஜெயந்திக்குக் கலந்து கொண்ட நிகழ்வு மேலே…

30 செப்டம்பர் 2015

”சிவாஜி ஒரு சகாப்தம்”-1.10.2015 அவரது பிறந்த நாள்

 
 
கட்டுரை
நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.
வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.
மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.
யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.
மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது. அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது.வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை. அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.
மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.
விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேவா ஒரு நடிகரால இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார் அவர்.
நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் தன்னின் வழக்கமான நடிப்பு குறித்து.
இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் நடிப்புத்திறன்கள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு கொண்ட பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு.
பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய அந்த வேடத்திலேதான் இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும்.
நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.
இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.
உடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.
திரு எஸ்.வி.ரங்காராவ், திரு நாகையா, திரு எஸ்.வி.சுப்பையா, திரு எம்.என் நம்பியார், திரு பாலையா, திரு சகஸ்ரநாமம்,திரு டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், திரு சாரங்கபாணி, திரு வி.எஸ்.ராகவன், திரு பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.
அத்துடன் அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.
இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன. அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது. சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம். சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டைப் பார்த்து வைக்கிறார்கள் என்பது வேறு. பொழுது போவதற்கான முக்கியமான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது. சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரைத் தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.
திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.
போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.
மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் இங்கே மகிழ்ச்சி கொள்கிறது. யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங் களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே என் தீராத அவா. அது இத்தோடு நிற்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடரும்.
----------------------------------------------------
இணைப்புப் படம் – கீழே.
----------------------------- clip_image001----------------------------

clip_image003

16 ஆகஸ்ட் 2015

முதுபெரும் எழுத்தாளர் கர்ணன்,இவரைக் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் –

 

------------------------------------------------------------------------------------

உஷாதீபன், மதுரை-14.

20150815_225926 20150815_225949

 

20150815_225904 20150815_230017

 

 

ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். எங்கே அவர் புகழடைந்து, அவர் புத்தகங்கள் விற்பனை கூடி, தன் புத்தகங்கள் நின்றுவிடுமோ என்கிற எண்ணம். தானே ஒரு படைப்பாளியைப் புகழ்ந்து சொல்வதன் மூலம், தன்னையறியாமல் தானே தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறோமோ என்கிற பயம். இப்படி இன்னும் பலவாக தமிழ் எழுத்துச் சூழல் உள்ளது. குழு குழுவாக இயங்குதல், அவர்கள் புத்தகங்களை அவர்களைச் சார்ந்தவர்களே புகழ்ந்து கொள்ளுதல், அவர்களுக்குள்ளேயே பத்திரிகை நடத்திக் கொண்டு அவர்கள் எழுத்தை அவர்களே கொண்டுசெல்லுதல், மேடை போட்டு முழங்கி (எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பது வேறு) விற்பனை செய்து கொள்ளுதல்…இம்மாதிரி பலவும் இன்றைய தமிழ் எழுத்துச் சூழலாகப் பரவி நிற்கின்றன.

இத்தனைக்கும் நடுவில்தான் “கர்ணன்“ என்கிற மாபெரும் எழுத்தாளர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். தானுண்டு தன் எழுத்துண்டு என்று வறுமையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு….அவ்வப்போது அவரைத் தேடி வருபவர்களை மதித்து, செல்லும் இடங்களில் கருத்தான சொற்பொழிவாற்றி திருப்தி காண்கிறார்.

மணிக்கொடிக் காலத்து எழுத்தாளர்களிலிருந்து இன்றைய எஸ்.ரா.,ஜெயமோகன் வரை அறிவார். எந்தப் பொருளில் எப்பொழுது பேசச் சொன்னாலும் சொல்லுவதற்கு நிறைய விஷயம் இருக்கும் இவரிடம். வாய் ஓயாது நாள் முழுதும் பேசச் சொன்னாலும் எதைப்பற்றியும் இவரால் வானளாவப் முடியும். அவ்வளவு பொக்கிஷம் இவரிடம் அடைந்து கிடக்கிறது.

பிரபலமான எழுத்தாளர்களின் கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு கௌரவம் பார்க்காமல் போய் அமர்ந்து விடுவார். அவர்களும் இவரை மதித்து ஒரு புத்தகத்தை வழங்கி இவரைப் போற்றி அனுப்பி விடுவார்கள். ஆனால் யாரும் பின்னர் அவரைப்பற்றி எங்கும் எப்போதும் சொன்னதில்லை. அது ஏன்? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ஏன் இப்படி இருக்கிறார்கள் இவர்கள்?

இந்தத் தலைப்பில் எழுதச் சொன்னால் கூட இவரால் ஒரு புத்தகம் உடனே எழுதிவிட முடியும். இவரைத் தெரிந்து கொள்வதும், ஆதரிப்பதும் நம் கடமை.

மதிக்கத்தக்க சிறந்த படைப்பாளி திரு “கர்ணன்“ அவர்களின் புத்தகங்களை அறிவோமா?

நாவல்

1) உள்ளங்கள் 1980 (2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978 (3) மயங்காத மனசுகள் 2003 (4) ஊமை இரவு 2009 (5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008 (6) மறுபடியும் விடியும் 2008 (7) திவ்யதாரிணி 2011.

சிறுகதைகள் –

(1) கனவுப்பறவை 1964 (2) கல்மனம் 1965 (3) மோகமுக்தி 1967 (4) மறுபடியும் விடியும் 1968 (5) புலரும் முன்… 1974 (6) வசந்தகால வைகறை 1977 (7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994 (8) இந்த மண்ணின் உருவம் 1999 (9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002 (10) இசைக்க மறந்த பாடல் 2004 (11) முகமற்ற மனிதர்கள் 2004 (12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009 (13) பொழுது புலர்ந்தது 2013 (14) வாழ்ந்ததின் மிச்சம் 2015

கட்டுரைகள்

(1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன்வரை 2011 (2) அகம் பொதிந்தவர்கள் 2012 (3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014 (4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015

வரலாறு

(1) அவர்கள் எங்கே போனார்கள் 2005 (2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011 (3) இன்று இவர்கள் 2013 (4) இந்தியாவின் எரிமலை 1979 (5) விடிவை நோக்கி 1980 (6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981 (7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981

ஆன்மீகம்

ஆத்ம நிவேதனம் 2008

கவிதை

நினைவின் திரைக்குள்ளே 2014

முகவரி

திரு கர்ணன்,

37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு,

செல்லூர்,

மதுரை – 2 .

செல் – 9487950844.

----------------------------------------------------------------------------------------------------------

21 ஜூலை 2015

‘சிவாஜிஒருசகாப்தம்”

கட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு,   மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014.

----------------------------------------

நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.

வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.

மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.

யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.

மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது. அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது.வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை. அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.

மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேவா ஒரு நடிகரால இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார் அவர்.

நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் தன்னின் வழக்கமான நடிப்பு குறித்து.

இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் நடிப்புத்திறன்கள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு கொண்ட பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு.

பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய அந்த வேடத்திலேதான் இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும்.

நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.

உடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.

திரு எஸ்.வி.ரங்காராவ், திரு நாகையா, திரு எஸ்.வி.சுப்பையா, திரு எம்.என் நம்பியார், திரு பாலையா, திரு சகஸ்ரநாமம்,திரு டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், திரு சாரங்கபாணி, திரு வி.எஸ்.ராகவன், திரு பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.

அத்துடன் அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.

இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன. அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது. சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம். சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டைப் பார்த்து வைக்கிறார்கள் என்பது வேறு. பொழுது போவதற்கான முக்கியமான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது. சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரைத் தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.

திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.

போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.

மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் இங்கே மகிழ்ச்சி கொள்கிறது. யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங் களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே என் தீராத அவா. அது இத்தோடு நிற்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடரும்.

----------------------------------------------------

இணைப்புப் படம் – கீழே.

----------------------------- clip_image001----------------------------

clip_image003

22 ஜூன் 2015

இமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை

 

 

 

 

download 2015-06-22 11.21.46

 

உண்மையிலேயே ஒரு பொண்ணோட இருந்து அனுபவிச்சிருந்தாத்தான் இப்டி எழுத முடியும்னு சொல்றமாதிரி அத்தனை தத்ரூபமா எழுதியிருக்காரு இமையம் இந்த நெடுங்கதையை. அவர நேர்ல பார்க்கைல கூடக் கேட்கலாம்....இந்த அனுபவம் உண்மைச் சம்பவமா?ன்னு... ...விநாயகம் கமலா மேல ஆசைப் பட்டு, அவகூடவே இருக்க ஆரம்பிச்சு, அவ எண்ணத்துலயே தன்னை இழந்து வாழ்நாள வீணாக்கி கடைசில அவளைக் கொல செய்ற அளவுக்குப் போயி, அதையும் தவிர்த்து விட்டு உதறிட்டுப் போறவரைக்குமான கதை சொல்லல்....அந்தக் கமலா எங்கங்க இருக்காங்க...? பார்த்தா தேவலையே...! ன்னு கேட்கணும்....

நெடுங்கதைல ஒரே ஒரு நெருடல்....கூடவே விநாயகம் இருக்கானே ஒழிய அவனை அவ நெருங்கவே விட்டதில்லன்னு ஆரம்பத்துலேர்ந்து முக்கால்வாசிக் கதைவரைக்கும் சொல்லப்படுது....கடைசிக் கொஞ்சப் பக்கங்கள்ல அவள அனுபவிச்ச நிலையை விநாயகம் நினைச்சு நினைச்சுப் பார்த்து வெறி கொள்ற மாதிரி கொண்டு போயிருக்கிறது..ஆழமாப் படிச்ச நம்மளைத் திகைக்க வைக்குது...தப்பாப் படிச்சிட்டமோ?..... இந்தச் சந்தேகத்தை இமையம்தான் தீர்த்து வைக்கணும்..

.“எங் கதெ” - நூறு பக்க அளவிலான அருமையான படைப்பு. ஆண் பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது இந் நெடுங்கதையில் என்று சொல்லப்படுது....ஒரு பரிமாணம்னு சொல்கைலயே அது சில காரெக்டர்கள் சார்ந்த விஷயம்ங்கிறது தெரியுதில்லியா? எல்லா ஆண் பெண் உறவுகளுக்கும் பொதுவானதில்லையே? எல்லாவிதமான பரிமாணங்களும் எல்லார்ட்டயும் இருக்கிறதுக்கும் வாய்ப்பில்லையே...! யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் அப்படியிருந்திருக்கலாம்னுதான் நினைக்கணும்...அப்படித்தான் நினைக்க முடியும்....அந்த வகைல இது உணர்ச்சிகரமான, படு அழுத்தமான படைப்புதான்...!

10 ஜூன் 2015

“‘எனக்கு நல்லா வேணும்”-சிறுகதை. 7.6.2015 தினமணிகதிர்.

 

 

11415341_10203081019224989_8235153776526115830_n

அநேகமாகக் கார் வாங்கும் என்னுடைய ஆசை வெறும் கேட்டோடு முடிந்து போனது என்று சொல்லலாம். யானை வாங்குவதற்கு முன் அங்குசம் வாங்கிய முதல் ஆள் நான்தான். அந்த அளவு ஆசை இருந்திச்சு அப்போ…! அதுல வந்த வினை…இப்போ…!

கேட்டின் இருபக்கமும் சுவற்றோடு தாங்கி நிற்கும் பக்கத்திற்கு இரண்டான கொண்டிகள் சிமின்ட் கான்கிரீட்டோடு நன்றாக இறுக வேண்டும் என்று, அடைத்து வைத்த முதல் நாளிலிருந்து இன்றுவரை அந்த கேட் திறக்கப்படவேயில்லை. தேவையிருந்தால்தானே? இப்பொழுது திறந்தால் நிற்குமா அல்லது பிடுங்கிக் கொண்டு வருமா என்பதைத் திறந்து பார்த்துத்தான் உறுதி செய்ய வேண்டும். கர்ர்ர்ர்…..ட்ட்ட்ட்டடடடட……என்று பழைய சினிமாவில் மலைக்குகை வாசல் திறப்பது போல் எனக்குள் பிரமை.

சரியாகப் பதின்மூன்றடி இடத்துக்குள் ஒரு சிறு மாருதியாவது வாங்கி நிப்பாட்டிவிட வேண்டும் என்பது என் லட்சியம். அவ்வளவுதான் இடமும் என்பதால் அதற்கேற்றாற்போல் மனதில் ஆசை உதித்தது.

இன்று அந்த ஆசை இரும்பு கேட்டோடு நின்றுவிட்டது. கேட் போட்டு வருஷம் நாலாச்சு. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. விருப்பம் வடிந்து போனது. என்னத்த கார…என்னத்த வாங்கி…. கெடக்கட்டும்…பார்க்கலாம்….

சேர்ந்து போலாம் சார்…நானும் வரேன்….என்ற நண்பர் ராமசாமியும் என்ன காரணத்தினாலோ நா வரலை சார்…நீங்க வேண்னா போயிட்டு வாங்க…என்றுவிட்டார் ஒருநாள். மனைவியின் நச்சரிப்புத் தாங்காமல்தான் டிரைவிங் போவோம் என்றார். சரி, ஒரு துணை கிடைத்ததே என்று நானும் இருந்தேன். நாள் தள்ளுகிறதே, மனதில் பயமிருக்குமோ என்று எண்ணி நானும் சும்மாக் கிடக்க, இப்போது எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இதுநாள் வரை தயக்கமாய் இருந்தது, பயம்தான் என்று இப்போது உறுதிப்படுகிறது.

இனிமே டிரைவிங் பழகி, லைசென்ஸ் எடுத்து, டவுனுக்குள்ள ஓட்டவா…? இத்தனைக்கும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த விரிந்து பரந்த நகரத்தில் டூவீலரில் பறப்பவன் நான். ஒரு முறை கூட ஒரு சிறு விபத்து என்று நிகழ்ந்ததில்லை. அதாவது நான் போய் எவனிடமும் முட்டியதில்லை.. அதுவும் இதுவும் ஒண்ணாயிடுமா?

டூ வீலர விட கார்தான் சார் ஈஸி….சேஃப்டியும் கூட…எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது…கியர் வண்டியச் சொல்றேன்….என்றுவிட்டு இன்றுவரை மொபெட் ஓட்டிக் கொண்டிருக்கிறார் எதிர் வீட்டு நண்பர். என் தோரணைக்கு கார்தான் சார் கரெக்ட் என்று உசுப்பேற்றி விட்டார். அவர் வைத்திருப்பது ஒரு செகன்ட் உறான்ட் ஃபியட். குழந்தையாய்ப் பராமரிக்கிறார். அம்புட்டுச் செல்லம் அது. புத்தம் புது ஏ.சி. கார். கூட அப்படியிருக்காது.

சொல்றவன் சொல்லத்தான் செய்வான்…உனக்கெங்க போச்சு புத்தி…..!

நான் ஆக்ஸிடென்ட் பண்ணியதில்லையே ஒழிய, கார் வந்து இடித்த அனுபவம் உண்டு. நாம சரியா இருந்தாலும், எதிராளியும் அப்டியிருக்கணுமே…?

பிள்ளையார்பட்டி போய் திரும்பிக் கொண்டிருந்த ஒரு அம்பாசிடர்காரன், தொடர்ந்த ஓய்வில்லாத டிரைவிங்கோ என்னவோ தூக்கக் கலக்கத்தில் ஸ்டியரிங்கை விட்டதனால் என் மீது வந்து இடித்தான். அது நான் சேடக் ஸ்கூட்டர் வைத்திருந்த நேரம். வலது காலை இடது பக்கம் விலக்கி வண்டியைப் போட்டுவிட்டு ஓடியே போய்விட்டேன். அடிச்ச அடியில் வண்டியின் பாகங்கள் டார் டாராய்…பக்கத்திற்கொன்றாய்……

அன்று படு உஷார் நான்…அதனால் தப்பினேன்.

ராஜேந்திரன்….வண்டிக்காரன் நம்மள நோக்கித் தப்பா வர்றான். குதிச்சு ஓடிடுங்க…என்று பின்னால் உட்கார்ந்திருந்த நண்பரை எச்சரிக்க, அதே சமயம் நானும் கணத்தில் சுதாரிக்க மயிரிழையில் தப்பித்தோம் இருவரும்….என்றும் வராதவர் அன்று பின்னால் வர நடந்து போன விபரீதத்தைப் பாருங்கள். சில எதிர்பாராத சம்பவங்கள் மனிதர்களை எங்கெங்கோ கொண்டு நிறுத்தி விடும். இப்டியெல்லாம் நடக்கும்னு யாரு நினைச்சா? என்று சொல்லிக் கொண்டு பிற்பாடு தலையைச் சொரிவதில்லையா? இன்று பார்த்தாலும் நண்பர் அதைத்தான் முதலில் நினைவுகூறுவார். என்னைக்குமில்லாம நீங்க பின்னாடி உட்கார்ந்த கெரகம்தான்னு நான் சொல்ல முடியுமா…?

என்னா சார்….வண்டி இப்டிப் பார்ட் பார்ட்டா பக்கத்துக்கொண்ணாக் கிடக்கு….நீங்க பொட்டு அடி இல்லாம முழுசா நிக்கிறீங்க….ரொம்ப ஆச்சரியம்…அதிர்ஷ்டக்காரர் சார் நீங்க.. – பார்த்தவர்கள் பிரமித்தார்கள்…..நான் என் மனைவியை நினைத்துக் கொண்டேன். எல்லாம் அவள் தாலி பாக்கியம்….! அவருக்கு?

கண்ணுக்கு முன்னால் ஒரு கட்டு நோட்டை எடுத்து கத்தையாய்க் கொடுக்க அதை அந்தப் போலீஸ் வாங்க, பறந்து விட்டான் கார்க்காரன். என்ன ஒரு அருமையான இம்மீடியட் டீல்….! மாட்டிக் கொண்டது நாங்கள். எப்பவுமே அப்பாவி சப்பாவிதான மாட்டுவான்…அன்று என்னிடம் இன்ஸ்யூரன்ஸ் வேறு இல்லை. கடைசி நாள் லேப்ஸ் ஆகி இரண்டு தினங்கள் கடந்திருந்தன. அப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்லாமல் வாய் மூடி மௌனியானேன். .

ஏன் சார்….ஒரு ஃபோன் அடிக்க மாட்டீங்களா….பறந்து வந்திருப்பனே இப்டியா ஆள விடுவீங்க….வண்டி நம்பராச்சும் குறிச்சீங்களா…? என்றார் ஒர்க் ஷாப் நண்பர் உறமீது. அழைத்திருந்தால் நிச்சயம் ஏதாச்சும் நிவாரணம் தேடும் தில் அவருக்கு உண்டுதான். நமக்குத்தான் நம் பக்க நியாயம் உறுத்துகிறதே…!

என்னவோ விட்டுவிட்டார் எங்களை அந்த எஸ்.ஐ. வண்டிச் செலவே இவங்களுக்குச் சரியா இருக்கும் என்று கணக்குப் பண்ணிட்டாரோ என்னவோ….கல்லுக்குள் ஈரம். அல்லது அதான் காசு பார்த்தாச்சே…. என்றும் இருக்கலாம். எங்களிடமும் பிடுங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? அதுதான் ஆச்சர்யம். இருப்பவனிடம் பிடுங்கிக்கொண்டு, இல்லாதவனை விட்டுவிடும் கொள்கையோ என்னவோ? தப்புச் செய்வது தெரிந்து செய்வது….

ரிப்பேர் பார்த்து அதே வண்டியைப் பழையபடி கொஞ்ச காலத்திற்கு ஓட்டிக் கொண்டுதான் அலைந்தேன். ஆக்ஸிடென்ட் ஆன வண்டிய வச்சுக்காதீங்க சார்…என்றார்கள் பலரும். தீட்டுப் போல் பார்த்தார்கள். முன்னாடி கருப்புக்கயிறு கட்டாத குறைதான்.

அவன் வந்து மோதினா அதுக்கு நானென்னய்யா பண்ணுவேன்…எதுக்கு வண்டிய மாத்தச் சொல்றீங்க….?

வாணாம் சார்…சொன்னாக் கேளுங்க….பட்டகால்லயே படும்னு கேள்விப்பட்டதில்லையா?

அடப்பாவிகளா…திரும்பவும் விபத்து நடக்கும்ங்கிறீங்களா? சொல்லுங்கடா வாய்விட்டு….

என்னய்யா சென்டிமென்ட் இது? நீங்களும் ஒங்க சென்டிமென்டும்…? தூக்கி ஒடப்புல போடுங்கய்யா…என்றவன், எதுக்கு வம்பு என்று கொஞ்ச நாளில் போன விலைக்குத் தள்ளிவிட்டு விட்டேன்.. புதுசோ, பழசோ…கைமாறினால் மாத்து கம்மிதான்.

குடும்பங்களில், நடைமுறைகளில் இந்த சென்டிமென்ட் வகையறாக்கள் இல்லையென்றால் மனிதன் எவ்வளவோ நிம்மதியாய் இருக்கலாம்….பாதி சண்டை இவைகளால்தான். பெரிய்ய்ய்ய கச்சடா விவகாரம்…

எனக்கு இந்த வண்டில உக்காரவே பிடிக்கல…. பயம்ம்மா இருக்கு….என்னவாது நடந்திருமோன்னுட்டு…-பேய் வண்டி போலப் பார்த்தாள்….!

மனுசன நிம்மதியா இருக்கவிட்டாத்தான…? அப்புறந்தான் கார் ஆசை….

புதுஸ்ஸா கேட்டைக் கட்டித் தூக்கி நிறுத்தி, இப்டி அடுத்தவங்களுக்கா அள்ளிக் கொடுப்பீங்க….? உங்கள மாதிரி அசடு யாருமில்ல…! .ஒரு வார்த்தை ஏங்கிட்டக் கேட்க மாட்டீங்களா? என்னவோ பெரிய தர்மப் பிரபுன்னு நினைப்பு மனசுல….

விஷயம் எங்க வந்து நிக்குது பாருங்க?

இருந்தா என்ன, பேசாம இரு…..! சும்மாக் கெடக்குறதுக்கு அவுங்களுக்காவது பயன்படட்டும்…

என்னத்த பேசாம இரு? என்னை மதிச்சிருந்தா ஒரு பேச்சு கேட்கத் தோணியிருக்காதா? ராஜ பாட்டையா இப்டித் திறந்து விட்டுட்டீங்களே…அந்த ஷெட்டுல நம்ம சொந்த வண்டிய நிறுத்தி அழகு பார்க்கணும்னு இருந்தேன்…அடுத்தவங்க வண்டியக் கொண்டுவந்து அடைக்கிறதுக்கா கட்டி வச்சிருக்கு? மாடு அடைக்கிற பட்டியா இது? இப்போ நீங்க உங்க டூவீலர எங்க கொண்டு நிறுத்துவீங்களாம்…? மிகச் சரியாய்க் கொக்கியைப் போட்டாள்.

சுசீலா இப்படிக் கேட்க, முழித்துப் போனேன் நான். அதுவரையில் மூளையில் தோன்றவேயில்லை எனக்கு. மூடிய கார் கேட்டுக்குப் பக்கத்தில் வீட்டின் நுழைவாயில் சின்ன கேட். அது வழியே அசால்ட்டாய் வண்டியை உள்ளே நுழைத்து, அகன்ற பகுதியில் வசதியாய் இஷ்டம்போல் நிறுத்திக் கொண்டிருந்தேன். இப்போது எதிர்த்த வீட்டுக் காருக்கு விட்டாயிற்றா….துளி இடமில்லை…..மாடிக்குப் போவதானால் கூட இண்டு இடுக்கில் நம்மைச் சுருக்கிக் கொண்டுதான் போயாக வேண்டும். கார் நிற்கும் அழகு ஐஸ்வர்யம் பொங்கி வழிவது போலிருந்தது. மூணாமத்தவன் பார்த்தால் அப்டித்தான் நெனைப்பான். ஆனா நம்ம காரில்லையே…! பீத்தப் பெருமை எதற்கு?

பேசாம ரோட்டுல நிறுத்துங்க…அதுதான் உங்களுக்குச் சரி….ஆறெல்லாம் தண்ணியா ஓடினாலும் நாய்க்கு நக்கித்தான குடிக்கணும்? சமயம் பார்த்துப் பொட்டில் அடித்தாள் சகதர்மிணி. எதுலடா இவன் மாட்டுவான் என்று காத்திருந்தது போலிருந்தது.

சார்…ஒரு சின்ன ஆப்லிகேஷன்….கொஞ்ச நாளைக்கு….நீங்க வண்டி வாங்குறவரைக்கும்தான்….என் காரக் கொஞ்சம் உங்க ஷெட்டுல நிறுத்திக்கட்டுமா?

ஓ…தாராளமா….!! சும்மாத்தானே கெடக்கு….நல்லா நிறுத்திக்கோ…இதுக்கு எதுக்குத் தயங்குறே…?

அப்பாடீ…எம்புட்டுத் தாராள மனசு…!.எனக்கே ஆச்சரியம்தான் – வாழ்க்கையில் எப்பொழுது எதைத்தான் யோசித்திருக்கிறேன் நான்? எல்லாத்துக்கும் உடனுக்குடன் பதில் உண்டு என்னிடம். ஏற்கனவே முன் முடிவுகளோடு இருப்பவன்போல். அது நல்லதோ, கெட்டதோ….அதெல்லாம் தெரியாது….கல்யாணம் ஆகி குழந்தை குட்டி ஆகிவிட்டால் எல்லா முதிர்ச்சியும் வந்து கூடிவிட்டது என்று அர்த்தமா? மனித மனம் முதிர்ச்சி அடைவது என்கிற கதையே வேறு. அதற்கு ரொம்ப அனுபவம் வேண்டும். வாழ்வியல் அனுபவங்கள்தான் மனிதனை வடிவமைக்கின்றன. ஒரு சின்ன விஷயத்தில் கூட பெரும்பாலானவர்களுக்கு அறுபது, எழுபதுவரை என்றும் சொல்லலாம்…பாந்தமாய்ப் பேச, செய்யத் தெரியாது.

என்னாடாது…சுத்த சின்னப்பிள்ளத்தனமா இருக்கு…. – வடிவேலுவின் கேலி என்னைக் கிண்டல் செய்தது.

“நீங்க வண்டி வாங்குறவரைக்கும்னானே, கவனித்தீர்களா? நான் நிச்சயம் வாங்கப் போவதில்லை என்று உணர்ந்து கொண்டிருப்பானோ? இந்தக் காலத்துப் பசங்க புத்திசாலிகளாச்சே…!

வருஷத்துக்கு இருபதாயிரத்துக்குக் குறையாம இன்ஸ்யூரன்ஸூக்கு அழணும்… வண்டிய வெறுமே நிறுத்தி வைக்கப்படாது. தினசரி கொஞ்ச தூரமாச்சும் ஓட்டணும்…இல்லன்னா பேட்டரி வீக்காயிடும்….வண்டி எப்பயும் மூவ்மென்ட்லயே இருக்கணும்…அப்பத்தான் நல்லது….லிட்டருக்கு அதிகபட்சமா பன்னெண்டு, இல்லாட்டி பதினஞ்சு….அம்புட்டுத்தான்…இங்கருக்கிற கோயிலுக்குப் போயிட்டு வர்றதானாக்கூட குறைஞ்சது அஞ்சு லிட்டராச்சும் போட்டுத்தான் வண்டிய எடுக்க முடியும்….அதுதான் சேஃப்டி. ரிசர்வ் வேறே இருக்குது….அதையும் கணக்குப் பண்ணிக்கணும்….அதுபாட்டுக்கு நடுவழில நின்னிடுச்சின்னா…? அதெல்லாம் கெடக்கட்டும்…என்னத்தவோ பெட்ரோலப் போடுறோம்…வண்டிய எடுக்கிறோம்னே வைங்க…கோயிலுக்குப் பக்கத்துல வண்டிய எங்க பார்க் பண்ணுவீங்க…முதல்ல அத டிசைட் பண்ணிக்குங்க….அங்க போயிட்டு எங்கிட்டுப் போகலாம்…எப்டித் திருப்பலாம்னு நோங்கித் தயங்கிட்டு நிற்கக் கூடாது….சார்ஜன்ட் வண்டியத் தூக்கிடுவான்….க்ரேன் வேன் ரெடியா நின்னுட்டிருக்கும்…மனசுல வச்சிக்குங்க….சிட்டிக்குள்ள போயிட்டு மீள்றதுங்கிறது சாதாரணமில்ல இன்னைய தேதிக்கு….

நான் மௌன சாமியாராகி வெகு நேரமாகியிருந்தது.

என்னத்துக்கு இப்பக் காரு…? ஒரு கால் டாக்ஸியப் பிடிச்சா ஆச்சு…எத்தனையோ இருக்கு…தெனமும்தான் வீட்டு வாசல்ல நோட்டீச எறிஞ்சிட்டுப் போறானே…ஒரு .ஃபோன் போட்டா அடுத்த நிமிஷம் வந்து நிப்பான்….கார்ல போகுற ஆசய அதுல தீர்த்துக்க வேண்டிதானே…! நாம என்ன பிஸ்னஸ்மேனா, கார் வச்சிக்கிறதுக்கு? தெனமும் பணம் புரள்றவங்களுக்குத்தான் அது லாயக்கு….நாம அதுக்குத் தீனி போட்டு மாளாதாக்கும்…உங்களுக்கு ஓட்டவும் தெரியாது….இம்புட்டு வயசுக்கு மேல கத்துக்கிட்டு, எங்கயாவது போய் முட்டி வைக்கவா? நா வரலப்பா….

நீட்டி முழக்கி சுசீலா சொன்னதில் ரொம்பவும் கழன்று போனேன் நான்.

ஏண்டீ….அப்போ கேட் வைக்கைல எதுக்கு பார்த்திட்டு சும்மாயிருந்த…அப்பயே சொல்லியிருக்கலாமுல்ல…எவ்வளவு செலவு மிச்சம்…?

அந்த நேரம் எனக்கும்தான் ஆசையிருந்திச்சு….ஏன் இருக்கக் கூடாதா? நம்ம பையன் கார் வாங்க மாட்டானா? மெட்ராஸ்லேர்ந்து இங்க கொண்டாரப்போ, நிறுத்த வசதியாயிருக்கும்தானே…அதுக்காகச் சொன்னேன்…

இங்க கொண்டாந்து நிப்பாட்டிட்டு அவன் போயிடுவான்….அதுபாட்டுக்கு வச்சமேனிக்கு அசையாம நிக்கும்….தூசி, புழுதி ஏறாம நாந்தான் கெடந்து அதைத் துடைச்சுப் பராமரிக்கணும். இல்லன்னா வர்றப்ப சடைச்சுக்குவான். என்னைக்காவது அவன் வர்றைலதானே எடுக்க முடியும்? மாசா மாசமா வர்றான்…? மூணு மாசத்துக்கொருதரம், தவறினா நாலுன்னு…ரெண்டு நாளைக்கு லீவுல வர்றான்…அதுக்கு இது தேவையா? அந்தக் காசை எதாச்சும் ஃபிக்சட் டெபாசிட்ல போட்டாலும் பிரயோஜனம்…என் பேர்ல சீனியர் சிட்டிசன் வட்டியாச்சும் வரும். நான் கத்துக்கறேன்னாலும் கேட்க மாட்டேங்கறே…உனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது…பிடிவாதமாக் கத்துண்டாலும், நீ உட்காருவியோ மாட்டியோ…நான் மட்டும் போய் செத்து வைக்கிறதுக்கா? போறதோ போறோம்…ரெண்டு பேரும் ஒரேயடியாப் போய்ச் சேர்ந்தாலும்…பையனாச்சும் நிம்மதியாயிருப்பான்…

அய்யோ, ராமா….நல்லதே பேசுங்களேன்…எதுக்கு இப்படி அபத்தமா? என்னமோ தோணியாச்சு…வச்சாச்சு….இப்ப அது எதுக்கு? கார் இல்லாட்டி என்ன…உள்ளே புழங்குறதுக்கு எடம் விசாலமா இருக்குல்ல…ராத்திரி ஒரு சேரைப் போட்டுட்டுக் காத்தாட உட்காரலாமில்ல…சுதாரிப்பா மேலே கொக்கி போட்ருக்கோம். ஊஞ்சல் போட்டு ஆடலாமுல்ல…கார் வாங்கறோம்…வாங்கல…அது நம்ம இஷ்டம்… இப்டி எடத்தை அடைக்கிற மாதிரி வலியக் கஷ்டத்த வரவழைச்சி யாராவது அனுபவிப்பாங்களா? அந்த ஸ்பேஸ்ல துணி உலர்த்த கொடி கட்டியிருந்தீங்களே ஒரு மைலுக்கு…? இப்போ நான் எங்க கொண்டு போய் என் புடவை துணிமணிகளை உலர்த்தறதாம்? வீட்டுக் காம்பவுன்டுக்குள்ள அதுபாட்டுக்குக் காய்ஞ்சிட்டிருந்தது…ராத்திரிக் கூட எடுக்க மாட்டேன்….க்ளிப்பப் போட்டுவிட்டா அக்கடான்னு தொங்கிட்டிருக்கும்…என் வசதி போல வச்சிப்பேன், உருவிப்பேன்…இப்ப எல்லாம் போச்சு…..எதையாச்சும் அச்சுப் பிச்சுன்னு செய்து வைக்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு…உங்களோட சேர்ந்து நானும் படவேண்டிர்க்கு…பாரத்த கர்மம்….

இவள் பேசுவதைப் பார்த்தால் ராத்திரித் தூக்கம் போய்விடும் போலிருந்தது எனக்கு. என்ன தர்ம சங்கடம் இது? ஒருத்தருக்கு நல்லது செய்யப்போய் அதனால் இப்படியுமா கேடு விளையும்? இது நாள் வரை அந்த எதிர்வீட்டுக்காரப் பையனின் கார் ரோட்டில்தான் நின்றது. அகஸ்மாத்தாய் கவனமின்றி கொஞ்சம் ஒதுக்கி நிறுத்தத் தவறினாலும் கூட, நடு ராத்திரிக்கு மேல் வரும் மணல் லாரிக்காரன் கூட காது கிழிவதுபோல் ஏர்உறாரனை அலறவிட்டு அத்தனை பேர் தூக்கத்தையும் கெடுத்தான். அங்கங்கே நடக்கும் கட்டட வேலைகளுக்கு எங்கள் தெரு வழியாய்த்தான் செங்கல், ஜல்லிகள், மணல், சிமின்ட் மூடைகள் இத்யாதி என்று சென்று கொண்டிருந்தன. மற்ற எல்லாத் தெருக்களுக்கும் லிங்க் ரோடு எங்கள் வீதிதான். ஒரே புழுதிமயம்தான். எந்நேரமும் போக்குவரத்து இருந்தமணியம்தான். ஆனால் அதுவே யார் வந்தது போனது என்று அறிய முடியாத நிலையும்.

எதுறா சாக்கு என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் காத்திருந்தான் போலிருக்கிறது. கொஞ்ச நாளாவே யோசித்திருப்பான் போலிருக்கிறது. கேட்டேவிட்டான் என் மகன் வயசு. மரியாதையான பையன். கேட்டதும், இல்லை என்று மறுக்க மனசு வரவில்லை, நான் என்ன செய்ய? அவன் அப்பாவோ, அம்மாவோ வந்து கேட்கவில்லை. அது சரியல்ல என்ற எண்ணமிருந்திருக்கலாம். பையனே கேட்கட்டும், அமைந்தால் அமையட்டும் என்று விட்டிருக்கலாம்….எங்களுக்குத் தெரியாது என்பதுபோல் இருப்பதும் ஒரு சாமர்த்தியம்தானே…! சும்மாத்தானே கெடக்கு…எல்லாம் கொடுப்பாங்க…போய்க் கேளு…என்று உசுப்பி விட்டிருக்கலாம்.

இப்போது என்பாடு திண்டாட்டமாய்ப் போயிற்று. என் யமஉறாவை நான் எங்கே நிறுத்துவது? அதுதான் ரோட்டில் நிறுத்தச் சொல்கிறாளே இவள்…! நிறுத்தினால் கண்டிப்பாய் மறுநாள் வண்டி இருக்காது….மணல் லாரியில் அல்லது ஏதேனும் சின்ன வேனில் வண்டி திருப்பூர் தாண்டிப் போய்விடும்….எங்கள் பகுதியில் திருடு போன டூவிலர்கள் சில அங்குதான் கிடைத்தன. முன்னூறு, நானூறு மைல் தள்ளி விற்றால்தானே சந்தேகமின்றி ஈஸியாய்க் காசு பார்க்க முடியும்? கள்ளன் பெரிசா…காப்பான் பெரிசா….?

சார்…திரும்பத் திரும்ப உங்களத்தான் சங்கடப் படுத்த வேண்டிர்க்கு. ராத்திரி உங்களை டிஸ்டர்ப் பண்றது அவ்வளவு நல்லாயிருக்காது…இத்தன நாள் உள்ளே பூட்டிட்டிருந்தீங்க…இப்போதான் வண்டி வந்திருச்சே…நா வெளிலயே பூட்டிக்கிறேன்… அப்பத்தான் காலைல எடுக்கைல உங்க தூக்கத்தக் கெடுக்காம, தொந்தரவு பண்ணாம இருக்க முடியும்….நாம்பாட்டுக்கு வண்டிய சைலன்டா வெளில எடுத்திட்டு, பாதுகாப்பா திரும்பக் கேட்டைப் பூட்டிட்டுப் போயிடுவேன்…அதுதான் உங்களுக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன்…உங்க பூட்டுச் சாவிய நீங்களே வச்சிக்குங்க…வேறே எங்கயாச்சும் பூட்டிக்கலாம்ல…நான் புதுசு வாங்கிக்கிறேன்….

என்னவோ எனக்கு வசதி செய்து தருவது போலவும், ரொம்பவும் பொறுப்பானவன் போலவும், கச்சிதமாய்ப் பேசிக் கொண்டே போனான். ஏறக்குறைய ஆண்டு அனுபவிப்பதற்குத் தயாராகிவிட்டவன் போலிருந்தது. வெறும் பூட்டுச் சாவிதான் மிச்சம் எனக்கு. அடுத்தாற்போல் அந்தப் பெரிய கேட்டைத் திறக்க வேண்டுமானால் நான் அவனிடம்போய் சாவிக்கு நிற்க வேண்டும். பொறுப்பு விட்டது. அது ஒன்றுதான் கிடைத்த பலன்.

அன்று பல காரியமாய் வெளியே போய்விட்டுச் சற்றுத் தாமதமாய் நான் வீடு வந்த போது சுசீலா சொன்னாள்.

அந்தப் பையனோட அம்மாட்டச் சொல்லியிருக்கேன்….அவுங்க வீட்டுக் காம்பவுன்ட்டுக்குள்ள வண்டியக் கொண்டு போய் நிறுத்தி ஞாபகமாப் பூட்டிட்டு வாங்க…..இனிமே அதுதான் இடம்…..- கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டு மறு பேச்சுக்கு நில்லாமல் வேலையைப் பார்க்க உள்ளே போய் விட்டாள்.

அதானே பார்த்தேன்….சும்மாயிருக்க மாட்டாளே….பதிலுக்கு பதில் எதாச்சும் செய்யாட்டா மனசு ஆறாதே….! என்று நினைத்தவாறே எதிர்வீட்டுச்சாரிக்கு வண்டியை உருட்டினேன். கொஞ்சம் ஒடுக்கமான நுழைவாயில்தான். கவனமாய்த்தான் வண்டியை உள்ளே நுழைக்க வேண்டும். திருடுபவனுக்குக் கூட வண்டியைச் செந்தூக்காகத் தூக்கி வெளியில் நிற்கும் ஆளிடம் கொடுத்தால்தான் முடியும். இல்லையென்றால் திருட்டுத் தொழில் வெறுத்துப் போகும். ஏறக்குறைய வெட்ட வெளியில் நிற்பது போலத்தான். வீதியில் செல்வோருக்குப் பார்வையில் நன்றாய்ப் படுமே…! திருடு…என்று தூண்டுமே…! இனி இதற்கென்று அதற்கு ஒரு கவர் வாங்கிச் சாத்தி மூட வேண்டும். அதெல்லாம் கூடச் செய்துவிடலாம்தான். இவையெல்லாவற்றையும் மீறி இந்த நினைப்பில்லாமல் இரவில் நான் நிம்மதியாய்த் தூங்க வேண்டும். வண்டி வெளில இருக்கே…வெளில இருக்கே…என்று நினைத்துக் கொண்டிருந்தால்…பொழுது தானாய் விடிந்து போகும். அப்படி நிறுத்தியிருந்த சில வண்டிகள்தானே ஏற்கனவே சில வீடுகளில் திருடு போனவை…..இத்தனை நாள் இல்லாத புதிய பயம் ஒட்டிக்கொண்டது என்னிடம்.

இப்படி அநாவசியத்துக்கு நிம்மதியைக் கெடுத்துக்கொண்ட மனிதர்கள் எவரையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதற்கு வயசெல்லாம் கணக்கில்லை. எந்த நேரமும் இப்படியான துன்பங்கள் வர சாத்தியம். இதற்குப் பெயர்தான் வருத்திக்கூட்டி அனுபவிப்பது என்பது…! முணுக் முணுக்கென்று செய்துவிட்டு, பிறகு கிடந்து திண்டாடுவது…!

சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு அம்மாள் என்னைப் பார்த்துச் சொன்னார்கள்.

ராத்திரி சித்தச் சீக்கிரமே, பொழுதோட வண்டியக் கொண்டு வந்து வச்சிடுங்க….ஏன்னா எங்க வீட்ல, வழக்கமா ஒன்பது மணிக்கெல்லாம் கேட்டைப் பூட்டிட்டு லைட்டை அணைச்சிட்டுப் படுத்திடுவோம்…சரியா.!!!

யாரோ சவுக்கைக் கொண்டு முதுகில் விளிச்சென்று வாரியது போலிருந்தது எனக்கு.

--------------------------------------------

“மதுரைச் சிறுகதைகள்” – தொகுப்பு ஆ.பூமிச்செல்வம், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் – வெளியீடு அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.

 

 

 

2015-06-10 13.22.02

ஏப்ரல் 2015 வெளியீடு. .இதில் உள்ள கதைகள்..........

1. சத்யாக்ரகி – சி சு செல்லப்பா
2. மடித்தாள் பட்டி – பி எஸ் ராமையா
3. சம்பாத்யம் – ஜி நாகராஜன்
4. தேன் கலந்த நீர் – காஸ்யபன்
5. வண்டி ஓட வேண்டாமா ? – கர்ணன்
6. பரிணாமம் – கோபி கிருஷ்ணன்
7. புன்கணீர் பூசல் தரும் – செண்பகம் ராமசாமி
8. கல்வெட்டு – ரோஜாகுமார்
9. புழுக்கம் – உஷாதீபன்
10. போதை – முருகேச பாண்டியன்
11. மொய் – அர்ஷியா
12. வைகை பெருகி வர – எம் ஏ சுசீலா
13. மேஷ புராணம் – யுவன் சந்திரசேகர்
14. மூன்றாம் சுமை –எம் எஸ் கல்யாணசுந்தரம்
15. கடந்த காற்று – ஷாஜஹான்
16. புகை – பா வெங்கடேசன்
17. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் – விஜய மகேந்திரன்
18. கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப் பாண்டியன்
19. சுப்பு – லக்ஷ்மி சரவணக்குமார்
20. கடுந்துயரம் – எஸ் செந்தில் குமார்
21. பொன்னகரம் – புதுமைப்பித்தன்
22. நகரம் – சுஜாதா
23. கனவுப்பறவை – சொல்விளங்கும் பெருமாள்
24. 360 பாகையில் சுழலும் இளவரசி இனிப்பக சந்திப்பு – சமயவேல்
25. அந்த மனிதர்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்
26. நகர்வு – பா திருச்செந்தாழை
27. மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் – கோணங்கி

Ushadeepan Sruthi Ramani's photo.

26 மே 2015

நவீன விருட்சம் இலக்கிய இதழில் (97-வது இதழ்)எனது “விபத்தில் சிதைந்த காதல் கதை” சிறுகதை. (காலாண்டு இதழ்-மே 2015)

 

 

download 2015-05-25 14.30.04 2015-05-25 14.30.30

 

 

2015-05-25 15.12.26

 

 

 

 

 

அழகிய சிங்கரின் “நவீன விருட்சம்” (97-வது)(மே 2015) இலக்கிய இதழில் எனது ”விபத்தில் சிதைந்த காதல் கதை” சிறுகதை.
இக்கதை இந்த இதழில், அதுவும் அழகிய சிங்கரின் தேர்வில் வெளிவந்ததில் நான் பெருமைப்படுகிறேன். ஏற்கனவே எனது வேறு சில கதைகளை இதுபோல் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் இதழின் கால்பங்குப் பகுதியை நானே எடுத்துக் கொண்டதுபோல் பத்துப் பக்கம் கொண்ட இந்தக் கதையை அவர் அப்படியே வெளியிட்டது எனக்கு ரொம்பப் பெருமை. மகிழ்ச்சி. மெயில் அனுப்பிய உடனேயே படித்துவிட்டு உடனே அடுத்த இதழிலேயே போட்டுவிடலாம் என்று தெரிவித்த அந்தக் கணம் முதல் இந்தக் கதைக்கான தேர்வின் மகிழ்ச்சியில் இருந்தேன் நான்.

இருவேறு முடிவுகளை, எழுதிச் செல்லும்போதே தானே தேடிக் கொண்ட படைப்பு இது. வலியப் புகுத்தினதுபோல் அமையாதது இதன் வெற்றி. ஒரு குறும்படமாக எடுத்தால் நிச்சயம் நன்றாக அமையும். ஆனால் எடுக்கும் நபருக்கு ஆழ்ந்த ரசனை வேண்டும். அப்போதுதான் கதையின் சாரமும், ஊடாட்டமும், படத்திலும் தவழும். எழுதிய மெருகு படத்திலும் குலையாமலிருக்கும்..

நவீன விருட்சம் இலக்கிய இதழ் 1988 முதல் வந்து கொண்டிருக்கிறது. விடாமல், பிடிவாதமாக ஒரு இலக்கிய இதழை அதன் தரம் குன்றாது நஷ்டங்களைப் பொருட்படுத்தாது நடத்திச் செல்வது என்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இந்த இதழின் தரம் நிரந்தரம். நண்பர்கள் அவசியம் இந்த இதழை வாங்கிப் பயனடைய வேண்டும்.

03 மே 2015

'“நீ பாதி, நான் பாதி” – செல்லமே மார்ச் 2015 மாதஇதழ் சிறுகதை

10435745_10202631595229670_836205512445110885_n
ல்லா உள்ளே தள்ளி உட்காருன்னு எத்தன தடவை சொல்றது? மண்டைல ஏறாதா? –நெருப்புக் கங்குகள் தெறிக்கும்போதே இருக்கையில் நகர்ந்து பதிய உட்கார்ந்தாள் தேவகி.
என்ன ஒரு பேச்சு? என்னைச் சரி செய்யும் இவன், தன்னை என்று சரி செய்து கொள்ளப் போகிறான்? அம்புகளாய் வந்து தைத்து வேதனைப்படுத்தும் அனல் வார்த்தைகள்.
எத்தனை வருஷமா வண்டில வந்திட்டிருக்கே, டெய்லி சொல்லணுமா? மர மண்டையா நீ?
அப்ப்ப்ப்ப்பா.! தாங்கலடா சாமி….அதான் உட்கார்ந்தாச்சே… …ரோட்டைப் பார்த்து ஓட்டுங்க…
எனக்குச் சொல்லு…….நீ சரியா உட்கார்ந்தாத்தான் ஒளெட்டாம ஸ்டெடியா நா வண்டி ஓட்ட முடியும்….சரியான கழுத்தறுப்பு…!
மூஞ்சி போகும் போக்கையும், திட்டுதலையும் அவ்வளவு போக்குவரத்திற்கிடையிலும் கவனித்தார்கள் சிலர்.. அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை. கண்மண் தெரியாத பேச்சுதான். ஒரு ஆபீசில் வேலை பார்ப்பவன் இப்படியா தாறுமாறாய்?.
யாருக்குப் பேச உரிமை? எவன் பொறுப்புகளை எடுத்துச் செய்கிறானோ அவனுக்கே உரிமைகள். . திட்டுவதும் கூட!. துரும்பையும் நகர்த்தாத இவனுக்கு?
விடிகாலை ஐந்தரைக்குள் எழுந்து வாசல் தெளிப்பதுமுதல், சதீஷை எழுப்பிப் படிக்க வைத்து, குளிப்பாட்டிப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கடைசியாய் அவனுக்கும் தனக்கும் மதிய டிபன் எடுத்து வைத்து, வீட்டைப் பூட்டிக் கிளம்புவது வரை அத்தனையும் அவள்தான். கயிற்றினின்று விடுபட்ட பம்பரமாய்ச் சுழலுவாள். தினசரியில் அவன்பாட்டுக்கு மூழ்கியிருப்பான். தேவையில்லாமல் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். என்ன மனசு அது? எப்படியான வளர்ப்பு? இரும்பு மனிதனா?
“உருக்க வேண்டிய பொருள்…அதனிடம் இரக்கம் காட்டிப் பேசுவது தவறுதான்…”
இப்படியுமா வளர்த்திருப்பார்கள்? மாதம் முடிந்தால் சுளையாய்க் கொண்டு வருகிறாளே….ஆபீசிலும் …வீட்டிலும் புயலாய்ச் சுழன்றடிக்கிறாளே…! கொஞ்சமேனும் உதவி செய்வோம் என்று கிஞ்சித்தும் இரக்கம் தோன்றாதா? மனைவி என்றால் கடமைப்பட்டவள், வீட்டு வேலை முழுக்க அவள்தான் …என்று எவன் சொல்லி வைத்தான்?
சாவியக் கொடுத்தியா? நீபாட்டுக்குப் போயிட்டிருக்க? -
இறங்கி நடந்தவள் நின்றாள். ஸாரி…அவசரத்துல மறந்துட்டேன்…
சின்சியராக் கொண்டு விடறேன்ல… சாயந்தரம் வீட்டுக்குப் போயி…ரோட்டுலயா நிக்கிறது? பையனே எதுத்த வீட்ல காத்துக்கிடப்பான்.. அவனையும் வச்சிட்டு அல்லாடணுமா நீ வர்றவரைக்கும்?
ஒன்றுக்கு ஒன்பது வார்த்தைகள். வெறுப்பு மண்டிக் கிடக்கும். இதில்தான் ஆண்மை என்று நினைக்கிறானா?
தியம் டிபனுக்கு அமர்ந்த மாலினி ஆசையாய் அவள் பாக்சைத் திறந்தாள். யேய்…! இன்னைக்கு எங்க மிஸ்டர்தான் சமையல். இந்தா..பாகற்காய் வற்றல் ….மோர் சாதத்துக்கு படுடேஸ்டா இருக்கும்…..அவர்தான் வறுத்தெடுத்தாரு…..
புருஷன வீட்ல வறுத்தெடுக்கிறேன்னு சொல்லு….– தேவகி சொல்ல, எல்லோரும் சிரித்தார்கள்.
அப்புறம் என்னடீ பண்றது? ரெண்டு பேர் வேலை பார்க்கிற வீடுகள்ல அவுங்களும் சிலதை செய்துதான் ஆகணும்…சும்மா பேப்பர் படிச்சிட்டு ஓட்ட முடியுமா?…அட்லீஸ்ட் காய்கறியாச்சும் நறுக்கிக் கொடுத்தாகணும்..அப்பத்தான் கதையாகும்…நாமளே லொங்கு…லொங்குன்னு லோல்பட முடியாது. என்னால ஆகாது சாமி…. இந்தாங்க பிடிங்கன்னு…நான் தூக்கி வச்சிடுவேன். மொண மொணம்பாரு…அதப்பார்த்தா நடக்காது… இல்லன்னா டயத்துக்கு ஆபீஸ் வர முடியாது எங்க கிடக்கு வீடு? நடந்து, பஸ் ஸ்டாப் வந்து ஏறி, திரும்ப இறங்கி, கொஞ்ச தூரம் நடந்தாத்தானே ஆபீஸ்…இந்தப் பக்கம் அவர் ஆபீஸ் இருந்ததுன்னு வச்சிக்கோ…நிச்சயம் விடமாட்டேனாக்கும்.. கொண்டு இறக்கிட்டுப் போங்கன்னு ஒத்தக்கால்ல நின்னுடுவேன்….. – மாலினி அவள்பாட்டுக்கு சபதமிட்டுக் கொண்டிருந்தாள். எல்லோரும் கப்சிப். நிறையப் பெண்கள் பாவம்தானே…!
அந்த தைரியம் ஏன் தனக்கு வரமாட்டேனென்கிறது? மரியாதையா? எதுவும் செய்ய வேண்டுமென்று அவனுக்குத் தோன்றவேயில்லையா? ஏன்? கௌரவக் குறைச்சலாக நினைக்கிறானோ? ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து இத்தனை ஆண்டுகள் ஆன பொழுதில் கூட அவனைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையே? துணிமணிகளைக்கூட, வாஷிங் மெஷினில் போட்டு எடுக்கத் தயங்கினால்?
உன் டிரஸ்ஸெல்லாம் என்னால தொட முடியாது.,…நீதான் செய்துக்கணும்….என் பேன்ட், சட்டை எதையும் அதுகூடப்போட்டுடாதே…எனக்குப் பிடிக்காது நான் தனியாப்போட்டுக்கிறேன்..…- சொன்னானேயொழிய செய்ததில்லையே…!
சேர்ந்து இருக்கிறோமா, வாழ்கிறோமா? சேர்ந்து இருப்பவர்களெல்லாம் சேர்ந்து வாழ்வதாய் அர்த்தமாகுமா?. ஒட்டியும் ஒட்டாமலும் ஒரு வாழ்க்கையா?
வயசான காலத்தில் இவனை எப்படி நம்புவது? அப்பொழுதாவது முதிர்ச்சி வந்திருக்குமா? தொட்டபின் பாம்பு என்றும்…சுட்டபின் நெருப்பு என்றும்…பட்டபின்னாவது அறிவானா?
இந்தபார்…நீ சம்பாரிச்சா அது உன்னோட…உன் காசுல நான் சாப்பிடல… எனக்கு பென்ஷன் வரும்…ரிடையர்டமென்ட் பெனிஃபிட்ஸ் வரும்…உன் கையை எதிர்பார்த்திருக்கலை…புரியுதா?
எதுக்காக இதைச் சொல்றீங்க….? என் சம்பளத்தை, வீட்டுக்குன்னு இருக்கிற பாங்க் கணக்குலதான போட்டு வைக்கிறேன்….நீங்கதான தனியா போட்டுக்கிறீங்க….?
அப்டீன்னா? நான் வீட்டுக்குன்னு எதுவும் செய்யலன்னு சொல்றியா? வீட்டுச் செலவுகளுக்குன்னு அந்தப் பைசாவ என்னைக்காச்சும் தொட்டிருக்கனா? எல்லாத்தையும் என் பணத்துலர்ந்துதான செய்றேன்…. பொதுக் கணக்குல கொண்டுவந்து போடணும்னு சொல்லாமச் சொல்றியாக்கும்? உன் வரவு செலவுகளப் பத்தி என்னைக்காச்சும் ஒரு வார்த்தை கேட்டிருக்கனா? ஏன் பேசமாட்ட? சம்பாதிக்கிறோம்ங்கிற திமிருடி உனக்கு….
போச்சு…வாயெடுத்தா இத ஒண்ணு சொல்லிடுவீங்க…என்ன திமிருன்னு எனக்கே புரியல….!
புரியாம ஆடுறதுதான திமிரு…அதுனாலதான் உன்னையெல்லாம் வைக்க வேண்டிய எடத்துல வச்சிருக்கேன்…இருபது முப்பது பேர்களை ஆபீஸ்ல மேய்க்கிற எனக்கு, இது கூடவா தெரியாது? நீயெல்லாம் தூசுடி…..
ஐயோ ராமா? யானைக்கு அர்றம்னா…குதிரைக்கு குர்றமா? எதற்கு எதைச் சம்பந்தப்படுத்திப் பேசுவான் என்று உணரவே முடியவில்லை. வக்ரபுத்தி. நரக வாழ்க்கை. காசு நிம்மதியைக் கொடுக்காது, அது வெறும் காரணி என்பது எப்படி நிரூபணமாகிறது?
எல்லோரும் சாப்பிட்டு முடித்துச் சென்றிருந்தார்கள். டிபன் பாக்ஸ் காலியானதே தெரியாமல் கைஉலர அமர்ந்திருந்தவள் எழுந்தாள். மனதுக்குள் இனம் புரிந்த துக்கம்.
வீட்டிற்குள் நுழைந்த போது அடுப்படியில் விளக்கு எரிவது தெரிந்தது. டிகாக் ஷன் இறங்கும் மணம். பாடம் எழுதிக் கொண்டிருந்தான் சதீஷ்.
வந்திட்டியா…இந்தக் காபியை ஒரு மடக்கு சூடா ஊத்து முதல்ல…- கொண்டுவந்து கொடுப்பதில் கூட ஒரு அலட்டல், அதற்குள்தான் இவன் அன்பும் பொதிந்திருக்கிறதோ?
முட்டாப் பசங்க…..!
என்னவோ முனகிக் கொள்கிறானே..! இன்னைக்கு என்னாச்சோ கடவுளே…?
சூடா சாப்பிடு….எது குடிக்க முடியாததோ அதுதான் சூடு…ஆவிபறக்கக் குடிச்சாத்தான் டேஸ்ட்டு….
என்னடாது இன்னைக்கு அதிசயம்…?. இது நம்ம வீடுதானா? ஈஸ்வரா…..!
…பால்ல பொட்டுத் தண்ணி கலக்கல….கள்ளிச்சொட்டா….காபின்னா இப்டித்தான் இருக்கணும்….எதுலயும் ஒரு ரசனை வேணும்ல…செய்து காண்பிக்கிறேன் பார்….
மலங்க மலங்க விழித்தாள் தேவகி. என்ன உளறுகிறான்? சினிமாவில் ஒரே பாட்டில் ஏழை நாயகன் பணக்காரன் ஆகிவிடுவதைப்போல…
ச்சே…! பெரிய துயரம் தேவி….வர்ற வழிக்கு நம்ப கணேசன் இருக்கார்ல…அவரோட நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன்…. மனசு அப்டியே விட்டுப் போச்சு, தெரிமா?-லேசாக வார்த்தைகள் தடுமாறின.
கல்லுக்குள் ஈரமோ?
எங்க ஆபீஸ் பசங்க இருக்கானுங்களே…..அத்தனையும் ஓட்டவாயி… பந்தாக் கேசுங்க…இன்னைக்கு நான் கண்கொண்டு பார்த்தன்பாரு அதுதான் சத்தியமான நிஜம்…
என்னன்னுதான் சொல்லுங்களேன்… - சற்றே உற்சாகம் பிறந்தது இவளுக்கு.
ரொம்பத்தான் அலட்டுறாங்கடீ ஆபீஸ்ல..….சூடேத்துறானுங்க…? பயங்கர டிஸ்கஷன்…
“…………!”
பெண்டாட்டிக்குச் செய்றது கடமை? அதுக்குப் பேரு உதவியா? அவனவன் வீட்டுக்கு அவன் செய்யாம, ரோட்டுல போறவனா வருவான்? பொம்பளைங்க அவுங்க .உடல் நோவை என்னைக்காச்சும் பொருட்படுத்தியிருக்காங்களா? எப்பவும் தன் வீடு, தன் புருஷன், தன் பிள்ளை….இதுதானே நெனப்பு…! இந்த அடிப்படையை எவனும் புரிஞ்சிக்கலைடி..
கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் தேவகி. சூடுபட்ட பூனையாய்த் துடிக்கிறானே?
சடன்னா இன்னைக்கு ஒரு சேஞ்ச்…பொறி தட்டின மாதிரி…இனி எல்லா வேலையையும் நான்தான் செய்யப் போறேன்….அவ்வளவுதான்…என்ன பார்க்கிறே? …இது .செருப்படியினால வந்த மாற்றம்…!
செருப்படியா? என்ன சொல்கிறான்?
புரியலேல்ல….எல்லாப் பயல்களும் மனசுக்குப் போலியாத் திரியறானுங்கடீ…துரோகம் பண்றானுங்க… அதான் விஷயம். ஆனா எங்கயோ ஒரு நிஜம் தழைச்சு நிக்குது… !!
தேவகிக்கு இன்னொரு டம்ளர் காபி வேண்டும் போலிருந்தது. ஐயோ கடவுளே…என்னன்னுதான் சொல்லித் தொலைங்களேன்…இப்டி ஆர்ட் ஃபிலிம் கணக்காப் பேசினா எப்டீ?
என்னுடைய ஒரிஜினாலிட்டியை எப்டி இழந்தேன்னு தெரில….வெரி பேட் டைம்…எங்கம்மா, தங்கச்சிகளுக்கு, அப்டி உதவியா இருந்தவன் நான்… வெட்டி அதிகாரத்தோட, மூடனாட்டம், எம்புட்டு அபத்தமா கழிச்சிருக்கேன்? குனிந்தவாறே பேசிக்கொண்டிருந்தவன் அவளைக் கூர்ந்து பார்த்துச் சொன்னான்….
கணேசன் கூட்டிட்டுப் போன வீட்டுல ஒரு ஊனமுற்றவர்..மனசு திக்குன்னு ஆயிப்போச்சு! அவர்தான் வீட்டு வேலை அத்தனையுமாம்…சக்கர நாற்காலில உட்கார்ந்திட்டு பம்பரமாச் சுத்தறார்… …அந்தம்மா வேலைக்கு போகுது… நாங்க உள்ளே நுழையறோம்… மேடம் டிபன் சாப்டிட்டு இருக்காங்க…அவர் உலர்ந்த துணிகளை மடிச்சிட்டிருக்காரு….தோசை வார்த்து, புதினாச் சட்னி செய்திருக்காரு…எப்டிப் பார்த்தியா? .நம்மைச் சுற்றி உலகம்ங்கிறது எத்தனை சத்தியமான உண்மை? அதை இனிமையாக்கிக்கிறது நம்ம கைலதானே இருக்கு?
என்னவோ புரிந்தது போலிருந்தது இவளுக்கு.
வெளியே சோவென்று மழை கொட்டிக் கொண்டிருந்தது.. மலைபோலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்….நம்மை வாழ வி்டாதவர் வந்து நம் வாசலில்….– பக்கத்து வீட்டில் பாட்டு அலறுவது அர்த்தம் பொதிந்ததாயிருந்தது.
தியாகராஜன் தியாகத்திற்குத் தயாராகிவிட்டானா? இப்படியெல்லாமும் அதிசயம் நிகழுமா? நம் வீடுதானா? சிரிக்கவா, அழவா? பரமண்டலத்திலிருக்கும் பிதாவே…! மனசுக்குள் மெல்லிய ராகம் இழைந்தது தேவகிக்கு.. வியப்பு விலகாமல் கேட்டாள்.
நாம இன்னைக்கே அவங்களைப் போய் பார்க்கலாமா….!.?
----------------------------------------

தினமணி கதிரில் “பழசு” சிறுகதை (15.3.2015)

19114_10202658564823893_202751233444757740_n

 

அப்படி இப்படியென்று கடைசியில் ஒரு நாள் அதற்கு சண்டையே வந்து விட்டது. என்னைக்கு வெச்சு வாங்குறது என்று காத்துக் கொண்டிருந்தாளோ என்னவோ? ஆரம்பித்து விட்டாள். வெடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அன்று ஸ்பெஷல்.. அதற்காகப் பழக்கத்தை விட முடியுமா? ஒரு உடை எப்படி ஒருத்தனின் அடையாளமாக மாற முடியும்? இது ஒருவனின் கௌரவம் என்ற பொருளில். குணாதிசயங்கள், அதை ஒட்டிய நடத்தைகள்தானே ஒருத்தனை அடையாளப் படுத்த முடியும்…! வெறும் உடை அப்படித் தூக்கி நிறுத்துமா என்ன?

காந்திஜி, வெற்றுடம்போடு, இடுப்பு வேட்டியோடு நடந்தார் என்றால் அது அவரது ஆன்மபலமும், அதை மற்றவர்கள் உணர்ந்திருந்ததுமே! அப்படி மதித்து, மரியாதை செய்யத்தக்க இடத்தில் அவர் நின்றார். ஆனால் சாமான்யனான எனக்கு என்ன வந்தது? உடைக்காக நான் எதற்கு மெனக்கெட வேண்டும்? என்னைப் பொறுத்தவரை புதுசு போடுவது என்றாலே மெனக்கெடல்தான். அது என்னவோ சின்ன வயசிலிருந்தே அப்படி ஆகிப் போனது. ஒன்றையே போட்டுக் கொண்டு அலைவது…! அதுவும் பழசையே…!

எப்பப்பார்த்தாலும் இந்த சிமின்ட் கலர்ச் சட்டைதானா? அட்டப் பழசு…அரதப் பழசு. என்னைக்கோ ஃபேட் ஆயிடுச்சு…மங்கிக் கிடக்கு. இன்னம் இதைப் போட்டு அடிக்கிறீங்களே…ஒரு கல்யாணம் காட்சி, விசேஷம்னாலும் இத மாட்டிட்டு ரெடியா நிக்கிறீங்க…வேறே சட்டையே இல்லையா உங்ககிட்டே? எதுக்கு இந்தத் தரித்திரக் கோலம்? எல்லாப் பழசையும் தூக்கி எறிங்க தலையைச் சுத்தி…!

இந்த வார்த்தைகளுக்காக எத்தனை காலம் காத்துக் கொண்டிருந்தாளோ? நாக்கு அழுந்தக் கேட்கணும் இவனை! கேட்டே விட்டாள். அணிந்திருந்த சட்டையை ஒரு முறை குனிந்து நன்றாய்ப் பார்த்துக் கொண்டேன். கச்சிதமாய் உடம்போடு பொருந்தியிருந்தது. எந்தவொரு இடத்திலும் சிறு புள்ளி, கறை, அழுக்கு என்று எதுவுமில்லை. அயர்ன் பண்ணித்தான் போட்டிருக்கிறேன். பார்க்கவும் நன்றாய்த்தான் இருக்கிறது. இதை ஏன் வேண்டாம் என்கிறாள்? அணிவது நான்தானே? அவளையா அழுக்குப் புடவையை, பழம் புடவையைச் சுற்றிக் கொள்ளச் சொன்னேன்? எனக்குப் பிடித்ததை நான் போட்டுக் கொண்டேன். அவரவர்க்குப் பிடித்த உடை என்று இருக்கும்தானே? பிடித்தவற்றையே அடிக்கடி அணிவது வழக்கம்தானே? இதனால் இவளுக்கு என்ன கேடு வந்தது?

இந்தச் சட்டைக்கென்னடீ குறைச்சல்… நல்லாத்தானே இருக்கு?, கிளம்பு…போகலாம்…என்றேன்.

இந்த டிரஸ்ஸோடதான் வருவேன்னா…..முதல்ல இது டிரஸ்ஸே இல்லை… நான் இந்த ஃபங்ஷனுக்கு வரலை….நீங்க மட்டும் போயிட்டு வாங்க…

இதென்ன வம்பாப் போச்சு….வரலேன்னா அங்க உன்னைத்தான் குறை சொல்வாங்க…பார்த்துக்கோ….

அதெல்லாம் இருக்கட்டும், நீங்க முதல்ல வேறே சட்டை, பேன்ட் போட்டுட்டு வந்து நில்லுங்க….பிறகு கிளம்புறதப்பத்திப் பார்க்கலாம்… -சொன்னால் சொன்னதுதான். அந்தப் பிடிவாதம் வேறு யாருக்கும் வராது. இந்த வயசிலுமா இப்படி? என்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேன். எனக்கு நாலஞ்சு வயசு சின்னவள். அவ்வளவுதான்…

என்னுடைய முப்பத்தி ரெண்டாவது வயசிலேர்ந்து இப்டி ஒருத்திகிட்ட மாட்டிட்டு லோல் படணும்னு என் தலைல எழுதியிருக்கு போலிருக்கு…. – நானும் சொல்லிச் சொல்லிப் பார்த்து விட்டேன்…அவள் மாறுவதாயில்லை. பிறவிக் குணத்தை மட்டையை வச்சுக் கட்டினாலும் மாறாது என்பார்கள்.

இந்த பார்…என்னோட சுதந்திரத்துல யார் தலையிட்டாலும் எனக்குப் பிடிக்காது. அதேபோல நானும் மத்தவங்க விஷயத்துல தலையிட மாட்டேன்…

யாரும் எதுலயும் தலையிடல…பளிச்சினு ஒரு சட்டையை டீசன்டா மாட்டிட்டு வாங்கன்னுதான் சொல்றது….

ஏன், இதப் பார்த்த டீசன்டா தெரிலயாக்கும் அம்மையாருக்கு….? இதப் போட்டுட்டு கூட வந்தா இளப்பமா இருக்குதா….?

ஆம்மா…அப்டித்தான் …எத்தனை புதுசு இருக்கு…அதெல்லாம் அப்டியே உள்ளயே பூட்டிப் பூட்டிக் கிடக்கணுமா? ஒண்ணு மாத்தி ஒண்ணு எடுத்துப் போட்டு அனுபவிக்க வேண்டிதானே? சரியான பிசிநாறி……

சிரிப்பதா, அழுவதா? படுத்துகிறாள். போறது என் நண்பனோட ஃபங்ஷன்தான்…அவன் ஒண்ணும் நினைச்சிக்க மாட்டான்…நீ கிளம்பு…..

ஒரு விசேஷம், கொண்டாட்டம்னு போறபோது, புதுசு போட்டுக்க மாட்டாங்களா? அங்க போய் பழைய பஞ்சாங்கம் மாதிரி நிப்பீங்களா?

என்னைப்பத்தி அங்க வர்றவங்களுக்குத் தெரியும்டீ…நீ ஏண்டீ போட்டு அலட்டிக்கிறே? எடுத்த எடுப்புல கலகலன்னு ஆரம்பிச்சிடுவேன்….எல்லாரும் என் பேச்சைத்தான் கவனிப்பாங்களே தவிர, ஆளைப் பார்க்கமாட்டாங்க…மனுஷங்கள அப்பப்ப சந்திக்கிறப்போ….என்னா…நல்லாயிருக்கீங்களான்னு சாதாரணமாக் கேட்டுட்டு, சிரிச்சுப் பேசிட்டு, நகர்றவன் நான்….அவுங்க உருவம், உத்தி, உள்ளடக்கம்னு எதையும் நோண்டிப் பார்க்க மாட்டேன்….பொதுவாவே எல்லா மனுஷங்களையும் அவுங்க எப்டியிருக்காங்களோ அப்டியே ஏத்துக்கிறதுதான் என் குணம்…அதுதான் உசிதம்… என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த உலகத்துல வெறுக்கிறதுக்குன்னு வேண்டாம்னு ஒதுக்கிறதுக்குன்னு எவனுமில்லை…எந்த உயிருமில்லை….அதுனால என்னைப்பத்தி எல்லாருக்கும் தெரியும்…யாரும் இளப்பமா நினைக்க மாட்டாங்க…நீ ஒண்ணும் கவலைப்படாதே….புறப்படு….

ஷைலஜா என்னையே உற்றுப் பார்த்தாள். எதையெடுத்தாலும் நீட்டி முழக்கி, சம்பந்தா சம்பந்தம் இல்லாம ஒரு லெக்சர்…கேட்டது ஒண்ணு…சொல்றது ஒண்ணு…அப்ப….அப்ப….அப்ப்ப்ப்பா….எங்கேருந்துதான் வருமோ? சரியான ஓட்ட வாய்…

நான் ஒண்ணு சொன்னா, நீங்க வேறே எதையாச்சும் சொல்லி டைவர்ட் பண்ணி விட்டுடறீங்க…இதே வழக்கமாப் போச்சு….பிறகு என்ன கேட்டோம்ங்கிறதையே மறந்து போயிடுறேன்….கிளம்பின காரியமும் முடிஞ்சு போயிடும்…இப்டித்தான் வழக்கமா நடந்திட்டிருக்கு…..இன்னைக்கு நீங்க சொல்ற எதையும் காதுல வாங்குறாப்ல இல்லை…வேறே டிரஸ்ஸை மாட்டிட்டு வரப்போறீங்களா இல்லையா? – கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட பேக்கை கீழே வைத்து விட்டு உட்கார்ந்து விட்டாள் ஷைலஜா. கையில் பிரம்பு துடித்துக் கொண்டிருந்தது.

எனக்குப் பிடித்த அந்தச் சட்டையைக் கூட விரும்பினபோதெல்லாம் போட்டுக் கொள்ள எனக்கு உரிமை கிடையாதா? அது கொஞ்சம் பழசுதான்.அவள் சொல்வதுபோல் அரதப் பழசு இல்லை. இன்னும் பளபளப்பு குறையவில்லைதான். ஏறக்குறைய எட்டு வருஷத்திற்கும் மேல் அது என்னிடம் இருக்கிறது…அல்ல, கிடக்கிறது. இப்படி இன்னும் பல உண்டு. வாஷ் பண்ணி அப்படியே போட்டுக் கொண்டால் சற்று மங்கலடிக்கும். அயர்ன் பண்ணி அணிந்தால், பளபளப்பாய் கம்பீரமாய்க் காட்சியளிக்கும். அந்தச் சட்டையோடு கூடிய என் தோற்றத்தை நான் விரும்பினேன். ஒரு கம்பீரம் தானாய் வரும். கண்ணாடி முன் போய் நிற்பேன். எனக்கென்று இயல்பாய் உள்ள ஒரு நிமிர்வு களைகட்டி நிற்கும்.. ஆணுக்கு அழகு அவனிடம் உள்ள ஆண்மை…! கொஞ்சம் முரட்டுத்தனம் பாவித்த பொருத்தமான அழகு. பார்ப்பவர்கள், பவ்யத்தோடு வணக்கம் சார்…என்று அவர்களையறியாமல் கையெடுக்க வேண்டும்…எடுக்கிறார்கள்…அதில் எனக்கு ஒரு பெருமிதம். (வாயைத் திறந்தால் தராதரம் தெரிந்து போகும், அது வேறு விஷயம்! சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்!) அதற்கு நமக்கென்று அமைந்த ஒன்றிரண்டு உதவத்தான் செய்கின்றன. அதில் ஒன்று இந்தச் சட்டை…மறுப்பதற்கில்லை….ஒருவனின் கௌரவத்தை அடையாளப்படுத்துவது என்று சொன்னேனே…என்னைப் பொறுத்தவரை இந்தச் சட்டைக்கும் அதில் பங்கு உண்டுதான்…! வேறு சட்டை மாற்றினால் நிச்சயம் இந்த கம்பீரம் குலைந்து போகும்…அதில் சந்தேகமேயில்லை. என்ன செய்ய? மனசில்லாமல்தான் அணியப் போகிறேன். பாவி, படுத்துகிறாளே…!

ஷைலஜாவின் எதிர்பார்ப்பிற்கேற்றாற்போல் உடம்போடு ஒட்டி இன்றைய மாடல் சட்டை ஒன்றை அணிந்து கொண்டு வந்து நின்றேன். பின்பக்க பிருஷ்டம் தெரிந்தது. பேன்ட்டும் மாத்தினீங்களா?- கேட்டுக் கொண்டே நான் அணிந்திருந்ததை நோட்டம் விட்டாள். ஓ.கே. என்று எழுந்தாள். பத்து வயசு குறைஞ்சிட்டேனாம்….கஷ்டம்….!

இப்போ எவ்வளவு நல்லாயிருக்கு….இதவிட்டிட்டு, என்னத்தையோ போட்டுட்டு, கிறுக்கு மாதிரி வர்றீங்களே…?

அடா…அடா…அடா…! என்னா பேச்சு…? இன்ன வார்த்தைதான் பேசுவது என்ற கணக்கே இல்லை…நாக்குல நரம்பில்லையோ?….சற்றேறக்குறைய என் தலைமுறையைச் சேர்ந்தவள்தானே இவளும். நான்கு வயது வித்தியாசம் அப்படியென்ன பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடப் போகிறது? பேச்சில் ஒரு பாந்தமில்லை. கிராமத்தில் வளர்ந்தவனுக்கும், நகரத்திலேயே பிறந்து வளர்ந்தவளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குமோ? என்னவோ கிரகச்சாரம்….

போவது என் நண்பன் வீட்டு விசேடத்திற்கு. அவனுக்கு அறுபதாம் கல்யாணம்.

பையன்தான் வற்புறுத்தினான். சொன்னாக் கேட்கமாட்டேங்கிறான்…சரி, அவன் விருப்பத்துக்குச் செய்திட்டுப் போகட்டும்னு விட்டுட்டேன்….பலரும் இப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள். பெற்ற பிள்ளை எடுத்து செய்வதில் மறைமுகமான ஒரு சந்தோஷம். அதைப் பிறரிடம் பிரலாபிப்பதில் ஒரு கிக்கு. இருக்கத்தானே செய்யும். மூன்று நான்கு சகோதரர்கள் இருக்கும் வீட்டில் கூட சேர்ந்து செய்து கொள்கிறார்கள். ரெண்டு பேர் மட்டும். மீதி ரெண்டு பேரை விட்டு விடுகிறார்கள். அல்லது ஒருத்தனை. அதென்ன சகோதரத்துவமோ? அவ்வளவுதான் ஒற்றுமை. அதுதான் ஏதோவொருவிதத்தில் குடும்பங்களில் வெளிப்பட்டு விடுகிறதே…! கல்யாணம் ஆகி குழந்தை குட்டி என்று குடும்பம் பெருகிவிட்டால், கூடவே பிரிவினையும் வந்து ஒட்டிக் கொள்கிறது. அவரவர் தன்னிறைவு பெற்றுள்ள நிலையில், …யாரால் வருகிறது இந்த மாற்றம்? என்ன அவசியம் என்று அந்த இருப்பு நிலைதான் அதற்குத் தள்ளுகிறது எனலாமா? குறிப்பாகக் குடும்பத்துக்குள் நுழைந்த பெண்டுகளால் எனலாமே! நேரில் சந்தித்துக் கொள்கையில் என்னமாய் வாயால் வழிய விடுகிறார்கள்? அன்பை வார்த்தைகளால் மழையாய்ச் சொரிகிறார்களே? அத்தனையும் வேஷமா? உள்ளே நுழையும்போதே பெரிய குடும்பம் என்று தெரிந்துதானே தலையைக் கொடுக்கிறார்கள்…! அதைக் கடைசிவரை நிலை நிறுத்துவது அவர்கள் பொறுப்புதானே? பிறகு எதற்குக் கலைத்துப் பிரித்துப் போட முனைகிறார்கள்? தனியே கொண்டு போகத் துடிக்கிறார்கள்? யார் சொத்தை யார் பறிக்கப் போகிறார்கள்? எல்லாம் காலத்தின் கோலம். பெண்கள், குடும்பத்தில் ஆண்களுக்கிடையே ஏற்படும் உஷ்ணத்தை உரசல்களைத் தணிப்பவர்கள், குடும்பங்களில் ஒற்றுமையை நிலைத்திருக்கச் செய்பவர்கள் என்று படித்திருக்கிறேன். எவனோ நல்ல மனசுக்காரன் எழுதியிருக்கிறான். குடும்ப அமைப்புகள் சிதறாமலா இருக்கின்றன?. பல குடும்பங்களில் இந்த நிலை இல்லை. அதுதான் நிதர்சனம்.

அறுபதுக்குப் போய்த் திரும்பியாயிற்று. யாரும் யாரையும் கவனித்ததாய்த் தெரியவில்லை. எல்லோரும் குடுகுடுவென்று அங்கே இங்கே என்று ஓடிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ரெண்டு குட்டிப் பாப்பாக்கள் வாசலில் பன்னீர் தெளித்து வரவேற்றன. நாம என்ன டிரஸ் போட்டிருக்கோம்னு எவன் கவனிக்கப் போறான்? அதெல்லாம் சும்மா….!…எல்லாம் நாமளா படுத்திக்கிறது….!

என்னப்பா…வா…வா…ரொம்ப சந்தோஷம்… கடைசிவரைக்கும் இருந்து சாப்பிட்டு, தாம்பூலம் வாங்கிண்டு போ….நண்பனின் அன்பான உபசரிப்பு…

இவர் டிரஸ் எப்டியிருக்கு? – நல்லவேளை கேட்கலை எம் பொண்டாட்டி. தப்பிச்சேன். .

எல்லாம் முடிந்து வீடு வந்தாயிற்று. வந்ததும் வராததுமாக முதலில் அந்தச் சட்டையைக் கழற்றி உறாங்கரில் மாட்டினேன். இறுக்கிக்கிடந்த பேன்ட்டைப் பிய்த்து எறிந்தேன். பிருஷ்டத்தில் தோல் உறிந்ததோ என்னவோ…தடவிப் பார்த்துக் கொண்டேன். அக்கடா என்று கைலிக்குள் நுழைந்தேன்

அதுக்குள்ள அவுத்து எறிஞ்சாச்சா? அங்கயே ஒரு ஸ்நாப் எடுக்கச் சொல்லலாமான்னு நினைச்சேன். நீங்கவேறே எதாச்சும் சொல்வீங்களோன்னு பயம். கொஞ்சம் இருங்கோ…இந்த செல்ஃபில ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்…திரும்ப எடுத்து மாட்டிக்கிங்கோ…

அடக் கடவுளே, இவளோட எம்புட்டு அவஸ்தை…ஏற்கனவே ரொம்ப அழகு. இதில் செல்ஃபியில் ஃபோட்டோ.வேறா? ஸ்டுடியோவில் அவன் சொல்கிறபடி சிலையாய் அமர்ந்து,ஸ்மைலாய் ப்ளீஸினாலுமே சரியாய் விழாது. இந்த லட்சணத்தில் இதிலெடுத்தால்? எதைச் சொல்லி எதைக் கேட்கப் போகிறாள்? இப்படியெல்லாம் அந்தக் காலத்தில் நம் பெற்றோர்கள் ஏதாச்சும் ஒன்றை நினைத்திருப்பார்களா? எந்த சந்தோஷத்தையாவது அனுபவித்திருப்பார்களா? ஃபோட்டோவுக்கு உட்கார்ந்தால் ஆயுசு குறைச்சல் என்று பயந்து ஓடியவர்களாயிற்றே!

யாராவது ரொம்ப அலட்டினால், எனக்கு எண்ணங்கள் பின்னோக்கிப் போய்விடும். இதைச் செய்யாதே என்பதற்கடையாளமாய். நான் அஞ்சில் விளைந்தவன். சொல்லப்போனால் அவைதான் என்னை இந்த நிமிடம்வரை காப்பாற்றி வருகின்றன.

ரஉறீம் பாய், இந்தாங்க…நூறு ரூபாதான் தேறித்து. இதுக்கே படாத பாடு பட்டுப் போனேன். பையன்கள் மூணு பேருக்கும் சட்டை, ட்ரவுசர், நீங்களே பார்த்து, எடுத்து தைச்சுக் கொடுத்திடுங்க…பாக்கியைக் கொஞ்சம் கொஞ்சமாத் தர்றேன்….வாங்கிக்குங்க….

அந்தத் தையல்காரரோடு சென்றுதான் தீபாவளித் துணி எடுத்த நினைவு. எல்லா தீபாவளிக்கும் அவர்தான். அவராக என்ன விலைக்கு எந்தத் துணியை எடுத்துக் கொடுக்கிறாரோ அதுதான் எங்கள் விருப்பம். இருக்கும் காசுக்கு எப்படிமுழம் போடுவது என்று அப்பாவை அறிந்த அவருக்கு அத்துபடி.

தைச்சுட்டீங்களா…தைச்சுட்டீங்களா…என்று அவர் குடிசை வாசலில் ஆசை ஆசையாய்த் தவம் கிடந்த நாட்கள். ஒரு கிழிசல், தையல், விரிசல் என்றாலும் அவரிடம்தான் போய் நிற்போம். காசே வாங்கிக் கொள்ள மாட்டார். அவரின் பிள்ளைகள் மாதிரி, அப்படி ஒரு பிரியம் எங்கள் மேல்.

மாஸ்டர், உங்களுக்கு எப்ப முடியுதோ, அப்பக் கொடுங்க போதும்… பசங்களுக்கு தீபாவளி டிரஸ் ரெடி….. – அப்பாவின் மேல் அத்தனை நம்பிக்கை. Nஉறாட்டலில் சரக்கு மாஸ்டராக இருந்த அப்பாவுக்கு இப்படி எத்தனை பேர் ஆதரவாக இருந்தார்கள்? எல்லாமே மனிதனை மனிதன் நம்பிய நாட்கள் அவை. அந்தக் கடைவீதியில் அப்பாவுக்குக் கடன் கொடுக்காத கடைகள்தான் எது? அரிசிக்கடை, பலசரக்குக் கடை, காய்கறிக்கடை, வெல்லக்கடை, எண்ணெய்க்கடை, தையல்கடை, கதர்க்கடை, பெட்டிக்கடை என்று ஒன்று விட்டதில்லையே…! எங்கெங்கு காணினும் கடன் கடன் என்று நிரம்பி வழிந்த வாழ்க்கை. இந்த அவலங்களுக்கிடையே மனிதர்கள் என்னமாய் ஒருவருக்கொருவர் ஒன்றியிருந்தார்கள்? பரஸ்பரம் எத்தனை நம்பிக்கை வைத்து இயங்கினார்கள்? அவரவர் கௌரவத்தையும், நேர்மையையும், எப்படி மதித்தார்கள்?

அந்த அப்பாவின் ஒரே சட்டை இன்னும் என்னிடம் இருக்கிறது. அது காமராசர் சட்டை. எங்கேனும் வெளியூர் பயணம் என்றால் மட்டும் அப்பாவின் தகரப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே வரும். பிறகு மௌனமாய் மீண்டும் அந்தப் பெட்டிக்குள் சென்று படுத்துக் கொள்ளும். அதை வெளியே எடுக்கும்போதே ஒரு மணம் மூக்கை நெருடும். அந்த மணம் இன்றும் உண்டு. அது அப்பாவின் வாசனை. அதைப் போட்டுக் கொண்டு கை நீளமாய் தொள தொளவென்று, வெள்ளை வெளேரென்று அப்பா நடந்த நாட்களில் இவரின் பிள்ளை நான் என்று கத்திச் சொல்லத் தோன்றும். அப்பா கையைப் பிடித்துக் கொண்டு கூடவே கன்றுக்குட்டியாய் ஓடிய அந்தக் காலங்கள் இன்றும் பசுமையாய். சீனு,, கூட்டத்துலே எங்கேயும் ஓடிடாதே…என் கூடவே இரு….

கடைசிவரை வெற்றுடம்போடுதான் அப்பாவைப் பார்த்திருக்கிறேன். Nஉறாட்டலில் நெருப்பின் முன்னே நின்று நாள் பூராவும் காய்ந்துவிட்டு, வியர்க்க விறுவிறுக்க வீட்டிற்கு வந்து, கைத்துண்டால் மார்பிலும், முதுகிலும் வீசி வீசி அந்த உஷ்ணத்தை ஆற்றிக் கொள்ளும் நேரங்கள் அந்தக் குடும்பத்திற்கான அயராத உழைப்பின் சாட்சி. என்ன சுகத்தைக் கண்டார் கடைசிவரையில்? ஓடி ஓடி உழைத்து, ஓடாய்த் தேய்ந்து, கடைசியில் பிள்ளைகள் வேலைக்குப் போன காலங்களில் பக்கவாதம் வந்து படுத்ததுதான் மிச்சம். அவருக்கெல்லாம் அப்படி வரலாமா? தினமும் குளித்து முடித்த மடியுடனே நெற்றியிலும், உடம்பிலும் விபூதிப் பட்டைகள் பளபளக்க, சூரியனைப் பார்த்து அமர்ந்து குறைந்தது மூன்று நான்கு மணி நேரங்கள் ஜபம் செய்வாரே…! அந்தக் கடவுள் வந்து அவரைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா? இத்தனை காலம் நீ என்னை வேண்டி நின்றதற்கு இந்தா உனக்குப் பரிசு என்று படுக்கையிலா போடுவது? எல்லாம் முன் ஜென்ம வினை….சாமி என்ன செய்வார் அதுக்கு?- அப்போதும் அந்த நம்பிக்கை பிறழாத தடம். இடுப்பில் துண்டு சுற்றியிருந்தால் கொடியில் வேட்டி உலருகிறது என்று அர்த்தம். அதிகபட்சம் அப்பாவிடம் ரெண்டு வேட்டிக்கு மேல் பார்த்ததில்லை. ஆயுள்முழுக்க அ.ப்படித்தான். மனக் குறையோடேயா அலைந்தார்? அவரின் கௌரவம் அதிலா இருந்தது?

ஊரம்புட்டும் கடன். அவர்களுக்கு நடுவேதான் தினசரி அப்பா போய் வந்து கொண்டிருந்தார். நம்பினார்களே…ரெண்டும், அஞ்சுமாய்க் கொடுத்தும் வாங்கிக் கொண்டார்களே…! ஒரு சுடு சொல் உண்டா? பணம் பெரிசா, மனுஷனின் நடத்தை பெரிசா? பொற்காலமில்லையா அது?

எதற்கு ஆசைப்பட்டார் அந்த மனிதன்? வேண்டி, விரும்பி ஒரு சினிமாக் கூடப் பார்த்ததில்லை. அப்பப்பா, அந்த திருவிளையாடல் படம் கூட்டிப் போவதற்குத்தான் என்ன ஒரு பிரயத்தனம்? வெறும் நாலணா டிக்கெட். வரிசையில் நிற்கமாட்டேன் என்று விட்டாரே! அந்த நாலணா இருந்தால் வீட்டிற்குக் காலம்பரத்திற்கு காபிப்பொடியும், பாலும் வாங்கலாம் என்றார். வீடு வீடு என்று தன் மூக்குப் பொடிச் செலவைக் கூடக் குறைத்துக் கொண்ட மாமனிதன். இந்தக் கெட்ட பழக்கம் என்னவோ சின்ன வயசுலேர்ந்து வந்திடுத்து….சனியனை விட்டொழிக்கணும்….அறுபது வயது தாண்டிய பொழுதில், காலம் பூராவும் உடம்போடு, உணர்வுகளோடு ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பழக்கத்தைச் சட்டென்று கைவிட்ட மன உறுதி. அப்படி ஒரு திண்மை.

அவர் எடுத்தது ஒரு சட்டை. போட்டது ஒரே சட்டை. வாழ்ந்து முடித்ததும் அந்த ஒன்றிலேயேதான்.. எந்த ஆசை அவரைச் சபலப்படுத்தியது? என்ன சுயநலம் அவரைத் தடுமாற வைத்தது? எப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் வாழ்ந்து மறைந்த பூமி இது? அப்பாவை நினைத்தால் இது பழைய சட்டை, இது கலர் மங்கிய சட்டை, இது ஓல்டு ஃபேஷன் என்று எதையேனும் தூக்கி எறியத் தோன்றுமா? இன்று இவள் சொல்கிறாள். எல்லாப் பழசையும் தூக்கி எறியுங்கள், மூலையில் கிடாசுங்கள் என்று. நாளைக்கு என்னையும் சொல்வாளோ?

. ஏன்னா நானும் பழசுதானே? நீ நாகரீகமானவ….நான் அப்டியில்லையே…! உனக்கு நான் பழசாத் தெரியறது ஒண்ணும் அதிசயமில்லையே…! எனக்கு இந்த இருப்பு போதும்…இதுலதான் என் மனசு சமாதானமாயிருக்கு….கிழியாத துணிகளை, வீணாத் தூர எறியறதுக்கு முடியாது. நான் அப்டி வளரல…இத்தன பேன்ட், சட்டை எங்கிட்ட இருக்குங்கிறதே அதிசயம். தூக்கி எறிய எனக்கு மனசு ஆகாது. கடைல ஒரு ரூபாய்க்கும், ரெண்டு ரூபாய்க்கும் போட முடியாது. இணங்கி மனசு வர்ற போது ஒண்ணு செய்வேன்…வாசல்ல வர்ற வண்டிக்காரனுக்குக் கொடுத்திடுவேன்…இல்லன்னா எதாச்சும் ஆஸ்ரமத்துக்குத் தள்ளிடுவேன்…விற்கிற சோலியெல்லாம் கிடையாது….

ன்னவோ ஒரு அரதப் பழசான சட்டை….அதையே திருப்பித் திருப்பிப் போட்டுண்டு அலைஞ்சிண்டிருக்கும் அது….கிறுக்கு மாதிரி….அய்யோடா…அந்தப் பழக்கமும் அவரும்….வெளில சொன்னா வெட்கக் கேடு…மானம் போறது….எல்லாம் என் தலையெழுத்து….அனுபவிக்க வேண்டிர்க்கு…..

இப்போதும் இந்த வார்த்தைகள் என் காதுகளில் விழுந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் தொனிக்கும் மரியாதை கழன்ற நிலையையும் உணர்ந்தேதான் இருக்கின்றேன். ஒரு கட்டத்தில் இப்படிப் பேசுவதும் கூட அவளுக்கு அலுத்துப் போகக் கூடும். அதற்காகக் காத்திருக்கிறேன் என் சுயத்தோடு. -----------------------------------------------------------

17 ஜனவரி 2015

தினமணிகதிர் (18.01.2015) ஞாயிறு இதழில் எனது “யதார்த்தம்” சிறுகதை

kathai HP_image--------yadartham
     அப்பா, லெட்ரீன் குழாய் ஒழுகுது…. – சொல்லிக் கொண்டே வேகமாய் வெளியே வந்தான் சதீஷ். கதவைப் பட்டாரென்று சாத்தும் சத்தம். அதனைத் தொடர்ந்து டொக், டொக்கென்று விளக்குகளை சத்தமெழ அணைக்கும் சத்தம். ஒரே ஆர்ப்பாட்டம்தான். பதவாகம் என்பதே கிடையாது.
     போவது கழிப்பறைக்கு. அதற்கு குளியலறை லைட்டையும் சேர்த்து ஏன் போட்டுக் கொள்ள வேண்டும். அதுவும்  பட்டப் பகலில்? போதுமான வெளிச்சம் உள்ள இடம்தான். ஆனாலும் லைட்டை எரிய விடுவது என்பது வழக்கமாகிவிட்டது. இவனுக்கும் சரி, இவன் அம்மாவுக்கும் சரி. ரெண்டு பேரும் சொன்னால் கேட்கமாட்டார்கள். அவர்கள் வழக்கப்படிதான் செய்வார்கள். போய்விட்டு வெளியே வந்து, டொக்கு டொக்கு என்று அந்த சுவிட்சை  சத்தம் எழ அணைப்பார்கள். இப்டி பத்துதரம் செய்தா வேறே சுவிட்ச் மாற்ற வேண்டிதான்…..அதைக் கொஞ்சம் பதவாகமா செய்தாத்தான் என்ன? அப்படி அணைக்கிறது என்ன ஸ்டைலா?
     மாத்து…..போனாப் போகுது….-சிரித்துக்கொண்டே சொல்கிறான். அவன் சொல்வதை இவளும் ஆமோதிப்பாள். எடுத்ததற்கெல்லாம் தான் குத்தம் சொல்வதாய்த்தான் நினைக்கத் தெரியும். அதிலுள்ள நியாயத்தை எண்ணிப்பார்க்கத் தெரியாது. சர்வ சாதாரணமாய் மாற்று என்கிறான். ஒரு சுவிட்ச் வாங்கப் போனால் அம்பது அறுபது ரூபாய். அதை மாற்ற ஒரு எலெக்ட்ரீஷியனை வேறு கூப்பிட வேண்டும். அவனுக்கு எழுபது கூலி. ஆக நூற்றி இருபது, நூற்றி ஐம்பது ஆகி விடும். ஒரே ஒரு சுவிட்ச் மாற்ற என்றெல்லாம் ஆட்கள் வருவதில்லை இப்போது. படு கிராக்கியாகிப் போனது. ஏதேனும் ரெண்டு மூணு வேலை என்று சொன்னால்தான் பார்க்கலாம் என்கிறார்கள். அப்போதுதானே ஐநூறு, அறுநூறு தேற்ற முடியும். இப்போதெல்லாம் இவர்களுக்கு,  கட்டிடத் தொழிலாளர்களுக்கு என்றெல்லாம்தான் மவுசு. நிர்ணயித்த கூலி. ஆனால் அவர்கள் செய்ததுதான் வேலை. அது பற்றி யாரும் கேட்டுவிடக் கூடாது. சொன்னால் அடுத்த முறை வரமாட்டார்கள்.
     இருக்கும் நிலைமைக்கு சின்னச் சின்ன வேலைகளெல்லாம் கற்றுக் கொள்ளாமல் போனோமே என்றிருந்தது சிவராமனுக்கு. தெரிந்திருந்தால் எவனிடமும் போய்ப் போய் இப்படித் தொங்க வேண்டாமே..! நாள்கணக்கு வேலைகள் என்றால் மட்டுமே கூப்பிட்டுக் கொள்ளலாமே!
     ஒரு நாளைக்கு, ஏழெட்டுத்  தரம் இப்டி டாய்லெட்டுக்கும், பாத்ரூமுக்கும் குளிக்க, கை கால் முகங்கழுவன்னு போயிட்டு வர்றோம்னா. அத்தனை தரம் நீங்க ரெண்டு பேரும் லைட்டை யூஸ் பண்றீங்க…அதுவும் பகல்ல...யோசிச்சுப் பாருங்க….ரெண்டு மாசத்துக்கொரு தரம் இ.பி. பில் வருது….இப்டிப் பகல்லயே லைட்டை எரிய விட்டா, கரன்ட் சார்ஜ் என்னாகுறது? ராத்திரிப் போட்டுக்கிறதைப் பத்தி நான் எதுவும் சொல்லலை….அதுலயும் எங்க போறமோ, அந்த ரூம் லைட்டை மட்டும் எரியவிட்டாப் போதுமில்ல? டாய்லெட் போனா, அந்த லைட்டை மட்டும்தானே போட்டுக்கணும்… எதுக்காக பாத்ரூம் லைட்டையும் சேர்த்து எரிய விடணும்….வந்து கைகழுவறபோது போட்டுக்கலாமில்ல? இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயங்கள்…நீங்களா செய்துக்கணும்…இதுக்கு ஒரு ஆள் சொல்லணும்ங்கிறதில்லை….ஆனா சொல்ல வேண்டிர்க்கு….ரெண்டு மாசத்துக்கொரு தரம் ஐநூறு யூனிட்டுக்குள்ள வந்தா நல்லது. அதுவே ஜாஸ்திதான். போகட்டும் பரவால்ல… இல்லன்னா ஐநூறுக்கு மேலே தண்டம்தான் கட்டணும்….ரெண்டாயிரம், மூவாயிரம்னு….பார்த்துக்குங்க…
     இவர் பேச்சை பையன் கேர் பண்ணியதே இல்லை. அவளும் கண்டு கொள்வதில்லை. நீயென்ன சொல்றது, நானென்ன கேட்குறது என்கிற கதைதான். இந்தாளுக்கு வேறென்ன வேலை? இதுதான். செலவு செய்யலாம். விரயம் செய்யலாமா?
     போதும்…இது ஒண்ணுதான் தெரியும் உங்களுக்கு…எதுக்கெடுத்தாலும் இதைச் சொல்லிண்டு….இப்படிப் பையன் காது கேட்கவே சொன்னால் எப்படி? மதிப்பானா? சொல்லியும், இருந்தும் அவன் பார்த்ததனால்தானே அவனுக்கும் அந்தப் பழக்கம் படிந்திருக்கிறது?
     இதோ, இப்போது லெட்ரீன் குழாய் ஒழுகுகிறது என்கிறான். ஊரிலிருந்து வந்ததும் எதடா சொல்லலாம் என்று குறிப்பாய்க் கவனித்துச் சொல்லியாயிற்று. அதாவது அவன் சொல்வது தண்ணீர் நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறது என்பதாகும். அதற்கு என்ன அர்த்தம்? சரியாக மூடவில்லை என்று அர்த்தம். குழாய் சொட்டுது என்றாள் அவள். இழுத்து மூடு என்றார் இவர். அதற்கு ஒரு வாஷர் மாற்ற வேண்டும்தான். இந்தக் காலத்தில் அதெல்லாமா செய்கிறார்கள்? வேறே குழாய் போட்ருவோம் சார்….என்று ஆளையே அல்லவா மாற்றி விடுகிறார்கள்?
      அதைக் கொஞ்சம் அழுத்தி மூடினால்தான் என்ன? அழுகியா போய்விடுவோம்? ஏதோ அவ்வப்போது ரெண்டு சொட்டுச் சொட்டினால், சொட்டிவிட்டுப் போகிறது…வாளியில்தானே விழுகிறது. வீணாகவில்லையே? இதற்குப் போய் குழாயையே மாற்ற வேண்டுமா? முணுக்கென்றால் செய்துவிட வேண்டுமா?
     நாளைக்கு நான் பழசானா, என்னையே மாத்திடுவேளா?
     போரும்….நீங்களும் உங்க பேச்சும்……அச்சுப் பிச்சுன்னு….
     அப்டித்தானே இருக்கு உங்க பேச்சு…..தொட்டதுக்கெல்லாம் எல்லாத்தையும் மாத்துறதுன்னா….அதுக்கு ஒரு வரைமுறையே இல்லாமப் போயிடுமாக்கும்….ஒரு பொருள் அதுக்கான முழு உபயோகத்தை அடைய வேண்டாமா? முக்கால் பங்காவது உழைக்க வேண்டாமா?  சட்டுச் சட்டுன்னு மாத்து, மாத்துன்னா? மாசா மாசம் எதாச்சும்னு மாத்திண்டே இருக்க வேண்டிதான்… வெட்டியா செலவு பண்ணிட்டேயிருக்க வேண்டிதான்…கடைசியா என்னையும் மாத்தி கதையை முடிச்சிடலாம்…    
ஏன்…என்னைக் கூட மாத்திக்கலாமே….ப்டாதுன்னிருக்கா?
இனிமே எங்க மாத்துறது? அதான் காலம் போயிடுத்தே….நீயும் நானும் புடவையும், வேஷ்டியும் மாத்திக்க வேண்டிதான்…அதான் சாத்தியம்….
பல சமயங்களில் பேச்சு படு தமாஷாகப் போகும்…இஷ்டத்துக்கு அடிச்சு விடுவார் சிவராமன். நகைச்சுவை உணர்வு எப்போதுமே அவருக்கு அதிகம். அது அவர் உடன் பிறந்தது. ஆனால் காயத்ரிக்கு அது துளியும் இல்லை…எப்போதும் சீரியஸ்தான்.
நீ இப்டி இருக்கிறதுனாலதான் ப்பீபி, ஷூகர்னு எல்லாமும் வேணுங்கிற அளவுக்கு இருக்கு உனக்கு…என்னை மாதிரி விட்டேத்தியா இருக்கப் பழகிக்கோ….இனிமே என்னத்தப் பழகுறது? கட்டையோட போனாத்தான் ஆச்சு….-இவரே சொல்லிக் கொண்டார்.
கழிவறைக்குள் நுழைந்து அந்தக் குழாயை இறுக்க மூடி விட்டு வந்தார். தண்ணி நின்றிருந்தது. இவர் கைக்கு நிற்கும் தண்ணீர் அவன் கைக்கு நிற்காதா? வயசுப் பையன் அதை அழுந்த மூட முடியாதா? செய்ய மாட்டார்கள். எல்லாவற்றையும் லைட்டாய்ப் பயன்படுத்தப் பழகியவர்கள். ஃபெதர் டச். அப்டித்…தொட்டாச்சுன்னா எல்லாமும் ஃபங்ஷன் பண்ணனும்.நீடிச்சிருக்க வேண்டாமா? அது கேட்கப்டாது.  எல்லாவற்றையும் யூஸ் அன்ட் த்ரோவுக்குப் பழகிப் போனவர்கள். இவர்களின் இந்தப் பழக்கத்தைப் பார்த்து, கம்பெனிக்காரன் பொருள் தயாரிக்கிறானா அல்லது அவனின் தயாரிப்பிற்கு ஏற்ப இவர்கள் மாறிக் கொண்டார்களா? தரமற்ற பொருட்களை விலை அதிகமாய் வாங்குவதுதானே ஃபேஷனாய் இருக்கிறது இப்போது! நாளைக்குத் தானும் அப்படித்தானோ?
இந்த முறை இவன் ஊருக்கு வந்திருப்பது இந்தக் குழாயை மாற்றிவிட்டுப் போவதற்குத்தான் என்கிற அளவுக்குக் குறிப்பாய்த் தோன்றியது இவருக்கு. வந்ததிலிருந்து அதையே குரங்குப் பிடியாய்ப் பிடித்துக் கொண்டிருக்கிறானே…! ஒன்றைத் தொட்டால் அதைச் சாதிக்காமல் விட மாட்டான். அப்படித்தான் அவன் தன் வேலையையும் பிடித்திருக்கிறான். என்னைத் தேர்வு செய்றது உங்களுக்குத்தான் பெருமை என்று நின்றான். இவ்வளவு சாலரி வேணும் என்று டிமான்ட் வைத்தான். வாங்கிக்கோ…ஆள் வந்தாப் போதும் என்றார்கள். எல்லாம் பெருமைதான். அந்தப் பெருமைகளுக்கு அப்பனையுமா இந்த ஆட்டு ஆட்டணும்?  தான் வருவதே மூணு நாலு நாளைக்கு. ஏதோ ஸ்மூத்தாக இருந்து விட்டுப் போவோம் என்றில்லாமல்…வயதான அப்பாவை எதற்கு சிரமப்படுத்திக் கொண்டு என்கிற  கரிசனம்  வேண்டாமா? ம்ம்ம்…அதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்களுக்கு ஏது? இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்…அவ்வளவுதான்….நோ சென்டிமென்ட்ஸ்….மிஞ்சினா இருக்கவோ இருக்கு விடுதிகள்….
இங்கதான் நல்ல சாப்பாடு இருக்கு, ரூம் இருக்கு, டி.வி. இருக்கு., கோயில் இருக்கு., பஜனை இருக்கு…இத்தனை பேர் துணைக்கு இருக்கா…என்ன கஷ்டம் உனக்கு…?
ஆனா நீ இல்லையே….! சொல்ல முடியுமா? – சிரிப்பான்கள். அப்பா…ப்ளேடு போடாத….சொல்றதக் கேளு…..நோ சென்டிமென்ட்ஸ்… எல்லாமும் பணம் என்கிற புள்ளியிலிருந்து பிரியும் கிளைகள்….!
நம்ம சிரமமெல்லாம் உணரத் தெரியாது பசங்களுக்கு…
அப்டீன்னா…நான் இதைச் சொல்லக் கூடாதாப்பா…? ஏம்ப்பா….குழாய் நிற்காம ஒழுகுது….அதை மாத்துன்னு சொன்னது ஒரு தப்பா? அப்டி ஒழுகிட்டிருக்கிறது உனக்கு அசிங்கமாத் தெரிலயா? யாராவது நம்ம வீட்டுக்கு வந்தாங்கன்னு வையி…என்ன நினைப்பாங்க…? என்னப்பா நீ இப்டி இருக்கே….?
ஏதோ இவர் ஒண்ணும் தெரியாத மண்டு போல் கேட்கிறான் அவன். எங்கே போய்ச் சொல்ல? நொந்துகொண்டார். ஆனால் ஒரு கணம் ஆடியும்தான் போனார்.
அவன் கேட்ட கேள்விகளில் தலை சுற்றியது இவருக்கு. உண்மையிலேயே தான் சரியாய்த்தான் இருக்கிறோமா என்று சந்தேகம்வேறு வந்து விட்டது. ஒரு வேளை இவன் சொல்கிறார்போல், தான் இந்தக் காலத்திற்கேற்றாற்போல், இவர்களுக்கேற்றாற்போல்  இன்னும் மாறவில்லையோ? இன்னும் பழைய பஞ்சாங்கமாய்த்தான் இருக்கிறோமோ?  திடீரென்று தான் அசடாகிவிட்டதுபோல் கூடத் தோன்றியது. முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ள நினைத்தார்.
அப்பா என் ஃப்ரென்டும் என் கூட வர்றான்…கொஞ்சம் டாய்லெட்டெல்லாம் க்ளீன் பண்ணி வைக்கணும்ப்பா…. – சொல்லியிருந்தான். அதுவும் நேரடியாய் அவரிடம். அதுதான் அன்றைய அதிசயம். பையன் சொல்லிட்டாண்டீ….பையன் சொல்லிட்டாண்டி…
உன் பையன் சொல்றாண்டி….அவன் நண்பனும் நம்ம வீட்டுக்கு வர்றானாம்…எல்லாம் சுத்தமா இருக்கணும்ங்கிறான்…. சொல்லிக் கொண்டே ஓட்டமும் நடையுமாய் எல்லாம் உற்சாகமாய்த்தான் செய்தார். இதுபற்றி அவன் அம்மாவிடம் சொல்லி, பிறகு ஏவலாய் விஷயம் தனக்கு வராமல், நேரடியாய்த் தன்னிடமே சொன்னானே அதுவே பெரிய பெருமை. விழுந்து விழுந்து ஒட்டடையெல்லாம் அடித்து, கக்கூஸ் கழுவி, உறார்பிக் போட்டு, ஃபினாயில் ஊற்றி மணக்க வைத்தார். ஓடோனில்லை வாங்கித் தொங்கவிட்டார். இப்போதுதான் பலரும் அவர்கள் வீட்டில் அவர்களே கழுவிக் கொள்வதுதானே…அதையெல்லாம் ஒன்றும் என்றுமே பெரிதாய் நினைத்துக் கொண்டதில்லை இவர். நம்ம வீட்டுக்கு நம்ம செய்றோம்…இதிலென்ன இருக்கு….இவரைப் பொறுத்தவரை அது சரி. ஆனாலும் அப்பாதானே செய்கிறார் ஒவ்வொரு முறையும்….இந்த முறை நாம் செய்வோமே என்று ஒரு நாள் கூட அவன் பக்கத்தில் வந்ததில்லை. அவளும்தான். கண்டுக்கவே மாட்டாள் எதையும்.
 சமையல் மட்டும் ஏதோ ஆண்டவன் புண்ணியத்தில் நடந்தேறுகிறது. இன்றுவரை அதற்கு பங்கம் வந்ததில்லை. அதுவும் பையன் வந்தால் ஷோக்குதான். இல்லையென்றால் ஜனதா சாப்பாடுதான். ஞாபகமிருக்கிறதா? ஒரு ரூபாய்க்குப் போட்டார்களே…! தட்டோடு கொண்டு வந்து பட்டென்று முன்னால் வைத்து விட்டு ஆள் மறைந்து போவானே…! நீயெல்லாம் என்னாத்துக்கு Nஉறாட்டலுக்கு வர்றே…! பார்வையே சொல்லுமே…!
அப்படி. வீடு என்றால் எல்லா வேலைகளையும் எல்லாரும் செய்தால்தானே ஆயிற்று என்ற கொள்கை உடையவர் இவர். வளர்ந்த விதம் அப்படி. அது எல்லாருக்கும் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.
இன்னைக்கு நீங்க சமையுங்களேன்…..நான் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்…..
ஓ யெஸ்…தாராளமா……என்றுவிட்டு காரியத்தில் இறங்கி விடுவார். எந்தச் சந்தேகமும் அவளிடம் கேட்க மாட்டார். சமையலறை ஷெல்ப்பில் ஒரு டைரி இருக்கும். ஏதாச்சும் என்றால் அதை ஒரு புரட்டு, புரட்டிக் கொள்வார். ஏகதேசம் அவள் ருசிக்கு ஈடாக அவர் சமையல் இருந்து விடும். என்ன, சற்று புளிப்பு, உப்பு, காரம் தூக்கலாக இருக்கும். அது அவளிடம் மட்டு. கேட்டால் இந்த வயசுக்கு இப்டித்தான் இருக்கணும் என்பாள். அவள் கைபாகத்திற்கே சாப்பிட்டுப் பழகிப் போனார் இவர். வெளியே எங்கேனும் கை நனைத்தாலும், உப்பும் உரைப்பும் அதிகமாய்த்தான் தோன்றுகிறது இவருக்கு. ஆத்தாடீ..நம்ம உடம்புக்கு இது ஆகாதே…! ஜாக்கிரதை உணர்வு வந்துவிடும்…! அதற்குப் பழக்கியவள் அவள்தான்.
ஆனாலும் அப்பாவுக்கு வயசாச்சு என்கிற நினைப்பில்லையே பையனுக்கு. இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்வது? (என்ன கொடுமை சார் இது!) எதில் போய் முட்டிக் கொள்வது? அன்று பள்ளியில் படித்தபோது எப்படி இருந்தானோ, இன்றும் அப்படியேதான் இருக்கிறான். கருக்கழியாமல். என்ன மெச்சூரிட்டி வந்துள்ளது?. வேலைக்குப் போய்விட்டால் எல்லாம் வந்து விட்டது என்று அர்த்தமா? உலக ஞானம் பிடிபட்டு விட்டது என்று பொருளா?  என்னமோ இவர்களும் தலையணை, தலையணையாய்ப் படிக்கிறார்கள். டிகிரி வாங்குகிறார்கள். அவனும் இந்தா பிடி என்று வளாகத்தை விட்டு வெளியேறும்போது வேலையைக் கொடுத்து, வாங்கிக்கோ என்று ஆயிரக் கணக்கில் அள்ளி விடுகிறான். எவனுக்கும் எதிலும் நிதானம் இருப்பதாய்த் தோன்றவில்லை. என்னவோ ஓட்டமாய் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். திடீரென்று காலில் தட்டியும் விடுகிறார்கள். குப்புற விழுகிறார்கள். ஆனால் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறார்கள்.
உட்காரும்போதே முப்பது, நாற்பது என்று தந்தால் பிறகு அங்கே பணத்திற்கு என்ன மதிப்பு இருக்கும்? முப்பத்து மூன்று வருஷம் சர்வீஸ் போட்டே முப்பத்தி ஐந்தைத்தான்  எட்டினார் இவர்.
இவ்வ்வ்ளவுதானாப்பா உனக்கு சம்பளம்? இவ்ளவுதானா?
அடப்பாவி…! இதுலதானடா உனக்கு கொள்ள கொள்ளையாப் பணம் கட்டி, இவ்வளவு படிக்க வச்சிருக்கேன்….இன்னிக்கு நீ தாம்தூம்னு குதிக்கிற இந்தப் பெரிய இந்தச் சம்பளத்துல லோன் வாங்கிக் கட்டி முடிச்சதுதானடா?  .இதுக்கு மேல உனக்கு என்னடா வேணும்? இதல்லாம் சாதனையாத் தெரிலயா உனக்கு? இன்னும் இத்தன லட்சம் சேவிங்ஸ் வச்சிருக்கனே…அதல்லாம் யாருக்கு? நானா கொண்டு போகப் போறேன்…எல்லாம் நீ அள்ளிவிடுறதுக்குதானடா? என்ன கேள்வி கேட்குறாம்பார் உம்பிள்ளை?
இவன்களுக்கு எடுத்த எடுப்பில் இப்படித்  தூக்கிக் கொடுத்தால் கேள்வி வராமல் என்ன செய்யும்?  என்னவோ வாங்குகிறார்கள். என்னவோ செலவு செய்கிறார்கள். பணம் வருவதும் தெரிவதில்லை. போவதும் தெரிவதில்லை. வாங்கும் நாற்பதில் பத்து மிஞ்சினால் அதிகம். அப்படி ஒருத்தனுக்கு என்னதான் செலவோ…? ரூம் வாடகை, சாப்பாடு, துணி மணி, அது இது என்று எப்படிப் போனாலும் பதினைஞ்சு, அட இருபதுன்னே வைப்போம்…அதுக்கு மேலயா ஒரு ஆளுக்கு செலவாகப்போகுது? இல்லைங்கிறானே….
அப்டி என்னத்தத்தான் செலவு பண்ணினே…சொல்லு கேட்போம்….
என்னப்பா நீ இதெல்லாம் கேட்டுட்டு….! கணக்கெல்லாம் சொல்லத் தெரியாதுப்பா….உன்னைமாதிரி அதெல்லாம் எழுதிட்டிருக்க முடியாது…
தன் அப்பா, தான் வாங்கிய நாற்பது ரூபாய்ச் சம்பளத்திற்கு, பைசா விடாமல் சாகும்வரை கணக்கு எழுதியது இவருக்கு நினைவு வந்தது. அந்த நோட்டை இன்னும் வைத்திருக்கிறார். காலணாவுக்கு மூக்குப்பொடி வாங்கியது கூட அந்தக் கணக்கில் வந்துவிடும். மைப்புட்டியில் தொட்டுத் தொட்டு எழுதிய கணக்கு காலத்தின் பெட்டகம்.
ஏதாச்சும் ஒரு அமௌன்ட் சேவ் பண்ணுப்பா….சேமிப்புங்கிறது ரொம்ப முக்கியம்…சிறுகச் சிறுகச் சேமிச்சாத்தான், நாளைக்கு, ஒரு அவசரத்துக்கு, முக்கியமான காரியத்துக்கு உதவுமாக்கும்….சேவ் பண்ணிப்பாரு…அப்பத் தெரியும் அதோட பெருமை…பேச்சோடு பேச்சாய் சொல்லத்தான் செய்தார்.
எங்க சேவ் பண்றது…ஷேவ்தான் பண்ணனும்….தாடி வளர்ந்து போச்சு…
கருத்தையும் மீறி சிரிப்புத்தான் வந்தது இவருக்கு. தன்னின் நகைச்சுவை உணர்வு வாசனை அவனுக்கும்…..தாடிக்கு நடுவில் சிரித்தான்.  
அப்படியில்லடா ராஜா….பணம் சேரச் சேர…இன்னும் இன்னும்னு அதைப் பெருக்கத்தான்டா தோணும்…அப்டித்தாம்ப்பா சேமிப்புங்கிற பழக்கம் வந்திச்சு….எல்லாத்தையும் தூள் தட்டிட்டு, வெறுங்கையை வீசிட்டு நிக்கிறதுல என்னடா பெருமை? சேவிங்க்ஸ்ங்கிறது ஒவ்வொரு மனுஷனுக்கும் கட்டாயம் இருக்க வேண்டிய நல்ல பழக்கம்ப்பா…..நான் சொல்றதை நீ ஒரு வாட்டி கேட்டுத்தான் பாரேன்…செய்துதான் பாரேன்…அப்புறம் நீயே சொல்லுவ…..
என்ன தோன்றியதோ…சரிப்பா….என்றான் அந்த முறை. இவருக்கா உச்சந்தலைக்கு ஏறிவிட்டது பெருமை. சரின்னுட்டாண்டீ….உம் பிள்ளை…சரின்னுட்டாண்டீ…பெருமை தாளவில்லை. அவன் அனுப்பும் பத்தாயிரத்தை அப்படியே அவன் பெயருக்கு ஒரு ஆர்.டி. யைத்  துவக்கி  போட ஆரம்பித்தார். அது இன்று ஒன்றரை லட்சத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது….
பார்த்தியா…இதையும் செலவு செய்திருந்தேன்னா செலவோட செலவா அத்தனையும் போய்ச் சேர்ந்திருக்கும்… அதுல என்ன இருக்கு பெருமை? மனுஷன்னா அவன் திட்டமிடணும்…அப்பத்தான் வாழ்க்கைங்கிறது ஒரு வட்டத்துக்குள்ள வரும்…நாம செய்ற காரியங்கள் எல்லாத்துக்கும் ஒரு அர்த்தம் இருக்கணும்….நாலு பேர் பெருமையாப் பேசற மாதிரி இருக்கப் பழகிக்கணும்ப்பா….என்னவோ வந்தோம், போனோம்னு இருக்கிறதுல என்னடா கண்ணா இருக்கு? இப்போ இந்த ஆர்.டி. முடிஞ்சவுடனே இதை ஒரு எஃப்.டி.யா போடப் போறேன். அதுக்குத் தனியா வட்டி சேர்ந்திட்டிருக்கும். புதுசா ஒரு ஆர்.டி. துவக்கி போட்டுண்டு வர்றோம்னு வச்சிக்கோ…அதுவும் தனியா சேர்ந்திட்டிருக்கும்…ஓ.கே.யா….? நீ ஒண்ணுத்துக்கும் கவலைப் படாதே…அப்பா இருக்கேன் எல்லாத்துக்கும்…எல்லாம் நான் சொல்லித் தரேன்…..உனக்கு ஒரு சரியான வாழ்க்கையை அமைச்சு, நீ ஒரு நல்ல லைஃப் லீட் பண்ற மாதிரி செய்திடுவோம்.  இல்லாமே அப்பா கண்ணை மூட மாட்டேன், போதுமா? – எல்லாவற்றையும் இவராகவே சொல்லிக் கொண்டார் என்னவோ அத்தனைக்கும் இவர் கையை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல. எதுவோ சொல்றார் அப்பா…போட்டும்….என்று  தலையைக் குனிந்து கொண்டு எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டான் சதீஷ்.. லேசாகச் சிரித்துக் கொண்டானோ?
சிரிச்சா சிரிச்சிண்டு போறான்…நம்ம பையன்தானே….அவனை நல்லா வச்சுப் பார்க்கிறதுதானே நம்ம கடமை.அதுலதானே நமக்கு சந்தோஷம். அதை ஒழுங்கா செய்து முடிக்கணும்…அவ்வளவுதான்….
தோ புதிய குழாய் வாங்கப் போய்க் கொண்டிருக்கிறார் சிவராமன். அப்படியே ஒரு ப்ளம்பரையும் பார்த்துச் சொல்லி வர வேண்டும். முடிந்தால் கையோடு கூட்டி வந்து விட வேண்டும். ஏற்கனவே போர்த் தண்ணி நேரடியாகப் பிடிக்கும் குழாய் நல்ல நிலையில் இல்லை. அதில் தண்ணீரே வரமாட்டேனென்கிறது. லைனையே சரிபண்ண வேண்டும்.சட்டென்றுதான் அது ஞாபகம் வந்தது அவருக்கு. கையோடு அதையும் மாற்றி விட வேண்டியதுதான். ஒரே செலவாய்ப் போகும்.
இந்த முறை பையன் ஊருக்கு வந்திருப்பது ஒரு வார விடுமுறையில். அந்த ஏழு நாட்களுக்கும் குழாயை ஒழுக விட முடியாது…எப்போ உள்ளே போவான், எப்போ வருவான்னு பார்த்துண்டிருந்து, தான் போய்ப் போய் கெட்டியாத் திருகி நிறுத்திண்டிருக்க முடியாது.  தன் பெருமை ஒழுகிப் போகும். நினைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார் சிவராமன். கைபேசி அலறியது. எடுத்து இணுக்கினார். பையன்தான் பேசினான்.
அப்பா…ஞாயிறன்னிக்கு எனக்கு தட்கல் போடணும்…தேர்டு ஏசி கூடப் போட்டுடுப்பா…..கிடைச்சிடுச்சின்னா பஸ் டிக்கெட்டை வழக்கம்போலக்  கான்சல் பண்ணிடலாம்……மறந்திடாதே…..எங்க நீ மறந்திடுவியோன்னு அட்வான்சா சொல்லி வைக்கிறேன்….ஓ.கே.யா? கண்டிப்பா போட்ருப்பா….
சரிப்பா என்று ஃபோனைக் கட் பண்ணினார் இவர். வீட்டில் வந்து சொன்னால் போதாதா? தோணும்போதே அப்பாவுக்கு ஆர்டர் போடுகிறான் பையன். நேரில் சொல்லத் தயக்கமான பலவற்றிற்கு ஃபோன்தானே வசதி.  முதல் பத்து ஆளுக்குள் க்யூவில் நிற்க அப்போதே அவர் மனம் திட்டமிட ஆரம்பித்தது.
இவன்களுக்கு டிக்கெட் போடவும், கான்சல் செய்யவும்னே ஒரு ஆளு தனியா வேணும்……காசுக்கே மரியாதை இல்லாமப் போச்சு….எதுலயாச்சும் சுட்டுக்கிட்டாத்தான் இவனுங்களுக்குப் புத்தி வரும் போல்ருக்கு….ரயில்வேக்காரனுக்கும் பஸ்காரனுக்கும் காசு கொடுத்து மாளல….போடவும், கான்சல் பண்ணவும்…காச இப்டி அள்ளி எறைக்கிறான்களே…எந்த நேரமும் வெளில போன்னு சொல்ற உத்தியோகத்துல இருந்துக்கிட்டே இந்தப் பாடு படுத்துனா…இவனுங்கள என்னன்னு சொல்றது….எல்லாம் காலக்கிரகம்…
மகனை நினைத்து ஒரு கணம் அதீத பயமாகவும் இருந்தது சிவராமனுக்கு.  .
                           -----------------------------------------------

                                
                         
             
                                 
                               

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...