21 அக்டோபர் 2023

 

 

ஜெயந்தனின் நாடகம் “மனுஷா..மனுஷா..”வாசிப்பனுபவம்-உஷாதீபன்

வெளியீடு- கோடு வெளியீடு, 9பி, மனோகர் நகர் பிரதான சாலை, பள்ளிக்கரணை. சென்னை-600 100 (ஃபோன்-99622 44554)

-----------------------------------------------------------------------------------------------------


            ஜெயந்தனின் கதைகளைப் படிப்பதென்றாலே மனசு திக்…திக்…என்று இருக்கும். உண்மை உரக்கச் சொல்லப்படும்போது அதை மனசு ஏற்கும் அதே நேரத்தில் இப்படிப் பட்டவர்த்தனமாய்ப் போட்டு உடைக்கிறாரே…இவருக்கு ஏதும் சங்கடம், தொல்லைகள் வந்து விடக் கூடாதே என்ற மனசு பயப்படும்.

           


இங்கே எழுத்து சுதந்திரம் என்பது அந்த அளவுக்கு இருக்கிறதா…இப்படிப் பயப்படாமல் எழுதுகிறாரே….லஞ்ச லாவண்யம், அலுவலக நடைமுறைகள், சமுதாய நோக்குகள், ஜாதிப் பிரச்னைகள் என்று எதையெடுத்தாலும்…போற்றுபவர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும், தொடர்ந்து செல்வேன், ஏற்றதொரு கருத்தை எனது உளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்…என்கிற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப நெஞ்சை நிமிர்த்தி உரைக்கிறாரே என்று மனது பெருமைப் படும். அதே சமயம் இப்படி ஒரு தைரியமான எழுத்தாளருக்கு பாதகம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதே என்று  அஞ்சும்.

            எனக்குத் தெரிய நா.பா.வுக்குப் பிறகு சமூக அவலங்களை, நடைமுறை அநியாயங்களை, நேர்மையற்ற  செயல்களை, பொய்யுரைத்து மேலெழுவதையே வாழ்க்கையாய்க் கொண்டவர்களின் ஊழல்களை, குரல் உயர்த்திப் பதிவு செய்தவர் ஜெயந்தன் ஒருவரே. நா.பா.வுடைய பதிவுகளில், படைப்புகளில் கொஞ்சம் இயல்புத் தன்மை மாறி நியாயம் கம்பீரமாகவும், தைரியமாகவும் உரத்துச் சொல்லப்படும் அதே வேளையில் ஜெயந்தன் அவர்களின் படைப்புக்களில் யதார்த்தப் பின்னணியில் மனிதர்கள் எவ்வளவு தடுமாறி நிற்கிறார்கள் தங்களின் தேவைகளின் பொருட்டும். வாழ்வியல் நடைமுறைகளின் பொருட்டும் என்றும், சூழல்கள் அவர்களை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது, எளிய மனிதர்கள் அதில் எவ்வளவு தவறிப் போகிறார்கள், அதிகாரம் படைத்தவர்கள் அதை எவ்வளவு தவறாக, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆணியடித்ததுபோல், பொட்டில் அடித்ததுபோல், முகத்தில் அறைந்தது போல் என்பதாக அவரின் பார்வை தீட்சண்யமாய் விரிந்திருக்கும்.

            அதே கண்ணோட்டத்துடன்தான் இந்த மனுஷா…மனுஷா…நாடகத்தையும் மறைபொருளாக உருவாக்கி ஒரு அரசனின் படிப்படியான நிர்வாணக் கோலம் எப்படி அம்பலத்திற்கு வருகிறது என்பதை மாய யதார்த்தமாய்ச் சுட்டி, அது இந்த சமுதாயத்தின் பிரத்யட்ச நிலை என்பதைச் சொல்லாமல் சொல்லி, கேலி செய்து, கிண்டல் செய்து உணர்த்துகிறார். அதை உணர்கையில் நம் மனதும் திருப்தி கொள்கிறது, வேதனையும் விஞ்சுகிறது. ஒவ்வொரு எழுத்தாளராவது அங்கங்கே இப்படி நக்கீர தைரியத்தோடு தட்டுப்படகிறார்களே என்று மனது திருப்தி கொள்கிறது.

            நிஜ நாடக இயக்கமாய் ஒரு கூத்துப்பட்டறை நாடகம் பார்ப்பதுபோலான உணர்வினை இந்த நாடகத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அரசின் செயல்பாடுகள் எதையெல்லாம் அர்த்தமுள்ளதுபோல் நிகழ்த்துகின்றன, அதை ரசிப்பதுபோலான கூட்டம் எப்படி ஆஉறா, ஓஉறா….என்பதுபோல் வாழ்த்தி மகிழ்கின்றன, அதன் மூலம் தங்கள் வாழ்வை சிரமமின்றி நகர்த்திச் செல்ல எப்படிப் பொய்யாய்த் தங்களை முன்னிறுத்துகின்றன….அர்த்தமில்லாத செயல்பாடுகளெல்லாம் எப்படி அர்த்தமுள்ளதாய் வரிக்கப்படுகின்றன…அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பொய்யான கூட்டம்  எப்படிக் குலவை பாடுகின்றன…என்று கிண்டலும் கேலியுமாய் மனதின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் நக்கீர தைரியம் இந்த நாடகத்தின் முக்கிய அம்சம்.

            நாடகம் முழுக்க இந்த வாழ்க்கையின் நடப்பியல்களை விமர்சனங்களாய் முன் வைத்து, அர்த்தமற்ற போக்குகளைக் கிண்டல் செய்து, அதை ஏற்றுக் கொள்ளும் கோமாளித்தனங்களை பட்டவர்த்தனமாய் வெளிச்சம் போட்டு – மனுஷா…மனுஷா…இப்படியான நடப்புகளையெல்லாம் இவ்வாறுதான் கண்மூடிப் பார்த்துக்கொண்டு பிடித்த மண்ணாய் இருப்பாயா நீ, விழித்துக் கொள்….இது உன் சொந்த வாழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை நீ உணரவில்லையா? என்பதை நெஞ்சிலடித்துச் சொல்லியிருக்கிறது இந்த நாடகம்.

            ஒரு நாடகம் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு தன் கருத்தை முன் வைக்கிறது என்பது முக்கியமில்லை. குறைவான நேரமாய் இருந்தாலும், சொல்ல வந்த கால அவகாசத்தில், அமைத்துக் கொள்ளும் காட்சிகளில், பேசப்படும் நறுக், சுருக்…வசனங்களில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் எத்தனை எண்ணிப் பார்த்து உணரப்பட வேண்டியவை என்பதை கருத்தாய் உணர வைக்கும் ஜெயந்தனின் இந்த மனுஷா…மனுஷா…நாடகம்  மிகச் சிறிய நூலானாலும் இலக்கிய விரும்பிகள், நாடக ஆர்வலர்கள், தரமான வாசகர்கள் தேடிக் கண்ட படிக்க வேண்டிய புத்தகமாய் ஜெயந்தனின் இந்த நூல் அமைந்திருக்கிறது என்பதை சத்தியவாக்காக இங்கே முன் வைக்கிறேன்.

                                                ------------------------------------

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...