“தவறிச் செய்த தவறு”-சிறுகதை - கணையாழி டிசம்பர் 2024
சார்…தொட்டி
நிரம்பி வழியுது…நிப்பாட்டுங்க….-பக்கத்து வீட்டு அம்மாள் கத்திய சத்தம் யார் காதிலும்
விழுந்த மாதிரித் தெரியவில்லை. எல்லோரும் அவரவர் குச்சிலுக்குள் அடைந்து கிடக்கும்போது
எப்படி விழும்.? இவருக்கு மட்டும் விழுகிறதே…அதுதான் துரதிருஷ்டம்…!
மோட்டார்
போட மட்டும் தெரிகிறது எல்லாருக்கும். கீழே போய் வெறுமே ஸ்விட்சைத் தட்டுவதுதானே? அதை நேரம் பார்த்து அணைக்கத் தெரியவேண்டாம்? தண்ணீர்
ஏறுகிறதா, சம்ப்பில் தண்ணீர் இருக்கிறதா? என்று யாரும் பார்ப்பதில்லை. டக்கென்று சுவிட்சை
ஸ்டைலாகத் தட்டுவதோடு சரி. இவர்கள் சொன்னபடி கேட்கிறதாம் அந்த மோட்டார்…! சம்ப்பில்
தண்ணீர் இல்லாமல் பல சமயங்களில் ஏர் லாக் ஆகிவிடும். அந்த சத்தமே அபஸ்வரமாய் இருக்கும்.
அத்தோடு காணாமல் போய் விடுவார்கள்.
ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து
வந்து மோட்டார் மேற்பகுதியில் இருக்கும் குழாய் வழி பொறுமையாய் ஊற்றி அது நீரை நிறுத்துகிறதா
அல்லது கீழே இறக்கிக்கொண்டேயிருக்கிறதா என்று கவனித்து, நிறுத்தி நீர்க் குமிழ்களோடு
மேலாக நின்றால், போய் சுவிட்சைத் தட்டி, தண்ணீர் ஊற்றிய வழி எகிறி அடிக்கிறதா என்று
கவனித்து காற்று அடைப்பை வெளியேற்றி பிறகு மேலே தொட்டியில் தண்ணீர் ஏறுகிறதா என்பதையும்
செக் பண்ணி…அப்பாடா…! என்று ஓய வேண்டும். எவன்
செய்வான் இத்தனையும்?
இவன்தான். வேறு யார்? அதாவது
இவர்தான் செய்கிறார் இன்றுவரை.
நீங்க ஏன் ஓடி ஓடிப் போய்
செய்றீங்க? இளவட்டப் பசங்க எட்டு வீட்டுக்கும் எட்டுப் பேர் இருக்கைல உங்களுக்கென்ன
வந்தது? – மேலேயும் கீழேயும் ஏறி இறங்கி எங்கயாச்சும் விழுந்து, வழுக்கி, காலக் கைய
ஒடிச்சிக்கிறதுக்கா? விலாசினி புலம்பல் அவளோடு.
வெறும் புலம்பலா அது? ஊனமாகிப்
போய் வீட்டுக்கே பாரமாய் அமைந்து விட்டால்? யார் படுவது என்கிற பயம். நியாயம்தானே?
அந்த பயம் இவருக்கில்லாமல் போகுமா?
ஒரு முறை சம்பிரதாயமாய்ச்
சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்து விடுவாள். அவள் வாய் தொடர்ந்து சாமி ஸ்லோகங்களை உச்சரிக்கும்.
அடுப்படிக் காரியத்திற்குத் தண்ணீர் வேண்டுமே?
பாத்ரூம் போனால் குழாய் சொட்டினால்? அடக் கன்றாவியே, வேலை நின்று போகுமே?
மோட்டாரைப் போட்டுவிட்டு
உள்ளே போய் அடைந்து கொண்டால் டி.வி. ஓடும் சத்தத்தில் லயித்துப் போய் எப்படி அணைக்கும்
ஞாபகம் வரும்? அதை ஏன் அப்படிப் பேயாய் கத்த விடுகிறார்கள்? அவர்களுக்கு மட்டும் கேட்டால்
போதாதா? நம் வீட்டுக் கதவைத் திறந்தால் குடி கெடுத்த கதையாய் அலறித் துடிக்கிறது. கொஞ்சமாவது
அறிவு வேண்டாம்? காட்டிலா வாழ்கிறார்கள்? தப்பு…தப்பு…காடு இவ்வளவு கொடூரமாய் இராது.
இனிமை தவழும் இடம் அது!
என் வீடு…என் டி.வி. எப்படியும் வைப்பேன்…! நீ யாரு
கேட்கிறதுக்கு? இது ஒரு மனப்பான்மையா? வீட்டு
நபர்கள் ஒருவருக்குக் கூடவா தோன்றவில்லை? ஒரே
அபார்ட்மென்டில் இருப்பதால் இவர்களோடெல்லாம் பொய்யாய்ச் சிரித்தாக வேண்டியிருக்கிறது.
நட்பு பாராட்டி மகிழ வேண்டிய அவலம்.
மனிதர்கள் பலவிதமாய்த்தான்
இருப்பார்கள், கண்டிருக்கிறது. ஆனால் சொல்லி வைத்தாற்போல் எல்லோருமா மோசமாய் இருப்பார்கள்?
இருக்கிறார்களே? அதற்கு இந்த அடுக்ககமே சான்று.
மாடியில்
ஓவர்ஃப்ளோ ஆகி நல்ல தண்ணீர் வடிந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. மொட்டை மாடியில் தண்ணீர்
வெள்ளம். காசு தண்ணியாக் கரையுது என்பது இதுதானோ? ஒரு லாரித் தண்ணீர் ஆயிரத்து அறுநூறு.
எவன் காசை எவன் வீணாக்குறது? எல்லார் காசும் உண்டு என்றாலும் பங்குப் பணம் வீணாகிறதே?
ஒருத்தனாவது
கண்டுக்கிறானா பார்த்தியா? யாராச்சும் அணைப்பாங்கன்னு இருக்கிறது. இல்லன்னா நமக்கென்னன்னு
கிடக்கிறது. என்ன மனுஷங்க? காசு விரயமாகுறதுபத்தி எவனுக்கும் கவலையில்லையா? எப்படியிருக்கும்?
அதான் அள்ளி அள்ளிக் கொடுக்கிறானே ஐ.டி. கம்பனிலா? -புலம்பிக்கொண்டே கீழே ஓடினார் வாத்சல்யம்.
லிப்ட் இருந்தது. ஆனால் இல்லை. உபயோகமாய் இருந்தால்தானே
உயிரோடு இருப்பதாய் அர்த்தப்படும். அது நின்று மாசக் கணக்காகிறது. அதற்கு ஏ.எம்.சி.
போட (வருடாந்திரப் பராமரிப்புக்கான புக்கிங்) எவனுக்கும் மனசில்லை. அதென்ன வருடக்கணக்காய்
ஓடிக் கொண்டேயிருக்குமா? மனுஷனே ப்ரேக் ஆறான்…மெஷின் ஆகாதா? அதைப் பராமரிக்கத் துட்டுக்
கொடுக்கக் கைவரவில்லை ஒருவனுக்கும். துள்ளித் துள்ளி இரண்டிரண்டு படிகளாய் ஏறுகிறார்களே…இளமைத்
துள்ளல். தன் இளமைக் காலத்தில் தான் இப்படியெல்லாம் குதித்துக் கும்மாளம் போட்டதில்லையே
என்று நினைத்துக் கொண்டார்.
எங்க அபார்ட்மென்ட்லயும்
லிஃப்ட் இருக்குன்னு சொல்லிக்கலாம். ஓடுதான்னு கேட்கப்படாது.
சைடுக்
கம்பியைப் பிடித்துக் கொண்டு படிகளில் பத்திரமாய் இறங்கினார் வாத்ஸல்யம். எப்படி இறங்கினாலும்
ஏதேனும் ஒரு சமயம் வழுக்கி விடுகிறதுதான். ஒன்று செருப்பு வழுக்கி விடுகிறது. அல்லது
தரை வழுக்கி விடுகிறது. அந்த மாடிப்படி சைடு ஜன்னலைச் சாத்தித் திறக்க நாதியில்லை.
மழை பெய்தால் தண்ணீர் உள்ளே சரம் சரமாய்ப் பாய்ந்து படிகளில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது.
லைட் போடவில்லையென்றால் கண்ணுக்குத் தெரியாது. பளிங்கு போல் தெரிந்தால் பார்த்து வைக்கலாமே
பாதத்தை…!
யாருக்கும்
பராமரிப்புப் பற்றி எந்தக் கவலையுமில்லை. வீட்டுச்
சொந்தக்காரன் எவனாவது குடியிருந்தால்தானே? இவர் ஒரு குடும்பம் தவிர மற்ற அத்தனையும்
வாடகை. ம்ம்ம்…தவறு…தவறு…முதல் மாடியில் ஒரு வயதான லேடி.. கவர்ன்மென்ட் சர்வீசில் இருந்து
ஓய்வு பெற்றவர்கள். திருமணம் செய்து கொள்ளாத தனித்துவ ஜீவன்-ஜீவனம். அவர்களுக்கு நடக்க
முடியாமல் போய் எவ்வளவோ நாளாயிற்று. வந்த புதிதில் நடந்து பார்த்தது. இப்போது நாலு
சுவருக்குள் அன்றாடம். நடக்கிறார்களோ, தேய்கிறார்களோ?
ஜன்னல் வழி கயிறு கட்டி குப்பை இறங்கும். மக்கும்
குப்பை, மக்காக் குப்பையெல்லாம் இல்லை.. எல்லாம் ஒரே குப்பைதான். மாதம் நூறு ரூபாயும் அன்பளிப்பாக அந்த வாளியிலேயே
குப்பையோடு குப்பையாய்…மேலாகப் பரிணமித்து
இறங்கி ….அந்தப் பணியாளைச் சந்தோஷப்படுத்தும்.
பால் வண்டி காலை நாலு முப்பதுக்கு
வருகையில் தயாராய்த் தொங்கும் வாளியில் பாக்கெட்டைப் போட்டுவிட்டு நகர்ந்து விடும்.
பிறகு அது தானே மேலே வந்து அந்தம்மாள் கைக்கு எட்டும். அடுக்ககத்தில் இருப்பவர்கள்
அவர்களை வெளி ஜன்னல் வழி ரோட்டில் நின்று பார்த்தால்தான் ஆச்சு. முதல் தளம் கதவு திறக்காது.
செருப்பும் உள்ளேயே கிடக்கும். ஆள் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியாது. அவர்களுக்கு
என்று வந்திருக்கும் தபால்களோ கீழே தபால் பெட்டியிலேயே தூங்கும். எடுப்பதற்கோ எடுத்துக்
கொடுப்பதற்கோ நாதியில்லை. கொடுத்தால் அதன் நிமித்தம் ஏதேனும் வேலை தொடரும் என்கிற பயம்.
அந்த லேடி வேலை வாங்காத ஆளில்லை அந்த அபார்ட்மென்டில். இவரே மாட்டிக் கொண்டு முழித்திருக்கிறார்.
ஒரு நாள் வாத்ஸல்யத்தை உதறிக் கோபமாய் ஒரு
கத்துக் கத்த…உங்கப்பா ஏன் இப்டிக் காட்டுக் கத்து கத்துறார் என்று பையனிடம் கேட்க…அன்றோடு
உறவு முறிந்தது.
அட…அவர்களைத்தான் மெயின்டனன்ஸிலிருந்து
ஒதுக்கியாயிற்று. மிச்சம் ஆறு பேர் என்னவாயிற்று? நா மாட்டேன்…நீ மாட்டேன் என்றால்?
ஒருவனே கிடந்து மாரடிக்க முடியுமா? ஆளுக்கு மூன்று மாசம்தான். ஆனாலும் மூக்கால் அழுகிறார்களே!
இதுக்குத்தான் சொன்னேன்….வாடகைக்கு
வர்றவங்கள்டல்லாம் ஒரு இருபது ரூபாப் பத்திரத்துல கண்டிஷன்ஸை டைப் பண்ணி கையெழுத்து
வாங்கணும்னு. அசோசியேஷன் ஃபார்ம் பண்ணனும்னு. வெறும் எட்டு வீடுதானேன்னு உதறியாச்சு.
அப்பத்தான் மூணு மாசத்துக்கொரு தரம் அவனவன்
பராமரிப்பப் பணிகளைப் பார்ப்பான். நாம மட்டும் கிடந்து மாயணும்னு என்ன தலவிதியா?
தண்ணி லாரிக்குச் சொல்லணும்…மாசா
மாசம் அவனவன் யூஸ் பண்ணின தண்ணி அளவை மீட்டர்ல பார்த்துக் குறிச்சு,கணக்குப் பண்ணி
துட்டு வசூலிக்கணும்… அப்பப்போ சம்ப்ல தண்ணி இருக்கா தீர்ந்து போச்சான்னு பார்த்து
தாமதமில்லாம லாரிக்குச் சொல்லி வர வச்சு சம்ப்பை
நிரப்பணும், ஏர் லாக் ஆகாமப் பாதுகாக்கணும், கார் பார்க்கிங், மாடி, மாடிப்படி, மொட்ட
மாடின்னு ஆள் போட்டுக் கூட்ட வச்சு சுத்தம்
பண்ணனும், ஒட்டடை எடுக்கணும்…அவளுக்குச் சம்பளம் கரெக்டா வசூல் பண்ணிக் கொடுக்கணும்,
எங்கயாச்சும் லைட்டுப் போயிடுச்சின்னா புது பல்பு வாங்கி மாட்டணும், அப்பப்போ கீழ வரும்போது
கேட்கள் திறந்து கிடந்தா கௌரவம் பார்க்காம சாத்திக் கொண்டி போடணும்…அப்பத்தான் தெரு
நாய்கள் நுழை யாது. அசிங்கம் பண்ணாது. எவ்வளவு வேலை கெடக்கு….எல்லாத்தையும் நீ ஒருத்தனே
தூக்கிச் சுமக்கணும்னு விதியா? எழுதி வச்சிருக்கா நமக்கு மட்டும்?
நா என்ன சொல்றேன்னா…தண்ணி
காலியாயிடுச்சின்னு வையி…பேசாமப் போட்டு வச்சிடு…அவனவன் குளிக்கவும் கழுவவும் தண்ணி
இல்லாமக் கஷ்டப்படுவானுங்கல்ல…அப்பத் தெரியும் சேதி….! அவனே தண்ணி இருப்பைப் பார்த்து,
லாரிக்கு ஃபோன் பண்ணட்டும். செய்தா தேய்ஞ்சு போயிடுவாங்களா?
மாடில உப்புத் தண்ணி போர்க்
குழாய் ஒண்ணு மாட்டியிருக்கோம்லப்பா…அதுலேர்ந்து பிடிச்சிக்கிறாங்கப்பா…டெம்ப்பரரியா
யூஸ் பண்ணிக்குவோம்னு…பக்கத்து வீட்ல முப்பதடிதான் போர் போட்டிருக்கான்…இதே போர் தண்ணிதான்.
உப்பில்லாம வருதுங்கிறாங்க…இந்த ஐடியா இங்க அபார்ட்மென்ட் கட்டின பில்டருக்கு ஏன் இல்லாமப்
போச்சு? …அவன யாரு நூறடி, நூத்தம்பதுன்னு போட வச்சது? கண்ண மூடிட்டு நெளு நெளுன்னு
இறக்கிட்டாங்ஞளோ…? கீழே போகப் போக கல்கண்டு மாதிரித் தண்ணி கிடைக்கும்னு நினைச்சிட்டாங்க
போல்ருக்கு? அது கடல் தண்ணி கணக்கா கரிச்சிக் கொட்டுது….!
புலம்பித் தள்ளி என்ன பயன்?
இப்படியேதான் கழிகிறது அபார்ட்மென்ட் குடியிருப்பு நாட்கள். கீழே அந்தம்மா பூச்செடிகளாய்
வைத்தது. அவை பூத்துக் குலுங்குகின்றன. நித்திய மல்லியைத் தவறாமல் யாரோ பறித்து விடுகிறார்கள்.
ஒரே மர்மமாயிருக்கிறது. அந்தச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றுவது யாரென்று நினைத்தீர்கள்?
அந்த லேடியா? வச்சதோடு சரி. இவரல்லவோ நீர் பாய்ச்சுகிறார்.
நாற்று நட்டாயா, களை பறித்தாயா?
நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? என்றா கேட்க முடியும்? அவை வாடுவதில் இவருக்கு
உவப்பில்லை. எனவே கடமையாய் ஊற்றுகிறார். அவற்றோடு அன்றாடம் பேசுகிறாரே, அந்த பாஷை யாரேனும்
அறிவரா? அதற்கெல்லாம் ஒரு ரசனை வேண்டும். அழகுணர்ச்சி வேண்டும். அப்போதுதான் சாத்தியம்.
அவ்வப்போது பாம்புகளைக் கூடப் பார்க்கத்தான் செய்கிறார். அதுபாட்டுக்குப் போகும், வரும்
என்று விட்டு விடுகிறார். யாரிடமும் சொல்வதில்லை. பக்கத்தில் காலி மனை.மரம் செடி கொடிகளோடு
அப்பிக் கிடந்தால் வராமல் என்ன செய்யும்?
பட்டென்று சுவிட்சைத் தட்டி
மோட்டாரை அணைத்தார் வாத்ஸல்யம். அதைக் கூடக் கவனமாய்த்தான், மென்மையாகத்தான் கையாள
வேண்டியிருக்கிறது. இதுவரை எத்தனை ஸ்விட்ச் மாற்றியாயிற்று? ஒரு சுவிட்ச் போனால், தனியே
அதை மட்டும் வாங்கிப் போட முடியாதாம். அந்த போர்டே செட்டாக மாற்ற வேண்டுமாம். என்ன
அநியாயம்? அதுவும் லோகல் கடைகளில் கிடைக்காதாம். பாரிஸ் கார்னர் போயாக வேண்டுமாம்.
அப்போ மத்த ஸ்விட்செல்லாம் வேஸ்டா? இது ஒருவகைக் கொள்ளையாய்த் தெரியவில்லை? எதில்தான் எப்படித்தான் எமாற்றுவார்கள்?
எதனில்தான் ட்யூப்ளிகேட்
இல்லை? எதுதான் அசல்? எல்லாமுமா இப்படி மாறும்? எதில் யாரை எப்படி ஏமாற்றுவது என்றா
யோசிப்பார்கள்? எப்படி தரமான நல்ல சரக்கைக் கொடுப்பது என்பதான சிந்தனைகளெல்லாம் அற்றுப்
போய்விட்டதா? சாதா, ஸ்பெஷல் என்று சொல்லியே பலவற்றில் ஏமாற்றி விடுகிறார்களே? ஏமாற்ற
ஆரம்பித்த பிறகு மக்கள் ஏமாறினார்களா? அல்லது மக்கள் ஏமாறத் தயாராய் இருந்தபோது ஏமாற்ற
ஆரம்பித்தார்களா? எது முன்னே, எது பின்னே? எதற்காக இந்த உலகம் இப்படிப் பொய்யும் புரட்டுமாய்
மாறிப் போனது? நல்லது என்பதே கண்ணில் கிட்டாது போலும்? எதைத் தொட்டாலும் சந்தேகம் வருவது
போல் ஆக்கி விட்டார்களே? எல்லாவற்றிலும் குறுக்கு வழியைக் கண்டு பிடித்து, அதுவே நடைமுறை
என்று ஆக்கி விட்டார்களே படுபாவிகள்?
ஏர் லாக்கிலேயே கவனிக்காமல்
மோட்டாரை மணிக்கணக்காய் ஓடவிட்டு, லோ வோல்டேஜில் மோட்டாரை ஆன் பண்ணி ஓடவிட்டு அதன்
காயலைக் கருக்கி, புதுக் காயல் போட அல்லது புது மோட்டார் மாற்ற என்று மூணு நாளைக்குத்
தண்ணி இல்லாமல் தவிக்க விட்டு…திடீர்ச் செலவு உண்டாக்கி, ஆளாளுக்கு உள்ளூர் உறவினர்
வீடுகள், தெரிந்தவர் வீடுகள் என்று பாய்ந்து ஓடி காலைக் கடன்களை முடிக்கவும், குளிக்கவும்
என்று அலமந்து பறந்து அப்பப்பா…என்ன பாடு…என்ன பாடு…? ஒரு அடுக்ககத்திற்குக் குடி வந்தால்
என்னவெல்லாம் பிரச்னைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதை அனுபவித்துத்தான் உணர்ந்தாக
வேண்டும். அப்போதுதான் மனுஷ ஜென்மங்களுக்கு புத்தியில் உறைக்கும். சம்ப்பிலிருந்து
வாளியில் மொண்டு மொண்டு மாடிக்குத் தண்ணீர் தூக்கும்போது தெரியும் அந்தமான் கைதியாய்
அலையும் அவலம்.
அந்த நேரத்திலும் கார் பார்க்கிங்கில்
இருந்த அத்தனை லைட்டுகளும் பக பகவென்று எரிந்து
கொண்டிருந்தன. எத்தனையோ பேர் கீழே வந்தாயிற்று,
போயாயிற்று. யார் கண்ணிலுமா படவில்லை? ஒரு
நாளைக்கு நானே மறந்து விட்டேன். அப்படியானாலும் நான்தான் வந்து அணைக்க வேண்டுமா? யாருமே
இவ்வளவு நேரம் கீழே வரவேயில்லையா? யார் கண்ணிலுமே இந்த வெளிச்சம் படவில்லையா? அல்லது
பட்டும் உறைக்கவில்லையா? அல்லது இதுக்கெல்லாம் கரன்ட் சார்ஜ் இல்லை என்று நினைத்து
விட்டார்களா?
எவ்வளவு சுருக்கமாய் மின்சாரம்
செலவழிக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு
கட்டணம் குறைவாய் வருமே…அது ஏன் ஒருவருக்கும் தெரியவில்லை? ஒரு ஸ்லாப் தாண்டினால் தாறுமாறாய்
எகிரும் மின் கட்டணத்தை அநாவசியம் என்று ஏன் எவரும் உணரமாட்டேனென்கிறார்கள்?
கார் பார்க்கிங் வட புறமும்,
தென்புறமும் என்று எல்லா லைட்டுகளையும் அணைத்தார் வாத்ஸல்யம். தினமும் அவர்தான் அணைக்கிறார்.
காலை சரியாக ஆறு மணிக்கு நன்றாய் வெளிச்சம் வந்தவுடன் பொறுமையாய்க் கீழே இறங்கி வந்து
அத்தனை லைட்டுகளையும் அணைப்பார். யாரையும் எதிர்பார்ப்பதில்லை. எவனும் அணைப்பதுமில்லை,
அணைக்கப்போவதுமில்லை என்று உறுதி செய்துதான் அவரே இதைச் செய்ய ஆரம்பித்தார். எல்லாத்தையும் அந்தப் பெரிசு பார்த்துக்கிடும் என்று
விட்டு விட்டார்களோ என்னவோ? கண்டுக்காத….என்று புத்திசாலித்தனம் காட்டுகிறார்கள். கள்ளப்
பயல்கள்!
அட…மாலையில் இருட்டும்போது
லைட்டுகளைப் போடக் கூடவா கூடாது. சுவிட்சுகளைத் தட்டினால் கை வலிக்குமோ என்னமோ? ஆபீஸ்
முடிந்து வருகிறார்களே…என்ன இப்படி இருண்டு கிடக்கு? என்று ஒருவருக்குக் கூடவா தோன்றாது?
மனசாட்சி இல்லையா ஒருத்தனுக்கும்? இந்த ஓட்டம் ஓடுகிறார்களே? இதில் மட்டும் ஏன் ஜடமாய்
நிற்கிறார்கள்? இருட்டுக் குகையாக் கிடக்கே என்று தோன்றாதா?
இதெல்லாம் நம்ம வேலை இல்ல
என்று நினைத்துக் கொள்வார்களோ இந்த ஐ.டி. கனவான்கள்? தன் வேலையே உறுதி இல்லாதவர்கள்.
இவர்களுக்கு என்ன கௌரதை வேண்டிக் கிடக்கிறது? காலையில் ஆபீசில் காலடி எடுத்து வைக்கும்போது
இப்டி உட்காருங்க என்று வாயிலிலேயே செக்யூரிட்டி நிறுத்தி விட்டானென்றால் கதை முடிந்தது.
என்னவோ கோளாறு? என்று அர்த்தம். அந்த லட்சணத்தில்தான் இவர்கள் பார்க்கும்
வேலை அலமந்து கிடக்கிறது!
ஒரு வேலை நிறுத்தம் செய்ய
முடியுமா இவர்களால்? ஒரு கூட்டம் போட முடியுமா? ஒரு கோஷம்? ஒரேயொரு கோரிக்கையையாவது எடுத்து முன் வைக்க ஏலுமா?
போய்யா…நீ இல்லாட்டி இன்னொருத்தன்…! இதுதான் நிலை.
அவர்களுக்கும்தான். இந்த
மடம் இல்லாட்டி இன்னொரு சந்தை மடம்…! அப்படித்தானே மாறி மாறிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்?
முப்பத்தஞ்சு வருஷம் கம்பீரமா சர்வீஸ் பண்ணி அம்பதாயிரம் பென்ஷன் வாங்குற கௌரதை உண்டா இவனுங்களுக்கு? என் பையனையும் சேர்த்துத்தான்
சொல்லிக்கிறேன். அடிச்சிக்கிட்டனே…கேட்டானா? ஏதாச்சும் பாங்க் வேலை, சென்ட்ரல் கவர்ன்மென்ட்
ஜாப்னு போ…இந்த ஐ.டி. வேல வேணாம்….காதுல வாங்கினானா? படிச்சது இராமாயணம்…இடிக்கிறது
பெருமாள் கோயில்…!! இவன் படிச்ச பி.இ. (இஇஇ) க்கும் பார்க்குற வேலைக்கும் என்ன சம்பந்தம்?
ஜெயகாந்தன் சொன்ன மாதிரி
கொஞ்சம் இங்கிலீஷ், கொஞ்சம் கணக்கு, கொஞ்சம் தமிழ்ன்னுவார்…இதானே மிச்சம்ப்பார். பள்ளிப்
படிப்புக்கே போகாத அந்த மனுஷனோட துல்லியமான விமர்சனம் இது. அதுதானே உண்மை. அப்டித்தானே
சர்வீசை ஓட்டியாச்சு. ஆனாலும் அந்த மதிப்பு இந்த ஐ.டி.ஃபீல்டுக்கு இருக்கா? வேலையே
செய்யாம, வேலையே கத்துக்காம, அடுத்தவனப் போட்டுக்கொடுத்தே எத்தன பேர் இங்க வண்டியை
ஓட்டுறான்? வேலை செய்றவனாப் பார்த்துக் கொல்றானுக. எட்டு மணி நேரம் வேலைங்கிறது என்னைக்கோ
காணாமப் போயிடுச்சி. எல்லாப் பயலுகளும் பன்னெண்டு மணி நேரம் பாடாப் பட்டு முதுகு ஒடிஞ்சு
போய்க் கெடக்கான். நாப்பத்தஞ்சு வயசுக்குள்ளாறயே கூனு விழுந்து போகுது…எப்டிச் சமாளிக்கப்
போறானுங்களோ…எதுவும் நம்ம கைல இல்ல….எதெதுக்குன்னுதான் வருத்தப் படுவீங்க…? அதுக்கும்
உடம்புல தெம்பு வேணும்ல?
நோய் என்பது ஒரு குறிப்பிட்ட
வாழ்க்கை முறையிலிருந்து உருவாகக் கூடியது. அவ்வாழ்க்கை முறைக்குக் காரணமாக அமையும்
மனோபாவமே ரிபு என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொன்று ரிபுவாகிறது. இதை விரிவாகச் சொல்கிறது தாராசங்கர் பானர்ஜியின் “ஆரோக்கிய
நிகேதனம்” . படித்தபோது இந்த ஐ.டி. பசங்களின் வாழ்க்கை முறையை நினைக்க மனதில் பயம்தான்
தொற்றிக் கொண்டது. ஐயோ பாவம் என்றிருந்தது.
அவனும்தான் என்ன…அப்பா இந்த
வயசுல இப்படிக் கஷ்டப்படுறாரேன்னு துடிச்சா
போறான்? நீதான வாங்கின இந்த அபார்ட்மென்ட் வீட்டை…அனுபவி…என்பான்கள் போலிருக்கிறது.
காலம் கலிகாலம்…என்னத்தைச் சொல்ல…? எதைத்தான் சொல்ல? ஒவ்வொன்றுக்கும் இவர்தான் மேலுக்கும்
கீழுக்கும் ஓடிக் கொண்டிருக்கிறார். நான் ஒருத்தனே
பார்த்துக்கிறேன். எவனும் உதவிக்குத் தேவையில்லை…என்கிற வீராப்பு இருக்கிறதுதான். ஆனாலும்
அவிழ்த்து விட்ட கழுதையாய்க் கதை மாறிப் போகுமே? பொறுப்பு பரவலாக நின்றால்தான் சமூகம்
பிழைக்கும்.
அய்யா….மோட்டாரக் கவனிச்சு அணைக்கச் சொல்லுங்க…தண்ணி
ஓவர் ஃப்ளோ ஆகி எங்க வீட்டுல மழை பொழிஞ்ச மாதிரித் தெறிக்குது….எத்தனையோ வாட்டி நானும்
சொல்லிச் சொல்லி அலுத்துப் போனேன். வேணும்னா ஒண்ணு செய்யுங்க…சுவிட்சு எங்கருக்குன்னு
எனக்கும் சொல்லிப் புடுங்க…நானே வந்து அணைச்சிட்டுப் போயிடுறேன்….அப்பயாச்சும் உறைக்குதா
பார்ப்போம்… சுளீர் என்றது இவருக்கு, சமயம் பார்த்துப் பொருத்தமாய்ப் பேசுவது என்பதும் ஒரு தனிக் கலைதான்…
திரும்பி அந்தம்மாவின் முகத்தைப்
பார்க்க லஜ்ஜையாக இருந்தது வாத்ஸல்யத்துக்கு. அமைதியாக மேலேறி வந்தார். படிகளில் அவசரமாய்
இறங்கி வந்ததும் இப்போது திரும்பவும் மேலேறிப் போவதும் மூச்சு வாங்கியது. ஏற ஏறப் படிகள்
நீண்டு கொண்டே போயின…! ரெண்டு மாடிதானே? சந்தேகமே வந்து விட்டது.
அடுக்ககத்தில் பையன் பெயரில்
வீடு வாங்கி அவனைத் தீராத அவஸ்தைக்குள்ளாக்கி விட்டோமோ என்று அவர் மனம் குற்றவுணர்ச்சியில்
தவித்தது. விரைவில் தனி வீடு ஒன்று கட்டி வெளியேறி
விட வேண்டும் என்றும் இதை வாடகைக்கு விட்டு விட வேண்டும் என்றும் உறுதி செய்து கொண்டார்.
-----------------------------