சிறுகதை என்னும் கட்டுமானத்திற்குள் அடங்கிய “எருமைச் சீமாட்டி”
=========================================================================-
(ஒரு வாசிப்பனுபவம்)
வாசிப்புப் பழக்கமுள்ளவர்கள் புதிது புதிதாகத் தேடித் தேடிப் படித்துக் கொண்டேயிருப்பார்கள். வெவ்வேறு எழுத்தாளர்களின் படைப்புக்கள் எப்படியிருக்கின்றன என்று உற்றுக் கவனித்துப் படிப்பார்கள். உண்மையிலேயே எழுத்தை இவர்கள் ஆள்கிறார்களா அல்லது வெறுமே வரி கடந்து செல்லும் எழுத்தா என்று நோட்டமிடுவார்கள். எழுத்தை நேசிப்பவர்களுக்கு கதைகள் மட்டுமே என்றோ, நாவல்கள் மட்டுமே என்றோ, கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்றோ பிரித்துத் தனித்து நின்று ஒன்றிலேயே பயணித்தால் கதையாகாது. எல்லாவற்றையும்தான் படித்தாக வேண்டும். அனைத்தையும்தான் நேசித்தாக வேண்டும். இது இவன் எழுத்து, அது அவன் எழுத்து, என்று மனசுக்குள் தாறுமாறாக எதையாவது நினைத்துக் கொண்டு, தனக்குத்தானே உயரத்தில் சென்று உட்கார்ந்து கொண்டு, உறிஉறிஉறி…என்று இளிக்கக் கூடாது.
அப்படியே இலக்கியவகையினதாகவே தேடுகையில், வார, மாத இதழ்களும் ஆயப்படுவதும் வேண்டும். இலக்கியத்தரமான படைப்புக்கள் இலக்கியச் சிற்றிதழ்களில், மாத இலக்கிய இதழ்களில் (அதென்ன மாத இலக்கியம், வருட இலக்கியம் என்று ஏதோவொரு கட்டுரையில் நா.பா. அவர்கள் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது. இலக்கிய மாத இதழ் என்று சொல்லுங்கள் என்பார் அவர்) மட்டும்தான் தென்படுகின்றனவா என்ன? சமயங்களில் வணிக வார இதழ்களிலும் வந்துவிடுபவைதானே? அவை கண்ணுக்குத் தென்படாமல் தப்பிப் போய்விடக் கூடாது. ஒரு இலக்கிய வாசிப்பாளனுக்கு அது நஷ்டமாகிவிடக் கூடும். அப்படிப் பெரு நஷ்டம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று தேடியபோதுதான், அகப்பட்டது இந்தச் சிறுகதை.
நேசிப்பது என்று கிளம்பி விட்டால் மனிதனை மனிதன் மட்டும்தான் நேசிக்க முடியுமா? சக மனிதர்களை, மரம் செடி கொடிகளை, பிற ஜீவராசிகளை, இந்த இயற்கையை என்று எல்லாவற்றையும் நேசிக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும் ஒரு தேர்ந்த வாசிப்பாளனுக்கு. அப்படியானால்தான் அவன் மிகுந்த விவேகமுள்ளவனாக மாற முடியும். அவனிடமுள்ள சளசளப்பு ஓய்ந்து அமைதி ஏற்படும். வாழ்க்கையின் பக்குவமிக்க மனிதனாகத் தன் தேர்ந்த வாசிப்புப் பழக்கத்தினால் ஒருவன் மிளிர முடியும். சு.ரா. எழுதியிருப்பதைப் படித்திருக்கிறீர்களா? அந்தமாதிரியான அனுபவம் உங்களுக்குக் கிட்டியிருக்கிறதா? நீங்கள் அம்மாதிரி ஆவதை, மாறிக் கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? உணர்வு பூர்வமாக அறிந்து தெளியும் ஆத்ம சுகம் அது.
அப்படியொரு ஆத்மசுகத்தை அனுபவிக்க வேண்டுமா? பெருமாள் முருகன் எழுதிய எருமைச் சீமாட்டி என்ற ஆனந்த விகடன் (15.05.2013) சிறுகதையை உடனே தேடிப் பிடித்துப் படியுங்கள்.
என்னய்யா தொல்லை இது? அந்தக் கதை என்ன சொல்லுதுன்னு சொல்லிட்டுப் போக வேண்டிதானே…என்னத்துக்கு இழுக்கிறாரு…எவன்யா இதெல்லாம் போய் ஓடித் தேடிப் படிச்சிட்டுக் கிடக்கிறது என்று சள்ளையாகத் தோன்றினால் உதறி விடுங்கள். அதனால் அந்தப் படைப்பாளிக்கோ, அந்தப் படைப்புக்கோ சொன்னவனுக்கோ ஒரு நஷ்டமுமில்லை. ஏனென்றால் அதை அந்தப் படைப்பாளி எந்த அளவுக்கு ஆழ்ந்து அனுபவித்து, உள் மன ஓசையோடு, உருகி உருகி வடித்திருக்கிறாரோ அதே ரசம் குன்றாமல் எங்காவது ஒரு நல்ல வாசகன் அதைப் படித்துத் தன் அவயவங்களில் வாங்கியிருப்பானானால் அது ஆயிரம் வாசகன் படித்ததற்குச் சமம். அதுவே அந்தப் படைப்பாளிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி.
பசுவை நேசிப்பதுபற்றிக் கதை படித்திருப்பீர்கள். பறவைகளை நேசிப்பதுபற்றி நிறையப் படித்திருப்பீர்கள். இயற்கையை நேசிப்பதை அறிந்து தெளிந்திருப்பீர்கள் (!) சக மனிதர்களை, தான் வாழ்ந்த வீட்டை, ஒரு இடத்தை, ஒரு மரத்தை, ஒரு கல்லை, ஒரு கோயிலை, ஒரு கட்டத்தை, ஒரு ஆறுதனை, ஒரு குளத்தை, குட்டையை, நீரோடையை, என்று எத்தனையோ படித்திருக்கலாம். இங்கே ஒரு பெண் தன் எருமையை நேசிக்கிறாள். அதன் அருமையை நேசிக்கிறாள். அதுவும் நேசிக்கிறது இவளை. அவளை விட்டுப் பிரிய மறுக்கிறது. கொண்டு விட்ட இடத்திலிருந்து தடம் பார்த்துத் திரும்பி வந்து விடுகிறது. அப்படித் திரும்பி வரும்முன் அது அவ்வாறு மீள வந்து விடுவதாய் ஆத்மார்த்தமாய் உணர்கிறாள் இவள். அந்த உணர்வு அலைகள் எருமையை அழைத்து வந்து அங்கே நிறுத்தி விடுகிறது.
பேசாத படும்மா…எல்லாங் காத்தால பாத்துக்கலாம் என்று பெரியவன் அவளைப் பிடித்துச் சாய்த்துக் கட்டிலில் படுக்க வைத்தான்.
“இல்லடா…எனக்கு நல்லாக் கேட்டுது….என்று முனகினார் அம்மா. எல்லாருக்கும் தூக்கம் வந்து, கண்ணைச் செருகிய நேரத்தில் திரும்பவும் அம்மா கத்திக் கொண்டு எழுந்தார். அவதான்…எனக்கு நல்லாக் கேட்டுது…அவளேதான்….என்று பிதற்றினார். அவதான்டா வந்துட்டா…என்னயத் தனியா வுட்டுட்டுப் போவ மாட்டா….
எருமப் பைத்தியம் பிடிச்சே இவளக் கொண்டுட்டுப் போயிருமாட்டம்… - சலித்து, பீடியைப் பற்ற வைத்தார் அப்பா.
அம்மாவின் பின்னாலேயே ஓடினார்கள் பிள்ளைகள் இருவரும். கட்டுத் தரைப் பூவரசின் அடியில் எருமை படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. மூன்று பேருமே அப்படியே விதிர்த்து நின்று விட்டார்கள். பூவரச மர நிழல் இருளில் அதன் கண்கள் மினுங்கின. அவர்களின் சத்தம் கேட்டுக் கொஞ்சம் தூரக் காடுகளில் குடியிருந்த ஆட்கள் எல்லாம் வந்து விட்டனர். பல கன்றுகள் ஈன்ற எருமை எங்கோ விற்கப்பட்டு, வீடு தேடி வந்து விட்டது சாதாரண விஷயமாய் இல்லை. எவ்வளவு தூரத்திலிருந்து தடம் கண்டு பிடித்து வந்திருக்கும்? கன்றுக் குட்டியாய் இருந்தபோது இந்த ஊருக்கு வந்த எருமை ஊர் எல்லையைத் தாண்டிப் போன சந்தர்ப்பங்கள் குறைவு. பக்கத்து ஊர்க் காடுகளுக்கு மேய்ச்சலுக்குப் போய்த் திரும்பியிருக்கிறது. கிடா சேர்த்துவதற்காக இரண்டு ஊர்கள் தாண்டியிருக்கிற மணியக்காரர் வீடுவரை சில தடவையும், நகரத்துக் கால்நடை மருத்துவனை வரை ஓரிரு முறையும் போனது உண்டு. கட்டுத் தரையும் மேட்டுக் காடுமே அது சுற்றிச் சுழன்ற இடங்கள். வந்து விட்டதே? வந்து சேர்ந்து விட்ட ஆசுவாசத்தை உணர்த்துகிறது அதன் அசை போடல். போன செல்வமெல்லாம் ஒரு சேரத் திரும்பி விட்ட உணர்வு அம்மாவுக்கு.
கதை புரிந்திருக்கும். இவ்வளவுதானா? என்று ஜடமாய் விட்டுச் செல்பவர்கள்பற்றிய கேள்வியே இல்லை. ஏனென்றால் ரசனையின்பாற்பட்ட விஷயமாயிற்றே வாசிப்பு என்பது. அதிலும் மனதில் ஈரம் கசிந்து கொண்டேயிருப்பவனுக்கு எல்லாவற்றிலும் உள்ள நுணுக்கமான ஒன்றைப் புரிந்து கொள்ளும் திறனிருக்குமே…அதை உணர்கிறீர்களா?
இப்படியெல்லாமா கதை எழுத முடியும்? எழுதிக் கொண்டுதானே இருக்கிறார்கள். நாம் எத்தனை பேர் உணர்கிறோம் அதை? உணரமுடியும்தான். என்ன, அதற்குக் கொஞ்சம் நம் மனதில் இரக்கம் வேண்டும், ஈரம் வேண்டும், ஆழ்ந்த ரசனை வேண்டும், மனித நேயம் வேண்டும். இது எல்லாவற்றிற்கும் உகந்ததாய் நிற்கும் சலிக்காத வாசிப்புப் பழக்கம் வேண்டும். நல்ல, தரமான இலக்கிய வாசகனாய் மிளிர வேண்டும் என்கிற தீராத அவா வேண்டும். அவ்வளவே…! தேடிப் பிடித்துப் படித்து உங்கள் ரசனையை உயர்த்திக் கொள்ள முயலுங்கள். முடியாதா, விட்டுத் தொலையுங்கள். சொல்லத் தோன்றியது. சொல்லியாயிற்று.
----------------------------------------