14 மே 2013

இமையம் எழுதிய “பேராசை” சிறுகதை-வாசிப்பனுபவம்

இதழ் – உயிர்மை மே 2013

-------------

டைப்பாளிக்கு ஆழ்ந்த ரசனை மிக முக்கியம். ஆழ்ந்த ரசனை என்பது மற்ற சாதாரணர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும், அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாததாயும் இருத்தல் வேண்டும். அப்படியானால்தான் அந்த ரசனை எழுத்தாக, படைப்பாக வெளிப்படும்போது தனித்துவமாக மிளிர்ந்து நிற்கும். இந்தச் சமுதாயத்தின் அவலங்களை ஆழமாக உள்வாங்கி, மனதுக்குள்ளேயே பொருமி, அழுது, தாள முடியாத வேதனையோடு அவற்றை வெளிப்படுத்தும்போது, அது சத்தியமான படைப்பாகத் தானே முன்வந்து நிற்கும்.

அப்படிப்பட்டதொரு அருமையான படைப்புதான் மே 2013 உயிர்மை இதழில் வெளிவந்த இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை. கோகிலா ஏன் யாருக்குமே பிடிக்காத செல்வமணியைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாள் என்று அறிய முற்படும் அந்த நேரம் மனசு விட்டுப் போகிறது நமக்கு. திடுக்கிட்டு நடுங்குகிறது. சே…! என்ன ஒரு அவலம்? என்று வெட்கமுறுகிறது.

தனிமையில் சுதந்திரமாக மறைவாக மலஜலம் கழிக்கக்கூட வழியில்லாத ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு, தினம் தினம் அவள் படும் அவஸ்தை, கோகிலாவின் மனதில் எந்த அளவுக்கு ஒரு உறுதியைக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் இமையம். இத்தனை உறுதியோடு இருக்கிறவள் போகிற இடம், தான் நினைக்கும் அளவுக்கான வசதியோடுதான் இருக்கும் என்பதற்கடையாளமாய் சென்னைப் பெருநகரம் அவள் மன நிழலில் அந்த விசாலமான, வசதியான எண்ணங்களை ஏற்படுத்தி, அவள் நினைத்த அந்த ஆண்மகனையே பிடிவாதமாய்க் கைபிடிக்க வைத்து விடுகிறது. வாழ்க்கையில் எது கிடைக்கிறதோ இல்லையோ தினசரி சுதந்திரமாய் மறைவாய், மலஜலம் கழித்தால் போதும் என்கிற அளவுக்கான நெருக்கடியை அவளின் வாழ்நிலை தோற்றுவித்து விட்டது நியாயமே என்று நம்மை அவள்பால் இரக்கம் கொள்ள வைக்கிறது.

செல்வமணி அவளைப் பெண் பார்க்க வருவதும், அவனின் உருவத்தையும், இருப்பையும், செயலையும், மாறி மாறிக் கேலி செய்யும், வையும், முத்தம்மாளின் வார்த்தைகள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. வட்டார வழக்குகளின் கலப்படமில்லாத சொல் பிரயோகங்கள் அவர்களின் அசலான மனசை அப்படியே பளிச்சென்று நமக்குக் காட்டும்போதும், துள்ளி விழும் வார்த்தைகளின் தத்ரூபமான உவமான உவமேயங்களும் ஒரு வெளிச்சமான, யதார்த்தமான வாழ்க்கை நிலையை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. கதை முழுக்க நிறைய இடங்களில் செழுமையாக இதை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் இமையம்.

இப்பியே கழுவி வச்ச வெங்கல பானயாட்டம் மாப்ள தல இருக்கு…

எங்க மாமனாரு தலயப் பார்த்தீங்கன்னா சிரிப்பீங்க…தொடச்சி வச்ச கண்ணாடியாட்டம் இருக்கும். மொட்ட போட்டாக்கூட அம்மாம் சுத்தமா இருக்காது…

செல்வமணியைச் சொல்லும்போது சாணியில் பிடித்த கொழுக்கட்டை மாதிரி இருந்தான் என்கிற வர்ணனை.

நாலு புள்ளெ பெத்த அரக் கிழவனாட்டம் இருக்காண்டி…அதோடவும் சுட்டெடுத்த பன்னி மாரி இருக்கான்…

வாய பட்டயாட்டம் இருக்க ஒன்னே அந்தக் கருஞ்சட்டிக்கி கட்டி வைக்கச் சொல்லுறியாடி…அவன் வாயும் வவுறும் பாத்தாலே ஒட்டிக்கிம்மாட்டம் இருக்கு…அப்பிடியொரு கருப்பு. சாவப்போற கிழவி நானு. எனக்கே அவனப் புடிக்கலே….புள்ளே பெத்திருக்கா பாரு, அழுவிப்போன பூசணி பயமாட்டம். எம் புள்ளெயும்தான் புள்ளே பெத்திருக்கான் தென்னங்குருத்தாட்டம்…இவனக் கட்டிக்கிறதுக்குப் பதிலா எவனையாச்சும் இருத்திட்டு ஓடு…நானே வழியனுப்பி வைக்கிறன்….

சண்டாதி சண்டனா, ராசாதி ராசனெல்லாம் வாணாமின்னுட்டு எதுக்குடி எரிஞ்சிபோன புளியமரம் மாரி இருக்கிற இத்துப்போன இந்தப் பயலெ கட்டிக்கிட்டே….

ஆனாலும் கதையில் நம்மைக் கடைசி வரை அதிரச் செய்வது யாருக்கும் தெரியாமல் மலஜலம் கழிக்க வேண்டும் என்று எல்லாருடைய அதிருப்தியையும் மீறி, நகரத்தில் இருக்கும் செல்வமணியையே பிடிவாதமாய்க் கட்டிக் கொண்ட கோகிலா கடைசியில் அந்த சுதந்திரத்தை எய்துகிறாளா என்று அறிய மனம் ஏங்குகிறது.

எப்படி எப்படியெல்லாம் தினம் தினம் கஷ்டப்பட்டு மலம் கழிக்க அவஸ்தைப் படுகிறார்கள், வெட்கத்தை விட்டு எப்படி நிற்க வேண்டியிருக்கிறது, என்பதான அந்த அன்றாட அவலத்தை அவர் விவரித்திருக்கும் விதம் மனதைப் பிசைந்தெடுக்கிறது.

வீட்டையும், ஊரில் பலரின் விருப்பத்தையும் மீறி செல்வமணியைக் கட்டிக் கொண்ட கோகிலா கடைசியில் அவள் நினைத்த்தை எட்ட முடியாமல் போகும்போது அவளோடு சேர்ந்து நாமும் துயர்ப்படுகிறோம்.

கதவைத் தட்டி எம்மாம் நேரமா இருக்கிற? வா வெளியே…அடுத்த ஆளு நிக்குது பாரு….லேட்டு பண்ணுனா சண்ட வந்துடும்…என்று செல்வமணி கத்திய வேகத்தில் பயந்துபோன கோகிலாவின் தொடைகளின் வழியே சிறுநீர் இறங்கியது என்ற வரிகளில் இந்த தேசமே வெட்கப்பட்டுத் தலை குனிவதைப் போல் உணர்ந்தேன் நான். இமையம் அவர்களே, உங்கள் கையைச் சற்றுக் கொடுங்கள்…இப்படி ஒரு அற்புதமான படைப்பைத் தந்ததற்காக என் அன்பு முத்தங்கள்….. . -----------------------------

கருத்துகள் இல்லை:

  சிறுகதை                 தினமணி கதிர் 29.12.2024  பிரசுரம் “நெத்தியடி”             எ தையாவது சொல்லிட்டே இருப்பியாப்பா? – எதிர்பாராத இந்...