17 மார்ச் 2013

இந்திய ஞானம்–தேடல்கள், புரிதல்கள்–by ஜெயமோகன்

Jeyamohan Nagercoil's profile photo

மதிப்பிற்குரிய திரு ஜெ. , வணக்கம். தங்களின் இந்திய ஞானம் தேடல்கள், புரிதல்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அறிமுகத்திலேயே ஒரு சந்தேகம் வந்து விட்டது. சிவனை வழிபடுவது சைவம். அதற்குள் பல வழிபாடுகள் சேர்க்கப்பட்டன. அதேபோல் விஷ்ணுவை வழிபடுவது வைணவம். சக்தியை வழிபடுவது சாக்தேயம். முருகனை வழிபடுவது கௌமாரம். கணபதியை வழிபடுவது காணபத்யம். சூரியனை வழிபடுவது சௌரம். இவற்றில் சைவமும், வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தன. சாக்தம் கேரளத்திலும் வங்காளத்திலும் மட்டும் நீடித்தது. மற்ற மதங்களில் காணபத்யமும் கௌமாரமும் சைவத்தில் இணைந்தன. சௌரம் வைணவத்தில் கலந்தது என்றுள்ளீர்கள்.சூரியனை வழிபடுவது சௌரம் என்றால் அதனை சிவனை வழிபடும் சைவர்களும் அனுதினமும் செய்யத்தானே செய்கிறார்கள். சூரிய வழிபாடு சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் பொதுவான ஒன்றாக இருப்பதை நாம் காண்கிறோமே...! இதுபற்றி சற்று விளக்க முடியுமா?     - உஷாதீபன்

அன்புள்ளஉஷாதீபன்,

உங்கள் கேள்வி முக்கியமானது. ஏனென்றால் அதிலுள்ள சிக்கலுக்கு சரியாகப்பதில் சொல்லமுடியாது
தொல்பழங்காலத்தில் அறுவகை சமயங்கள் இருந்துள்ளன என்று நூல்கள் சொல்கின்றன. அந்த அறுவகை சமயங்களின் பட்டியலிலேயே சின்னச்சின்ன வேறுபாடுகள் உள்ளன
நாம் ஆறாம்நூற்றாண்டுமுதல்தான் ஓரளவேனும் தெளிவாக வரலாற்றை எழுதமுடிகிறது. பத்தாம்நூற்றாண்டுக்குப்பின்னர்தான் முக்கியமான கோயில்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றை வைத்து நம் வரலாற்றை எழுதும்போது மூன்று பெருமதங்களையே காண்கிறோம். மற்ற மூன்று மதங்களும் இவற்றுக்குள் கலந்துவிட்டன. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் சாக்தமும் சைவமும் ஒன்றாயின
நாம் நமக்குக்கிடைக்கும் ஆதாரங்களைக்கொண்டு பல ஊகங்களைச் செய்கிறோம். அதில் ஒன்றே சௌரம் வைணவத்தில் இணைந்திருக்கலாம் என்பது. காரணம் நடு இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் சூரியநாராயணர் ஆலயங்கள். தென்னிந்தியாவிலுள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடு.
ஆனால் சௌரத்தின் சில அம்சங்கள் சைவத்திலும் உள்ளன. உதாரணம் நவக்கிரக வழிபாடு. இதேபோல சௌரத்தின் பிற கூறுகள் எங்கெங்கே உள்ளன என ஆராய்வது பெரிய வேலை. அதிகம்பேர் செய்யாத பணி
அதேபோல சாக்தத்தின் செல்வாக்கு வைணவத்திலும் உண்டு என்பவர்கள் இருக்கிறார்கள். அதாவது ஸ்ரீதேவி பற்றிய வைணவ நம்பிக்கைகள் எல்லாம் சாக்த்ததில் இருந்து வந்தவை எனு சொல்கிறார்கள்
ஆனால் இவையெல்லாம் வரலாற்று ஊகங்களே. படிமங்களைக்கொண்டும் நூல்களைக்கொண்டும் இவை நடத்தப்படுகின்றன. திட்டவட்டமான முடிவுகள் அல்ல இவை
ஜெ

கருத்துகள் இல்லை:

பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில்   “கடைநிலை“  நாவல் அறிமுகம்