“பிறழ்வு” சிறுகதை பிரசுரம்-தினமணி கதிர்-16.07.2023
--------------
நான் வந்த பிறகு கடைசியாக என்னை ஒரு முறை
பார்த்துவிட்டுத்தான் உயிரை விட வேண்டும் என்று அம்மா காத்துக் கொண்டிருந்தாளோ என்றுதான்
தோன்றியது. வந்துட்டியா? என்ற தடுமாற்றம் மிகுந்த அந்த ஒரு வார்த்தை என்ன பாடு படுத்திவிட்டது?இனி
என் மூச்சை நிறுத்திப்பேன் என்று சொல்லாமல் சொன்னாளோ? அம்மாவின் தோளில் அழுத்திக் கைகளைப்
பதித்தபோது வழிந்த அந்த விழி நீர் எவ்வளவு துயரத்தை உள்ளடக்கி வெளிப்பட்டது? ஒரு வாரம் முன்பு அம்மாவைக் கொண்டுவிட்ட அந்த நேரம்
அவளின் பார்வையும், சைகையும் என்னவெல்லாம் பேசின என்பது என் கண்முன்னே நிழலாடிக் கொண்டிருந்தது.
இப்டி அநாதையா விட்டுட்டுப் போறியே? தன் பார்வையால் இப்படித்தான் சொன்னாள். அதில் இருந்த
ஏக்கம், துக்கம், தன்னை அநாதை என்று உணர்ந்தாளோ என்று எனக்குத் தோன்றும் அளவுக்கு இருந்தது.
காலம்பறதான் கொண்டு விட்டே…இன்னிக்கே கிளம்பணுமா?
என்று அம்மா கேட்டாள். என்ன சொல்வது என்று அறியாமல் விழித்தேன் நான். அந்த ஒரு கணத்தில்
மனதில் என்னென்னவோ வந்து போயின. அமர்ந்திருக்கும் அந்த இடமே எனக்குச் சொந்தமில்லை என்று
தோன்றியது. மானமில்லை உனக்கு, உடனே வெளியேறு என்று விரட்டியது. ஏன் இந்த நிலை? அப்படி
என்ன தவறு செய்தேன்? அடுத்த வேளைச் சோற்றுக்கு அங்கே கை நனைக்கக் கூடாதா? சொந்தச் சகோதரர்கள்
துன்பத்தில் ஆழ்தல் கண்டு…இங்கே இருவருக்கும் பொதுவோ இது?
அவளைப் பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த
நான் பின்னால் வந்து நிற்கும் அண்ணாவை உணர்ந்து, என் மார்புக்கு நேரே ஆள்காட்டி விரலை
மறைவாகப் பின்னோக்கிக் காட்டி, அவன்ட்டச் சொல்லு…அவன்ட்டச் சொல்லு…என்று அம்மாவின்
கேள்விக்குப் பதிலாகச் சைகை செய்து முனகினேன். எட்டிப் பார்த்தானா தெரியவில்லை. அசையாமல்
ஆள் நிற்பது தெரிந்தது. அந்த நிற்றலில் ஒரு தீர்மானம்.
என்ன… ரகசியம் பேசிட்டிருக்க?பக்கத்துல
உட்கார்ந்து பேசிட்டா எல்லாம் ஆச்சா? வந்தமா,
விட்டமா, கிளம்பினமான்னு இருக்கணும்…! – ஆழமான அமைதி எவ்வளவு அ(ன) ர்த்தங்களைக் கற்பிக்கிறது?
சொல்லத் தயங்கும் வார்த்தைகள் எடுக்கும் விஸ்வரூபம் அது. வேறு எப்படியும் நினைக்கும்
வாய்ப்பே இல்லை எனும் இறுக்கமான சூழல்.
அம்மா என்னையும் பின்னால் நிற்கும்
அண்ணாவையும் மாறி மாறிப் பார்த்தது ஏதோ புரிந்து கொண்டதுபோல்தான் இருந்தது. அவ்வளவு
நசிந்த நிலையிலும் அவள் மூளை தெளிவாகத்தானே இருந்தது. பார்வையையும் தீர்க்கமாகத்தான்
உணர்ந்தேன். ஆனால் அவள் மனம் சுணங்கியிருப்பதை, சோர்ந்து கிடந்ததை உணர முடிந்தது. ஒருவேளை
என்னிடம் சொல்லும்போது மட்டும் அந்த ஆசையினால் மிளிர்ந்த தெம்போ? அவ்வளவு இஷ்டமா அம்மாவுக்கு
நான் உடனிருப்பதில்? பின் ஏன் அதை வெளிப்படையாக அண்ணாவிடமும் அவளால் சொல்ல முடியவில்லை?
கூட ஒரு ஆள் வந்து இங்கே டேராப் போட்டா,
எவ சமைச்சுக் கொட்டுறது? எல்லாத்துக்கும் எம்பொண்டாட்டிதான் கிடைச்சாளா? அவளுக்கு மட்டும்தான்
விதிச்சிருக்கா? அவுங்கவுங்க பெண்டாட்டிக மட்டும்
சொகுசா ஊர்ல இருக்கணும். இங்க இவ மட்டும் கிடந்து சாகணுமா? ஏன் அவங்களுக்கும் கடமையில்லையா?
இதோ…நா இருக்கேன்னு கிளம்பி வந்து செய்ய வேண்டிதானே? யாரு தடுத்தது? மனசில்ல…அதானே…?
சுகவாசிகள்! சொன்னாப் பார்த்துப்போம்னு சாமர்த்தியமா
இருந்தா எப்படி? எல்லாத்தையும் வாய்விட்டுச் சொன்னாத்தான் புரியுமா? அப்பத்தான் மண்டைல
ஏறுமா? இது ஒருவகை சாமர்த்தியமில்லே? கடைசிவரைக்கும்
சாபக்கேடு என்னோடவளுக்குத்தான்…அப்டித்தானே? – இவையெல்லாம் எத்தனையோ முறை சொல்லி முடித்ததுதான். இன்னும் விடாமல் அவ்வப்போது
சொல்லிக்கொண்டிருப்பதுதான். குறைந்தபட்சம்
வார்த்தைகளால் கொத்தியாவது எடுப்போமே…! ரணப் படுத்துவோமே…! எல்லாம் முடிந்து இப்போது
கடைசிக் கட்டம் வந்திருக்கிறது. அதிலும் தணியாத வேட்கை!
பழையபடி சுவரைப் பார்த்துத் திரும்பிக் கொண்டு, ஏதோ
செய்யுங்கோ…உங்க இஷ்டம்…என்று சொன்னது போலிருந்தது. அப்படி அவள் திரும்புகையில் கண்ணீர்
முட்டிக்கொண்டு நின்றதை நான் கண்டேன். நான் சொல்லி எங்க நடக்கப் போறது? என்ற விரக்தியாய்
இருக்கலாம். இத்தனை நாள் நடக்காதது இனிமேலா? எண்ணி இன்னும் சில நாட்கள்.முடிந்து விடும் கதை….அப்படியான
அமைதிதான் அங்கே விரவி நிற்கிறது. ஆனாலும் அதிலும் ஒரு மனப்பதட்டம். கடைசி நேரப் பரிதவிப்பு.
பொங்கித் தவிக்கும் மனசு. என்னமாவது சொல்லி மனசை ஆற்றிக் கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால்
அமைதியுறாது. அப்படியான ஒரு கதகதப்பு வீடு முழுவதும். பொய்யான அமைதியைக் கிழித்துக்
கொண்டு எது யார் வாயில் இருந்து எப்போது புறப்படும் என்று தெரியாத ஒரு படபடப்பு. அந்த
சூழலே என்னை அங்குவிட்டுத் துரத்துகிறதோ? துணிந்து…நான் இருந்து அம்மாவக் கவனிச்சிக்கிறேனே…!
ஏன் சொல்ல முடியவில்லை? ஆளையே முகம் கொண்டு பார்க்க முடியவில்லையெனின், எப்படித் தங்கி
சகஜம் பெறுவது?
சகஜமாவது ஒண்ணாவது…வெளிய போங்கிறேன்…-அந்த
வார்த்தை வரும் முன் கண்ணில் இருந்து மறைந்து விட வேண்டும். காட்சிகள் மறைந்தால்…கவனமும்
குறையும். கருத்தும் பலவீனம் கொள்ளும்.
அந்த நேரத்தில்..சரி…நான் இருக்கேன்…இருந்துட்டுப்
போறேன்…என்று சொல்ல எனக்குத் தைரியமில்லை. நீ ஒண்ணும் இருக்க வேணாம்..எல்லாம் நாங்க
பார்த்துக்கிறோம்…முதல்ல கிளம்புற வழியைப்பாரு….என்றுதான் வார்த்தைகள் வந்து விழும்.
அந்தக் கேவலத்தோடா வெளியேற வேண்டும்? என்றாலும்
அதுதான் எனக்குக் கடைசியாகக் கிடைத்தது.
நான் இருக்கேன்….இருந்துட்டுப் போறேன்…..
- அப்படிச் சொல்லியிருந்தால் அந்த நிம்மதியில் அம்மா இன்னும் சற்று உடல் தேறியிருப்பாளோ
என்று இப்பொழுது தோன்றுகிறது. தன் அருகிலேயே அமர்ந்திருந்து, அந்த அமர்விலேயே ஆறுதல்
கொள்ளும் உள்ளம் அம்மாவுடையது என்பதை நான் அறிவேன்.
அவளது ஒவ்வொரு சிணுங்கலுக்கும்…என்ன…என்ன
பண்ணுது? உடம்பு வலிக்குதா…? தலை வலிக்குதா? பிடிச்சு விடட்டுமா? திரும்பிப் படுத்துக்கிறியா?
தண்ணி குடிக்கிறியா? பாத்ரூம் போகணுமா? என்று கேட்டுக் கேட்டு அவளை ஆறுதல் படுத்த வேண்டும்.
அரவணைக்க வேண்டும். அந்தக் கேட்பில், தன்னை கவனிக்க ஒரு ஆள் கூடவே இருப்பதில் அந்த
மனது கொள்ளும் ஆசுவாசம் சொல்லி மாளாதது. அதைச் செய்ய நான் தயார். ஆனால் அதுதான் அவனுக்குப்
பிடிக்காதது. ஆளை முகம் கொண்டு காணவே பிடிக்காதவனிடம் எப்படி அருகில் நிற்பது?
அம்மாதிரி ஒருத்தர்…அம்மாவுக்குத் தேவையாயிருந்தது.
அது நானாகத்தான் இருக்க முடியும் என்பதையும்
உணர்ந்திருந்தேன். அதுவே அவள் விருப்பமாகவும் இருக்கிறது என்பதையும் என்னால்
உணர முடிந்தது. மனிதர்களுக்கு சிகிச்சையைவிட…உடனிருந்து ஆதரவாய் கவனிப்பவர்களாலேயே..,அன்பாய்ப்
பேசுபவர்களாலேயே …பாதி வியாதி குறைந்து விடும் என்பதுதான் உண்மை. அதிலேயே அவர்கள் மனது
நிறைவடைந்து, இப்படியே படுத்துக் கொண்டிருந்தாலும் போதும், இந்த ஆதரவு தொடர்ந்து கிடைத்துக்
கொண்டிருந்தால் சரி என்று திருப்தி கொண்டு விடுவார்கள். இப்படி உடம்பு முடியாமல், இயக்கமில்லாமல்
படுத்துக் கிடக்கிறோமே என்கிற குறையே அவர்களுக்கு
இருக்காது.
அம்மாவுக்கு அப்போது அதுதான் தேவையாயிருந்தது.
ஆனால் அதை தைரியமாக முன்னின்று நிறைவேற்ற எனக்கு சக்தியில்லை. உடன் பிறந்த சகோதரனிடமே
வாய் விட்டுச் சொல்ல வழியில்லை. வக்கில்லை. அவன்தான் அம்மாவை என்னிடம் கூட்டிக் கொண்டுவந்து
சேர்த்தான். அவனேதான் திரும்ப அழைத்துக் கொண்டான்.
எல்லாமும் எண்ணிச் சில நாட்களில் நடந்துவிட்டனதான். வந்ததை விரும்பி வரவேற்ற அளவுக்கு,
போவதை வருந்தித் தடுக்க முடியவில்லை என்னால்.
வேண்டாம்…நான் சின்னவன்ட்டயே இருந்துக்கிறேன். என்னை அவன் நல்லாப் பார்த்துக்கிறான்….என்று மறுத்துச்
சொல்ல அம்மாவுக்கும் தைரியமில்லை. ஏன் அந்த உண்மையை அம்மா உரத்துக் கூறவில்லை? இன்னிக்கே
கிளம்பி நாளைக்குக் காலைல அம்மா இங்கே வந்து சேரணும் என்று ஆணையிட்ட அண்ணாவின் பேச்சை
மறுத்துச் சொல்ல எனக்கும் தெம்பில்லை. தைரியமுமில்லை.
அதுநாள் வரையில் அவன் ஆளுமையில்தானே எல்லாமும்
நடந்தேறியிருக்கிறது? வா…என்றால் வர வேண்டும். உட்கார் என்றால் உட்கார்ந்தாக வேண்டும்.
எழு என்றால் எழுந்து நின்றாக வேண்டும். போ என்றால் வெளியேறி ஆக வேண்டும். இதுவே விதி. அந்த வீட்டைப் பொறுத்தவரை விதித்த விதி அதுதான்.
பெற்றோரை வைத்துப் பராமரிக்கும் அவனுக்கில்லாத அதிகாரமா? அதற்கு அடங்காத தன்மையா? யார்தான்
எதிர்த்து நிற்க முடியும்? மதிப்பும் மரியாதையும்தான்…
அவன் செயல்பாட்டுக்கு அம்மாவும் மறுப்புச்
சொல்லவில்லையே! அதுதான் அதிசயம். அவளால் என்ன சொல்ல முடியும்? அதெல்லாம் முடியாது.
நான் இங்கதான் இருப்பேன் என்றா நிற்க முடியும்? அங்கிருந்து அவளைக் கிளப்பிய போதே அவளால்
மறுத்து நிற்க முடியவில்லையே…இப்போது மட்டும் என்ன செய்து விடுவாள்? வா என்றால் வா…போ
என்றால் போ…அவ்வளவே…!
சொல்லிட்டானா? திரும்ப அங்கேயே வரச் சொல்லிட்டானா?
என்று கேட்ட அம்மாவின் முகத்திலான மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது? அவளுக்கு வேர் அங்கேதான்
நிலைத்திருக்கிறதோ? மண் பிடித்து ஊன்றியிருப்பது அங்குதான். பாதி வியாதி அப்போதே தீர்ந்ததுதான்….மனசுதானே மாமருந்து!
மாமி…எப்டியிருக்கேள்? உடம்பெல்லாம் சௌரியமா?
மாத்திரை சாப்பிடறேளா? நன்னா நடமாடிண்டிருக்கேளா? பக்கத்துல கோயிலுக்குப் போயிட்டு
வரேளா? தனியாப் போகாதீங்கோ…யாரையாச்சும் துணைக்கு அழைச்சிண்டு போங்கோ….வெள்ளி, செவ்வாய்
மட்டும்போங்கோ…பிரதோஷம்னா போயிட்டு வாங்கோ…எல்லா நாளும் போக வேண்டாம்…உடம்புதான் முக்கியம்….இந்தாங்கோ…அகத்துல
பண்ணினது…கை முறுக்கு கொண்டு வந்திருக்கேன்….விண்டு போட்டுண்டு ஊற வச்சு சாப்பிடு்கோ…உங்க
ஞாபகம் வந்தது…மாமிக்கு எடுத்துண்டு வந்தேன்….வச்சிண்டு அப்பப்போ ஒண்ணு எடுத்து சாப்பிடுங்கோ…அப்போ
என் ஞாபகம் வரணும் மாமிக்கு. நன்னா ருசியா பண்ணியிருக்கா என் மாட்டுப் பொண்ணு பாலா….அவள
ஒரு நா கூட்டிண்டு வர்றேன்…நீங்க ஆசீர்வாதம் பண்ணனும்….சீக்கிரம் அவளுக்கு ஒரு குழந்தை
பிறக்கணும்…தள்ளிண்டே போறது….பகவான்தான் அனுக்கிரஉறிக்கணும்…..பெரியவா ஆசீர்வாதம் கட்டாயம்
வேணும்…
அவ்வப்போது அம்மாவைப் பார்க்க வீட்டுக்கு
வந்து செல்வோரின் அன்பான, ஆதரவான இந்த விசாரிப்புகளும், உபசரிப்புகளும் அம்மாவை தூக்கி உட்கார்த்தி விடுமே…! அதற்கு மீறியா
என் உபசாரங்கள்? அம்மாவுக்குச் செய்வது எப்படி உபசாரமாகும்? அது கடமையல்லவா? கடமையை
உணர்ந்து செய்தாலும், வருடக் கணக்காய் பெரியவனே ஆதரவு என்று கிடந்த அந்த ஊரும், இடமும்தானே
அம்மாவுக்குப் பெரிசாகத் தோன்றுகிறது? அதற்காக, நான் வேண்டாம் என்று அம்மா நினைக்கப்
போகிறாளா என்ன? பெரியவனுக்கு ஆயிரம் வேலை. என்னானாலும் அவன் வீட்டுக்குப் பெரியவன்,
மூத்தவன். வீட்டிலுள்ள மூத்தவர்களுக்கெல்லாம் மூத்தவன். அவனைப் போய் இங்க பக்கத்துல
வா…உட்காரு…எங்கூடக் கொஞ்சம் பேசிண்டிரு…ன்னு சொல்ல முடியுமா? அவன் வயதுக்கேற்ற மரியாதை
அவனுக்கு உண்டுதானே? அந்த மதிப்பை அவனுக்குக் கொடுத்தாகணுமே!
என்னதான் ஊருக்குத் திரும்ப வந்திடுன்னு
சொன்னாலும், கட்டன்ரைட்டா நாளைக்குக் காலைல சென்னை வந்து சேர்ந்தாகணும்னு கட்டளை போட்டாலும்,
இங்க வந்து படுக்கைல கிடக்குற எனக்கு, மூச்சுக்கு மூச்சு சிஸ்ருஷைக்கு ஒருத்தர் வேண்டியிருக்குதானே? அதுக்கு
சின்னவனை நான் இருக்கச் சொன்னா என்ன தப்பு? அதிகாரமாச் சொல்ல அதிகாரமில்லையே? என்ன
ஐவேஜ் இருக்கு என்னன்ட? கட்டுன பொடவையோட போகக் காத்துண்டிருக்கிறவளுக்கு அதிகாரம் ஒரு
கேடா?
எதுக்கு இத்தனை அவசரம்? பரபரப்பு…படபடப்பு….ஃபோன்
பண்ணி, ஆம்புலன்சுக்கு ஏற்பாடு பண்ணி, அவன் வந்து ஸ்டெரெச்சர்ல தூக்கிப் போட்டு வேனுக்குள்ள
தள்ளி, கூடவே ஒரு நர்சையும் அமர்த்தி, கடைசிக்காரனையும் கூடவே கிளப்பி….என்ன ஒரு அமர்க்களம்?
தெருவே பார்க்கிறது…என்னவோ ஏதோன்னு…? உடம்பு முடிலயா…சீரியஸா…ன்னு கேட்டவாளுக்கு இல்லை…மெட்ராசுக்கு…பெரியவன்ட்டன்னு
சொன்னபோது..எத்தனை பேர் வருத்தப்பட்டா? அதுக்குள்ளயுமா?ன்னு ஆயாசப்பட்டாளே? இப்டி வயசானவாளை
அலைக்கழிக்கலாமான்னு யாரோ சொன்னாளே….அது என் காதுல விழுந்ததே…! வீட்டுக்கே டாக்டரைக்
கூட்டிக் கொண்டாந்து காண்பிச்சாரே அந்தம்மா பையன்…பிறகென்னவாம்? நல்லாத்தானே பார்த்துக்கிடுறார்?
பிறகு எதுக்கு கிழவிய அலைக்கழிக்கிறாங்க?
மத்தவா புலம்பி என்ன செய்ய? வான்னா வரணும்…போன்னா
போகணும். அதிகாரம் அப்டியின்னா இருக்கு…? போகச் சொன்னான். போனேன். வரச் சொன்னான், வந்தேன்.
ஆச்சில்ல….நீ கிளம்பு…..!
இதென்ன இப்படி ஒரு வார்த்தை? ஏதோ மூன்றாம்
மனுஷனைச் சொல்வது போல? கொண்டு வந்து சேர்த்தாச்சில்ல…கிளம்பு
என்கிறானோ?
அந்தளவுக்கு நான் என்ன தப்பு செய்தேன்?
எதை மறைக்க என்னைப் பழியாக்குகிறான்? இப்படி விரட்டுகிறானே? வேனில் வந்து இறங்கி…ஆசுவாசப்படுத்திக்
கொண்டு…குளித்து…சாப்பிட்டு…பயண அசதிக்குக் கொஞ்சம் ஓய்வெடுத்து, நானாகவே மாலை கிளம்பி
விட மாட்டேனா? இங்கேயேவா டேராப் போடப் போகிறேன்? சொந்தத் தம்பியை இந்த விரட்டு விரட்டுகிறானே?
சொந்தத் தம்பிங்கிறதுனாலதான் இந்த விரட்டு? இல்லைன்னா முடியுமா? – சிரிப்பதா, அழுவதா?
அம்மாவ உங்கிட்ட அனுப்பிச்சதிலிருந்து
அவர் மனசே சரியில்லை. ஏதோ தப்புப் பண்ணிட்ட மாதிரி அவர் மனசுக்குத் தோணிடுத்து…ராத்திரியெல்லாம்
தூக்கமேயில்லை அவருக்கு…அடுத்த வீடு, பக்கத்து வீடு, இந்தத் தெருக்காரான்னு போறவா வர்றவால்லாம்
கேட்க ஆரம்பிச்சுட்டா…பாட்டியை அனுப்பிச்சிட்டேளா? அடப் பாவமே…இந்த வயசிலயா? இப்டி
செய்யலாமா நீங்க? பாவமில்லையா? ஒரு - நாள்,
கிழமை, விசேஷம்னா மறக்காம வந்து ஆசீர்வாதம்
வாங்கிண்டு போவோமே…அதுக்கு இல்லாமப் பண்ணிட்டேளே…? பெரியவா நம்ப கூட இருக்கிறதே…பெரிய
புண்ணியமில்லையா நமக்கு? அவாளுக்குச் செய்றது, பிரத்யட்ச தெய்வத்துக்கு செய்றதுக்கு
சமானமில்லையா? இப்டியா யோசனை இல்லாமச் செய்வேள்? எவ்வளவோ புஸ்தகம் படிக்கிறேள், சொற்பொழிவு
பண்றேள்…மத்தவாளுக்கு அறிவுரை, அறவுரை சொல்றேள்…ஆனா உங்களுக்கு நீங்களே இப்டியா பிசகி
நடக்கிறது? யார் சொன்னா உங்களுக்கு இந்த அசட்டு யோசனையை? உங்க பாரியாளே சொல்லியிருந்தாலும் இதைச் செய்யலாமா? நீங்களா யோசிக்க வேண்டாமா? காலம் போன கடைசிலயா தப்புப்
பண்றது? தப்புப் பண்றதுக்கு இந்த வயசு வரைக்குமா காத்திருந்து செய்யறது? இருந்ததுதான் இருந்தா….இன்னும் கொஞ்ச காலம்….கொஞ்ச
காலமென்ன…இன்னைக்கோ நாளைக்கோன்னுதானே எல்லார் பாடும் கழியறது? இந்தத் தெருவுல இருக்கிற
பெரியவாளை, மூத்தவாளை, வயசாளிகளை நீங்க பார்க்காததா?
நீங்க வாரா வாரம் நடத்துற பூஜைக்கு, ஆத்ம
விசாரத்துக்குத்தான் எல்லாரும் வந்து போயிண்டிருக்காளே? அவாள்ல ஒருத்தர் கூடவா உங்களுக்கு
இது ப்டாதுன்னு, தப்புன்னு சொல்லலை? சொல்லலையா அல்லது சொல்லியும் கேட்கலியா? என்னத்தன்னு
சொல்றது? மனசும், உடம்பும் முதிர்ந்த காலக்
கடைசில இப்படி வக்கரிச்சிக்கலாமா? என்ன காரியம்
பண்ணிட்டேள்?—
மன்னியின் ஒப்புதல் வாக்குமூலம். சுய
பச்சாதாபம்..….
தெருவே கேட்டு விட்டதுதான். தெருவென்ன
அந்த நகர்ப்பகுதியே என்றும் சொல்லலாம். வாழ்க்கையின் சில கணிப்புகள் எப்போதேனும் நம்மை
மீறித் தவறி விடுகின்றனதான். கை மீறிப்போய் நழுவ விடும் விஷயமாகிப்போகிறதுதான். புத்தி
அந்த நேரம் ஸ்தம்பித்துதான் போகிறது. ஒருவரின் தவறுக்கு இன்னொருவர் பலிகடா…!
அதுதான் எல்லாம் முடிந்ததே..! அம்மா தெய்வமாகி
புகைப்படமாய்க் காட்சியளிக்கிறாள். மானசீகமாய்
வணங்கிக் கொள்கிறேன். உள்ளம் குலுங்கி அழுதுகொண்டுதான் இருக்கிறது. என்று ஆறுதல் படுமோ?
எதையும் மனசுல வச்சிக்காதே….சரியா? -
அதான் அம்மாவே போயாச்சே…இனிமே என்ன?
பதிமூணு நாள் காரியங்கள் நடந்தேறிவிட்டனதான்.
ஆனாலும் இன்னும் ஏன் இந்த இறுக்கம்?
அன்றே கிளம்பி விடுவதுதான் அவனை ஆறுதல்படுத்தும்
என்றால் வெளியேறி விடுவதுதான் சரி….!
பெட்டியோடு வாசல் கேட்டைக் கடக்கிறேன்.
பின்னாலே வந்த உருவம் கதவைப் படாரென்று சாத்தி கொண்டியைச் சத்தமாய் இறக்கி என் முதுகில்
ஓங்கி அறைகிறது.
---------------------------