21 அக்டோபர் 2023

 

 

ஜெயந்தனின் நாடகம் “மனுஷா..மனுஷா..”வாசிப்பனுபவம்-உஷாதீபன்

வெளியீடு- கோடு வெளியீடு, 9பி, மனோகர் நகர் பிரதான சாலை, பள்ளிக்கரணை. சென்னை-600 100 (ஃபோன்-99622 44554)

-----------------------------------------------------------------------------------------------------


            ஜெயந்தனின் கதைகளைப் படிப்பதென்றாலே மனசு திக்…திக்…என்று இருக்கும். உண்மை உரக்கச் சொல்லப்படும்போது அதை மனசு ஏற்கும் அதே நேரத்தில் இப்படிப் பட்டவர்த்தனமாய்ப் போட்டு உடைக்கிறாரே…இவருக்கு ஏதும் சங்கடம், தொல்லைகள் வந்து விடக் கூடாதே என்ற மனசு பயப்படும்.

           


இங்கே எழுத்து சுதந்திரம் என்பது அந்த அளவுக்கு இருக்கிறதா…இப்படிப் பயப்படாமல் எழுதுகிறாரே….லஞ்ச லாவண்யம், அலுவலக நடைமுறைகள், சமுதாய நோக்குகள், ஜாதிப் பிரச்னைகள் என்று எதையெடுத்தாலும்…போற்றுபவர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும், தொடர்ந்து செல்வேன், ஏற்றதொரு கருத்தை எனது உளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்…என்கிற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப நெஞ்சை நிமிர்த்தி உரைக்கிறாரே என்று மனது பெருமைப் படும். அதே சமயம் இப்படி ஒரு தைரியமான எழுத்தாளருக்கு பாதகம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதே என்று  அஞ்சும்.

            எனக்குத் தெரிய நா.பா.வுக்குப் பிறகு சமூக அவலங்களை, நடைமுறை அநியாயங்களை, நேர்மையற்ற  செயல்களை, பொய்யுரைத்து மேலெழுவதையே வாழ்க்கையாய்க் கொண்டவர்களின் ஊழல்களை, குரல் உயர்த்திப் பதிவு செய்தவர் ஜெயந்தன் ஒருவரே. நா.பா.வுடைய பதிவுகளில், படைப்புகளில் கொஞ்சம் இயல்புத் தன்மை மாறி நியாயம் கம்பீரமாகவும், தைரியமாகவும் உரத்துச் சொல்லப்படும் அதே வேளையில் ஜெயந்தன் அவர்களின் படைப்புக்களில் யதார்த்தப் பின்னணியில் மனிதர்கள் எவ்வளவு தடுமாறி நிற்கிறார்கள் தங்களின் தேவைகளின் பொருட்டும். வாழ்வியல் நடைமுறைகளின் பொருட்டும் என்றும், சூழல்கள் அவர்களை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது, எளிய மனிதர்கள் அதில் எவ்வளவு தவறிப் போகிறார்கள், அதிகாரம் படைத்தவர்கள் அதை எவ்வளவு தவறாக, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆணியடித்ததுபோல், பொட்டில் அடித்ததுபோல், முகத்தில் அறைந்தது போல் என்பதாக அவரின் பார்வை தீட்சண்யமாய் விரிந்திருக்கும்.

            அதே கண்ணோட்டத்துடன்தான் இந்த மனுஷா…மனுஷா…நாடகத்தையும் மறைபொருளாக உருவாக்கி ஒரு அரசனின் படிப்படியான நிர்வாணக் கோலம் எப்படி அம்பலத்திற்கு வருகிறது என்பதை மாய யதார்த்தமாய்ச் சுட்டி, அது இந்த சமுதாயத்தின் பிரத்யட்ச நிலை என்பதைச் சொல்லாமல் சொல்லி, கேலி செய்து, கிண்டல் செய்து உணர்த்துகிறார். அதை உணர்கையில் நம் மனதும் திருப்தி கொள்கிறது, வேதனையும் விஞ்சுகிறது. ஒவ்வொரு எழுத்தாளராவது அங்கங்கே இப்படி நக்கீர தைரியத்தோடு தட்டுப்படகிறார்களே என்று மனது திருப்தி கொள்கிறது.

            நிஜ நாடக இயக்கமாய் ஒரு கூத்துப்பட்டறை நாடகம் பார்ப்பதுபோலான உணர்வினை இந்த நாடகத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அரசின் செயல்பாடுகள் எதையெல்லாம் அர்த்தமுள்ளதுபோல் நிகழ்த்துகின்றன, அதை ரசிப்பதுபோலான கூட்டம் எப்படி ஆஉறா, ஓஉறா….என்பதுபோல் வாழ்த்தி மகிழ்கின்றன, அதன் மூலம் தங்கள் வாழ்வை சிரமமின்றி நகர்த்திச் செல்ல எப்படிப் பொய்யாய்த் தங்களை முன்னிறுத்துகின்றன….அர்த்தமில்லாத செயல்பாடுகளெல்லாம் எப்படி அர்த்தமுள்ளதாய் வரிக்கப்படுகின்றன…அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பொய்யான கூட்டம்  எப்படிக் குலவை பாடுகின்றன…என்று கிண்டலும் கேலியுமாய் மனதின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் நக்கீர தைரியம் இந்த நாடகத்தின் முக்கிய அம்சம்.

            நாடகம் முழுக்க இந்த வாழ்க்கையின் நடப்பியல்களை விமர்சனங்களாய் முன் வைத்து, அர்த்தமற்ற போக்குகளைக் கிண்டல் செய்து, அதை ஏற்றுக் கொள்ளும் கோமாளித்தனங்களை பட்டவர்த்தனமாய் வெளிச்சம் போட்டு – மனுஷா…மனுஷா…இப்படியான நடப்புகளையெல்லாம் இவ்வாறுதான் கண்மூடிப் பார்த்துக்கொண்டு பிடித்த மண்ணாய் இருப்பாயா நீ, விழித்துக் கொள்….இது உன் சொந்த வாழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை நீ உணரவில்லையா? என்பதை நெஞ்சிலடித்துச் சொல்லியிருக்கிறது இந்த நாடகம்.

            ஒரு நாடகம் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு தன் கருத்தை முன் வைக்கிறது என்பது முக்கியமில்லை. குறைவான நேரமாய் இருந்தாலும், சொல்ல வந்த கால அவகாசத்தில், அமைத்துக் கொள்ளும் காட்சிகளில், பேசப்படும் நறுக், சுருக்…வசனங்களில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் எத்தனை எண்ணிப் பார்த்து உணரப்பட வேண்டியவை என்பதை கருத்தாய் உணர வைக்கும் ஜெயந்தனின் இந்த மனுஷா…மனுஷா…நாடகம்  மிகச் சிறிய நூலானாலும் இலக்கிய விரும்பிகள், நாடக ஆர்வலர்கள், தரமான வாசகர்கள் தேடிக் கண்ட படிக்க வேண்டிய புத்தகமாய் ஜெயந்தனின் இந்த நூல் அமைந்திருக்கிறது என்பதை சத்தியவாக்காக இங்கே முன் வைக்கிறேன்.

                                                ------------------------------------

01 அக்டோபர் 2023

 

தினமணி கதிர் - 01.10.2023 இதழ் பிரசுரம் 

“தனித்த பறவையின் சலனங்கள்”





  ந்த ஆலமரத்தைப் பார்த்தபோது அதன் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு தொங்கி ஆட வேண்டும் என்று தோன்றிவிட்டது யக்ஞராமனுக்கு. விபரீத ஆசைதான். ஆனாலும் தோன்றுகிறதே? மனிதனின் மனத்தில் சின்ன வயசு ஆசைகள் அப்படியே நிரந்தரப்பட்டுப் போகின்றன. நிறைவேறியவை, நிறைவேறாதவை எல்லாமும்  அடுக்கடுக்காக சேமிக்கப்பட்டிருக்கின்றன.  மரத்தை அண்ணாந்து பார்த்தார். கிளைகளுக்கு நடுவே நிழல் படுத்திருந்தது.  மூதாதையரைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.அத்தனை வருட முதிர்ச்சி அந்த மரத்துக்கு உண்டு என்பது உண்மைதானே என்று நினைத்துக் கொண்டார்.  அப்பாவோடு அந்தச் சாலையில் நடந்து போகும்போது விழுது பிடித்து ஆடியது. ஆசை தீர ஆடித் தீர்த்துவிட்டு வரட்டும் என்று பொறுமையாக அமர்ந்திருப்பார். எங்கு ஏறி எங்கு குதித்தாலும் கண்டு கொள்ள மாட்டார். குறை சொல்லுதல், கண்டித்தல் என்பதெல்லாம் கிடையவே கிடையாது. ஆனால் அவரின், அம்மாவின் அன்றாட வாழ்வியலைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த பக்குவமுண்டுதான்.

            நான்கைந்து விழுதுகளைச் சேர்த்துப் பிடித்தார். தலைக்கு மேல் அரையடி உயரத்தில்தான் இருந்தன அவை. இழுத்துப் பிடித்து ஒரு தம் கட்டி, காலைத் தரையில் உதைத்தால் ஆடி விடலாம். மனதுக்குள் ஆசை அலையிட்டது. ஒரு வேளை அறுந்து விழுந்து விட்டால்! பொத்தென்று கீழே விழுந்து வைக்க…அறிவிருக்காய்யா…இந்த வயசுலயா இது? முட்டாப்பய….மவன்… எங்கிருந்தாவது இந்தத் திட்டுதல் வருமோ?- அப்பாவுக்கும் சேர்த்துத் திட்டுக் கிடைத்தால்?

            சாலைப் பக்கம் திரும்பிப் பார்த்தார். வாகனங்கள் விரைந்து சென்று கொண்டிருந்தன. நடப்பவர்கள் தங்கள் போக்கில் நேர் பார்வையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். உள்ளூர் சந்தைக்கு வந்து திரும்பும் கிராம மக்கள். மாட்டு வண்டிகள். நின்று யாரோ ஒருவர் விழுதில் தொங்குகிறாரே என்று வேடிக்கையா பார்க்கப் போகிறார்கள்?  அவரவருக்கு ஆயிரம் வேலை.

            அந்த மரத்தை மீண்டும் கீழிருந்து மேல் உயரம் வரை பரந்து நோக்கினார். தன்னைப் போல் அதற்கும் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தவறு…தவறு…குறைந்தது நூறு ஆண்டுகளுக்கும் மேலேயே இருக்க வாய்ப்புண்டு. தனது பத்தாவது, பதினைந்தாவது வயதுகளில் தான் அதில் ஆடியிருக்கிறோம். நண்பர்களோடு வந்து மரத்து மேலெல்லாம் ஏறி, கிளைக்குக் கிளை தாவி, அங்கிருந்து விழுதுகளைப் பிடித்துக் கொண்டு கீழ்நோக்கித் தொங்கி, பேயாட்டம் போட்டிருக்கிறோம். எம்.ஜி.ஆர் அப்படி விழுது பிடித்து மாளிகை மாடத்துக்குத் தாவுவதைப் பார்த்த அதிசய சாகசம்.  ஒரே சமயத்தில் பத்துப் பேருக்கும்  மேல் தொங்கு தொங்கென்று தொங்கியும், ஒரு முறை கூட அந்த விழுதுகள் அறுந்து விழுந்ததில்லை. தங்களைக் கீழே விழுக்காட்டியதில்லை். அத்தனை பேரையும் தாங்கித்தான் நின்றிருக்கிறது. நின்றுகொண்டுமிருக்கிறது.

            இப்போது கொத்தாகப் பிடித்துக் கொண்டிருப்பவைகளும் அதே விழுதுகள்தானா? இல்லை வேறா? இவைகளுக்கு முதுமை என்பதேயில்லையா? காய்ந்து, நசிந்து, பிசிர் பிசிராய்ப் பிய்ந்து தொய்ந்து வலுவிழந்து மரத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கீழே விழுந்து, மண்ணோடு மண்ணாய்ப் போகாதா? நீண்டு நீண்டு வளர்ந்து தரையைத் தொட்டு, மண்ணுக்குள் ஆழப் பதிந்து அந்த நூற்றாண்டு மரம் ஆட்டம் காணாமல் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றுகின்றனவா? அப்படியானால் தான் பிடித்திருப்பவை புதிய விழுதுகளா?…அந்தச் சாலையின் வரிசையிலான பல மரங்கள் இவரின் நினைவில் நின்றவை. நாவற்பழ மரங்களில் ஏறி பழத்தை உதிர்த்துப் பொறுக்கிக் கொண்டு ஓடியதும், ஒப்பந்ததாரர் விரட்டியடித்ததும்…இன்று நினைத்தாலும் அடக்க முடியாத சிரிப்புத்தான் வருகிறது. அன்று அது ஒரு வெற்றி சாகசம். புளிய மரங்களில் கல்லை விட்டடித்து கீழே விழும் உதைப் பழங்களைப் பொறுக்கித் தின்னுதல். புளிய முத்துக்களைச் சேர்த்து வைத்து அம்மாவிடம் கொடுத்தல். வாசலில் கூவிக் கூவிக் கேட்டு அதை வாங்கிப் போகவும் ஆளிருந்ததே…!

            ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பின் அவர் அந்த ஊர் வந்திருக்கிறார். அது அவர் சொந்த ஊர். பிறந்து, வளர்ந்து, படித்து முடித்து வேலைக்குச் செல்லும் காலம் வரை இருந்த ஊர்.  அங்கிருந்து கிளம்பி நகர்ப்புறம் போயாயிற்று. அத்தோடு உறவு விட்டுப் போனது. சொந்த ஊர் யாருக்காவது மறக்குமா? அந்தப் பாசம் விட்டுத்தான் போகுமா? மனதின் மூலையில் அதற்கு ஓர் இடம் இருக்கத்தான் செய்யும்.

             அதனால்தான் வந்திருக்கிறார். ஆனால் இதில் ஒரு புதுமை. தான் வந்திருப்பது யாருக்கும் தெரியாது. தெரியக் கூடாது. அதுதான் அப்போதைய அவரது விருப்பம். அப்படிச் சென்று வருவதில் ஏதோவொரு ஸ்வாரஸ்யம் இருப்பதாக உணர்ந்தார். தான் வாழ்ந்த பழைய ஊரை மனதில் வைத்து நடை போட்டார். ஏனோ அன்றிருந்த சந்தோஷம் இன்றில்லை.

            ஊரிலே இன்னமும் அங்கேயே இருந்து கழிக்கும் ஒன்றிரண்டு உறவுகளும் உண்டுதான்.  அந்தச் சிறு நகரை விட்டு வெளியேறாதவர்கள். அவர்களைப் பார்க்கும் எண்ணமில்லை. பல வருடங்களாக விட்ட தொடர்பு விட்டதாகவே இருக்கட்டும் என்று எண்ணினார். புதுப்பித்து என்னத்தப் பெரிசாக் கிழிக்கப் போறோம்?   வாடகைக்குக் குடியிருந்த மூன்று தெருக்களில் ஏறக்குறைய ஒருவர் கூடப் பழையவர்கள், தன் கூடப் படித்தவர்கள் என்று யாருமில்லை. யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாதே என்கிற கவனத்தில் ஒரு ரவுன்ட் வந்து விட்டார்தான். யாரேனும் தெரிந்தவர் பார்த்து விட்டால் என்கிற சந்தேகத்தில்தான் சுற்ற ஆரம்பித்தார். எழுபது ஆண்டுகள் நிறைவுற்ற வேளையில் தன் வயதொத்த யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை. தெரிந்தவர்போல் இருந்தவருக்கும் இவரை அடையாளம் தெரியவில்லை. யாரு? என்கிற கேள்வியோடேயே குறுகுறுவென்று உற்றுப் பார்த்தார்கள். இவரும் கடந்து வந்து விட்டார்.ஞாபகங்களும் அற்றுப் போய்விட்டன. அவராயிருக்குமோ? இவராயிருக்குமோ? என்றுதான் தோன்றியது.  நின்று பழைய நினைவுகளை அசைபோடலாம் என்று ஏனோ எண்ணமில்லை. காலம் அந்த அலுப்பைக் கொண்டு வந்து விட்டது.  மற்றவரோடு வாய்விட்டுப் பகிர்ந்து கொள்வதைவிட, மானசீகமாக நினைத்துப் பார்த்து பல்வேறு உணர்ச்சிகளுக்கும் ஆளாவதில்தான் திருப்தியிருந்தது. மனசு ஒன்றை எண்ணிப் பார்த்து உருகுவதிலும், சந்தோஷிப்பதிலும் இருக்கும் திருப்தி வெறும் நாக்கு நுனி  உரையாடலில் கிடைத்து விடும் என்று தோன்றவில்லை. ஆத்மார்த்தமாய் இருப்பது ஜடமாயினும் சரி…அதிலேதான் இஷ்டம்.

            இல்லையென்றால் தாவித் தாவிக் குதித்து நீச்சலடித்த ஆற்றின் நடுநாயகமான அந்த யானைக்கல், குதிரைக்கல்லை அத்தனை நேரம் ஒற்றையாய் அமர்ந்து அப்படிப் பார்த்துக் கொண்டிருப்பாரா? இன்று என்னை யாருமே சீந்துவதில்லை, எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆறே இல்லையே…பிறகு என்னை எங்கே நினைக்கப் போகிறார்கள்? என்று அவை சொல்வதுபோல் உணர்ந்தார். அன்று சிறு மலையாய்த் தோன்றிய அந்தக் கற்கள் இன்று சின்னஞ்சிறுசாய் குறுகி நின்றன. அதற்கும் மூப்பு வந்துவிட்டதோ? கண்ணீர் முட்டியது இவருக்கு. மனுஷன் எழுபது, எழுபத்திரண்டுல போயிடணும். அதிககாலம் இருக்கக் கூடாது. நமக்கும் சிரமம். அடுத்தவங்களுக்கும் கஷ்டம்…! தினமும் இதைத்தானே வேண்டிக்கொண்டேயிருக்கிறார்?

            நிறைய வீடுகள் மாறியிருந்தன. இடித்துக் கட்டப்பட்டிருந்தன. நடு நடுவே கல்யாண மண்டபங்கள் தோன்றியிருந்தன. கார் ஷெட்டுகள் தென்பட்டன. பாழ் என்று சொல்லப்படும் புதர்களடங்கிய வெற்றிடங்கள் ஒன்றும் இல்லை. அன்றெல்லாம் நாள் பூராவும் வெயில் வீணாகுதே என்று விளையாடிவிட்டு ஒன்றுக்கிருக்க ஒதுங்கிய இடம் அவை. பாம்பு, தேள், நட்டுவாக்காளி என்று பார்த்து ஓட்டம் எடுத்தாலும், திரும்பவும் சிரமபரிகாரத்திற்கு அங்குதான் ஒதுங்கும் பிள்ளை மனம். அவசரத்துக்கு ஆய் போன இடமும் அதுதான். இப்போது நினைத்தால் சிரிப்புதான்.

 ஒன்றிரண்டு கவர்ன்மென்ட் ஆபீஸ்கள் கூட முளைத்திருந்தன. குடியிருக்கும் தெருவுக்குள் அலுவலகங்கள் வந்திருப்பது  பொருத்தமில்லாமல் தோன்றியது.  வீதி அமைதியாயிருந்தது.  ஆட்கள் நடமாட்டமேயில்லை.  ஆபீஸ் நாளில் பரபரப்பாகலாம்.

 வீட்டுக்கு வீடான திண்ணைகள் அதில் படுத்து உருண்டவர்களின் கதையைக் கிளறின.  தெருக் குழாய்கள் இடிபாடுகளாய்த் தென்பட்டன. வியர்க்க வியர்க்க நாள் பூராவும் நாயாய் அலைந்து விளையாடிவிட்டு ஊர்ப் புழுதி அத்தனையையும் மேலே பரத்திக் கொண்டு அந்தத் தெருக் குழாயில் வந்து கையேந்தித் தண்ணீர் குடித்து தாகம் ஆற்றியது நினைவுக்கு வந்தது.

ஆற்று மணலில் நாள் முழுதும் உருண்டு புரண்டுவிட்டு…கடைசியாக நூறடி நீளம்..பத்தடி அகலம் என்று போடப்பட்டிருக்கும் ஓடுகாலில் சென்று தலைப்பகுதியில் ஊற்றெடுக்கும் இடத்தில் இரு கைகளையும் குவித்து நீரை அள்ளி உறிஞ்சி தாகம் தீர்த்தது நினைவுக்கு வந்தது. ஆஉறா…அந்தத் தண்ணீருக்குத்தான் என்ன ருசி? மண் அடுக்குகளில் நீர் தளதளவென்று நிறைந்திருந்ததும், தோண்டத் தோண்ட வெளி வரும் மேலான கலங்கிய நீர் ஓடி வெளியேறி, தெளிந்த, குளிர்ந்த, ஸ்படிக நீரை தலையைக் குனிந்து அப்படியே உறிஞ்சிய சுவை சாகும்வரை மறக்குமா என்ன?

வீட்டு வாசலில் தண்ணீரோடு நிரம்பிக் காட்சியளிக்கும் வாளிகள் இல்லை. ஊர் சுற்றி விட்டு கால் கழுவாமல் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்க முடியாது. ஓரத்துச் சாக்கடைகள்  ஓட்டமில்லாமல் தேங்கிக் கிடக்கின்றன. வருடம் ஐம்பது, அறுபது தாண்டியும் இன்னும் அதற்கு விமோசனமில்லை. பாதாளச் சாக்கடைகள் உருப்பெறவில்லை. பூமியில் தண்ணீர் அடியாழத்திற்குப் போய் பலகாலமாயிற்று என்றார்கள். வீட்டிற்கு வீடு தண்ணீர்க் குழாய் வந்தபாடில்லை. எப்படிச் சமாளிக்கிறார்கள் என்று தெரியவில்லை. பிளாஸ்டிக் குடங்களைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் சிலர் பறப்பதைப் பார்க்க முடிந்தது. இண்டு இடுக்கு இல்லாமல் நிறையக் குடங்களை அடுக்கிக்கொண்டு ஒரு ஆள் டிரை சைக்கிளில் போகும் காட்சி மனதைப் பதற வைத்தது.

 இப்போது தண்ணீர் எங்கிருந்து வருகிறது? இந்த மக்கள் தண்ணீருக்குப் பாடாய்த்தான் படுகிறார்களோ? மனசு சங்கடப்பட்டது. குடம் இவ்வளவு என்று காசு கொடுத்து வாங்குவார்களோ? மினரல் வாட்டர் என்றொரு சிறிய வேன் போய்க் கொண்டிருந்தது. ஒரு குடம் பன்னிரெண்டு ரூபாய் என்றார்கள். அந்த வேன் டேங்கை என்று சுத்தம் பண்ணினார்களோ?  எல்லாமும் இங்கே காசாகி விட்டது. இருப்பவன்தான் சமாளிக்க முடியும். இல்லாதவன் சீரழிய வேண்டியதுதானா?

            கம்பிக் கழியிட்ட வாத்தியார் அகோபிலம் வீடு அப்படியே இருந்தது. யார் யாரோ பெண்மணிகள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். பழைய தலைமுறை ஆட்கள் எவரும் தென்படவில்லை. இவர்கள் அவரின் உறவுகள்தானா அல்லது வேற்று ஆட்களா?  திண்ணையில் மாட்டியிருக்கும் அவர் தன் சைக்கிளோடு நிற்கும் ஃபோட்டோ மட்டும் கறையேறி அப்படியே தொங்கிக் கொண்டிருந்தது. வேற்று ஆட்கள் என்றால் அதை அகற்றி இருப்பார்களே என்று தோன்றியது. அன்று சைக்கிள் வைத்திருந்த ஒரே ஆசிரியர் அவர்தான். தினமும் அதை அவர் துடை துடை என்று துடைத்துப் பளபளவென்று வைத்திருப்பது  பார்ப்போருக்குப் பெரிய அதிசயம். அதில்தான் மூன்று தெருக்களையும் சுற்றிச் சற்றி வருவார். அங்கங்கே படிக்காமல் வெட்டியாய் நாள் முழுதும் விளையாடிக் கொண்டிருக்கும் பசங்களை விரட்டிப் பிடித்துக்  கண்டித்து வீட்டுக்கு அனுப்புவார். தன்னலமற்ற சேவை அது. ஏழைப் பையன்களுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பார். எம்பிள்ளை மாதிரி…நானாக்கும் அவனைப் படிக்க வைக்க இருக்கேன்…விட்ருவேனா லேசா…என்கிற பெருமிதம். ஒவ்வொரு பிள்ளை மீதும் தனிக் கவனம்.

பள்ளிக்குச் செல்லும் போது கோயில் தெரு சுந்தர்ராஜன் வாத்தியார் பத்துக் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வார். கட்டுக் குடுமியும், கோட்டும் பஞ்சகச்சமும் நெற்றியில் துலங்கும் குங்குமம் சந்தனமும், அப்படியே காலில் விழுந்து வணங்கத் தோன்றும். ஒவ்வொரு பிள்ளைகளையும் முன்னேற்றணும், நல்ல உத்தியோகத்துக்குப் போகச் செய்யணும், குடும்பத்தைக் காப்பாத்துறானா என்று கண் குளிரப் பார்க்கணும் என்று ஆதங்கப்பட்டு உழைத்த அந்த தியாகத் தலைமுறை இனி வரவா போகிறது? நல்லாசிரியர் விருது பெற்றபோது அந்த ஊரே மகிழ்ந்தது. இந்த விருதுக்காகவா நான் பண்ணினேன் இதையெல்லாம்? இது அவர் கேள்வி.

            திண்ணையில் உட்கார்ந்து தெருக்கம்பத்தின் வெளிச்சத்தில் படித்ததும், வாடகைக்குக் குடியிருந்த அந்த வீடும் அப்படியேதான் இருந்தன. வெளியே இருந்து பார்த்தபோது யாரும் இருப்பதாகவே தோன்றவில்லை. அதற்கான அடையாளம் எதுவுமில்லை அங்கே. சாக்கடை மணத்தில் திவ்யமாய் உட்கார்ந்து பாடம் படித்த அந்த நாட்கள். மின்சார வசதியில்லாத வீடு இன்னும் அப்படியேதான் இருந்தது. சற்றே பாழடைந்தது போல.  உள்ளே போய்ப் பார்ப்போமா என்று தோன்றிய ஆசையை அடக்கிக் கொண்டார். யாருக்கும் தன்னைத் தெரிந்து விடக் கூடாது என்பதுதானே திட்டமே…அப்படியிருக்க…திறந்து கிடக்கும் வீட்டில் நாம்பாட்டுக்கு நுழைந்தால்…எதற்கு இந்த அசட்டு எண்ணம்…?

            அன்று அகல அகலமாய்த் தோன்றிய தெருக்கள் இன்று ஏன் இப்படிக் குறுகிப் போயின. அதே தெருக்களும் சந்துகளும்தானே? நம் மனம்தான் குறுகிப் போனதோ?  முடுக்கு சந்து என்று இருந்தது என்னவோ ஒரு கோடு போட்டாற்போன்ற இடைவெளியோடு தென்பட்டது. அந்த வழியாகத்தான் இருட்டில் பெட்டியைத் திருடிக் கொண்டு ஓடினார்கள். இனம் தெரியாமல் விரட்டிப் பிடிக்க ஓட, மண்டையில் விழுந்த அடியும், அதன் பின் தெருவே அப்பாவை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரி போனதும், பிறகு எல்லோரும் கூட்டமாய் போலீஸ் ஸ்டேஷன் போய் நின்றதும்…எடுத்துச் சென்ற பெட்டியை ஆற்றுக்கு அந்தப்புறம் தென்னந்தோப்பு தாண்டி இருக்கும் காய்ந்த வயற்காட்டில் கொட்டி, பாதுகாத்து வைத்திருந்த சில நகைகளையும், பட்டுப் புடவைகளையும் எடுத்துக் கொண்டு, மற்றதைப் பெட்டியோடு அப்படியே விட்டு விட்டு ஓடி விட்ட திருடர்கள் பின்னாளில் பிடிபட்ட போது….அடையாளம் சொல்லுங்க சாமி…இவிங்கதானா…? என்று கேட்க, அப்பா, போனாப் போகட்டும் விடுங்க…என்று, காட்டிக் கொடுக்காமல் தெரில என்று சொல்லிவிட்டதும்…அந்த நாளின் நினைவலைகள் அப்பாவின் இரக்க குணத்திற்கு சான்றாய். என்றோ எங்கோ ஒரு தவறு, திருட்டு நடக்கும். இன்று அப்படியா? அதுவே வாழ்க்கையாய் மாறி விட்ட காலம் இது!! தவறுகளும் குற்றங்களும் நடக்காத நாள்தான் ஏது? சுற்றிலும் நல்ல மனிதர்களோடு வாழ்வதெப்படி…எவன் என்ன செய்வானோ, எப்படிப் பேசுவானோ, எங்கிருந்து உதிப்பானோ…என்று எதையும் சந்தேகிக்கும் சமுதாயமாகவே ஆகிவிட்டதெப்படி?

            இந்த நிமிடம் வரை, தான் யார் என்று எவருக்கும் அங்கே தெரியாது.  எல்லாரும் புது முகங்களாய் இருந்தார்கள். தலைமுறை இடைவெளி மாற்றத்தில் பழைய ஆட்கள் எவருமில்லை அந்த ஊரில். ஒன்று படிப்படியாக இறந்திருக்க வேண்டும்…அல்லது தன்னைப்போல் வேற்றூருக்கு நகர்ந்திருக்க வேண்டும்.

            அப்படியானால் யாருமே சொந்த ஊரைப் பார்க்க வேண்டும் என்று வருவதில்லையா? எவருக்கும் ஆர்வமில்லையா? அடிப்படை ஒழுக்கத்தையும், வாழ்வின் நியமங்களையும் கற்றுக் கொடுத்த ஊரல்லவா அது? அந்த ஊரில் வளர்ந்துதானே வெளியிடங்களுக்குப் போய் நிலைத்தோம்? அங்கு கற்றுக் கொண்ட நல்லொழுக்கமும், கட்டுப்பாடும்தானே இன்றுவரை நிலைத்து வழி நடத்துகிறது?

            என்னடா எந்நேரமும் விளையாட்டு? விளையாண்டது போதும்…போய்ப் படிக்கிற வழியப்பாரு….

            சாயங்காலம் ஆச்சுன்னா கோயிலுக்குப் போய் கும்பிட்டுட்டு, சட்டுன்னு பாடம் படிக்க உட்காராம இங்கென்ன சினிமாக் கொட்டகைப் பக்கம் அலைஞ்சிட்டிருக்கே….! போ…போ…வீட்டுக்கு ஓடு….உங்கப்பாட்ட சொல்லணுமா…?

            ஓட்டல்ல வேலை பார்த்து, உங்கப்பா உங்களைப் படிக்க வைக்கிறார்…தெரியுமோல்லியோ…நீ இப்டி ஊர் சுத்திட்டிருந்தீன்னா எப்படி? நாளைக்கு நீ வேலைக்குப் போயி, அவாளை உட்கார வச்சுக் காப்பாத்த வேண்டாமா? இங்கே திருவிழாக் கூட்டத்துலே தினமும் சுத்திட்டிருந்தீன்னா? வீட்டுக்குப் போய்ப் படிக்கிற வழியப் பாரு……ஓடு…உங்கம்மாட்டச் சொன்னேன்…சட்டுவத்தக் காய்ச்சி ஒரு இழுப்பு இழுத்துப்பிடுவா…தெரிஞ்சிக்கோ….ஏது காசு உனக்கு? யாரு கொடுத்தா? உங்கம்மாட்டச் சொல்றேன்….

            ஊரில் இருந்த ஒவ்வொருவருக்கும் என்னவெல்லாம், எப்படியெல்லாம் அக்கறை இருந்தது? மற்றவர் பிள்ளைதானே என்று யாரும் விட்டதில்லையே…விலகிப் போனதில்லையே…? பணக்காரர், ஏழை என்கிற வித்தியாசமில்லாமல் மனிதனுக்கு மனிதன் சமம், ஏற்றத்தாழ்வு என்பது எதுவுமில்லை என்று வாழ்ந்த  அருமையான ஜீவன்களாயிற்றே….தன் கண் காணும் ஒவ்வொருவரும் வாழ்வில் ஏற்றம் காண வேண்டும் என்று ஆசைப்பட்ட மனிதர்களாயிற்றே...

             இவைகளை மானசீகமாய் அனுபவிக்க…புதுப்பித்துக் கொள்ளத்தான், யாருக்கும் தெரியாமல், எவருக்கும் சொல்லாமல் இங்கே வந்திருக்கிறேனா? அந்த ஆத்மார்த்தமான நல் உணர்வு அழிந்து போய்விடக் கூடாது என்றுதான் இந்த அமைதி காக்கிறேனா? யாருக்கும் தன்னை அடையாளம் தெரியவில்லை. அவர்களையும் இவனுக்கு அடையாளம் தெரியவில்லைதான். இவராயிருக்குமோ? அவர் பிள்ளையோ? அந்தக் குடும்பமா இது? என்றெல்லாம் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் வாய்விட்டுக் கேட்க ஏனோ மனம் தயங்குகிறது. அன்று அவர்கள் இருந்த அதே கெத்தில் நின்று இன்றும் பதில் சொன்னால்?

            ஓட்டல்ல வேலை பார்த்தாரே…அவர் பிள்ளைதானே நீ? என்பார்களோ? வேலை பார்த்து சம்பாரிச்சுத்தானே குடும்பத்தைக் காப்பாத்தி உயர்த்தி நிறுத்தினாரு? எங்கேயும் திருடலையே, திருடிப் பிழைக்கலியே? யாரையும் ஏமாத்தலையே? பிச்சையெடுக்கலியே?  யாருக்கும் வஞ்சகம் பண்ணலையே? யாரையும் பழிக்கலையே? யார்ட்டயும் சண்டை போடலியே? தான் உண்டு தன் வேலையுண்டுன்னுதானே இருந்தாரு? அவர மாதிரி முன்னேறின குடும்பம் ஒண்ணைச் சொல்லு பார்ப்போம்? யாரேனும் முரணாய், யோசிக்காமல் ஏதேனும் கேட்டு வைத்தால், இன்று அவர் பதில் இதுவாய்த்தான் இருக்கும்.

            வாழ்க்கையையே தியாகமாக்கி தெய்வமான மனுஷனக் காண்பிங்க பார்ப்போம்…! வாய்விட்டுக் கத்த வேண்டும்போல் இருந்தது. அப்பா அம்மாவின் தியாகங்களை எண்ணி எண்ணி மனம் பெருமிதம் கொண்டது.

ஆனாலும் இளம் பிராயத்து விளையாட்டுக்கள் என்றும் மறக்க முடியாதுதான். இன்று மீண்டும் செய்ய முடியாதவைகளாயிற்றே அவைகள். முடியுமென்றால்தான் இந்த ஆலமர விழுதிலேயே ஆடித் தீர்த்திருக்கலாமே…!

            அந்த வழியே வீச்சு வீச்சென்று நடந்து பக்கத்துக் கிராம மாரியம்மன் கோயில் திருவிழாவுக்கு  வீட்டில் சொல்லாமல் போய் வந்ததும், ஏன் அங்கெல்லாம் போனே…ஏது காசு…யாரு கொடுத்தா…எங்கயானும் திருடினியா? உள்ளதச் சொல்லு…இல்லன்னா அடிச்சே கொன்னுடுவேன்….என்று அம்மா தொடையில் இழைத்ததும், அடியாத பிள்ளை படியாது என்பது எவ்வளவு நிஜமாகிவிட்டது?  இன்று பள்ளிக் குழந்தைகளை ஆசிரியரே தொட முடியாதே? கண்டிச்சு வளர்க்காத பிள்ளை கட்ட மண்ணாத்தான் போகும் என்பார்களே!  அது எத்தனை சத்தியமான வார்த்தைகள்? அம்மா கொடுத்த காசில் அரையணாவுக்கு கலர் சர்பத் வாங்கி பெரிய கண்ணாடி கிளாசில் வயிறு நிரம்பக்  குடித்தோமே? அந்த ருசி இன்று வருமா?

            எதிர்த்தாற்போல் இருந்த பெட்ரோல் பங்க்கின்  நுழை வாயிலில் இருந்த பாலத் திட்டில் உட்கார்ந்தார். அந்த பங்க்கும் எதிரே அந்த மரமும் எத்தனை வருடங்களாய் இருக்கின்றன? வாக்கிங் வருகையில் அங்கேதானே மணிக்கணக்காய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம்? படம் போடப் போவதற்கு அடையாளமாய் கடைசிப் பாட்டாய் “மருதமலை மாமணியே முருகையா…”  கேட்டவுடன்தானே வீட்டிற்குக் கிளம்புவோம்?

            ஆனால் அன்று மனதில் இருந்த நிம்மதி இன்று இல்லை. பற்றாக்குறைக் காலத்திலும் இருந்த சந்தோஷம் இன்று நிச்சயமாய் இல்லை.  வெறும் பணம் நிம்மதியைத் தராது என்பது எத்தனை சத்தியமான உண்மை? வாழ்க்கை இன்று என்ன அப்படி சந்தோஷமானதாய் அமைந்து விட்டதா? ஏற்றத்தாழ்வு என்பதே இல்லையா? குறை நிறைகளே கிடையாதா?

            தான் தனது சொந்த ஊருக்கு  வந்திருப்பது பார்கவிக்குத் தெரியாது. மதுரை வீட்டில்தான் இருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருப்பாள்.  அங்கிருந்து சென்னை சென்ற பின் போகவும் வரவும் என்று இன்றுவரை அலைச்சல் தொடருகிறதுதான். நான் வரலை என்று அவள் சொல்லிவிட, கிட…என்று விட்டு விட்டு இவர் கிளம்பி விடுகிறார்.

            அவளுடன் வந்து ஒரு மாதமேனும் தனியே இருக்க வேணும் என்கிற அவாதான். வந்தால்தானே? தனக்கிருக்கும் ஆசை மற்றவருக்கும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அவளுக்கென்று தனி சிந்தனை உண்டுதான். அவளுக்குப் பையனோடு இருப்பதில்தான் விருப்பம்.

கல்யாணம் பண்ணினமா, தனிக்குடித்தனம் வச்சமா, கிளம்பினமான்னு இருக்க வேண்டாமா? அதென்ன பையனோடு பசையாக ஒட்டிக் கொண்டிருப்பது? அது அவன் மனைவிக்குப் பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம்.  வாய்விட்டுச் சொல்லத் தயங்கலாம்…அல்லது …இருந்து தொலைச்சிட்டுப் போகட்டும் என்றும் நினைக்கலாம்.  யார் மனசுக்குள் என்ன இருக்கும் என்று யார் கண்டது? ஒருவேளை கணவனிடம்  சொல்லி…அவசரப்படாதே…படிப்படியாச் செய்வோம்..கொஞ்சம் பொறு என்று கையமர்த்தியிருக்கலாம். கொஞ்ச நாளிலேயே முந்தானையைப் பிடித்துக் கொண்டுதானே திரிகிறார்கள். ஆனால் வெளியில் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள்.

கோழை என்கிற பட்டத்தை வெளிப்படையாக வாங்கிவிடக் கூடாது. ஆனால் மனதுக்குள் அறிந்தும் கோழையாயிருக்கலாம்.   

அப்பாம்மாவிடம் எப்படி இதைச் சொல்வது என்கிற தயக்கத்தோடு யோசித்துக் கொண்டிருக்கலாம். எது சமயம் என்று காத்திருக்கலாம்.எப்படி வெளியேற்றுவது?  அவர்களாகக் கழன்று கொண்டால் தேவலை…பழி இல்லாமல் போகும்.  

சாவு வந்தாலும் தேவலை. அதற்கு நாள் வர வேண்டுமே…! கழுத்தைப் பிடித்தா நெறிக்க முடியும்? …இவளுக்கென்ன நஷ்டம்…வயசான காலத்துல அவங்க எங்க போவாங்க…உங்க அப்பா உங்க தாத்தா பாட்டியை வச்சுக் காப்பாத்தலயா…அதுபோல எங்கப்பாம்மாவை நான் வச்சுக் காப்பாத்தறேன்…இதில உனக்கென்ன நஷ்டம்? எங்கம்மா என்ன சும்மாவா உட்கார்ந்திருக்காங்க…தினமும் சமையல் வேலையை அவுங்கதான கவனிக்கிறாங்க…? கிச்சன் கன்ட்ரோல் அவுங்க கைலதான இருக்கு…நீ ஜாலியாத்தான இருக்கே…வாரா வாரம் ஓட்டல்ல போய் உன் விருப்பத்துக்குத் திங்கறோமில்ல…பிறகென்ன? கம்னு இரு….என்று சொல்லி  அடக்கியிருப்பானோ? அவ்வளவு தைரியசாலியா நம் பையன்? இவருக்கு நம்பிக்கையில்லைதான். எப்பொழுது ஒருத்தன் அமுக்குணியாக இருக்கிறானோ அப்பொழுதே அவனைக் கணித்து விடலாம். அவன் பொண்டாட்டியின் காலைப் பிடிக்கிறவன் என்று….ஆண்மகனுக்கு எது அழகு? தன்னொழுக்கம். தன் கடமை தவறாறிருப்பது. தான் இருக்கும் இடத்தில் இருந்தால் அந்த மதிப்பு தானே வந்து சேர்கிறது? வராமல் விலகி விடுமா என்ன? நியாயத்தை எடுத்துச் சொல்லத் திராணி இல்லாதவன் என்ன ஆம்பளை?

எல்லாச் சண்டையும் போட்டு ஓய்ந்து, இப்போது அவனும் அமைதியாகிவிட்டான். எப்பப் பார்த்தாலும் எதுக்கு சண்டை? என்று அவளோடு அளவாகத்தான் பேச்சு வைத்துக் கொண்டிருக்கிறான். கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்கிறான். இவனாகப் போய் அவளிடம் எதுவும் பேசுவதில்லை. அவளும் இவனிடம் வந்து நிற்பதில்லை. ஒரே வீட்டில் தனித்தனியாக இருக்க முடியுமா? ஏன் முடியாது? தீவுகளாய் வளைய வர வேண்டியதுதான்.

வாரத்தில் ஒரு நாள் கோயிலுக்குச் செல்கையில் சேர்ந்து செல்கிறார்கள். விதியே என்று இவரும் கூடப் போகிறார். முன்புபோல் இவரால் அலைய முடியவில்லை. அதனால் வேறு வழியின்றிக் கிளம்பிப் போகிறார். வரலை என்று கூறினால் அதுக்கு ஒரு சண்டை கிளம்பும். உங்கப்பா வேணும்னே சொல்றார்.   நான் கூட வர்றதுனால பிடிக்கலை. …உங்கம்மாவும் அப்படித்தான். பலிகடா மாதிரிக் கிளம்பி வர்றாங்க…எங்கூட வர்றதுக்கு…விருப்பமில்லை. நான் எல்லோரோடையும் சுமுகமா இருக்கணும்னுதான் நினைக்கிறேன்….அதுக்குத் தடையா இருக்கிறது இவங்கதான். ஏன்னா அவங்களுக்கு என்னைப் பிடிக்கலை…அதுதான் உண்மை…

இல்லாட்டாலும்….என்றார் இவர். உன் குணத்திற்கு யாருக்குத்தான் உன்னைப் பிடிக்கும்? புகுந்த இடத்தில் எப்படியிருக்க வேண்டும் என்று அப்பன் ஆத்தாள் சொல்லியே கொடுத்திருக்க மாட்டார்களா? நாளைக்கு இன்னொரு வீட்டிற்குச் செல்லும் பெண்ணை எப்படி வளர்த்திருக்க வேண்டும்? திங்க, தூங்க, கக்கூஸ் போக, வெளியே சுற்ற, சினிமா பார்க்க, மால்களுக்குள் நுழைய, வேண்டாத, தேவையில்லாத பொருட்களையெல்லாம் அர்த்தமில்லாமல் வாங்கிக் குவிக்க, வீட்டை அடைக்க, வெளியே ஓட்டலுக்குப் போய் கண்டதையும் ஆர்டர் பண்ணித் தின்க, வீட்டுக்கு வர, மொபைலைத் திறந்து வைத்துக் கொண்டு சினிமாப் பார்க்க…பிறகு படுத்து உறங்க…எழ, கக்கூஸ் போக….இதுதானா வேலை? ஒரு நியமம் என்று எதுவும் கிடையாதா? அட…பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திரிக்க வேண்டாம்…ஒரு ஆறு, ஆறரை, ஏழு  என்றாவது படுக்கையை மடக்க வேண்டாமா? காலா காலத்தில் குளித்தோம், ….தலைவாரி நெற்றிக்கு இட்டுக் கொண்டோம், சாமி கும்பிட்டோம் என்று ஒன்று இல்லையே? என்ன பெற்றோர்கள் இவர்கள்? இப்படியா ஒரு பொம்பளப் பிள்ளையை வளர்ப்பது? இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டாமா?  வயிற்றெரிச்சல் தாளவில்லை யக்ஞராமனுக்கு.

பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளைச் சாரும் என்பார்கள். அப்படி என்ன பாவம் செய்தேன்? முன் ஜென்மத்துப் பாவம் இப்போது தொடர்கிறதோ? உள்ளுக்குள் இன்றுவரை அழுது கொண்டுதான் இருக்கிறார். பையனுக்கு சரியாகப் பார்த்து முடிக்கவில்லயோ என்கிற சந்தேகம் இன்னும் அவரை வாட்டி எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. இனி என்னதான் செய்ய முடியும்? இருப்பதை வைத்து ஓட்ட வேண்டியதுதான். நமக்கு அட்ஜஸ்ட் ஆகலைன்ன நாம அட்ஜஸ்ட் ஆகிக்க வேண்டிதான்…பையனுக்கு அந்த மெச்சூரிட்டி இருக்கத்தான் செய்கிறது. வாழ்ந்தாக வேண்டுமே….

ஆனால் இவருக்குள் புழுக்கம் தீர்ந்தபாடில்லைதான். அதற்காகவே அவர் மாதம் ஒரு முறை எப்படா ஊர் போவோம் என்று கிளம்பி விடுகிறார். கண்ணிலிருந்து மறைந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டார். அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழட்டும், என் கூட வந்து விடு என்றால் பாவி அசைய மாட்டேன் என்கிறாளே? கொஞ்சமாவது கூர் இருக்கிறதா உனக்கு என்று பலமுறை திட்டிவிட்டார். சுரணை இருந்தால்தானே? சண்டையோ, சச்சரவோ ஒருத்தருக்கொருத்தர் சரியாய்ப் போகும்…நாமும் கூட இருந்து கழுத்தறுத்தால்தான் அது பகையாய் மாறும். பொறுமிப் பொறுமி வெடிக்கும். ஒரு வேளை அந்தப் பெண்ணின் ஆழ் மனத்தில் தனிக் குடித்தனம் நடத்தணும் என்கிற  ஆசையிருந்தால்? சொன்னால் அது தன் அப்பா காதுக்குப் போய் சண்டையாய் வெடிக்கும் என்கிற பயமோ?

 சம்பந்தியே கூட அதுவாய் அப்படி நடந்தால் நடக்கட்டுமே என்று  நினைக்கலாம். நாம இதிலெல்லாம் தலையிட்டோம் என்று இருக்க வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கலாம். பிக்கல் பிடுங்கல் இல்லாமல் தன் பெண் விட்டேற்றியாய், ஜாலியாய், சந்தோஷமாய் இருக்க வேண்டும் என்று எந்தத் தகப்பன் விரும்ப மாட்டான்? இவருக்குள் படம் ஓடிக் கொண்டேதான் இருந்தது.

ஊருக்குப் போக ரிசர்வ் பண்ணி விட்டு அந்த நல்ல நாளுக்காகக் காத்திருக்கிறார். என்னவெல்லாம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்,  அங்கு போய் என்னென்ன லோக்கல் வேலைகளைக் கவனிக்க வேண்டும், சமையலுக்கு என்னவெல்லாம் சுருக்கமாய் வாங்கி வைக்க வேண்டும் என்று பட்டியலிட்டுக்  கொள்கிறார்.

எந்தச் சண்டையும் சச்சரவும் இல்லாத மயான அமைதியை அவர் மனது நாடுகிறது. யாருடைய குறுக்கீடும் இல்லை என்பதை ஊரில் தன் தனி வீட்டில் இருக்கும்போது நினைத்து நினைத்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறார். மனைவி வரவில்லையே என்ற வருத்தமிருந்தாலும், தனியாய் இருப்பதிலே ஒரு சிறப்பு சுகம் கண்டார். அவர் மனது சந்நியாச நிலையில் தற்போது பயணித்துக் கொண்டிருந்தது. எல்லாமும் கடைசியில் வெறுமையில்தான் முடிகின்றன என்று இப்போது நினைக்க ஆரம்பித்திருந்தார். எத்தனை கோடி கோடிப் பேர் வாழ்ந்து மறைந்த உலகம் இது…அவர்களெல்லாம் நினைக்கப்படுகிறார்களா என்ன? முன்னோர்களின் நினைவு நாளின் போது மூன்றாவது தலைமுறை பேர் சொல்லுங்கோ என்னும் போது தற்போதைய தலைமுறைப் பெயர்தான் மூன்றாவது  தலைமுறைக்கும் என்று சொல்வதில்லையா? அப்படித்தான் இருந்திருக்கும் என்கிற ஊகத்தில் சொல்வதுதானே அது? அதற்கு முன்பு, அதற்கும் முன்பு…இருந்து வாழ்ந்து மறைந்த இந்த வம்சத்தவர்களின் பெயர்களை யாரேனும் சொல்ல முடிகிறதா? எல்லாமும் அடையாளம் தெரியாமல் போவதுதான் கடைசியில். எண்ணப் பறவைகள் சிறகடித்துப் பறந்தன யக்ஞராமனுக்கு. தத்துவார்த்தமாய் மனதில் உருப்பெறும் எண்ணச் சிதறல்கள் அவர் மனதுக்குப் பிடித்திருந்தது. இந்த வகைத் தனிமையையும், அமைதியையுமே தன் மனது விரும்புகிறது என்று உணர்ந்தார்.

நம் மீதி வாழ்க்கையை நாம் வாழ்வோம்…அவர்களின் புதிய வாழ்க்கையை அவர்கள் வாழட்டும் என்கிறார் இவர். கேட்டால்தானே? என்று அவர்கள் அனுபவப்படுவது? அவர்கள் குடும்பத்தை அவர்கள் நடத்தட்டுமே…! சின்ன வயசுதானே…மாங்கு மாங்கு என்று வேலை செய்தாலும், ஓய்ந்து போகப் போவதில்லை. வளரும் மரம்…வேலை செய்யச் செய்ய உரம் பெறத்தான் செய்யுமேயொழிய தளர்ந்தா போகும்? தளர்ச்சியெல்லாம் ஐம்பது வயதுக்கு மேல்தான்….என்று சொன்னால் கேட்டால்தானே? கூட இருந்தே கழுத்தறுப்பேன் என்று சொல்லிவிட்டாள். அம்மாவை விரட்ட அவனுக்கும் தைரியமில்லை. பெண்டாட்டியை அடக்கவே தைரியமில்லையே…பயந்து சாகிறானே? அப்புறம் எப்படி பெற்று வளர்த்த அம்மாவைச் சமாளிக்கப் போகிறான்? இடுக்கி நடுவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.

எங்கள் ரெண்டு பேருடைய சேமிப்பும், பென்ஷனும் இருக்கிறதே….விட முடியுமா? விரட்டி விட்டால் நாளைக்கு ஏதேனும் தர்ம ஸ்தாபனத்துக்கு எழுதி வைத்து விட்டுப் போய் விட்டால்? ஆளைப் பிடிக்கிறதோ இல்லையோ அந்தக் காசைப் பிடித்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் ஊரிலுள்ள அந்த வீடும் கைக்கு வந்து சேரும். அதை வாடகைக்கு விட்டால் வேண்டாம் என்றா இருக்கிறது?  இருபத்தஞ்சாவது வங்கிக் கணக்கில் மாதா மாதம் சேராதா? அது காசில்லையா.  அந்தக் காசு வந்தால் கசக்குமா? ஒன்றுக்கு இரண்டுக்கு என கக்கூஸ் வாசலில் காசு வசூலிக்கிறான். அந்தக் காசு நாறுமா என்ன? நாற்றத்தைப் பொறுத்துக் கொண்டு அவன்தானே கிடையாய்க் கிடக்கிறான்?

உலகமே இப்படித்தான். இவ்வளவுதான். இருந்தால்தான் உறவு. இல்லையென்றால் பிளவு. காசேதான் கடவுளடா….! அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா….!! கைக்குக் கை மாறும் பணமே…உன்னைக் கைப்பற்ற நினைக்குது மனமே…! நினைத்துக் கொண்டே எப்படி அறைக்கு வந்து சேர்ந்தோம் என்று ஆச்சரியமாயிருந்தது. நினைவுகளிலேயே மீதி வாழ்க்கை கழிய வேண்டும் என்றிருக்கிறது போலிருக்கிறது.

பொழுது விடிந்ததும் நாளை படித்த பள்ளியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. இலவசக் கல்வி தந்து கல்விக் கண் திறந்த கர்ம வீரர் காமராசரை எண்ணி மனம் விம்மியது. அவரில்லையென்றால் எஸ்.எஸ்.எல்.சி வரை கூடப் படித்திருக்க முடியாது. அப்பா மாதிரி ஓட்டல் உத்தியோகத்திற்கே போயிருக்க வேண்டியதுதான். அந்தக் கரண்டி பிடிக்கும் உத்தியோகம் தன் பிள்ளைகளுக்கு வரக்கூடாது என்றுதானே உயிரை விட்டார் அவர். அத்தனை வறுமையிலும் இலவச மதிய உணவுக்கு அனுப்பவில்லையே?  பள்ளி இறுதித் தேர்வுக்கு வெறும் பதினோரு ரூபாய்தான் கட்டணம் எனினும் அதையும்கூட அன்று கட்ட முடியாமல் ஒரு நிலச்சுவான்தாரின் வீட்டுக்குப் பாட்டி  அழைத்துச் சென்றதும், எம்பேரனுக்குப் பணம் கட்ட இன்னிக்குக் கடைசி நாள்…நீங்கதான் கொடுத்து உதவணும்…என்று சொல்லி,  விழுடா அவர் கால்ல….என்று கருணைத் தொகை வாங்கி வந்து மதியம் மணி மூன்று ஆன அந்தக் கடைசி நிமிடத்தில் தலைமையாசிரியரிடம் சென்று பரீட்சைக் கட்டணம் செலுத்திய  அந்தக் காட்சி  அவர் கண் முன்னே நிழலாடிய போது, அவரையறியாமல் நெஞ்சம் விம்மியெழும்ப, கண்ணீர்  பெருக்கெடுத்தது யக்ஞராமனுக்கு. சுற்று முற்றும் ஒரு முறை பார்த்தார். பள்ளி வாசல்படி உள்ளே நுழையும் இடத்தில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தார். கொஞ்ச தூரத்தில் வாட்ச்மேன் நிற்பது தெரிந்தது. அவர் கையில் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டைத் திணித்தார். அவர் நெஞ்சுருகிக் கும்பிடும்போது அப்பா ஞாபகம் வந்தது. கைகளை ஆதுரமாகப் பிடித்துக் கொண்டார். கண்களில் நீர் பெருகியது.

இருக்கும் மீதி நாட்களையும் இப்படியே தனித்து இருந்து கழித்து விடுவோமா என்று ஒரு கணம் தோன்றியது. நேரம் ஆக ஆக அந்தச் சிந்தனை தீவிரப்பட்டுக்கொண்டேயிருந்தது அவரிடம். ஏகாந்த நாயகனாய் மனதுக்குள் தன்னை வரித்துக் கொண்டார் யக்ஞராமன்.                                                                                                      ------------------------------------

                                   

 

           

 

கைக்கு எட்டாதது - சிறுகதை - தளம் -ஜூலை-செப்.23 இதழ் பிரசுரம் 

-----------------------------------------------------------------------------------------------


ம்பந்தியும் சம்பந்தியும் சேர்ந்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிசயம் அங்குதான் நிகழ்ந்தது. எதிர்பாராதவிதமாயச் சம்பந்தி ஆன கதை.  புதிதாக, முதல் நிகழ்வாக, புதிய செய்தியாக இருக்கும் என்றும் தோன்றியது நாகசுந்தரத்திற்கு. இதற்காக வேறு எங்காவது இப்படி அதிசயம் நடந்திருக்கிறதா என்று தேடவா முடியும்?

கல்யாணமே காதும் காதும் வைத்தாற்போலத்தானே நடந்தது. எங்கே வாய்விட்டுச் சந்தோஷமாக ஊருக்குச் சொல்ல முடிந்தது? ரகசியக் கல்யாணம் என்றே சொல்லலாம். திருட்டுக் கல்யாணம் என்று சொல்ல வேண்டியதில்லை. சொல்லாமல் கொள்ளாமல் அவர்களே போய்ப் பண்ணிக்கொண்டு, மாலையும் கழுத்துமாய் வந்து நின்றால்தான் அது. அந்த மட்டும் தப்பித்தது. ஏதோ முன்னோர்கள் செய்த புண்ணியம்.

இது காதேல்….! காதலிக்கிறாங்களாம்….!! கூட்டிக்கிட்டு அலையறதும், இழுத்துக்கிட்டுத் திரியறதும்தாங்க இன்னிக்கு ஃபேஷன்…அது தெரியாம…ஒலகம் புரியாத ஆளா நீங்க இருந்தீங்கன்னா?  பிரிய முடியாத அளவுக்கு ஒன்றிட்டாங்களாம்…அப்பாம்மா சம்மதிக்காட்டாலும் அத்துக்கிட்டுப் போயிடுவாங்களாம்.. எங்கயாவது போய் பிச்சை எடுத்தாவது பிழைச்சுக்குவாங்களாம்…பழைய வசனம்…இதுக்குத்தானே இத்தனை வருஷம் பாடுபட்டு வளர்த்து விட்டது? எதுக்கு? வாய்கிழியப் பேசுறதுக்கு…! அப்புறம் சொல்றதுக்கென்ன? மேஜர் ஆயாச்சு… பேசவேண்டிதான? மேஜர் மைனர் வேல பார்த்தா, மேஜர் ஆகித்தான பேசமுடியும்?…அதான ரூல்ஸ்….!  அப்பன் ஆத்தாளுக்கு டேஞ்சரா இருக்கோம்ங்கிற அறிவெல்லாம் எவனுக்கும் கிடையாது. டேஞ்சரென்ன டேஞ்சர்…? உங்ககிட்டச் சொல்லாமயா தாலியக் கட்டிக்கிட்டு வந்து நிக்கிறோம்…? அப்டி செய்தாத்தான் உங்கள மாதிரி  ஆளுங்களுக்கெல்லாம் சரியாயிருக்கும் போல்ருக்கு….ஒழுங்கு மரியாதையா வந்து நின்னு விவரத்தச் சொல்லியிருக்கோம்…இது போதாதா? வாய் பேசாமக் கல்யாணத்தப் பண்ணி ஆசீர்வாதத்தப் போடுங்க?…என்னவோ நீட்டி முழக்கிக்கிட்டிருக்கீங்களே? மரியாதையைக் காப்பாத்திக்கப் பாருங்க….! -இதெல்லாம் மூத்த தலைமுறை புரிஞ்சிக்கணும். அப்பத்தான் அவுங்களுக்குக் கௌரவம்…!

சம்மதிக்கலேன்னா இந்த அவமானம்தான் நடந்திருக்கும். ஊருக்கு டமாரம் போட்டுச் சொன்ன மாதிரி ஆகியிருக்கும். இப்ப என்ன வாழுது….? அதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே…! நாமதான் அல்ப சந்தோஷப் பட்டுக்கணும்…நிறையப்பேருக்குச் சொல்லலைன்னு….பலருக்கும் விஷயம் தெரியாதுன்னு….எல்லாப் பயலுகளும் மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டு…திருப்திப்பட்டுக்கிட்டிருக்கான்னு எவனுக்குத் தெரியும்? அதுதான் யதார்த்தம்.

அடுத்தவனுக்கு ஒரு இழுக்கு வர்றதுல,  ஒரு காரியம் கெட்டுப் போறதுல, எல்லாரும் நினைச்ச ஒண்ணு நடக்காமப் போறதுல…எதிர்பாராத ஒண்ணு நடந்துடுறதுல…சந்தோஷப்படாத ஜென்மந்தான் எது? மனுஷன் ஒரு மோசமான சல்லிப்பயல்…! அவனுக்கு, தனக்கு நடக்குறதவிட, அடுத்தவனுக்கு நடக்காமப் போறதுலதான் அதிக…சந்தோஷம்…திருப்தி.!

            இவர் கண்காணிப்பாளர், அவர் உதவியாளர். அவரென்றால் எதிர் சம்பந்தி நாகபூஷணம். பெயர் கூட என்ன பொருத்தம் பார்த்தீங்களா? வாழ்க்கையில் ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் ஏதோவொரு ஜென்மத்தில் அல்லது ஏதோவொருவிதத்தில் எங்கேனும் ஒரு தொடர்பு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லைதான். ஜென்ம பந்தமாய் இருக்குமோ? அப்படியெல்லாம்தான் நினைச்சு திருப்திப்பட்டுக்கணும் அல்லது வயித்தெறிச்சப்படணும். வேறே ஏலாதுன்னா அதானே வழி? பொறுமிப் பொறுமி ஓய்ந்தாயிற்று. உடம்பு கெட்டுப் போனதுதான் மிச்சம். மாத்திரைக்கும் மருந்துக்கும் செலவழிச்சு செலவழிச்சு….அடேங்கப்பா…என்னா பெருமை…!

            ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதுதான். அது இப்படிக்கொண்டு போய்க் கோர்த்துவிடும் என்று யார் கண்டது? இந்தக் காலத்தில் எதைத்தான் தீர்மானமாக நிர்ணயிக்க முடிகிறது? அது அது நடக்க நடக்க வேடிக்கை பார்த்துக் கொண்டே, விரும்பியோ அல்லது விலகியோ இருக்க வேண்டியிருக்கிறது. இல்லன்னா கிறுக்கன் மாதிரி நிற்க வேண்டியிருக்கு. கன்ட்ரோல் பண்ணினாலும் கேட்கிறமாதிரியா இருக்கிறது பிள்ளைகள்? எங்க வாழ்க்கை எங்க கையிலே…என்ற தத்துவம் வேறே…எதுக்கு? தத்தாரியாத் திரியறதுக்கா? அவுத்துவிட்ட கழுதைங்க மாதிரி…!

            கண்டமேனிக்குத் திரிஞ்சிட்டு. கண்ட எடத்துலெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு, கண்ட பொருளையெல்லாம் வாங்கிக் குவிச்சிட்டு, எதிர்காலத்துக்கு சேமிக்கிற புத்தியில்லாம, அப்பன் ஆத்தா வச்சிருக்கிறதத் தராமயா போயிடுவாங்கன்னு மிதப்புலயே கிடந்து..… உடம்பு ஒத்துக்கிறவரைக்கும், ஏத்துக்கிறவரைக்கும் செய்யக் கூடாததையெல்லாம் செய்துக்கிட்டு….எதுக்கும் ஒரு திட்டமோ, வரைமுறையோ கிடையாது. இப்டி இருக்கிறதா லைஃப்? மனுஷன்னா, அன்றாட வாழ்க்கைன்னா சில நியமங்கள் வேண்டாம்? சின்ன வயசுலர்ந்து பழக்கியிருந்தாத்தானே அதெல்லாம் படிஞ்சிருக்கும்? ஜாலியா வளர்த்தேன்…சந்தோஷமா வளர்த்தேன்னா? அந்த ஜாலிங்கிற வார்த்தையே தப்பாச்சே?

            வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம்…அவ்வளவுதான். அதற்காக சண்டைக்கு அடிபிடி மாடுபிடி என்று பொருதுக்கு நிற்கவா முடியும்? நின்றுதான் என்ன பயன்? வெட்டு, குத்து, போலீஸ் ஸ்டேஷன் என்று போகவெல்லாம் நாதியில்லை. அந்தக் கேவலங்களையெல்லாம் எதிர்கொள்ள மனத்தெம்பும் இல்லை…உடல் தெம்பும் இல்லை…ஐவேஜூம் கிடையாது. வேண்டாத தொரட்டை இழுத்துவிட்டுக் கொண்டு  ஓட்டப்பெருமைக்கு பந்தாவாக அலைவதா? எல்லாம் எண்ணி எண்ணி ஓய்ந்தாயிற்று.

            பீஸ்ல என்னமா ஸ்டிரிக்டா இருக்கான் இந்த மனுஷன்…இதுல கோட்டை விட்டுட்டானே? இப்டி ஆளுங்களுக்கெல்லாம் அப்டித்தான்யா வந்து சேரும்…! நம்மளெல்லாம் என்ன பாடு படுத்தியிருக்கான்? பத்து நிமிஷம் லேட்டா வந்தா அட்டென்டன்சைக் க்ளோஸ் பண்ணி உள்ளே அனுப்பிடுவானேய்யா…? மூணு லேட்டு சேர்ந்துட்டா அரை நாள் லீவைக் கட்பண்ணிடுவானே….ஆபீ்ஸ் நேரம் முடிஞ்சும் போக விட மாட்டானேய்யா…அந்த ஃபைலை வச்சிட்டுப் போங்க…நான் சொன்னது என்னாச்சு? ன்னு அந்த நேரம் பார்த்துக் கழுத்தறுப்பானே….! ஈட்டிய விடுப்புப் போட்டா சாங்ஷன் வாங்கிட்டுத்தான் லீவு அவெய்ல் பண்ணனும்னு சொல்லி வயித்தெறிச்சலக் கொட்டியிருக்கானே…! ….எதுலதான்யா விட்டு வச்சான் நம்மள….? கடைசில எங்க போய் மாட்டிக்கிச்சு பார்த்தியா…..? ஊரான் வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிட்டா இப்படித்தான் அமையும் திகிடு முகடா…! நாக பூஷணம் அவர் பொண்ணை நாகமோகினியா  அனுப்பிச்சி நாக சுந்தரத்தோட பையனை வளைச்சிப் போட்டிடுச்சே….? இங்க இருக்கிற கண்டிப்பும், கறாரும் வீட்டுல செல்லுபடியாகல அய்யாவுக்கு…! இப்போ, பொத்திக்கிட்டு நிக்கிறாரு….! வாயே திறக்கிறதில்லையாம்….தலையைக் குனிஞ்சமேனிக்கே கிடக்குறாராம். கேட்டா…எதையும் பார்க்கப் பிடிக்கலைன்னு சந்நதம் வந்த மாதிரிக் கத்துறாராம்….எத்தனை நாளைக்கோ…? -சொல்லிச் சொல்லி சிரித்துக் கொள்கிறார்களோ?

            யாரு சொன்னா இதெல்லாம்? உண்மையா இல்ல நீரா அடிச்சி விடுறீரா? பொழுது போகுறதுக்காக எதையாவது பழிசொல்லி வைக்காதீங்க…அது நம்மளப் பாதிக்குமாக்கும் – நீலன் ஆவணக் காப்பக எழுத்தர் சற்று சத்தமாகவே கேட்டார். அழகர், பண்டகக் காப்பாளர்  சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். பண்டகத்தில் பொருட்களைப் பாதுகாப்பது போல் இந்த விஷயங்களையும் சேகரித்துப் பாதுகாத்தார்.

            அந்தப் பொண்ணு காலைல பத்துக்குத்தான் படுக்கையவிட்டே எழுந்திரிக்குதாம். ரூமுக்குள்ள அடைச்ச கதவு அடைச்சமேனிக்கே இருக்க…அதுக்கேத்தாப்புல இவனும் தூங்க ஆரம்பிச்சிட்டானாம். கழுத கெட்டாக் குட்டிச்சுவரு…ன்னு நம்ப நாகசுந்தரம் கத்தப் போக, அது அந்தப் பொண்ணு காதுல விழுந்து பெரிய சண்டையாகிப் போச்சாம்.

            என்ன உங்க வீட்டுல இதுக்கெல்லாம் போய் குத்தம் சொல்லிட்டிருக்காங்க…? ன்னு கத்தி…நா எங்க வீட்டுக்குப் போறேன்னிட்டு நின்னுதாம்…

            எப்ப எந்திரிச்சா உனக்கென்னப்பா? நீபாட்டுக்கு உன் ரூம்ல எதையும் கண்டுக்காம இருக்கப் பாருப்பா…! காதுலயே எதையும் வாங்காதே…முடிஞ்சா கண்ணையும் மூடிக்கோ!

            ஏண்டா…காலங்காலமா உங்கம்மா வடிச்சிக் கொட்டிக்கிட்டிருக்காளே…அவளுக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்யக் கூடாதா? குறைஞ்சு போவாளா உம் பொஞ்சாதி…? உங்கம்மா வேலை வேலைன்னு மாயுறது உன் கண்ணுக்குப் படவேயில்லையா? அவ ஒடம்பு நாளுக்கு நாள் நசிஞ்சு போகுதே…அதுல உனக்கு சம்மதமா? மனசாட்சின்னு ஒண்ணு வேணுன்டா…அது உனக்கு இருக்கா இல்லையா?

            அவ அப்டியெல்லாம் அவுங்க வீட்டுல பழகினவ இல்லப்பா…!

            அப்போ மணிக் கணக்கில்லாமத் தூங்கத்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்களா? ஏண்டா…இஷ்டத்துக்குத் தூங்க, எழுந்திரிக்க, வெளில ஊர் சுத்த, ஓட்டல்ல திங்க….சினிமாப் பார்க்க…கண்ணுல பட்டதையெல்லாம் பர்சேஸ் பண்ண…அசந்து வீடு .திரும்ப, ரூம்ல போய் பொத்துன்னு படுக்கைல விழ…இதுதான் வாழ்க்கையா? இதத்தவிர வேறே ஒண்ணும் தெரியாதா அவளுக்கு? தெரிலன்னா சொல்லிக் குடுறா…தெரிஞ்சிக்கட்டும்…கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தது வேறே…கல்யாணத்துக்கப்புறம் இருக்கிறது வேறே….ன்னு புரியட்டும்….கொஞ்சம் கொஞ்சமாவாவது சரியாகட்டும்….புளி மூட்டை மாதிரி அலைஞ்சா உடம்பு என்னத்துக்காகும்?

            இதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா சண்டைதான் வரும். எதிர்த்து எதுத்துப் பேசுவா? இப்டிச் சொல்றாங்களேன்னுதான் கோபம் வருமேயொழிய, ஏன் சொல்றாங்கன்னு யோசிக்கவே மாட்டா…! நல்லதுக்குத்தான் சொல்றாங்கன்னு நினைக்கவே மாட்டா….அழுதுக்கிட்டு உட்கார்ந்தது அந்தக் காலம். இந்தக் காலத்துல…அது நடவாது. கால்ல செருப்பை மாட்டிக்கிட்டு…படி தாண்டிப் போயிடுவா…பரவால்லியா? நல்ல விஷயங்கள குதர்க்கமா எடுத்துக்கிற புத்தி…!  எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்றாங்கன்னு ஒப்பாரி வைக்க வேண்டியது…!  இல்லன்னா எடுத்தெறிஞ்சு பேச வேண்டியது…வேறென்ன?

            என்னமாய்ப் புரிந்து பேசுகிறான் பையன்? ராம்லட்சுமண்…என்று பெயர் வைத்தும், அந்த லட்சுமணனுக்கு இருக்கும் கோபத்தில் பாதி கூட  இல்லையே? கட்டுப்பெட்டியாய் நிற்கிறானே? நல்லவனாய் இருக்கலாம். ஆனால் கோழையாய் இருக்கலாமா? தேவையானதை கட்டின பெண்டாட்டியிடம் சொல்ல வக்கில்லாதவன் என்ன ஆம்பளை? எதையுமே நல்ல சென்ஸ்ல எடுத்துக்க உங்க வீட்டுல உனக்குச் சொல்லியே கொடுக்கலியா? ன்னு ஒரு வார்த்தை கேட்கலாமே?

            ஒரு நாளாவது மருமகப்பெண் விடிகாலை எழுந்து பல் விளக்கி, குளித்து பளிச்சென்று சாமி படத்தின் முன்னால் நின்று இன்றுவரை இவர் பார்க்கவில்லை. நல்லவேளை தனக்குள்ள காபியைத் தானே கலந்து கொள்கிறது.  அதற்கும் இவன் அம்மாதான் என்றால் கேட்கவே வேண்டாம்…நிச்சயம் கலகம்தான். எழுந்ததிலிருந்து அதே நைட்டி  டிரஸ்ஸோடு நாள் முழுக்க வளைய வந்தால்? அதுவே இவருக்கு முதலில் பிடிக்கவில்லை. அருவருப்பாய் உள்ளது.  குளிக்காமலேயே காலை டிபன் சாப்பிடுவது, மதிய உணவு உண்பது, உறங்குவது அல்லது மொபைலில் சினிமா பார்ப்பது, மாலை நாலு மணிக்கு மேல் மனசிருந்தால் குளிப்பது? தினமும் குளிக்கவாவது செய்கிறதா அந்தப் பெண்? அதுவே இவருக்கு சந்தேகம்தான். …. என்ன பழக்க வழக்கங்கள் இது? பளிச்சென்று முகம் கழுவி, தலை ஒதுக்கி, பளீரென்று பொட்டு வைத்து…வீடு விளங்க இருந்து ஒரு நாள் பார்த்ததில்லை.

மனசு ஆறவே மாட்டேனென்கிறது இவருக்கு. இன்னும் கொஞ்சம் தாமதித்திருக்கலாமோ? சரியாய்ப் பார்க்காமல் போய் விட்டோமோ? கல்யாணத்துக்கு முன் அவர்கள் வீட்டுக்குப் போய்ப் போய் வந்தபோதெல்லாம் அது தூங்கிக்கொண்டே இருந்ததைக் கண்ணுற்றும் மூளை வேலை செய்யவில்லையே? அப்போவே யோசித்திருக்க வேண்டாமா? அட்டச் சோம்பேறியா இந்தப் பெண்? என்ற யோசனை ஏன் போகவில்லை?

ராத்திரி ட்யூட்டி முடிச்சு லேட்டா வந்தா…அதான் தூக்கம்….ஐ.டி. பீப்பிளே இப்போ காலம்பற லேட்டாத்தான் எழுந்திரிக்கிறா…! இதெல்லாம் இப்போ சகஜமாப் போயிடுத்து…

கல்லூரி முடித்த கையோடு ரெண்டு பேருக்கும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே  வேலை கிடைத்து விட்டதும்…அதுவும் உள்ளூரிலேயே அமைந்து போனதும்…அவர்கள் காதலைக் கன்டின்யூ பண்ண ரொம்பவும் வசதியாய்ப் போயிற்றே!  வினை இப்படியெல்லாம்தான் ஒத்துமையாய் வலம் வரும்போலிருக்கிறது!

            இப்படியா ஒரு பெண்ணை வளர்ப்பார்கள்? இன்னொரு வீட்டுக்குப் போக இருக்கும் பெண்ணுக்கு என்னவெல்லாம் பொறுப்பாய் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்? அதில் ஒரு அம்சமாவது இதனிடம் இருக்கிறதா? அதென்ன தினசரி காலை பத்து, பத்தரை முடிந்தால் பதினொண்ணு வரை தூக்கம்? நாளைக்கு தனிக்குடும்பமாய் வாழ்க்கை நடத்தப்போகும் ஒரு பெண்ணை இப்படியா வளர்ப்பார்கள்? எல்லாம் சொல்லிக்கொடுத்து பக்குவமாய் மறுவீட்டுக்கு அனுப்புவதுதானே முறை?அதுதானே பெற்றவர்களுக்குப் பெருமை?  பயந்து பயந்து செய்ய வேண்டாம். முறைப்படியாய் பயிற்றுவித்து பக்குவமாக்கி அனுப்ப வேண்டாமா? இந்தப் பொண்ணோட அப்பன் ஆத்தாளுக்கே பொறுப்பில்லையே? அப்புறம் பெற்ற பெண்ணை என்ன லட்சணத்துல வளர்த்திருப்பாங்க? மாசங்கூடி என்னைக்காச்சும் முடிலன்னா வெளியே சாப்பிடப்போவாங்க…வாரத்துல ரெண்டு மூணு நாள்னு வெளிலர்ந்து டிபனையும், சாப்பாட்டையும் வரவழைச்சா? மூத்த தலைமுறைப் பெற்றோர்களே இதைச் செய்யலாமா?

            நாகபூஷணத்தின் ஆபீஸ் வேலையில் என்றும் திருப்தி இருந்ததேயில்ல நாகசுந்தரத்திற்கு. சொன்ன கோப்புகளை உடனே நடவடிக்கை எடுத்து தன் டேபிளுக்கு அனுப்ப மாட்டார். நாலு தரம் கேட்டால் அஞ்சாம்தரம்தான் வரும். எடுத்த நடவடிக்கையிலும் அத்தனை திருப்தி இருக்காது. அவர் எழுதிய டிராஃப்டை பரட்டென்று பேனாவால் குறுக்குக் கோடு போட்டு அடித்துவிட்டு, புதிதாக எழுதி வைப்பார் இவர். அந்த அழுத்தமான அடித்தலில் அவரது கோபம் பளிச்சென்று தெரியும். அதற்காக பூஷணம் அலட்டிக்கொண்டதேயில்லை. தான் எழுதும் வரைவை ஒருத்தன் திருத்துகிறான் என்றால் மானமுள்ளவனுக்குக் கோபம் வரும். இங்கேதான் அதன் அடையாளமேயில்லையே? எல்லாமும் எருமை மாட்டின் மேல் மழை பெய்த கதைதான். நமக்கு வாய்த்த சம்பந்தி எவ்வளவு புத்திசாலி? என்று நினைத்து மனதிற்குள் அழுவார் இவர். இவர் குடும்பம் நடத்தும் லட்சணம்போலத்தானே இவரது கடமையின் தரமும் இருக்கும்.

            இப்போதெல்லாம் கண்ணீர் வற்றிவிட்டது இவருக்கு. எதைச் சொல்லி என்ன செய்ய? எல்லாம் பிரம்மன் எழுதிய எழுத்து. தலைவிதி அழுந்த எழுதப்பட்டிருக்கிறது. இப்படிக் கிடந்து மாய் என்று.  

மண்டை பூராவும் வீங்கி நிறைந்திருந்தது நாகசுந்தரத்திற்கு. அந்த மருமகப் பெண்ணின் ஒரு நடவடிக்கை கூட திருப்தி தரவில்லை இவருக்கு. பையனுக்காக எவ்வளவுதான், எத்தனைதான் பொறுப்பது? சகிப்புத்தன்மைக்கும் ஒரு அளவில்லையா?

            அவ ராத்திரி பன்னெண்டு, ஒண்ணுக்குத்தாம்ப்பா படுக்கவே செய்றா?

            அதுவரைக்கும்? அந்த செல்லை வச்சிண்டு நோண்டிண்டு, சினிமா பார்த்த மணியமா இருக்கணுமா? கண்ணு கெட்டுப் போகாதா? மொபைல் பார்க்கிறதுக்கும் ஒரு விவஸ்தையில்லையா? அப்புறம் ஒடம்பு ஏன் அசந்து, கழிஞ்சு போகாது? நல்ல ஓய்வு, உழைப்பு, சக்தியான சாப்பாடுன்னு இருந்தாத்தானே நாளைக்குப் பிறக்கப்போற குழந்தை புஷ்டியா, ஆரோக்கியமா இருக்கும்? இப்டித் தத்தாரியா இருந்தா என்னத்துக்காகும்?

            அதெல்லாம் நீட்டா ரெடியாயிடும்..நீ ஒண்ணும் இதுக்காக மனசை அலட்டிக்காதே..-சிரித்துக் கொண்டே சொன்னான் ராம்…கூடவே அவரைக் கண்டிக்கவும் செய்தான்.

வார்த்தைகளை ஜாக்கிரதையா யூஸ் பண்ணுப்பா…அவ காதுல விழுந்ததுன்னா கலகம்தான்….பார்த்துக்கோ….நானே பொறுக்க முடியாத அளவுக்குச் சொல்றே நீ…! அதைப் புரிஞ்சிக்கோ….…ஐ.டி. வேலை பார்க்கிறவங்களெல்லாரும் இப்படித்தாம்ப்பா….உனக்குத் தெரிஞ்ச வீடுகளுக்கெல்லாம் வேணும்னா போய்ப் பாரு…தெரியும்….இப்பத்தான் படிச்சு முடிச்சு நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போயிருக்கோம்….இன்னும் வேலையே அவளுக்குப் படியலை. அதுவே பெரிய நொச்சா இருக்கு…இதுல நீ வேறே….! இந்த ஐ.டி. கலாச்சாரமே இப்படித்தான் நாறிட்டுக் கிடக்குது…. கண்டுக்காம விடப் பாருப்பா….!! இப்டியே முனகிட்டும், பொறுமிட்டும் கிடந்தேன்னா வீட்டுல நிம்மதியே இருக்காது.  நாங்க ரெண்டு பேரும் தனியாத்தான் போகணும் அப்புறம்…! பார்த்துக்க…!!!

            இந்த வார்த்தையை ராம் சொன்னதும் வாயடைத்துப் போனார்  நாகசுந்தரம். அந்த மட்டும் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். இன்றுவரை தனிக்குடித்தனம் என்ற வார்த்தையையே அந்தப் பெண் எடுக்கவில்லை.  அவர்கள் வீட்டில் தாத்தா பாட்டியை அப்பா வைத்துக் காப்பாற்றுவதுபோல…இங்கும்…என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ? இல்லை ஒருவேளை…ஜோதியின் அப்பா நாகபூஷணம் கண்டிஷன் போட்டிருக்கலாம்…மாப்பிள்ளையோட பெற்றோரை கடைசிவரை நீங்க வச்சுக் காப்பாத்தித்தான் ஆகணும்…அதுல எந்தக் குறையும் என் காதுக்கு வரக்கூடாது…..ன்னு…!

ஆபீசில் யாரோ சொல்லி காதுக்கு லேசாக வந்து சேர்ந்த செய்தி இது.

            தன் சேமிப்பு பற்றியெல்லாம்தான் அவருக்குத் தெரியுமே…! ப்ரொமோஷனே வேண்டாம் என்று ஒரே ஊரில குப்பை கொட்டும் ஆசாமியாயிற்றே…! எல்லார் டைரியும் அவரிடம்தானே இருந்தது.

மனுஷன் காசுல படு கெட்டி…! எத்தனை முறை தன் காது கேட்கவே பேசியிருக்கிறார். சொந்த வீடு…ரெண்டு காலி ஃப்ளாட்…ஏராளமான ம்யூச்சுவல் ஃபன்ட்கள்…நிரந்தர வைப்புகள்…இந்த விபரங்கள் எல்லாம் தெரியாதா என்ன? எல்லாம் திட்டம்போட்டுத்தான் நடந்திருக்குது. எல்லா சேமிப்பையும் பையனுக்குத்தான் கொடுக்கப் போகிறோம். வேறு எங்கும் தானம் பண்ண நிச்சயம் மனசு வராது…போகட்டும்…காலம் இப்படியேவா நகன்று விடும். ஏதேனும் மாற்றம் வராதா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று நிதானப்பட்டிருந்தார் நாகசுந்தரம்.

னாலும் ஆபீசில் உள்ளவர்களுக்கு இந்த வாய் ஆகாதுதான். தானாடாவிட்டாலும் சதையாடும் என்பதுபோல் இவர்கள் வாய் இவர்களின் கன்ட்ரோல் இன்றி தானே பேசித்திரியும் போல…..யப்பப்பா…என்னா பேச்சு…என்னா பேச்சு…!!!  நாக்கு அநியாய நீளம்.

            பெரிய ஜாதி வித்தியாசம்ன்னு சொல்ல முடியாதுங்க…ரெண்டுமே ஒசந்த ஜாதிதான். கொடுக்கிறதுக்கென்ன…? பூஷணத்தோட பிரிவுல பொம்பளைங்கல்லாம் நல்லா பார்வையா அழகாத்தான் இருப்பாங்க….செக்கச்செவேல்னு….நம்ப சாரு பையன்தான் அத்தனை சிவப்புன்னு சொல்ல முடியாது….ஆனா ஒரு ஆம்பளைக்குள்ள நார்மலான நிறத்தோட ஆள் திடகாத்திரமா, பார்வையா இருப்பான்….ஜோடிப் பொருத்தம்தான்னு வச்சிக்குங்களேன்….ஒரே காலேஜ் வேறையா…ஒட்டிக்கிச்சு…பத்திக்கிச்சு…

            இருக்கலாம்யா…அந்தம்மா உறவுலயே இந்தப் பயலுக்கு ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணி வச்சிருந்ததாமே…! சின்ன வயசிலே வாக்குக் கொடுத்த கேசாம்…அது தப்பிப் போச்சேன்னு அழுதிட்டிருக்காம்….உடம்பு முடியாமப் படுக்கைல விழுந்திடுச்சாம்யா…

            இது பழைய நியூஸ்யா நீ சொல்றது…இப்ப எல்லாம் தேறி எழுந்து ஒண்ணோட ஒண்ணு ஆயிடுச்சாம்…அந்தம்மா சரியாயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். இவருக்குத்தான் ஒட்ட மாட்டேங்குது.. இவர்தான் முசுடு ஆச்சே…! ஆபீஸ்லயே யார்ட்டயும் சுமுகமா முகங்கொடுத்துப் பேச மாட்டாரே…! வீட்லயா…அதுவும் வேத்து ஜாதிப் பொண்ணுகிட்டயா சகஜமா இருக்கப் போறாரு…? பேசிக்கிறதேயில்லையாம்… எப்பயாச்சும் ஒண்ணு ரெண்டு வார்த்தை…அத்தோட சரியாம்….மாமனார் கெத்து….வேறென்ன சொல்ல….?

            தங்களை மறந்து  ஆபீசில் பலரும் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். வம்பு வளர்க்க இவர்களை விட்டால் ஆளில்லை. அதிலும் அடுத்தவனைப்பற்றிப் பேசுவதென்றால் லட்டு மாதிரி. ஆபீசுக்கு வேலை மட்டுமா செய்ய வருகிறார்கள். அவர்களை வேலை செய்ய உற்சாகப்படுத்துவதே எதுடா பேசக் கிடைக்கும் என்று கொட்டிக் கிடக்கும் விஷயங்கள்தான். நிர்வாகத்தை அடக்கி ஆளும் நாகசுந்தரம் இதில் தன் அதிகாரத்தைக் காட்ட முடியவில்லை. அடங்கித்தான் கிடந்தார். காதில் விழுந்தும் விழாதவர்போல் கிடந்தார். இந்த வம்பர்களின் வாயை அடக்க என்ன வழி என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தார்.

            ஆனது ஆச்சு…போனது போச்சு…அஞ்சாமல் வா…இனி அல்லல் உந்தன் வாழ்விலே நில்லாதம்மா…- கொஞ்சம் தள்ளிக் கோயில் திருவிழாவில் மைக் செட் பாட்டு அலறியது. மக்களின் பழைய பாட்டு மோகம், ரசனை இன்னும் அப்படியே உள்ளது.

திடீரென்று பார்த்தபோது நாக சுந்தரமும், நாகபூஷணமும் இருக்கையில் இல்லாதது எல்லோரையுமே ஆச்சரியப்படுத்திற்று. யாரும் எதிர்பாராத ஒன்று. ரெண்டு பேரும் சேர்ந்து ஒருசேரக் காணாமல் போவதா?

என்னாச்சு…கை சேர்ந்திருச்சு போல….? -சொல்லிச் சிரித்தார்கள். வெட்டியாய்ச் சிரித்துப் பொழுது போக்குவதற்கு,  அழுத்தமாய் விஷயங்கள் வேண்டுமா என்ன?

            என்னைய்யா…ரெண்டு பெரிசுகளையும் ஆளக் காணல….? – என்றபோது…அங்க பாருங்க….என்று கண்ணைக் காண்பித்தார் நீலன்.

            ஒருவருக்கொருவர் ரொம்பவும் நெருக்கத்தோடும், இஷ்ட பாவனையோடும்…..காம்பவுன்ட் வாசலை நோக்கி வெளியேற முனைந்து கொண்டிருந்தார்கள். நடையில் அத்தனை நிதானம். மெதுவாத் திரும்புவோம், இப்ப என்ன?... என்பது போல…

            டீ சாப்பிடப் போறாங்களோ….? என்னடா இது அதிசயம்?   நம்ப கண் முன்னாடியே திடீர்னு காணாமப் போயிட்டாங்க….? சேர்ந்து நின்னு பேசியே பார்த்ததில்லையேய்யா…கண்கொள்ளாக் காட்சியால்ல இருக்கு…?

            அவுங்க காரியங்கள் எல்லாமே திடீர் திடீர்னுதானே நடக்குது….பெத்த புள்ளைங்க கல்யாணமே அவுங்க எதிர்பாராத நேரத்துலதானே நடந்து போச்சு…..-சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார் பண்டகக் காப்பாளர் அழகர்சாமி. மனிதன் ஒரு மோசமான சல்லிப்பயல்…மலிவான விஷயங்களில், மலிவான கோணங்களில் மனம் லயிப்பதில் அலாதி திருப்தி.

            யாரோ என்னவோ சொல்லிட்டுப் போங்க… இவை எதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை என, கேட்டைக் கடந்து சாலை நுனிக்குப் போன அவர்கள், நின்று போக்குவரத்தைக் கவனிக்க முனைந்தபோது…இருங்க…இருங்க….பயங்கரமான டிராஃபிக்கா இருக்கு …பார்த்துக் கிராஸ் பண்ணனும்….என்று சொல்லிக்கொண்டே நாகசுந்தரத்தின் கையைப் பிடித்து நிறுத்திய நாகபூஷணம்…..! தன்னை விட வயசான அவரைச் சற்றுத் தாங்கிப் பிடித்துக் கொண்டது போலவேயிருந்தது அந்தக் காட்சி.

            ஒரு சந்தோஷச் செய்தி தெரியுமா உங்களுக்கு…! உங்க மருமகப் பொண்ணு முழுகாம இருக்கு….! நாலு மாசமாகப்போகுது….பெட் ரெஸ்ட்  எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு…விபரம் தெரியுமா? .- என்று கேட்டபோது, சற்று அதிர்ந்துதான் போனார் நாகசுந்தரம். அப்படி வெளியே இழுத்து வந்து சொன்னதுதான் ஆறுதல். தானும் வாய்மூடிக் கட்டுப்பட்டுப் புறப்பட்டு வந்தோமே? எல்லாம் இறைவன் சித்தம்….

ஒரே வீட்டில் இருக்கும் தனக்குத் தெரியாத செய்தி தன் சம்பந்திக்கு முந்தித் தெரிந்தது எப்படி? மனது வெட்கப்பட்டது என்பதை விட, சட்டென்று வருத்தப்பட்டது. நாலு மாசமாச்சு என்று கூறியதும், காலம் கடந்து அறிவதில் ஒரு நெருடலோடு  இதுநாள்வரை இந்தச் சங்கதி ஏன் அறியப்படாமல் போனது? ஒருவேளை மறைக்கப்பட்டதோ என்றும், அதற்கு என்ன அவசியம், எதற்காக என்றுமில்லாத தன்மையாய் இன்று தன்னை இப்படி வெளியே வலிய அழைத்து வந்தார் என்பதையும் ஒருங்கே நினைத்துப் பார்க்க முனைந்தார் நாகசுந்தரம். இந்தச் செய்தியைச் சொல்ல, இந்த நேரத்தை, இந்தத் தனிமையை ஏன் தேர்ந்தெடுத்தார்  என்றும் புரிந்தும் புரியாமலும் குழப்பமடைந்தார்.  

            அழுவதா, சிரிப்பதா என்று அந்தக் கணம் நடப்பது எதுவுமே தன் கட்டுப்பாட்டில் இல்லையோ என்று உணர்ந்தவராய்…அப்போ…சீக்கிரத்துல ரெண்டு பேரும் தாத்தாவாகப் போறோமா…? என்று செயற்கையாய்ச் சொல்லிக்கொண்டே வாயெடுத்துச் சிரித்தவாறே பூஷணத்தின் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு சாலையைக் குறுக்கே கடந்தார் நாகசுந்தரம்.

            கொஞ்சம் அதிகமாகவே சிரித்து விட்டது போலவும், அதில் கொஞ்சம் அசட்டுத்தனமும் கலந்திருந்ததுபோலவும் அப்போது அவருக்குத் தோன்றி அநியாயமாய் வெட்கப்பட வைத்தது அவரை.

                                                            -----------------------------

     

 

06 செப்டம்பர் 2023

 

அணி” – ஜெயமோகன் - உயிர்மை ஆகஸ்ட் 2023 சிறுகதை வாசிப்பனுபவம் -உஷாதீபன்



 

            உள்ளடி வேலைகள் என்று நடக்காத இடங்கள் இருக்கவே முடியாது. கட்சியானாலும், அமைப்புகளானாலும், சங்கங்கள் ஆனாலும், மடங்களானாலும் – இவ்வளவு எதற்கு – மனிதர்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அங்கே தவறுகள் என்பது இருக்கத்தான் செய்யும் என்பது பொது விதி.

            எவ்வகை இடமானாலும் அங்கே தனக்கென்று சில நெறி முறைகளை வகுத்துக் கொண்டு விடாது  பின்பற்றும், நியமங்களைப் பிடிவாதமாகக் கடைப்பிடிக்கும் சிலர் கண்டிப்பாக இருப்பார்கள். அவர்களை எதுவும் சலனப்படுத்தாது. எந்த ஆசைகளுமோ, சூதோ, வஞ்சகங்களுமோ ஆட்டி வைக்காது. அப்படியானவர்கள் மனதளவில் சமனமடைந்திருப்பார்கள். சலனமற்றிருப்பார்கள். தானுண்டு, தன் வேலையண்டு என்று இருக்குமிடம் தெரியாமல் அமைதியும் சாந்தமும் கொண்டு நாளும் பொழுதும் நன்றே…நன்றே என்று தன்னை நிலை நிறுத்திக் கொள்வார்கள்.

            மனிதனின் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம் ஆசை. ஆசையை விலக்கியவன் எந்தச் சிடுக்குகளுமின்றி தன் வாழ்வை நகர்த்த முடியும். போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து என்று தன் சிந்தனையையும் செயலையும் ஞானத்தை நோக்கி நகர்த்த முடியும்.

            திருப்பனந்தாள் மடத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் கனகசபாபதி மீது அப்படி ஒரு பழி வந்து விழ அதை அவரைச் சேர்ந்த ஆளான  தளிகைப் பணியாளரான சுந்தரலிங்கமே வந்து கூறுகையில் கூட எந்த அதிர்வுமின்றி அதை எதிர்நோக்குகிறார் கனகு.

            தங்கக் கண்டிகையை சாமி எடுத்திருக்கும்னு  ஒரு பேச்சு….வேறொன்றை மனதில் கொண்டு வலிய எழுந்திருக்கும் இப்புகார் இவர்கள் அறியாதது.

            இங்கே சொன்னது சாமிக்கு நெருக்கமான தளிகை சுந்தரலிங்கம்தான் எனினும், அங்கே புகைய விட்டது பெரிய சிவஞானத் தம்புரானுக்கு நெருக்கமான தளிகை  பண்ணும் சாமிக்கண்ணு என்ற கருவி.  ஒரே இடத்தில் ஒரே பணியைச் செய்யும் பணியாளர்கள் இருக்குமிடம் வைத்து, மேல் கீழ் என்கிற வேற்றுமை உணர்தலில்  சராசரி மனிதர்களின் துர்க்குணங்களின் வெளிப்பாடாக இந்தப் புகார் வந்து விழுகிறது. இந்தப் புகாரின் மூலம் வேறொன்றை வெளிக் கொணரும் சூது.

            சாமியாரை அண்டி வாழுறவன் பொறுக்கியாகத்தான் இருப்பான்…அது மடமானாலும் சரி…நடுத்தெருவானாலும் சரி…. இது சுந்தரலிங்கம் கனகசபாபதிக்கு விளக்கிச் சொல்லி சூதானப்படுத்து இடம்.

            ஆனால் எல்லாம் துறந்தவனுக்கு எதுதான் பெரிது, சிறிது? துறப்பவன் இருக்க வேண்டிய இடம் மேலிடம்தான் என்று ஏதேனும் நிர்ணயம் இருக்கிறதா என்ன? இல்லை மேலிடத்தில் இருப்போரெல்லாம் மனதளவிலும், உடலளவிலும் எல்லாவற்றையும் துறந்துவிட்டவர்களா என்ன?

            சூதானம்…! எப்படி வருகிறது இந்த சூதானம்? என்கிட்ட இருக்கிறது மூணு காவி வேட்டி, மூணு கோவணம், ஒரு கப்பரை…! பார்க்கக் கிடைப்பது இதுதான். இதை விடுத்து தங்கக் கண்டிகையை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்?  உதட்டில் உதிக்கும் சிரிப்பு அவரது விலகிய சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.

            மடத்தவிட்டு உன்னைய நீக்குறது முடிவாப் போச்சு. போகைல கைல காசு வேணாமா? அதனால நீ எடுத்துருப்பேங்கிற நெனப்பு….போய் சன்னிதி காலிலே விழு…

            நா ஒண்ணும் தப்புப் பண்ணலியே…நான் சிவனை நம்பி இருக்கேன்….சிவன் என் கூட இருக்காரு… - இது கனகசபாபதி.

            உன் மேலே அநாவசியப் பழி வரும்….மடத்தனமா எதுவும் செய்யாதே

            அன்பும் தியாகமும் பக்தியும் ஒரு வகையிலே மடத்தனம்தான்….

            பட்டினத்தார் பாடல் கனகசபாபதியின் மனதில் ஓடுகிறது.

            இந்தப் பாடல்தான் இச்சிறுகதையின்  அபார உச்சம்…! ஒவ்வொரு வாசகனின் மனதிலும் படிய வேண்டிய பதிகம்…..

            இந்த நிலையில்லாத உடம்பை நெருப்பு எனதென்று சொல்லும், கிருமிகள் எனதென்னும், மண்ணும் எனதென்னும், தன்னுடைய உணவிற்கு என்று நரியும் நாயும் இது எனக்கானது என்று வந்து நிற்கும், துர்நாற்றம் பொருந்திய இவ்வுடலைத்தான் நான் விரும்பி வளர்த்திருக்கிறேன்…இதனால் எனக்கு என்ன பயன்?

            இந்தச் சிந்தனையில் மூழ்கித் திளைக்கிறார் கனகசபாபதி.

            மீனாட்சி சுந்தரத் தம்பிரான் வந்துபோதும் இதே சிந்தனையில் இருக்கிறார் கனகு. ஒவ்வொருவரும் அவரவர் நம்பும் சொற்களை குருதியில் அடிக்கோடிட்டு நிறுத்தி வைப்பது அவசியமாகிறது. சொற்களில் உறங்கும் தெய்வங்களாய் அவை நின்று நிலைக்கின்றன.

            அதாகப்பட்டது நகை காணாமற்போனது போன ஆடி மாசம் அமாவாசைக்குப் பக்கத்திலே. ஆனி, ஆடி, ஆவணி மூணுமாசமும் பெரிய சன்னிதானத்துக்கு திருவடிசேவை பண்ணினது நீங்க…..கூட இருந்த மத்தவங்களை விசாரிச்சாச்சு…நீங்கதான் விசாரிக்கப்படணும்…

            இவ்வளவு தீவிரமாய் விசாரணை வர மூல காரணம் எது? அங்கேதான் இந்தப் பிரிவினைப் பிரச்னை தலையெடுக்கிறது.

            பட்டினத்தாரின் பண்டாரப்பாட்டு கனகசபாபதியின் சைவ ஞானமாய் …           அப்போ…அவரு செட்டியார்….நம்மாளில்லை…அதானே….அவருக்கு எப்படி சிவஞானம் தழைக்கும்….-விஷயம் எங்கே வந்து நிற்கிறது.

            மேல் கீழ் நோக்கும் பிரிவினை மனப்பான்மை. ஞானம் பிறப்பதற்கு இன்ன இடம்தான் என்கிற நிர்ணயம் உண்டா என்ன?  

            அந்தளவுக்குப் பழுத்திட்டானா அந்தச் செட்டி? பட்டினத்தாரின் பாடல் தந்த அழுத்தம், அதைச் சொன்ன கனகுவின் மீதான குற்றமாகிறது.

            நாயும் நரியும் காத்திருக்கும் இந்த ஊணுடம்பிற்கு எதற்கு வெற்று நகைகளும், பட்டுப்பீதாம்பரமும்…..சந்நிதானத்தின் மேல் உண்டான புகார்க் குற்றமாகிறது.

            சித்தாந்தத்தை எப்படி மறுப்பது? மறுத்தால் அது பொய்யென்றாகிவிடாதா?

            கண்டிகையை நான் எடுக்கவில்லை. எனவே மன்னிப்புக் கோர முடியாது. நமச்சிவாயம்….என்று சொல்லி கொதிக்கும் நெய்யிலே கைவிட்டுத் தன்னை நிரூபிக்கிறார்.

            எத்தனையோ வகை அணிகள். மனிதர்கள் அவரவர்க்கு அணிந்து கொண்டிருப்பது அவரவர் விருப்பம். ஆனால் அனைத்தையும் துறந்தவன் தனக்குத்தானே தீர்மானமாய் அணிந்து கொள்ளும் அணி அத்தனையிலும் பெரியது. அது  ஈடு சொல்ல முடியாதது.  மற்ற எவராலும் அசைக்க முடியாதது. சலனத்திற்கப்பாற்பட்டது. அதை எளிய மனிதர்கள், ஆசைகளையும், அதிகாரத்தையும் அச்சாரமாய்க் கொண்டவர்கள் இந்த ஊனுடம்பைப் பெரிதாய்ப் போற்றுபவர்கள் என்றும் உணருவதில்லை.

            ஜெ.யின் இந்த அணி…வாசக மனதைக் கொள்ளை கொள்ளச் செய்கிறது.

            அன்பும் தியாகமும் ஒருவகையிலே மடத்தனம்தான் என்று கனகசபாபதி சொல்வது,

            ஒவ்வொருவரும் அவரவர் நம்பும் சொற்களை குருதியில் அடிக்கோடிட வேண்டியிருக்கிறது .அதில்தான், அந்த சொற்களில்தான் தெய்வங்கள் உறைகின்றன…. என்பன போன்ற தத்துவ விசாரங்கள் மனதைக் கட்டிப் போட்டு விடுகின்றன.

                                    -------------------------------------------