30 ஜனவரி 2024

 

சிறுகதை                            உஷாதீபன்,   “ என் மக்கள்  “  

       வீட்டு வாசலில் வரும் ஒரு குடம் பதினைந்து ரூபாய் வேன் தண்ணீர் வாங்க இஷ்டமில்லை ஈஸ்வரனுக்கு. பத்து ரூபாய்தான் விற்றுக் கொண்டிருந்தது...இப்போது கூட்டியிருக்கிறார்கள். அப்போது சில சமயம் வாங்கியிருக்கிறார் மனசில்லாமல். இந்த முறை பதினைந்து என்றவுடன் மனசு விட்டுப் போனது. பெரிய வித்தியாசமில்லைதான். ரெகுலராக அந்தத் தெருவில் வேனில் தண்ணீர் வாங்குபவர்கள் யாரும் இப்பொழுதும் நிறுத்தியதாகத் தெரியவில்லை. மூன்று நான்கு வேன்கள் வருகின்றனதான். ஒவ்வொரு ரூபாய் வித்தியாசப்படும். அது அதில் வழக்கமாக வாங்குபவர்கள் வாங்கிக்கொண்டுதான் இருந்தார்கள். சுத்தப்படுத்திய தண்ணீர் என்கிற நினைப்பு. இவருக்கொன்றும் அவ்வளவு நம்பிக்கையில்லை.

      எப்பொழுதுமே வேனில் வாங்காதவரான நாலு வீடு தள்ளியுள்ள பிரபாகரன் இப்பொழுதும் வாங்குவதில்லை. பதிலாக அவர் ஒன்று செய்கிறார்...சைக்கிளோடு வரும் ஒரு ஆளிடம் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களைக் கொடுத்து பின் சீட்டில் கட்டித் தொங்கவிட்டு அவரை அருகிலுள்ள காலனியிலிருந்து  எடுத்து வரச் செய்கிறார். ஒரு குடத்திற்கு இவ்வளவு என்று கொடுப்பார் போலும். கேட்டுக் கொள்வதில்லை. சமயங்களில் அவரின் அந்த சைக்கிளுக்கு டயர், செயின், ரிப்பேர் என்று வேறு உதவிகளும் செய்கிறார். அவருக்கு அது திருப்தியாக இருக்கிறது. மனசும் இருக்கிறது.

      ஈஸ்வரன் ஆரம்ப காலத்திலிருந்தே அவரது மொபெட்டில் போய்த்தான் தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். என்றுமே வேன் தண்ணீர் அவர் வாங்கியதில்லை. தினமும் பத்து ரூபாய் என்றால் மாதத்துக்கு முன்னூறா...என்ன அநியாயம்? என்று அவர் மனது சொல்லியது.

      அப்படியொன்றும் அது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீராயும் தோன்றவில்லை. சுட வைத்துக் குடிக்க இறக்கியபோது  மேலாகப் படர்ந்திருந்த பவுடர் போன்ற படலமும், அசாத்தியக் க்ளோரின் வாடையும் பிடிக்கவில்லை. மேலும் ஒரு மாதிரிக் கடுத்தது அந்தத் தண்ணீர். வாங்குவதை நிறுத்திவிட்டார். காசையும் கொடுத்து வியாதியையும் வாங்கிக்கவா?

      இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ள நெசவாளர் காலனியின் ஓரிடத்தில் நாள் முழுவதும் விடாமல் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பள்ளமான பகுதி அது. அங்கு எப்போதும் கூட்டம்தான். கார்ப்பரேஷன்காரர்களை அவ்வப்போது கவனித்து, அந்த லாபத்தை அந்தப் பகுதி வீட்டுக்காரர்கள் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று நான்கு வீடுகளில் விடாது அடி குழாயில் தண்ணீர் வந்து கொண்டேயிருக்கும். ராத்திரி பதினோரு மணிக்குக் கூட அங்கு ஓய்வில்லை. ஒழிச்சலில்லை.

      குடத்திற்கு ஒரு ரூபாய் என்று வசூலித்தார்கள். அது ஐம்பது பைசாவிலிருந்து முக்கால் ரூபாயாகி பின்பு ஒரு ரூபாயில் வந்து நிற்கிறது. ஒரு ரூபாய்க்கு மேல் ஏற்றமில்லை. சில வருடங்களாகவே அந்த ரேட்தான் நிலைத்திருக்கிறது. சில்லரைக்கும், கொடுக்கல் வாங்கலுக்கும் வசதி. தொலை தூரத்திலிருந்து கூட ட்ரை சைக்கிள் போட்டுக் கொண்டு பத்துக் குடங்களை வண்டியில் அடுக்கி வந்து பிடித்துச் செல்பவர் உண்டு. அந்த நேரம்தான் அங்கே சண்டை வரும்....சலுப்பக்குடிச் சண்டை. ஆனாலும் அந்த பாஷை கேட்க இதம்...! நியாயம் தலை தூக்கி நிற்கும்.

      நீங்க ஒரு குடம் பிடிச்சவுடனே எங்களுக்கு விட்ரணும்...தொடர்ந்து பத்தையும் பிடிக்க முடியாதாக்கும்...அப்புறம் நாங்க என்ன பொழுதுக்கும் நின்னுக்கிட்டே இருக்கிறதா? பிள்ளைகள பள்ளிக்கோடத்துக்கு அனுப்ப வேணாமா? சமையல் பண்ண வேணாமா? நாங்க குளிச்சு, குளிக்கப் பண்ணி...எம்புட்டு வேல கெடக்கு... நாலஞ்சு கி.மீ. தள்ளியிருந்து வர்றீக...ஒங்க பக்கமெல்லாம் குழாயே இல்லாமப் போச்சா...? இம்புட்டுத் தொலை வந்து எங்க கழுத்த அறுக்கிறீங்க?

      அந்தச் சண்டையில் குழாய் வீட்டுக்காரர்கள் தலையிடுவதேயில்லை. எதையோ பேசி, என்னவோ செய்து கொள்ளட்டும்...நமக்கென்ன...! எப்படியும் நாளுக்கு நூறு தேறும். வண்டிக்காரன் நின்னால்...அது குறையும். ரெண்டு டிரிப் அடிக்கிறானே? அங்குதான் ஈஸ்வரன் சென்று கொண்டிருந்தார். மற்றவர் போல் சைக்கிளில் குடத்தின் கழுத்தில் கயிற்றைக் கட்டி பின் சீட்டில் இருபக்கமும் சமமாகத் தொங்கவிட்டுத் தண்ணீர் கொண்டு வரும் சாமர்த்தியமெல்லாம் அவருக்கில்லை. அப்படி முயற்சித்தபோது பாதி வழியில் குடம் கீழே விழுந்து நசுங்கி, வண்டி சாய்ந்து,..இவரும் விழுந்து, சாலையில் செல்வோர் தூக்கி நிறுத்தி...அமர்க்களமாகிப் போனது.

      அந்தச் சமயம் இவர் புது மொபெட் ஒன்று வாங்கியிருந்ததால் அதில் ஒவ்வொரு குடமாய் ரெண்டு நடை கொண்டு வருவதெனப் பழக்கப்படுத்தியிருந்தார். பெட்ரோல் காசைக் கணக்குப் பண்ணினால் கூட வாசலில் வரும் தண்ணீர் விலை அதிகம்தான் என்றுதான் தோன்றியது. தண்ணீரோடு திரும்பும்போது மிக மெதுவாய்த்தான் வருவார். 150 லிட்டர் கேன் ஒன்று வாங்கினார். சைடு கொக்கியில் தொங்கவிட்டுக் கொண்டு பறந்தார். குழாயடிக்குச் சென்ற போது வண்டி மட்டும்தான் இருந்தது. மேடு பள்ளத்தில் ஜம்ப் ஆகி அது எங்கோ விழுந்து விட, வண்டியைத் திருப்பி வழியெல்லாம் அதைத் தேடிக் கொண்டே வந்தார். என்னா கெரகம் இது...நமக்குன்னு அமையுதே...என்று ஒரே வேதனை அவருக்கு.

      சாமீ....என்னா கூப்பிடக் கூப்பிடத் திரும்பிப் பார்க்காமப் போயிட்டே இருக்கீகளே...கேன் வாணாமா...? என்றுகொண்டே ஒரு கடை வாசலிலிருந்து பாய்ந்து வந்தார் ஒருவர். இத்தனைக்கும் அவரை அந்த வழியில் செல்கையில் போகிற போக்கில் ஒரு பார்வை பார்த்திருப்பார். அவ்வளவுதான். அந்த மனுஷாளின் ஈடுபாடே தனி...!

      ஈஸ்வரனுக்குப் பிடித்ததே இந்த மாதிரியான மனித உறவுகள்தான். அவர் குடியிருக்கும் பகுதியில், காலையில் உழவர் சந்தைக்குப் போய் வரும் வேளையில், உழவர் சந்தையில், ஏன் ஐந்து கி.மீ.க்கு உட்பட்ட பகுதிகளில் அன்றாடம் பார்க்கும், பழகும் முகங்களை அவருக்கு தினமும் பார்த்தாக வேண்டும். அவர்களோடு பேசுகிறாரோ இல்லையோ, அவர்கள் இவரிடம் பேச்சுக் கொடுக்கிறார்களோ இல்லையோ, அந்தத் தெரிந்த, அறிந்த முகங்களை அன்றாடம் பார்த்து ரசிப்பது அவருக்கு மன சாந்தி. கை கொடுப்பதற்கு நிறைய உறவுகள் இருப்பதுபோல என்றே சொல்லலாம். வாங்கய்யா...என்னா ரொம்ப நாளாக் காணலை...என்று சொல்லிக் கொண்டே நிறுவைக்கு மேல் ஒரு கை வெண்டைக்காயை அள்ளிப் போடும் பெண்மணி. அய்யா...வாங்க...தோட்டத்துக் காயி...காலைல பறிச்சதாக்கும்...வாங்கிட்டுப் போங்க.....என்ற அன்பு குழைந்த வரவேற்புகள். நாலு காய்தான் வாங்குகிறோம் என்றாலும் நாற்பது கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றி வருவதில் கிடைக்கும் திருப்தி...மன நிறைவு...! 

வழக்கமாய்ப் பார்க்கும் போஸ்ட்மேன்..மனோகரன் ....வழக்கமாய் தெருவில் பழைய பேப்பர் எடுக்க வரும் சிவசாமி...அன்றாடம் கீரை கொடுக்கும் முனித்தாய்...உப்பு...உப்போய்....என்று சைக்கிளில் ஒரு மூடை உப்பை வைத்து ஓட்டிக் கொண்டு வரும் சம்புகன்...தெருக் கடைசியில் தோசை மாவு விற்கும் மரியக்கா...இங்க வண்டிய நிறுத்திக்கிறட்டா சார்...என்று கேட்டு புதிதாய்த் தான் வளர்த்திருந்த வேப்பமரத்தடி நிழலைப்  பிடித்த அயர்ன்காரர் அந்தோணிசாமி...வாரம் தவறாமல் சாக்கடை தோண்டிவிட்டு காசுக்கு வந்து நிற்கும் பஞ்சாயத்துப் பேச்சி...இன்னும் எத்தனையெத்தனை பேர்...யாரை நினைப்பது...யாரை மறப்பது?   என்னவோ ஒரு ஒட்டுதல்...எதனாலோ ஒரு பிடிப்பு...இனம் புரியவில்லைதான். ஆனாலும் மனதுக்கு சுகம். உடம்புக்கு எவ்வளவு ஆரோக்யம்? பழகிய அந்த எளிய மக்களைப் பார்க்காததே பெரிய வியாதியாகிவிடும் போலிருக்கிறதே...!

      ஒரிஜினல் உறவுகளெல்லாம் இருக்கிறோமா இல்லையா என்று சந்தேகப்படுவது போலல்லவா சத்தமின்றி இருக்கிறார்கள். எப்பொழுதும், ஏதாச்சும், கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஒட்டிக் கொண்டு விடுவார்களோ என்று தந்தி வாக்கியமாய்ப் பேசுகிறார்கள். பொய்யாய்ச் சிரிக்கிறார்கள். ரொம்பவும் சுமுகமாய் இருப்பதுபோல் யதார்த்தம் பண்ணுகிறார்கள். அதிலெல்லாம் இப்போது பிடிப்பு இல்லை இவருக்கு. அவங்கவங்க அங்கங்கே இருந்துக்க வேண்டிதான்..அப்டி அப்டியே செத்துப் போய்க்க வேண்டிதான்...! யாரு யாரை நினைச்சு உருகப் போறாங்க...? எல்லாம் வெறும் மாயை...! அடுத்தடுத்த தெருவில் இருந்தாலும் தனித் தனிதான்.

      பிடித்த மனிதர்கள் அவர் வாழ்ந்த ஊரின், குடியிருக்கும் பகுதி மக்கள்தான். அதிலும் பலருக்கு அவரைத் தெரியாது. அவருக்கும் பலரைத் தெரியாதுதான். ஆனால் அன்றாடம் முகம் பார்க்கிறார்களே...! அது ஒன்று போதாதா?  பார்த்துப் பார்த்துப் பழகினவர்களாகி விட்டார்களே...! ஒரு வார்த்தை பரஸ்பரம் பேசியதில்லைதான். பேசினால்தான்  ஒட்டுதலா? பார்வையிலேயே எத்தனை நேசம் வழிகிறது அங்கே?

      இல்லையென்றால் அன்று குடத்தோடு கீழே விழுந்தபோது, ஓடி வந்து தூக்குவார்களா? மனிதனின் இயல்பே உதவுவதுதான். அடிப்படையில் மனிதர்கள் நல்லவர்கள். சூழ்நிலைதான், வாழ்வியலின் கஷ்டங்கள்தான் அவர்களைத் திருப்பிப் போட்டு விடுகின்றன. ஆனாலும் விழுமியங்களாய் ஆழ் மனதில் படிந்து போன நன்னெறிகள் அவர்களை விட்டு என்றும் விலகுவதில்லை.

      மாநகரத்தின் மெட்ரோ தண்ணீர் லாரிகள் அவரின் நினைவுக்கு வந்தன. எந்தச் சந்திலிருந்து எந்த பூதம் பாயும் என்பதாய் குறுகிய வீதிகளில் அதைப் பொருட்படுத்தாமல் கீங்...கீங்...கீங்....என்று காது கிழிய உறாரன் அடித்துக் கொண்டு, ஒதுங்க வில்லையென்றால் சமாதிதான் என்று அலறவிட்டபடி கிடுகிடுத்துக் கொண்டிருக்கின்றன அவைகள். அடுக்ககங்களின் தேவைகளை அவைதான் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றன. அது சுத்தமான தண்ணீரா, சுத்திகரிக்கப்பட்டதுதானா என்பதையெல்லாம் பார்ப்பதற்கோ, கேட்பதற்கோ அங்கே யாருக்கும் நேரமில்லை. கிடைத்தால் போதும். வந்து சேர்ந்தால் போதும் என்று சம்ப்பைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் காசோடு காத்திருக்கிறார்கள் மக்கள். கிளம்பும் சர்க்கிளில் கூட்டம் கூட்டமாக லாரிகள். அடுத்து அடுத்து என பொத பொதவென்று லாரிக்குள் தண்ணீரை இறக்கி நிரப்பி,  ஒரு பொட்டலம் குளோரின் பாக்கெட்டைத் தூக்கி வீசுகிறார்கள். வாயை இழுத்து மூடிக் கிளம்ப வேண்டியதுதான். நகரின் கேடுகெட்ட சாலைகளின் மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி உள்ளே வீசப்பட்ட அந்த ஒரு பாக்கெட் குளோரின் பவுடர் லாரித் தண்ணீரோடு கலந்து..கலங்கி.....அவ்வளவுதான் நீர்ச் சுத்திகரிப்பு முடிந்தது.

       பார்த்துப் பழகி மனம் நொந்துதான் போனார் ஈஸ்வரன். வந்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகியும் அந்தப் பெரு நகரம் ஏனோ அவருக்கு ஒட்டவில்லை. ஒட்டவேயில்லை. வெளியே கோயில் குளம் என்று கிளம்பினால் டாக்சிக்குக் காசு கொடுத்து மாளவில்லை. அதென்னவோ அந்த நகரத்திற்கு வந்தபின்னால்தான் உறவுகளெல்லாமும் அங்கேதான் பல்வேறு இடங்களில் நிரந்தர வாசம் செய்கிறார்கள் என்பதே அவருக்குப் புலப்பட்டது. அநியாயத்திற்கு இப்படியா விசேடங்கள் வரும்? மாற்றி மாற்றி....மாற்றி மாற்றி....கல்யாணம், காட்சி, வளைகாப்பு, ஜனனம், மரணம்....என்று எல்லாத்துக்கும் தகவல் வந்து கொண்டேயிருக்க....போகாமல் முடியவில்லையே? மொய் எழுதியும், ஓலா உபருக்குக் கொடுத்துமே காசு பூராவும் கரைந்து போகும் போலிருக்கிறதே...! என்னடா இது அநியாயம்? ஓய்வூதியத்தில் ஒரு ஆயிரம் கூட நான் எனக்கென்று செலவு செய்து கொள்வதில்லையே? அத்தனையும் அநாமதேயமாய்ப் போய் கண்ணுக்குத் தெரியாமல் என்ன மாயா ஜாலம் இது?...! நல்ல கதையப்பா...நல்ல கதை...! வெறுத்தே போனார் ஈஸ்வரன்.....

      சொர்க்கமே என்றாலும்.....அது நம்மூரப் போல வருமா? அது எந்நாடு என்றாலும் நம் நாட்டுக்கீடாகுமா?

      ஆள விடு..சாமி...! என்று சொல்லிக் கிளம்பியே வந்து விட்டார். தனியாப் போயி இருக்க முடியாதுப்பா....என்று பையன் சொல்ல....என் மக்கள் முகங்களை அன்றாடம் பார்த்தாலே போதும். எனக்கு.....அதுவே பெரிய ஆரோக்கியமாக்கும்...என்று மறுத்து மாநகரத்துக்கு ஒரு முழுக்குப் போட்டு விட்டார். மனைவி ஸிந்துஜா பம்மியதை அவர் கவனிக்காமலில்லை. நீ இல்லேன்னா என்ன...என்னால வாழ முடியாதா? இருந்து காட்டறேன் பார்....என்று நினைத்துக் கொண்டார். 

       நீயும் வர்றியா? என்று கூட ஒரு வார்த்தை அவளிடம் கேட்கவில்லை. கிட....அவ்வளவுதான்...!. நான் தனியா இருந்தா நிம்மதியாத்தான் இருப்பேன் என்று இவர் தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். இப்போது தேவை தனிமை. யாரும் குறுக்கிடாத தனிமை. அமைதி. நிச்சலனமான அமைதி. அது அவர் வாழ்ந்த அந்த வீட்டில்தான் கிடைக்கும். அது அவருக்கு ஒரு கோயில். அவர் தாய் தந்தையரோடு வாழ்ந்து கழித்த சொர்க்கம். அங்கே அவர் பிராணன் போனால்தான் நிம்மதி.

      இதோ....அவருக்கென்று உள்ள சேடக் ஸ்கூட்டரில் இரண்டு கால்களுக்கு நடுவே அந்தத் தண்ணீர்க் கேன். வண்டியைக் கிளப்பி விட்டார் ஈஸ்வரன். இன்னும் அந்தப் பகுதியில் தண்ணீர் தந்து கொண்டுதான் இருக்கிறார்களா தெரியாது. குடம் ஒரு ரூபாய்தானா, அதுவும் தெரியாது. அந்த ட்ரை சைக்கிள்காரன் வந்து நின்றிருப்பானோ? அதுவும் தெரியாது. ஆனாலும் அந்த ஜனங்களைப் பார்த்தாக வேண்டும் அவருக்கு. அவர்கள் பேசும் பாஷையைக் காது குளிரக் கேட்டாக வேண்டும்.  அதில் ரெண்டு கெட்ட வார்த்தைகள் தொற்றிக் கொண்டிருந்தாலும் பரவாயில்லை...! அவர்களின் அந்த வெள்ளை மனசு...அன்றாடப் பாடுகளில் உழன்றிடினும் அதனையே கருமமாய் ஏற்றுக் கொண்டு பயணப்படும் அவர்களின் வாழ்க்கை....கரித்துக் கொண்டும், கலகலப்பாயும் நகர்த்தும் அவர்களின் அன்றாடப் பொழுதுகள்....அவைதான் எத்தனை ரசனைக்குரியவை...எவ்வளவு மதிப்பிற்குரியவை...!!

      அடடே...வாங்க சாமீ....என்னா ரொம்ப நாளா ஆளைக் காணலை.....- என்றவாறே ஒட்டு மொத்தக் குரலெடுத்து வரவேற்ற அவர்களின் அந்த அன்பில் திளைத்து கண்கள் கணத்தில் கலங்கிப் போக, வந்தாச்சு...வந்தாச்சு...இங்கயே வந்தாச்சாக்கும்...!”.என்று சிறு குழந்தைபோல் உற்சாகமாய்க் கூறிக் கொண்டே வண்டியை ஓரமாய் நிறுத்தி விட்டு அவர்களை நோக்கி ஆதுரத்தோடு நகரலானார் ஈஸ்வரன். அவரின் அந்த நாள் இனிமையாய்த் தொடங்கியிருந்தது. கொண்டாங்க கேனை...முதல்ல பிடிங்க...என்றவாறே எட்டி வாங்கினது ஒரு பெண்.

      மகளே....! என்று மனதுக்குள் ஈரம் கசிய அழைத்துக் கொண்டார் ஈஸ்வரன்.

                                    ----------------------------

 

 

      சிறுகதை                  “     ஏணி “    சிறுகதை   பிரசுரம் - தினமணி கதிர்


    சிவராமனுக்கு மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவர் வார்த்தைகைளை இங்கே யாரும் மதிப்பதில்லை. அவரது இருப்பை எவரும் உணர்வதில்லை. அவரவர் பாடு அவரவருக்கு என்று ஏதோ நடந்து கொண்டிருந்தது அந்த வீட்டில்.

      நாற்காலிக்குக் கீழே தன் காலடியிலேயே கிடந்த அந்த சாம்பல் நிறப் பூனை கூட இன்று வெளியில் சென்று படுத்துக் கொள்கிறது. அங்கிருந்து எட்டிப் பார்த்துத் தலையைத் திருப்பிக் கொள்கிறது. மனதில் இருந்தது தேடும்போது கிடைக்கவில்லை.

      வைத்த இடத்தில் வைத்த பொருள் இருந்தால்தானே? பூதமாய் இருக்கும் பெரிய பொருள் கூட குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் போய்விடுகிறது. அதுவும் தான் தேடும்போது அது இருப்பதேயில்லை. அப்படி எங்குதான் போகுமோ? ((என்னதான் ஆகுமோ? ( உனக்குப் பிடித்த இடத்தில் நான் இருக்க மாட்டேன்....என் பயணம் தனி....).)

      மனதுக்குள் குமுறிக் குமுறி அழாத குறைதான்.  வாய் விட்டுக் கேட்க முடிவதில்லை. கேட்டால் ஒழுங்கான பதில் வருவதில்லை. தன் மதிப்பைத் தானே குறைத்துக் கொள்ள வேண்டுமா? என் மதிப்பு தன் மதிப்பு. அடுத்தவர் மதித்தால்தான் அது இருக்கிறது என்று அர்த்தமா? வெடித்தால் கோபம்தான் கொப்பளிக்கும். ஆனால் சிவராமனுக்கு இப்பொழுதெல்லாம் அழுகைதான் வந்தது. ஒன்றை நினைக்கும்முன்பே கண்கள் கலங்கி விடுகின்றன. சுய பச்சாதாபம். சொல்ல முடியாமை. சொன்னாலும் காது கொடுத்து வாங்கி, அதைச் செய்ய நேரமில்லை எவருக்கும். ({தன் கஷ்டம் யாருக்கும் புரிவதில்லை.}) தனக்குள் அழுது கொண்டிருக்கிறார் அவர். உடல் நலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் அதைப் போட்டு வைத்திருக்கிறார்.

      ஆனாலும் அவர் காரியங்களை இன்றுவரை அவரேதான் செய்து கொள்கிறார். மெத்தையைத் தூசி தட்டுவது, நாற்காலி, மேஜைகளைத் துடைப்பது, அலமாரியைச் சுத்தம் செய்து, வெளியே எடுத்த புத்தகங்களைத் திரும்ப அடுக்குவது, ({அறையிலிருக்கும் ஆளுயரக் கண்ணாடியை அழுக்குப் போக விபூதி போட்டுத் துடைப்பது}) என்று. வேலைக்காரப் பெண் தரையைக் கூட்டுவது அவருக்குப் போதவில்லை. அது கூட்டி முடித்துப் போனபின்புதான் அங்கங்கே தலைமுடி சுற்றிச் சுற்றிப் பின்னிக்கொண்டு தரையில் வட்டமிடுகிறது. எடுத்துப் போட்டு மாளவில்லை. அதை அதனிடம் சொல்லவே தயக்கம் இவருக்கு. அது ஏதாச்சும் எடக்கு மடக்காகப் பதில் சொல்லி வைக்கப் போக...ஏண்டா கேட்டோம் என்று துக்கப்படவா? மற்ற அறைகளின் முடிக்கற்றைகளெல்லாம்  தன் அறைக்கு வந்து விடுகிறதோ என்று தோன்றியது இவருக்கு. வரத்தான் செய்கிறது. சந்தேகமில்லை.

      ({நேர் எதிர் பால்கனி ஜன்னல். ஆளுயரத்திற்கு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, திறந்து கிடக்கிறது. அது வழியாகக் காற்று பிய்த்துக் கொண்டு அடிக்கிறது. வெள்ளம் ஓரிடத்தில் கசடுகளைச் சேர்ப்பதுபோல் தன் அறைக்குள் வந்தடைகிறது படையும். வீட்டுக்குள் வைத்து தலை வாராதீர்கள் என்று சொன்னால் யாரேனும் காதில் வாங்கினால்தானே? அப்படியே தலை கோதினாலும் முடியை விரலில் சுற்றி எடுத்து முடிச்சிட்டுக் கொண்டு குப்பையில் போட வேண்டாமா?}) }இதென்ன வீடா அல்லது பார்பர் ஷாப்பா? அங்கே கூட ஒராள் எழுந்ததும் கூட்டி மூலையில் ஒதுக்கி விடுகிறானே? அது தொழில் நியாயம் என்றால் இங்கே வீட்டு நியாயம் ஏன் இப்படிக் கிடந்து  சீரழிகிறது? ({பொறுமிப் பொறுமி என்ன பயன்? சுத்தம் சோறு போடும் என்றால் அப்ப வேலைக்குப் போக வேணாமா? என்று கிண்டலாய்க் கேட்கிறான் மகன்? })

      அது கிடக்கட்டும்...எது எப்படியிருந்தென்ன? இந்தப் பாழாய்ப்போன ஃபேனை மட்டும் துடைத்துச் சுத்தமாக்குவதற்கு இன்னும் வேளை வரவில்லையே? ஒட்டடைக் குச்சி கொண்டு சுவற்றில், உத்தரத்தில் படிந்திருக்கும் ஒட்டடைகளை, தூசிகளைக் கூட வாயில் துணியைக் கட்டிக் கொண்டு அகற்றி விடுகிறார்தான். இந்த சீலிங் ஃபேனைத் துடைக்க மட்டும் இன்றுவரை வாய்க்கவில்லை. என்னவோ ஒரு மனத் தயக்கம்.

      நடு அறையில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று பண்ணி விடுவோம் என்றால் மனதின் மூலையில் சிறு பயம். ஸ்டூலில் ஏறி நின்றாலும், கையை உயர்த்தித்தான் ஃபேனின் காற்றாடிகளைத் துடைத்தாக வேண்டும். கையை உயர்த்தும்போது தலையையும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. தலை ஏன் அப்படி சுற்றுவது போல் பிரமை ஏற்படுகிறது? கண்கள் ஏன் மேல் நோக்கிச் செருகுகின்றன? ({ எட்டி, இறுக்கிப் பிடிக்க சுவர் இருக்கிறது என்றால் அது ஃப்ளாட்டாகவல்லவா நின்று கொண்டிருக்கிறது? அங்கே ஒரு பிடியில்லையே? கையை வைக்கலாமேயொழிய பிடி கி்டைக்காதே?அப்படியிருக்கையில்} }தலைகிறுக்கிக் கீழே விழுந்து வைத்தால்? ..

      முடிந்தது கதை. பிறகு நொண்டிக் கழுதைதான். அந்தச் சிரமத்தை யாருக்கும் வைக்கக் கூடாது. தனக்கும் கஷ்டம். மற்றவர்களுக்கும் சிரமம்...உபத்திரவம்...வேதனை. (ஆக அது சாத்தியமில்லை. )

      இப்படி சாத்தியமில்லை...சாத்தியமில்லை என்றே நாளும் பொழுதும் ஓடி விட்டது, ஃபேனும் பிசினாய் மசி போல் ஒட்டிக் கொண்டு அழுக்கு அடைந்து கிடக்கிறது. அடைந்திருக்கும் அழுக்கே அதன் வேகத்தைக் குறைக்கிறதோ என்கிற அளவுக்கு சந்தேகமும் வந்துவிட்டது.  அதன் நிறமே மாறி விட்டது. அறைக்கதவை அடைத்தால் ஒரு மாதிரி வாடை வருகிறது. {{அது அந்த அடைஅழுக்கு நாற்றம்தானோ? {ஏதேனும் பல்லி கில்லி மேல் தட்டில் செத்து விழுந்து ஒட்டிக் கொண்டிருக்குமோ? என்ன கண்றாவி இது! சமீபத்தில் கீச்...கீச்...கீச்...என்ற சத்தம் வேறு கேட்க ஆரம்பித்திருக்கிறது. எண்ணெய் போட வேண்டும். சத்தம் நிற்கும். அது சுத்தம் பண்ணி பிறகு செய்ய வேண்டியது.} }

      பாதுகாப்பாய் முதலில் நம்மை நிறுத்திக் கொண்டு அந்த வேலையைச் செய்தாக வேண்டும். தான் செய்தால்தான் உண்டு. நிச்சயம் வேறு யாரும் அதைச் செய்துவிடப் போவதில்லை. மகனோ, மருமகளோ, மனைவியோ யாரும் எதையும் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்கள் அறையில் உள்ளவைகளைச் சுத்தமாய் வைத்துக் கொள்ளவே அவர்களுக்குத் துப்பில்லையே? {{அதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இதில் தன்னை எங்கே கவனிக்க? }}

      அதென்ன வீடாகவா கிடக்கிறது? எத்தனை சதுர அடிக்கு வீடு வாங்கி என்ன புண்ணியம்? கண்ட கண்டதையெல்லாம் வாங்கிக் குவித்தால் அது பங்களாவாய் இருந்தாலும் பத்தாதுதான். {{முதலில் அவர்கள் அறையை நிரப்பி, பிறகு சும்மாக்கிடந்த இன்னொரு அறையையும் அடைத்து (த்ரீ பெட் ரூம் ஃப்ளாட்) இப்போது உறாலும் நிரம்பி வழிகிறது. கலை எழில் மிளிர வீட்டை அழகு படுத்துகிறார்களாம்...!}} அவர்கள் செய்தது அவர்களுக்கே இப்போது வினையாய்! வாங்கின பொருளெல்லாம் குவிந்து கிடக்க, தொடர்ந்து வைத்திருப்பதா, தூக்கி எறிவதா?

      தூக்கி எறிஞ்சிடலாம்...தூக்கி எறிஞ்சிடலாம்...இவர் மனையாள் வாசுகிதான் சொல்வாள் இதை. நீ அடிக்கடி இதைச் சொல்றதப் பார்த்தா ஒரு நாள் என்னையும் உங்களை அறியாமத் தூக்கி எறிஞ்சிடுவேள் போல்ருக்கே.{{..மனுஷன் உபயோகமில்லேன்னா அவ்வளவுதானா? {தூங்கிறபோது மாடிலேர்ந்து கீழே போட்ருவேளோ?} }

      இவர் பேச்சு அவர்களுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் தோன்றுவதைச் சொன்னால்தான் மனசு ஆறுதல்படுகிறது. {{நினைக்கிறதைப் பேசக் கூட எனக்கு உரிமையில்லையா? வாயுமா அடைபட்டுப் போகணும்? ஏதோவொரு விதத்தில் அந்தப் பேச்சு தன்னை சுட்டுகிறதுதானே? }}

      தூசியெல்லாம் அடிக்க முடியாது....ஆளக் கூப்பிட வேண்டிதான்....

      அதானே பார்த்தேன்...எங்க களத்துல இறங்கிடப் போறாங்களோன்னு...?

      காச விட்டெறிஞ்சா ஆச்சு....செய்திட்டுப் போறான்.....கூப்பிட்டுவிட்டா செய்றதுக்கு வரிசைல நிக்கறது ஆட்கள்...!

      வார்த்தைகளைக் கேட்டீர்களா? எப்டீ.?...விட்டெறிஞ்சா.!...-என்ன திமிர் பாருங்க...? சம்பாதிக்கிற காசுக்கான மரியாதையைக் கேளுங்க?  இவனுங்களுக்கெல்லாம் இப்டி இஷ்டத்துக்குச் சம்பளம் கொடுக்கிறதே தப்புங்கிறேன்....கஷ்டப்பட்டு பணம் சம்பாதிச்சாத்தான் அதோட அருமை தெரியும்ங்கிறேன்.{{...அந்தக் காலத்துல நாலு காசு பார்க்க என்ன பாடு பட்டிருக்கு? என்ன உழைப்பு  உழைச்சிருக்கு? இவ்வளவுதானா கூலின்னுல்ல இருந்திருக்கோம்? அந்த அருமை தெரியுமா இவங்களுக்கு? அதையே குருவி சேர்க்கிறமாதிரி பார்த்துப் பார்த்து சேர்த்ததுனாலதான இன்னைக்கு இவனுங்க இந்தப் பேச்சு பேச முடியுது? அதை எவனாவது உணருவானா? வெட்டிப் பசங்க...}.}

      தெனம் ஏழெட்டு மணி நேரம் வேலை செய்துதாம்ப்பா இந்தக் காசைச் சம்பாதிக்கிறோம்...சும்மா ஒண்ணும் வந்திடலை.....

      அப்போ?  சிக்கனமா செலவு செய்யணும், சிறுகச் சிறுகச் சேமிக்கணும்...(.(இவங்க வாங்குற சம்பளத்துக்கு பெருகப் பெருகச் சேமிக்கலாம்தான்)} ங்கிற எண்ணமே இருக்கிற மாதிரித் தெரிலயே...சேவிங்க்ஸ் பாங்குல பணத்தைத் தூங்க வச்சு என்னடா புண்ணியம்? எவனாவது சைபர் க்ரைம் திருடன் சுருட்டிட்டுப் போகவா? அப்பப்ப எடுத்து எஃப்.டி.ல போடுங்க....அப்பத்தான பாதுகாப்பு...? எத்தனவாட்டிடா சொல்றது உங்களுக்கு...? ஆபீஸ் வேலையத் தவிர வேறே எதுவுமே செய்ய மாட்டீங்களா? திங்க, தூங்க, பேள...இதானா தினசரித் தியானம்?

       மத்த எல்லாத்துக்கும் உங்களுக்கு ஆள் வேணுமா? சுயமா செயல்பட மாட்டீங்களா?  ஆபீஸ் போக வேண்டிது...சனி...ஞாயிறானா வெளில ஊர் சுத்திட்டு ஓட்டல்ல கண்டதைத் தின்னுட்டு வீட்டுல வந்து விழ வேண்டிது....அன்றாடம் கை வௌங்கி சமைக்கவே துப்பில்லையேடா உங்களுக்கு? அதையும் வெளிலல்ல வாங்கித் தொலையுறீங்க? எவனோ, என்னைக்கோ பண்ணினதை ஃப்ரெஷ் டுடேன்னு உங்ககிட்ட வந்து கதவத் தட்டி நீட்டறான்.  ஈஈன்னு இளிச்சிண்டு மதிப்பா வாங்கி முழுங்கிறீங்க...{{அவன் என்னவோ ஓசில கொடுத்த மாதிரி}}....உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா...!.

      எனக்காக இதச் செய்யுங்கோன்னு உங்ககிட்டயெல்லாம் ஒண்ணு சொல்றதுக்கே எனக்குக் கூச்சமா இருக்கு....இந்த வயசுல என் வேலையை நான் பார்த்துண்டாலே ரொம்ப மதிப்பாக்கும்னு நினைக்க வேண்டிர்க்கு...{{ஏன்னா...நான் ஒண்ணு சொன்னா எனக்கு அதை உடனே செய்யணும்...அது உங்ககிட்டே இல்லையா? பத்துத்தரமில்ல சொல்ல வேண்டிர்க்கு....}}.

      என்னென்னவோ நினைத்துக் கொண்டார். இன்று எப்படியும் அந்த ஃபேனைத் துடைத்து சுத்தம் செய்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார். வீட்டில் மொத்தம் ஆறு ஃபேன்கள் ஓடுகின்றன. அதில் ஒன்று     24 x 7. அதை அவர் அப்படித்தான் சொல்கிறார். கேட்டால் சிரித்துக் கொள்கிறார்களே தவிர தாக்கம் உணரப்படுவதில்லை.

      ஆள் இல்லாத எடத்துல எதுக்கு வேஸ்ட்டா  ஃபேன் ஓடுது?

      ஒண்ணுக்குப் போகப் போனேன். அதான் உடனே வந்திடுவனே...அதுக்குள்ள ஒரு தரம் அணைச்சுப் போடணுமா? - மனையாளே இப்படிச் சொன்னால்? {{மூத்த தலைமுறை என்று பெயர். அவளுக்கே நம் சுட்டிக் காட்டல் எரிச்சல் படுத்துகிறது.}} பிறகு மற்றவர்களைச் சொல்லி என்ன பயன்? நாம் வழிகாட்டியாய் இருக்க வேண்டாமா? ஒரு இடத்தை விட்டுக் கடக்கும்போது அங்கு ஓடும் ஃபேனை அணைக்க வேண்டும் என்பதை ஒருவர் சொல்லியா தெரிய வேண்டும்? சொல்பவன்தான் பகையாளி. நல்லது செய்தால் மதிப்பில்லை இந்நாளில்...! எத்தனை முறைதான் எழுந்து போய் அணைப்பது? அதுக்குள்ளயும் அணைச்சாச்சா? தரித்திரம்...! இந்த வார்த்தை அந்த செயலுக்கா அல்லது எனக்கா?

      ச்சே...!.. இந்தப் பெரிசு தொல்லை தாங்க முடிலப்பா...!..பேசாம இடம் மாத்திர வேண்டிதான்.....- கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் என்னவளும்...! எனக்குக் காதில் விழாது என்ற நினைப்பு.! நல்ல பசங்கதான் ஆனாலும் சமயத்துல இப்படியும் முனங்குறாங்களே?அவ என்ன பெரிசில்லையா? சிறிசா? ஒருவேளை நச்சு நச்சென்கிறவர்கள்தான் பெரிசோ? {{சோறு கிடைத்தால் போதும் என்று வாய் மூடிக் கொத்தடிமையாய்க் கிடக்கிறவர்கள் வீட்டுக் காவல் நாய் போலும்...! நீ அந்த வகைதான்...மனுஷன்னா கொஞ்சமேனும் சுரணை வேணும். நாம வளர்த்த பிள்ளைகள் விட்டேத்தியா இருந்தா....பரவால்லன்னு விடுவியா? அதைக் கண்டிக்க வேண்டாமா?}} நல்லதை எடுத்துச்  சொல்ல வேண்டாமா? நாம சொல்லாம வேறே யார் சொல்லுவா? ரோட்டுல போறவனா வந்து சொல்லுவான்?

      அவள் என்றோ மஷணை ஆகிவிட்டாள். பிள்ளைப் பாசம் கண்ணை மறைக்கிறது. கிருஷ்ணா ராமா....கிருஷ்ணா ராமா......!

      போகட்டும்...இன்று துவங்கிய வேலையை முடிக்கப் பார்ப்போம்.

      ஏற்றி விட்ட ஏணி தட்டுத் தடுமாறி எழுந்து நின்றது.

      ஏணி என்ற அந்தச் சொல் எதையோ உணர்த்தியது இவருக்கு. ஊறுகாய், ஊறுகின்ற காய், ஊறிய காய்...வினைத்தொகை. ஏணி...ஏற உதவும் ஏணி, ஏற்றி விட்ட ஏணி....! - தனக்குத்தானே உள்ளுரச் சிரித்துக் கொண்டார்.

      {{நாலு எட்டு வைப்பதற்குள் எட்டி கதவு நிலையைப் பிடித்துக் கொண்டது.}} கதவுக்கு வெளியே அந்த ஃப்ரிட்ஜ்ஜின் பின்னால் சுவற்றில் சாத்தி வைத்திருந்த அலுமினிய ஏணி எங்கே? கொண்டு வந்து சாத்தி நிறுத்திய பிறகு இவர்களுக்கு அது பயன்பட்டதா ஒரு நாளாவது? அந்த அபார்ட்மென்டுக்குப் பயன்படட்டும் என்றே வாங்கியிருப்பார்களோ? ரொம்ப தாராளம்தான்...!

      அது கீழ போயிருக்குப்பா...... - ரமணனின் பதில். வாசுகி பிள்ளையை நோக்கினாள்....அவன் உதட்டில் விரல் வைத்தான்.

      அதுவா நடந்து போயிடுச்சோ....? எப்ப மேல வரும்? கேட்கத் தோன்றியது இவருக்கு. அது அவனுக்கே தெரியாது..

      இப்ப எதுக்கு அதைத் தேடிண்டு? எப்டிப் போச்சோ அப்டியே திரும்ப வரும்.  தேமேன்னு உட்காருங்கோ....

      ரூபாய் மூவாயிரம் கொடுத்து ஏணி வாங்கிய பின்பாவது வேலை நடைபெறும் என்று பார்த்தால் பிறகும் வேலையாள் வந்துதான் அதைச் செய்தாக வேண்டும். இவர்களே செய்வதாய் இல்லை. உடம்பு வணங்காது.  {{அதாவது வேலையாளுக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். தாங்கித் தடுக்கிடுகிறார்கள். அது கிடக்கட்டும்.}} }வாங்கிய பலனுக்கு முதலில் நம் வீட்டு வேலைகளை முழுவதுமாய் முடித்துக் கொண்டு பிறகு இரவல் கொடுக்கக் கூடாதா?

       பாத்திரம் தேய்த்துக் கூட்டும் வேலைக்காரம்மாதான் அதையும் செய்தது. தினமும் ரெண்டு ஃபேன் என்று துடைக்க ஆரம்பித்து நாலு ஃபேன் துடைத்து முடிப்பதற்குள் அதற்கு உடம்புக்கு முடியாமல் ஆகிப் போனது. நமக்கு ஓட்டடையும் தூசியும் ஆகாதென்றால் அதற்கு மட்டும் ஒத்துக்குமா? அதுவும் மனித ஜீவன்தானே?{{இந்தச் சாக்கில் லீவு போடாவிட்டால் பிறகு எப்பதான் போடுவதாம்?

      (ஒரு வாரம் ஆச்சே...அந்தம்மா வரக் காணலை....சம்பளம் குறைப்பேளா மாட்டேளா...? குறுகுறுத்த மனதுக்கு ஒத்தடமாய் இதைக் கேட்டு வைத்தார் சிவராமன்.

      சம்பளம் குறைக்கிறதாவது? அதல்லாம் அந்தக் காலம்...! பண்ணினா வேலையை விட்டு நின்னுடுவா....இன்னிக்கு அவாளுக்குத்தான் கிராக்கி...மேன்யூவல் லேபருக்குத்தான் இன்னைக்கு மதிப்பு...! இந்த ஏரியாவுல அங்கங்கே பொழுது விடிஞ்ச ஜோர்ல மொபெட்டும், சன்னியுமா குறுக்கும் நெடுக்கும் பறக்கிறதே...அதெல்லாம் யாருன்னு நினைச்சேள்...எல்லாம் இவாதான். ஒவ்வொருத்தர் கைலயும் பத்துப் பதினைஞ்சு  வீடாக்கும். மாசம் இருபதாயிரம் சம்பாதிக்கிறா. நடந்து போய் ஆகாது. சர்ரு...சர்ருன்னு பறந்துண்டிருக்கா..நிக்க நேரமில்லை அவாளுக்கு..நீங்க புதுசா எந்த வேலை சொன்னாலும் அதுக்குத் தனிக் காசு....அதுவும் சொன்ன நாள்ல நடக்காது. அவாளுக்கு ஒழியறபோது வந்து செய்து கொடுத்திட்டுப் போவா....கருணை வைக்கணும்....!}}

      நின்று போனது அந்தப் பணி. அடுப்படியும், இவர் அறையும்தான் மிச்சம்.. கண்டு கொள்ளவேயில்லையே யாரும்? மறந்தே போயாச்சு போலிருக்கு...போயே போச்சு...போயிந்தே...!

      டியிறங்கிக் கொண்டிருந்தார் சிவராமன். மொத்தம் ரெண்டு மாடிதான். கீழே கார் பார்க்கிங். அவர் எப்பொழுதும் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதில்லை. பயம். ஒரு முறை அதில் ஆசையாய் நுழையப் போக அன்று பார்த்துக் கரன்ட் போனது. சின்ன விஷயத்துக்குக் கூட மனுஷனுக்கு யோகம் இ.ருந்தாத்தான் நடக்கும். கிரகம்.   உள்ளே வகையாய் மாட்டிக் கொண்டார். {{லைட் இல்லை.  இருக்கும் குருட்டு வெளிச்சத்தில், பதற்றத்தில், என்னென்னவோ பட்டனை அமுக்கி அமுக்கிப் பதறிப் போனார். வியர்த்து வடிந்து விட்டது நிமிஷத்தில். வெளியே யாருக்கும் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. எமர்ஜென்ஸி பெல் வீச்சு வீச்சென்று அடித்துக் கலக்கியும், யாரும் அதை நுணுகிக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அதான் ஒவ்வொரு வீட்டிலும் அணைக்காத டி.வி. சதா சர்வகாலமும் காது கிழிய அலறிக்கொண்டேயிருக்கிறதே...! அதை மீறி யாருக்குத்தான் காதில் விழும்? }

      உள் கதவு வெளிக் கதவு என்று சாத்தியிருந்த நடு இடுக்கு வழியே தெரிந்த கோடு போன்ற இடைவெளியில் சற்றே காற்று வர அதனருகில் மூக்கை வைத்து கஷ்டப்பட்டு மூச்சை இழுத்துக் கொண்டார். சாதாரணமாய் இருந்திருந்தால் கூடச் சமாளித்திருக்கலாம். மனதில் தோன்றிய பயம்...மூச்சே நின்று விடும்போல் உணர வைத்து நெஞ்சு படபடத்து மரண பயம் வந்து விட்டது. கீழே போனாரே மனுஷன்...என்ன ஆனார்? ஏதானார்?  யாருக்கேனும் பிரக்ஞை வேண்டுமே? ஊறீம்....தன்னைப்பற்றிய எண்ணமேயில்லையே எவருக்கும்? யார் செய்த புண்ணியமோ...கீழ் வீட்டுப் பையன் பார்த்துவிட, எமர்ஜென்ஸி கீயைக் கொண்டு வந்து கதவைத் திறக்க, இரண்டடி பள்ளத்தில் இருந்தார் இவர்.

      அப்டியே இருங்க அங்கிள்...பயப்படாதீங்க...நா தூக்கிடறேன்...என்றவாறே கட்கத்தில் கையைக் கொடுத்து ஒரு இழு இழுத்தானே பார்க்கலாம். நா என்ன இளந்தாரியா...இந்த வேகத்துல இழுக்கிறான்? மடப்பய.மவன் ...பார்த்துத் தூக்க வேண்டாம்...? - நினைத்துக் கொண்டாரேயொழிய சொல்ல முடியுமா? பாழாய்ப் போன கரன்ட் அன்று மாலை வரை வரவேயில்லையே? காலில் முட்டிக்குக் கீழே சிராய்ப்புகள். யாருக்கும் தெரியாமல் தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டுக் கொண்டார் சிவராமன். கட்கத்தில் கை வைத்துத் தூக்கினானே...அங்கே ஷேவ் பண்ணி வருஷமாச்சே...! என்ன நினைத்துக் கொண்டானோ? கருமாந்திரம்....!

      {{லிஃப்ட்டுக்கு பேட்டரி போடுங்கோ...போடுங்கோன்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு...யாரும் ஒத்துக்கலை...கரன்ட் எப்பயாச்சும்தானே போறது...எதுக்கு பேட்டரிங்கிறா? எட்டு வீட்டுல இருக்கிறவங்ககிட்டே ஒத்துமையில்லை.... தன் பேச்சு எடுபடாது என்று தெரியும்தான். போதாக்குறைக்கு பக்கத்து அபார்ட்மென்ட்களில் பேட்டரிகள் திருடு போய்விட்டன என்று வேறு தகவல் வர அந்தப் பேச்சு அத்தோடு சமாதியாகிப் போனது. }}

      எப்பொழுதாவது கீழே போக நேரும்போது படிகளையே பயன்படுத்தினார் சிவராமன். காலுக்கும், கால் முட்டிகளுக்கும் கொஞ்சமாவது இயக்கம் இருக்கட்டும் என்று அதைச்செய்தார். இப்பொழுது முதல் மாடிக்கு வந்து விட்டார். நாலு வீடுகள் எதிர் எதிராக. ஒவ்வொருவராகக் கதவைத் தட்டினார். இல்லை இல்லை என்றார்கள். நீங்க ஏன் வந்தீங்க தாத்தா என்றது பேத்தி போல் இருந்த ஒரு குட்டிப் பெண். நாலு வீட்டிலும் இல்லையென்றால் பிறகு எங்கேதான் போயிற்று? ஒருவேளை மேலேயுள்ள மற்ற மூன்று வீ்டுகளிலும் கேட்டுவிட்டுப் படியிறங்கியிருக்க வேண்டுமோ? அதிலும் ஒரு வீடு பூட்டியல்லவோ கிடக்கிறது. மீதி இரண்டு. அவர்கள் யாரும் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. புதிய வீட்டிற்கு இப்பொழுதுதான்  புதிதாய் வந்தவர்கள்.

      இதென்னடா வம்பாப் போச்சு...? மூவாயிரம் போட்டு வாங்கின அலுமினிய ஏணியை எங்க போச்சுன்னு தெரியாம, தனக்கும் பயன்படாம, அதுபத்தின நினைப்பே இல்லாம இப்டி இருக்காங்களே? எங்ககிட்ட இல்லையேன்னு வேணுமின்னே சொன்னா? யாருக்குத் தெரியும்?உள்ளே பூந்தா பார்க்க முடியும்?   நாமளே சிரமப்பட்டுச் செய்திடுவோம்னு முனைஞ்சாலும் காரியம் ஆக மாட்டேங்குதே? இதென்ன கஷ்டகாலம்....?

      மனம் நொந்தவராய் வந்ததுதான் வந்தோம்...கீழே கார் பார்க்கிங்கில் சற்று உலாவுவோம்...அது எப்படித்தான் இருக்கிறது என்று முழுசாகக் கொஞ்சம் அளப்போமே...என்று பதவாகமாய் தரைத் தளத்தை நோக்கிக் கீழே இறங்கினார்..

      {{ஈரம் பாலித்திருந்தது கார் பார்க்கிங் ஏரியா. அடிக்கும் நெருப்பு வெயிலுக்கு அஞ்சாமல் படிந்திருக்கும் பசுமையான சொத சொத  ஈரம். சாலையில் நாலடி தோண்டினால்  தாங்க முடியாத உப்புத் தண்ணீர். வற்றாத, எந்தக் கோடையினாலும் வற்ற வைக்க முடியாத சதுப்பு நிலக் கசடுகளடர்ந்த பிசின் ஈரம்  பாலித்த இடம். அந்தப் பகுதியின் பல இடங்களில் குளங்களாயத் தேங்கி நிற்கும் அடர்த்தியான நீர்த்தடங்கள். கொழ கொழவென்று மிதக்கும் துர்நாற்றப் பாசி படர்ந்த பச்சைத் தண்ணீர். என்னென்னவோ செத்து வேறு மிதக்கிறது.  மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நகர்ந்தாக வேண்டும். அவ்வளவு கம கம மணம். }}

      செப்டிக் டாங்க் நிரம்பி வெளியே கசடு கசிந்து கொண்டிருந்தது. வாடை ஆளைத் தூக்கியது. கார்ப்பரேஷன்காரன் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். அதற்குள் க்ளீன் பண்ணியாக வேண்டும். மாதாமாதம் உண்டாகும் அதற்கான செலவு. காற்றின் போக்கில் அடிக்கும் நாற்றத்தில் துண்டால் வாயையும் மூக்கையும் இறுக்கப் பொத்திக் கொண்டார் சிவராமன். சொந்த வீடு வாங்கி, மாசா மாசம் வாடகை கொடுக்கிற மாதிரி மெயின்டனன்ஸ் செலவு மூவாயிரம் அழ  வேண்டிர்க்கு..! அபார்ட்மென்ட்ல வீடு வாங்குற மாதிரி ஒரு தப்பு எதுவுமில்ல….!

      கண்ணில் பட்டது அந்தக் காலி அறை. செக்யூரிட்டி கிடையாது. ரூம் மட்டும் இருக்கிறது. இன்னும் சில்லரை வேலைகள் பாக்கியிருக்கிறதே...! வெறுமே  கதவைச் சாத்தி வைத்திருக்கும் அதற்குள் மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தார். .

      அட....ஏணி இங்கிருக்குதே...!? கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டார். பார்வை என்ன இத்தனை மங்கிக் கிடக்கிறது? மூக்குக் கண்ணாடி  இல்லாமயே வந்தாச்சா? அட ராமா...!  ரொம்பத் தப்பாச்சே...!   சரியாப் போச்சு....அநாதை மாதிரில்ல கிடக்கு? எவனாச்சும் லவுட்டிட்டுப் போயிட்டா? கேட்க நாதியில்லையே...? நல்லவேளை...என் கண்ணுல பட்டது.....பொழைச்சிது.....! அத்தனையையும் அவரே சொல்லிக் கொண்டு இரு கைகளாலும் அணைத்துத் தூக்கினார். நாலே நாலு படிகளானாலும் இணைத்திருக்கும் ஸ்டான்டோடு சேர்த்து கனக்கத்தான் செய்கிறது. அலுமினிய ஏணி இத்தனை கனமா? இதத் தூக்கிட்டு எவன் இரண்டு மாடி ஏறுவது? நினைத்த கணத்தில் லிஃப்டில் நுழைந்தார். கதவைச் சாத்தி பட்டனைத் தட்டினார்.

      இன்னைக்கு எப்டியும் வேலையை முடிச்சிப்புடணும்....இதுக்கு மேலே தாமதப்படுத்தக் கூடாது. திடீரென்று ஒரு வேகம் வந்தது. அந்த ஃபேன் அழுக்குக்கே திரும்பக் கொரோனா  வந்தாலும் போச்சு....! - சொல்லிக் கொண்டே லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்து ஏணியைத் தூக்கிக் கொண்டு சரசரவென வீட்டிற்குள் நுழைந்தார்.

      அறைக்குள் கொண்டு வைத்ததுதான் தாமதம். அந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த வாசுகி....இதெங்கிருந்து கிடைச்சது உங்களுக்கு? நீங்க பாட்டுக்குத் தூக்கிண்டு வந்திருக்கேள்? என்றாள் படபடத்தவாறே.

      என்னடீ சொல்றே? கீழே செக்யூரிட்டி ரூம்ல அநாதையாக் கெடக்குடீ இந்த ஏணி...!...ரூமே வெறுமேத்தான் சாத்தி வச்சிருக்கு.பூட்டலை... எவனாச்சும் திருடிண்டு போனான்னா? அதுக்கு ஒரு பூட்டுப் போட நாதியில்லையா இங்கே?

      ஐயோ ராமா....உங்களுக்கென்னத்துக்கு இந்த வேலை? இந்த ஏணி நம்மளுது இல்லை. அழுக்கும் பிசுக்குமா..அரதப் பழசா....யாரோடதோ? பார்த்தாலே தெரில...? கர்மம்...கர்மம்...இப்டியா.நெஞ்சுல அணைச்சிண்டு செல்லமாத் தூக்கிண்டு வரணும்....! கிரஉறச்சாரம்...முதல்ல ஒரு குளியலைப் போடுங்கோ...ஏதேனும் வியாதி தொத்திக்கப் போறது. கொரோனாக் காலம் இன்னும் முழுசா தீரலையாக்கும்...! நீங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும்....ஞாபகமிருக்கட்டும்....

      நான்தான் பூஸ்டரே போட்டாச்சே...என்னை இனிமே எதுவும் அண்டாது...என்ன சொன்னே? நம்மளோடது இல்லையா? பின்ன யாரோடது....? அப்போ நம்மது என்னாச்சு...ஏற்கனவே காணாமப் போயிடுத்தா...?

      ஆமா..கண் .காணாமப் போயிடுத்து...சொத்தை அள்ளிண்டு போயிடுத்து...இந்த வாய்க்கு ஒண்ணும் குறைச்சலில்லே...?. எதுத்த வீடு பூட்டிக் கெடக்கே...அங்கே மாட்டிண்டிருக்கு நம்ம ஏணி....சொல்லாமக் கொள்ளாம அவா ஊருக்குப் போயிட்டா...அவாளும் .மறந்து போயிட்டா..நமக்கும் ஞாபகமில்லே.....வந்தாத்தான் ஆச்சு....இதைச் சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்...சொல்ல வச்சுட்டேள்...அவா திரும்ப வந்துதான் ஆகணும்...போறுமா?

      அந்தப் போறுமா? என்ற சொல்லைக் கேட்க காது இல்லை சிவராமனுக்கு. அதற்குள் தூக்கி வந்த ஏணியின் மறுபக்க ஸ்டான்ட் கழன்று இரண்டாய்ப் பிரிந்து ஒன்று அவர் மேலேயும் இன்னொன்று தரையிலும் எனத் தடாலென்ற பெருத்த சத்தத்தோடு சரிய, ஐயையோ..என்னாச்சு....என்னாச்சுப்பா....? என்ற பதற்றத்தோடு மடியில் வைத்திருந்த கணினியைத் தலையணையில் தூக்கிப் போட்டுவிட்டு விழுந்தடித்து ஓடி வந்தான் பையன் ரமணன்.

      இந்த மனுஷனால என்னெல்லாம் பாடு? என்று பல்லைக் கடித்துக் கொண்டே  தன் பங்குக்குப் பதறியவளாய் செய்வதறியாது பிரமித்து நின்றாள் வாசுகி.

                              ----------------------------

       

     

                       உஷாதீபன்,   (ushaadeepan@gmail.com)                                                                   எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                                 மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                                 ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,                                                        மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188).

 

 


முன்னுரை

      நான் எப்படி தரிசிக்கிறேனோ அதை அப்படியே எனது நோக்கில் உங்களுக்குக் காட்ட விரும்பும்  முயற்சியே எனது கதைகள் என்று குறிப்பிடுகிறார் திரு.ஜெயகாந்தன் அவர்கள்.

      என் முயற்சியிலான  கதைகளும் இதையேதான் காட்சிப்படுத்த முனைகின்றன என்பேன் நான். என் கதைகளில் நடமாடும் பாத்திரங்கள், நாமும் அவர்களை எங்கோ சந்தித்திருக்கிறோமோ என்ற கேள்வியை நிச்சயம் எழுப்பும். ஒரு சிறுகதையின் தரத்தை நிர்ணயிக்க அழகியல் அம்சங்கள் பிரதான தீர்மான சக்தி என்பது உண்மைதான். ஆனால் மனித நேயம், சமூக நோக்கு, பண்பாட்டுக் கவலை என்ற அம்சங்களும் இன்றியமையாதவை. இவையனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இந்த அம்சங்களை உள்ளடக்கி, வடிவ அமைதியோடு உருவாகியுள்ளவை இத்தொகுதியிலுள்ள கதைகள். நான் பார்க்கிற ஏழை மனிதரையெல்லாம் நேயத்தோடும், பரிவோடும், இவர் இப்படித் துயருறுகிறாரே என்கிற கவலையோடும் நோக்குகிற என் குணபாவமே என் சிறுகதைகளின் உயிராகவும், உடம்பாகவும் இயங்குகின்றன. மனித நேயத்துக்கு எதிரான, ஏழைகட்கு எதிரான எந்தச் சிந்தனையும் என் கதைகளில் இல்லை என்பேன். உலுத்தாத மொழி நடையோடு என் மனதில் பதிவாகிற நான் பார்க்கிற  உலகம், உண்மை மிக்க எளிய மொழி நடையில் எவ்வித ஒப்பனையுமில்லாமல் சிறுகதைகளாக வடிவம் பெறுகின்றன.

      என் கதைகளைப் படித்து முடிப்பதற்குள் புறத்தேயிருந்து எவ்விதக் குறுக்கீடுகளும் பாதிக்காமல், வாசகனின் புலன் முழுதும் கதாசிரியனின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டதாய் இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்தை இப்படைப்புகளில் காண முடியும்.   நன்றி....

                                                      உஷாதீபன்

எஸ்-2 - இரண்டாவது தளம்,                       (ushaadeepan@gmail.com)            ப்ளாட் எண்.171, 172-ஏ                                                     மேத்தாஸ் அக்சயம், மெஜஸ்டிக் அடுக்ககம்,                                ராம்நகர் (தெற்கு) 12-வது பிரதான சாலை, மடிப்பாக்கம்,                        சென்னை-600 091.  (கைபேசி-94426 84188)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

      -

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...