14 ஜூலை 2012

“ஜன்னல் வழி வந்த பாட்டு” சிறுகதை

 (10.11.2012 - தினமணி சிறுவர் மணியில் வெளிவந்த சிறுகதை)

சுதிருக்குப் படிப்பே ஓடவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து வந்த சத்தம் அவன் கவனத்தைக் கலைத்தது. அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் இடையில் ஆறடி இடைவெளிதான் இருந்தது. ஜன்னலைத் திறந்தாலே அந்த வீடு தெரியும். நேர் எதிரில் சுவர்தான் எனினும், நாலடி தள்ளி அவர்கள் வீட்டு ஜன்னல் இருந்தது. ஜன்னலைத் திறந்தேதான் வைத்திருந்தார்கள். இரவு படுக்கைக்கு முன்புதான் அடைத்தார்கள்.
கொசு வரும் என்று அடைப்பதென்றால் மாலை ஆறுக்கெல்லாம் அடைத்தால்தான் சரிவரும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. சுதிர் அம்மா மாலை ஆறுக்கெல்லாம் பட் பட்டென்று ஜன்னல்களைச் சாத்தி விடுவாள். உள்ளே அறையினுள் கசகசவென்று ஃபேன் ஓடிக் கொண்டிருக்கும். வெளிக்காற்று வராதது சுதிருக்கு என்னவோ போல் இருக்கும். கதவைத் திறப்போமென்றால் எதிர் வீட்டு ஜன்னல் திறந்து கிடக்கிறது. அதுவழியாகப் பாட்டு அலறுகிறது..எப்பொழுதும் ஏதேனும் பக்திப் பாடல்தான். அல்லது கடவுளைத் துதிக்கும் ஸ்லோகங்கள். சினிமாப் பாட்டு என்று ஒரு நாள் கூட இவன் கேட்டதில்லை. ஆனால் அதை ஏன் இப்படி அலற விடுகிறார்கள்? மெதுவாய் வைத்துக் கொண்டு கேட்க வேண்டியதுதானே? . அடுத்த வீட்டில் ஒரு படிக்கும் பையன் இருக்கிறானே, அவனுக்குத் தொந்தரவாய் இருக்குமே என்கிற நினைப்பெல்லாம் அவர்களுக்குக் கிடையாதா? இத்தனைக்கும் அந்த வீட்டில் இரண்டே இரண்டு பேர்கள்தான் இருந்தார்கள். கணவன், மனைவி.
சரி, மொட்டை மாடிக்குச் சென்று விடுவோமென்றால் அங்கு இதற்கு மேல். இரு பக்கத்து வீடுகள், எதிர்வீடுகள் என்று எல்லா இடமும் டி.வி.யும், எஃப்ஃஎம் ரேடியோக்களும் அலறுகின்றன. ஏனிப்படி எல்லோரும் சத்தமாக வைத்துக் கொள்கிறார்கள்? அவர்கள் இருக்கும் அறைக்கு மட்டும் கேட்டால் போதும் என்பது போல் அளவாய் வைத்துக் கேட்க வேண்டியதுதானே? யோசித்தான் சுதிர்.
பள்ளியில் அவன் உட்கார்ந்திருக்கும் இடம் ஜன்னலோரம். அவனின் செவன்ந்த் “சி“ பிரிவு மட்டும்தான் அதிர்ஷ்டமாய் அந்த இடம். வெளி மரத்தடிக் காற்று ஜிலு ஜிலுவென்று வந்து வருடிக்கொண்டேயிருக்கும். வெயில் வெப்பமே தெரியாது. சமயங்களில் தன்னை மறந்து தூங்கக் கூடச் செய்திருக்கிறான் சுதிர். ஒரு நாள் டீச்சரிடம் அதற்காக அடியும் வாங்கினான். எங்கே டீச்சர் இடத்தை மாற்றி விடுவாரோ என்று பயந்தான். நல்லவேளை அப்படி எதுவும் நடைபெறவில்லை.
இங்கேயென்றால் மரங்களே இல்லை. இருந்த ஓரிரண்டு மரங்களையும் பக்கத்து பிளாட்டில் வெட்டி எறிந்து விட்டார்கள். மரங்கள் வானுயர வளர்ந்து அடர்ந்து படர்ந்து நிழல் கொடுக்கவும், அள்ளி அள்ளிக் காற்று வழங்கவும் பல ஆண்டுகளாகின்றன. அப்படி வானுயர்ந்த மரத்தை நிமிடத்தில் வெட்டிக் கீழே சாய்த்து விட்டார்கள். என்ன மனிதர்கள்? சொல்ல ஆள் இல்லை. கேட்க எவரும் இல்லை.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அவன் கண்ணாரக் கண்ட காட்சி அது. அவன் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. விடிகாலை ஆறரை மணிக்கே அவர்கள் வந்து விட்டார்கள். நாலு பேர். ஒருவன் மர உச்சிக்கு ஏற ஆரம்பித்தான். ஏறும்போதே இடை இடையில் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்த மரக் கிளைகளை வெட்டிச் சாய்த்துக் கொண்டே முன்னேறினான். படிப்படியாய்ப் போய் உச்சிக்குக் கொஞ்சம் கீழே அந்த வடக் கயிற்றைக் கட்டினான்.
மரத்தை வெட்டுவது வருத்தமாக இருந்தாலும், அதை வேடிக்கை பார்ப்பது சுதிருக்குப் பிடித்திருந்தது. அவனால் தடுக்க முடியாதே? கிளையைப் பூராவும் வெட்டியாயிற்று. பிறகு எதற்கு மேலே கொண்டு கயிற்றைக் கட்டுகிறார்கள்? என்று யோசித்தான். ஒரேயடியாய் கீழே பூமிக்கு மேலே அடியொட்டி ரம்பத்தைப் போட்டு அறுத்து நெட்டுக்கக் கீழே சாய்க்க வேண்டியதுதானே? என்று யோசித்தான். பள்ளியில் காம்பவுண்டுக்கு வெளியே போக்குவரத்துக்கு இடைஞ்சலாய் இருக்கிறது என்று ஒரு மரத்தை அப்படி வெட்டினார்கள். அதைப் பார்த்திருக்கிறான் இவன். அப்பொழுதுதான் அந்தத் தப்பு மனதில் உறுத்திற்று. நெட்டுக்கச் சாய்த்தால் பக்கத்து வீட்டின் மேலல்லவா விழும். அதனால்தான் பகுதி பகுதியாய் வெட்டப் போகிறார்களோ என்று யோசனை வந்தது அவனுக்கு. மனதுக்குள் அத்தனை எதிர்பார்ப்பு. எப்படி வெட்டி, வெட்டி, இறக்குவார்கள் என்று பார்க்க ஒரே ஆர்வம்.
மரத்தின் உச்சியிலிருந்து சுமார் ஏழடிக்கு இடம் விட்டு விட்டு வடக் கயிற்றைக் கட்டினார்கள். வலது பக்கமும் இடது பக்கமுமாயும், பக்கத்துக்கு இருவர் எனக் கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். மேலும் இருவர் பக்கத்து வீட்டின் மாடியிலிருந்து நடுவில் கட்டப் பட்டிருந்த கயிற்றின் பகுதியைப் பிடித்துக் கொண்டார்கள். மூன்று கட்டுக்கும் கீழே மரத்தின் மொத்தத் தடிமனில் முக்கால் பங்கு அறிவாளால் வெட்டியதும் மரத்தில் ஏறியிருந்த ஆள் கீழே இறங்கிக் கொள்ள மூன்று பக்கமும் பிடித்திருந்தவர்கள் மெது மெதுவாய் இழுக்க மறத்தின் வெட்டிய பகுதி முறிய ஆரம்பித்தது. மெதுவே இழுத்து நன்றாய்த் தலை குனிந்ததுபோல் சாய்ந்ததும், கடைசியாக விக்கென்று ஒரு இழு. வெட்டின பகுதி சட்டென்று மரத்திலிருந்து விடுபட்டது. அதே நிமிடம் மாடியிலிருந்து பிடித்தவர்கள் கவனமாய் இழுத்துப் பிடிக்க, விடுபட்ட மரத்துண்டு ஆடித் தொங்க, கீழே தரையிலிருந்து பிடித்த இருபக்க ஆட்களும் மெல்லக் கயிற்றோடு இணைந்த பகுதியைத் தரையில் இறக்கினார்கள்.
எவ்வளவு அற்புதம்? பக்கத்துக் கட்டடங்களுக்கு எவ்விதச் சேதமுமில்லாமல், எந்த வீட்டில் வளர்ந்திருக்கிறதோ அந்த வீட்டுச் சுவர்களுக்கும் ஒரு சிறு காயமுமில்லாமல்…பாதுகாப்பாக…எத்தனை கவனமாய் செய்கிறார்கள்? ஐந்தாறு துண்டுகளாக அந்த மரத்தை இதே போல் பகுதி பகுதியாக வெட்டி இறக்கி விட்டார்கள்.
கண்களை அப்படி இப்படி நகட்டவில்லை சுதிர். மொத்த மரத்தையும் வெட்டி முடிக்கும்வரை மாடியிலேயே உட்கார்ந்து விட்டான். கையில் பூஸ்ட்டோடு வந்த அப்பாவும் குழந்தை போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததும், அவர் மடியில் போய் சாய்ந்து கொண்டே அப்பா கொடுத்த பானத்தை அருந்தினான் சுதிர்.
பார்த்தியா, பெரிய மெஷினை வச்சு செய்ற வேலையை சாதாரண ஆளுங்க எப்படி சாமர்த்தியமா செய்துட்டாங்க பார்….என்றார்.
அப்பா சொல்வதை புரிந்தும் புரியாமலும் கேட்டான் சுதிர்.
இதத்தான் அனுபவ அறிவுன்னு சொல்வாங்க….அந்த ஆளுங்க யாரும் படிக்காதவங்கதான்….அவுங்க பேச்சப் பார்த்தாலே தெரியுதுல்ல…அதுக்காக இந்த அனுபவமான வேலைத் திறமையை ஒதுக்கிட முடியுமா? எத்தனை எடத்துல மரத்தை வெட்டின அனுபவம் இருந்தா இவ்வளவு சேஃப்டியா செய்வாங்க? அவுங்க ஒவ்வொருத்தனோட உடம்பைப் பாரேன்….என்றார் அப்பா.
சுதிர் உற்றுப் பார்த்தான். கரும்பாறை போல் வெயிலில் பிரகாசித்தது அவர்கள் மார்பு. அடுக்கடுக்காக மார்பிலிருந்து கீழே இறங்கிய வயிற்றுப் பகுதி சுருங்கி அழகாகப் பளபளத்தது. உடலுழைப்பு உள்ள அவுங்களுக்கு நம்மள மாதிரி வியாதி வெக்கை வராது. காய்ச்சல், கரப்புன்னு எதுவும் அண்டாது. என்னைக்காவது சூரிய ஒளில நாம நம்மோட உடம்பைக் காண்பிச்சிருக்கோமா? இல்லைதானே…ஆனா…அவுங்க செய்ற வேலையே அப்டித்தான்…எங்க உடலுழைப்பு இருக்கோ அங்கே வியாதி அண்டாது. அதுதான் உண்மையாக்கும்…உழைக்கிறதுனால உடம்பு உறம்பெறுமே தவிர, தளர்ந்து போகாதாக்கும்…உடம்பைத் திராணியா வச்சிக்கிட்டாதான், வாழ்க்கைல மத்தவங்களுக்கு உதவ முடியுமாக்கும்….
நன்றாகப் படிப்பதோடு, அவர்களைப்போல் தானும் தன் உடம்பை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது சுதிருக்கு. ஆனால் அந்த வீட்டிற்கே அழகாய் இருந்த அந்த மரம் போனது பிற்பாடு வருத்தமாகத்தான் இருந்தது. தான் எப்படிச் சொல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டான். அந்த மரத்தில் இருக்கும் பறவைகள் அணில், ஓணான் என்று பார்த்த பலதையும் நினைத்துக் கொண்டான். இனி அவை எங்கே போகும் என்று தள்ளியிருந்த சிறு சிறு மரங்களில் அவன் கவனம் போனது. அப்பாவிடம் சொன்னான்.
நாம ஒரு வீடு கட்டினா நிறைய மரம் வைக்கணும்…என்னப்பா….?
கண்டிப்பாடா கண்ணா…. என்றார் அப்பா.
எப்போது அப்பா வீடு கட்டுவார் என்றிருந்தது சுதிருக்கு.
இன்றும் பாட்டுக்குப் பயந்து மாடிக்கு வந்த சுதிருக்கு என்னென்னவோ நினைப்புகள் வந்து விட்டன. சதா அவன் பார்வை அந்த வெட்டிய மரத்தின் வீட்டின் மீதே இருந்தது. அந்த வீட்டின் அழகு குலைந்து போனது போல் தோன்றியது அவனுக்கு. அந்த மரம் இருக்கும்போதே அந்த வீட்டை ஒரு ஃபோட்டோ எடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தான். தான் படிக்கும் பள்ளி அவனுக்குப் பிடித்துப் போனதே இந்த மரங்களினால்தான். வீடு மட்டும் அருகில் இருந்தால் விடுமுறை நாட்களிலும், ஏன் தினசரியேயும் கூட. தான் படிக்க அங்கு சென்று விடலாமே என்று நினைத்துக் கொண்டான். தன் நண்பர்கள் ஒரு சிலர் அப்படித்தான் பள்ளி மர நிழலில் சென்று உட்கார்ந்து படிப்பதாகச் சொன்னது அவன் மனதில் ஏக்கத்தை விளைவித்தது. அப்பாவின் வசதிக்கு இந்தப் பகுதியில்தான் குறைந்த வாடகை என்பதை அவன் மனம் உணர்த்தியபோது தேற்றிக் கொண்டான்.
ஆனாலும் என்ன? இந்த வீட்டில் வசதியில்லாமலா இருக்கிறது என்று நினைத்துக் கொண்ட அவன், கீழே இறங்கினான். மீண்டும் அந்த அறைக்கு வந்தபோது பாட்டுச் சத்தம் ஓயவில்லை. ஜன்னலை மெல்லச் சாத்தினான். அப்படியும் சத்தம் குறையவில்லை.
நிறையப் படிக்க வேண்டியுள்ளது. திங்கட்கிழமை டெஸ்ட். நாலு சப்ஜெக்ட் படித்தாக வேண்டும். போன டெஸ்டில் விட்ட மார்க்கை இந்த டெஸ்டில் பிடித்தாக வேண்டும். இப்படி இருந்தால் ஆகாது என்று நினைக்க மனதில் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. நேரம் வீணாய் நழுவுவதை உணர்ந்து சுதாரிப்பானான்.
வெளியே வந்தான். உட்புறம் பார்த்தான். அம்மா கொல்லைப் புறத்தில். அப்பா காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். மெல்ல அடியெடுத்து வைத்து வீட்டை விட்டு வெளியேறினான்.
பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினான். ஆன்ட்டீ…….
கதவு திறந்தது.
டேய்…குட்டீ….பாய்ந்து வந்து அவனைத் தூக்கினார் அவர். அப்படியே ஒரு சுற்றுச் சுற்றினார். திடீரென்று அவர் அப்படிச் செய்ததில் பயந்துபோனான் சுதிர்.
அங்கிள்…அங்கிள்…விட்ருங்க…விட்ருங்க….பயமாயிருக்கு...கத்தினான்.
அவர் விடுவதாயில்லை. இவன் கால்களை வலது கையினால் அணைத்துத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, இடது கையினால் இவன் முதுகை இறுகப் பற்றியவாறே, விர்ர்ர்ரென்று சுழற்றினார். பயத்தில் அவரை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு விட்டான் சுதிர். ரொம்பவே பயந்துதான் போனான். அவன் அப்பாவோ அல்லது வேறு யாருமோ அவனை அப்படி என்றும் செய்ததில்லை. கீழே விட்டபோது அப்பாடா என்றிருந்தது. தலை கிர்ர்ரென்றது. திடீர் அதிர்ச்சியிலிருந்து மீளவே சற்று நேரம் பிடித்தது. தயங்கித் தயங்கி ஆரம்பித்தான்.
சொல்லுங்கள் ஐயா, தங்கள் சித்தம் என் பாக்கியம்…என்றவாறே சத்தமாய்ச் சிரித்தார் அவர். கையை வாயில் வைத்துப் பொத்தி அவன் முன்னே குனிந்தார். அவர் செய்ததைப் பார்த்ததும் களுக்கென்று சிரிப்பு வந்தது சுதிருக்கு. அடக்கிக் கொண்டு சொன்னான்.
அங்கிள், உங்ககிட்டே ஒரு சின்ன ரெக்வெஸ்ட்…நாளைக்கு எனக்கு மந்த்லி டெஸ்ட் இருக்கு….நாலு சப்ஜெக்ட் படிக்கணும்….அதுனால கொஞ்சம் உங்க வீட்டுப் பாட்டுச் சத்தத்தைக் குறைச்சுக்கணும்…தயவுசெஞ்சு கொஞ்சம் மெதுவா வச்சுக்கிட்டீங்கன்னா பக்கத்துல என் ரூம்ல என்னால நல்லா படிக்க முடியும்……ப்ளீஸ் அங்கிள்……செய்றீங்களா…? அலறுது அங்கே…எனக்குப் படிப்பே ஓட மாட்டேங்குது…ப்ளீஸ் அங்கிள்….
சற்று நேரம் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஏதேனும் தப்பாய்ச் சொல்லி விட்டோமோ என்று தோன்றியது சுதிருக்கு. தான் இப்படி வந்து சொல்லாமல், அப்பாவிடம் சொல்லிவிட்டிருக்க வேண்டுமோ என்றும் தோன்ற ஆரம்பித்தது.
அவனைக் கீழே இறக்கி விட்டிருந்த அவரிடமிருந்து அந்தக் கணமே தப்பித்து ஓடி விடலாமா என்று நினைத்துக் கொண்டான் சுதிர்.
சரிடா, பெரிய மனுஷா…மெதுவா என்ன ஆஃப் பண்ணியே புடறேன்…ஒடு…போய் நல்லாப் படி…..என்றார் அவர். கோபப்படுவாரோ என்று நினைக்க இப்படிச் சொன்னது சுதிருக்கு அப்பாடா என்றிருந்தது.
வர்றேன் அங்கிள்…ரொம்ப தேங்க்ஸ்….என்ற இவனை, சற்றும் எதிர்பாராமல், மீண்டும் கட்டித் தூக்கி அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார் அவர்.
போயிட்டு வர்றேன் அங்கிள்….என்று கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டே வெளியேறிய சுதிருக்கு அவர் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரைப் பார்த்தபோது ஏனோ மனசு கலங்கியது. எதுக்காக அழணும், சந்தோஷமாத்தானே தூக்கி சுத்தி முத்தம் கொடுத்தார்? யோசனையோடு வெளியேறிய சுதிருக்கு மனசுக்குள் எதுவோ சுருக்கென்றது. தன்னையறியாமல் பின் மண்டையைப் பட்டென்று தட்டிக் கொண்டான்.
சில வருஷங்களுக்கு முன் பணத்திற்காக அவர் மகனைக் கடத்திக் கொண்டுபோய் கொன்று விட்டார்கள் என்றும், அதிலிருந்துதான் அவர்கள் ஊர் மாறி இங்கே வந்து குடியிருக்கிறார்கள் என்றும், வேறு அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது என்றும் என்றைக்கோ அப்பா அம்மாவிடம் சொன்னதைக் கேட்டது அப்போது மெல்ல ஞாபகத்துக்கு வர ஆரம்பித்தது சுதிருக்கு. அந்தச் சோகத்தை மறைத்துக் கொள்ளவும், மறப்பதற்காகவும்தானோ தினசரி பாட்டை இத்தனை சத்தமாய் வைத்துக் கொள்கிறார்கள் என்று அவன் மனம் நினைத்து சங்கடப் பட ஆரம்பித்தபோது, இதைப் போய்ச் சொல்லியே இருக்க வேண்டாமோ என்றும் அவன் குழந்தை மனதுக்குத் தோன்ற ஆரம்பித்தது.
------------------------------------------




































கருத்துகள் இல்லை:

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...