23 ஜூலை 2026

 

சிறுகதை    கணையாழி“26-ஜூலை 2026 இதழ்                                             “சராசரிகள்”          





நாமெல்லாம் மிடில் கிளாஸ்தானே, பிறகென்ன? – என்றார் விநாயகம்.

            அதற்கு என்ன அர்த்தம் என்று சந்தியா புரியாமல் பார்ப்பதுபோலிருந்தது இவருக்கு. ஒரு வேளை துவக்கின நேரம் சரியில்லையோ?. தன் அம்மாவைக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கிறான் அவன். அவளது கணவன் பிரபாகரன். அது சமயம் இந்தப் பெண் வந்து நிற்கிறது.

            அப்பா…பேசுங்கப்பா…! யாருமே என்னோட பேச மாட்டேங்கிறீங்க… … மனசுக்குக் கஷ்டமாயிருக்கு…

            அந்தக் கடைசி வார்த்தைதான் இவருக்கு ஆச்சரியமாயிருந்தது. அப்படியும் ஒரு உணர்ச்சி பாவம் இந்தப் பெண்ணிடம் இருக்கிறதா என்ன? மனசுக்குக் கஷ்டமாயிருக்காமே? அதுவும் நான் பேசாம இருக்கிறதுனால என்கிறதே? அப்படியானால் மற்றவர்கள் எப்படியிருந்தாலும் பரவாயில்லையா? அதில் சம்மதமா? என்ன மாதிரி மனநிலை இது? எல்லாரும் சகஜமா, சிநேகமா, அன்பாப் பேசிட்டு இருக்கிறதுக்குத்தானே குடும்பம்?

            எல்லோரோடும் சுமுக பாவத்துடன் இருந்து கழிப்பதற்குத்தானே இந்த வீட்டுக்கு  மருமகளாய் வந்து சேர்ந்திருக்கிறது? கல்யாணம் ஆவதற்கு முன் பிறந்த வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஆனால் திருமணத்திற்குப் பிறகு தன்னை மாற்றிக் கொள்ள வேண்டாமா? புகுந்த வீடுதானே ஆயுள் முழுக்க?  சாதாரணமாய் அது புழங்க வேண்டியதுதானே?

            ஒருவேளை இப்படியிப்படி இருக்கணும் என்று சொல்லிக் கொடுக்கவேயில்லையோ?  பக்குவமாய் வளர்த்திருந்தால், அது இயங்குதலில் தெரியுமே? நீ மகாராணி…உனக்கு எல்லாமும் தானே கிடைக்கும் என்று ஏத்திவிட்டு அனுப்பியிருப்பார்களோ? அதை நம்பிக்கொண்டு இது கெத்துக் காண்பிக்கிறதோ?

            இயக்கமே இல்லையே? பிறகு எங்கிருந்து இயங்குவது? – நினைத்துப் பார்த்து நொந்து கொண்டார் விநாயகம்.  இனி இது தன் வீடு என்கிற எண்ணமே வந்த மாதிரித் தெரியவில்லையே இந்தப் பெண்ணுக்கு?

            இதென்னங்க, தினமும் இப்படிப் பத்துக்கும் பதினொண்ணுக்கும் எழுந்திரிக்குது…? என்றாள் சாம்பவி. அவள் பாடு அவளுக்கு.

            இதத்தான் நான் அன்னைக்கே சொன்னேன் கவனிச்சு. நீ  சும்மாயிருங்கன்னு என் வாயை அடக்கிட்டே…! ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் வேலைன்னு அந்தாள் வேறே சப்பைக்கட்டுக் கட்டினான். ஆனா தினமுமே இப்படித்தான்னு இப்பத்தானே தெரியுது? நமக்கு புத்தியில்லாமப் போச்சு. தள்ளி விட்டுட்டான். தப்பிச்சிட்டான். நாம மாட்டிக்கிட்டோம்…!  நமக்குத்தான் அறிவில்லை…!-உள்ளுக்குள் நொந்து கொண்டார் விநாயகம்.

            காலா காலத்துல படுக்கையை விட்டு எழுந்திரிச்சு, குளிச்சு…சாமி கும்பிட்டு…ஏதாச்சும் வேலைகளைச் செய்வோம், அல்லது வேலைல உதவியாவாவது இருப்போம்ங்கிற சிந்தனையே இல்லையே இந்தப் பொண்ணுகிட்ட…? இத வச்சிக்கிட்டு எப்படிச் சமாளிக்கப் போறான் நம்ம பையன்? – அழாத குறையாகக் கேட்டாள் சாம்பவி. மலைபோல் நினைத்து மறுகுகிறாளோ என்று தோன்றியது விநாயகத்திற்கு.

            அதன் இருப்பு அலுத்துவிட்டது எல்லாருக்கும். இதென்ன அட்டச் சோம்பேறியா ஒரு பொம்பள? சரியான சண்டிமாடு போல்ருக்கே? சண்டி மாடா – நொண்டி மாடா? வண்டி மாடா மாத்த முடியுமா, முடியாதா?  புகுந்த வீட்டுல ஒரு பொண்ணு இப்படியா இருக்கும்? சுறுசுறுப்பா இயங்காதோ? நேரடியாய் எதுவும் சொன்னால் சண்டை வந்து விடுமோ என்று வாய் மூடி, தான் உண்டு, தன் வேலையுண்டு என்று இயங்கிக் கொண்டிருந்தாள் சாம்பவி. அதை அமைதியாய் இருந்து கண்காணித்துக் கொண்டிருந்தார் இவர். தன்னால் சண்டை வேண்டாம் என்ற பாதுகாப்பு உணர்வு.

            மலை அசைஞ்சாலும் அசையும், இது அசையாது போல்ருக்கே…? என்று நினைத்தார். கலகலவென்ற பேச்சுக் கூட இல்லை. என்னத்தக் கலகல? சாதாரணப் பேச்சே இல்லையே…அப்புறம் எங்கிருந்து கலகலக்கிறது? இப்போது என்னடாவென்றால் யாருமே தன்னோடு பேசுவதில்லை என்று வந்து நிற்கிறது. மிடில் கிளாஸ்தானேன்னு தான் கேட்ட கேள்விக்கு பதிலைக் காணோம்! திமிறாய் இருக்கிறதோ என்று நினைத்துக் கொண்டு கேட்டு வைத்தார். ஒரு வேளை ஆமாம் அப்படித்தான் என்று சொல்லாமல் சொல்கிறதோ? எல்லாரும் என்னைத் தாங்கணும்…அப்பத்தான் போனாப் போறதுன்னு ஏதாச்சும் செய்வேனாக்கும்!...-இந்த மாதிரி ஏதேனும் அசட்டு நினைப்பில் திளைக்கிறதோ? அல்லது  அப்பன்காரன் அப்படிச் சொல்லிக் கொடுத்திருக்கிறானா? அதை நம்பிக்கொண்டு வளைய வருகிறதோ? அசட்டுப் பெண்…!

            பேசினவரையில் என்ன செய்திருக்கிறது இது? என்று யோசித்தார். குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஏதுமில்லை என்றே தோன்றியது. ஏனென்றால் தனக்கான காரியத்தைத் தானே செய்து கொள்வதே பெரிய காரியமாய்த் தெரிகிறதே?

            சாவகாசமாய் எழுந்து, சாவகாசமாய்ப் பல்தேய்த்து, சாவகாசமாய்க் காப்பி குடித்து…ஒரு வேளை என் காரியத்தை நானே பார்த்துப்பேன் என்று பெருமையாக நினைக்கிறதோ? இதென்ன அபத்தம்? இதுக்கு ஏதாச்சும் வேலை கீலை செய்யத் தெரியுமா தெரியாதா? உட்கார்த்தி வச்சுத் திங்கப் பழக்கி, அனுப்பி விட்டுட்டாங்களோ? திங்குறதத் தவிர, தூங்குறதத் தவிர…வேறேதும் செய்யாதோ? அப்பப்போ தேர் அசைஞ்ச மாதிரி அசைஞ்சாப் போதும்னு நினைக்குதோ?

            ரு மண்ணும் தெரியாது போல்ருக்குப்பா….அம்மாவும் நீங்களும் பேசாம என்கூடவே இருங்க…தனிக்குடித்தனம்லாம் வேண்டாம். தனியாப் போயி நான்தான் கஷ்டப்படணும். இது ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாது…எப்படித்தான் காலம்பூராவும் இவள வச்சு ஓட்டப் போறேனோ? கட்டி மாரடிக்க வேண்டிதான்…தலையெழுத்து…!

            அப்டியெல்லாம் வீணாக் கற்பனை பண்ணிக்காதே…பொறுப்பா சொல்லிக் கொடுக்காம இருந்திருப்பாங்களா? நீயா எதுக்கு அலட்டிக்கிறே? தனக்குன்னு பொறுப்பு வந்தா எல்லாம் தானா சரியாகும்…கடமையுணர்ச்சி தானே வந்திடும்.

            அப்படித்தாம்ப்பா…எந்த நல்லதும் சொல்லித் தரலை இவளுக்கு. தொட்டதுக்கெல்லாம் எதிர்த்துப் பேசச் சொல்லிக் கொடுத்திருக்காங்க…நல்லா வாய் கிழியப் பேசுறா…பெரிய புத்திசாலிங்கிற நினைப்பு போல…பெண்ணுரிமை, சம உரிமைன்னுட்டுத் திரியறாங்கல்ல…அந்தக் கேசு….அவ அப்பங்காரன் பேசுற வார்த்தைகள்லர்ந்து நானாப் புரிஞ்சிக்கிட்டேன். அவன் ஒரு முழுக் கிறுக்கன்…இது ஒரு அரைக் கிறுக்கு …! அவர் சொல்றதை, சொல்லிக் குடுக்கிறதை அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிக்கிறா!…இவளுக்கா சிந்திக்கிற மூளை இல்லை…!!.

            டே…டேய்…என்னடா இது நீ பாட்டுக்குப் பேசிட்டே போறே? அவ காதுல விழுகப் போகுது…அப்புறம் பெரிய சண்டையாயிடும்…

            ஆகட்டும்…அதத்தான் எப்பன்னு நானும் எதிர்பார்த்திட்டிருக்கேன். வெளுத்துக் கட்டிப்பிடுவேன்…தொம்பங் கூத்தாடி மாதிரி மனசுக்குத் தோணினதையெல்லாம் இஷ்டத்துக்கு அந்தாள் பேசுவான் போலிருக்கு…இது அதையெல்லாம் உண்மைன்னு நம்பிக்கிடுது..இவளுக்கா எந்த யோசனையம் இல்லை….மழுமட்டை…

            அதான் அவுரு இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கிறதில்லையா? ஏற்கனவே அர்ச்சனையெல்லாம் ஆயிடுச்சு போல்ருக்கே நீ சொல்றதப் பார்த்தா? ஏண்டா இப்படி எடுத்த எடுப்புல பகைச்சிக்கிறே? மனசு பொறுக்காமல் கேட்டார் விநாயகம்.

            அவுரு ஒரு கூறாவே பேச மாட்டேங்கிறார்ப்பா…எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன் அவர்ட்ட….வாயெடுத்தாலே தன் பொண்ணைப் பெருமையாப் பீத்திக்கிறார். அப்படியாக்கும் இப்படியாக்கும்னு வாய்ப்பந்தல் போடுறார். பொறுப்பா, மரியாதையா, தன்னடக்கத்தோட ரெண்டு வார்த்தை பேசத் தெரில அவளுக்கு…இதுல பெருமை வேற…ஓட்டப் பெருமை…மட்டு மரியாதைன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பா போலிருக்கு?

            போய்யா…நீயே ஒரு வெத்து வேட்டு…உனக்கெதுக்கு இந்த வாய்? ன்னு சொல்லிட்டேன்.

            அடப்பாவி…அப்டியே பேசிட்டியா? இதெல்லாம் நல்லாவாடா இருக்கு,? -ஆதங்கத்தோடுதான் கேட்டார். இந்தக் காலத்துப் பசங்க பெரியவங்க உதவியை எதுக்கும் எதிர்பார்க்கிறதே இல்லை. ஒத்து வந்தா இரு…இல்லையா புறப்படு…ங்கிற கதைதான். இது அந்த அப்பன்காரனுக்குப் புரியணுமே? போற போக்கைப் பார்த்தா டைவர்ஸ் அது இதுன்னு கிளம்பிடுவானோ? – மனதுக்குள் பயந்தார் விநாயகம்..அதனாலேயே ஒடுங்கிப் போய் இருக்குமிடம் தெரியாமல் கிடந்தார்.

            ப்பா…! அப்பா…!! – உடம்பு சரியில்லையா உங்களுக்கு? ஏன் என்னமோ மாதிரியிருக்கீங்க…? -ரொம்ப அக்கறையாக் கேட்கிறாப்ல இருக்கு. உண்மையா, நடிப்பா?

            தன் நிலைக்கு வந்தார் விநாயகம். சமீப காலங்களில் இப்படித்தான் ஏதேதோ நினைத்துக் கொண்டு வருத்தங்களில் தோய்ந்திருக்கிறார். எல்லாமும் கை மீறிப் போய்விட்டதாய்த் தோன்றியது அவருக்கு. பசங்க அல்லது பெண்ணுங்க…தங்களோட பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக்குவாங்க போல்ருக்கு…! அப்டீன்னா கல்யாணத்தையும் அவுங்களே பண்ணிக்க வேண்டிதானே? அதுக்கு எதுக்கு பெரியவங்க…? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். ஒருவேளை அவனே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டிருந்தாலும், எதையாவது ஒன்றைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நின்றிருப்பானோ என்னவோ? அது வேற்று ஜாதிப் பெண்ணாய் இருந்தால்? அட நம்ம ஜாதிலதான் என்ன வௌங்குது? அது அது கண்ட டிரஸ்களப் போட்டுக்கிட்டுத் திரியறதப் பார்த்தா கல்யாணமே வேணாம்னு சொல்லிடலாம் போல்ருக்கு. தனியாக் கிடந்திட்டுப் போறான். நிம்மதியாவது மிஞ்சுமே! இப்போ அதுவுமில்லாமப் போச்சுதுன்னுல்ல தோணுது? ஈஸ்வரா…!

            ல்லம்மா…நான் சொல்ல வர்றது என்னன்னா…நாமெல்லாம் மிடில் கிளாஸ்…நடுத்தர வர்க்கம்…பெரிய பணக்காரங்க போல இல்லாம, நார்மலா இருக்கிறவங்க…அதுபோல…வீட்டுலயும் நாமெல்லாரும் சாதாரணமா,எளிமையா இருந்திட்டுப் போகலாமேன்னு சொல்றேன்…நான் பேசுறது புரியுதோ உனக்கு? என்று ஒரு மறு கேள்வியையும் போட்டார்.

            ஏம்ப்பா…நான் உங்க வீட்டுக்கு வந்திருக்கேன்…நீங்கதான என்னை தாங்கணும்…உங்க பையனோட ஒய்ஃப்பாச்சே நானு…என்னைக் கொண்டாட வேண்டாமா? -சிரித்தவாறே சொல்லிக்கொண்டே உரையாடலுக்குத் தயாரானதுபோல் எதிரேயிருந்து நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அது அமர்ந்தது இவருக்கு ஆச்சரியமாயிருந்தது. நல்லவேளை…கால் மேல் கால் போட்டுக் கொள்ளவில்லை. அந்த மரியாதையாவது மிஞ்சியிருக்கிறதே? இல்லையென்றால் கொஞ்ச நேரம் கழித்து பேச்சின் திசைக்குத் தகுந்தாற்போல் மாறுமோ என்னவோ?

            இதென்ன இப்படிக் கேட்கிறது? புகுந்த வீட்டில் சுமுகமாய் இருந்து எல்லோரோடும் அன்பாயும் ஆதரவாயும் பழகிக் கொண்டு, வேலைகளை எடுத்துச் செய்து கொண்டு நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றுதானே பெண்ணுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள்? இது ஏதோ மாற்று நினைப்பாய் தன்னைத் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று கேட்டு வந்து நிற்கிறதே? இது அசடா அல்லது சமத்தா? ஒரு தீர்மானத்தோடு ஆரம்பித்தார். ஏற்கனவே மனதில் உருப்போட்டு வைத்திருந்தார் இதற்காக….

            நீ இந்த வீட்டுப் பெண்ணும்மா…உன் கோத்திரமே மாறிப் போய்த்தான் நீ இங்க வந்து சேர்ந்திருக்கே…இந்தக் குடும்பத்துக்காரங்கதான் இனி உன் உறவு. இன்பம் துன்பம் எல்லாமும் இனி இந்தக் குடும்பத்தோடதான். யாரு இல்லைன்னா…இந்த உலகத்துல ஒண்ணு கொடுத்தாத்தான் ஒண்ணு கிடைக்கும். எதுவுமே சும்மாக் கிடைக்காது…அப்படிக் கிடைச்சா அது நிலைக்காதாக்கும். அதுபோல எல்லாருக்கும் ஆதரவாவும், அனுசரணையாவும் இருக்க நீ பழகிக்கணும். நாங்க பெரியவங்க…அப்படி ஒண்ணும் சட்டுன்னு யாரையும் உதறிட மாட்டோம்…தூக்கி எறிஞ்சிட மாட்டோம். நீயும் அவனும் ஒத்துமையா இருக்கணும், சந்தோஷமாக் காலம் கழிக்கணும். குழந்தைகள் பெத்துக்கணும், ஆரோக்கியமா, செல்வச் செழிப்போட வாழணும்னுதான் நாங்க விரும்புவோம், தெய்வத்தைப் பிரார்த்தனை பண்ணுவோம்..தெரிஞ்சிதா…? அதனால நீ இந்த வீட்டோட மிங்கிள் ஆகி…சகஜமா இருக்கப் பாரு…எல்லா நடுத்தர வர்க்கக் குடும்பத்துல புழங்குறதுபோல சாதாரணமாப் பேசிட்டு, பழகிட்டு, சிரிச்சிட்டு, கூடி மகிழ்ந்து கொண்டாடி இருக்கப் பழகிக்கோ…இது உன் வீடு…நீ பொறுப்பும் எடுப்புமா இருந்தீன்னா, நீ சொல்றதை நாங்க வாயை மூடிட்டு கேட்கப் போறோம்…உன் வார்த்தைக்கு மறு வார்த்தை இங்க யாரும் பேசப் போறதில்லை. நீதான் இந்த வீட்டோட மகாராணி…எஜமானி எல்லாமும். என் பையனுக்கும், எங்களுக்கும் அதைவிட என்ன சந்தோஷம் வேணும்? இந்தக் குடும்பத்துக் குத்து விளக்கே நீதான்…அது விடாம, ஜெக ஜோதியா எப்பவும் பளீர்னு எரிஞ்சிட்டேயிருக்கணும்.  அந்த வெளிச்சத்துல நாங்க மகிழ்ந்து கிடக்கணும். அதுதான் எங்க விருப்பமும் நிம்மதியும். இது எங்களோட பேராசைன்னு கூடக் கேள்விப்படுறவங்களுக்குத் தோணலாம். அதுபத்தி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்கு நீதான் முக்கியம். எங்க பையன்தான் முக்கியம். உங்க ரெண்டு பேரோட சந்தோஷம்தான் முக்கியம். புரிஞ்சிதா? -லெக்சர் அடித்து ஓய்ந்தார். தெரிஞ்சதெல்லாம் கொட்டிவிட்டார். பிறகு மறந்து போச்சின்னா? கோர்வையா வராதே?

            இதுதான் மிடில் கிளாஸ் மஉறாத்மியமாப்பா…? பொழிஞ்சு தள்ளிட்டீங்களே…? என்று சொல்லிக் கலகலவென்று சந்தியா சிரித்தது இவரை ஆச்சரியப்படுத்தியது. ஒப்புதலோடு சிரிக்கிறதா அல்லது கேலி பண்ணிப் பார்க்கிறதா என்று அப்போதும் ஒரு சந்தேகம் ..

            சந்தியா…டிபன் சாப்பிட வாம்மா….-உள்ளேயிருந்து சாம்பவியின் குரல் ஆதரவோடு ஒலிக்க இதோ வந்துட்டேம்மா….என்று பதில் குரல் கொடுத்துக் கொண்டே அது எழுந்து ஓடியது விநாயகத்திற்கு மனதை ஆறுதல் படுத்தத்தான் செய்தது. வாசலில் வண்டிச் சத்தம். பிரபாகரன் வந்தாச்சு போல….நல்லவேளை எல்லாப் பேச்சும் முடிந்து வந்தான்.

            எதையும் வாய்விட்டு, மனம் விட்டுப் பேசி விட்டால் பிரச்னை தீர்ந்து போகுமோ என்று தோன்ற, இந்த அனுபவம்கூடக்  கைகூட  மனிதனுக்கு இத்தனை வயசாக வேண்டியிருக்கிறதே என்றும் ஒரு சந்தேகம் கிளம்பி மனதை வெட்கப்படுத்தியது. இந்தக் கண சந்தோஷம் எத்தனை நாளைக்குத் தாங்குகிறது பார்ப்போம் என்றும் நினைத்துக் கொள்ளத்தான் செய்தார் விநாயகம். எளிய மனிதர்களோட நடுத்தரக் குடும்பம்லாம் இப்படித்தான் சராசரியாவும் அதுக்குக் கீழேயுமாக்  கழியும் போல்ருக்கு…- என்று தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டார்.

                                                            -----------------------------------

 

           

கருத்துகள் இல்லை: