29 டிசம்பர் 2011

“ஓல்ட் இஸ் கோல்ட்” கட்டுரை


 

ந்த அரச மரம் அங்கிருக்கிறதா என்று என் கண்கள் தேடியது.

அந்தப் பக்கமெல்லாம் இப்ப போக முடியாதுண்ணா…புதர் மண்டிக் கிடக்கு…என்றான் என் தம்பி.

அது ரொம்பப் பெரிசாச்சே…கொஞ்சம் தள்ளி நின்னு கூடப் பார்க்கலாமே.… …சுத்திவரக் கல் பாவியிருக்கும் பாரு…அதப் பார்க்கணும் எனக்கு….

என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். அந்த ஒளியைக் கண்டு கொண்டானோ என்னவோ? நினைப்பு தந்த சந்தோஷத்தை மலர்ச்சியாய் முகத்தில் கண்டிருக்கலாம்.

சரிண்ணா…வாங்க போவோம்…

அவனோடு நடந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று நின்று விட்டான்.

இந்த எடம் எதுன்னு தெரியுதா…?

சுற்றுமுற்றும் நோக்கினேன். பல வருடங்களாகப் பழகிய அந்த இடம் முற்றிலும் புதிதாய்த் தோன்றியது. ஏதோ பாழடைந்த இடத்திற்கு வந்துவிட்டதுபோல் இருந்தது.

தெரிலயே…?

இதுதாண்ணா பிள்ளையார் கோயில். மறந்திடுச்சா…? சொல்லியவாறே வலதுபுறம் கையைக் காண்பித்தான். வாசலில் கம்பிக் கதவு போட்டிருந்த அந்த இடுக்கு வழியே உள்ளே பார்த்தேன். ஒரே இருட்டு.

என்னடா இது? ஒண்ணுமேதெரில…?

பிள்ளையாரைத் தேடுறீங்களா? அவர் இல்ல…?

பின்ன?

இல்லன்னா இல்ல…அவ்வளவுதான்….யாருக்குத் தெரியும்…. – அதற்கு மேல் அந்தக் கேள்விக்கு பதில் இல்லை அவனிடம்.

எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்து வைத்த பிள்ளையார், பின்னரும் திருடப்பட்டு இல்லாமல் போனார். கோயில் வெறுமே நின்றது.

ஆற்றில் குளித்துவிட்டு ஈரம் சொட்டச் சொட்ட இடது தோளில் தோய்த்துப் பிழிந்த துணிகளுடனும், இடுப்பில் தண்ணீர்க் குடத்துடனும் பெண்கள் நடந்து வந்து கொண்டிருக்கும் காட்சி அப்படியே என் மனக் கண்ணில். அதில் ஒருத்தி ஸ்ருதி. அது எனக்கு மட்டுமே. யாருக்கும் சொல்வதற்கில்லை.

இங்கிருந்து பாருங்கண்ணா… - தம்பி எதிரே கையைக் காண்பித்தான்.

நீட்டிய திசையில் நோக்கினேன். அந்த மரம் இருந்ததற்கான சுவடு கூட அங்கேயில்லை. அப்பொழுதே மிகவும் முதிர்ந்த மரம். விழுந்து காணாமல் போயிருக்குமோ? வெட்டியிருப்பார்களா? சுற்றிலும் பாவியிருக்கும் கற்களுக்கான அடையாளம் கூட இல்லையே? பிரமித்து நின்றேன்.

மொட்ட…ஏ மொட்ட…என்ன பண்ணி விட்டிருக்கே எம் பேரனுக்கு? நன்னா முடிய ஒட்ட வெட்டி விடுன்னுதானே சொன்னேன் …துளிக் கூட குறைக்காம அப்டியே அனுப்பிச்சிருக்கியே….?

பாட்டீ…போதும் பாட்டி…நிறைய வெட்டியாச்சு…வா போலாம்…

சும்மா இரு…உனக்குத் தெரியாது…நாலணா சுளையா கொடுக்கறோம் அவனுக்கு…என்ன வேல பண்ணியிருக்கான் …..போ…போய் அவன்ட்ட உட்காரு….ஒட்ட வெட்டி கிராப்பு வையி… புரிஞ்சிதா…? அப்பத்தான் காசு தருவேன்….

நீங்க கவலப்படாமப் போங்க பாட்டி…நா அனுப்பிச்சு வைக்கிறேன்…

ஐயோ பாட்டீ…உன்னோட பெரிய தொல்லை….இன்னமே எனக்கு மொட்டைதான் அடிக்கணும்….

அடிச்சிக்கோ…பரவாயில்ல…பொடுகு வராது…

அந்தக் கல் பாவிய இடத்தில் மொட்டை என்று பெயர் கொண்ட நாவிதர் (அப்போதைய பெயர்) முன்னே சம்மணமிட்டு நான். எதிரே சலசலத்து ஓடும் ஆறு. காலைக் கதிரவனின் ஒளி வீச்சு இலைகளுக்கு நடுவே பளபளக்கிறது. கதிரவனின் ஒளிக்கதிர்களால் புத்துணர்ச்சியடைந்து குளிருக்கு விதிர்ப்பு அடைந்ததுபோல் தன்னைச் சிலிர்த்துக் கொள்கின்றன.

அந்தக் கண்ணாடியத் தாங்களேன்…. பெட்டியில் இருக்கும் முகம் பார்க்கும் கையகலக் கண்ணாடியைக் கேட்கிறேன் நான்.

அதெல்லாம் பெரியவங்களுக்குத்தான்….சொல்லியவாறே தலையைப் பிடித்து அவன் பக்கமாக வெடுக்கென்று சாய்த்துக் கொள்கிறான்.

நாலணாவுக்கு இம்புட்டு வேல வாங்குறாகளே…என்ற ஆதங்கமோ என்னவோ. அன்று என் கதை அவ்வளவுதான்.

என்னடா இப்டி வெட்டியிருக்கே….? படு அசிங்கமா இருக்கு…

பையன்களோடு விளையாடுவதற்குக் கூச்சப்பட்டுக் கொண்டு நான்கைந்து நாட்களுக்கு வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறேன்.

வட்ருபி அடிச்சு விட்டிட்டாங்கடா இவனுக்கு….சிரிக்கிறார்கள் பசங்கள்.

பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு சொல்லவொண்ணாத் துயரத்துடன். அவளின் கைகள் என் தலையை அளைகின்றன. எங்கேனும் பொடுகு தென்படுகிறதா என்று விரல்கள் தேடுகின்றன.

அவா சொன்னா சொல்லிட்டுப் போறா…இதுதான் கோந்தே ஆரோக்யம்…

குழந்தைகளுக்குக் காய்ச்சல் என்றால் விபூதி எடுத்து என்னவோ ஒரு மந்திரத்தை முனகி நெற்றியில் இட்டு, உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை நீளக்க அந்த விபூதியைத் தேய்த்துத் தரையில் அந்த வியாதியை இறக்கும் பாட்டி. அவளின் கை வைத்தியத்திற்கு எந்த டாக்டரை ஈடு சொல்ல முடியும்? என்னவொரு நம்பிக்கை அந்த மனிதர்களுக்குத்தான்?

பாட்டி, கொழந்தை ரெண்டு நாளா கண்ணே முழிக்கலை…என்னாச்சோ ஏதாச்சோ தெரிலயே… - அழுது அரற்றிக்கொண்டு வந்து நிற்போருக்கு ஆறுதல் சொல்லியனுப்பும் பாட்டி.

ஒண்ணும் கவலைப்படாதே…நா இருக்கேன்…நாளைக்குக் காலைல உன் பிள்ளை எழுந்திருச்சி ஓடறானா இல்லையா பார்…

என்னவொரு தன்னம்பிக்கை? எந்த நோயையும் கண்டு பயப்படாத பாட்டி அப்படி என்ன கை வைத்தியம் வைத்திருந்தாள்? எனக்குத் தெரிய எல்லா வியாதிக்கும் ஒரே மந்திரம்தான்.

பாட்டி…பாட்டி…உங்கிட்ட ஒண்ணு கேட்கணும்…காய்ச்சல்னு வந்தா அதுக்கும், காமாலைன்னு வந்தா அதுக்கும்னு எல்லாத்துக்கும் ஒரே மந்திரத்தைத்தான் சொல்றே…விபூதியத் தேய்ச்சு விடறே? இல்லன்னா வேப்பெண்ணையைக் பாதத்துல தேய்க்கிற…நெத்திக்குப் பத்துப் போடறே…இல்லன்னா தொப்புள்ள வௌக்கெண்ணையைத் தேய்க்கிற…வேறென்ன செய்திருக்கே…நீ…? எல்லா வியாதியும் எப்டி பாட்டீ பறந்தோடிப் போறது? உன்னக் கண்டா ஏம்பாட்டீ இந்த வியாதிக்கெல்லாம் இம்புட்டு பயம்?

போடா கோட்டிப் பயலே…நீ கண்டியா? நா என்ன பண்றேன்னு? அப்டியெல்லாம் பேசப்படாது..போ…போ…

அதெல்லாம் கேட்கப்படாது…பாட்டி ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்க்கிறால்ல…அப்புறம் சாமி கோவிச்சுக்கும்…ஏற்கனவே பாட்டிக்கு உடம்பை எவ்வளவு படுத்தறது பார்த்தியோ? பேசாமப் போ…போய் விளையாடு….

இதுதான் அமானுஷ்ய விஞ்ஞானமோ? என் நண்பன் கண்டறிந்து சொன்னானே? ஏதோ ஒரு கோயிலின் புற்று மண் வியாதியைப் போக்குமாமே! …அது இதுதானோ?

பாட்டீ…பாட்டீ…ஊருக்கெல்லாம் வியாதியைப் போக்கி அத்தனையையும் உன் உடம்பில் வாங்கிக் கொண்டாயே நீ…! உன்னைப் போல் இனி யார் கிடைப்பார்?

அந்த நன்றி அந்த மக்களிடம் பரிணமித்ததே…

ஆம்பூர் பாட்டி பேரன்தானடா நீ….உங்கப்பாம்மால்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா தெரியுமோ? உங்களுக்காக உயிரையே பணயம் வச்சு உழைச்சா…..அவாளை சந்தோஷமா வச்சிக்குங்கோடா……

மூன்று மாதம் ஒருமுறை பேதிக்கு விளக்கெண்ணெய் கொடுக்கும்போது என்ன பாடு…

அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் அந்த ராத்திரி ரெண்டு மணிக்கு அடித்து எழுப்பி….மடியில் கிடத்திக் கொண்டு ஒருவர் காலை அழுத்திப் பிடித்துக் கொள்ள கோவர்ணத்தில் இருக்கும் சுட்ட விளக்கெண்ணெயை மூக்கை அழுத்தி இடக் கையால் பிடித்துக் கொண்டு, வாயை கோவர்ணத்தின் நுனியால் அழுத்தித் திறக்க வைத்து உள்ளே விளுக்கென்று விடும் பாட்டி. ஒரே குமட்டலாகக் குமட்டி அப்படியே வெளியே பீச்சியடித்த நாட்கள் எத்தனை?

சனியன்…சனியன்…வானரம்…வானரம்….என்ன பாடு படுத்தறதுகள்….கொஞ்சம் சக்கரையைக் கொண்டா…வாயில திணிப்போம்….

மேற்கொண்டு குமட்டாமல் இருக்க நாட்டுச் சர்க்கரை கொஞ்சம் வாயில் போடப்படும் அந்தக் கணம் அப்பாடா….!

முடிஞ்சிதுடி…இனிமே உன் பிள்ளேள் பாடு…உன் பாடு…பாட்டி எழுந்து போய்விடுவாள். மறுநாள்….

கேட்க வேண்டுமா? கக்கூஸே கதிதான். அன்று பூராவும் சுட்ட அப்பளமும் ரசமும்தான் சாப்பாடு. அடித்துக் கலக்கி அந்த வயிறுதான் என்னமாய் சுத்தமாகிப் போகும்? அதற்கு ஈடு உண்டா இன்று? வயிற்றுக் கோளாறுகளினால் எத்தனை வியாதிகளைச் சந்திக்கிறோம்?

பிரதி வாரமும் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் விட்டாளா பாட்டி? உருவி உருவி அந்த உடம்பைத் தேய்த்த விதமும், வெந்நீரில் குளித்த சுகமும் இன்று எங்கே போயிற்று?

இன்று யார் வாரம்தோறும் எண்ணெய்க்குளி குளிக்கிறார்கள்? அத்தனை பேரும் மறந்தாயிற்றே? அனைத்தையும் மறந்தோம். அத்தனை கேடுகளையும் வரித்துக்கொண்டோம். அதுதானே உண்மை?

மரத்திற்குக் கீழ் கல்பாவிய இடத்தை என் உள்ளம் நோக்குகிறது. அங்கே வெறும் குப்பையும் கூளமும். எதிரே விரிந்தோடும் ஆறு எங்கே? மூலையிலே கோடு போல் வளைந்து, தேங்கித் தேங்கி கொசுக்கள் மண்ட, ஓடிக்கொண்டிருக்கும் சாக்கடை நீர்…! படித்துறை, அதை ஒட்டிய யானைக் கல், சற்றுத் தள்ளி குதிரைக் கல்…அங்கிருந்து முங்கு நீச்சில் போட்டி போட்டுக்கொண்டு நீந்தி வந்து முதலில் யார் யானைக்கல்லில் ஏறி உட்காருவது? எப்பயும் ஜெயிப்பவன் அந்த வெள்ளம்பிதான். எப்படித்தான் அத்தனை வேகமாய் வருவானோ? அவனுக்கு மட்டும் அந்தப் பரந்த ஆற்றில் ஆழமான, வேகமான பகுதி எப்படிப் படிந்து அவனை இழுத்து வந்து அங்கே அமர வைத்ததோ? அந்த ஆறு இன்று ஏன் இப்படிக் காணாமல் போனது? அந்த வெள்ளம்பி ராஜாமணி இன்று எங்கிருப்பான்?

தெருவுக்கெல்லாம் தண்ணியெடுத்து ஊத்துவானே வைத்தி…அவன் இருக்கானா?

அவனெல்லாம் போயி எம்புட்டோ காலமாச்சுண்ணா…

வீடு வீடா மாடு மேய்ப்பானேடா…எல்லா வீடும் சொந்தம் அவனுக்கு. எங்க வேணாலும் சாப்பிடுவான், எங்க வேணாலும் படுப்பான்…எல்லா மனுஷாளும் அவனுக்கு வேண்டியவா…

அவனுக்கு அவா வேண்டியவாளா? அவாளுக்கு அவன் வேண்டியவனா? தம்பியின் குயுக்தியான கேள்வி.

சமையல் வேலைக்குப் போவானே வரதன்…அவன்?

அவரில்லண்ணா…அவர்…அப்பயேஉங்களுக்கெல்லாம் பெரியவராச்சே…அவர் கூட நீங்க ஒரு தரம் கல்யாண சமையல் வேலைக்குப் போயிருக்கீங்களே…?

ஆமாமா…அப்டிப் போயிட்டுத்தான் அப்பாட்ட அடி வாங்கினேன்…படிச்சி வேலைக்குப் போகணும்னு நா நினைச்சிண்டிருக்கேன்…நீ கரண்டி பிடிக்கிற உத்தியோகமா தேடறேன்னு ரெண்டு விளாசினார்.

அவரெல்லாம் இல்லண்ணா…

சரி…அந்தக் குப்பு ….இருக்கானா? நம்ம கூட போந்தாக் குழி விளையாடுவானே…பால்ரஸ் குண்டு போட்டு உருட்டுவமே…?

ஆமாண்ணா…நான் கூட மறந்து போயிட்டேன் அதை…அதுவும் இங்கதானண்ணா…? சொல்லிக் கொண்டே கையை எதிரே காண்பித்தான்.

அந்த இடத்தின் நான்கு சுவர்கள் அப்படியே. மேல் புறம் மட்டும் அங்கங்கே இடிந்தும், சரிந்தும்….

அது என்ன எடம் தெரியுமா? கேட்டேன் தம்பியிடம்.

நா பார்க்க அது சும்மாதான் கெடக்கு…உள்ள பாம்பும் பல்லியும் அடைஞ்சு கெடக்கு இப்போ…யாரும் அங்க போறதில்ல…

ஒரு காலத்துல அது ஃபேமஸ்டா….

அப்டியா? அப்டி என்னதான் நடந்திச்சு அதில…கோயில் இருந்ததா?

சர்வாங்க ஷவரம் பண்ற எடம்டா அது…

அப்டீன்னா…?

அப்டீன்னாவா? அக்குள், கீழன்னு அங்க போயித்தான் முடி எறக்குவாங்க…

அது கூடவா செய்தாங்க…..

அந்தக் காலத்துல இருந்தது …இப்போ நடக்குமா?

திரும்பி நடக்க ஆரம்பித்தோம். எதிரே தெரியும் தென்னந்தோப்பு. அங்கே நடக்கும் சேவல் சண்டைகள். ஆற்றுக்கு இந்தப் புறம் கிடக்கும் பெரிய கொட்டாரம். அறுவடைக்குப்பின், போரடித்து, அங்கே பறத்திக் காயப் போட்டிருக்கும் வைக்கோல் புற்கள். எதிரே தெரு முழுக்கப் பரத்திக் கிடக்கும் வைக்கோல்கள். அதிலே குதித்து உருளும் நாங்கள். பிறகு உடம்பெல்லாம் அரிப்பெடுத்து அம்மாவிடம் வாங்கும் சாத்து.

அது சரி…அந்த வெங்டான் பத்திச் சொல்லலியே…

அவனா? இருக்கான்…இருக்கான்….அவன் இப்ப மினிஸ்டரோட பி.ஏ. ஆயிட்டான்…..

எது? மினிஸ்டர் பி.ஏ.வா? அவன்தான் கூமுட்டயாச்சேடா…

சும்மாச் சொன்னேண்ணா…பர்ஸனல் பி.ஏ.ன்னு வச்சிக்கயேன்…நம்ம ஊருல எந்தக் காரியம்னாலும் அவன்தான் முதல்ல…அதுலதான் அவன் பிழைப்பே ஓடுது…நல்ல சில்லறை….

தெருவின் இருபுறங்களிலுமான வீடுகளில் என் பார்வை சென்றது. ஏறக்குறைய அனைத்து வீடுகளும் மாறி விட்டன. ஒன்றிரண்டுதான் அந்தப் பழமை மாறாமல். இரு புறங்களிலும் நூல் பிடித்தாற்போல் இருக்கும் வீடுகளின் அமைப்புகள் என்னவாயிற்று? நான் முந்தி நீ முந்தி என்று இதென்ன வரிசை குலைந்த கட்டட அடுக்குகள்? எந்த விதிக்கும் உட்படாத போக்காகவல்லவா தோற்றமளிக்கிறது! காலம்தான் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிட்டிருக்கிறது?

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். குடியிருந்த இந்த ஒரு தெருவே போதும் இந்த ஊர் என்னவாகியிருக்கிறது என்று அறிய. மனம் ஏன் இத்தனை வேதனைப் படுகிறது. ஊரும் உலகமும் மாறிவிட்டதேயென்றா? பின்னே? அப்படியேவா இருக்கும்? மாறட்டும், கூடவே சேர்ந்து அந்த விழுமியங்களுமா அழிய வேண்டும்?

மார்கழியில் விடிகாலையில் கோயில் கோபுர உச்சியிலிருந்து ஒலிக்கும் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள். சாரி சாரியாக ஆலயம் நோக்கிச் செல்லும் பெண்கள். ஒரு பக்கம் பண்ணைக்குக் கறவைக்குச் செல்லும் மாடுகள். அவற்றின் கழுத்து மணி ஓசை. ஒரு மணி நேர இடைவெளியில் தினம் ஒரு பாடல் என திருப்பாவைக்கும் திருவெம்பாவைக்கும் பொருள் சொல்லி விளக்கும் அந்தத் தமிழாசிரியர்.

அவர் பேர்கூட சுந்தர்ராஜன்தானே…ஒரு முறை நல்லாசிரியர் விருது வாங்கினாரே…

ஆமாண்ணா…அவரேதான்…அவரெல்லாம் காலமாயி எவ்வளவோ வருஷங்கள் ஆச்சு. தான் ஸ்கூல் போகும்போதெல்லாம் நாலஞ்சு குழந்தைகளையும் கையைப் பிடிச்சிண்டு அழைச்சிண்டே போவார். உறிந்தி பண்டிட் இருக்காரா?

அவர் எங்கிருக்கார்னு தெரில…பஞ்சகச்சம் கட்டிண்டு கோட்டுப் போட்டிட்டு குடை பிடிச்ச மேனிக்கே போவாரே…எவ்வளவு அழகா உறிந்தி சொல்லித் தருவார். ஒழுங்கா அப்போ படிச்சமா? ஆப்ஷனல் சப்ஜெக்ட்டுன்னு விட்டுட்டோம். இன்னொரு மொழி மேலே தேவையில்லாம அப்போ வெறுப்பை வளர்த்துக்கிட்டமே…அதனால என்ன லாபம்? இன்னைக்குத் தமிழ்நாட்டை விட்டு வெளியே போனம்னா அந்த உறிந்தி தெரிஞ்சிருந்தா எவ்வளவு பயனா இருக்கும்? யாராவது உணர்ந்தமா? எல்லாத்தையும் இந்த அரசியல்வாதிங்க கெடுத்தாங்க…ஆனா உறிந்திப் படம் மட்டும் இளிச்சிண்டு பார்க்கத் தெரிஞ்சிது நமக்கு.. ஒரு கட்டத்துல அதுவும் தமிழ்நாட்டுல நுழைய முடியாத நிலைமை ஏற்பட்டுது.

என்ன ஒரு அறியாமை? பரஸ்பரம் ரெண்டு பேர் தங்களுக்குள்ள விஷயத்தைப் பரிமாறிக்கிறதுக்கான கருவி மொழி. அது மேலே எத்தனை வெறுப்பை ஏற்படுத்திட்டாங்க…அதுனால எத்தனை பேர் நஷ்டப்பட்டுப் போனாங்க…? நல்லா யோசிச்சுப் பார்த்தா, எல்லாக் காலத்துலயும் இந்த அரசியல்வாதிங்க ஏதேனும் ஒரு வகைல இந்த அப்பாவி மக்களைக் கெடுத்திட்டே வந்திருக்காங்கங்குறதுதான் சரி. எல்லாம் அவுங்களோட லாபத்துக்காக…வாழ்க்கைக்கே போராடிக்கிட்டிருக்கிற இந்த மக்கள் சர்வ சாதாரணமா அதுக்கு பலியாயிட்டாங்க…இதுதான் உண்மை…இன்னைக்கும் பிரத்யட்சமான நிலைமை அதுதான்.

அன்னைக்கு இருந்த வாத்தியார்கள்ட்ட இருந்த பொறுப்புணர்ச்சியும், தியாக உணர்வும் அர்ப்பணிப்பும் யாராலேயும் அத்தனை சீக்கிரம் ஒதுக்கிட முடியாதுதான்.

ஆமாண்ணா…நீங்க கூடச் சொல்வீங்களே…காலைல நாலு மணிக்குப் பால் வாங்கப் போகும்போது படிக்கிறதுக்காக எழுப்பி விட்டிட்டுப் போவார்னு…திரும்பி வர்றபோது படிச்சிட்டிருக்கணும். இல்லன்னா நின்னு எழுப்பி படிக்க உட்கார்த்திட்டுத்தான் நகருவாருன்னு….சொல்வீங்க…கையெடுத்துக் கும்பிடணும் அவுங்களையெல்லாம்….

அதோட மட்டுமில்லே…யார் யார் ஏழைப் பையன்கன்னு பார்த்து அவுங்களுக்கு இலவசமா டியூஷன் எடுப்பாங்க…வகுப்பில சரியாப் படிக்கலேன்னா, சாயங்காலமா வீட்டுக்கு வந்துடுன்னு சொல்லிடுவாங்க….இத்தனைக்கும் வீட்டுல தரித்திரம் தாண்டவமாடும். பொருளாதாரப் பற்றாக்குறை பிடுங்கித் தின்னும். ஆனாலும் பசங்க நல்லாப் படிக்கணும்ங்கிறதுல அவுங்களுக்கு இருந்த அக்கறை? அர்ப்பணிப்பு? அதுக்கு இன்னிக்கு ஈடு சொல்ல முடியுமா?

எனக்கு காம்போசிட் மேத்ஸ் சரியா வரலைன்னு ஃப்ரியா டியூஷன் எடுத்தார் கிருஷ்ணசாமி வாத்தியார். கடைசியா நா எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சவுடனே அவர் என்ன வாங்கிண்டார் தெரியுமா? தெரிஞ்சா நீ ஆச்சரியப்படுவே…கடைல போய் ஒரே ஒரு ப்ரில் இங்க் பாட்டில் வாங்கிண்டு வாடான்னார். அதுக்குக் கூட அவர் என்ன கூச்சப்பட்டார் தெரியுமா? ஏறக்குறைய ஒரு வருஷம் சும்மா டியூஷன் எடுத்தவர். மாதா, பிதா, குரு, தெய்வம்னா அதுக்கு அவுங்கதான் உதாரணம். அப்போ நம்ம வீட்டுல எலெக்ட்ரிக் லைட் கிடையாது. சிம்னி விளக்குதான். இல்லன்னா லாந்தர் விளக்கு எரியும். அதுக்கும் பாதி நேரம் மண்ணெண்ணெய் இருக்காது. அதுனால தணிச்சு வச்சிண்டு படின்னு அம்மா சொல்லுவா…குப்புறப் படுத்தமேனிக்கு படிச்சிட்டிருக்கிற போது சிம்னி நுனில தலை முடி கருகும். தள்ளி உட்கார்ந்து படின்னு அம்மா சத்தம் போடுவா…இல்லன்னா தெருக் கம்பத்துக்குப் போன்னுவா…முக்காவாசி நாள் தெரு லைட்டுலதான் நா படிச்சிருக்கேன்…அம்பி வாத்தியார் இருக்காரே…அவர் எங்க வீட்டுல வந்து படிடான்னுவார். திண்ணைல லைட்டைப் போட்டு வச்சிடுவார். நாலஞ்சு பசங்க எத்தனையோ நாள் அங்கே உட்கார்ந்து படிச்சிருக்கோம்…வாத்தியார்களுக்கு பையன்களோட முன்னேற்றம்தான் குறி. இப்போ அப்டியா இருக்கு?

கோதண்டராமன் தமிழ் பண்டிட் தெரியுமா? பால் வாங்கப் போறபோது ஒரு ஈற்றடி கொடுத்திட்டுப் போவார். திரும்பி வர்றபோது அதுக்கு வெண்பா சொல்லணும்…மனுஷன் அந்த ஈற்றடிக்கு கடகடன்னு எத்தனை வெண்பா பொழிவார் தெரியுமா? அவருக்கு நான் மாணவன். அதுதான் பெருமை.

ஏண்ணா, வந்ததுலேர்ந்து சீரியஸாவே பேசிட்டிருக்கியே…கொஞ்சம் ரிலாக்ஸ்டாத்தான் ஏதாச்சும் பேசேன்…

ஓ…! பேசலாமே…சந்திரா டாக்கீஸ் இப்ப இருக்கா…?

அப்புடியே அன்று கண்ட மேனி அழியாம இருக்கு….

அப்பல்லாம் நாலணாத்தானே டிக்கெட்….வரிசைல நின்னு அந்தப் பொந்துக்குள்ள புகுந்து டிக்கெட் எடுத்திட்டு வந்தா பெரிய சாதனையாச்சே அது…நம்ம தலை மேலெல்லாம் ஏறிப் போவானுங்களே….அது இருக்கா…?

அதான் சொன்னனே…அன்று கண்ட மேனி அழியாமன்னு….டிக்கெட்தான் இன்னைக்கு ஐம்பது ரூபா….

என்னது? ஐம்பதா?

ஆம்மா…ஐம்பது சுளையாக் கொடுத்தாத்தான் படம் பார்க்க முடியும் இன்னைக்கு. அதே மூத்திர வாடையோட…..

அதக் கூட இன்னமும் சரி பண்ணலையா…அப்ப அந்த வாடையோட உட்கார்ந்து படம் பார்த்தாத்தான் திருப்தி. அன்னைக்கே எட்டணா பெஞ்சு டிக்கெட்டுக்கு நாம போனதில்லையே…மாடி ஒரு ரூபா…எட்டிப் பார்த்திருக்கமா வாழ்நாள்ல…? ஆனாலும் அன்னைக்கு நாலணா கொடுத்துப் படம் பார்த்த சுகம் இன்னைக்கு இருநூறு கொடுத்துப் பார்த்தாலும் இல்லையேடா….

அப்டி ரெண்டாம் ஆட்டம் பார்த்திட்டு வந்த அன்னைக்குத்தானே நம்ம வீட்டுல திருடன் வந்தான்…எதிர் நீச்சல் படம் மறக்க முடியாதே நம்மளால….அந்தப் படம் பார்த்திட்டு வந்த அன்னைக்குத்தான் அது நடந்தது.

திருடன்களப் பிடிச்சு அடையாளம் காட்டச் சொன்னபோது, அவுங்கதான்னு தெரிஞ்சிருந்தும், அப்பா தெரிலன்னுட்டாரே…ஞாபகம் இருக்கா? அவ்வளவு வறுமைலயும் போனாப் போகுதுங்குற எண்ணத்துல மனசுல இருந்த கருணையும், இரக்கமும்…..மறக்க முடியுமா அந்தச் சம்பவத்தை? பாண்டியன் டூரிங் டாக்கீஸ் இருக்கா இன்னமும்?

என்னண்ணா நீங்க எந்தக் காலத்துல இருக்கீங்க? அது இப்போ பெர்மனென்ட் தியேட்டர் ஆயிடிச்சி…..

மருதமலை மாமணியே பாட்டுப் போடுவான் அப்போ…அதுலேர்ந்து நாலாவது பாட்டு கல்லிலே கலை வண்ணம் கண்டான்….அந்தப் பாட்டோட ஓவர்…அப்புறம் படம் போட்டுடுவான். அதுனால முதப் பாட்டு போட்டவுடனே ஓடுவோம்…..ஒரே காட்சியில் ஓரே டிக்கெட்டில் மூன்று படங்கள்னு எத்தனை பார்த்திருக்கோம்….வீட்டுலேர்ந்து டிபன், முறுக்கு, சப்பாத்தி, சீடைன்னு எல்லாத்தையும் அம்மா எடுத்திட்டு அன்னைக்குப் பூராவும் டேரா போட்டுடுவாங்களே….பொம்பளைங்க…..அதெல்லாம் மறக்க முடியுமா?

ராஜாஜி மேடை இருக்கா? எத்தனை வாட்டி குமரி அனந்தன் பேச்செல்லாம் கேட்டிருக்கேன் தெரியுமா? எம்.ஜி.ஆர், அண்ணாதுரை, பக்தவத்சலம், சி.சுப்ரமண்யம், இன்னும் யாரெல்லாமோ வந்து பேசின புகழ்பெற்ற மேடை அது. மாரியம்மன் திருவிழா அந்தப் பொட்டல்லதான நடக்கும். பூக்குழி இறங்குவாங்களே…..எனக்குக் கூட கழுத்துல ஒரு பெரிய கட்டி வந்ததுன்னு அம்மா மாரியம்மனுக்கு மாவிளக்கு ஏத்தறதா வேண்டிக்கிட்டாங்க….கோவிலுக்கு நேர் கீழே என்னைப் படுக்க வச்சு, என் நெஞ்சுல அந்த மாவிளக்கை ஏத்தினது எனக்கு இன்னும் அப்டியே ஞாபகம் இருக்கு…..

இன்னொண்ணு, அதுக்கு எதுத்தாப்லதான லைப்ரரி. கல்கி, ஜெயகாந்தன், அகிலன், தமிழ்வாணன், நா.பா., ன்னு எவ்வளவு பேரோட எழுத்தையெல்லாம் தேடித் தேடிப் படிச்சிருக்கோம் அங்க…அது இருக்கா இன்னும்?

இல்லாமயா அண்ணா? எல்லாமும் அப்டியே இருக்கு…ஆனா எந்த வளர்ச்சியும் இல்லாம….நிறைய அப்படி. பலதும் இப்படி….சொல்லிக் கொண்டே மாறி உரு இழந்து போன தெருவைக் காண்பிக்கிறான் அவன்.

என் மனம் வேதனைப் பட்டது. ஏதாவது செய்ய வேண்டுமே என்று துடிக்கிறது. என்ன செய்யப் போகிறேன் என்றுதான் தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும். (உயிரோசை இணைய இதழ் - 2.01.2012)

----------------------------------------------------

24 டிசம்பர் 2011

”இளமை வரும், முதுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான் கட்டுரை


 

தினமும் காலையில் யோகா வகுப்பிற்குச் சென்று வரும் நான் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வது உண்டு. அம்மாதிரி நேரங்களில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து, என் நடைக்கு உகந்த இடங்களாகக் கொண்டு வழக்கமாகச் சென்று வருவேன். வாகனங்களின் இரைச்சல் அதிகமில்லாத, குறுக்கீடுகள் இல்லாத பகுதியாக என்பது கூடத் தொடர்ந்த நடைப் பயிற்சி அனுபவத்தின்பாற்பட்டுத்தான். ஒரு சிறு விஷயத்திற்குக் கூட நமக்கு அந்தந்தச் செயலுக்கேற்றாற்போல் அனுபவம் தேவைப்படுகிறது. அப்படியானால்தான் நாம் அதிலே மன நிம்மதியை அடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.

மனிதன், வயது ஆக ஆகத்தான் அனுபவங்களை அடைகிறான். வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள், ஏற்படும் வெற்றிகள், தோல்விகள், நஷ்டங்கள், ஏமாற்றங்கள், அதனால் ஏற்படும் வருத்தங்கள், துயரங்கள், இழிவுகள், இப்படிப் பலவற்றாலும் பக்குவமடைகிறான். விட்டேற்றியாய் இருந்த தன்னிடம், காலம் எப்படியான மாற்றங்களையெல்லாம் தோற்றுவித்திருக்கிறது என்று அறுதியிட்டு நினைத்துப் பார்க்கும்போது அவனுக்கே அவன் நடத்தை வியப்பாய் இருக்கிறது. மனிதன் தனக்குத்தானே பக்குவம் அடையும்போது மனது பெருமிதம் கொள்கிறது. எதிராளியின் செயல்களைப் பார்த்து நிதானம் கொள்ள முடிகிறது. தவறுகளைப் பொறுத்துக் கொள்வது சாத்தியமாகிறது. இப்படித்தான் இருக்கும் என்றும், போகப் போகச் சரியாகும் என்றும் பொறுமை காக்க முடிகிறது. இப்படிச் செய்யலாமா என்று யோசியுங்களேன் என்று எதிராளிக்கு விவேகமாக அறிவுரை சொல்ல முடிகிறது. மற்றவர்களிடம் பேசும்பொழுது வார்த்தைகளை அளந்து பேச முடிகிறது. இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று பகுத்துப் பார்த்து தணிக்கை செய்து கொள்ள முடிகிறது. சொல்லுவதை விட சொல்லாமல் விட்டுவிடுவதே நன்று என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. காலம் கற்பிக்கும் என்று அமைதியடைய முடிகிறது. இம்மாதிரி நிதானம் இல்லாதோரின் நடத்தைகளையும், பேச்சுக்களையும் காணும்போது அமைதியாக நின்று மனதுக்குள் சிரிக்க முடிகிறது.

மனிதர்கள் ஏன் இப்படி அவசரப் படுகிறார்கள்? என்று தோன்றுகிறது. யாரெல்லாம் பக்குவமானவர்கள் என்று நினைத்தோமோ அவர்களே நிலை தடுமாறும்போது மனது ரொம்பவும் சங்கடப்பட்டுத்தான் போகிறது. நம்மின் கணிப்பு எப்படித் தவறானது என்றும் எங்கே நமது சிந்தனையில் ஓட்டை விழுந்தது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பது முதுமொழி. யாருக்கும் அடிசறுக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மனிதன் காலம் பூராவும் பக்குவமடைந்துகொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அவனது செயல்களின் மூலமாகவும், அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்களின் மூலமாகவும். முழுக்க முழுக்க அனுபவ முதிர்ச்சி ஏற்பட்டு பழுத்த பழமாக யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அப்படி ஒருவரும் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. அப்படியான ஒருவர் உங்களுக்குத் தென்படுவதுபோல் இருந்தால் அவரது உள்ளே நன்றாக நீங்கள் நுழைந்து பார்த்திருக்க மாட்டீர்கள். பொது இடங்களில் அவர் அமைதி காப்பவராகக் காட்சியளிப்பார். அவரைச் சுற்றியுள்ள வளமான சூழ்நிலையில் நழுவி ஓடி ஒளிந்து கொள்பவராக அவர் இருக்கக் கூடும். அதிகம் வாய்திறந்து பேசாது, எல்லாம் அறிந்து கடந்த ஞானி போல் மென்மையான புன் சிரிப்போடு மட்டுமே இருந்து உங்களை வசீகரம் செய்பவர்கள் இங்கே அநேகம். அவர்கள் வாயைத் திறந்தால்தான் தெரியும் வள்ளல்.

இப்படியான பல்வேறுபட்ட நிலைகளிலும், சாதாரணச் சராசரி நிலையிலும், அன்றாடம் நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருக்கக்கூடும். நமது மன ஓட்டங்களில் மனிதர்கள் அநேகரை நாம் உள் வாங்கியிருக்கலாம்.

ஆனாலும் இப்படியான எல்லாவற்றிலிருந்தும் கடந்து மிகவும் பாவப்பட்டது முதுமை. மிகுந்த கருணையின்பாற்பட்டது. அன்பின் வழியிலானது. தியாகத்தின் அடிப்படையிலானது. நம் சமூகத்தால் கருத்தாகக் கவனிக்கப்பட வேண்டியது. கவனிக்கத் தவறியது. கவனிக்கப்படாமல் போனதால் பெருகியது. சொல்ல வந்த இந்த விஷயம்தான் என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது.

எனது நடைப் பயிற்சியில் நான் அன்றாடம் சந்திக்கும் இடம் அந்த முதியோர் இல்லம். அந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்தது என் மனம். அவர்களை அனுதினமும் பார்ப்பதில் ஏதோ ஒரு திருப்தி. என்னவோ ஒரு நெருக்கம். என் தந்தையைப் போல் பலர் அங்கே. அதனாலேயே அந்த மானசீக விளைவோ? தினமும்தான் நினைத்துப் பார்க்கிறேன்.

மிகப் பரந்த நீண்ட புல்வெளி. நடுவே அந்தக் கட்டடத்தை நோக்கிய நடைபாதை. கேட்டிலிருந்து வெளியே நின்று நேரே பார்த்தால் அந்த முதியோர் இல்லத்தின் நிர்வாகி அமர்ந்து கொண்டு தன் வேலையில் ஈடுபட்டிருப்பதைச் சில சமயம் காண முடியும். அது ஒரு பெண்மணி. அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் வாழ்க்கையை அந்த முதியோர் இல்லத்திற்கு என்று அர்ப்பணித்தவர். அங்குள்ள வயதான பெரியவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வதுதான், தான் பிறந்து வந்த வாழ்க்கைக்கான முழு அர்த்தம் என்று தன்னை வரித்துக் கொண்டவர்.

நான் அந்தப் பகுதியில் நடக்கையில் என்னை அறியாமல் கால்கள் நின்று போகும் அங்கே. அந்தப் புல்வெளியை நோக்குபவனாய் நின்று உள்ளே நடமாடும் பெரியவர்களை, வயதான முதியவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பேன். புல்வெளிக்கு நடுவே போடப்பட்டிருக்கும் ஈஸிசேரில் அமர்ந்து வானத்தைப் பார்த்த மேனிக்கே படுத்துக் கிடப்பார் ஒருவர். இன்றைய தேதியில் இந்தப் பரந்த வானம் மட்டும்தான் எனக்குச் சொந்தம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றும் எனக்கு. ஒருவர் ஏதோ பலத்த சிந்தனையில் நீள நடந்து கொண்டிருப்பார். பார்வை முற்றிலுமாகத் தாழ்ந்திருக்கும். எவரையும் பார்க்க விருப்பமில்லை என்பதாகவும் தோன்றும். ஒருவர் அந்தத் திண்ணையில் அமர்ந்து போவோர் வருவோரைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் இருப்பார். இன்னொருவர் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பதுபோல் வைத்த கண் வாங்காமல் மெயின் ரோட்டிலிருந்து பிரியும் அந்த இல்லத்திற்கான சாலையையே தீர்க்கமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பார். யாரை எதிர்நோக்குகிறார். தன் மகனையா? மகளையா? தன் மனைவியையா? உறவுகளையா? வருகிறேன் என்று சொன்னார்களே? ஏன் வரவில்லை? வழக்கமாய் இன்று வருவானே? இந்த நிமிடம்வரை தகவல் இல்லையே? முன்னதாக ஒரு தகவல் கொடு என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? கேட்கிறானா? என்றுதான் கேட்டிருக்கிறான் என் பேச்சை. வளரும் காலங்களில் அவன் அம்மாவின் பேச்சைக் கேட்டான். பிறகு மனைவியின் பேச்சைக் கேட்கிறான். இன்று என் பேரன்களின் பேச்சைக் கூட அவன் கேட்பதில்லையே?

அப்பா, அப்பா, தாத்தாவ ஏம்ப்பா அங்க கொண்டு விட்டிருக்கே…? நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடுவோம்ப்பா….பாவம்ப்பா…தாத்தா அங்க இருக்கிறது எனக்குப் பிடிக்கவேயில்லை….அவர அங்க போய்ப் பார்க்கிறது எனக்கு என்னவோ போல இருக்குப்பா….மனசுக்குச் சங்கடமா இருக்கு…

உங்கம்மாட்டச் சொல்லு…அவ ஓ.கே.ன்னா நானும் ஓ.கே…சரியா?

இந்தக் கடன்காரன் அப்படித்தான் சொல்வான். பெண்டாட்டியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிபவன். அவள் குண்டிக்குப் பின்னாலேயே அலைபவன். அந்தப் பிஞ்சுக்கு இருக்கும் இரக்கமும் கருணையும் கூட இவனுக்கு இல்லை. டி.வி.க்கு முன்னால் அமர்ந்து சினிமாவைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பான். ஆனால் சொந்த வாழ்க்கையின் தவறுகளை அவன் உணர்வதில்லை. அதன் தாக்கம் அவனிடமில்லை. நெஞ்சில் ஈரமில்லாமல் எப்படி வளர்ந்தான்? நிறையச் சொல்லி வளர்த்திருந்தும் ஏன் அவன் மனதில் எதுவும் படியவில்லை?

இந்த பார்…அவர் என் அப்பா…என் கூடத்தான் இருப்பார்…அவரை வேறே எங்கேயும் கொண்டு விட முடியாது. அந்தத் தப்பெல்லாம் என்னால் செய்ய முடியாது. எங்கப்பா அம்மா என்னை அப்படி வளர்க்கலே…அந்த மாதிரி ஏதாச்சும் எண்ணம் உன் மனசுல இருந்திச்சுன்னா அதைத் துடைச்சு எறிஞ்சிடு….. – நான் சொன்னேனே…இவன் ஏன் சொல்ல மாட்டேன் என்கிறான். இவனுக்கு ஏன் அந்த புத்தி இல்லை?

நீங்க கவலைப் படாதீங்கோ…உங்க பொண்ணு எங்க பொண்ணு மாதிரி…எனக்குப் பெண் குழந்தை இல்லாத குறையை உங்க பொண்ணு தீர்த்துட்டா….இப்படிச் சொன்ன, நானா இங்கே தள்ளப்பட்டேன். அன்பின் உருவமாய் என் தாயைப் பார்ப்பதுபோல் என் வீட்டுக்கு வந்த திருவிளக்காய் அவளைப் பார்த்தேனே…? அவளுக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது? மொத்தமே நான்கு பேர் இருக்கும் அந்த அத்தனை பெரிய வீட்டில் நானும் இருப்பது அவளுக்கு ஏன் பாரமானது? அதைப் பாரம் என்று சொன்ன போது என் பையன் ஏன் அதற்குத் தலையாட்டினான்? ஏன் அப்படி மௌனமாயிருந்தான். அவள் நினைப்பது, சொல்வது தவறு என்று தெரிந்தும் ஏன் அவன் தடுக்கவில்லை? அவள் அழகில் மயங்கிக் கிடக்கிறானா? காமம் அவனைக் கட்டிப் போட்டிருக்கிறதா? அந்தப் படுகுழியில் விழுந்து கிடக்கிறானா? அந்தக் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள அந்த வீட்டில் நான் இடைஞ்சலாக இருக்கிறேன் என்பதாக எண்ணம் கொண்டு விட்டானா? ஒரு தந்தை தன் மகனின் சந்தோஷமான வாழ்க்கைக்கு என்றேனும் குறுக்கே நிற்க முடியுமா? சின்னஞ்சிறிசுகள், அப்படித்தான் இருக்கும் என்றுதான் கொள்வார் தந்தை என்று ஏன் அவனுக்குத் தெரியவில்லை?

முதலில் அவனைக் கட்டி, பிறகு தன்னை வெட்டி விட்டிருக்கிறாளா அவள்? அடி பெண்ணே…உன் பெற்றோர்கள் உனக்கு இதைத்தான் சொல்லித் தந்தார்களா? புகுந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீ பாடம் கற்று வந்தாயா? எந்தத் தாய் தந்தை தன் வாரிசுகளுக்கு இப்படிச் சொல்லித் தந்தாலும் அது தவறல்லவா? நான் அப்படி வளர்க்கவில்லையே என் மகனை? பின் எப்படி அவன் இப்படி மாறிப் போனான்? அவனுக்கு என்று சுய சிந்தனை ஒன்று இருக்கிறதா இல்லையா? மனசாட்சி என்ற ஒன்று அவனுக்கும் உண்டுதானே?

ஆனாலும் அவனை இன்று நான் எதிர்நோக்குகிறேன். எனது இந்த நிலையிலும் அவனை அவ்வப்போது பார்ப்பதில் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். நன்றாயிருக்கிறாயா? உடல் நலம்தானே? உன் மனையாள் எப்படியிருக்கிறாள்? குழந்தைகள் சௌக்கியமா? தீபாவளி சந்தோஷமாகக் கொண்டாடினீர்களா? பொங்கல் நல்லாக் கழிஞ்சதா? குழந்தைகள் நல்லாப் படிக்கிறதா? அப்பப்பா…இந்த மனது ஏன்தான் இப்படி அடித்துக் கொள்கிறதோ? எதற்காக இப்படிக்கிடந்து தவதாயப் படுகிறதோ? என்று அமைதி கொள்வது? என்று ஆனந்தம் பெறுவது? என்று ஞானம் அடைவது? சாவு ஒன்றில்தான் எல்லாமும் சாத்தியமா?

வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார் அவர். அவர் அப்படியென்றால் அந்த இன்னொருவரைத்தான் பாருங்களேன். அடேயப்பா! கலங்காத மனதுடையவரோ இவர்? என்ன ஒரு கம்பீரம்? என்ன ஒரு தெளிவு அந்த முகத்தில்?

எத்தனை வயதானாலும் நான் எங்கிருந்தாலும் எனது நியமங்களை விட முடியாது என்பதுபோல் குளித்து, பளீரெனத் தலைசீவி, பட்டையாக விபூதி பூசிக் கொண்டு அகலமாக நெற்றியில் குங்குமம் திகழ தன் வீட்டு வாசலில் விச்ராந்தியாக அமர்ந்திருப்பதுபோல் அந்த இல்லத்தின் வாயிலில் அமர்ந்து அன்றைய தினசரியை மேய்ந்து கொண்டிருக்கிறார். யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க…என்பதான தோற்றம். அவருக்கிருக்கும் தைரியமான மனநிலை மற்றவர்களுக்கு ஏனில்லை? முதிர்ச்சி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி விளைவுகளைத்தானே ஏற்படுத்த வேண்டும். ஏன் மனிதனுக்கு மனிதன் அது வேறுபடுகிறது. எல்லாவற்றையும் கண்டும், கேட்டும் உலகம் இப்படித்தான் என்பதான சமநிலை ஏன் வரமாட்டேன் என்கிறது?

முதியவர்களாகச் சேர்ந்து ஒரே இடத்தில் கூடியிருந்தாலும் அவர்களின் மனங்களும், எண்ண ஓட்டங்களும் வேறு வேறுதானோ? ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியிலான பற்றற்ற நிலை. அல்லது பற்றுள்ள நிலை. பற்றற்ற நிலையில்தான் இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அத்தனை சுலப சாத்தியமா அது? அதற்கான பயிற்சியில் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நிலை கொள்ளாமல் தவிக்கும் இந்த மனதைக் கட்டுப்படுத்துவது என்பது என்ன அத்தனை சீக்கிரத்திலேயே முடியக் கூடிய ஒன்றாகவா இருக்கிறது. மனம் ஒரு குரங்கு. அதுவும் தனிமையில் அது எப்படியெல்லாம் தன் கட்டறுத்துக் கொண்டு பாய்கிறது? வெகு ஆழத்திற்குச் சென்று எப்படி வேகமாய் மேலெழும்புகிறது. தன் கயிற்றை அறுத்துக் கொண்டு வேகமாய் எங்கெல்லாம் பாய்கிறது? எந்த மனநிலையில் யார் இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?

அந்த முதியவர்கள் வெளியில் சுதந்திரமாய் நடைப் பயிற்சி செல்லும் என்னை மாதிரிப் பலரையும் பார்க்கும்போது என்ன நினைப்பார்கள்?.

என்ன போய் என்ன செய்ய? எல்லாம் வெறும் சுயநலம். அவனவன் அவன்பாட்டைக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் சுயநலமிகள். வீச்சும் விறைப்புமாய் நடந்து செல்கிறாயே? உனக்கும் என்னை மாதிரி ஒரு நாள் முதுமை வராமலா போகும்? என்னைப்போல் கண்கள் பஞ்சடைந்து, காதுகள் மந்தமாகி, கால்களும் கைகளும் தளர்ந்து, உடல் வெம்பி, உன்னை நீயே வெறுக்கும் நிலை உனக்கும் ஏற்படாதா என்ன? நீ என்ன மார்க்கண்டேயனா? அல்லது இளமை கழியாமல் இருக்க வரம் வாங்கி வந்தவனா? என்னவோ அந்நியனைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாயே? நாங்களும் மனிதர்கள்தான். உன்னைப் போல் இருந்து, வாழ்ந்து கழித்துக் கடந்து வந்தவர்கள்தான். உனக்கு இன்று இருக்கும் இளமையை நானும் கண்டவன்தான். அதை வெகு நிதானமாய் நின்று ரசித்து அனுபவித்து அநாயாசமாய்க் கடந்து இன்று இந்த நிலையில் முதியவன் என்கிற பெயரில் இங்கு வந்து அநாதையாய்க் கிடப்பவன். காலம் என்னை இங்கு கொண்டு வந்து விட்டு விட்டது. நன்றி கெட்ட உலகம்.

எப்படியெல்லாம் அவனை வளர்த்தேன். எப்படியெல்லாம் அவனின் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன். என்னென்னமாதிரியெல்லாம் கஷ்டப்பட்டு, உழைத்து, பணம் சேர்த்து அவனைப் படிக்க வைத்தேன். என் உடல் நலத்தைக் கொஞ்சமேனும் நோக்கியிருப்பேனா? என் ஆசைகள் என்று எதையேனும் நிறைவேற்றிக் கொண்டேனா? என் தேவைகள் என்று தோன்றிய எல்லாவற்றையும் எப்படியெல்லாம் விலக்கிக் கொண்டேன்? போதும், போதும் என்று எப்படியெல்லாம் என் வாழ்க்கையின் எல்கைகளைச் சுருக்கிக் கொண்டேன். எல்லாம் அவனுக்காக. அவனின் உயர்ந்த வாழ்க்கைக்கு நான் கண்ட கனவுகள் அவைகள். ஈன்ற மகனைப் பெரிதுவந்து, அவனைச் சான்றோன் என்று கேட்பதற்காக. அன்று அது மட்டுமே எனது லட்சியமாக இருந்தது. அது மட்டுமே எனது ஆசைகளாக இருந்தது. அவனது அணு அணுவான வளர்ச்சிதான் என் கண்களில் மின்னிக் கொண்டிருந்தன. நான் நினைத்ததை அடைந்தேன். அவனை எங்கு அமர்த்த வேண்டும் என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது. என் லட்சியம் நிறைவேறியது. அது போதும் எனக்கு. அது போதும் எனக்கு. ஆனாலும் இந்த மனது ஏன் நிலை கொள்ள மறுக்கிறது? ஏன் இப்படிக் கிடந்து தவிக்கிறது? நானாகத்தானே இங்கு வந்தேன். யாருக்கும் நம்மால் இடைஞ்சல் கூடாது என்று நான்தானே இதைத் தேர்வு செய்து கொண்டேன். பின் ஏன் இப்படிக் கிடந்து மறுகுகிறது?

அதெல்லாம் முடியாது. முதியோர் இல்லமா? என்னப்பா உங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சா? நான் எதுக்கு இருக்கேன்? உங்களை அங்க விடுறதுக்கா? அதுக்கா நீங்க என்னைத் தயார் பண்ணினீங்க? அர்த்தமில்லாமப் பேசாதீங்க…நீங்க இல்லைன்னா நான் இல்லை…இத மறந்துட்டு நான் இருப்பேன்னு நீங்க எப்படி நினைச்சீங்க? – சொல்வான், சொல்லி நிறுத்துவான் என்று எதிர்பார்த்தேனே? நினைத்தமாதிரி இருந்தது. ஆனால் ஏன் சொல்லவில்லை? எது தடுத்தது அவனை? அவர்களின் சுதந்திரமான நல் வாழ்க்கைக்கு நான் எந்தவகையில் இடைஞ்சலாக இருப்பேன்? வீட்டுக்குக் காவல் போல் கிடந்திருப்பேனே? பொறு…பொறு…

இங்கே வந்துதானே இப்படி நினைக்கிறாய்? அங்கிருக்கும்போது உன் நினைப்பு அப்படியா இருந்தது?

நான் என்னைக்குமே ராஜாடா…? நா யாருக்கும் இடைஞ்சலா இருக்க விரும்பலை. எனக்கு இருக்கவே இருக்கு முதியோர் இல்லம். காசை விட்டெறிஞ்சேன்னா…இருக்க இடம் கொடுக்கிறான்…வயித்துக்கு சோறு போடுறான்…படுக்க எடம் கொடுக்கிறான்…அவ்வளவுதானே…என் பென்ஷன் பணம் இருக்கு…அது போதும் எனக்கு…காலை வீசிப் போட்டபோது யாருமே தடுக்கவில்லையே? ஏன்? நானாக வாயை விட்டு மாட்டிக்கொண்டேனோ? அவளும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவனும் வாயைத் திறக்கவில்லை. சரியான அமுக்குளி. அவன் அம்மாவைப் போல்தானே இருப்பான் அவனும். காலம் என்னை இங்கே கொண்டு வந்து போட்டு விட்டதே!

நானாவது பரவாயில்லை. அந்தப் பென்ஷனுக்குக் கூட வழியில்லாமல் எத்தனை பேர் இங்கு வந்தும் மகனின் கையை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்? சீ! இது ஒரு பிழைப்பா? கொண்டு வந்து தள்ளியவனிடம் எப்படிக் கை நீட்டி வாங்குவது? அவன் என்ன தருவது? நானென்ன வாங்குவது? அப்படியா அவனை வளர்த்தேன்? பாவி, படு பாவி…! விளங்க மாட்டான் அவன்.

சே…சே…!!!நம் வாயால் அதைச் சொல்ல வேண்டாம். எங்கே இருந்தாலும் நன்றாக, நலமாக, ஆரோக்யமாக, சந்தோஷமாக இருக்கட்டும். கோபத்தில் ஏதேனும் நினைத்துக் கொள்ளப் போக, அது பலித்து வைக்கப் போகிறது. நான் வாழ்ந்து முடித்தவன். அவன் வாழ வேண்டியவன். என் கண்ணெதிலே இல்லாவிட்டாலும், எங்கோ சௌக்கியமாய் இருக்கட்டும். அவ்வப்போதுதான் வருகிறானே. அப்பொழுதுதான் பார்க்கிறேனே…அது போதும் எனக்கு. அந்த சந்தோஷம் போதும். தீர்க்காயுஷ்யமஸ்து…!

நா இல்லாம நீங்க சீரழியத்தான் போறீங்க…என்னை என்ன பாடு படுத்தினீங்க…? – பாவி அவள் பழியாய்ச் சொன்னாளே…அது பலிக்கிறதோ? அவளையும் நான் சந்தோஷமாகத்தானே வைத்துக் கொண்டேன். புண்ணியவதி. கச்சிதமாகக் கடமைகள் முடிந்ததும் அவளும் முடிந்து போனாள். நான்தான் கிடந்து சீரழிகிறேன். என்ன வாழ்க்கை இது? உள்ளுக்குள் குமைகிறாரோ அந்தப் பெரியவர்? தனக்குத்தானே அழுது மாய்கிறாரோ? சே! என்ன சோகம் இது? செயலால் தவறாத மனிதர்களுக்கு இப்படியெல்லாம் சீரழிவு வரலாமா? தியாகத்தையே அடிப்படையாய் கொண்டு வாழ்ந்து நின்றவர்களுக்கு இம்மாதிரியெல்லாம் துன்பங்கள் எழலாமா? என்னே கொடுமை இது!

மனதில் அந்தப் பெரியவர்களைப் பற்றி என்னென்னவோ எண்ண அலைகள் எனக்கு. தினமும் ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு விதமாகக் கற்பனைகள் விரிகின்றன. இவையெல்லாம் வெறும் கற்பனைகளா என்ன? இன்றைய நடைமுறைகள்தானே? நிச்சயமாக அங்கிருக்கும் ஒவ்வொரு பெரியவர்களுக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்தானே? அல்லாமல் அவர்கள் இங்கு வரவேண்டிய காரணம்தான் என்ன? இப்படி யாருடனும் பேசப் பிடிக்காமல் அவரவர்கள் தனித் தனித் தீவுகள் போல் ஒற்றையாய் நடமாடிக் கொண்டிருப்பதன் அர்த்தம்தான் என்ன? வெறும் நடை பிணம் போல் அவர்களின் செயல்கள் உணர்த்துவதுதான் என்ன?

ஒரு நாள் அந்த முதியோர் இல்லம் போனேன். என் தந்தையின் நினைவு நாளை அவர்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற உந்துதல் எனக்கு. குறிப்பிட்ட அந்த நாளில் அவர்களோடு சேர்ந்து உணவு உண்ண ஏற்பாடு. தேவையான பணத்தைக் கட்டினேன்.

அந்த நாளும் வந்தது. எல்லோரும் அமர்ந்தாயிற்று. எனக்கு முன்னே இலை விரிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அவர்கள் வழக்கமாய் வைத்துக்கொள்ளும் தட்டு. திடீரென்று அந்தச் சத்தம்.

தனக்கு முன்னே இருந்த தட்டை எடுத்து ஓங்கி அந்தச் சுவற்றைப் பார்த்து வீசினார் அந்தப் பெரியவர். அவர் உடம்பெல்லாம் அப்படியொரு படபடப்பு. நடுக்கம்.

எனக்கு தட்டு வைக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உனக்கு. அறிவில்ல….இலையைக் கொண்டாந்து போடு…நாயே….

அதிர்ந்து போய் நின்றது அந்த அம்மாள்,

”அநாவசியமாப் பேசாதீங்கய்யா…உங்க வயசுக்குப் பொருத்தமாயில்ல….” சொல்லி விட்டு அமைதியாய் அவரைப் பார்க்கிறது. அந்த முகத்தில் எதிராளியைப் புரிந்து கொண்ட அனுபவ முதிர்ச்சி.

எல்லாந் தெரியும்…இலையைக் கொண்டா….

அந்த உறாலே அமைதி காத்தது. சற்று நேரத்தில் இலை வந்தது அவருக்கு.

எல்லோரும் என் தந்தையின் பெயர் சொல்லி அவர் ஆத்மா சாந்தியடைவதற்கு இறைவனைப் பிரார்த்தித்து நின்றனர். கண்களை மூடி அங்கே நிலவிய அந்த மௌனக் கணங்கள் என்னால் மறக்க முடியாத தருணங்கள். தந்தையின் நினைவில் கண்களில் இரண்டு சொட்டுக் கண்ணீர்.

அவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட என் கவனம் அந்தப் பெரியவர்கள் சுவைத்து உண்ட அந்தக் காட்சிகளையே மனக் கண்ணில் வாங்கின.

பாயசம் உண்டா இல்லையா? மீண்டும் அந்தப் பெரியவர். சுற்றிலும் மௌனச் சிரிப்பலைகள்.

உண்டு சாமி…உண்டு…ஜவ்வரிசிப் பாயசம்…

கொண்டா…கொண்டா…

எல்லாருக்கும் வாழைப்பழம் வச்சிருக்கியே…எனக்கு?

இதோ கொண்டாரேன்…நீங்க சத்தம் போட்டீகள்ல…அதுல மறந்துட்டேன்…

அந்த சாருக்கு இன்னொண்ணு போடு….சாப்டுங்க சார்…

என்னைப் பார்த்துக் கூறினார்.

வழக்கமா ஒரு காய்தான் இருக்கும் இன்னைக்கு உங்களால மூணு…அப்பளம் கிடையாது. அதுவும் இன்னைக்கு உங்களால….வாய் இனிக்க, மனசு இனிக்க பாயசமும் இன்னைக்கு மட்டும்தான்… - அவராகவே சொல்லிக் கொண்டு வாய் விட்டுச் சிரித்துக் கொண்டார். சிரித்த வேகத்தில் அவர் வாயிலிருந்து பருக்கைகள் வெளியே தெரித்தன.

சற்று நேரத்திற்கு முன் அப்படித் தட்டைத் தூக்கி எறிந்தவரா இவர்?

கையைக் கழுவிக் கொண்டு வெளியேற முனைந்தேன் நான்.

நல்லாயிருப்பீங்க…ஆசிர்வாதம்….

எல்லோரும் நன்றி தெரிவித்துக் கொண்டு அவரவர் இடங்களுக்குச் சென்றனர். கடைசியாக அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு நான் கிளம்பிய போது அந்தப் பெரியவர் சொன்னார் –

”இங்க நாங்க இருபத்தஞ்சு பேர் இருக்கோம். எங்க எல்லாருக்கும் சோப்பும், தேங்காயெண்ணையும், வாங்கிக் கொடுங்க…..உரிமையோட கேட்கறேன்…என் பையன்ட்டச் சொன்னா செய்யமாட்டான். காதுலயே விழாத மாதிரிப் போயிடுவான்…உங்களப் பார்த்தா சொல்லணும் போலத் தோணித்து….அதான்…

அந்தப் பெரியவர் வாய்விட்டுக் கேட்டது ஏதோ என் தந்தையே என்னிடம் கேட்டது போலிருந்தது எனக்கு. உடனடியாகக் கடைக்குச் சென்று மொத்தமாக அவைகளை வாங்கி எல்லோருக்கும் வரிசையாக விநியோகித்தேன்.

அங்கிருந்து நான் கிளம்பிய போது அவர் சொன்னார்.

”முதுமை எல்லாருக்கும் பொது. அதை மட்டும் மறந்துடாதீங்கோ…

அவர் மனதின் பாதிப்பு ஏதோவொன்றை உணர்த்தியது எனக்கு. அமைதியாய் வெளியேறினேன் அங்கிருந்து.

இரவும் வரும் பகலும் வரும் உலகம் ஒன்றுதான் இளமை வரும் முதுமை வரும் வாழ்க்கை ஒன்றுதான்…வாழ்க்கை ஒன்றுதான்

ஏனோ இந்தப் பாடல் அந்த நேரத்தில் என் நினைவில் வர வாய் தானாக முனகியது அந்த வரிகளை.(உயிரோசை இணையஇதழ்-26.12.2011)

-----------------------------------------------------

18 டிசம்பர் 2011

”அதுதான் அது…அறிவேன்…!”


கட்டுரை

ந்த முதல் கதையை என்னால் என்றும் மறக்கவே முடியாது. என்னாலென்ன, எந்தவொரு எழுத்தாளருக்கும் அப்படித்தான். 10.10.1982 ல் ஆனந்தவிகடனில் வெளிவந்த அந்த ஒரு பக்கச் சிறுகதைதான் அது. அந்தக் கதைதான் என் முதல் கதை. ஒரே ஒரு பக்கச் சிறுகதைதான். இரண்டு நண்பர்கள் கை கொடுத்துக் கொண்டு வாய் திறந்து குஷாலாகச் சிரித்தமேனிக்கு இருக்கும் கால் பக்கப் படத்துடன் மீதி முக்கால் பக்கமும் என்னுடைய படைப்போடு வெளிவந்த வறட்டுக் கௌரவம் என்ற முதல் சிறுகதை.

அது பிரசுரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற கடிதம் வந்த அன்றைக்கே தலைகால் புரியவில்லை எனக்கு. அப்படியொரு கடிதத்தை ஆனந்தவிகடனிலிருந்து நானா பார்க்கிறேன் என்கிற அதிர்ச்சி. மகிழ்ச்சி. அடேயப்பா…அடாது மழை பெய்தாலும் விடாது என் பணி என்கிற கதையாக என்னுடைய தொடர்ந்த முயற்சியை எண்ணி எனக்கே அத்தனை வியப்பு.

”அவன் ஆபீசிலிருந்து வந்தவுடனே அவன்ட்டக் காண்பிக்காதே…வந்து, உட்கார்ந்து, காபி கீபி குடிச்சு ஆசுவாசப்பட்டவுடனே மெல்ல அவன் டேபிள்ல வை…” – என் தந்தை என் தாயிடம் சொல்லியிருக்கும் தாரக மந்திரம் இது. எத்தனை கதைகள் பந்தடித்தாற்போல் திரும்பி வந்திருக்கின்றன? இது பத்திரிகை அலுவலகம் வரை சென்றுதான் திரும்பியதா? அல்லது வழியிலேயே திரும்பி விட்டதா? என்பதுபோல் அனுப்பிய மூன்றாம் நாளே எத்தனை தபால்களை மீளப் பார்த்திருக்கிறேன்? ஆனால் ஒன்று மனம் அழுததில்லை. அதுதான் என்னிடமிருந்த பிடிவாதம்.

நீ திருப்பி அனுப்பு…அனுப்புடி ராஜா…எத்தனை நாளைக்குத்தான் அப்டி செய்றேன்னு நானும் பார்க்கிறேன்…என்று உடும்புப்பிடியாய்ப் பிடித்தவன் நான்.

இன்றைக்கும் கூட அது நடக்கத்தான் செய்கிறது. இல்லையென்று சொல்லவில்லை. இன்று அது என் எழுத்துவகைக்காக நான் எடுத்துக் கொண்ட பிடிவாதம். எழுத்தும் இலக்கியமும் இந்த சமுதாயத்திற்காக என்று தீர்க்கமாக உணர்ந்ததன் தெளிவான விளைவு. இதுதான் என் எழுத்து. இது இப்படித்தான் இருக்கும். நீ போடுவதானால் போடு. இல்லையென்றால் விடு. அவ்வளவுதான்.

நான் பார்த்த வாழ்க்கை, வாழும் சமூகம், அதன் மக்களின் அவலம், அவர்களின் உழைப்பு, அதில் தெறிக்கும் கருணை, நேயம், கண்ணீர், தியாகம் இவைகளைத்தான் நான் சொல்ல முடியும். இவைகளைச் சொன்னால்தான் படிக்கும் நாலு பேரில் இரண்டு பேர் மனதிலாவது தைக்கும். அவன் நெஞ்சில் உள்ள ஈரப் பகுதியில் இருந்து கருணை சுரக்கும். அதுதான் எனக்கு வேண்டும். இப்படியே எழுதிக் கொண்டிருந்தாயானால் உன்னை ஊர் போற்ற வேண்டாமா? நாலு பேருக்குத் தெரிந்தால் போதுமா? நாற்பது பேருக்கு, நாலாயிரம் பேருக்கு, நாலு லட்சம் பேருக்கு…என்று தெரிவது?

தெரிந்து கொள்ள வேண்டியது அவர்கள் கடமை. படிக்க வேண்டியது அவர்கள் பழக்கம். உணர வேண்டியது அவர்கள் அறிவு. அவ்வளவுதான். எனக்கு வருவதைத்தானே நான் எழுத முடியும்.

என் பணி எழுதிக் கொண்டிருப்பதே. இமைப் பொழுதும் சோராதிருப்பதே! என்னை அறிந்தவன் தொடர்ந்து என்னைப் படிக்கிறான். படிப்பான். அவ்வளவே!

வறட்டுக் கௌரவம் என்று தலைப்பிட்டுக் கதை எழுதினேனேயொழிய கதை வந்ததற்காக அந்த வறட்டுக் கௌரவம் வந்து என்னைத் தொற்றிக் கொள்ளவில்லை. அப்படித் தொற்றிக் கொண்டால் பிறகு நான் எங்கிருந்து விளங்கினேன்? தொடர்ந்து ஒரே எழுத்து மழைதான்.

ஒரே கடிதத்தில் நான்கு கதைகள் தேர்வாகின தகவல் வந்தது ஆனந்தவிகடனிலிருந்து. நம்புவீர்களா? இவன் டூப் விடுகிறானோ? தோன்றுகிறதல்லவா? சத்தியமய்யா, சத்தியம். நிறையக் கதைகள் விகடனில் வந்தன. விட்டேனா பார் என்ற முயற்சிதான். 1983 ல் மார்ச்சில் நடந்தது அந்த அதிசயம். என்ன இவன், தன்னையே பெருமைப்படுத்திப் பீத்திக் கொள்கிறான் என்று நீங்கள் முனகுவது கேட்கிறது. என் விடாமுயற்சியை தயவுசெய்து பாருங்கள். நான் ஒரு பெரிய அறிஞனெல்லாம் இல்லை. தமிழை முற்றும் கற்றவனுமில்லை. தமிழில் எல்லா பழந்தமிழ் இலக்கியங்களையெல்லாம் படித்தவனுமல்ல.

சாதாரணமாக எழுத வந்தவன்தான். ஒன்று சொல்லலாம். ஆழ்ந்த ரசனை உள்ளவன். வாசிப்பு அனுபவம் உள்ளவன்.

எங்கள் ஊரான வத்தலக்குண்டில் என்னிடமும், என் நண்பனிடமும், தெருவில் உள்ள நாலைந்து வீட்டின் லைப்ரரி டோக்கன்கள் எங்களிடம்தான் இருக்கும். கல்கியா…வரிசையாக அவர் புத்தகங்கள் பூராவும் எடுத்து, படித்து, முடிப்போம். ஜெயகாந்தனா…அடுத்தடுத்து எத்தனை புத்தகங்கள் இருந்தாலும் சரி….எல்லாமும் படிக்கப்படும்…இப்படித்தான் அலசினோம் மொத்த லைப்ரரியை. ஆனால் ஒன்று…கூடவே ஆண்டிப் பண்டாரமும், சிந்துபாத்தும் உண்டு. அது அந்த வயசுக்கேற்ற உற்சாகம். வாசிப்புப் பழக்கம் மட்டுமே எழுதத் தூண்டியது என்று சத்தியமாகச் சொல்வேன்.

1983 லிருந்து விடாது கருப்பு என்ற கதைதான். சுட்டி என்று ஒரு கையகல மாத இதழ் வந்தது. அதன் சமுதாயப் பணி அளப்பரியது. ஒவ்வொரு பக்கமும் பயனுள்ள எழுத்தாகத்தான் இருக்கும். அதற்கு வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியையெல்லாம் நடத்தியிருக்கிறேன் நான். அதில் மதுரை மேற்குத் தொகுதியின் பாழ் நிலையை விமர்சித்து எழுதியதற்கு போலீஸ் என்கொயரி வந்தால் தெரிவியுங்கள் என்று தகவல் வந்தது எனக்கு. சென்னை சுட்டி ஆபீசில் விசாரணை நடந்தது. அப்படியென்ன விசேஷம்? மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் தொகுதியாக அது அப்போது இருந்ததுதான்.

அதற்குப் பின் எத்தனை இதழ்கள்? அடேயப்பா…தமிழில் இத்தனை வார மாத இதழ்கள் இருந்திருக்கின்றனவா? என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? என் எழுத்து எதிலெதில் பிரசுரமாகியிருக்கிறது என்று பாருங்கள். தெரிந்து விடும். வெறும் வெற்றுப் பெருமையல்ல இது. தகவலுக்காகச் சொல்கிறேன்.

சுட்டி, சுனிதா, சுதந்திரம், புதிய பார்வை (பழையது இது) தினமலர்-வாரமலர், கமலம், , பம்பாய், தாய், பூவாளி, கணையாழி (இலக்கிய இதழ்) மயன், இதயம் பேசுகிறது, சிறுகதைக் கதிர், குங்குமம், நவீனம், சாவி, கல்கி, குமுதம், நறுமணம், செம்மலர், தீபம், மங்கை, ராணி, கண்மணி, மின்மினி, ஜனரஞ்சனி, தினமணிகதிர், இன்று, அரும்பு, கடிதம், தமிழ் அரசி, மனோரஞ்சிதம், ஓசை, ஓ…, பாக்யா, அமுத சுரபி, கலைமகள், ஜெமினி மலர், நிஜம், எதைச் சொல்ல எதை விட?

அதற்குப் பிறகு எத்தனை கதைகள் விகடனிலும், தாயிலும், இதயம் பேசுகிறதிலும், குங்குமத்திலும், கல்கியிலும், கணையாழியிலும்…செம்மலரிலும், தாமரையிலும்.., .வண்ணக்கதிர், .நீ போடும்வரை விடமாட்டேன் என்கிற கதைதான் என் கதை.

இன்றுவரை என் எழுத்துத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. உயிரெழுத்து, உயிரோசை, திண்ணை, சொல்வனம், நிலாச்சாரல், வார்த்தை, கணையாழி, கதிர், செம்மலர், இன்னும் சில இதழ்கள் என்று விடாது நான் எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். ஒன்று தெரியுமா? புத்தக வாசிப்பனுபவம் கூட இப்போது எழுதிப் பார்க்கிறேன். அரசியல் கட்டுரைகள் கூட எழுதிப் பழகுகிறேன். அடேயப்பா எவ்வளவு தன்னடக்கம் இவனுக்கு? என்று தோன்றுகிறதல்லவா உங்களுக்கு! அதுதான் எனக்கு வேண்டும்.

ஆனாலும் அந்த முதல் புத்தகம் வந்த நாளை மறக்க முடியுமா? 2000 மாவது ஆண்டில் என் முதல் சிறுகதைத் தொகுதி வந்தது. அது சாதாரண வெளியீட்டகம் அல்ல. அத்தனை மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பதிப்பகம். எழுத்துச் சிற்பி ஜெயகாந்தன் அவர்களின் புத்தகங்கள் அனைத்தையும் தொடர்ந்து வெளியிட்டுப் பெருமை பெற்ற பதிப்பகம். அங்கேதான் எனக்கும் ஒரு சான்ஸ் கிடைத்தது. மதுரையில் காலடி வைத்த நாள் முதல் அங்கேதான் புத்தகங்களை மாதா மாதம் வாங்குவேன் நான். அந்த இரக்கமோ என்னவோ? கொண்டுவாங்க பார்ப்போம்…இதுதான் பதில்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு சு. வெங்கட்ராமன் அவர்கள் படித்து, ஒப்புதலளித்து, ஓ.கே. என்றார்கள். அந்தப் பெருமை மிகும் ஸ்ரீமீனாட்சி புத்தக நிலையம் மூலம் என் முதல் தொகுதி வந்தது எனக்கு அளவிட முடியாத பெருமையாக இன்றுவரை விளங்குகிறது.

இன்றுவரை பதினோரு தொகுதிகள் குறுநாவலும், சிறுகதைகளுமாக வெளிவந்துள்ளன. கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி, இலக்கியச்சிந்தனைப் பரிசு, அமுதசுரபி பொன்விழாச் சிறுகதைப் போட்டி, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, குங்குமம் இளைய தலைமுறைச் சிறுகதைப் போட்டி, என்று பரிசுகளைப் பெற்றுள்ளேன். எனது வாழ்க்கை ஒரு ஜீவநதி என்கிற சிறுகதைத் தொகுப்பு (என்சிபிஎச் வெளியீடு) 2008ம் ஆண்டின் திருப்பூர் இலக்கியப் பேரவை மற்றும் அமர்ர் ஜீவா பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழாக் குழு இணைந்து நடத்திய விழாவில் பரிசு பெற்றது. அப்புத்தகம் மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் இலக்கிய மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்கள் எம்.ஃபில் மற்றும் பி.எச்டி., ஆய்வுகளுக்கு எனது நான்கைந்து தொகுப்புகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இலக்கியப்போட்டி 2011 தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய போட்டியில் எனது நினைவுத் தடங்கள் சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது.

என் எழுத்து தொடர்கிறது என் முயற்சியினால். எழுத்து எப்படிப்பட்டது? அதன் வகைமாதிரி என்ன? நான் எங்கே நிற்கிறேன்.,? இதை அறிவேன் நான். ஆனாலும் அந்த முதல் பிரவேசம் தந்த மகிழ்ச்சியும் நிறைவும் இன்றுவரை இல்லை. அதுதான் இன்றுவரையிலான ஊக்கத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. இது சத்தியம்…!

படிப்பனுபவத்திலிருந்து படைப்பனுபவம் கிடைத்தது எனக்கு. தொடர்ந்த வாசிப்பனுபவம் படைப்பனுபவத்திற்கு ஊக்கமளிக்கிறது. நான் வளர்ந்த சூழ்நிலை, பார்த்த, பழகிய மனிதர்கள், அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அனுபவங்கள், இவைதான் எனக்குக் கதைகளைத் தருகின்றன. என் படைப்புகளில் பாவனை இல்லை. பகட்டு இல்லை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. என் மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது. மன உலகம் கதையுலகமாக விரிகிறது. அன்றாட அனுபவ எல்லைக்குள், மனசுக்குள், பதிவாகிற நிகழ்வுகளே கதைகளாயிருப்பவை. அதனாலேயே நேர்மையும், மன உண்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.

எனது அனுபவ எல்லைக்குட்பட்ட ஒரு சம்பவத்தை, சம்பவத் துளியை மட்டுமே சிறுகதையாக்குவது, உலுத்தாத மொழி நடை, வாசக மனதில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்தல், சிறிய அழுக்கைத் துடைத்தல், சிறிய சோகம் கவிழச் செய்தல், வெளிச்ச நினைவு மின்னி மறைதல், என எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயிர் வடிவமாகக் கொண்டிருத்தல், மத்திய தர வர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு இவையே என் கதைகளின் வழித்தடம்.

நிறையச் சொல்லியாச்சு. நிறைய எழுதியாச்சுன்னு சொல்லலாமா? கூடாது. சாகறவரைக்கும் எழுதித்தானே ஆகணும்.

பிரபலமான பலர் எழுதிக் குவித்திருப்பதை நோக்கும்போது இது ஒன்றுமேயில்லை. நானும் எழுதறேன். அவ்வளவுதான். இன்று வரை நிறைவில்லை. நிறைய பாக்கியிருக்கு, இன்னும் மேலே உயரமிருக்கு… மனது சொல்கிறது.

எதை நீங்கள் சொல்கிறீர்களோ, சொல்ல நினைக்கிறீர்களோ அதுதான் அது…! நான் எங்கே நிற்கிறேன். அறிவேன் நான்…! நன்றி. -------------------------------------

16 டிசம்பர் 2011

ந.சிதம்பர சுப்ரமண்யத்தின் “இதய நாதம்” (நாவல் சுகானுபவம்) கட்டுரை


நாதத்தை யோகமாக உபாஸித்த மஉறானுபாவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன் என்று உள்ளார்ந்த பக்தியோடு சொல்லித்தான் இந்த நாவல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

“சங்கீதம் எங்கள் குடும்பத்தின் பரம்பரைச் சொத்து. ஆனால் என்னுடைய முன்னோர்களுக்குச் சரியான வாரிசாக நான் ஏற்படவில்லை. என் குடும்பத்தில் எனக்கு முன்னே பிறந்திருந்த சங்கீத சிம்மங்களுக்குப் பின்னால் வருவதற்கு நான் கொஞ்சமேனும் யோக்யதை இல்லாதவன். இருந்தாலும் இரத்தத்தில்ஊறியிருக்கும் பரம்பரைச் சங்கீத வாஸனை நான் லௌகீக முறைப்படி எந்தத் தொழில் செய்து கொண்டிருந்தாலும் இதயத்தைச் சங்கீதத்திலேயே நாட வைத்தது. நாதத்தை முறைப்படி உபாசிக்காத நான் நாத யோகிகளை உபாசிக்கலானேன். அந்த முயற்சியின் பயன்தான் இந்தப் புத்தகம்“ என்கிறார் ஆசிரியர் திரு ந. சிதம்பர சுப்ரமணியன் அவர்கள்.

இசையை முன் வைத்து நாவல்கள் வந்திருக்கின்றன. தி.ஜா.ரா.வின் மோகமுள். அதற்கு முந்தையது இந்த நாவல்.

யுவன் சந்திரசேகர் எழுதிய கானல்நதி ஒன்று.

இசையைப் பற்றி ஓரளவுக்கு அறிந்து கொண்டு சிற்சில நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு ஒரு சிறுகதையைப் படைத்து விடலாம்தான். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் சீசனில் ஏதேனும் ஒரு வார இதழில் அப்படியான ஒரு சிறுகதை வந்துவிடுவதுண்டு. குறிப்பாகக் கல்கி. ஆனால் முழுக்க முழுக்க குறைந்தது இருநூறு பக்கங்களுக்கு மேல் ஒருமுழு நாவலைப் படைப்பது என்பது அதிலேயே வெகு காலத்திற்கு மூழ்கித் திளைத்து எழுந்தாலே சாத்தியமாவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று தோன்றுகிறது.

ந.சிதம்பர சுப்ரமணியத்தின் இதய நாதம் நாவல் மிகுந்த பக்தியோடும், மரியாதையோடும், பொறுப்புணர்வோடும், பெருத்த தன்னடக்கத்தோடு கட்டுசெட்டாக, கன கச்சிதமாக எழுதப்பட்டிருக்கிறது.

சுங்குடிப் புடவையைக் கட்டிக்கொண்டு ஒரு குடும்பப் பெண் பாந்தமாய் நின்றாளென்றால் அந்தக் காட்சி மனதை எத்தனை கொள்ளை கொள்ளும். எந்தவிதமான பயபக்தியையும் மரியாதையையும் உண்டு பண்ணும்? அப்படியான ஒரு மரியாதையும், பயபக்தியும் இந்த நாவலைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுகிறது.

நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கும் வாசகன் ஒருவன் இந்த நாவலைப் படிக்கும்போது இதைக் கண்டிப்பாக உணருவான். எழுத்து, படிப்பவர் மனங்களில் நல் உணர்ச்சிகளை, நல்ல எண்ணங்களை, சமூக ஒழுக்கங்களை, மனிதனின் அடிப்படை வாழ்வியல் நியாயங்களை உசுப்பி விடுவதாக அமைந்து விடும்போது, வாசகன் அங்கே தன்னிடம் உள்ள தவறுகளைத் துடைத்துக் கொள்ள முயலுகிறான். தன்னிடமுள்ள தீய எண்ணங்களைத் துரத்துவதற்கு யத்தனிக்கிறான். எழுத்தின் பாதிப்பு அவனுக்குள்ளும் மாற்றங்களைத் தோற்றுவிக்கிறது வாழ்க்கையின் அனுபவப் பகிர்வுகள் மனிதனைப் பக்குவப்படுத்துகின்றன. அவனை விவேகமுள்ளவனாக மாற்றுகின்றன. அம்மாதிரியான பல்வேறு மனித யத்தனங்கள் கொண்ட பாத்திரங்களை உள்ளடக்கிய நாவலாக இந்த இதய நாதம் நம் நெஞ்சத்தை அள்ளுகிறது.

வாழ்க்கையிலே சில சங்கீதப் பெரியார்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சிலவற்றைப் போன்று தொகுத்துக் காட்ட முயன்றிருக்கிறேன். காளிதாஸன் சொல்லியிருப்பதுபோல், நாதயோகம் எங்கே, நான் எங்கே… இருந்தாலும் ஆசை வெட்கமறியாது என்ற முறையில் இதை எழுதியிருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். எவ்வளவு தன்னடக்கம் பாருங்கள். மனிதர்கள் கர்வமில்லாதவர்களாக, மிகுந்த அடக்கமுள்ளவர்களாக நின்று தனது உள்ளார்ந்த திறமைகளை பணிவோடு முன் வைக்கும்போது எவ்வளவு உயர்ந்து போகிறார்கள். உண்மையான மன எழுச்சி, அதிலே பிரதிபலிக்கும் அடக்கமான வார்த்தைகள், அவர்களின் திறமையை ஒளிவிடச் செய்கிறது.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள், தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற நாதப் பிரம்மங்களைப் பற்றியும், மஉறா வைத்தியநாத சிவன் போன்ற சங்கீத உபாஸகர்களைப் பற்றியும் கேட்டு, என் இதயம் ஒரு நாதோபாசகனைப் பற்றி எழுதத் தூண்டியது. அநேக சங்கீதப் பெரியார்களைப் பார்த்தும், கேட்டும், அவர்கள் பட்ட சிரமங்களையும், அவர்கள் செய்திருக்கும் தபசையும் அறிந்ததிலிருந்து ஒரு நாத யோகியைக் கதாநாயகனாக வைத்து எழுத வேண்டும் என்ற ஆசையை இந்த நாவல் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.

நாவலின் கதை இதுதான் என்று முன் வைத்து விடுவது சுலபம். ஆனால் அத்தோடு இதுதானே என்று அதை வாங்கிப் படிக்காமல் விட்டு விடும் அபாயம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. சொல்லப்பட்டிருக்கும் கதை முக்கியமல்ல. கதையின் சம்பவங்களுடே விரிவடையும் இசை பற்றியதான விளக்கங்களும், சம்பாஷனைகளும், அதை மேற்கொண்டிருந்த பெரியோர்களின் பக்தி உபாசனையும், அந்தப் பக்தி உபாசனையினால் அவர்கள் வாழ்க்கையின் நியமங்களில் ஒன்றிப் போன ஒழுக்க நெறிகளும்,தத்துவ விசாரங்களும், அந்த ஒழுக்க நெறிகளின் சீர்மையினால் அவர்களின் வாழ்வில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களும், எந்தவித இடர்பாடுகளிலும் நெறி பிறழாத பிடிவாதமும், அத்தன்மையின்பாற்பட்டே அவர்கள் மலையளவு உயர்ந்து நிற்கும் தார்மீக நெறியும், எல்லாமும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக நம்மை உணர வைக்கும்போது, ஒவ்வொரு மனிதனும் தன்னை எவ்விதம் வடிவமைத்துக் கொண்டால் நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் இருந்து கடக்கலாம் என்னும் அனுபவ முத்திரைகளை உள்ளடக்கியதாக இந்த நாவல் உணரப்படும்போது இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள்தான் தமிழில் இருக்கின்றன என்கிற தீவிரத் தேடல் நோக்கு நம்மை வந்து பற்றிக் கொள்கிறது.

இலுப்பூர் கிராமத்தில் கௌரியம்மாள் பையன் கிட்டு. பஞ்ச நத தீட்சிதரின் பெண் அவள். கௌரியின் கணவன் வைத்தி. அவனுக்குச் சங்கீத்தில் விசேஷ ஞானம் உண்டு என்பதாக ஊராரால் அறியப்படுகிறது. அது மட்டுமே வாழ்க்கைக்கு சோறு போடுமா? என்பதாக கௌரி உணர்கிறாள். ஆனால் அவனது நடவடிக்கைகள் மனம் போனவைகளாக இருக்கின்றன. கௌரிக்கு இவரோடு எப்படி வாழ்வது என்பது எப்போதும் பிரச்னையாக இருக்கிறது. புருஷனைத் திருத்த முயல்கிறாள். ஒழுங்கில்லாத வாழ்க்கை வாழ்ந்து, அதனால் உடம்பும் மனமும் கெட்டு காசநோய் வந்து கஷ்டப்பட்டு வைத்தி இறக்கிறான். கௌவி விதவையாகிறாள். புருஷனிடம் இருந்த வெறுப்பில் சங்கீதத்தில் கசப்பு ஏற்படுகிறது அவளுக்கு.

பையன் சமஸ்கிருதத்திலும், சாஸ்திரத்திலும், பயிற்சி பெற விரும்பினாள். கிட்டுவுக்கு பாடங்களில் மனம் செல்லவில்லை. சங்கீதம் வந்தது. பஜனைப் பாட்டுக்கள் வந்தன. தெம்மாங்கு, தில்லானா, ஜாவளிகள், பாடமாயின. கந்தர்வனின் சாரீரம். அவனுக்குச் சங்கீதம் சொல்லி வைத்தால் நன்று என்று ஊரார் வற்புறுத்துகிறார்கள். கௌரிக்கு அது பிடிக்கவில்லை. சொன்னால் நல்ல சிரேயசை அடைவான் என்கிறார்கள். கிட்டுவுக்குப் படிப்பு வேம்பு.

ஒரு கல்யாண கோஷ்டி வருகிறது ஊருக்கு. அதிலிருக்கும் பெரியவர் துணைக்கு கிட்டுவை எடுபிடிக்கு அழைக்கிறார். நாதஸ்வரக் கோஷ்டியை வேடிக்கை பார்த்துக் கொண்டு, தன்னையறியாமல் தாளங்களைச் சரியாய்ப் போடும் கிட்டுவை, பாடச் சொல்கிறார் வாசிப்பவர். பாடுகிறான் கிட்டு. அவனின் சாரீர மகிமையை உணர்ந்து பெரியவர் கணேச சாஸ்திரியிடம் சிபாரிசு செய்கிறார்கள் அவர்கள். உடன் அழைத்துச் சென்று திருவையாறு சபேச சாஸ்திரிகளிடம் சேர்த்து விடுகிறார் கிட்டுவை.

சபேச அய்யர் லட்சண வித்வான். சங்கீதத்துக்காக வாழ்வை அர்ப்பணித்தவர். கிட்டுவின் குரல் கேட்டு அவர் தன்னை இழக்கிறார். திவ்யமான சாரீரம். அசாத்ய ஞானம் என்கிறார். ஒரு விஜயதசமியில் வித்யாப்பியாசம் நடைபெறுகிறது.

சபேசய்யரின் மனைவி தருமாம்பாள். அவர்களுக்கு ஒரு பெண். அதைக் கல்யாணம் செய்து கொடுத்து ஒரு ஆண் மகவை ஈன்றெடுத்து இறந்து விடுகிறது அந்தப் பெண். பையன் பெயர் மகாதேவன்.

மகாதேவனுக்கும் கிட்டுவுக்கும் மன மோதல்கள் ஏற்படுகின்றன. சபேசய்யர் இல்லாத ஒரு நாளில் அவரது பூஜை பீடத்தில் இருக்கும் வீணையை எடுத்து வாசிக்க ஆசைப்படுகிறான் கிட்டு. அவனது நெடுநாள் ஆசை அது. அதுவே நல்ல சந்தர்ப்பம் என்று உந்துதல் ஏற்பட அதை எடுத்து வைத்து உட்காரும்போது, அதன் பிருடை ஒன்று சுவற்றில் மோதி உடைந்து போகிறது. தன்னை நொந்து கொள்கிறான் கிட்டு. இனி எப்படி இவரோடு நான் இருந்து கழிப்பேன் என்று வேதனை கொள்கிறான். ஆண்டவா இந்தக் கணமே என் உயிரை எடுத்துக் கொள்ளேன் என்று அழுகிறான். சபேசய்யர் வருகிறார். பார்த்து விடுகிறார். முதலில் மகாதேவன்தான் இதைச் செய்திருக்கக் கூடும் என்று நினைக்கிறார். கிட்டு உண்மையைச் சொல்லி மண்டியிடுகிறான். உனக்கு ஏன் இந்த வேலை? என்று கேட்ட சபேசய்யர் அவனின் உண்மைக்கு முன் மனம் நெகிழ்கிறார். போனால் போகிறது. சரி செய்து கொள்ளலாம் என்கிறார். நீ உண்மை பேசினாயே அதுதான் எனக்கு வேண்டும் என்று அவனை மன்னிக்கிறார்.

பேரன் மகாதேவனுக்கு உபநயனம் செய்விக்க முடிவு செய்கிறார். நம்மோடு இன்னொரு பிள்ளையாய் இருந்து கழிக்கும் கிட்டுவுக்கும் சேர்த்து முடிக்கலாமே என்கிறாள் தர்மாம்பாள். இருவருக்கும் உபநயன விசேஷம் சிறப்புறக் கழிகிறது.

தஞ்சாவூருக்கு ஒரு நாடகக் கோஷ்டி வருகிறது. அந்தக் கோஷ்டியிலிருந்தவர்கள் பெரும்பாலும் மிகுந்த அறிவாளிகள். வடமொழியிலும், தென் மொழியிலும் நல்ல பாண்டித்தியம் பெற்றவர்கள். நிமிஷப் பொழுதில் கவனம் செய்யக்கூடிய கவித்துவ சக்தி பெற்றவர்கள். அத்துடன் கூட சங்கீதத்திலும் நல்ல பூரணமான ஞானத்தைக் கொண்டவர்கள். அறிவாளிகளும், பண்டிதர்களும் நிறைந்து இருந்தபடியால் அவர்கள் எல்லோரிடமும் உயர்ந்த ஒழுக்கம் இருந்தது.

சபேசய்யர் சங்கீதத்திலும், சாஸ்திரத்திலும் சிறந்த விற்பன்னராகையால் அவரைக் கூட்டிக் கொண்டுவந்து சில நாடகங்களைக் காட்டுகின்றனர். அப்போது கிட்டுவைப் பாட வைத்துக் கேட்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக தங்கள் நாடகக் கோஷ்டியோடு சேரச் சொல்கிறார்கள். முடிவு செய்யத் தெரியாமல் கிட்டு குருவை நோக்குகிறான். சங்கீதத்திற்கு அவன் செய்ய வேண்டிய தொண்டு நிரம்ப இருக்கிறது. ஆகையினால் அவனுக்கு இது வேண்டாம். அவனை விரும்பாதீர்கள் என்கிறார் சபேசய்யர்.

எனக்கு என்ன தெரியும்? என் கண்ணைத் திறந்து உருவாக்க வேண்டியவர்கள் நீங்கள். நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? என்கிறான் கிட்டு. சபேசய்யர் மனம் நிறைந்து போகிறார்.

கிட்டு வித்தையில் பெருகுகிறான். கிரமமாக அவனுக்கு அனைத்தையும் பயிற்றுவிக்கிறார் சபேசய்யர். அவன் எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கிக் கொள்வதைக் கண்டு வியக்கிறார்.

சொல்லிக் கொடுப்பதென்பது ஒரு வியாஜம். சில கோடிகளைக் காட்டி விட்டால் அந்த வழி அவரவர் மனோ தர்மத்திற்குத் தகுந்தாற்போல் போக வேண்டியதுதானே? மணிக்கணக்காகச் சோர்வின்றிச் சாதகம் செய்கிறான் கிட்டு. பசி, தாகம் ஒன்றுமே அவனைப் பாதிப்பதில்லை. யோகத்திலிருக்கும் ரிஷி குமாரனைப் போன்று தோன்றுகின்றான். அவனுடைய சாதகத்தையும், மேதா விலாசத்தையும் கண்டவர்கள், இவன் சங்கீத உலகத்திற்கே ஒரு சிகரமாக வரப்போகிறான் என்று காண்கிறார்கள்.

ஸ்ரீராமநவமி உற்சவம் வருகிறது. வருடா வருடம் சபேசய்யரின் கச்சேரி உண்டு. அந்த வருடம் அவருக்கு நல்ல ஜூரம். கிட்டுவைப் பாட வைக்கிறார் சபேசய்யர். பழைய சிஷ்யன் விசுவநாதனுக்குப் பொறாமை வருகிறது.

காலில் ஏதோ குத்தி, அது பெருகி, விடாது தொடர்ந்து படுக்கையில் கிடந்து சபேசய்யர் உயிர் துறக்கிறார். கிட்டு பல வருடங்களுக்குப் பிறகு தன் தாயாரைத் தேடிப் போகிறான். அவளின் இறப்புச் செய்தி அறிகிறான். ஊர் திரும்புகிறான். தஞ்சாவூரில் சபேசய்யரின் நண்பர் பொன்னையாபிள்ளை அவர்களைச் சந்திக்கிறான்.

அவர் சபேசய்யரின் மீது மிகுந்த மதிப்புக் கொண்டவர். கிட்டுவை நன்கறிந்தவர். அவனின் இசையை அடிக்கடி கேட்கும் நல் வாய்ப்புக் கிட்டியதே என்று தஞ்சையில் வீடு தருகிறார். இதற்கிடையில் தர்மாம்பாள் தன் தங்கை பெண் நீலாம்பாளைக் கிட்டுவுக்கு மணம் செய்விக்கிறாள்.

தஞ்சையில் வருடா வருடம் கந்த சஷ்டி விழா. கந்தசாமி பாகவதர் அதை விமர்சையாக நடத்துபவர். அந்த வருடம் முடிவு செய்த பிரபல வித்வான் வரவில்லை. கிட்டு ஏற்பாடாகிறான். கச்சேரியை அமர்க்களப்படுத்துகிறான். அவன் பாட்டில் மெய் சிலிர்த்து அவருக்கு ஒருவர் மூலம் கிடைக்கப்பெற்ற தம்புரா ஒன்றை அவனுக்குப் பரிசாக அளிக்கிறார் கந்தசாமி பாகவதர். கிட்டுவின் புகழ் பரவுகிறது.

ஒரு மிராசுதார் வீட்டுக் கல்யாணம் வருகிறது. கிட்டு கச்சேரி ஏற்பாடாகிறது. நியமங்களைக் கிரமமாக முடித்து விட்டுத் தாமதமாக வருகிறான் கிட்டு. பிரச்னையாகிறது. கேட்ட பணத்தைக் கொடுத்தேனா இல்லையா என்கிறார் மிராசுதார். அப்போதுதான் பணத்தின் மீது வெறுப்புக் கொள்கிறான் கிட்டு. பாட முடியாது என்று வெளியேறுகிறான். கந்தசாமி பாகவதர் சமாதானப்படுத்துகிறார். மூலையில் உட்கார்ந்து கேட்கும் உன் பாட்டை மனதார விரும்பும் ஏழை பொது ஜனத்திற்காகப் பாடு என்கிறார். கச்சேரி இனிதே முடிகிறது. ஆனாலும் மனம் அலைபாய்கிறது கிட்டுவுக்கு. சங்கீதம் விலை பேசப்படுவதாக உணர்ந்து மனமுடைகிறான். அப்பொழுதிலிருந்து காசுக்குப் பாடுவதில்லை என்று முடிவெடுக்கிறான்.

ஆத்மாவின் பசியைத் தீர்ப்பதற்கு முன்னால் வயிற்றுப் பசியைத் தீர்ப்பதற்கான போராட்டம் ஆரம்பமாகிறது. வீட்டில் மன நிம்மதியில்லாமல் இருக்கிறான். அடிக்கடி மனைவியோடு சண்டை வருகிறது. இதற்கிடையில் கும்பகோணத்தில் இருக்கும் பாலாம்பாள் என்னும் தாசி அருமையான சாரீரம் உடையவள்.எல்லோரும் அவளுடைய குளுமையான சாரீரத்தைக் கேட்பதற்கே கூடுவது வழக்கம். அவள் கிருஷ்ணபாகவதரைப் பற்றிக் கேள்விப்பட்டு (கிட்டு) அவரிடம் முறையான சங்கீதம் கற்க ஆசைப் படுகிறாள். அதற்கு உறுதுணையாய் இருக்கிறார் மிருதங்க வித்வான் மாரிமுத்தா பிள்ளை. வித்தையை யாசிப்பவருக்கும் போதிப்பவருக்கும் வித்தைதான் பெரிது என்றால் என்ன வித்தியாசம் வந்து குறுக்கிடப்போகிறது என்று சம்மதிக்கிறார் கிருஷ்ணபாகவதர்.

திருவையாறு தியாகய்யர் உற்சவம். கிருஷ்ணபாகவதர் கச்சேரி ஏற்பாடு. எதிர்க் கச்சேரி பாலாம்பாளுடையது அதே நாளில் ஓரிடத்தில். பயபக்தியோடு ஓடிவந்து கிருஷ்ணபாகவதருடைய கச்சேரியில் உட்கார்ந்து விடுகிறாள் அவள். ஜனமும் கலைந்து அங்கேயிருந்து இங்கு வந்து விடுகிறது. அவளின் பயபக்தி உணரப்படுகிறது. சாரீரம் உள்ளது வித்வத் இல்லையே? என்று புலம்புகிறாள் அவரிடம். சங்கீதம் முறைப்படி கற்கிறாள். ஊரில் அபகீர்த்தி வந்துவிடக் கூடாது என்று கந்தசாமி பாகவதர் பயப்படுகிறார். கானலோலன் காமினிலோலன் ஆகிவிட்டாரே என்று ஊர் பேசுகிறது. அதற்குத் தக்க பதிலடி கொடுக்கிறார் கந்தசாமி பாகவதர்.

தன் கணவன் மீதான பாலாம்பாளின் அக்கறையைக் கண்டு கொதிக்கிறாள் நீலா. மனதில் களங்கமில்லாமல் பழகிவரும் கிருஷ்ணபாகவதர் பாலாம்பாளின் வீடு தேடிச் சென்று சிட்சையைக் கேட்டு மனம் உருகுகிறார். உன் தவம் பலித்தது என்கிறார். அவர் பாதங்களில் விழுந்து நமஸ்கரிக்கிறாள் அவள். நான் மிகவும் கேவலமான குலத்தில் பிறந்தவள். என் மீது கிருபை கூர்ந்து வித்தையை அனுக்கிரஉறித்ததற்கு உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என்றும் என் இருதயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றும் நா தழு தழுக்கிறாள் பாலாம்பாள். தொடர்ந்து சிட்சை நடக்கிறது. தன்னை மறந்து பாடுகிறார் கிருஷ்ணபாகவதர். மெய்மறக்கிறாள் அவள். என்னிடம் சங்கீதத்தை சாகரமாய்ப் பெருக்கியிருக்கறீர்கள். அன்பின் ஒரு துளி அதில் சேரவில்லை என்கிறாள். பதறுகிறார் பாகவதர். இது என்ன பேச்சு? என்று திடுக்கிடுகிறார். நாதத்தை மகத்தான யோகமாக உபாசித்தேன். சங்கீதம் மனத்திலே தூய்மையான எண்ணங்களைத்தான் உண்டுபண்ணும் என்று எண்ணியிருந்தேன். என் பாட்டு கேவலம் மிருக இச்சையைத் தூண்டுமானால் என் சங்கீதம் பொய். என் யோக்கியதையும் பொய். நான் பாடுவதற்கே லாயக்கில்லாதவன். என்று சொல்லி அன்று முதல் பாடுவதையே நிறுத்தி விடுகிறார் கிருஷ்ண பாகவதர்.

இதுவரை வித்தையில் நாட்டங்கொண்ட வித்யார்த்தினியாய் இருந்தாய். இப்பொழுது உணர்ச்சி வசப்பட்ட பெண்ணாகிவிட்டாய். இனிமேல் எனக்கு இங்கு வேலையில்லை. வித்தையை வீணாக்காமல் போற்றி வளர்த்து சௌக்கியமாய் இரு என்று சொல்லிவிட்டு வெளியேறி விடுகிறார்.

ஊருக்குள் இந்தப் பிளவு பல சந்தேகங்களைக் கிளப்புகிறது. நீலாம்பாள் மனதிலும் போராட்டம். ஆனால் கந்தசாமி பாகவதர் மட்டும் கிருஷ்ணபாகவதரை நம்புகிறார்.

காலம் மாறுகிறது. மகாவெள்ளத்தில் தனி மனித உணர்ச்சிகள் அடித்துச் செல்லப்படுகின்றன. கிருஷ்ணபாகவதரின் மனதிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பஜனை மடத்தைப் புனருத்தாரணம் செய்விக்க கச்சேரி வைத்து பணம் வசூல் செய்யலாம் என்று முனைகின்றனர் இருவரும்.

சோதனையாய் அவரது உடல் நலம் சீர்கெடுகிறது. கச்சேரி நாளன்று மேடையேறுகிறார் கிருஷ்ணபாகவதர். பின்னால் கணீரென்று தம்பூராவின் இன்னிசை. அந்த சுருதியில் செவியையும் மனத்தையும் இதயத்தையும் புகுத்திக் கொண்டு வாயைத் திறந்து பாட ஆரம்பிக்கிறார். சுருதிக்காக அவர் கொடுத்த ஆவென்ற சப்தத்திற்கு பதிலாக அவர் தொண்டையிலிருந்து வெறும் காற்றுத்தான் கிளம்பியது. ஒரு விநாடி உடம்பு அசைவற்று நிற்கிறது. முகத்திலும், உடம்பிலும் வியர்வை கொப்பளிக்கிறது. திரும்பவும் பாட முயல்கிறார். வெறும் காற்றுடன் வருகிறது ஒலி. இது அவருடைய சாரீரம்தானா? அவர் குரல் எங்கு போய் ஒளிந்து கொண்டது? அந்த திவ்யமான சாரீரம் எங்கே? போய்விட்டது. லட்சக்கணக்கான ஜனங்களுக்கு ஆனந்த வெள்ளத்தைக் கொடுத்து இசையமுதத்தைப் பெருக்கிய அந்த இனிய சாரீரம் தொண்டையிலிருந்து போய்விட்டது. அவருக்குத் தலை சுழன்றது. மயக்கம் வருவதுபோல் ஓர் உணர்ச்சி. தூக்கத்தில் இருந்து எழுந்தவரைப்போல் மேடையிலிருந்து வேகமாகக் கீழிறங்குகிறார். கந்தசாமி பாகவதரைப் பார்த்து சோகம் ததும்ப வினவுகிறார். என் சாரீரம் போய் விட்டது. சரீரம்தான் நிற்கிறது. என் குரலுக்குப் பதிலாக என் உயிரைக் கடவுள் கொண்டு போயிருக்கக் கூடாதா? என்று கண்கலங்குகிறார். சிகிச்சை பலனளிக்கவில்லை.

தாம் இனி சபையிலமர்ந்து பாட முடியாது. சபையில் என்ன? தமக்காகவே அவர் இனிப் பாட முடியாது. தம் உள்ளத்தில் பொங்கி வரும் சங்கீத வெள்ளத்திற்கு இனி ஒலி உருவம் கொடுக்க முடியாது. எதற்காக வாழ்ந்து வருவதாக எண்ணியிருந்தாரோ அந்த அடிப்படையில் கேடுவிளைந்ததில் அவருக்கு நெஞ்சம் வெதும்பியது. அவருடைய நடவடிக்கையில் பெருத்த மாறுதல் ஏற்பட்டது. ஒழுங்கும் முறைமையும் கொண்ட அவருடைய வாழ்வில் குழப்பம் ஏற்பட்டது. அக்குழப்பத்தைத் தீர்க்கிறார் கந்தசாமி பாகவதர்.

வானிலும் வெளியிலும் அணுவிலும் இயங்கும் நாத பிரும்மத்தின் ஒரு திவலையைத்தானே உன் காதுகள் ஏற்று வாங்கிக் கொள்ளுகின்றன? உன் செவிக்கு எட்டாது இயங்கும் நாதவெள்ளம் எவ்வளவு இருக்கிறது? உன் காதுகள் கேட்ட நாத வெள்ளத்தில் இதுவரையில் ஈடுபட்டிருந்தாய். இனி செவிக்கு எட்டாத இனிய நாதத்தில் ஈடுபடுவதற்குத்தான் உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. செவிகள் கேட்கும் இனிய கீதத்தில் ஈடுபட்டிருந்தாய். செவிக்கு எட்டாது நிற்கும் பரம கீதத்தில் ஈடுபடப்போகிறாய். உன் செவிகள் வெளியே கேட்கும் நாதத்தில் ஈடுபட்டன. இப்பொழுது அவைகளை உள்நோக்கித் திருப்பு. எங்கும் நிலவி வரும் பரம ஒலியின் எதிரொலியை உன் உள்ளத்திலே கேட்பாய்…” – இதைக் கேட்டு கிருஷ்ணபாகவதரின் கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிகிறது. விசுவரூப தரிசனம் கண்ட பார்த்தனைப்போல் நிற்கிறார். கந்தசாமி பாகவதர் தொடர்கிறார்.

நீ நாதத்தின் எல்லையைக் கடந்து விட்டாய். அடுத்தபடியில் இருப்பது மௌனம். அதற்கு நீ வந்து விட்டாய். அதுதான் தியானம் என்கிறார்.

உண்மைதான். இதுநாள்வரை பகவானைக் குரல் கொடுத்துக் கூப்பிட்டு வந்தேன். இனி என் இதயத்தால் அவரைக் கூப்பிடுவேன் என்கிறார் கிருஷ்ணபாகவதர். சஞ்சலம் நீங்குகிறது. சாந்தி பிறக்கிறது. வெளியே இருள் சூழ்ந்து கிடக்கிறது. ஆனால் கிருஷ்ணபாகவதரின் இதயத்தில் இருள் இல்லை. தன் இதய நாதத்திலேயே அவர் ஈடுபட ஆரம்பிக்கிறார்.

அற்புதமான நாவல். அடடா…! முடிந்து விட்டதே என்றிருக்கிறது நமக்கு. இதயத்தைப் பிழிந்தெடுக்கும் மகோன்னதப் படைப்பு. காலத்தால் கண்டு கொள்ளப்படாமல் பின் தள்ளப்பட்டு விட்டதோ என்ற மனத்தாங்கல் ஏற்படுத்துகிறது.

இங்கேதான் எழுத்துக்கு ஜாதி இருக்கிறதே…! பின் எங்கேயிருந்து விளங்க…?

-------------------------------------------------

11 டிசம்பர் 2011

“எஸ்.ரா.வின் அஷ்ரப்” வாசிப்பனுபவம்



திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன். அது என்னவோ ஒரு ஈர்ப்பு. படித்ததைத் தொகுப்பாக நினைத்துப் பார்க்க முடிகிறதா? அதற்குரிய நடையில் அது அப்படியே மனதில் நிற்கிறதா? இல்லையென்றால் அது படைப்புக்கான வெற்றி. அதனால்தான் அதை மறுபடி படிக்கத் தோன்றுகிறது. படித்த உடனேயே சொல்லிவிட முடியுமென்றால் அதில் என்ன ஸ்வாரஸ்யம்? அது படைப்பின் ஆழத்தைக் குறிக்காது. அது படைப்புக்கான வெற்றியல்ல.. இப்படியெல்லாம் நமக்கும் தோன்றியிருக்கிறதே நாம் எழுதியிருக்கலாமே என்று மனம் ஏக்கம் கொள்கிறது. அந்த உருவகம் வராததனால்தானே நீங்கள் அங்கே முந்திக் கொள்கிறீர்கள்!

நீங்கள் சந்திக்கக் கூடிய மனிதர்களை மற்றவர்களும் சந்தித்திருக்க முடியாதா? பெரிய தொல்லையாப் போச்சே இவனோட…என்று நினைத்திருக்க முடியாதா? இனி இந்தப் பக்கமே எட்டிப் பார்க்காதே…வந்தே காலை வெட்டிடுவேன் என்று சொன்னதில்லையா…? அப்படியும் வந்து வந்து தொல்லைப் படுத்திய நபர்களை சகித்துக் கொண்டதில்லையா? கிடந்துட்டுப் போறான் என்று அனுமதித்ததில்லையா? எல்லாமும் உண்டுதான். ஆனால் இம்மாதிரியான சின்னச் சின்ன நிகழ்வுகள், அனுபவங்கள், சங்கடங்கள், சந்தோஷங்கள், துயரங்கள், வெறுப்புகள், வேதனைகள் இப்படி எல்லாவற்றையும் சேகரித்து வைப்பவன்தானே எழுத்தாளன். அதைத் தொகுத்து உருவகப்படுத்தி, வடிவமைத்து, பாங்காகத் தட்டில் வைத்து நீட்டுபவன்தானே படைப்பாளி…?

அப்படியான பணியை எத்தனை கச்சிதமாகச் செய்கிறீர்கள்…!

எங்கு ஆரம்பித்தது இந்தக் கதை? எப்படியெப்படிப் பயணிக்கிறது? என்பதையெல்லாம் மனதில் நிறுத்த முடியாமல் திணறும்போதுதான் படைப்பு அதீதமான ஒன்றாகப் பரிமளிக்கிறது. . ஆழ்ந்த ரசனையின்பாற்பட்டு அடடா…! சம்பவங்களை எப்படியெல்லாம் கோர்த்துக் கோர்த்து அழகான மாலையாக்கி வாசகனின் கழுத்தில் அணிவிக்க முடிகிறது இவரால்? பிரமிக்க வேண்டியிருக்கிறது.

மனதை என்னவோ சங்கடப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. எதனால்? அந்த அவனாக இருப்பது நானே என்பதனாலா? அல்லது அவனை அடிக்கடி வந்து சங்கடப்படுத்தும் அந்த அவனாலா? அந்தச் சங்கடங்களையெல்லாம் சாதுவாக நின்று சகித்துக் கொண்டு அவனை வெறுத்து ஒரேயடியாக ஒதுக்காமல் என்னவோ ஒரு இருப்பில் அவனை விடமுடியாமல் தவிக்கிறாரே…அது நானாக என்னை நினைத்துக் கொண்டு அவஸ்தைப் படுவதனாலா? அந்த அவஸ்தையை படிக்கும் வாசகனுக்கு உண்டாக்கியது நீங்கள்தான்.

பெரு நகரங்களில் குடியிருக்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் இருக்கும் இடம் ஒன்று. சென்று செயல்கள் முடிக்க வேண்டிய இடம் வேறொன்று. அல்லது சென்று தேவைகளை முடித்து வர வேண்டிய இடங்கள் பல.

கெடக்கு கழுத…நாளைக்குப் பார்த்துக்கலாம்…..எவன் இந்தக் கூட்டத்துல போறது…? ஒரு எடம் போய் ஒரு எடம் வர்றது என்ன சும்மாவா இருக்கு? எத்தனை பேர் இப்படிச் சொல்லி நகரங்களை வெறுத்து ஒதுங்குகிறார்கள். ஒதுங்கி அக்கடா என்று விழுந்து கிடக்கிறார்கள். ஏனடா இந்த நகரத்துக்குள் புகுந்தோம் வாழும் பிரஜையாக என்று குமைகிறார்கள்.

எங்கயும் போ வேணாம். இருக்கிற எடமே போதும்…எத்தனை பேர் இப்படிச் சொல்லிப் புலம்பிச் சிவனே என்று கிடக்கிறார்கள்.

டவுனுக்குள்ளல்லாம் போக முடியாது. இங்கயே எங்கயாச்சும் பக்கத்துல போய் வாங்கிட்டு வந்திடறேன்…என்று தங்கள் எல்கையை எப்படியெல்லாம் சுருக்கிக் கொள்கிறார்கள்.

எல்லாம் இந்த நகரம் படுத்தும் பாடு. அதன் பிரம்மாண்டம் காட்டும் காட்சிகள். அதன் மிரட்சிகள். உயிர் துச்சமாக மதிக்கப்படும் அவலங்கள். இதையெல்லாம் எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

ஒரு நாளைக் கடந்து செல்வது என்பது இந்த மாநகரில் மிகவும் பிரயத்தனப்பட்டு மேற்கொள்ளும் செயலாகிவிட்டது. எதுவும் இயல்பாக இல்லை. யாரும் சந்தோஷமாயிருக்கவில்லை.

எத்தனை வருத்தம் இந்தப் படைப்பாளிக்கு. இந்த சமூகத்தை நிமிர்ந்து பார்த்து அய்யோ…! இந்தப் பாழும் ஜனம் இப்படி அவதியுறுகிறதே…! இந்த மக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பலவற்றிலும் அல்லல்பட்டு, அழுது மடிந்து, ஏமாந்து நிற்கும் நல்லவர்களாக இருக்கிறார்களே…! எண்ணிலடங்கா வருத்தங்களைச் சுமந்து கொண்டு இப்படி நாள் தவறாமல் ஓடுகிறார்களே….!

ஒரு படைப்பாளிக்கு இந்தச் சமூகத்தின்பாற்பட்ட மனச் சுமைகள். முகம் தெரியாப் பலருக்காக வருந்தும் மனித நேயம்.

ஓடிவந்து பேருந்தில் கால் வைத்துத் தடுமாறி விழும் பெண். அவளை யாரோ தூக்கி விடும் காட்சி. பின் அவள் தனக்குத்தானே அழும் சோகம். அடுத்த பேருந்து வந்தவுடன் இதை மறந்து விட்டு ஓடிப் போய் ஏறிக்கொள்ளும் ஜனம்.

அந்தப் பெண் அழுவதைக் காண்கிறார்கள். தங்களுக்குள் வருத்தமுறுகிறார்கள். தங்களுக்கு என்றான பேருந்து வந்ததும் ஏறிச் சென்று விடுகிறார்கள். இந்த மக்கள் ஏனிப்படி இயந்திர கதியாகி விட்டார்கள். எந்தத் துயரத்தையும், வருத்தத்தையும், தற்காலிகமாக மின்னி மறையும் காரணிகளாக்கி தங்கள் இயல்பு வாழ்க்கையில் புகுந்து கொள்கிறார்களே? ஒரே நாளில் எத்தனை எத்தனை காட்சிகள்? எத்தனை அவலங்கள். யாருடைய துயரமும் யாரையும் நிறுத்தி வைக்காத வேகம் கொண்டது இந்த நகரம். எந்த அவமானங்களும், அவலங்களும், அதிர்ச்சிகளும் நகரத்தை ஏன் பாதிக்கவில்லை. நகரம் அதன் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது. மக்கள் அதற்குள் ஐக்கியமாகி முடுக்கி விட்ட இயந்திரங்களாகத் தங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகிலே மனிதர்கள் இட்லி சாப்பிடுவதற்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்கிறார்கள் நகரம் புதைகுழி போல யாவரையும் உள்ளே இழுத்துக் கொண்டேயிருக்கிறது. இதிலிருந்து மீண்டு வர முடியாது. நகரம் ஒரு பெரும் சூதாட்டப் பலகை. அதன் முன்னே உட்கார்ந்து ஆட ஆரம்பித்தவன் வெளியே எழுந்து போகவே முடியாது. கண்ணை மூடிக்கொண்டு படுத்தால் பேருந்துகள் தலைக்குள்ளாக ஓடிக் கொண்டேயிருக்கின்றன. ஆட்டோக்களின் இரைச்சல். மனிதர்களின் கோபக் குரல்கள் மண்டைக்குள் கொப்பளிக்கின்றன. ஏன் இந்த நகரில் குடியிருக்கிறேன்?

இதே கேள்வியோடுதான் பல்லாயிரக்கணக்கானோரும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகரம் பிடித்து யாரும் வாழவில்லை என்றுதான் தோன்றுகிறது. காலத்தின் கட்டாயத்தில் அங்கே போய் அடைந்து விட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருக்கிறது. வருபவர்களையெல்லாம் புதைகுழியைப் போல் உள்ளே இழுத்துக் கொண்டேயிருக்கிறது. வா…வா…வா…இன்னும் வா…இன்னும் வா…என்று கெக்கலியிட்டுப் பிடித்து அந்த மாய வலைக்குள் தள்ளிக் கொண்டேயிருக்கிறது.

எஸ்.ரா.வின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது நம் மனதுக்குள் நடுக்கம் பிறக்கிறது. ஒரு நாள், இரண்டு நாட்கள் என நகருக்கு வந்து திரும்பும் நமக்கு ஏற்படும் மன நடுக்கங்கள். அந்தப் போக்குவரத்தும், நெரிசலும், மக்களின் அவசரங்களும், வாகனங்களின் ஓயாத இரைச்சலும், அதன் அசுர வேகங்களும், நம்மை பயங்கொள்ள வைக்கின்றன.

இந்த நகரத்தில்தானே நம் பையனை விட்டு வைத்திருக்கிறோம். நம் பெண்ணே இந்த மாநகரத்தின் நடுப்பகுதியில்தானே வாழ்ந்து வருகிறாள்.

டே! பார்த்து…பார்த்து…கவனம்…என்ன…புரிஞ்சிதா…? ஜாக்கிரதடா செல்லம்…

பார்த்தும்மா…டூ வீலர்ல போகாதம்மா…..பஸ்லயே போக முடியுமான்னு பாரும்மா…வேண்டாண்டா கண்ணு….சொன்னாக் கேளுடா…

எத்தனை பெற்றோர்கள் தொலைபேசியில் அனுதினமும் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் தம் வாரிசுகளிடம். அப்பாவி மக்கள். விகல்பமில்லாத மூத்த தலைமுறையினர். அவர்களின் மனசு அவர்களுக்குத்தான் தெரியும். அதை முற்றிலும் புரிந்தவர் யார்? நல்லதையே எண்ணி, நல்லதையே செய்து, நல்லதுக்காகவே வாழ்ந்து மடியும் ஒழுக்கமும், கட்டுப்பாடும், பேணிய பெரியோர்கள். இந்த நகரச் சிதைவுக்குள் அவர்களின் நெஞ்சங்கள் நடுங்குவது நியாயந்தானே?

படைப்பாளி இவற்றையெல்லாம் எத்தனை ரத்தினச் சுருக்கமாக தனக்கே கைவந்த அற்புதமான மெல்லிய நடையில் ஓராயிரம் அர்த்தங்களைத் தரும் சிறு சிறு வார்த்தைகளைப் போட்டு கதையை எவ்வளவு அழகாக நகர்த்திச் செல்கிறார்? மனதுக்கு எத்தனை இதமாக, மயிலிறகு கொண்டு வருடி விட்டது போல் இருக்கிறது இந்த நடை. சும்மா வருமா? எழுதிப் பார்த்தால் உடனே வந்து விடுமா?

எல்லோருக்கும் எல்லாமும் தோன்றுகிறதுதான். ஆனால் எத்தனைபேரால் அதை இப்படி வடிக்க முடிகிறது? வடித்து மனதில் நிறுத்த முடிகிறது.?

இப்படியான நெருக்கம் மிகுந்த நகரத்தின் ஒரு மூலையில் சந்துக்குள், ஒரு பொந்துக்குள் குடியிருக்கும் ஒருவனைப் பற்றிச் சொல்லிக் கதையை ஆரம்பிக்கும் விதம் உங்களைக் கை பிடித்துக் கூடவே அழைத்துச் செல்வதை நீங்கள் உணருகிறீர்களா? அப்படி உணர்ந்தால் உங்களுக்கும் ஆழ்ந்த ரசனை இருக்கிறது என்று பொருள். .இல்லையென்றால் நீங்கள் இயந்திர கதியாக இயங்குகிறீர்கள் என்று கொள்ளலாம். மனதில் ஆழமாக வாங்காமல் வரிகளைக் கடந்து செல்கிறீர்கள் எனலாம். கதையைப் படிக்கும்போதே அந்தப் பாத்திரத்தோடு ஒன்றிவிட முடிகிறதா உங்களால்? அந்த அளவுக்கான சக்தி அந்த எழுத்துக்கு இருக்கிறதா? சொல்லும் விதம் உங்களை அப்படியாக ஈர்க்கிறதா? ஈர்க்கும். நிச்சயம் ஈர்க்கும். அதுதான் எஸ்.ரா.வின் அற்புதமான எழுத்து அபிநயம்.

நகரத்தில் பல்லாண்டுகளாகக் குடியிருக்கும் அவன். திருமணம் ஆகப் பெறாதவன். போதுமான வருமானமில்லாதவன். அழகான பெண்களைக் காணும்போது குற்றவுணர்ச்சி மேலோங்குகிறது அவனுக்கு. நகரப் பேருந்தைப் பயன்படுத்தியே அலுவலகம் போய் வருகிறான். அத்தனை வருடங்கள் வேலையில் குப்பை கொட்டியும், ஒரு வாகனம் கூட வாங்கும் தகுதி அவனுக்கு வாய்க்கப் பெறவில்லை. இன்னும் அழுந்திக் காலூன்ற முடியாமல் கிடக்கிறான். எல்லாம் அவனின் இயலாமை. அதன் அடையாளமாய் அவன் குடியிருக்கும் அறை. அதுவும் அவனைப்போலவே. அழுக்கேறிய சுவர்கள். அவன் சோகத்தைப் பிரதிபலிக்கின்றன. மரக்கதவுகள் எலிகளால் கரண்டப்பட்டுத் துளை விழுந்து கிடக்கின்றன. ஒரு மடக்குக் கட்டில. பழைய ரேடியோ ஒன்று. ஒரு பழைய நடிகை படக் காலண்டர் ஒன்று. அடப் பாவமே…! அவனுக்கு அந்தக் காலண்டர் பெண்தான் துணை. அவளோடு பேசுகிறான் மானசீகமாக. கூடக் குடியிருக்கும் பிற ஜீவன்கள் மரப்பல்லி, சிலந்திகள், எலி, இரண்டு காக்கைகள், எப்போதாவது வந்து போகும் அணில், கூடவே மூட்டைப் பூச்சிகள் இத்தனை அசௌகரியங்களுடே அவனின் வாழ்க்கை. மின்சாரம் இல்லாத நாட்களில் கூட அயர்ந்து உறங்கப் பக்குவப்பட்டிருக்கிறான் அவன். அவனின் பழக்கங்கள் அவனுக்கு மிகப் பெரிய பலவீனங்களாகத் தோற்றமளிக்கின்றன. ஆனாலும் அவற்றை உணர்ந்து சகித்து வாழப் பழகிக்கொண்டிருக்கிறான். இவற்றினூடேதான் கதவைத் தட்டுகிறான் அஷ்ரப். தேடி வரும் எல்லோரும் கதவைத்தானே தட்டுவார்கள். இந்த அஷ்ரப் ஜன்னலைத் தட்டுகிறான். அதன் மூலமாகத் தான் அறிமுகப்படுத்தும் அந்தப் பாத்திரம் என்னமாதிரிக் குணாதிசயங்கள் உள்ளவன் என்பதை இந்தச் சிறு நிகழ்வின் மூலமாக நமக்கு எடுத்து வைக்கிறார் எஸ்.ரா. கதவைத் தட்டுவதிலும் கூட ஒரு திருட்டுத்தனம் அந்தப் பாத்திரத்திற்கு இருப்பதாகத்தான் நாம் உணர முடிகிறது. அர்த்த ராத்திரியில் அப்படி வந்து மெல்ல ஜன்னலைத் தட்டுபவன் வந்திருப்பது நான்தான் என்று துல்லியமாக உணர வைக்கும் பாங்கு என்பதை நமக்கு உணர்த்துகிறதல்லவா?

எழுத்தாளன் இப்படியாகத்தானே யோசித்தாக வேண்டும் சொல்வதைப் வித்தியாசப்படுத்தினால்தானே படைப்பாளி. . . இப்படிச் சொல்லி ஆரம்பித்து அந்தப் பாத்திரத்தை எப்படியெல்லாம் வடித்தெடுத்திருக்கிறார் எஸ்.ரா.

அஷ்ரப்பை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருக்கலாம். உங்களுக்கும் அவன் கொடுக்கும் இடைஞ்சல்களான அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். நீங்களும் அவனைச் சகிக்க முடியாமல் கோபப்பட்டிருக்கலாம். அவன் பொறுட்டு நீங்கள் நஷ்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் போகட்டும் என்று விட்டிருக்கலாம். இத்தோடு தொலையட்டும் என்று நினைத்திருக்கலாம். பிறகும் அந்தத் தொல்லை உங்களைச் சூழ்ந்திருக்கலாம். ஆனாலும் உங்களுக்குக் கோபம் வராமல் இருந்திருக்கலாம். இரக்கம் பிறந்திருக்கலாம். மீண்டும் உதவியிருக்கலாம். அந்த உதவியும் மதிக்கப்படாமல் போயிருக்கலாம். உங்களையே எதிர்த்திருக்கலாம். பிறகு மன்னிக்கப்பட்டிருக்கலாம்.

எல்லாமுமாய்த்தானே இந்த வாழ்க்கையில் மனிதர்கள் இருக்கிறார்கள். அப்படியான ஒருவன் ஏன் இருக்கக் கூடாது. அப்படியான ஒருவன் ஏன் நம் காலைச் சுற்றிய பாம்பாய் நம் அனுபவ எல்கைக்குள் வந்திருக்கக்கூடாது? உதறவும் முடியாமல், கை கோர்த்துக் கொள்ளவும் முடியாமல் நீங்கள் ஒருவனை இந்த வாழ்க்கையில் சந்தித்ததேயில்லையா? உறவுகளுக்குள் இருக்கிறார்கள். நட்பு வட்டத்திற்குள் இருக்கிறார்கள். வெளியிலிருந்து வந்து ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். விடாது கருப்பு என்பதுபோல் நம்மை ஆட்டிப் படைத்திருக்கிறார்கள்.

விநோதமான குணங்கள் படைத்தவர்களாய். விபரீதச் சிந்தனை கொண்டவர்களாய். தான் நினைப்பதுதான் சரி என்பதான பிடிவாதம் உள்ளவர்களாய். தனது எண்ணங்கள் வக்கிரமானவை என்பதை உணராதவர்களாய். ஆனாலும் வந்து வந்து தொல்லைப் படுத்துபவர்களாய். நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? நான் சந்தித்திருக்கிறேன். அவர்களிடம் ஏமாறியிருக்கிறேன். அவர்களை நம்பியிருக்கிறேன். மீண்டும் ஏமாறியிருக்கிறேன். இரக்கம் கொண்டிருக்கிறேன். உரிமையளித்திருக்கிறேன். நஷ்டப்பட்டிருக்கிறேன். கண்ணீர் சிந்தியிருக்கிறேன். ஆனாலும் மனிதர்களை வெறுக்கப் பழகியவனில்லை. இப்படித்தான் இருக்கும் என்கிற பக்குவம் வந்து விடுகிறதே அதைத் தந்தவர்கள் அவர்கள் அல்லவா? எங்கோ ஒரு மூலையில் அவனுக்கான மனசாட்சி அவனை உருத்திக்கொண்டிருக்குமே! அதை என்றேனும் ஒரு சில கணங்களாவது உணராமலா போய் விடுவான்?

இந்த அஷ்ரப் அப்படித்தான் இருக்கிறான். கதையின் நாயகன் அவன்தான். அவனால் துன்பப்படுபவர் மணி. அஷ்ரப் சொல்கிறான் –

“இந்த ஊரில் எனக்குத் தெரிந்த அத்தனை பேரும் நிம்மதியாக இருக்கிறீர்கள். நான் ஒரு ஆள் நிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருக்கிறேன். இதுக்கு நீங்கள் அத்தனை பேரும் காரணமில்லையா? எதுக்கு என்னை ஒதுக்கி வைக்கப் பார்க்கிறீர்கள்?

உங்களுக்காக நான் என்னை மாற்றிக் கொள்ள முடியாது. என்னைச் சகித்துக் கொள்ள முடியாத அளவிற்கு ஏன் நீங்கள் தரம் தாழ்ந்து போயிருக்கிறீர்கள்? அதை நான் தெரிந்து கொள்ள வேணும்.

என்னை எல்லோரும் சந்தேகப்படுகிறீர்கள். முதுகிற்குப் பின்னால் ஏளனம் பேசுகிறீர்கள். எனக்கு ஒரு திறமையும் கிடையாது. நான் அப்படி இருப்பதாகச் சொல்லிக் கொள்ளவும் இல்லை. ஒன்றும் செய்யாத ஒருவனை வைத்து காப்பாற்ற ஏன் ஒரு ஆள் கூட முன்வருவதில்லை? இந்த உலகத்தில் உதவாத எத்தனையோ பொருட்கள் இருக்கத்தானே செய்கின்றன. அதை அனுமதிக்கும் உங்களுக்கு என்னோடு மட்டும் என்ன பிரச்னை?

பாத்திரத்தின் வடிவமைப்பு நோக்குங்கள். வெட்டியாய் இருக்கும் ஒருவனின் விதண்டாவாதமான பேச்சு. விட்டேற்றியான வார்த்தைகள். இத்தனையையும் சொல்லிக் கொண்டு மணியண்ணனின் அறைக்கு வந்து வந்து போகிறான் அஷ்ரப். அங்குள்ள பொருட்களைத் திருடிக் கொண்டு செல்கிறான். தன் அறையைப் போல் உரிமையோடு இருந்து கொள்கிறான். தன்னின் தவறுக்காக வருந்துகிறான். மன்னிப்புக் கேட்கிறான். ஒரு சமயத்தில் எதிர்க்கிறான். தகாத வார்த்தைகள் பேசுகிறான். பக்கத்து வீடுகளில் பழகி இவரின் பெயரைச் சொல்லிப் பணம் வாங்கிக் கொண்டு போய்விடுகிறான். குடித்துவிட்டு வந்து அட்டகாசம் பண்ணுகிறான். பிறகு தெளிந்து வந்து மன்னிப்பு வேண்டுகிறான். உத்தரவில்லாமலேயே அறையைச் சுத்தம் செய்கிறான். துணி துவைத்துப் போடுகிறான். பிறகு இந்த வேலையெல்லாம் சும்மாவா செய்ய முடியும். காசைக் கொண்டா என்கிறான். ஒரு பெண்ணை லவ் பண்ணினேன் என்கிறான். கல்யாணம் செய்து கொள்கிறான். பிறகு கைவிட்டு விடுகிறான்.

திடீரென்று வேறொரு நட்பு. அவனின் தந்தை காவல் துறை டி.ஜி.பி. அந்தப் பையனிடம் நட்பு கொண்டு, அவனோடு ஊர் சுற்றி விட்டு, அவன் தந்தையின் பதவியைப் பயன்படுத்தி, தன்னை நெருக்கமாக உணர்த்தி பெண் போலீஸ் இருவரிடம் பதவி உயர்வு பெற்றுத் தருவதாகச் சொல்லிப் பணம் பறித்து, அந்த அதிகாரியின் வீட்டு வேலைக்காரியிடம் பாலுறவு நட்புக் கொண்டு, அந்தப் பையன் விநோத்தின் தங்கையின் மோதிரத்தைத் திருடி விற்று என்று ஏகப்பட்ட தப்புகள் செய்கிறான்.

அஷ்ரப்பின் பாத்திரம் அத்தனை இயல்பாக வடிக்கப்பட்டிருக்கிறது எஸ்.ரா. அவர்களால். நமக்கே அவன் தொடர்ந்து பலரையும் ஏமாற்றுவதை சகிக்க முடியவில்லை. ஆனாலும் அதில் இருக்கும் சுவை நம்மை கூடவே அழைத்துச் செல்கிறது. அதையும் உணர்ந்து ஓரிடத்தில் சொல்கிறார் எஸ்.ரா.

அவனிடம் கடைசியாக ஏமாந்த அந்த விநோத் என்கிற பையன் மணியண்ணன் அவர்களைச் சந்தித்து இந்த விபரங்களையெல்லாம் சொல்கிறான்.

அவனை என்ன செய்யப் போகிறாய்? என்கிறார் மணி.

ஒன்றும் செய்யப் போவதில்லை. அப்படியே விட்டுவிட வேண்டியதுதான் இனி அவனின் நட்பைத் தொடராமல் என்கிறான் அவன்.

அந்த இடத்தில் ஒன்று சொல்கிறார் எஸ்.ரா.

”ஏமாந்து போனவர்கள் தன்னைப் போலவே மற்றவர்களும் இருப்பதில் சந்தோஷம் கொள்கிறார்கள்.”

அத்தோடு அஷ்ரப்பின் தவறுகள் முடிந்தனவா? அதுதான் இல்லை. அடுத்த வாரமே அண்ணாசாலையில் அதே வினோத்தோடு வண்டியில் செல்கிறான் அவன். அதுபோலவே மணியண்ணனின் வீட்டிற்கு வந்து அவர் எதிர்பார்க்காமல் சில காரியங்களைச் செய்து வைத்து விட்டு, கிணற்று வாளியைத் திருடிக் கொண்டு சென்று விடுகிறான். இப்படி இருப்பவன் கடைசி வரை இப்படித்தான் இருப்பான் என்பதாக.

அந்நியன் திரைப்படத்தில் விக்ரமின் பாத்திரம் கடைசியாக இப்படித்தான் முடியும். நீண்ட மருத்துவ சிகிச்சைக்குப்பின் குணமான அம்பி, ரயிலில் பயணம் செய்யும்போது அந்நியனுக்கான குணத்தோடு ஒரு தீமையை அழிப்பதுபோல் காட்சி வந்து படம் முடியும். அதுபோல் முடிகிறது இந்தக் கதையும்.

ஒரு தேர்ந்த இயக்குநரால் யதார்த்தமான ஒரு குறும்படமாக குறைந்தது ஒரு மணி நேரப் படமாக இந்தச் சிறுகதை ஆக்கப்படுமானால் எஸ்.ரா. எப்படி அனுபவித்து இந்த அஷ்ரப் பாத்திரத்தைப் படைத்திருக்கிறாரோ அப்படியே அழகாக, ஆழமாக வடித்தெடுக்கலாம். அந்த அளவுக்கான யதார்த்தமான அனுபவச் செறிவினை இந்த அற்புதமான சிறுகதையின் மூலமாக நம் முன்னே வைத்திருக்கிறார் திரு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.

உயிர்மை 100 வது இதழில் எடுத்த எடுப்பிலேயே படித்து முடிக்கப்பட்ட இந்தச் சிறுகதை ஒரு சிறந்த சுகானுபவம். திரும்பத் திரும்பப் படிக்க வைத்த திறமையான எழுத்து அனுபவம். நாமும் இப்படி எழுத வேண்டும் என்று ஊக்கம் தந்த வாசக அனுபவம்.

ற்றுப் பொறுங்கள். யாரோ ஜன்னலைத் தட்டுவது போலிருக்கிறது. ஒரு வேளை அஷ்ரப்பாய் இருக்குமோ என்னவோ…!!! --------------------------------------------------------------------

“அக்கினிக்குஞ்சைத் தேடுகின்றோம்”


.

, பாரதி…!

பாட்டுத் திறத்தாலே

இவ்வையத்தைப்

பாலித்திட முயன்றவனே

நீ விட்டுச் சென்ற

அக்கினிக் குஞ்சை

நாங்கள் இன்று

தேடிக் கொண்டிருக்கின்றோம்

வீரத்தைப் பறைசாற்றிய அது

இன்று எங்களின் அவசியத் தேவை

கொன்றழிக்கும் கவலையெனும்

குழியில் வீழ்ந்து நாங்கள்

குமைந்து கொண்டிக்கிறோம்

இன்று புதிதாய்ப் பிறந்தோமென

உன் மக்கள் எண்ண வேண்டுமெனின்

திரும்பி ராமல் இங்கே

தீமைகள் அழிய வேண்டும்

நீ உரைத்தது போல்

மடமை, சிறுமை, துன்பம், பொய்

வருத்தம் நோவு இவை யாவும்

இன்னும் இங்கே

தொலைந்து படவில்லை!

கடமை செய்து களிப்புற

எங்கள் கண்கள் இன்னும்

திறக்கப்படவில்லை

ஊருக்கு நல்லது சொன்ன உன்னிடம்

நாங்கள் கேட்பது இதுதான்

எங்கே உனது அக்கினிக் குஞ்சு…?

காணி நிலம் கேட்டவனே!

போகிற போக்கைப் பார்த்தால்

ஆறடி மண்ணே எங்களுக்கு

அநிநியமாகிவிடும்

போலிருக்கிறதே…!

பாஞ்சாலி சபதத்தில்

பாரதம் சொன்னவனே…

உனது சொந்த பாரதத்தின்

சோக நிலை இதுதான்

இந்த சோக பாரதம்

புழுதியில் எறியப்பட்ட வீணையாய்

புதுமை ராகத்திற்குத்

தவித்து நிற்கிறது

ஞான ரதத்தை

நடத்திக் காட்டியவனே

எங்களின் கால ரதம் இங்கே

கண்மண் தெரியாமல்

கடப்பதை நீ அறியமாட்டாய்

இங்கே

தெளிந்த நல்லறிவிருந்தும்

திண்ணய நெஞ்சமில்லை பலருக்கு

எனவேதான் யாரும்

நல்லதே நினைப்பதில்லை

எழுதியதையெல்லாம் கூடவே

எடுத்துச் சென்றவனே

திரும்பவும் அவற்றை நீ

தருவதெப்போது?

நாங்கள் கோருகிறோம்

நீ மீண்டும் புறப்பட்டுவா

இல்லையெனில் உனது

அக்கினிக்குஞ்சை எங்களுக்கு

அடையாளம் காட்டு…!

------------------------------------------------------

10 டிசம்பர் 2011


அவன் என் நண்பன்...!

ங்களோடு யாரும் சேரமாட்டார்கள். நானும் அவனும் மட்டுமே. நண்பர்கள் சேரும்போது அவன் வந்துவிட்டால் ஒரு அநிச்சைச் செயல்போல மற்றவர்கள் பிரிந்து விடுவார்கள். அவனைப் பிடிக்காமல் இல்லை. இனி நானும் அவனும் இருக்குமிடத்தில் அவர்கள் இருக்க முடியாது என்பதற்காக.

எங்கள் கால்கள் தானாகவே அந்த ஊருக்கு வெளியிலான நீண்ட சாலையை நோக்கி நகர ஆரம்பித்து விடும். கால்கள் போய்க்கொண்டிருக்கும். மனம் வேறொன்றில் லயித்திருக்கும்.

முதல் கவிதை வரி அவனுடையதா? என்னுடையதா? சந்தேகமென்ன? அவனுடையதாகத்தான் இருக்கும். அதன் தொடர்ந்த இரண்டு வரிகள் நிச்சயம் என்னுடையதுதான். ஆனால் அது கவிதை வரிகளாய் இருந்ததா என்பது இன்றும் எனக்கு சந்தேகம்தான். ஆனாலும் அதைத் தொடர்ந்த இரண்டு வரிகளை அவன் சொன்னான். பிறகு நானும் சொன்னேன். இப்படித்தான் பயிற்சி ஆரம்பமானது. அவன் வரிகள் அன்றே நன்றாயிருந்தன. உள்ளார்ந்த ஆழமான அர்த்தங்களை உள்ளடக்கியதாய் மிளிர்ந்தன. அது அவன் வரிகள் என்பதாய். இங்கே வேறொரு அர்த்தம் இருக்கிறது. புரிகிறதா?

அவன் சொன்னான். நீ கதை எழுதுடா…! உனக்கு வரும்…என்னிடமுள்ளதைக் கண்டு பிடித்துச் சொல்லி அன்றே என்னை உசுப்பி விட்டவனும் அவன்தான். என்னிடம் அப்படி ஒன்று இருக்கிறது…என்னால் ஓரளவுக்கேனும் முடியும் என்கிற அளவிலான எண்ணங்கள் கூட அன்று என்னிடம் இல்லைதான்.

இன்றும் கூட நான் வாசிப்பனுபவத்தினாலும், என்னுள் படிந்துள்ள ஆழ்ந்த ரசனையினாலும்தானே எழுதிக் கொண்டிருக்கிறேன்…! ஆனாலும் இளம் பிராயத்தில் என்னிடம் அப்படி ஒன்று இருந்தது என்பதை உணர்ந்து சொன்ன அவனின் சுட்டுதல் என் மனதில் விதையாக விழுந்தது என்பது மட்டும் என்னவோ உண்மை.

அன்று அவன் எழுதிய கவிதை அப்பொழுதே கணையாழியில் வந்தது. சொன்னபடி நிரூபித்தவன் அவன். நானும் ஒரு கவிதை எழுதினேன். அது மரபுக் கவிதை. அது தீபத்தில் வந்தது. என் கவிதை உடனே புரிந்தது. அவன் கவிதை?

உள்ளுக்குள் என்ன வைத்திருக்கிறாய்? என்றேன் நான். அதுதானே கவிதையின் சூட்சுமம்? எதையோ வைத்ததனால்தான் அது அன்று கவிதையானது. அப்பொழுதே அதை அவன் எனக்கு விளக்கிச் சொன்னதனால்தான் புரிந்தது எனக்கு.

ஒருவேளை அவன் என் கூடவே இருந்திருந்தால் நானும் அவனைப் போல் புரியாத கவிதைகளை (எத்தனை பாமரத்தனமான வார்த்தை…?)எழுதியிருப்பேனோ என்னவோ? புரியாத என்பது இங்கே புரிந்து கொள்ள இயலாமை என்பதாகத்தான் நான் பார்க்கிறேன். ஒன்றிரண்டை அவன் விளக்கிச் சொன்னபோது ஆஉறா…இப்படியெல்லாமும் எழுத முடியுமா? என்று பிரமித்துப் போயிருக்கிறேனே நான்…அப்படியான கவிதைகள் இன்றும் கூட என்னை மிரட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. மிரட்டும் கவிதைகள் சிலவற்றை நானும் கூட வாசிப்பு தோஷத்தினால் எழுதிக் கொண்டிருக்கிறேன். அவை ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கின்றன. ஆனால் அவை வெறும் வார்த்தைகளின் சேர்க்கைதானோ என்கிற ஒரு தீர்க்க முடியாத சந்தேகமும் கூடவே எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இவன் என்ன தன் படைப்பைப்பற்றித் தானே இப்படிச் சொல்லிக் கொள்கிறான் என்பதாகப் பலருக்கும் தோன்றக் கூடும். ஏனென்றால் அது இன்று இல்லை. மனதுக்குள் மட்டும் பலருக்கும் இருக்கிறது. ஆனால் வெளியே எப்படித் தூக்கி நிறுத்தியிருக்கிறேன் பார் என்கிறார்கள். மௌனமாய்ச் சிரிக்கிறார்கள் பலர். கவிதையை உள்ளார்ந்த பொருளுடன் உணர்ந்தவர்கள்.

ஏராளமாய் எழுதிக் குவிக்கிறார்கள் இன்று. கணிணி வலைகளில் குப்பையாய்ச் சேருகிறது அத்தனையும். எத்தனை மனதில் நிற்கும் தகுதியாகிறது. நிறைய எழுதும் ஆர்வம் பல நூறு பேர்களிடம். அதற்கான பயிற்சிக் களம் கணினி இதழ்களும், வலைகளும்.. எனக்கு உட்படத்தான்.

அன்றே நிறையப் படிக்க ஆரம்பித்து விட்டவன் அவன். நானும்தான். ஆனால் நான் படித்தது வேறு. அவன் படித்தது வேறு. நான் சற்றுக் கமர்ஷியல் ஆனவன். அவன் இதற்கு எதிர்மறை.

நான் கதையாளனானேன். அவன்? உளவியலாளன் ஆனான். நம்புகிறீா்களா? ஆம் அதுதான் உண்மை. அவன் தேடியது அவனுக்குக் கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். மனிதனைப் பண்படுத்தும் ஞான நிலைபற்றிப் பேச ஆரம்பித்து விட்டான் அவன். சமூகவியலாளனாகவும், உளவியலாளனாகவும் இன்று பரிமளிக்கிறான்.

ஞான நிலைகளின் படிநிலைகளை புராதன ஞானம், மாந்திரீக ஞானம், தொன்ம ஞானம் என்று வகைமைப்படுத்தி விளக்குகிறான். அறிவு நிலைகளின் வகைமைகளைப் பட்டியலிட்டு இலக்கியம் அறிவு நிலையை எளிதாக வெளிக் கொண்டு வருகின்றது என்கிறான். மனித வளம் உள்ளும் புறமுமாக நிகழ்கின்ற ஒன்று என்பதை உரிய சான்றுகளுடன் விளக்குகிறான். இன்றும் அவன் பேச்சில் பலவும் எனக்குப் புரியாமல்தான் இருக்கிறது. நான் கதையாளன். அவன் உளவியலாளன்.

அவன் எனக்கு நண்பன். இப்படிச் சொல்லிக் கொள்வதிலே எனக்குப் பெருமைதான். பெயர் உறாலாஸ்யம். அவனின் ஒரு கவிதை இங்கே -

அதனால்தான்....

------------------------

நிரந்தர வீட்டிற்கு

திறக்கவும் மூடவும்

கதவுகளில்லை

கதவுகள் இல்லாததால்

அது

கல்லறையும் அல்ல

சூன்யமே பூரணமாகும்

மஉறா வித்தை அறிந்த

எறும்பின்

கால்களுக்கு மட்டுமே

அந்த ரகசியம்

புரியும்

அதனால்தான்

புற்று மணல்

மருந்தாகிறது

பாலில் கலந்து ஊட்ட

தேனில் குழைத்துக்

கொடுக்க

நீரில் கரைத்துப்

பற்றுப் போட...!

----------------------------------

07 டிசம்பர் 2011

மாயங்களின் யதார்த்த வெளி சிறுகதை


ன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டு தன் கைகளை உள்ளே விடத் துடிக்கும் அந்த மரத்தையே நோக்குகிறாள் நந்தினி.

என்ன இது, என் கண்களையே என்னால் திறக்க முடியவில்லையே, பிறகு நான் எப்படிப் பார்க்கிறேன்?

பயப்படாதே நான்தான் உன்னை எழுப்பினேன்.

நீ எழுப்பினாயா…எப்படி? வெளியே இருக்கும் நீ எப்படி என்னை எழுப்ப முடியும்? கண்களைத் திறக்காமல் நான் எப்படி உன்னைக் காண்கிறேன்….?

என்னால் நீ உறங்குவதற்கு குளிர்ந்த காற்றை அளிக்க முடியுமென்றால் உன்னை என்னால் எழுப்ப முடியாதா? உன்னை உன் உறக்கத்திலேயே என்னைக் காண வைப்பது நான்தான். காற்றைத் தரும்போதெல்லாம் சுகமாய் அனுபவித்தாயே நீ… இந்த ஜன்னலுக்கு அருகில் வந்து உட்கார்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாயே…கைகளை வெளியே நீட்டி எத்தனை முறை என் இலைகளை நீ பறித்திருக்கிறாய்…பசுந்தளிராய் நான் பச்சையத்தோடு காலை வெயிலில் மிளிர்ந்த போது ஆசை ஆசையாய்ப் பறித்து என்னை முகர்ந்து பார்க்கவில்லையா நீ! இன்று என்னைப் பற்றி எதுவுமே தெரியாதவள் போல் முழிக்கிறாயே இது நியாயமா? இன்று நீ இனிமேல உறங்க முடியாது… இது எனக்கான நேரம்…

மரமா பேசுகிறது…. அய்யோ..இதென்ன கொடுமை…? என்னை யார் கட்டிப் போட்டிருக்கிறார்கள்? என்னால் எழுந்திரிக்க முடியவில்லையே? யாராவது என்னை எழுப்புங்களேன்….நந்தினி புரண்டு புரண்டு பார்க்கிறாள். அவளால் விடுபட முடியவில்லை. எது தன் கைகளையும் கால்களையும் போட்டு இறுக்குகிறது?

மரம் தன் கிளையை ஜன்னல் வழியே உள்ளே விட்டு நந்தினியை எழுப்பியது.

சீ…போ….நீ எழுப்பினால் நான் எழுந்திரிக்க மாட்டேன்…உன்னை எனக்குப் பிடிக்க வில்லை….

என்னவோ என்னோடு மிகுந்த பழக்கம் உள்ளவள் போல் சிணுங்கிக் கொள்கிறாயே…உனக்கு என்னைப் பிடிக்காவிட்டால் என்ன…எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறதே…அதனால்தானே இந்த வெளியில் நின்று கொண்டு சதா சர்வ காலமும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்…இப்பொழுது நீ எழுந்திருந்தால் பிழைத்தாய்…இல்லையென்றால் உன்னை உன் கணவரோடு நீ சென்ற வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு விடுவேன்.

கணவரோடு எப்படிப் போக முடியும்…அவர்தான் இறந்து வருஷங்களாயிற்றே…

வருஷங்கள் ஆனால் என்ன? அந்த ஜீவன் தவித்துக் கொண்டிருக்கிறது. உன்னை நினைத்தே இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கிறது. உனது அவமானங்களைத் தாங்கிக் கொண்டு இன்னும் உன்னை நோக்கித் தன் தலை தாழ்த்திக் காத்துக் கொண்டிருக்கிறது…

அவரை இழந்து நீ சந்தோஷமாகக் காலம் கழிக்கிறாய்… உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தார் அவர்…அதை கொஞ்சமேனும் மதித்தாயா நீ?

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்? அதுவும் இந்த வீட்டில்? நானும் அவரும் இருந்தது. வெளியூராயிற்றே…?

நீ எங்கிருந்தால் என்ன, நான்தான் உன் கூடவே வந்து கொண்டிருக்கிறேனே…

என்ன சொல்கிறாய் நீ? உன் பேச்சு எனக்கு பயத்தை ஏற்படுத்துகிறது.

உன் கல்யாணத்திற்குக் கூட வந்திருக்கிறேன் நான்…மண மேடையில் தாலி ஏறும் முன் நீ அழுது கொண்டேயிருந்தாயே….அதற்கு முன்னாலேயே உன் கணவன் மீது பிரியம் கொண்டவள் நான்…

நான் அழவுமில்லை, சிரிக்கவுமில்லை..…நீ என்னை எதுவோ செய்யப் பார்க்கிறாய்…அதற்காக எதெதையோ சொல்லி என்னை பயமுறுத்துகிறாய்…

மனசாட்சியைக் கொன்றுவிட்டுப் பேசாதே…பிறகு நான் என் குணத்தைக் காண்பித்து விடுவேன்…

மிரட்டும் வேலையெல்லாம் வேண்டாம்…

உன்னை மிரட்டுவது என் வேலையல்ல. உன் ஆழ்ந்த தூக்கத்தைக் கலைக்கவே நான் வந்தேன்.

என் தூக்கத்தைக் கெடுப்பதில் உனக்கென்ன சந்தோஷம்….

அதில்தான் எனது திருப்தியே அடங்கி இருக்கிறது. அதை நீ அறியமாட்டாய்…

இதைத்தான் நான் சொன்னேன். நீ எது எதையோ சொல்லி என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறாய்…என்று…

அது என் வேலையல்ல என்றுதான் முன்பே சொல்லி விட்டேனே…உன் கணவனின் திருப்திதான் என் திருப்தி…

என்ன உளறுகிறாய்…

ஆமாம், உன் மீது கொள்ளையாய் ஆசை வைத்திருந்தான் அவன். அவனை நீ அலட்சியப்படுத்தினாய்…அவனின் உண்மையான ஆசைகளை மதிக்கத் தவறினாய்…அதனால் அவனை நான் எடுத்துக் கொண்டேன்…

நீ எடுத்துக் கொண்டாயா? அப்படியானால் அவரின் மரணத்திற்கு நீதான் காரணமா?

ஆசையாய் உள்ள ஒரு கணவன் எனக்குத் தேவைப்பட்டது. அவனின் ஆசை அத்தனை புனிதமானது. களங்கமற்றது. அதை உன் கூடவே இருந்து கண்டவள் நான்.

என்ன இது? திடீரென்று பெண் போலப் பேசுகிறாய்…

எனக்கென்று ஒருவனைத் தேடிக்கொண்டிருந்தேன்…உன் கணவனின் மரணம் அதற்கு உதவி செய்தது….

அவர் எப்பொழுது மரணம் எய்துவார் என்று காத்துக் கொண்டிருந்தாயா?

மரணத்திற்கு முன்பே அவர் என்னிடம் வந்து சேர்ந்து விட்டவர்…ஆசையாய் உள்ள என்னைப் பார்த்ததும் அவருக்குப் பிடித்துப் போய்விட்டது…அதனால் நான் அவரை எடுத்துக் கொண்டேன்.

நான் ஒருத்தி இருக்கும்போது நீ எப்படி அவரை எடுத்துக் கொண்டிருக்க முடியும். நீ என்ன பெண்ணா? கண் முன்னே வா பார்ப்போம்…

நீ என்னை இப்பொழுது கண்டுகொண்டுதான் இருக்கிறாய்…என்னைப் பார்த்துத்தான் பேசுகிறாய்…பிறகு முன்னே வா என்றால் எப்படி…?

.உன்னால்தான் அவர் மனப்பிறழ்விற்கு ஆளானார். அவர் கொடுத்த அன்பின் விலையை நீ உணரவில்லை…

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்…அவர் புத்தி சரியில்லாமல் போனது இந்த ஊரில் இல்லையே…அது நாங்கள் தனிக்குடித்தனம் சென்ற இடமாயிற்றே…

அங்கு ஒரு பெண்ணிருந்தாள். அது உனக்குத் தெரியுமா?

அங்கு ஒருத்தியா? அது காலியாகக் கிடந்த வீடு….

அங்கேதான் நான் இருந்தேன். அதை நீ அறியமாட்டாய்…

இந்தப் பேத்தலெல்லாம் வேண்டாம்…

இது உண்மை. உன் கணவன் அறிவான் என்னை. ஒரு நாள் அவன் என்னைப் பார்த்து உன் பெயரைச் சொல்லி அழைத்தான். ஆம் நான்தான் என்று சொல்லி அவனை இழுத்துக் கட்டி அணைத்துக் கொண்டேன். அன்று முதல் அவன் என்னிடம்தான் இருக்கிறான். அதனால்தான் உங்களோடு நான் எப்பொழுதும் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன்.….இப்போது அவர் என்னோடு சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்த சந்தோஷத்தை நீ அவருக்கு அளித்திருந்தால் அவருக்கு இந்தத் தேவை ஏற்பட்டிருக்காது. அவர் என்னை நாடி வந்திருக்க மாட்டார்.

உன்னை நாடி வர நீ என்ன பெரிய அழகியா?

நான் அத்தனை அழகில்லைதான்…ஆனால் அன்பு செய்யத் தெரிந்தவள்…அந்த அன்பு என் அழகைக் கூட்டியது…

அன்புக்குக் கூட அழகு உண்டா என்ன? உன்னை மாதிரி உளறுவோரை நான் கண்டதேயில்லை…

அன்புக்குத்தான் அழகு உண்டு…உடம்புக்கு அல்ல…உடம்புக்கு என்று நீ நினைத்தாய்…அதிலேயே மூழ்கிக் கிடந்தாய். எப்பொழுதும் எந்நேரமும் அதை அலங்கரிப்பதிலேயே உன் காலத்தை வீணாக்கினாய்…அதைப்பற்றி உனக்கு அத்தனை பெருமிதம்…அதனால் உன் மனதில் உண்டான அலட்சியம்…நீ எனக்குச் சமமில்லை என்று உன் கணவனை உதாசீனப்படுத்தினாய்…அன்பின் விலையைப் புரிந்துகொள்ளாதவர்கள் எல்லாம் உன் நிலையைத்தான் அடைந்திருக்கிறார்கள். உன் அழகைப் போற்றத் தெரிந்தவனின் களங்கமற்ற அன்பை நீ மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும்…அதில் தவறி விட்டாய்…

போதும் உன் பேச்சு…நான் எப்படியிருந்தேன் என்று நீ சொல்லத் தேவையில்லை. எனக்கென்று இரக்கப்பட நாலுபேர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் ஆறுதலை நான் கேட்டுக் கொள்கிறேன்…

நான் உனக்கு ஆறுதல் சொல்ல வந்தேன் என்று நீயாகவே ஏன் நினைத்துக் கொள்கிறாய்…என் ஆசைக் கணவனின் விருப்பத்தை நிறைவேற்றவே வந்திருக்கிறேன்…அவரின் வெள்ளை மனது படும் அவஸ்தையை நான் உணர்வேன்…அதனால்தான் வெகு முன்னேயே அவரை நான் உன்னிடமிருந்து எடுத்துக் கொண்டேன்…அதனால்தான் அவர் உன் முன்னால் பைத்தியம் போல் அலைந்தார்.

என்ன சொல்கிறாய் நீ…இதெல்லாம் எப்படி நீ அறிவாய்…

எல்லாமும் அறிவேன்…அந்தப் புத்தி பிரண்ட நிலையில் கூட நீ அவரிடம் அன்பு காட்டவில்லை. அன்புதான் வேண்டாம்…இரக்கமாவது செலுத்தியிருக்கலாமில்லையா? சக மனிதன் என்கிற முறையில் கூட ஒரு மூன்றாமவளாக நின்று கூட உன்னால் எதுவும் செய்ய முடியவில்லை.. உன் மனதில் கருணையே இல்லையா…நீ ஒரு பெண்தானே…

நான் அவரை எதுவும் செய்யவில்லை. அன்பு காட்டவும் இல்லை…துன்புறுத்தவும் இல்லை….

மனதினால் எவ்வளவு துன்புறுத்தியிருக்கிறாய்…இல்லை என்கிறாயே மனசாட்சியைக் கொன்று விட்டு…ஒவ்வொரு முறை அவர் உன்னை ஆசையோடு நெருங்கும்போதும் நீ விலகி விலகிப் போனாயே…நினைவிருக்கிறதா? நீ என்னைத் தொடக்கூடத் தகுதியற்றவன் என்று சொல்லாமல் சொன்னாயே? ஒரு கணவனுக்கு அவன் மனைவியைத் தொடவும் அனுபவிக்கவும் உரிமையில்லையா? நீ அதற்கு இடம் கொடுத்தாயா? எத்தனை இடங்களில் எத்தனை பெண்கள் இதற்காக ஏங்கித் தவம் கிடக்கிறார்கள். நீ அதை அறிவாயா? உன் கணவன் ஒரு அப்பாவி. பாவம். உன்னை நெருங்கும்போது கூட அவன் பயந்து கொண்டேதான் நெருங்கினான். தான் இதற்குத் தகுதியானவன்தானா என்கிற சந்தேகம் அவன் மனதில் இருந்து கொண்டேதான் இருந்தது. ஆனாலும் உன் மீதான ஆசை, தான் உன்னின் கணவன் என்கிற உரிமை அவன் ஒரு ஆண் என்கிற இடத்தில் இருந்து அவனைச் செயல்பட வைத்தது. ஆனாலும் அவன் நல்லவன். அதனால்தான் நீ அவனை உதறியபோது உன்னிடம் மண்டியிட்டான். அப்படியும் நீ அவனை ஒதுக்கினாயே? அது நியாயமா? ஒரு கணவன் அவனுக்கு நீ மனைவி என்கிற அளவிலேனும் அவனுக்கு இணங்கியிருக்க வேண்டாமா?

உன் அழகு பற்றியதான கற்பனைகள் உன் திருமணத்திற்கு முன்பு உன்னிடம் ஏராளமாக இருந்திருக்கலாம். ஒரு யவ்வனமான இளைஞன் உனக்குக் கிடைப்பான் என்று நீ மாயாலோகத்தில் பறந்திருக்கலாம். ஆனால் யதார்த்தம் இதுதான் என்று நீ உணர முற்பட்ட வேளையில் நடப்புலகத்திற்கு வந்து நீ பொருந்தியிருக்க வேண்டாமா?

உன் தந்தையையும், உன்னை வளர்த்த உன் அண்ணனையும், அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் நீ கொஞ்சமேனும் நினைத்துப் பார்த்தாயா? தன் பெண் இப்படியெல்லாம் கட்டு மீறி வளர்ந்திருப்பதற்குத் தானும் ஒரு காரணம் என்று உன் தந்தை நினைத்துப் புழுங்கிய அந்த ஒரு நிமிடத்தை என்றாவது நீ உன் நினைப்பில் கொண்டு வந்து வருந்தினாயா?

எப்படிப்பட்ட அற்புதமான குடும்பத்தில் உன்னை வாழ்க்கைப்படுத்தினார் உன் தந்தை. அதற்குப் பிறகாவது நீ மாறியிருக்க வேண்டாமா? அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களைக் கண்டாவது நீ உன்னை பதப்படுத்திக் கொண்டிருக்க வேண்டாமா? அவர்கள் உன் மீது எவ்வளவு அன்பு வைத்து உன்னைக் கொண்டாடினார்கள்.

நிறுத்து. என்ன உன்பாட்டுக்குப் பேசிக் கொண்டே போகிறாய்…. அவர்கள் என் மீது அன்பு செலுத்தியதுபோல் நானும் அவர்களுடன் இணக்கமாகத்தான் இருந்தேன். அவர்களை யாரையுமே நான் வெறுக்கவில்லையே…என்னவோ கூடவே இருந்து கண்டதுபோலல்லவா சொல்கிறாய்…

பார்த்தாயா உன் வார்த்தைகளிலேயே நீ சிக்கிக் கொண்டாய்…இணக்கமாய் இருந்தேன் என்கிறாய்…உன் வாழ்க்கை ஓட்டத்திற்கு உனக்கு இது தேவைப்பட்டிருக்கிறது. அப்படித்தானே…அந்தக் குடும்பமும் அவர்கள் உன் கணவனை எத்தனை முக்கியப்படுத்தி முன் நிறுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கண்டுமாவது நீ உன்னை மாற்றிக்கொண்டிருக்க வேண்டாமா? எத்தனையோ வாய்ப்பிருந்தும் எல்லாவற்றையும் நீ நழுவ விட்டுவிட்டாயே?

இத்தனைக்கும் காரணம் உன் அழகு….அப்படியான உன் நினைப்பு…அதுதானே…

பார்த்தாயா இதற்குக் கூட நீ அமைதியாகத்தான் இருக்கிறாய். அப்படியானால் என்ன பொருள்? உன் அழகுபற்றியதான பிரமை உன்னை விட்டு இன்னும் விலகவில்லை.

இன்று நீ தனியளாக்கப்பட்டிருக்கிறாய். அதற்கும் கூட உனக்கு நீயேதான் காரணம். ஆனால் உன் அழகு உன்னைவிட்டுப் போய்விட்டதே, அதை நீ உணர்ந்தாயா? இல்லை பழையமாதிரித்தான் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாயா? அழகு பதப்படும், மேம்படும், தெய்வீகமாக்கும். அப்படி உன்னை ஆக்கியிருப்பதாக நீ உணர்கிறாயா? இல்லை. நிச்சயமாக இல்லை…ஏனென்றால் அதன் மகிமையைக் கூட நீ உணரவில்லை. அதையும் உன் அடிமை என்று கொண்டாய். நீ அதை மதித்திருந்தாயானால் அது உன்னை ஒளி வீசச் செய்திருக்கும். மாறாக அதில் நீ கர்வம் கொண்டாய்…இப்போது அது உன்னைத் தோற்கடித்துவிட்டது…

போதும்…எனக்கு உன் அறிவுரை தேவையில்லை. நீ இங்கிருந்து போய்விடு… சொல்லிவிட்டு நந்தினி தன் கூந்தலை அள்ளி முன் பக்கம் திருப்பித் தன் முகத்தை மூடிக் கொண்டாள்.

இன்னமும் இந்தக் கூந்தலால் உன் முகத்தை மூடும் பழக்கம் உன்னிடமிருந்து போகவில்லையா?

ஐயோ, இதெப்படித் தெரியும் உனக்கு…எல்லாவற்றையும் நேருக்கு நேர் நின்று பார்த்ததுபோல் சொல்கிறாயே?

நீ உன் கணவனோடு இந்த அறையில் படுக்கையில் கிடந்ததும், அவனைத் தொடவிடாமல் விலக்கியதும், உன் இந்த நீண்ட கூந்தலை வைத்து உன் முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல் பாவனை செய்ததும், மென்மையான அவன் அதற்குக் கூடப் பதறித் துடித்ததும், எல்லாம் உன் அழகு மேல் அவன் வைத்திருந்த மதிப்புதான்…உன் மேல் கொண்டிருந்த பிரேமைதான்…காலப் போக்கில் கூட நீ கனியவில்லையே…அப்படி என்ன பாவம் செய்தான் அவன்…உன் நீண்ட கூந்தலைக் கொத்தாக சுருட்டிப் பிடித்து உன்னை அப்படியே வெளியே இழுத்து எறிந்து விடவா?

என் கைகள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நீளும்…ஏனென்றால் என்னின் இந்தக் கைகளால் நான் எத்தனையோ பேருக்கு எனது ஆசீர்வாதத்தினை வழங்கியுள்ளேன். நீ இப்பொழுதுதான் இங்கே வந்தவள்…நான் பல ஆண்டுகளாய் இங்கே நின்று கொண்டிருக்கிறேன்…இங்கே நீண்டு கிடக்கும் இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காலத்திலும், சதா சர்வ காலமும் தண்ணீர் வற்றாது ஓடிக் கொண்டிருந்த காலத்திலும், இருந்து நான் அதைப் பார்த்துப் பார்த்து அந்த நீரை உண்டு உண்டு வளர்ந்திருக்கிறேன்… எனக்குப் பின்னால் வந்தவர்கள்தான் நீங்களெல்லாம்…சுற்றிலும் உள்ள இந்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஒவ்வொரு வீட்டிலும் என்னென்ன நடக்கிறது என்பதை இங்கேயிருந்தே நோட்டமிட்டுக் கொண்டிருப்பது நான்தான். யார் என்ன செய்தாலும் அது என் கண்களிலிருந்து தப்பாது. அது நல்லதானாலும் சரி, தவறானாலும் சரி…என்ன நான் சொல்வதற்குப் பதிலே இல்லை…என் கேள்வி புரிகிறதா, அல்லது காதிலேயே விழவில்லையா?

இந்த இடத்திலிருந்து பலரும் தன் ஆசைக் கணவனோடு சந்தோஷமாக சல்லாபிப்பதைத்தான் நான் கண்டிருக்கிறேன்.

நிறுத்து, நிறுத்து…என்ன சொன்னாய்…என்ன சொன்னாய்…ஆசைக் கணவன் என்று சொன்னாயல்லவா…? அப்படி எனக்கு அமைந்ததா என்பதை நீ யோசித்தாயா?

அமையாவிட்டால் என்ன? அமைந்ததை ஆசைப்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே? அதுதானே பெண்கள் வழக்கம்…

அப்படியும் முயற்சி செய்து பார்த்தேனே…என்னால் முடியவில்லை…

இங்கேதான் நீ உன் மனசாட்சியைக் கொல்கிறாய்…உன்னைத் தூக்கி வீச வேண்டியதுதான் இனி பாக்கி…

என்ன சொல்கிறாய் நீ…

என்னிடம் பொய்யுரைக்காதே…இந்த ஜன்னலுக்கு நேரே எது தெரிகிறது…அந்தத் தெரிதலின் மூலமாய் தினமும் என்ன நடக்கிறது என்பதை நான் அறிவேன்…நேர் எதிர் இரண்டாவது மாடி வீட்டின் அந்த அவன் அத்தனை நல்லவனல்ல…அவன் ஏற்கனவே தன் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருப்பவன்…இப்பொழுது உன்னையும் ஏமாற்றத் தயாராகிக் கொண்டிருக்கிறான்…நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமும் நீ அதற்கு இடமளித்துக் கொண்டிருக்கிறாய்…

என் வாழ்க்கையில் இதுநாள்வரை நான் எந்த உடல் சுகத்தையும் காணாதவள் என்பதை அறிவாயா நீ…?

அதற்காக…?

அவன் என்னை விரும்புகிறான்…என் கூந்தல் அவனுக்குப்பிடித்திருக்கிறது.அதை ரசிக்கிறான். அந்த ரசனையை நான் விரும்புகிறேன். அந்தக் கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக் கொள்கிறான்… அதன் மணத்தை நுகர்கிறான். தன்னை மறக்கிறான்…படுக்கையில் அதனை விசிறிப்போட்டு, அதன் மேல் படுத்து உருளுகிறான்…என் பின் பக்க பிருஷ்ட பாகத்தின் கீழும் அது தழைந்து தொங்குவதைக் கண்டு அவன் எனக்கு அடிமையாயிருக்கிறான்…அப்படி ஒருவனை அடிமைப்படுத்துவது எனது ஆதங்கத்திற்கு இதமளிப்பதாக உள்ளது. அங்கேதான் என் மனம் ஆறுதல் கொள்கிறது. என்னால் இந்த இளமையின் விரகதாபத்திலிருந்து மீள முடியவில்லை. அதைப் புரிந்து கொள்வாருமில்லை. என் வாழ்க்கையின் போக்கில் நான் தனியளாக்கப்பட்டுள்ளேன்…புத்தி பேதலித்த என் கணவர் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை…அவரின் புத்தி அப்படி பேதலிக்கும் அளவுக்கு நான் காரணம் என்று கருதவில்லை. எல்லாம் என் தலையெழுத்து…இந்த அழகினால் எனக்கு இதுநாள்வரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை. இத்தனை ஆண்டுகாலம் கழித்து இப்படி ஒருவன் வந்து என் மனசைச் சலனப்படுத்துகிறான்…அவனிடம் நான் மெல்லமெல்ல அடிமைப்பட்டுவிட்டேன்…என்னையறியாமல்என்னைக்கொடுத்துவிட்டேன்…எல்லோரும்என்னை விட்டுப் போய்விட்டார்கள். நல்லவைகளெல்லாம் என் கூட இருந்தபோது அவற்றின் மகிமையை நான் உணரவில்லை…தற்பொழுது இந்த நிலையில் எனக்குக் கிடைத்த ஒரே ஆறுதல் அந்த எதிர்வீட்டு அவன்தான். அவன் எனக்கு வேண்டும். ஒரு ஆணையாவது காலடியில் கிடத்தினேன் என்கிற பெருமை வேண்டும் எனக்கு. அழிந்து கொண்டிருக்கும் என் அழகினுக்கு நான் சாவதற்குள் பெருமை சேர்க்க வேண்டும். இந்த அழகை நான் இதுநாள்வரை மதித்து வந்திருக்கிறேன்…அதனால் நான் பெருமை பெற்றிருக்கிறேன். அதை நான் பெருமைப் படுத்தியதேயில்லை…இப்பொழுது நான் செய்வது பாவமாக எனக்குத் தோன்றவில்லை. என்னை விட்டு எல்லோரும் போய் விட்டார்கள். நான் தனியளாக்கப்பட்டுள்ளேன்…நான் விரும்பிய வாழ்க்கை கிடைக்காததால் இந்த வாழ்க்கையை நான் பழி வாங்கத் துணிந்து விட்டேன்…அதற்கு அவன் சிக்கியிருக்கிறான். அவனை நானாக வரச் சொல்லவில்லை. அவனாக வந்து என் வலையில் விழுகிறான். என்னை ஆராதிக்கிறான். என்னை, என் அழகைப் பூஜை செய்கிறான்…அவனின் அழகு என் மனதுக்கு உகந்ததாகவும் இருக்கிறது. முடியுமானால் அதை நீ தடுத்துக் கொள்…நீ என்ன அதீத சக்தியா? இல்லை கடவுளா? என்னை மிரட்டிப் பார்ப்பதற்கு…

உன் உளறலுக்கு ஏமாற நான் தயாரில்லை…இனி உன்னை விட்டு வைப்பது பாவம்…உன் கணவனின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்…அவன் என்னோடு கலந்த பிறகும் இன்னும் நிம்மதியில்லாமல் அலைகிறான். உன்னையே சதா நினைத்துக் கொண்டிருக்கிறான். நீ கிடைக்காமல் போனதில் பெருத்த ஆதங்கம் அவனுக்கு. அவனை ஆற்றுவது என் கடமை. அவன் என்னின் குழந்தை. என் ஆத்ம சொரூபமான பிம்பம்….அவன் சாந்தி பெற வேண்டும்…சாந்தி பெற வேண்டும்…

ஐயோ…அம்மா….வலிக்கிறதே…யாரேனும் வாருங்களேன்…வந்து என்னை இந்த ராட்ச்சசனிடமிருந்து காப்பாற்றுங்களேன்…அடச்…சீ…விடு என் ஜடையை…யாரது இப்படி இழுப்பது? விடு….விடு…..விடு என்னை……என்ன? நீங்களா…? நீங்கள் எப்படி இங்கே….?இதென்ன கோலம்…எப்படி வந்தீர்கள் வீட்டிற்குள்? கதவைப் பூட்டித்தானே வைத்திருந்தேன்…எப்படித் திறந்தீர்கள்?...அடடா….எதிர் வீட்டில் கூட யாருமில்லையே…உதவிக்குக் கூப்பிடுவதற்கு….யாருமில்லாத இன்றுதான் வசதி என்று நினைத்தேனே…இப்பொழுது என்னென்னவோ நடக்கிறதே…நீங்களா…நீங்களா… உங்களின் ஆசை மனைவியல்லவா நான்…என்னை விட்டு விடுங்கள்…புண்ணியமாய்ப் போகும் உங்களுக்கு….நான்தானே வேண்டும் உங்களுக்கு…இதோ நிற்கிறேன் நான்…எடுத்துக் கொள்ளுங்கள்…முழுமையாக எடுத்துக் கொள்ளுங்கள்…சர்வமும் எடுத்துக் கொள்ளுங்கள்…எனக்குப் பூரண சம்மதம்…என்னை விட்டு விடுங்கள்…என்னைக் கொன்று விடாதீர்கள்…கொன்று விடாதீர்கள்…..

புலம்பித் தவித்தவாறே மெல்லக் கண்களைத் திறக்க முயற்சித்தாள் நந்தினி…ஜன்னல் வழியாக அந்த மரத்தின் நீண்ட கைகள் வளைந்து நெளிந்து இவளை நோக்கி முன்னேறிக் கொணடிருந்தன… உடம்பு தெப்பமாக வியர்த்திருப்பதை அப்போதுதான் கண்ணுற்றாள். மேலே காற்றாடி பேயாய்ச் சுற்றிக் கொண்டிருந்தது. எந்த நொடியிலும் அது தன் மேல் விழுந்து விடுமோ என்று உடம்பு பதறியது அவளுக்கு. ஜன்னல் வழியாக நீண்ட கைகள் அந்த அறையைத் தாண்டி அவள் படுத்திருக்கும் அந்த இடத்தை அடைந்தபோது அதன் வலுவான கரங்கள் அவள் கூந்தலைக் கொத்தாகப் பிடித்து இழுத்தபோது அவள் தன்னிலை மறப்பதை மெல்ல உணர ஆரம்பித்தாள்…

பொழுது புலர்ந்து கொண்டிருக்கும் இருட்டு முழுதும் கலையாத குளிர்ந்த வேளையில் அந்த அடுக்குமாடிக் கட்டடத்தின் நேர் வாசலின் பாதையை மறைத்த வாக்கில் நந்தினியின் சடலம் தலை குப்புறக் கிடந்தது.

எதிர் மரத்தின் உச்சிக் கிளையின் விரிந்த கைகள் கீழும் மேலுமாக நிற்காமல் வெகு நேரமாக ஆடிக் கொண்டிருந்த்து. காற்று துளிக் கூட இல்லாத அந்த விடிகாலைப் பொழுதில் சுற்றிலும் உள்ள ஏனைய நிழல் தருக்களெல்லாம் சற்றும் அசைவின்றி வரைந்து வைத்த ஓவியம் போல் நின்று கொண்டிருக்கையில் இந்த விருட்சத்தின் இந்தக் கிளைக்கு மட்டும் எங்கேயிருந்து காற்றுக் கிடைத்து, எப்படி இது தன்னை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரியாத நோக்கில் எவரும் கவனித்து உணரத் தலைப்பட்டிருக்கவில்லை.

பொழுது நன்றாகப் புலர்ந்த வேளையில் நந்தினியின் சடலம் அந்தக் குடியிருப்புப் பகுதி மக்களின் கண்களில் பட ஆரம்பித்த போது . அந்த மாய நிகழ்வின் ஒப்புக்கொள்ளத் தக்க உண்மையாக யாரும் எதிர்பாரா வண்ணம் ஒரு போலீஸ் வேன் சரேரென்று அங்கே வந்து நின்றது.

------------------------------------------

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...