“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத் தாங்க…எனக்குத் தாங்க….”
எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பரபரப்போடும் பயத்தோடும் நீளும் கைகள். ஒருவர் தோள் மேல் ஒருவர் இடித்தும்…முன்னிற்பவரை அமுக்கியும், லேசாகத் தள்ளியும், கிடைக்கும் இடுக்கில் நுழைத்து விரல்களை உதறிக் கொண்டே நீளும் கைகள்.
எல்லாருக்கும் உண்டு…எல்லாருக்கும் உண்டு…தர்றேன்…தர்றேன்… அத்தனபேருக்கும் தந்துட்டுதான் போவேன்….
சார்…எனக்குத் தரலை…எனக்குத் தரவேல்ல…இந்தக் கைக்கு ஒண்ணு குடுங்க சார்…
சார்…சார்…என்ற அந்தத் தெளிவான அழைப்பு இவனை அதிசயப்படுத்தியது.
எல்லோரையும் முந்திக் கொண்டு முகத்துக்கு முன்னால் தெரிந்த அந்தக் கையைப் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது. இன்னும் கொஞ்சம் போனால் தாடையைப் பிடித்து நிமிர்த்திக் கேட்டு விடலாம். அத்தனை நெருக்கமாக நீண்ட தடியைப் போல் விரைப்பாக நீளும் கை. அணிந்திருந்த முழுக்கை உல்லன் பனியன் அப்படி முரட்டுத் தோற்றத்தைத் தந்ததோ என்னவோ…அது இதற்கு முன்னேயே ஒன்று வாங்கிக் கொண்டு விட்ட கை. இப்பொழுது இன்னொன்றிற்காக மீண்டும் நீண்டிருக்கிறது. அந்தக் கை மட்டுமல்ல. வேறு சிலவும்தான்.
அதில் தோன்றிய குழந்தைத்தனம்தான் மனதுக்குள் கசிவை உண்டாக்கியது. அதே சமயம் ஒரு பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. வாங்கிய கைகளே பல திரும்பத் திரும்ப நீளுகின்றன. தெரிகிறதுதான். வாங்கியாச்சுல்ல…எடுங்க…எடுங்க…சொல்ல ஏனோ மனம் வரவில்லை…
சட்டுச் சட்டென்று மனசு எப்படிக் கலங்கிப்போகிறது? இது எத்தனையாவது முறை? சொல்லத் தெரியவில்லை.
நோ சார்…எனக்கு ஷீகர்….வேண்டாம்……நீட்டிய கையால் மறுத்தார். எனக்குந்தான் சார்…எனக்குந்தான்….இன்னொருவர். எங்கே கொடுத்து விடுவாரோ என்று பயந்ததுபோல் ஒதுங்கி நின்றார் ஒருவர். பின்னுக்கு ஒருக்களித்துக் கொண்டார்.
அந்தக் கேக் எடுங்க… மைசூர்பாகு எல்லாருக்கும் கொடுத்தாச்சு…. –இங்கிருந்தே திரும்பி மேடைக்கருகே நின்ற நண்பரைப் பார்த்துச் சொன்னான்.
எனக்குக் கேக்கு…எனக்குக் கேக்கு….திரும்பவும் பலவும் நீண்டன. பாக்ஸைப் பிரித்து ஒவ்வொரு கேக்காக எடுத்து நீட்டினான். அவசரத்தில் அங்கேயும் இங்கேயுமாக நீண்ட கைகள் இவன் கையில் இருந்த கேக்கினைத் தானாகவே பறித்துக் கொண்டன. ஒருவர் பிடுங்கிக் கொண்டதும் அதுபோலவே செய்ய முயற்சித்த வேறு சிலர். விட்டால் பெட்டியில் உள்ள அத்தனை கேக்குகளும் கீழே விழுந்து சிதறினாலும் போயிற்று. பெட்டியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயன்றான். அதற்குள் நாலைந்து கைகள் பெட்டிக்குள் போய்விட்டன.
ஊறீம்…ஊறீம்…எல்லாரும் போய் அவுங்கவுங்க இடத்தில உட்காருங்க…அப்பத்தான்….இல்லன்னா எடுத்திட்டுப் போயிடுவேன்…
யாரும் இவன் குரலைக் கேட்பதாயில்லை. கையிலிருந்த பெட்டியை அப்படியே கீழே வைத்தான். மேலும் இரண்டு மூன்று கைகள் இப்போது அதற்குள் நுழைந்தன. கேக்கை எடுத்து மீண்ட கைகளில் க்ரீம் தீற்றியும், சிவப்புப் ப்ளம் பழம் உதிர்ந்தும் காணப்பட பழத்தைத் தேடி மீண்டும் உள்ளே நுழையும் கைகள்.
என்ன செய்வதென்று தெரியாமல் நின்றான்.
பாலா…நீங்க வாங்க இங்க…விட்ருங்க…அவுங்களே எடுத்துக்குவாங்க….
மேடையில் அமர்ந்திருந்த குருஜி இவனைப் பார்த்துச் சொல்ல…மனமில்லாதவனாய் அங்கிருந்து அகன்றான்.
குருஜி, இன்னும் இருவர்…எல்லோரும் அங்கே இருந்த பரபரப்பைப் பார்த்த வண்ணமிருந்தனர். ஜி முகத்தில் சாந்தமான புன்னகை.
என்ன இப்படி?- இருபது வயதிலிருந்து அறுபது வயதுவரை உள்ளவர்களாகத் தெரிந்தனர் அங்குள்ளோர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள்?
இருக்கட்டும்… இருக்கட்டும்…சந்தோஷமாஇருக்காங்க…சுதந்திரமா இருக்காங்க…
சொல்லிவிட்டு இவன் கைகளை மெல்லப் பற்றி அழுத்தினார்.
அங்க பாருங்க…அவுங்க கோலத்த… என்றவாறே வாயைப் பொத்திக் கொண்டு மெல்லச் சிரித்தார். கையில் இருந்த கேக்கின் க்ரீம்கள் அனைத்தும் இப்பொழுது அவர்களின் மூக்கிலும், முகங்களிலுமாகத் தீற்றியிருந்தன. ஒருவருக்கு மூக்கிலே வளைவாக கிளி மூக்குபோல் க்ரீம் தொங்கிக் கொண்டிருந்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
ஆச்சு…எல்லாரும் எடுத்துக்கிட்டாச்சா….
ஆச்சு சார்…..
ஆச்சுங்கய்யா…..
கீழ மேல சிந்தாமச் சாப்பிடுங்க பார்ப்போம்….யாரு கைல முகத்துல ஒட்டாமச் சாப்டுரீங்களோ அவுங்களுக்கு நா ஒரு பரிசு தரப்போறேன்…
சரி சார்…சரி சார்… ஒட்டாமச் சாப்டுறோம் சார்….
என்னா பரிசுங்கய்யா…?
அதச் சொல்ல மாட்டேன்….நீங்க வேஸ்ட் பண்ணாம, கீழே சிந்தாமச் சாப்பிட்டு முடிங்க பார்ப்போம்…அப்பத்தான்…
சார்…சார்…பேனாத் தருவீங்களா….பேனா…?
ஓ! தருவேனே….உங்களுக்கு அதுதான் வேணுமா? தர்றேன்….
நல்லா எழுதற பேனாவாத் தரணும்…..
குருஜி மெல்லச் சிரித்தார்.
ஆமா சார்….நா எங்கம்மாவுக்கு லெட்டர் எழுதணும்….
சொல்லிக்கொண்டே அந்தக் கேக்கை வாயை அகலத் திறந்து லபக்கென்று உள்ளே திணித்தார் அவர்.
ஏய்…பார்த்து…பார்த்து….இப்டியா ஒரே வாய்ல அமுக்கிறது….? நெஞ்ச அடைச்சிக்கப் போவுது…
அவ்ளவ்தான் சார்…ஒரே வாய்தான்…இங்க பாருங்க…..? சொல்லிக் கொண்டே வாயை ஆவெனத் திறந்தார். இடது வாய் ஓரம் உமிழ் நீரோடு க்ரீம் வழிந்தோட குழந்தையாய் அவர் வாயை அகலத் திறந்த காட்சி என்னைச் சங்கடப்படுத்தியது.
சரி…எல்லாரும் சாப்டாச்சா…நல்லா இருந்திச்சா?
ஸ்வீட்டா இருந்திச்சு சார்….
ஸ்வீட்டா இருந்தாத்தானே சந்தோஷமா இருக்கும்…அதுனாலதான்…உங்க எல்லாருக்கும் இப்போ சந்தோஷந்தானே?
சந்தோசம்…சந்தோசம்….
சரி….இப்போ நா உங்ககிட்ட ஒண்ணு கேட்கப்போறேன்…இன்னைக்கு என்ன நாள்…?
தீபாவளி சார்……
வெர்ரிகுட்…கரெக்டா சொல்றீங்களே? தீபாவளின்னா என்ன? யாராவது சொல்லுங்க பார்ப்போம்…
நா சொல்றேன் சார்…நிறையக் கைகள் உயர்ந்தன.
பெரியவர், சிறியவர் வித்தியாசமில்லாமல் உயர்ந்த அந்தக் கைகளுக்குச் சொந்தக்காரர்களை நேருக்கு நேர் பார்த்தபோது இவன் மனது கலங்கியது.
.தீபாவளின்னா நரகாசுரனக் கொன்ன நாள் சார்….
நரகாசுரன்னா யாரு?
அவன் ராட்சசன் சார்…பெரிய்ய்ய்ய்ய்ய முரடன்….
அப்புறம்?
அவனக் கொன்ன நாள்தான் தீபாவளி….
ஓ! அப்டியா? அப்போ…?
அதத்தான் சார் நாம இன்னைக்குக் கொண்டாடுறோம்…
தீமையை அழிச்ச நாள் சார்…தீபம் ஏத்தி வெளிச்சத்தை உண்டாக்கி இருளைப் போக்கறோம் சார்…..- ஓரத்தில் இருந்த ஒரு இளைஞனின் அமைதியான பதில்.
பலே…பலே…பலே…. – எல்லோரும் பலத்துக் கை தட்டினர்.
இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
ஜி…இவ்வளவு தெளிவாப் பேசறாங்களே…?
அப்டித்தான்…பெரும்பாலும் அப்டித்தான்னு வச்சிக்குங்களேன்…ஆனா சில சமயம் இவங்களோட ஆர்ப்பாட்டம்….நீங்க பார்த்ததில்லியே…?
இன்னைக்குத்தானே வர்றேன்…
தாங்க முடியாதாக்கும்….அப்பல்லாம் நாம இங்க நிக்கவே முடியாது…
ஏன்? ஏன் அப்டிச் சொல்றீங்க…?
பூசைதான்…அன்னைக்கெல்லாம்…இல்லன்னா அடங்கமாட்டாங்களாக்கும்…
பூசைன்னா…? சாமி பூஜையா….? அமைதியா அப்டியே தியானத்துல உட்கார்த்திடுவாங்களா?
நோ…நோ…அதில்ல…நா சொல்றது…இதை….. – கையால் சைகை செய்து காண்பித்ததைப் பார்த்துக் கேட்டேன்.
அடியா? அடிக்கவா செய்வாங்க…?
அடின்னா நீங்க நினைக்கிறமாதிரி கொடூரமால்லாம் இல்லே…ரொம்பவும் கற்பனை பண்ணிக்காதீங்க…லிமிட்டா…அவுங்கள அடக்குறதுக்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு…..
இவனுக்கு இவன் தந்தையின் மூத்த சம்சாரத்தின் ஒரே பிள்ளையின் ஞாபகம் வந்தது. மூத்த அண்ணா அவர். அப்பப்பா…!!! அவரோடு என்ன பாடு பட்டது குடும்பம்? ஏற்கனவே வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க, இந்தக் கொடூரம் தாங்கவே முடியாததாகி விட்டது. குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்ததற்குப் பின்னால்தான் ஓய்ந்தது. ஆடிப் போனது மொத்தக்குடும்பமும். . அவருடைய சாவோடுதான் எல்லாம் முடிந்தது. விளக்கிச் சொல்ல ஆரம்பித்தால் அது நீளும் அனுமார் வால் போல். அந்த வேதனைகளைத் திரும்பவும் நினைவில் கொண்டு வந்து எல்லோரையும் சங்கடத்துக்குள்ளாக்க வேண்டுமா என்ன? குடும்பமே இப்பொழுதுதான் எல்லாம் தீர்ந்து மூச்சு விடுகிறது. விடுவது நம் மூச்சுதானா என்பது கூட இன்னும் உறுதிப்படாத நிலை.
வரிசைக் கடைசியில் உட்கார்ந்திருந்த அந்த மனநல மையத்தின் நிர்வாகியைக் கவனித்தான் இவன். அவரின் பார்வை அவர்களின் மேல் கூர்மையாய்க் குவிந்திருந்தது. வந்ததிலிருந்து இதைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். நல்ல நாளும் அதுவுமாய் ஏதாவது ஏடாகூடமாய் ஆகிவிடக் கூடாதே என்று நினைக்கிறாரோ என்று தோன்றியது. இடது கோடியில் இருந்த ஒருவர் தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவரின் முதுகுப் பக்கம் தன்னை வெகுவாய் மறைத்துக் கொண்டு லேசாகத் தலையைப் பக்கவாட்டில் நீட்டி நீட்டி அந்த நிர்வாகியையே கவனித்துக் கொண்டிருந்தார். அவரின் பார்வையில் அப்படி ஒரு மிரட்சி. இமைக்காத பார்வை.
இவர் அவரையே கவனிக்கிறாரா தெரியவில்லை. குறிப்பாகச் சிலரை மாறி மாறி அவர் நோக்குவதாகவே பட்டது.
இன்னைக்கு தீபாவளின்னு சொன்னீங்கல்லியா….ஆகையினால உங்களோட இருக்கணும்னு நாங்களெல்லாம் டவுன்லேர்ந்து வந்திருக்கோம்…எங்களோட இருக்க உங்களுக்கு விருப்பமா?
விருப்பம் சார்…விருப்பம் சார்….விருப்பம் சார்…. –
ஓ.கே. சார்…ஓ.கே. சார்….பல குரல்கள் ஒரு சேர எழுந்தன. சிலர் எழுந்து நின்று சந்தோஷத்தின் அடையாளமாக ஜிங்கு ஜிங்கென்று குதித்தனர். சிலர் கையைக் கையை உயர்த்திக் காண்பித்தனர். உறா…உறா…உறா…என்று உற்சாகக் குரல் எழுப்பினர் சிலர்.
இன்னைக்கு உங்களையெல்லாம் பார்க்கிறதுக்கு ஒரு ப்ரொபஸர் வந்திருக்காரு….ஒரு தமிழ் அறிஞர் வந்திருக்காரு….ஒரு வியாபாரி வந்திருக்காரு…ஒரு ஆசிரியர் வந்திருக்காரு…ஒரு யோகா மாஸ்டர் வந்திருக்காரு…..அவுங்களுக்கு உங்களோடெல்லாம் பேசணுமாம்….உங்களப் பார்க்கிறதுலதான் சந்தோஷமாம்…உங்களுக்கெல்லாம் எப்டீ……?
எங்களுக்கும் சந்தோஷம்…எங்களுக்கும் சந்தோஷம்…. – சொல்லிக்கொண்டே ஒவ்வொருவராக எழுந்து வர…..
நீங்களெல்லாம் அப்டியே இருங்க….நாங்க வர்றோம்…உங்ககிட்டே….. – உற்சாகமாக எழுந்த அவர்களை ஜி சைகை மூலம் தடுத்தார்.
அதற்குள் பலரும் ஓடி வந்து கையைப் பிடித்துக் குலுக்க ஆரம்பிக்க,
உறாப்பி தீவாளி….உறாப்பி தீவாளி…உறாப்பி தீவாளி… - அவர்களின் சந்தோஷப் பிடியில் கையின் பயங்கரமான இறுக்கத்தை உணர்ந்தான் இவன்.
அந்த முகங்களில் ஒரு தீராத சோகம்…
சிரிக்கும் சிரிப்பில் ஒரு முழுமையற்ற தன்மை.
கொஞ்சங்கூட இமைக்காத கண்கள்.
உதட்டில் மென்மையான புன்னகைதான். ஆனாலும் அந்த வெறிக்கும் கண்களை ஏன் சந்திக்க முடியவில்லை?
உங்கள்ல யாருக்காவது பாடத் தெரியுமா?
நா பாடறேன் சார்…..
வாங்க…
எம்.ஜி.ஆர். பாட்டு சார்….
ஓ! அப்டியா…வாத்தியார் ரசிகரா?
குருஜியே இப்படிக் கேட்டது என்னவோபோல் இருந்த்து.
அவருன்னா உசிரு சார் எனக்கு…
சரி…பாடுங்க….
உலகம் பிறந்தது எனக்காக…ஓடும் நதிகளும் எனக்காக…மலர்கள் மலர்வதும் எனக்காக….அன்னை மடியைப் பிரிந்தேன் எனக்காக….அன்னை மடியைப் பிரிந்தேன் எனக்காக….எனக்காக…எனக்காக….
அந்த வார்த்தையையே திரும்பத் திரும்பச் சோகமாகச் சொல்லும் அந்த முகம். மனதை என்னவோ செய்த்து.
பளீரென்று ஒரே சிரிப்பலைகள். என்ன எதிர்வினை இது?
என்ன சார்….என்னோட பாட்டு நல்லா இருந்திச்சா……
ஏன் அப்டிப் பாடறீங்க…? – ஜி கேட்டார்.
அது நானா எழுதினது சார்….உறாஸ்டல்ல இருக்கிறபோதே அப்டித்தான் பாடுவேன்….அப்புறம் டீச்சர் ஆனப்பெறவு கூடப் பாடியிருக்கேன்… ஒரு நா எங்கம்மா அந்த பி.டி. மாஸ்டரோட ஓடிப் போனாங்கல்ல…அன்னைக்குக் கூட இப்டித்தான் பாடினேன்….. சொல்லிவிட்டுக் உறா உறா வென்று அவர் சிரித்தபோது அந்த உறாலே அமைதி பூண்டிருந்தது.
சார்…சார்….வரிசைக் கடைசியில் இருந்து நிர்வாகி அழைப்பது கேட்டது. அங்கிருந்த மேனிக்கே வாயை மூடி அவர் சைகை செய்தார்.
சரி…நீங்க போய் உட்காருங்க…..எல்லாரும் பாட்டுப் பாடுனவருக்கு ஜோரா ஒரு தரம் கை தட்டுங்க…
பட்…பட்…பட்…என்று கோரஸாகக் கை ஒலி.
நா பாடறேன்…நா பாடறேன்…வேறு சிலர் எழுந்து வந்தனர்.
ஒருவர் வேகமாய் வந்து பராசக்தி படத்தில சிவாஜி கோர்ட் சீன் பேசுவாருல்ல…அத அப்டியே எங்க கெமிஸ்ட்ரி லேப் மாஸ்டர் பேசினா எப்டியிருக்கும்னு பேசிக்காட்டவா? என்று பேச ஆரம்பித்தார்.
அடுத்தாற்கோல் ஒருவர் எழுந்து பாட ஆரம்பித்தார்.
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…
குழந்தைக் குரலைக் கொண்டு வருவதற்கு அவர் வாயை ஒரு மாதிரிக் கோணலாய் வைத்துக் கொண்டது பார்க்க வேடிக்கையாய் இருந்தது.
ஒருவர் எழுந்து திருக்குறள் ஒன்றைச் சொன்னார். இன்னொருவர் ஓடி வந்து மிமிக்ரி செய்து காண்பித்தார்.
மிமிக்ரி செய்பவர்களெல்லாம் சிவாஜி குரலைக் கொண்டுவந்ததை இவன் பார்த்ததேயில்லை. அன்று அங்குதான் கேட்டான். கட்டபொம்மன் வசனத்தையும், கர்ணனில் குந்தி தேவி இரண்டு வரம் கேட்கும்போது கர்ணன் மழையாகப் பொழியும் சிவாஜியின் அந்த உணர்ச்சி மிகு காட்சியை துண்டைத் தோளின் முன்னே போட்டுக் கொண்டு கையை அகல விரித்து அங்கும் இங்குமாய் நடந்து இடையில் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவர் பேசிய விதம், அவர் ஒரு சிறந்த நடிகர்திலகத்தின் ரசிகர் என்பதாக இவனை நினைக்க வைத்தது.
சரி…போதும் என்று ஜி சொன்னபோது அவர் மேலும் ஆர்வத்தில்…
சார்…இன்னொரு ஸீன்….இன்னும் ஒரே ஒரு ஸீன்…என்று கெஞ்ச, சரி…சரி…என்று தலையாட்டினார் ஜி.
இந்திரன் மாறு வேஷத்துல கிழவனா வந்து கர்ணனோட கவச குண்டலத்தை தானமா வாங்க வந்திருப்பார் சார்…வந்திருக்கிறது இந்திரன்தான்னு சூரியபகவான் சந்நிதில கர்ணனுக்கு அசரீரி கேட்டிடும்…அப்போ அந்தக் கிழவர்ட்ட வந்து அவரை ரெண்டு கையால பிடிச்சு உட்கார வைப்பாரு கர்ணன்…அதுக்கு முன்னாடி இடுப்புல கையை வச்சிக்கிட்டு அவரைச் சுத்திச் சுத்தி வந்து வசனம் பேசுவாரு…அந்த ஸீன்…அந்த ஸீன்…என்று விட்டு உட்கார்ந்திருந்த ஒருவரை எழுப்பி அவரை மாறுவேஷத்தில் வந்த இந்திரனாகப் பாவித்து,
தள்ளாத வயசு……
தளராத நோக்கம்….
என்று வசனத்தை அப்படியே ஒன்று விடாது அவர் சொல்லித் தீர்த்தபோது….இவன் அப்படியே தன்னை மறந்து அமர்ந்திருந்தான். அவனையறியாமல் கண்கள் கலங்கியிருப்பதை உணர்ந்தான்.
எது எதை இவர்கள் சார்ந்து இருந்தார்களோ
அதன்பாற்பட்டே மனப்பிறழ்வுக்கு ஆளாகிவிட்டார்களோ?
இத்தனை ஞாபகசக்தியா? உண்மையிலேயே மனநிலை சரியில்லாதவர்கள்தானா அல்லது எப்பொழுதாவதா? அப்படியென்றால் நிரந்தரமாக இவர்கள் இங்கேதான் இருந்தாக வேண்டுமா? என்றேனும் ஏற்படும் நினைவுப் பிசகல்களுக்குக் கூட உடனிருந்து அரவணைக்க உறவுகள் தயாரில்லையா? என்ன கொடுமை இது?
மாதத்துக்கு மினிமம் அமௌன்ட் ஐயாயிரம் ரூபா…ஆளுக்கு ஏத்தமாதிரிக் கூடும் குறையும்…
எல்லாம் வசதியானவங்கதான்…அதத்தான் இங்க நீங்க கவனிக்கணும்…எவ்வளவு பைசா ஆனாலும் கொடுக்கத் தயாரா இருக்காங்க எல்லாரும்…ஆனா யாரும் கூட வச்சுப் பராமரிக்கத் தயாரில்லை….பணத்தை முதலா வச்சு நடக்கிற சமூகம் எப்டியிருக்கும்ங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்… கிளம்பலாமா…?
மீண்டும் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு, கை குலுக்கி, பிரியாவிடை பெற்றுக் கொண்டு, அந்த மலையடிவாரத்தையும், பசுமையான மலையையும், சுற்றுப் புறச் சூழலையும், மூலிகைகளோடு கலந்து வரும் மருத்துவக் காற்றினையும் சுவாசித்தவாறே நாங்கள் வாயிலை எட்டியபோது, அதுவரை நாங்கள் கவனிக்காது எங்கள் பின்னாடியே வந்த ஒருவர் கடைசியாகக் கேட்டார்.
சார்…எங்கப்பாம்மாவைக் கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்களே….அவுங்க வரல்லியா….?
திரும்பிப் பார்த்தார் ஜி. என்ன பதில் சொல்லலாம் என்று நேரம் எடுத்துக் கொண்டதுபோல் இருந்தது அவரின் அமைதி.
வருவாங்க…வருவாங்க…கண்டிப்பா வருவாங்க….வர்றேன்னு சொல்லியிருக்காங்க... ஜி தயக்கமின்றிக் கூறியவாறே இவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டே வெளியேறினார். கூடவே மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
அடுத்த முறை வர்றபோது கண்டிப்பாக் கூட்டிட்டு வாங்க சார்….நா பார்க்கணும்னு சொல்லுங்க….கட்டாயம் வருவாங்க….நாலு வருஷம் ஆச்சு எங்கப்பாம்மாவப் பார்த்து…..ஃபோர் இயர்ஸ்….ஃபோர் இயர்ஸ்….முனகிக்கொண்டே எங்களுக்குக் கையைக் காண்பித்துக் கொண்டு நின்றார் அவர்.
ஆகட்டும்….ஓ.கே…..ஓ.கே….
திரும்பிப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே வெளியேறினார் குருஜி.
என்னவோ மனதில் விபரீதமாய்த் தோன்ற இவன் கேட்டான்.
ஜி…அவுங்க ஃபாதர் மதர் எங்கிருக்காங்க…?
குருஜி முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி அமைதியாகக் கூறினார்.
யு.எஸ்ல….!!!
-------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக