முல்லைப் பெரியாறு அணை - வரலாறும் தீர்வும் என்றொரு புத்தகம் வந்திருக்கிறது. வேளாண் பொறியியல் துறையில் 32 ஆண்டுகள் பணியாற்றி கண்காணிப்புப் பொறியாளராக 2004 ல் பணி நிறைவு பெற்ற இவர் மதுரை தானம் அறக்கட்டளையின் நீர்வளப் பிரிவில் திட்ட ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அண்ணா பல்கலைக் கழகத்தின் நீர்வள மையத்தில் நான்காண்டு காலம் திட்டப் பொறியாளராகப் பணியாற்றியபோதும், பெரியாறு வைகை பாசன மேம்பாடு திட்டப் பணிகளின் செயலாக்கத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்தபோதும், பெரியாறு அணை பற்றிய பல விபரங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்புப் பெற்றவர். தெிலிருந்தே பெரியாறு அணைப் பிரச்சனை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து வந்து, இந்தத் தருணத்திற்கேற்றவாறு விவரங்களைத் தொகுத்துள்ளார். நீர்வள நிர்வாகம் பற்றிப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். மார்ச் 2009ல் துருக்கியில் (இஸ்தான்புல் நகர்) நடைபெற்ற 5-வது உலக நீர்வள மாநாட்டில் பெரும் அணைகளுக்கான பன்னாட்டு ஆணையம் முன்னின்று நடத்திய தேவைகளுக்கேற்ற நீர்த்தேக்கக் கட்டமைப்புகளை உறுதி செய்தல் எனும் கருத்தரங்கிற்று இவரது கட்டுரை தேர்வு செய்யப்பட்டதோடு உலகளவில் தேர்வு செய்யப்பட்ட ஆறு பேச்சாளர்களில் இவரும் ஒரு பேச்சாளராக அங்கு உரையாற்றினார்.ஜூன் 1997 ல் டான்சானிய நாட்டில் நடைபெற்ற நீர் வடிப்பகுதிகளில் மேம்பாடுபற்றிய கன்னாட்டுக் கருத்தரங்கிற்கும் அவரது கட்டுரை தேர்வு செய்யப்பட்டு அங்கும் உரையாற்றியுள்ளார். இப்புத்தகத்தை தமிழோசை பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக வெளியிட்டுள்ளது. முகவரி - 21 கிருஷ்ணா நகர், மணியகாரம்பாளையம் கணபதி, கோவை-641006.(செல்-9788459063) விலை ரூ.45 மட்டுமே.
23 மே 2013
17 மே 2013
“தளம்”–2வது இதழ் (ஏப்-ஜூன் 2013 )
முதல் இதழ் சி.சு.செ. சிறப்பிதழாக வெளிவந்தது. இது இரண்டாவது இதழ். நாடகச் சிறப்பிதழாக. அவசியம் அனைவரும் அறிய வேண்டிய நிறைவான இலக்கியத் தளம் இது.
14 மே 2013
இமையம் எழுதிய “பேராசை” சிறுகதை-வாசிப்பனுபவம்
இதழ் – உயிர்மை மே 2013
-------------
படைப்பாளிக்கு ஆழ்ந்த ரசனை மிக முக்கியம். ஆழ்ந்த ரசனை என்பது மற்ற சாதாரணர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதும், அவர்களால் எண்ணிப் பார்க்க முடியாததாயும் இருத்தல் வேண்டும். அப்படியானால்தான் அந்த ரசனை எழுத்தாக, படைப்பாக வெளிப்படும்போது தனித்துவமாக மிளிர்ந்து நிற்கும். இந்தச் சமுதாயத்தின் அவலங்களை ஆழமாக உள்வாங்கி, மனதுக்குள்ளேயே பொருமி, அழுது, தாள முடியாத வேதனையோடு அவற்றை வெளிப்படுத்தும்போது, அது சத்தியமான படைப்பாகத் தானே முன்வந்து நிற்கும்.
அப்படிப்பட்டதொரு அருமையான படைப்புதான் மே 2013 உயிர்மை இதழில் வெளிவந்த இமையம் அவர்களின் பேராசை என்கிற சிறுகதை. கோகிலா ஏன் யாருக்குமே பிடிக்காத செல்வமணியைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறாள் என்று அறிய முற்படும் அந்த நேரம் மனசு விட்டுப் போகிறது நமக்கு. திடுக்கிட்டு நடுங்குகிறது. சே…! என்ன ஒரு அவலம்? என்று வெட்கமுறுகிறது.
தனிமையில் சுதந்திரமாக மறைவாக மலஜலம் கழிக்கக்கூட வழியில்லாத ஒரு கிராமத்தில் இருந்து கொண்டு, தினம் தினம் அவள் படும் அவஸ்தை, கோகிலாவின் மனதில் எந்த அளவுக்கு ஒரு உறுதியைக் கொண்டுவந்து நிறுத்தி விடுகிறது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கிறார் இமையம். இத்தனை உறுதியோடு இருக்கிறவள் போகிற இடம், தான் நினைக்கும் அளவுக்கான வசதியோடுதான் இருக்கும் என்பதற்கடையாளமாய் சென்னைப் பெருநகரம் அவள் மன நிழலில் அந்த விசாலமான, வசதியான எண்ணங்களை ஏற்படுத்தி, அவள் நினைத்த அந்த ஆண்மகனையே பிடிவாதமாய்க் கைபிடிக்க வைத்து விடுகிறது. வாழ்க்கையில் எது கிடைக்கிறதோ இல்லையோ தினசரி சுதந்திரமாய் மறைவாய், மலஜலம் கழித்தால் போதும் என்கிற அளவுக்கான நெருக்கடியை அவளின் வாழ்நிலை தோற்றுவித்து விட்டது நியாயமே என்று நம்மை அவள்பால் இரக்கம் கொள்ள வைக்கிறது.
செல்வமணி அவளைப் பெண் பார்க்க வருவதும், அவனின் உருவத்தையும், இருப்பையும், செயலையும், மாறி மாறிக் கேலி செய்யும், வையும், முத்தம்மாளின் வார்த்தைகள் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடியவை. வட்டார வழக்குகளின் கலப்படமில்லாத சொல் பிரயோகங்கள் அவர்களின் அசலான மனசை அப்படியே பளிச்சென்று நமக்குக் காட்டும்போதும், துள்ளி விழும் வார்த்தைகளின் தத்ரூபமான உவமான உவமேயங்களும் ஒரு வெளிச்சமான, யதார்த்தமான வாழ்க்கை நிலையை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. கதை முழுக்க நிறைய இடங்களில் செழுமையாக இதை நம்மோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார் இமையம்.
இப்பியே கழுவி வச்ச வெங்கல பானயாட்டம் மாப்ள தல இருக்கு…
எங்க மாமனாரு தலயப் பார்த்தீங்கன்னா சிரிப்பீங்க…தொடச்சி வச்ச கண்ணாடியாட்டம் இருக்கும். மொட்ட போட்டாக்கூட அம்மாம் சுத்தமா இருக்காது…
செல்வமணியைச் சொல்லும்போது சாணியில் பிடித்த கொழுக்கட்டை மாதிரி இருந்தான் என்கிற வர்ணனை.
நாலு புள்ளெ பெத்த அரக் கிழவனாட்டம் இருக்காண்டி…அதோடவும் சுட்டெடுத்த பன்னி மாரி இருக்கான்…
வாய பட்டயாட்டம் இருக்க ஒன்னே அந்தக் கருஞ்சட்டிக்கி கட்டி வைக்கச் சொல்லுறியாடி…அவன் வாயும் வவுறும் பாத்தாலே ஒட்டிக்கிம்மாட்டம் இருக்கு…அப்பிடியொரு கருப்பு. சாவப்போற கிழவி நானு. எனக்கே அவனப் புடிக்கலே….புள்ளே பெத்திருக்கா பாரு, அழுவிப்போன பூசணி பயமாட்டம். எம் புள்ளெயும்தான் புள்ளே பெத்திருக்கான் தென்னங்குருத்தாட்டம்…இவனக் கட்டிக்கிறதுக்குப் பதிலா எவனையாச்சும் இருத்திட்டு ஓடு…நானே வழியனுப்பி வைக்கிறன்….
சண்டாதி சண்டனா, ராசாதி ராசனெல்லாம் வாணாமின்னுட்டு எதுக்குடி எரிஞ்சிபோன புளியமரம் மாரி இருக்கிற இத்துப்போன இந்தப் பயலெ கட்டிக்கிட்டே….
ஆனாலும் கதையில் நம்மைக் கடைசி வரை அதிரச் செய்வது யாருக்கும் தெரியாமல் மலஜலம் கழிக்க வேண்டும் என்று எல்லாருடைய அதிருப்தியையும் மீறி, நகரத்தில் இருக்கும் செல்வமணியையே பிடிவாதமாய்க் கட்டிக் கொண்ட கோகிலா கடைசியில் அந்த சுதந்திரத்தை எய்துகிறாளா என்று அறிய மனம் ஏங்குகிறது.
எப்படி எப்படியெல்லாம் தினம் தினம் கஷ்டப்பட்டு மலம் கழிக்க அவஸ்தைப் படுகிறார்கள், வெட்கத்தை விட்டு எப்படி நிற்க வேண்டியிருக்கிறது, என்பதான அந்த அன்றாட அவலத்தை அவர் விவரித்திருக்கும் விதம் மனதைப் பிசைந்தெடுக்கிறது.
வீட்டையும், ஊரில் பலரின் விருப்பத்தையும் மீறி செல்வமணியைக் கட்டிக் கொண்ட கோகிலா கடைசியில் அவள் நினைத்த்தை எட்ட முடியாமல் போகும்போது அவளோடு சேர்ந்து நாமும் துயர்ப்படுகிறோம்.
கதவைத் தட்டி எம்மாம் நேரமா இருக்கிற? வா வெளியே…அடுத்த ஆளு நிக்குது பாரு….லேட்டு பண்ணுனா சண்ட வந்துடும்…என்று செல்வமணி கத்திய வேகத்தில் பயந்துபோன கோகிலாவின் தொடைகளின் வழியே சிறுநீர் இறங்கியது என்ற வரிகளில் இந்த தேசமே வெட்கப்பட்டுத் தலை குனிவதைப் போல் உணர்ந்தேன் நான். இமையம் அவர்களே, உங்கள் கையைச் சற்றுக் கொடுங்கள்…இப்படி ஒரு அற்புதமான படைப்பைத் தந்ததற்காக என் அன்பு முத்தங்கள்….. . -----------------------------
04 மே 2013
என். ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” (நாவல் வாசிப்பனுபவம்)
-------------------------------------------------------------------------------------------------------
சமீப நாட்களில் நான் தேடிப் படிக்கும் நாவல்கள் எல்லாம் மனதிற்குள் விசுவலைஸ் ஆகி திரைப்படங்களாகவே எனக்குள் விரிந்து கொண்டிருக்கிறது. க.நா.சு.வின் “அவரவர் பாடு“ நாவல் படித்தபோதும் இதே உணர்வுதான் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று என்.ஸ்ரீராமின் “அத்திமரச் சாலை” படித்து முடித்தபோதும் மனதிற்குள் படம்தான் ஓடியது.
நாவலைப் படித்து முடித்துக் கண்களை மூடிக்கொண்டு ஒரு சுழற்சியில் மொத்த நாவலையும் படிப்படியாய், அடுத்தடுத்த காட்சிகளாய் நினைத்துப் பார்த்தபோது, முதலில் மனதிற்குள் படர்ந்தது அட்டைப் படத்துடன் கூடிய அந்த இறுதிக்கட்ட என்கவுன்டர் நிகழ்வுதான்.
எடுத்த எடுப்பில் விரிந்து கிடக்கும் அந்தக் கறுத்து, நீண்டு, அடர்ந்த தார்ச் சாலையில் ஒற்றை ஆளாய் நிற்க வைக்கப்பட்டு குறிபார்க்கப்படும் சுப்ரமணியிடமிருந்து க்ளோஸப்பில் காமிரா பின்னோக்கிப் போவதுபோல் நகர்ந்து துப்பாக்கி முனையில் கொண்டு நிறுத்தி, மெல்ல இருட்டுப் பரவுவதாய்ச் சென்று ஒரு புள்ளியில் முடித்து, கதையை ஃப்ளாஷ் பேக்கில் கொண்டு செல்ல வேண்டும் என்பதாய் என் மன ஓட்டத்தில் திரைப்படம் விரிந்தது. கதையின் ஆரம்பத்திலிருந்து பாத்திரங்களையும், கதை நடக்கும் இடங்களையும் சம்பவச் சுருக்கங்களையும் குறித்து வைத்துக் கொண்டு, நாவலை மனதில் நிறுத்திக் கொண்டே நகர்ந்து, படித்து முடித்தோமானால் மொத்த நாவலும் மனதில் நின்று போகும். நிறையக் கற்பனை உள்ள மனம் என்றால், எப்படிச் சொன்னால் நன்றாக இருக்கும் என்கிற திரை வடிவம் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கும். அப்படித்தான் இந்த நாவலை வடிவமைக்க வேண்டும் என்று தோன்றியது எனக்கு. ஆனால் ஒன்று. இதை வணிக ரீதியிலான படமாய்க் கொடுப்பதை விட, கலைப்படமாய் ஆக்கினால்தான் நாவலின் கட்டுமஸ்தான வடிவம் அப்படியே திரையிலும் கிடைக்கும். குறும்படமாகச் சொல்வதற்கு வழியில்லை. சுமார் ஒன்றரை மணி நேரப் படமாகச் சொல்லி விட முடியும். அப்படியான ஒன்றைத்தான் வணிக ரீதியாகச் சிந்திக்கும்போது, அங்கங்கே பாடல்களையும், குத்து ஆட்டத்தையும் சேர்த்து, இரண்டேகால் மணிக்கு நகர்த்தி விடுகிறார்கள். இந்தக் கதையையும் அப்படிச் செய்ய வாய்ப்பு உண்டுதான். ஆனால் எப்படிச் செய்தால் இறுக்கம் குறையாது பார்வையாளனின் மனதில் படியும் என்று யோசிக்கையில் கலைப்படமே சாத்தியம் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே அடுத்தடுத்துத் தவறுகளை நோக்கிப் போகக் கூடியவனின் வாழ்க்கை எப்படியெல்லாம் சிதைந்து சின்னா பின்னமாகிப் போகிறது என்பதாயும், செய்த, செய்கின்ற தவறுகளின் விளைவுகளை உணர்ந்திருந்தும், அவற்றிலிருந்து விலக இயலா நிலை ஏற்பட்டுப் போவதும், அதற்காகவே தவறுகள் மேலும் மேலும் தொடர்ந்து கொண்டிருப்பதுவும், தவறான சேர்க்கையும், அதற்கான சூழலும், அந்தச் சூழலுக்கு எளிமையாக அடிமைப்பட்டுப் போகும் மனமும், எதற்காக இதுவெல்லாம்? என்று கேள்வி விழும்போது அதுநாள்வரையிலான தவறுகள் இனி உன்னை விடாது என்ற பழி நிகழ்வுகளும், சின்னச் சின்னத் தவறுகள் பெரிய பெரிய கொலைகளுக்கு வழி வகுத்து ஒருவனின் மொத்த வாழ்க்கையும் சிதைந்து போய்விட,இனி அவ்வளவுதான் என்ற விரக்தியில், இதெல்லாவற்றிற்கும் காரணம் அவன்தானே என்று இறுதியாய் ஒரு கொலையை மேற்கொண்டு அத்தோடு தன் வாழ்வும் முடிந்து போகும்தான் என்று தெரிந்திருந்தும், எங்காவது கண் காணாத இடத்திற்குப் போய்விடுவோம், புது வாழ்வு காண்போம் என்று புறப்படும் பேதமையும், குற்றங்கள் துரத்தியடிக்க இறுதியில் அவன் முடிவு தானாகவே அவனுக்கு வந்து சேர்கிறது.
மனதைத் தகிக்கும் வேதனை பெற்றெடுத்த தாயின் சோகம். மகன் என்னதான் தவறு செய்தாலும், அதிலிருந்து அவனை மீட்டு, அவன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்துவதைக் கண்ணாரக் கண்டு களிக்க வேண்டும் என்று துடிக்கும் துடிப்பு. வேணான்டா கண்ணு நமக்கு, தப்புத் தண்டா ஆகாதுடா சாமி… என்று கெஞ்சும் அந்தப் பெற்ற மனம் கடைசி வரை அவனை விட்டு விலக மறுக்கிறது.
ஆனாலும் இப்படியான ஒருவனுக்கு இறுதி எப்படி அமையுமோ அந்த முடிவுதான் அமைந்து போகிறது சுப்ரமணிக்கும்.
“இப்போது எனக்குப் பயம் சிறிதும் இல்லை. முடிவு தெரிந்து விட்டது. நிச்சலனமாகவே நின்று கொண்டிருந்தேன். விழித்து போலீஸ்கார்ர்களைப் பார்த்தேன். பிஸ்டல் நீட்டப்பட்டுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் இந்த அத்திமரச்சாலை வெறிச்சோடி விடும். நானும் அத்திப் பழம் போல் விழுந்து நசுங்கிக் கிடப்பேன். ஏனோ எனக்கு அக்கணத்தில் நிறைமாத கர்ப்பத்துடன் ரோஸ்மேரி அசைந்து அசைந்து நடந்து வருவதுபோல் ஒரு சித்திரம் ஞாபகத்தில் எழுந்தது. கண் கலங்கிற்று.”
ஸ்ரீராமின் கதை சொல்லும் பாணியும், சூழல் வர்ணிப்பும், காட்சிகளைப் பிம்பங்களாய் நம் முன்னே அழகாய் நகர்த்திச் செல்கின்றது. கொலை கொள்ளை மேற்கொள்பவர்களின், கூலிப் படை வைத்திருப்பவர்களின் பாஷைகளும், அவர்களின் வாழ் முறையும், தொடர்ந்து தவறுகளே செய்து கொண்டிருப்பவர்களின் புத்தி எப்படி வேலை செய்யும் என்கிற புனைவுகளும், அப்படியே கூடஇருந்து பார்த்து, அனுபவித்து எழுதியது போன்றதான உணர்வினை வாசகனுக்கு ஏற்படுத்துகிறது.
புத்தகத்தின் பின் அட்டையில் ஸ்ரீராமின் புகைப்படத்தைப் பார்க்கும்போது, இந்தப் பையன் அந்தப் பகுதிகளுக்கெல்லாம் சென்றிருக்க முடியுமா? அந்த அனுபவங்களையெல்லாம் உடனிருந்து உள்வாங்கியிருக்க முடியுமா? அல்லது பல்வேறு வகையிலான தொடர்ந்த வாசிப்புப் பழக்கத்தில் இத்தனை துல்லியமாய் எழுதுவது சாத்தியமா? என்பதாக நம் எண்ண ஓட்டங்கள் தவிர்க்க முடியாததாகிறது.
காட்சிப்படுத்தும் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது. இலக்கிய ஆர்வலர்கள் ஸ்ரீராமை அறிவார்கள். சிறந்த வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்தும் இந்நாவல் அனைவராலும் படித்து சுவைக்கப்பட வேண்டியது. தோழமைப் பதிப்பகம் இந்நாவலை மேலும் இரண்டு குறுநாவல்களோடு சேர்த்து அழகிய பதிப்பாக வெளியிட்டிருக்கிறது.
எளிய வாழ்வின் முடிச்சுகளைத் தேடி மழையின் தண்மையையும், வெயிலின் வெம்மையையும், திரியும் ஸ்ரீராமின் தனிமை நம்மிடம் ஆசுவாசம் கொள்கிறது என்கிற அறிமுகம் கவனிக்கப்பட வேண்டியது.
-------------------------------------------
03 மே 2013
02 மே 2013
25 ஏப்ரல் 2013
க.நா.சு. வின் “அவரவர் பாடு” நாவல் வாசிப்பனுபவம்
----------------------------------------------------------------------------------------------
,படிப்பதும், படிக்காததும் அவரவர் பாடு.
---------------------------------------------------------------------
சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து அதற்கு கண், காது, மூக்கு, கால், மனம், காலம் என்று எல்லாம் சேர்த்து “அவரவர் பாடு” என்கிற இந்நாவலை எழுதினேன். இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை உண்டு என்கிறார் க.நா.சு.
க.நா.சு. நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக நற்றிணை பதிப்பகம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள நாவல் இது.
இன்னும் பல மர்ம நாவல்கள் எழுதிப் பார்க்க ஆசை என்று சொல்கிறார். எழுதிப் பார்க்கிறேன். அது நன்றாய் வருவதும், வராததும் சொல்வதற்கில்லை என்பதாயும், படிப்பதும், படிக்காததும் உங்கள் பாடு என்பதாயும் க.நா.சு. பாணியிலேயே இதைக் கொள்ளலாம். அப்படி சாதித்து விட்டேன், இப்படி எழுதித்தீர்த்தேன் என்பதெல்லாம் கிடையாது. கடை விரித்திருக்கிறேன், கொள்வதும், கொள்ளாததும் உங்களின் விருப்பம், அது தன் தரத்தைப் பொறுத்துத் தானே நிற்கும் அல்லது காணாமல் போகும் என்பதே அது.
அவர் உயிரோடிருந்தால் நிச்சயம் இப்படித்தான் சொல்வார். ஏனென்றால் எழுதியது யார் என்று பார்க்காது, எழுத்து என்ன சொல்கிறது, அந்தப் படைப்பு நன்றாக வந்திருக்கிறதா, தரமானதா, இல்லையா என்று தாமரை இலைத் தண்ணீராய் விலகி நின்று, வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று விமர்சனம் செய்தவர் அவர். விமர்சனம் என்பது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி நின்றவர். அது தன் படைப்போ, பிறர் படைப்போ அதுபற்றிக் கேள்வி இல்லை. எழுத்து என்ன சொல்கிறது என்பதே விடை.
அம்மாதிரியான நிலைப்பாடே அவர்கள் மீது நாம் மதிப்புக் கொள்ளச் செய்யும் விஷயமாக இருக்கிறது. இங்கே நாம் என்று சொல்வது இப்படிப் பலரும் அவரது கருத்துக்கு ஒப்புமை உடையவர்களாகவே இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில்தான். ஒரு நல்ல புத்தகத்தை அப்படித்தான் அடையாளம் கண்டு கொள்ள முடியும். அந்த மதிப்பு மரியாதையின்பாற்பட்டே என்னதான், எப்படித்தான் எழுதியிருக்கிறார் பார்ப்போமே என்று வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது. அப்படி வாங்கி, ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டதுதான் இந்த ”அவரவர் பாடு”.
பின்னோக்கு (ஃப்ளாஷ் பேக்) உத்தியில் தீவிரமாக யோசித்து, படிப்படியாக வடிவமைத்து, முதலில் உதிக்கும் கதையின் ஆரம்ப மர்மம் விலகாதபடிக்கு, அடுத்தடுத்து தவிர்க்க இயலாமல் உருவாகும் மர்மங்கள் சேர்ந்து கொண்டே போவது போல் காட்சிகளை உருவாக்கி, பார்வையாளனை இருக்கையின் நுனியிலேயே வைத்திருப்பதுபோல் திரைக் கதையை அமைத்து, முழுத் திரைக்கதையும், அடுத்தடுத்த காட்சிகளும், வசனங்களும் மனதிற்குள்ளேயே மொத்தத் திரைப்படமாகப் பதிய வைத்துக் கொண்டு, படப்பிடிப்பு செய்தால், ஒரு சிறந்த மர்மக் கதையாக அந்த நாளில் வந்த ”அந்த நாள்” போல் ஒரு அழுத்தமான திரைப்படமாக உருவாகும் நல் வாய்ப்பு இந்நாவலுக்கு உண்டு.
ஒரு எழுத்தாளன் கதை கேட்பது போலவும், கதையின் எல்லா நிகழ்வுகளையும் அறிந்தவனும், அவற்றின் பலவற்றிற்கும் காரணமாக இருந்தவனும், மொத்தக் கதையையும் அவரிடம் மனமுவந்து சொல்பவனுமாகிய சம்பந்தம் என்கிற கதாபாத்திரம் வழியாக இந்த மர்ம நாவலை முன் வைக்கிறார் க.நா.சு.
அத்தனை நிகழ்வுகளையும் அடுத்தடுத்த காட்சிகளாய், படம் பிடித்ததுபோல் தெளிவாகச் சொல்லிச் செல்லும் சம்பந்தத்தின் கூடவே அந்த எழுத்தாளரோடு சேர்ந்து நாமும் பயணிக்கிறோம்.
மனிதனுடைய எல்லாத் தவறுகளுக்கும் ஆசைதான் பிரதானம். ஆசையின்பாற்பட்டு செய்யத் துணியும் முதல் தவறு, பின் அதனால் ஏற்படும் மோசமான விளைவு, அடுத்தடுத்த தவறுகளுக்கு வழி வகுக்கிறது. ஒன்றை மறைக்க ஒன்று, அந்த இன்னொன்றை மறைக்க வேறொன்று என்று ஆசை துன்பமாய் உருவெடுத்து ஆடுவதைக் கண்டு வெதும்பி, இந்த எல்லாத் துன்பங்களிலிருந்தும் எப்படியாவது விடுபட்டால் போதும் என்கிற முடிவில், இதுதான் கடைசி, இதற்குப்பின் எல்லாக் கஷ்டங்களும் விலகி விடும் என்கிற நம்பிக்கையில்,இறுதி என்று நினைத்துக் கொண்டு செய்யும் காரியங்களைத் தவறாகவே செய்து, பின் அதற்கும் ஏற்படும் மோசமான விளைவுகள், ஒருவன் வாழ்க்கையை எப்படியெல்லாம் இந்த உலகின் வெளிச்சத்திலிருந்து பிரித்து வைத்து ரகசியமான குகைக்குள்ளேயே நகர்த்திக் கொண்டு போகிறது என்பதை அருமையாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கும் நாவல் இது.
கதை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும்போது, நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் எல்லாவற்றையும் அந்த எழுத்தாளன் வழி விடுவித்துக் கொள்ள நாம் முயல்கின்றோம். இது இப்படித்தானே இருக்க வேண்டும், இருக்க முடியும் என்றும், அவர் இவர்தான் என்றும் நாம் ஊகிக்க முயலும் நேரங்களில் அது அந்த எழுத்தாளர் வழி நமக்குப் புலப்படுகிறது.
தெளிவான கதை சொல்லல். வார்த்தை ஜாலங்கள் இல்லாத யதார்த்தமான நடை. செய்திருக்கும் முயற்சியில் கடைசி வரையிலுமான ஆழ்ந்த ஈடுபாடு இதுவே இந்த நாவல்.
தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்துக்க நிகராக நிற்க வேண்டும் என்று கவலைப்பட்டு, பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கு மொழியாக்கம் செய்து தந்த பெருமகனார் திரு க.நா.சு.
அவரது இந்த அவரவர் பாடு நாவலைப் படிப்பதும், படிக்காததும், அவரவர்பாடு.
------------------------------------
21 ஏப்ரல் 2013
17 மார்ச் 2013
இந்திய ஞானம்–தேடல்கள், புரிதல்கள்–by ஜெயமோகன்
மதிப்பிற்குரிய திரு ஜெ. , வணக்கம். தங்களின் இந்திய ஞானம் தேடல்கள், புரிதல்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அறிமுகத்திலேயே ஒரு சந்தேகம் வந்து விட்டது. சிவனை வழிபடுவது சைவம். அதற்குள் பல வழிபாடுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல் விஷ்ணுவை வழிபடுவது வைணவம். சக்தியை வழிபடுவது சாக்தேயம். முருகனை வழிபடுவது கௌமாரம். கணபதியை வழிபடுவது காணபத்யம். சூரியனை வழிபடுவது சௌரம். இவற்றில் சைவமும், வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தன. சாக்தம் கேரளத்திலும் வங்காளத்திலும் மட்டும் நீடித்தது. மற்ற மதங்களில் காணபத்யமும் கௌமாரமும் சைவத்தில் இணைந்தன. சௌரம் வைணவத்தில் கலந்தது என்றுள்ளீர்கள்.சூரியனை வழிபடுவது சௌரம் என்றால் அதனை சிவனை வழிபடும் சைவர்களும் அனுதினமும் செய்யத்தானே செய்கிறார்கள். சூரிய வழிபாடு சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பொதுவான ஒன்றாக இருப்பதை நாம் காண்கிறோமே...! இதுபற்றி சற்று விளக்க முடியுமா? - உஷாதீபன்
அன்புள்ளஉஷாதீபன்,
உங்கள் கேள்வி முக்கியமானது. ஏனென்றால் அதிலுள்ள சிக்கலுக்கு சரியாகப்பதில் சொல்லமுடியாது
தொல்பழங்காலத்தில் அறுவகை சமயங்கள் இருந்துள்ளன என்று நூல்கள் சொல்கின்றன. அந்த அறுவகை சமயங்களின் பட்டியலிலேயே சின்னச்சின்ன வேறுபாடுகள் உள்ளன
நாம் ஆறாம்நூற்றாண்டுமுதல்தான் ஓரளவேனும் தெளிவாக வரலாற்றை எழுதமுடிகிறது. பத்தாம்நூற்றாண்டுக்குப்பின்னர்தான் முக்கியமான கோயில்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றை வைத்து நம் வரலாற்றை எழுதும்போது மூன்று பெருமதங்களையே காண்கிறோம். மற்ற மூன்று மதங்களும் இவற்றுக்குள் கலந்துவிட்டன. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் சாக்தமும் சைவமும் ஒன்றாயின
நாம் நமக்குக்கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பல ஊகங்களைச் செய்கிறோம். அதில் ஒன்றே சௌரம் வைணவத்தில் இணைந்திருக்கலாம் என்பது. காரணம் நடு இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் சூரியநாராயணர் ஆலயங்கள். தென்னிந்தியாவிலுள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடு.
ஆனால் சௌரத்தின் சில அம்சங்கள் சைவத்திலும் உள்ளன. உதாரணம் நவக்கிரக வழிபாடு. இதேபோல சௌரத்தின் பிற கூறுகள் எங்கெங்கே உள்ளன என ஆராய்வது பெரிய வேலை. அதிகம்பேர் செய்யாத பணி
அதேபோல சாக்தத்தின் செல்வாக்கு வைணவத்திலும் உண்டு என்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது ஸ்ரீதேவி பற்றிய வைணவ நம்பிக்கைகள் எல்லாம் சாக்த்ததில் இருந்து வந்தவை எனு சொல்கிறார்கள்
ஆனால் இவையெல்லாம் வரலாற்று ஊகங்களே. படிமங்களைக்கொண்டும் நூல்களைக்கொண்டும் இவை நடத்தப்படுகின்றன. திட்டவட்டமான முடிவுகள் அல்ல இவை
ஜெ
07 மார்ச் 2013
“நெஞ்சு பொறுக்குதிலையே…!”“அனுபவம்”
“எனக்கு…எனக்கு…எனக்குக் குடுங்க…சார்…எனக்குத் தரல…எனக்குத் தாங்க…எனக்குத் தாங்க….”
எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற பரபரப்போடும் பயத்தோடும் நீளும் கைகள். ஒருவர் தோள் மேல் ஒருவர் இடித்தும்…முன்னிற்பவரை அமுக்கியும், லேசாகத் தள்ளியும், கிடைக்கும் இடுக்கில் நுழைத்து விரல்களை உதறிக் கொண்டே நீளும் கைகள்.
எல்லாருக்கும் உண்டு…எல்லாருக்கும் உண்டு…தர்றேன்…தர்றேன்… அத்தனபேருக்கும் தந்துட்டுதான் போவேன்….
சார்…எனக்குத் தரலை…எனக்குத் தரவேல்ல…இந்தக் கைக்கு ஒண்ணு குடுங்க சார்…
சார்…சார்…என்ற அந்தத் தெளிவான அழைப்பு என்னை அதிசயப்படுத்தியது.
எல்லோரையும் முந்திக் கொண்டு முகத்துக்கு முன்னால் தெரிந்த அந்தக் கையைப் பார்த்தபோது சிரிப்புத்தான் வந்தது. இன்னும் கொஞ்சம் போனால் தாடையைப் பிடித்து நிமிர்த்திக் கேட்டு விடலாம். அத்தனை நெருக்கமாக நீண்ட தடியைப் போல் விரைப்பாக நீளும் கை. அணிந்திருந்த முழுக்கை உல்லன் பனியன் அப்படி முரட்டுத் தோற்றத்தைத் தந்ததோ என்னவோ…அது இதற்கு முன்னேயே ஒன்று வாங்கிக் கொண்டு விட்ட கை. இப்பொழுது இன்னொன்றிற்காக மீண்டும் நீண்டிருக்கிறது. அந்தக் கை மட்டுமல்ல. வேறு சிலவும்தான்.
அதில் தோன்றிய குழந்தைத்தனம்தான் மனதுக்குள் கசிவை உண்டாக்கியது. அதே சமயம் ஒரு பரிதாபத்தையும் ஏற்படுத்தியது. வாங்கிய கைகளே பல திரும்பத் திரும்ப நீளுகின்றன. தெரிகிறதுதான். வாங்கியாச்சுல்ல…எடுங்க…எடுங்க…சொல்ல ஏனோ மனம் வரவில்லை…
சட்டுச் சட்டென்று மனசு எப்படிக் கலங்கிப்போகிறது? இது எத்தனையாவது முறை? சொல்லத் தெரியவில்லை.
நோ சார்…எனக்கு ஷீகர்….வேண்டாம்……நீட்டிய கையால் மறுத்தார். எனக்குந்தான் சார்…எனக்குந்தான்….இன்னொருவர். எங்கே கொடுத்து விடுவாரோ என்று பயந்ததுபோல் ஒதுங்கி நின்றார் ஒருவர். பின்னுக்கு ஒருக்களித்துக் கொண்டார்.
அந்தக் கேக் எடுங்க… மைசூர்பாகு எல்லாருக்கும் கொடுத்தாச்சு…. –இங்கிருந்தே திரும்பி மேடைக்கருகே நின்ற நண்பரைப் பார்த்துச் சொன்னேன்.
எனக்குக் கேக்கு…எனக்குக் கேக்கு….திரும்பவும் பலவும் நீண்டன. பாக்ஸைப் பிரித்து ஒவ்வொரு கேக்காக எடுத்து நீட்டினேன். அவசரத்தில் அங்கேயும் இங்கேயுமாக நீண்ட கைகள் என் கையில் இருந்த கேக்கினைத் தானாகவே பறித்துக் கொண்டன. ஒருவர் பிடுங்கிக் கொண்டதும் அதுபோலவே செய்ய முயற்சித்த வேறு சிலர். விட்டால் பெட்டியில் உள்ள அத்தனை கேக்குகளும் கீழே விழுந்து சிதறினாலும் போயிற்று. பெட்டியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள முயன்றேன். அதற்குள் நாலைந்து கைகள் பெட்டிக்குள் போய்விட்டன.
ஊறீம்…ஊறீம்…எல்லாரும் போய் அவுங்கவுங்க இடத்தில உட்காருங்க…அப்பத்தான்….இல்லன்னா எடுத்திட்டுப் போயிடுவேன்…
யாரும் என் குரலைக் கேட்பதாயில்லை. கையிலிருந்த பெட்டியை அப்படியே கீழே வைத்தேன். மேலும் இரண்டு மூன்று கைகள் இப்போது அதற்குள் நுழைந்தன. கேக்கை எடுத்து மீண்ட கைகளில் க்ரீம் தீற்றியும், சிவப்புப் ப்ளம் பழம் உதிர்ந்தும் காணப்பட பழத்தைத் தேடி மீண்டும் உள்ளே நுழையும் கைகள்.
என்ன செய்வதென்று தெரியாமல் நின்றேன்.
பாலா…நீங்க வாங்க இங்க…விட்ருங்க…அவுங்களே எடுத்துக்குவாங்க….
மேடையில் அமர்ந்திருந்த குருஜி என்னைப் பார்த்துச் சொல்ல…மனமில்லாதவனாய் அங்கிருந்து அகன்றேன்.
குருஜி, இன்னும் இருவர்…எல்லோரும் அங்கே இருந்த பரபரப்பைப் பார்த்த வண்ணமிருந்தனர். ஜி முகத்தில் சாந்தமான புன்னகை.
என்ன இப்படி?- இருபது வயதிலிருந்து அறுபது வயதுவரை உள்ளவர்களாகத் தெரிந்தனர் அங்குள்ளோர். ஆனால் அவர்களின் நடவடிக்கைகள்?
இருக்கட்டும்… இருக்கட்டும்…சந்தோஷமாஇருக்காங்க…சுதந்திரமா இருக்காங்க…
சொல்லிவிட்டு என் கைகளை மெல்லப் பற்றி அழுத்தினார்.
அங்க பாருங்க…அவுங்க கோலத்த… என்றவாறே வாயைப் பொத்திக் கொண்டு மெல்லச் சிரித்தார். கையில் இருந்த கேக்கின் க்ரீம்கள் அனைத்தும் இப்பொழுது அவர்களின் மூக்கிலும், முகங்களிலுமாகத் தீற்றியிருந்தன. ஒருவருக்கு மூக்கிலே வளைவாக கிளி மூக்குபோல் க்ரீம் தொங்கிக் கொண்டிருந்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
ஆச்சு…எல்லாரும் எடுத்துக்கிட்டாச்சா….
ஆச்சு சார்…..
ஆச்சுங்கய்யா…..
கீழ மேல சிந்தாமச் சாப்பிடுங்க பார்ப்போம்….யாரு கைல முகத்துல ஒட்டாமச் சாப்டுரீங்களோ அவுங்களுக்கு நா ஒரு பரிசு தரப்போறேன்…
சரி சார்…சரி சார்… ஒட்டாமச் சாப்டுறோம் சார்….
என்னா பரிசுங்கய்யா…?
அதச் சொல்ல மாட்டேன்….நீங்க வேஸ்ட் பண்ணாம, கீழே சிந்தாமச் சாப்பிட்டு முடிங்க பார்ப்போம்…அப்பத்தான்…
சார்…சார்…பேனாத் தருவீங்களா….பேனா…?
ஓ! தருவேனே….உங்களுக்கு அதுதான் வேணுமா? தர்றேன்….
நல்லா எழுதற பேனாவாத் தரணும்…..
குருஜி மெல்லச் சிரித்தார்.
ஆமா சார்….நா எங்கம்மாவுக்கு லெட்டர் எழுதணும்….
சொல்லிக்கொண்டே அந்தக் கேக்கை வாயை அகலத் திறந்து லபக்கென்று உள்ளே திணித்தார் அவர்.
ஏய்…பார்த்து…பார்த்து….இப்டியா ஒரே வாய்ல அமுக்கிறது….? நெஞ்ச அடைச்சிக்கப் போவுது…
அவ்ளவ்தான் சார்…ஒரே வாய்தான்…இங்க பாருங்க…..? சொல்லிக் கொண்டே வாயை ஆவெனத் திறந்தார். இடது வாய் ஓரம் உமிழ் நீரோடு க்ரீம் வழிந்தோட குழந்தையாய் அவர் வாயை அகலத் திறந்த காட்சி என்னைச் சங்கடப்படுத்தியது.
சரி…எல்லாரும் சாப்டாச்சா…நல்லா இருந்திச்சா?
ஸ்வீட்டா இருந்திச்சு சார்….
ஸ்வீட்டா இருந்தாத்தானே சந்தோஷமா இருக்கும்…அதுனாலதான்…உங்க எல்லாருக்கும் இப்போ சந்தோஷந்தானே?
சந்தோசம்…சந்தோசம்….
சரி….இப்போ நா உங்ககிட்ட ஒண்ணு கேட்கப்போறேன்…இன்னைக்கு என்ன நாள்…?
தீபாவளி சார்……
வெர்ரிகுட்…கரெக்டா சொல்றீங்களே? தீபாவளின்னா என்ன? யாராவது சொல்லுங்க பார்ப்போம்…
நா சொல்றேன் சார்…நிறையக் கைகள் உயர்ந்தன.
பெரியவர், சிறியவர் வித்தியாசமில்லாமல் உயர்ந்த அந்தக் கைகளுக்குச் சொந்தக்காரர்களை நேருக்கு நேர் பார்த்தபோது மனது கலங்கியது.
.தீபாவளின்னா நரகாசுரனக் கொன்ன நாள் சார்….
நரகாசுரன்னா யாரு?
அவன் ராட்சசன் சார்…பெரிய்ய்ய்ய்ய்ய முரடன்….
அப்புறம்?
அவனக் கொன்ன நாள்தான் தீபாவளி….
ஓ! அப்டியா? அப்போ…?
அதத்தான் சார் நாம இன்னைக்குக் கொண்டாடுறோம்…
தீமையை அழிச்ச நாள் சார்…தீபம் ஏத்தி வெளிச்சத்தை உண்டாக்கி இருளைப் போக்கறோம் சார்…..- ஓரத்தில் இருந்த ஒரு இளைஞனின் அமைதியான பதில்.
பலே…பலே…பலே…. – எல்லோரும் பலத்துக் கை தட்டினர்.
இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.
ஜி…இவ்வளவு தெளிவாப் பேசறாங்களே…?
அப்டித்தான்…பெரும்பாலும் அப்டித்தான்னு வச்சிக்குங்களேன்…ஆனா சில சமயம் இவங்களோட ஆர்ப்பாட்டம்….நீங்க பார்த்ததில்லியே…?
இன்னைக்குத்தானே வர்றேன்…
தாங்க முடியாதாக்கும்….அப்பல்லாம் நாம இங்க நிக்கவே முடியாது…
ஏன்? ஏன் அப்டிச் சொல்றீங்க…?
பூசைதான்…அன்னைக்கெல்லாம்…இல்லன்னா அடங்கமாட்டாங்களாக்கும்…
பூசைன்னா…? சாமி பூஜையா….? அமைதியா அப்டியே தியானத்துல உட்கார்த்திடுவாங்களா?
நோ…நோ…அதில்ல…நா சொல்றது…இதை….. – கையால் சைகை செய்து காண்பித்ததைப் பார்த்துக் கேட்டேன்.
அடியா? அடிக்கவா செய்வாங்க…?
அடின்னா நீங்க நினைக்கிறமாதிரி கொடூரமால்லாம் இல்லே…ரொம்பவும் கற்பனை பண்ணிக்காதீங்க…லிமிட்டா…அவுங்கள அடக்குறதுக்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு…..
எனக்கு என் தந்தையின் மூத்த சம்சாரத்தின் ஒரே பிள்ளையின் ஞாபகம் வந்தது. மூத்த அண்ணா அவர். அப்பப்பா…!!! அவரோடு என்ன பாடு பட்டது குடும்பம்? ஏற்கனவே வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்க, இந்தக் கொடூரம் தாங்கவே முடியாததாகி விட்டது. குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு மேல் அனுபவித்ததற்குப் பின்னால்தான் ஓய்ந்தது. ஆடிப் போனது மொத்தக்குடும்பமும். . அவருடைய சாவோடுதான் எல்லாம் முடிந்தது. விளக்கிச் சொல்ல ஆரம்பித்தால் அது நீளும் அனுமார் வால் போல். அந்த வேதனைகளைத் திரும்பவும் நினைவில் கொண்டு வந்து எல்லோரையும் சங்கடத்துக்குள்ளாக்க வேண்டுமா என்ன? குடும்பமே இப்பொழுதுதான் எல்லாம் தீர்ந்து மூச்சு விடுகிறது. விடுவது நம் மூச்சுதானா என்பது கூட இன்னும் உறுதிப்படாத நிலை.
வரிசைக் கடைசியில் உட்கார்ந்திருந்த அந்த மனநல மையத்தின் நிர்வாகியைக் கவனித்தேன். அவரின் பார்வை அவர்களின் மேல் கூர்மையாய்க் குவிந்திருந்தது. வந்ததிலிருந்து இதைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நல்ல நாளும் அதுவுமாய் ஏதாவது ஏடாகூடமாய் ஆகிவிடக் கூடாதே என்று நினைக்கிறாரோ என்று தோன்றியது. இடது கோடியில் இருந்த ஒருவர் தனக்கு முன்னால் அமர்ந்திருந்தவரின் முதுகுப் பக்கம் தன்னை வெகுவாய் மறைத்துக் கொண்டு லேசாகத் தலையைப் பக்கவாட்டில் நீட்டி நீட்டி அந்த நிர்வாகியையே கவனித்துக் கொண்டிருந்தார். அவரின் பார்வையில் அப்படி ஒரு மிரட்சி. இமைக்காத பார்வை.
இவர் அவரையே கவனிக்கிறாரா தெரியவில்லை. குறிப்பாகச் சிலரை மாறி மாறி அவர் நோக்குவதாகவே பட்டது.
இன்னைக்கு தீபாவளின்னு சொன்னீங்கல்லியா….ஆகையினால உங்களோட இருக்கணும்னு நாங்களெல்லாம் டவுன்லேர்ந்து வந்திருக்கோம்…எங்களோட இருக்க உங்களுக்கு விருப்பமா?
விருப்பம் சார்…விருப்பம் சார்….விருப்பம் சார்…. –
ஓ.கே. சார்…ஓ.கே. சார்….பல குரல்கள் ஒரு சேர எழுந்தன. சிலர் எழுந்து நின்று சந்தோஷத்தின் அடையாளமாக ஜிங்கு ஜிங்கென்று குதித்தனர். சிலர் கையைக் கையை உயர்த்திக் காண்பித்தனர். உறா…உறா…உறா…என்று உற்சாகக் குரல் எழுப்பினர் சிலர்.
இன்னைக்கு உங்களையெல்லாம் பார்க்கிறதுக்கு ஒரு ப்ரொபஸர் வந்திருக்காரு….ஒரு தமிழ் அறிஞர் வந்திருக்காரு….ஒரு வியாபாரி வந்திருக்காரு…ஒரு ஆசிரியர் வந்திருக்காரு…ஒரு யோகா மாஸ்டர் வந்திருக்காரு…..அவுங்களுக்கு உங்களோடெல்லாம் பேசணுமாம்….உங்களப் பார்க்கிறதுலதான் சந்தோஷமாம்…உங்களுக்கெல்லாம் எப்டீ……?
எங்களுக்கும் சந்தோஷம்…எங்களுக்கும் சந்தோஷம்…. – சொல்லிக்கொண்டே ஒவ்வொருவராக எழுந்து வர…..
நீங்களெல்லாம் அப்டியே இருங்க….நாங்க வர்றோம்…உங்ககிட்டே….. – உற்சாகமாக எழுந்த அவர்களை ஜி சைகை மூலம் தடுத்தார்.
அதற்குள் பலரும் ஓடி வந்து கையைப் பிடித்துக் குலுக்க ஆரம்பிக்க,
உறாப்பி தீவாளி….உறாப்பி தீவாளி…உறாப்பி தீவாளி… - அவர்களின் சந்தோஷப் பிடியில் கையின் பயங்கரமான இறுக்கத்தை உணர்ந்தேன்
அந்த முகங்களில் ஒரு தீராத சோகம்…
சிரிக்கும் சிரிப்பில் ஒரு முழுமையற்ற தன்மை.
கொஞ்சங்கூட இமைக்காத கண்கள்.
உதட்டில் மென்மையான புன்னகைதான். ஆனாலும் அந்த வெறிக்கும் கண்களை ஏன் சந்திக்க முடியவில்லை?
உங்கள்ல யாருக்காவது பாடத் தெரியுமா?
நா பாடறேன் சார்…..
வாங்க…
எம்.ஜி.ஆர். பாட்டு சார்….
ஓ! அப்டியா…வாத்தியார் ரசிகரா?
குருஜியே இப்படிக் கேட்டது என்னவோபோல் இருந்தது.
அவருன்னா உசிரு சார் எனக்கு…
சரி…பாடுங்க….
உலகம் பிறந்தது எனக்காக…ஓடும் நதிகளும் எனக்காக…மலர்கள் மலர்வதும் எனக்காக….அன்னை மடியைப் பிரிந்தேன் எனக்காக….அன்னை மடியைப் பிரிந்தேன் எனக்காக….எனக்காக…எனக்காக….
அந்த வார்த்தையையே திரும்பத் திரும்பச் சோகமாகச் சொல்லும் அந்த முகம். மனதை என்னவோ செய்த்து.
பளீரென்று ஒரே சிரிப்பலைகள். என்ன எதிர்வினை இது?
என்ன சார்….என்னோட பாட்டு நல்லா இருந்திச்சா……
ஏன் அப்டிப் பாடறீங்க…? – ஜி கேட்டார்.
அது நானா எழுதினது சார்….உறாஸ்டல்ல இருக்கிறபோதே அப்டித்தான் பாடுவேன்….அப்புறம் டீச்சர் ஆனப்பெறவு கூடப் பாடியிருக்கேன்… ஒரு நா எங்கம்மா அந்த பி.டி. மாஸ்டரோட ஓடிப் போனாங்கல்ல…அன்னைக்குக் கூட இப்டித்தான் பாடினேன்….. சொல்லிவிட்டுக் உறா உறா வென்று அவர் சிரித்தபோது அந்த உறாலே அமைதி பூண்டிருந்தது.
சார்…சார்….வரிசைக் கடைசியில் இருந்து நிர்வாகி அழைப்பது கேட்டது. அங்கிருந்த மேனிக்கே வாயை மூடி அவர் சைகை செய்தார்.
சரி…நீங்க போய் உட்காருங்க…..எல்லாரும் பாட்டுப் பாடுனவருக்கு ஜோரா ஒரு தரம் கை தட்டுங்க…
பட்…பட்…பட்…என்று கோரஸாகக் கை ஒலி.
நா பாடறேன்…நா பாடறேன்…வேறு சிலர் எழுந்து வந்தனர்.
ஒருவர் வேகமாய் வந்து பராசக்தி படத்தில சிவாஜி கோர்ட் சீன் பேசுவாருல்ல…அத அப்டியே எங்க கெமிஸ்ட்ரி லேப் மாஸ்டர் பேசினா எப்டியிருக்கும்னு பேசிக்காட்டவா? என்று பேச ஆரம்பித்தார்.
அடுத்தாற்கோல் ஒருவர் எழுந்து பாட ஆரம்பித்தார்.
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே…
குழந்தைக் குரலைக் கொண்டு வருவதற்கு அவர் வாயை ஒரு மாதிரிக் கோணலாய் வைத்துக் கொண்டது பார்க்க வேடிக்கையாய் இருந்தது.
ஒருவர் எழுந்து திருக்குறள் ஒன்றைச் சொன்னார். இன்னொருவர் ஓடி வந்து மிமிக்ரி செய்து காண்பித்தார்.
மிமிக்ரி செய்பவர்களெல்லாம் சிவாஜி குரலைக் கொண்டுவந்ததை இவன் பார்த்ததேயில்லை. அன்று அங்குதான் கேட்டான். கட்டபொம்மன் வசனத்தையும், கர்ணனில் குந்தி தேவி இரண்டு வரம் கேட்கும்போது கர்ணன் மழையாகப் பொழியும் சிவாஜியின் அந்த உணர்ச்சி மிகு காட்சியை துண்டைத் தோளின் முன்னே போட்டுக் கொண்டு கையை அகல விரித்து அங்கும் இங்குமாய் நடந்து இடையில் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவர் பேசிய விதம், அவர் ஒரு சிறந்த நடிகர்திலகத்தின் ரசிகர் என்பதாக இவனை நினைக்க வைத்தது.
சரி…போதும் என்று ஜி சொன்னபோது அவர் மேலும் ஆர்வத்தில்…
சார்…இன்னொரு ஸீன்….இன்னும் ஒரே ஒரு ஸீன்…என்று கெஞ்ச, சரி…சரி…என்று தலையாட்டினார் ஜி.
இந்திரன் மாறு வேஷத்துல கிழவனா வந்து கர்ணனோட கவச குண்டலத்தை தானமா வாங்க வந்திருப்பார் சார்…வந்திருக்கிறது இந்திரன்தான்னு சூரியபகவான் சந்நிதில கர்ணனுக்கு அசரீரி கேட்டிடும்…அப்போ அந்தக் கிழவர்ட்ட வந்து அவரை ரெண்டு கையால பிடிச்சு உட்கார வைப்பாரு கர்ணன்…அதுக்கு முன்னாடி இடுப்புல கையை வச்சிக்கிட்டு அவரைச் சுத்திச் சுத்தி வந்து வசனம் பேசுவாரு…அந்த ஸீன்…அந்த ஸீன்…என்று விட்டு உட்கார்ந்திருந்த ஒருவரை எழுப்பி அவரை மாறுவேஷத்தில் வந்த இந்திரனாகப் பாவித்து,
தள்ளாத வயசு……
தளராத நோக்கம்….
என்று வசனத்தை அப்படியே ஒன்று விடாது அவர் சொல்லித் தீர்த்தபோது….இவன் அப்படியே தன்னை மறந்து அமர்ந்திருந்தான். அவனையறியாமல் கண்கள் கலங்கியிருப்பதை உணர்ந்தான்.
எது எதை இவர்கள் சார்ந்து இருந்தார்களோ
அதன்பாற்பட்டே மனப்பிறழ்வுக்கு ஆளாகிவிட்டார்களோ?
இத்தனை ஞாபகசக்தியா? உண்மையிலேயே மனநிலை சரியில்லாதவர்கள்தானா அல்லது எப்பொழுதாவதா? அப்படியென்றால் நிரந்தரமாக இவர்கள் இங்கேதான் இருந்தாக வேண்டுமா? என்றேனும் ஏற்படும் நினைவுப் பிசகல்களுக்குக் கூட உடனிருந்து அரவணைக்க உறவுகள் தயாரில்லையா? என்ன கொடுமை இது?
மாதத்துக்கு மினிமம் அமௌன்ட் ஐயாயிரம் ரூபா…ஆளுக்கு ஏத்தமாதிரிக் கூடும் குறையும்…
எல்லாம் வசதியானவங்கதான்…அதத்தான் இங்க நீங்க கவனிக்கணும்…எவ்வளவு பைசா ஆனாலும் கொடுக்கத் தயாரா இருக்காங்க எல்லாரும்…ஆனா யாரும் கூட வச்சுப் பராமரிக்கத் தயாரில்லை….பணத்தை முதலா வச்சு நடக்கிற சமூகம் எப்டியிருக்கும்ங்கிறதுக்கு இது ஒரு உதாரணம்… கிளம்பலாமா…?
மீண்டும் ஒவ்வொருவராகச் சொல்லிக் கொண்டு, கை குலுக்கி, பிரியாவிடை பெற்றுக் கொண்டு, அந்த மலையடிவாரத்தையும், பசுமையான மலையையும், சுற்றுப் புறச் சூழலையும், மூலிகைகளோடு கலந்து வரும் மருத்துவக் காற்றினையும் சுவாசித்தவாறே நாங்கள் வாயிலை எட்டியபோது, அதுவரை நாங்கள் கவனிக்காது எங்கள் பின்னாடியே வந்த ஒருவர் கடைசியாகக் கேட்டார்.
சார்…எங்கப்பாம்மாவைக் கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்களே….அவுங்க வரல்லியா….?
திரும்பிப் பார்த்தார் ஜி. என்ன பதில் சொல்லலாம் என்று நேரம் எடுத்துக் கொண்டதுபோல் இருந்தது அவரின் அமைதி.
வருவாங்க…வருவாங்க…கண்டிப்பா வருவாங்க….வர்றேன்னு சொல்லியிருக்காங்க... ஜி தயக்கமின்றிக் கூறியவாறே இவன் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டே வெளியேறினார். கூடவே மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
அடுத்த முறை வர்றபோது கண்டிப்பாக் கூட்டிட்டு வாங்க சார்….நா பார்க்கணும்னு சொல்லுங்க….கட்டாயம் வருவாங்க….நாலு வருஷம் ஆச்சு எங்கப்பாம்மாவப் பார்த்து…..ஃபோர் இயர்ஸ்….ஃபோர் இயர்ஸ்….முனகிக்கொண்டே எங்களுக்குக் கையைக் காண்பித்துக் கொண்டு நின்றார் அவர்.
ஆகட்டும்….ஓ.கே…..ஓ.கே….
திரும்பிப் பார்த்துக் கையசைத்துக் கொண்டே வெளியேறினார் குருஜி.
என்னவோ மனதில் விபரீதமாய்த் தோன்ற இவன் கேட்டான்.
ஜி…அவுங்க ஃபாதர் மதர் எங்கிருக்காங்க…?
குருஜி முகத்தில் எந்த உணர்ச்சியும் இன்றி அமைதியாகக் கூறினார்.
யு.எஸ்ல….!!!
-------------------------------------------
06 மார்ச் 2013
எழுத வைத்த எழுதுகோல்–பத்தி எழுத்து
என்னிடம் தான் பலரும் பேனா கேட்கிறார்கள். எத்தனை கூட்டம் இருந்தாலும் சரி. இந்த மூஞ்சியில் அப்படி என்னதான் இருக்குமோ அறியேன். மனிதர்கள் தங்களின் எல்லாச் செயல்களுக்கும் ஒரு கணிப்பு வைத்திருக்கிறார்கள். பஸ் ஸ்டாப் கேட்பது, தெரு கேட்பது, வங்கி உண்டுதானே?, போஸ்ட் ஆபீஸ் ஒர்க்கிங்க டே தானே? என்று பலவாறாக. நானும் கொடுத்து, மறந்து, இப்படியாக சுமார் இருபது பேனாக்கள் வரை விட்டிருக்கிறேன். அது ஒரு பெரிதல்ல. ஆனாலும் தொடர்ந்து கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். அதுதான் அங்கே முக்கியம். சார், பேனா வேணாமா? என்று கேட்டவர் சிலர். சார், பேனா வாங்காமப் போறீங்க? என்று சொன்னவர் சிலர். கொஞ்சம் இருங்க சார்... என்று காக்க வைத்தவர் சிலர். பார்த்துக்கொண்டே போனாப் போகட்டும் என்று விட்டவர் சிலர். எங்கும் எல்லாவிதமாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள். இரண்டு ரூபாய்ப் பேனா விற்பது எத்தனை வசதியாய் இருக்கிறது? - உஷாதீபன்
05 மார்ச் 2013
“கை”–குறுநாவல் by சுஜாதா–உயிர்மை குறுநாவல் வெளியீடு-16–ஒரு உணர்ச்சி மிகு வாசிப்பனுபவம்
இன்று படித்தது கை. ஆம். சுஜாதாவின் ”கை” குறுநாவல்தான். வரிசை எண்.16. உயிர்மை வெளியீடு.இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கும். அதைக் குறிப்பாக அவனே உணர்ந்து கொள்வதும், அதற்காகத் தன்னை அர்ப்பணிப்பதும்தான் எல்லோருக்கும் நிகழாத ஒன்றாகிப் போகிறது. இந்தக் கை-யின் சிவத்தம்பி தன் கையின் திறத்தை நன்கு உணர்ந்தவனாக இருக்கிறான். அதன் மேல் அப்படியொரு நம்பிக்கை அவனுக்கு. தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை. அத்தனை உற்சாகமான, மனச்சோர்வே இல்லாத ஒரு கதாபாத்திரம்.அவனுக்கான முயற்சிகளை விறுவிறுவென்று சொல்லிச் செல்லும் பாங்கில், ஐயோ, கடவுளே அவனுக்கு ஒரு வேலையைத்தான் கொடுத்துவிடேன் என்று நம் மனமும் வேண்டுகிறது. எந்தக் கையின் மீது அவன் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தானோ, அந்தக் கையினால் ஆன ஓவியத் திறமையே சம்பந்தமில்லாத ஒரு இடத்தில் வலிய அதைச் சம்பந்தப்படுத்தி வேலையைப் பெற்றுத்தர யத்தனிக்கிறது. முன் பணத்திற்காக ஓவியம் வரைந்து, வரைந்து, விற்றுத் தள்ளுகிறான். அஞ்சு, அஞ்சாகச் சேர்த்த துட்டை எடுத்துக் கொண்டு பறக்கையில்தான் விதி அவனை அடித்துப் போட்டு விடுகிறது. விபத்தில் சிக்கி கையை இழக்கிறான். அவனோடு சேர்ந்து நம் வாசகமனமும் சோர்கிறது. இரு கையுமில்லாமல் எப்படி வாழ்வது? தற்கொலைக்கு முயல்கிறான். மனைவியும், பெண் குழந்தையும் தடுத்து விடுகிறார்கள். கையில்லையே, எப்படி வாழ, உங்களை வாழ்விக்கவியலாத நான் இருந்தென்ன பயன் என்று புலம்பித் தவிக்கிறான். என் கையை எடுத்துக்கோப்பா என்று அந்தச் சிறு குழந்தை கைகளை நீட்டும் இடம் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறது.மீண்டும் பிறக்கும் நம்பிக்கையோடு வாழ்க்கை துவங்குகிறது. இப்போது சிவத்தம்பி பல்லில் கடித்த பென்சிலோடு தன் ஓவியத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். கதை சாதாரணந்தான் என்று கொண்டால், அதைச் சொல்லிய விதத்தை அத்தனை எளிதாக விமர்சித்து விட முடியாது. அது சுஜாதாவுக்கு மட்டுமே கைவந்த கலை. வரிவரியாய்ச் சொல்லிவிடலாம்தான். படித்து உணருவது போல் வராது. வேக நடையில் எல்லாமும் தானே வந்து விழ வேண்டும். செயற்கையாய்ப் புகுத்தியது போல் எங்கும் தோன்றினால் அங்கு படைப்பாளி தோற்கிறான். அந்த நடை, அந்த நகைச்சுவை, அந்தக் கேலி, கிண்டல், நையாண்டி, ஊடே ஊடாடி நிற்கும் மெல்லிய தவிர்க்க முடியாத சோகம், என்னதான் ஆகும் பார்ப்போமே என்று கைவிட முடியாத நகர்வு, இப்படிப் பலவும் நம்மைப் பாடாய்ப் படுத்தித்தான் விடுகிறது. ரசித்ததை, வாயார, மனதார, சொல்லவாவது செய்வோமே...!!!