01 அக்டோபர் 2023

 

கைக்கு எட்டாதது - சிறுகதை - தளம் -ஜூலை-செப்.23 இதழ் பிரசுரம் 

-----------------------------------------------------------------------------------------------


ம்பந்தியும் சம்பந்தியும் சேர்ந்து ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதிசயம் அங்குதான் நிகழ்ந்தது. எதிர்பாராதவிதமாயச் சம்பந்தி ஆன கதை.  புதிதாக, முதல் நிகழ்வாக, புதிய செய்தியாக இருக்கும் என்றும் தோன்றியது நாகசுந்தரத்திற்கு. இதற்காக வேறு எங்காவது இப்படி அதிசயம் நடந்திருக்கிறதா என்று தேடவா முடியும்?

கல்யாணமே காதும் காதும் வைத்தாற்போலத்தானே நடந்தது. எங்கே வாய்விட்டுச் சந்தோஷமாக ஊருக்குச் சொல்ல முடிந்தது? ரகசியக் கல்யாணம் என்றே சொல்லலாம். திருட்டுக் கல்யாணம் என்று சொல்ல வேண்டியதில்லை. சொல்லாமல் கொள்ளாமல் அவர்களே போய்ப் பண்ணிக்கொண்டு, மாலையும் கழுத்துமாய் வந்து நின்றால்தான் அது. அந்த மட்டும் தப்பித்தது. ஏதோ முன்னோர்கள் செய்த புண்ணியம்.

இது காதேல்….! காதலிக்கிறாங்களாம்….!! கூட்டிக்கிட்டு அலையறதும், இழுத்துக்கிட்டுத் திரியறதும்தாங்க இன்னிக்கு ஃபேஷன்…அது தெரியாம…ஒலகம் புரியாத ஆளா நீங்க இருந்தீங்கன்னா?  பிரிய முடியாத அளவுக்கு ஒன்றிட்டாங்களாம்…அப்பாம்மா சம்மதிக்காட்டாலும் அத்துக்கிட்டுப் போயிடுவாங்களாம்.. எங்கயாவது போய் பிச்சை எடுத்தாவது பிழைச்சுக்குவாங்களாம்…பழைய வசனம்…இதுக்குத்தானே இத்தனை வருஷம் பாடுபட்டு வளர்த்து விட்டது? எதுக்கு? வாய்கிழியப் பேசுறதுக்கு…! அப்புறம் சொல்றதுக்கென்ன? மேஜர் ஆயாச்சு… பேசவேண்டிதான? மேஜர் மைனர் வேல பார்த்தா, மேஜர் ஆகித்தான பேசமுடியும்?…அதான ரூல்ஸ்….!  அப்பன் ஆத்தாளுக்கு டேஞ்சரா இருக்கோம்ங்கிற அறிவெல்லாம் எவனுக்கும் கிடையாது. டேஞ்சரென்ன டேஞ்சர்…? உங்ககிட்டச் சொல்லாமயா தாலியக் கட்டிக்கிட்டு வந்து நிக்கிறோம்…? அப்டி செய்தாத்தான் உங்கள மாதிரி  ஆளுங்களுக்கெல்லாம் சரியாயிருக்கும் போல்ருக்கு….ஒழுங்கு மரியாதையா வந்து நின்னு விவரத்தச் சொல்லியிருக்கோம்…இது போதாதா? வாய் பேசாமக் கல்யாணத்தப் பண்ணி ஆசீர்வாதத்தப் போடுங்க?…என்னவோ நீட்டி முழக்கிக்கிட்டிருக்கீங்களே? மரியாதையைக் காப்பாத்திக்கப் பாருங்க….! -இதெல்லாம் மூத்த தலைமுறை புரிஞ்சிக்கணும். அப்பத்தான் அவுங்களுக்குக் கௌரவம்…!

சம்மதிக்கலேன்னா இந்த அவமானம்தான் நடந்திருக்கும். ஊருக்கு டமாரம் போட்டுச் சொன்ன மாதிரி ஆகியிருக்கும். இப்ப என்ன வாழுது….? அதான் எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சே…! நாமதான் அல்ப சந்தோஷப் பட்டுக்கணும்…நிறையப்பேருக்குச் சொல்லலைன்னு….பலருக்கும் விஷயம் தெரியாதுன்னு….எல்லாப் பயலுகளும் மனசுக்குள்ள சிரிச்சிக்கிட்டு…திருப்திப்பட்டுக்கிட்டிருக்கான்னு எவனுக்குத் தெரியும்? அதுதான் யதார்த்தம்.

அடுத்தவனுக்கு ஒரு இழுக்கு வர்றதுல,  ஒரு காரியம் கெட்டுப் போறதுல, எல்லாரும் நினைச்ச ஒண்ணு நடக்காமப் போறதுல…எதிர்பாராத ஒண்ணு நடந்துடுறதுல…சந்தோஷப்படாத ஜென்மந்தான் எது? மனுஷன் ஒரு மோசமான சல்லிப்பயல்…! அவனுக்கு, தனக்கு நடக்குறதவிட, அடுத்தவனுக்கு நடக்காமப் போறதுலதான் அதிக…சந்தோஷம்…திருப்தி.!

            இவர் கண்காணிப்பாளர், அவர் உதவியாளர். அவரென்றால் எதிர் சம்பந்தி நாகபூஷணம். பெயர் கூட என்ன பொருத்தம் பார்த்தீங்களா? வாழ்க்கையில் ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் ஏதோவொரு ஜென்மத்தில் அல்லது ஏதோவொருவிதத்தில் எங்கேனும் ஒரு தொடர்பு ஏற்பட்டிருக்குமோ என்று சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லைதான். ஜென்ம பந்தமாய் இருக்குமோ? அப்படியெல்லாம்தான் நினைச்சு திருப்திப்பட்டுக்கணும் அல்லது வயித்தெறிச்சப்படணும். வேறே ஏலாதுன்னா அதானே வழி? பொறுமிப் பொறுமி ஓய்ந்தாயிற்று. உடம்பு கெட்டுப் போனதுதான் மிச்சம். மாத்திரைக்கும் மருந்துக்கும் செலவழிச்சு செலவழிச்சு….அடேங்கப்பா…என்னா பெருமை…!

            ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டதுதான். அது இப்படிக்கொண்டு போய்க் கோர்த்துவிடும் என்று யார் கண்டது? இந்தக் காலத்தில் எதைத்தான் தீர்மானமாக நிர்ணயிக்க முடிகிறது? அது அது நடக்க நடக்க வேடிக்கை பார்த்துக் கொண்டே, விரும்பியோ அல்லது விலகியோ இருக்க வேண்டியிருக்கிறது. இல்லன்னா கிறுக்கன் மாதிரி நிற்க வேண்டியிருக்கு. கன்ட்ரோல் பண்ணினாலும் கேட்கிறமாதிரியா இருக்கிறது பிள்ளைகள்? எங்க வாழ்க்கை எங்க கையிலே…என்ற தத்துவம் வேறே…எதுக்கு? தத்தாரியாத் திரியறதுக்கா? அவுத்துவிட்ட கழுதைங்க மாதிரி…!

            கண்டமேனிக்குத் திரிஞ்சிட்டு. கண்ட எடத்துலெல்லாம் சாப்பிட்டுக்கிட்டு, கண்ட பொருளையெல்லாம் வாங்கிக் குவிச்சிட்டு, எதிர்காலத்துக்கு சேமிக்கிற புத்தியில்லாம, அப்பன் ஆத்தா வச்சிருக்கிறதத் தராமயா போயிடுவாங்கன்னு மிதப்புலயே கிடந்து..… உடம்பு ஒத்துக்கிறவரைக்கும், ஏத்துக்கிறவரைக்கும் செய்யக் கூடாததையெல்லாம் செய்துக்கிட்டு….எதுக்கும் ஒரு திட்டமோ, வரைமுறையோ கிடையாது. இப்டி இருக்கிறதா லைஃப்? மனுஷன்னா, அன்றாட வாழ்க்கைன்னா சில நியமங்கள் வேண்டாம்? சின்ன வயசுலர்ந்து பழக்கியிருந்தாத்தானே அதெல்லாம் படிஞ்சிருக்கும்? ஜாலியா வளர்த்தேன்…சந்தோஷமா வளர்த்தேன்னா? அந்த ஜாலிங்கிற வார்த்தையே தப்பாச்சே?

            வேண்டும் என்றால் வேண்டும், வேண்டாம் என்றால் வேண்டாம்…அவ்வளவுதான். அதற்காக சண்டைக்கு அடிபிடி மாடுபிடி என்று பொருதுக்கு நிற்கவா முடியும்? நின்றுதான் என்ன பயன்? வெட்டு, குத்து, போலீஸ் ஸ்டேஷன் என்று போகவெல்லாம் நாதியில்லை. அந்தக் கேவலங்களையெல்லாம் எதிர்கொள்ள மனத்தெம்பும் இல்லை…உடல் தெம்பும் இல்லை…ஐவேஜூம் கிடையாது. வேண்டாத தொரட்டை இழுத்துவிட்டுக் கொண்டு  ஓட்டப்பெருமைக்கு பந்தாவாக அலைவதா? எல்லாம் எண்ணி எண்ணி ஓய்ந்தாயிற்று.

            பீஸ்ல என்னமா ஸ்டிரிக்டா இருக்கான் இந்த மனுஷன்…இதுல கோட்டை விட்டுட்டானே? இப்டி ஆளுங்களுக்கெல்லாம் அப்டித்தான்யா வந்து சேரும்…! நம்மளெல்லாம் என்ன பாடு படுத்தியிருக்கான்? பத்து நிமிஷம் லேட்டா வந்தா அட்டென்டன்சைக் க்ளோஸ் பண்ணி உள்ளே அனுப்பிடுவானேய்யா…? மூணு லேட்டு சேர்ந்துட்டா அரை நாள் லீவைக் கட்பண்ணிடுவானே….ஆபீ்ஸ் நேரம் முடிஞ்சும் போக விட மாட்டானேய்யா…அந்த ஃபைலை வச்சிட்டுப் போங்க…நான் சொன்னது என்னாச்சு? ன்னு அந்த நேரம் பார்த்துக் கழுத்தறுப்பானே….! ஈட்டிய விடுப்புப் போட்டா சாங்ஷன் வாங்கிட்டுத்தான் லீவு அவெய்ல் பண்ணனும்னு சொல்லி வயித்தெறிச்சலக் கொட்டியிருக்கானே…! ….எதுலதான்யா விட்டு வச்சான் நம்மள….? கடைசில எங்க போய் மாட்டிக்கிச்சு பார்த்தியா…..? ஊரான் வயித்தெறிச்சலைக் கொட்டிக்கிட்டா இப்படித்தான் அமையும் திகிடு முகடா…! நாக பூஷணம் அவர் பொண்ணை நாகமோகினியா  அனுப்பிச்சி நாக சுந்தரத்தோட பையனை வளைச்சிப் போட்டிடுச்சே….? இங்க இருக்கிற கண்டிப்பும், கறாரும் வீட்டுல செல்லுபடியாகல அய்யாவுக்கு…! இப்போ, பொத்திக்கிட்டு நிக்கிறாரு….! வாயே திறக்கிறதில்லையாம்….தலையைக் குனிஞ்சமேனிக்கே கிடக்குறாராம். கேட்டா…எதையும் பார்க்கப் பிடிக்கலைன்னு சந்நதம் வந்த மாதிரிக் கத்துறாராம்….எத்தனை நாளைக்கோ…? -சொல்லிச் சொல்லி சிரித்துக் கொள்கிறார்களோ?

            யாரு சொன்னா இதெல்லாம்? உண்மையா இல்ல நீரா அடிச்சி விடுறீரா? பொழுது போகுறதுக்காக எதையாவது பழிசொல்லி வைக்காதீங்க…அது நம்மளப் பாதிக்குமாக்கும் – நீலன் ஆவணக் காப்பக எழுத்தர் சற்று சத்தமாகவே கேட்டார். அழகர், பண்டகக் காப்பாளர்  சிரித்துக் கொண்டே தொடர்ந்தார். பண்டகத்தில் பொருட்களைப் பாதுகாப்பது போல் இந்த விஷயங்களையும் சேகரித்துப் பாதுகாத்தார்.

            அந்தப் பொண்ணு காலைல பத்துக்குத்தான் படுக்கையவிட்டே எழுந்திரிக்குதாம். ரூமுக்குள்ள அடைச்ச கதவு அடைச்சமேனிக்கே இருக்க…அதுக்கேத்தாப்புல இவனும் தூங்க ஆரம்பிச்சிட்டானாம். கழுத கெட்டாக் குட்டிச்சுவரு…ன்னு நம்ப நாகசுந்தரம் கத்தப் போக, அது அந்தப் பொண்ணு காதுல விழுந்து பெரிய சண்டையாகிப் போச்சாம்.

            என்ன உங்க வீட்டுல இதுக்கெல்லாம் போய் குத்தம் சொல்லிட்டிருக்காங்க…? ன்னு கத்தி…நா எங்க வீட்டுக்குப் போறேன்னிட்டு நின்னுதாம்…

            எப்ப எந்திரிச்சா உனக்கென்னப்பா? நீபாட்டுக்கு உன் ரூம்ல எதையும் கண்டுக்காம இருக்கப் பாருப்பா…! காதுலயே எதையும் வாங்காதே…முடிஞ்சா கண்ணையும் மூடிக்கோ!

            ஏண்டா…காலங்காலமா உங்கம்மா வடிச்சிக் கொட்டிக்கிட்டிருக்காளே…அவளுக்கு கொஞ்சம் ஒத்தாசை செய்யக் கூடாதா? குறைஞ்சு போவாளா உம் பொஞ்சாதி…? உங்கம்மா வேலை வேலைன்னு மாயுறது உன் கண்ணுக்குப் படவேயில்லையா? அவ ஒடம்பு நாளுக்கு நாள் நசிஞ்சு போகுதே…அதுல உனக்கு சம்மதமா? மனசாட்சின்னு ஒண்ணு வேணுன்டா…அது உனக்கு இருக்கா இல்லையா?

            அவ அப்டியெல்லாம் அவுங்க வீட்டுல பழகினவ இல்லப்பா…!

            அப்போ மணிக் கணக்கில்லாமத் தூங்கத்தான் சொல்லிக் கொடுத்திருக்காங்களா? ஏண்டா…இஷ்டத்துக்குத் தூங்க, எழுந்திரிக்க, வெளில ஊர் சுத்த, ஓட்டல்ல திங்க….சினிமாப் பார்க்க…கண்ணுல பட்டதையெல்லாம் பர்சேஸ் பண்ண…அசந்து வீடு .திரும்ப, ரூம்ல போய் பொத்துன்னு படுக்கைல விழ…இதுதான் வாழ்க்கையா? இதத்தவிர வேறே ஒண்ணும் தெரியாதா அவளுக்கு? தெரிலன்னா சொல்லிக் குடுறா…தெரிஞ்சிக்கட்டும்…கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தது வேறே…கல்யாணத்துக்கப்புறம் இருக்கிறது வேறே….ன்னு புரியட்டும்….கொஞ்சம் கொஞ்சமாவாவது சரியாகட்டும்….புளி மூட்டை மாதிரி அலைஞ்சா உடம்பு என்னத்துக்காகும்?

            இதெல்லாம் சொல்ல ஆரம்பிச்சா சண்டைதான் வரும். எதிர்த்து எதுத்துப் பேசுவா? இப்டிச் சொல்றாங்களேன்னுதான் கோபம் வருமேயொழிய, ஏன் சொல்றாங்கன்னு யோசிக்கவே மாட்டா…! நல்லதுக்குத்தான் சொல்றாங்கன்னு நினைக்கவே மாட்டா….அழுதுக்கிட்டு உட்கார்ந்தது அந்தக் காலம். இந்தக் காலத்துல…அது நடவாது. கால்ல செருப்பை மாட்டிக்கிட்டு…படி தாண்டிப் போயிடுவா…பரவால்லியா? நல்ல விஷயங்கள குதர்க்கமா எடுத்துக்கிற புத்தி…!  எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்றாங்கன்னு ஒப்பாரி வைக்க வேண்டியது…!  இல்லன்னா எடுத்தெறிஞ்சு பேச வேண்டியது…வேறென்ன?

            என்னமாய்ப் புரிந்து பேசுகிறான் பையன்? ராம்லட்சுமண்…என்று பெயர் வைத்தும், அந்த லட்சுமணனுக்கு இருக்கும் கோபத்தில் பாதி கூட  இல்லையே? கட்டுப்பெட்டியாய் நிற்கிறானே? நல்லவனாய் இருக்கலாம். ஆனால் கோழையாய் இருக்கலாமா? தேவையானதை கட்டின பெண்டாட்டியிடம் சொல்ல வக்கில்லாதவன் என்ன ஆம்பளை? எதையுமே நல்ல சென்ஸ்ல எடுத்துக்க உங்க வீட்டுல உனக்குச் சொல்லியே கொடுக்கலியா? ன்னு ஒரு வார்த்தை கேட்கலாமே?

            ஒரு நாளாவது மருமகப்பெண் விடிகாலை எழுந்து பல் விளக்கி, குளித்து பளிச்சென்று சாமி படத்தின் முன்னால் நின்று இன்றுவரை இவர் பார்க்கவில்லை. நல்லவேளை தனக்குள்ள காபியைத் தானே கலந்து கொள்கிறது.  அதற்கும் இவன் அம்மாதான் என்றால் கேட்கவே வேண்டாம்…நிச்சயம் கலகம்தான். எழுந்ததிலிருந்து அதே நைட்டி  டிரஸ்ஸோடு நாள் முழுக்க வளைய வந்தால்? அதுவே இவருக்கு முதலில் பிடிக்கவில்லை. அருவருப்பாய் உள்ளது.  குளிக்காமலேயே காலை டிபன் சாப்பிடுவது, மதிய உணவு உண்பது, உறங்குவது அல்லது மொபைலில் சினிமா பார்ப்பது, மாலை நாலு மணிக்கு மேல் மனசிருந்தால் குளிப்பது? தினமும் குளிக்கவாவது செய்கிறதா அந்தப் பெண்? அதுவே இவருக்கு சந்தேகம்தான். …. என்ன பழக்க வழக்கங்கள் இது? பளிச்சென்று முகம் கழுவி, தலை ஒதுக்கி, பளீரென்று பொட்டு வைத்து…வீடு விளங்க இருந்து ஒரு நாள் பார்த்ததில்லை.

மனசு ஆறவே மாட்டேனென்கிறது இவருக்கு. இன்னும் கொஞ்சம் தாமதித்திருக்கலாமோ? சரியாய்ப் பார்க்காமல் போய் விட்டோமோ? கல்யாணத்துக்கு முன் அவர்கள் வீட்டுக்குப் போய்ப் போய் வந்தபோதெல்லாம் அது தூங்கிக்கொண்டே இருந்ததைக் கண்ணுற்றும் மூளை வேலை செய்யவில்லையே? அப்போவே யோசித்திருக்க வேண்டாமா? அட்டச் சோம்பேறியா இந்தப் பெண்? என்ற யோசனை ஏன் போகவில்லை?

ராத்திரி ட்யூட்டி முடிச்சு லேட்டா வந்தா…அதான் தூக்கம்….ஐ.டி. பீப்பிளே இப்போ காலம்பற லேட்டாத்தான் எழுந்திரிக்கிறா…! இதெல்லாம் இப்போ சகஜமாப் போயிடுத்து…

கல்லூரி முடித்த கையோடு ரெண்டு பேருக்கும் கேம்பஸ் இன்டர்வியூவிலேயே  வேலை கிடைத்து விட்டதும்…அதுவும் உள்ளூரிலேயே அமைந்து போனதும்…அவர்கள் காதலைக் கன்டின்யூ பண்ண ரொம்பவும் வசதியாய்ப் போயிற்றே!  வினை இப்படியெல்லாம்தான் ஒத்துமையாய் வலம் வரும்போலிருக்கிறது!

            இப்படியா ஒரு பெண்ணை வளர்ப்பார்கள்? இன்னொரு வீட்டுக்குப் போக இருக்கும் பெண்ணுக்கு என்னவெல்லாம் பொறுப்பாய் சொல்லிக் கொடுத்திருக்க வேண்டும்? அதில் ஒரு அம்சமாவது இதனிடம் இருக்கிறதா? அதென்ன தினசரி காலை பத்து, பத்தரை முடிந்தால் பதினொண்ணு வரை தூக்கம்? நாளைக்கு தனிக்குடும்பமாய் வாழ்க்கை நடத்தப்போகும் ஒரு பெண்ணை இப்படியா வளர்ப்பார்கள்? எல்லாம் சொல்லிக்கொடுத்து பக்குவமாய் மறுவீட்டுக்கு அனுப்புவதுதானே முறை?அதுதானே பெற்றவர்களுக்குப் பெருமை?  பயந்து பயந்து செய்ய வேண்டாம். முறைப்படியாய் பயிற்றுவித்து பக்குவமாக்கி அனுப்ப வேண்டாமா? இந்தப் பொண்ணோட அப்பன் ஆத்தாளுக்கே பொறுப்பில்லையே? அப்புறம் பெற்ற பெண்ணை என்ன லட்சணத்துல வளர்த்திருப்பாங்க? மாசங்கூடி என்னைக்காச்சும் முடிலன்னா வெளியே சாப்பிடப்போவாங்க…வாரத்துல ரெண்டு மூணு நாள்னு வெளிலர்ந்து டிபனையும், சாப்பாட்டையும் வரவழைச்சா? மூத்த தலைமுறைப் பெற்றோர்களே இதைச் செய்யலாமா?

            நாகபூஷணத்தின் ஆபீஸ் வேலையில் என்றும் திருப்தி இருந்ததேயில்ல நாகசுந்தரத்திற்கு. சொன்ன கோப்புகளை உடனே நடவடிக்கை எடுத்து தன் டேபிளுக்கு அனுப்ப மாட்டார். நாலு தரம் கேட்டால் அஞ்சாம்தரம்தான் வரும். எடுத்த நடவடிக்கையிலும் அத்தனை திருப்தி இருக்காது. அவர் எழுதிய டிராஃப்டை பரட்டென்று பேனாவால் குறுக்குக் கோடு போட்டு அடித்துவிட்டு, புதிதாக எழுதி வைப்பார் இவர். அந்த அழுத்தமான அடித்தலில் அவரது கோபம் பளிச்சென்று தெரியும். அதற்காக பூஷணம் அலட்டிக்கொண்டதேயில்லை. தான் எழுதும் வரைவை ஒருத்தன் திருத்துகிறான் என்றால் மானமுள்ளவனுக்குக் கோபம் வரும். இங்கேதான் அதன் அடையாளமேயில்லையே? எல்லாமும் எருமை மாட்டின் மேல் மழை பெய்த கதைதான். நமக்கு வாய்த்த சம்பந்தி எவ்வளவு புத்திசாலி? என்று நினைத்து மனதிற்குள் அழுவார் இவர். இவர் குடும்பம் நடத்தும் லட்சணம்போலத்தானே இவரது கடமையின் தரமும் இருக்கும்.

            இப்போதெல்லாம் கண்ணீர் வற்றிவிட்டது இவருக்கு. எதைச் சொல்லி என்ன செய்ய? எல்லாம் பிரம்மன் எழுதிய எழுத்து. தலைவிதி அழுந்த எழுதப்பட்டிருக்கிறது. இப்படிக் கிடந்து மாய் என்று.  

மண்டை பூராவும் வீங்கி நிறைந்திருந்தது நாகசுந்தரத்திற்கு. அந்த மருமகப் பெண்ணின் ஒரு நடவடிக்கை கூட திருப்தி தரவில்லை இவருக்கு. பையனுக்காக எவ்வளவுதான், எத்தனைதான் பொறுப்பது? சகிப்புத்தன்மைக்கும் ஒரு அளவில்லையா?

            அவ ராத்திரி பன்னெண்டு, ஒண்ணுக்குத்தாம்ப்பா படுக்கவே செய்றா?

            அதுவரைக்கும்? அந்த செல்லை வச்சிண்டு நோண்டிண்டு, சினிமா பார்த்த மணியமா இருக்கணுமா? கண்ணு கெட்டுப் போகாதா? மொபைல் பார்க்கிறதுக்கும் ஒரு விவஸ்தையில்லையா? அப்புறம் ஒடம்பு ஏன் அசந்து, கழிஞ்சு போகாது? நல்ல ஓய்வு, உழைப்பு, சக்தியான சாப்பாடுன்னு இருந்தாத்தானே நாளைக்குப் பிறக்கப்போற குழந்தை புஷ்டியா, ஆரோக்கியமா இருக்கும்? இப்டித் தத்தாரியா இருந்தா என்னத்துக்காகும்?

            அதெல்லாம் நீட்டா ரெடியாயிடும்..நீ ஒண்ணும் இதுக்காக மனசை அலட்டிக்காதே..-சிரித்துக் கொண்டே சொன்னான் ராம்…கூடவே அவரைக் கண்டிக்கவும் செய்தான்.

வார்த்தைகளை ஜாக்கிரதையா யூஸ் பண்ணுப்பா…அவ காதுல விழுந்ததுன்னா கலகம்தான்….பார்த்துக்கோ….நானே பொறுக்க முடியாத அளவுக்குச் சொல்றே நீ…! அதைப் புரிஞ்சிக்கோ….…ஐ.டி. வேலை பார்க்கிறவங்களெல்லாரும் இப்படித்தாம்ப்பா….உனக்குத் தெரிஞ்ச வீடுகளுக்கெல்லாம் வேணும்னா போய்ப் பாரு…தெரியும்….இப்பத்தான் படிச்சு முடிச்சு நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போயிருக்கோம்….இன்னும் வேலையே அவளுக்குப் படியலை. அதுவே பெரிய நொச்சா இருக்கு…இதுல நீ வேறே….! இந்த ஐ.டி. கலாச்சாரமே இப்படித்தான் நாறிட்டுக் கிடக்குது…. கண்டுக்காம விடப் பாருப்பா….!! இப்டியே முனகிட்டும், பொறுமிட்டும் கிடந்தேன்னா வீட்டுல நிம்மதியே இருக்காது.  நாங்க ரெண்டு பேரும் தனியாத்தான் போகணும் அப்புறம்…! பார்த்துக்க…!!!

            இந்த வார்த்தையை ராம் சொன்னதும் வாயடைத்துப் போனார்  நாகசுந்தரம். அந்த மட்டும் ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும். இன்றுவரை தனிக்குடித்தனம் என்ற வார்த்தையையே அந்தப் பெண் எடுக்கவில்லை.  அவர்கள் வீட்டில் தாத்தா பாட்டியை அப்பா வைத்துக் காப்பாற்றுவதுபோல…இங்கும்…என்று நினைத்துக் கொண்டிருக்கிறதோ என்னவோ? இல்லை ஒருவேளை…ஜோதியின் அப்பா நாகபூஷணம் கண்டிஷன் போட்டிருக்கலாம்…மாப்பிள்ளையோட பெற்றோரை கடைசிவரை நீங்க வச்சுக் காப்பாத்தித்தான் ஆகணும்…அதுல எந்தக் குறையும் என் காதுக்கு வரக்கூடாது…..ன்னு…!

ஆபீசில் யாரோ சொல்லி காதுக்கு லேசாக வந்து சேர்ந்த செய்தி இது.

            தன் சேமிப்பு பற்றியெல்லாம்தான் அவருக்குத் தெரியுமே…! ப்ரொமோஷனே வேண்டாம் என்று ஒரே ஊரில குப்பை கொட்டும் ஆசாமியாயிற்றே…! எல்லார் டைரியும் அவரிடம்தானே இருந்தது.

மனுஷன் காசுல படு கெட்டி…! எத்தனை முறை தன் காது கேட்கவே பேசியிருக்கிறார். சொந்த வீடு…ரெண்டு காலி ஃப்ளாட்…ஏராளமான ம்யூச்சுவல் ஃபன்ட்கள்…நிரந்தர வைப்புகள்…இந்த விபரங்கள் எல்லாம் தெரியாதா என்ன? எல்லாம் திட்டம்போட்டுத்தான் நடந்திருக்குது. எல்லா சேமிப்பையும் பையனுக்குத்தான் கொடுக்கப் போகிறோம். வேறு எங்கும் தானம் பண்ண நிச்சயம் மனசு வராது…போகட்டும்…காலம் இப்படியேவா நகன்று விடும். ஏதேனும் மாற்றம் வராதா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று நிதானப்பட்டிருந்தார் நாகசுந்தரம்.

னாலும் ஆபீசில் உள்ளவர்களுக்கு இந்த வாய் ஆகாதுதான். தானாடாவிட்டாலும் சதையாடும் என்பதுபோல் இவர்கள் வாய் இவர்களின் கன்ட்ரோல் இன்றி தானே பேசித்திரியும் போல…..யப்பப்பா…என்னா பேச்சு…என்னா பேச்சு…!!!  நாக்கு அநியாய நீளம்.

            பெரிய ஜாதி வித்தியாசம்ன்னு சொல்ல முடியாதுங்க…ரெண்டுமே ஒசந்த ஜாதிதான். கொடுக்கிறதுக்கென்ன…? பூஷணத்தோட பிரிவுல பொம்பளைங்கல்லாம் நல்லா பார்வையா அழகாத்தான் இருப்பாங்க….செக்கச்செவேல்னு….நம்ப சாரு பையன்தான் அத்தனை சிவப்புன்னு சொல்ல முடியாது….ஆனா ஒரு ஆம்பளைக்குள்ள நார்மலான நிறத்தோட ஆள் திடகாத்திரமா, பார்வையா இருப்பான்….ஜோடிப் பொருத்தம்தான்னு வச்சிக்குங்களேன்….ஒரே காலேஜ் வேறையா…ஒட்டிக்கிச்சு…பத்திக்கிச்சு…

            இருக்கலாம்யா…அந்தம்மா உறவுலயே இந்தப் பயலுக்கு ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணி வச்சிருந்ததாமே…! சின்ன வயசிலே வாக்குக் கொடுத்த கேசாம்…அது தப்பிப் போச்சேன்னு அழுதிட்டிருக்காம்….உடம்பு முடியாமப் படுக்கைல விழுந்திடுச்சாம்யா…

            இது பழைய நியூஸ்யா நீ சொல்றது…இப்ப எல்லாம் தேறி எழுந்து ஒண்ணோட ஒண்ணு ஆயிடுச்சாம்…அந்தம்மா சரியாயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன். இவருக்குத்தான் ஒட்ட மாட்டேங்குது.. இவர்தான் முசுடு ஆச்சே…! ஆபீஸ்லயே யார்ட்டயும் சுமுகமா முகங்கொடுத்துப் பேச மாட்டாரே…! வீட்லயா…அதுவும் வேத்து ஜாதிப் பொண்ணுகிட்டயா சகஜமா இருக்கப் போறாரு…? பேசிக்கிறதேயில்லையாம்… எப்பயாச்சும் ஒண்ணு ரெண்டு வார்த்தை…அத்தோட சரியாம்….மாமனார் கெத்து….வேறென்ன சொல்ல….?

            தங்களை மறந்து  ஆபீசில் பலரும் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். வம்பு வளர்க்க இவர்களை விட்டால் ஆளில்லை. அதிலும் அடுத்தவனைப்பற்றிப் பேசுவதென்றால் லட்டு மாதிரி. ஆபீசுக்கு வேலை மட்டுமா செய்ய வருகிறார்கள். அவர்களை வேலை செய்ய உற்சாகப்படுத்துவதே எதுடா பேசக் கிடைக்கும் என்று கொட்டிக் கிடக்கும் விஷயங்கள்தான். நிர்வாகத்தை அடக்கி ஆளும் நாகசுந்தரம் இதில் தன் அதிகாரத்தைக் காட்ட முடியவில்லை. அடங்கித்தான் கிடந்தார். காதில் விழுந்தும் விழாதவர்போல் கிடந்தார். இந்த வம்பர்களின் வாயை அடக்க என்ன வழி என்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்தார்.

            ஆனது ஆச்சு…போனது போச்சு…அஞ்சாமல் வா…இனி அல்லல் உந்தன் வாழ்விலே நில்லாதம்மா…- கொஞ்சம் தள்ளிக் கோயில் திருவிழாவில் மைக் செட் பாட்டு அலறியது. மக்களின் பழைய பாட்டு மோகம், ரசனை இன்னும் அப்படியே உள்ளது.

திடீரென்று பார்த்தபோது நாக சுந்தரமும், நாகபூஷணமும் இருக்கையில் இல்லாதது எல்லோரையுமே ஆச்சரியப்படுத்திற்று. யாரும் எதிர்பாராத ஒன்று. ரெண்டு பேரும் சேர்ந்து ஒருசேரக் காணாமல் போவதா?

என்னாச்சு…கை சேர்ந்திருச்சு போல….? -சொல்லிச் சிரித்தார்கள். வெட்டியாய்ச் சிரித்துப் பொழுது போக்குவதற்கு,  அழுத்தமாய் விஷயங்கள் வேண்டுமா என்ன?

            என்னைய்யா…ரெண்டு பெரிசுகளையும் ஆளக் காணல….? – என்றபோது…அங்க பாருங்க….என்று கண்ணைக் காண்பித்தார் நீலன்.

            ஒருவருக்கொருவர் ரொம்பவும் நெருக்கத்தோடும், இஷ்ட பாவனையோடும்…..காம்பவுன்ட் வாசலை நோக்கி வெளியேற முனைந்து கொண்டிருந்தார்கள். நடையில் அத்தனை நிதானம். மெதுவாத் திரும்புவோம், இப்ப என்ன?... என்பது போல…

            டீ சாப்பிடப் போறாங்களோ….? என்னடா இது அதிசயம்?   நம்ப கண் முன்னாடியே திடீர்னு காணாமப் போயிட்டாங்க….? சேர்ந்து நின்னு பேசியே பார்த்ததில்லையேய்யா…கண்கொள்ளாக் காட்சியால்ல இருக்கு…?

            அவுங்க காரியங்கள் எல்லாமே திடீர் திடீர்னுதானே நடக்குது….பெத்த புள்ளைங்க கல்யாணமே அவுங்க எதிர்பாராத நேரத்துலதானே நடந்து போச்சு…..-சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார் பண்டகக் காப்பாளர் அழகர்சாமி. மனிதன் ஒரு மோசமான சல்லிப்பயல்…மலிவான விஷயங்களில், மலிவான கோணங்களில் மனம் லயிப்பதில் அலாதி திருப்தி.

            யாரோ என்னவோ சொல்லிட்டுப் போங்க… இவை எதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டில்லை என, கேட்டைக் கடந்து சாலை நுனிக்குப் போன அவர்கள், நின்று போக்குவரத்தைக் கவனிக்க முனைந்தபோது…இருங்க…இருங்க….பயங்கரமான டிராஃபிக்கா இருக்கு …பார்த்துக் கிராஸ் பண்ணனும்….என்று சொல்லிக்கொண்டே நாகசுந்தரத்தின் கையைப் பிடித்து நிறுத்திய நாகபூஷணம்…..! தன்னை விட வயசான அவரைச் சற்றுத் தாங்கிப் பிடித்துக் கொண்டது போலவேயிருந்தது அந்தக் காட்சி.

            ஒரு சந்தோஷச் செய்தி தெரியுமா உங்களுக்கு…! உங்க மருமகப் பொண்ணு முழுகாம இருக்கு….! நாலு மாசமாகப்போகுது….பெட் ரெஸ்ட்  எடுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு…விபரம் தெரியுமா? .- என்று கேட்டபோது, சற்று அதிர்ந்துதான் போனார் நாகசுந்தரம். அப்படி வெளியே இழுத்து வந்து சொன்னதுதான் ஆறுதல். தானும் வாய்மூடிக் கட்டுப்பட்டுப் புறப்பட்டு வந்தோமே? எல்லாம் இறைவன் சித்தம்….

ஒரே வீட்டில் இருக்கும் தனக்குத் தெரியாத செய்தி தன் சம்பந்திக்கு முந்தித் தெரிந்தது எப்படி? மனது வெட்கப்பட்டது என்பதை விட, சட்டென்று வருத்தப்பட்டது. நாலு மாசமாச்சு என்று கூறியதும், காலம் கடந்து அறிவதில் ஒரு நெருடலோடு  இதுநாள்வரை இந்தச் சங்கதி ஏன் அறியப்படாமல் போனது? ஒருவேளை மறைக்கப்பட்டதோ என்றும், அதற்கு என்ன அவசியம், எதற்காக என்றுமில்லாத தன்மையாய் இன்று தன்னை இப்படி வெளியே வலிய அழைத்து வந்தார் என்பதையும் ஒருங்கே நினைத்துப் பார்க்க முனைந்தார் நாகசுந்தரம். இந்தச் செய்தியைச் சொல்ல, இந்த நேரத்தை, இந்தத் தனிமையை ஏன் தேர்ந்தெடுத்தார்  என்றும் புரிந்தும் புரியாமலும் குழப்பமடைந்தார்.  

            அழுவதா, சிரிப்பதா என்று அந்தக் கணம் நடப்பது எதுவுமே தன் கட்டுப்பாட்டில் இல்லையோ என்று உணர்ந்தவராய்…அப்போ…சீக்கிரத்துல ரெண்டு பேரும் தாத்தாவாகப் போறோமா…? என்று செயற்கையாய்ச் சொல்லிக்கொண்டே வாயெடுத்துச் சிரித்தவாறே பூஷணத்தின் கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு சாலையைக் குறுக்கே கடந்தார் நாகசுந்தரம்.

            கொஞ்சம் அதிகமாகவே சிரித்து விட்டது போலவும், அதில் கொஞ்சம் அசட்டுத்தனமும் கலந்திருந்ததுபோலவும் அப்போது அவருக்குத் தோன்றி அநியாயமாய் வெட்கப்பட வைத்தது அவரை.

                                                            -----------------------------

     

 

கருத்துகள் இல்லை:

 விட்டல்ராவ் அவர்களின் “சில உலகத் திரைப்படங்களும் கலைஞர்களும் ------------------------------------------------------------------------------...