19 அக்டோபர் 2020

பாரிஸ்டர் ரஜினிகாந்த்.....

 ஒரு கதை எழுதலாம்னு உட்கார்ந்த என்னை அநியாயமா இது இழுத்திடுச்சு. மூழ்கிப் போயிட்டேன். என்னா ஒரு ட்ரெஸ் கோட்...டை காம்பினேஷன்...உறர் ஸ்டைல் ...பைப் பிடிக்கிற லாவகம்...அந்த உடல் மொழி...பார்வை...ஆயிரம் பேசுதே....கண்ணன் கேரக்டரை அன்டர் ப்ளே பண்ணி பாரிஸ்டர் ரஜினிகாந்த் கேரக்டரைத் தூக்கி நிறுத்தி...வேறே யார் செய்ய முடியும்...? டைகர் வரதாச்சாரின்னு சென்னைல ஒரு வக்கீல்...அவரை இமிடேட் பண்ணினதா நடிகர் திலகம் சொன்னது...இது தகவல்....17 அக்டோபர் 2020

“டேபிள் டென்னிஸ்” - கோபி கிருஷ்ணன் நேர்காணல்-யூமாவாசுகி-வாசிப்பனுபவம்-

 

டேபிள் டென்னிஸ்” - கோபி கிருஷ்ணன் நேர்காணல்-யூமாவாசுகி-வாசிப்பனுபவம்-உஷாதீபன்


      நான் சொன்னதெல்லாம் மிகவும் அசிங்கமாக இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார் கோபிகிருஷ்ணன். அசிங்கம், அபத்தம் என்று ஒரு சாரார் அல்லது சிலர் நினைக்கக் கூடும் என்பதான உணர்வு இருந்திருக்கிறது. ஆனால் அதைத் தவிர்க்க முடியாமல் தவித்திருக்கிறார். என்ன மனோ வியாதியோ? நினைக்கவே பரிதாபமாகத்தான் இருக்கிறது.

      கோபியை மதுரை ஞாயிற்றுக்கிழமை சந்தை திலகர் திடலுக்கருகிலான (தேவி தியேட்டரின் எதிர்புறம்-மணி நகரம் ஒட்டிய பகுதி) வீட்டில் ஒரே ஒரு முறை சந்தித்ததாக நினைவு. அப்பொழுதெல்லாம் அவரது கதைகள் ஒன்றிரண்டைத்தான் படித்திருந்தேன். பிறகுதான் முழுத் தொகுப்பு வாங்கியதும், படித்ததும்.

      கேள்வி மேல் கேள்வி கேட்டு கோபி பதில் சொன்னதாக  இந்நூலில் இல்லை. அவரே தன் கதையை, அனுபவத்தை, எழுத்துப் பணியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். என்னைப்பற்றி நானே சொல்லிவிடுகிறேன். கேள்விகள் பிறகு...என்று சொல்லி அவரே ஆரம்பித்து விடுகிறார்.

      சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவராகத்தான் அறியப்படுகிறார். சைக்காலஜியில் அதிக ஆர்வமுடையவராகவும், இயல்பிலேயே அதிக கூச்ச சுபாவமுடையவராகவும் இருந்திருக்கிறார். மாநிலக் கல்லூரியில் உளவியலைத் தேர்வு செய்து படிக்கும்போதுதான் ஒரு பெண்ணோடு மானசீகக் காதல் ஏற்படுகிறது. எட்டாம் வகுப்புப் படிக்கும் அந்தப் பெண்ணோடு ஏற்பட்ட காதல்  அறியாப் பருவத்தில் வரும் ஈடுபாடு... உணர்ச்சி வேகம் சார்ந்தது, calf love  என்று அதைச் சொல்வார்கள். என்றும் விளக்கமளிக்கிறார்.

      மனிதன் தன் செயல்களுக்கான காரணங்களை உணர்ந்திருத்தலும், அதைத் தவிர்க்க முடியாமல் தவித்தலும், அது தவறாயினும் அந்தப் படுகுழியில் விழுதலுமான நிகழ்வுகள் இவர் வாழ்க்கையில் நிரம்ப நடந்தேறியிருக்கிறது. படிக்கும் நமக்கு அவர் மேல் இரக்கமே ஏற்படுகிறது. ஐயோ...நாம் அருகில் இல்லாமல் போனோமே...ஏதேனும் செய்து மாற்றப் பார்த்திருக்கலாமே என்றெல்லாம் தோன்றுகிறது.

      ஓரியண்டல் ஃபயர் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில் சில மாதங்கள் வேலை பார்த்திருக்கிறார். ஆல் இன்டியா  உறான்டிகிராப்ட் போர்டில் குமாஸ்தாவாகப் பணிபுரிந்திருக்கிறார்.அரசு பொது மருத்துவ மனையில் சில காலம் என்று பல வேலைகள். எங்கும் நிலைக்காத மன நிலை. கிடைத்த அரசுப் பணியை ரிஸைன் செய்யும் அளவுக்கான முடிவுகள். மருத்துவ மனையில் ஏற்கனவே காதல் தோல்வியிலிருந்த ஒரு பெண்ணிடம் ஏற்பட்ட ஈடுபாடு...பிறகு அவள்பால் ஏற்பட்ட உணர்வு பாலுணர்ச்சியின் அடிப்படையில் உண்டான அருவருப்பு என்று உணர்ந்து குற்ற உணர்வில் விலகியது...என்று இவரது கதை வெவ்வேறு தளங்களில் ஒரு குழப்பமான மனிதனின் பயணமாக நீண்டு கொண்டேயிருக்கிறது. நான்ஸி என்ற பெண்ணைக் காதலித்தது...கிறிஸ்தவப் பாதிரியாரிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டது....பிறகு வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டது...ஏற்கனவே காதலித்த பெண்ணுடனான நினைப்பில் மாத்திரைகள் சாப்பிட ஆரம்பித்தது,  அது தெரிந்து நான்ஸி, என்ன இது என்று கேட்டது, பிறகு இருவருக்கும் பிடிக்காமல் போனது, நான்சிக்கு அவள் வேலை பார்த்த இடத்தில் ஒரு டாக்டரோடு தொடர்பு இருந்தது தெரிய வந்தது...என்று இவரது வாழ்க்கை அடுத்தடுத்த அபாயங்களாகப் பயணித்துக் கொண்டேயிருக்கிறது. படிக்கும் நமக்கும் ஏன் இதைப் படிக்க ஆரம்பித்தோம் என்றும், இப்படி ஒரு மனிதன் இருப்பானா? என்று கோபமும், இஷ்டம்போல் சிந்தனைகளை ஓடவிடுதலும், செயல்படுதலும் ஒரு வாழ்க்கையா? என்கிற கேள்வியும் எழுந்து கொண்டேதான் இருக்கிறது. இவருக்கு அருகிலிருந்து இவரைப் பாதுகாக்க ஒரு நல்ல மனிதர் இல்லாமல் போனதே என்கிற பரிதாபமும் எழத்தான் செய்கிறது.

      இவரது எழுத்துப் பணி எப்படி ஆரம்பித்தது, எப்படித் தொடர்ந்தது என்று தேட ஆரம்பித்த நமக்கு, இவரின் சோகக் கதை மிகுந்த சங்கடத்தைக் கொடுக்க, இவ்வளவு பெரிய சிறுகதைத் தொகுப்பை எப்படி இவரால் கொடுக்க முடிந்தது     என்று ஆச்சரியமெழுகிறது. எத்தனையோ முறை தற்கொலைக்கு முயல்தலும், தொடர்ந்து மனநல சிகிச்சைக்கு ஆட்படுதலும், பிறகு அதில் பாதியில் கழன்று கொண்டு வருதலும், தூக்கத்திற்கும், துக்கத்திற்கும் மாத்திரைகளாய்ச் சாப்பிட்டுத் தள்ளுதலும்...கோபிகிருஷ்ணனின் வாழ்க்கைப் பயணத்தை நினைக்கையில் நமக்கு  மிகுந்த வேதனைதான் மிஞ்சுகிறது.

      தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம், இரவுகளில் தூக்கமில்லாதது, ஓயாத மன உளைச்சல், எதையெதையோ நினைத்து அழுதல் இப்படி எல்லாமும் இருந்திருக்கிறது இவருக்கு. இதையெல்லாம் விலாவாரியாகச் சொல்லத் தெரிந்தவர் அவற்றிலிருந்து விடுபட முடியாமல் தவித்திருக்கிறார் என்பதுதான் பரிதாபம். க்ரியா ராமகிருஷ்ணன் அவர்கள் நிறைய உதவியிருக்கிறார். வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பிறகு அவரது பதிப்பகத்திலேயே கொஞ்ச நாட்கள் வேலையில் இருந்திருக்கிறார். ா

      இவை எல்லாவற்றிற்கும் நடுவேதான் இவரது எழுத்துப் பணியும் தொடர்ந்திருக்கிறது. என் கதைகளில் ஒரே ஆள் எல்லாக் கதைகளிலும் வருவதாகவே இருப்பது விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது . எனக்கு வாழ்க்கையே பிரச்னையாக இருக்கும்பொழுது  படிக்கும் உந்துதல் குறைவாகவே உள்ளது.  என்று கூறும் இவர் சாமர்செட் மாமின் 35 புத்தகங்கள் படித்திருக்கிறேன் என்று கூறுகிறார். பிரசுரிக்கத் தகுந்தவை என்ற அளவில் கணையாழியில் குறுநாவல்கள் பிரசுரமாயின. இலக்கியவாதியாக இருப்பதற்காக இதுவரை மூன்றே மூன்று தடவைதான் கௌரவிக்கப்பட்டிருக்கிறேன் சுதந்திரக் கலாச்சாரம்தான் தேவை. அவரவர் உணர்வுகளுக்கு அவரவர் நேர்மையாக இருக்க வேண்டும். எனக்குத் திருமணத்தில் நம்பிக்கையில்லை என்பதை திருமணத்திற்குப் பிறகுதான் உணர்ந்தேன் என்று கூறுகிறார். ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். மனம் ஒத்துப் போனால் சரி...என்று கூறும் இவர், ஒரு மனிதன் தனது 60 வயது வரை நான்கு பெண்களுடனாவது சேர்ந்து வாழ வாய்ப்புண்டு  இதைத்தான் சுதந்திரக் கலாச்சாரம் என்கிறேன் நான் என்று முடிக்கிறார். பெண் தான் விரும்பியபடி உறவு வைத்துக் கொள்ளக்கூடிய பாலியல் சுதந்திரம் வேண்டும் பள்ளியில் 9-ம் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வியைப் புகுத்த வேண்டும், இந்த வாழ்க்கை ஒரே விதமாக உள்ளது. அதை மாற்றியமைக்க வேண்டும். அது எப்படி என்று எனக்குப் புலப்படவில்லை. என்று கூறும் கோபிகிருஷ்ணன் சில மொழி பெயர்ப்புப் பணிகளையம் செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.

                              ------------------------------------

     

“இதயம் தொட்ட இலக்கியவாதிகள்“ - விஜயா மு.வேலாயுதம் - வாசிப்பனுபவம்

 

“இதயம் தொட்ட இலக்கியவாதிகள்“ - விஜயா மு.வேலாயுதம் - வாசிப்பனுபவம்           வெளியீடு - வானதி பதிப்பகம், 23-தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17.


       கோவை விஜயா பதிப்பகம் அதிபர் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்களை முதன் முதலாக மதுரை காலேஜ் உறவுஸ் புத்தக வெளியீட்டு விழா நிகழ்வின்போதுதான் எனக்குப் பழக்கம். எழுத்தாளர் திரு.கர்ணன் அவர்களோடு சேர்ந்து இவரிடம் அளவளாவியதாக நினைவு. அதற்குப்பின் மதுரை புத்தகக் கண்காட்சியில் “வாங்க...போய் சாப்டிட்டு வருவோம்...” என்று சர்வ சகஜமாக, மிகுந்த நெருக்கத்தோடு என் தோள் மேல் கை போட்டு அழைத்துச் சென்றபோது, அந்த அன்பில் மிகவும் மன நெருக்கமாகிப் போனேன் நான்.

      மிகுந்த எளிய நிலையிலிருந்து புத்தகக் கடை திறந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு பெரிய பதிப்பகத்தையே இன்று வெற்றிகரமாக நடத்தி வரும் விஜயா பதிப்பக அதிபரான திரு.மு.வேலாயுதம் ஐயா அவர்களின் வெற்றி அவரின் கடுமையான உழைப்பினாலும், சுறுசுறுப்பான நடவடிக்கைகளாலும், எல்லோருடனுமான அன்பான அரவணைப்பினாலும் கைகூடி வந்து, பெயர் சொல்லும் அளவுக்கு அவரை இன்று உச்சியில் நிறுத்தியிருக்கிறது.

      காலத்தை வென்று நின்ற எழுத்துக்குச் சொந்தக்காரர்களான, மதிப்பும் மரியாதையும் மிக்க மூத்த தலைமுறை  எழுத்தாளர்களின் படைப்புக்களைப் புத்தகமாகக் கொண்டு வந்து, அவற்றை எங்கெங்கெல்லாம் கவனம் பெறச் செய்ய வேண்டுமோ அங்கெல்லாம் கொண்டு சென்று விற்பனை செய்து, பதிப்பகம் மற்றும் விற்பனைப் தொழிலில்  வெற்றிக் கொடியை நாட்டியிருக்கிறார் திரு மு.வேலாயுதம் ஐயா அவர்கள்.

      அவரின் அந்தப் பல்கிப் பெருகிய அனுபவங்களைத் தொடராக எழுதும்படி அமுதசுரபி ஆசிரியர் மதிப்புமிகு திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் சொல்ல, புத்தகம்  விற்பவனை, வெளியிடுபவனை எழுதச் சொல்கிறாரே என்ற தயக்கத்தோடேயே, அன்பு வேண்டுகோளை மறுக்க இயலாமல்,  மனதில் அடுக்கடுக்காகத் தோன்றிய தனது பதிப்பக அனுபவங்களை, விற்பனை செயலாக்கங்களை, இளம் பிராயம் முதல் நெஞ்சில் கனன்று கொண்டிருந்த ஆழமான வாசிப்பு அனுபவத்தின் பேருதவியோடுகூடிய தனது ஆவலான முயற்சிகளை, இதயம் தொட்ட இலக்கியவாதிகளுடனான தனது நட்புப் பயணத்தை உணர்வு பூர்வமாக, அன்போடும், பண்போடும், மதிப்பு மரியாதையோடும்  பதிவு செய்து தனது முதல் எழுத்துப் பயணத்தை வெற்றிகரமாக நிறுவியிருக்கிறார்  ஐயா அவர்கள்.

      சக பதிப்பக நிறுவனங்களோடு எத்தகைய ஆழமான உறவினைக் கைக் கொண்டிருக்கிறார் என்பதற்கு அடையாளமாக வானதி பதிப்பகமே இவரது இந்த அருமையான நூலை வெளியிட்டு அவரை எழுத்துலகில் உயர்த்திப் பிடித்திருக்கிறது. எனக்குள் உறக்கத்திலும் விழித்துக் கொண்டிருந்த இந்தப் படைப்பு மேதைகள் எழுத்து வடிவில் உருப்பெற்றிட முழுமுதற்காரணம் அமுதசுரபி ஆசிரியர் திரு.திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள்தான் என்று நன்றியோடு தெரிவிக்கிறார்.

      கவியரசு கண்ணதாசன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, மு.வரதராசனார், சுஜாதா, கவிஞர் மீரா, கவிக்கோ அப்துல் ரகுமான், வ.விஜயபாஸ்கரன், ஆகிய படைப்பாளிகளோடு ஏற்பட்ட அனுபவங்களையும், வானதி திருநாவுக்கரசு, அருட்செல்வர் திரு.நா.மகாலிங்கம், பழனியப்ப செட்டியார், சக்தி வை.கோவிந்தன் ஆகிய பெருந்தகைகளோடு ஏற்பட்ட  பழக்கமும் நெருக்கமும் கிடைத்த அனுபவங்களும்  இப்புத்தகம் அழகாகவும், ஆழமாகவும், நெஞ்சைத் தொடும் வண்ணமும் அமைவதற்குக் கருணை செய்தது என்று மிகுந்த அடக்கத்தோடு விவரிக்கிறார்.  

      மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு.வரதராசனார் அவர்களின் புத்தகங்கள் எங்கே...எங்கே என்று கேட்டு, துரிதமாக விற்ற காலம் அது. வரிசையில் நின்று புத்தகங்களை வாங்கிய வாசகர்கள். 1974 ல் அகிலன் கருத்தரங்கம் பல்கலையில் நடைபெற்றபோது அதற்குச் சென்றிருந்த எங்களுக்கான உபசரிப்பு வாழ்நாளில் மறக்க முடியாதது. அதற்குப்பின் அவரது புத்தகங்களை கோவையில் என் விற்பனையரங்கில் அதிகம் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டினேன். திருக்குறளுக்கு அருமையாக உரை எழுதி குறைந்த செலவில் அதைப் பதிப்பிக்க உதவி, தமிழர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டவர் மு.வ. அவர்கள் என்று நன்றியோடும், மிகுந்த மதிப்போடும் பதிவு செய்கிறார் ஐயா அவர்கள்.

      கோவையில் நடைபெற்ற நா.பா.வின் குறிஞ்சிமலர் வெளியீட்டு விழாவில் கு.அழகிரிசாமி அவர்களோடு ஏற்பட்ட பழக்கமும், அவர் காலமான போது அதே நாளில் நடிகர் அசோகனும் இறந்த செய்தி வர, பத்திரிகைகள் அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட அவலத்தை வருத்தத்தோடு சொல்லிச் செல்கிறார்.

      கண்ணதாசன் பொன்விழா மலர் தயாராக, அதன் வெளியீட்டு விழா கோவையில் ஏற்பாடாக, அந்த விழாவுக்கு சாண்டோ எம்.எம்.சின்னப்பாத்தேவர் வர, அவருக்குத் தன் புத்தகங்களைக் கொடுக்க வேண்டும் என்று கண்ணதாசன் கேட்க, கவிஞரின் புத்தகங்களையெல்லாம் அடுக்கி எடுத்துப் போக, இவ்வளவு புத்தகங்களா நான் எழுதியிருக்கிறேன் என்று கவிஞர் வியக்க, இவ்வளவு புத்தகங்களையா நீங்கள் விற்பனை செய்கீறீர்கள் என்று தேவர்  வியப்போடு கேட்டு, இவரது கடைக்கு விஜயம் செய்ய, குமுதத்தில் எழுதிய “இந்த வாரம் சந்தித்தேன்” தொடரில் விஜயா பதிப்பகம்பற்றியும், தன்னைப் பற்றியும் கவியரசர் கண்ணதாசன் எழுதியதை நன்றியோடு நினைவு கூறி மகி்ழ்வதைப் படிக்கும்போது எப்படிப்பட்ட வாய்ப்புக்களெல்லாம் கிடைத்திருக்கிறது இவருக்கு என்று நம்மைப் பொறாமைப்பட வைக்கிறது. எழுதியதை வரவு வைக்காமல், எழுதும் சுகத்திற்காகவே எழுதியவர் கவிஞர் என்று திரு வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்.

      கோவையில் நூல் வெளியீட்டு விழாவுக்கு ஜெயகாந்தனும், நாகேஷூம் வர, இரயிலில் தூங்கிப்போய் மேட்டுப்பாளையம் வரை சென்றுவிட்டு, அங்கிருந்து டாக்சி பிடித்து வந்து சேர்ந்த கதை ஸ்வாரஸ்யம். ஜெ.கே.யின் நூல்களை அன்று வெளியிட்டு வந்தது மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தார்.   எங்களுக்குள் கணக்குகள் உண்டே தவிர வழக்குகள் இல்லை என்று வெள்ளந்தியாக பெருமிதத்துடன் சொன்னவர் ஜெ.கே. என்பதைப் படிக்கும்போதும், அவர் மறைந்தபிறகு சில லட்சங்களை ராயல்டியாக அவரது குடும்பத்திற்கு மீனாட்சி புத்தக நிலைய முருகப்பன் வழங்கியதையும் எழுத்தாளனாய் எத்தனை மதிப்போடு வாழ்ந்து மறைந்தவர் அவர் என்று வியக்க வைக்கிறது. திரு.வை.கோவிந்தன் அவர்களின் சக்தி பத்திரிகையில் ஆரம்பத்தில் விஜயபாஸ்கரன் வேலை பார்த்ததும், பிறகு சரஸ்வதி பத்திரிகையில் ஜெ.கே. அவர்களின் முதல் கதையை அவர்தான் பிரசுரம் செய்தார் என்று ஜெயகாந்தன் பெருமிதம் பொங்கக்கூறியதையும் நினைவு கூர்கிறார்.

      ஞானபீட விருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டபோது, புரோட்டோகால் மறந்து, முன் வரிசையில் அமர்ந்திருந்த அவரை நோக்கி ஜனாதிபதி அப்துல்கலாம் குழந்தையைப் போல் ஓடிவந்து வரவேற்று மேடைக்கு அழைத்துச் சென்ற சம்பவம் நமக்கு மெய்சிலிர்க்கிறது. ஜனாதிபதி வரக்கூடிய சாலை விசேடமானது. பாதுகாப்பு நிரம்பியது. அந்தச் சாலையிலேயே ஜே.கே. வரும் காரையும் வரச்சொல்லி அனுமதித்து உத்தரவு போட்டுவிட்ட தகவல் அறியும்போது அவரின் மதிப்பும் மரியாதையும் வியக்க வைக்கிறது. கலாம் விஞ்ஞானி மட்டுமல்ல...அவர் ஞானி என்றாராம் ஜெ.கே.

      நா.பா. வின் எழுத்தின் மேல் இருந்த மதிப்பில், பற்றில் தன் பையனுக்கு அரவிந்தன் என்று பெயர் வைத்தவர்கள் ஐயா வேலாயுதம் அவர்களும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களும். அவரது குறிஞ்சிமலர் நாவல் அந்தளவுக்கான தாக்கத்தை தமிழக வாசகர்கள்  மனதில் ஏற்படுத்தியிருந்தன. பூரணி என்று பலர் தங்கள் பெண் குழந்தைகளுக்குப் பெயரிட்டார்கள்.  அதற்குப்பின்னேதான் கொடைக்கானல் செல்பவர்கள் குறிஞ்சி மலர் எங்கே என்று தேட ஆரம்பித்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் அம்மலர் தமிழர்கள் சிந்தையில் ஓடியது  

      பொன்விலங்கு தொடர் வந்தபோது அப்படைப்பால் பல இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள். வேட்டிதான் கட்டுவேன் என்று நாயகன் சத்தியமூர்த்தியைப் போல் பலர் மாறிய நிகழ்வுகள் உண்டு. பாயசம் அருந்த மாட்டேன் என்று ஒதுக்கியவர்களும் உண்டு. எழுத்தைப் போல் வாழ்ந்தவர் நா.பா. ஆஜானுபாகுவான தோற்றம். எப்படிப்பட்டவரையும் வசீகரிக்கும் உருவ ஆளுமை. எளிமைப் பண்பு, பகட்டில்லாமல் பழகும் தன்மை, நகைச்சுவை உணர்வோடு இருத்தல், தானிருக்கும் சபையைக் கலகலப்பாக வைத்திருக்கும் பாங்கு, இதெல்லாம் அவரின் சொத்து.

        எம்.ஜி.ஆர் இருந்த மேடையில் நூலகத்துறைக்கு வாங்கிய 600 படிகளை ஏன் 200 ஆக்கினீர்கள்? என்று நா.பா. பேசும்போது கேட்க, அவரைத் தொட்டு பதில் சொல்ல எம்.ஜி.ஆர். எழ முயற்சிக்க, நான் பேசி முடித்துவிடுகிறேன், பிறகு பதில் சொல்லுங்கள் என்று கம்பீரமாய் நா.பா. சொல்ல, பிறகு எழுந்த முதல்வர் இக்கூட்டத்திற்கு வரும்முன், தான் திரும்பவும் 600 பிரதிக்கு கையொப்பம் இட்டுவிட்டு வந்தேன் என்று தகவல் சொன்ன நிகழ்வும், எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையும்,நா.பா.வின் நக்கீர தைரியமும் நினைத்து நடுங்க வைக்கிறது நம்மை. விழாவுக்குச் சென்ற பொழுதில் சாப்பாட்டு இலையில் தவறாய் அசைவம் ஓரமாய் வைக்கப்பட,  ஐயா பதறிப்போக, ஏன் பதற்றம், ஓரமாய் அது இருக்கட்டும், மற்ற சைவ வகைகளைச் சாப்பிட்டால் போச்சு...என்று நிதானம் இழக்காமல் நா.பா. பதில் சொன்னதும், என்ன ஒரு பண்பாடு? யாருக்கு வரும் இது? என்று வியந்ததும்,  எப்பொழுது சாப்பிட்டாலும் எதையும் வீணாக்காமல் இலையைத் துடைத்து வைத்தாற்போல் சாப்பிட்டு எழும் அழகும்....நல்ல பழக்கங்களின் தீவிரம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நா.பா. வெளிநாடு சென்று திரும்பி உடல்நலமின்றி இருந்து காலமான செய்தி யாருக்கும் தெரியாமல் போக, தகவல் தொடர்பு குறைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை எதற்கும் வகையின்றிப் பழிவாங்க, மறுநாள் சென்று நின்றபோது அவரது பூதஉடல் எரிக்கப்பட்ட சம்பவம் துயரத்தைப் பெருக்குகிறது.

      சிறந்தவைகளை நாம் தேர்ந்தெடுப்பதில்லை, சிறந்தவைகள் நம்மைத் தேர்ந்தெடுக்கின்றன என்று கவிஞர் மீரா சொன்னதும், தரமான படைப்பாளர்களாய்த் தேர்ந்தெடுத்து, அன்னம் பதிப்பகம் வெளியிட்டதும் எவ்வளவு லட்சியமான செயல்பாடு?

      நான் பசியே அனுபவித்ததில்லை, அதனால் வறுமையைப்பற்றி எனக்கு எழுதத் தெரியாது என்று சொன்ன சுஜாதா, கற்றதும் பெற்றதும் தொடரில் விஜயா பதிப்பகம்பற்றியும், ஐயா பற்றியும் மறக்காமல் எழுதியது,

      கூட்டத்திற்கு வர ஒரு லட்சம், ஐம்பதாயிரம் என்று கேட்டவர்கள் மத்தியில் ரயில் டிக்கெட் போக வர, சாப்பாடு இது மட்டும் போதும் என்று சொன்ன கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்கள்,

      சரஸ்வதி இதழை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய வ.விஜயபாஸ்கரன் அதற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட தாமரை இதழ், பிறகு படிப்படியாக அந்தப் போட்டியில் பின்தங்கிப்போன சரஸ்வதி இதழ், வெளிவருவதற்குப் பட்ட இன்னல்கள்....தமிழ் இலக்கியத்தில் மேதைகள் பலரைக் கண்டுணர்ந்த விஜயபாஸ்கரன் அவர்கள்.

      ...வானதி திருநாவுக்கரசு ஐயா அவர்கள் கொடுத்த ஆதரவு, பொள்ளாச்சி தமிழிசைச் சங்கம் நடத்திய விழாவுக்கு கவிஞர் வாலி வருதல், அவர் சென்னை திரும்பப் போட்ட டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல், ரயிலில் அவதிப்பட்டு யாரையோ பிடித்து, எப்படியோ அவர் ஊர் போய்ச் சேர்ந்த நிகழ்வு,

      இலக்கியத்திற்கொரு தனிப்பெருங்கருணையாய் விளங்கிய அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் நிதியுதவி, சிறந்த புத்தகங்கள் வர அவர் காட்டிய ஆர்வம், நூறு நூறு என்று அந்தப் புத்தகங்களை வாங்கி பலருக்கும் விநியோகித்த தன்மை,

      பழனியப்ப செட்டியார் அவர்களின் பழனியப்பா பிரதர்ஸ் பற்றிய தகவல்கள், பதிப்புலகத் தந்தையாகக் கருதப்படும் சக்தி வை.கோவிந்தன் அவர்களின் தொண்டு, பிறகு அவரின் குடும்பத்தின் நலிவுற்ற நிலைமை, நிதியுதவி அளிப்பு,

      தனது பங்களிப்பாக அவரின் மகன் வழிப்பேத்தியின் கல்விச் செலவை நடிகர் சிவகுமார் ஏற்றுக் கொண்டது என்று இப்புத்தகத்தில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன.

      ஐயா விஜயா வேலாயுதம் அவர்களின் இந்த அனுபவப் பதிவுகள் 40 ஆண்டுகளாக தன் நினைவு அடுக்குகளிலிருந்து எடுக்கப்பட்டவை என்றும் தன்னை வளர்த்தவர்கள் வாசகர்களும், தன்னுடைய அற்புதமான வாடிக்கையாளர்களுமே என்று பெருமிதத்தோடு முன் வைக்கிறார். அவரின் இந்த அனுபவப்பதிவுத் தொகுப்பு ஒரு சிறந்த ஆவணம் என்றே கூறலாம்.

                              -------------------------------------------------

 

 

 

 

 

           

 

 

 

14 அக்டோபர் 2020

எழுத்தாளர் இமையம் எழுதிய “வாழ்க...வாழ்க...” - குறுநாவல் வாசிப்பனுபவம்  - ( வெளியீடு :-  க்ரியா, திருவான்மியூர், சென்னை )

     இந்தக் குறுநாவலை எழுதிய எழுத்தாளர் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர். இன்னொரு அரசியல் கட்சியைப் பற்றியும், அதன் தலைவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு, குறிப்பிட்ட ஊருக்கு கெலிகாப்டரில் வந்து இறங்க, அந்தப் பிரச்சார மைதானத்திற்கு பொது மக்களை, குறிப்பாகப் பெண்களைப் பணம் கொடுத்து அழைத்துச் சென்று, பிரியாணிப் பொட்டலம், தண்ணீர், கட்சிச் சின்னம் போட்ட தொப்பி, பதாகை என்று கொடுத்து உட்கார வைத்து, அடிக்கும் கோடை வெயிலில் நெடு நேரம் காக்க வைத்து, கூடியிருக்கும் சனம் இருக்கவும் முடியாமல், போகவும் முடியாமல் தவித்து, செத்துச் சுண்ணாம்பாகி நிற்க கடைசியில் கட்சித் தலைவி வந்து தன் பிரச்சாரத்தை துவக்குவதோடு முடிகிறது கதை. தலைவியின் வருகையில் தங்கள் துன்பங்களையெல்லாம் மறந்து வாழ்க கோஷமிடும் மக்கள்.

     தமிழக உழைப்பாளர் முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்றி வைத்து கதை சொல்லப்படுகிறது. ஆனாலும் எந்தக் கட்சியைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பது நமக்கு ஆரம்பத்திலேயே தெரிந்து விடுகிறதுதான். கட்சித் தலைவி என்று சொல்லும்போதே எல்லோருக்கும் புரிந்து போகும் தானே? கட்சியின் பெயரை மாற்றி வைத்துக் கதை சொன்னால் மட்டும் தெரியாமல் போகுமா? அதுவும் தெரியும்தான் படைப்பாளிக்கு.

     ஆனாலும் இருக்கும் கட்சிகளின் பெயர்களையே சொல்லி எப்படிக் கதை எழுத முடியாதோ அதுபோல இப்படி எழுதினால் எங்கே தெரியப் போகிறது என்று நினைத்தும் எழுத முடியாது. குறிப்பிட்ட இதை நான் சொல்லவில்லை என்றும் உறுதிபட வாதாடவும் முடியாது.

     கதையில் கட்சித் தலைவி வரும் தேர்தல் பிரச்சார நிகழ்விற்கு கிராமத்துப் பெண்டுகளை ஆளுக்கு ஐநூறு ரூபாய் பணமும், கட்சிக் கறை போட்ட புடவையும் கொடுத்து வேனில் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தி, கூட்டம் சேர்த்தல் என்பதான செயல்பாடுகள் இன்றைய தேதியில் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பொதுவானதாகத்தான் இருக்கிறது. ஒரு கட்சியை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லுதல் என்பதை ஏற்கவே முடியாது. ஆட்களைச் சேர்த்தல் என்கிற கலாச்சாரம் எப்பொழுதோ துவங்கி விட்டது. அதை இமையமும் சொல்லத்தான் செய்கிறார்.

     இரண்டு தெருக்கள் சந்திக்கும் முக்கில், ஒரு தற்காலிக மேடையமைத்து, நான்கு புறமும் மைக்கைக் கட்டி அலறவிட்டால் போதும் கூட்டம் தானாகவே வந்து நிற்கும் என்கிற காலமெல்லாம் என்றோ மலையேறி விட்டது. அரசியல் கட்சிகளின்பாலான மக்களின் நம்பிக்கைகள் நிரம்பவும் குறைந்து போய், இவை இப்படித்தான் இருக்கும், இதற்குள்தான் நாம் காலத்தை ஓட்டியாக வேண்டும் என்கிற மனச் சமநிலைக்கு மக்கள் என்றோ வந்து விட்டார்கள்தான். அவர்களோடு எந்த வழியிலெல்லாம் கூடிக் குலவி நமக்குள்ளதை நாம் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்கிற சமரசத்தைக் கண்டுபிடித்தவர்கள்தான்  இன்றைய மக்கள்.

     ஆனாலும் பாமர மக்களை எப்படியெல்லாம் ஆசை காட்டி, அதையும் இதையும் சொல்லி, அப்படி இப்படி என்று அவ்வப்போது  ஏதாவது செய்து கொடுத்து, உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று  காட்டிக்கொண்டே காலத்துக்கும் ஓட்டும் அரசியல்வாதிகளை நினைக்கையில், இந்தக் கதை சொல்லப்பட்டிருப்பதன் தாத்பர்யம் புரிய  ஐயோ...பாவமே என்கிற பரிதாபம் நமக்கு எழாமலில்லை.  

     ஏழை எளிய மக்கள் எப்போதும் பணப் பற்றாக்குறையுடனும், சோற்றுக் கஷ்டத்துடனும், போதிய சுகாதாரமற்ற வாழ்வில்,  உடல் நலமின்மையில் விதியே என்று  சிறந்த சகிச்சைக்குக் கூட வசதியின்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இந்தத் தேவை  நிலையைப் பயன்படுத்தி, அவர்களுக்கு ஆசை காட்டி, ரூபாய் ஐநூறும், புடவையும், சாப்பாடும் யார் தருகிறார்கள்? என்று எடுத்துச் சொல்லி, அக்கா, தங்கச்சி, அம்மா, அத்தை என்று நெருக்கமாய் உறவு முறையாய்ச் சொல்லி விளித்து கூட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். அங்கு போன பின்னால்தான் தெரிகிறது...இப்படி வந்து நேரம் காலமில்லாமல் பழி கிடந்து சாகிறோமே என்று....இம்சையாய் வெயிலில் பழிகிடக்கும்  பெண்கள், இயற்கையைக் கழிக்க ஒதுங்கக் கூட வழியின்றித் தவித்தலும், இடம் கிடைக்காமல் இடித்துப் பிடித்து, நான்...நீ...என்று உட்காரும் நாற்காலிக்குச் சண்டை போடுவதும், கூட்ட நெரிசலில் குழந்தைகள் மயங்கி விழ, தூக்கிக் கொண்டு ஓடுவதும், எதிர்பாராக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழக்கும் சில சாதாரண உயிரும் என....நிகழ்வு யதார்த்தமாயும், சற்றே மிகைதானோ என்று நினைக்கும் வண்ணமும், சொல்லப்பட்டிருப்பது, இமையத்தின் எழுத்துத் திறமையில் மூழ்கிப்போய் நம்மை லயிக்க வைத்து மன வருத்தம் கொள்ள வைக்கிறது.

     பெற்ற குழந்தை காய்ச்சலால் துடிக்கிறது என்று இந்தக் காசை வாங்கி அதற்கு ஆஸ்பத்திரியில் காண்பித்து, மருந்து வாங்கிக் கொடுத்துக் காப்பாற்றலாமே என்று நினைக்கும் பெண், ஐநூறும் புடவையும்  யார் தர்றாங்க சும்மா என்று ஆசைப்பட்டுக் கிளம்பும்  மக்கள், ஏற்கனவே தேர்தலுக்குத் தேர்தல் வீட்டுக்கு இத்தனை பேர் என்று கணக்கிட்டு வாங்கி வாங்கிப் பழகிவிட்ட பழக்கம், இந்த முறை அதுலேர்ந்து கூட்டிக் கொடுத்தால்தான் ஆச்சு என்று தீர்மானமாய்ப் பேசும் முடிவு...வந்து கூப்பிடுகிறவனை எண்ணிப்பார்த்து, சும்மா வெத்து வேட்டா இருந்த பய இன்னிக்கு இப்டி வசதியா ஆயிட்டானே என்று கொடுத்தா என்ன குறைஞ்சா போறான், கட்சிப் பணம்தானே...கொள்ளையடிச்ச காசுதானே...கொடுக்கட்டும் என்று தங்களைச் சமரசப்படுத்திக் கொண்டு, அவனையும் பகைத்துக் கொள்ள முடியாமல், அவ்வப்போதைய பணத் தேவைக்கு இவனை விட்டால் வேற ஆளில்லை என்று ஒத்துப் போகும் மனநிலை, அவர்கள் என்னதான் பேசினாலும், திட்டினாலும் எதற்கும் அசைந்து கொடுக்காமல், எந்த மான ரோஷமும் பார்க்காமல், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல், அப்படியிருந்தால்தான் தன் அரசியல் வாழ்க்கை ஓடும் என்று அவர்களோடேயே தன் வாழ்க்கையைப் பிணைத்துக் கொண்டு, வசதிகளைப் பெருக்கிக் கொண்டு,  விடாமல் வண்டி ஓட்டி வரும் சாமர்த்தியமான அரசியல்வாதி....என்று கதையோட்டத்தில் நாம் அறிந்தவர்களை உணரும்போது, இந்த மாய்மாலங்களெல்லாம்  என்று ஒழியும், என்று இதற்கெல்லாம் விடிவு என்கிற கேள்வியே நமக்குத் தோன்றுகிறது. வெங்கடேசப் பெருமாள் என்று பெயர் வைத்திருப்பதில் கூட ஒரு சூட்சுமம் உள்ளது என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

     பணிக்காலத்தில் எனக்கும் இம்மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டதும், பொதுமக்களோடு ஊரில் உள்ள அலுவலகங்கள் எல்லாமும் அங்கே போய் நின்றதும், எதற்கு குய்யோ முறையோ என்று நம்மையும் அழைத்துப் போகிறார்கள், ஆபீசில் உட்கார்ந்து அமைதியாய் வேலையைப் பார்ப்பதுதானே நம் வேலை என்று நினைத்துக் கொண்டே தவிர்க்க முடியாமல் போய் நின்று பழி கிடந்ததும்......எல்லாமும் நினைவுக்கு வந்தது எனக்குள்.

     இமையம் எழுதிவிட்டார்......!

                     ----------------------------------------------

 

    


 

12 அக்டோபர் 2020

13. “அருந்தவப்பன்றி” - சுப்பிரமணிய பாரதி  = பாரதிகிருஷ்ணகுமார் - வாசிப்பனுபவம்-                                     ------------------------------------

 


பாரதி குறித்த புத்தகங்கள் வரலாற்றாசிரியர்களாலும், பாரதி குறித்த நூலாசிரியர்களாலும் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கின்றன. பாரதியை முழுமையாகப் புரிந்து கொள்ளும் முயற்சியாக, இந்தத் தமிழ்ச் சமூகம் தெளிவாய் அறிவதற்காக, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நூலாக, முக்கிய ஆவணமாக இப்போது வந்திருக்கிறது பாரதி கிருஷ்ணகுமாரின் இந்த “அருந்தவப்பன்றி”.

     பெயரைப் பார்த்ததும் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். அதையும் காரண காரியத்தோடு விளக்கி இந்தத் தலைப்பே இப்புத்தகத்திற்கு சாலவும் பொருத்தம் என்று நிறுவி இந்த அருமையான புத்தகத்தை நமக்கு வழங்கியிருக்கிறார் ஆசிரியர். தன்னைப்பற்றி பாரதியே குறிப்பிடும் சொல் என்பதால் அதை மறைத்துத் திரையிடும் உரிமை நமக்கு இல்லை என்கிறார்.                                                    

     தொன்மம் சார்ந்த கதைகளில் முனிவர்களே சாபமிடுவார்கள். சமயங்களில் அதே முனிவர்களும் சாபங்களுக்கு ஆளாவார்கள். இங்கு குறிப்பிடப்படும் முனிவனும் பன்றியாக உருவம் கொள்ளுமாறு சபிக்கப்பட்டான்.ஒரு சாதாரண மனிதன் பன்றியாகுமாறு சபிக்கப்பட்டிருந்தால் அவனை / அதனைப் “பன்றி“ என்று அழைத்துவிட முடியும். அருந்தவம் செய்து வாழ்ந்த ஒரு முனிவன், பன்றியாக உருமாறுவதால் அவனை / அதனை “அருந்தவப்பன்றி” என்றே அழைக்க நேரிடுகிறது என்று விளக்குகிறார்.                    

     அருந்தவம் செய்த ஒரு முனிவன் கொடிய சாபத்திற்கு ஆளாகி, பன்றியாக மாறி காட்டிற்குள் சென்று வாழ்கிறான். கொஞ்ச நாளில் அந்த வாழ்க்கையே அவனுக்குப் பழகி விடுகிறது. அதுவே சுகமாக இருப்பதாக உணர்கிறான். தந்தையை மீட்க வந்த மகனிடம்....நான் இப்படியே இருக்கிறேன்...இது எனக்கு சுகமாக, சந்தோஷமாகப் படுகிறது...என்னை விட்டு விடு...என்று பன்றியான தந்தை கூறுகிறான்.

     உயர்ந்த நிலையில் இருந்து தாழ்வுற்று விடுதலை தவறிக்கெட்ட முனிவன் பன்றியாகி அந்த வாழ்வே உகந்தது என்று முடிவு செய்து, அந்தப் புதிய நீசப் பொய்மையான வாழ்வில் விருப்பம் கொண்டு வாழ முற்பட்டதுபோல், தானும் தன் நிலை தாழ்ந்து, இழிந்ததோர் பன்றியைப் போன்ற வாழ்க்கையைச் சில ஆண்டுகள் வாழ நேர்ந்ததாக துயர் மிகுந்த ஒரு வாக்குமூலத்தை தன் கவிதை மூலம் முன் வைக்கிறான் மகாகவி.

     வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி என்னும் முதல் அடியுடன் தொடங்கும் அந்த நீண்ட கவிதையை நம்மில் எத்தனை பேர் உய்த்துணர்ந்து கண்டுபிடித்து வாசித்து உருகியிருப்போம்?

     அறிவிக்கப்படபாத ஆசிரியராகப் பொறுப்பு வகித்த  “இந்தியா“ பத்திரிகையில் 1909 ம் வருடம் ஜனவரி மாதம் “இலக்கியப்பகுதி” என்று ஒரு பகுதியைத் திறக்கிறார் பாரதி. அதில்தான் முதல் பகுதியாக 85 வரிகளும், இரண்டாம் பகுதியாக 87 வரிகளாகவும் மொத்தம் 172 வரிகளில் அமைந்தது இந்தக் கவிதை என்று விபரங்களைக் கருத்தோடு நமக்குத் தருகிறார் பாரதிகிருஷ்ணகுமார். அனைத்துப் பதிப்புகளிலும் “கவிதைக் காதலி” எனத் தலைப்பிடப்பட்டிருக்கும் இக்கவிதைக்கு மகாகவி ”கவிதா தேவி அருள் வேண்டல்” எனத் தலைப்பிட்டிருக்கிறார்.

     பாரதிக்கும் தொலைந்து போன ஒரு வாழ்க்கை உண்டு....என்று நெஞ்சம் உருகச் சொல்லப்படும் இத்தொகுப்பில் காணப்படும் தகவல்கள்  கடுமையான உழைப்பின்பாற்பட்டும், இதுவரை எந்தப் புத்தகத்திலும் சொல்லப்படாததாய் இருக்க வேண்டும் என்பதிலும் கருத்தோடும் கவனத்தோடும் சேகரிக்கப்பட்டு, மிகப்பெரிய தாக்கத்தை நம்முள் ஏற்படுத்தும் விதமாய் அக்கறையோடு தொகுக்கப்பட்டுள்ளது.   

     சுப்பிரமணியன் என்று பெயரிடப்பட்ட பாரதியார் “சுப்பையா” என்கிற செல்லப் பெயராலும் அழைக்கப்பட்டதும், அடுத்துப் பிறந்த பெண் குழந்தைக்கு தன் தாயாரின் பெயரான “பாகீரதி” என்ற பெயரை சின்னச்சாமி அய்யர் சூட்டியதும், ஓரிரு ஆண்டுகளில் அந்தப் பெண் குழந்தை அகால மரணமடைந்ததும்,  1887 ல் பாரதிக்கு ஐந்து வயதாகி இருந்தபோது அவரது தாயார் லட்சுமி அம்மாள் காலமானதும், தன்னோடு விளையாட ஒரு துணையுமின்றி, தனிமை வயப்பட்டு, தாயையும் இழந்து நின்ற பாரதி, அம்மா...அம்மா...என்று தன் பாட்டுக்களில் கூவி அழைத்திருப்பதைக் கொண்டு அந்த நெஞ்சத் துயரை நாம் உணர நேரிடுகிறது.                         

     ஆங்கிலம், கணிதம், தமிழ் ஆகியவற்றில் புலமை கொண்டிருந்த சின்னச்சாமி அய்யர் எந்திரத் தொழில் நுட்ப அறிவும் கொண்டிருந்தார். அந்த உந்துதல்தான் எட்டயபுரத்திற்கு மேற்கே 1892 ல் பருத்தி அரைக்கும் தொழிற்சாலை ஒன்றை நிறுவ அவரை உந்தித் தள்ளியிருக்கிறது. அதே காலகட்டத்தில் 1893 ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரு உறார்வி, பிராங்க் உறார்வி என்கிற இரண்டு சகோதரர்கள் நெல்லை மாவட்டம் தூத்துக்குடியில் ”கோரல் மில்ஸ்” என்கிற பஞ்சாலையைத் தொடங்குகின்றனர். சாதாரண மக்களால் உறார்வி மில் என்றழைக்கப்பட்ட  இதுதான் பின்னர் இந்திய முதலாளிகளின் கைகளுக்கு மாறி “மதுரா கோட்ஸ்” எனப் பெயர் மாற்றம் கொள்கிறது.

     தொழில் போட்டியில் பெருத்த நஷ்டத்திற்குள்ளாகிறார் சின்னச்சாமி அய்யர். அந்நிய மூலதனத்தின் அசுரத்தனத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலும், கடன் கொடுக்க முன்வந்த எட்டயபுரம் மன்னரும், பணம் படைத்த நண்பர்களும் ஆங்கிலேயர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாக விலகிக் கொண்டதும், இயந்திரங்களைக் கழற்றி விற்று இருக்கும் கடன்களை அடைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு, அவரது பஞ்சாலைக் கனவு பஞ்சாகப் பறந்து போன அவலத்தை நாம் அறியும்போது மனம் புண்பட்டுத்தான் போகிறது.

     காளிதாசனின் சாகுந்தலைக்கு ஒப்பிட்டு தான் காதலித்த சிறுமியைப் பற்றி பாரதி எழுதியிருப்பதில் எந்த இடத்திலும் அவள் பெயரைச் சொல்லாமல், சிவன் கோவில் மண்டபத்தில் அவளைச் சந்தித்ததும், பேசியதும், பழகியதும் தனது சின்னச் சங்கரன் கதையில் பாரதி விளக்கியிருப்பதையும், அந்தக் காதலிலும் இடி விழுந்தது என்று அறியும்போது நம்மைத் துயரம் பற்றிக் கொள்கிறது.

     தொடர்ந்து கல்வி பயிலுவதற்கான வசதியில்லாதிருந்தது, எட்டயபுரம் மன்னரை அணுகியது, தந்தையின் மரணம், பிறகு படிப்பைத் தொடர காசிக்குச் சென்றது...தாயோடு அறுசுவை போம், தந்தையொடு கல்வி போம்...என்ற பழம்பாடல் நம் நினைவுக்கு வந்து ஏன் பிறந்தேன் இத் துயர் நாட்டினிலே? என்று பாடும் பாரதியின் நிலையை எண்ணி வருத்துகிறது.

     சுய சரிதைப் பாங்குடன் பாரதியார் எழுதிய படைப்புக்களில் மிக மிக முக்கியமானது “சின்ன சங்கரன் கதை” ஒரு பரிசோதனை முயற்சியாக, சுய அனுபவப் பகிர்வாக அமைந்த சிறந்த படைப்பு என்பதும் அதன் கையெழுத்துப் பிரதி தொலைந்து போய் விடுவதும், பாரதியை மீண்டும் எழுதத் தூண்டி, எழுதி ஆறு அத்தியாயங்களே கிடைக்கப் பெற்றன என்கிற விபரமும் அறிய நேரிடுகிறது. ஸ்ரீசுப்ரமணிய சிவம் நடத்திய ஞானபானு இதழில்தான் இந்த ஆறு அத்தியாயங்களும் வந்து, நம் தமிழ் நெஞ்சங்களுக்குக் கிடைக்கும் அரிய பொக்கிஷமாகிறது.

     1903 ம் ஆண்டு எட்டயபுரம் திரும்புகிறார் பாரதியார். ஜமீனதார் அவரை அழைக்கிறார். அப்படியெல்லாம் வந்து அடிமைப்பட்டுக் கிடக்க முடியாது என்கிறார் பாரதி. உன் சுதந்திரத்திற்கு எந்தக் கேடும் வராது என்கிறார் ஜமீன்தார். அதற்கு மேல் தட்டிச் சொல்ல மனமின்றி எட்டயபுரத்தில் குடித்தனம் ஆரம்பிக்கிறார் பாரதியார். ஜமீன்தாருக்கும் அவருக்குமுள்ள நட்புபற்றிய விபரங்கள் வ.ரா.வின் நினைவுக் குறிப்புகள் மூலம் நமக்குக் கிடைக்கிறது. அவை பாரதியாரே தாமாக முன்வந்து மனமுவந்து தெரிவித்த விபரங்கள் என்று வ.ரா. பதிவு செய்வதாக அறிகிறோம்.

     திருநெல்வேலியில் இருந்து வந்த சர்வஜன மித்திரன் என்கிற பத்திரிகையில் பாரதி கட்டுரை ஒன்றை வரைகிறார். பொதுவாகப் பணக்காரர்கள் பற்றியும், அவர்கள் செய்யும் அநாகரீகமான செய்கைகள் பற்றியும் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. இது தன்னைப் பற்றித்தான் என்பதாகக் கருதி, ஜமீன்தார் அவருக்குச் செய்துவந்த உதவிகளை நிறுத்தி விடுகிறார். பாரதி ஆய்வாளர்களும், வரலாற்றாசிரியர்களும் பல்வேறு நிலைகளில் பாரதியின் வாழ்க்கையை  ஆய்வு செய்திருக்கின்றனர். அந்த ஆய்வின் மூலம் ஏராளமான விஷயங்களை நாம் அறியத் தலைப்படுகிறோம்.

     இப்படி இப்புத்தகத்தில் உள்ள அனைத்து விபரங்களையும் சுருக்கமாகத் தெரிவித்து இந்த நூலின் வாசிப்பு அவசியத்தை  விரிவாக விளக்கி விடலாம்தான். அனைத்தையும்தான் சொல்லியாயிற்றே...போதுமே...இன்னும் என்ன விலைக்கு வாங்கிப் படிப்பது என்கிற அபாயம் இருக்கிறது இதில். புத்தகங்களை விலைக்கு வாங்கிப் படிப்பதே அவைகளுக்கு நாம் செய்யும் மரியாதை.. அதிலும் தேர்வு செய்த முக்கியப்புத்தகங்கள் அந்த மதிப்பை நிச்சயம் பெற்றாக  வேண்டும். 

     நான் சமீபத்தில் படித்த நூற்களுள், எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒர நூல் இந்நூல் என்பதை ஓர் ஒப்புதல் வாக்குமூலமாகச் சொல்வதில்தான் நான் பெருமையடைகிறேன் என்கிறார் நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் அவர்கள்.

     பாரதியின் மறுபக்கத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளது இந்த ஆவணம் என்கிறார் கவிஞர் புவியரசு.

     ஆய்வு நூல் வரிசையிலான பாரதிகிருஷ்ணகுமாரின் இப்புத்தகம் மூன்றாவது பதிப்பு கண்டிருக்கிறது இப்போது என்பதே இப்புத்தகத்திற்கான மகிமையை நமக்குத் தெரிவிக்கும்.

                ---------------------------------------------------------------------------------------