சிறுகதை உயிர் எழுத்து-ஜூலை 2026 இதழ் பிரசுரம்
“கலக்கல் கணினி”
வகுப்பு
முடிந்து அறையை விட்டு எல்லோரும் வெளியே வருவது தெரிந்தது. ஒருவர் முகத்திலும் மகிழ்ச்சியில்லை. குழப்பமான
மனநிலையிலேயே இருக்கையில் வந்து உட்கார்ந்திருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டார்
மானேஜர் மேகநாதன்.
விஸ்வம்…இப்படி
வாங்க….
கணக்குப் பிரிவு எழுத்தர்
அவர் எதிரே வந்து உட்கார்ந்தான்.
உங்களுக்கு எப்படி? ஓரளவுக்குப்
புரிஞ்சிக்க முடிஞ்சிதா? -அவன் முகத்தைக் கூர்மையாகப் பார்த்துக் கேட்டார். அலுவலகத்திலேயே
குறைந்த வயதுள்ள பையன். சர்வீசுக்குப் புதியவன். ஆனால் சுறுசுறுப்பாக இயங்கக் கூடியவன்.
ஒரு இளநிலை எழுத்தரைக் கொண்டு
கணக்குப் பிரிவுல போட்டிருக்கீங்களே? சமாளிப்பாரா? – அலுவலர் அன்று கேட்ட கேள்வி இப்போதும்
அவர் மனதில் ஓடிக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் விஸ்வத்தின் மீது ஒரு நம்பிக்கை. காரணம்
அவனது சுறுசுறுப்பு. பரபரவென்று இயங்கக் கூடிய தன்மை. எதையும் அக்கறையாகக் கேட்டு,
கற்றுக் கொள்ளும் ஆர்வம். அன்றாட வேலையை அன்றே முடித்து விட்டு இருக்கையை விட்டு எழும்
ஒழுங்கு. யாரும் புதியவர்கள் என்பதால் மறுப்பதற்கில்லை. ஒதுக்குவதற்கில்லை. வேலை செய்வதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதே
முக்கியம். திறமைக்குத்தான் முதல் மரியாதை.
மேகநாதன் அப்படித்தான் தன் சர்வீசைக் கழித்திருக்கிறார்.
அவரை எனக்கு, எனக்கு என்று கேட்டு வாங்கிக் கொண்டார்கள் பலரும்.
அவர் ஒருத்தர் இருந்தால்
போதுமுங்க…ஆபீசையே தூக்கிச் சுமப்பாரு… என்று பெருமை பேசினார்கள். அந்த நம்பிக்கையே
அவரை உயர்த்தியது. ஸ்டெனோகிராபராய்ச் சேர்ந்த முதல் நாளிலேயே அவர் காட்டிய வேகம் அப்போதிருந்த
அலுவலரை வியப்பு கொள்ள வைத்தது.
இனிமே மேகநாதன்தான் எனக்குப்
பி.ஏ. என்று பணிமனையின் நடு உறாலுக்கு வந்து எல்லோரும் கேட்க உரக்க உரைத்தார் அதிகாரி.
ஆனால் அது நெடுநாள் நீடிக்கவில்லை. அவரின் பிற சொந்தக் காரியங்கள்தான் இவனுக்கு இடித்தது.
அலுவலகக் காரில் காலையில் அவரது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் கொண்டு விட்டு வர
வேண்டும் என்பதும், மாலை கூட்டி வந்து வீட்டில்
இறக்கி விட்டு மீள வேண்டுமென்பதும்தான். அது இவருக்கு அறவே பிடிக்கவில்லை.
காவல் துறையில் ஆர்டர்லி
என்று ஒரு போஸ்ட் உண்டு. கேள்விப்பட்டிருக்கிறார் இவர். மேலதிகாரியின் வீட்டு வேலைக்காரனாய் இருந்து கொண்டு
மனம் இணங்கிப் போனால் சிவனே என்று கிடப்பது. மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வா என்று சொல்லவில்லை. அது ஒன்றுதான்
மிச்சம்.
நான் கஷ்டப்பட்டுப் படிச்சு,
பப்ளிக் எக்ஸாம் தேர்வு எழுதி, கடல்ல முத்தெடுக்கிற
மாதிரிப் பாஸ் பண்ணி இந்த அரசாங்க வேலைக்கு வந்திருக்கிறது இவர் வீட்டுக்கு சேவகம்
பண்ணவா என்று மனதிற்குள் கொதித்தார். அந்த வயது அப்படி. அது ஒரு நாள் பொங்கி வெடித்தது.
சார்…தப்பா நினைக்காதீங்க…ஆபீஸ்
வேலை எவ்வளவு வேணாலும் சொல்லுங்க செய்றேன்…ஆனா வீட்டு வேலைகள்னு அனுப்பாதீங்க…அது என்னால
முடியாது…. – என்று நேரடியாகவே சொல்லி விட்டார். சர்வீசுக்குப் புதியவன் அப்படிப் பேசியது
எல்லோருக்குமே வியப்புதான்.
மறுநாள் அவருக்கான மாறுதல்
ஆணை டேபிளில் இருந்தது. முகம் பார்க்க இஷ்டமின்றி வலுவிலே அலுவலர் முகாம் சென்றிருப்பதும் புரிந்தது. அன்றே என்னை ரிலீஃப் பண்ணிருங்க என்றார். அதற்கு
மேல் அவர் மூஞ்சியில் முழிக்க இவருக்குத் தெம்பில்லை. எதற்கு வம்பு? ரிலீப் ஆர்டர் சார்? என்ற போது .
இந்தோ…ரெடியா இருக்கு…என்று
நீட்டினார் மேலாளர். ஆபீசிலேயே பலரும் தன் வெளியேற்றத்திற்காகக் காத்திருப்பதுபோல்
தோன்றியது இ வருக்கு. வந்ததிலிருந்தே அந்த அலுவலகம் தன்னோடு ஒட்டாமல் இருப்பதை அப்போதுதான்
நீக்கமறப் புரிந்து கொண்டார். ரொம்பவும் சின்சியராக இருப்பவர்களைப் பலருக்கும் பிடிப்பதில்லை.
இதுதான் யதார்த்தம்.
மாறுதல் போட்ட இடம் ஐந்து
கி.மீ. தள்ளி இருந்தது. அறையிலிருந்து நடந்து வந்து பிறகு நடந்தே மீளும் வேலை இனி ஆகாது என்று புரிந்து
கொண்டார். ஊரிலிருந்த சைக்கிளை பஸ்ஸின் டாப்பில் ஏற்றிக் கொண்டு வந்து இறக்கினார்.
அதில் புதிய அலுவலகத்திற்குப் போவதும் வருவதும் அவருக்கு ஆனந்தமாய் இருந்தது.
இம்மாதிரி அலுவலரின் சொந்த
வேலைத் தொல்லையெல்லாம் அங்கு இல்லை என்பது மனதுக்குப் பிடித்திருந்தது. ஒரு வேளை இவனுக்கு
ஏற்ற இடம் இதுதான் என்றே ஒதுக்கிவிட்டார்களோ என்றே நினைத்துத் திருப்திப் பட்டுக் கொண்டார்.
தினசரி ஆபீஸ் வேலையை மனதாரப் பார்க்க, நிம்மதியாய்த் திரும்பி வர என்று நாட்கள் கடந்தன.
வருடங்களும் கடக்கத்தான் செய்தன. அதே நகரத்தின்
வேறு சில அலுவலகங்களுக்கும் மூன்றாண்டு இடைவெளியில், ஓராண்டு அவசரத் தேவையில், ஆட்கள்
பற்றாக் குறையில் என்று மாறுதல்களைச் சந்தித்தார். பலருக்கும் பிடித்திருப்பதாய் எனக்கு,
எனக்கு என்று தன் பெயர் சொல்லியே அலுவலர்கள் தன்னைக் கேட்டு வாங்கிக் கொண்டதைப் பெருமையாய்த்தான்
நினைத்துக் கொண்டார் மேகநாதன். தன்னை அவசரத் தேவைக்கு என்றே ஒதுக்கி விட்டார்களோ என்றும்
தோன்றி உறுத்தத்தான் செய்தது.
அப்படியான சந்தர்ப்பத்தில்தான்
சொந்த ஊருக்கு மாறுதலும் வந்தது. ஒரு குறிப்பிட்ட சங்கத்தின் முயற்சியில்தான் அதுவும்
நடந்தேறியது. அதன் பல்வேறு பணியாளர் நல நடவடிக்கைகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக்
கொண்டு செயல்பட ஆரம்பித்தார்.
யாருக்கு வேணாலும் டிரான்ஸ்பர்
வரும். ஆனா அந்தாளுக்கு மட்டும் வராது. ஏன்னா செல்லப்பிள்ளை அவரு….என்பார்கள். என்னவோ
சொல்லிவிட்டுப் போகட்டும் என்று வாளாவிருந்தார். அவர்பாட்டுக்குத் தன் கடமையில் கண்ணாயிருந்தார்.
அதுதானே அவரை இன்றுவரை காப்பாற்றியிருக்கிறது.
அப்படித் தன்னைப்போல், தன்
அடையாளமாகவே ஒருவன் இப்போது வந்து வாய்த்திருக்கிறான் என்றால் அது விஸ்வமூர்த்திதான்.
அவனை விடக் கூடாது. இந்த அலுவலகத்திலேயே இருத்தி நிறுத்தி விட வேண்டும் என்று மனதில்
உறுதி செய்து கொண்டார்.
கணினிப் பயிற்சி வகுப்புகளில் எல்லோரும்
முழித்துக் கொண்டிருந்தா்கள்.. Data Operator பணியிடங்கள் நிரப்பப் படாமல் இருந்தன.
அரசின் சிக்கன நடவடிக்கைகளில் அதுவும் மாட்டிக் கொண்டு முழித்தது. பதிலாக பணியில் இருப்பவர்களுக்கே பயிற்சி அளிப்பது
என்பதான நடவடிக்கைகள் கிளம்பியிருந்தன. அதுவும் சரிதானே…ஒருத்தரை மட்டும் அமர்த்தி
அவரிடமே எல்லோரும் கொண்டு சுமத்துவதற்குப் பதில் பலரும் கற்றுக் கொண்டால் அவரவர் பிரிவுப்
பணியை அவரவரே செய்து கொள்வார்களே…! காலத்தின் கட்டாயம் கணினி இயக்கம் அறிதல் என்றாகி
விட்டது.
என்ன விஸ்வம்…கம்ப்யூட்டர்
ட்ரெயினிங் எப்படியிருக்கு? பிடிச்சிருந்ததா? புரிஞ்சிதா முதல்ல…? என்று ஆரம்பித்தார்
மேகநாதன்.
ஒண்ணும் பிரச்னையில்ல சார்….கத்துக்கிடலாம்.
…என்றான். சமத்து என்று மனதிற்குள் சொல்லிக்
கொண்டார்.
ஒரு வாரம்தான் பயிற்சி…பிறகு
சென்னைக்குப் போயிடுவாங்க…அதுக்குள்ளே எவ்வளவு கத்துக்க முடியுமோ அவ்வளவு கத்துக்கிடுங்க….ஏன்னா
நீங்கதான் அக்கௌன்ட் செக் ஷன்ல இருக்கீங்க…உங்களுக்குத்தான் அடிக்கடி எக்ஸெல்ல ஸ்டேட்மென்ட்
அடிக்க வேண்டி வரும். அத்தோட லெட்டர் கரஸ்பான்டென்ஸ். மாதா மாதம் இனிமே பே பில்களும்
பிரின்ட் அவுட்லதான் வரணும்…கைல எழுதக் கூடாதுன்னு டிரஷரில இருந்து ஆர்டர் வந்திடுச்சு…ஒன்ஸ்
மொத்த பே.பில்லையும் சார்ட் அவுட் பண்ணிட்டம்னா பர்மனென்ட் ஃபைலா வச்சு… பிடித்தங்களை
மட்டும் தவணைகளோட மாத்திப் போட்டாப் போதும்தானே…ஆட்டோமேடிக்கா நெட் எமௌன்ட் மாறிக்கும்…யாருக்காச்சும்
இன்கிரிமென்ட் வரும்போது ஒரு மாற்றம் வரும்…மத்தப்படி ஆஸ் இடீஸ்…ஸ்டேட்மென்ட்தான்னு
நினைக்கிறேன்….நான் சொல்றது புரியுதா உங்களுக்கு…..? அக்கறையோடு கேட்டார் மேகநாதன்.
ஓ.கே.சார் ஐ வில் ட்ரை மை
பெஸ்ட்…- -அவனின் இந்த பதில் மிகவும் பிடித்திருந்தது இவருக்கு. இளைய தலைமுறை…அறிந்து
கொள்வதில் ஆர்வம். அப்படியாட்கள்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். இந்தப் பையனுக்கு
எதையுமே மறுத்துப் பேசத் தெரியாதோ?
கேட்கிறபோது புரிஞ்சமாதிரி இருந்தது. இப்ப
என்னடான்னா எல்லாமும் மறந்து போச்சு….குறிச்சு வச்சதெல்லாம் என்னன்னே தெரியல…தலையும்
புரியல வாலும் புரியல என்றார்கள் பலரும். நமக்கு
நாமே வீட்டுல ஒரு தனி கம்ப்யூட்டர் வாங்கி வச்சிட்டு செய்து பார்த்தாத்தான் புரியும்
போல்ருக்கு. அதுக்கும் வீட்ல யாராச்சும் கணினி
படிச்சவங்க இருக்கணும். சந்தேகம் வந்தா சொல்லத் தெரியணும்.
இவுங்க ஒரு வாரத்துக்குப்
பாடம் நடத்திட்டு எனக்கென்னன்னு போயிடுவாங்க…கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த
வார்த்தையும் எத்தனை நாளைக்கு? என்றார்கள். அது சரியில்லை, இது சரியில்ல என்று சொல்வதில்
மன்னர்கள். அந்த கவனத்தைக் கற்றுக் கொள்வதில்
செலுத்தலாமே என்கிற முனைப்பு எவரிடமும் இல்லை.
புரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட விட்டு விலகுவது எப்படி என்பதற்கே
பலரும் கச்சை கட்டிக் கொண்டு பேசுவதாகத தோன்றியது.
எனக்குத் தெரியாது, உனக்குத் தெரியாது என்றால் பொறுப்பு விட்டது பாருங்கள். அதற்குத்தான்
பலரும் முனைந்து கொண்டிருந்தார்கள்.
பக்கத்து ஆபீஸ் முதற்கொண்டு
வரவழைச்சு…முப்பது நாப்பது பேரை அமர்த்தி பாடம் நடத்தினா…எங்கிருந்து சார் புரியும்?
பணம் கட்டி வெளில படிச்சாலே சட்டுன்னு மண்டைல ஏறாது…இதுக்கு பேசாம அந்தப் போஸ்ட்டை
ஒரு ஆளப் போட்டு நிரப்பிட்டுப் போயிடலாம். அவர்ட்டக் கொடுத்திட்டம்னா பொறுப்பு விட்டது.
அனுப்புறதும் அனுப்பாததும், டிலே பண்றதும்னு எல்லாமும் அங்க போயிடும் பாருங்க…நாம நம்ம
செக் ஷன் வேலையைப் பார்க்கலாம்.
ஃபைலப் பார்க்கிறதா, இதோட
மன்னாடுறதா? இந்த வேலைக்கென்ன கூடவா சம்பளம்
தரப் போறாங்க….-பணியாளர்களின் மனநிலை இவரை வியக்க வைத்தது.
ரெண்டு மாசத்துக்கு நானே பே பில் போடுறேன்.
அதுக்குள்ளயும் கத்துக்கணும். மூணாவது மாசம் நீங்கதான் செய்தாகணும். இது நானா உங்களுக்குக்
கொடுக்கிற சலுகை. மானேஜரான எனக்கு செய்யணும்ங்கிற அவசியமில்லை.எல்லாத்தையும் இருபது
வருஷம் செய்திட்டுத்தான் வந்திருக்கேன். நீங்க
செய்றதைச் சரிபார்க்கிறதும், அனுப்புறதும், உங்க எல்லாரையும் வேலை வாங்குறதும்தான்
என்னோட வேலை.! போய்க் கத்துக்கிற வழியைப் பாருங்க….
இது பக்கத்து ஆபீஸ் உதவியாளருக்கு
அவரின் மேலாளர் சொன்ன அறிவுரை. இதற்காகவா ஒருவன் வேலையை விட்டுப் போவான்?
அவர் வி.ஆர்.எஸ். கொடுத்திட்டாருங்க…
- இப்படித்தான் செய்தி வந்தது. இரு அல்லது ஓடு….-ஆள விரட்டிட்டீங்களே சார்….என்றார்கள்
அவரிடம்.
நான் எங்க விரட்டினேன். அவரா
பயந்திட்டுல்ல ஓடுறாரு….கம்ப்யூட்டர் கத்துக்கப் பயந்திட்டு எவனாவது வேலையே வேண்டாம்னு
விட்டு நழுவுவானா? முட்டாள்….என்றார் அந்த மேலாளர்.
இவர்களையெல்லாம் ஒப்பிடும்போது
விஸ்வம் எத்தனை ஒழுங்கான பையன். அவனிடமிருந்து ஒரு சிணுங்கல், ஒரு தடங்கல், ஒரு முனகல்
என்று எதுவும் வரவில்லையே? முயற்சிக்கிறேன் என்று முனைப்போடு நிற்கிறானே?
விஸ்வம்…இந்த ஸ்டேட்மென்ட்
இன்னைக்கே மெயில் பண்ணியாகணும்…சாயங்காலத்துக்குள்ள கன்சாலிடேட் பண்ணி செக்ரடேரியட்
அனுப்பணுமாம். சென்னைலர்ந்து ஃபோன்….- என்று சொல்லி அவன் டேபிளில் வைத்து விட்டுப்
போனார்கள்.
நான் என் செக் ஷன் ஒர்க்கைப்
பார்க்கிறதா இல்ல டைப் அடிக்கிற வேலையைப் பார்க்கிறதா? பே. பில்லை இன்னைக்கே முடிச்சாகணும்.
நாளைக்கு டிரஷரிக்கு சப்மிட் பண்ணனும்…பிறகுதான் மத்த வேலைகள்…-முதல் முறையாக அவனிடமிருந்து இப்படிப் பதில் வந்தது. ஓவராய் ஒருவனை
நெருக்கினால் அவனும் என்னதான் பண்ணுவான்?
அடுத்தடுத்து அவன் ஒவ்வொன்றுக்கும்
இப்படியான பதில் சொன்னது யார் காதிலும் ஏறவில்லை. போதாக் குறைக்கு அலுவலரின்
காதுக்கு அது போகும் என்று மேகநாதனும் எதிர்பார்க்கவில்லை. பிரச்னை கொஞ்சம் பெரிதாகிறது
என்று நினைத்துக் கொண்டார். ஆனால் அது உடனேயே வெடித்து விட்டது என்பதுதான் உண்மை.
விஸ்வம்…ரொம்ப முக்கியமானதைத்
தவிர்க்க முடியாது. முடிச்சுக் கொடுத்திடுங்க…-என்றார் இவரும் அவரின் பங்குக்கு. எதிர்பார்த்தது
போலவே மறுப்பு வந்தது அவனிடமிருந்து.
ஆபீஸ்லயே நான் ஒருத்தன்தான்
இருக்கேனா சார்…வேறே யாராச்சும் கம்ப்யூட்டர் முன்னால போய் உட்கார்றாங்களா பாருங்க…!
தெரிஞ்சிருந்தும் தெரியாத மாதிரிக் கிடக்காங்க…தெரிஞ்ச மாதிரிக் காட்டிக்கிட்டா எங்க
அத்தனையும் தன் தலைல விழுந்திடுமோன்னு கமுக்கமா இருக்காங்க….ஒண்ணும் புரியவேயில்ல…ன்னு
டபாய்க்கிறாங்க…செய்து பார்த்தாத்தான சார் படிப்படியா எல்லாம் சரியாகும். சந்தேகங்களும்
அப்பத்தான சார் தீரும்? தொடவே மாட்டேன்னா எப்படி? நான் எல்லாருக்கும் ஜூனியர்ங்கிறதால
எத்தனையைத்தான் சுமக்கிறது?
…புரியுது…புரியுது…..கொஞ்சம்
பொறுத்துக்குங்க…ஏதாச்சும் செய்வோம்…-பொறுமையாகவே பதில் சொன்னார் மேகநாதன். அப்போதைக்கு
அவனை விட்டால் வேறு வழியில்லை என்று பதை பதைத்தது அவர் மனம்.
இல்ல சார்…மன்னிச்சிருங்க…எல்லாத்தையும்
நான் ஒருவனே கட்டிச் சுமக்க முடியாது…என் தலைலயே எல்லாமும் விடியுது….போதாக் குறைக்கு
பக்கத்து ஆபீஸ்காரங்க வேறே வந்து கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க…ஒண்ணு முழுக்க முழுக்கக்
கம்ப்யூட்டர் ஒர்க் பார்க்கிறேன். இல்லன்னா செக் ஷன் ஒர்க் பார்க்கிறேன்…ரெண்டையும்
சேர்த்து என்னால சுமக்க முடியாது சார்…-முதலும் முடிவுமாகச் சொல்லித் தீர்த்து விட்டான்
விஸ்வம். சாது மிரண்டால்…என்று நினைத்து பிரமித்தார் மேகநாதன்.
என்ன செய்வது என்று புரியாமல்
தவித்தார். எப்படியோ வேலை நடந்தால் சரி என்று வாளாவிருந்தார் அலுவலர். ரொம்பவும் தீவிரமாக யோசித்த போது ஒரு தீர்வு கிடைத்தது
போலிருந்தது மேகநாதனுக்கு.
அன்றுதான் மேலிடத்திலிருந்து
தகவல் வந்திருந்தது. தொலைபேசி வழித் தகவல்தான் என்றாலும் திருப்தி தரக் கூடியதாக இருந்தது.
துறையின் அனைத்து மாவட்டத் தலைமை அலுவலகங்களுக்கும் ஒரு டாட்டா ஆப்பரேட்டர் போஸ்ட்
சாங்ஷன் ஆகியிருந்தது என்பதுதான் அந்தச் சந்தோஷமான செய்தி.
பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி,
வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு ஆள் கேட்டு,
இன்டர்வியூ வைத்து ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும் பணி நிறைவடைவதற்கே எப்படியும் ஆறு மாதங்களுக்குக்
குறையாமல் ஆகிவிடுமே என்று யோசனையில் ஆழ்ந்தார் மேகநாதன்.
அலுவலரிடம் இதுபற்றி ஆலோசனை
மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறைக்குள் போய் எதிரில் அமர்ந்தார்.
ரொம்ப சிம்பிள்….விஸ்வத்துகிட்ட
இருக்கிற அக்கெள்ன்ட்ஸ் பிரிவு வேலைகளை எஸ்டாபிளிஷ்மென்ட் செக் ஷனோட அட்டாச் பண்ணி
ஒரு ஆபீஸ் ஆர்டர் போட்ருங்க…இப்போதைக்கு ஓடட்டும்….கம்ப்யூட்டர் ஆபரேட்டர் போஸ்ட் வந்தவுடனே
பழையபடி பிரிச்சிக்கலாம். அந்தப் பையனை ஃபுல் அன்ட் ஃபுல் கம்ப்யூட்டர் ஒர்க் பார்க்க
ஒதுக்கிடுங்க….இன்னைக்கே ஒரு ஆபீஸ் ஆர்டர் இஷ்யூ பண்ணுங்க…கையெழுத்துப் போட்டுட்டு
கேம்ப் கிளம்பறேன்…-அவரின் அவசரம் புரிந்தது மேகநாதனுக்கு.
விஸ்வத்திற்கு விடிவு கிடைத்தது.
மறு நாள் -
சார்…ரிஜிஸ்டர் தபால் வந்திருக்கு…! - என்றவாறே போஸ்ட்மேனை அனுப்பி விட்டு தபாலோடு வந்து
நின்ற பியூன் பாலகுருவை ஏறிட்டுப் பார்த்து…இதென்னய்யா புது வம்பு? என்றவாறே வாங்கிப்
பிரித்தார் மேகநாதன்.
பணிக்குழுப் பிரிவோடு கணக்குப்
பிரிவையும் சேர்த்துப் பார்க்க வேண்டும் என்ற அலுவலக ஆணையை முதல் நாள் பெற்றுக் கொண்டு
சென்ற அந்தப் பிரிவுப் பெண்மணி பரமேஸ்வரி..யாரிடமும்
ஒரு வார்த்தை சொல்லாமலும், மேகநாதனுடன் எதுவும் விவாதிக்காமலும், அன்றிலிருந்து மருத்துவ
விடுப்பில் சென்றதுதான் எவரும் எதிர்பார்க்காத பேரிடியாக இருந்தது. AI வந்து கலக்கிக்கிட்டிருக்கு. அப்டியும் கவர்ன்மென்ட்
ஆபீஸ்களில் இன்னமும் இதுதான் நிலைமை. நினைத்துப் பார்த்து நொந்து கொண்டார்.
கையில் அந்த மருத்துவச் சான்றிதழ்
இணைப்போடு கூடிய விடுப்பு விண்ணப்பத்தைப் பிடித்துக் கொண்டு செய்வதறியாது முகம் வெளிறிப்
போய் அமர்ந்திருந்தார் மேகநாதன்.
---------------------------------------


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக