முல்லைப் பெரியாறு அணை - வரலாறும் தீர்வும் என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. வேளாண் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி கண்காணிப்புப் பொறியாளராக 2004 ல் பணி நிறைவு பெற்ற இவர் மதுரை தானம் அறக்கட்டளையின் நீர்வளப் பிரிவில் திட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர்வள மையத்தில் நான்காண்டு காலம் திட்டப் பொறியாளராகப் பணியாற்றியபோதும், பெரியாறு வைகை பாசன மேம்பாடு திட்டப் பணிகளின் செயலாக்கத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தபோதும், பெரியாறு அணை பற்றிய பல விபரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர். தெிலிருந்தே பெரியாறு அணைப் பிரச்சனை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வந்து, இந்தத் தருணத்திற்கேற்றவாறு விவரங்களைத் தொகுத்துள்ளார். நீர்வள நிர்வாகம் பற்றிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மார்ச் 2009ல் துருக்கியில் (இஸ்தான்புல் நகர்) நடைபெற்ற 5-வது உலக நீர்வள மாநாட்டில் பெரும் அணைகளுக்கான பன்னாட்டு ஆணையம் முன்னின்று நடத்திய தேவைகளுக்கேற்ற நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உறுதி செய்தல் எனும் கருத்தரங்கிற்று இவரது கட்டுரை தேர்வு செய்யப்பட்டதோடு உலகளவில் தேர்வு செய்யப்பட்ட ஆறு பேச்சாளர்களில் இவரும் ஒரு பேச்சாளராக அங்கு உரையாற்றினார்.ஜூன் 1997 ல் டான்சானிய நாட்டில் நடைபெற்ற நீர் வடிப்பகுதிகளில் மேம்பாடுபற்றிய கன்னாட்டுக் கருத்தரங்கிற்கும் அவரது கட்டுரை தேர்வு செய்யப்பட்டு அங்கும் உரையாற்றியுள்ளார். இப்புத்தகத்தை தமிழோசை பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. முகவரி - 21 கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் கணபதி, கோவை-641006.(செல்-9788459063) விலை ரூ.45 மட்டுமே.
23 மே 2013
17 மே 2013
“தளம்”–2வது இதழ் (ஏப்-ஜூன் 2013 )
முதல் இதழ் சி.சு.செ. சிறப்பிதழாக வெளிவந்தது. இது இரண்டாவது இதழ். நாடகச் சிறப்பிதழாக. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய நிறைவான இலக்கியத் தளம் இது.
14 மே 2013
இமையம் எழுதிய “பேராசை” சிறுகதை-வாசிப்பனுபவம்
இதழ் – உயிர்மை மே 2013
-------------
படைப்பாளிக்கு ஆழ்ந்த ரசனை மிக முக்கியம். ஆழ்ந்த ரசனை என்பது மற்ற சாதாரணர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும், அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாததாயும் இருத்தல் வேண்டும். அப்படியானால்தான் அந்த ரசனை எழுத்தாக, படைப்பாக வெளிப்படும்போது தனித்துவமாக மிளிர்ந்து நிற்கும். இந்தச் சமுதாயத்தின் அவலங்களை ஆழமாக உள்வாங்கி, மனதுக்குள்ளேயே பொருமி, அழுது, தாள முடியாத வேதனையோடு அவற்றை வெளிப்படுத்தும்போது, அது சத்தியமான படைப்பாகத் தானே முன்வந்து நிற்கும்.
அப்படிப்பட்டதொரு அருமையான படைப்புதான் மே 2013 உயிர்மை இதழில் வெளிவந்த இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை. கோகிலா ஏன் யாருக்குமே பிடிக்காத செல்வமணியைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாள் என்று அறிய முற்படும் அந்த நேரம் மனசு விட்டுப் போகிறது நமக்கு. திடுக்கிட்டு நடுங்குகிறது. சே…! என்ன ஒரு அவலம்? என்று வெட்கமுறுகிறது.
தனிமையில் சுதந்திரமாக மறைவாக மலஜலம் கழிக்கக்கூட வழியில்லாத ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு, தினம் தினம் அவள் படும் அவஸ்தை, கோகிலாவின் மனதில் எந்த அளவுக்கு ஒரு உறுதியைக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் இமையம். இத்தனை உறுதியோடு இருக்கிறவள் போகிற இடம், தான் நினைக்கும் அளவுக்கான வசதியோடுதான் இருக்கும் என்பதற்கடையாளமாய் சென்னைப் பெருநகரம் அவள் மன நிழலில் அந்த விசாலமான, வசதியான எண்ணங்களை ஏற்படுத்தி, அவள் நினைத்த அந்த ஆண்மகனையே பிடிவாதமாய்க் கைபிடிக்க வைத்து விடுகிறது. வாழ்க்கையில் எது கிடைக்கிறதோ இல்லையோ தினசரி சுதந்திரமாய் மறைவாய், மலஜலம் கழித்தால் போதும் என்கிற அளவுக்கான நெருக்கடியை அவளின் வாழ்நிலை தோற்றுவித்து விட்டது நியாயமே என்று நம்மை அவள்பால் இரக்கம் கொள்ள வைக்கிறது.
செல்வமணி அவளைப் பெண் பார்க்க வருவதும், அவனின் உருவத்தையும், இருப்பையும், செயலையும், மாறி மாறிக் கேலி செய்யும், வையும், முத்தம்மாளின் வார்த்தைகள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. வட்டார வழக்குகளின் கலப்படமில்லாத சொல் பிரயோகங்கள் அவர்களின் அசலான மனசை அப்படியே பளிச்சென்று நமக்குக் காட்டும்போதும், துள்ளி விழும் வார்த்தைகளின் தத்ரூபமான உவமான உவமேயங்களும் ஒரு வெளிச்சமான, யதார்த்தமான வாழ்க்கை நிலையை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. கதை முழுக்க நிறைய இடங்களில் செழுமையாக இதை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் இமையம்.
இப்பியே கழுவி வச்ச வெங்கல பானயாட்டம் மாப்ள தல இருக்கு…
எங்க மாமனாரு தலயப் பார்த்தீங்கன்னா சிரிப்பீங்க…தொடச்சி வச்ச கண்ணாடியாட்டம் இருக்கும். மொட்ட போட்டாக்கூட அம்மாம் சுத்தமா இருக்காது…
செல்வமணியைச் சொல்லும்போது சாணியில் பிடித்த கொழுக்கட்டை மாதிரி இருந்தான் என்கிற வர்ணனை.
நாலு புள்ளெ பெத்த அரக் கிழவனாட்டம் இருக்காண்டி…அதோடவும் சுட்டெடுத்த பன்னி மாரி இருக்கான்…
வாய பட்டயாட்டம் இருக்க ஒன்னே அந்தக் கருஞ்சட்டிக்கி கட்டி வைக்கச் சொல்லுறியாடி…அவன் வாயும் வவுறும் பாத்தாலே ஒட்டிக்கிம்மாட்டம் இருக்கு…அப்பிடியொரு கருப்பு. சாவப்போற கிழவி நானு. எனக்கே அவனப் புடிக்கலே….புள்ளே பெத்திருக்கா பாரு, அழுவிப்போன பூசணி பயமாட்டம். எம் புள்ளெயும்தான் புள்ளே பெத்திருக்கான் தென்னங்குருத்தாட்டம்…இவனக் கட்டிக்கிறதுக்குப் பதிலா எவனையாச்சும் இருத்திட்டு ஓடு…நானே வழியனுப்பி வைக்கிறன்….
சண்டாதி சண்டனா, ராசாதி ராசனெல்லாம் வாணாமின்னுட்டு எதுக்குடி எரிஞ்சிபோன புளியமரம் மாரி இருக்கிற இத்துப்போன இந்தப் பயலெ கட்டிக்கிட்டே….
ஆனாலும் கதையில் நம்மைக் கடைசி வரை அதிரச் செய்வது யாருக்கும் தெரியாமல் மலஜலம் கழிக்க வேண்டும் என்று எல்லாருடைய அதிருப்தியையும் மீறி, நகரத்தில் இருக்கும் செல்வமணியையே பிடிவாதமாய்க் கட்டிக் கொண்ட கோகிலா கடைசியில் அந்த சுதந்திரத்தை எய்துகிறாளா என்று அறிய மனம் ஏங்குகிறது.
எப்படி எப்படியெல்லாம் தினம் தினம் கஷ்டப்பட்டு மலம் கழிக்க அவஸ்தைப் படுகிறார்கள், வெட்கத்தை விட்டு எப்படி நிற்க வேண்டியிருக்கிறது, என்பதான அந்த அன்றாட அவலத்தை அவர் விவரித்திருக்கும் விதம் மனதைப் பிசைந்தெடுக்கிறது.
வீட்டையும், ஊரில் பலரின் விருப்பத்தையும் மீறி செல்வமணியைக் கட்டிக் கொண்ட கோகிலா கடைசியில் அவள் நினைத்த்தை எட்ட முடியாமல் போகும்போது அவளோடு சேர்ந்து நாமும் துயர்ப்படுகிறோம்.
கதவைத் தட்டி எம்மாம் நேரமா இருக்கிற? வா வெளியே…அடுத்த ஆளு நிக்குது பாரு….லேட்டு பண்ணுனா சண்ட வந்துடும்…என்று செல்வமணி கத்திய வேகத்தில் பயந்துபோன கோகிலாவின் தொடைகளின் வழியே சிறுநீர் இறங்கியது என்ற வரிகளில் இந்த தேசமே வெட்கப்பட்டுத் தலை குனிவதைப் போல் உணர்ந்தேன் நான். இமையம் அவர்களே, உங்கள் கையைச் சற்றுக் கொடுங்கள்…இப்படி ஒரு அற்புதமான படைப்பைத் தந்ததற்காக என் அன்பு முத்தங்கள்….. . -----------------------------
04 மே 2013
என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)
-------------------------------------------------------------------------------------------------------
சமீப நாட்களில் நான் தேடிப் படிக்கும் நாவல்கள் எல்லாம் மனதிற்குள் விசுவலைஸ் ஆகி திரைப்படங்களாகவே எனக்குள் விரிந்து கொண்டிருக்கிறது. க.நா.சு.வின் “அவரவர் பாடு“ நாவல் படித்தபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று என்.ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” படித்து முடித்தபோதும் மனதிற்குள் படம்தான் ஓடியது.
நாவலைப் படித்து முடித்துக் கண்களை மூடிக்கொண்டு ஒரு சுழற்சியில் மொத்த நாவலையும் படிப்படியாய், அடுத்தடுத்த காட்சிகளாய் நினைத்துப் பார்த்தபோது, முதலில் மனதிற்குள் படர்ந்தது அட்டைப் படத்துடன் கூடிய அந்த இறுதிக்கட்ட என்கவுன்டர் நிகழ்வுதான்.
எடுத்த எடுப்பில் விரிந்து கிடக்கும் அந்தக் கறுத்து, நீண்டு, அடர்ந்த தார்ச் சாலையில் ஒற்றை ஆளாய் நிற்க வைக்கப்பட்டு குறிபார்க்கப்படும் சுப்ரமணியிடமிருந்து க்ளோஸப்பில் காமிரா பின்னோக்கிப் போவதுபோல் நகர்ந்து துப்பாக்கி முனையில் கொண்டு நிறுத்தி, மெல்ல இருட்டுப் பரவுவதாய்ச் சென்று ஒரு புள்ளியில் முடித்து, கதையை ஃப்ளாஷ் பேக்கில் கொண்டு செல்ல வேண்டும் என்பதாய் என் மன ஓட்டத்தில் திரைப்படம் விரிந்தது. கதையின் ஆரம்பத்திலிருந்து பாத்திரங்களையும், கதை நடக்கும் இடங்களையும் சம்பவச் சுருக்கங்களையும் குறித்து வைத்துக் கொண்டு, நாவலை மனதில் நிறுத்திக் கொண்டே நகர்ந்து, படித்து முடித்தோமானால் மொத்த நாவலும் மனதில் நின்று போகும். நிறையக் கற்பனை உள்ள மனம் என்றால், எப்படிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்கிற திரை வடிவம் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கும். அப்படித்தான் இந்த நாவலை வடிவமைக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஆனால் ஒன்று. இதை வணிக ரீதியிலான படமாய்க் கொடுப்பதை விட, கலைப்படமாய் ஆக்கினால்தான் நாவலின் கட்டுமஸ்தான வடிவம் அப்படியே திரையிலும் கிடைக்கும். குறும்படமாகச் சொல்வதற்கு வழியில்லை. சுமார் ஒன்றரை மணி நேரப் படமாகச் சொல்லி விட முடியும். அப்படியான ஒன்றைத்தான் வணிக ரீதியாகச் சிந்திக்கும்போது, அங்கங்கே பாடல்களையும், குத்து ஆட்டத்தையும் சேர்த்து, இரண்டேகால் மணிக்கு நகர்த்தி விடுகிறார்கள். இந்தக் கதையையும் அப்படிச் செய்ய வாய்ப்பு உண்டுதான். ஆனால் எப்படிச் செய்தால் இறுக்கம் குறையாது பார்வையாளனின் மனதில் படியும் என்று யோசிக்கையில் கலைப்படமே சாத்தியம் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே அடுத்தடுத்துத் தவறுகளை நோக்கிப் போகக் கூடியவனின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து சின்னா பின்னமாகிப் போகிறது என்பதாயும், செய்த, செய்கின்ற தவறுகளின் விளைவுகளை உணர்ந்திருந்தும், அவற்றிலிருந்து விலக இயலா நிலை ஏற்பட்டுப் போவதும், அதற்காகவே தவறுகள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதுவும், தவறான சேர்க்கையும், அதற்கான சூழலும், அந்தச் சூழலுக்கு எளிமையாக அடிமைப்பட்டுப் போகும் மனமும், எதற்காக இதுவெல்லாம்? என்று கேள்வி விழும்போது அதுநாள்வரையிலான தவறுகள் இனி உன்னை விடாது என்ற பழி நிகழ்வுகளும், சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய கொலைகளுக்கு வழி வகுத்து ஒருவனின் மொத்த வாழ்க்கையும் சிதைந்து போய்விட,இனி அவ்வளவுதான் என்ற விரக்தியில், இதெல்லாவற்றிற்கும் காரணம் அவன்தானே என்று இறுதியாய் ஒரு கொலையை மேற்கொண்டு அத்தோடு தன் வாழ்வும் முடிந்து போகும்தான் என்று தெரிந்திருந்தும், எங்காவது கண் காணாத இடத்திற்குப் போய்விடுவோம், புது வாழ்வு காண்போம் என்று புறப்படும் பேதமையும், குற்றங்கள் துரத்தியடிக்க இறுதியில் அவன் முடிவு தானாகவே அவனுக்கு வந்து சேர்கிறது.
மனதைத் தகிக்கும் வேதனை பெற்றெடுத்த தாயின் சோகம். மகன் என்னதான் தவறு செய்தாலும், அதிலிருந்து அவனை மீட்டு, அவன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் என்று துடிக்கும் துடிப்பு. வேணான்டா கண்ணு நமக்கு, தப்புத் தண்டா ஆகாதுடா சாமி… என்று கெஞ்சும் அந்தப் பெற்ற மனம் கடைசி வரை அவனை விட்டு விலக மறுக்கிறது.
ஆனாலும் இப்படியான ஒருவனுக்கு இறுதி எப்படி அமையுமோ அந்த முடிவுதான் அமைந்து போகிறது சுப்ரமணிக்கும்.
“இப்போது எனக்குப் பயம் சிறிதும் இல்லை. முடிவு தெரிந்து விட்டது. நிச்சலனமாகவே நின்று கொண்டிருந்தேன். விழித்து போலீஸ்கார்ர்களைப் பார்த்தேன். பிஸ்டல் நீட்டப்பட்டுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் இந்த அத்திமரச்சாலை வெறிச்சோடி விடும். நானும் அத்திப் பழம் போல் விழுந்து நசுங்கிக் கிடப்பேன். ஏனோ எனக்கு அக்கணத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் ரோஸ்மேரி அசைந்து அசைந்து நடந்து வருவதுபோல் ஒரு சித்திரம் ஞாபகத்தில் எழுந்தது. கண் கலங்கிற்று.”
ஸ்ரீராமின் கதை சொல்லும் பாணியும், சூழல் வர்ணிப்பும், காட்சிகளைப் பிம்பங்களாய் நம் முன்னே அழகாய் நகர்த்திச் செல்கின்றது. கொலை கொள்ளை மேற்கொள்பவர்களின், கூலிப் படை வைத்திருப்பவர்களின் பாஷைகளும், அவர்களின் வாழ் முறையும், தொடர்ந்து தவறுகளே செய்து கொண்டிருப்பவர்களின் புத்தி எப்படி வேலை செய்யும் என்கிற புனைவுகளும், அப்படியே கூடஇருந்து பார்த்து, அனுபவித்து எழுதியது போன்றதான உணர்வினை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது.
புத்தகத்தின் பின் அட்டையில் ஸ்ரீராமின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, இந்தப் பையன் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் சென்றிருக்க முடியுமா? அந்த அனுபவங்களையெல்லாம் உடனிருந்து உள்வாங்கியிருக்க முடியுமா? அல்லது பல்வேறு வகையிலான தொடர்ந்த வாசிப்புப் பழக்கத்தில் இத்தனை துல்லியமாய் எழுதுவது சாத்தியமா? என்பதாக நம் எண்ண ஓட்டங்கள் தவிர்க்க முடியாததாகிறது.
காட்சிப்படுத்தும் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. இலக்கிய ஆர்வலர்கள் ஸ்ரீராமை அறிவார்கள். சிறந்த வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் இந்நாவல் அனைவராலும் படித்து சுவைக்கப்பட வேண்டியது. தோழமைப் பதிப்பகம் இந்நாவலை மேலும் இரண்டு குறுநாவல்களோடு சேர்த்து அழகிய பதிப்பாக வெளியிட்டிருக்கிறது.
எளிய வாழ்வின் முடிச்சுகளைத் தேடி மழையின் தண்மையையும், வெயிலின் வெம்மையையும், திரியும் ஸ்ரீராமின் தனிமை நம்மிடம் ஆசுவாசம் கொள்கிறது என்கிற அறிமுகம் கவனிக்கப்பட வேண்டியது.
-------------------------------------------
03 மே 2013
02 மே 2013
சிறுகதை “பாதிப்பு” - ”சிற்றுளி” கலை இலக்கிய இதழ், அக்டோபர் 2024 முதல் டிசம்பர் 2024 வரை வி த்யாபதி அந்தத் தெ...
-
“விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...
-
தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன் க தை எழுதப்பட்டது 1958-ல். மதமாச்சர்யங்கள் அற்ற காலம். ஒழுக்கமும்...
-
அசோகமித்திரனின் “விமோசனம்” - சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். ...