30 செப்டம்பர் 2020


“அவர் இடத்தை நிரப்ப யாருமில்லை…!”  (நடிகர்திலகம் பிறந்த நாள் அக்.1)            

____________________________________________

 




மி
கை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது, அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது.. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்தி, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது அவர் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று இல்லை. அவரின் படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் வராது.  .வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள். ஸ்டார் என்றால் அது அவர்தான். எட்ட முடியாத தூரத்திலிருந்தவர்.

 

அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டார்கள்.  தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது. அவருக்காகவே பாத்திரத்தை உருவாக்கி, கதையை உருவகித்து, காட்சிகளை அமைத்து, அவரை நடிக்க வைத்து பார்த்துப் பார்த்து ரசித்தார்கள். காமிராவை நிறுத்தத் தவறி, கட் சொல்ல மறந்து, மெய் விதிர்த்து நின்றார்கள். அவரும் இந்த எதிர்பார்ப்பு அறிந்து ஆசை ஆசையாய் நடித்தார். அச்சு அசலாய் வாழ்ந்தார்.

 

இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல பாவனை செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் பரிதாபக் காட்சிகள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது. பரிசை வாங்கும் நடிகருக்கே நான் என்ன செய்தேன்னு இதைக் கொடுக்கிறாங்க என்கிற வியப்பு. அதே நடிகர் நடிகர்திலகத்தை நினைத்துக் கொண்டாரானால், கை நீட்டி அவருக்கான பரிசை வாங்க முடியுமா? மனசு வெட்கப்பட வேண்டுமே? அதுதானே நியாயம்?

    

ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு பாராட்டிய, வரவேற்பளித்த, பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு   

 

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் அவர். ஆசை ஆசையாய் நடிப்பதில் அவ்வளவு ஆர்வம், துடிப்பு அவருக்கு.

 

மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு  இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

    

விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான, உடனடி நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேயேவா கணத்தில் ஒரு நடிகரால் இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார்

 

நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் நடிகர்திலகம்..

 

நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது தந்தை பெரியார் என்று சொன்னார்.

    

வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.

    

மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.

    

யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். எத்தனை அடக்கம் பாருங்கள். ஒரு சிறந்த கலைஞன் என்பவன் மனதளவில் குழந்தையைப் போன்றவன் என்பது நடிகர்திலகத்தைப் பொருத்தவரை அத்தனை நியாயம். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது, நன்றாய் இல்லாமல் போனது அல்லது  காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. திருப்தியில்லாமல் பார்த்து வைத்தார்கள் ரசிகர்கள்.  ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை. இன்றுவரை அதுதான் நின்று நிலைக்கவும் செய்கிறது.

 

பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய கிழவர் வேடத்திலே இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப்  பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும். அந்தப் பிரின்டெல்லாம் இன்று இருக்கிறதோ இல்லையோ? இந்த இடத்தில் நான் நினைவுபடுத்தித்தான் பலருக்கும் தெரியவரும் என்பதே என் எண்ணம்.

    

நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.

    

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் ரசிகர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.

    

திரு எஸ்.வி.ரங்காராவ், நாகையா, எஸ்.வி.சுப்பையா, எம்.என் நம்பியார், பாலையா, சகஸ்ரநாமம், டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா சாரங்கபாணி, வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம்..

    

அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.     

    

இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன.

அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற பெருமூச்சை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது.

சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம்.

 சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் சிலதைப் பார்த்து வைக்கிறார்கள் பொழுது போவதற்கான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது.

 

சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரை தன் முதல்நிலையை விட்டு அவர்  கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.

    

திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.

    

போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.

    

மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் மகிழ்ச்சி கொள்கிறது.

 

காலம் எத்தனை கடந்தாலும், ஒரு பாகப்பிரிவினை கன்னையாவையும், பச்சை விளக்கு சாரதியையும், பாவ மன்னிப்பு ரஉறீமையும், ஒரு பார்த்தால் பசி தீரும் பாலுவையும், ஒரு பாசமலர் அண்ணனையும், படித்தால் மட்டும் போதுமா முரட்டு கோபாலையும், பலே பாண்டியா பாண்டியனையும்,இருவர் உள்ளம் செல்வத்தையும், ஒரு கை கொடுத்த தெய்வத்தையும், தெய்வப்பிறவி மாதவனையும், பாலும் பழமும் டாக்டர் ரவியையும், நவராத்திரி ஒன்பது நாயகர்களையும்,  வேறு யாரையும் கனவிலும் நினைத்தும் பார்க்க முடியாத கம்பீரக் கர்ணனையும், கப்பலோட்டிய தமிழன் வ.வு.சி.யையும், வீரபாண்டியக் கட்டபொம்மனையும், மோட்டார் சுந்தரம் பிள்ளையையும்,…உத்தமபுத்திரன், தெய்வமகன் க்ளாசிக்கையும்,உயர்ந்த மனிதன் தொழிலதிபர் ராஜூவையும், கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்தையும், வியட்நாம் வீடு பிரஸ்டீஜ் பத்மநாபய்யரையும், தில்லானா மோகனாம்பாள் சண்முக சுந்தரத்தையும்,.இன்னும் எத்தனையைத்தான் சொல்லிக் கொண்டே போவது….எதை விடுவது….? இதிலேயே நிறைய விடுபட்டிருக்குமே?      யாரேனும் மறக்க முடியுமா இவைகளை? மறந்தால் அது ஆழ்ந்த ரசனைக்கு அர்த்தம்தான் ஆகுமா?    இந்த வேடங்களில் தன்னை ஆழ நிறுவியிருக்கும் அவரை எந்த நடிகர்கள் நெருங்க முடியும்? நான் நெருங்கிவிட்டேன் என்று இன்றுவரை யாரும் சொன்னதில்லை. அவரது ரசிகர்களும் அந்தப் பழியை ஏற்றுக் கொண்டதில்லை. அதுதானே உண்மை?     

தொழிலதிபர் ராஜூவாக வந்து என்ன பாடு படுத்தியிருப்பார்? நாகையா பணி ஓய்வு பெறும் அந்த ஒரு காட்சி போதாதா மனதை உருக்க?ஏராளமான சோகத்தை மனதில் சுமந்து கொண்டு, ஒரு நடைபிணமாய், எந்தச் சந்தோஷமும் வாய்விட்டு, மனம் விட்டு அனுபவிக்க முடியாத ஒரு கௌரவமான தொழிலதிபராக அந்த கண்ணியமான வேஷத்தில் வேறு யாரால் அப்படிப் பரிணமிக்க முடியும்? அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே….பாட்டுக் காட்சி ஒன்று போதாதா? சௌகாரோடு சண்டையிடும் அந்த உச்சக்கட்ட காட்சியில்தான் என்ன ஒரு ஸ்டைல், பாடிலாங்வேஜ், எத்தனை முகபாவங்கள்….நெக்லஸ் தொலைந்து போய்த் தேடும்போது கிடைத்து, சிவகுமாரை அடிக்கும் காட்சியில்,நாமும் ரெண்டு அடி வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்குமே அய்யா…! பிறவி நடிகனாய் இருந்தால்தானய்யா அப்படி அமையும்....வேறு எந்தக் கதாநாயக நடிகராவது இந்த அளவுக்குத் திருப்தி தந்திருக்கிறார்களா இன்றுவரை? அந்த இமயத்தை யார்தான் நெருங்க முடியும்? 

 

யாரும் எதையும் மறக்க முடியுமா? மறந்தால் அது ரசனை ஆகுமா? அது அந்த மாபெரும் கலைஞனுக்குச் செய்யும் துரோகமல்லவா அது? நான் அப்படித்தான் நினைக்கிறேன். அவர் இடம் இன்றுவரை நிரப்பப்படவில்லை. அதுதான் சத்தியமான உண்மை. நிரப்பவும் முடியாது. அதற்கு ஒரு கச்சிதமான முகம் வேண்டும் முதலில். பரந்த நெற்றி. அளவான மூக்
கு. கச்சிதமான தாடை. பொருத்தமான உதடுகளைக் கொண்ட மொழி பேசும் வாயமைப்பு. கதுப்புக் கன்னங்கள். எந்த விக் வைத்தாலும் பொருத்தமாய் உட்கார்ந்து கொள்ளும் முக அமைப்பு. அந்த முகத்தில் வீற்றிருப்பதனாலேயே தனக்கு ஒரு பெருமை என்பதுபோன்றதான் தோற்றம் தரும் அழகு. யாருக்கு வந்தது இந்தக் கச்சிதம்?

என்னையெல்லாம் நினைப்பாங்களா? கண்களில் நீர் துளிர்க்கக் கேட்டாராம்… - யாரிடம் என்பது இங்கே தேவையில்லை. கேள்விதான் முக்கியம்.

பல்லாயிரக்கணக்கானவர் முக்கியமில்லை. என்னைப் போன்ற ஓரிருவர் தினமும் ஊன் உருக உருக நினைத்து நினைத்து ரசித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோமே…அதை விட வேறு என்ன வேண்டும்? அது பல்லாயிரக்கணக்கானவர்க்குச் சமமாகாதா? என்னைப் போன்ற சிலரின் மனதில் அவர் அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதுதான் சத்தியம்.

 

யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங்களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அவரது பண்பட்ட ரசிகர்களின் சார்பில் 2014 ஜூலை 21 ம் தேதியின் அவரது நினைவு நாளில் ஆத்மார்த்தமான அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றேன்.

 

06 செப்டம்பர் 2020

சிறுகதை “தருணம்“

சிறுகதை                                           “தருணம்“                             -  ------------                       -----------------------------------

     தற்கும் இருக்கட்டுமென்று அந்த சூரிக் கத்தியை உள் டவுசருக்குள் ஒளித்து வைத்துக் கொண்டான் திப்பிலி. வேட்டி டப்பாக்கட்டுக்கும் மீறி மேலே அது துருத்திக் கொண்டு தெரிகிறதா என்று கவனமாய்ப் பார்த்தான்.

     மெயின் ரோடிலிருந்து விலகிச் செல்லும் மண் சாலையிலிருந்து குறைந்தது ஐநூறடி தூரத்தில் உள் வாங்கி இருந்தது அந்த மயானம். அடிக்கும் காற்றில் புகை பூராவும் மேலும் உள் வாங்கிப் பறந்து சற்றுத் தள்ளியிருந்த புது நகர் வீடுகளை நோக்கி வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது. நுழை வாயில் மெயின் ரோடுப் பகுதியில் பொட்டுப் புகை போகாது. நிமிடத்திற்கு நிமிடம் இடை விடாது சரேல் சரேல் எனப் பறந்து கொண்டிருக்கும் பல ரக வாகனங்கள் இந்த மயானத்தினால் எந்த இடையூறுக்கும் ஆளானதாகத் தெரியவில்லை.  சதா நெருப்புக் கோளங்களாய் தபதபவென எரிந்து கொண்டிருக்கும் பிணங்கள், வண்டியில் செல்வோரின் கவனத்தைக் கவராது தப்பியதில்லை. ஒரு முறையேனும் தலை இப்படித் திரும்பித்தான் மீண்டாக வேண்டும். வேறு வழியில்லை. உயிருள்ள மனிதனுக்கு எரியும் பிணத்தைப் பார்ப்பதில் ஒரு ஆறுதல். அந்த ஒரு கணம் விபத்திற்கு வாய்ப்பானது என்பதில் சந்தேகமேயில்லை.

     இருக்கும் ஏழெட்டுக் கொட்டகைக்கு, நாளைக்குக் குறைந்தது இருபது சடலங்களாவது வந்து கொண்டிருந்தன. கிழக் கோடியில் இருந்த கடைசிக் கொட்டகைக்குதான் திப்பிலி பொறுப்பு.  வந்த கொஞ்ச நாளிலேயே அந்த இடத்தைப் பிடித்து விட்டான். அது அவனின் நிரந்தரக் குத்தகை. போலீஸ் கேஸாகி போஸ்ட்மார்ட்டம் ஆன பாடிகள்தான் வரும் அங்கே. எல்லா ஒப்பாரியும் மார்ச்சுவரியிலேயே ஓய்ந்த நிலையில், அதற்கு மேல் பொறுமை இல்லையென்பதுபோல் மனம் விடுபட்ட நிலையில் கொண்டு வந்து கிடத்தி விட்டுப் போய் விடுவார்கள். உடனே வெளியேறி விட வேண்டும் என்ற அவசரத்தில் பறப்பார்கள் பலரும்.  காசைக் கொடுத்து விட்டு, பாடியை எரிச்சிக்கப்பா…இந்தா பிடி என்று விட்டெறிந்து விட்டுப் போனவர்கள்தான் அதிகம். அந்த அளவுக்கு வெறுப்பாகி விலகியவர்களாய்த் தெரிவார்கள்.

     பீஸ் பீஸாக்கிப் பேருக்குத் தைத்து ஒன்றாகச் சேர்த்து வைத்துக் கட்டி, குப்பலாய்ப் போட்டுவிட்டுப் போகும் பிணங்களை அப்படியே தூக்கி சிதைக்குக் கிடாசுவதுதான். அதிலென்ன விரலிலும், கழுத்திலும், காதிலும் ஏதாச்சும் தேறுமா என்றா தேட முடியும்? பழக்க தோஷம் விடாதுதான். கையை உள்ளே விட்டு ஒரு தடவு தடவாமல் விட்டதில்லை அவன். அறுத்த இடத்தைத் தாண்டியா இங்கு தப்பி வரும்?  உருவும் காடாத் துணி கூட ஒரே துணியாய்க் கிடைக்காது. “ச்சீ…! இந்தச் சீண்ட்ரத்த நா வீட்டுக்குக் கொண்டு போனேன்னா வீடு வௌங்கினாப்லதான்…“ நெருப்புக்குள் வீசி விடுவான் உடனே.

     பிடிக்கலேன்னா சொல்லு மாப்ள… கொட்டாய் மாறிக்கிடுவோம்…என்றான் பிச்சாண்டி. அவனுக்கு எப்பொழுதுமே இங்கே ஒரு கண்.

     திப்பிலிக்கு இதில் நிறைய வருவாய் இருப்பதாக நினைப்பு. எப்படியாவது தான் அதைக் கைப்பற்றி விட வேண்டும். அதற்காக அவனோடு சண்டை போடத் தயாரில்லைதான். காலத்துக்கும் இருக்க வேண்டிய இடம். அவன் தயவு என்றைக்கானாலும் வேண்டும். தன்னை அவன் என்றுமே எதற்கும் நாடியதில்லை. பிச்சாண்டியின் மனதில் அந்தப் புள்ளி விழுந்துதான் இருந்தது. திப்பிலியை நகர்த்த என்ன வழி? சதா அவன் சிந்தனை இதுதான். சமயங்களில் அங்கே உள்ளே நுழையும் போலீஸ் வேனை எல்லாம் ஓடிப் போய் வரவேற்றான் பிச்சாண்டி. எதுக்கும் தேவைப்பட்டுச்சுன்னா? என்று அவன் மனசு சொல்லியது. போலீஸ், எஸ்.ஐ.களை வலியப் பழகி வைத்துக் கொண்டான். ஏதோ அவ்வப்போது அவன் கையில் அவர்களும் திணிப்பதாய்த் தோன்றியது. மிரட்டல்தான போடுவாங்ஞ…எதுக்கு இப்டி? போவட்டும் நம்மை நச்சரிக்காமல் இருந்தால் சரி என்று விட்டு விடுவான் திப்பிலி.

     எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.. அதான் எல்லாக் காசையும் பாடி மார்ச்சுவரிக்குப் போகைலயே பிடுங்கிடுறானுங்களே…இங்க வந்து சும்மா கழுகுக்குப் போடுற மாதிரி நெருப்புக்கு எறிஞ்சிட்டுப் போற வேல தான…உள்ள காசத் தர்றதுக்கே அழறானுங்க…ஒருத்தனாச்சும் என்னைக்காவது மனசாரக் கொடுத்திருப்பானா?  என்று சொல்லிக் கொண்டான். அவன் பேச்சில் நிறைய உண்மையும் இருந்தது.

     எத்தனையோ கொலைக் கேசுகள் சூசைட் கேசுகளாக வந்திருக்கின்றன அங்கே. குய்யோ முறையோ என, அடிப் பாவி மவளே இப்டிப் பண்ணிட்டியேடீ…என்று நெஞ்சிலடித்துக் கதறிக் கொண்டு ஓடி வருவார்கள். வாசலோடு தள்ளி நிறுத்தப் படுவார்கள்.  தத்ரூபமாக இருக்கும் நடிப்பு. செட்டப் ஆள்கள்தான் அதில். வந்தவுடனேயே தெரிந்து போகும்.     அன்றைக்கெல்லாம் இயல்பாய் சற்றுத் தாமதப் படுத்துவான். சட்டுப்புட்டுன்னு தீய மூட்டிட்டு பெறவு தோண்டு தோண்டுங்கிறதுக்கா…? அவன் அனுபவத்தில் வில்லங்கங்கள் நிறையப் பார்த்திருக்கிறான். அதற்கான நிதானமே படிப்படியாகத்தான் அவனுக்கே வந்தது.      இந்த பாடி போய் அடுத்த பாடிக்கு உடனே வருவார்கள்.

     அடங் ஙோத்தா…என்னா ஆட்டம் போடுறா பாருய்யா….இப்பத்தானடி இங்க ஒண்ணுக்குப் பொளந்திட்டு உடியாந்த…அதுக்குள்ளேயும் இன்னொண்ணா…ஏண்டீ…காசுக்காக நாள் பூராவும் நெஞ்சிலடிச்சிக்கிட்டு ஓலமிட்டுத் திரிவியா? பன்னாரிக் கழுத….மோரையப் பாரு…..- பச்சையாகக் கேட்பான் திப்பிலி. எதுக்கும் அசராது அந்தக் கூட்டம்.

     நீ எரிச்சிப் பொழக்கிற…நா அழுது பொழைக்கிறேன்…? படுத்துப் பொழைக்கிறதுக்கு இது எம்புட்டோ பரவால்ல போடா….

     அட்டீ கழுத….செருப்பால அடி…..ஏன் அதையும்தான் செய்து பார்க்கிறது? யாரு தடுக்கப் போறா…? பிடிச்சா வச்சிக்கிட்டிருக்காக உன்ன…?

     ….ஆளக் காமி…பெறவு பார்ப்போம்…..

     ஏண்டீ உனக்கு ரோசனை சொன்னா நீ என்னை மாமாப்பய ஆக்குறியா? சிர்ர்றுக்கி மவளே….இரு உன்ன  வசமா ஒரு நாளைக்கு வச்சிக்கிறேன்…நானே வந்து படுத்தாலும் படுப்பேன்டியோவ்…தயாரா இரு….சுத்தமா வச்சிக்க… நாத்தம் பிடிச்சித் திரிஞ்சே….கத்திய செருகிட்டுப் போயிடுவேன் ஆம்மா…..

     நீ வா முதல்ல…அப்புறம் பார்ப்போம்  எதச் செருகறேன்னு…?

     வக்காள்ளி, பேச்சப்பாரு…தூஊஊஊஊ….

     எல்லா ஆட்டமும் ஓய்ந்த இடத்தில் இந்த ஆட்டமா? என்று வாய் பொத்திக் கிடப்பான். எதையும் வெளியே காட்டிக் கொள்ள மாட்டான். ஆனால் பேசும் ஜாடையில் தனக்கு எல்லாம் தெரியும் என்பதாக வந்திருப்பவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடுவான். பெரிய எம்டனா இருப்பான் போலிருக்கே …எதுக்கு வம்பு? என்று படு ரகசியமாய்ப் பணத்தைத் திணித்து விட்டுப் போய்விடுவார்கள்.

     நமக்கு என்னாங்க வந்திச்சு?  பாடி வந்திச்சா, கட்டையக் கிடாசினமா? களிமண்ணப் பூசினமான்னு போயிட்டேயிருப்பன் ….வர்றதக் கவனிக்கவே எனக்கு நேரம் பத்தல…நாள் பூரா நெருப்புல கெடந்து சாகுறோம். இதுல நா என்னாத்தங்க பார்க்கப் போறேன்…ஆம்பளையா, பொம்பளையாங்கிறது கூட எனக்குத் தெரியாதுங்க சாமி…வெறும் பொணம்…அம்புடுதேன்….சொல்லிவிட்டு அவன்பாட்டுக்கு வேலையில் கருத்தாய் இருப்பான். என்னதான் கவனமாய் இருந்தாலும், ஒரு கண் மற்ற எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டேயிருக்கும்.  மிஞ்சும் ரகசியங்கள் அங்கே வேகமாய்ப் பரவும் காட்சி அவனுக்குத்தான் தெரியும்.

     னதில் அந்தப்படம் வெகு நாளாய் ஓடிக் கொண்டிருந்தது. நிர்வாணமாய் நிற்கும் அவளோடு சம்போகம் செய்யும் அந்த அவன் யார்?

     போலீஸ் டிரஸ் தெரிகிறது. சட்டையை இன் பண்ணியிருக்கும் இறுக்கத்தைப் பார்த்தால், அவனோ? அது யாராயிருக்கும்? என்னவோ விடாமல் உறுத்திக் கொண்டேயிருக்கிறதே? மூளையை எவ்வளவுதான் கசக்கிப் பார்த்தாலும் துல்லியமாய்ப் புரிந்து கொள்ள முடியவில்லை. இன் பண்ணியிருக்கும் சட்டையை இடது கையால் அப்படியே அரைச் சுற்றாக உள்ளே இழுத்து விட்டுக் கொள்வானே அவனேதானோ? எந்நேரமும் போதையில் இருந்தால் எதுதான் மண்டையில் நிற்கிறது?  அந்தச் சின்னஞ்சிறு வீட்டில் அதை அவனுக்குத் தெரியாமல் யார் படமெடுத்திருப்பார்கள்? தெரியாமலா அல்லது தெரிந்தா? தெரிந்து என்றால் அது அவனுக்குத்தானே அசிங்கம்? அப்படியானால் அந்த அவளோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுதானே அதைச் செய்திருக்க முடியும்? அவள் எப்படி அதற்குச் சம்மதித்தாள்? என்னதான் தொழில் செய்தாலும் இப்படியா வெட்ட வெளிச்சமாய்? சம்மதித்தாளா? அல்லது சம்மதிக்க வைக்கப்பட்டாளா? ஈஈஈஈஎன்று இளிக்கிறாள் தேவடியா மவ… மனமுவந்து சிரிக்கிறாளே பாவி? இவ்வளவு கேவலமாகவா போவது? அந்த மோகனச் சிரிப்பில்தானே மயங்கினேன். கருப்பியின் பளீர்ச் சிரிப்பு. கோதுமைப் பளபளப்பு. எனக்குப் பொருந்தாதவள்தான். அதனால்தான் என்னை விலக்கி விட்டாள். அவளைக் கட்டியதே தவறு. அத்தனை கௌரவம் அவளுக்கு. என் மாசற்ற அன்பைப் புரிந்து கொள்ளவில்லையே? இப்போது சகதியில் கிடப்பது மட்டும் சரியா? அது ஒப்புதலா?      அவ என்னவிட்டுப் பிரிஞ்சா… நா இங்க வந்தேன்…பொணத்தோடு பொணமா செத்த பொணமாக் கெடக்கேன்…நடமாடுற பொணம் நா….

     நாம்பாட்டுக்குத்தான கெடந்தேன். இவ ஏன் மறுபடியும் என் கண்ணுல பட்டா? எப்டியோ ஒழிஞ்சு போன்னு ரத்தக்கண்ணீர் விட்டுத்தான அனுப்பினேன். நா எங்க அனுப்பினேன். அவளாத்தான போயிட்டா…

     ச்ச்சீ…! வராத எங்கிட்ட…உன்னப் பார்த்தாலே பிடிக்கலை எனக்கு. உன் ஒடம்பே நாறுது எனக்கு…ஒம் பல்லும், நீயும், ஆளும்….நீ எனக்குப் புருஷனா? எல்லாரும் சேர்ந்து கூட்டமா நின்னுட்டா நா சம்மதிச்சிடுவனா? மனசு வேணும்யா எல்லாத்துக்கும்…பார்த்தவுடனே பிடிக்கணும்…இல்லன்னா அவ்ளவுதான். உன்ன போட்டோவுல பார்த்தபோதே பிடிக்கலை எனக்கு. வம்பா இழுத்து வந்திட்டாக…நேர்லயா பிடிக்கப்போவுது…அதவிடக் கண்றாவியா இருக்க கண்ணு முன்னால…எம் மூஞ்சிலயே முழிக்காத….மீறி வந்தே எல்லாரையும் சேர்த்துக்கிட்டு நீ கட்டுன கட்டாயத் தாலிய உன் கண்ணு முன்னாலயே அறுத்து எறிஞ்சிடுவேன்…என் அழகுக்கு நீயெல்லாம் ஒரு ஆளா? என்ன மாதிரி ஒருத்தியக் கேட்குதா ஒனக்கு? காலடில கெடக்கக் கூட தகுதி உண்டாய்யா ஒன் மொகறைக்கு…

     அப்படிப் பேசியவளா இன்று இப்படி? என் உடம்பு நாறுமென்றால் இன்று வருபவன் உடம்பெல்லாம்? என் லட்சணத்தைப் பற்றிப் பேசிவிட்டு, அவளின் லட்சணம் அறிந்தாளா? மனசு வேணும் என்றாளே…இன்று மனசோடுதான் இதைச் செய்கிறாளா? பார்த்தவுடனே பிடிக்கணும் என்றாளே…இன்று பிடித்துத்தான் மற்றவர்களைத் தொடுகிறாளா? அவள் தொடுகிறாளா? அவர்கள் தொடுகிறார்களா? இப்படி அவளைக் கசக்கி எறிந்தவன் யார்?

     கேமரா அப்படியும் இப்படியும் அலைவதைப் பார்த்தால் ஒரு ஆளை இதற்கென்றே ஏற்பாடு பண்ணிச் செய்தது போல் இருக்கிறது? தொழில் முறை ஆள் இதற்கு வரமாட்டானே? பின் யார் செய்தது? சிரித்துக் கொண்டே அவிழ்க்கிறாளே பாவி! என்னமா இருக்கா? கல்லு கணக்கா? அந்த மூஞ்சிதான் பார்க்கணும்னு எத்தன வாட்டி கவனிச்சாலும் தெரிய மாட்டேங்குதே…அதென்ன பாதி இருட்டுலயே காட்டுறானுங்க…முழுசாத் தெரிஞ்சா விபரீதம்னு நெனக்கிறாங்களோ…? அவனையும் தான காட்டல…?அவன் மூஞ்சியக் காட்டாம ஏன் மறைக்கணும்? அவளக் காண்பிச்சா அத வச்சு அது எந்த எடம்னு கண்டுபிடிச்சிடுவாங்கன்னு கணக்குப் பண்ணுவாங்களோ…? அவள ஏற்கனவே தெரிஞ்சவன்தான அவ எடத்தையும் கண்டு பிடிக்க முடியும்?

     இப்டி திண்ணுன்னு இருந்துக்கிட்டு அவன் முன்னாடி போய் நிக்கிற அவளத் தான மண்டி போட வக்கிறான் அவன்…மண்டி போட்டு கரெக்டா இடுப்புக்கு இருக்காளே அவ…அது எதுக்கு? ….அம்புட்டு அவசரமா அவுனுக்கு?

     அப்டித்தான் படிய வப்பாங்க மாப்ள மொதல்ல…

     ஒனக்கெப்டிறா தெரியும்…?

     போலீஸ்காரனுக்குப் படிஞ்சாத்தான் அங்கன தொழிலே நடத்த முடியுமாக்கும்…

     அதத்தாண்டா கேட்குறேன்…அங்ஙனன்னா எங்ஙன…?

     அது தெரிஞ்சா நா ஏன் இங்கருக்கேன்….?

     அடி செருப்பால….போ நாயி…போயி வியாதிய வாங்கிட்டுவா…போ…போயி நக்கிட்டு வா…..

     ஒரு தமாசுக்குச் சொன்னா நீ ஏன் மாப்ள இவ்வளவு சீரியசா எடுத்துக்கிற?

     அது அவள்தான் என்று தெரிந்ததை அவன் அறிய மாட்டான். காட்டிக் கொள்ளக் கூடாது. அது அவளேதான். சந்தேகமேயில்லை. ஒரே ஒரு நாள் கட்டாயமாய்ப் பார்த்த அந்த உடம்பு நன்றாய் ஞாபகமிருக்கிறது. ஆளின் உயரமும் அந்த குண்டு உடம்பும்…

     பின்ன என்னடா….அவன் யாருன்னு தேடிட்டிருக்கேன்…அதச் சொல்லுடான்னா…?

     யாராயிருந்தா நமக்கென்ன? அந்த எடம் மட்டும் எதுன்னு கண்டுபிடி…?

     கண்டுபிடிச்சா?

     போயிட்டு வந்திரலாமேன்னுதான்…

     ஓங்கிக் கூதில ஒரு மித்தி….உயிர் போயிரும் சாக்கிரத….

     அத்தப் பார்த்தா லாட்ஜ் மாதிரித் தெரிலடா…ஏதோ வீடு கணக்கா இருக்கு…அப்போ?

     ஏதோ தெருவுலதான் அது நடக்குதுங்கிற…அதானே….?

     அதேதாண்டா…அத எப்டியாச்சும் கண்டுபிடிக்கணுமே…?

     ரொம்பச் சுலபம்….நம்ப அரசமரத்து திம்மராசு இருக்கான்ல….அவன்ட்டச் சொல்லு…ரெண்டே நாள்ல காட்டிக் கொடுத்திடுவான்…

     அவன் எந்நேரமும் போதைலல்லடா கெடப்பான்…அவுனுக்குப் பொட்டணம் வாங்கிக் கொடுத்தே முடியாதே….

     அதுக்கென்னா பண்றது…இப்போ நீ எனக்குச் செய்யலியா? அதுபோல அவுனுக்கும் செய்யி…..

     என்னானாலும் நீ என் ஃப்ரென்டு…..எங்கூடவே கெடக்குறவன்…அவென் அப்டியா? ஆத்துக்கு நடுவுல திருட்டுத்தனமா தண்ணித் தொட்டியக் கட்டிக்கிட்டுப்  பொழப்பு நடத்திக்கிட்டுக் கெடக்கான்…சாவுக்கு வாறவுகளும் வேற வழியில்லாம அங்க முங்கு போட்டுட்டுப் போறாக…ஏதோ அவன் காலமும் ஓடுது…என்னைக்கு நகராட்சில கவனிச்சி வெறட்டுறாகளோ…? திடீர்னு பொறப்டு வந்து தொட்டிய இடிச்சிப் போட்டாலும் போச்சு…அப்போ ஆளே இல்லாமப் போயிடுவான்…நம்மள மாதிரியா பர்மனன்டா ஒரு தொழில் இருக்கு அவுனுக்கு….?

     அதல்லாம் செய்ய மாட்டாக…அதுக்கெல்லாம் ஆளுகளச் சரி பண்ணித்தான் வச்சிருக்கான்…போலீசும் அவன் கைல…அதுனாலதான் சொன்னேன். காரியம் சுளுவா முடியும்னு…நீ என்னடான்னா நம்ப மாட்டங்கிற….

     ம்பாமல் இல்லை திப்பிலி. நம்பித்தான் இந்த விவகாரத்தை ஏற்கனவே திம்மராசுவிடம் சொல்லியிருந்தான். அது இந்த மாக்கானுக்குத் தெரியாது.தெரிந்தாலும் இவனைச் சமாளிப்பது ஒன்றும் பெரிதில்லை. தன்னை அண்டிக் கிடப்பவன். சொன்னால் கேட்டுக் கொள்வான்.  போலீசோடு கனெக் ஷன் அவனுக்கு உண்டு என்பது இப்போது உறுதியாகிப் போனது. இதுதான் அவன் எதிர்பார்த்தது. தான் ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று பிச்சாண்டிக்குத் தெரியக் கூடாது. தெரிந்தால் அங்கே தொடர்பு உள்ள அவன் தன்னை மடக்குவதற்காக அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தன் இடத்தில் கண் வைத்திருக்கும் அவனுக்கு விஷயம் லகுவாக முடிந்து போகும் வாய்ப்புண்டு.

     ன்று சனிக் கிழமை. சனிப் பொணம் தனிப்போகாது. கூடவே பாடையில் கோழி ஒன்றை அடித்துத் தொங்கவிட்டுக் கொண்டு வந்தது ரெண்டு மூன்று அயிட்டங்கள்.

     எங்க வெக்காள்ளி சொன்னா கேட்குறாங்ஞ……சும்ம்ம்ம்மா அதவே நெனச்சிக்கிட்டுக் கெடந்தா….இப்டி அலைஞ்சு அலைஞ்சுதான ஏரியாவையே கெடுத்துப்புட்டானுக….ராத்திரியுமில்ல…பகலுமில்லன்னு ஆயிப்போச்சு….இது தெரிஞ்சு இப்போ  அப்பப்போ தொப்பிக்காரங்ஞ வேறே வர ஆரம்பிச்சிட்டானுக….இனி வௌங்குனாப்லதான்….இதுக்கு ஒர்ரே வழிதான் இருக்கு…நாம பேசாம எடத்த மாத்திட வேண்டிதான்…சரி…ஒழிஞ்சு போயிடுவோம்னு பார்த்தா வழி வழியா இருந்து வந்த எடத்த எப்டிச் சட்டுன்னு மாத்துறது? எப்டி திடு திப்னு ஓடுறது? அவிஞ்ஞளுக்கு வேணா அந்த எடம் புதுசா இருக்கலாம். நமக்கு? அதுக்கு நாம என்னா தப்பு செஞ்சோம்? தப்பு செய்றவன வெரட்ட மாட்டாம நல்லவுகளெல்லாம் தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிப்போயிட்டா அப்புறம் யாருதான் ஊரத் திருத்துறது? இது இப்டியெல்லாம் ஆகும்னு கண்டமா? தொழிலு நசிஞ்சி போச்சுதான்….நெறையப் பேரு ஆந்திரா  கர்நாடகான்னு போயிட்டாகதான்…அங்க முறுக்குப் போட்டு விக்கிறாகளாமுல்ல…நல்லா ஓஉறான்னு இருக்குதாமே…அப்பவே நாமளும் போயிருக்கணும்தான்…விட்டாச்சு….ஏதோ கூலி வேலைக்குப் போக வரன்னு இருந்தா அதுக்கும் விடமாட்டாக போலிருக்கே….வீட்டுப் பொம்பளைங்களத் தனியா விட்டுட்டுப் போறதேல்ல பயமாப் போச்சு…ஒண்ணொன்னும் கிலியடிச்சிப் போயில்ல கெடக்கு….எப்டி நுழைஞ்சானுங்கன்னே தெரிலயே…

     அந்தப் பளீர்ச் சிரிப்புக்காரிதாண்டா மொத மொதோ வந்தா…என்னடா விடிகாலைல ரெண்டு மூணு மணியப்போல வர்றாகளேன்னு பார்த்தேன்…அன்னைக்கே எனக்கு ஒரு சந்தேகம்….ஆனாப் பாரு….காலைல ஆளுக வாறதும் போறதும்…சாயங்காலமானா மாடி பால்கனில பல்பு ஒண்ணத் தொங்கவிட்டு அதுல ஒருத்தன் சிவப்புப் பேப்பர சுத்துறான்….சரி நைட் லாம்பு போல்ருக்குன்னு பார்த்தா இதுக்கு அடையாளமாவுல்ல சுத்தியிருக்கானுக….? தெனசரி ஆட்டோல ஆளுக வாறதும் இறங்குறதும், நடுச்சாமத்துல கௌம்புறதும், தாய்ளி, ஒரே திருவிழாக் கூட்டமாவுல்ல இருக்குது…

     அது சரி மச்சான்…அந்தக் கம்மாய ஒட்டித் தள்ளின வீடாப் பார்த்திருக்கிற வழியப் பார்த்தீகளா…அதுக்கு தெக்காலருந்தும் ஆளுக வருது போவுது…சொல்லப்போனா அந்தப் பக்கந்தான் ஒரே வயக்காடு….எல்லாம் பொட்டலாக் கெடக்குதுல்ல….வண்டிய விட்டிட்டு வந்துர்றானுக….ஒரு காலத்துல ராவுல அந்தக் கம்மாப் பக்கம் போகவே பயப்படுவானுக….நாலஞ்சு பேராப் போயி வெளிக்கிருந்திட்டு, குண்டி கழுவுனமா இல்லையான்னு சந்தேகத்துலயே வந்துருவானுக….எத்தன பேரை அமுக்கியிருக்குது தெரிமா அது? கரைல ஒரு சாமி உண்டு… அங்க குளிச்சவுக அத நாலு சுத்து சுத்திட்டுத்தான் போவாக…செல மண்ண விரல்ல இழுத்து பயபக்தியா நெத்தில இட்டிட்டுப் போவலே அடுத்தாப்புல எவனும் அங்க காலடி வக்க முடியாதாக்கும்…அத்தனை துடி அது….இப்ப என்னடான்னா என்னென்னமோ நடக்குது…அந்தச் செல கூட இப்ப இருக்குதான்னு சந்தேகமால்ல இருக்கு….

                இருக்குஇருக்கு….இல்லாம என்ன? மரத்துக்கு அந்தால பேத்து வச்சிப்புட்டான் எவனோ….ஏரியாவுக்குத் தண்ணி வேணும்னு போரு போட வந்தாகள்ள….அப்பவே நகத்திட்டானுவ…..

     தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் செல்லாதடீ…குதம்பாய் காசு முன் செல்லாதடீ….

     அந்தச் சோகத்திலும் பாட்டுக் கிளம்பியது அங்கே…..

     எல்லாம் அந்தச் செவலப்பய செய்றது மாமா…..அவென் வேல பார்க்குறது வேற எங்கியோ சொன்னானுங்க…ஆனா அடிக்கடி இங்க வந்திட்டுப் போவானாமுல்ல…அவந்தான் அவள இங்க கொண்டாந்து விட்டிருக்கானாம்…..இன்னும் நாலஞ்சு கெடக்கு அங்க…இவன் வந்தாத்தான் அவளாம்…வேற யாருக்கும் தெறக்க மாட்டாளாமுல்ல….ஏகக் கத சொல்றானுங்க மாமா….அது ஏதோ ஆபீசரு தெரியாம அந்த வீட்ட விட்டிட்டு முழிக்கிறாராமுல்ல…ஏதோ நாலஞ்சு பேர ஏற்பாடு பண்ணியிருப்பாரு போல…அவுங்க என்னா சொல்லியிருக்காங்கன்னா, சாமாஞ்செட்டுகளத் தூக்கி வீதில எறிஞ்சிட்டு ஆளுகளயும் வெளியேத்திப்பிட்டு, அரை மணி நேரத்துல சாவி உங்க கைக்கு வந்திடும் சார்…ஆனா போலீசு கீலீசுன்னு போனா நீங்கதான் பார்த்துக்கிடணும்….அந்த ரப்சர் எதுவும் இருக்கப்படாதுன்னாங்களாம்…அவுரு யோசிக்கிறாராம்….பாவம்…யாரு சொன்னாகளோ….எனக்கு என்னா சந்தேகம்னா எல்லா அந்த மைனர்ப்பயதான் செய்திருப்பானோன்னு ஒரு சந்தேகம்…ஏன்னா இங்க நம்ம ஸ்டேஷன்ல இருக்கப்பவே அடிக்கடி நைட் ரௌன்ட் அப் வருவான்….ஏண்டா இந்த ஏரியாவாப் பார்த்து அலையுறான்னு நா அப்பவே யோசிச்சிருக்கேன்….அவ மேல அவுனுக்கு அம்புட்டு சீக்குண்ணே….நாய் மாதிரி பின்னாடியே அலைவானாமுல்ல…..இவன நம்பித்தான அவளே…..மதத்துப் போயில்ல திரிவாளாம்…

     திரிய வச்சிப்புட்டாண்டா அவென்….ஒழுங்காக் கெடந்திருப்பா…..இவந்தான்டா சீரழிச்சது….

     வந்திருக்கும் கூட்டம் புரிந்தது திப்பிலிக்கு. எல்லாம் அந்தச் செவலப் பய….என்ற அந்த வார்த்தைதான் இன்று உசுப்பி விட்டு விட்டது. ஊர்ஜிதப்படுத்தியும் விட்டது. நகரின் எந்தப் பகுதி என்பதும் புலப்பட்டது.  இடுப்புக்குக் கீழே பேன்ட்டைக் காட்டி எதிரே அவளை மண்டி போட வைத்தவன் அவனாகத்தான் இருக்க வேண்டும். அந்த அங்க அடையாளம். உச்சி முதல் பாதம் வரை காட்சியை ஒரு ஓட்டு ஓட்டிய அந்தச் சில கணத்தில் மனதில் உறுதிப்பட்ட ஒன்று. இந்தச் சில கணத்திற்காகத்தான் இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தான். அது அவன்தான். அவனேதான். நிச்சயமாக அவன்தான். தன்னை அவளிடமிருந்து பிரித்தவன். ஆசை காட்டிச் சீரழித்தவன். நகரின் புதிய பகுதி ஒன்றில் என்னமோ நடக்கிறது என்று கேள்விப்பட்டிருந்தது இன்று காது வழிச் செய்தியாய் தன் இடத்திலேயே வந்து  வலிய ஒலிக்கிறது.

     பொக்கிஷமாகத் தனக்குக் கிடைத்த பேரழகியைத் தன்னிடமிருந்து களவாடிய கயவன். அவன் வந்து போவது இன்று உறுதியானது. முதன் முதலாய் இருளில் அவனோடு கட்டி உருண்டதும், அவன் கருத்த உருட்டு உடம்பும், பின் கழுத்தில் துருத்திக் கொண்டிருந்த அந்த மொக்கைச் சதைக் கோளமும் மனதில் நிறுத்திய அடையாளங்கள். அப்படியே மனத் திரைக்குள். தன்னோடு சரிக்குச் சரியாய் நிற்க முடியாமல் இருளோடு விலகிய அவன். துணியைப் பூராவும்  உருவி அம்மணமாய் ஓட… இந்தாடா நாயே….என்று ஜட்டியை வீசியதும், இருளில் மானத்தை மறைத்துக் கொண்டு அவன் எடுத்த ஓட்டம். அவனிடம் அன்று அவன் விட்ட அந்தக் காக்கி உடை இதோ இந்தக் கொட்டகையின் ஒதுக்குப் புறமான மேல் பொந்துக்குள். அதற்கு வேலை வந்தாகி விட்ட வேளை இது.  

     காக்கி உடைக்குள் தனது தோற்றம் கற்பனையாய் ஓடியது திப்பிலிக்கு. கூடவே அந்தச் சூரிக்கத்தியின் இருப்பை உறுதி செய்யும் விதமாய் வலது கை வேகமாய் நகர்ந்து அதை அழுத்திப் பிடித்தது.                                                        --------------------------------------------------

 

      

 

    

         


 

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...