30 செப்டம்பர் 2019

சிறுகதை “நிலைத்தல்“ உஷாதீபன்


சிறுகதை                                                                                       “நிலைத்தல்“   உஷாதீபன்,      
     

“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறிங்கிற பழமொழி. எல்லாருக்கும் பொருந்துமாங்கிறதை யோசிக்க வேண்டிர்க்கு… - இப்படிச் சொல்லிவிட்டு சந்திரன் அவளையே உற்றுப் பார்த்தான். அதைச் சொல்லி நீ தப்பிக்க முடியாது என்பதை அவள் உணர வேண்டும். அதுதான் அவனின் இப்போதைய தேவை.
     மாதுரி தலை குனிந்திருந்தாள். அவனை நிமிர்ந்து நோக்குவதா வேண்டாமா என்றிருந்தது. தான் மௌனமாய் இருந்தது உண்மைதான். அந்த மௌனத்தை இப்படி அர்த்தப்படுத்துவான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை.
     மௌனம்ங்கிறது இரட்டை மன நிலையோட சாட்சி. மனசு ஒரு விஷயத்தை விரும்பலை. ஆனாலும் அதை வெளிப்படையா சொல்ல விருப்பமில்லை. அதே சமயம் குறிப்பிட்ட விஷயத்தோட நியாயம் அதை எதிர்க்க முடியாத நிலையை ஏற்படுத்துது. அங்கே மௌனம் உதவுது. அப்படி இருக்கிறது மூலமா எதிராளியைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். தன் முடிவைத் தெரிவிக்காததன் மூலமா ஒத்துப் போகாத நிலையை ஏற்படுத்தலாம். பின்னால் விஷயம் பெரிசானா, நான்தான் ஒண்ணுமே சொல்லலையே என்று கூறி எதிர்க்கவில்லை என்பதான தோற்றத்தை ஏற்படுத்தித் தப்பிக்கலாம்.
     வாழ்க்கையில் பல சமயங்களில் மௌனம் தப்பிப்பதற்கு ஏதுவான ஒரு சாதனமாய், சாதகமாய் அமைகிறது. மௌனம் சண்டைகளைத் தவிர்க்கிறது. பரஸ்பரக் கோபங்களை ஆற்றுகிறது. பிரச்னையை ஆறப்போடுவதற்கு உதவுகிறது. ஒத்திப்போட்டு ஒன்றுமில்லாமல் செய்வதற்கு வழி வகுக்கிறது. மறதிக்கு ஏதுவாக்குகிறது. யார் ஜெயித்தது என்ற தேடுதலில் நீ தோற்றாய் என்று மனதுக்குள் நினைத்து ஆறுதல்பட்டுக்கொள்ள உதவுகிறது. இந்த முறையும் என்னை நீ வெல்லவில்லை என்று சொல்லாமல் சொல்லத் தோதளிக்கிறது. இதெல்லாவற்றையும் யார் பக்கம் நியாயம் என்பதைத் தீர்க்கவொண்ணாமல் அந்தரத்தில் தொங்கப் போடுவது அதீத வசதியாய் இருக்கிறது.     
     இம்மாதிரி ஒரு வழிமுறை மூலம் அவனை அடிக்கடி பழி வாங்கியிருக்கிறாள் அவள். இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் இத்தனை காலம் ஓடிப்போனதே அவளின் இந்த சாமர்த்தியத்தினால்தான். அதுவே அவளின் வெற்றி.  முக்கியமான பிரச்னைகளைப் பேசும்போதெல்லாம், அவன் தன்னுடன் விவாதிக்க விஷயத்தை முன் வைக்கும் போதெல்லாம்  அவனின் அபிப்பிராயங்களுக்கு பதில் சொல்லாமல், அல்லது மறுத்துப் பேசாமல், தன் கருத்து எதுவாயினும் எல்லாவற்றிற்கும் மிஞ்சியவளாய் “சரி, வேண்டாம்“ என்ற ஒற்றைச் சொற்களிலோ, “வேறே பேசலாமே“ என்று சொல்லியோ அவள் தப்பித்திருக்கிறாள். அதன் மூலம் அவன் சொல்லிய விஷயம் அல்லது சொல்ல வந்த விஷயம் தன்னால் கணத்தில் புரிந்து கொள்ளப்பட்டு அது  தனக்குப் பிடிக்காதது என்பதாகவோ, இந்த மாதிரிப் பேச்சுக்களைப் பேசிக்கொண்டு என்னிடம் வராதீர்கள் என்கிற ரீதியிலேயோ  அந்தக் கணத்திலேயே அவள் ஸ்தாபித்ததன் மூலம் அவனை வெற்றி கொண்டதாகவும், தன் கண்ணெதிரிலேயே அவனை உடனுக்குடன் அவமானப்படுத்தியதாகவும்,  எண்ணி இறுமாந்திருக்கிறாள்.
     இதையெல்லாம் மாரடிப்பதற்கா நான் உனக்கு வாழ்க்கைப் பட்டேன் என்பதாகவும், இந்தச் அல்பங்களையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை என்ற பொருளிலும் அவனை, அவன் பேச்சை உடனடியாகப் புறக்கணிப்பது என்பது அவளுக்குப் பெருத்த ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருந்தது. இருந்து கொண்டுமிருக்கிறது.
     ஆனால் ஒன்று. எத்தனை முறை இப்படி நடந்தாலும் அவன் அயரவில்லை என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கிறது. அதுதான் அவளை இன்றுவரை அவன் சார்பில் யோசிக்க வைக்கும் விஷயமாக முடிவுறாமல் இருந்து கொண்டிருக்கிறது.
     இத்தனைக்கும் அவன் தன் மேல் தீர்க்க முடியாத மையல் கொண்ட ஆடவனாகவும் தெரியவில்லை. வயதுக்கேற்ற வேகமும், சில்மிஷங்களும், நேரம் காலமறியாத தொந்தரவுகளும், சீண்டல்களும், அவனிடம் என்றுமே இருந்ததில்லை.
     அவனைப் பொறுத்தவரை குறிப்பிட்ட விஷயங்களில் காண்பிக்கும் நிதானமும், பொறுமையும், ஆணித்தரமான அடியெடுப்பும், அவளை பிரமிக்கத்தான் வைக்கிறது. இதில் நீ மறுப்புச் சொல்லியும் பயனில்லை, நடக்க வேண்டியது நடந்தே தீரும் என்கிற அவனது தீர்மானம் அதுநாள் வரையிலான மௌனங்களின் மூலமான தப்பித்தல்களை சுக்கு நூறாக உடைத்துச் சிதறடித்திருக்கிறது.
     எந்த மௌனத்தின் மூலமாக அவனிடமிருந்து தன்னை உயர்த்திக் கொண்டாளோ அல்லது அப்படி நினைத்துக் கொண்டாளோ அந்த மௌனங்களின் ஒட்டு மொத்தமான யதார்த்தத்தையே தன்னின் முழுப் பலமாகக் கொண்டு அவன் இப்போது உயர்ந்து நிற்பதை அவள் உணர்ந்தாள்.
     அதுநாள் வரையிலான அவனின் கருத்தான சேமிப்பாகத் தோன்றியது அது. இன்னும் எத்தனை காலங்களானாலும், இந்த மதிப்பான ஒன்றை மட்டும் நீ உடைத்தெறியவே முடியாது, அது நீ விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நடந்தே தீரும் என்பதாக அவன் தீர்மானமாய் இருப்பது அவளுக்குள் மெல்லிய நடுக்கத்தைப் பரவவிட்டு, இந்த விஷயத்தில் தான் தோற்றுத்தான் போய்விட்டோமோ என்பதாக அவளின் எண்ணங்களை மெல்ல மெல்லச் சிதறடித்துக் கொண்டிருந்ததை அந்தக் கணத்தில் அவள் உணரத் தலைப்பட்டாள்.
     மௌனம்ங்கிறது  பல சமயங்கள்ல ஒத்திப் போடலுக்கு வேணும்னா வழி வகுக்கலாம். ஆனா அதுவே தீர்வா என்றுமே இருந்ததில்லை. அதை பலவீனம்னு புரிஞ்சிக்கிறதுக்கும் வாய்ப்பிருக்கு. …
     நான் பேசினா அனாவசியமா சண்டைதான் வரும்…? உங்க இஷ்டப்படி செய்யுங்கோ…
     இப்படிச் சொல்வதன் மூலம் தான் சதா சண்டை போடுபவன் என்பதை அவள் நிர்மாணிக்க முயல்கிறாளா? அப்படிச் சொல்லி தன்னை இதிலிருந்து விடுவித்துக் கொள்ள வழி வகுக்கிறாளா? அல்லது தானே நிதானமாக விஷயத்தை நோக்குபவள் என்று சொல்லாமல் சொல்லி தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்கிறாளா?
     என் இஷ்டப்படி செய்றதுங்கிறது அடாவடியில்லை. அதிலிருக்கிற நியாயம். அதுக்கு மறுப்பு வரும்னா அதை அடாவடியாத்தான் செய்தாகணும்…
     நியாயம்ங்கிறது ஒரு சார்பானதில்லையே…ஒருத்தருக்கு நியாயமா இருக்கிறது இன்னொருத்தருக்குத் தப்பா தோணலாம். வேறொரு பார்வை இருக்கலாம். அதை நீங்க ஒத்துக்கப் போறீங்களா? நிச்சயமா இல்லை. எதுக்கு வீண் பேச்சு?
     ஒவ்வொரு முறையும் இப்படிச் சொல்லித்தான் தன்னிடமிருந்து விலகியிருக்கிறாள். ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. எப்படிப் போராடியேனும் தன் கருத்தை நிலை நிறுத்தியே ஆக வேண்டும் என்கிற பிடிவாதம் இல்லை. ஆனால் அதே சமயத்தில் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும் தலையாட்ட நான் தயாரில்லை என்ற கருத்து மட்டும் ஆணித்தரமாக இருக்கிறது.
     அவளைப் பொறுத்தவரை தனது கருத்துக்கள் எல்லாவற்றிற்குமே ஏறக்குறைய மறுப்பு இருந்துதான் வந்திருக்கிறது. எதில் ஒத்துப் போகிறாள் என்பதாக நினைத்து நினைத்துப் பல சமயங்களில் இவன் குழம்பிப் போயிருக்கிறான். தன்னை அவ்வாறு குழப்பத்தில் ஆழ்த்திவிட்டுத் தள்ளியிருந்து அதை ரசிப்பதே அவள் வேலையாய்ப் போய்விட்டது.
     தலை குனிந்து தன் வேலையில் கண்ணும் கருத்துமாய் இருப்பது போலவும், அதன் மூலமே தன்னை முன்னகர்த்தி மேலே சென்று விட்டது போலவும் கருதிக் கொள்கிறாளோ?. இடையிடையில் தன்னை நோக்குகிறாளோ என்றும் நினைத்திருக்கிறான். ஒரு பார்வை தற்செயலாய் இவன் அவளை நோக்கிய அதே கணத்தில் அவளிடமிருந்தும் வந்தது. லேசாய்ச் சிரித்துக் கொண்டதுபோலவும் இருந்தது. அது என்ன அலட்சியச் சிரிப்பா? கேலிச் சிரிப்பா? அல்லது நீ இப்படி அலைவாய் என்பது எனக்குத் தெரியும் என்பதான கெக்கலியா?
     இப்போதும் அவளின் மௌனம் அவனுக்கு இப்படியான அர்த்தங்களைக் கற்பிக்கத்தான் செய்தது. ஒன்று மட்டும் உண்மை. தன்னை மீறி எதுவும் நடந்து விடுவதற்கில்லை. அதுதான் தன்னின் ஒழுக்கமும், நேர்மையும்பாற்பட்ட விஷயம்.
     நீ சொல்வது நியாயமாய் இருந்தால் தண்டனிட்டுக் கேட்பேன். அல்லாமல் வெறுமே கண்ணை மூடிக் கொண்டு எதையும் ஏற்க முடியாது. என் செயலில் அப்படியான முரண்களை நீ கண்டறிந்தாலும் அதை நீ தாராளமாக வெளிப்படுத்தலாம். தவறிருந்தால் களையப்படும்.
     எல்லா விஷயங்களுக்கும் அடிப்படையான நியாயம் என்று ஒன்று உண்டு. அது என்றைக்குமே மாறாத ஒன்று. மனிதனுக்கு மனிதன் நியாயங்கள் மாறி விடுவதில்லை. சிலசூழல்களால் அது தடுமாறுவது உண்டு. அங்கேயும் இறுதியாக நிலைப்பது ஒரு செயலின் நேர்மையே. ஒரு விஷயத்தின் நியாயமே. நீ என் மனைவி என்பதற்காக உன் குணக்கேடு சார்ந்து கெடுக்க முடியாது. அதை நீ உணர்ந்துதான் ஆக வேண்டும். உன்னை மாற்றிக் கொண்டுதான் ஆக வேண்டும். பதிலாக உன் மன வக்கிரங்களை இதில் பாய்ச்ச முடியாது. கண்களை மூடிக் கொண்டு நானும் அதற்கு உடன்பட முடியாது. எந்த அம்பினையும் பயன்படுத்தி நீ என்னை வீழ்த்தி விட முடியாது. அது நாகாஸ்திரமாக இருந்தாலும் சரி.
     சூழலைப் புரிந்து கொள். தேவையை உணர்ந்து கொள். காலத்தின் கட்டாயத்தை  அறி. உன்னை மாற்றிக் கொள்ள முயல். இல்லையேல் நஷ்டம் உனக்குத்தான். நான் உன்னை வீழ்த்த வேண்டியதில்லை. காலம் அந்தப் பணியைச் செய்யும். வீழ்ந்துபட்ட வேதனையை நீயே அனுபவித்து முடிப்பதுதான் உன் மனசாட்சிக்கான தண்டனை.
     காலம் எல்லா மனிதர்களையும் நோக்கிக் கேள்விகளை வீசும். எவனும் அவனவன் செயல்களுக்கு, தவறுகளுக்கு, பதில் அளிக்காமல் விடை பெற முடியாது. குறைந்தபட்சம் அதற்கான தண்டனையையாவது அனுபவித்துத்தான் அவன் மரித்தாக வேண்டும். பாபங்களைச் சேர்க்காதே. பண்புகளைச் சேர்….. அதனால் கிடைக்கும் நற்செயல்களை நிறைவேற்று. குறைந்தபட்சம் அதற்கு முயலவாவது செய். முரணாக நிற்காதே.….
     கையில் பிடித்திருந்த அந்தக் காகிதம் மெலிதாக நடுங்குவதைக் கண்ட அவள் தன் கைதான் அப்படி நடுங்குகிறது என்பதை உணர்ந்து அடக்கிக் கொள்ள முயன்றாள்.
     மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி வைத்து விடுபவன் அவன். வாய் விட்டுப் படபடத்துத்தான் மன வேகத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும் என்கிற அவசியமில்லை. எழுத்து அவனுக்கு ஒரு வடிகால். அவனிடமிருந்து தப்பிக்க முடியாது. இரும்பு மனிதன் அவன். நினைத்ததை நிறைவேற்றியே தீருவான். அது உலக நியாயம் என்று கருதுபவன். கடவுளே முன்னால் உதித்து கொஞ்ச காலம் தள்ளிப்போடு என்றாலும் அவனிடம் ஆகாது.
     அன்பினாலும், தியாகத்தாலும்தான் வசப்படுத்த முடியும். வெறும் உடம்பைக் காட்டியோ, சரிநிகர் சமானத்தைக் காட்டியோ அடி பணிய வைக்க முடியாது. சரி என்றால்தான் சிரமேற்கொண்டு ஏற்றுப் பாதுகாப்பான். முரண்டினால் முறுக்கிப் பிழிந்து விடுவான்.
     உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது என்று அடிக்கடி சொல்பவன். அதற்குக் கட்டுப்படாத ஜீவராசிகளே கிடையாது என்பான். அது ஒன்றினால்தான் இவனை அசைக்க முடியும். மற்றவை இவனிடம் செல்லாது. உணர்ந்தாள் மாதுரி.
     சரி, உங்க இஷ்டப்படி செய்ங்கோ…என்றாள்.
     இது என் ஒருவனோட  இஷ்டம் மட்டும் இல்லை….உலக இஷ்டம்….காலகாலமான கலாச்சார இஷ்டம்….குடும்பங்கிற கட்டமைப்புக்கான இஷ்டம்….காலச் சக்கரம் சுழலும்ங்கிற வாழ்க்கை நியாயத்துக்கான இஷ்டம்…எல்லாருக்கும் பொதுவான இஷ்டம். வாழ்க்கைத் தத்துவத்தை வரையறுத்த இஷ்டம்…இன்று எனக்கு நாளை உனக்கு என்று சக்கரம் சுற்றும்.இன்று போய் நாளை வரும். கண்டிப்பாய் வரும். யாரும் தப்பிக்க முடியாது. எழுதித்தான் வைத்திருந்தான் இதையும்.
     இதுதான் முடிவு என்று அவன் வரையறுத்து எழுதியது பிரம்மனின் எழுத்து. அதை மாற்ற இயலாது.
     அவன் கிளம்பினான். எதற்காக? எந்த நல்லது நடந்தாக வேண்டுமோ அதற்காக. எந்தக் கடமையை நிறைவேற்றியாக வேண்டுமோ அந்த நற்செயலுக்காக. அவரவர் மனதில் எது தோன்றுகிறதோ அந்த நல்லவைகளுக்காக.
     சம்மதித்துத்தானே ஆக வேண்டும். வேறு வழியில்லையே. இது அவனுக்கு முன்பே தெரியும். இருந்தாலும் அதை அவள் உணர வேண்டும் என்பதிலும் அவனுக்கு ஒரு நியாயம் இருந்தது.
     அவள் என்னவள். அதனால் விட்டுவிட முடியாது. அம்மாவும் அதைத்தானே சொன்னாள் இது நாள்வரை.
     அவளுக்கு எல்லாமே நீதானே…உன்னை விட்டு அவ எங்க போவா…அன்பா, அனுசரணையா வச்சிக்கோ….
     அன்பின் திருவுருவம். அறநெறியின் இருப்பிடம். மாசற்ற மாணிக்கம். கண்களில் நீர் பனிக்கிறது இவனுக்கு.
     இந்த உலகம் அன்பு வலையினால் பின்னப்பட்டிருக்கிறது. அம்மாவின் வார்த்தைகள் மீண்டும் இவன் மனதில்.                                   

                           -----------------

                               
                              

25 செப்டம்பர் 2019

“தேஜஸ் ரயிலின் தேவை”


             


  
“தேஜஸ் ரயிலின் தேவை”      
     மதுரை-சென்னை தேஜஸ் ரயில் கடந்த ஆறு மாதங்களாக சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. லட்சக் கணக்கான மக்கள் இந்த அதிவேக, நவீன ரயிலின் பயன்பாட்டை உணர்கின்றனர் என்பது மகிழ்ச்சிகரமான விஷயம். இந்திய ரயில்வே குறிப்பாகக் கவனித்து வந்து அவ்வப்போது தேவை கருதி சிறப்பு ரயில்களை அறிமுகப்படுத்தும் பணியை செவ்வனே செய்து வருகிறது.
     அதி நவீன வசதிகளுடன் இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதுதான் தேஜஸ் ரயில். புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் நோக்கம் என்பது பயணிகளின் பயன்பாட்டிற்கு அவை முழுமையான அளவில் பயன்பட வேண்டும் என்பதே. இந்த நோக்கம் நிர்வாகத்துக்குத் தெரியாததல்ல. அதை முன் வைத்துத்தான் புதிய ரயில்களே அறிமுகப்படுத்தப்படுகின்றன.
     ஆனால் மதுரை-சென்னை தேஜஸ் ரயில் இன்னும் சாதாரண மக்களின் பயன்பாட்டிற்கு முழுமையாக வரவில்லை,  ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நவீன வசதிகள் கொண்ட ரயில் என்பதால் பயணக் கட்டணத்தை இதற்கு மேல் மாற்றிக் குறைக்க இயலாது என்பதான ஒரு கருத்து இருக்கலாம். ஆனால் இருக்கும் கட்டணத்திலேயே அந்த ரயில் பயணத்தை அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கின்றன என்பதுதான் இங்கே சொல்ல வந்த விஷயம்.
     முதல் காரணம் அது திருச்சி மற்றும் கொடைக்கானல் ரோடு ஆகிய இரு நிலையங்களில் மட்டும்தான் நிற்கும் என்பது. அதிவேக ரயிலான வைகை எக்ஸ்பிரஸ் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் என்று நின்று காலை ஏழு மணிக்குப் புறப்பட்டு மதியம் இரண்டே கால் மணிக்குத் தாம்பரம் நிலையம் வந்து விடுகிறது. ஆனால் திருச்சி, கொடைக்கானல் ரோடு இரண்டு நிலையங்களில் மட்டுமே நிற்கும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஆறரை மணி நேரத்தில் (ஏழு என்று கூடச் சொல்லப்படுகிறது) சென்னை எழும்பூர் ஸ்டேஷனை அடைகிறது என்பது எப்படிப் பெருமைப் படும் விஷயமாக இருக்க முடியும்? இத்தனைக்கும் அது தாம்பரம் நிலையத்தில் இறங்கும் 80 சதவிகிதப் பயணிகளை அங்கு இறக்கி விடுவதில்லை. நிற்காமல் நேரே எழும்பூர் நிலையம்  சென்று விடுகிறது மீதி 20 சதவிகிதப் பயணிகளுடன் மட்டுமே…! இதுதான் சத்தியமான உண்மை.
                கொடைக்கானல் ரோடு நிறுத்தம் என்பது அங்கு இறங்கி கொடைக்கானல் மலைக்குச் செல்லும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று கணித்து அந்த நிறுத்தத்தை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டுக்குள் நம் மாநில மக்களின் பயன்பாட்டிற்காக  ஓடும் ரயில். மற்ற எல்லா இரயில்களும் (சென்னை எக்ஸ்பிரஸ் என்ற ஒரு ரயிலைத் தவிர) எண்பது சதவிகிதப் புற நகர்ப்  பயணிகள் முழுக்க இறங்கி விடும் தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்கும் போது, இந்தத் தேஜஸ் ரயிலை மட்டும் அங்கு நிறுத்தாமல் நேரே எழும்பூர் நிலைய கடைசி நிறுத்தம் வரை கொண்டு செல்லுவதால் ஏற்படும் பயன்தான் என்ன? புற நகர் வாசிகள் எழும்பூர் நிலையத்தில் இறங்கி டாக்ஸி பிடித்து வீடடைய அதற்குப்பின் இரண்டு மணி நேரம் கண்டிப்பாக  வேண்டும். குழந்தை குட்டிகளோடுடைய தம்பதியர், வயதான ஆண்கள், பெண்கள், அன்றே வேலைக்குச் செல்ல வேண்டிய இளைஞர்கள், இளைஞிகள்,  என்று எத்தனை ஆயிரம் பேருக்கு சிரமமான விஷயம் இது? சற்றே ரயில்வே நிர்வாகம் சிந்தித்துப் பார்த்தால் நலம்.
     அது போல் விடிகாலை 6.00 மணிக்கு  சென்னையிலிருந்து புறப்படுவதாய் நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புறநகர்ப் பகுதியில் குடியிருக்கும் சென்னைவாசிகள் இந்த ஆறு மணி ரயிலைப் பிடிக்க வேண்டுமெனில், விடிகாலை மூணு மணிக்கு அல்லது குறைந்த பட்சம் நாலு மணிக்காவது எழுந்தால்தான் ஆகும். அப்படி எழுந்து தயாராகி, டாக்ஸி வைத்து,  அவதி அவதியாய் எழும்பூர் ரயில் நிலையத்தை அடைவதென்றால் அது எத்தனை பரபரப்பான, ரத்தக் கொதிப்பான விஷயமாக இருக்கும் என்பதைத் தயவுசெய்து நிர்வாகம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
தாம்பரத்தில் ஏறிக் கொள்வோமெனில் அங்குதான் நிறுத்தம் கிடையாதே மற்ற ரயில்களைப் போல்…? பயண நேரம் குறைய வேண்டுமென்பதற்காகத்தான் இதெல்லாம் செய்யப்பட்டிருக்கிறது என்று நிர்வாகம் சொல்லலாம். ரயில்களின் நிறுத்தங்களையும் குறைத்து, பயணிகளின் வசதிகளையும் விடுத்து, எதற்கு இந்த நேரச் சுருக்கம்? அதி நவீனம் சரி, அதி வேகம் என்பதை இப்படித்தான் உறுதிப்படுத்தி ஆக வேண்டுமா?   பயணிகள் வசதியை மேம்படுத்தல் என்ற ஒரு புள்ளியில்  இவையெல்லாம்  ஒரு காரணமாய் அமையாதே…? ஆறரை மணி நேரம் என்பது அரை மணி கூடுதலாக ஏழு மணி நேரப் பயணமாகப் போகிறது. தேஜஸ் ரயில் என்பது அதன் நேரக் குறைவை விட, அது பயணத்திற்கு மிகவும் சௌகரியமான குளுகுளு வசதி கொண்ட நவீன ரயில் என்பதுதானே…! அரை மணி கூடினால் என்ன குடியா முழுகும்?
     எனவே காலை 7.00 மணிக்கு சென்னை எழும்பூர் ஸ்டேஷனில் தேஜஸ் ரயில் கிளம்புவதுபோல் வைப்பதே நலம். தாம்பரம் ரயில்நிலையத்தில் நிறுத்தம் உண்டு என்கிற வசதியை உடனடியாக நிறைவேற்றுதல் என்பது அதி முக்கியம். காரணம் மதுரையில்  “மதுரை மெயின்” என்கிற ஒரு ஜங்ஷன்தான். சென்னை அப்படிக் கிடையாது. புறநகருக்குத் தாம்பரம் மற்றும் உள் நகருக்கு எழும்பூர் நிலையம் ஆகிய இரு நிலைகளைக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
     எனவே தேஜஸ் ரயிலை சென்னையிலிருந்து கிளம்பும்போது காலை 7.00 மணி என்று நேரத்தை மாற்றியமைக்கவும், மதுரையிலிருந்து சென்னை வந்தடையும்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று பயணிகளை இறக்கிச்  செல்லவும் உடனடியாக நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும் என்பது பெருவாரியான மக்களின் கோரிக்கையாகிறது. ரயில்வே நிர்வாகம் இந்த வசதியை விரைவில்  நம் பயணிகளுக்குச் செய்து கொடுக்கும் என்று எதிர்பார்ப்போம்.
                -----------------------------------------------------------------------------------------
            
                    

22 செப்டம்பர் 2019

“சரஸ்வதியின் குழந்தைகள்“ - சிறுகதை உஷாதீபன்


“சரஸ்வதியின் குழந்தைகள்“ - சிறுகதை     உஷாதீபன்
                                                                                                         
        புத்தகத்தை வரிசையில் வைத்துவிட்டு நகர்ந்தான். மனதுக்குச் சற்றே நிம்மதிப்பட்டது. எந்தெந்தப் புத்தகங்கள் அதன் அருகில் இருந்தன என்பது ஓரளவுக்கு ஞாபகம் இருந்ததால் சரியான இடத்தில் வைக்க முடிந்தது. இரும்பு அலமாரி சரியாகத் தரையில் பதிந்து நிற்காததால் ஏற்பட்ட ஆட்டத்தில் கீழே விழுந்திருந்த மேலும் ஒன்றிரண்டு புத்தகங்களையும் எடுத்து அடுக்கினான்.
      என்னாச்சு சார்....பார்த்து மெதுவாச் செய்ங்க... - அவசரப்படாதீங்க... - அந்தக் குரலின் கண்டிப்பு இவனைத் துணுக்குறச் செய்தது.
      தோழர்களோடு  சேர்ந்து கொண்டதுபோல் முதலில் வைத்த புத்தகம் வரிசையோடு பாந்தமாக ஒன்றியிருந்தது. இப்போது.  தள்ளி நின்று பார்த்து திருப்திப் பட்டுக் கொண்டான். வெகு நாளாய் அந்த வரிசைப் புத்தகங்களை யாரும் கை வைக்கவில்லை என்பது போலிருந்ததாய்த் தோன்றியது.
      ஏதோ எழுதிக் கொண்டிருந்த அந்தப் பெண் நூலகர் ஏதும் சொல்லும் முன்பே, எதிர் வரிசைக்கு வந்து “ஆய்வு நூல்கள்” என்று போட்டிருந்த இரண்டாம் அடுக்கினில் தேட ஆரம்பத்தான். ஒரு அலமாரியில் மொத்தமுள்ள ஏழு  அடுக்குகளில் மேலிருந்து இரண்டாம் அடுக்கினில், புத்தகத்துக்கும் மேல் பலகைக்கும் நடுவழியாக அந்தப் பெண்மணியின் பார்வை இங்கே பதிந்திருந்தது. அப்படி அவர்கள் கூர்மையாக அடிக்கடி கவனித்துக் கொண்டிருப்பது என்னவோல்தான் இருந்தது. தொட்டதற்கெல்லாம் சந்தேகம்தானா?
      அதென்னங்க அந்தம்மா அப்படிப் பார்க்குது? நாமென்ன புத்தகத்தைத் தூக்கிட்டா ஓடப் போறோம்?
      சற்று நேரத்துக்கு முன் கடைசி வரிசையில் புத்தகம் தேடிக் கொண்டிருந்தபோது அருகிலே கூடவே நின்று அலசிக் கொண்டிருந்த ஒருவர் கூறியது நினைவுக்கு வந்தது. அருகிலே தொங்கிக் கொண்டிருந்த அட்டையில் எழுதியிருந்த வாசகத்தைப் பார்த்தான் இவன்.
      “புத்தகங்களை வரிசை குலையாமல் எடுக்கவும். எடுத்ததை எடுத்த இடத்தில் மீண்டும் வைக்கவும்“
      அந்த வாக்கியங்களில் இருந்த அழுத்தத்தை எண்ணிச் சிரித்துக் கொண்டான். “எடுத்ததை எடுத்த இடத்தில்....” -வைத்தால்தானே வரிசை குலையாது....!
      சற்று முன்னுள்ள முதல் வரிசை அலமாரியில் “அமைதி காக்கவும்“ “நூல்கள் உங்கள் கண்கள்“ என்று எழுதியிருந்தன.
      கடந்த இரு மாதத்தில்தான் இந்த மாற்றங்களெல்லாம். இந்தம்மா வந்த பிறகுதான். அதற்கு முன் இருந்த ஆண் நூலகரிடம் இத்தனை கவனமும் கரிசனமும், கண்டிப்பும் இல்லை. திறந்து வைத்து விட்டு, அவரே நூலகத்திற்குப் படிக்க வந்தவர் போல் சிவனே என்று ஏதேனும் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருப்பார். இந்தப் பெண்மணிக்கோ கண்காணிப்பதே வேலை என்று ஆகிப் போனது. அதிலும் சந்தேகப்படுவது என்பதுதான் முக்கியப்புள்ளி. சற்றே நாகரீகம் இருக்கலாம் என்று தோன்றியது. வந்து, புத்தகம் தேடுவோர் எல்லாருமே திருடர்கள்தான் என்பதுபோல் ஐயமாகவே பார்த்துக் கொண்டிருந்தால்? புத்தகம் படிக்கும் நல்ல பழக்கம் உள்ளோர்  அப்படி இருப்பார்களா? கொஞ்சமேனும் யோசிக்க வேண்டாம்? எதற்கடா இப்படி வரிசையாய்ப் புத்தகம் எடுக்க வந்து தொல்லை கொடுக்கிறார்கள்? இவர்களுக்கெல்லாம் வேறு வேலையே கிடையாதா? என்பதாய் ஒரு சலிப்பு, கோபம்....? எனக்கென்னவோ அப்படித்தான் தோன்றியது. அந்தம்மாவின் முக பாவங்கள் இதைத்தான் பிரதிபலித்தன.
      ஒருவர் புத்தகம் மாற்ற வந்தபோது வாயிலில் உள்ள பதிவேட்டில் கையெழுத்திடாமல் நுழைந்ததைப் பார்த்து “கையெழுத்துப் போட்டுட்டு நுழையுங்க...“ என்றது அந்தப் பெண்மணி.
      நான் படிக்கப் போகலைங்க...புத்தகம் மாற்றத்தான் வந்தேன் - என்றார் அவர்.
      இருக்கட்டுமே... - லைப்ரரிக்குள்ளே என்டர் ஆகறீங்கல்ல...உள்ளே நுழைஞ்சாலே போட்டாகணும்...போடுங்க... - மறு பேச்சில்லாமல் கையெழுத்திட்டார் அவர்.
      புது புக்ஸ் எல்லாம் வந்திருக்கு சார் - இதோ இந்த ரேக்குல இருக்கு பாருங்க...”
      அட...இந்தம்மாவா சொல்லுது இப்டி...? - ஆச்சரியமாய் இருந்தது இவனுக்கு.
      எப்படி ஒழுங்கு முறை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக உள்ளதோ, அது போலவே புத்தகங்கள் எல்லாமுமே வாசகர்களால் படிக்கப்பட வேண்டியதே என்கிற நல்ல பரந்த எண்ணமும் அவர்களிடம் இருப்பதாக உணர்ந்தான்.
      முந்தைய ஆண் நூலகர் புதிய புத்தகங்களைத் தொடவே விடமாட்டார். “அந்த வரிசை பூராவும் இன்னமும் பதியலை சார்... அதை எடுக்காதீங்க...பதிஞ்ச பின்னாடிதான்....“ - என்றார் ஒரு நாள்.
      இப்படியே அவர் பலமுறை சொன்னதும், அவற்றில் முக்கால்வாசிப் புத்தகங்கள் ஏற்கனவே சீல் அடித்திருப்பதும், எண்ணிட்டிருப்பதும், தெரிந்த சிலருக்கு என்று மட்டுமே அவர் அவைகளைக் கொடுத்தனுப்புவதும், மற்றவர்களுக்குக் கையை விரிப்பதும் பார்த்தான். அந்தக் கையை விரிக்கும் லிஸ்டில் இவனும் இருந்ததுதான் கனன்றது மனதில். நாகரீகம் கருதி அமைதி காத்தார்கள் பலர். நூலகமே அமைதியான இடம்தானே...!அந்த இடம் தந்த கட்டுப்பாடாகக் கூட இருக்கலாம். ஆனால் அந்தக் கட்டுப்பாடே அவருக்கு ஒரு பாதுகாப்பாகவும், தன்னிச்சையானதுமாக அமைந்திருப்பதும்தான் விநோதம் என்று தோன்றியது.
      சமீப காலமாகத்தான் அங்கே ஒரு சுபிட்ச நிலை நிலவுகிறது. “சார்...“ - அழைப்புக் கேட்டு புத்தகத்திலிருந்து விலகி அந்த நூலகரைப் பார்த்தான்.
      அந்த பேக்கை இப்படி வச்சிட்டுத் தேடுங்க சார்....- என்றவாறே தன் மேஜையைக் காண்பித்தது அது. லேசாகப் புன்னகைத்துக் கொண்டே சொன்னால் கூடப் பரவாயில்லை. என்ன கறார்த்தனம்? பொட்டில் அடித்தது போலிருந்தது இவனுக்கு. வெளி வேலையா கிளம்புற போது பல வேலைகளைக் கைல வச்சிட்டு வர்றோம்...பாங்க பாஸ் புக்செல்லாம் கிடக்கு...எப்டி கீழே வைக்கிறது...இது பாட்டுக்குச் சொல்லுது...?-நினைத்துக் கொண்டே போய் வைத்தான் இவன்.
      டந்த வாரம் நகரில் இவன் வழக்கமாய்ச் செல்லும் ஒரு புத்தகக் கடையில், புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தக் கடைக்காரர் சொன்னார்.
      புத்தகங்களைத் திருடறாங்க சார்...எங்கேயாவது பார்த்திருக்கீங்களா....?
      இவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. என்ன சொல்றீங்க...? என்றான்.
      ஆமா சார்...உண்மையாத்தான் சொல்றேன்...போன வாரம் ஒரு செட் வந்திச்சில்ல....நீங்க கூடப் பார்த்தீங்களே...எண்ணிப் பார்த்தேன்...ஏழு புத்தகம் குறையுது சார்...என்ன அநியாயம்? படிச்சவங்களே இப்படிச் செய்தா?
      பார்சல் வந்ததை சரியாக எண்ணிப் பார்த்துத்தானே எடுத்து வச்சீங்க? விற்றுப் போயிருக்கும்...நல்லா பாருங்க.....
      இல்ல சார்...திருடுதான் போயிருக்கு....எனக்குத் தெரியாதா? படிச்சவங்க நாகரீகத்தைப் பாருங்க....எவன நம்புறது?
      ஏன், படிச்சவங்களுக்கு திருட்டுப் புத்தி இருக்கக் கூடாதா?
      அவர் இவனையே கூர்மையாகப் பார்த்தார். தன்னையே சந்தேகப்படுகிறாரோ என்று இவனுக்குத் தோன்றியது. வினயமான கேள்வியாயிற்றே...!
      என்னங்க நீங்க...அது வந்திடுச்சா...இது வந்திருச்சான்னு ஆர்வமா ஓடி ஓடி வந்து கேட்டுட்டுப் போறாங்க...புத்தகங்கள் அறிவை வளர்க்கிற பொக்கிஷம். மனுஷனைப் பக்குவப்படுத்துற கருவி. அதைப் பணச் செலவா நினைக்காதவங்க...இப்படி அநாகரீகமா நடந்துக்குவாங்களா?
      தெரிஞ்சாத்தானே அநாகரிகம்....தெரியலேன்னா? ஆர்வம் இருக்கிற இடத்துல ஆசை புகுந்திடுச்சின்னா? ஆசையே துன்பத்துக்குக் காரணம். யாருக்கு...இங்கே உங்களுக்கு...!ஆசை தவறு பண்ணத்தானே து’ண்டும்...!  தற்கொலை பண்ணிக்க, பெரிய  தைரியம் வேணுமுங்க மனுஷனுக்கு...! திருடுறவங்களைச் சொன்னேன்...- ஏதோ பெரிய ஜோக்கைச் சொல்லிவிட்டவன் போல் சிரித்துக் கொண்டான் இவன்.
      அவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை. சார் சொல்றது போலவும் இருக்கலாமோ? யோசிக்க ஆரம்பித்திருக்கக் கூடும்.
      ஜாக்கிரதையா இருங்க...பிஸி ஏரியா....நீங்க ஒராள்தான் இருக்கீங்க....கவனம்....சொல்லிவிட்டுக் கிளம்பினான்.  அதற்கு அடுத்த முறை இவன் அந்தக் கடைக்குப்  போயிருந்தபோது அங்கே ஒரு போர்டு தொங்கியது.
      “கொண்டு வரும் சாமான்களை இங்கே வைக்கவும்”
      “பேக்கை இப்டி வைக்கிறேன் சார்...” - சொல்லியவாறே அலுவலகத்திற்குக் கொண்டு போகும்  தோல்பையை நுழையும் இடத்தில் கீழே வைத்தான் இவன். தினசரி அங்கே நுழைந்து தலையைக் காட்டிவிட்டுத்தான் அலுவலகமே செல்வான்.
      சார்...சார்...நீங்க சும்மா அப்டியே உள்ளே போங்க... - சிரித்துக் கொண்டே சொன்னார் அவர்.
      ந்நோ...நோ....விதி முறைன்னா அது எல்லாருக்கும் பொதுதானே...‘! எனக்கு மட்டும் என்ன கன்செஷன்? நாளைக்கு எம்மேலேயே சந்தேகம் வந்திடுச்சின்னா?
      அவர் முகம் சட்டென்று சுருங்கியது. ஒரு வேளை சந்தேகச் சுருக்கமோ?
      நானும் அடிக்கடி கடைக்கு வர்றவன்...புத்தகம் வாங்குகிறவனாச்சே...அசிங்கம்தானே...! வேணாஞ்சாமி....! - அவர் தலை குனிந்து புன்னகைத்துக் கொண்டதைப் பார்த்தான்.
      அதற்கு அடுத்த வாரம் கடை அமைப்பிலேயே சில மாற்றங்களைச் செய்திருந்தார் அவர். தான் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்தே கடையின் எல்லாப் பகுதிகளும் நன்றாகத் தெரிவது போல்...தெளிவாய்ப் பார்ப்பது போல்....யார் சொல்லிக் கொடுத்தது இத்தனை கச்சிதமாய் வடிவமைக்க? - இவன் கேட்டான்.
      இவ்வளவு சிரமம் என்னத்துக்கு? உங்க முன்னாடி ஒரு டி.வி. வாங்கி வச்சு கனெக் ஷன் கொடுத்தாப் போதுமே...! இந்த நாலு டைரக் ஷனையும்...பிரிச்சு செட் பண்ணிட்டீங்கன்னு வச்சிக்குங்க...எவனும் தப்பிக்க முடியாதாக்கும்....கடைக்கு வர்றவங்க...புத்தகம் தேடுறபோது, எடுக்கிறபோது, திரும்ப வைக்கிறபோது, வலமும் இடமும் நகர்ற போது, எந்த திசைல திரும்பினாலும் உங்க முன்னாடி பளிச்சின்னு தெரியுமே...! கையும் களவுமாப் பிடிச்சிடலாமே...!
      அப்டி இருந்தா, சுதாரிச்சிடுவாங்க சார்.....! ஆள் அலெர்ட் ஆயிடுவாங்க....
      நல்லதுதானே...! உங்களுக்குத் தேவை புத்தகங்கள் திருடு போகாம இருக்கணும்...அவ்வளவுதானே...?
      அதுக்கெல்லாம் ஏது துட்டு சார்...! இந்தப் பாழாப் போன புத்தகங்களே மெது மெதுவாத்தான் நகருது....! இன்னும் அத வேறே கட்டிட்டு அழணுமாக்கும்...? இதுகள வித்து காசு பார்க்கிறதுக்குள்ள தாலி அந்து போகுது.....!
      இப்பத்தான் கண்காட்சியெல்லாம் நடத்துறாங்களே...அடிக்கடி...! மாவட்டத்துக்கு மாவட்டம் நடக்குதே...!
      அதுனாலதான் சார் கொஞ்சம் டெவலப்மென்ட்..ஆனாலும் அங்கேயும் ரொம்ப ஜாக்கிரதையாத்தான் இருக்க வேண்டிர்க்கு...கூட்டத்துல லவுட்டிட்டுப் போயிடுறாங்கல்ல....? இங்க விட அங்கதான் சார் திருடு ஜாஸ்தி....ஜனக் கூட்டம் திரள் திரளா வர்ற எடமுல்ல...? கண்ணுக்கு வௌக்கெண்ணைய் விட்டுட்டுப் பார்க்க வேண்டிர்க்கு...சார்...
      எந்த பிஸ்னஸானாலும் அதுலயும் சில கஷ்டங்கள் இருக்கத்தான் இருக்கு...இல்ல....? இது பிஸ்னஸா...சேவைல்ல....சர்வீஸ் சார் இது...சர்வீஸ்...!!!
      என்ன சர்வீசோ போங்க....! எங்கப்பா காலத்துலேர்ந்து பழகிப் போச்சு...விட முடில்ல....!
      ந்தப் புத்தகக் கடைக்காரர் சொன்னது பளீரென்று இப்பொழுது நினைவுக்கு வர, புத்தக அடுக்குகள் பகுதியிலிருந்து வெளியே வந்தான் இவன். வியர்த்து விறு விறுத்திருந்தது.
      யப்பாடி...என்ன ஒரு புழுக்கம்...என்னா ஒரு தூசி....? ரோட்டுப் புழுதி பூராவும் இங்கதான் அடையும் போல்ருக்கு....!
      டோக்கனைக் காண்பித்தவாறே “ஒரு புத்தகமும் எடுக்கலை மேடம்...” என்று சொல்லிவிட்டு, கீழே வைத்திருந்த தனது பேக்கை எடுத்துக் கொண்டான் இவன். அந்தப் பெண் தலையாட்டியது போலிருந்தது.
      ஒரு வாரம் கழிந்த பொழுதில் அந்த சனிக்கிழமையன்று வழக்கம்போல் இவன் நூலகத்திற்கு  வந்தபோது, அந்தப் பெண் நூலகர் புலம்பிக் கொண்டிருந்ததைக் கண்டான். முகத்தில் வருத்தத்தோடு எதிரே சிலர்.
      பார்த்தீங்களா சார்...இந்தப் புத்தகத்தை ரெண்டு மாசமாத் தேடிட்டிருக்கேன்...இந்த லைப்ரரில நான் சார்ஜ் எடுத்தபோது ஸ்டாக்குல இந்தப் புத்தகம் இல்லாததைக் கண்டு, ரிஜிஸ்டர்ல கையெழுத்துப் போடமாட்டேன்னு சொல்லிட்டேன். மத்த புத்தகங்களின் இருப்புக்குத்தான் கையெழுத்துப் போட்டேன். இப்போ பாருங்க கிடைச்சிருக்கு....
      சரியாப் பார்த்திருக்க மாட்டீங்க மேடம்...
      போன வார லீவு வரைக்கும் யாருக்குமே புத்தகம் கொடுக்கலியே! ஸ்டாக் டேக்கிங்தானே...அன்றைக்குக் கிடைக்காதது இன்னைக்குக் கிடைச்சிருக்கு பாருங்க...! யாரோ திருட்டுத் தனமா எடுத்திட்டுப் போயி, கமுக்கமாக் கொண்டு வந்து வச்சிருக்காங்க...என்ன அநியாயம் சார் இது? இங்க படிக்க வர்றவங்களை நம்பித்தானே நான் இருக்கேன்...இப்படிச் செய்தாங்கன்னா?
      எதிரே நின்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அவர்களே குற்றம் சாட்டப்பட்டவர்கள் போல் அமைதியாக நின்றார்கள்.
      எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கும்னு யார் கண்டது? யார் நல்லவங்க...யார் கெட்டவங்கன்னு நெத்தில எழுதியா ஒட்டியிருக்கு....லைப்ரரிக்கு வர்றவங்க ஓரளவுக்கு படிச்சவங்கதானே? ஒழுக்கம் உள்ளவங்கதான் நூலகத்துக்கு வருவாங்க...அப்படித்தானே நி்னைக்க வேண்டிர்க்கு...அவங்களே இப்படிச் செய்யலாமா? புத்தகம் சரஸ்வதியில்லையா? அதைப் போய்த் திருடலாமா? - தொடர்ந்து புலம்பியது அது.
      இவன்தான் அந்த இறுக்கமான சூழலைத் தளர்த்தினான். “பிச்சை புகினும் கற்கை நன்றேன்னு சொன்ன மாதிரி, திருடிப் புகினும் படித்தல் நன்றேன்னு செய்திட்டாங்களோ என்னவோ?  - அவனது அந்த நகைச்சுவைக்கு மெல்லிய சிரிப்பலை பரவத்தான் செய்தது.
      அப்படீன்னா, திருடினவன் அதை ஏன் சார் திரும்பக் கொண்டு வந்து வைக்கணும்...? - தைரியமாகக் கேட்டார் ஒருவர். சரிய்ய்ய்யான கேள்வி.....! என்றார் இன்னொருவர்.
      மனசாட்சி உறுத்தியிருக்கலாம். அந்தப் புத்தகம், அதைப் படிச்ச வாசனை, அதோட சக்தி அவரை உசுப்பி விட்டிருக்கலாம்....
      இத மாதிரி நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிக்கிறவங்க...திருடுறதுக்கு வாய்ப்பே இல்ல சார்....நான் நம்பவே மாட்டேன்...நீங்க சொல்றது  அந்தப் புத்தகத்தைக் களங்கப்படுத்துற மாதிரி இருக்கு...அப்புறம்  அவன் புத்தகம் படிக்கிறதுக்கு, அந்தப் பழக்கம் உள்ள ஆளா இருக்கிறதுக்கு என்னதான் அர்த்தம்? அந்தப் புத்தகத்துக்குத்தான் என்ன மதிப்பு? அத எழுதின ஆசிரியரையே சந்தேகப்பட்ட கதையால்ல போச்சு?
      நமக்கு மத்தியிலே ஒருத்தருக்கொருத்தர் இரவல் வாங்கிட்டுப் போகிற சொந்தப் புத்தகங்களையே எத்தனை பேர் திருப்பிக் கொடுக்கிறாங்க...? அது மாதிரிதான் இதுவும்....
      அதுவாவது போனாப் போகுதுன்னு விடலாம். இவங்களுக்கு ரெக்கவரில்ல வரும்...
      இந்தப் புத்தகம் நல்ல கருத்துள்ள, அறிவு பூர்வமான கட்டுரைத் தொகுப்பால்ல தெரியுது? அந்தப் புத்தகத்தை என் டோக்கனுக்குப் போட்டுக் கொடுங்க மேடம்...நான் படிச்சிட்டுத் தர்றேன்.....-வேறு யாரும் கேட்கத் தயங்கியது போலிருந்தது.
      திருடு போய்த் திரும்பி வந்த புத்தகத்தை நாம் ஏன் வாங்கிக் கொண்டு, வெட்டி வம்பு  என்று பயந்து விட்டார்களோ?. திருஷ்டி பட்ட புத்தகம் என்று நினைத்துக் கொண்டான் இவன்.
      ஏதேதோ மேலும் சில பதிவுகளைச் செய்து விட்டு, இருப்பை உறுதி செய்து கொண்டு, கால அவகாசத்திற்கான தேதியையும் குறிப்பிட்டு, இவனிடம் நீட்டியது அந்தப் பெண்மணி.
      நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்கிறவங்களை அடையாளம் கண்டு, மதிச்சு, புத்தகம் கொடுக்கிறதுக்கு ரொம்ப நன்றி மேடம்....
      நன்றி இருக்கட்டும் சார்....புத்தகம் பத்திரம்...உங்களுக்குத்தான் முதன் முதலாத் தர்றேன்...
      இல்லையே...நீங்க சொல்ற பிரகாரம் இது ரெண்டாவது முறைன்னுல்ல தெரியுது...? - எல்லோரும் சிரித்தனர். தொடர்ந்து இவன் சொன்னான்.
      அதெல்லாம் கச்சிதமா வந்து சேர்ந்திடும் மேடம்....இந்த லைப்ரரில பத்து வருஷமா மெம்பர் நான்...நீங்க இன்னொண்ணு கூடச் செய்யலாமே...இந்த மாதிரி விலையுயர்ந்த புத்தகங்களை வெளில கொடுக்கிறபோது, ஒரு தனி ரிஜிஸ்டர் போட்டு, பதிவு செஞ்சு, கையெழுத்து வாங்கிட்டுக் கூடக் கொடுக்கலாமே...! இன்னும் சேஃப்டி ஆச்சே...!
      அதெல்லாம் ஏற்கனவே நடைமுறைல இருக்கத்தான் இருக்கு..எங்களுக்குத் தெரியாதா? .அதையும் மீறித்தான் இது நடந்திருக்கு...! திருடுறபோது எங்கேயிருந்து பதியறது? ஸ்டாக் எடுக்கிறபோது “திருடு போனது”ன்னு வேணாப் பதியலாம். அம்மாள் நொந்து சொன்னதுபோல் இருந்தது.
      வெளியே வந்தான் இவன்.
      பஸ் ஸ்டாப்பை நோக்கி ஓரமாய்,மெல்ல நடந்து கொண்டே திரும்பவும் படிக்க வேண்டுமென்றிருந்த, அந்தக் கட்டுரை, அவன் மனதை மாற்றிய கட்டுரை இருந்த பக்கம் எது என்று பொருளடக்கத்தைப் பார்த்துப் புரட்டியவாறே போய்க் கொண்டிருந்தான்.
      அந்த நூலகத்தின் இரண்டாவது அலமாரி அடுக்கில் புதுப் புத்தகங்களின் வரிசையில், தங்கள் நண்பனை நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் உடனடியாகப் பிரிந்த வருத்தத்தில் மீதிப் புத்தகங்கள் அனைத்தும் சற்றே வரிசை குலைந்த நிலையில் தங்கள் உடல்களை நெகிழ்த்திச் சாய்த்துச் சரிந்து  கொண்டன.!!
                        ---------------------------------------------------------------------------
     
     
     
     
     
     

     
     



21 செப்டம்பர் 2019

அசோகமித்திரனின “அப்பாவின் சிநேகிதர்“ வாசிப்பனுபவம் - உஷாதீபன்


அசோகமித்திரனின  “அப்பாவின் சிநேகிதர்“                            வாசிப்பனுபவம்   - உஷாதீபன்         


தையின் முதல் வரியிலேயே ஆத்மார்த்தமான நெருக்கத்தையும் உறவையும் உணர்த்தி விடுகிறார். சக மனிதர்களை, இயற்கையை, பிற உயிர்களை என்று எல்லாவற்றையும்  நேசிக்கும் மனப் பக்குவம் கொண்டவர்களாலேயே இது சாத்தியம்
ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது. ஒரு காலத்தில்….வார்த்தையைக் கவனித்தீர்களா?  இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்று மக்களிடையே, ஒரே தெருக்காரர்களிடையேயும், பக்கத்து வீட்டுக்காரரிடமும் என்று ஏன் இந்தப் பிரிவு மனப்பான்மை, பொறாமை, துவேஷம் வந்தது என்று யோசித்து, வேதனை கொள்ள வைக்கிறது. கதையின் முதல் வரி இப்படிப் பல எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. படைப்பின் ஆன்ம பலம் அது. இலக்கிய அனுபவங்களைத் தருவது என்பது வேறு. நான் தருவது ஆழ்ந்த ரசனையின்பாற்பட்ட உள்ளுணர்வின் வியாபகங்களை. எழுத்தாளன் அதை உள்வாங்கித்தானே முதலில் பேனா பிடிக்கத் துணிகிறான்.
மூத்த தலைமுறை அப்படித்தான் இருந்தது. இன்றும் மீதமிருப்பவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடுதான் கதையின் முதல் வரி.
சங்கரனோட பிள்ளையா? இங்கே மெட்ராசுக்கு எப்போ வந்தே?
சையது மாமா….. –
ஜாதியோ, மதமோ எதுவும் குறுக்கே நிற்கவில்லை. சங்கரனுக்கு சையது…..என்பவர் மாமா. மனசு விட்டுப் பழகியாச்சு என்றால் அப்படித்தான். வீட்டிற்கு வந்து மாமி எப்டியிருக்கீங்க…என்று கேட்டு ஒரு வாய் தண்ணீர் குடித்தால், கையை நனைத்தால்….உறவாய் மனதுக்குள் நிலைத்துப் போவதுதான். நேசிப்பது, அன்பு செலுத்துவது, கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்பது, காலத்துக்கும் கூட நிற்பது  எல்லாமும் அங்கே ஸ்தாபிதம்.
இன்று இந்த மாமா என்ற வார்த்தைக்கு எத்தனையோ அர்த்தங்கள். எதிர்ப்படும் வயதில் பெரியவரெல்லாம் “அங்கிள்“.   உதட்டோடு நின்று விடும் வெறும் வார்த்தை. தமிழில் சொன்னால் மதிப்பில்லை. மாமா என்கிற மதிப்பு மிகுந்த உறவுமுறை கிடையாது. காலம் அப்படித்தான் ஆகிப்போய்க் கிடக்கிறது.
“அங்கிள்“ – வந்தவன் போனவனெல்லாம் இன்று அங்கிள்தான். கேட்பவன் சந்தோஷிக்கிறானா, மதிப்பாய் உணர்கிறானா என்பது பொருட்டில்லை. அப்படிச் சொல்லிச்  சொல்லியே ஒதுங்கி, ஒதுக்கி நிற்க வைத்து விடும் நடைமுறை. பாழாய்ப் போன பலவற்றுள் இதுவும் ஒன்று.
சையது மாமா…..!  -  இந்தப் பெயரும், அந்தக்  கனிவும் ஆச்சரியமும் கொண்ட கேட்பும் நமக்கு எவ்வளவு விஷயங்களை உணர்த்துகின்றன? அந்தப் படைப்பாளி எவ்வளவு மன முதிர்ச்சியடைந்த, பரிபக்குவமான மனிதராக இருக்க வேண்டும்? அப்படியான ஒருவரிடமிருந்துதானே இந்த வரிகள் வெளிப்படும்? மனிதர்கள் தெய்வ நிலையில் நின்றால் மட்டுமே இது சாத்தியம். மிகை அல்ல…சத்தியம்.
      அது அசோகமித்திரன்…இப்போது யோசியுங்கள். நான் மேற்சொன்னவை அவருக்கு அப்படியே பொருந்துகிறதா என்று.
      என்ன ஒரு எழுத்து?
      சங்கரன் நான்கு மாதங்களுக்கு முன்பு சையது மாமாவிடம் பேசியபேச்சு :-                  ”நீங்க எங்களை மோசம் பண்ணிட்டீங்க மாமா….நாங்க வீட்டைக் காலி செய்ய உங்க பேச்சைக் கேட்டு உங்களையே நம்பி வேறே எங்கேயும் தேடலை….இப்போ தெரிஞ்சிடுத்து…நீங்க பொய்யா அளந்திருக்கீங்கன்னு…நீங்க நன்னா இருக்க மாட்டீங்க மாமா…..”
      மோசம் பண்ணிட்டீங்க…. – என்ற இந்த வார்த்தைக்குரிய நிகழ்வு என்பது மிகச் சாதாரணமானதுதான். ஆனால் இந்தக் கதை எழுதப்பட்ட காலகட்டத்தை எண்ண வேண்டும். அந்தக் காலகட்டத்தில் அதற்கு முந்தைய எந்தக் காலகட்டத்தைச் சுட்டி அசோகமித்திரன் கதை சொல்கிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். 1990-கள். அப்போதும் அதற்கு முந்தைய கால வெளிகளிலும் மக்களிடையே நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும், பண்பும் பெருவாரியாகப் படிந்துக் கிடந்தது. அந்தக் குறிப்பிட்ட காலத்திய ஒரு நிகழ்வினைச் சொல்கையில் அப்போதைய மக்களின் பண்பாட்டு வெளி எந்நிலையில் வியாபித்திருந்தது என்பதை மனதில் வைத்து படைப்பாளி ஒரு படைப்பினைத் தர வேண்டும். அப்படித்தான் தர முடியும்.
      அப்பா செத்த ஊரே வேண்டாம் என்று ஐந்நூறு மைல் தள்ளியிருந்த இந்த இடத்தில் (மெட்ராஸ்) மீண்டும் அப்பாவின் ஒரு சிநேகிதர் சையது மாமா.       
      சொன்னவன் சின்னப் பையன்.  கேட்டவர் பெரிய மனிதன். வயதிலும், முதிர்ச்சியிலும். .நாராயணனை அப்படியே வாரிக் கட்டிக் கொள்கிறார் சையது. நீ அன்னைக்கு என்னை மோசக்காரன்னு சொல்லிட்டுப் போனப்புறம் எவ்வளவு தடவை உன்னை நினைச்சுண்டு அழுதேன் தெரியுமா? நான் ஏண்டா இந்த வயசிலே உன்னை மோசம் பண்ணப் போறேன்…? நானும் உங்கப்பனும் பள்ளிக்கூடத்திலே வெறும் சிநேகிதங்களாகவாடா இருந்தோம்? எங்களுக்கு உடம்புதான் ரெண்டே தவிர உயிரு ஒண்ணுதாண்டா….அவன் பெண்டாட்டி பிள்ளைகளுக்கு ஏதும் செய்ய முடியலையேன்னு எவ்வளவு தவிச்சிருப்பேன் தெரியுமா?
      வயது முதிர்ந்த இந்தப் பெரியவரின் சொற்கள் எனக்கு “புண் உமிழ் குருதி”யில் வரும் அந்தக் கிழவரையும் நினைவுபடுத்துகிறது. பஸ்ல அன்னைக்கு உன்னோட பேசினப்புறம் எவ்வளவு தடவை உன்னை நினைச்சுப் பார்த்திருக்கேன் தெரியுமா? உன்னையே நினைச்சிண்டிருந்த என்னை இப்படித் திருடன்னு சொல்லிக் கேவலப்படுத்திட்டியே….நான் உன் பணத்தை எடுக்கலைப்பா…. என்று சொல்லி வந்தவழியே  திரும்பியிருப்பார் அந்தப் பெரியவர். பண்பில் சிறந்த பெரியோர்கள்…எந்த நிலையிலும் அதிலிருந்து தவறுவதில்லை என்பதை அந்தக் காட்சி நமக்குப் புரிய வைக்கும்.
      ஆருயிர் நட்பாக இருந்த ஒருவர் துரோகம் செய்ய மாட்டார் என்பதற்கு இங்கே சையது மாமா சொல்லும் பதில்களே சான்று. சின்னப் பையன் என்னவோ பேசிட்டான் என்றுதான் நினைக்கிறார். அந்த வாஞ்சையிலேதான் சங்கரனோட பிள்ளையா…? என்ற அந்த முதல் கேள்வி. எவ்வளவு மன நெருக்கம் பாருங்கள். வளவளவென்று வார்த்தைகளைக் கோர்க்காமல், நறுக்குத் தெறித்தாற்போல் கேட்பதில் அத்தனை உள்ளர்த்தங்களும் படிந்து விடுகின்றனதானே…!
      “அம்மா, தம்பி, தங்கையெல்லாம் சௌக்கியமா? எங்கேடா இருக்கீங்க இப்போ? வாடா…என்னை உடனே வீட்டுக்கு அழைச்சிண்டு போடா….”
      இல்லே மாமா…நான் உங்களைப்பத்தி ரொம்ப மோசமா அம்மாகிட்டே சொல்லியிருக்கேன் மாமா….இப்போ வேணாம்…
      நீ சொன்னா என்னடா…நீ நேத்திப் பையன்…உனக்கு நல்லது எது, மோசம் எதுன்னு என்ன தெரியும்? சரி, போடா…உனக்கு இந்த சையது இனிமே எதுக்கு? எல்லாம் உங்க அப்பாவோட போச்சு…-திடீரென்று நடுரோடில் சையது தன் மார்பில் அடித்துக் கொள்கிறார். நான் அவ்வளவு இளப்பமாயிட்டேண்டா….நான் அவ்வளவு கிள்ளுக் கீரையாயிட்டேண்டா….
      அவருக்கு அந்தக் குடும்பத்துடனான மனநெருக்கம் இந்தச் செயலில் வெளிப்படுகிறது. நாராயணன் அவர் கைகளைப் பிடித்துக் கொள்கிறான்.
      வாங்க மாமா…வீட்டுக்குப் போவோம்…. – நாராயணன்.
      எதற்கு அவர்களுக்கு இத்தனை கோபம்?. ரொம்பச் சாதாரண விஷயம்தான். எங்கோ இருந்த ஒரு வீட்டைக் காண்பித்து, இது காலியாகப் போறதுடா… இந்த வீட்டையெல்லாம் பார்த்துக்கிற முன்ஷிகிட்டே சொல்லியிருக்கேன்…நீங்க கவலையே படவேண்டாம். அடுத்த மாசம் இங்கேயே வந்திடலாம்… என்று சொல்கிறார் சையது மாமா. அவர்கள் இருந்த வீட்டைக் காலி பண்ணும் நெருக்கடியால் இந்தத் தேவை. ஆனால் சையது மாமா சொன்ன மேற்சொன்னது நடக்காமல் போகிறது.
அப்படியெல்லாம் வீடு ஒண்ணும் காலியாகலை…தவறான தகவல்…சையது யாருன்னே தெரியாது என்கிறான் முன்ஷி. அவரையே நம்பியிருந்த இவர்களுக்கு அது அதிர்ச்சியாகிவிடுகிறது. வெட்டியாய் வாயளந்து கெடுத்து விட்டார் என்பதாய் நினைக்க வைத்து விடுகிறது. இதுதான் மோசம் பண்ணியதாகச் சொல்வது. அந்தக் கால கட்டத்தில் இம்மாதிரி ஒரு தவறுதலே மோசம் பண்ணியதாக நினைக்க வைக்கும் பண்பாட்டுச் சூழல். காரணம் மனிதர்கள் அத்தனைக்கத்தனை நேர்மையாளர்களாக, நம்பிக்கைக்குரியவர்களாக வாழ்ந்து கழித்த நாட்கள் அவை.
      நாராயணன் சையது மாமாவை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறானேயொழிய, அவன் மனதில் கேள்வி இருந்து கொண்டேயிருக்கிறது. ஏன் இந்த மனிதன் கண்ணில் விழுந்தோம்? நாம் போகும் ஊரிலெல்லாம் இந்த மனிதனுக்கு என்ன வேலை? எல்லாவற்றையும் விட்டொழித்துவிட்டு நிம்மதியாக இருக்கும்போது திடீரென்று இவன் எங்கே முளைத்தான்?
நாராயணனின் வயதையொத்த சிந்தனையை அங்கே படர விடுகிறார் அசோகமித்திரன். அம்மாவும் ஏமாற்றம் தாங்காமல் சையதை நிறைய வைதவள்தான். ஆனால் அன்று…..
      நம் குடும்பங்களில் ஆண்களுக்கு மத்தியில் ஏற்படும் உரசல்களை, அதன்  வெப்பத்தைத் தணித்து, ஒற்றுமையை மேம்படச் செய்பவர்கள் பெண்கள்தான். அதனால்தான் குடும்ப அமைப்புகள் சீரழியாமல் இன்னும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.     
அம்மா சமையலறையிலே இருக்கா போலிருக்கு….என்கிறான் நாராயணன்.
நான் உள்ளே வரலாமாடா? என்று தழைந்த குரலில் கேட்கிறார் சையது.
ஆபீசுக்குப் போகாமல் திரும்பியிருக்கும் மகனைப் பார்த்து “இன்னிலேருந்தே வேலையிலிருந்து நின்னுட்டியா? என்று அம்மா கேட்கிறாள். சையது நின்ற இடம் பகலிலும் இருட்டாக இருக்கிறது. யாரு? அம்மா கேட்க…
நான்தாம்மா….சையதும்மா…. – சையதே பேசுகிறார்.
அம்மா ஒரு கணம் திகைத்து நிற்கிறாள். அவள் வையப் போகிறாள் என்று நாராயணன் பதறிக் காத்திருக்க…..வருகிறது அந்தக் கேள்வி.
“உங்களையெல்லாம் விட்டுட்டு இவ்வளவு சீக்கிரம் போக உங்க சிநேகிதருக்கு எப்படி மனசு வந்தது?” – காலம் காயங்களை எப்படி ஆற்றி விடுகிறது பாருங்கள்.
துளியும் பகை என்று காட்டிக் கொள்ளாத இந்தக் கேள்வியைக் கவனித்தீர்களா? பக்குவப்பட்ட பெரியவர்கள்…என்றும் பெரியவர்கள்தான்….அதிலும் பெண்களின் முதிர்ச்சி சொல்லில் அடங்காதது.
நீ நேத்திப் பையன்…உனக்கு நல்லது எது, மோசம் எதுன்னு எப்படித் தெரியும்? என்று கொஞ்சம் முன்னால் நாராயணனிடம் சையது சொன்னாரே…அதைச் சற்று இங்கே நினைத்துப் பாருங்கள்.   அப்பாவின் சிநேகிதம் பற்றியும், சிநேகிதரைப் பற்றியும் அதனை மதிக்கத் தெரிந்த நாராயணன் அம்மாவின் மேற்கண்ட கேள்விபற்றியும் நாம் புரிந்து கொள்ள முடியுமே?.
முதிர்ந்த, பக்குவமான எழுத்து என்பது அசோகமித்திரனைப்போல் வேறு எவரிடமிருந்தேனும் இத்தனை துல்லியமாய் வெளிப்பட்டிருக்கிறதா? என் வாசிப்பு அனுபவத்தில்  எழுத்தாளர் ஆர்.சூடாமணியை நான் அவ்வாறு உணர்ந்திருக்கிறேன்.
                  ----------------------------------------------------------------------
     

                      


  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...