27 ஆகஸ்ட் 2012

"முடிச்சு" குறுநாவல்

 
(உயிரோசை இணைய இதழ் வெளியீடு-27.08.2012) (இரண்டாம் பகுதி)

சென்ற வாரத் தொடர்ச்சி...
எந்த முயற்சியாவது செய்து அந்த ஊரைவிட்டுப் போய் விட வேண்டும் என்றுதான் தோன்றியது இன்ஸ்பெக்டர் ஜார்ஜுக்கு. அப்படி எதுவும் நடக்காவிட்டால் குறைந்தபட்சம் அந்த ஏரியாவிலிருந்து மாறிக் கொள்வது என்ற எண்ணத்தில் தவிர்க்க முடியாமல் விழுந்தார். திடீர் திடீரென்று வந்து விசாரணை என்று அழைத்துச் செல்வது கூடாது என்றும், சம்பந்தப்பட்ட கடையையும் கடைப் பணியாளர்களையும் மட்டும்தான் விசாரிப்பது நலம் என்றும் சகட்டு மேனிக்கு எல்லாரையும் சந்தியில் கொண்டு நிறுத்துவது தொழிலாளர்களை அவமானப் படுத்துவதாகும் என்றும் இதற்கு ஒரு முடிவு கட்டும்வரை ஓயப் போவதில்லை என்றும் ஒட்டு மொத்த தொழிலாளர்களும் மொத்த வீதியிலும் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தர்ணா என்று சொல்லி; அமர்ந்து கிடந்தது பார்த்தவர்எல்லோரையும் மலைக்கத்தான் வைத்தது. உணர்ச்சிப் பிழம்பான கூட்டம் என்று சொல்வதை விட உண்மையான தன்மானமிக்க கூட்டம.; கூடிக் கலைவது கும்பல், கூடிச் சிந்திப்பது கூட்டம், நாம் இங்கே கூடிச் சிந்திக்கத்தான் இப்படிக் கடலளவு கூடி ஒற்றுமையுடன் நிற்கிறோம். நமது கடுமையான உழைப்பை மதிக்காத எந்த நடவடிக்கைகளையும் யாமும் மதிக்கப் போவதில்லை. வாழ்ந்தால் நேர்மையோடும், மானத்தோடும் வாழ்வோம்…இல்லையேல் ஒரு லட்சியத்திற்காக வாழ்ந்தோம் என்று அறைகூவல் விடுத்துச் சாவதற்குத் தயாராவோம்…!
கட்டுப் படுத்த முடியாத கூட்டம் எவ்வகையிலும் கட்டறுத்துக் கொள்ளக் கூடாது என்று கருதிய ஜார்ஜ் ரொம்பவும் நிதானத்தோடுதான் செயல்பட்டார். தங்கள் கோரிக்கைகளைப் பண்பாட்டு நிதானத்தோடு முன் வைப்போரை மதித்து மௌனம் காப்பதுதானே காவல்துறையின் கடமையாகவும் கூட இருக்கும். அதிலிருந்து அது என்றும் தவறியதில்லையே! இந்த எண்ணம்தான் அந்த நேரத்தில் அவர் மனதில் ஓடியது. அவர்களாகவே கூடிச் சிந்தித்துக் கலைந்து செல்லட்டும் என்று காத்திருந்தார். குறிப்பிட்ட சில பிரதிநிதிகளோடு தக்க பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்வதுதான் சரி என்று தோன்றியது அவருக்கு. நாங்கள் மாதாந்திரச் சம்பளத்திற்கென்று வயிற்றுப் பிழைப்பு நடத்துபவர்கள். பொருளாதார மந்த நிலையில் எங்கள் அன்றாட வாழ்க்கையே சீர் குலைந்து கிடக்கும் பொழுது அதற்குப் போராடி எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள என்னவெல்லாம் நேர்மையான வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்பதாக எங்கள் முதலாளிகளோடு சுமுக உறவில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். இம்மாதிரிவாழ்க்கைச் சிக்கலில் அமிழ்ந்து கிடக்கும் எங்களுக்கு இந்த மாதிரியான அநாமதேய விசாரணை மிகவும் இழுக்கான ஒன்று. அது எங்களையும்,எங்கள் ஒழுக்கங்களையும், எங்கள் நேர்மையையும் சந்தேகிப்பதாக உள்ளவை. ஆகவே அவற்றை ஒரு போதும் அனுமதியோம். ஒரு போதும் அனுமதியோம்…வீழ்வதற்காகவா வாழ்வு…வாழ்வதற்காகவே வாழ்க்கை…!
ஒரு நாள் பூராவும் அவர்களின் கோஷம் நீண்ட போதும், சிறிதும் நிதானம் இழக்கவில்லை காவல் துறை. அதுவே அன்றைய வெற்றியாக அமைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கூடவே அவருக்குக் கிடைத்த ஒரு செய்தி அப்போதைக்கு அவரைத் திருப்திப் படுத்துவதாக இருக்கவே மேற்கொண்டு தொழிலாளர்களை விசாரிப்பது என்பதான நடைமுறையை இனி நிறைவேற்றத் தேவையில்லை என்றுதான் தோன்றியது அவருக்கு.
( 6 )
பொசுக்கும் வெயிலில் ஓட்டமும் நடையுமாக சூரி வேகமெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்த பொழுது அவனைக் கடந்து சென்ற காவல்துறையின் வாகனங்கள் அவனைச் சற்றே தயங்கத்தான் வைத்தன. ஏதேனும் சாலை விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று நினைத்தவனுக்கு, ஒரு ஆம்புலன்சும் கூடவே வேகமெடுத்தது அதை உறுதிப்படுத்தியது. ஆனால் கடந்து போகும் ஒரு ஜீப்பை அவனால் மனதில் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.காலையில் கடை வாசலில் பார்த்த மாதிரி இருக்கிறதே! என்று நினைத்தான். எத்தனையோ கேசுகள் அவர்களுக்கு இருக்கும். நாம் ஏன் நினைக்க அதைப்பற்றி என்று போய்க் கொண்டிருந்தவன்தான். தொடர்ந்து சென்ற பல காவல் துறை வாகனங்கள் அவன் தயக்கத்தை மேலும் அதிகப்படுத்தின. ஒரு டூவிலரில் வந்து கொண்டிருந்தவரிடம் வாய்விட்டுக் கேட்டபோது "நாலு ரோடு சந்திப்புல ஒரே கலவரமாக் கெடக்குய்யா…"என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனவரைப் பார்த்தவாறே நின்றுவிட்ட இவனுக்கு மேற்கொண்டு இந்த நேரத்தில் அங்கே போவது அத்தனை சரியில்லை என்று ஏனோ தோன்றி விட்டது. ஏதோவோர்வேகத்தில் கிளம்பி விட்டோமே தவிர போனால் அவன் இருப்பானோ மாட்டானோ உறுதி சொல்வதற்கில்லை. வேகாத வெயிலில் வெட்டி அலைச்சல் எதற்கு? முதலாளியிடம் கேட்க வக்கில்லை. அவரிடம் வாங்கித்தான் எல்லாக் காசையும் ஸ்வாஹா பண்ணித் திரும்பியாயிற்று.இனிமேல் சம்பளத்தில் கொஞ்சமாவது கழிந்தால்தான் அவரிடம் மீண்டும் கேட்க முடியும். அதுவரை வாய் திறக்க ஏலாது. இந்தப் பயல் ஏதாச்சும் கொஞ்சமாவது கொண்டு வந்து தருவான் என்று பார்த்தால் ஆளையே காணோமே? இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியிருப்பானாம்?அப்படிக் காசை வாங்கி என்னதான் செய்கிறான்? ஏதேனும் வியாபாரம் அது இது என்று இருந்தாலும் பரவாயில்லை. எந்த ஊன்றலும் கிடையாது.பிறகு காசுகளைப் பல பேரிடம் இப்படி கடன் வாங்கிக்கொண்டு அவற்றை யாரிடம்தான் கொடுக்கிறான்? ஏதேனும் குடி,கூத்தி என்று திரிகிறானோ?இவனுகளயெல்லாம் நம்பிப் பணத்தைக் கொடுத்தது நம்ப தப்பு. ஏதோ சொந்த பந்தம்னுட்டு வந்து கெடக்கானேன்னு பார்த்தா, எதேதோ ஒண்ணு ரெண்டு சட்ட துணிமணிய வேறே எடுத்திட்டுப் போயிட்டான்.
நல்லவேள…அடுத்தாளு துணிகளக் கைய வைக்காமப் போனானே அந்த மட்டுக்கும் பரவால்ல…எந்துணியை எடுக்கிறவன் ஒரு வார்த்தை வாய்விட்டுக் கேட்க வேண்டித்தான…மாட்டேன்னா சொல்லப் போறேன்….எத்தன உரிம….மாமன் முறைன்னா அத்தன நெருக்கமா?யாருடாதுன்னு கேட்டவுகளுக்கு பிரண்டுன்னு சொல்லி வச்சனே…அது ஏன்?அக்கா பையன்னு சொன்னா என்ன? அது எப்புடி? நாந்தான் அநாதப்பயன்னு முத்திர குத்தி வச்சிருக்கனே? பெறவு பூராவும் பொய்யின்னுல்ல ஆயிப்போகும்? என்னவோ சொன்னம், என்னவோ இருக்கம்…இதுக்கெடைல இவன் வேற…நாமளே ஒரு தண்டம்…நம்மள அண்டி இன்னொரு தண்டமா?சிரித்துக் கொண்டான் சூரி. எத்தனை வேகமாய் கால்கள் முன்னெடுத்தனவோ அத்தனை வேகமாய் வந்த வழியில் திரும்பி விட்டன.
( 7 )
கான்ஃப்ரன்ஸ் உறாலில் அத்தனை தொழிலாளர்களும் அமர்ந்திருந்தார்கள்.கணேசலிங்கத்திற்கு மனதிற்குள் பெருமை பொங்கியது. இத்தனை பணியாளர்களா என் கடையில் உள்ளார்கள்? தனக்குத்தானே சந்தோஷப் பட்டுக் கொண்டார்.
அவரும் ஒரு சாதாரணத் தொழிலாளியாகத்தான் அந்த நகைக் கடை வீதிக்குள் புகுந்தார். அது முப்பது ஆண்டுகள் முன்பு. இன்று அவப் பெயர்சொல்லும் மிகப் பெரிய நகைக் கடையின் அதிபர். ஆனால் அவர் என்றுமே தன்னை முதலாளி என்று நினைத்துக் கொண்டதேயில்லை. அவர்களில் ஒருவராகத்தான் தன்னை இன்றும் கொள்கிறார் அவர். தன் பணியாளர்களின் வீட்டு விசேடங்களில், துக்க நிகழ்வுகளில் என்று ஒன்று விடாமல் கலந்து கொள்கிறார். அவர்களின் தேவைகளை அறிந்து செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய நேரத்தில் இயன்றவரை செய்கிறார்.யாரும் தன்னை வித்தியாசமாய் நினைத்து விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருக்கிறார். எல்லா லட்சணங்களும் பொருந்திய ஒரு முன்னேறிய தொழிலாளியாகத்தான் தன்னை வரித்துக் கொண்டிருக்கிறார்.
"தோழர்களே,. நண்பர்களே, உங்கள் எல்லோருக்கும் என் பணிவான வணக்கங்கள். பிரதி மாதமும் நாம் எல்லோரும் இங்கே கூடுவது நம்மிடையே ஏற்றத் தாழ்வு என்று எதுவும் இல்லை என்பதற்கும்,நம்மிடையே இருக்கும் சந்தோஷங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கும் ஆன சந்திப்பு என்றே கொள்ளலாம். நீங்கள் உங்களுக்கிடையே இருக்கும் பிரச்சினைகளை என்னிடம் மனம் விட்டுப் பேசலாம். உங்கள் குடும்பச் சிக்கல்களை என்னிடம் தாராளமாகத் தெரிவித்து இயன்றவரை தீர்வு கொள்ள முனையலாம். இன்று நாம் இங்கே கூடியிருப்பது இதற்காக மட்டும் அல்ல. நம்மோடு பணியாற்றும் இரு தொழிலாளத் தோழர்களுக்கு இன்று பிறந்த நாள் என்ற சந்தோஷமான, நிறைவான நிகழ்வுக்காகவும்தான். அந்த இரு அன்பர்களையும் அவரின் குடும்பத்தாரையும் இந்த மேடைக்கு நான் அழைக்கிறேன். உங்கள் எல்லோரின் நீண்ட பலத்த கரகோஷத்தின் நடுவே அவர்களின் வரவு இங்கே மகிழ்ச்சியூட்டட்டும்…."
‘எங்க கிடைப்பார் இப்டி ஒரு முதலாளி…அவர் நல்லா இருக்கணும்…நல்ல மனசு உள்ளவங்களுக்கு எப்பவுமே நல்லதுதான் நடக்கும்…எவ்வளவு செய்றாரு எங்களுக்கெல்லாம்…அவருக்கொழைக்காம வேறு யாருக்கு ஒழைக்கிறது? ஆனா ஒண்ணு, என்ன காரணத்துனால என்னை வீட்டுக்கு வர வேணாம்னு சொன்னாருங்கிறதுதான் தெரில…காரணமில்லாமச் சொல்லியிருக்க மாட்டாரு…அது அவர் வீடு, அவர் இஷ்டம்…நாம் யாரு கேட்குறதுக்கு…பொம்பளைக்குப் பொம்பள ஒத்துக் போகும்னு கூடச் சொல்லியிருக்கலாம்…
அடுப்படிக் காரியத்துக்கு ஒத்து வரும்னு கூட நினைச்சிருக்கலாம். அவுக இஷ்டம்தான…வீட்டுல இருக்கிற பொம்பளைகளுக்கு வசதி செய்து கொடுக்கலேன்னா வீட்டுக் காரியம் கெட்டுடும்ல…அதான முக்கியம்…இத்தன தொழிலாளிங்கள வச்சு மேய்க்கிற முதலாளிக்கு இந்தச் சின்ன விஷயம் கூடத் தெரியாதா என்ன? நானே இதச் சட்டுன்னு புரிஞ்சிக்கிட்டேன்…அவர்அனுபவத்துக்கு இது எம்மாத்திரம்? கடைக்குப் போடான்னுதான சொன்னாரு…வெளில போன்னா சொன்னாரு…அப்டிச் சட்டுன்னு சொல்லிப்புடுவாரா? இல்ல சொல்லிப்புடுவாரான்னு கேட்குறேன்? அவர் ஜட்டி பனியன் எம்புட்டுத் துவைச்சுப் போட்டிருக்கேன்…அதெல்லாம் மறந்துடுவாரா? தங்கிட்ட வேல பார்க்கிற தொழிலாளிகளோட பிறந்த நாளக் கூட ஞாபகம் வச்சிக்கிட்டு விழா எடுக்கிறாரே…எந்த முதலாளி செய்வான்?எவனுக்கு மனசு வரும் இப்டிக் கை வளைஞ்சு கொடுக்கிறதுக்கு? இதே வீதில எத்தன கடை இருக்கு? எம்புட்டுப் பேரு செய்றாக இதையெல்லாம்?அதெல்லாம் அடிமட்டத்துலேர்ந்து வந்தவனுக்குத்தான தெரியும்? சும்மா மனசு வருமா? வாழ்க்கைல அடிபட்டு, நொந்து, நூலானவனுக்குத்தான் அடுத்தவன் கஷ்ட நஷ்டம் புரியும்…அது நம்ப முதலாளிதான்….அதுனால ஏன் வீட்டுக்கு வர வாணாம்னு சொன்னாருங்கிறதப் பெரிசு பண்ணக் கூடாது. அது வீட்டுப் பொம்பளைங்க சமாச்சாரம்…- நினைத்துக் கொண்டே விழா விருந்தை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சூரி.
மெல்லிசைக் கச்சேரி ஒரு புறம் முழங்கிக் கொண்டிருந்தது. பஃபே சிஸ்ட விருந்தினைக் கையில் வைத்துக் கொண்டு அங்கங்கே கோஷ்டி கோஷ்டியாய் நின்றிருந்த தொழிலாளர்களின் முகங்கள் மகிழ்ச்சியிலும் ஆரவாரத்திலும் பூரித்திருந்தன. அந்தப் பயலைக் கூட்டி வந்திருந்தால் அவனையும் சே ர்த்துத் திங்க வைத்திருக்கலாமே என்று ஏனோ சம்பந்தமில்லாமல் அந்த நேரத்தில் தோன்றியது சூரிக்கு. அவ்வளவு தூரம் போனவன் தேவையில்லாமல் திரும்பி வந்து விட்டோமோ என்று நினைத்துக் கொண்டான்.
( 8 )
இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் அதிர்ந்தார். அவர் சந்தேகத்தில் அவன் இல்லவேயில்லை.ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு பிக்பாக்கெட் அடித்துக் கொண்டு திரிபவன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார் அவனை.அவ்வப்போது கேசுகளுக்கு உதவுபவன். ஏதாச்சும் வேலைகளப் பார்த்து பொழைக்கப் பாரு என்று எத்தனையோ முறை எச்சரித்து விட்டிருக்கிறார்.அவ்வப்போது கவனிக்கவும் செய்திருக்கிறார். அங்கங்கே ஹோட்டல்களுக்குத் தண்ணீர் எடுத்து ஊற்றுபவனாகவும், சர்வராகவும்,சினிமாத் தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவனாகவும், டீக்கடையில் எடுபிடியாகவும்தான் காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தான் அவன். சமீபமாக அவன் பெயர் எதிலும் அடிபடவில்லை. அந்த மட்டுக்கும் திருப்தியாகவேதான் இருந்தார். ஏதோ சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவனாக ஒருவனாவது இருக்கிறானே என்று ஒரு ஆறுதல்.அவர் சர்வீஸில் யாரையும் அப்படிப் பார்த்ததில்லை. ஏதாவது குற்றங்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். ஒன்று மாற்றி ஒன்று.இல்லையெனில் முன்னை விடப் பெரிய குற்றம் என்றுதான் போகும்.எவனும் அடங்கிக் கிடந்ததுமில்லை. அப்படி அடங்கிக் கிடக்க சூழல் அவர்களை விட்டதுமில்லை. ஆனால் இவன் அப்படியில்லையே?வித்தியாசமாய்த்தானே இருந்தான். எப்படி மாறினான்? கையில் வைத்திருந்த அந்த ஒப்புதல் வாக்குமூலம் அவன் கதையைச் சொன்னது அவருக்கு.
கோபால், த.பெ. சந்தானகிருஷ்ணன், வயது 34, எவ்விதமான வற்புறுத்தலும்,அச்சுறுத்தலும் இல்லாமல் தானாகவே முன் வந்து கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் வருமாறு:
என் பெயர் கோபால் என்கிற கோபாலன். என் அப்பா சந்தானகிருஷ்ணன்,செந்தூர் மில்லில் செக்யூரிட்டியாக இருந்து ரொம்ப வருஷத்துக்கு முன்பே செத்துப் போனார். அம்மா கொஞ்ச நாளைக்கு முன்புதான் இறந்து போனார்.எனக்குத் தம்பி தங்கச்சிகள் என்று யாரும் கிடையாது. எனக்கு வேலைகள் என்று எதுவும் இல்லை. சில நாள் லாரியில் ஓடுவேன். கிளீனராக இருக்கும் வேலை எனக்குப் பிடித்திருந்தது. பல ஊர்கள் பார்க்கலாம்,சுற்றலாம் என்ற ஆசையில் அந்த வேலயைப் பார்த்தேன். வண்டி நிற்கும் இடங்களிலெல்லாம் பெண்களோடு ஜாலியாக இருக்கும் டிரைவர்களைப் பார்த்து எனக்கும் அது பழக்கமானது. பிறகு நானும் வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டேன். ஹெவி லைசன்ஸ் ஒன்றும் ரொம்பவும் கஷ்டப்பட்டு நாலு வருஷத்துக்கு முன்பு வாங்கிக் கொண்டேன். பிறகு லாரி ஆபீஸ் முதலாளிமார்களை கையைக் காலைப் பிடித்துக் கெஞ்சி ஒரு வண்டியையும் பெற்றுக் கொண்டு பக்கத்து ஸ்டேட்டுக்கெல்லாம் போய் வந்தேன். வண்டி ஒரு நாள் ஆக்ஸிடென்டில் மாட்டிக் கொண்டது.அதிலிருந்து எனக்கு வேலை போனது. நான் செக்யூரிட்டியாகக் கட்டியிருந்த பணமும் அத்தோடு கழிந்து போனது. வண்டியில் சென்று கொண்டிருந்த நாட்களில் பெண்கள் பழக்கங்களோடு தண்ணியடிக்கும் பழக்கமும் எனக்கு உண்டு. வேலையும் போய், கையில் காசும் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தபோது எனக்கு உதவியவன் என் மாமன்தான். அவர் அடிக்கடி எனக்குப் பணம் கொடுத்து உதவியிருக்கார். அவுங்க குடும்பத்துக்கு எங்க அம்மா டவுனுக்கு வந்த புதுசுல நிறைய ஒதவி செய்திருக்காங்க. அதுதான்;அவன் எனக்கு ஒதவி செய்ய வச்சிருக்கணும். அவன என் வழில இழுக்க நா எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனா அவன் மாட்டேன்னுட்டான்.இதனால அவன் மேல கோபம் எனக்கிருந்திச்சி. எனக்கு அவன் ஒரு நல்ல கூட்டாளியா இருப்பான்னு நினைச்சேன். அதுக்கு அவன் ஒத்துக்கலை. ஒரு நா நானும் அவனும் ரெண்டாம் ஆட்டம் சினிமாப் பார்த்திட்டு ஓரமா இருந்த பெட்டிக்கடைல கொஞ்சம் தண்ணியையும் ஊத்திக்கிட்டு வந்திட்டிருந்தோம். அன்னைக்குத்தான் அவன் முத முதல்ல குடிச்சான்.பாலத்துக்கு அடில வர்றைல குறுக்க வந்த ஒரு பொம்பளைய கத்தியக் காட்டி மிரட்டி வாடின்னேன். அவ மாட்டேன்னு மறுத்தா. இப்ப என்னோட வறப்போறியா இல்ல உன் பொடவையை அவுக்கட்டுமான்னு மிரடடினேன்.அவ சேலை நுனியைப் பிடிச்சுக் கிழிச்சு பயமுறுத்தினேன். அந்தப் போதையிலும் என் மாமன் இதெல்லாம் வாண்டாம்னான். இதுதான் சாக்குன்னு அவ அவன் பின்னாடி போய் ஒளிஞ்சிக்கிட்டா. கைல கத்தியோட இருந்த என்னைத் தடுத்தான் என் மாமன். ஒன்னையக் குத்திருவேன்னு நா அவனையும் பயமுறுத்தினேன். சரியான எடத்துல மாட்டியிருக்கிற இவள அனுபவிக்காம விட மாட்டேன்னு கத்தினேன். அந்த நேரம் பார்த்து போலீஸ் வேன் ஒண்ணு அந்தப் பக்கமா வர்ற சத்தம் கேட்டுச்சு. என் மாமன் என்னையும் இழுத்திக்கிட்டு ஆத்துக்கு அந்தப்புறம் இருக்கிற கெடங்கு போல பள்ளத்துல சடார்னு குதிச்சிட்டான்.போலீஸ்காரவுக அந்தப் பொம்புளய விசாரிச்சிக்கிட்டு இருக்கிறத நாங்க ஒளிஞ்சிருந்து பார்த்துக்கிட்டிருந்தோம். அவ என்ன சொன்னாளோ தெரில, அவளையும் ஏத்திக்கிட்டு எதிர்த்திசைல அந்த வேன் போயிடுச்சி. போதை தெளிஞ்ச அந்த வேளைல நான் என் மாமன்கிட்ட மன்னிப்பு கேட்டுக் கிட்டேன். ஒழுங்கா எனக்கு ஒரு வேலை இருந்திருந்தா இதெல்லாம் நடக்குமா மாமான்னு வருத்தப் பட்டேன். அவன் எனக்கு ஆறுதல் சொன்னான். அது மட்டுமில்ல. அடிக்கடி பணம் கொடுத்து என் பசியைப் போக்கினான் அவன். ஊருக்கு வந்தா பணத்தோடதான் வருவேன்னு சபதம் போட்டுட்டு அவன் வந்த கதையைச் சொன்னப்போ எனக்குப் பரிதாபமா இருந்திச்சி. எனக்குக் கூடிய சீக்கிரம் ஒரு வேலை வாங்கித்தர்றதா வேற சொல்லியிருந்தான். நா அத நம்பிக் காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தேன். ஆனாலும் வெட்டிக்கித் திரியறதைப் பார்த்து போலீஸ் என் மேல சந்தேகப்படுதோன்னு என்னவோ ஒரு பயம் என் மனசுல இருந்திச்சி. அப்படியான ஒரு நாள்லதான் அவனோட அவன் முதலாளி வீட்டுக்கு நா போனேன். எனக்கு வேலை வாங்கித் தர்றதா சொல்லியிருந்தானே அது கிடைக்குமோங்கிற ஆசைல நானும் போனேன்.ஆனா அன்னைக்கு அவன் நிலைமையே சரியில்லாம இருந்திச்சி.எதுக்கோ அவன் மொதலாளி அவனச் சத்தம் போட்டு விட்டிட்டாரு.
ரொம்ப நேரம் அந்த வீட்டுல இருந்ததுல அந்த வீட்டோட படம் அப்படியே என் மனசுல பதிஞ்சி போச்சி. என்னென்னவோ யோசனையெல்லாம் வந்திடுச்சி எனக்கு. எதுக்கு வாழ்க்க பூராவும் இப்படிக் கிடந்து கஷ்டப்படணும்னு அப்பத்தான் தோணிச்சி. என் மாமன்கூட இருந்த மறுநாதான் நானா தைரியமா அந்தக் காரியத்துல எறங்கினேன். ஊருல தென்னமரம் ஏர்ற பழக்கம் எனக்கு உண்டு. காய்ப்புக் காலத்துல நூத்துக்கணக்கான மரத்துல ஏறி எறங்கியிருக்கேன். அந்தப் பழக்கம் எனக்கு ஒதவிச்சு. எந்தப் பக்கமா ஏறி ஈஸியாப் போய் வந்தனோ அந்தப் பக்கமாவே எறங்கியும்வந்திட்டேன். ஆனா என்னோட அந்தத் திருட்டுல என் மாமன் மாட்டுவான்னு நா நினைக்கவேயில்ல. அவனக் கூப்பிட்டு விசாரிக்குது போலீசுன்னு தெரிஞ்சப்போ என் மனசு கேட்கல. என்னால அவன் வாழ்க்கை கெடக் கூடாதுன்னு மட்டும் கேட்டுக்கறேன்.அதனாலதான் எல்லா உண்மையும் சொல்லிட்டு நானே என்னை சரண்டர்ஆக்கிக்கிட்டேன். நா செய்த தப்புக்கு என் மானத்தக் காக்க எனக்குத் துணிமணி மொதக் கொண்டு கொடுத்து ஒதவின மாமன் அடி வாங்குறது என் மனசுக்குப் பொறுக்காது. ஆனாலும் அவர் சொன்னத வச்சித்தான் போலீசு என்னத் தேடி வந்திச்சிங்கிறதுல எனக்குக் கொஞ்சமும் கோபமில்ல. ஏன்னா குத்தம் செய்தவன் நாந்தான். அவுரு எந்தத் தப்பும் செய்யல. அவுரு என்ன அவர் மொதலாளி வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனது எனக்கு ஒதவத்தான். ஆனா அங்க எம்புத்தி பிரண்டிடுச்சி. இந்தத் திருட்டு முழுக்க என் புத்தில தோணி நானாவே செஞ்சது. இதுக்கும் என் மாமனுக்கும் எந்தச் சம்பந்தமுமில்ல…அவர மன்னிச்சு விட்றணும்னு பணிஞ்சு கேட்டுக்கிறேன். என் தப்புக்கு எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏத்துக்க நா தயாரா இருக்கேன்….ஒப்பம் கோபால்.
( 9 )
போலீஸ் கூப்பிட்டு விசாரித்ததிலேயே மிகவும் குன்றிப் போயிருந்தான் சூரி. கடையில் உள்ள எல்லாப் பணியாளர்களையும்தான் அழைத்து விசாரித்தார்கள் என்றாலும் இவனுக்கான விசாரணை சற்று வித்தியாசமாய் இருந்ததாகவே தோன்றியது அவனுக்கு.
ஊரிலிருந்து வந்ததும் வராததுமாக முதலாளி தன்னை வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொன்னதின் காரணம் இப்பொழுதுதான் புரிய ஆரம்பித்தது. ஆனாலும் தன் மேல் ஏன் அவர் சந்தேகப்பட வேண்டும்?தான்தான் ஊரிலேயே இல்லையே? பின் ஏன் இப்படி விசாரித்தார்கள்?குறிப்பாகத் தன் மேல் சந்தேகம் வர எது காரணமாயிருந்திருக்கிறது?புரியவேயில்லை அவனுக்கு.
தன்னை அடிச்சி விசாரிக்கிறாங்கன்னு தெரிஞ்சதும் கோபாலு வந்து சரண்டர் ஆன விஷயம் அவனை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இவனுக்கு எப்படி முதலாளி வீட்டில் திருடும் எண்ணம் உதித்தது?; ஒரே ஒரு முறைதானே அவனை அவர் வீட்டுக்கு அழைத்துப் போனது. அந்தச் சில நிமிடங்களிலேயா இந்தத் திட்டமிட்டிருக்கிறான் பாவி! என்ன ஒரு தைரியம் ? பாம்பை மடியில் கட்டிக் கொண்டு சகுனம் பார்த்திருக்கிறோமே?இவனுக்கு உதவி செய்யலாம் என்று மனமுவந்து நினைத்ததற்கு இதுதானா பரிசு? வியப்பு விலகாமலேயே கிடந்தான் சூரி. ( 10 )
"தேங்க்யூ வெரிமச் மிஸ்டர் ஜார்ஜ் ஸார், உங்க முயற்சியை எத்தனை பாராட்டினாலும் தகும். இத்தனை சீக்கிரம் இதை சக்ஸஸ் பண்ணுவீங்கன்னு நா நினைக்கவேயில்லை. வெரி க்யூட் அன்ட் க்விக்.காவல்துறையின் உண்மையான முயற்சிக்குப் பின்னால மூளை செயல்படுற வேகம் யாராலேயும் ஊகிக்க முடியாதுங்கிறதை நிரூபிச்சிட்டீங்க…ரொம்ப மகிழ்ச்சி…சொல்லியடிக்கிற மாதிரி அந்தச் சூரியை வீட்டு வேலைகள்லோ;ந்து நிறுத்துங்கன்னதும், அதனைத் தொடர்ந்து அதை ஃபாலோ அப் பண்ணினதும், ரொம்ப ஸ்பீடுதான்….ஆச்சரியமாயிருக்கு…அது எப்படிச் சாத்தியமாச்சு உங்களுக்கு?"
"ந்நோ….ந்நோ…ந்நோ…..இ டீஸ் ப்யூர்லி ஆன் அர்இன்வெஸ்டிகேஷன்….அதெல்லாம் நீங்க கேட்கக் கூடாது. அது தொழில் ரகசியம்… …ஓ.கே.. ஆல் த பெஸ்ட்….." சொல்லிவிட்டு விடைபெற்றுக் கொண்டார் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ்.
வெளியேறும் போது அவரின் பார்வை ஒருகணம் அந்த வேலைக்காரப் பெண்ணின் மீது படிந்து திரும்பியதை யாரும் கவனித்திருக்கவில்லை.
அவள் போலீஸ் இன்ஃபார்மர் என்பதையோ, அவள்தான் மாடிப் பால்கனியை ஒட்டியிருந்த லைட் கம்பத்தில் கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த கைலித்துணியின் ஒரு சிறு கிழிசலைச் சாட்சியாய் எடுத்துக் கொடுத்தவள் என்பதையோ, அதுதான் சூரி அவன் அக்கா பையன் கோபாலுக்குக் கொடுத்து உதவிய லுங்கி என்பதையோ, சந்தேகத்தின் பேரில் எல்லாத் தொழிலாளர்களும் விசாரிக்கப்படுகையில் அவர்களின் இருப்பிடமும் பார்வையிடப்பட, தான் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த சிலதுணிகளைக் கோபாலுக்குக் கொடுத்து உதவிய விபரத்தை சூரி சொல்லியிருந்ததும் ஆன வகையில்தான் இந்தத் துப்புத் துலங்கியிருக்கிறது என்பதை நிச்சயமாக எவரும்; ஊகித்திருக்க வாய்ப்பில்லைதான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------நிறைவுற்றது----------------------------





























கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...