05 மார்ச் 2013

“கை”–குறுநாவல் by சுஜாதா–உயிர்மை குறுநாவல் வெளியீடு-16–ஒரு உணர்ச்சி மிகு வாசிப்பனுபவம்

 

2013-03-05 16.31.27

 

இன்று படித்தது கை. ஆம். சுஜாதாவின் ”கை” குறுநாவல்தான். வரிசை எண்.16. உயிர்மை வெளியீடு.இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் ஏதோவொரு திறமை ஒளிந்து கொண்டுதான் இருக்கும். அதைக் குறிப்பாக அவனே உணர்ந்து கொள்வதும், அதற்காகத் தன்னை அர்ப்பணிப்பதும்தான் எல்லோருக்கும் நிகழாத ஒன்றாகிப் போகிறது. இந்தக் கை-யின் சிவத்தம்பி தன் கையின் திறத்தை நன்கு உணர்ந்தவனாக இருக்கிறான். அதன் மேல் அப்படியொரு நம்பிக்கை அவனுக்கு. தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை. அத்தனை உற்சாகமான, மனச்சோர்வே இல்லாத ஒரு கதாபாத்திரம்.அவனுக்கான முயற்சிகளை விறுவிறுவென்று சொல்லிச் செல்லும் பாங்கில், ஐயோ, கடவுளே அவனுக்கு ஒரு வேலையைத்தான் கொடுத்துவிடேன் என்று நம் மனமும் வேண்டுகிறது. எந்தக் கையின் மீது அவன் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தானோ, அந்தக் கையினால் ஆன ஓவியத் திறமையே சம்பந்தமில்லாத ஒரு இடத்தில் வலிய அதைச் சம்பந்தப்படுத்தி வேலையைப் பெற்றுத்தர யத்தனிக்கிறது. முன் பணத்திற்காக ஓவியம் வரைந்து, வரைந்து, விற்றுத் தள்ளுகிறான். அஞ்சு, அஞ்சாகச் சேர்த்த துட்டை எடுத்துக் கொண்டு பறக்கையில்தான் விதி அவனை அடித்துப் போட்டு விடுகிறது. விபத்தில் சிக்கி கையை இழக்கிறான். அவனோடு சேர்ந்து நம் வாசகமனமும் சோர்கிறது. இரு கையுமில்லாமல் எப்படி வாழ்வது? தற்கொலைக்கு முயல்கிறான். மனைவியும், பெண் குழந்தையும் தடுத்து விடுகிறார்கள். கையில்லையே, எப்படி வாழ, உங்களை வாழ்விக்கவியலாத நான் இருந்தென்ன பயன் என்று புலம்பித் தவிக்கிறான். என் கையை எடுத்துக்கோப்பா என்று அந்தச் சிறு குழந்தை கைகளை நீட்டும் இடம் நம்மை உலுக்கி எடுத்து விடுகிறது.மீண்டும் பிறக்கும் நம்பிக்கையோடு வாழ்க்கை துவங்குகிறது. இப்போது சிவத்தம்பி பல்லில் கடித்த பென்சிலோடு தன் ஓவியத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறான். கதை சாதாரணந்தான் என்று கொண்டால், அதைச் சொல்லிய விதத்தை அத்தனை எளிதாக விமர்சித்து விட முடியாது. அது சுஜாதாவுக்கு மட்டுமே கைவந்த கலை. வரிவரியாய்ச் சொல்லிவிடலாம்தான். படித்து உணருவது போல் வராது. வேக நடையில் எல்லாமும் தானே வந்து விழ வேண்டும். செயற்கையாய்ப் புகுத்தியது போல் எங்கும் தோன்றினால் அங்கு படைப்பாளி தோற்கிறான். அந்த நடை, அந்த நகைச்சுவை, அந்தக் கேலி, கிண்டல், நையாண்டி, ஊடே ஊடாடி நிற்கும் மெல்லிய தவிர்க்க முடியாத சோகம், என்னதான் ஆகும் பார்ப்போமே என்று கைவிட முடியாத நகர்வு, இப்படிப் பலவும் நம்மைப் பாடாய்ப் படுத்தித்தான் விடுகிறது. ரசித்ததை, வாயார, மனதார, சொல்லவாவது செய்வோமே...!!!

கருத்துகள் இல்லை: