29 ஜூன் 2012

”காற்றுக்கென்ன வேலி”குறுந்தொடர்

 
  (தேவி வார இதழில் 22.02.2012 முதல் 21.03.2012 வரை தொடர்ந்து ஐந்து வாரங்கள் வெளியான குறுந்தொடர்) 






 அலுவலகத்தில் தன் இருக்கையில் அமர்ந்திருந்த பாலனுக்கு ஏனோ என்றும்போல் அன்று வேலை ஓடவில்லை. தலைக்கு மேல் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடி கூட இவன் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்பது போல் மெல்ல வட்டமடித்துக் கொண்டிருந்தது. சுத்தமாக் காத்தே இல்லையே! யாரு ஸ்லோவாக்கினது? என்று சொல்லிக்கொண்டே எழுந்து தலைக்கு மேலிருந்த ரெகுலேட்டரைத் திருகினான். இரவு யாரோ டேபிளில் படுத்து உறங்கியிருக்கிறார்கள் என்று தோன்றியது. ஓதுக்கி வைக்கப்பட்டிருந்த பதிவேடுகளையும் கோப்புகளையும் பார்த்துத் தெரிந்து கொண்டான். தலையணை இல்லையென்று பதிவேடுகளையே தலையணையாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதும், அதில் லேசாக தலை எண்ணெய்ப் பிசுக்குப் படிந்திருப்பதும் இவனுக்கு எரிச்சலை உண்டாக்கியது. ஒழுங்கீனத்தின் அடையாளம். ஒரு துண்டையோ துணியையோ அதன் மேல் விரித்துக்கொண்டாவது தலைவைத்துத் தூங்கியிருக்கலாம். இது தெரியாதா ஒருவருக்கு? யாரும் இந்த டேபிளின் மேல் படுக்க வேண்டாம் என்று எழுதித் தொங்க விட வேண்டியதுதான். எல்லா இடத்திலும் மனிதர்கள் சர்வ சாதாரணமாகக் குறுக்கு வழியையே பயன்படுத்த முனைகிறார்கள்.
குளிர்ந்த காற்று மெல்லக் கீழே இறங்கி இவன் சட்டைக்குள் புகுந்து இவனைக் குளிர்வித்தது. அங்கிருந்தமேனிக்கே தலையைச் சாய்த்து வாயில்வரை பார்த்தான். மனம் ஒரு நிலையிலில்லை.
நீண்ட பட்டாசாலையாய்க் கிடந்த அந்த இடம் ஒரு காலத்தில் குதிரை லாயமாய் இருந்தது என்று சொன்னார்கள். அது இப்போது அலுவலகமாய் உள்ளது. இவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அடுத்தாற்போல் ஒரு முற்றம். அங்கேதான் தொட்டியில் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டிருக்கும். மதியச் சாப்பாட்டை முடித்த பணியாளர்கள் அங்கேதான் கை கழுவுவார்கள். வலது மூலையில் கழிவறை. ஆண்களும் பெண்களும் ஒரே வாசலில் நுழைவிடமுள்ள அவ்வழியே சென்று பிரிந்து கொள்ள வேண்டும். தினசரி இவனைச் சங்கடப்படுத்துவது இதுவும், இவன் அமர்வுக்கு எதிரே பணியாளர்கள் சத்தமாய் வாய் கொப்பளித்துக் காறித் துப்புவதும் மூக்குச் சிந்துவதுமான நடவடிக்கைகள். தன் பார்வைக்கு அது படக்கூடாது என்று இவன் எதிரே இருந்த கம்பிக் கிராதியில் காலண்டர்களையும், பணிகள் சம்பந்தமான வரைபடங்களையும் மாட்டி அந்த இடத்தை மறைத்திருந்தான். அப்படிச் சொல்வதை விட தன்னை மறைத்துக் கொண்டிருந்தான் என்பதுதான் சரி.
தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன் பாலன். யாரும் அவனிடம் அவன் பிரிவு சம்பந்தமாக எந்தக் குறையும் சொல்லிவிடக் கூடாது. என்ன லேட்டு? என்று வாய் தவறிக் கூடக் கேட்டு விடக் கூடாது. அது அதற்கென்று உள்ள நேரத்திற்கு முன்பே முடித்து விட வேண்டும். காலையில் பத்து மணியானால் கரெக்டாக இருக்கையில் இருப்பான். மாலை ஐந்தே முக்கால் ஆனால் எழுந்து போய்க்கொண்டேயிருப்பான். முதல் நாள் வேலை பாக்கி, அன்றைய புதிய வேலைகள் என்று எல்லாமும் முடிக்கப்பட்டிருக்கும் அவனைப் பொறுத்தவரை. அப்படி முடிக்க முடியவில்லையா, யாரும் அவனுக்குச் சொல்ல வேண்டியதில்லை, அவனே கூடுதல் நேரம் இருந்து அதை முடித்துவிட்டுத்தான் கிளம்புவான். இல்லையென்றால் ராத்திரி அவனுக்குத் தூக்கம் வராது. அவன் எழுந்து வெளியேறுவதைப் பார்த்துத்தான் மணி ஆகி விட்டது என்று சொல்லிக் கொள்வார்கள்.
ஒரு டீ அடிச்சிட்டு வந்து உட்காருவோம் என்று அதற்கு மேல் தங்கள் வேலையைத் துவக்குபவர்கள்தான் அந்த அலுவலகத்தில் அதிகம். அது அவர்களின் பழக்கம். அவர்கள் பாடு. தனக்கு அது உதவாது. என் பாணி இது என்று இருந்து கொண்டிருந்தான் பாலன்.
அப்படிப்பட்டவனுக்கு இன்று ஏன் வந்து அரைமணியாகியும் வேலை ஓடவில்லை. இன்று பூராவும் வெறுமே உட்கார்ந்திருந்தாலும் ஒன்றும் பாதிக்கப் போவதில்லைதான். ஏனென்றால் அவன் பிரிவில் அவசரமாக இருந்தவற்றையெல்லாம் முடித்து விட்டான். இனி புதிதாய் வந்தால்தான் உண்டு. வந்தாலும் அவற்றுக்கு நாற்பத்தெட்டு மணி நேரம் டைம் உள்ளது. அதற்குள் முடித்துவிடலாம்தான். அலுவலரிடமிருந்து முக்கியமான ஒரு கோப்பில் உத்தரவினை எதிர்பார்த்தது அவன் மனம். எதனாலும் அவனுக்கு லாபமோ நஷ்டமோ கிடையாது. அப்படியான எதிர்பார்ப்பும் அவனிடம் இல்லை. விதி முறைப்படி எது உண்டோ அதை எழுதி அது ஓ.கே. ஆகும்போது தான் மதிக்கப்படுவதாக ஒரு திருப்தி. நிறைவு. உண்மையில் தான் மதிக்கப்படுகிறோமா என்று எதிர்பார்ப்பது கூடத் தவறுதான் என்று நினைப்பவன் இவன். விதிமுறைகள் மதிக்கப்படுகின்றனவா என்பதே சரி. இவன் எழுதியது எந்தத் திருத்தமும் இன்றி ஆணையாகும்போது கிடைக்கும் நிறைவு இருக்கிறதே அதற்கு ஈடேயில்லை.
பாலன் தன் பிரிவு வேலையை முடிப்பதற்குப் பிரயத்தனப் படுவதுபோல் மற்றவர் எவரும் அவ்வலுவலகத்தில் இல்லை என்று உறுதியாய்ச் சொல்லலாம். அப்படித்தான் தோன்றியது இவனுக்கு. எதற்கும் அலட்டிக்கொள்வதாக இல்லை என்பதுபோலான இருப்பில் பலரும் இருந்தனர். எதையும் மெனக்கெட்டால்தான் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணமுள்ளவன் இவன். இருக்கையில் இருந்தமேனிக்கே எதுவும் நடக்காது என்ற எண்ணமுள்ளவன். எழுதி எழுதி அடுத்தடுத்த பிரிவிற்கு அனுப்பிப் பெற வேண்டும் என்பதுதான் நடைமுறை. ஆனால் அது காலதாமதம் ஆகும். சமயங்களில் அது பிரச்னையும் ஆகும். தன்னையும் பாதிக்கும். எதிர்ப் பிரிவினரையும் பாதிக்கலாம். எதற்கு வம்பு? தன் பிரிவிற்குத் தேவையான விபரங்கள் மற்ற பிரிவுகளில் இருந்து பெற வேண்டும் என்றிருந்தால் அப்பிரிவுக்குச் சென்று அவர்களின் வேலைக்குக் கேடு இல்லாமல் அவர்களின் சாதகமான அனுமதியுடனே தனக்குத் தேவையானவைகளை அவனே எடுத்துக் கொண்டு வந்து தன் பிரிவின் வேலையை அன்றன்றைக்கே முடித்து விடுவான். இதுதான் இவன் தன் சர்வீசில் கண்ட உண்மை.
குறிப்பாக திங்கள்கிழமை நடக்கும் கூட்டத்திற்குச் செல்லுமுன் அவனிடம் பென்டிங் என்று எதுவும் இருக்கக் கூடாது. இதுவரை இருந்ததும் கிடையாது. அதனால்தான் அவனிடம் அந்தக் குறிப்பிட்ட பிரிவினை ஒப்படைத்திருந்தார்கள். திருச்சியில் இருந்து மாறுதலில் வரும்போதே இவனைப் பற்றிய விபரங்கள் எல்லாமும் அந்த அலுவலகத்திற்குத் தெரிந்திருந்தன. அப்பாடா! என்று மூச்சு விடுவதுபோல் தூக்கிக் கொடுத்து விட்டார்கள். தவறு, சுமத்தி விட்டார்கள் என்பதுதான் சரி. வேலைகளை, பொறுப்புகளைக் கை கழுவுவதுதானே இன்று பெரிய சாமர்த்தியமாக இருக்கிறது. அதில் யார் திறமைசாலி என்பதுதான் இன்று மதிக்கப்படும் விஷயம்.
திருச்சியில் இருந்த அலுவலகத்தில் எதிலிருந்து கொஞ்ச நாளாவது விடுபடுவோம் என்று இவன் நினைத்துக் கொண்டு சொந்த ஊருக்கு மாறுதலில் வந்தானோ அப்படி வந்த இடத்திலும் அதுவே அவன் தலையில் விடிந்தது. இத்தனை நாள்தான் பாடாப்பட்டு, ஓடாத் தேய்ஞ்சுட்டு வர்றேன். வந்த எடத்திலும் இதுதானா? என்று அலுத்துக் கொண்டான்.
அலுத்துக் கொண்டான் என்றால் அவனுக்குள் என்று பொருள். எதையும் வாய்விட்டுச் சொல்ல மாட்டான். வந்த இடத்தில் எதற்கு எடுத்த எடுப்பிலேயே கெட்ட பெயர்? ஆரம்பத்திலேயே முகம் சுளிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். கொஞ்ச நாளைக்கு செய்து காண்பித்து விட்டு, பிறகு அதிகாரமாக, உரிமையோடு கேட்க வேண்டும். அப்பொழுதுதான் தன் பேச்சு எடுபடும். புது இடத்தில் ஆரம்பத்திலேயே வாயைவிட்டால் ஒன்று திமிர் பிடித்தவன் என்பார்கள் அல்லது வந்ததும் வராததுமா என்னங்க இப்டி? முதல்ல கொடுக்கிறத வாங்கிட்டு சரின்னு வேலையப் பாருங்க என்று அட்வைஸ் பண்ணுவார்கள். உள்ளுர்ல இருக்கணுமா வேணாமா? என்று மிரட்டுவதுபோல் பேசுவார்கள். என்னவோ இவர்கள் முயற்சி செய்து வாங்கிக் கொடுத்தவர்கள் போல்.
குறிப்பிட்ட பிரிவை ஒப்படைத்தபோது, சரி சார்...இவ்வளவுதான் அவன் சொன்னது. சிரித்த முகத்தோடு அவன் பெற்றுக் கொண்டதைப் பார்த்து, மேலாளர் ஆல் த பெஸ்ட் என்று கை குலுக்கினார். அப்படியே இடிச்ச புளியாக வந்து உட்கார்ந்தவன்தான். இன்றுவரை எந்தக் குறையுமின்றித் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனைப் பொறுத்தவரை ஒரே ஆறுதல் உள்ளுரில் இருக்கிறோம் என்பது. வீட்டுச் சாப்பாடு. சற்றுத் தாமதமானாலும் வீட்டிற்குச் சென்று அம்மா கையால் சாப்பிடும் சுகமே தனி. மாலை அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் செல்லப் போகிறோம் என்கிற எண்ணமே ஒரு மகிழ்ச்சிதான்.
வெளியூரில் இருந்துகொண்டு, தேடித் தேடிச் சென்று பல இடங்களில் சாப்பிட்டு சாப்பிட்டு எல்லாமும் அலுத்து விட்டது அவனுக்கு. ஒரு கட்டத்தில் உணவு விடுதிகள், மெஸ்கள் என்று சாப்பாடே அலுத்துப்போய் பழமாக வாங்கி வைத்துக் கொண்டு தின்று கொண்டிருந்தான்.
சற்று வயிற்றுக் கோளாறு உள்ளவன் அவன். வெளியூரில் இருக்கையில் அறையில் மிளகுப்பொடி, சீரகப் பொடி, கருவேப்பிலைப் பொடி என்று அம்மா செய்து கொடுத்தவைகளை வைத்துக் கொண்டிருந்தான். மதியச் சாப்பாட்டிற்கு பொட்டணம் போட்டு வைத்துக் கொள்வான். மெஸ் சாப்பாடெல்லாம் உதவாது அவனுக்கு. சாம்பார் கொண்டுவந்தால் குறுக்கே கையைக் காண்பித்து மறுத்து விடுவான். இவன் கொண்டு போன ஏதேனும் ஒரு பொடியைச் சாதத்தில் தூவிப் பிசைந்து சாப்பிட்டுக் கொள்வான். ஆசைக்குக் கூட நூடுல்ஸ், பீஸா, அது இது என்று எதையும் தொட்டதில்லை அவன். அப்படி ஆசையாயிருந்தால் ஊருக்கு லீவில் செல்லுகையில் அம்மாவிடம் சொல்லி செய்யச் சொல்லுவான்.
இந்த ஒரு கரண்டியத்தாம்மா அவன் முப்பது, நாற்பதுன்னு விலை போடறான்...அநியாயம்ல....என்பான் அம்மாவிடம்.
அதனாலென்னடா ராஜா...சின்ன வயசுதானே...ஆசையாத்தான் இருக்கும்...என்னிக்காவது வேணும்போல இருந்தா வாங்கிச் சாப்பிடேன்...காசு போனாப் போயிட்டுப் போகுது....அப்படிச் சிக்கனமா இருந்து யாருக்குக் காசு சேர்க்கப் போறே....என்பாள் அம்மா.
பாலன் அம்மாவுக்கு ஒரே ஆண் பிள்ளை. கல்யாணம் கழிந்து இனி குழந்தையே பிறக்காது என்று டாக்டர் உறுதி செய்துவிட்ட பின்னர் பதினைந்தாண்டுகளுக்குப்பின் பிறந்தவன் அவன்.. சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை.
எனக்குக் குழந்தை பாக்கியம் இல்லைன்னு எந்த டாக்டர் சொன்னது? அவர் யாரு இதை முடிவு பண்றதுக்கு? நான் ஜெயிச்சுக் காட்டறேன் பாரு....என்று தொடர்ந்த சிகிச்சைகளின் மூலமாகவும், நல்ல ஊட்டச் சத்து உணவுகளின் மூலமாகவும், அம்மாவைப் பல மடங்கு தேற்றி, தன்னையும் கவனமாகக் கவனித்துக் கொண்டு கடைசியில் வெற்றி கண்டே விட்டார் நாகநாதன். பாலனின் தந்தை.
அதற்குப் பின் அவர்களுக்கு மூன்று பெண்கள் பிறந்தது.. கடைசியாகக் கருத்தரித்திருந்தபோது அம்மாவுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது இன்னும் அவன் மனதில் அப்படியே இருக்கிறது. ஐம்பது வயதிலுமா? என்று பலரும் மறைவாகக் கேலி செய்தார்கள். ஆனால் தங்கக் கட்டியாய் அம்மா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துத் தந்தாள். அதுதான் கடைசித் தங்கை கல்யாணி. அப்பா ஒரு சினிமா ரசிகர். பராசக்தி படத்தின் கல்யாணி பெயரை முதல் குழந்தைக்கே வைக்க வேண்டும் என்பது அவரின் அவா. அம்மாதான் மறுத்து மறுத்து, இரண்டு குழந்தைகளைத் தாக்காட்டிவிட்டாள். மூன்றாவதுக்கு அப்பா விடுவதாயில்லை. வைத்துத்தான் தீருவேன் என்று மருத்துவ மனையிலேயே பிறப்புச் சான்றிதழில் அந்தப் பெயரை எழுதச் சொன்னது அப்பாதான். ஜெகதாம்பாள் பொண்ணு ஜெகத்தையே ஆளப் போகுது பார் என்று சொல்லிக் கொள்வார்.
அதற்குப்பின் அவரின் கவனம் முழுதும் மாறிப்போனது. மூன்று பெண்டுகளுக்கும் திருமணம் செய்ய வேண்டுமே என்கிற பயம் பற்றிக்கொண்டது. செய்யும் ஜவுளி வியாபாரம் பத்தாது என்று ஏற்கனவே தொட்டும் தொடாமலும் இருந்த அரசியலிலும் தீவிரமாகக் காலடி பதித்தார். இன்று நகரில் அவர் ஒரு முக்கியப் புள்ளி. நிறையக் காரியங்கள் பலருக்கும் செய்து கொடுத்தார். தன்னைப் படிப்படியாக வளர்த்துக் கொள்வதில் முனைப்புக் காட்டினார்.
அப்படியான ஒரு வேலையைத்தான் அவன் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அன்று காலையில் பாலனிடம் கோரியிருந்தார் நாகநாதன்.
( 2 )
எடுத்த எடுப்பிலேயே மறுத்தான் பாலன்.
முடியாதுப்பா...நீங்க சொல்ற ஆளு ஒர்க் க்வாலிட்டி இல்லாத ஒப்பந்ததாரர். கடந்த மூணு வருஷமா அவர் மேல நிறையப் புகார். அதனால் அவருக்கு எந்தக் கான்ட்ராக்டும் வழங்கக் கூடாதுன்னு உத்தரவு... அதிர்ந்து போனார் நாகநாதன். தன் பையன் இத்தனை கரெக்டாகப் பேசுவது குறித்து பிரமித்தார்.
நீ ஒரு வார்த்தை போட்டு வை உங்க ஆபீசர்கிட்ட...அது போதும்....மத்ததை நான் பார்த்துக்கிறேன்.....
இந்த மாதிரியான விஷயங்கள் எதுலயுமே நான் தலையிடுறதில்லப்பா...தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீங்க....என்ன ரூல்ஸ் உண்டோ அதை நான் எழுதி வைப்பேன்...அதுக்கு மேல எதிலயும் நான் மூக்கை நுழைக்கிறதில்லை...நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணும் நான் நெருக்கமான ஆள் இல்லை....
ஏண்டா உன்னை திருச்சியிலேர்ந்து சொந்த ஊருக்குக் கொண்டு வந்தது இதுக்குத்தானா? உனக்கு முதமுதல்ல வேலை கிடைக்க இந்தத் துறைதான் வேணும்னு உன்னை ஆப்ஷன் கொடுத்து எழுதச் சொன்னனே...அது எதுக்காக? வெறுமே நாக்கு வழிக்கவா? அதிர்ஷ்ட வசமா அதுவே அமைஞ்சு போக எல்லாம் நல்லபடியா வந்திட்டிருக்குன்னு பார்த்தா இதக் கூடச் செய்ய மாட்டேங்குற... சம்பளம் போக மேற்கொண்டு வருமானத்தப் பார்க்கத் தெரியாத பையனா இருக்க...ஊர் உலகத்துல எல்லாரும் உன்னை மாதிரியா இருக்காங்க? அஞ்சு வருஷம் வெளிய இருந்திருக்கியே....இதத்தான் கத்துக்கிட்டியா? சரி போகட்டும்னு விட்டா இந்த மாதிரிச் சின்ன விஷயம் கூட உன்னால செய்ய முடியாதா? உன்னை ஆபீசருக்கு வலது கைன்னு சொல்றாங்க எல்லாரும்...?
நா வலது கையும் இல்ல...இடது கையும் இல்ல...உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க..அப்படிச் சொன்ன ஆள் தப்பான ஆளா இருப்பான்.?
அப்போ நான் தப்பான ஆள் கூடப் பழகிறவன்ங்கிறியா?
எனக்கென்ன தெரியும்? உங்க மனசாட்சிக்கே தெரியும்தானே?
நீ இருக்கேங்கிற தைரியத்துல சொன்னா, என்னடா இப்படிப் பேசற?
.என்ன ரூல்ஸ் உண்டோ அப்படித்தாம்ப்பா செய்ய முடியும். அதுக்கு மேலே எதுவும் நடந்தா அதுல நான் இருக்க மாட்டேன்...இதுநாள் வரைக்கும் திருச்சில நான் அப்படித்தான் இருந்திட்டு வந்திருக்கேன்...படு மோசமான சூழ்நிலைல வேலை பார்த்திட்டுத்தான் வந்திருக்கேன்....அந்த மாதிரி எடத்துல என்னளவுல நான் எப்படியிருக்கணும்னு எனக்கு நல்லாத் தெரியும். என்னால தப்பெல்லாம் செய்ய முடியாது. நீங்க சொல்றது தப்பு. செய்யப்போறது தப்பு...அதுக்கு நான் ஆளுல்லப்பா...
சொல்லி விட்டு வெளியேறியவன்தான். இதோ அலுவலகம் வந்து வேலை ஓடாமல் பித்துப் பிடித்தவன் போல் உட்கார்ந்திருக்கிறான். அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் அப்பா தன்னிடமே வந்து நிற்பார் என்று கொஞ்சமும் இவன் எதிர்பார்க்கவேயில்லை. நிம்மதியாய் உள்ளுரில் வேலை பார்ப்போம் என்று வந்தால் தன் தந்தையே தனக்கு வினையாய் வருவார் போலிருக்கிறதே! நேரம் கடந்து விட்டது. வழக்கமான வேகம் இல்லை இன்று. ஷன்டிங் பாசஞ்சர் போலாகி விட்டது. சுலபமான சில கோப்புகளை மட்டும்தான் அட்டென்ட் செய்ய முடிந்தது. ஆழமாகப் படித்து நுணுக்கமாய்ச் செய்ய வேண்டிய கோப்புகளைத்தான் முதலில் கையில் எடுப்பான் அவன். அப்படியே செய்து செய்து அதுவே அவனுக்குப் பழக்கமாகிவிட்டது. கஷ்டமான ஃபைலா இருந்தா பாலன்ட்டக் கொடுங்க...அவர் பார்த்துக்குவாரு என்று அலுவலர் அவனைப் பரிந்துரைக்க மற்ற பிரிவுகளின் கோப்புகள் இவன் பார்வைக்கு வருமளவுக்கு மதிப்புமிக்கவனாகி விட்டவன் இவன். விதிமுறைகளுக்கென்று என்னென்ன புத்தகங்கள் இருக்கிறதோ அத்தனையையும் கரைத்துக் குடித்தவன். பாலனின் கையில் எப்பொழுதுமே ஒரு டைரி இருக்கும். அதில் நிறையக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். எது தேவைப்பட்டாலும் அதைத்தான் முதலில் புரட்டுவான். ஏறக்குறைய எல்லாமும் அவன் மனதிலேயே இருக்கும். விதிகளின் எண்களை மட்டும் குறிப்பதற்காகப் புரட்டுவான். தன் மனதிலுள்ளது சரிதானா என்றும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்வான். தன் வேலையின் மூலமாகத் தலை நிமிர்ந்தவன் அவன். தன்னை மதிப்புமிக்க இடத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வெறியோடு முனைப்புக் காட்டியவன். இவனைப் போலவே விதிமுறைகள் பலவும் அறிந்த வேறு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களிடமெல்லாம் இல்லாத கூடுதல் பலம் ஒன்று இவனுக்கு உண்டு. அதுதான் இவனது நேர்மை. அதுதான் தன்னை இன்றுவரை பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்வான். தங்கள் திறமையை நல்லதற்குப் பயன்படுத்தாதவர்கள்தான் அதிகம். அதன் மூலமாக சுய லாபம் அடைய யத்தனிப்பவர்கள்தான் பலர். ஆனால் தான் அப்படியில்லையே! அதற்காக அதைத் தம்பட்டம் அடித்துக் கொள்வதும் இல்லை. நேர்மையாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டவன் அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்று என்றுமே நினைப்பதில்லை. அது அவர்களின் எளிமை. அந்தப் பக்குவம் அவனுக்குக் கை வந்திருந்தது.
பாலா....என்ன பலமான யோசனை? உங்களுக்கு சாப்பாடு வந்திருக்கு.....என்று தாரிணி வந்து சொன்னபோதுதான் தன் நினைவுக்கு வந்தான் இவன்.
என்னது சாப்பாடா? யார் கொடுத்து விட்டது?
அம்மாதான்யா கொடுத்துவிட்டாங்க....உங்க பக்கத்து வீட்டு அய்யாவுக்கு நான்தான கேரியர் எடுத்திட்டு வாரேன்...அடுத்தாப்ல இருக்கிற ஆபீசுல இருக்காருல்லங்கய்யா....இன்ஜினியரு... அவருக்குத்தான்....அப்டியே இதையும் கொடுக்கச் சொல்லி உங்கம்மாதான் கொடுத்து விட்டாக....காலைல மறந்து வந்திட்டீகளாமுல்ல....
சொல்லி விட்டுப் போய்க் கொண்டேயிருந்தாள் கூடைக்காரி. அவளை இன்றுதான் இவன் பார்க்கிறான். ஆனால் அவனைப்பற்றி, அவன் இருக்கும் அலுவலகம் பற்றி அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைத்தான் விபரமான ஆளு என்று சொல்வார்களோ? எல்லோரும் எல்லாமாகவும்தான் இருக்கிறார்கள். ஆனால் தான் மட்டும்தான் தானாகவே மட்டும் இருக்கிறோமோ என்று ஏனோ தோன்றியது அப்போது. அப்படி இருப்பதில் என்ன தவறு என்ற கேள்வியும் கூடவே பிறந்தது அவனுக்கு.
அம்மா பாவம். மனது மிகவும் வருந்தியிருப்பாள். சொந்த ஊருக்கு இப்பொழுதுதான் வந்திருக்கும் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறாரே என்று நினைத்திருக்கலாம். அம்மாவால் அப்படி வருத்தப்படத்தான் முடியும். எதுவும் சொல்ல ஏலாது. சொன்னால் காட்டுக் கத்துக் கத்துவார் அப்பா. குழந்தைகளெல்லாம் பெரியவர்கள் ஆகும் முன்பு அம்மாவை அடித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது அது இல்லை. இவனும், தங்கைகளும் வளர்ந்தாயிற்று. பிள்ளைகள் முன் மனைவியை அடிப்பது தவறு என்று விட்டுவிட்டாரோ என்னவோ? வெறும் சத்தத்தோடு சரி. ஒன்றுக்குப் பாடாய்ப் பட்டு, வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டி, இல்லாத விரதமெல்லாம் இருந்து, கோயிலில் உருண்டு பிரண்டு, ஒரு ஆணைப் பெற்றதுதான் தாமதம், அடுத்தடுத்து மூன்று பெண் குட்டிகளைப் பெற்றுப் போட்டதும், என்ன பயம் வந்து பிடித்துக்கொண்டதோ ஆளே மாறிப் போனார். சரி, அதற்காக நடவடிக்கைகளுமா இப்படி மாறும்? வாழ்க்கையைக் கண்டு மிரண்டு விட்டாரோ என்றிருந்தது. சாதாரணமாய் அரசியலில் இருந்து கொண்டிருந்த அப்பா எதற்கெடுத்தாலும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதுபோல் ஏன் அப்படி முனையலானார்? எந்த நடவடிக்கைக்கும் பின்வாங்காமல் துணிந்தல்லவா செய்ய ஆரம்பித்து விட்டார். பணம் சம்பாதிப்பதற்கு இது ஒன்றுதான் வழி. வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான் முடியும் என்று இந்த வழியை அப்பாவுக்கு அப்படி அறுதியிட்டுக் காண்பித்தது யார்? அல்லது எது?
அப்பாவின் அப்படியான முயற்சியில்தானே தானே உள்ளுர் வந்தது. சீனியாரிட்டிப்படி தானே முதல் வரிசை என்றாலும், வேறு ஊர்களிலிருந்து தனது சொந்த ஊருக்கு மாறுதல் கேட்டிருப்பவர் எவ்வளவு பேர் இருப்பார்கள்? அப்படியானவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்தானே உள்ளுர் வந்தது. சரியாகப் பார்த்தால் நியாயமான ஒன்றில்லைதான். என்ன செய்வது? இவனும் ஏங்கித்தான் போனான். தனிமை இவனை ரொம்பவும் சங்கடப்படுத்தி ஏதோ வியாதிக்காரன் போலாக்கி விட்டது. குடும்பத்தில் அப்பா அம்மா, தங்கைகளோடு ஒன்றுக்குள் ஒன்றாக வளர்ந்து ஓங்கியவன். அதுவே வியாதி போலாகிவிட்டது.
அப்பாடா! சொந்த ஊர் வந்தாச்சு!! – எத்தனை சந்தோஷமான நாள் அது. அந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாவோடு கோயிலுக்குப் போனான். தங்கைகளோடு சினிமாவுக்குப் போய் வந்தான். கலகலவென்றும், சிரித்துக்கொண்டும், கும்மாளமிட்டுக்கொண்டும், சின்னச் சின்னச் சிணுங்கல்கள் செய்து கொண்டும், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், அடிப்பதுபோல் பாவனை செய்து கொண்டும், அம்மாவிடம் போய் புகார் செய்து கொண்டும், அப்பா இருந்தால் கப்சிப் என்று முடங்கிக் கொண்டும், அப்பாடீ...ஐந்தாண்டுகள் இதெல்லாம் அறவே இல்லாமல் போயிற்றே? அந்த ஆண்டவனுக்கு நன்றி என்னை உள்ளுர் கொண்டுவந்து சேர்த்ததற்கு.
இவன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்த அன்று அப்பா சொன்னார். ஆண்டவன் எங்க கொண்டு வந்தாரு. எல்லாம் மனுஷ முயற்சிடா...மனுஷ யத்தனம். இல்லேன்னா ஒண்ணும் கதையாகாது. ஆம்பளைன்னு இருந்தா ஆட்கள் நல்ல வெளிப் பழக்கம் வேணும். சும்மா குண்டுச் சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டினாப் பத்தாது. ஆபீஸ்ல வேலை பார்க்கிறங்கிறதுக்காக உனக்கு எல்லாமும் தெரிஞ்சிடிச்சின்னு அர்த்தமா? அதுதான் இல்ல. ஏட்டுச் சுரைக்காய் வேறே. உலக அனுபவமங்கிறது வேற...வீடு-ஆபீசு, வீடு-ஆபீசுன்னு இருந்தா உலகம் கைக்குள்ள வராதப்பூ......
அப்பாவின் உலகம் தனி. அது தனக்கு வேண்டாம் என்றுதான் தோன்றியது இவனுக்கு. ஜகதலப்பிரதாபன் என்கிற பெயர் அடிக்கடி இவன் மனதில் ஏனோ தோன்றிக்கொண்டேயிருக்கும். புதுவிதமான பெயராக இருப்பதாலேயே அது தன் மனதில் நின்று போனதோ என்று கூட எண்ணியிருக்கிறான். அந்தப் பெயர் இப்போது அப்பாவுக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் போலிருந்தது. ஆனால் வாய் விட்டுச் சொல்ல முடியுமா?
தாரிணி அவள் டிபன் கேரியருடன் அவனது இருக்கை நோக்கி வருவது தெரிந்தது. இன்னும் தான் புதிதாகவே மற்றவர்களுக்குத் தோற்றமளித்துக் கொண்டிருக்கும் அந்த அலுவலகத்தில் அவள் அப்படி நெருக்கமாக நடந்து கொள்வது இவனுக்கு லஜ்ஜையாக இருந்தது. தன்னைப் பற்றி யாரும் எதுவும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதுவே அவனின் எண்ணமாக இருந்தது.
என்ன பாலா, ரெடியா...? சாப்பிடலாமா? – கேட்டுக் கொண்டே நந்தினி வந்து அமர்ந்தபோது கொல்லைப்புறம் பாத்ரூமுக்கு வந்த சிலரின் பார்வை இவர்கள் மேல் விழாமலில்லை.
( 3 )
ன்னா நாகு...என்னாச்சு விஷயம்...? – கான்ட்ராக்டர் பிச்சாண்டியின் குரல் கேட்டு அதிர்ந்துதான் போனார் நாகநாதன்.
கடையின் முன்னால் வந்து இப்படியா எல்லோர் முன்னிலையிலும் பளீர் என்று கேட்பது? விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு? – நினைத்தவாறே பட்டென்று எழுந்து வந்தார் வெளியே. உள்ளே நுழைய எத்தனித்த ஆளை அப்படியே இடதுபுறமாகத் தள்ளிக்கொண்டு போனார். ஆமை நுழைந்தது போல் இவன் நுழைந்து வைத்தானானால் பிறகு இருக்கும் வியாபாரமும் படுத்துவிடும். வியாபாரம் வேறு. அரசியல் வேறு. இவனை வேறு வழியில்தான் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தானே இந்தப் பேச்சு வார்த்தையே...இல்லையெனில் இவனடிக்கும் கொள்ளைக்கு இவனிடம் யார் நெருங்குவார்கள். அப்படிச் சேர்த்த காசை இப்படி வாங்கி நம் ஜவுளிக்குள் முடக்கிவிட வேண்டியதுதான். நினைத்தவாறே படியிறங்கிய நாகநாதன் -
வாங்க...ஒரு காபி சாப்டுட்டே பேசுவோம்...என்று கூறிக் கொண்டு பக்கத்து ஓட்டலுக்குள் நுழைந்தார்.
வண்டி நிக்கிதுங்க வெளில...நா போயாகணும்..இதென்ன சாப்பாட்டு நேரத்துல காபி சாப்பிடக் கூப்டிட்டு இருக்கீங்க...?
சரி, வாங்க...சாப்பிட்டிட்டே பேசுவோம்....
அதுக்கெல்லாம் நேரமில்லீங்க...வீட்டுல ஆக்கி வச்சிருப்பாங்க....அப்புறம் அவ வேறே சத்தம் போடவா...? வெறும் காபியே சொல்லுங்க...
காபி வந்தது. ஆனால் இருவருக்குமே அது ருசிக்கவில்லை. இருவர் மனதிலுமே ஒருவர் சார்ந்து ஒருவர் எப்படிக் காரியத்தை முடித்துக் கொள்வது என்றல்லவா சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். காரியார்த்தமாகத்தானே சந்தித்தது!
நா கௌம்பறேன்.....மருதூர் பள்ளிக்கூடம் வேலை நடந்திட்டிருக்கு...அதப்போயிப் பார்க்கோணும்....இன்னும் ஒரு வாரம்தான் டயம் இருக்கு அதுக்கு. அதுக்குள்ள முடிச்சிக்கொடுத்தாகணும்...மினிஸ்டர் தேதி கொடுத்திட்டாரு...
இவனிடம் பள்ளிக்கூடம் கட்டக்கொடுத்த புண்ணியவாளன் எவனோ? அவன் தலைவிதி எப்படியோ? – நினைத்துக் கொண்டார் நாகநாதன். வெளிக்காட்டிக்கொள்ள முடியுமா?
அப்டியா....? உங்களுக்கு ஏதாச்சும் வேல இருந்திட்டேயிருக்கும்....போயிட்டேயிருப்பீங்க...அப்ப அதப் பாருங்க....
அதப்பாருங்கன்னா? இது முடிஞ்சிச்சா இல்லையா? முடியலைன்னா சொல்லுங்க...நா வேற ரூட்ல பார்த்துக்கிறேன்...
அய்யய்ய....அதெல்லாம் எதுக்கு? நா முடிச்சித் தரேன்.....அந்த ஆபீசுல இந்த வருஷம் நீங்க வேல பார்க்குறீங்க...போதுமா...?
அங்க நம்ம செக்யூரிட்டிப் பத்திரமெல்லாம் நெறையக் கெடக்குங்க....அதல்லாம் வேறே வாங்கணும்....இந்தத் தடவக் கான்ட்ராக்டைப் போட்டுட்டேன்னா, அதல்லாம் பைசல் பண்ணிப்புடுவேன்....
அதெல்லாம் எப்டிப் பைசல் பண்ணுவீங்க...இந்த வேலைக்கு புதுசாத்தான வாங்கிக் கொடுத்தாகணும்...?
அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது....அது தொழில் ரகசியம்....எதுக்கு அது? நா அங்க போக முடியாது. அதான் நம்ம ஆள் ஒருத்தர டம்மியாப் போட வேலை செய்திருக்கேன்.....நாந்தான்னு எப்டியோ புரிஞ்சிக்கிட்டாங்க போலிருக்கு...சரி கெடக்கட்டும் நேரடியாவே மோதிப் பார்த்துருவமேன்னு இறங்கிட்டேன்....இப்ப என்ன சொல்றான் உங்க பையன்...முடியும்ங்கிறானா முடியாதுங்கிறானா?
என்னா நீங்க இவ்வளவு அவசரப்படுறீங்க... என் பையன் இப்பத்தான டிரான்ஸ்பர்ல வந்திருக்கான்...அவனப் போயி நெருக்க முடியுமா? செய்யி...செய்யின்னு...
அப்போ உங்களால கதையாகாதுன்னு தெரியுது... சரி, நாளைக்கு வரைக்கும் உங்களுக்கு டைம் தர்றேன்....ஏன்னா நா மருதூர்லருந்து நாளக்கழிச்சிதான் வருவேன்...அதுக்குள்ள முடிச்சி வையுங்க...இல்லன்னா நா என் ரூட்ல பார்த்துக்கிறேன்... – சொல்லிவிட்டு அந்த ஓட்டலை விட்டு வெளியேறிய பிச்சாண்டி நேரே தன் காரை நோக்கி நடந்தான்.
அவன் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தார் நாகநாதன். காரில் பவனி வரும் அளவுக்கு வளர்ந்திருக்கிறான். அவன் சைக்கிளில் சென்றதையும், பஸ்ஸில் போனதையும் பார்த்திருக்கிறார் இவர். பிறகு புல்லட்டில் ஒரு கட்டத்தில் பறந்தான். இன்று அவன் கையில் ஒரு கார். அதற்கு எவன் தலையில் மிளகாய் அரைத்தானோ? எல்லாம் காலக் கொடுமை. இன்று இவன் நம்மை மிரட்டுகிறான். நான் உருவாக்கிய ஆள். இன்று என்னிடமே வார்த்தைகளை அளக்காமல் பேசுகிறான். போகட்டும். மனதைச் சமாதானம் ஆக்கிக் கொண்டார் நாகநாதன்.
அந்தக் கான்ட்ராக்டை முடித்துக் கொடுத்தால் அதைச் சாக்கு வைத்து பிச்சாண்டியையும் ஒரு பாகஸ்தராகப் போட்டு தன் ஜவுளித் தொழிலை விரிவு படுத்தலாம் என்கிற ஐடியாவில் இருந்தார் அவர். ஊருக்கே பெரிய கடையாகத் தன் கடையை பிரம்மாண்டப்படுத்தத் தான் போட்டிருந்த திட்டம் எங்கே நடக்காமல் போகுமோ என்று அவர் மனதுக்குள் அவநம்பிக்கை லேசாகத் துளிர் விட்டது.
இந்த விஷயத்தில் பையனைத் தொந்தரவு செய்வது சற்று சங்கடமாகத்தான் இருந்தது அவருக்கு. அவன் அம்மா கூடவே இருந்து வளர்ந்து விட்டான். நல்ல விஷயங்கள் நிறையப் படிந்து போனவன். அத்தனை எளிதாக மாற்றி விட முடியுமா? அப்படி ஏதும் ஏடா கூடமாகச் செய்து அவன் வேலைக்கு ஏதாவது ஆபத்து என்று வந்து விட்டால்? அதுவும் பயமாக இருந்தது அவருக்கு.
இதற்கு முன் ஒரு மினிஸ்டரின் பையனுக்கு அவரது தோட்டத்தில் ஆழ்குழாய்த் துளை போட வேண்டும் என்று முயன்ற போதே அதற்கு பதிவு வரிசை உள்ளது, சட்டென்று அப்படி இயந்திரத்தைக் கொண்டு நிறுத்த முடியாது என்று சொன்னவன் அவன். வரிசைப்படி அவர் இருபத்தியெட்டாவது இடத்தில் இருக்கிறார், அவர் முறை வரும்போதுதான் நடக்கும் என்று சொல்லி இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று பதில் அனுப்பியவன் அவன். அப்பொழுதே அவனை அலுவலகம் மாற்ற முடிவு செய்தார்கள். அன்று அங்கிருந்த அலுவலரின் கடுமையான சிபாரிசின்பேரில் பாலன் தனக்கே வேண்டும் என்று சொல்லி நிறுத்தி வைத்துக் கொண்டார் அவர். தனக்கு நம்பிக்கையான ஒரு ஆள் வேண்டும் என்று நேர்மை தவறாத தன் பையனை உரிய அந்தஸ்தோடு நெருக்கமாக வைத்துக் கொண்டவர் முன்பிருந்த அதிகாரி. . இப்படி படு ஸ்ட்ராங்காக உட்கார்ந்திருக்கும் தன் பையனிடம் போய் வில்லங்கமான விஷயங்களை வைத்தால் எப்படி நடக்கும்? நல்ல விஷயங்களையே அது நூறு சதவிகிதம் சரிதானா என்று உறுதி செய்து அலுவலரின் நம்பகத்தன்மைக்கு உகந்தவனாக இருப்பவன் அவன். அவனைக் கரைப்பது என்பது என்ன அத்தனை சாதாரணமா?
யோசித்துக் கொண்டே கடைக்குள் நுழைந்தார் நாகநாதன்.
அய்யா...நாகர்கோயிலுக்கு நாம அனுப்பிச்சிருந்த பண்டல் லாரி கவுந்திடுச்சாம்...டீசல் லீக்காகி வண்டி ஃபயர் ஆயிடுச்சு போலிருக்கு. மொத்த ஜவுளி பண்டல்களுமே கருகிப் போச்சுன்னு தகவலுங்க....இப்பத்தான் நம்ப திருநெல்வேலி ராசுப்பிள்ளை போன் பண்ணினாருங்கய்யா...அவர்தான் ஸ்பாட்டுக்குப் போயி எல்லாமும் பார்த்து செய்திருக்காரு...டிரைவர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்காராம்.
நாகநாதனுக்குத் தலை மூர்ச்சைக்கு வந்தது. தனக்கு நேரம் சரியில்லையோ என்று நினைக்க ஆரம்பித்தார் அவர். சரக்கு போய்ச் சேர்ந்தால்தான் பழைய பாக்கியை முழுதுமாக வாங்க முடியும். இப்பொழுதுதான் சூரத்தில் மொத்த ஆர்டர் பண்ணி கொண்டு வந்து இறக்கியது. இன்னும் கோடவுனில் நிறைய சரக்குகள் இருக்கின்றன. அவைகளும் அனுப்பப்பட வேண்டியது உள்ளது. ஆனாலும் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புக் கொண்ட சரக்குகள் நாசம் என்றால்? என்னதான் இன்ஷ்யூர் என்றாலும், அதிகாரிகளின் முழு ஆய்வுக்குப் பின் வந்து சேரும் காசு பாதி கூடத் தேறாதே? அது என்ன உடனேவா வந்து விடப் போகிறது? கேஸ் முடியவே பல மாதங்கள் ஆகிவிடக்கூடும். முருகா...! தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார் நாகநாதன்.
சற்று நேரத்தில் கிளம்பினார். சாயங்காலமா வாறேன்...என்று பொதுவாகச் சொல்லிவிட்டு வெளியே வந்து வண்டியை எடுத்தார். இவர் மனோ வேகத்துக்கு அது ஸ்டார்ட் ஆனால்தானே....சனியன்...இது கூட நம்மள மதிக்க மாட்டேங்குது....என்றவாறே ஓங்கி ஒரு உதை கொடுத்தார். சீறிக்கொண்டு பாய்ந்தது வண்டி.
அது சரி...யார் மேல் கோபத்தை வைத்துக் கொண்டு இது கூட நம்மளை மதிக்கமாட்டேங்குது என்று சொன்னார் அவர்? யோசித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தவர் அவரை அறியாமல் அவன் பையன் வேலை பார்க்கும் ஆபீஸ் அருகில் அவர் வண்டி நின்றபோது எதற்கும் ஒரு பார்வை பார்த்து விட்டுப் போய்விடுவோமா என்று நினைத்தார். அவன் ஆபீசில் பலரையும் அவர் நன்கறிவார். இதுவரை எத்தனையோ காரியங்களுக்கு என்று சென்று நிறைவேற்றிக் கொண்டவர்தான். ஆனால் தான் பார்த்து, பேசிப் பழகிய அலுவலகத்தில் இன்று தன் காரியத்திற்கு என்று தன் மகனிடமே போய் நிற்க வேண்டுமே என்பதை நினைத்த போது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது அவருக்கு. அவர் மனதில் தோன்றிய அவநம்பிக்கை தன்னைப் பலர் முன் அவமானகரமான இடத்தில் நிறுத்தி விடுமோ என்பதாக அவர் அவரை அச்சப்பட வைத்தது என்பதுதான் உண்மை.
நிறுத்தியது வேறு ஒரு காரியத்திற்காக என்பதுபோல் பக்கத்துக் கடைக்குச் சென்று என்னவோ விசாரிப்பது போல் தலையைத் திருப்பிக் கொண்டு நின்றார். தற்செயலாகத் திரும்பியபோது பக்கத்து டீக்கடையில் இருந்து பாலனும், இன்னொருவரும், வருவதைக் கண்ணுற்ற அவர், யார் என்று கூர்ந்து நோக்கிய போது அவரை அறியாமல் உடம்பில் மெல்லிய நடுக்கம் பரவுவதை உணர்ந்து அருகிலுள்ள கதவினைப் பிடித்துக் கொண்டு தன்னை நிதானப்படுத்திக் கொண்டார் நாகநாதன்.
( 4 )
”கிளம்பிட்டீங்களா பாலன்...நானும் உங்க கூட வரலாமா? ” – மெல்ல அருகில் வந்து சத்தமில்லாமல் நந்தினி கேட்ட நாசூக்கிலிருந்தே யாருக்கும் இது தெரிந்து விடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாய் இருக்கிறாள் என்று புரிந்தது பாலனுக்கு. அன்று அவளின் நெருக்கம் சற்று அதிகமோ என்று தோன்றியது. ஏன் அவன் அண்ணனை அங்கு வரச்சொன்னாள். அவர் ஏன் தன்னிடம் தனியாகப் பேச வேண்டுமென்றார். அப்படியானால் அவர்கள் வீட்டில் முடிவே செய்து விட்டார்களா? இவர்களாக ஏதாவது தாறுமாறாய், தன்னிச்சையாய் நினைத்துக் கொண்டால் எப்படி? அவரின் பேச்சின் ஜாடை அப்படித்தானே இருந்தது. என் சிஸ்டரைப் பத்தி என்ன நினைக்கிறீங்க? என்று என்னிடம் ஏன் கேட்க வேண்டும்? அதற்கான அவசியம் என்ன வந்தது? இதெல்லாம் என்ன முயற்சிகள்?
இங்க பார் நந்தினி...தயவுசெய்து என்னை டிஸ்டர்ப் பண்ணாதே...உன்னை எனக்குத் திருச்சியிலிருந்தே தெரியும்ங்கிறது இங்க எல்லாருக்கும் தெரியும்ங்கிறதுனாலதான் நான் இத்தனை சாதாரணமா உன்கிட்டே பழகுறேன்...அதை வேறே ஏதுமாதிரியும் தயவுசெய்து அர்த்தப்படுத்திக்காதே...உங்க ப்ரதரை மதிச்சுதான் நான் அவரோட ஸ்நாக்சுக்காகப் போனேன். அதுக்கும் வேறே ஏதும் அர்த்தமில்லை. தயவுசெய்து புரிஞ்சிக்கோ...
நந்தினியின் முகம் சட்டென்று சுருங்குவதை இவன் கண்ணுற்றான். அனாவசியமாய் அவள்தான் தன்னை இந்த நிலைக்குத் தள்ளுகிறாள். திருச்சியில் இருக்கும்போதே தன்னைப்பற்றியும் தன் குடும்ப நிலை பற்றியும் தெள்ளத் தெளிவாக அவளிடம் சொல்லியிருக்கிறான். மலைக்கோட்டைப் பிள்ளையார் கோயிலில் உட்கார்ந்து எத்தனையோ முறை மனம் விட்டுப் பேசியிருக்கிறார்கள். குறைந்தது இரண்டு தங்கைகளுக்காவது திருமணம் செய்து விட்டுத்தான் தன் கல்யாணத்தைப் பற்றி தன்னால் யோசிக்க முடியும் என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறான். அப்பொழுதெல்லாம் அப்பாவின் வருமானம் மட்டும் போதாது என்பதாக அவன் எண்ணமிருந்தது. ஒரேயொரு ஜவுளிக்கடை ஓட்டத்தில் என்னத்தைப் பெரிதாகச் சேர்த்து விட முடியும். குடும்பச் செலவுகளையும் பார்த்துக்கொண்டு, பெண்டுகளுக்கும் நகை நட்டுகளைச் சேமிக்க வேண்டுமென்றால்? அப்பாவால் மட்டும் அது நிச்சயமாக இயலாது. தன்னின் தீவிர முயற்சியினால் மட்டுமே இவை சாத்தியம் என்று மிகுந்த மன உறுதியோடு இருந்தான்.
பிரதி மாதமும் வீட்டிற்குப் பணம் அனுப்பியதுபோக, மிகவும் சிக்கனமாய் இருந்து அங்கேயே ஒரு வங்கிக் கணக்குத் திறந்து, சிறிது சிறிதாக ஒரு தொகையைச் சேர்த்து, மாறுதலில் சொந்த ஊர் புறப்பட்டபோது உள்ளுருக்குக் கணக்கை மாற்றிக்கொண்டு, அப்பாவிடம் அந்தப் பாஸ் புத்தகத்தை முதன் முறையாகக் காண்பித்த அன்று என்ன ஒரு மகிழ்ச்சி அவரிடம்? கண்கள் கலங்க அவர் நின்ற காட்சி இன்னும் மனதில்.
சில ஆயிரங்களைச் செலவழிச்சித்தான் உனக்கு இந்த மாறுதலை வாங்கியிருக்கேன். அதுவே என் மனசை ரொம்ப உறுத்திட்டிருந்திச்சி. இப்போ நீ இதைக் காட்டின இந்த நிமிஷத்தில் என் மனசு நிறைஞ்சு போயிடுச்சு...ஏன்னா உழைச்ச காசு வீண் போகக் கூடாது பாரு.... என்றார்.
அப்போ ஏம்ப்பா பணமெல்லாம் கொடுத்து இந்த ஏற்பாடைப் பண்ணினீங்க...?அதுவா வரும்போது வந்திட்டுப் போகுதுன்னு விடவேண்டிதானே? உங்க சேமிப்பும் உழைச்ச காசுதானே? அதுவும் வீண் போகக் கூடாதுல்ல? என்றான் இவன்.
வாழ்க்கைல சில சமயங்களில் சமரசங்களைச் செய்துக்கத்தான் வேண்டியிருக்கு....தவிர்க்க முடியாமத்தான்...அப்படிச் செய்திட்டதுதான் இது...போனாப் போகுது....இப்போ நீ எங்ககூட இருக்கேல்ல...வீட்டைக் கவனிச்சிக்க ஒரு ஆம்பிளைப்பிள்ளை என் கூடவே இருக்காங்கிற தைரியத்துல நான் இருப்பேனே...என்றார் நாகநாதன்.
அப்பாவின் சுய முயற்சியில் பணம் விலை கொடுத்து வந்த அந்த மாறுதல் இன்றளவும் இவனுக்கு ஒப்புதல் இல்லைதான். எவ்வளவு கொடுத்தார் என்பதையும், யாருக்குக் கொடுத்தார் போன்ற விபரங்களையும் இன்றுவரை அப்பா சொன்னதில்லை.
அதெல்லாம் எதுக்கு உனக்கு? அது எம்பாடு...நீபாட்டுக்கு வேலையைப் பாரு...என்றுவிட்டார். இவனும் விட்டுவிட்டான் அத்தோடு.
தனக்குச் சற்று முன்னாலேயே மாறுதலில் இங்கு வந்துவிட்டவள் நந்தினி. அவளுக்கும் சொந்த ஊர் இதுதான்.
பேசாம அந்தப்பொண்ணையே கட்டிக்கப்பா...உனக்கு சரியான ஜோடிதான்...சொல்லு, வேணும்னா இங்கயே முடிச்சி விட்ருவோம்...என்றார்கள் நண்பர்கள்..
எதுக்கு மாறுதல்ல போறே...பேசாம இங்க திருச்சில சுப்ரமண்யபுரத்துல ஒரு ப்ளாட்ட வாங்கு...ஒரு உறவுஸ் பில்டிங் லோனைப் போடு...வீட்டைக் கட்டு...கல்யாணத்தப் பண்ணு...இங்கயே செட்டிலாயிடு....என்று தூண்டி விட்டார்கள். இவன்தான் அசையவில்லை. லேசாக இளநாக்கு அடித்திருந்தால் இழுத்துக்கொண்டு போய் நிறுத்தி ஏதேனும் ஒரு கோயிலில் வைத்துக் கூடத் தாலி கட்ட வைத்திருப்பார்கள். கில்லாடிகள் அங்கிருந்த நண்பர்கள். ஆனாலும் கழுவும் மீனில் நழுவும் மீனாயிற்றே இவன். ஆள விடுங்க சாமி என்று ஓடியே வந்துவிட்டான் சொந்த ஊருக்கு.
நீ கிளம்பு நந்தினி...நான் கொஞ்சம் பொறுத்துத்தான் வரணும்...நாளைக்கு பட்ஜெட் மீட்டிங்...மானேஜர் கூட நா பேச வேண்டிர்க்கு....என்றான் தலைகுனிந்தவாறே. தான் சொல்வது பொய் என்பது எங்கே அவளைப் பார்த்துக்கொண்டே சொன்னால் தன் கண்களைப் பார்த்து அவள் கண்டுபிடித்துவிடுவாளோ என்று பயந்தான். அவளின் கூர்மையான பார்வை இவனை என்னவோ செய்யத்தான் செய்தது. அதனால்தான் தானே அவளைப் பொறுத்தவரை அத்தனை மிருதுவாக நடந்துகொள்கிறோமோ என்றுகூட நினைத்திருக்கிறான். ஏன் அவளின் செய்கைகள் எதற்கும் தனக்குக் கோபமே வர மாட்டேன் என்கிறது. அலுவலகத்தில் பலரும் கவனிக்கும் நிலையில் கூட அதுபற்றிய சுரணை தன்னிடம் அதீதமாக இல்லையே, ஏன்? தன்னையறியாமல் தன் மனம் அவளிடம் நாட்டம் கொண்டிருப்பதை உணர்ந்தான் பாலன்.
ஒன்றும் சொல்லாமல் திரும்பிப் போய்க் கொண்டிருந்தாள் நந்தினி. அவள் கண்கள் கலங்கியதை இவன் கவனிக்கவில்லை. ஆனால் அவளின் தயங்கிய நடை அவனை என்னவோ செய்தது.
சார்...பாலன் சார்...உங்க அப்பாரு நின்னாரே...பார்க்கலியா...உங்களப் பார்க்கத்தான் வந்திருப்பார் போலிருக்கு..? என்றவாறே ஓடிவந்த பியூன் ராமலிங்கம், பக்கத்துக் கடைல நின்னாரு சார்...டீ வாங்கிட்டு வர்றைல பார்த்தேனே...? என்றான்.
அப்பா ஏன் இங்கு வந்தார்? யோசனையோடேயே எழுந்து வாசலை நோக்கி நடந்தான்.
இன்னுமா நின்னிட்டிருக்காரு...அவரு போயிருப்பார் சார்...உங்களப் பார்க்க வந்தாரோ இல்ல வேறே ஏதாச்சும் வேலயா வந்தாரோ...
வாசலில் சென்று பக்கத்து டீக்கடையை எட்டிப் பார்த்தான் பாலன். காம்பவுன்ட் சுவற்றைத்தாண்டி இங்கிருந்து பார்த்தாலே தெரியும் அந்தக்கடை வாசலில் அப்பா இல்லை. எதற்காக வந்திருப்பார், ஒரு வேளை அந்தக் கான்ட்ராக்ட் சம்பந்தமாய் இருக்குமோ? வேறெதற்கு வரவேண்டும். அக்கோப்புதான் இன்னும் தன்னிடம் திரும்பவில்லையே? திரும்பவும் இருக்கைக்கு வந்தவன், என்று அனுப்பினோம் என்று டைரியை எடுத்துப் புரட்டினான்.
சாதாரணமாய் மூன்று நாட்களுக்குள் எந்தக் கோப்பும் மீண்டும் தன்னிடம் திரும்பி விடும்தான். இது ஏன் தாமதமாகிறது? அலுவலகத்திற்குள் நுழைந்து மேலாளரின் ட்ரேயில் ஒப்பமாகித் திரும்பியிருக்கிறதா என்று அலசினான். இல்லை. அலுவலரின் அறைக்குச் சென்று அவரது ட்ரேயில் ஏதும் இருக்கிறதா என்று கண்ணுற்றான். வேறு சில கோப்புகள்தான் இருந்தன. அதாவது அந்தக் குறிப்பிட்ட கோப்புக்குப்பின் அனுப்பிய கோப்புகள். அப்படியானால் இது என்னவாயிற்று?
சார், எதைத் தேடுறீங்க? உங்க பைலத்தான? கையெழுத்தாகி வந்ததுல ஒண்ணை மட்டும் மானேஜர் எடுத்து வச்சிருக்காரு...
எப்பப்பா வந்திச்சு? – புரியாமல் கேட்டான்.
இன்னைக்குக் காலைல நீங்க ஆபீஸ் வந்ததும் உங்க டேபிள்ல ஃபைல்ஸ் இருந்திச்சில்ல...அதோட வந்ததுதான்...நேத்து ராத்திரி கையெழுத்தானது...
மேலாளர் தன்னிடம் சொல்லாதது வியப்பாயிருந்தது இவனுக்கு. இதற்கு முன் ஒரு முறை இப்படி ஆகியிருந்தபோது அவர் சொன்னார்.
ஃபைனலா என்னிக்குக் கையெழுத்தாகுதோ அன்னிக்கு வரும்...அதுவரை பென்டிங்தான்....எனக்கு டிஸ்கஸ் போட்டிருந்தா அது முடியணும்...
மொட்டையாக அவர் இப்படிச் சொன்னது இவனுக்கு வெறுப்பாக இருந்தது. தன்னோடு பேச முடியாத சில அவருடன் விவாதிக்கப்படுகின்றன. இறுதியாகின்றன. ஆகட்டும். அதில் தவறில்லை. அது அலுவலரின் உரிமை. ஆனால் தன்னால் எழுதப்பட்டதே அதில் இல்லாததும், புதிதாக எழுதப்பட்டோ, தட்டச்சு செய்யப்பட்டோ, அல்லது கணினி அச்சிலோ தயாரானவைகள் உத்தரவாவதும், வெகு நாட்கள் கழித்து அவை தன் கைக்குக் கிடைப்பதுவும், இந்த அலுவலகத்தின் புதிய அனுபவமாக இருந்தன அவனுக்கு. பல சமயங்களில் கோப்புகள் மேலாளரிடமே இருந்து விடுகின்றன. அது அவருக்கும் அலுவலருக்கும் உள்ள டீல்.
இந்த லட்சணத்தில் அப்பா தன்னை அலுவலரின் வலது கை என்கிறார். எந்தக் கிறுக்கன் சொன்னது அப்படி? சிரிப்புத்தான் வந்தது. இவர்களாகவே ஊகித்துக் கொள்வார்களோ? மனதில் தோன்றுவதையெல்லாம் யாரிடமாவது சொல்லி வைப்பார்களோ? அப்படித்தான் இந்தப் பொய்ச் செய்தி அப்பாவையும் எட்டியிருக்குமோ? எல்லாமே இங்கு அரசியல் ஆகி விட்டது. நிர்வாகத்தில் அரசியல் புகுந்தால் விளங்கவா போகிறது? நரி வலம் போனால் என்ன இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்றிருப்பவன் நான். என்னைப்போய் பீச்சாங்கை, நொட்டாங்கை என்றுகொண்டு? அப்படியெல்லாம் கேள்விப்படுவதற்கே மனது வெட்கிப் போவதை எண்ணிக் கொண்டான். ரொம்பவும் கேவலமாய்ப் போயிற்று எல்லாமும் என்று தோன்றியது.
அப்பா வந்து தன்னின் தேவையில்லாமலே விஷயத்தை முடித்துச் சென்றிருப்பாரோ என்று ஒரு சந்தேகம் முளைத்தது. அலுவலகத்தின் கட்டக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் அவனுக்கு நுழைவாயிலில் இருக்கும் அலுவலரின் அறையிலும் அதன் வெளியிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. என்ன நடந்தால்தான் என்ன? இவனுக்கு இவனுண்டு, இவன் வேலையுண்டு. எண்ணங்களில், சுதந்திரமாய்த் திரிபவன். தவறுகள் செய்ய வேண்டும் என்று இருப்பவர்கள்தான் மனசைக் குழப்பிக் கொள்ள வேண்டும். எது, என்ன, எங்கே, எப்போ என்று குயுக்தியாய் சிந்திக்க வேண்டும். தனக்கு அதெல்லாம் இல்லையே? எது விதியோ, எது முறையோ அதுதான் பாலன். மைன்ட் ஃப்ரீ பர்சன். தெளிந்த நீரோடையாய் இருக்கும் அவனுக்கென்ன கவலை? காற்றுக்கு வேலி உண்டா என்ன?
நினைத்தவாறே கிளம்பி வீடு வந்து சேர்ந்தவனை உறாலுக்குள் நுழைந்தவுடன் நாகநாதனின் குரல் தடுத்து நிறுத்தியது.
( 5 )
பாலா...இன்னைக்கு நா உன்னோட ஆபீசுக்கு வந்திருந்தேன் தெரியுமா...?
சற்றுத் தயங்கியவன்....ம்ம்.....தெரியும்ப்பா...என்றான்.
யாரு சொன்னா?
பியூன்தாம்ப்பா...
யாரு ராமலிங்கமா? அவன் நம்ம பய ஆச்சே.....
அப்பா எல்லோரையும் பழகி வைத்துக் கொண்டிருக்கிறார். இது தன் மாறுதலுக்காக முயன்ற நாட்களிலிருந்து ஆரம்பித்த வேலை. உங்க ஆபீசுக்குப் போயிட்டு வந்தேன், போயிட்டு வந்தேன் என்று அடிக்கடி போனில் சொல்லுவார். ஒரு காரியத்தை எடுத்தார் என்றால் முடிப்பதுவரை ஓய்வதில்லை. அப்படித்தான் இன்று அரசியலிலும் கால் பதித்திருக்கிறாரோ! வெறும் ஜவுளி வியாபாரியாயிருந்தவர் இன்று அரசியல் முக்கியப் புள்ளி. தன்னின் சிறு பிராயத்தில் உணவகம் வைத்து நடத்தியிருக்கிறார் என்று அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறான். ஏதோ ஓரிரு முறை அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு போய்வந்ததாகக் கூட லேசாக நினைவிருக்கிறது. இன்னொருவரும் அப்பாவின் பாகஸ்தராக இருந்ததாகவும் செழிப்பாகத்தான் நடந்தது என்றும் அன்றெல்லாம் வீடு கொழித்தது என்றும் அம்மா உற்சாகமாகச் சொன்ன நாட்களில் அம்மாவின் முகத்தில் பரவியிருக்கும் செழுமையைக் கவனித்திருக்கிறான் இவன். பின் ஏன் தொழில் மாறிற்று. ஜவுளி எப்படிப் புகுந்தது? இரண்டுக்கும் சம்பந்தமேயில்லையே என்றான். அது தாத்தாவின் தொழில் என்றும் அது அப்படியே ஒட்டிக் கொண்டது என்றும் மேலாகச் சொல்லியிருக்கிறாள் அம்மா. பாகஸ்தர்கள் பிரியவேண்டியதாயிற்று என்பதால் தொழில் மாறிற்று என்பதாக அறிந்திருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னை எல்லாவற்றிலும் ஆழமாகப் பொருத்திக் கொள்கிறார் அப்பா. அது அவர் பிறவிக் குணம். இன்னும் கூட அப்பாவுக்கு இந்த அரசியல்வாதி வேஷம் பொருந்தவில்லைதான். இவனால் அவரை முழுதுமாக அப்படிப் பார்க்க முடியவில்லை. என்னவோ வித்தியாசப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது அவரிடம். யாரு நம்ப ராமலிங்கம்தானே? என்கிற பாணியில் அவர் சொன்னது கூட அத்தனை பொருத்தமில்லாமல் செயற்கையாயிருந்தது இவனுக்கு.
அப்பா எல்லாரையும் இப்படித்தான் சொல்லிக் கொள்கிறார். அவர்கள் காரியத்திற்கு ஏற்றாற்போல் யாரையெல்லாம் மாற்றுகின்றார்களோ அவர்களெல்லாம் நம்ம பய, நம்ம ஆளு... முதலில் இந்தமாதிரிப் பேச்சுக்களே தவறு என்று நினைத்தான் இவன். இப்படியான பேச்சுக்கள்தான் ஊழலுக்கே வழி வகுக்கின்றன. எதையாவது செய்து, எல்லோரையும் விஷமாக்கி, தன் காரியங்களைச் சாதித்துக் கொள்வது. இதைத்தான் இன்று சாமர்த்தியம் என்கிற பதத்தால் .பாராட்டுகிறார்கள். மாப்பிள்ளைப் பையனுக்கு மேல் வரும்படி உண்டா? என்று கேட்பதுபோல. மேல் வரும்படி என்றாலே அது லஞ்சம்தானே? தவறுதானே? என்கிற எண்ணமெல்லாம் கப்பலேறிப் பல வருடங்கள் ஆயிற்று. யாரும் எதற்கும் வெட்கப்படுவதில்லை. ஊருக்கும் வெட்கமில்லை. உலகுக்கும் வெட்கமில்லை.
வந்துட்டு ஏன் என் இடத்துக்கு வரல்லே...ன்னு கேட்கமாட்டியா? நீதான் கேட்கமாட்டியே....எனக்கு உங்கிட்ட என்ன பேச்சு? உன் சீட்டுக்கு வந்து உன் வேலையைவேற கெடுக்கணுமான்னு தோணிச்சு. அதனால வாசலோட முடிச்சிக்கிட்டேன்....உன் பாஸ் நல்லாப் பேசுறார்டா....மனுஷன் படு விபரமான ஆளு.....அதுதானே நமக்கு வேணும்....அதிகாரிகள அவங்க இடத்துலயே உட்கார்த்தி வச்சு அவுங்க கௌரவத்துக்கு இடஞ்சல் இல்லாம நம்ம காரியத்தை சாதிச்சுக்கப் பார்க்கணும். நானென்ன பண்றது? அந்தக் காண்ட்ராக்டர் பய என்னைப் போட்டு நெருக்கிறான். என்னால முடியாதுன்னு சொன்னா நீ என்னய்யா ஆளுன்னுடுவான்...அப்புறம் நமக்கு மேல, நமக்கு மேலன்னு போவானுங்க...அப்டி விட்ரக் கூடாதுல்ல...அப்புறம் என்னதான் மதிப்பு இருக்கு? கொஞ்சம் கொஞ்சமா நம்ம சாமர்த்தியத்தைக் காண்பிச்சாதானே மதிப்பானுங்க...நம்மாலையும் ரெண்டு காரியம் சாதிக்க முடியும்னு செய்து முடிச்சாத்தானே நாளைக்கு ஒரு ஆளு இருக்குன்னு தேடி வருவானுங்க...
அப்பாவின் பேச்சு ஸ்டைலே மாறிப் போனது சமீப காலமாய்த்தான். வருவானுங்க, போவானுங்க என்றெல்லாம் அவர் பேசிப் பார்த்ததேயில்லை இவன். அதுவும் வீட்டில் அம்மாவிடம் பேசும் போது அத்தனை அமைதியாய் மதிப்பாய்ப் பேசுவார். அம்மாவையே அடிக்கடி வாடீ, போடீ, கிடக்குடீ, விடுறீ....என்று ஏகவசனத்தில் அவர் இப்போது பேசுவதை உன்னிப்பாய் இவன் கவனித்திருந்தான். தான் திருச்சியில் இருந்தபோது இருந்த அப்பா வேறு. இப்போது சொந்த ஊருக்கு வந்தபின்பு இருக்கும் அப்பா வேறு.
அப்பாவை இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று தன்னால் கூற முடியாது. அந்த அளவுக்கான வயசும் அனுபவமும் தனக்கிருப்பதாக இவன் நினைக்கவில்லை. இன்னும் தான் தன்னின் வேலை சார்ந்து சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. மேலும் மேலும் உயர் பதவிக்குச் செல்ல நிறையப் படிக்க வேண்டியுள்ளது.. எத்தனையோ தேர்வுகள் எழுத வேண்டியுள்ளது. காலம் பூராவும் இந்த உத்தியோகத்திலேயே கழித்து விடுவோமா அல்லது கமிஷன் தேர்வுகள் எழுதி உயர் கிரேடுத் தேர்ச்சிக்கு ஆஜராகி வெளியேறுவோமா என்றெல்லாம் யோசனைகள் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியெல்லாம் முயற்சிகள் மேற்கொள்வதை அப்பா விரும்புவாரா மாட்டாரா என்பதில் ஒரு குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது.
இந்த வேலைக்கு வந்து அஞ்சு வருஷம் முடியப்போகுது. பேசாம இதுலயே மேல மேல போக முயற்சி செய்றதை விட்டிட்டு இன்னும் வேறே எங்க போகப் போறே...இருக்கிறதை விட்டுட்டுப் பறக்குறதைப் பிடிக்க முயற்சி செய்யாதே....இப்பத்தான் உள்ளுருக்கு வந்திருக்கே...இங்கயே நின்னு நிலைக்கப் பாரு....அத விட்டிட்டு....
அப்பா தடுப்பதைப் போலவே கற்பனை செய்து கொண்டான் இவன்.
என்னடா நாம்பாட்டுக்குப் பேசிட்டே இருக்கேன்...நீபாட்டுக்கு எங்கயோ பார்த்திட்டு இருக்கே...எங்க இருக்க நீ?
எங்கயும் இல்லப்பா...இன்னைக்கு வேலை ஜாஸ்தி....அதான்....
டயர்டா இருக்கா...? சீக்கிரம் சாப்டுட்டுப் படு...புஸ்தகம் படிக்க உட்காராதே...உடம்புதான் முக்கியம்...
அப்பாவின் பேச்சில் தன்பால் எங்கேனும் ஒரு மூலையில் கருணை ஒட்டிக்கொண்டே இருக்கும். அதை நன்றாக உணர்ந்திருக்கிறான் இவன்.
அவன்தான் இந்தக் குடும்பத்துக்கு ராஜா...என்று இவன் காது கேட்கவே பலமுறை அம்மாவிடம் சொல்லுவதைக் கேட்டிருக்கிறான். அலுவலரைப் பார்த்துப் பேசியதாக அப்பா சொல்கிறார். அதுபற்றிக் கேட்போமா வேண்டாமா என்று யோசித்தான். தன்னைப் பார்க்கக் கூடாது என்றுதான் நேரே அவரை மட்டும் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார். தன்னை இந்த விஷயத்தில் தொந்தரவு செய்யக் கூடாது என்கிற எண்ணம் வந்திருக்கலாம். அல்லது நான் இதில் ஒத்துழைக்க மாட்டேன் என்று தோன்றியிருக்கலாம். அல்லது இம்மாதிரியான காரியங்கள் எல்லாம் தன்னோடு போகட்டும் என்ற நினைப்பிருக்கலாம். எதற்குக் கேட்டுக்கொண்டு அதில் தலையைக் கொடுத்தமாதிரி ஆக்கிக் கொண்டு? அவரே பார்த்துக் கொள்ளட்டுமே!
அது சரி பாலா...உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் மட்டும் கேட்கணும்னு நினைச்சேன்...அப்பா கேட்டா சொல்லுவியா...?
என்னப்பா இப்டிக் கேட்குறீங்க...தாராளமா சொல்லுங்கப்பா...
புதுசாக் கான்ட்ராக்ட் கிடைச்சா செக்யூரிட்டியெல்லாம் வாங்குவாங்கல்ல...?
ஆமாம்ப்பா....
அதுக்கு என்ன செய்யணும்?
செய்ற வேலைக்குத் தகுந்தமாதிரி போஸ்ட்டாபீஸ்ல பத்திரங்கள் வாங்கிக் கொடுக்க வேண்டிர்க்கும்ப்பா...
அப்புறம் அது திரும்ப எப்பக் கிடைக்கும்?
வேலையெல்லாம் முடிச்சு, ரெண்டு வருஷத்துல ஆடிட்டெல்லாம் முடிஞ்சபின்னாடி திருப்பிக் கொடுத்திடுவாங்க...
அப்போ அதுவரை...?
அதுதான் செக்யூரிட்டி...குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் மேலே பணப்பிடித்தம் ஏதும் வந்திச்சின்னா? ஒரு பிடி வேண்டாமா? ரெகவ்ரி இருந்தா, கட்டச் சொல்லுவாங்க...கட்டலைன்னா இந்தப் பத்திரங்களை போஸ்டாபீஸ்ல சப்மிட் பண்ணி பணமாக்கி ரெகவ்ரியை நேர் செய்திடுவாங்க...ஆகையினால உடனே மறுவருஷம் திரும்பப் பெற முடியாது. .
நிச்சயமாவா சொல்றே?
இதுல நிச்சயத்துக்கு என்னப்பா இருக்கு? ரூல்ஸ்னா ரூல்ஸ்தான். எல்லாத்துக்கும் ஒண்ணுதான்.
நாகநாதன் அமைதியானார். பிறகு அன்று அப்படிச் சொன்னானே பிச்சாண்டி? உள்குத்து வேலைகள் ஏதாவது நடக்குமோ? படு விஷப்பயலாச்சே அவன்...
ஒவ்வொரு வருஷமும் புதுசா வேலை செய்றதுக்கு புதுசாத்தான் செக்யூரிட்டி கொடுத்தாகணும்...அது சரி, யாருக்காகப்பா கேட்குறீங்க...?
இல்லல்ல...சும்மாத்தான் கேட்டேன்....அந்தக் கான்ட்ராக்ட் கிடைச்சிதுன்னா என்ன செய்யணும்னு தெரிஞ்சிக்கணும்ல...அதுக்காகத்தான்...
அதுக்கு நீங்க ஏம்ப்பா கவலைப்படுறீங்க...அது கான்ட்ராக்டர் பாடுல்ல...நீங்களா செய்யப் போறீங்க...?
இல்லல்ல...சும்மாத்தான் கேட்டேன்.....
அப்பாவின் பேச்சு புரியாமல் இருந்தது. எதற்காக இப்படித் திரும்பத் திரும்பக் கேட்கிறார்? யாருக்கோ தகுதியில்லாத ஒருவருக்கு சிபாரிசுக்கு அலைகிறார். அவன் பயனடைய இவர் மெனக்கெடுகிறார். அரசியலில் பிரபலமாக வேண்டும் என்கிற எண்ணமுள்ள அப்பா இம்மாதிரி ஆட்களையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று ஏன் நினைக்க மாட்டேன் என்கிறார். தவிர்க்க நினைத்து முடியவில்லையா? அல்லது எல்லோரையும்தான் கை கோர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற தவறான கணிப்பா? அல்லது யாருடனும் சேர்ந்து கொண்டாலும் நான் என் காரியத்தில் கண்ணாக இருப்பேன் என்கிற தன்னம்பிக்கையா? அப்பா ஏதேனும் சிக்கலில் மாட்டிக் கொள்வாரோ என்பதாக இவனுக்குள் ஒரு எண்ணம் உதித்தது. என்னவோ நடக்கப்போகிறது என்று ஒரு எண்ணம் மனதுக்குள் சொல்லிக் கொண்டேயிருந்தது.
குழப்பத்தோடேயே படுக்கைக்குப் போனான் பாலன். உறாலில் அப்பா யாருக்கோ போன் பண்ணிப் பேசிக் கொண்டிருந்தார். வழக்கத்திற்கு மாறாக அவர் சத்தத்தைக் குறைத்துக் கொண்டு பேசுவது இவனை உறுத்தியது. இப்படியெல்லாம் வீட்டில் உள்ளவர்களை ஒதுக்கிவிட்டு, அல்லது தான் மட்டும் ஒதுங்கி அவர் காரியங்கள் என்றுமே பார்த்ததில்லை. ஆனால் இப்பொழுது ஒளிவு மறைவும், ரகசியங்களும் அப்பாவின் வாழ்க்கையில், நடவடிக்கைகளில் நிறையப் புகுந்திருக்கின்றன
. தன் வயதுக்கு ஒரு அளவுக்கு மேல் அவரிடம் பேச முடியாத நிலைமையும், அப்படிப் பேசாததனாலேயே நிறைய விஷயங்கள் தெளிவு படாமல் போய்க்கொண்டிருப்பதையும், உள்ளுருக்கு வந்து விட்டதனால் வீட்டுக் காரியங்களை முழுப் பொறுப்போடு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தனக்கு இது புதுச் சங்கடமாக இருப்பதுபோலவும் நினைக்க ஆரம்பித்தான் பாலன். சிவனே என்று ஜவுளித் தொழிலை மட்டும் அவர் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாதா என்று ஒரு ஏக்கம் எழுந்தது அவனுக்குள்.
எண்ணங்கள் தந்த குழப்பங்களுக்கிடையில், மனம் ஒரு நிலையிலில்லாமல் உறாலில் படுத்திருக்கும் அம்மாவை அந்த மங்கிய விளக்கொளியில் அமைதியாய் நோக்கினான். அருகிலே தங்கைமார்கள். ராகினி, ரோகிணி, கல்யாணி. எல்லாவற்றிலும் ஏதோவோர் ரசனை இருக்கத்தான் செய்திருக்கிறது அப்பாவுக்கு. எப்படி அழகாகக் கோர்வையாக இப்படியான பெயர்களைத் தேர்வு செய்தார்? குதிர் குதிராக மூவரும் எப்பொழுது எங்களுக்குக் கல்யாணம் என்று கேட்காமல் கேட்பது போல் தோன்றியது இவனுக்கு. வரும் தையிலாவது பெரிய தங்கைக்குத் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று ஒரு உறுதி பிறந்தது அப்போது. அதுநாள் வரை சேமித்து வைத்திருக்கும் பொதுச் சேம நலநிதிப் பணம் எவ்வளவிருக்கும் என்று மனது கணக்குப்போட்டது திடீரென்று. இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்பதுபோல் ஒரு வேகம் கிளர்ந்தது. அந்த எண்ணத்தோடேயே, உறக்கம் வராமல் புரண்டுகொண்டேயிருக்கும் அப்பாவைப் பார்த்தவாறே தன்னை மீறிக் கண்ணயர்ந்து போனான்.
( 6 )
ன்று ஆய்வுக் கூட்டம் இருக்கிறது என்ற நினைப்பே உடல் அயற்சியில் மறந்து போய் விட்டதை எண்ணியவாறே பரபரப்பாக எழுந்த பாலன் வேகவேகமாகக் குளித்துவிட்டு அம்மா நீட்டிய டிபனை அள்ளி வாயில் திணித்துக்கொண்டு, மதியச் சாப்பாடு வேணாம்மா என்றுவிட்டுப் பறந்தான் அலுவலகத்துக்கு.
எதற்காக இப்படிச் சொல்லிவிட்டுப் போகிறான் என்பது புரியாமல் அவன் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்ற ஜெகதாம்பாள் அவனுக்கு முன்னால் எழுந்து ஓட்டமாய் ஓடிய தன் கணவனை நினைத்துக் கொண்டாள்.
இவன்தான் காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டதுபோல் ஓடுகிறான் என்றால் அவர் அதற்கு முன்னால் கிளம்பிவிட்டாரே! அப்படி என்னதான் வேலையோ இருவருக்கும்? ஒன்றும் புரியாமல் நல்லதே நடக்க வேண்டும் தெய்வமே! என்று கடவுளை வேண்ட ஆரம்பித்தாள்.
இவன் ஆபீசுக்குள் அடியெடுத்து வைத்த போது கூட்டம் ஏற்கனவே ஆரம்பித்திருந்தது.
தேவையான கோப்புகளையெல்லாம் முதல் நாள் மாலையே அலுவலரின் அறைக்கு அனுப்பிவிட்டான். ஒரே ஒரு அட்டவணை மட்டும் தயார் செய்ய வேண்டியிருந்தது. அதையும் தயாரித்து முடித்துவிட்டு காலையில் பிரின்ட் எடுத்துக்கொள்வோம் என்று கிளம்பியிருந்தான்.
இப்போது அதன் ஒரு நகல் அவனின் டேபிளில் வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் கூட்டத்திற்கு இவனும் ஆஜராவது வழக்கம். அன்று மாறுதலாக மேலாளர் உள்ளே அமர்ந்திருப்பதாகச் சொன்னார்கள். நடப்பது ஆய்வுக் கூட்டம்தானா என்று சந்தேகம் வந்தது.
உங்களை இங்கே வெயிட் பண்ணச் சொன்னாங்க சார் .மானேஜர்...என்று வந்து சொன்னான் பியூன் ராமலிங்கம்.
உள்ள யார் யார் இருக்காங்க என்றான் இவன்.
மினிஸ்டர் பி.ஏ. வந்திருக்காரு சார்...நீங்க பார்க்கலையா? எட்டு மணிக்கெல்லாம் வந்துட்டாங்கல்ல...என்றான் பதிலுக்கு.
கசகசவென்று சத்தம் பெரிதாக இருந்தது வாசலில். கட்டடத்திற்கு வெளியே இரண்டு மூன்று கார்கள் புதிதாக நின்றன. அவற்றுக்கு நடுவே அந்த ஆள் பிச்சாண்டியின் காரும் நிற்பதை அதன் எண்ணை வைத்துக் கண்டு கொண்டான் இவன்.
அந்த அலுவலகத்திற்கு வந்து முதன் முறையாக அவன் போய் அமராமல் அந்தக் கூட்டம் நடக்கிறது என்று தோன்றியது இவனுக்கு. எத்தனை விஐபிக்கள் இருந்தாலும் அவனை அழைத்து அருகில் அமர வைத்துக் கொள்ளும் அலுவலர் இன்று தன்னைக் கண்டு கொள்ளாததும், தான் தயாரித்து வைத்திருந்த கோப்பில் முன்னதாகவே செய்துகொள்ளும் ஒரு டிஸ்கஷனும் இல்லாமல் போனதும் இவனை என்னென்னவோ நினைக்க வைத்தன. கூட்டம் முடிந்து எல்லோரும் கிளம்பியபோது மணி ஒன்றைத் தாண்டியிருந்த்து.
ஒவ்வொருவராக வெளியே வர ஆரம்பித்திருந்தார்கள். கேட்டுக்கு வெளியே நிற்கும் கார்கள் தனித்தனியே சீறிக்கொண்டு கிளம்ப ஆரம்பித்திருந்தன. படிப்படியாக ஆட்கள் அதிகமாகி வெள்ளை வேட்டியும், சட்டையுமாக நிறையப்பேர் வாயில் பகுதிகளில் தென்பட ஆரம்பித்தார்கள். வெளியே சாலைகளில் எங்கெங்கோ கலைந்து கலைந்து நின்றவர்கள் எல்லாம் ஒன்று கூடி விட்டாற்போலிருந்தது.
கொத்துக் கொத்தாகப் பலரும் வெளியேறியதும், அந்த அலுவலகமே ஒரு திடீர் அமைதிக்குத் தயார் ஆனது.
எல்லாரும் போய்ச் சேர்ந்த பின்னர் கடைசியாக பியூன் ராமலிங்கம் பின் தொடர அலுவலர் வெளியே வந்து நேர் திசையில் உள்ளே நோக்கினார். தன்னைத்தான் தேடுகிறார் போலும் என்கிற எதிர்பார்ப்பில் வாயிலுக்கு விரைந்தான் பாலன்.
அந்த ஃபைலை எடுத்திட்டு வா...என்றார்.. ராமலிங்கம் வேகமாய்ச் சென்று எடுத்து வந்து நீட்டினான்.
பாலன், இதை வாங்கிக்குங்க....அதுல இருக்கிற நோட் ஆர்டர்படி ஒரு உத்தரவை உடனே தயார் பண்ணிடுங்க...இன்னைக்கு சாயங்காலமே பார்ட்டிக்குக் கொடுத்தாகணும்....
சரி என்று இவன் கையை நீட்டியபோது, திடீரென்று மானேஜர் குறுக்கே வந்தார்.
எல்லாம் ரெடி சார்....ஏற்கனவே தயார் பண்ணி டெஸ்பாட்ச் ஸ்டேஜ்ல வச்சிருக்கேன்...நீங்க சொன்னா அனுப்பிட வேண்டிதான்...
அப்டியா....ஓ.கே., ஓ.கே., கொண்டாங்க கையெழுத்துப் போட்டுட்டே போயிடுறேன்...என்றவாறே மீண்டும் தன் அறைக்குள் நுழைந்தார். பாலன் அப்படியே நின்று கொண்டிருந்தான். மானேஜர் உள்ளே ஓடினார். அங்கேயே நிற்பதா, உள்ளே போவதா, அல்லது தன் இருக்கைக்குப் போவதா என்று தெரியாமல் லேசாக ஸ்தம்பித்தான்.
எல்லாமும் இன்னைக்கே ஸ்பீடு போஸ்டுல போயிடணும்...என்றவாறே மானேஜரை நோக்கிச் சொல்லிக் கொண்டு மீண்டும் வெளியே வந்து காறில் ஏறினார்.
ஓ.கே. சார்., எல்லாமும் இன்னைக்கே போயிடும்....- சொல்லிக்கொண்டே கார் கதவுவரை போய் ஒரு சல்யூட் அடித்து விட்டு கார் கதவையும் சாத்திவிட்டு உள்ளே வந்தார் மானேஜர்.
நீங்க போங்க பைலைக் கொடுத்தனுப்பறேன்...என்று பாலனைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே தன் இடத்திற்குப் போனார்.
பாலன் அமைதியாக வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். கொஞ்ச நேரத்தில் அந்தக் கோப்பு வந்தது அவனிடம்.
வச்சிட்டுப் போ...என்றவாறே குனிந்த நிலையில் ஏதோ ஒரு பதிவேட்டில் சில பதிவுகளைச் செய்து கொண்டிருந்தான்.
வந்திருந்த கோப்பினைத் திறந்து பார்க்க மனசே இல்லை. பார்த்து என்ன ஆகப்போகிறது? என்றிருந்தது.
மதியம் வெளியில் போய் மனசில்லாமல் என்னத்தையோ சாப்பிட்டுவிட்டு வந்திருந்தான். அன்று எதிர்பார்த்ததுபோல் கூடைக்காரியிடம் அம்மா சாப்பாடு கொடுத்து விடாதது சங்கடமாயிருந்தது.சே! என்று அலுத்துக் கொண்டான். கொடுத்துவிடுவாள் என்கிற எதிர்பார்ப்பில்தான் காலையில் அப்படி ஓடி வந்தது என்று சொல்லியது மனம். இடையில் ஒரு போன் பண்ணியாவது தெரிவித்திருக்கலாம். எதுவுமே சொல்லவில்லையென்றால் அம்மாதான் என்ன செய்வாள்?
மாலை கிளம்பும்போதுதான் மறந்திருந்த அந்தக் கோப்பைப் பார்த்தான் பாலன். அது அன்றைய கூட்டத்திற்காகத் தான் அனுப்பிய கோப்பாக இருந்தது. அந்தக் கூட்டம்தான் நடக்கவேயில்லையே? அனுப்பியதுபோலவே திரும்பியிருந்தது அது.
இவன் எதிர்பார்த்திருந்த அந்த முன் கோப்பு இன்னும் வரவில்லை. என்னவோ ஆகட்டும் நமக்கென்ன என்று நினைத்தான். டேபிளில் இருந்தவைகளை எடுத்து பீரோவில் அடுக்கிப் பூட்டி, டேபிளைச் சுத்தமாக்கி விட்டுக் கிளம்பினான்.
வாசல் படி இறங்கிய போது மனம் அந்தப் பாட்டு வரிகளை முனகியது.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே...
இவனுக்காகவே வீசுவதுபோல் எங்கோ பெய்த மழையின் எதிரொலியாகக் குளுமையான காற்று மெல்ல இவனை வந்து தழுவ, அந்த சுகத்தை இதமாக அனுபவித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தான் பாலன்.
அப்பாதான் எதிர்கொண்டார்.
டேய்...!ஆர்டர் பார்த்தியா....வாங்கிட்டேனாக்கும்...இன்னைக்கும் உன்னைத் தொந்தரவு பண்ணலை...சரிதானே...? நான் வந்திருக்கிறதே உனக்குத் தெரிஞ்சிருக்காதே? மினிஸ்டர் பி.ஏ. கூடல்ல இருந்தேன்....என்றவாறே நீட்டினார் இவனிடம். அவர் முகத்தில் இருந்த பெருமை இவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அது அப்பாவின் பெயரிலேயே இருந்ததும், அடியில் அவர் ஒப்பந்ததாரராகப் பதிவு செய்திருந்த சான்றிதழின் நகலுமாய் அவனை அதிர வைத்தது. அப்பா எல்லாவற்றிற்கும் களத்தில் இறங்கிவிட்டார் என்று தோன்றியது. இனி அவரைப் பிடிக்க முடியாது. எங்குபோய் அதுவே முடிகிறதோ அதுதான் இறுதி. இந்த உலகத்தில் யாரையும் யார் சொல்லியும் திருத்த முடியாது. அவரவரே அனுபவப்பட்டு மீண்டு வரவேண்டியதுதான்.
அந்தப் பிச்சாண்டிக்காக நான் வேலை செய்யப் போறேன்....எனக்காக அவன் ஒண்ணு செய்து தரப் போறான்....இதுதான் எங்களுக்குள்ள ஒப்பந்தம்....இந்த உலகத்துல ஒண்ணைக் கொடுத்துத்தான் ஒண்ணை வாங்கணும். எதுவுமே கொடுக்காம நமக்கு எதுவும் கிடைக்காது. அப்படிக் கிடைச்சாலும் அது நிலைக்காது. இன்னும் கொஞ்ச நாள்ல பாரு...டவுன்லயே நம்ம கடையை அடிச்சிக்க எதுவுமில்லேன்னு ஆயிடும்...ஜனம் பூராவும் அங்க வந்துதான் விழப்போவுது – படு குஷியாகச் சொன்னார் நாகநாதன்.
அப்பா சொல்வதை அமைதியாய் நின்று கேட்டுக் கொண்டான் இவன். அப்பாவிடம் எது நிலைக்கப் போகிறதோ, எது கழன்று ஓடப் போகிறதோ தெரியவில்லை இவனுக்கு. அம்மா பாவம், அவளால் எதுவுமே சொல்ல முடியாது. எல்லாவற்றையும் வெறுமே பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடியும். தன்னால் மட்டும் முடியுமா? அதுவும் சாத்தியமில்லை. ஆவது ஆகித்தான் ஓயும். முடிந்தவரை குடும்பத்தைப் பாதுகாக்க முயற்சிக்க வேண்டியதுதான். அதுதான் தன்னின் கடமை. பெற்றோருக்குத் தான் செய்யும் நன்றிக் கடன். நிதானமான தன் எண்ண ஓட்டங்களை நினைத்து அவனுக்கே பிரமிப்பாய் இருந்தது. ஆனாலும் அந்த அதிர்ச்சியிலிருந்து அவன் மீள்வதற்குள், எதிர்பாராத இன்னொரு வெடி குண்டும் பாலனை நோக்கி வேகமாய் வந்தது.
உனக்கு ஒண்ணு அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன்...இப்பத்தான் சரியான வேளை..அதையும் சொல்லிப்புடறேன். இந்தக் குடும்பத்தைப் பொறுப்பா நீ கொண்டு செலுத்தணும்னுதான், செலுத்துவேன்னுதான் இதைச் சொல்றேன். உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால கவனமாக் கேளு. .உன் ஆபீசுல வேலை பார்க்குதே நந்தினின்னு ஒரு பொண்ணு..எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்காதே...தெரியும்...அவ்வளவுதான்.....அதோட அண்ணன் கூட நீ அன்னைக்கு டீக்கடைலருந்து வர்றதை நான் பார்த்தேன். அவனோடல்லாம் சகவாசம் வச்சிக்காதே....அது எதுவாயிருந்தாலும் இன்னியோட விட்டிடு...எதைப்பத்தியும் நான் கேட்கலை..கேட்க விரும்பலை....அவங்கப்பனோட பார்ட்னரா இருந்து என்னோட சாப்பாட்டுத் தொழில்ல மண்ணைப் போட்டவன் அந்தத் துரோகி. பெருத்த நஷ்டத்தை அடைஞ்சவன் நான்...ஏமாற்றப்பட்டவன்...அதுக்கு அவனோட மகனும் ஒரு முக்கிய காரணம்.ஒரு வகைல அதுதான் என்னை உசுப்பி விட்டதுன்னு சொல்லணும்... என்னை நம்பிக்கை மோசம் பண்ணினவன் அவன். அதுக்குப் பெறகு வாழ்க்கைல காலூன்றுறதுக்கு நான் பெரும்பாடு பட்டுப் போனேன்.எத்தனையோ இழிவு? எவ்வளவோ அவமானங்கள்? எனக்குத்தான் தெரியும் அந்த வலி! என் கூட நின்னு எல்லாத்தையும் சுமந்த உன் அம்மாவுக்குத் தெரியும். இன்னைக்கு அவன் எனக்குக் கீழதான்...அன்றைக்கு மனசுல வச்ச வன்மம் இதுதான்...அதுல ஜெயிச்சுட்டுத்தான் ஓய்ஞ்சேன்..இப்போ உன் மூலமா திரும்பக் கைகோர்க்கணும்னு எதிர்பார்க்கிறான்னு நினைக்கிறேன். அது வேண்டாம்...மறந்திடு...இன்னையோட மறந்திடு...எதுவும் இருந்திச்சுன்னா உதறிடு...முழுசா விட்டு உதறிடு....சொல்லிட்டேன்...நீ படிச்ச பையன்...உனக்கு இதுக்கு மேல சொல்ல வேண்டாம்னு நினைக்கிறேன்...
நிதானமாக, அழுத்தமாகப் பொழிந்துவிட்டு, அவன் முகத்தைக் கூடப் பார்க்காமல் கொல்லைப் புறம் நோக்கிச் சென்று விட்டார் நாகநாதன். வெகு நாட்களுக்குப் பிறகு அவன் பார்த்த கண்டிப்பு. அப்படியே அதிர்ந்து போய் நின்றான் பாலன். உடம்பில் மெல்லிய நடுக்கும் பரவியிருப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. எல்லாமும் தெரிந்திருக்கிறது அப்பாவுக்கு. அப்படித்தான் நினைக்க வேண்டியிருக்கிறது. அவரிடம் தெளிவாக அறிய என்று தனியே பேச வேண்டியதில்லை. அவரின் தீர்மானமான் இந்தப் பேச்சு போதும். இவனுக்கு மொத்தமும் புரிந்தது போலிருந்தது. ஜெகதலப்பிரதாபன், ஜெகதலப்பிரதாபன்....வாய் முனகியது இவனுக்கு.
அண்ணனுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத அதிர்வைக் கண்டு பதறிய தங்கைகள் மூவரும் அவனுக்கு ஆறுதல் சொல்வதுபோல் வந்தபோது எந்தச் சலனமும் இல்லாதவனாய், தன்னை வெகுவாய் நிதானப்படுத்திக் கொண்டவனாய், அவர்களை நேர் பார்வையில் நோக்கிச் சிரிக்க முயன்றான் பாலன். ஏனோ அப்படி முடியாமல் அமைதியான, அழகான, கருணை பொழியும் ஆதுரமான நந்தினியின் அழகு முகம் அவன் மனக்கண் முன் தோன்றி அவனைச் சங்கடப்படுத்த ஆரம்பித்தது..( தேவி வார இதழில் 22.02.2012 முதல் 21.03.2012 வரை தொடர்ந்து ஐந்து வாரங்கள் வெளியான குறுந்தொடர்)
-------------------------------------------------

1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நுணுக்கமான விவரிப்புடன் அருமையான கதைப்பகிர்வுக்கு பாராட்டுக்கள் ..

தேவி இதழில் வெளியானதற்கு வாழ்த்துகள்..

இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

  சிறுகதை          தினமணிகதிர்    10.11.2024 ல் வெளி வந்த சிறுகதை  குவிகம்-சிவசங்கரி இலக்கியச் சிந்தனைக் குழுமத்தின் நவம்பர் 2024 மாத சிறந்த...