சிறுகதை தாய்வீடு ஜூலை 2026 பிரசுரம்
“தவறு என்பது தவறிச் செய்வது…!”
எதிர்த்தாற்போல் நாற்காலியைப்
போட்டுக்கொண்டு அதையே பார்த்துக்கொண்டிருந்தார் நாகசாமி. கலைந்து கிடந்த செய்தித் தினசரிகளைப் பிரித்து அடுக்கிக்கொண்டிருந்தான் அவன். அடுக்க அடுக்க அந்த வரிசை தந்த
அழகு இவருக்குப் பிடித்திருந்தது. எதையுமே ஒழுங்காகச் செய்தால் அது எத்தனை அழகு
பெறுகிறது? ஒரு விஷயம் சீராக
இருப்பதில்தான் என்ன ஒரு கம்பீரம்?
"உங்க கடைல பார்த்திருக்கேன்
அமாவாச...சைடு ரேக்குல பேப்பர்களக்
கட்டிக் கட்டி நீங்க அடுக்கியிருக்கிற ஒழுங்கிருக்கே அந்த அழகே தனி.
கோடு போட்டமாதிரி ஓரமெல்லாம் கரெக்டா நிக்க, கட்டி ஏத்தியிருக்கீங்களே...அத எவனும் கவனிக்காம
இருக்க முடியாது! படு சுத்தமால்ல இருக்கு
உங்க கடை வேலை...?" "சுத்தம்ங்கிறதவிடங்கய்யா அப்டி வச்சாத்தான் அந்தப் பத்துக்குப் பத்து ரூம்ல நிறைய வைக்க முடியுமுங்க...கடைக்குள்ளார வந்து பார்த்தீங்கன்னா தொியும். மேலே உத்திரத்துல இடிக்கிறவரைக்கும்
அடுக்கியிருப்போம். மூட்ட மூட்டயா இப்டி வாங்கிட்டுப் போறோம்ல, அதக்கொண்டு எறக்கினவுடனே காசக் கொடுத்திறமாட்டாரு மொதலாளி...எடையப்போட்டு அடுக்கிட்டுப் போடாம்பாரு...இல்லன்னா ஒரு ஒழுங்குக்கு வராதுங்க...கம்பனிக்கு அனுப்பறவரைக்கும் நாங்கதாங்க பொறுப்பு. எங்க எல்லாரையும் கட்டி
மேய்க்கிறதே பெறும்பாடுங்க அவுருக்கு..." "ஏன் அப்டிச் சொல்றே?"-
நாகசாமிக்கு ஆர்வம் மேலிட்டது. நாம் சம்பந்தப்படாத பலவற்றில்
நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்று தோன்றியது. "நாங்க ஏழெட்டுப் பேர் இருக்கமுங்க அவுருக்கு.
எங்க பிடிய விட்ரக் கூடாது முதல்ல. அத விட ஏரியாதாங்க
ரொம்ப முக்கியம். வருமானவாி ஆபீசுக்கு இந்தப் பக்கம் இருக்கிற பகுதி பூராவும் நம்முளுதுதானுங்க...எங்களத் தவிர யாரும் நுழைஞ்சிட
முடியாது. நுழைஞ்சிடக் கூடாதுங்கிறதுல ரொம்பக் கவனமா இருப்பாருங்க. நாங்களெல்லாரும் எல்லா ஏரியாவுக்கும் போயிட்டு வருவோமுங்க...நீங்க நல்லாக் கவனிச்சிருந்தீங்கன்னா தொிஞ்சிருப்பீங்க...தெனந்தெனம் இந்தத் தெருவுல என்னமாதிரிப் பலரும் போறதப் பார்த்திருப்பீங்க...அவுக பூராவும் நம்ம
ஆளுகதானுங்க...பின்னாடி சாக்கக்கட்டிக்கிட்டு அவுக பாட்டுக்கு ராகம்
போட்டுக்கிட்டுப் போய்க்கிட்டேயிருப்பாங்க...யார் போனாலும் வந்தாலும்
நீங்க எங்கிட்டத்தான் போடுவீங்கன்னு ஒண்ணு இருக்கு...அது வேற விசயம்...அதுதான சார் பழக்கமுங்கிறது?" "அப்றம் எப்டி அமாவாச...வேறே ஆள்ட்டயா போடுறது?
எனக்கு நீங்கதான் வரணும்...வீட்டுல கூட அவசரப்படுத்துவாங்க..யார்ட்ட போட்டா
என்னன்னு? எடம் ஒழிஞ்சாச் சாிங்கிறது
அவுக சொல்றது...ஆனாலும் .நான் மாட்டனே...நீங்க
வரட்டும்னுதான் சொல்லுவேன்..." அமாவாசையின்
முகத்தில் ஒரு பெருமிதமும், சந்தோஷமும்
படர்வதைப் பார்த்தார் நாகசாமி. வெறும்
பெருமைக்காகவோ, மெப்பனை யாகவோ வந்த வார்த்தை அல்ல
அது. ஆத்மார்த்தமாய் வந்தது. அதே போலத்தான் மற்றவர்களுக்கும்
வாடிக்கை வீடுகள் இருக்கும்
என்பது அவனுக்குமோ அல்லது தனக்கோ தொியாததல்ல. ஆனாலும் அந்தப் பகுதிக்கு வீடு கட்டிக் குடி
வந்தது முதல் அமாவாசையிடம்தான் போடுகிறார் அவர். அவரை ஈர்த்தது அவன்
கொடுக்கும் குரல்.
ஒவ்வோரு தொழில் செய்பவாிடத்திலும் ஒவ்வொரு வகையிலான தன்மை என்பது இருக்கத்தான் செய்கிறது. அதை அவர்கள் விடாமல்
கடைப்பிடிக்கிறார்கள். அதுதானே? அந்த வீதியில் காய்கறி
விற்பவாிலிருந்து பால், பேப்பர், பிளாஸ்டிக் சாமான்கள், உப்பு, கோலப் பொடி, வெங்காயம், தேங்காய், ஐஸ்கிரீம்,என்று பலதையும் விற்றுக் கொண்டு வரும் ஒவ்வொருவாிடமிருந்தும் ஒவ்வொரு விதமான ஒலி அழைப்பினைக் கண்ணுற்றிருக்கிறார்
இவர். தங்களை,
தங்கள் வரவினை அடையாளப்படுத்துவதற்காக. அத்தனையும் ரசனைக்குரியவைதான். எல்லாவற்றிலும் ஏதோ ஒரு ராகத்தின்,சங்கீதத்தின் இழை தொற்றிக் கொண்டு
மிதப்பதாகவே தோன்றும் இவருக்கு. "மீனு,,,மீனோய்...மீனு...மீனோய்...கெண்ட...கெளுத்தி...இரா...அயிர மீனோய்...." "அய்யய்ய...என்னங்க இது? இதெல்லாம் வருது
இங்கே? உவ்வே..." அந்த வார்த்தைகளுக்கே வாயிலெடுத்து
விடுவாள் போலிருந்தது. முன்பிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மூன்றாம் தளத்தில் இந்த மாதிரிச் சத்தமெல்லாம்
கேட்டதில்லை அவள். "கெளசல்யா, சுப்ரஜா,
ராம பூர்வா, சந்யா.. ப்ரபப்ததே....உச்சிஷ்ட நரசாம்...".என்பதோடு சாி. பக்கத்து வீட்டுச்
சத்தம் கூட காதில் விழ
வழியில்லை. அதுதான் தனித் தனிப் புறாக் கூண்டுகள் ஆயிற்றே? "வீதின்னா எல்லாமும் வரத்தான் செய்யும்...எல்லாரும் கலந்துதானே குடியிருக்கோம்..." பட்டுப் பட்டென்று சன்னல் கதவுகளைச் சாத்துவாள் நாகலட்சுமி. "என்ன...என்னாச்சு?"
என்பார் இவர் பதறிக்கொண்டு. "உங்களுக்கு மூக்குப்பொடி போட்டுப் போட்டு மூக்கே அடச்சுப் போயாச்சு...எந்த வாசனையும் தொியறதில்லே...வீடம்புட்டும் ஒரே பொடி நாத்தம்...முதல்ல அத நிறுத்தப் பாருங்க...இந்தக் காலத்துல யார்தான் இப்டிப் பொடி
போடுறாங்க…நேஸ்டி உறாபிட்…. "சாி..சாி...முயற்சி
பண்றேன்...அதுக்கு ஜன்னல எதுக்கு சாத்துவானேன்? "பக்கத்து
வீட்ல ஏதோ என்.வி.
சமைப்பாங்க போலிருக்கு...ஒரே நாத்தம் தாங்க
முடியலை...ஜன்னல்கிட்டப் போய் மூக்கை வச்சுப்
பாருங்க...அப்பவாவது வாடை தொியுதா பார்ப்பம்..." "அதுக்கென்ன பண்றது? எல்லாந்தான் இருக்கும்...அப்டிப் பார்த்தா உன் பேர்லயும் என்
பேர்லயும் இருக்கே நாகம்...அதையே உரிச்சு சமைச்சு சாப்பிடறவா இருக்கா தொியுமோல்லியோ...உணவே கிடைக்கலேன்னு வச்சிக்கோ...மனுஷன மனுஷனே அடிச்சிக் கூடத் தின்னுடுவான்...நடந்த கதையெல்லாம் இருக்கு...உட்கார்ந்து கேட்கறியா...சொல்றேன்..." "போதும்...இப்டித்தான்
எதுக்கோ எதையோ சொல்ல ஆரம்பிச்சிடுவீங்க...உங்க ஜெனரல் நாலெட்ஜ்
எல்லாம் உங்களோடவே வச்சிக்குங்க...எனக்கு வேண்டாம்..."
நாகசாமிக்கு நாகலெட்சுமி
என்ற பெயரேபிடித்துப்போய்த்தான் கல்யாணம் கட்ட சம்மதித்தார். "நீ பார்த்திட்டீல்ல...நீ பார்த்திட்டீல்லம்மா...முடி...கல்யாணத்த
முடிங்கிறேன்..." என்று படிக்காத மேதை
ரங்கன் பாணியில்தான் அவர் சம்மதம் தொிவித்தார்.
அதை
நினைவு கூறும் தன் தந்தையை அடிக்கடி
நினைத்துக் கொள்வார் இப்போது. "அது எப்படிரா...சம்மதிச்சே?
நாங்கூட ஒங்கம்மாவ அவளுக்கே தொியாம அடிக்கடி கோயிலுக்குப் போயிப் பார்த்துத்தான் உறுதி செஞ்சேன்...எம் பிள்ள நீ
இப்படியிருக்கியே?" "நா உங்களப் போலல்லப்பா...எங்க அம்மாவப் போல...அவுங்க உங்களையே சம்மதிச்சிருக்காங்களே...அதுக்கு மேலயா?" "அடி செருப்பால...திமிரெடுத்த பயலே...'" "விடுங்க...அவனென்ன உண்மையைத்தானே சொல்றான்...அதுக்கேன் உங்களுக்கு இம்புட்டுக் கோவம் வருது..." "கோபமில்லடி கோபமில்ல...எல்லாம் ஒரு விளையாட்டுத்தான்...அவன் என்னைக்
கேலி பண்றதுனால நானென்ன குறைஞ்சா போயிடப்போறேன்? அது ஒண்ணுமில்லே...என்
கோபமெல்லாம் உன்னைக் கல்யாணம் பண்ணின அன்னியோட போயிடுச்சு...பையன் தோளுக்கு மேலே என்னிக்கு வளர்ந்தானோ
அன்னைக்கு சுத்தமா வடிஞ்சு போச்சு..." "பரவால்ல...அப்படியாச்சும் ஒரு நல்லது நடந்திருக்கே..."
நாகலெட்சுமியோடு பேசும்போதெல்லாம் சுவாரஸ்யம் பிய்த்துக்கொண்டு போகும் இவருக்கு. பொதுவாக ஒரு வீட்டில் உள்ள
ஆம்பிளைகளுக்குத்தான் நகைச்சுவை உணர்வு உண்டுன்னு பார்த்திருக்கேன், கேள்விப்பட்டிருக்கேன்...இங்க நீயே இந்தப்
போடு போடுறியே..." என்று மனைவியின் வாத்சல்யத்தை வாய்விட்டு அடிக்கடி புகழ்ந்திருக்கிறார் இவர். ஒருவருக்கொருவர் கிண்டலடித்துக் கொள்வதைப் பார்த்து பையனே
விழுந்து விழுந்து சிரித்திருக்கிறான். 'சர்தான், ரொம்பக் கேலிக்கூத்தான குடும்பம் போலிருக்கு...' என்று அதையும் ஒரு மூன்றாம் நபர்
சொல்வதைப் போலவே சொல்லிச் சிரித்துக் கொள்வார் இவர். 'எனக்கு மட்டும் நகைச்சுவையுணர்வு இல்லையென்றால் என்றோ நான் தற்கொலை செய்து
கொண்டிருப்பேன்' - சொன்னார் மகாத்மாகாந்தி. அந்த உணர்வு மனசை
எவ்வளவு லேசாக்கி விடுகிறது? வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்.
எவ்வளவு அழகாய்ச் சொல்லி வைத்திருக்கிறார்கள். இந்தச் சிரிப்பு என்கிற மா மருந்துதான் தன்னை
இதுநாள்வரை நோய் அற்றவனாக நிறுத்தி
வைத்திருக்கிறதோ என்னவோ? "அப்பா, நீங்க சிரிச்சா பழைய புராணப்படங்கள்ல வர்ற
ராட்ச்சசன் மாதிரியே இருக்குப்பா..." - ஒரு நாள் சொல்லியே
விட்டான் பையன். அதுநாள் வரை சொல்ல முடியாமல்
மனதுக்குள்ளேயே வைத்திருந்தான் போலிருக்கிறது. கொஞ்சம் ஓவர்தான் என்று தோன்றியது இவருக்கு. ஆனாலும் சமாளித்துக் கொண்டார் உடனே. "நீ உங்க தாத்தா,
கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா சிரிப்பெல்லாம் பார்த்ததில்லையே...காண்பிக்கிறேன் பாரு..." என்றார். சொன்ன கையோடு உள்ளே டிரங்குப் பெட்டிக்குள் பாட்டி கையால் பத்திரப்படுத்தி வைத்திருந்த இரண்டு மூன்று புகைப்படங்களை எடுத்துக் காண்பித்தார். காண்பிக்கும் முன் ஒரு கண்டிஷன்
போட்டார். போட்டோவைப் பார்த்துப் பயந்து கொண்டால்,தான் பொறுப்பில்லை என்று.
"என்னப்பா இது!
அனிமல்ஸ் மாதிரியே இருக்காங்க எல்லாரும்..." என்றான் எடுத்த எடுப்பில். என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும் என்று அமைதி காத்தார் அவர். "எவ்வளவு பொிய மூக்கு, எவ்வளவு
பொிய மண்டை, எவ்வளவு பொிய காது, எவ்வளவு
பொிய கண்ணு, அடேங்கப்பா...என்னப்பா இது பல்லெல்லாம் இம்புட்டுப்
பொிசா இருக்கு? அப்பாடீ...!!" "வாய் விட்டுச்
சிரிக்கிறார் பாரு, அதான் உங்க தாத்தாவாக்கும்...என்
கல்யாணம் முடிஞ்சு உறாய்யா உட்கார்ந்து தாம்பூலம் தாிக்கிற நேரம் அது...வெத்தலைச் செல்லத்துல எம்புட்டு வெத்தல இருக்கு பார்த்தியா? அதுகூட கனக் கரெக்டா விழுந்திருக்கு
பாரு..." "ஆடு கொழை தின்ன
மாதிரி வச்சுத் திணிப்பாங்க போலிருக்கு..."
"கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அப்பா சிரிச்சிருந்தார்னு
வச்சிக்கோ...நிச்சயம் நானும் இங்க இருந்திருக்க மாட்டேன்...நீயும் வந்திருக்க மாட்டே...என்ன பண்றது? எல்லாம்
தலவிதி...லிபி...நெத்தில அழுத்தமாத்தான் எழுதியிருக்கு...இப்படிக் குப்பை கொட்டணும்னு..." மூவரும் அன்று வாய்விட்டுக் கைகொட்டிச் சிரித்தனர். எப்பொழுதும் அப்படிச் சிரித்துக்கொண்டேயிருந்தால் போதுமா? ஆக வேண்டிய காரியங்கள்?
"இப்டீ சேர்த்து
வச்சிட்டேயிருந்தா என்னைக்குத்தான் இந்தக் குப்பைகளையெல்லாம் ஒழிக்கிறது? எவ்வளவு தூசி அடையறது? இதையெல்லாம்
ஒழிக்கப்படாதா? "
- ரொம்பவும் சங்கடப்பட்டு நச்சு நச்சென்று தும்மித் தீர்த்தாள் நாகலெட்சுமி. அவளின் கோரிக்கையை நிறைவேற்றும் முகத்தான் காரியம் ஆகிக் கொண்டிருக்கிறது இப்போது! "சாிங்கையா...சொல்லுங்க...நிறுக்கட்டுமா...இல்லே இப்டியே ஒரு ரேட் போட்டு
எடுத்துக்கவா...?"
"நிறுக்கறதுக்கு என்ன குவிஞ்சா கெடக்கு?
என்ன ஒரு ஆரேழு மாசம்தானே
ஆகும்? " "இல்லீங்கய்யா...ரெண்டு மூணு மாசம் கூட
ஆகலைன்னு நினைக்கிறேன்...பேப்பர் அளவைப் பார்த்தா எனக்குத் தொியும்ல...அஞ்சு கிலோ கூடத் தேர்றது
கஷ்டம்ங்க..." "சாி...எடுத்துக்குங்க..." - சொல்லியவாறே அடுப்படியில் ஒரு பையில் சேர்த்து
வைத்திருந்த பால் பைகளையும் கொண்டு
வந்து போட்டார். இப்படி அவன் வரும்போது ஒழித்தால்தான்.
வேறு என்னவெல்லாம் கழிக்க வேண்டும் என்று நாகுவுக்குத்தான் தொியும். "கொஞ்சம் இரு வந்திர்றேன்..." என்று விட்டு
மாடியைப் பார்த்து ஓடினார். சற்று மிரண்டு பார்க்க ஆரம்பித்தான் அமாவாசை. "இருங்க...இருங்க...வேட்டை...ஸ்லாப்பைமூடிடாதீங்க...நா பார்க்கணும்..." அங்கே தண்ணீர் தொட்டியைக் கழுவிக் கொண்டிருந்த வேட்டையனைத்
தடுத்தார் நாகசாமி. "நீங்க பார்க்காம
மூட மாட்டேங்கய்யா..." "மதியம் மூணு மணி வரைக்கும்
தொட்டி திறந்தே இருக்கட்டும்...சூரிய ஒளில அப்பதான் அந்த
மக்கு வாடையெல்லாம் போகும்...சுண்டக் காயட்டும்..." "அப்போ இப்பத் தண்ணி ஏத்தலீங்களா...?" "ஊஉறீம்...நல்லாக்
காய்ஞ்ச பின்னாடிதான்..." "நீ வேணா ஏத்திக்கோ...காசு தர்றேன்..." வாய்
நுனிவரை வந்ததை அடக்கிக் கொண்டார். இந்த அதீத நகைச்சுவையுணர்வு
பல சமயங்களில் அதிகப் பிரசங்கித்தனமாகப் போய் விடுகிறது. தண்ணி
போடும் பழக்கம் அவனுக்கு இருக்கும் என்றாலும் அதைத் தான் சொல்வது எப்படிச்
சரியாகும்? தன் வீட்டுக்கு வேலைக்கு
வரும்போது அப்படி வந்து நின்றால் 'இப்டியெல்லாம் வரக்கூடாது' எனலாம். உடம்பை ஏன் கெடுத்துக்கிறே? என்று
அட்வைஸ் பண்ணலாம். ஆனால் வேட்டையன் அப்படியில்லையே? தன்னிடம் எத்தனை மாியாதை அவனுக்கு? "அய்யா, நீங்களெல்லாம்
இருந்தபோது கிடைச்ச மாியாதயெல்லாம் இப்ப சுத்தமா இல்லைங்க...ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுறாங்கய்யா...எல்லாமே தலை கீழா மாறிக்
கெடக்குதுங்கய்யா..." "ஏன் அப்டிச் சொல்றே?"
- அக்கறையோடு கேட்டார் இவர். "என்னத்தங்கய்யா சொல்றது?
டூட்டி நேரத்துல ஆபீசரே தண்ணியப் போட்டுட்டு வந்து உட்கார்ந்தா வெளங்குமாங்கய்யா...? பொம்பளைங்கல்லாம் ரொம்பப் பயப்படுறாங்கய்யா...அவர் ரூமுக்குள்ள போமாட்டேங்கிறாங்க...நீங்க இருக்கைல எல்லாத்தையும் வெளக்கிச் சொல்லி நீங்களே அம்புட்டையும் வாங்கிப்புடுவீங்க...இப்பல்லாம் அதில்ல...கொண்டு வையுய்யாங்கிறதோட சாி...கையெழுத்தாகி வந்த அன்னிக்குத்தான் நிச்சயம்..என் ஜி.பி.எப். போட்டு இருபது
நாளாச்சுங்கய்யா...இன்னும் காசு கைக்கு வந்தபாடில்ல...என் மவளுக்கு ஒரு
மாப்ள பார்த்திருக்கேன்யா...பாிசம் போட்டுடலாம்னு பார்த்தா பைசா கைக்கு வரமாட்டேங்குது...நாள் குறிக்க முடிலங்கய்யா...அதுக்குத்தான் சொன்னேன்...நீங்க வெளியேறைல என்னையும் தயவுசெஞ்சு வெளியேத்திடுங்கன்னு...நீங்க செய்யாமப் போயிட்டீங்க..."
வேட்டையனுக்கு
ஒரு மாறுதல் வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்பதில் நாகசாமிக்கும் வருத்தம் உண்டு. ஆள் இல்லாமல் அவன் குடும்பம் பாிதவிக்குமே
என்ற எண்ணம்தான் இவருக்கு. தனக்கு அவ்வப்போது வந்து வீட்டு வேலை செய்வது தடை
படுமே என்ற எண்ணமிருக்குமோ
என்று அவனாகவே நினைத்துக்கொண்டு அதையும் வாய்விட்டுச் சொல்லி விட்டான். "லீவுல வந்து
செய்து கொடுக்கிறேன்யா...அதப்பத்தியெல்லாம் நீங்க ஒண்ணும் நினைக்க வேண்டாம்...அதுக்கு நா பொறுப்பு..." என்று வேறு
சொல்லிக் கொண்டான். தனக்கு வந்து செய்வதைவிட வேறு ஆம்பிளை இல்லாத
அவன் குடும்பம் கஷ்டப்படுமே என்ற ஆதங்கம்தான் இவாிடம்
பெருகி நின்றது. வாழ்க்கையில் கஷ்டத்தை உணர்ந்தவனுக்குத்தானே மற்றவர்கள் கஷ்டத்தையும் உள்வாங்க முடியும்? "சாி, வாங்க...கீழே
போகலாம்..." சொல்லிவிட்டு இறங்கினார் இவர். சுற்றிலும்
கூட்டி சுத்தம் செய்து செடி கொடிகளை முறைப்படுத்தி
தண்ணீர் இறங்கப் பாத்தி கட்டி, சலிக்காமல் ஒவ்வொன்றுக்கும் ரெண்டு வாளித் தண்ணீராவது ஊற்றி அழகு பார்த்திருந்தார் வேட்டை.
அப்பப்பா! வேட்டையன்
ஒரு முறை வந்து போனால்
வீடு எவ்வளவு திருத்தமாகி விடுகிறது? கொல்லைப்புறம்
சென்று வாளியில் கிடந்த தண்ணீரில் கை, கால் கழுவ
ஆரம்பித்தார் வேட்டையன். வாசலில்
அமாவாசையை அனாவசியமாய் காக்க வைத்து விட்டோமே என்கிற ஆதங்கத்தில் - "நேரமாயிடுச்சா...நீங்க பல எடத்துக்குப் போறவரு...உங்களக் காக்க வச்சிட்டனே..." என்றார். "இருக்கட்டுங்கய்யா..."சொல்லியவாறே நிறுக்க ஆரம்பித்தான் அமாவாசை. "எதுக்கு? நாந்தான்
வேணாம்னல்ல...!" தூக்கிப் போடுங்க சாக்குல..." என்றார் இவர். அமாவாசையின் முகத்தில் மெல்லிய புன்னகை. இதற்குள் நாகு எதை எதையோ
கொண்டுவந்து போட்டிருந்தாள் அங்கே. காலி அட்டைப் பெட்டிகள்,
பாட்டில்கள், டப்பாக்கள், உடைந்த பைப்கள், இரும்புகள், பழைய செருப்புகள்...என்று
என்னென்னவோ இருந்தன. "இதுக்கு, இந்தப் பால் பாக்கெட்டுகளுக்கு, எல்லாத்துக்கும் சேர்த்து
ஒரு ரேட் போட்டுக்கிறேன்யா...பேப்பர் ஆறு
கிலோ வருதுங்கய்யா வேறே
ஏதாச்சும் இருக்குங்களா...?" "அவ்வளவுதான் அமாவாச...ஒரு நாளைக்கு பரண்
மேல இருக்கிறதெல்லாம் ஒழிக்கணும்...என்னால ஒத்தையா முடியாது...எனக்கு தூசியும் ஆகாது..." "உங்களுக்கு என்னைக்குத் தோதுப் படும்னு சொல்லுங்கய்யா,...அன்னைக்கு சாி பண்ணிடுவோம்..." - சொல்லியவாறே அவன்
நீட்டிய காசை வாங்கிக் கொண்டார்
நாகசாமி. "நீங்க வந்து எடுத்துக்கிட்டதே பொிய விஷயம்...ரெகுலரா
வர்றீங்க பாருங்க...அதான் வேணும்...காசு பொிசில்லை...இந்தாங்க
பிடிங்க...-ஒரு இருபது ரூபாயை
எடுத்து நீட்டினார் நாகசாமி. டீ சாப்பிடுங்க…என்றார். "இருக்கட்டுங்கய்யா..." என்றவாறே மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டான் அமாவாசை. வெளியே நின்ற சைக்கிளில் சாக்கு மூட்டையை வைத்துக் கட்டும் சத்தம். அதைத் தொடர்ந்து "போயிட்டு வர்றேங்கய்யா..." "இந்தா பிடி..." கையிலிருந்த காசை நாகுவிடம் நீட்டினார்
நாகசாமி. "என்னாச்சு...இவ்வளவுதானா?" "ஆம்மா...வேறே எம்புட்டு வரும்...இது ஒரு காசா...இதையும் அவன்ட்ட வாங்கணுமான்னு இருக்கு எனக்கு...எத்தனையோ வீடுகள்ல பழைய பேன்ட், சட்டைன்னெல்லாம்
அப்டியே தூக்கிக் கொடுத்திடுறாங்க...எடம் காலியானாச் சாின்னு...நாமதான் கணக்குப் பண்ணிகிட்டிருக்கோம்..."
"எல்லாரும் அப்டி இருப்பாங்களா...ஒருத்தர் அப்டீன்னா, ஒருத்தர் இப்டித்தான்...நீங்களும் கணக்குப் பார்க்காம அவனாக் கொடுக்கிறதத்தானே வாங்கிக்கிறீங்க...? எதுவும் கட்டாயப் படுத்திறதில்லையே...?" "இன்னும் அதுவும் வேறே வேணுமா? அப்புறம்
இந்தப் பக்கம் தல வச்சுக் கூடப்
படுக்கமாட்டானாக்கும்...கட்டாயப்படுத்தி அப்டி என்ன கோட்டையா கட்டப் போறோம்? சும்மாத் தூக்கிக் கொடுத்தாலும் நாம ஒண்ணும் குறைஞ்சு
போகப் போறதில்லையே..." வாசலில் திரும்ப கேட் திறக்கும் சத்தம்.
"அய்யா...நா வர்றேனுங்க..." -மாடித் தண்ணீர்த் தொட்டி சுத்தம் செய்து வேலை முடித்த வேட்டையனின்
விடை பெறும் குரல். "கிளம்பியாச்சா...இதோ
வந்துட்டேன்..".என்றவாறே பர்சை எடுத்துக்கொண்டு ஓடினார் நாகசாமி. அதிலிருந்து உருவி நூறு ரூபாயை எடுத்து
நீட்டினார் அவனிடம். "வேண்டாங்கய்யா...இருக்கட்டும்...இதுக்கெல்லாம் காசு வாங்கினா எப்டீ...அம்மா தோச சுட்டுக் கொடுத்தாங்க...நிறையச் சாப்டுட்டேன் அதுவே போதும்..." - சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனை மீறி ஒரு
பொிய ஏப்பம் வந்தது வேட்டையனுக்கு. அடுத்த நிமிடம் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து விட்டார். நாகசாமி அப்படியே திண்ணையில் நின்றிருந்தார். "மனுஷாள்தான் பொிசு...காசா முக்கியம்...? ரெண்டு
மணி நேரமா சாியான வேல அவருக்கு...வீட்டைச்
சுத்தி எவ்வளவு நீட்டாயிடுச்சிபாருங்க...யார் செய்வாங்க நமக்கு...?
காசத் திணிச்சிருக்கப் படாதா? இப்படியா வெறுமே அனுப்புவீங்க...?" -நாகுவின் பளீர் கேள்வி. குற்ற உணர்ச்சி மேலிட பார்க்கவே பாவமாய் பரிதாபமாக நின்று கொண்டிருந்தார் நாகசாமி. சாப்டதே
போதும் என்று திருப்தியோடு கிளம்பிப் போன வேட்டையனின்
பெருந்தன்மையும் மனசும் அவரை வியக்க வைத்திருந்தது..
-------------------------------------- ---------------