30 ஜூலை 2012

"கீப்" வித் கான்ஃபிடென்ஷியல்" சிறுகதை

 
(உயிரோசை 30.07.2012 இணைய இதழ் வெளியீடு)


எனக்கு ஒரு கீப் உண்டு என்று நண்பன் மனோகரன் சொன்னபோதுதான் எனக்கே அது தெரிய வந்தது.

அடப்பாவீ…இப்டி ஒரு நெனப்போடயா இருந்திருக்கீங்க எல்லாரும்…என்றேன். கூடவே, யாரடா சொல்ற? என்று கேள்வியை வீசினேன். என் முகத்தில் சுத்தமான சந்தேகம் இருந்ததா என்று தெரியவில்லை. மனோ என்னைக் கூர்ந்து பார்த்த விதம் என்னை அசடாக்கிவிடுமோவென்று தோன்றியது.
பார்த்தியா, இதுதான வேணாங்கிறது…? எங்ளுக்குத் தெரியும்டா…சும்மா சீன் போடாத…! என்றான் மனோ. அவனின் வார்த்தைகள் எனக்குப் புதியவை.அவைகளை எங்கே அவன், அவர்கள் கற்றுக் கொண்டார்கள் ? அவர்களின் கூற்றுப்படி இப்போது சீனைக் க்ரியேட் பண்ணியவர்களே அவர்கள்தானே?
இல்லடா…உண்மைலயேதான் கேட்கிறேன்….யாரச் சொல்றீங்க அப்டீ…?
டேய்…சேர்த்து வச்சு சாத்துங்கடா இவன….என்றான் ராகவ். அவர்கள் எல்லோர் மனதிலும் என் சார்பாக யாரோ ஒருத்தி உட்கார்ந்திருக்கிறாள் என்று தெரிந்தது. எந்த இருட்டில் யாரோடு பார்த்தார்கள்? அப்படி இருக்கவே வாய்ப்பில்லையே? குருட்டுப் பயல்கள்…. அவள் குறித்து அவர்களுக்குப் பொறாமை இருக்குமோ என்று சந்தேகம் வந்தது.யாரென்று தெரிந்தால்தானே அந்தப் பொறாமை நியாயமானதுதான் என்பதை நான் நிர்ணயிக்க முடியும்? நானே இன்னும் கல்யாணம் பண்ணாதவன். கல்யாணம் முடிச்சவங்க வச்சிக்கிறதுதானே கீப்பு. இவங்க இதுக்கும் இந்தப் பேரச் சொல்றாங்க…மத்தவங்களுக்குத் தெரியாம வச்சிக்கிட்டாலே அதுக்குப் பேரு கீப்பு போல்ருக்கு…இருக்கட்டும்,இருக்கட்டும்…தப்பு செய்றதுக்கு எந்தப் பேரு இருந்தா என்ன…?
மண்டையைக் குடைய ஆரம்பித்தது. ஒரு வேளை திருச்சியிலே ஜோடி சேர்த்தார்களே…அந்த ராமலட்சுமியைச் சொல்கிறார்களோ….அவளோடு தொடர்பு விட்டுப் பல வருடங்கள் ஆயிற்றே…இந்நேரம் அவளுக்குக் கல்யாணம் ஆகி குழந்தை குட்டிகளோடு அல்லவா வாழ்ந்து கொண்டிருப்பாள்…? ஆனால் அடிக்கொருதரம் இந்த ஊருக்கு அவள் வந்து செல்கிறாள் என்பது மட்டும் உண்மைதான். அங்கேயே இருந்திருந்தால் வேண்டுமானால் கல்யாணம் பண்ணி வைத்திருப்பார்களோ என்னவோ…அப்படித்தான் பேச்சுக்களெல்லாம் போய்க் கொண்டிருந்தன.அவளே கூட இவள் எதற்கு வருகிறாள் என்று தோன்றும்படியாகத் தேவையில்லாமல் நான் தங்கியிருந்த லாட்ஜ் பக்கம் வர ஆரம்பித்தாளே….அவள் வீட்டுக்குப் பக்கத்தில் எத்தனையோ கடைகள் இருக்க, என் தங்குமிடத்தோடு இணைந்த அந்த உணவகத்திற்கு எதற்கு வலிய அத்தனை தொலைவு வர வேண்டும்? பொதுவாக ஆண்கள்தான் அலைவார்கள். இவள் ஏன் இப்படி? அதுவும் சரியாகக் காலை எட்டரை மணிக்கு முதல் இலை ஆளாய் நான் சாப்பாட்டுக்கு உட்கார்ந்திருக்கும்போது கன கச்சிதமாய்த் தலையை நீட்டுவாளே?உள்ளே வந்ததும் இன்றைக்கு என்ன ஸ்பெஷல் என்றுதானே அவள் பார்வை போக வேண்டும்? ஸ்டாலில் புதிதாக என்ன ஸ்வீட் அடுக்கப்பட்டிருக்கிறது என்று பார்க்காமல் சுற்று முற்றும் அதென்ன பார்வை ஓட்டம்? ஒரு பெண்ணுக்கு இது ஆகுமா? ஒரு பொம்பளை வேண்டுமானால் அப்படிப் பார்வையை ஓட்டலாம். இவள் பெண் ஆயிற்றே? இந்த வயசுக்கு இப்படி அதி சீக்கிரம் இங்கே வந்ததே தப்பு.பின்னும் இந்த நோக்கு நோக்கினால்? பரவிக் கிடப்பவர்களில் யாருக்கேனும் நோங்கி விட்டால்?
டேய் தம்பீ…யார்ரா அது…? நேர் கோட்டில் என்னை நோக்கி வந்த கேள்வி.மெய்யப்பன் அண்ணனைத் தவிர வேறு யாரால் இத்தனை துல்லியமாகக் கணிக்க முடியும்?
யாரண்ணே சொல்றீங்க…?
ட்ட்ட்ட்ட்டாய்….பார்த்தீல்ல….என்கிட்டயே டபாய்க்கிறியே….அதாண்டா உங்க டிபார்ட்டுமென்ட்லதான் வேல பார்க்குதாமே….
எனக்குத் தெரியாதண்ணே….நானே இப்பத்தான் இந்த ஊருக்கே வந்திருக்கேன்….
எப்ப….? நேத்தா…? இல்ல முந்தா நாளா…? ஏண்டா, வந்து ரெண்டு வருஷம் ஆச்சு…என்ன கத விடுறியா…?
இல்லண்ணே….எனக்குத் தெரியாது…அவ்ளவுதான்….
பெரிய கள்ளன்டா நீ…..பார்த்து இருந்துக்கடா…இந்த ஊரு ஒரு மாதிரி…ஆம்ம்மா….ஏதாச்சும் உண்டுன்னா எங்கிட்ட சொல்லிப்புடுறா…அப்புறம் நாந்தான் வந்து காப்பாத்தணும். அத மனசுல வச்சிக்க…

எல்லாரும் சொல்லிச் சொல்லியே உங்க மேல எனக்கு ஒரு கவனத்த ஏற்படுத்திட்டாங்க…சந்துருங்கிற உங்க பேரைக் கேள்விப்பட்டவுடனே பிடிச்சுப் போச்சு எனக்கு…மனசுல அப்டி ஒரு நெருக்கம்….நா வலியத்தான் வந்திருக்கேன்…இல்லன்னு சொல்லலை…என்னவோ ஒரு ஈர்ப்பு…அது எல்லாரும் தூண்டி விட்டு வந்திச்சா…இல்ல தானா வந்ததா தெரில…ஒரு பொண்ணு (நல்லவேளை அவள் தன்னைப் பொம்பளை என்று சொல்லிக் கொள்ளவில்லை. அந்த வார்த்தைக்கு அங்கே வேறு அர்த்தம் புழக்கமாய் இருந்ததே…!) என்னடா இப்படி வாலன்டிரா… வந்து நிக்கிறாளேன்னு கூட உங்களுக்குத் தோணலாம்….இப்டி வந்திட்டதுனாலயே நா மோசமானவன்னு நீங்க தயவுசெஞ்சு நெனச்சிடக் கூடாது….வாழ்க்கைல பீஸ்ஃபுல்லா செட்டில் ஆகணும்னு எல்லாரும் நினைக்கிறதுதான்…அதையேதான் நானும் மனசில வச்சிருக்கேன்…எங்க அப்பா அம்மா வசதியில்லாதவங்க…ரொம்பக் கஷ்டப்பட்ட குடும்பம். அவர் ஒருத்தரோட சம்பாத்தியத்துலதான் எங்க ஆறுபேரோட வண்டியே ஓடுது…எனக்குக் கீழ ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி உண்டு….அவன்தான் கடைசி….எல்லாரும் அடுத்தடுத்து குறுகின இடைவெளில பிறந்தவங்க…பையன் வேணும்ங்கிற ஆசைல நாங்க மூணும் பொட்டையாப் போயிட்டோம்னு அம்மா சொல்லுவாங்க….அப்பா உடம்பு முடியாதவரு…ஒரு லாரி ஆபீசுல வேலை பார்த்தாரு…சின்ன வயசுல வேலைக்குப் போனவரு அப்டியே இருந்திட்டாரு…அவுக கொடுக்கிற சம்பளம்தான் எங்க வீட்டுக்கு…நல்ல வேளை நா வேலைக்கு வந்திட்டேன்…இல்லன்னா எங்க குடும்பம் சீரழிஞ்சு போயிருக்கும்….இங்க நா உறாஸ்டல்லதான் இருக்கேன்…நீங்களும் நம்ம ஊருதான்னு கேள்விப்பட்டேன்…அதுலயும் ஒரு கவனம் வந்திடுச்சி….வெக்கமில்லாம இப்டிப் பேசுறனேன்னு கூட உங்களுக்குத் தோணலாம்….உங்களப் பார்த்தா யதார்த்தமானவராத் தோணிச்சு….ஆபீஸ்ல நீங்க இன்ஸ்பெக் ஷனுக்கு வந்திருந்தப்போ உங்களக் கவனிச்சேன்….யாருக்கும் தெரியாது…என் மனசுல ஏதோ நல்லபடியாத் தோணிச்சு….அதுனாலதான் நீங்க பேசற முன்னாடி நானே எல்லாத்தையும்…. தயவுசெய்து தப்பா எடுத்துக்காதீங்க…..
சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தது போலல்லவா கடகடவென்று அடுக்கி விட்டாள். இதுபற்றியெல்லாம் எந்தச் சிந்தனையுமே இல்லாமல் நான் இருக்க, இதே சிந்தனையாய் அலைந்தவள் போலல்லவா பேசுகிறாள்.என்ன பதில் சொல்வது? அந்த அளவுக்கு என்னிடம் அப்படி என்னதான் உள்ளது? எதை, எதனால் அதீதமாக ஈர்க்கப்பட்டு இப்படி வந்து நிற்கிறாள்?
என்னங்க நீங்க…இப்டி திடீர்னு முன்னால வந்து என்னென்னமோ சொல்றீங்க? இந்த ஊருக்கே நா புதுசு…எங்க ஆபீசுக்கும் புதுசு…நம்ம டிபார்ட்மென்ட் ஆபீசுக எத்தனையோ இருக்கு இங்க…யாரையும் தெரியாது எனக்கு. இனிமேதான் பழகணும்…அப்டியிருக்கைல நீங்க என்னையே குறிப்பா குறி வச்சாப்போல வந்திருக்கீங்களே? அவ்வளவு அவசரமா உங்களுக்கு? என்னங்க இது? ஒரு பொண்ணு போயி இப்டி அவசரப்பட்டுக்கிட்டு? உங்களுக்கே இது நல்லாயிருக்கா? எனக்கு என்ன சொல்றதுன்னே தெரிலிங்க…..
ஒண்ணும் அவசரமில்ல….மெதுவாவே சொல்லுங்க…ஆனா நல்ல முடிவா சொல்லுங்க…இப்டி நா தைரியமாப் பேசுறனேன்னு உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக் கூட இருக்கலாம்…சினிமால வர்றா மாதிரி யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் நிஜத்துலயும் அப்டி இருக்கலாமில்லியா…அப்டி நினைச்சுக்குங்களேன் …இந்த ஊருக்கு நீங்க வந்து ரெண்டு வருஷம் இருக்குமில்லியா…உங்களப்பத்தி எல்லாரும் சொல்றாங்க….ஆனா உங்களுக்குத்தான் மத்தவங்களப்பத்தி எதுவும் தெரில…பொதுவா தானுண்டு, தன் வேலையுண்டுன்னு இருக்கிறவங்களுக்கு மத்தவங்களப் பத்தியும், ஊரு உலகத்தைப் பத்தியும் தெரிஞ்சுக்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகும்தான்… அதுதான் அவுங்களோட ஒழுக்கத்தோட அடையாளம்னு குறிப்பா எத்தனைபேர் புரிஞ்சிப்பாங்க…நா அப்டித்தான் புரிஞ்சிக்கிட்டேன்னு வச்சிக்குங்களேன்…..நா வர்றேன்…..இந்த மந்த் என்டுல ரிவ்யூக்காக வருவீங்கல்ல…அதான் எங்க ஆபீசுக்கு….டேட் கொடுத்திருக்கீங்களே…அப்போ நாம சந்திக்கலாம்….. – போய்விட்டாள்.
படபடவென்று பட்டாசு வெடித்தது போல் பொறிந்து தள்ளிவிட்டு, என்ன ஏது என்று நின்று, நினைத்து, நிலைப்பதற்குள் பறந்து விட்டாளே…?
எந்த வேகத்தில் என்னிடம் எல்லாவற்றையும் கொட்டினாளோ அதே வேகத்தில்தானே அந்த யக்ஞராமனைக் கல்யாணம் செய்து கொண்டாள்.பெயருக்கேற்ற மாதிரியா அவன் இருந்தான்?
இந்த அணைக்கட்டு, பார்க் போன்ற சுற்றுலாத் தலங்களில் திரியும் காதலர்களுக்கு யார் சொல்லித் தருகிறார்கள் இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்று? இவர்கள் காதலிக்கும் முறை இவர்களின் சொந்த அனுபவத்தில் வந்ததா அல்லது சினிமாக்கள் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருப்பதை, கற்றுக் கொடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்துப் பார்த்து அப்படியே செய்கிறார்களா? யாரும் எளிதில் பார்த்து விட முடியாது என்பதான இடங்களை இவர்கள் எவ்வாறு அங்கே தேர்வு செய்கிறார்கள்?இலக்கியத்திலிருந்து இவைகளைக் கற்றுக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் அவைகளை நிச்சயம் இவர்கள் படித்திருக்க மாட்டார்கள்.கல்விச் சாலைகளிலும் அவை நயத்தோடு கற்பிக்கப்பட்டிருக்க நியாயமில்லை. ஒழுக்கமும், கட்டுப்பாடும், பண்பாடும் வாழ்வில் இரண்டு இடங்களில் இருந்துதான் நிச்சயம் வந்து சேர முடியும். ஒன்று கல்விக் கூடங்கள். இன்னொன்று வீடு. வாழ்வின் அடிப்படை ஒழுக்கங்களை வீட்டிலே சொல்லிக் கொடுத்தால்தான் ஒருவனின் வளர்ச்சியில் அன்றாட நியமங்களாக அவை படிந்து அவனை ஒழுக்க விதிகளிலிருந்து மாறாததொரு நல்ல பிரஜையாக உருவாக வைக்கும். இதை விட்டால் கல்வி கற்கும் பள்ளிக் கூடங்கள் இவற்றையெல்லாம் போதித்து,ஒருவனைத் தலை சிறந்த மாணவனாக உருவாக்குவதன் மூலம், அது அவனின் சொந்த வாழ்க்கைக்கும், அவன் வீட்டுக்கும், இந்த நாட்டுக்கும் பயனுள்ள ஒருவனாக வளர்ந்து தலை நிமிர்ந்து நிற்றல் என்கிற பயன்பாடாக அமையும்.
இந்த விதிகளினின்று முரண்பட்டதாகத்தானே இந்தக் காட்சிகளெல்லாம் கண்களுக்குத் தெரிகின்றன. பாழாய்ப் போன அவளின் காதல் இவன் கண்களுக்குப் பட வேண்டுமா? அன்று அந்தப் பேச்சுப் பேசினாளே?அப்படியானால் அது அப்படியெல்லாம் சொல்லி என்னை மடக்கிப் போடவா? இன்று இங்கே மடங்கி இப்படிக் கிடக்கிறாளே…இது இவளாக மடங்கியதா? அல்லது அவன் இவளை மடக்கினானா? இந்தப் பக்கம் என்னோடு பேசிக் கொண்டு அந்தப் பக்கம் அவனோடு படுத்துக் கொண்டிருந்தால் எப்படி?
ராமலட்சுமி, அப்படியென்னடீ உனக்கு அவசரம்? உன் குடும்பப் பிரச்சினை உன்னை அப்படி விரட்டுகிறதா? அங்கிருந்து விடுபட்டால் போதும் என்பதாக நிற்கிறாயா? ஏன் இத்தனை அவசரப்படுகிறாய்? அதற்குள் இவனை எப்படிப் பிடித்தாய்? என்னோடு பேசுவதற்கு முன் பிடித்ததா அல்லது என்னோடு பேசிக்கொண்டே இவனையும் கைவசம் வைத்திருந்தாயா? இரண்டில் எது சிக்குகிறதோ அது படியட்டும் என்று ஆப்ஷன் கொடுத்துத் காத்திருந்தாயோ? ராமலட்சுமி உன்னை நாமலட்சுமியாக அவன் ஆக்காமலிருந்தால் சரி. நல்லவேளை, கண்டேன் சீதையை என்பதைப் போல் கண்டேன் உண்மையை.
இன்று இந்த டேம் பக்கம் வரும் எண்ணமே இல்லை. சரியாகச் சொல்லப் போனால் நான் இந்த நேரத்தில் எனது அறையில் படுத்துக் கிடக்க வேண்டும். எது என்னை இழுத்து வந்து இங்கே நிறுத்தியது? எந்த நண்பன் வரவேமாட்டான் என்று நினைத்தேனோ அவன் திடீரென்று பிரசன்னமாக, அவனோடு நானும் ஊர் சுற்றக் கிளம்ப, அது இந்த அணைக்கட்டாக இருக்க, அங்கே நீ இப்படி அவன் மடியில் சயனித்திருக்க,அது என் கண்களில் பட, என்னே இறைவனின் கருணை…! என்னே இறைவனின் கருணை.
குட் பை ராம லட்சுமி…குட்பை….
நீ என்னடா எனக்கு குட் பை சொல்வது? நானே சொல்லி விட்டேனே…இந்தா பிடி என் கல்யாணப் பத்திரிகையை….
நீங்க அவசியம் மறக்காம என் கல்யாணத்துக்கு வரணும் சார்….ஏன்னா மொத மொதல்ல என் மனசு மனசார விரும்பினது உங்களைத்தான் சார்….உங்களைத்தான் நா தெய்வமா நெனச்சிருந்தேன்….அதுக்குள்ளதான் எங்க வீட்ல இப்டிப் பண்ணிட்டாங்க…..அவுருக்குக் கொஞ்சம் கால் ஊனம்….ஆனா நிறையச் சொத்து இருக்கு…காரு…பங்களா….எனக்குக் கூட அவுங்க வீட்லருந்து நூறு பவுன் நகை போடுறாங்க….நானே எதிர்பார்க்கல….எங்க வீட்ல எதுவும் செய்ய முடியாது…பொண்ண மட்டும்தான் அப்டியே கட்டுன சேலையோட அனுப்ப முடியும்னுட்டாங்க…..இது நாவரைக்கும் நா சம்பாரிச்ச காசக்கூடச் செலவு பண்ண முடியாதுன்னுட்டாரு எங்க அப்பா…ஏன்னா நிறையக் கடன் இருக்கு அவுருக்கு….அத்தோட மாசா மாசம் சம்பளத்துல பாதி கண்டிப்பா வேணும்னுட்டாரு….எல்லாத்துக்கும் சம்மதிச்சிட்டாங்க அவுங்க…அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு….இருந்தாலும் எங்க குடும்பம் கஷ்டத்துலேர்ந்து மீண்டாப் போதும்ங்கிற ஒரே எண்ணத்துல நா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேன்….நீங்க மறக்காம வரணும்……
அப்படி வலிய வந்த ஸ்ரீதேவியுடனேயே கைகோர்க்காதவன் நான். சட்டுப் புட்டென்று மடக்கிப் போடத் தெரியாதவன். நானாவது கீப் வைத்திருப்பதாவது? என்ன உளறுகிறார்கள் இவர்கள்?
சென்ட் த ஜீப் என்று தந்தி கொடுப்பதற்குப் பதிலாக சென்ட் த கீப் என்று தந்தி கொடுத்தார்களாம். ஒரு எழுத்து மாறிப் போனால் அர்த்தமே எவ்வளவு பாழ்பட்டுப் போகிறது?
Send the report regarding flood position. இங்கே flood – food ஆகி விட்டது.அதுபோல் ஸ்ரீதேவி பூதேவி ஆன கதைக்கே அதிராதவன், இவர்களின் சலம்பல்களுக்கெல்லாமா அரளப் போகிறேன்?

இரவு நான் அந்தத் தியேட்டரின் முதல் வகுப்புக் கடைசி வரிசையில்.என் அருகில் அவள். ம்ம்ம் தப்பு…தப்பு…அருகிலல்ல. மடியில். என்னடா இவன் இந்தப் போடு போடுகிறான் என்று நீங்கள் நினைக்கலாம்.அந்தத் தியேட்டரைத் தேர்ந்தெடுத்தது நான்தான். ஊருக்கு வெளியே உல்லாசமான திரையரங்கு. நகருக்குள் இருக்கும் மால்களின் தரத்திற்குக் கிஞ்சித்தும் குறைந்ததல்ல. ஆனால் கூட்டம்தான் இன்னும் வர மறுக்கிறது. அவர்களோ விடுவதாயில்லை. இன்றில்லாவிட்டால் நாளை வரும் என்கிற நம்பிக்கைதான். காசை எங்கே கொண்டுபோய் ஒளிப்பது என்று தெரியாமல் இஷ்டத்திற்குக் அள்ளிப் போட்டு காற்றாட விட்டு விட்டார்கள். அடிக்கிற காற்று கட்டடத்தையே அலேக்காகத் தூக்கி அரை மைல் தள்ளி வைத்து விடும்போல். யாரோ மத்திய அமைச்சரின் பினாமி என்றார்கள். வெறும் அய்ம்பது கிராம் பாப்கார்ன் இருபத்தஞ்சு ரூபாய் என்றால் பாருங்களேன். அவர்கள் தரத்திற்கு அங்கு பாப்கார்ன் விற்பதே கூடச் சற்றுக் கேவலம்தான். இருந்தாலும் அரசாங்கத்தின் விதிமுறைகளின்படி பத்து ரூபாய் டிக்கெட் கண்டிப்பாக வைத்தே தீர வேண்டும் என்று உள்ளதல்லவா? திரைக்கு நாலடி தள்ளி அந்த இருக்கையிலும் உட்கார்ந்து படம் பார்த்திருக்கிறேன்தான். இன்று அப்படி முடியுமா?
அருகிலே என் அஞ்சலி. என்னடா ஒரு அதிர்ஷ்டம். இன்று இந்த முதல் வகுப்பிற்கு என்னைத் தவிர வேறு யாருக்குமே டிக்கெட் இல்லையென்று விட்டார்களா? நான் ஒன்றும் மொத்த டிக்கெட்டையும் புக் பண்ணவில்லையே? அது சினிமாவில்தானே வரும். சுற்றியிருக்கும் இருட்டு சற்று பயத்தை உண்டு பண்ணினாலும், என் தேவதை மடியிலிருக்கையில் எந்த இருட்டு என்ன செய்யும்? எந்த பயம் என்னை எப்படி நெருங்கும்? ச்சூ…ச்சூ…
வீட்டுல சொல்லிக்கவேயில்ல…நா பாட்டுக்குக் கிளம்பி வந்திட்டேன்.தேடுவாங்க….எங்கன்னு தேடுவாங்க…அதுலதான் சிக்கல்…
போன் அடிச்சாங்கன்னா…?
அதுக்கு பயந்துதான் சிம்மைக் கழற்றி வச்சிட்டேன். தொடர்பு எல்லைக்கு வெளில வெளிலன்னுதானே வரும்…
அதத் தொடர்பு எல்லைக்கு வெளியாக்கிட்டு, இங்க உள்ளே ஆக்கிட்டியாக்கும்…? ஏண்டீ அப்டின்னு சந்தேகப்படமாட்டாங்களா…?
அது அப்டி வந்திச்சின்னா அதுக்கு நா என்னம்மா பண்றதும்பேன்….
வேறே ஏதாச்சும் யார்கூடவும் பேச வேண்டி வந்தா?
இப்பப்போய் அப்டிப் பேசினா, தேவையில்லாம வம்புலதான் மாட்டிக்கணும்…
ஏன் அப்டிப் பயப்படுறே?
எப்டியாவது ஏரியாவக் கண்டுபிடிச்சிட்டாங்கன்னா? எப்டியானாலும் உங்க ஃபோன்தான் இருக்கே…
அது இன்னும் வம்பாச்சே….
பேசினாத்தானே…..!
கையிலிருக்கும் என் மொபைலை இணுக்கிக் கொண்டே சர்வ சுதந்திர பாத்தியதையாய் என் மார்பில் தவழ்ந்தாள் அஞ்சலி. சே…கொஞ்சம் கூடப் பயம் கிடையாதா? இதென்ன தியேட்டரா? லாட்ஜ் ரூமா?அட…அட…உலகத்துல வேற என்னய்யா சொகம் வேணும்….இந்த நிமிஷ சொர்க்கம் வேறே யாருக்கும் கிடைக்குமா? என்ன ஒரு அதிர்ஷ்டம்?
இவபாட்டுக்கு இப்டிப் பொறளுறாளே…வேர்வை நாத்தம் அடிக்கலையா…?ஏ.சி. யை மீறி எனக்கே நாறுது? பிடிச்சிடுச்சின்னா எல்லாத்தையுமா மனசு பொறுத்துக்கிடும்?

என்ன படம் பார்த்தேன்….எதுவுமே மனசிலில்லை. அவள்தான் சொல்லிக் கூட்டி வந்தாள். ஏதோ லவ் சப்ஜெக்ட் என்று…அப்படிச் சொல்லிக் கூட்டி வந்தது தியேட்டருக்குத்தானே…படத்திற்கல்லவே…?அப்படித்தான் ஆகிப் போனது. பையில் வைத்திருந்த ஐநூறில் ஏதோ கொஞ்சம் சில்லரை தட்டுப் பட்டது. வீடு போய்ச் சேருமட்டுமாவது வண்டியில் பெட்ரோல் மிஞ்சுமா? வழியில் பஞ்ச்சர், கிஞ்ச்சர் ஆகிப் போனால்? ஏதேனும் பைசா வைத்திருக்க மாட்டாளா?
டார்லிங்….ஏதாச்சும் பணம் வச்சிருக்கியா கைவசம்…?
எதுக்குக் கேட்குறீங்க…?
இல்ல, சும்மாத்தான்….
அதான் நீங்க இருக்கீங்களேன்னு வந்திட்டேன்….பர்ஸே எடுத்திட்டு வரல்லியே….வெறும் ஐநூறோடவா வந்தீங்க…கஞ்சப் பிசினாறி…..
அடிப்பாவீ…! இவள் என் மீது பிரியமாகச் சுற்றுகிறாளா அல்லது என் பர்சைக் காலி பண்ணவா? இப்போதைக்கு இவன், ஓடுமட்டும் ஓடட்டும் என்று வந்திருக்கிறாளோ…? நான்தான் ஏமாளியா…? இந்தப் போடு போடுகிறாள்?
பலத்த சிந்தனையில் மாடியில் இருந்து கீழ் நோக்கிக் காலடிகளைப் பதித்த வேளையில் வாயிலில் அவன். அவனைச்சுற்றி யாரோ சில அவர்கள்.
அடக் கடவுளே…..தப்பிப்பதற்கு வேறு வழியும் இல்லையே….
வலப் புறமாக அவளை இழுத்துக் கொண்டு சற்றே இருட்டான பகுதியைப் பயன்படுத்தி சரசரவென ஒதுங்கினேன்.
அதே பாணியில், அந்தக் குறிப்பிட்ட ஒதுங்கு இருட்டிலிருந்து பூனையாய் வெளி வந்தான் அவன்.
நிமிடத்தில் நெருங்கிய அந்தக் கணம் மின்னலாய் அஞ்சலியின் கன்னத்தில் ஒரு பளேர். வெளியேறிக் கொண்டிருந்த அனைவரது பார்வையும் சடேரெனத் திரும்பியது. ஓடுகாலிக் கழுதை….ஆள் கிடைச்சாப் போதுமே…...
ரொம்பவும் பழைய வசை. உள்ளுரிலேயே திரும்பக் கிடைத்து விட்டவளைப் போய் இவன் ஏன் இப்படிச் சொல்லித் திட்டுகிறான்.கோபத்தில் எதுவும் பொருந்தாதோ?
என்னைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தரதரவென்று அவளை இழுத்துக் கொண்டு கூட்டத்தை இடித்துப் பிடித்துப் பிளந்து முன்னேறிக் கொண்டிருந்த அந்த அவன் மனோகரன். கூடப் பின்தொடர்ந்தார்கள் அந்தப் புது முகங்கள்.
நான் பின் தங்கி யோசித்து நின்றேன்.
அப்படியானால் அன்று மனோ சொன்ன அந்த அவள் யார்? வேறு யாராயிருக்கலாம்? அது சரி, ஆள் கிடைச்சாப் போதுமே என்றானே…அதற்கு என்ன அர்த்தம்?..
-------------------------------------------------------------




























































26 ஜூலை 2012

Russ Foundation–Madurai Gandhi Museum–Yoga Camp–22.07.2012

 

மதுரை காந்தி மியூசியம் யோகா வகுப்பு நண்பர்கள் கடந்த 22.07.2012 அன்று மதுரை நத்தம் சாலையில் 15 கி.மீ. தொலைவில் சத்திரப்பட்டியை அடுத்த Russ Foundation முகாமில் கலந்து கொண்ட நிகழ்வு

.110111213141523456789

23 ஜூலை 2012

அடடா…! சிறுகதை

clip_image002(உயிரோசை இணைய இதழ் – 23.07.2012 வெளியீடு)

"துணி வாங்கிட்டீங்களா…?" - சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான்.

பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்து விடக் கூடாது.அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய துணிகள். பிறகு வாங்கி வந்த இடத்திற்குப் பதில் சொல்ல முடியாது. பொல்லாப்பு வந்து விடும். ஒரு கையால் அதை ஜாக்கிரதையாய்ப் பிடித்துக் கொண்டே உழட்டிக்கொண்டே ஓட்டிப் போன அவர் "வாங்கிட்டேன் சாரே…" என்று பதில் சத்தம் கொடுத்தார்.

ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னும் அவரின் இந்த ‘சாரே’ மாறாமல் அப்படியே இருந்தது. ஸார் என்பதைத்தான் அப்படி நீட்டுகிறார். இது எந்த ஊர்ப் பழக்கம்? தெரியவில்லை.

ஆனால் ஒன்று. வாங்கிட்டேன் என்ற அந்தப் பதிலில்தான் எத்தனை உற்சாகம். எவ்வளவு சந்தோஷம்.

‘துணி வாங்கிட்டீங்களா?’ என்று கேட்டதன் மூலமாக, தான் சொல்லித்தான் இது நடந்திருக்கிறது என்பதாக அவன் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.ஆனால் உண்மையில் அது அப்படியல்லவே? தேவகி சொல்லியல்லவா அது நடந்திருக்கிறது! அவள் விருப்பத்தை மீறி என்ன நடக்கக்கூடும்?

"நாளைக்குக் காலைல வந்து துணி வாங்கிக்குங்க…அயர்ன் பண்ணிக் கொடுங்க…"

அலுவலகம் விட்டு வருகையில் அவள்தான் சொல்லியிருக்கிறாள்.எத்தனை நாள்தான் அவளும் பொறுப்பாள்?

"கஞ்சி போட்டு வைக்கிறேன்…வாங்கன்னு சொன்னேன்…இன்னும் வந்திட்டிருக்காங்க…ஒரு மாசமாச்சு…இன்னைவரைக்கும் ஆளைக் காணலை…என்ன நினைச்சிட்டிருக்கு அந்தம்மா? கல்யாணத்துக்குப் போறேன்…காட்சிக்குப் போறேன்னா சொல்லிட்டுப் போயிடலாமுல்ல? நாம வேறே ஏதாச்சும் அரேஞ்ஜ் பண்ணிப்போமில்ல? வரேன், வரேன்னுட்டு,ஒரேயடியா வராமயிருந்தா? எனக்கானா உடம்பெல்லாம் எரியுது இந்த வெயிலுக்கு…தாங்க முடியலை…அதான் காட்டன் சேலையைக் கட்டிண்டு போவோம்னு ஒண்ணு ரெண்டுன்னு கஞ்சி போட்டு ஏழெட்டு சேர்த்து வச்சிருக்கேன்…அந்தம்மா என்னைக்கு வர்றது? என்னைக்கு நான் அதைத் தேய்ச்சுக் கட்டுறது? அதுக்குள்ளேயும் சம்மரே கழிஞ்சிடும் போலிருக்கு…இவுங்க வசதிக்கு இஷ்டம் போல வருவாங்க…வச்சிருந்து வர்றபோது தூக்கிக் கொடுக்கணுமோ? அடிக்கிற வெயிலுக்கு பாலியஸ்டா;,ஷிஃபான்னு போடவா முடியுது? வியர்வையானா ஊத்துது! உடம்போட ஒட்டிக்கிது…பிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…"

அவளின் ஆதங்கம் நியாயமானதாய்த்தான் தோன்றியது. ஆனாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொறுக்கலாமே?

"சும்மாருங்க…என் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்…நாளைக்கு நா எதைக் கட்டிட்டுப் போறதாம்?"

"வர்றேங்கம்மா…எதிர்த்த வீட்டுக்கு வருவேன். அப்போ உங்க வீட்டுலயும் வந்து துணி வாங்கிக்கிடுறேன்…"

"மறந்துடாதீங்க…"

"அதெல்லாம் மறக்க மாட்டம்மா…நீங்கதான் என்னை மறந்துட்டீங்க…துணி குடுத்துக்கிட்டே இருந்தீங்க…திடீர்னு நிறுத்திப்புட்டீங்க…என்னன்னு தெரியல…வருஷம் ஓடிப்போச்சு…"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல…வாங்க…வந்து வாங்கிக்குங்க…"

இத்தனை நாள் என்னைப் போட்டு என்ன பாடு படுத்தினாள்? அப்பாடா!பிரச்சினை தீர்ந்தது.

எனக்கு அந்தப் பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

"என்னடா, சேர்வா வர்ற?"

"ஒண்ணுமில்லப்பா…"

"ஒண்ணுமில்லன்னா? என்னத்துக்கு மூஞ்சிய உம்முன்னு வச்சிட்டிருக்கே?"

"அதெல்லாமில்லே…"

"என்ன நடந்தது சொல்லு…யூனிபார்மை எங்கயாச்சும் மண்ணுல போட்டுட்டியா?"

"இல்லப்பா…நீ என்னைத்தான் குத்தம் சொல்லுவே…வேறென்ன தெரியும் உனக்கு?"

"பின்னே என்ன பண்ணினே சொல்லு…துணியைத் தேய்க்கக் கொடுத்தியா,இல்லியா?"

"கொடுத்தாச்சு…கொடுத்தாச்சு…"

"எதுக்குடா இம்புட்டு அலுப்பு? வாங்கிக்கிட்டான்ல…?"

"வாங்கிட்டான்…வாங்கிட்டான்…"

"அப்புறமென்ன?"

"அந்த ஆளு ரொம்ப அல்ட்ராம்ப்பா…"

"என்னது அல்ட்ரானா? இதென்ன பாஷைடா? அப்டீன்னா?"

"அப்டீன்னா…கிராக்கி பண்ணிக்கிறான்னு அர்த்தம்…இல்லடா கண்ணு…" -தேவகி.

"என்ன கிராக்கி பண்றான்? தேய்க்க முடியாதுங்கிறானா? வாங்கிட்டான்ல…"

"இதுக்குத்தான் சொல்றது…வீட்லயே அயர்ன் பண்ணிக்கலாம்னு…யாருக்கும் முதுகு வளைய மாட்டேங்குது…" - தேவகி.

"எனக்குத்தான் வளைய மாட்டேங்குது…நீ கொஞ்சம் வளைச்சுப் பார்க்க வேண்டியதுதானே…"

"நாந்தான் தெனமும் சமையக்கட்டுல வளைச்சிட்டிருக்கேன்ல…இதுக்கு நீங்கதா வளைக்கணும்…"

"உங்க சண்டைய விடுங்கப்பா…இந்த ரெண்டு துணியத் தூக்கிட்டு மாங்கு மாங்குன்னு அங்கேயிருந்து வந்திட்டியாக்கும்ங்கிறாம்ப்பா அவன்…"

தேவகி அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். தலையை வருடிக் கொடுத்தாள்.

"அப்டியா சொன்னான்? என்ன திமிர் அவனுக்கு…?" - தேவகியின் ஓங்கிய குரல்.

படபடத்த அவளை அமைதியாக நோக்கினேன் நான். ‘சரி…சரி…விடு…’

"என்ன நீங்க..விடுங்கிறீங்க…? துணி தேய்க்கக் கொடுத்தா பேசாம வாங்கிக்கிட வேண்டியதுதானே அவன் வேலை…அத விட்டுட்டு இதென்ன பேச்சு…"

"ஏய்…நீ என்ன? இதுக்குப் போயி இவ்வளவு டென்ஷனாறே? ஒவ்வொரு சமயம் அப்டித்தான்…அவன் என்ன டென்ஷன்ல இருந்தானோ…அன்றாடங்காய்ச்சி அவன்…ஏதோ சின்னப்பயதானேன்னு சொல்லியிருப்பான்…இதெல்லாம் ஒரு குத்தமா?"

"அதெப்படிங்க…அவசரத்துக்குத்தானே இந்த ரெண்டு துணி? யாராச்சும் பத்திருபதுன்னு தூக்கிக் கொடுத்தனுப்புவாங்களா? வீடு வீடா அவன் வந்துதானே வாங்கிக்கிறான்? தூக்கிட்டுப் போய்க் கொடுக்கிறோம்னா அதை அவசரம்னு புரிஞ்சிக்க வேண்டாமா? இப்டியா பேசுறது? ஒரு நாளைக்கு ரெண்டு துணி கொடுத்தா அதென்ன இளப்பமா? கேவலமா? எல்லா நாளுமா பத்திருபதுன்னு கொடுக்க முடியும்? ரெண்டே ரெண்டு. அதுவும் யூனிபார்ம்னுதானே கொடுத்தனுப்பினது? வாடிக்கையான அவன் இதைச் சொல்லக் கூடாதுல்ல…? ரெண்டு துணிக்கான காசு அஞ்சு ரூபான்னா அது பணமில்லியா? அதுக்கு மதிப்பில்லியா? எந்த வீட்லயும் இந்த மாதிரிஎன்னிக்காச்சும் ரெண்டு துணி கொடுத்தே இருக்க மாட்டாங்களா? எல்லாரும் எப்பவும் இருபது, முப்பதுன்னுதான் துணி கொடுப்பாங்களாக்கும்?அப்பத்தான் இவுரும் வாங்குவாராக்கும் அய்யா? இதெல்லாம் வேண்டாத பேச்சில்ல?"

அசந்து போனேன் நான். இதற்கு இவ்வளவு அர்த்தங்களா? வாயடைத்துப் போனேன்.

"எப்பவுமே ஒருத்தரையே சார்ந்து இருந்தா இப்படித்தாங்க…இதெல்லாம் வரத்தான் செய்யும்…இதுக்கு ஒரு வழி பண்ணினாத்தான் ஆகும்…"

சொன்னாள். சொன்னதுபோல் செய்தும் விட்டாள்.

எங்கு போய் ஆளைக் கூட்டி வந்தாளோ? எப்படித் தேடிக் கண்டுபிடித்தாளோ?யாரிடம் சொன்னாளோ? தெருக்கோடியில் பரந்த மரத்தடியில் ஒரு அயர்ன் வண்டி. ஆளா இல்ல…? அவளே சொல்லிக் கொண்டாள்.

ஏம்மா துணி கொடுக்கலை…? அவனும் கேட்கவில்லை.

எத்தனை வருடங்கள் ஓடிப் போயின? வாசலில் வண்டியை ஸ்டாண்ட் போட்டுப் பூட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தவன்தான்…அதற்குள் அந்தச் சத்தம்.

"யம்மா…"

"யாரு…?"

"அயர்னுங்க ஸார்…"

"அயர்னா? வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தேன்.

"அடடே…! நீங்களா? வாங்கம்மா…"

"ஆமாங்கய்யா…துணி தர்றீங்களா…?"

"துணியா…ஓ..தர்லாமே…தேவகீ…ஏய் தேவகி….! அந்தம்மா வந்திருக்காங்க…" -பதட்டத்தில் என்னவோ சொன்னேன். இதென்ன கஷ்டம், ஆக்கப் பொறுத்து ஆறப் பொறுக்காத கதையாய்…

"துணி இல்லன்னு சொல்லுங்க…" உள்ளேயிருந்து சைகை மூலம் தெரிவித்தாள் தேவகி.

"துணி இல்லியாமேம்மா…"

"இல்லீங்களா…? சரிங்கய்யா…எங்கண்ணாச்சி பொண்ணுக்கு கலியாணம்…அதுக்குப் போயிட்டேன்…அதான் வரமுடிலீங்கய்யா…"

"அப்டியா? ஒரு மாசம் போல ஆச்சு போலிருக்கு?"

"ஆமாங்கய்யா…எங்க அத்தைட்ட கூடச் சொல்லி விட்டிருந்தேன்…வெவரம் சொல்லிப்புடுன்னு…அது வீடு தெரிலன்னு திரும்பி வந்திடுச்சி….சரிங்கய்யா…அடுத்த வாரம் வாரேன்…எடுத்து வச்சிருங்க…தேய்ச்சுத் தாரேன்…" - சொல்லி விட்டு நகர்ந்தது அது.

உள்ளே வந்தேன்.

"துணிகளை அந்தாள்ட்ட கொடுத்தாச்சுன்னு சொல்ல வேண்டியதுதானே?ஏன் இப்படிப் பயப்படுறீங்க…?"

"எனக்குப் பயமான்னு கேட்குறியே? நீ வந்து சொல்ல வேண்டியதுதானே?உள்ளேயிருந்து சைகை காண்பிக்கிறே?"

"எனக்குப் பயமா? எதுக்கு? பயமா அல்லது தயக்கமா?"

மீண்டும் வாசலில் சத்தம்.

"அய்யா…அம்மா கஞ்சி போட்டு எடுத்து வைக்கிறேன்னு சொல்லியிருந்தாங்கய்யா பாவம்…சேலைக இருக்குதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கய்யா…"

"சொல்லுங்க…சொல்லுங்க…சொல்லிடுங்க…" உள்ளேயிருந்து விரட்டினாள் தேவகி.

"நீங்க வரலேன்னுட்டு அடுத்த தெருவுல ஒருத்தர் இருக்காருல்ல…அவர்ட்ட கொடுத்து வாங்கியாச்சு…"

"அப்டீங்களா? ஆகட்டுங்கய்யா…இருக்கட்டும்…அடுத்த வாரம் வாரேன்…எடுத்து வச்சிருங்க…தேய்ச்சுக் கொடுக்கிறேன்…என்னங்கய்யா…கண்டிப்பா வந்திடுறேன்…இனி எந்த வேலையுமில்ல…மறக்காம எடுத்து வச்சிருங்க…அம்மாட்ட சொல்லிடுங்க…உள்ளாற வேலையா இருக்காக போலிருக்கு…அவுக என்னைத் தவிர வேறே யார்;ட்டயும் கொடுக்க மாட்டாக…நாந்தேன் வந்து வாங்கிட்டுப் போவேன்…அவுக சொல்ற பிரகாரம் செய்து கொடுப்பேன்…அதுனால எங்கிட்டத்தான் கொடுப்பாக…அம்மாட்ட மறக்காம சொல்லி வையுங்க சாமி….அடுத்த ஞாயித்துக்கெழம வந்திடுறேன்…"

எத்தனை நம்பிக்கை? அந்தம்மா போய்க் கொண்டிருந்தது.

அது சரி! கடைசியில் பழி எனக்குத்தானா?

அடுத்த வாரம் யாரிடம் கொடுப்பது?

"யம்மா…அயர்ன் துணி கொண்டு வந்திருக்கேன் தாயீ…"

வாசலில் அவன் குரல்!!

------------------------------------------------------------------------------------

14 ஜூலை 2012

“பந்து பொறுக்கி…” சிறுகதை

grandfather

இன்றோடு ஆறு நாட்கள் ஆயிற்று. மனம் கணக்குப் போட்டது ராமமூர்த்திக்கு. இந்த ஆறு நாட்கள் ஆறு மாதங்கள் போல் நீண்டு விட்டது அவருக்கு.

வராண்டாவில் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை எடுத்துப் போட்டுக் கொண்டு சாலையைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கிறார். முகத்தில் அத்தனை சோகம். அது தெரிகிறதோ இல்லையோ மனதில் அப்பியிருந்தது. வெறித்துக் கிடக்கும் வீதி. மயான அமைதி.

உள்ளே தேவகி உறாலில் உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருக்கிறாள். பொழுதை மிகச் சுலபமாக நகட்டி விடுகிறாள் அவள். தனக்கு மட்டும் ஏன் அப்படி இருக்க மாட்டேனென்கிறது? கிடந்து ஏன் இப்படி அலைபாய்கிறது?

ங்கிள்….பந்து விழுந்திருச்சி…..

போய் எடுத்துக்கோடா கண்ணா….. - வாசல் கேட்டை மடால் என்று திறந்து கொண்டு திடுதிடுவென்று மாடிப்படியில் குதித்து ஓடும் அந்தக் குட்டிப் பையனை நினைத்துக் கொள்கிறார்.

டே…டேய்…மெதுவா…மெதுவா…சடக்குன்னு படி தவறிடுச்சின்னா பல்லு போயிரும்…அடி பட்டிடும்….பார்த்துடா ராஜா….விழுந்துடுவப்பா…உண்மையான வருத்தத்தில் வரும் வார்த்தைகள்.

ஓ.கே. அங்கிள்……

அடப் பெரிய மனுஷா…பதிலப் பாரு…ஓ.கே. யாமே? – புள்ளி மானாய்த் துள்ளி ஓடும் அந்தப் பொடிப்பயல் விதுரைப் பார்க்கிறார். அவன் பெயர் விதுர் என்பதே இவருக்கு ரொம்பவும் புதுமையாய் இருந்தது. மகாபாரதத்தில் விதுரர் கதாபாத்திரம் எத்தனை உன்னதமானது? இந்தப் பெயர் வைக்க வேண்டும் என்று இவன் பெற்றோர்களுக்கு எப்படித் தோன்றியது?

கேட்டைத் திறந்து கொண்டு வெளியேறி திரும்பவும் சத்தமில்லாமல் கேட் கொண்டியைப் போடும் அவனின் பதவாகத்தை உற்று நோக்குகிறார். நல்ல, அமைதியான பயல். சமத்து…அவர் வாய் தானே முனகுகிறது.

இது ஐந்தாவது முறை. பசங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடுவதும், பந்து மாடியில் விழுந்து விட்டது என்று அவன் ஓடோடி வருவதும்….

உள்ளேயிருந்து தேவகி பார்த்துக் கொண்டேயிருக்கிறாள். அதை ஜன்னல் வழியாக நோக்குகிறார்.

சும்மாச் சும்மா அந்தக் கதவுக் கொண்டியைத் தூக்கிறதும், டொம்முனு போடுறதும், கதவைத் திறக்கறதும் மூடுறதும்னா அந்தக் கதவு என்னத்துக்காறது? வாயிருந்தா அழும்…..சொல்ல மாட்டீங்களா….?

அவள் அப்படித்தான். சிலதுக்கு பதிலே சொல்ல மாட்டார் இவர்.

அங்கிள்….பந்து…….. மாடியைக் காண்பித்து விதுர் கேட்க ம்…ம்…என்று இவர் மேல் நோக்கி சைகை காண்பிக்க, ஆன்ட்டீ….என்று அவன் பயந்தவன் போல் பம்மிப் பம்மி மாடியேற…..இவருக்குச் சிரிப்புத்தான் வந்தது.

இத்தனை முறை பந்து மாடியில் விழ, ஒவ்வொரு முறையும் கேட்டே அவன் உள்ளே நுழைவதும், அனுமதியோடே பணிவோடு மாடிக்குச் சென்றதும், இவரைச் சங்கடப்படுத்தியது. அது அந்தச் சிறுவனுக்கான ஒழுக்கத்தின் அடையாளம்தானே என்று தோன்றி அவன் தாய் தந்தையரை நினைக்க வைத்தது. நல்ல வளர்ப்பு.

ஒவ்வொரு வாட்டியும் பர்மிஷன் கேட்க வேண்டாம்…நீபாட்டுக்குப் போய் எடுத்துக்கோ….ஓ.கே…? மனதில் தோன்றிய சங்கடத்தைத் தீர்த்துக் கொண்டார்.

விதுரின் முகத்தில் மகிழ்ச்சி. தேங்க்யூ அங்கிள்……என்று முகம் மலரச் சொல்லி விட்டு ஓடுகிறான். இவர் உட்கார்ந்தமேனிக்கே அவர்கள் விளையாடுவதை எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

திடீரென்று ஒரு யோசனை. எழுகிறார் ராமமூர்த்தி. வாசல் கேட்டை நன்றாகத் திறந்து வைக்கிறார். திரும்பவும் வந்து அமர்ந்து கொள்கிறார். ஒவ்வொரு முறையும் அவன் எதற்காகத் திறந்து திறந்து மூட வேண்டும்? யார் வரப் போகிறார்கள் இங்கே? பேசாமல் திறந்தே கிடக்கட்டுமே இந்தப் பசங்கள் விளையாடி முடிக்கும்வரை…

இப்போது அவர்களின் விளையாட்டு இவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து தெளிவாகத் தெரிந்தது. ஓங்கி அடித்தால் நேராகப் பந்து இவரை நோக்கிக் கூட வரக் கூடும். நெற்றிப் பொட்டில் பட்டால் அம்பேல். கதை முடிந்தது. நினைத்தபோது சிரிப்பு வந்தது. அது எதற்கு அப்படி நினைக்க வேண்டும். பறந்து வரும் பந்தைக் கபால் என்று கேட்ச் பிடித்தால் ஆச்சு…! முடியாதா? நினைத்ததுதான் தாமதம். தன் நினைவலைகள் அதற்குள்ளுமா போய்த் தாக்கி விட்டது?

ஏய்ய்ய்ய்…..என்று எழுந்தவர் கையை நெடுக மேலே உயர்த்தி தலைக்கு மேல் பறந்து வந்த அந்தப் பந்தை வலது கையால் சக்கென்று பிடித்தார். எல்லாம் கண நேரம்தான். பிடித்தாரா அல்லது அதுவாகவே அப்படி வந்து அவர் கையில் பாங்காக உட்கார்ந்து கொண்டதா? என்ன ஆச்சரியம்? துளியும் தடுமாற்றம் இல்லையே…….!!!

உறாய்ய்ய்ய்……என்று துள்ளிக் குதித்தார்கள் சிறுவர்கள். அவுட்டு, அவுட்டு என்று கத்தினார்கள்.

அதெல்லாம் முடியாது. அங்கிள் பிடிச்சது. நான் ஏத்துக்க மாட்டேன்….நா ஆட்டைக்கு வரலை…போங்கடா….

அழுகுணி ஆட்டம்…..அழுகுணி ஆட்டம்……அங்கிளென்ன நம்ம கூட விளையாடுறாரா? இல்லேல்ல…அப்றம் எப்டி நா அவுட்டாக முடியும்? போடா…..இதுக்கு நா ஒத்துக்க மாட்டேன்…

கொஞ்ச நேரம் அந்தப் பையனை அழ விடும் அவர்களின் கொட்டம்.

சர்றா…வாடா….சர்றா வாடா…சும்மா சொன்னம்டா….அவனையும் கட்டியிழுத்துக் கொண்டு திரும்பவும் ஸ்டம்பை நோக்கிப் போகும் அவர்கள்.

கையில் மெல்லிய அதிர்வு இன்னும் ஓயவில்லை இவருக்கு.

இப்டி மட்ட மல்லாக்கத் திறந்து போட்டா எப்டி? நாய், மாடுன்னு உள்ளே நுழைஞ்சிறப் போகுது…..கத்திக் கொண்டே கதவை மூட வருகிறாள் தேவகி. இவர் தடுக்கிறார்.

நான்தான் திறந்து வச்சேன். நாந்தான் இங்க இருக்கனே பிறகென்ன…போ உள்ளே…ஒவ்வொரு தடவையும் அந்தப் பசங்க திறந்து திறந்து மூட வேண்டாமேன்னுதான்….

அக்கடான்னு திறந்தே போட்டுட்டீங்களாக்கும்…உங்களுக்கும் ஒரு விவஸ்தையில்ல….பொடிப் பசங்க விளையாடுறதப் போயி வேடிக்கை பார்த்திட்டுப் பழிகிடக்கீங்களே…. – நொடித்துக் கொண்டு உள்ளே போனாள்.

அவளுக்கு அந்த சுகானுபவம் தெரியவில்லைதான். சொல்லித்தான் ஆக வேண்டும். அதற்கெல்லாம் ஒரு தனி ரசனை வேண்டும். அது உடம்போடு ஊறியதாக இருக்க வேண்டும். தெருவென்றிருந்தால் அங்கே நாலு பசங்கள் விளையாட வேண்டும்., யார் மேலாவது பந்தடிக்க வேண்டும், அவர் சத்தம் போட வேண்டும், எந்த வீட்டுக் கண்ணாடியாவது உடைய வேண்டும், யார் என்று தெரியாமல் அவர்கள் கத்த வேண்டும். இதெல்லாம்தானே அழகு. விளையாடக் குழந்தைகளே இல்லாத தெரு என்ன தெரு? தூங்க விடாமல் பக்கத்து வீட்டில் கசமுசா கசமுசா என்று குழந்தைகளின் காச்சுப் பூச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தால்தானே மனதுக்கு சந்தோஷம். இந்த உலகத்தில் நிறைய விஷயங்களைப் பேச முடியாது. அனுபவிக்கத்தான் முடியும். அந்த அனுபவ யோகமே தனி. யாருக்குத் தெரிகிறது. எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…!

குழந்தையில்லை அவளுக்கு. அதனால் மனதில் மண்டிப் போன ஒரு அசாதாரண வெறுப்பு. அதற்கு நேர்மாறாய் எல்லா ஆசையும் அண்டிப் போனவர் இவர். குட்டிப் பசங்களோடு பசங்களாய் ஒன்றி விடுவார் பல வேளைகளில். எத்தனையோ நாள் மாடியிலேயே நின்று கொண்டு பந்தெடுத்துப் போட்டிருக்கிறார். பந்து எகிறி வராதா என்று காத்துக் கிடப்பார். கேட்ச், கேட்ச் என்று சொல்லி அவர்களைப் பந்தைப் பிடிக்கப் பழக்குவார். பக்கத்து வீடுகளில் வேடிக்கை பார்க்கும் கண்கள். பொருட்படுத்தமாட்டார்.

அடுத்த வீட்டு மாடியிலிருந்து பேப்பர்களைப் பிய்த்துப் பிய்த்துப் பறக்க விடும் அந்த வீட்டுக் குழந்தைகள். அதில் ஒருவன்தான் அந்த விதுர். அவனுக்குத்தான் எத்தனை சகோதரிகள்? தம்பிகள். குழந்தைச் செல்வங்கள் நிரம்பித் ததும்பும் வீடு அது. அந்தப் பேப்பர் பிசிறுகள் இவர் வீட்டு காம்பவுன்டுக்குள் விழும்….குப்பை சேரும்…

எல்லாம் வானரங்கள்….சொன்னா கேட்காது…யாரால தெனம் பெருக்க முடியுது….நீங்களும் சொல்ல மாட்டீங்கிறீங்க….

போகட்டும் விடு…என்றார் இவர். அவள் இவரையே பார்த்தாள். இவருக்கென்ன கிறுக்கா? என்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை.

தாளை பிட்டு பிட்டாகப் பிய்த்துக் காற்றில் பறக்க விடும்போது அது அசைந்து அசைந்து இறகு போல் பறந்து செல்வதைப் பார்த்துக் குதூகலிக்கும் அந்தக் குஞ்சுகள். அவைகளின் அளவிட முடியா மகிழ்ச்சி.

என்னுது இன்னும் பறக்குது…..இன்னும் பறக்குது…

உன்னுது கீழ விழுந்திருச்சி….பாரு…

என்னோடது மேலே போயிட்டேயிருக்கு அங்கே…பாரு அந்த வீட்டு மாடியைத் தாண்டிடுச்சி…

குழந்தைகளின் மகிழ்ச்சி பொங்கும் முகங்களைக் காணும்போது தெய்வத்தைக் கண்டது போலிருக்கிறது இவருக்கு. என்ன ஒரு களங்கமில்லா முகங்கள். மாசு மருவற்ற இந்தக் குழந்தைகள் இந்த தேசத்தின் வருங்காலச் சொத்துக்கள்.

சந்தோஷத்தில் முழ்கிக் கிடப்பார். மாடியில் இவர் நடை பயில்வதே அந்தப் பிஞ்சுகளின் கொஞ்சும் முகங்களைப் பார்க்கத்தான். கடவுளைப் பார்க்க வேண்டுமா…குழந்தைகளைப் பாருங்கள் என்பார்.

இனிமே பந்தை எடுக்க நீ வர வேண்டாம்…மாடிக்கு வந்திச்சின்னா, நான் எடுத்துப் போடுறேன்….ஓ.கே….?

எதிர்பாராத மகிழ்ச்சியில் துள்ளி ஓடினான் விதுர். அங்கிள்….தேங்க்யூ ஸோ மச் அங்கிள்….தேங்க்யூ….

அடேங்கப்பா…என்னா இங்கிலீஷ்…..!

அன்றிலிருந்து மாடிக்குப் பந்து வந்தால் இவர்தான். அது அவருக்கும் அந்தச் சிறுவன் விதுருக்கும் மட்டும் தெரிந்த ரகசியம். அங்கு பந்து வந்தால் அது சிக்சர். தெருவே அலறுவது போல் கத்துவார்கள்.

இப்டி நடக்குற நேரத்துல இந்தப் பக்கம் பக்கத்துப் ப்ளாட்டுல இருக்கிற மரத்துலர்ந்து ரெண்டு கிளைகளையாவது ஒடிச்சுப் போடலாம்ல….எவ்வளவு செத்தை குப்பை விழுது தினமும்? நம்ம வீட்டுப் பக்கம் நீட்டிக்கிட்டு இருக்குதே…அதுகளை மட்டுமாவது எட்டி ஒடிச்சு விடுங்க….அந்த ஓனர் வர்ற போது வீட்டுக்குள்ள சும்மா இருக்காம, மரத்தை வெட்டச் சொல்லுங்க….வருஷக் கணக்கா குப்பை பொறுக்கி மாளலை…..

மரத்தை வெட்டு என்று எப்படிச் சொல்ல முடியும்? கிளைகளை வெட்டு என்று வேண்டுமானால் சொல்லலாம். மரம் வைத்ததும், வளர்த்ததும், இன்றுவரை பராமரிப்பதும் அவரின் இஷ்டமல்லவா? உரிமையல்லவா? எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாய்ச் சொல்லி விடுகிறாள். அமைதி காத்தார் இவர்.

அவளுக்கென்ன தெரியும் அந்த மரத்தால் இவர் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறார் என்று? எந்த ரசனையுமே இல்லையே அவளுக்கு? வாழ்க்கையை எப்படி ருசிப்பது? எப்படிப் புதுப்பித்துக் கொள்வது தினமும்? அதில் வந்து அமர்ந்த அந்த சாம்பல் குருவியை என்றாவது இவள் பார்த்திருக்கிறாளா? கழுத்திலே பல வண்ணமுள்ள மரங்கொத்தியை என்றாவது கண்ணுற்றிருக்கிறாளா? யாரும் அறியாமல் அடர்ந்த கிளைகளுக்கு நடுவே ரகசியமாய் அமர்ந்து கொட்டக் கொட்ட தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆந்தையை அறிவாளா இவள்? அவ்வப்போது காதுக்குக் கேட்கும் கிளியின் கொஞ்சுமொழியையாவது கேட்டிருக்கிறாளா? தினசரி ஓடி ஓடிப் பாயும் அணில்களையாவது பார்த்திருக்கிறாளா? அட அதுதான் வேண்டாம்…அனுதினமும் கா…கா…கா… என்று கத்திக் கொண்டு வந்து சூடான சாதம் வைக்கிறாளே…அந்தக் காக்கைகளையாவது சற்று நிதானமாய் நின்று நோக்கியிருக்கிறாளா? அந்தக் கழுத்தில்தான் என்ன ஒரு கருமைப் பளபளப்பு?காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன் கரிய நிறம் தெரியுதடா நந்தலாலா…என்ற பாரதியின் பாடல் வரிகளை என்றாவது உணர்வு பூர்வமாய் உணர்ந்திருக்கிறாளா? இப்படியும் அப்படியுமாய் சடக் சடக்கென்று திரும்பி நோக்கி சுற்றத்தை அழைக்கும் அந்த வேகம்தான் என்ன? நம்மைச் சுற்றி இவைகளெல்லாம் இருப்பதே என்னவொரு சந்தோஷம்…! மரங்களும் செடி கொடிகளும் இருந்தால்தானே இவையெல்லாம் கண்ணில் படும்…வாசம் செய்யும்? எல்லாத்தையும் வெட்டு என்றால்…?

இந்த மரங்கள் அழிந்தால் இந்தச் சந்தோஷங்களும் சேர்ந்து அழிந்து விடுமே? அப்புறம் இந்தப் பறவைகள் எங்கு போகும்? இந்த அணில்கள் எங்கு போய் சோற்றுப் பருக்கை தேடும்? அந்தக் காக்கைகள் எப்படி இங்கு அன்னத்திற்காகக் காத்திருக்கும்? வெறும் வெட்ட வெளியைப் பார்த்து ஓவென்று நிற்க முடியுமா? மரங்களால் கிடைக்கும் சுகமான காற்று கிடைக்குமா? குளிர்ச்சி கிடைக்குமா? நிழல் கிடைக்குமா?

வெட்டச் சொல்லுங்க…வெட்டச் சொல்லுங்க…என்று ஒரே ஓலப் பாட்டுத்தான். வெட்டுவதென்றால் அரை மணி நேரம்தான். மேற் கிளையில் கயிற்றைக் கட்டி இழுத்து நாலு பேர் பிடித்துக் கொள்ள கீழே ரம்பம் போட்டால் முடிந்தது கதை. ஆனால் அதை வளர்க்க? அது வளர? வானுயர்ந்து நிற்க? எத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கின்றன? மரங்கள் காற்று சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும், மாசு நீக்குவதற்கும், மழைக்கும் என்று எப்படியெல்லாம் பலபடப் பயன்படுகின்றன? வைப்பது எளிதா? வெட்டுவது எளிதா? என்னதான் மனது விலகி நின்றாலும் இத்தனை வெறுப்பு ஆகுமா?

தேவகி இப்படியாகச் சொன்னவை எதையுமே செய்ததில்லை ராமமூர்த்தி. காற்று சலசலவென்று அவர் உடம்பைத் தழுவியபோது தன் நினைவுக்கு வந்தார். தெருவை உற்று நோக்கினார். வெறிச்சோடிக் கிடந்தது.

பள்ளி திறந்தாயிற்று. குழந்தைகள் முதுகில் புத்தக மூட்டையைச் சுமந்து கொண்டு பறந்து விட்டன. பாவமாய்த்தான் இருக்கிறது பார்க்க. வீதியில் துளி சத்தமில்லை. மனசே என்னவோ போலிருக்கிறது இவருக்கு.

பக்கத்து வீட்டிலாவது கொஞ்சம் சத்தமிருக்கும். இப்போது அதுவுமில்லை. வீடு மாறிக் கொண்டு போய் விட்டார்கள். படிக்கும் பள்ளிக்கு அருகில் வேண்டுமென்று. பஸ் கட்டணம் கொடுத்து மாளவில்லை என்று. நீ சொல்லிச் சொல்லிதான் போயிட்டாங்க போலிருக்கு… வேண்டுமென்றேதான் கடிந்து கொண்டார் மனைவியை. தப்பாவே பேசிட்டிருந்தா என்னைக்காவது ஒரு நாள் பலிக்கத்தானே செய்யும். அதான் போயிட்டாங்க…என்றார்.

தன்னையறியாமல் மாடி ஏறி வந்திருந்த இவரின் பார்வை பக்கத்து மாடியில் பதிந்தது. அங்கிருந்து பிய்ந்த காகித இறகுகள் இனிப் பறக்காது. அதைக் கண்டு குதூகலிக்கும் பிஞ்சுகளின் கரவொலி இனி அங்கே எழாது. தன் வீட்டுக் காம்பவுன்டில் இனிக் குப்பைகள் விழாது. தேவகிக்குத் தெரியக் கூடாது என்று இனி அவைகளைத் தான் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டியதில்லை.

மனம் விரக்தியில் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பிக்கிறார். வரும்போது ஒரு பால் பாக்கெட் வாங்கிட்டு வாங்க….தேவகியின் சத்தம் அரைகுறையாய்க் காதில். அவள் காரியம் அவளுக்கு.

எப்படித்தான் அவ்வளவு தூரம் வந்தாரோ அவருக்கே தெரியாது….

அங்கிள்…..ராம் அங்கிள்….

அந்தப் பெரிய பொட்டலின் நடுவே விஸ்தாரமாய் விளையாடும் சிறுவர்கள். .சத்தமிட்டுக் கொண்டே ஓங்கி அந்தப் பந்தை அடித்த சிறுவன் விதுரின் பழக்கமான குரல். அவனைப் பார்த்து விட்ட குஷியில், தன்னை நோக்கி ராக்கெட் வேகத்தில் வந்த அந்தப் பந்தை ஒரு குதி குதித்து எவ்விப் பிடித்த ராமமூர்த்தி அப்படியே கையைச் சுழற்றி ஸ்டம்பிற்கு முன்னே தள்ளி நிற்கும் விதுரின் பேட்டைக் குறி வைத்து வேகமாய் வீசுகிறார்.

விதுரின் மின்னலான மறு சுழற்சியில் பந்து வந்த வேகம் தெரியாமல் விண்ணை நோக்கிப் புயலெனக் காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கிறது.

பேட்டைக் கீழே போட்டு விட்டுத் தன்னை நோக்கிப் பாய்ந்தோடி வரும் அந்தக் குழந்தைச் செல்வத்தை அப்படியே வாரி எடுத்து அணைத்து உச்சி மோந்து களிக்கிறார் ராமமூர்த்தி.

அதோ…தெரியுது பாருங்க அங்கிள்…அதுதான் எங்க வீடு….வீட்டுக்கு வாங்க அங்கிள்…இப்பவே வாங்க…போவோம்..

சிறுவனின் பாசமான அழைப்பில்.சிலிர்த்துப் போகிறார் இவர். அந்த நிமிடம் அவர் வாழ்வின் பொன்னான நேரமாக மெய்ப்படுகிறது. --- ----------------------------------------

உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு, மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014. செல் – 94426 84188 ----------------------------------

“ஜன்னல் வழி வந்த பாட்டு” சிறுகதை

 (10.11.2012 - தினமணி சிறுவர் மணியில் வெளிவந்த சிறுகதை)

சுதிருக்குப் படிப்பே ஓடவில்லை. பக்கத்து வீட்டிலிருந்து வந்த சத்தம் அவன் கவனத்தைக் கலைத்தது. அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்கும் இடையில் ஆறடி இடைவெளிதான் இருந்தது. ஜன்னலைத் திறந்தாலே அந்த வீடு தெரியும். நேர் எதிரில் சுவர்தான் எனினும், நாலடி தள்ளி அவர்கள் வீட்டு ஜன்னல் இருந்தது. ஜன்னலைத் திறந்தேதான் வைத்திருந்தார்கள். இரவு படுக்கைக்கு முன்புதான் அடைத்தார்கள்.
கொசு வரும் என்று அடைப்பதென்றால் மாலை ஆறுக்கெல்லாம் அடைத்தால்தான் சரிவரும். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. சுதிர் அம்மா மாலை ஆறுக்கெல்லாம் பட் பட்டென்று ஜன்னல்களைச் சாத்தி விடுவாள். உள்ளே அறையினுள் கசகசவென்று ஃபேன் ஓடிக் கொண்டிருக்கும். வெளிக்காற்று வராதது சுதிருக்கு என்னவோ போல் இருக்கும். கதவைத் திறப்போமென்றால் எதிர் வீட்டு ஜன்னல் திறந்து கிடக்கிறது. அதுவழியாகப் பாட்டு அலறுகிறது..எப்பொழுதும் ஏதேனும் பக்திப் பாடல்தான். அல்லது கடவுளைத் துதிக்கும் ஸ்லோகங்கள். சினிமாப் பாட்டு என்று ஒரு நாள் கூட இவன் கேட்டதில்லை. ஆனால் அதை ஏன் இப்படி அலற விடுகிறார்கள்? மெதுவாய் வைத்துக் கொண்டு கேட்க வேண்டியதுதானே? . அடுத்த வீட்டில் ஒரு படிக்கும் பையன் இருக்கிறானே, அவனுக்குத் தொந்தரவாய் இருக்குமே என்கிற நினைப்பெல்லாம் அவர்களுக்குக் கிடையாதா? இத்தனைக்கும் அந்த வீட்டில் இரண்டே இரண்டு பேர்கள்தான் இருந்தார்கள். கணவன், மனைவி.
சரி, மொட்டை மாடிக்குச் சென்று விடுவோமென்றால் அங்கு இதற்கு மேல். இரு பக்கத்து வீடுகள், எதிர்வீடுகள் என்று எல்லா இடமும் டி.வி.யும், எஃப்ஃஎம் ரேடியோக்களும் அலறுகின்றன. ஏனிப்படி எல்லோரும் சத்தமாக வைத்துக் கொள்கிறார்கள்? அவர்கள் இருக்கும் அறைக்கு மட்டும் கேட்டால் போதும் என்பது போல் அளவாய் வைத்துக் கேட்க வேண்டியதுதானே? யோசித்தான் சுதிர்.
பள்ளியில் அவன் உட்கார்ந்திருக்கும் இடம் ஜன்னலோரம். அவனின் செவன்ந்த் “சி“ பிரிவு மட்டும்தான் அதிர்ஷ்டமாய் அந்த இடம். வெளி மரத்தடிக் காற்று ஜிலு ஜிலுவென்று வந்து வருடிக்கொண்டேயிருக்கும். வெயில் வெப்பமே தெரியாது. சமயங்களில் தன்னை மறந்து தூங்கக் கூடச் செய்திருக்கிறான் சுதிர். ஒரு நாள் டீச்சரிடம் அதற்காக அடியும் வாங்கினான். எங்கே டீச்சர் இடத்தை மாற்றி விடுவாரோ என்று பயந்தான். நல்லவேளை அப்படி எதுவும் நடைபெறவில்லை.
இங்கேயென்றால் மரங்களே இல்லை. இருந்த ஓரிரண்டு மரங்களையும் பக்கத்து பிளாட்டில் வெட்டி எறிந்து விட்டார்கள். மரங்கள் வானுயர வளர்ந்து அடர்ந்து படர்ந்து நிழல் கொடுக்கவும், அள்ளி அள்ளிக் காற்று வழங்கவும் பல ஆண்டுகளாகின்றன. அப்படி வானுயர்ந்த மரத்தை நிமிடத்தில் வெட்டிக் கீழே சாய்த்து விட்டார்கள். என்ன மனிதர்கள்? சொல்ல ஆள் இல்லை. கேட்க எவரும் இல்லை.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அவன் கண்ணாரக் கண்ட காட்சி அது. அவன் மனதை விட்டு இன்னும் மறையவில்லை. விடிகாலை ஆறரை மணிக்கே அவர்கள் வந்து விட்டார்கள். நாலு பேர். ஒருவன் மர உச்சிக்கு ஏற ஆரம்பித்தான். ஏறும்போதே இடை இடையில் பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்த மரக் கிளைகளை வெட்டிச் சாய்த்துக் கொண்டே முன்னேறினான். படிப்படியாய்ப் போய் உச்சிக்குக் கொஞ்சம் கீழே அந்த வடக் கயிற்றைக் கட்டினான்.
மரத்தை வெட்டுவது வருத்தமாக இருந்தாலும், அதை வேடிக்கை பார்ப்பது சுதிருக்குப் பிடித்திருந்தது. அவனால் தடுக்க முடியாதே? கிளையைப் பூராவும் வெட்டியாயிற்று. பிறகு எதற்கு மேலே கொண்டு கயிற்றைக் கட்டுகிறார்கள்? என்று யோசித்தான். ஒரேயடியாய் கீழே பூமிக்கு மேலே அடியொட்டி ரம்பத்தைப் போட்டு அறுத்து நெட்டுக்கக் கீழே சாய்க்க வேண்டியதுதானே? என்று யோசித்தான். பள்ளியில் காம்பவுண்டுக்கு வெளியே போக்குவரத்துக்கு இடைஞ்சலாய் இருக்கிறது என்று ஒரு மரத்தை அப்படி வெட்டினார்கள். அதைப் பார்த்திருக்கிறான் இவன். அப்பொழுதுதான் அந்தத் தப்பு மனதில் உறுத்திற்று. நெட்டுக்கச் சாய்த்தால் பக்கத்து வீட்டின் மேலல்லவா விழும். அதனால்தான் பகுதி பகுதியாய் வெட்டப் போகிறார்களோ என்று யோசனை வந்தது அவனுக்கு. மனதுக்குள் அத்தனை எதிர்பார்ப்பு. எப்படி வெட்டி, வெட்டி, இறக்குவார்கள் என்று பார்க்க ஒரே ஆர்வம்.
மரத்தின் உச்சியிலிருந்து சுமார் ஏழடிக்கு இடம் விட்டு விட்டு வடக் கயிற்றைக் கட்டினார்கள். வலது பக்கமும் இடது பக்கமுமாயும், பக்கத்துக்கு இருவர் எனக் கயிற்றைப் பிடித்துக் கொண்டார்கள். மேலும் இருவர் பக்கத்து வீட்டின் மாடியிலிருந்து நடுவில் கட்டப் பட்டிருந்த கயிற்றின் பகுதியைப் பிடித்துக் கொண்டார்கள். மூன்று கட்டுக்கும் கீழே மரத்தின் மொத்தத் தடிமனில் முக்கால் பங்கு அறிவாளால் வெட்டியதும் மரத்தில் ஏறியிருந்த ஆள் கீழே இறங்கிக் கொள்ள மூன்று பக்கமும் பிடித்திருந்தவர்கள் மெது மெதுவாய் இழுக்க மறத்தின் வெட்டிய பகுதி முறிய ஆரம்பித்தது. மெதுவே இழுத்து நன்றாய்த் தலை குனிந்ததுபோல் சாய்ந்ததும், கடைசியாக விக்கென்று ஒரு இழு. வெட்டின பகுதி சட்டென்று மரத்திலிருந்து விடுபட்டது. அதே நிமிடம் மாடியிலிருந்து பிடித்தவர்கள் கவனமாய் இழுத்துப் பிடிக்க, விடுபட்ட மரத்துண்டு ஆடித் தொங்க, கீழே தரையிலிருந்து பிடித்த இருபக்க ஆட்களும் மெல்லக் கயிற்றோடு இணைந்த பகுதியைத் தரையில் இறக்கினார்கள்.
எவ்வளவு அற்புதம்? பக்கத்துக் கட்டடங்களுக்கு எவ்விதச் சேதமுமில்லாமல், எந்த வீட்டில் வளர்ந்திருக்கிறதோ அந்த வீட்டுச் சுவர்களுக்கும் ஒரு சிறு காயமுமில்லாமல்…பாதுகாப்பாக…எத்தனை கவனமாய் செய்கிறார்கள்? ஐந்தாறு துண்டுகளாக அந்த மரத்தை இதே போல் பகுதி பகுதியாக வெட்டி இறக்கி விட்டார்கள்.
கண்களை அப்படி இப்படி நகட்டவில்லை சுதிர். மொத்த மரத்தையும் வெட்டி முடிக்கும்வரை மாடியிலேயே உட்கார்ந்து விட்டான். கையில் பூஸ்ட்டோடு வந்த அப்பாவும் குழந்தை போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததும், அவர் மடியில் போய் சாய்ந்து கொண்டே அப்பா கொடுத்த பானத்தை அருந்தினான் சுதிர்.
பார்த்தியா, பெரிய மெஷினை வச்சு செய்ற வேலையை சாதாரண ஆளுங்க எப்படி சாமர்த்தியமா செய்துட்டாங்க பார்….என்றார்.
அப்பா சொல்வதை புரிந்தும் புரியாமலும் கேட்டான் சுதிர்.
இதத்தான் அனுபவ அறிவுன்னு சொல்வாங்க….அந்த ஆளுங்க யாரும் படிக்காதவங்கதான்….அவுங்க பேச்சப் பார்த்தாலே தெரியுதுல்ல…அதுக்காக இந்த அனுபவமான வேலைத் திறமையை ஒதுக்கிட முடியுமா? எத்தனை எடத்துல மரத்தை வெட்டின அனுபவம் இருந்தா இவ்வளவு சேஃப்டியா செய்வாங்க? அவுங்க ஒவ்வொருத்தனோட உடம்பைப் பாரேன்….என்றார் அப்பா.
சுதிர் உற்றுப் பார்த்தான். கரும்பாறை போல் வெயிலில் பிரகாசித்தது அவர்கள் மார்பு. அடுக்கடுக்காக மார்பிலிருந்து கீழே இறங்கிய வயிற்றுப் பகுதி சுருங்கி அழகாகப் பளபளத்தது. உடலுழைப்பு உள்ள அவுங்களுக்கு நம்மள மாதிரி வியாதி வெக்கை வராது. காய்ச்சல், கரப்புன்னு எதுவும் அண்டாது. என்னைக்காவது சூரிய ஒளில நாம நம்மோட உடம்பைக் காண்பிச்சிருக்கோமா? இல்லைதானே…ஆனா…அவுங்க செய்ற வேலையே அப்டித்தான்…எங்க உடலுழைப்பு இருக்கோ அங்கே வியாதி அண்டாது. அதுதான் உண்மையாக்கும்…உழைக்கிறதுனால உடம்பு உறம்பெறுமே தவிர, தளர்ந்து போகாதாக்கும்…உடம்பைத் திராணியா வச்சிக்கிட்டாதான், வாழ்க்கைல மத்தவங்களுக்கு உதவ முடியுமாக்கும்….
நன்றாகப் படிப்பதோடு, அவர்களைப்போல் தானும் தன் உடம்பை ஆரோக்யமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது சுதிருக்கு. ஆனால் அந்த வீட்டிற்கே அழகாய் இருந்த அந்த மரம் போனது பிற்பாடு வருத்தமாகத்தான் இருந்தது. தான் எப்படிச் சொல்ல முடியும் என்று நினைத்துக் கொண்டான். அந்த மரத்தில் இருக்கும் பறவைகள் அணில், ஓணான் என்று பார்த்த பலதையும் நினைத்துக் கொண்டான். இனி அவை எங்கே போகும் என்று தள்ளியிருந்த சிறு சிறு மரங்களில் அவன் கவனம் போனது. அப்பாவிடம் சொன்னான்.
நாம ஒரு வீடு கட்டினா நிறைய மரம் வைக்கணும்…என்னப்பா….?
கண்டிப்பாடா கண்ணா…. என்றார் அப்பா.
எப்போது அப்பா வீடு கட்டுவார் என்றிருந்தது சுதிருக்கு.
இன்றும் பாட்டுக்குப் பயந்து மாடிக்கு வந்த சுதிருக்கு என்னென்னவோ நினைப்புகள் வந்து விட்டன. சதா அவன் பார்வை அந்த வெட்டிய மரத்தின் வீட்டின் மீதே இருந்தது. அந்த வீட்டின் அழகு குலைந்து போனது போல் தோன்றியது அவனுக்கு. அந்த மரம் இருக்கும்போதே அந்த வீட்டை ஒரு ஃபோட்டோ எடுத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று யோசித்தான். தான் படிக்கும் பள்ளி அவனுக்குப் பிடித்துப் போனதே இந்த மரங்களினால்தான். வீடு மட்டும் அருகில் இருந்தால் விடுமுறை நாட்களிலும், ஏன் தினசரியேயும் கூட. தான் படிக்க அங்கு சென்று விடலாமே என்று நினைத்துக் கொண்டான். தன் நண்பர்கள் ஒரு சிலர் அப்படித்தான் பள்ளி மர நிழலில் சென்று உட்கார்ந்து படிப்பதாகச் சொன்னது அவன் மனதில் ஏக்கத்தை விளைவித்தது. அப்பாவின் வசதிக்கு இந்தப் பகுதியில்தான் குறைந்த வாடகை என்பதை அவன் மனம் உணர்த்தியபோது தேற்றிக் கொண்டான்.
ஆனாலும் என்ன? இந்த வீட்டில் வசதியில்லாமலா இருக்கிறது என்று நினைத்துக் கொண்ட அவன், கீழே இறங்கினான். மீண்டும் அந்த அறைக்கு வந்தபோது பாட்டுச் சத்தம் ஓயவில்லை. ஜன்னலை மெல்லச் சாத்தினான். அப்படியும் சத்தம் குறையவில்லை.
நிறையப் படிக்க வேண்டியுள்ளது. திங்கட்கிழமை டெஸ்ட். நாலு சப்ஜெக்ட் படித்தாக வேண்டும். போன டெஸ்டில் விட்ட மார்க்கை இந்த டெஸ்டில் பிடித்தாக வேண்டும். இப்படி இருந்தால் ஆகாது என்று நினைக்க மனதில் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. நேரம் வீணாய் நழுவுவதை உணர்ந்து சுதாரிப்பானான்.
வெளியே வந்தான். உட்புறம் பார்த்தான். அம்மா கொல்லைப் புறத்தில். அப்பா காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தார். மெல்ல அடியெடுத்து வைத்து வீட்டை விட்டு வெளியேறினான்.
பக்கத்து வீட்டுக் கதவைத் தட்டினான். ஆன்ட்டீ…….
கதவு திறந்தது.
டேய்…குட்டீ….பாய்ந்து வந்து அவனைத் தூக்கினார் அவர். அப்படியே ஒரு சுற்றுச் சுற்றினார். திடீரென்று அவர் அப்படிச் செய்ததில் பயந்துபோனான் சுதிர்.
அங்கிள்…அங்கிள்…விட்ருங்க…விட்ருங்க….பயமாயிருக்கு...கத்தினான்.
அவர் விடுவதாயில்லை. இவன் கால்களை வலது கையினால் அணைத்துத் தூக்கிப் பிடித்துக் கொண்டு, இடது கையினால் இவன் முதுகை இறுகப் பற்றியவாறே, விர்ர்ர்ரென்று சுழற்றினார். பயத்தில் அவரை அப்படியே கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு விட்டான் சுதிர். ரொம்பவே பயந்துதான் போனான். அவன் அப்பாவோ அல்லது வேறு யாருமோ அவனை அப்படி என்றும் செய்ததில்லை. கீழே விட்டபோது அப்பாடா என்றிருந்தது. தலை கிர்ர்ரென்றது. திடீர் அதிர்ச்சியிலிருந்து மீளவே சற்று நேரம் பிடித்தது. தயங்கித் தயங்கி ஆரம்பித்தான்.
சொல்லுங்கள் ஐயா, தங்கள் சித்தம் என் பாக்கியம்…என்றவாறே சத்தமாய்ச் சிரித்தார் அவர். கையை வாயில் வைத்துப் பொத்தி அவன் முன்னே குனிந்தார். அவர் செய்ததைப் பார்த்ததும் களுக்கென்று சிரிப்பு வந்தது சுதிருக்கு. அடக்கிக் கொண்டு சொன்னான்.
அங்கிள், உங்ககிட்டே ஒரு சின்ன ரெக்வெஸ்ட்…நாளைக்கு எனக்கு மந்த்லி டெஸ்ட் இருக்கு….நாலு சப்ஜெக்ட் படிக்கணும்….அதுனால கொஞ்சம் உங்க வீட்டுப் பாட்டுச் சத்தத்தைக் குறைச்சுக்கணும்…தயவுசெஞ்சு கொஞ்சம் மெதுவா வச்சுக்கிட்டீங்கன்னா பக்கத்துல என் ரூம்ல என்னால நல்லா படிக்க முடியும்……ப்ளீஸ் அங்கிள்……செய்றீங்களா…? அலறுது அங்கே…எனக்குப் படிப்பே ஓட மாட்டேங்குது…ப்ளீஸ் அங்கிள்….
சற்று நேரம் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஏதேனும் தப்பாய்ச் சொல்லி விட்டோமோ என்று தோன்றியது சுதிருக்கு. தான் இப்படி வந்து சொல்லாமல், அப்பாவிடம் சொல்லிவிட்டிருக்க வேண்டுமோ என்றும் தோன்ற ஆரம்பித்தது.
அவனைக் கீழே இறக்கி விட்டிருந்த அவரிடமிருந்து அந்தக் கணமே தப்பித்து ஓடி விடலாமா என்று நினைத்துக் கொண்டான் சுதிர்.
சரிடா, பெரிய மனுஷா…மெதுவா என்ன ஆஃப் பண்ணியே புடறேன்…ஒடு…போய் நல்லாப் படி…..என்றார் அவர். கோபப்படுவாரோ என்று நினைக்க இப்படிச் சொன்னது சுதிருக்கு அப்பாடா என்றிருந்தது.
வர்றேன் அங்கிள்…ரொம்ப தேங்க்ஸ்….என்ற இவனை, சற்றும் எதிர்பாராமல், மீண்டும் கட்டித் தூக்கி அவன் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட்டார் அவர்.
போயிட்டு வர்றேன் அங்கிள்….என்று கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டே வெளியேறிய சுதிருக்கு அவர் கண்களில் துளிர்த்திருந்த கண்ணீரைப் பார்த்தபோது ஏனோ மனசு கலங்கியது. எதுக்காக அழணும், சந்தோஷமாத்தானே தூக்கி சுத்தி முத்தம் கொடுத்தார்? யோசனையோடு வெளியேறிய சுதிருக்கு மனசுக்குள் எதுவோ சுருக்கென்றது. தன்னையறியாமல் பின் மண்டையைப் பட்டென்று தட்டிக் கொண்டான்.
சில வருஷங்களுக்கு முன் பணத்திற்காக அவர் மகனைக் கடத்திக் கொண்டுபோய் கொன்று விட்டார்கள் என்றும், அதிலிருந்துதான் அவர்கள் ஊர் மாறி இங்கே வந்து குடியிருக்கிறார்கள் என்றும், வேறு அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது என்றும் என்றைக்கோ அப்பா அம்மாவிடம் சொன்னதைக் கேட்டது அப்போது மெல்ல ஞாபகத்துக்கு வர ஆரம்பித்தது சுதிருக்கு. அந்தச் சோகத்தை மறைத்துக் கொள்ளவும், மறப்பதற்காகவும்தானோ தினசரி பாட்டை இத்தனை சத்தமாய் வைத்துக் கொள்கிறார்கள் என்று அவன் மனம் நினைத்து சங்கடப் பட ஆரம்பித்தபோது, இதைப் போய்ச் சொல்லியே இருக்க வேண்டாமோ என்றும் அவன் குழந்தை மனதுக்குத் தோன்ற ஆரம்பித்தது.
------------------------------------------




































02 ஜூலை 2012

“டீக்கடை பெஞ்சு…” சிறுகதை

(உயிரோசை இணைய இதழ் – 02.07.2012 வெளியீடு)
யவுசெய்து என்னைச் சுதந்திரமாக இருக்க விடுங்கள்…” மடக்கிப் போட்ட இரண்டு வரி விளம்பரத்தை தினசரிகளுக்கு வழங்கியிருந்தான் அச்சுதன். கீழே பெயரோடு சரி. முகவரி கொடுக்கவில்லை.
அட்ரஸ் இல்லாம எப்டி சார்? என்றார்கள் பத்திரிகை ஆபீஸில். என் முகவரியை தர்றேன்ல அத்தோட விடுங்க…என்றான்.
எதற்காக இப்படிச் செய்தோம் என்று மனது அரித்துக் கொண்டேதான் இருந்தது. யார் தன்னுடைய சுதந்திரத்தைக் கெடுத்தார்கள் என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். விளம்பரம் தேவையானவர்களின் கண்ணில் பட்டிருக்குமா என்று யோசிக்கலானான். சுதந்திரமாக இருக்க விடுங்கள் என்று சொல்லிவிட்டு, தேவையானவர்கள் என்று ஏன் யோசிக்க வேண்டும் என்று ஒரு யோசனை வந்தது. தேவையல்லாதவர்கள் என்பவர் யார்? வெவ்வேறு விதமான மனிதர்களை வெவ்வேறு வேளைகளில் சந்திக்கும்போது அவரவரின் தேவை ஒவ்வொரு காலகட்டத்தில் நேரத்தானே செய்கிறது. அந்தந்த மனிதர்களின் தேவை அந்தந்த நேரத்தில், அத்தோடு அவர்களைக் கழட்டி விட முடியுமா, அவை பின்னும் தொடரத்தானே செய்கின்றன. அல்லது அவர்களுக்கு நம்மின் தேவை ஏற்பட்டுத்தானே போகின்றன. பின் எந்த மனிதர்களெல்லாம் தேவையானவர்கள், யார் யாரெல்லாம் தேவையற்றவர்கள் என்று எப்படிப் பிரிப்பது? குழப்பம்தான் மிஞ்சியது.
இந்த விளம்பரத்திற்குப் பின்னும் யார் யாரெல்லாம் தன்னைத் தேடி வருகிறார்களோ அவர்களெல்லாம் தேவையானவர்கள் மற்றவர் தேவையற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தான். தன் மீது அக்கறை உள்ளவர்கள்தான் தனக்குத் தேவையானவர்கள். மற்றவர்கள் தேவையற்றவர்கள். மிகச் சுலபமான புரிதல்தானே இதற்கு ஏன் குழம்ப வேண்டும். தேடி வந்து தொல்லை தருபவர்கள் என்று ஏன் யோசிக்க வேண்டும்? தொல்லை தருபவர்கள் எப்படி தேவையானவர்களாக இருக்க முடியும்? அக்கறை கொண்டவர்கள்தானே அன்புத் தொல்லை தருவார்கள். மற்றவர்கள் எட்டிக் கூடப் பார்க்க மாட்டார்களே?
அவன் சொல்றது சரிதான். அவனை டிஸ்டர்ப் பண்ணக் கூடாது…ஒரு கலைஞன் அப்படித்தான் இருக்க முடியும். அவன் எப்போதும் வான் வெளில சஞ்சரிக்கிறவன், ஏதாச்சும் யோசிச்சிக்கிட்டே இருக்கிறவன், என்னமாச்சும் உருவாக்கிக்கிட்டே இருக்கிறவன், எந்த சம்பிரதாயத்துக்கும் கட்டுப் படாதவன், எந்தக் கட்டுக்குள்ளும் வராதவன், எல்லாத்தையும் பரிசோதனை பண்ணிப் பார்க்கணும்ங்கிற எண்ணமுள்ளவன், சோதனை பண்ணிப் புரிஞ்சிக்கிறவன், கற்பனையை விட அனுபவங்களை நிரம்ப விரும்புறவன், அனுபவச் செழுமையில்தான் உண்மையான ஆக்கங்களை உருவாக்க முடியும்ங்கிற உறுதி உள்ளவன். இப்படி ஆழமா உணர்ந்து நியாயமா ஓதுங்கிக்கிறவங்க எத்தனை பேர் இருப்பாங்க…?
பலவாறு யோசித்தவாறே டீக்கடையை நோக்கிப் போனான் அச்சுதன். டீக்கு சொல்லிவிட்டு அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான். நாலைந்து பேர் தினசரி படித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் குறிப்பிட்ட தினசரியில் தான் கொடுத்த விளம்பரப் பக்கத்தினைப் படிப்பவர் யார் என்று கண்கள் தேடியது. ஒரே தினசரியை நான்கு பேர் பிரித்து வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார்கள்.
பாருங்க சார், உலகத்துல எந்தெந்தமாதிரியோவெல்லாம் கிறுக்கனுங்க இருக்காங்க…இங்க ஒருத்தன் செய்திருக்கிறதப் பாருங்க….என்னச் சுதந்திரமா இருக்க விடுங்கன்னு விளம்பரம் கொடுத்திருக்கான்….எங்காவது இப்டிப் பார்த்திருக்கீங்களா? இந்த நாட்டுல எவன் சுதந்திரம் இன்னைக்குக் கெட்டுப் போச்சு, இவன் மட்டும் இப்டி அறிவிப்பு கொடுக்கிறதுக்கு? கிறுக்குப் பயலுங்க சார், கிறுக்குப் பயலுங்க…..
அருகிலே படித்துக் கொண்டிருந்தவர்கள் அமைதியாக அந்த ஆள் முகத்தைப் பார்த்தார்கள். எந்த உணர்ச்சியையாவது காண்பித்து விட்டால் அது என்னமாகவாவது அர்த்தப் பட்டுப் போகுமோ என்று வெகு ஜாக்கிரதையாக இருந்தது போலிருந்தது அவர்களின் பார்வை.
ஏதாவது பாவங்களை முகத்தில் காண்பிக்கப் போய், அதனால் தங்களின் சுதந்திரம் இந்த இடத்தில், இந்தப் புலர் காலைப் பொழுதில் பாதிக்கப்பட்டு சின்னாபின்னமாகி விடுமோ என்று அவர்கள் அச்சப்படுவது போலிருந்தது அச்சுதனுக்கு. மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.
எல்லோரும் ஜாக்கிரதையாக இருக்கத்தான் விரும்புகிறார்கள். அதாவது வம்பு தும்பு வேண்டாம் என்று. அமைதியை விரும்பக் கூடியவர்கள். சோற்றுக்கிருக்கிறதோ இல்லையோ சண்டை வேண்டாம் என்பவர்கள். மெனக்கெட்டு சண்டையடித்துக் கொள்பவர்களைக் கூட ஏம்ப்பா இப்டி என்று கேட்காமல் வேடிக்கை பார்த்து விட்டுச் செல்பவர்கள். சண்டை போட்டவர்களே தீர்த்துக் கொள்ளட்டுமே, நாம் ஏன் குறுக்கே புகுந்து நம் நிம்மதியைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? என்ற நினைப்பிலுள்ளவர்கள். மனிதனின் இயல்பு அமைதி, நிம்மதி. சந்தோஷம் கூட இல்லை. அன்றாடப் பிழைப்பு அப்படியே அவர்களை இழுத்துச் செல்ல வேண்டும். பாதகமில்லாமல் வயிறு நிறைகிறதா, வண்டி ஓடுகிறதா என்பதே. இல்லையென்றால் இப்படி ஒரு அமைதி அங்கே திகழுமா?
யாருமே எதுவும் சொல்லாமல் வெறுமே பார்ப்பது அந்த ஆளுக்கு எரிச்சலை ஊட்டியிருக்குமோ என்னவோ, மெல்ல என்னவோ முனகிக் கொண்டது போலிருந்தது.
அச்சுதன் சொன்னான். அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதுனால கொடுத்திருக்கலாம்….
அந்த ஆள் உற்றுப் பார்த்தார். என்ன சார் பாதிப்பு? இல்ல என்ன பாதிப்புன்னு கேட்குறேன்…எவன் சார் சுதந்திரமா இல்ல இந்த நாட்டுல? சுதந்திரம் சுதந்திரம்னு எல்லாத்தையும் அவுத்து விட்டுத்தானே நாடு இன்னைக்கு இந்த நெலமைல இருக்கு….எதுலயும் எந்தக் கன்ட்ரோலும் கிடையாதுன்னுதானே ஆகிப் போச்சு…அவனவன், அவனவன் இஷ்டப்படி எப்டியும் இருக்கலாம்னுதானே இருக்கு…தடியெடுத்தவன் தண்டல்காரன்னுதானே ஆகிப் போச்சு…? இதுக்கா இந்த நாட்டுக்கு சுதந்திரம் கெடச்சுது? சுதந்திரம்ங்கிற பேர்ல எங்க அடிப்படை ஒழுக்கம் பாழாகுதோ அங்கெல்லாம் எல்லாமும் இப்டித்தான் சார் கெட்டுக் போகும்….தனி மனுஷ ஒழுக்கம்னு மகாத்மா இதைத்தான் சொன்னார். யாரு கேட்குறா? ஏன், மீறினா என்னன்னு எல்லாமும் கோட்டைத்தாண்டின கதையாகிப் போய்க் கெடக்கு…இனிமே யார் வந்து ஒழுங்கு படுத்த முடியும்…இந்த லட்சணத்துல சுதந்திரமா இருக்க விடுங்கன்னு ஒரு விளம்பரம் வேறே….கேலிக் கூத்தா இருக்கு….
அது ஒரு தனிப்பட்ட மனுஷனோட விருப்பம் சார்…அதை ஏன் நீங்க தப்புங்கிறீங்க…?
யாரு தனிப்பட்ட மனுஷன்? இந்தாளா? வானத்துலேர்ந்து டேரக்டா கீழே குதிச்சானாமா? ஒரு தாயோட வயித்துக்குள்ளேர்ந்து வந்தவன்தானே? அந்தத் தாயி அவன் அப்பனோட கூடினதுனாலதானே அவன் உதிச்சான்…சுற்றம் சுழம் இல்லாம அவுங்க தனியாவா வந்திருக்க முடியும்? அப்போ அவுங்க மூலமா வந்த இவன் மட்டும் எப்படி தனிப்பட்ட மனுஷனாக முடியும்? இதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம்ங்க…ஆத்தமாட்டாமத் திரியறவன் பூரா இப்டித்தான் இருப்பானுங்க….தன்ன என்னவோ பெரிஸ்ஸா தனக்குத்தானே நெனச்சிக்கிறது…. இந்த ஒலகத்தையே உய்விக்க வந்த ஆளு மாதிரி…இப்டித்தான் இருக்கும்னு மத்தவங்க எல்லாத்தையும் பார்த்து சலிச்சிக்கிறது….தன்னை அறிவு ஜீவின்னு நினைச்சிக்கிட்டு, நினைச்சிக்கிட்டுன்னு கூட இல்ல…எவனாவது சொல்லமாட்டானாங்கிற ஆதங்கத்துல கன்னா பின்னான்னு மனசுக்குத் தோணினதப் பேசுறது, செய்றது, எழுதுறது, அது மூலமா தான் என்னவோ மத்தவங்ககிட்டருந்து ரொம்ப மாறுபட்ட ஆள்னு தன்னைத்தானே காண்பிக்க முயற்சிக்கிறது…இதெல்லாம் வெட்டி வேலைங்க….பர்ஸனலா உள்ளே நுழைஞ்சு பார்த்தீங்கன்னா நிறையக் கெட்ட வழக்கம் உள்ளவனா இருப்பான்…மனசுக்குள்ள ஏராளமான அசிங்கங்களைப் புதைச்சிக்கிட்டு, வித்தியாசமாச் சிந்திக்கிறேன்னு சொல்லி எல்லாத்தையும் முரணாவே பார்க்கிறதை வழக்கமாக் கொண்டிருப்பான். இப்படியே நேரத்தையும், காலத்தையும் வீணாக்கி, உடம்பையும் மனசையும் கெடுத்துக்கிட்டு, அவனுக்கு அவனே பிரயோஜனம் இல்லாம இந்த சமூகத்துக்கும் உபயோகமில்லாம வாழ்ந்துக்கிட்டிருப்பான். இந்த நாட்டுல சோத்துக்கே இல்லாம எத்தனாயிரம் பேர் அன்றாடம் கஷ்டப்படுறாங்கன்னு என்னைக்காவது இவன மாதிரி ஆளுங்க யோசிச்சிருப்பாங்களா…? அரசாங்கம் எவ்வளவோ காரியங்கள் பண்ணுதே…ஒவ்வொரு வருஷமும் எத்தனாயிரம் டன் உணவு தானியங்கள் கெட்டுப் போயும், வீணாகியும், கடல்ல கொட்டியும், யாருக்குமே உபயோகமில்லாமப் போகுது…ஒரு பக்கம் மிகப் பெரிய பட்டினிப் பட்டாளம், இன்னொரு பக்கம் கொள்ளை கொள்ளையா உணவுப் பொருட்கள் வீணாக்கம்….யாராவது இதைப் பத்திக் கவலைப் படுறாங்களா… தொடர்ந்து இப்டியே நடந்திட்டிருக்குதே…இதை சுத்தமா சரி பண்ணனும்னு யாராச்சும் முயன்றிருக்காங்களா? யதார்த்தத்தைப் பத்தி நினைக்காம கற்பனைல மிதந்திட்டிருக்காங்க…எல்லாம் புளிச்சேப்பக்காரனுங்க சார்….பொத்திட்டுக் கெடக்குறியா, இல்ல ஒதைக்கவான்னு கேட்கணும்….
ஏன் சார், எவ்வளவோ தப்பு நடக்குதுன்னு கோபப்படுறீங்க…ஒரு ஆளு வெறும் விளம்பரம் கொடுத்ததுக்கே இத்தனை சங்கடப்படுறீங்களே…?
அதத்தான் சார் சொல்ல வர்றேன்…ஒவ்வொரு மனுஷனுக்கும் கிடைச்சிருக்கிற தனிப்பட்ட சுதந்திரத்துனாலதான இதுவும் சாத்தியமாகுது….நினைச்சதைச் செய்ய முடியுது….அதாவது எப்டி நினைச்சாலும்…அதானே…? இப்டித்தான் நினைக்கணும், செய்யணும்னு ஒரு வரைமுறை இல்லையா? கட்டுப்பாடில்லாமத் திரியறதா சுதந்திரம்? எல்லாக் கட்டுக்களையும் அவுத்து விட்டிட்டு அலையுறதா சுதந்திரம்? எப்டி வேணாலும் இருக்கலாம்ங்கிறதா சுதந்திரம்? எதை வேணாலும் செய்யலாம்ங்கிறதா சுதந்திரம்? இங்க அதுதான் சார் வளர்ந்திருக்கு….அதுனாலதான் இந்த நாடு இப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கு….சுதந்திரப் போராட்டத் தியாகி சிதம்பரம்பிள்ளை சாகுறபோது என்ன சொன்னார் தெரியுமா? இந்த நாடு சுதந்திரம் அடைஞ்சிடும், ஆனா அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாக்க மக்களுக்கு தேச பக்தி வேணும்னார். அந்தத் தேசபக்திங்கிறது எப்டி வரும்? தனி மனித ஒழுக்கத்துலேர்ந்து முகிழ்க்கணும்.அடிப்படை அதுதான். அது இன்னைக்கு சீரழிஞ்சு போச்சு. அதுதான் இன்னைக்கு உண்மை…
எது? மக்களுக்கு தேச பக்தி வந்திருச்சுங்கிறீங்களா?
அவர் இவனை ஒரு மாதிரியாகப் பார்த்தார். லந்தா? என்று கேட்பதுபோலிருந்தது. அவர் முகம் போக்கு இவனுக்குச் சற்று உதறலைக் கொடுத்தது.
இப்பத்தான் சார் எனக்கு சந்தேகமே வருது….அந்த விளம்பரத்தக் கொடுத்த ஆளு நீங்கதானோன்னு…இல்லன்னா இப்டித் தாறு மாறாக் கேள்வி கேட்பீங்களா? இப்படி விட்டேற்றியா கிடைச்ச சுதந்திரத்தைப் பயன்படுத்தற மக்கள்ட்ட தேசபக்திங்கிற ஒழுக்கம் படிப்படியா அழிஞ்சி போயிடும்ங்கிறேன் சார்….அழிஞ்சி போயிடுச்சின்னேதான் நான் சொல்லுவேன்….ஏன்னா தனி மனித சுயநலம் பெருகி, அதுனால ஒழுக்கம் குன்றிப் போய், எல்லா நல்லதுகளும் படிப்படியா அழிஞ்சிதான் போயிடுச்சி….இங்கே…! ஒண்ணு நல்லாத் தெரிஞ்சிக்குங்க…நம்மளோட எந்தச் செயல்னாலேயும், யாரோடு மனசையோ, செயலையோ புண்படுத்தறதுக்கோ, பாழ்படுத்தறதுக்கோ நமக்கு உரிமையில்லை…அப்படியான எந்தக் காரியத்தையும், ஒரு நல்ல மனசுள்ளவன், ஏத்துக்கவே மாட்டான். அப்டி யோசிச்சதுனாலதான் நடக்குற தவறுகளைப் பார்த்து, மகாத்மா தன்னை வருத்திக்கிட்டு அதைத் திருத்த முனைஞ்சார்…..இந்த மக்களோட தவறுகளை அவர்களுக்கு உணர்த்துறதுக்காக அவர் தன்னை வருத்திக்கிட்டார். அதுக்கு நானும் பொறுப்புதான்னு உணர்ந்து தன் அகத்தை மேலும் தூய்மையாக்கிக்க முனைஞ்சார்….அகம் தூய்மையாகணும்….ஒவ்வொரு மனுஷனும் தன்னை மேம்படுத்திக்கணும்…அப்பத்தான் சுயநலம்ங்கிற கொடுமையெல்லாம் வேறோட சாயும்….அன்னைக்குத்தான் நம்ம நாடு உண்மையான உயரத்துல போகும்…சுதந்திரம் முழுமையடையறது அப்போதான்.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு நிறுத்தியவர், சிறிது நேரம் அவனையே விலக்காமல் உற்றுப் பார்த்தார். அவர் கண்களை அவனால் நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. அவனையறியாமல் பார்வை நிலத்தை நோக்கித் தாழ்ந்தது. தெளிந்து விட்டது அவருக்கு.
இனிமே இப்டியெல்லாம் விளம்பரம் கொடுக்காதீங்க….அபத்தமா இல்ல…? சொல்லிவிட்டு எழுந்தவர் இவன் பதிலுக்குக் காத்திராமல் நடையைக் கட்டினார்.
எப்படி இவரால் தன்னைக் கண்டு பிடிக்க முடிந்தது என்பது புரியாமல் அவர் செல்லும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தான் அச்சுதன். சாதாரணர்கள், சராசரிகள் என்று நினைப்பவர்கள் கூட எப்படிப் பேசி விடுகிறார்கள்? ஆழ் மனதில் எவ்வளவு நல்லவர்களாய் இருக்கிறார்கள்? அந்த உள்ளார்ந்த ஈரத்தை யாரால்தான் அழித்தொழிக்க முடியும்? என்னென்னவோ தோன்றியது அச்சுதனுக்கு.
சும்மா ஒரு த்ரில்லுக்கு….என்று தான் செய்ததைச் சொல்லியிருந்தால் ஓங்கிக் கன்னத்தில் விட்டிருப்பாரோ என்று நினைக்கத் தலைப்பட்ட அந்த நிமிடத்தில்…உடம்பு மெல்ல அநிச்சையாய் நடுங்கிக் கொள்வதைக் காண, தான் எதிர்பார்த்த த்ரில் இதுதானோ என்று எதிர்மறையாய் உணர வைத்தது.
-----------------------------------------

“ல”என்றால் லட்டு என்றுதான் பொருள்… சிறுகதை

(திண்ணை இணைய இதழ் – 02.07.2012 வெளியீடு)
வேலுச்சாமிக்கு கை நீட்டாமல் முடியாது. கை ஒடிந்து போனதுபோல் உணருவான். சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது பை நிறைந்திருக்க வேண்டும். அல்லாத நாள் வெறும் நாள். வருஷத்தின் முன்னூற்றி அறுபத்தைந்து நாளும் ஆபீஸ் இருந்தாலும் சரி. அவன் போகத் தயார். ஆனால் பை நிறைய வேண்டும், அவ்வளவே. கையை விட்டால் கத்தையாய் எடுக்க வேண்டும்.
வீட்டுக்குப் போய்த்தான் பிரிப்பான். ஐந்து, பத்து, இருபது, ஐம்பது, நூறு என்று. அதுவரை வாங்கி வாங்கிச் செருகுவதுதான் ஜோலி. மேலாகக் கர்சீப்பை மடித்து உள்ளே விட்டிருப்பான். கையைவிட்டு எடுக்கும்போது கர்சீப்தான் எடுக்கிறான் என்று பார்ப்பவர்களுக்குத் தெரிய வேண்டுமாம். ஆனால் கவனம் ரூபாய் நோட்டு ஏதாச்சும் கீழே விழுகிறதா என்பதே. எதிராளிக்கு பயம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. யாருதான் வாங்கலை…இதுதான் அவன் சித்தாந்தம். இருந்தாலும் இப்படி அள்ளிக் கொட்டுகிறானே என்று நினைத்துக் கண்பட்டு விடக்கூடாதுதான். எதாச்சும் எகடு முகடாய்க் கேட்டு விடுவான் என்று அவனிடம் யாரும் வாயைத் திறப்பதில்லை. அவரவர் வாங்குவது அவரவரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்கிற உள்ளார்ந்த நினைப்பு. பயம். அது இல்லாமல் இருக்குமா…? மெப்பனையாய் வெளியே வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். சொல்லாமல் தைரியமானவன் போல் அல்லது ஒன்றுமே நடக்காததுபோல் திரியலாம். உள் மனசு ஓட்டங்களை யார் அறிவார்? அது அவரவர்க்கே வெளிச்சம்.
வேலைக்கு வந்த முதல் நாளே வாங்க ஆரம்பித்து விட்டான் வேலுச்சாமி. தவறு, தவறு…அன்று அதுவாக வந்தன அவைகள். ஓஉறா…அப்டியா சேதி…என்று தெரிந்து கொண்டு தெளிவடைந்தான். மறுநாளிலிருந்து யாரும் அவனுக்கு சிபாரிசு செய்யவில்லை. அவரையும் நாங்கதான் கவனிக்கணும் என்று தன் பெயரைச் சொல்லி வாக்கட்டை போடுவார்களோ என்று நினைத்தான். ஒருத்தரை ஒருத்தர் நம்பாத நிலைதான் இருந்தது அங்கே. தப்பு நடக்கும் இடம் அப்படித்தானே இருக்கும்? ஆனால் அப்படி நினைப்பவர்க்குத்தான் அது. அவர்கள் துடைத்து விட்டவர்கள். இவர்கள் என்ன எனக்கு வாங்கித் தருவது? எனக்கென்ன தனியே வாயில்லையா? வாயுள்ள பிள்ளை பிழைக்கும். எதெதோ நல்லதற்குச் சொன்னது அது. இன்று இப்படிப் பயன்படுகிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. அப்பொழுதுதான் தனக்குள்ளது தடையின்றிக் கிடைக்கும். இதிலென்ன சிபாரிசு வேண்டிக் கிடக்கிறது. அவனவன் சாமர்த்தியம்தானே….அந்த வார்த்தையைத்தான் சொல்கிறார்கள் இன்றுவரை. நான் வாங்குபவன்தான் என்று பகிரங்கமாகத் தெரிவிக்காத குறைதான். எப்படியோ எல்லோருக்கும் தன் ரூபத்தை அறிவித்து விட்டான். பிறகுதான் மற்றவர்பாலான சந்தேகங்கள் தீர்ந்தன.அவரவர் பாடு அவரவர்க்கு.
என்னாச்சு…நீங்கபாட்டுக்குப்போயிட்டிருக்கீங்க…கவனிச்சிட்டுப் போங்க என்று பொதுவாக வார்த்தைகளை விட்டான் ஆரம்பத்தில். அவனைப் புதிதாக நினைத்து நழுவப் பார்த்தார்கள். இவனா விடுபவன்? குரலில் மட்டும் தயக்கமோ, பயமோ இல்லாமல் பார்த்துக் கொண்டான். லேசான அதிகாரம் தொனித்ததுபோல் தோன்றி அவனுக்கே பெருமையாய் இருந்தது. வாயை மூடிக்கொண்டு நழுவுபவர்களைக் கொடுக்காய் பின் தொடர்ந்தான்.
ஃப்ளாஸ்க்கை எடுத்துக் கொண்டு காப்பி வாங்கிட்டு வர்றேன் சார்…என்று விட்டு வெளியேறியவர்களின் அடிபற்றி நடந்தான். யாரும் மறுப்புச் சொன்னதில்லை. அது காப்பி குடிக்கும் நேரமாக இருக்காது. ஒரு மணி நேரம் கழித்தால் மதியச் சாப்பாடாயிற்றே என்றும் தோன்றலாம். ஆனாலும் வேண்டாம் என்ற வார்த்தை வராது. ஓசியில் கிடைக்கிறதே….! ஊற்றி வைப்போம்…என்கிற எண்ணம்தான். கிடைப்பதைக் குடித்து விட்டு ஒரு மணி தள்ளிக் கூடச் சாப்பிட்டுக் கொள்வார்கள். அல்லது வயிற்றைக் கலக்கினால் கக்கூசுக்குக் கூடப் போய் வருவார்கள். ஆனால் வேண்டாம் என்று மட்டும் சொல்ல மாட்டார்கள். இப்படியானவர்களுக்கு நியமங்கள் என்ற ஒன்று இருக்காது என்பது சொல்லியா தெரிய வேண்டும்.
அம்மாதிரி அவனாகக் கிளம்பி வாங்கி வருவதற்கெல்லாம் வேலுச்சாமி யாரிடமும் காசு கேட்டதில்லை. அது அவன் பற்றி பிறர் வாயைத் திறக்காமல் இருக்க, அல்லது அவனைக் கடிக்காமல் இருக்க. காலை பதினொன்றரை மற்றும் மாலை நாலரை இதுதான் எல்லோரிடமும் துட்டு வாங்கிக் கொண்டு போகும் நேரம். அதிலும் மிச்சம் பிடித்து விடுவான் அவன். பழகிய டீக்கடை என்பதால் அவர்களும் ப்ளாஸ்க்கை நிரப்பி அனுப்புவார்கள். அஞ்சு காப்பி என்றால் எட்டுப் பேர் குடிக்கலாம். அதிலும் அளந்து ஊற்றி விட்டு, தான் இன்னொரு முறை குடிக்க வைத்துக் கொள்ளுவான். அது யாருக்கும் தெரியாது. அந்த மிச்சம் பிடித்த காபியை மறைவாகக் குடிப்பதில்தான் ஒரு தனி சந்தோஷம்.
என்னய்யா கொஞ்சமாத் தர்ற….? என்றார் பிரிவுத் தலைமை ஞானப் பிரகாசம். அதிலிருந்து அவரைப் புரிந்து கொண்டான். மற்றவர்க்குக் குறைந்தாலும், அவர் டம்ளரில் கவனமாய் இருப்பான். அவன் அங்கே தொந்தரவாய் உணர்ந்தது அவரைத்தான்.
யாரும் இவனுக்கு “அதற்கு“ சொல்லித் தரவேண்டியதில்லை என்று விலகிக் கொண்டார்கள். அதாவது வாளாவிருந்தார்கள். அவரவர்கள் பாட்டைக் கவனித்துக் கொள்ள வேண்டுமே என்கிற ஆதங்கம் அவர்களுக்கு. இவனால் அதற்கு பங்கம் வந்து விடக் கூடாதே என்கிற கவலை.
பின் தொடர்ந்து செல்லும் ஆசாமியை சிண்டைப் பிடித்து வாங்கி விடுவான் வேலுச்சாமி. வச்சிக்குங்கண்ணே….போதும்…அடுத்த வாட்டி பார்ப்போம் என்பார்கள் சிலர். சரி என்று விட்டு விடுவான். ஆனால் எதுவுமே தராமல் போக யாரையும் அவன் விட்டதில்லை. கொடுத்தவர்களை ரொம்பவும் வற்புறுத்தும் பழக்கம் மட்டும் கிடையாது. இவ்வளவு என்று டிமான்ட் பண்ணினால்தான் வம்பு என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. அப்படியாப்பட்டவர்கள்தான் பிடிபட்டு முழிக்கிறார்கள் என்பதை அவன் அறிவான். அந்தக் காட்சி மனதில் வந்தபோது ஒரு கணம் உடம்பு நடுங்கித்தான் போனது. பக்கத்து ஆபீசில் இவன் பார்த்த காட்சி. தபால் கொடுக்கப் போனவன் அப்படியே நின்று விட்டான். கை கால்கள் உதறலெடுத்துப் போனது. கொடுப்பதை மகிழ்ச்சியோடு வாங்கிக் கொண்டால் அது அன்பளிப்பு. அன்பாக அளிப்பதுதான் என்றும் தொடரும் என்பது அவன் தாரக மந்திரம்.
சேமிப்பு முன் பணம் போட அவனிடமே வாங்கி விட்டார் நடராஜன். என்னா சார் இது….என்றால் எல்லாரும் தருவாகளே…வழக்கந்தான் என்று விட்டார். நீ என்ன பெரிய கொம்பா…? என்று கேட்டதுபோல் உணர்ந்தான். நா பியூனு சார்…என்றான். பியூன்தான் சரி…வாங்கல…? என்றார் அவர் பதிலுக்கு. சக பணியாளரிடமே வாங்குவது இவனுக்குப் பிடிக்கவில்லை. வேலுச்சாமி இன்றுவரை அதைச் செய்ததில்லை. அவன் வாடிக்கையாளர்களெல்லாம் பார்ட்டிகள்தான்.
ஆனால் எல்லோரும் கொடுக்கத்தான் செய்தார்கள். இரண்டு பிரிவுத் தலைமைக்கும் அடுத்த சீனியர் அவர்தான். அந்த மதிப்பு வேறு இருந்தது. சமயங்களில் ஞானமே அவரிடம் பயம் கொள்வது போலிருந்தது. அவர் வாங்குவாரா என்பது இவனுக்கு இன்றுவரை தெரியாது. ஜாடையாய்க் கூடப் பார்த்ததில்லை. அந்த இன்னொருவர், அதான் கணக்குப் பிரிவுத் தலைமை சத்திய வந்தன். தலைகீழாய் நின்றாலும் அவரிடம் அதெல்லாம் நடக்காது. நடராஜனிடம் அந்த பில் என்னாச்சு, அட்வான்ஸ் என்னாச்சு என்று எதுவும் கேட்க முடியாது. ஆனால் ரொம்பவும் பாதகமில்லாமல் எல்லாமும் நடந்து விடும். அதாவது தாமதம். அவரிஷ்டம்தான். அதுக்கு அவர் நிர்ணயித்திருக்கும் காலக் கெடுதான். அதற்கு முன்னால் துரும்பு கூட நகராது.
எனக்கு சம்பளத்த விட்டா இதுதான்யா வருமானம்…நானென்ன வெளி ஆளு சீட்டா பார்க்குறேன்….தோள்ல கை போட்டுட்டுப் போயி டிபன் சாப்பிட….நீ எல்லா வகைலயும் உன்னக் கவனிச்சிக்கிடுவ…நாங்க எங்க போறது…விரல் சூம்பச் சொல்றியா…? என்றார். செய்து வேறு காண்பித்தார்.
அடங்கிப் போனான் வேலு. பில்லைப் பாஸ் பண்ண அவர் வந்தால்தான் ஆயிற்று என்கிற நிலை. சீட்டை விட்டு எழுந்திரிக்க மாட்டேன் என்றார். பயங்கரக் கிராக்கி. ஃபோனுக்கு மேல் ஃபோன். ஆடிட் ஆயிடும் என்று தகவல் வரும்வரை போட்டு வைத்தார். பிறகுதான் குண்டி எழுந்தது சீட்டை விட்டு. அவருக்கும் அங்கு பில் செக் ஷன் கிளார்க்குக்குமான புரிதல் தெரிய இவனுக்குக் கொஞ்ச நாள் பிடித்தது. கஷ்டப்பட்டுக் கிடைத்த உள்ளுர் இடம். ஆனால் இங்கு இப்படிச் சில சிக்கல்கள் இருக்கின்றனதான். சமாளிக்கலாம் என்று நினைத்து ஆறுதல் செய்து கொண்டான். படிப்படியாக எல்லாமும் கைவர ஆரம்பித்திருந்த வேளை அது.
அப்படி உள்ளுரிலேயே போடுவார்கள் என்று வேலுச்சாமி நினைக்கவேயில்லை. என்ன ஒரு அதிர்ஷ்டம் பாருங்கள். பியூன் வேலைதான் என்றாலும் அதற்கும் சில எழுத்துப் பயிற்சி வைத்தார்கள். சாயங்காலம் தபால் அனுப்ப வேண்டி வரும் என்று சொல்லி சில முகவரிகளைக் கொடுத்து எழுதச் சொன்னார்கள். பியூனுக்கு இதெல்லாமா வேலை? கேள்விப்பட்டதில்லையே என்று யோசித்தான். முதலில் வேலையைப் பிடிப்போம், பிறகு பார்ப்போம் மத்ததையெல்லாம் என்று தோன்றியது. எதிர்த்தாற்போல் உட்கார்ந்து கொண்டு வாயால் சொன்னார் ஒருவர். இவனோடு சேர்ந்து பத்துப் பன்னிரெண்டு பேர். தினசரி பேப்பர் படிப்பவன்தான் வேலுச்சாமி. ஆனால் பேனாப் பிடித்து எழுதும்போதுதான் அதன் கஷ்டம் தெரிந்தது. கண்ணால் கண்ட எழுத்துக்கள் எல்லாம் பேனா முனையில் கண்ணாமூச்சி காட்டின. எப்படியோ சமாளித்து, பார்த்து எழுதக் கொடுத்ததையும், வாயால் சொன்னவைகளையும் தத்திப் பித்தி எழுதி முடித்து நீட்டினான். திருப்தி இல்லை என்று மனசு சொல்லி விட்டது. உடனே உஷாராகி விட்டான்.
மாலை வீடு செல்லும்போது ஜீப் எங்கே போகிறது என்று யாருக்கும் தெரியாமல் கவனித்தான். அது ஒரு லாட்ஜில் போய் முடிந்தது. அதிகாரி வெளியூர் என்றும் அங்குதான் ஜாகை என்பதும் புரிந்தது. டிரைவரைப் பிடித்தான். யார், எதற்கு என்று சொல்லாமலே அவரோடு பேசிக் கொண்டிருந்து விட்டு மெல்ல வார்த்தையை விட்டான். அவன் பண்ணிய கிராக்கியைப் பார்த்தபோது உள்ளுர எரிச்சல்தான். இருந்தாலும் இப்போது அது பெரிதில்லை. காரியம்தான் முக்கியம். அத்தனை நேரம் பேசிய பேச்சில் ஆபீசரின் ரகசியங்கள் ஓட்டுநரின் பையில் என்பது புரிந்தது. அப்போதே காரியம் பழம்தான் என்கிற நம்பிக்கை வந்தது வேலுச்சாமிக்கு.
பழம் நழுவிப் பாலில் விழுந்து, அதுவும் நழுவி வாயில் விழுந்தது. எந்த ஆபீசுக்கு முதலில் போய் நின்றானோ அங்கேயே போட்டு விட்டார்கள்.
உன்ன எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சுய்யா…எல்லாம் நம்ப ஏற்பாடுதான்…ஒழுங்கா இரு….என்றான் டிரைவர் நாகரத்தினம்.
அந்த ஒழுங்கா இரு என்ற வார்த்தை இவனுக்குப் பிடிக்கவில்லை. இரு உன்ன வச்சிக்கிறேன்….என்று மனசில் கருவிக் கொண்டான்.
அதிகாரி கேம்ப் போகும்போதெல்லாம் கூடப் போக வேண்டியிருந்தது வேலுச்சாமிக்கு. பெரிய பெரிய கோப்புக் கட்டுக்களைச் சுமக்க வேண்டியிருந்தது. பெட்டிகளைத் தூக்க வேண்டியிருந்தது.
வண்டிலதான வருது…இதுக்கெல்லாமா சடைச்சிக்கிறது….அங்கங்க ஏத்தப் போற, இறக்கப் போற….வாய்யா…எனக்கும் பேச்சுத் துணையாச்சு….என்றார் நாகு.
ஆனாலும் அலைச்சல் பிடிக்கவில்லை வேலுவுக்கு. வெளியூர் சாப்பாடுகள் ஒத்துக் கொள்ளவில்லை. போகிற இடங்களில் கவனிப்பு உண்டென்றாலும், அலுவலகத்தில்தான் அவன் குறி இருந்தது. கேம்ப் பியூன் என்றே முத்திரை குத்தி விட்டார்கள் அவனை. அலுவலகத்திலேயே இருந்த சக பணியாள் சகடையன் கொழிப்பான் போலும் என்கிற சந்தேகம் இருந்து கொண்டேயிருந்தது. நமைச்சல் தாங்கவில்லை. ஆனால் அவன் அப்படியில்லை என்று நெருங்கிப் பார்த்தபோதுதான் விளங்கியது. கருணை அடிப்படையில் வேலைக்கு வந்தவனாம். அப்பா பேரைக் காப்பாற்றுகிறானாம். இருக்கட்டும் இருக்கட்டும். நினைத்துக் கொண்டான்.
அண்ணே, நீங்க பேசாம அவரோட போயிருங்கண்ணே…நா ஆபீசப் பார்த்துக்கிறேன்….உங்களுக்கு அதுதான் தோதா இருக்கும்…எனக்கு இதுதான் தோது….என்றான் அவரிடம்.
அதெல்லாம் முடியாது…எனக்கு வெளி வேலைக்கு நல்ல ஆளாத் தேவப்படுது…புது ஆள வச்சிட்டு நா என்ன செய்யுறது…? என்றார் பிரிவுத் தலைமை. அவரையும் சரிக்கட்டினான் வேலுச்சாமி. ஞானம் பிரகாசமானார். ஆனால் நிலைப்பதற்கு ஒரே வழி வேலையை நன்றாகக் கற்றுக் கொள்வதுதான் என்று அவன் உள் மனசு சொல்லியது. அன்றிலிருந்துதான் அவன் வீட்டிற்கு வருவது தாமதமானது. தபால் அனுப்பும் புறாக் கூண்டுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டு வருவது, போவது என்று எல்லாவற்றையும் ஊன்றிப் படிக்க ஆரம்பித்தான். அடித்து அடித்து எழுதிக் கொண்டிருந்தவன், மனசுக்குள் சொல்லிக் கொண்டே ஒவ்வொரு எழுத்தாகத் தப்பின்றி எழுதப் பழகிக் கொண்டான். இவன் தாமதமாகக் கிளம்புவதைக் கண்டு இரவு ஷிப்டுக்கு வரும் வாட்ச்மேன் நாகசாமி தாமதமாக வந்தான். அவனை ஒன்றும் சொல்வதில்லை இவன். அவன் வந்த பிறகு கிளம்புவதை வழக்கமாகக் கொண்டான்.
இன்று வங்கிக்கு அனுப்பிய பில்களில் ஏதேனும் தவறு என்றால் கூட அவனே அங்கேயே திருத்தி சரி பண்ணிக் கொடுத்து விடுகிறான். சிலவற்றைத்தான் ஆபீசரின் கையொப்பம் இருந்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடிக்கிறார்கள் அவர்கள். அதற்கு மட்டும் ஏனோ தைரியம் வரமாட்டேன் என்கிறது வேலுச்சாமிக்கு.அம்மாதிரி சமயங்களில் அரக்கப் பரக்க ஓடி வந்து வியர்க்க விறுவிறுக்க ஆபீசரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு திரும்ப ஓடுவான். அவன் கடமையுணர்வைப் பார்த்து ஆபீசே அதிசயிக்கும். வேலையைச் சரியாகச் செய்து விட்டால் மற்ற குறைகள் கண்ணுக்குத் தெரியாது என்பதைத் துல்லியமாய் அறிந்து வைத்திருந்தான் வேலுச்சாமி. எதையும் சுமுகமாக முடிக்கும் திறமை வேலுச்சாமிக்கு இருந்தது. இன்று அவனை விட்டால் வேறு கதி இல்லை அந்த அலுவலகத்திற்கு. மாநில அளவிலான போக்குவரத்துகள் இருக்கும் இடம். எல்லாமும் ஏறக்குறைய அத்துபடி அவனுக்கு. எதுவானாலும் சந்தேகம் கேட்டுக் கொள்ளலாம் அவனிடம். ஃபிங்கர் டிப்ஸ்தான்.
அந்தத் திருவண்ணாமலை சப் டிவிஷன் ஃபோன் நம்பர் என்னாய்யா…? மறந்து மறந்து போகுது… என்றால் இந்தாங்க சார் என்று விரலால் காட்டிக் கொண்டே நீட்டுவான் அட்டையை. அந்த அட்டையில் எழுதி எழுதி சேர்த்திருந்தான் எல்லாவற்றையும். சாதாரண வேலையா அது? இது நாள் வரை எவன் செய்தான் அந்த ஆபீசில்? பி.ஏ. என்று ஒருத்தர் இருக்கிறாரே, அவர் எதற்கு? இப்படி இவனிடம் கேட்பதற்கா? ஆப்பரேட்டரிடம் சொல்லி கணினியில் தொலைபேசி எண் பட்டியலைத் தயார் செய்து அலுவலர் டேபிளில் கண்ணாடிக்குக் கீழே வைத்தான். பார்த்து, ஒரேயடியாக மகிழ்ந்து போனார் அவர். ஏதோ சொத்தே கிடைத்ததுபோல் பூரித்தார். இப்டித்தான்யா இருக்கணும் என்று மெச்சினார். இதுவரைக்கும் எவனும் செய்யலைய்யா இந்த ஆபீசுல…என்று ஒட்டு மொத்தமாக எல்லோரையும் வாறினார் அன்று.
உண்மையில் சொத்துக் கிடைத்தது வேலுச்சாமிக்குத்தான். அதைத் தயார் செய்ததே அதற்காகத்தானே….எதுவானாலும் அவனிடம்தான் கேட்டார்கள் எல்லோரும். வரும் ஃபோனெல்லாம் அவனுக்கே. பேசி மாளவில்லை. அவரவர்க்கு வேண்டிய பர்ஸனல் லோன், முன்பணம், அனுமதி ஆணை, ரத்து ஆணை, ஒழுங்கு முறைக் கோப்பு முடிப்பு, லொட்டு லொசுக்கு என்று எல்லாமும் அத்துபடியாயின அவனுக்கு. கை வைத்தால் காசுதான். பழைய மிஸ்ஸியம்மா படத்தில் எதற்கெடுத்தாலும் கொஞ்ஞ்சம் வெள்ளையப்பம் தள்ளுங்க….என்பாரே சக்ரபாணி…அது போல் அவன் யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. அவர்களாகக் கொண்டு கொடுத்தார்கள். அவன் முக ராசி அப்படி. எப்போதும் சிரித்த முகம்தான். சுறுசுறுப்புதான். பை நிறைந்திருந்தால் உற்சாகம் வராமலா போகும்? காசுதான் எவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கிறது? அது சரி, நிம்மதியைக் கொடுக்குமா தெரியவில்லை…நேர்வழியில் வந்தாலும் அளவாய் இருந்தால்தான் நிம்மதியும் சந்தோஷமும். இல்லையென்றால் அது நம்மைப் பாதுகாப்பதற்குப் பதிலாக நாம் அதை அடை காக்க வேண்டும். காசு நமக்குப் பின்னால் வர வேண்டும். நம்மை அது வழிநடத்தக் கூடாது. யாருக்குத் தெரிகிறது இதெல்லாம்? துணிந்தவனுக்குத் துக்கமில்லை.
எல்லாவற்றிற்கும் அதுவும் வேண்டித்தான் இருக்கிறது. தப்பு செய்வதற்குக் கூட. அதற்குக் கூட ராசியான ஆள் யார் என்று பார்க்கிறார்கள். தப்பு என்று நினைத்தால்தானே தப்பு….எல்லாம் ரொட்டீன்தான் என்றார்கள். உள்ளதுதாங்க….நீங்க என்ன…புதுசா என்னத்தையோ பேசிட்டிருக்கீங்க…என்று சலித்துக் கொண்டார்கள். வாயடைத்தார்கள். பேச நினைத்தவர்கள், பேசியவர்கள் கூச்சப்பட்டு ஒதுங்கினார்கள். தங்களைத் தாங்களே குறுக்கிக் கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில் தான் எங்கு நிற்பது என்று தெரியாமல் திண்டாடினார்கள்.
சார்…ஏன் சார் உங்களுக்கு வேணும்னா நீங்களும் வாங்கிட்டுப் போங்களேன் சார்….எதுக்காக மத்தவங்களத் தொந்தரவு செய்றீங்க…என்று கேட்டார்கள். வேணாம்னா கண்டுக்காமப் போயிட்டேயிருங்க…என்று அட்வைஸ் கொடுத்தார்கள். காசேதான் கடவுளடா…அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா…..தெரியுமா? தெரிந்ததாக இவர்களாகவே பாடிக் கொள்கிறார்கள்.
அந்த அலுவலகத்தில் எல்லோரும் கண் காது மூக்கு வைத்துத்தான் பேசினார்கள். அவரவர் செயல்கள் அவரவருக்கு ரகசியம். கூடப் பேசுபவனுக்குக் கூடத் தெரிந்து விடுதல் தகாது. எதிராளி எவனுக்கும் தெரியாது என்ற நினைப்பிலேயே ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் மனதிலும் ரகசியங்கள் எந்த நேரமும் பயணித்துக் கொண்டேயிருந்தன. அவனவன் சாமர்த்தியம் அவனவன் வாழ்வு. அவ்வளவுதான்.
வேலுச்சாமிக்கு டிஸ்டர்ப்பாக இருந்தது மங்கலநாதன் மட்டும்தான். இவரென்ன பெரிய அமங்கலநாதனா இருப்பார் போலிருக்கே…என்று மனதுக்குள் கறுவறுத்தான். இன்னொரு பிரிவுத் தலைமை அவர். அதாவது கணக்குப் பிரிவு. ஏற்கனவே ஞானத்தைத் தலைவலி என்றுதான் நினைத்திருந்தான். அதைச் சமாளித்து விடலாம் போலிருந்தது. இப்போது இதுதான் பெரிய தலைவலியாய்த் தோன்றியது. பதினைந்து பேரைக் கட்டி மேய்க்கும் பொறுப்பில் வந்து அமர்ந்த அவர் ஏற்கனவே அந்த அலுவலகத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர். இவன் அங்கே சேரும்போது அவருக்கு மாறுதல் வந்திருப்பதாகச் சொன்னார்கள். அவரால்தான் தங்களுக்கு எழுத்துத் தேர்வே நடந்தது என்றும் இதற்கு முன் இதே மாதிரி பியூனுக்கு ஆளெடுத்தபோது இப்படியெல்லாம் செய்யவில்லை என்றும் குறைபட்டுக் கொண்டார்கள். பாவி மனுஷன், எப்படியோ தன் ஆர்டரைக் கான்சல் செய்திருந்தார்.
தப்புப் பண்றவங்ஞளுக்கு நாப்பதுபேர் இருந்தா, நல்ல ஆளுக்கு நாலு பேராச்சும் தேற மாட்டாங்களாய்யா…. – அவர் அருகில் இருந்து புகழ்ந்தார் கரீம்பாய். ஆழ் மனதின் உண்மையான வார்த்தைகள் அது. ரெக்கார்ட் க்ளார்க் அவர். எஸ்.எஸ்.எல்.சி. கம்ப்ளீட் பண்ணியவர். முதலில் பியூனாகச் சேர்ந்து தற்போது பதிவறை எழுத்தர். அந்த அறையே கதியாய்க் கிடப்பார். உள்ளே நுழைந்தால் அடுக்குக் குலையாத கோப்புகள். அதில் முறையாக எழுதித் தொங்க விட்டிருக்கும் பெயர், எண்கள் பொறித்த சீட்டுகள். ஒரு தூசி துப்பட்டை இருக்காது. உள்ளே நுழையும்போது கால் செருப்பைக் கழட்டிவிட்டுச் செல்லுங்கள் என்பார். செருப்பு மணல் உள்ளே படிந்து படிந்து தூசி ஏறி பதிவுகளைக் குலைக்கிறது என்று சொல்லி அதை நடைமுறையாக்கி விட்டார். ஒரு கோயில் போல் அந்த அறையை பூஜித்து வந்தார். வருபவர்களுக்கும் அந்த மதிப்பு மனதில் ஏற்படும்வகையில் படு சுத்தமாய் வைத்திருந்தார். அவர்தான் மங்கலநாதனுக்குப் பியூனும் கூட. கணக்குப் பிரிவுக்கென்று பியூன் கிடையாது. வேலுச்சாமி ஒட்டவில்லை. அவனால் அங்கெல்லாம் ஒட்ட முடியுமா என்ன? அவன் ஸ்டைலே வேறு. வேலு அருகிலேயே வரக் கூடாது என்று விட்டார் மங்கல நாதன். நல்லதாப் போச்சு என்று இவனும் ஒதுங்கி விட்டான். மனசுக்குள் மட்டும் ஒரு குறுகுறுப்பு உண்டுதான்.
எல்லாம் சரிதான். அவர் செக் ஷன் நடராஜன் வாங்குறதையே அவரால தடுக்க முடியலையே….? என்று கேட்டான் மற்றவர்களிடம். அது அவர் காதுக்குப் போனதோ என்னவோ? அவன் வேண்டாம் என்று விட்டார். கரீம் பாய்தான் பார்த்துக் கொண்டார் கணக்குப் பிரிவு எடுபிடி வேலைகளை. அவர் மேல் அவ்வளவு மதிப்பு மங்கலநாதனுக்கு. அருகில் அமர வைத்துத்தான் பேசுவார். இல்ல நிக்கிறேன் என்றால் கேட்க மாட்டார். தன்னைப்போல் காசுக்குக் கை நீட்டாத ஒரு ஆசாமி இந்த அலுவலகத்திலும் தனக்குத் துணையாக இருக்கிறான் என்பதில் ஒரு ஆறுதல் அவருக்கு.
ஆனால் வேறொரு சிக்கலை அவரால் சரி செய்யவே முடியவில்லை. அதுதான் வங்கிக்குச் செல்லும் பட்டியல்களை பாஸ் பண்ண கரீம் பாயை அனுப்ப நினைத்தபோது அவர் வேண்டாம் என்றது. மாட்டேன் என்றால் கூடப் பேசிச் சம்மதிக்க வைத்து விடலாம். வேண்டாம் என்கிறாரே…? அதன் அர்த்தம் அவருக்கு மட்டும்தானே தெரியும். இனம் இனத்தோடு.
அய்யா, நம்ம ஆபீசுல வெளி மாவட்ட பில்களெல்லாமும் கூட நிறைய வருது…அதுகளுக்கும் நாமதான் காசாக்கிக் கொடுக்க வேண்டிர்க்கு. இதுல என்னென்னவோ வேலையெல்லாம் நடக்குது…நமக்கு அது ஆகாதுங்க…நம்மள விட்ருங்க….நா உங்களுக்காகத்தான் இந்தப் பிரிவுலயே இருக்கேன்…அத தயவுசெய்து கெடுத்துறாதீக….
தெளிவாய்ச் சொல்லிக்கொண்டு விலகிக் கொண்டார் கரீம்பாய். அடித்தது யோகம் வேலுச்சாமிக்கு. சுத்தி பத்தித் தன்னிடம்தான் வந்து சேர வேண்டும் என்று தெரியும் அவனுக்கு. வேறு நாதியில்லையே…! அதுனாலென்ன சார்…பத்தோட பதினொன்ணு…செய்ய மாட்டன்னா சொல்லப் போறேன்…கொண்டாங்க…..என்று பிடுங்காத குறையாக வாங்கிக் கொண்டு போனான். ஒவ்வொரு பில்லுக்கும் எவ்வளவு காசு கிடைக்கும் என்று அப்பொழுதே அவன் மனது கணக்குப் போட ஆரம்பித்து விட்டது.
காலையில் வந்து வருகைப் பதிவேட்டில் ஒரு சுருக்கொப்பத்தை இட்டால் வேலை முடிந்தது. தயாராய் இருக்கும் பில்களை அள்ளிக் கொண்டு பறக்க வேண்டியதுதான். பிறகு மதியம் நாலுக்குதான் மீண்டும் ஆபீஸ். இடையில் எங்க போன, வந்த என்று யாரும் கேட்க முடியாது. கேட்பதில்லை யாரும். கேட்டால் பில்லுதான் சார்….இருந்து பாஸ் பண்ண வேணாமா? ஆளாளுக்கு வந்து செக்குக்கு நிப்பாகளேன்னு என்னல்ல நீங்க கேட்பீங்க…? அதான் இருந்து முடிச்சிட்டு வந்தேன்….என்ன சார் இப்டி விரட்டுறீங்க…. என்று சாதாரணமாய்க் கேட்டதற்கே அழுத்தமாய் சலித்துக் கொண்டான் ஒரு நாள். “லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம்” என்ற தகவல் பலகை ஒன்றைப் புதிதாய் டேபிளில் வைத்திருந்தார் மங்கலநாதன். அதை வைக்க யாருடைய அனுமதியையும் அவர் கேட்கவில்லை. அவசியமில்லை அவரைப் பொருத்தவரை. வாசலிலே பொதுவாக அந்த அறிவிப்பு இருந்தது. வெகு நாளாய்த் தென்படும் அது பெயருக்கு. இப்பொழுது இவர் டேபிளில் எவ்வளவு அழகாய் கம்பீரமாய்க் காட்சியளிக்கிறது அந்த வாக்கியங்கள்.கொஞ்சம் லேட்டுதான். ஆனா லேட்டஸ்ட். மனுஷன் அப்டி ஆள்தானே…! அப்படிப் பகிரங்கமாக வைத்தது மற்றவர்களுக்கு தைரியம் கொடுத்ததோ என்னவோ, அவரைப் போலவே இருப்பவர்களுக்கு சந்தோஷம் தலைகால் புரியவில்லை. அவர்கள் பங்குக்கு டேபிளில் எழுதி ஒட்டி வைத்துக் கொண்டார்கள். ஒத்தன் ரெண்டு பேர் அப்டியும் இருக்கத்தானே செய்வான்…!
இவர்களுக்கு நடுவில் நடராஜன் எப்படிப் பிழைப்பு நடத்துகிறார் என்று சிந்தனை போனது வேலுச்சாமிக்கு. அவர் வழியில் நிறுத்தப்பட்டிருந்தால் தானும் நிறுத்த வேண்டி வருமே, இதென்ன இப்படி ஒரு சோதனை? என்று கொஞ்ச நாளாய் நொந்து கொள்ள ஆரம்பித்திருந்தான் அவன் வங்கிக்குச் செல்வதும், பட்டியல்களை ரெண்டு மூணு நாள் தாமதம் செய்வதும் என்பதான நடைமுறையைக் கையாள ஆரம்பித்தான். வழக்கத்துக்கு மாறான தாமதம், பளிச்செனத் தெரிந்தது. கேட்டால், நானென்ன சார் செய்றது…அவுங்க பாஸ் பண்ணினாத்தான ஆச்சு…என்று சலித்துக் கொண்டான். அவுங்ககிட்ட பேச்சுக் கேட்க முடில சார்…வேற யாரவேணாலும் அனுப்பிக்குங்க…என்று தலை குனிந்தான். அழுகிறானோ என்று பார்த்தவர்கள் கொறப்பயலாச்சே என்று மனதுக்குள் திட்டினார்கள்.
நீங்க என்னை வெரட்டுறீங்க…நான் அங்க போயி என்னெல்லாம் லோல் படுறேன் தெரியுமா? அத்தனை எடுபிடி வேலை செய்றேன்…நான் என்ன பாங்க் ஸ்டாஃப்பா? காரியம் ஆகணுமே…அதுக்காகச் செய்றேன். அப்பத்தான் சுமுகமா முடியும் எல்லாமும். சமயத்துல நான் அவுக சொல்ற பிரகாரம் சிலத எழுத சேர்க்கன்னு செய்து கொடுத்து ஓ.கே. பண்ணிடுறேனே அதெல்லாம் என்ன சும்மாவா? வெறுங்கைல அப்டி முழம் போட்ருவாங்களா? நல்லாப் பண்ணினாங்களே…! எல்லாம் என்னோட ஒத்துழைப்பு சார்…இல்லன்னா ஒண்ணும் நடக்காது அங்க….என்னைக்காச்சும் அது சம்பந்தமா நா வாயைத் திறந்திருப்பனா….ஏதாச்சும் கேட்டிருப்பனா…எல்லாம் என் கவனிப்பு சார்…..என் தனி கவனிப்பு….இன்னைக்கு எங்க போனாலும அதுதான் மூக்க நீட்டிக்கிட்டு நிக்குது….
வேணுமுன்னா செக்கு வாங்குறவங்கள என் கூட பாங்குக்கு வரச் சொல்லுங்க…அவுங்களே நேர்ல வந்து பார்க்கட்டும்…அப்ப நா லேட் பண்றனா, அவுகளான்னு தெரிஞ்சு போயிடும்ல…என்றான். ஓரிருவர் வரத்தான் செய்தனர். கண் முன்னாடி பில் பாஸ்பண்ணுபவரிடம் மன்றாடி ஏதோ அவருக்காகச் செய்து கொடுப்பது போல் நாடகமாடி, பட்டியலை நேர் செய்து அனுப்பி, காசோலையைக் கையில் பெற்று நீட்டியபோது, மகிழ்ச்சி தாங்காமல் பதிலுக்கு அவர் அதை நீட்டினார். எதை? அதைத்தானய்யா…திரும்பத் திரும்ப எத்தனை தடவை சொல்றது? தானாய் வருவதை என்றாவது வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
சார்…ஒரு விசயம்….தயவு செய்து நாதன் சார்ட்ட மட்டும் சொல்லிப் புடாதீக….என்று கேட்டுக் கொண்டான். எதை? இதத்தான் சார் என்று வாங்கிய பசையைக் காண்பித்தான் வேலு. செக்குக் கிடைத்த சந்தோஷத்தில் அவர்கள் இதற்கு சம்மதித்தார்கள். நீ நம்மாளுய்யா…அப்டியெல்லாம் சொல்வமா என்றார்கள்.
வர்றவுங்க, செக்குக் கிடைக்குமாங்கிற ஆர்வத்துல வந்து நிக்குறாங்க…இவர் என்னடான்னா அவுங்கள அலைக்கழிச்சிட்டிருக்காரு…என் பேர்ல நம்பிக்கையில்லைன்னா, கரீம்பாயை அனுப்பட்டும்…போய் செய்து பார்க்கட்டும்…அப்பத்தான தெரியும்…..என்று சவால் விட்டான் வேலுச்சாமி. பித்தம் தலைக்கேறித்தான் இருந்தது.
அவுருக்கு வேணாம்னா அது அவரோட நிக்கணும்யா…மத்தவங்கள டிஸ்டர்ப் பண்ணக் கூடாது….ஊரத் திருத்தறதுக்கு இவரு யாரு? அநாவசியமா எல்லாருக்கும் தொல்லை கொடுத்துக்கிட்டு இருக்காரு…இது நல்லாவா இருக்கு? என்றவன் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருபவர்களிடம் மனதுக்குள் கறுவறுத்து வத்தி வைக்க ஆரம்பித்தான். அவரால்தான் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய காசோலைகள் தாமதமாகின்றன என்பதாய் அவர்களை நம்ப வைத்தான். ஒரு நாள் ரெண்டு நாளைக்கு என்று வந்து செல்பவர்கள் அவனின் இந்தப் பேச்சை வெகுவாய் நம்பத் தொடங்கினார்கள். அதிகாரியிடம் பேச ஆரம்பித்திருந்தார்கள். ஒரு தடவைக்கு இரு தடவை, மூன்று தடவை என்று வெளியூரிலிருந்து இதற்காக அலைய வேண்டியிருக்கிறது என்று புகார் கூறினார்கள். இதனால், நடைபெற வேண்டிய பொதுப் பணிகள் தாமதமாகின்றன என்று பலபடி சொல்ல ஆரம்பித்திருந்தார்கள்.
பொறுமையிழந்தது தலைமை. ஸ்மூத் ரன்னிங்கா இருக்கிற ஆபீசை எதுக்குக் கெடுக்கிறாரு…? கேள்வி துல்லியமாய் விழுந்தது. இருக்கிற தலைவலி பத்தாதுன்னு இது என்னய்யா புதுசா? அப்பவே டிரான்ஸ்பர் ஆன ஆளு போய்த் தொலையாம நம்ம களுத்த அறுக்கிறாரு…?
ஞாயிற்றுக் கிழமை டிரைவரிடம் வளமாய்ப் போட்டு விட்டான் வேலு. அது அப்படியே அறையினுள் படுத்திருந்த அதிகாரியின் தூக்கத்தை முழுதுமாய்க் கெடுத்தது.
அன்று திங்கட் கிழமை. காலை சீக்கிரமே அலுவலகம் வந்து விட்ட அதிகாரி மங்கலநாதனை முதலாய்க் கூப்பிட்டு அனுப்பினார். எல்லோருக்கும் முன்னதாகவே தினமும் தவறாமல் வந்து அமர்ந்து வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் அவர், அதிகாரி அழைத்ததும் எழுந்து பவ்யமாய் உள்ளே போனார். யாரையும் கொஞ்ச நேரத்துக்கு உள்ளே விடவேண்டாம் என்ற உத்தரவு வேறு. ஆபீசே கப்சிப் காராவடை என்றிருந்தது.
உள்ளே சத்தம் சற்று பலமாய் இருப்பது கண்டு என்னவோ விபரீதம் ஆகியிருக்கிறது என்று எல்லோரும் வெளியே ஊகிக்கத் தொடங்கினார்கள். அவர் பேசுவதும், இவர் மறுத்து மறுத்துப் பேசுவதுமாய் தொடர்ந்து கொண்டிருந்தன. கடைசியாய் ஒரு திடீர் அமைதி. என்ன சொல்லி முடிந்தது அந்தப் பேச்சு என்று யாருக்குமே தெரியவில்லை. நிமிர்ந்த தலை சற்றும் குனியாமல் வெளியே வந்தார் மங்கலநாதன். அவருக்கு இதெல்லாம் அவர் முடிக்கு சமானம்.
அன்று அலுவலகம் முடித்துச் செல்லும் வரையில் அவர் வேறு யாருடனும் எந்தப் பேச்சும் பேசவில்லை. ராத்திரி எட்டு மணி வரையில் இருந்து எல்லாவற்றையும் எழுதி முடித்துவிட்டுத்தான் கிளம்பினார்.
மறுநாள் அவர் வரவில்லை. பதிலாய் அந்த விடுப்புக் கடிதம் வந்தது அவர் மகன் மூலம். மருத்துவ விடுப்புக் கோரியிருந்தார் மங்கலநாதன். கூடவே மருத்துவரின் சான்றும் இணைக்கப்பட்டிருந்தது. அலுவலரிடம் நேரடியாய்த்தான் கொடுக்க வேண்டும் என்று அவனுக்குச் சொல்லப் பட்டிருக்குமோ என்னவோ, காத்துக் கொண்டிருந்தான் பையன். பனிரெண்டு மணியைப் போல் வந்த அதிகாரியிடம் முதல் ஆளாய் உள்ளே சென்று அதை நீட்டினான். பின் வெளியே வந்து, ஞானப் பிரகாசத்தைப் பார்த்து வரேன் சார் என்று விட்டு வெளியேறினான். இருப்பா, காபி சாப்டிட்டுப் போகலாம் என்ற குரல் கூட அவன் காதில் விழுந்ததாய்த் தெரியவில்லை.
ன்று ரொம்பவும் தாமதமாய் வங்கிக்குக் கிளம்பிய வேலுச்சாமியை அலுவலர் அழைத்தார். என் அட்வான்ஸ் பில் என்னய்யா ஆச்சு….ஏனிப்படி இந்தத் தடவை லேட்டாகுது…இன்னைக்கு முடிச்சிரு…..என்றவாறே ஒரு நூறு ரூபாய்த் தாளை பையிலிருந்து உருவி அவன் முன்னே போட்டார்.
போய், பாஸ் பண்ணி, எந்நேரமானாலும் இருந்து செக்கு வாங்கிட்டு வர்ற…சர்தானா….? என்றார் உரத்த குரலில்.
சரிங்கய்யா…முடிச்சிட்டுத்தான் வருவேங்கய்யா…என்றவன், ரகசியமாய்ச் சிரித்துக் கொண்டே, இதெல்லாம் எதுக்குங்கய்யா….? என்று கேட்டவனாய், அதை கவனமாய்க் கையில் எடுத்துக் கொண்டு, பத்திரமாய் பையில் வைத்தவனாய், குனிந்து ஒரு கும்பிடு போட்டு விட்டு, அறையை விட்டு வெளியேறினான்.
ஐயா பில்லு என்னாச்சுன்னு பார்த்து, இருந்து முடிச்சிட்டு வரச்சொல்லியிருக்காரு…நா கௌம்பறேன்…….என்றவாறே பொத்தாம் பொதுவாய்ச் சொல்லிவிட்டு பதிலுக்குக் கூடக் காத்திராமல், வெளியேறிக் கொண்டிருந்தான் வேலுச்சாமி.
ஈ, கொசு, எறும்பு, தூசி என்று எதுவும் போவது தெரியாமல் வாயை ஆவென்று பிளந்து வைத்துக் கொண்டு, அமர்த்தலாய், அலுவலகமே அவன் போகும் வேகத்தை அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தது.

-----------------------------------------------

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...