23 ஜூலை 2026

எழுத்தாளர் திரு பவா செல்லதுரையின் கதையாடல் மிகவும் ரசனைக்குரியது.  யூ.ட்யூப் வழி அவர் சொன்ன இலக்கியத்தரம் வாய்ந்த கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 50 சிறுகதைகளின் தொகுப்பு இது.

----------------------------------------------------------------------------------------------------------------------------




 

சிறுகதை                 உயிர் எழுத்து-ஜூலை 2026 இதழ் பிரசுரம்




“கலக்கல் கணினி”

            குப்பு முடிந்து அறையை விட்டு எல்லோரும் வெளியே வருவது தெரிந்தது.  ஒருவர் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. குழப்பமான மனநிலையிலேயே இருக்கையில் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டார் மானேஜர் மேகநாதன்.  

            விஸ்வம்…இப்படி வாங்க….

கணக்குப் பிரிவு எழுத்தர் அவர் எதிரே வந்து உட்கார்ந்தான்.

உங்களுக்கு எப்படி? ஓரளவுக்குப் புரிஞ்சிக்க முடிஞ்சிதா? -அவன் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டார். அலுவலகத்திலேயே குறைந்த வயதுள்ள பையன். சர்வீசுக்குப் புதியவன். ஆனால் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவன்.

ஒரு இளநிலை எழுத்தரைக் கொண்டு கணக்குப் பிரிவுல போட்டிருக்கீங்களே? சமாளிப்பாரா? – அலுவலர் அன்று கேட்ட கேள்வி இப்போதும் அவர் மனதில் ஓடிக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் விஸ்வத்தின் மீது ஒரு நம்பிக்கை. காரணம் அவனது சுறுசுறுப்பு. பரபரவென்று இயங்கக் கூடிய தன்மை. எதையும் அக்கறையாகக் கேட்டு, கற்றுக் கொள்ளும் ஆர்வம். அன்றாட வேலையை அன்றே முடித்து விட்டு இருக்கையை விட்டு எழும் ஒழுங்கு. யாரும் புதியவர்கள் என்பதால் மறுப்பதற்கில்லை. ஒதுக்குவதற்கில்லை.  வேலை செய்வதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதே முக்கியம். திறமைக்குத்தான் முதல் மரியாதை.

மேகநாதன் அப்படித்தான் தன் சர்வீசைக் கழித்திருக்கிறார். அவரை எனக்கு, எனக்கு என்று கேட்டு வாங்கிக் கொண்டார்கள் பலரும்.

அவர் ஒருத்தர் இருந்தால் போதுமுங்க…ஆபீசையே தூக்கிச் சுமப்பாரு… என்று பெருமை பேசினார்கள். அந்த நம்பிக்கையே அவரை உயர்த்தியது. ஸ்டெனோகிராபராய்ச் சேர்ந்த முதல் நாளிலேயே அவர் காட்டிய வேகம் அப்போதிருந்த அலுவலரை வியப்பு கொள்ள வைத்தது.

இனிமே மேகநாதன்தான் எனக்குப் பி.ஏ. என்று பணிமனையின் நடு உறாலுக்கு வந்து எல்லோரும் கேட்க உரக்க உரைத்தார் அதிகாரி. ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை. அவரின் பிற சொந்தக் காரியங்கள்தான் இவனுக்கு இடித்தது. அலுவலகக் காரில் காலையில் அவரது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் கொண்டு விட்டு வர வேண்டும் என்பதும், மாலை கூட்டி வந்து  வீட்டில் இறக்கி விட்டு மீள வேண்டுமென்பதும்தான். அது இவருக்கு அறவே பிடிக்கவில்லை.

காவல் துறையில் ஆர்டர்லி என்று ஒரு போஸ்ட் உண்டு. கேள்விப்பட்டிருக்கிறார் இவர்.  மேலதிகாரியின் வீட்டு வேலைக்காரனாய் இருந்து கொண்டு மனம் இணங்கிப் போனால் சிவனே என்று கிடப்பது. மார்க்கெட் போய்  காய்கறி வாங்கி வா என்று சொல்லவில்லை. அது ஒன்றுதான் மிச்சம்.

நான் கஷ்டப்பட்டுப் படிச்சு,  பப்ளிக் எக்ஸாம் தேர்வு எழுதி, கடல்ல முத்தெடுக்கிற மாதிரிப் பாஸ் பண்ணி இந்த அரசாங்க வேலைக்கு வந்திருக்கிறது இவர் வீட்டுக்கு சேவகம் பண்ணவா என்று மனதிற்குள் கொதித்தார். அந்த வயது அப்படி.  அது ஒரு நாள் பொங்கி வெடித்தது.

சார்…தப்பா நினைக்காதீங்க…ஆபீஸ் வேலை எவ்வளவு வேணாலும் சொல்லுங்க செய்றேன்…ஆனா வீட்டு வேலைகள்னு அனுப்பாதீங்க…அது என்னால முடியாது…. – என்று நேரடியாகவே சொல்லி விட்டார். சர்வீசுக்குப் புதியவன் அப்படிப் பேசியது எல்லோருக்குமே வியப்புதான்.

மறுநாள் அவருக்கான மாறுதல் ஆணை  டேபிளில் இருந்தது. முகம் பார்க்க இஷ்டமின்றி  வலுவிலே அலுவலர் முகாம்  சென்றிருப்பதும் புரிந்தது.  அன்றே என்னை ரிலீஃப் பண்ணிருங்க என்றார். அதற்கு மேல் அவர் மூஞ்சியில் முழிக்க இவருக்குத் தெம்பில்லை. எதற்கு வம்பு?  ரிலீப் ஆர்டர் சார்? என்ற போது .

இந்தோ…ரெடியா இருக்கு…என்று நீட்டினார் மேலாளர். ஆபீசிலேயே பலரும் தன் வெளியேற்றத்திற்காகக் காத்திருப்பதுபோல் தோன்றியது இ வருக்கு. வந்ததிலிருந்தே அந்த அலுவலகம் தன்னோடு ஒட்டாமல் இருப்பதை அப்போதுதான் நீக்கமறப் புரிந்து கொண்டார். ரொம்பவும் சின்சியராக இருப்பவர்களைப் பலருக்கும் பிடிப்பதில்லை. இதுதான் யதார்த்தம்.

மாறுதல் போட்ட இடம் ஐந்து கி.மீ. தள்ளி இருந்தது. அறையிலிருந்து நடந்து வந்து  பிறகு நடந்தே மீளும் வேலை இனி ஆகாது என்று புரிந்து கொண்டார். ஊரிலிருந்த சைக்கிளை பஸ்ஸின் டாப்பில் ஏற்றிக் கொண்டு வந்து இறக்கினார். அதில் புதிய அலுவலகத்திற்குப் போவதும் வருவதும் அவருக்கு ஆனந்தமாய் இருந்தது.

இம்மாதிரி அலுவலரின் சொந்த வேலைத் தொல்லையெல்லாம் அங்கு இல்லை என்பது மனதுக்குப் பிடித்திருந்தது. ஒரு வேளை இவனுக்கு ஏற்ற இடம் இதுதான் என்றே ஒதுக்கிவிட்டார்களோ என்றே நினைத்துத் திருப்திப் பட்டுக் கொண்டார். தினசரி ஆபீஸ் வேலையை மனதாரப் பார்க்க, நிம்மதியாய்த் திரும்பி வர என்று நாட்கள் கடந்தன.  வருடங்களும் கடக்கத்தான் செய்தன. அதே நகரத்தின் வேறு சில அலுவலகங்களுக்கும் மூன்றாண்டு இடைவெளியில், ஓராண்டு அவசரத் தேவையில், ஆட்கள் பற்றாக் குறையில் என்று மாறுதல்களைச் சந்தித்தார். பலருக்கும் பிடித்திருப்பதாய் எனக்கு, எனக்கு என்று தன் பெயர் சொல்லியே அலுவலர்கள் தன்னைக் கேட்டு வாங்கிக் கொண்டதைப் பெருமையாய்த்தான் நினைத்துக் கொண்டார் மேகநாதன். தன்னை அவசரத் தேவைக்கு என்றே ஒதுக்கி விட்டார்களோ என்றும் தோன்றி உறுத்தத்தான் செய்தது.

அப்படியான சந்தர்ப்பத்தில்தான் சொந்த ஊருக்கு மாறுதலும் வந்தது. ஒரு குறிப்பிட்ட சங்கத்தின் முயற்சியில்தான் அதுவும் நடந்தேறியது. அதன் பல்வேறு பணியாளர் நல நடவடிக்கைகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.

யாருக்கு வேணாலும் டிரான்ஸ்பர் வரும். ஆனா அந்தாளுக்கு மட்டும் வராது. ஏன்னா செல்லப்பிள்ளை அவரு….என்பார்கள். என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும் என்று வாளாவிருந்தார். அவர்பாட்டுக்குத் தன் கடமையில் கண்ணாயிருந்தார். அதுதானே அவரை இன்றுவரை காப்பாற்றியிருக்கிறது.

அப்படித் தன்னைப்போல், தன் அடையாளமாகவே ஒருவன் இப்போது வந்து வாய்த்திருக்கிறான் என்றால் அது விஸ்வமூர்த்திதான். அவனை விடக் கூடாது. இந்த அலுவலகத்திலேயே இருத்தி நிறுத்தி விட வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டார்.

ணினிப் பயிற்சி வகுப்புகளில் எல்லோரும் முழித்துக் கொண்டிருந்தா்கள்.. Data Operator பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருந்தன. அரசின் சிக்கன நடவடிக்கைகளில் அதுவும் மாட்டிக் கொண்டு முழித்தது.  பதிலாக பணியில் இருப்பவர்களுக்கே பயிற்சி அளிப்பது என்பதான நடவடிக்கைகள் கிளம்பியிருந்தன. அதுவும் சரிதானே…ஒருத்தரை மட்டும் அமர்த்தி அவரிடமே எல்லோரும் கொண்டு சுமத்துவதற்குப் பதில் பலரும் கற்றுக் கொண்டால் அவரவர் பிரிவுப் பணியை அவரவரே செய்து கொள்வார்களே…! காலத்தின் கட்டாயம் கணினி இயக்கம் அறிதல் என்றாகி விட்டது.

என்ன விஸ்வம்…கம்ப்யூட்டர் ட்ரெயினிங் எப்படியிருக்கு? பிடிச்சிருந்ததா? புரிஞ்சிதா முதல்ல…? என்று ஆரம்பித்தார் மேகநாதன்.

ஒண்ணும் பிரச்னையில்ல சார்….கத்துக்கிடலாம். …என்றான்.  சமத்து என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

ஒரு வாரம்தான் பயிற்சி…பிறகு சென்னைக்குப் போயிடுவாங்க…அதுக்குள்ளே எவ்வளவு கத்துக்க முடியுமோ அவ்வளவு கத்துக்கிடுங்க….ஏன்னா நீங்கதான் அக்கௌன்ட் செக் ஷன்ல இருக்கீங்க…உங்களுக்குத்தான் அடிக்கடி எக்ஸெல்ல ஸ்டேட்மென்ட் அடிக்க வேண்டி வரும். அத்தோட லெட்டர் கரஸ்பான்டென்ஸ். மாதா மாதம் இனிமே பே பில்களும் பிரின்ட் அவுட்லதான் வரணும்…கைல எழுதக் கூடாதுன்னு டிரஷரில இருந்து ஆர்டர் வந்திடுச்சு…ஒன்ஸ் மொத்த பே.பில்லையும் சார்ட் அவுட் பண்ணிட்டம்னா பர்மனென்ட் ஃபைலா வச்சு… பிடித்தங்களை மட்டும் தவணைகளோட மாத்திப் போட்டாப் போதும்தானே…ஆட்டோமேடிக்கா நெட் எமௌன்ட் மாறிக்கும்…யாருக்காச்சும் இன்கிரிமென்ட் வரும்போது ஒரு மாற்றம் வரும்…மத்தப்படி ஆஸ் இடீஸ்…ஸ்டேட்மென்ட்தான்னு நினைக்கிறேன்….நான் சொல்றது புரியுதா உங்களுக்கு…..? அக்கறையோடு கேட்டார் மேகநாதன்.

ஓ.கே.சார் ஐ வில் ட்ரை மை பெஸ்ட்…- -அவனின் இந்த பதில் மிகவும் பிடித்திருந்தது இவருக்கு. இளைய தலைமுறை…அறிந்து கொள்வதில் ஆர்வம். அப்படியாட்கள்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். இந்தப் பையனுக்கு எதையுமே மறுத்துப் பேசத் தெரியாதோ?

கேட்கிறபோது புரிஞ்சமாதிரி இருந்தது. இப்ப என்னடான்னா எல்லாமும் மறந்து போச்சு….குறிச்சு வச்சதெல்லாம் என்னன்னே தெரியல…தலையும் புரியல வாலும் புரியல என்றார்கள் பலரும்.  நமக்கு நாமே வீட்டுல ஒரு தனி கம்ப்யூட்டர் வாங்கி வச்சிட்டு செய்து பார்த்தாத்தான் புரியும் போல்ருக்கு. அதுக்கும் வீட்ல யாராச்சும்  கணினி படிச்சவங்க இருக்கணும். சந்தேகம் வந்தா சொல்லத் தெரியணும்.

இவுங்க ஒரு வாரத்துக்குப் பாடம் நடத்திட்டு எனக்கென்னன்னு போயிடுவாங்க…கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வார்த்தையும் எத்தனை நாளைக்கு? என்றார்கள். அது சரியில்லை, இது சரியில்ல என்று சொல்வதில் மன்னர்கள். அந்த கவனத்தைக் கற்றுக்  கொள்வதில் செலுத்தலாமே என்கிற முனைப்பு எவரிடமும் இல்லை.

புரிந்து  கொள்ளும் ஆர்வத்தை விட விட்டு விலகுவது எப்படி என்பதற்கே பலரும்  கச்சை கட்டிக் கொண்டு பேசுவதாகத தோன்றியது. எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்றால் பொறுப்பு விட்டது பாருங்கள். அதற்குத்தான் பலரும் முனைந்து கொண்டிருந்தார்கள்.

பக்கத்து ஆபீஸ் முதற்கொண்டு வரவழைச்சு…முப்பது நாப்பது பேரை அமர்த்தி பாடம் நடத்தினா…எங்கிருந்து சார் புரியும்? பணம் கட்டி வெளில படிச்சாலே சட்டுன்னு மண்டைல ஏறாது…இதுக்கு பேசாம அந்தப் போஸ்ட்டை ஒரு ஆளப் போட்டு நிரப்பிட்டுப் போயிடலாம். அவர்ட்டக் கொடுத்திட்டம்னா பொறுப்பு விட்டது. அனுப்புறதும் அனுப்பாததும், டிலே பண்றதும்னு எல்லாமும் அங்க போயிடும் பாருங்க…நாம நம்ம செக் ஷன் வேலையைப் பார்க்கலாம்.

ஃபைலப் பார்க்கிறதா, இதோட மன்னாடுறதா? இந்த வேலைக்கென்ன கூடவா  சம்பளம் தரப் போறாங்க….-பணியாளர்களின் மனநிலை இவரை வியக்க வைத்தது.

ரெண்டு மாசத்துக்கு நானே பே பில் போடுறேன். அதுக்குள்ளயும் கத்துக்கணும். மூணாவது மாசம் நீங்கதான் செய்தாகணும். இது நானா உங்களுக்குக் கொடுக்கிற சலுகை. மானேஜரான எனக்கு செய்யணும்ங்கிற அவசியமில்லை.எல்லாத்தையும் இருபது வருஷம் செய்திட்டுத்தான் வந்திருக்கேன்.  நீங்க செய்றதைச் சரிபார்க்கிறதும், அனுப்புறதும், உங்க எல்லாரையும் வேலை வாங்குறதும்தான் என்னோட வேலை.! போய்க் கத்துக்கிற வழியைப் பாருங்க….

இது பக்கத்து ஆபீஸ் உதவியாளருக்கு அவரின் மேலாளர் சொன்ன அறிவுரை. இதற்காகவா ஒருவன் வேலையை விட்டுப் போவான்?

அவர் வி.ஆர்.எஸ். கொடுத்திட்டாருங்க… - இப்படித்தான் செய்தி வந்தது. இரு அல்லது ஓடு….-ஆள விரட்டிட்டீங்களே சார்….என்றார்கள் அவரிடம்.

நான் எங்க விரட்டினேன். அவரா பயந்திட்டுல்ல ஓடுறாரு….கம்ப்யூட்டர் கத்துக்கப் பயந்திட்டு எவனாவது வேலையே வேண்டாம்னு விட்டு நழுவுவானா? முட்டாள்….என்றார் அந்த மேலாளர்.

இவர்களையெல்லாம் ஒப்பிடும்போது விஸ்வம் எத்தனை ஒழுங்கான பையன். அவனிடமிருந்து ஒரு சிணுங்கல், ஒரு தடங்கல், ஒரு முனகல் என்று எதுவும் வரவில்லையே? முயற்சிக்கிறேன் என்று முனைப்போடு நிற்கிறானே?

விஸ்வம்…இந்த ஸ்டேட்மென்ட் இன்னைக்கே மெயில் பண்ணியாகணும்…சாயங்காலத்துக்குள்ள கன்சாலிடேட் பண்ணி செக்ரடேரியட் அனுப்பணுமாம். சென்னைலர்ந்து ஃபோன்….- என்று சொல்லி அவன் டேபிளில் வைத்து விட்டுப் போனார்கள்.

நான் என் செக் ஷன் ஒர்க்கைப் பார்க்கிறதா இல்ல டைப் அடிக்கிற வேலையைப் பார்க்கிறதா? பே. பில்லை இன்னைக்கே முடிச்சாகணும். நாளைக்கு டிரஷரிக்கு சப்மிட் பண்ணனும்…பிறகுதான் மத்த வேலைகள்…-முதல் முறையாக  அவனிடமிருந்து இப்படிப் பதில் வந்தது. ஓவராய் ஒருவனை நெருக்கினால் அவனும் என்னதான் பண்ணுவான்?

அடுத்தடுத்து அவன் ஒவ்வொன்றுக்கும் இப்படியான  பதில் சொன்னது  யார் காதிலும் ஏறவில்லை. போதாக் குறைக்கு அலுவலரின் காதுக்கு அது போகும் என்று மேகநாதனும் எதிர்பார்க்கவில்லை. பிரச்னை கொஞ்சம் பெரிதாகிறது என்று நினைத்துக் கொண்டார். ஆனால் அது உடனேயே வெடித்து விட்டது என்பதுதான் உண்மை.

விஸ்வம்…ரொம்ப முக்கியமானதைத் தவிர்க்க முடியாது. முடிச்சுக் கொடுத்திடுங்க…-என்றார் இவரும் அவரின் பங்குக்கு. எதிர்பார்த்தது போலவே மறுப்பு வந்தது அவனிடமிருந்து.

ஆபீஸ்லயே நான் ஒருத்தன்தான் இருக்கேனா சார்…வேறே யாராச்சும் கம்ப்யூட்டர் முன்னால போய் உட்கார்றாங்களா பாருங்க…! தெரிஞ்சிருந்தும் தெரியாத மாதிரிக் கிடக்காங்க…தெரிஞ்ச மாதிரிக் காட்டிக்கிட்டா எங்க அத்தனையும் தன் தலைல விழுந்திடுமோன்னு கமுக்கமா இருக்காங்க….ஒண்ணும் புரியவேயில்ல…ன்னு டபாய்க்கிறாங்க…செய்து பார்த்தாத்தான சார் படிப்படியா எல்லாம் சரியாகும். சந்தேகங்களும் அப்பத்தான சார் தீரும்? தொடவே மாட்டேன்னா எப்படி? நான் எல்லாருக்கும் ஜூனியர்ங்கிறதால எத்தனையைத்தான் சுமக்கிறது?

…புரியுது…புரியுது…..கொஞ்சம் பொறுத்துக்குங்க…ஏதாச்சும் செய்வோம்…-பொறுமையாகவே பதில் சொன்னார் மேகநாதன். அப்போதைக்கு அவனை விட்டால் வேறு வழியில்லை என்று பதை பதைத்தது அவர் மனம்.

இல்ல சார்…மன்னிச்சிருங்க…எல்லாத்தையும் நான் ஒருவனே கட்டிச் சுமக்க முடியாது…என் தலைலயே எல்லாமும் விடியுது….போதாக் குறைக்கு பக்கத்து ஆபீஸ்காரங்க வேறே வந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க…ஒண்ணு முழுக்க முழுக்கக் கம்ப்யூட்டர் ஒர்க் பார்க்கிறேன். இல்லன்னா செக் ஷன் ஒர்க் பார்க்கிறேன்…ரெண்டையும் சேர்த்து என்னால சுமக்க முடியாது சார்…-முதலும் முடிவுமாகச் சொல்லித் தீர்த்து விட்டான் விஸ்வம். சாது மிரண்டால்…என்று நினைத்து பிரமித்தார் மேகநாதன்.

என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார். எப்படியோ வேலை நடந்தால் சரி என்று வாளாவிருந்தார் அலுவலர்.  ரொம்பவும் தீவிரமாக யோசித்த போது ஒரு தீர்வு கிடைத்தது போலிருந்தது மேகநாதனுக்கு.

அன்றுதான் மேலிடத்திலிருந்து தகவல் வந்திருந்தது. தொலைபேசி வழித் தகவல்தான் என்றாலும் திருப்தி தரக் கூடியதாக இருந்தது. துறையின் அனைத்து மாவட்டத் தலைமை அலுவலகங்களுக்கும் ஒரு டாட்டா ஆப்பரேட்டர் போஸ்ட் சாங்ஷன் ஆகியிருந்தது என்பதுதான் அந்தச் சந்தோஷமான செய்தி.

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு  ஆள் கேட்டு, இன்டர்வியூ வைத்து ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும் பணி நிறைவடைவதற்கே எப்படியும் ஆறு மாதங்களுக்குக் குறையாமல் ஆகிவிடுமே என்று யோசனையில் ஆழ்ந்தார் மேகநாதன்.

அலுவலரிடம் இதுபற்றி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறைக்குள் போய் எதிரில் அமர்ந்தார்.

ரொம்ப சிம்பிள்….விஸ்வத்துகிட்ட இருக்கிற அக்கெள்ன்ட்ஸ் பிரிவு வேலைகளை எஸ்டாபிளிஷ்மென்ட் செக் ஷனோட அட்டாச் பண்ணி ஒரு ஆபீஸ் ஆர்டர் போட்ருங்க…இப்போதைக்கு ஓடட்டும்….கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போஸ்ட் வந்தவுடனே பழையபடி பிரிச்சிக்கலாம். அந்தப் பையனை ஃபுல் அன்ட் ஃபுல் கம்ப்யூட்டர் ஒர்க் பார்க்க ஒதுக்கிடுங்க….இன்னைக்கே ஒரு ஆபீஸ் ஆர்டர் இஷ்யூ பண்ணுங்க…கையெழுத்துப் போட்டுட்டு கேம்ப் கிளம்பறேன்…-அவரின் அவசரம் புரிந்தது மேகநாதனுக்கு.

விஸ்வத்திற்கு விடிவு கிடைத்தது.

 மறு நாள் -

சார்…ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கு…!  - என்றவாறே போஸ்ட்மேனை அனுப்பி விட்டு தபாலோடு வந்து நின்ற பியூன் பாலகுருவை ஏறிட்டுப் பார்த்து…இதென்னய்யா புது வம்பு? என்றவாறே வாங்கிப் பிரித்தார் மேகநாதன்.

பணிக்குழுப் பிரிவோடு கணக்குப் பிரிவையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்ற அலுவலக ஆணையை முதல் நாள் பெற்றுக் கொண்டு சென்ற  அந்தப் பிரிவுப் பெண்மணி பரமேஸ்வரி..யாரிடமும் ஒரு வார்த்தை சொல்லாமலும், மேகநாதனுடன் எதுவும் விவாதிக்காமலும், அன்றிலிருந்து மருத்துவ விடுப்பில் சென்றதுதான் எவரும் எதிர்பார்க்காத பேரிடியாக இருந்தது.  AI வந்து கலக்கிக்கிட்டிருக்கு. அப்டியும் கவர்ன்மென்ட் ஆபீஸ்களில் இன்னமும் இதுதான் நிலைமை. நினைத்துப் பார்த்து நொந்து கொண்டார்.

கையில் அந்த மருத்துவச் சான்றிதழ் இணைப்போடு கூடிய விடுப்பு விண்ணப்பத்தைப் பிடித்துக் கொண்டு செய்வதறியாது முகம் வெளிறிப் போய் அமர்ந்திருந்தார் மேகநாதன்.

                                    ---------------------------------------

 

 

சிறுகதை    கணையாழி“26-ஜூலை 2026 இதழ்                                             “சராசரிகள்”          





நாமெல்லாம் மிடில் கிளாஸ்தானே, பிறகென்ன? – என்றார் விநாயகம்.

            அதற்கு என்ன அர்த்தம் என்று சந்தியா புரியாமல் பார்ப்பதுபோலிருந்தது இவருக்கு. ஒரு வேளை துவக்கின நேரம் சரியில்லையோ?. தன் அம்மாவைக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறான் அவன். அவளது கணவன் பிரபாகரன். அது சமயம் இந்தப் பெண் வந்து நிற்கிறது.

            அப்பா…பேசுங்கப்பா…! யாருமே என்னோட பேச மாட்டேங்கிறீங்க… … மனசுக்குக் கஷ்டமாயிருக்கு…

            அந்தக் கடைசி வார்த்தைதான் இவருக்கு ஆச்சரியமாயிருந்தது. அப்படியும் ஒரு உணர்ச்சி பாவம் இந்தப் பெண்ணிடம் இருக்கிறதா என்ன? மனசுக்குக் கஷ்டமாயிருக்காமே? அதுவும் நான் பேசாம இருக்கிறதுனால என்கிறதே? அப்படியானால் மற்றவர்கள் எப்படியிருந்தாலும் பரவாயில்லையா? அதில் சம்மதமா? என்ன மாதிரி மனநிலை இது? எல்லாரும் சகஜமா, சிநேகமா, அன்பாப் பேசிட்டு இருக்கிறதுக்குத்தானே குடும்பம்?

            எல்லோரோடும் சுமுக பாவத்துடன் இருந்து கழிப்பதற்குத்தானே இந்த வீட்டுக்கு  மருமகளாய் வந்து சேர்ந்திருக்கிறது? கல்யாணம் ஆவதற்கு முன் பிறந்த வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? புகுந்த வீடுதானே ஆயுள் முழுக்க?  சாதாரணமாய் அது புழங்க வேண்டியதுதானே?

            ஒருவேளை இப்படியிப்படி இருக்கணும் என்று சொல்லிக் கொடுக்கவேயில்லையோ?  பக்குவமாய் வளர்த்திருந்தால், அது இயங்குதலில் தெரியுமே? நீ மகாராணி…உனக்கு எல்லாமும் தானே கிடைக்கும் என்று ஏத்திவிட்டு அனுப்பியிருப்பார்களோ? அதை நம்பிக்கொண்டு இது கெத்துக் காண்பிக்கிறதோ?

            இயக்கமே இல்லையே? பிறகு எங்கிருந்து இயங்குவது? – நினைத்துப் பார்த்து நொந்து கொண்டார் விநாயகம்.  இனி இது தன் வீடு என்கிற எண்ணமே வந்த மாதிரித் தெரியவில்லையே இந்தப் பெண்ணுக்கு?

            இதென்னங்க, தினமும் இப்படிப் பத்துக்கும் பதினொண்ணுக்கும் எழுந்திரிக்குது…? என்றாள் சாம்பவி. அவள் பாடு அவளுக்கு.

            இதத்தான் நான் அன்னைக்கே சொன்னேன் கவனிச்சு. நீ  சும்மாயிருங்கன்னு என் வாயை அடக்கிட்டே…! ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் வேலைன்னு அந்தாள் வேறே சப்பைக்கட்டுக் கட்டினான். ஆனா தினமுமே இப்படித்தான்னு இப்பத்தானே தெரியுது? நமக்கு புத்தியில்லாமப் போச்சு. தள்ளி விட்டுட்டான். தப்பிச்சிட்டான். நாம மாட்டிக்கிட்டோம்…!  நமக்குத்தான் அறிவில்லை…!-உள்ளுக்குள் நொந்து கொண்டார் விநாயகம்.

            காலா காலத்துல படுக்கையை விட்டு எழுந்திரிச்சு, குளிச்சு…சாமி கும்பிட்டு…ஏதாச்சும் வேலைகளைச் செய்வோம், அல்லது வேலைல உதவியாவாவது இருப்போம்ங்கிற சிந்தனையே இல்லையே இந்தப் பொண்ணுகிட்ட…? இத வச்சிக்கிட்டு எப்படிச் சமாளிக்கப் போறான் நம்ம பையன்? – அழாத குறையாகக் கேட்டாள் சாம்பவி. மலைபோல் நினைத்து மறுகுகிறாளோ என்று தோன்றியது விநாயகத்திற்கு.

            அதன் இருப்பு அலுத்துவிட்டது எல்லாருக்கும். இதென்ன அட்டச் சோம்பேறியா ஒரு பொம்பள? சரியான சண்டிமாடு போல்ருக்கே? சண்டி மாடா – நொண்டி மாடா? வண்டி மாடா மாத்த முடியுமா, முடியாதா?  புகுந்த வீட்டுல ஒரு பொண்ணு இப்படியா இருக்கும்? சுறுசுறுப்பா இயங்காதோ? நேரடியாய் எதுவும் சொன்னால் சண்டை வந்து விடுமோ என்று வாய் மூடி, தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இயங்கிக் கொண்டிருந்தாள் சாம்பவி. அதை அமைதியாய் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார் இவர். தன்னால் சண்டை வேண்டாம் என்ற பாதுகாப்பு உணர்வு.

            மலை அசைஞ்சாலும் அசையும், இது அசையாது போல்ருக்கே…? என்று நினைத்தார். கலகலவென்ற பேச்சுக் கூட இல்லை. என்னத்தக் கலகல? சாதாரணப் பேச்சே இல்லையே…அப்புறம் எங்கிருந்து கலகலக்கிறது? இப்போது என்னடாவென்றால் யாருமே தன்னோடு பேசுவதில்லை என்று வந்து நிற்கிறது. மிடில் கிளாஸ்தானேன்னு தான் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்! திமிறாய் இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டு கேட்டு வைத்தார். ஒரு வேளை ஆமாம் அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறதோ? எல்லாரும் என்னைத் தாங்கணும்…அப்பத்தான் போனாப் போறதுன்னு ஏதாச்சும் செய்வேனாக்கும்!...-இந்த மாதிரி ஏதேனும் அசட்டு நினைப்பில் திளைக்கிறதோ? அல்லது  அப்பன்காரன் அப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறானா? அதை நம்பிக்கொண்டு வளைய வருகிறதோ? அசட்டுப் பெண்…!

            பேசினவரையில் என்ன செய்திருக்கிறது இது? என்று யோசித்தார். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதுமில்லை என்றே தோன்றியது. ஏனென்றால் தனக்கான காரியத்தைத் தானே செய்து கொள்வதே பெரிய காரியமாய்த் தெரிகிறதே?

            சாவகாசமாய் எழுந்து, சாவகாசமாய்ப் பல்தேய்த்து, சாவகாசமாய்க் காப்பி குடித்து…ஒரு வேளை என் காரியத்தை நானே பார்த்துப்பேன் என்று பெருமையாக நினைக்கிறதோ? இதென்ன அபத்தம்? இதுக்கு ஏதாச்சும் வேலை கீலை செய்யத் தெரியுமா தெரியாதா? உட்கார்த்தி வச்சுத் திங்கப் பழக்கி, அனுப்பி விட்டுட்டாங்களோ? திங்குறதத் தவிர, தூங்குறதத் தவிர…வேறேதும் செய்யாதோ? அப்பப்போ தேர் அசைஞ்ச மாதிரி அசைஞ்சாப் போதும்னு நினைக்குதோ?

            ரு மண்ணும் தெரியாது போல்ருக்குப்பா….அம்மாவும் நீங்களும் பேசாம என்கூடவே இருங்க…தனிக்குடித்தனம்லாம் வேண்டாம். தனியாப் போயி நான்தான் கஷ்டப்படணும். இது ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாது…எப்படித்தான் காலம்பூராவும் இவள வச்சு ஓட்டப் போறேனோ? கட்டி மாரடிக்க வேண்டிதான்…தலையெழுத்து…!

            அப்டியெல்லாம் வீணாக் கற்பனை பண்ணிக்காதே…பொறுப்பா சொல்லிக் கொடுக்காம இருந்திருப்பாங்களா? நீயா எதுக்கு அலட்டிக்கிறே? தனக்குன்னு பொறுப்பு வந்தா எல்லாம் தானா சரியாகும்…கடமையுணர்ச்சி தானே வந்திடும்.

            அப்படித்தாம்ப்பா…எந்த நல்லதும் சொல்லித் தரலை இவளுக்கு. தொட்டதுக்கெல்லாம் எதிர்த்துப் பேசச் சொல்லிக் கொடுத்திருக்காங்க…நல்லா வாய் கிழியப் பேசுறா…பெரிய புத்திசாலிங்கிற நினைப்பு போல…பெண்ணுரிமை, சம உரிமைன்னுட்டுத் திரியறாங்கல்ல…அந்தக் கேசு….அவ அப்பங்காரன் பேசுற வார்த்தைகள்லர்ந்து நானாப் புரிஞ்சிக்கிட்டேன். அவன் ஒரு முழுக் கிறுக்கன்…இது ஒரு அரைக் கிறுக்கு …! அவர் சொல்றதை, சொல்லிக் குடுக்கிறதை அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிக்கிறா!…இவளுக்கா சிந்திக்கிற மூளை இல்லை…!!.

            டே…டேய்…என்னடா இது நீ பாட்டுக்குப் பேசிட்டே போறே? அவ காதுல விழுகப் போகுது…அப்புறம் பெரிய சண்டையாயிடும்…

            ஆகட்டும்…அதத்தான் எப்பன்னு நானும் எதிர்பார்த்திட்டிருக்கேன். வெளுத்துக் கட்டிப்பிடுவேன்…தொம்பங் கூத்தாடி மாதிரி மனசுக்குத் தோணினதையெல்லாம் இஷ்டத்துக்கு அந்தாள் பேசுவான் போலிருக்கு…இது அதையெல்லாம் உண்மைன்னு நம்பிக்கிடுது..இவளுக்கா எந்த யோசனையம் இல்லை….மழுமட்டை…

            அதான் அவுரு இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கிறதில்லையா? ஏற்கனவே அர்ச்சனையெல்லாம் ஆயிடுச்சு போல்ருக்கே நீ சொல்றதப் பார்த்தா? ஏண்டா இப்படி எடுத்த எடுப்புல பகைச்சிக்கிறே? மனசு பொறுக்காமல் கேட்டார் விநாயகம்.

            அவுரு ஒரு கூறாவே பேச மாட்டேங்கிறார்ப்பா…எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன் அவர்ட்ட….வாயெடுத்தாலே தன் பொண்ணைப் பெருமையாப் பீத்திக்கிறார். அப்படியாக்கும் இப்படியாக்கும்னு வாய்ப்பந்தல் போடுறார். பொறுப்பா, மரியாதையா, தன்னடக்கத்தோட ரெண்டு வார்த்தை பேசத் தெரில அவளுக்கு…இதுல பெருமை வேற…ஓட்டப் பெருமை…மட்டு மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பா போலிருக்கு?

            போய்யா…நீயே ஒரு வெத்து வேட்டு…உனக்கெதுக்கு இந்த வாய்? ன்னு சொல்லிட்டேன்.

            அடப்பாவி…அப்டியே பேசிட்டியா? இதெல்லாம் நல்லாவாடா இருக்கு,? -ஆதங்கத்தோடுதான் கேட்டார். இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்க உதவியை எதுக்கும் எதிர்பார்க்கிறதே இல்லை. ஒத்து வந்தா இரு…இல்லையா புறப்படு…ங்கிற கதைதான். இது அந்த அப்பன்காரனுக்குப் புரியணுமே? போற போக்கைப் பார்த்தா டைவர்ஸ் அது இதுன்னு கிளம்பிடுவானோ? – மனதுக்குள் பயந்தார் விநாயகம்..அதனாலேயே ஒடுங்கிப் போய் இருக்குமிடம் தெரியாமல் கிடந்தார்.

            ப்பா…! அப்பா…!! – உடம்பு சரியில்லையா உங்களுக்கு? ஏன் என்னமோ மாதிரியிருக்கீங்க…? -ரொம்ப அக்கறையாக் கேட்கிறாப்ல இருக்கு. உண்மையா, நடிப்பா?

            தன் நிலைக்கு வந்தார் விநாயகம். சமீப காலங்களில் இப்படித்தான் ஏதேதோ நினைத்துக் கொண்டு வருத்தங்களில் தோய்ந்திருக்கிறார். எல்லாமும் கை மீறிப் போய்விட்டதாய்த் தோன்றியது அவருக்கு. பசங்க அல்லது பெண்ணுங்க…தங்களோட பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்குவாங்க போல்ருக்கு…! அப்டீன்னா கல்யாணத்தையும் அவுங்களே பண்ணிக்க வேண்டிதானே? அதுக்கு எதுக்கு பெரியவங்க…? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். ஒருவேளை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டிருந்தாலும், எதையாவது ஒன்றைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நின்றிருப்பானோ என்னவோ? அது வேற்று ஜாதிப் பெண்ணாய் இருந்தால்? அட நம்ம ஜாதிலதான் என்ன வௌங்குது? அது அது கண்ட டிரஸ்களப் போட்டுக்கிட்டுத் திரியறதப் பார்த்தா கல்யாணமே வேணாம்னு சொல்லிடலாம் போல்ருக்கு. தனியாக் கிடந்திட்டுப் போறான். நிம்மதியாவது மிஞ்சுமே! இப்போ அதுவுமில்லாமப் போச்சுதுன்னுல்ல தோணுது? ஈஸ்வரா…!

            ல்லம்மா…நான் சொல்ல வர்றது என்னன்னா…நாமெல்லாம் மிடில் கிளாஸ்…நடுத்தர வர்க்கம்…பெரிய பணக்காரங்க போல இல்லாம, நார்மலா இருக்கிறவங்க…அதுபோல…வீட்டுலயும் நாமெல்லாரும் சாதாரணமா,எளிமையா இருந்திட்டுப் போகலாமேன்னு சொல்றேன்…நான் பேசுறது புரியுதோ உனக்கு? என்று ஒரு மறு கேள்வியையும் போட்டார்.

            ஏம்ப்பா…நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்…நீங்கதான என்னை தாங்கணும்…உங்க பையனோட ஒய்ஃப்பாச்சே நானு…என்னைக் கொண்டாட வேண்டாமா? -சிரித்தவாறே சொல்லிக்கொண்டே உரையாடலுக்குத் தயாரானதுபோல் எதிரேயிருந்து நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அது அமர்ந்தது இவருக்கு ஆச்சரியமாயிருந்தது. நல்லவேளை…கால் மேல் கால் போட்டுக் கொள்ளவில்லை. அந்த மரியாதையாவது மிஞ்சியிருக்கிறதே? இல்லையென்றால் கொஞ்ச நேரம் கழித்து பேச்சின் திசைக்குத் தகுந்தாற்போல் மாறுமோ என்னவோ?

            இதென்ன இப்படிக் கேட்கிறது? புகுந்த வீட்டில் சுமுகமாய் இருந்து எல்லோரோடும் அன்பாயும் ஆதரவாயும் பழகிக் கொண்டு, வேலைகளை எடுத்துச் செய்து கொண்டு நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றுதானே பெண்ணுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள்? இது ஏதோ மாற்று நினைப்பாய் தன்னைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று கேட்டு வந்து நிற்கிறதே? இது அசடா அல்லது சமத்தா? ஒரு தீர்மானத்தோடு ஆரம்பித்தார். ஏற்கனவே மனதில் உருப்போட்டு வைத்திருந்தார் இதற்காக….

            நீ இந்த வீட்டுப் பெண்ணும்மா…உன் கோத்திரமே மாறிப் போய்த்தான் நீ இங்க வந்து சேர்ந்திருக்கே…இந்தக் குடும்பத்துக்காரங்கதான் இனி உன் உறவு. இன்பம் துன்பம் எல்லாமும் இனி இந்தக் குடும்பத்தோடதான். யாரு இல்லைன்னா…இந்த உலகத்துல ஒண்ணு கொடுத்தாத்தான் ஒண்ணு கிடைக்கும். எதுவுமே சும்மாக் கிடைக்காது…அப்படிக் கிடைச்சா அது நிலைக்காதாக்கும். அதுபோல எல்லாருக்கும் ஆதரவாவும், அனுசரணையாவும் இருக்க நீ பழகிக்கணும். நாங்க பெரியவங்க…அப்படி ஒண்ணும் சட்டுன்னு யாரையும் உதறிட மாட்டோம்…தூக்கி எறிஞ்சிட மாட்டோம். நீயும் அவனும் ஒத்துமையா இருக்கணும், சந்தோஷமாக் காலம் கழிக்கணும். குழந்தைகள் பெத்துக்கணும், ஆரோக்கியமா, செல்வச் செழிப்போட வாழணும்னுதான் நாங்க விரும்புவோம், தெய்வத்தைப் பிரார்த்தனை பண்ணுவோம்..தெரிஞ்சிதா…? அதனால நீ இந்த வீட்டோட மிங்கிள் ஆகி…சகஜமா இருக்கப் பாரு…எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பத்துல புழங்குறதுபோல சாதாரணமாப் பேசிட்டு, பழகிட்டு, சிரிச்சிட்டு, கூடி மகிழ்ந்து கொண்டாடி இருக்கப் பழகிக்கோ…இது உன் வீடு…நீ பொறுப்பும் எடுப்புமா இருந்தீன்னா, நீ சொல்றதை நாங்க வாயை மூடிட்டு கேட்கப் போறோம்…உன் வார்த்தைக்கு மறு வார்த்தை இங்க யாரும் பேசப் போறதில்லை. நீதான் இந்த வீட்டோட மகாராணி…எஜமானி எல்லாமும். என் பையனுக்கும், எங்களுக்கும் அதைவிட என்ன சந்தோஷம் வேணும்? இந்தக் குடும்பத்துக் குத்து விளக்கே நீதான்…அது விடாம, ஜெக ஜோதியா எப்பவும் பளீர்னு எரிஞ்சிட்டேயிருக்கணும்.  அந்த வெளிச்சத்துல நாங்க மகிழ்ந்து கிடக்கணும். அதுதான் எங்க விருப்பமும் நிம்மதியும். இது எங்களோட பேராசைன்னு கூடக் கேள்விப்படுறவங்களுக்குத் தோணலாம். அதுபத்தி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு நீதான் முக்கியம். எங்க பையன்தான் முக்கியம். உங்க ரெண்டு பேரோட சந்தோஷம்தான் முக்கியம். புரிஞ்சிதா? -லெக்சர் அடித்து ஓய்ந்தார். தெரிஞ்சதெல்லாம் கொட்டிவிட்டார். பிறகு மறந்து போச்சின்னா? கோர்வையா வராதே?

            இதுதான் மிடில் கிளாஸ் மஉறாத்மியமாப்பா…? பொழிஞ்சு தள்ளிட்டீங்களே…? என்று சொல்லிக் கலகலவென்று சந்தியா சிரித்தது இவரை ஆச்சரியப்படுத்தியது. ஒப்புதலோடு சிரிக்கிறதா அல்லது கேலி பண்ணிப் பார்க்கிறதா என்று அப்போதும் ஒரு சந்தேகம் ..

            சந்தியா…டிபன் சாப்பிட வாம்மா….-உள்ளேயிருந்து சாம்பவியின் குரல் ஆதரவோடு ஒலிக்க இதோ வந்துட்டேம்மா….என்று பதில் குரல் கொடுத்துக் கொண்டே அது எழுந்து ஓடியது விநாயகத்திற்கு மனதை ஆறுதல் படுத்தத்தான் செய்தது. வாசலில் வண்டிச் சத்தம். பிரபாகரன் வந்தாச்சு போல….நல்லவேளை எல்லாப் பேச்சும் முடிந்து வந்தான்.

            எதையும் வாய்விட்டு, மனம் விட்டுப் பேசி விட்டால் பிரச்னை தீர்ந்து போகுமோ என்று தோன்ற, இந்த அனுபவம்கூடக்  கைகூட  மனிதனுக்கு இத்தனை வயசாக வேண்டியிருக்கிறதே என்றும் ஒரு சந்தேகம் கிளம்பி மனதை வெட்கப்படுத்தியது. இந்தக் கண சந்தோஷம் எத்தனை நாளைக்குத் தாங்குகிறது பார்ப்போம் என்றும் நினைத்துக் கொள்ளத்தான் செய்தார் விநாயகம். எளிய மனிதர்களோட நடுத்தரக் குடும்பம்லாம் இப்படித்தான் சராசரியாவும் அதுக்குக் கீழேயுமாக்  கழியும் போல்ருக்கு…- என்று தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டார்.

                                                            -----------------------------------