இன்று (22.02.2014) ராகப்ரியாவில் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் இசைக் கச்சேரி மனதை பக்தி லயத்தில் மூழ்க வைத்தது. நெய்வேலி சந்தானகோபாலன் ஆரம்ப காலங்களில் தன் தாயிடமும், பின்னர் சி.எஸ்.அனந்தராமபாகவதரிடமும், அதற்குப்பின் முழுமையாக மதுரை டி.என்.சேஷகோபாலனிடமும் இசையைக் கற்றுக் கொண்டவர். அவருக்கென்று ஒரு ஸ்டான்டர்டு உண்டு. மனத்திருப்தியோடு, அர்ப்பணிப்போடு பாடுகையில் பக்திப் பிரவாகம் ரசிகர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது என்பதும், அவர்களையும் பக்தி லயத்தில் மெய் மறக்கச் செய்து விடுகிறது என்பதுவும் இவரது கச்சேரியில் பலமுறை உணர்ந்த உண்மை.
இன்றைய கச்சேரி திரு.தேவேந்திரபூபதி, வணிக வரி அலுவலரின் தந்தையாரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டது. இசையில் ஈடுபாடு உள்ள நல்ல ரசிகர். வருடத்திற்கு மூன்று நான்கு முறைகள் அவரது ஏற்பாட்டில் நல்ல பாடகர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் அன்போடு முறையிட்டுக் கொண்டு, தமிழ்ப் பாடல்களாய் பாடச் செய்து கச்சேரியை சிறப்புச் செய்வது இவரது தொண்டு.
இன்றைய கச்சேரியின் சிறப்பே தமிழ்ப்பாடல்களாய்த் தேர்வு செய்து பாடியது என்பதுதான். ஒவ்வொரு பாடலின் சிறப்பையும் முன்னுரையாக விளக்கி பின்பு பாடலைப் பாடியது, ரசிக்க ஏதுவாகவும், அதன் மகிமையையும் உணரத்தக்கதாகச் செய்தது மறக்க முடியாத ஒன்று.
22 பிப்ரவரி 2014
நெய்வேலி சந்தான கோபாலனின் தமிழ் இசைக் கச்சேரி
21 பிப்ரவரி 2014
“காட்சிப்பிழை” – தமி்ழ் சினிமா ஆய்விதழ் – பிப்ரவரி 2014 ல் எனது நடிகர் டி.எஸ்.துரைராஜ்பற்றிய கட்டுரை
ஊங்ங்ங்….ஓஓஓஓஓ……ஊஊஊஊஊ….மேஏஏஏஏஏஏஏஏஏ….என்று ராத்திரி வயிறு முட்டத் தின்ன அசதியிலும், கச்சேரி அலைச்சலூடான தாளமுடியாத உடல் சோர்விலும், காலையும், கையையும் உதைத்துக் கொண்டு வேகமாய்ப் புரண்டு சோம்பல் முறிப்பார். ஊளையிடுவதுபோலான அவர் குரலுக்கேயுரிய இயல்பான நடிப்பு அவ்வளவு அபாரமாய் இருக்கும். நான் இதைச் சொல்லும்போது, சற்றே கற்பனையை ஓடவிட்டு அந்தக் காட்சியை ஒரு முறை மனக்கண் முன்னால் கொண்டு வந்து பாருங்கள். நினைக்கும்போதே சிரிப்புப் பொத்துக் கொண்டு வரவில்லையானால் நீங்கள் எந்த ரசனைக்கும் லாயக்கற்றவர் என்றுதான் பொருள். உங்களிடம் ரசனை என்பது மருந்துக்குக் கூட இல்லை என்று சொல்வேன் நான். இத்தனை ஆழமான ரசனையை ஆண்டவன் எனக்குக் கொடுத்திருக்கிறானே என்று அந்த குணமுள்ளவர்கள் தங்களை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளலாம். அதுதான் உண்மை. இதை ஏன் இத்தனை வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் கருணாநிதியின் தனித்தன்மையை உணர்ந்த ரசிகனால்தான் இதை அனுபவித்து ரசிக்க முடியும் என்பதால்தான். பொத்தாம் பொதுவாக, கூட்டத்தோடு கூட்டமாகச் சிரித்து வைக்கும் சராசரி ரசிகனுக்கு இந்தத் தனித்துவமெல்லாம் புலப்படாது. இம்மாதிரி ஒவ்வொருவரையும் பகுத்து உணர்ந்திருந்ததனால்தான் அந்தக்கால இயக்குநர்களும் அவர்களுக்கேற்ற காட்சிகளை ரசித்துப் புகுத்தினார்கள். தங்களின் எதிர்பார்ப்புக்கும் மேலே செய்தபோது அகமகிழ்ந்தார்கள்.
16 பிப்ரவரி 2014
“விடுதலை”-சிறுகதை-தினமணிகதிர் (16.02.2014) ல் வெளிவந்தது.
அந்தச் சத்தம் மீண்டும் இவனைச் சங்கடப் படுத்தியது. பெரும்பாலும் நினைவிலேயே இருந்து கொண்டிருக்கும் விஷயம். அனுதினமும் கண்கொண்டு பார்க்கும் விஷயம். மனதை இன்றுவரை விடாமல் தொந்தரவு செய்யும் விஷயம். வாழ்க்கையில் சிலவற்றை அப்படிச் சட்டென ஒதுக்கிவிட முடிவதில்லை. அலுவலகப் பயணம் முடித்து அப்பொழுதுதான் திரும்பியிருந்தான். வீட்டுக்கு வந்தவுடனேயே வந்து ஒட்டிக் கொண்டுவிட்டது.
இப்டிப் படிலெல்லாம் அசிங்கப்படுத்தி வச்சா என்ன செய்றது? உங்க அப்பாவக் கொண்டு ரோட்டுல விடுங்கோ….என்னால கூட்டி அள்ள முடியாது தோட்டி மாதிரி….வீட்டுக்குள்ளயேன்னு எல்லாமும் ஆயிப்போச்சு….
கக்கூஸ்ல விடுங்கோன்னு சொல்லு…ரோட்டுல விடுங்கிறியே? அப்டியா பேசுறது? அடக்க முடியாமப் “போயிருப்பார், பாவம்…
அதுக்காக? போய் முடியட்டும்னு பார்த்துண்டிருக்கச் சொல்றேளா? இங்க வச்சு ஏன் அசிங்கம் பண்றார்….ஒரேயடியா அங்க போய் இருக்க வேண்டிதானே….
அடக்க முடியாம வந்திருக்கும்டி…அதுக்கு அவர் என்ன பண்ணுவார்….தெரிஞ்சு செய்வாரா? முடிஞ்சாத்தான் நகர்ந்திடுவாரே…?
முடிலன்னா? இருக்கிற எடத்துலயேவா? வாய் திறந்து சொல்ல மாட்டாளோ?
நாந்தான் சொல்றேனே…வர்றதே தெரியாமப் போயிடும்டி. அதெல்லாம் நமக்கும் வயசானாத்தான் தெரியும்…முதுமை எல்லாருக்கும் பொது. அத மனசுல வச்சிக்கோ…
அப்ப நீங்க அள்ளிப் போடுங்கோ….
தினமும் நாந்தானே போட்டுண்டிருக்கேன். உன்னைச் சொல்ல முடியுமா? என்னவோ புதுசாச் சொல்றே? நீ எங்களுக்குப் பிண்டம் பண்ணிப் போடறதே பெரிசு…இதுல இத வேறே நான் சொல்லிட்டாலும்…..
இதற்கு என்ன பதில் வந்தது என்று காதைக் கூர் தீட்டிக் கொண்டான் ரமணன். எந்தச் சத்தமும் இல்லை. எதற்கும் ஒரு எல்லை உண்டுதானே…? இன்று காலைக் காட்சி அவ்வளவுதான் போலும்…ஆனாலும் வெறும் பொழுதுபோக்கு அல்ல இது…வேதனையான சமாச்சாரம்.
தினமும் இம்மாதிரி அந்தப் பெரியவரை முன் வைத்து எழும் வாய்ச் சண்டைகள். கை ஓங்குதல் என்பது இல்லை. அது அநாகரீகம் என்கிற உணர்வு இருக்கும் குடும்பம். மனிதப் பிரயத்தனங்கள் சோர்வுறும் போது எழும் புகைச்சல்கள். வெட்டிப் பேச்சுக்கள்.
வாசல் பக்கம் போய்ப் பார்க்க மனம் பரபரத்தது.
காபியைக் குடிச்சிட்டுப் போங்கோ…அதுக்குள்ளே அங்க என்ன அவசரம்? என்றவாறே வந்தாள் சுமதி. கொடுப்பதிலும் ஒரு அதிகாரம். உரிமை. வீட்டு வேலைகள் முழுமையாக அவர்கள் கையில் இருக்கும்போது, இந்த எடுப்பு கூட இல்லாமல் இருந்தால் எப்படி?
காபியை வாங்கிக் கொண்டு திண்ணையை நோக்கி நகர்ந்தேன். நமக்கு நம் அனுபவங்களை விட அடுத்தவன் பாடுகளைப் பார்ப்பதில் ஸ்வாரஸ்யம் அதிகம். ஒன்றுமில்லாததற்கெல்லாம் ரோட்டில் கூட்டம் கூடுவதைப் பார்த்ததில்லையா? மனித இயற்கையே இப்படித்தானோ? எதிர் வீட்டில் நடப்பவற்றை அத்தனை சுலபமாய்த் தவிர்த்து விட முடியுமா? வேண்டாம் என்றாலும், காதிலும், பார்வையிலும் வந்தும், பட்டும் தொலைக்கத்தானே செய்கிறது. ஆனால் ஒன்று. இது அப்படித் தொலைக்கும் விஷயமல்ல. மனசு இரங்கும் விஷயம். ஏதாவது செய்யணுமே…..! மனசு அரிக்கத்தான் செய்கிறது.
சற்றே இடப் பக்கமாக எதிரே திரும்பும் தெருவின் உயரமான அந்தக் காங்க்ரீட் பாலத்தின் நட்ட நடுவில் குத்திட்டு உட்கார்ந்திருந்தார் அந்தப் பெரியவர். தொண்ணூறு தொட்டிருப்பார், நிச்சயம். வேட்டியைச் சரியாக இழுத்துவிட்டுக் கொள்ளவில்லை. கீழ்ப்பகுதி உறுப்பு தொங்கிய நோக்கில் தரையில் இடித்துக் கொண்டிருந்தது. வாயிலிருந்து எச்சிலும், கோழையுமாக இழையாய் வழிந்து கொண்டிருந்தது. மார்புக் கூடு இழுபட்டுக் கொண்டிருந்தது. கலங்கி மங்கிப் போன கண்கள். அதற்குள் அங்கே எப்படி வந்தார்? பக்கத்து ஃப்ளாட்டின் மாடியை நோக்கினேன். ஃபஸ்ட் ஃப்ளோர்தானே அவர் வீடு? பையனே தூக்கிக் கொண்டு வந்து விட்டிருப்பானோ? கத்திக் குடியைக் கெடுப்பாரே…மனுஷன்… முடியாதே…மாடிப் படியில் வெளிக்கிருந்த ஆளுக்கு அலம்பி விட்டார்களா? இல்லை அப்படியே கொண்டு வந்து போட்டு விட்டார்களா? அவரே நகர்ந்து நகர்ந்து வந்து சேர்ந்து விட்டாரோ?
அன்றொரு நாள் வெளி வராண்டாவில் இருக்கும் குழாயைத் திருகி, தன்னைத் திருப்பிக்கொண்டு, கை விட்டு அவர் அலம்பிக் கொண்டிருக்க, அந்த நேரம் பார்த்து மாடிப் பெண்மணிகள் அங்கே வர, என்ன ஒரு அமர்க்களம்?
அநாச்சாரம்…அநாச்சாரம்….எப்டித்தான் இங்க குடியிருக்கிறதோ தெரில…என்ன கண்றாவி இது?
கொஞ்ச நேரத்தில் வாளியில் தண்ணீரைப் பிடித்து, பெருக்குமாரைக் கொண்டு அவர் பையன் கூட்டிச் சுத்தம் செய்வதைப் பார்த்தேன்.
வெறுமே அலம்பினாப் போறாது…குழந்தைகள் வெளையாடுற எடம்.. டெட்டால் விட்டுக் கழுவி சுத்தம் பண்ணுங்க… இன்ஃபெக் ஷன் ஆயிடும்...அந்த வெராண்டா மொத்தத்தையும், சொன்ன இடம், சொல்லாத இடம் என்று க்ளீன் பண்ணினார் அவர் பையன். அருமை, அருமை என்றிருந்தது. இது என் ட்யூட்டி. அதனால செய்றேன் என்ற மனப்பூர்வமான அர்ப்பணிப்பு.
உங்க ஒருத்தருக்காக நாங்க அத்தனை பேரும் இந்த ஃப்ளாட்டைக் காலி பண்ணிட்டு ஓட வேண்டிதான் போலிருக்கு….வாடகைக்குன்னாலும், இந்த விஷயம் தெரிஞ்சா எவனும் வரமாட்டான்….காசையும் கொடுத்திட்டு, கஷ்டத்தையும் ஏன் வாங்கிக்கணும்னு…? எதாவது சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க சார்…இல்லன்னா அடுத்த மீட்டிங்ல நாங்க ஒரு முடிவு எடுக்க வேண்டிர்க்கும்…பிறகு நீங்க வருத்தப்பட்டுப் புண்ணியமில்லை…
சொல்பவர்கள் எல்லாருடைய பேச்சையும் தலையைக் குனிந்து வாங்கிக் கொள்வார் கணபதி. ஒரு வார்த்தை பதில் பேச மாட்டார். ஒரு வேளை அவர் அப்படி மௌனியாய் இருந்து கழிப்பதே அவர்களுக்கு இவர் மேல் ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தி விட்டிருக்கலாம். பச்சாதாபமாய் உணரலாம். சொன்னார்களே ஒழிய இன்றுவரை ஒன்றும் செய்யவில்லை. அதுவே பெரிய மனித நேயம்தான். அந்தப் பாபம் நமக்கெதுக்கு என்று கூட….. பூனைக்கு யாராவது மணி கட்டட்டும் என்றும் இருக்கலாம். சொந்த வீட்டில் குடியிருக்கும் கணபதி சாரின் பாடு இப்படி. தனி வீடாய் இருந்தால் யார் கேட்கப் போகிறார்கள். மனதில் பரிதாபப்படுவார்கள். அத்தோடு சரி.
வீட்டுக்கு வீடு வாசல்படி. இப்போ எங்கே தனி வீடு? அசோசியேஷன் கூட்டங்கள் வழக்கம்போல் நடந்து கொண்டுதான் இருந்தன. கூட்டம் நடக்கும் அன்று கரெக்டாக ஆப்ஸென்ட் ஆகி விடுவார் கணபதி. அன்று பார்த்து நிச்சயம் லேட்டாகத்தான் வீடு வந்து சேருவார். அதற்கு முதல் நாளும் அப்படி ஆக்கிக் கொள்வார். இதற்கென்று லேட்டாய் வருவதாய் யாரும் சந்தேகப்பட்டு விடக் கூடாதே. இயல்பாய்த் தெரிய வேண்டுமே…! போய் உட்கார்ந்தால் நிச்சயம் பிரச்னை வெடிக்கும். ஆதரவாய் யாரும் பேச மாட்டார்கள். மனமிருந்தாலும் மார்க்கமிருக்காது. செக்ரட்ரி பஞ்சாபகேசன்தான் சற்றுக் கெடுபிடி. என்னவோவொரு விதத்தில் தள்ளிப் போய்க்கொண்டிருந்தது விஷயம். அவ்வளவுதான். ஏதாச்சும் செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால் நாறிப் போகும். ஏற்கனவே நாறிக்கொண்டுதானே இருக்கிறது. தவியாய்த் தவித்தார் கணபதி. ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. மனசு கேட்டால்தானே…!
அவர் ஒய்ஃப்கிட்டயே என்ன வாங்கு வாங்குறார் தெரியுமா? பிள்ளப்பூச்சிய்யா… பாவப்பட்ட மனுஷன்….அப்பாவி….அது தெரிஞ்சிதான் அந்தாளும் அவரை இந்தப் பாடு படுத்துறார் போலிருக்கு….நல்லாச் சொல்றதுன்னா அப்பன் புள்ள பாசம் ரெண்டு பேருக்கும் ரொம்ப ஜாஸ்தி….ஆனா அது வெளில தெரியாது….அவ்வளவுதான்…எங்கப்பாவும் இப்டித்தான் இருந்தார். ஆனா அவுருக்கு கெத்து ஜாஸ்தி. இவ்வளவு நகர முடியாமப் போகாட்டாலும், தேய்ச்சு தேய்ச்சு நகர்ந்து டாய்லெட்டுக்குப் போயிடுவார். ரொம்பக் கூச்சம். ஏதோ ஜந்து மாதிரி இருக்கிறதா ஃபீல் பண்ணிட்டார்…அவரே ஃபோன் பண்ணி ஆட்களை வரவழைச்சு வேனைக் கொண்டு வரச் சொல்லி, தன் ஜாமான்களையெல்லாம் தானே எடுத்து வச்சிண்டு, தயாரா நின்னு கிளம்பிப் போயிட்டார். பக்கத்து ஆத்துலகூட யார்கிட்டயும் சொல்லலை…வீட்டைப் பூட்டி வெளில செக்யூரிட்டிகிட்டக் கொடுத்திட்டு, வந்தாச் சொல்லுன்னு ரெண்டே வார்த்தை… …அவர் ஒரு தனி காரெக்டர்…ராத்திரி அவரே ஃபோன் பண்றார்…இப்படியாக இங்க வந்து செட்டிலாயிட்டேன்னு….எல்லாருக்கும் அப்டி அமையுமா? இல்ல எல்லாருந்தான் அப்டி இருப்பாளா? அப்டி ஒருத்தர்னா இப்டி நாலு பேர்…என்ன பண்றது கஷ்டந்தான்….காசும், பணமும் தவழ்ற எடத்துல ஒரு மாதிரி, அது இல்லாத எடத்துல வேறேமாதிரி….தட்டுப்பாடா இருக்கிற எடத்துல இன்னொரு மாதிரி…ஆனா எல்லா எடத்துலயும் மனசுன்னு ஒண்ணு இருக்கே….அதுதான் மனுஷாளக் காப்பாத்துறதும், பொரட்டிப் போடுறதும்….அந்த மனசு மட்டும் எல்லாத்தையும் சகிச்சிண்டுதுன்னு வச்சிக்குங்கோ…அப்புறம் எதுவும் முன்னால நிக்க முடியாது…
போன மீட்டிங் நடந்த சமயம், முடிந்திருக்கும் என்ற நினைப்பில் சற்றுச் சீக்கிரம் வந்துவிட்டார் கணபதி. பைய இவர் வீட்டுக்குள் பூனையாய் நுழைந்து, சார்…என்றுகொண்டே உள்ளே வந்தவரை எப்படி வாயிலிலேயே நிறுத்துவது? இதற்குத்தான் என்று அவர் நோக்குப் புரியும்தான். வந்தவருக்குப் பேச ஒன்றும் இல்லாததே சொன்னது ஒளிந்து கொள்ளத்தான் என்று. காபியைக் கொண்டு வந்து நீட்ட,
ஆஉறா…அருமை…அற்புதம்….உங்காத்துக் காபியோட மஉறிமையே தனி…என்று புளகாங்கிதம் அடைந்தார். அரை மணியாவது போக்க வேண்டுமே…!
நாங்க பாலுக்குத் தண்ணியே விடறதில்லை மாமா என்றாள் என் பாரியாள்.
இப்போ அதை அவர் கேட்டாரா…? எதுக்கு இந்த வெட்டிப் பெருமை? என்றேன் நான்.
இருக்கட்டும் சார்…பொம்மனாட்டிகள்னா அப்படித்தான்…எங்காத்துலயும் ஒண்ணு இருக்கே….தலைல கொம்பு முளைக்காத குறைதான் ….தெனமும் தாடகை வதம்னா நடந்துண்டிருக்கு…அவ மத்தவாள துவம்சம் பண்ணின்டிருக்கா…அதச் சொல்றேன்….
எல்லா வீட்லயும் உள்ளதுதானே… என்றேன் நான் யதார்த்தமாக.
அப்டிச் சொல்லாதீங்கோ…எங்காத்துக்காரி இருக்காளே…அவளோட கீர்த்தி சொல்லி மாளாது. பிராப்தம், அனுபவிச்சிண்டிருக்கேன் நான். அவ்வளவுதான்…எங்கப்பாவைக் கரை சேர்க்கணும்…அதுக்காகப் பல்லைக் கடிச்சிண்டிருக்கேன்….பகவான் என்னைக்குக் கருணை வைக்கிறாரோ அன்னைக்குத்தான்….
ஆனாலும் உங்களுக்குப் பொறுமையும், பொறுப்புணர்வும் ஜாஸ்தி…என்னாலெல்லாம் இந்த அளவு இருக்க முடியாது….
வேறென்ன மாமா பண்ணச் சொல்றேள்….அவளை ஆத்த விட்டு வெரட்ட முடியுமா? எங்கப்பாதானே பண்ணி வச்சார்…சொந்தத்துல வேண்டாம் வேண்டாம்னு கதறினேன். காதுலயே வாங்கலையே…இன்னைக்கு அவரும் சேர்ந்து அனுபவிக்கிறார். காலத்துல விலைபோகாத தனக்கு வாழ்வு கொடுத்த தெய்வம்ங்கிற,தெய்வமென்ன மனுஷன்ங்கிற நெனப்பு வேண்டாம்? ஆனாலும் அவ பேசற பேச்சுக்களும், சொல்ற வார்த்தைகளும் அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. பொறுத்துண்டிருக்கோம் ரெண்டு பேரும். அவ பொங்கிப் போடுறதைத்தானே அன்றாடம் கொட்டிக்க வேண்டிர்க்கு…ஒரு துளி விஷம் வச்சுக் கொடுத்துருடி…ரெண்டு பேரும் போய்ச் சேர்ந்திடுறோம்னு எத்தனையோதரம் சொல்லியாச்சு…அதுக்கும் வேளை வரும், செய்றேங்கிறா….என்ன திமிருங்கறேள்… அந்த நாக்குல நர்த்தனம் ஆடுற வார்த்தைகளப் பார்த்தேள்னா….பக்கத்து வீடெல்லாம் பொத்திண்டு சிரிக்கிறா…
கொட்டித் தீர்த்த திருப்தி அவருக்கு. மேலும் புலம்பிக் கொண்டேதான் போய்ச் சேர்ந்தார் அன்று.
உண்மையில் சொல்லப்போனால் நான் அங்கு குடி போயிருக்க வேண்டிய ஆள்தான். தற்போதைய இந்த வீட்டைக் கட்டும் முன்பு, ரெடியாகிவிட்ட அந்த ஃப்ளாட்டில்தான் முதலில் ஒரு இடம் வாங்க எண்ணினேன். அப்போது அது வெறும் ஏழு லட்சம்தான். இன்றைய அதன் மதிப்பு நாற்பது, ஐம்பது தேறும். எதிரே குடியிருந்தமேனிக்கு இங்கே கட்டட வேலைகளைக் கவனிக்கலாம் என்பது என் எண்ணம். எண்ணமெல்லாம் மணமாய்த்தான் இருந்தது. யாரிடம் இருக்கு ஐவேஜூ? வெளி லோனும், அரசுக் கடனும் வாங்கி ரெண்டையும் சமாளிக்க முடியாது என்று விட்டாயிற்று.
முதல் தளத்தில் ஒரு வீட்டை நான் வாங்கியிருந்தேனென்றால், இன்று நான் இங்குதான் குடியிருப்பேன் என்றாலும், கொஞ்ச காலத்திற்கேனும் கணபதி சாரின் அவஸ்தைகளை அன்றாடம் நானும் அனுபவித்திருப்பேனே…! குறைந்த பட்சம் பார்த்துப் பார்த்தேனும் மனம் புழுங்கியிருக்க மாட்டேனா? என்னவெல்லாம் சண்டை வந்திருக்குமோ? எப்படியெல்லாம் மனஸ்தாபம் கொண்டிருப்போமோ?,
எதிரே அவர் இருமும் சத்தம். உடம்பே நடுங்கிக் குலுங்க, அடைத்திருந்த கபம் வெளிறிப் பாய, மூக்கிலும், வாயிலுமாகச் சளி பீறிட்டுத் தெறித்தது. எல்லாச் சத்தத்தோடும் டர்ர்ர்….டர்ர்ர்ர்…டர்ர்ர்ர்…. என்று முக்கி இரும இருமக் கூடவே வரும் அடக்க முடியாத அபான வாயுவும் கிறீச்சிட்டு வெளியேறிக் கொண்டிருக்க, அந்தப் பகுதியே அலறித் தவித்துக் கொண்டிருந்தது.. அந்தந்தப் பக்கத்து வீடுகளின் ஜன்னல்களில் சுளிக்கும் முகங்கள். பட் பட் என்று அடைக்கப்படும் ஜன்னல்கள். பரிதாபப்படுவோரே ஏனிப்படிக் குறைந்து போனார்கள்?
இன்னும் கொஞ்சம் போனால் ஆட்டோவும், டூ வீலர்களும், மினி வேன்களும் அமர்க்களப்படும். இருக்கும் அவசரத்தில், களேபரத்தில், யாருய்யா இது சாவுக் கிராக்கி….என்று பதவாகமாய் வந்து, ஆளைத் தூக்கி மூலையிலா உட்கார்த்தப் போகிறார்கள்? ஒரே இடி….ஆள் சட்னிதான்….அந்த அளவுக்கான காலை நேர வேகமும், பரபரப்பும்தான்….காலை மட்டுமென்ன, எந்நேரமும் அங்கே அப்படித்தான். சந்து, பொந்து எங்கிருந்தும் வாகனங்கள் உதிக்கலாம்.
எல்லாக் காலங்களிலும் ரோடு போட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அல்லது போட்ட ரோடைப் பிளந்துகட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதாவது ஒன்று என்று சொல்லி அங்கங்கே தோண்டிப் போட்டு, மேடும் பள்ளமுமாக….யாராவது தவறி விழுந்து செத்தால் ஒழிய விடிவு பிறப்பதில்லை. அப்படிப்பட்ட இடத்தில் இந்த மனுஷன் இத்தனை அசால்ட்டாய் உட்கார்ந்திருக்கிறாரே…! நடு ரோடு என்பது தெரியவில்லையா என்ன? அல்லது எவனாவது இடிச்சித் தள்ளட்டும், செத்து ஒழிவோம் என்று வெறுத்து விட்டாரா?
மாமா…மாமா…கொஞ்சம் ஓரமாய் உட்கார்ந்துக்கோங்க…நான் இங்கிருந்து ஆதங்கமாய்க் கத்திய வேளைகளில், ஒரு கூரிய பார்வை…
பொத்திட்டுக் கெடடா… என்கிறாரோ?
உட்கார்த்திய இடத்திலிருந்து அவரால் நகரக் கூட முடியாது என்று தெரிகையில் எப்படி இதைச் சொல்கிறோம்…? அப்படியானால் உட்கார்த்தியவர்கள் நடு ரோட்டிலா கொண்டு வந்து போட்டார்கள்? கணபதியா அப்படி வந்து போட்டிருப்பார்? யார் செய்தது இதை…?
ரொம்பவும் கஷ்டப்பட்டு ஒதுக்கிக் கொண்டு போனார்கள் வண்டியை. சிலர் சடனாக ரூட்டை மாற்றிக் கொண்டார்கள். மூசு மூசுவென்று இழுத்துக் கொண்டிருந்தது அவருக்கு. அந்த ஜீவன் படும்பாடு சொல்லி மாளாது.
டேய்…என்னை விடுறா…என்னை விடுறா….நானாப் போய்ப்பேண்டா…. தூக்கி வெளில வீசறியா? நீ உருப்படாமப் போயிடுவ…வௌங்க மாட்டே….
பேசாம இருங்கோப்பா….காலம்பற நேரம்…எல்லா வீட்லயும் வேலை நடக்கணும்…எல்லாரும் ஆபீஸ் போகணும்…உங்க சத்தமும், நீங்க பண்ற அசிங்கமும் பெரிய ரோதனையாப் போச்சு….சகிக்கமுடில… பத்து பத்தரை வரைக்கும் இப்டி வெளில இருங்கோ…ஒண்ணும் குறைஞ்சு போயிடாது…மாடிப்படில ஒண்ணுக்குப் போயி வச்சிருக்கேள். அது வழிஞ்சி நடக்கிற எடமெல்லாம் ஓடறது…நார்றது…மேலே ரெண்டு மாடி இருக்கு…எத்தனை பேர் கடந்து போக வர இருக்கா? எதாச்சும் நினைச்சுப் பார்த்தேளா? ஒரு சத்தம் கொடுக்க மாட்டேளா? இப்டியா பண்ணுவேள்? எத்தனைவாட்டிதான் அலம்பித் துடைச்சு விடுவேன். நானும் ஆபீஸ் போக வேண்டாமா? இதப் பண்ணின்டிருந்தா போதுமா? உங்களோட பாடாப்பட்டு, வரவர எனக்கும் உடம்புல திராணியே இல்லாமப் போயிடுத்து…. ரொம்பக் கஷ்டப்படுத்தறேள்ப்பா….
கணபதி சாரின் பேச்சு என்னை ரொம்பவும் சங்கடப்படுத்தியது. இத்தனை செய்யும் மனிதனுக்கு. ரெண்டு வார்த்தை சொல்லிச் சலித்துக் கொள்ளக் கூட உரிமையில்லையா என்ன?
வெளில கொண்டு தள்றயா என்னை…? நாம்பாட்டுக்கு ஒரு ஓரமாக் கெடக்கேன்…உன் பொண்டாட்டி பேச்சைக் கேட்டுண்டு என்னை ரோட்டுக்கு உருட்டி விடுறியா? நாசமாப் போறவனே…நீ ஆயுசுக்கும் நன்னாயிருக்கமாட்டே…
சரி, நன்னாயில்லாட்டாப் போறேன்…உங்க ஆசீர்வாதம்…இப்ப இங்க இருங்கோ நீங்க….
…கழிச்சல்ல போறவனே….சொல்லச் சொல்ல அம்புட்டு அலட்சியமாடா ஒனக்கு…..நா ஒருநாளைக்கு சாக்கடைக்குள்ள கெடக்கப் போறேன்டா…என்னை அள்ளித் தூக்கிப் போட்டுரு…செய்வையோல்லியோ…அந்தப் பாவம் பூரா ஒன்னையே சேரும்….சாபமிடறேன்…..உங்கம்மா இல்லாமப் போயிட்டா….பாவி, என்னை ஒத்தைல தவிக்க விட்டிட்டுக் கம்பி நீட்டிட்டா…அவ இருந்தா நா ராஜாடா…உன்னை இந்த வீட்டுக்குள்ள நுழைய விட்டிருப்பேனா….போடா நாயே…எங்கயாச்சும் போய்க் கெட….இது என் வீடுன்னு கெடந்திருப்பேன்…..எல்லாம் போச்சு…எல்லாம் போச்சு….
ஆம்மா…அம்மாவ விரட்டி விரட்டிப் பரத்தினது போதாதா? என்ன சந்தோஷப்பட்டா அவ….காலம் பூராவும் உங்களுக்குப் பீ மூத்திரம் எடுத்ததுதான் மிச்சம்…. மனசுக்குள்ள அழுதது உங்களுக்குத் தெரியுமா? ஆதங்கப்பட்டது அறிவேளா? அம்மா புண்ணியவதி, அதத் தெரிஞ்சிக்குங்கோ….இத்தனை முடியாம இருக்கறச்சே, இவ்வளவு பேசறேளே…இது நன்னாயிருக்கா…? பக்கத்துல எல்லாராத்துலயும் கேட்டுண்டிருக்கா…
குலுங்கிக் குலுங்கி கணபதி சார் என்னிடம் அழுத காட்சி என் கண் முன்னே இன்னும் அப்படியே நிற்கிறது.
சார்…எங்கப்பா என்னை என்ன திட்டினாலும் எனக்குக் கஷ்டமாயிருக்காது சார்….ஏன்னா அவர் எனக்கு அவ்வளவு செய்திருக்கார்…என்னைப் படிக்க வைக்கணும்னு அந்தப் பாடு பட்டிருக்கார்…எனக்கு ரொம்ப உடம்பு முடியாமப் போன சமயமெல்லாம் ராத்திரி பகலா அவர் கிடந்த கெடப்பெல்லாம், ஆயுசுக்கும் என் உடம்பைச் செருப்பாத் தைச்சுப் போடலாம் சார் அவருக்கு….காலம் பூராவும் என் படிப்புக் கடனை அடைக்கவே உழைச்சு உழைச்சு ஓடாப் போயிட்டார் சார்…வாழ்க்கைல எந்தச் சொகமும் அனுபவிக்காத மனுஷன்னா அது எங்கப்பாதான் சார்….மனசுல ஆசைங்கிறதே இல்லாத ஆளு சார். தனக்குன்னு எதுவும் செய்துக்காத புனித ஆத்மா….அவருக்குப் போய் இப்டி முடியாமப் போயிடுத்தே சார்…. …என்னை எல்லாமும் சொல்ல அவருக்கு அத்தனை உரிமையுமிருக்கு…இவ்வளவு பேசறாரே… மனசோட சொல்றாருன்னு நினைக்கிறீங்களா? கிடையாது சார்…சத்தியமாக் கிடையாது. ஒடம்பு முடியாம, இப்டி ஆயிட்டமேன்னு வயித்தெரிச்சல்ல, சாகமாட்டாமக் கெடக்கனேன்னு நொந்து வர்ற வார்த்தைகள் சார் அது….
என் பையன் .தாத்தா மடில, மடில போய் உட்கார்ந்துப்பான்….என் பொண்டாட்டி விரட்டுவா…எதாச்சும் வியாதி வந்துரும்பா…மாடில இருக்கிற அவன் ஃப்ரெண்டு வீட்டுக்கு அனுப்பிச்சிடுவா….இங்கிருந்தாத்தானே கூப்டுவார்…என்ன கொஞ்சல் வேண்டிக் கெடக்கு…இம்புட்டு வியாதியோடன்னுவா…அங்க கொண்டுபோய் அவனுக்குச் சாப்பாடு கொடுப்பா….என்னெல்லாம் கொடுமைங்கிறீங்க….
எதுவும் சொல்ல வாய் வராமல் நான் அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். பிறகு கேட்டேன்.
அது சரி கணபதி சார்…ஒரு நல்ல முதியோர் இல்லத்துல சேர்க்கலாமில்லியா? இப்பத்தான் வேண்டிய பணத்தைக் கட்டினா எல்லாம் நல்லாப் பார்த்துக்கிறாளே…? குளிப்பாட்டி விட்டு, உடம்பு துடைச்சு விட்டு, டிரஸ் மாத்தி, வேளா வேளைக்கு மாத்திரை கொடுத்து, ரெகுலர் செக்கப் பண்ணி, குழந்தை மாதிரிப் பார்த்துக்கிறாங்களே…அப்டிச் செய்ங்களேன்…இங்க உங்களுக்குப் பொழுது விடிஞ்சு பொழுது போனாப் பிரச்னையாத்தானே இருக்கு…
இல்ல சார்…அது மட்டும் என்னால முடியாது சார்…என் வாழ்க்கையே போனாலும் பரவாயில்லை. …எங்கம்மாட்ட சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேன் சார்…கடைசி வரைக்கும் கொண்டு செலுத்தி அவரைக் கரையேத்துவேன்னு…அதைச் சொல்லித்தான் அவளையே கைபிடிச்சேன்.. - சொல்லிவிட்டுக் குழந்தை போல் விசித்து விசித்து அழுதார் அன்று.
சுமதி சொன்னாள். பாவந்தான்…என்னண்ணா…எப்டியெல்லாம் மனுஷா? என்று அவள் கலங்கியபோது எனக்குப் பெருமையாய்த்தான் இருந்தது.
தினமும் பார்க்கும் காட்சிதானே என்பதுபோல் நடந்து செல்வோரும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரும், பெரிய வாகனங்கள் சிலவும், அது பாட்டுக்கு நேர் பார்வையில் போய்க் கொண்டிருந்தன. சிலர் மூக்கை இறுக்கிப் பிடித்துக் கொண்டு முகத்தைச் சுளித்தவாறே அவசரமாய் நகர்ந்தார்கள்.
இப்டியே வச்சிட்டிருந்தீங்கன்னா நாங்கள்லாம் இங்க குடியிருக்கிறதா, வெளில போறதா? எதாச்சும் செய்யுங்க…?
என்ன சார் செய்யச் சொல்றீங்க? வெளில விரட்டச் சொல்றீங்களா? உங்கப்பான்னா அப்டிச் செய்வீங்களா?
ஆஸ்பத்திரில கொண்டு அட்மிட் பண்ணுங்க சார்…இல்லன்னா முதியோர் இல்லம் எதுலயாச்சும் சேர்த்து விடுங்க….நீங்கபாட்டுக்குப் பேசாமா இருந்தீங்கன்னா? இந்த ஃப்ளாட்டுல மொத்தம் மூணு ஃப்ளோர் இருக்கு…பன்னெண்டு வீடு…….அத்தனை பேருக்கும் எவ்வளவு டிஸ்டர்ப்பா இருக்கு… தெரியுதுல்ல…எல்லாரும் எங்கிட்ட வந்து மோதறாங்க…என்னால பதில் சொல்ல முடில…
எல்லாரையும் சேர்த்து நீங்களா ஏன் சார் சொல்லிக்கிறீங்க? உங்களுக்குத் தொந்தரவுதான். அத நான் ஒத்துக்கிறேன். அனாவசியமா அம்புட்டுப்பேரையும் ஏன் இழுக்கிறீங்க?
யாராச்சும் ஒருத்தர்தான் சார் உங்ககிட்ட வந்து சொல்வாங்க… அம்புட்டுப் பேரும் வந்து கத்தினாத்தான் கௌப்புவீங்களா….? இன்னும் கொஞ்ச நாள் போச்சின்னா அதுவும் நடக்கும்…தெரிஞ்சிக்குங்க….அசிங்கப்படுறதுக்கு முன்னால வண்டிய விடுங்க….
சார்…கௌப்புறது, அது இதுன்னு அநாவசியமாப் பேசாதீங்க….எங்கப்பாவ எப்டிப் பார்த்துக்கணும், என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். நீங்க சொல்ல வேணாம்….
அப்ப சட்டுப் புட்டுன்னு உங்க இஷ்டப்படி எதாச்சும் செய்ங்க சார்….நீங்கபாட்டுக்குப் பேசாம இருந்தீங்கன்னா…
அவர் சொல்றதுல என்ன தப்பு… இங்க நம்மளாலயே இந்தப் பாடைத் தாங்க முடில….இதென்ன தனி வீடா? வச்சி, கட்டிண்டு அழுதிண்டிருக்கிறதுக்கு…அப்டியிருந்தா நாந்தான் ஓடணும் இந்த வீட்டை விட்டு….ஏன்னா நீங்க நிச்சயமா நா சொல்றதக் கேட்கப் போறதில்லை…எல்லாம் என் தலையெழுத்து….கர்மாந்திரம்…
ஏய்…என்ன ….ரொம்பப் பேசுற…?
ஆம்ம்மா…உங்களுக்கு எங்கிட்டதான் எல்லாம்….இப்டி அன்றாடம் கத்திக் கூட்டிட்டு எனக்கென்னன்னு நீங்க ஆபீஸ் போயிடுவேள்….யார் படறது? நீங்க போனப்புறம் அவர் என்னென்ன செய்றாருன்னு உங்களுக்குத் தெரியுமா? சொன்னா மலையாக் கோபம் வரும் உங்களுக்கு….என்னால முடில….என்னைக்கு என்ன ஆகப்போறதோ ஆகட்டும்…
எத்தனை நேரம்தான் நான் அங்கே நிற்பது? நானும் அன்று ஆபீஸ் போயாக வேண்டுமே…அவரவருக்கு இருக்கும் அரிபரியில் யாரும் அவரைக் கவனித்ததாகவே தெரியவில்லை. எனக்கோ கேம்ப் முடித்துத் திரும்பி ரிப்போர்ட் சப்மிட் பண்ண வேண்டுமே என்ற ஓரே எண்ணம். ரெண்டு நாளில் ரெவ்யூ. ஒரு பயணமுண்டு ஆபீசருடன்.
மதியம் மணி மூன்று இருக்கும். அலுவலகத் தொலைபேசியில் சுமதி என்னை அழைப்பதாகப் பியூன் வந்து சொல்ல,
எப்பப்பாரு, செல் நம்பருக்குப் பேசத் தெரியாது இவளுக்கு …ஆபீசுக்கேதான் கூப்பிடுவா….கேட்டா ஆறு நம்பர், வசதியாயிருக்கும்பா... .என்ன பழக்கமோ…? என்றவாறே போய் எடுத்தேன். அந்த உறாலில் அமர்ந்திருந்த எல்லோர் முகங்களும் என்னையே நோக்குவது போலிருந்தது.
நாந்தான் சுமதி பேசறேன்…எதுத்தாத்துத் தாத்தா மாடிப்படில உருண்டுட்டாராம்…தலைல பலத்த அடியாம்….ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கா…கணபதி சார் உங்களுக்குச் சொல்லச் சொன்னார். சார் பக்கத்துல இருந்தா கொஞ்சம் வசதியாயிருக்கும்னார்…..நீங்க உடனே கிளம்பி சாந்தீபனி மிஷன் போங்க….அங்கதான் கொண்டு போயிருக்கா….
இருந்த வேலைகளை அப்படியே போட்டுவிட்டுக் கிளம்பினேன். என்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாதவராய், “அநேகமா முடிஞ்சிரும் போலிருக்கு சார்….” என்று கைகளைப் பிடித்துக்கொண்டு விசிக்க ஆரம்பித்தார். தோளை அரவணைத்து ஆறுதல் படுத்தினேன். ஒருவகையில் விடுதலைதானே என்றுதான் எனக்குத் தோன்றியது. இப்படியே இன்னும் இருந்து என்னதான் செய்ய? என்றேனும் ஒரு முடிவு வந்துதானே ஆக வேண்டும்? அவருக்குக் கிடைக்கப்போகும் நிம்மதி குறித்து அப்போழுதே என் மனம் ஆறுதல்பட ஆரம்பித்தது. கணபதி சார் சொன்னார் –
எப்பயும் ஆபீசுக்குப் போறதுக்கு முன்னாடி வீட்டுக்குள்ள தூக்கிக் கொண்டு விட்டிட்டுப் போவேன் சார்…இன்னைக்கு என்னாச்சுன்னு தெரில…எந்த மூலைல இருந்தாரோ, இல்ல நாந்தான் மறந்திட்டனோ…நாம்பாட்டுக்கு ஒரேபோக்கா ஆபீஸ் வந்து சேர்ந்துட்டேன்…எப்டி வந்தேன்னு எனக்கே தெரில…இத்தனை வருஷத்துல என்னைக்குமே நடக்காதது இது. வெளில கண்ணுல அவர் படாததுதான் காரணமோன்னு இப்போ தோணுது. .பிறகுதான் சார் ஞாபகம் வந்தது. வீட்டுல சொன்னேன். ….“ இங்கதான் இருக்கு” ங்கிறா சார் அவ…எப்டிப் பேச்சு பார்த்தீங்களா?
ஒரு வேளை இந்த வார்த்தையே அவர் காதுல பட்டு அந்த வேதனைலயே பாதி செத்திருப்பாரோ என்னவோ, கொஞ்ச நேரத்துல இந்த நியூஸ் வந்திடுத்து….
அன்று முழுக்கவும், பிறகு அனைத்திற்கும் கூடவே துணையிருந்து வேண்டிய எல்லாமும் செய்து விடுவது என்கிற முடிவோடு அவரை அரவணைத்தவாறே ஆறுதலாய் யோசிக்கலானேன் நான்.
----------------------------------------
03 பிப்ரவரி 2014
வாஸந்தியின் “கடைசிவரை” நாவல் பதிவு
இந்தியா டுடே-யில் தொடராக வந்த போது எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இத்தனை நாள் படிக்காமல் விட்டோமே என்றுதான் இருந்தது இந்த நாவலைப் படித்தபோது. இந்த நூலுக்காக முன்னுரையில் திருமதி ராஜம்கிருஷ்ணன் அவர்கள் சொல்லியுள்ளபடிமையக்கருவைச் சிறந்த பட்டைக் கண்ணாடிபோல் பயன்படுத்திப் பல்வேறு கோணங்களில் பெண்ணின் உரிமைகளைத் துல்லியமாகப் படம் பிடித்து அதன் முழுப் பரிமாணங்களுடன் ஸ்கேன் திரையில் பளிச்சிடுவது போலக் காட்டப்பட்டுள்ளது இந்த நாவலின் சுவாரஸ்யமான, அழுத்தமான, இறுக்கமான நடைப்போக்கும், சம்பவங்களும் நம்மால் மறக்க முடியாதது.
இந்த விஷயத்தை மையக் கருத்தாக எடுத்துக் கொண்டு இந்த நாவலை நான் படைக்கப் போகிறேன் என்று தீர்மானித்துக் கொண்ட அதே வேளையில், அந்த மையக் கருத்துக்கு ஏற்றாற்போன்ற கதாபாத்திரங்களையும், அவற்றின் குணாதிசயங்களையும் துல்லியமாக வரையறுத்து, அதற்கு எதிர்க் கருத்துக்களைக் கொண்ட பாத்திரங்களையும் ஊடாடவிட்டு, அங்கே இந்த மையக்கருத்தைத் தாங்கிச் செல்லும் கதாநாயகியின் அழுத்தமான சிந்தனைகளை அப்படியே நாவல் முழுக்கத் தூக்கிச் செல்லும் பாங்கும், பொருத்தமான, புத்திசாலித்தனமான உரையாடல்களும் மறக்க முடியாதவை. நாவலைப் படிக்கும்போதே அதனில் நம்மையும் ஒரு கதாபாத்திரமாக நாம் வரித்துக் கொண்டு,நமது கேள்விகளை முன்னிறுத்த, இம்மாதிரிக் கேள்விகள் இதைப் படிக்கும் வாசகனுக்கு ஏற்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பில் அங்கங்கே அந்தச் சந்தேகங்களைத் தீர்ப்பதுபோல் விடை சொல்லிச் செல்லும்அழகு, முடித்துவிட்டுத்தான் கீழே வைப்பது என்ற தீர்மானத்தை நம்முள்ளே கொண்டு வருகிறது.
நாவல்கள் எழுதுவது என்பது வெறுமே வரிகளைச் சேர்த்துக் கொண்டு போவது அல்ல. மாத நாவல்கள் எழுதுவதுபோல. நிறையக் கதாபாத்திரங்களை உள்ளே நுழைத்துவிட்டாலே அது நல்ல நாவலாக வடிவம் பெற்றுவிடும் என்பதும் அல்ல. சுரத்தில்லாத சம்பவக் கோர்வைகள் என்றும் நாவலுக்கு சுவை சேர்ப்பதில்லை. எழுதி எழுதிப் பழக்கத்தினால், பக்கம் பக்கமாய் எழுதித்தள்ளி நாவல் என்கின்ற பெயரில் யாரும் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்துவிட முடியும். அதனால் பயன் என்ன?
நாவல் காலத்தால் அழியாதது. வருடங்கள் கடந்தாலும் பேசப்படுவது. அதுதான் நின்று நிலைப்பது. பேசப்பட வேண்டிய நாவல்கள் பேசப்படாமல் போனதுதான் தமிழ் இலக்கிய உலகின் அபத்தமான துரதிருஷ்டம்.
இந்த நாவல் அந்த வரிசையில். அது வாஸந்தியின் “கடைசிவரை...” . தமிழ்ப்புத்தகாலயம் 1996 ல் வெளியிட்டது. தேடிக் கண்டெடுத்துப் படிக்க வேண்டிய நாவல்.
சிறுகதை “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை வி த்யாபதி அந்தத் தெ...
-
“விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...
-
தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன் க தை எழுதப்பட்டது 1958-ல். மதமாச்சர்யங்கள் அற்ற காலம். ஒழுக்கமும்...
-
அசோகமித்திரனின் “விமோசனம்” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். ...