29 அக்டோபர் 2016
28 அக்டோபர் 2016
அவ்வப்போது கவிதைகளும்…..
Ushadeepan Sruthi Ramani
“அறி…!”
*******************************************
பார்ப்பதும் பார்க்காததும்
உன் விருப்பம்
பார்த்தும் பார்க்காதது
என் விருப்பம்
கேட்பதும் கேட்காததும்
உன் விருப்பம்
கேட்டும் கேட்காதது
என் விருப்பம்
பேசுவதும் பேசாததும்
உன் விருப்பம்
பேசியதும், பேசாததும்
என் விருப்பம்
உன்னோடு அது என்றால்
என்னோடு இது…!
உனக்கு மட்டும் அது என்றோ
எனக்கு மட்டும் இது என்றோ
எதுவுமில்லை!
உன்னோடு உள்ளது உன்னுடையது
என்னோடு கிடப்பது என்னுடையது
அவரவர்க்கு அவரவருடையதுதான்
யாரும் எதுவும் பறிப்பதற்கில்லை
யாரும் யாரையும் முடக்குவதற்குமில்லை
உனக்கும் எனக்கும்
உலகம் ஒன்றுதான்….!
பயணம்தான் வேறு…!
-----------------
தீர்வு…! ஸ்ருதி ரமணி,
--------------------,
எனக்கும் அவனுக்குமான உறவை
எது சேர்த்து வைத்தது?
எனக்கும் அவனுக்குமான கேள்விகளை
எது துவக்கி வைத்தது?
எனக்கும் அவனுக்குமான புரிதலை
எது முன்னின்று தடுக்கிறது?
எனக்கும் அவனுக்குமான வித்தியாசங்களை
எது காட்டிக் கொடுக்கிறது?
எனக்கும் அவனுக்குமான இணக்கங்களை
எது மறைக்கப் பார்க்கிறது?
எனக்கும் அவனுக்குமான குரோதங்களை
எது தடுத்தாட்கொள்கிறது?
எனக்கும் அவனுக்குமான வருத்தங்களை
எது அமைதிப் படுத்துகிறது?
எனக்கும் அவனுக்குமான விலகல்களை
எது வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது?
எனக்கும் அவனுக்குமான ஒற்றுமையை
எது பிரித்து வைக்கிறது?
எனக்கும் அவனுக்குமான நெருக்கத்தை
எந்த மனம் ஏற்க மறுக்கிறது?
என்னில் “நானை” உதறியெறிந்து – அவன்
தன்னில் ”தன்னைப்” புதைத்து விட்டால்
எங்கும் எதுவும் சாத்தியமோ…!
-------------------------------------------------------------------------
கேள்வி ...!
***********************************************
ஏன் பொறுக்க மறுக்கிறது மனம்
நானொன்று சொல்ல
அவர்கள் ஒன்று நினைக்க
எந்த இடத்தில் விழுந்தது
இந்தப் புள்ளி?
வெள்ளைத்தாளில் விழுவதெல்லாம்
வெறும் புள்ளியா? கரும்புள்ளியா?
வெறும் புள்ளியாயினும்
கண்ணுக்குத் தெரிவது
அது மட்டும்தானே…!
அப்படியானால் கரும்புள்ளி?
வன்மம் வளர்க்குமோ…?
வார்த்தை தெறிக்குமோ?
எதிர்வினையில் எகிறி விழுமோ?
பொது வெளியின்
பொத்தாம் பொதுவினை
தனக்கானதாய்
இனம் பிரிக்கும் மனம்
எந்த வகை முதிர்ச்சி?
----------------------------
26 அக்டோபர் 2016
சத்யஜித்ரேயின் சிறுகதைகள்-பாவண்ணன்
அவசியம் படிக்க வேண்டிய புத்தகமாகத் தெரிகிறது பாவண்ணனின் இந்த விமர்சனத்தைப் படித்த பிறகு....
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
23 அக்டோபர் 2016
சத்யஜித்ரேயின் சிறுகதைகள்
பாவண்ணன்
சத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர நிறுவனத்தில் ஓவியராக வேலைக்குச் சேர்ந்த சத்யஜித் ரே அதைத் தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாடு கொண்டவராக மாறினார். 1961ஆம் ஆண்டில் ஏதோ ஓர் ஆர்வம் உந்த தன் நாற்பதாவது வயதில் சத்யஜித்ரே தன் நண்பரொருவருடன் சேர்ந்து நின்றுபோயிருந்த சந்தேஷ் இதழுக்குப் புத்துயிரூட்டத் தொடங்கினார். இதழில் தன் பங்களிப்பாக சில படைப்புகள் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சிறுவர்களுக்காக ஏராளமான சிறுகதைகளை தொடர்ந்து எழுதினார். சிறுவர்களுக்கானவை என்பதால், சுவாரசியத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு புதிய புதிய பின்னணியில் கற்பனை வளத்தோடு எழுதினார் ரே. தன் திரைப்படங்களின் வழியாக அவர் ஒரு தவிர்க்கப்பட முடியாத இந்திய ஆளுமையாக வளர்ந்த பிறகு எழுபதுகளிலும் எண்பதுகளிலும் அவருடைய சந்தேஷ் சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இதழ்களில் வெளிவரத்தொடங்கின. பிறகு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு வெளிவந்தது.
சத்யஜித் ரே எழுதிய சிறுகதைகள் என்னும் காரணத்தைவிட, இவற்றை மொழிபெயர்த்ததன் பின்னணியை மொழிபெயர்ப்பாளர் அற்புதராஜ் எழுதியிருக்கும் காரணமே என்னை இப்புத்தகத்தை உடனே படிக்கத் தூண்டியது. ஆங்கில இதழ்களில் இக்கதைகள் வெளிவந்த எண்பதுகளில் அற்புதராஜ் ஓர் ஆசிரியராக பணியாற்றியவர். அக்கதைகளை ஆங்கிலத்தில் படித்ததுமே, அவற்றின் புதுமை காரணமாக தொடர்ச்சியாக விரும்பிப் படித்துவந்தார். தம் மாணவர்களுக்கும் தம் பிள்ளைகளுக்கும் சொல்லும் பொருட்டு அக்கதைகளை தமிழில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டார். ஓய்வு நேரங்களில் அவர்களுக்குப் படித்துக் காட்டி உற்சாகமூட்டும் வேலையையும் செய்தார். குழந்தைகளுடன் புதுமையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என அவருக்குத் தோன்றிய அந்த எண்ணம் எனக்கு மிகவும் முக்கியமாகத் தோன்றியது. ஓர் ஆதர்ச ஆசிரியருக்கு அல்லது ஆதர்ச அப்பாவுக்கு மட்டுமே இருக்கக்கூடிய குணங்கள் அவை. இளம்பருவத்தில் அவர் மொழிபெயர்த்த சிறுகதைகள் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் இப்போதுதான் நூல்வடிவம் பெற்றிருக்கின்றன.
குழந்தைகளுக்கான சிறுகதைகள் என இன்று தமிழில் எழுதப்படும் எந்தக் கதையையும் இக்கதைகளுடன் ஒப்பிடவே முடியாது. தமிழில் குழந்தைகளுக்கான கதைகள் எவ்வளவு பின்தங்கியிருக்கின்றன என்பதை ஒரே வாசிப்பில் நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இத்தொகுப்பின் பதினோரு கதைகள் உள்ளன. படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதையை மட்டும் இலக்கியவகையிலான சிறுகதை என வரையறுக்கலாம். மற்ற பத்து சிறுகதைகளும் சிறுவர்களின் வாசிப்புகுரியவை. புதுப்புதுக் களங்களுடன் உள்ள அக்கதைகள் அடுத்து என்ன, அடுத்து என்ன என ஆவலைத் தூண்டும் விதமாக எழுதப்பட்டுள்ளன. கதை எழுதும் கலையின் பல சாத்தியப்பாடுகளை ரே முயற்சி செய்து பார்க்கிறார் என்பது முக்கியமானதொரு அம்சம்.
கதைகளைக் கட்டமைக்க ரே மேற்கொள்ளும் தொழில்நுட்பம் மிகமுக்கியமானது. அவர் கையாளும் உத்திகளை உத்தேசமாக இப்படி வரையறுத்துக்கொள்ளலாம்.
1. ஒரு கதையைப்போல இன்னொரு கதையை வடிவமைப்பதில்லை. ஒவ்வொரு கதைக்கும் ஒரு புதிய வடிவத்தைக் கற்பனையால் அடைதல்.
2. புதிய புதிய களங்களை மிகவும் நம்பகத்தன்மையோடு அறிமுகப்படுத்துதல்.
3. அபூர்வமானதொரு வரலாற்றுத் தகவல், விசித்திரமானதொரு அறிவியல் உண்மை, புராண நம்பிக்கை என ஏதேனும் ஒரு சின்ன அம்சத்தை கதையின் மையமாக தேர்ந்தெடுத்தல்.
4. கட்டற்ற கற்பனையாற்றலோடு கதைநிகழ்ச்சிகளை இணைத்துக்கொண்டே போதல்
’அண்டல்காலோர்னிஸ் என்பது மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பறவை. அது மனிதனைப்போலவே உயரமானது’ என்பது ஒரு சின்ன தகவல். இதை மையமாகக் கொண்டு ரே எழுதியிருக்கும் ‘பெரும்பறவை’ என்னும் சிறுகதை ரேயின் கற்பனையாற்றலுக்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டு. அடுத்தடுத்து அவர் காட்சிகளை நகர்த்திக்கொண்டு செல்லும் விதம் பாராட்டும் விதத்தில் உள்ளது.
துளசிபாபுவும் ஜகன்மாய் தத்தும் நெருங்கிய நண்பர்கள். அவ்விருவருக்கிடையே நிகழும் உரையாடலோடு கதையைத் தொடங்குகிறார் ரே. ஜகன்மாய் தத் தன்னைச்சுற்றி நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப்போகும் குணமுள்ளவர். துளசிபாபு இந்த உலகில் எதுவுமே ஆச்சரியமானதல்ல என்பதுபோல நடந்துகொள்பவர். அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் ஒரே அம்சம் ஒரு குறிப்பிட்ட உணவு விடுதியில் கிடைக்கும் மட்டன் கபாப். துளசிபாபுவுக்கு மூலிகை மருத்துவத்தில் ஈடுபாடு உண்டு. ஒருவகையில் பரம்பரை மருத்துவர். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலுள்ள சக்ராபரணி என்னும் பெயருடைய முக்கியமான மூலிகை பக்கத்தில் மலைக்குகையில் இருப்பதாகவும் அந்த மூலிகை பற்றி அங்கு வாழும் ஒரு முனிவருக்குமட்டுமே தெரியும் என்பதாகவும் ஒரு தகவல் அவருக்குக் கிடைக்கிறது. உடனே தன் நண்பரை அழைத்துக்கொண்டு அக்குகைக்குச் செல்கிறார். முனிவரைச் சந்தித்து, மூலிகையின் இருப்பிடத்தைப்பற்றியும் பயன்பாடு பற்றியும் தெரிந்துகொள்கிறார். அவர் குறிப்பிட்டுச் சொன்ன இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து அந்த மூலிகைகளைப் பறித்துச் சேகரித்துக்கொள்கிறார். திரும்பும் சமயத்தில் ஒரு செடியின் வேரடியில் கிடந்த முட்டையொன்று உடைந்து ஒரு குஞ்சு வெளிவருகிறது. கோழிக்குஞ்சு போல காணப்படும் அக்குஞ்சு அவர்களைத் தொடர்ந்து நடந்துவருகிறது. மூலிகைப்பையில் அந்தக் குஞ்சையும் எடுத்துப் போட்டுக்கொள்கிறார் துளசி பாபு. தன் வீட்டில் வைத்து வளர்க்கிறார். அதற்கு பில் என்று பெயரிட்டு செல்லமாக அழைத்துக் கொஞ்சுகிறார். அதற்காகவே ஒரு கூண்டு செய்யப்படுகிறது. அதன் வளர்ச்சி வேகம் ஆச்சரியமளிக்கிறது. இரு வாரங்களுக்கு ஒருமுறை கூண்டின் அளவைப் பெரிதாக மாற்றவேண்டியிருக்கிறது. மெல்ல மெல்ல அது தாவர பட்சினி அல்ல, மாமிச பட்சினி என்னும் உண்மையும் புரிகிறது. அப்பறவைக்காகவே தனிபட்ட விதத்தில் மாமிசம் வரவழைக்கப்பட்டு அதற்கு அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு மனிதனுடைய உயரத்துக்கு அது வளர்ந்து நிற்கிறது. அலகுகள் அச்சமூட்டும் வகையில் கூர்மையாகவும் பருத்தும் உள்ளன. ஒருநாள் இரவில் பறவை கூண்டுக் கம்பியை வளைத்து தப்பித்துவந்து எதிர்வீட்டுப் பூனையைக் கொன்று சாப்பிட்டுவிடுகிறது. அது ஓர் ஆபத்தான பறவை என்பதை முதன்முதலாக உணர்கிறார்.
அடுத்த நாளே வாடகைக்கு ஒரு வண்டியை அமர்த்திக்கொண்டு கூண்டோடு அந்தப் பறவையை அதில் ஏற்றுக்கொண்டு, முட்டையாக அதைக் கண்டெடுத்த இடத்துக்கே செல்கிறார். அங்கே அதை இறக்கிவிட்ட பிறகு திரும்பிவிடுகிறார். பறவையைப்பற்றி விசாரிக்கும் ஜகன்மாய் தத்திடம் பறவை தப்பியோடிவிட்டது என்று சொல்கிறார். கபாப் கடைக்கு போவதை நிறுத்திவிடுகிறார்.
சில வாரங்களுக்குப் பிறகு, காட்டுக்குள் உலவும் அதிசய விலங்கு என்னும் தலைப்பில் செய்தித்தாளில் பரபரப்பான ஒரு செய்தி வெளியாகிறது. காட்டுப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் யாருமற்ற தருணங்களில் நுழையும் விலங்கு கோழிகளையும் ஆடுகளையும் தூக்கிச் சென்று உண்டு வீசிவிடுகின என்னும் செய்தி எல்லா இடங்களிலும் பரபரப்பாக வாசிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில நாட்களிலேயே அந்த விலங்கைப் பிடிக்கச் சென்ற வனத்துறை ஊழியர்களில் ஒருவர் அந்த விலங்கின் தாக்குதலால் மரணமடைந்துவிட்டதாகச் செய்தி வருகிறது.
செய்திகளைத் தொடர்ந்து படித்துவரும் துளசிபாபு மீண்டும் காட்டுக்குள் செல்கிறார். இம்முறை ஜகன்மாய் தத்தையும் அழைத்துச் செல்கிறார். ஒரு முட்டையாக அந்த விலங்கு கண்டெடுக்கப்பட்ட மூலிகைச்செடிப் புதருக்கு அருகில் நின்று பில் என்று பெயர்சொல்லி அழைக்கிறார். அவர் குரல் காடேங்கும் பட்டு எதிரொலிக்கிறது. சில நிமிடங்களுக்குப் பிறகு, மனித உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் பெரும்பறவை வந்து நிற்கிறது. ’நான் வெட்கப்படுவதற்கு நீ காரணமாக இருந்துவிட்டாய். இனிமேலாவது ஒழுங்காக இரு’ என்றபடி தன்னோடு வாளியில் கொண்டு வந்திருந்த இறைச்சித்துண்டுகளை பறவையின் முன்னால் வைக்கிறார். ஆவலுடன் அப்பெரும்பறவை அந்த இறைச்சித்துண்டுகளை எடுத்துச் சாப்பிடுகிறது. இரு நண்பர்களும் நகரத்துக்குத் திரும்பிவிடுகிறார்கள்.
அதற்குப் பிறகு பறவையைப்பற்றி எவ்விதமான பரபரப்பான செய்தியும் இல்லை. ஜகன்மாய் தத்தின் மனத்தில் ஒரு சந்தேகம் தோன்றுகிறது. துளசிபாபு வைத்த உணவில் நஞ்சு கலந்திருக்குமோ என்று அவர் நினைக்கிறார். ஆனால் நேருக்கு நேர் கேட்க தயக்கம் கொள்கிறார். அவர்களுடைய அடுத்து சந்திப்பில் அந்தப் பறவையைப்பற்றிய பேச்சு தானாகவே வந்துவிடுகிறது. பறவைக்குக் கொடுத்த உணவில் சக்ராபரணி மூலிகைச் சாற்றை கலந்து கொடுத்ததாகச் சொல்கிறார் துளசிபாபு. புரியாமல் குழம்பி நிற்கும் ஜகன்மாய் தத்துக்குப் புரியும் வகையில் ‘மாமிசம் உண்ணும் நாட்டத்தை விலக்கி தாவரவகை உணவுகள்மீது நாட்டத்தைத் திருப்பிவிடும் ஆற்றல் சக்தி சக்ராபரணி மூலிகையில் இருக்கிறது. அதை அனுபவத்தின் அடிப்படையிலேயே உணர்ந்துகொண்டேன். அதனால் அச்சாற்றையே பில்லுக்கும் கொடுத்தேன்’ என்று சொல்கிறார் துளசிபாபு.
ஒரு சின்ன தகவலை மையப்பொருளாக்கி, சுவாரசியம் குன்றாத வகையில் கதையைப் பின்னும் கலைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. பத்து கதைகளிலும் இப்படி புதுமை நிறைந்த தகவல்களே கருவாக உள்ளன. அவற்றைக் கதைகளாக நிகழ்த்துவதற்கு ஏற்ற களங்களை மாறிமாறி உருவாக்குகிறார் ரே.
ஒரு நாய் சிரிக்கிறது என்பதுதான் அசமஞ்ச பாபுவின் நாய் என்னும் கதையில் பயன்படுத்தப்படும் மையத்தகவல். தனக்கே உரிய கற்பனையாற்றலுடன் அதைக் கதையாக மாற்றுகிறார் ரே. நாய் வளர்க்கும் பல குடும்பங்களைப் பார்த்து அசமஞ்ச பாபுவுக்கும் நாய் வளர்க்கும் ஆசை உருவாகிறது. ஆனால் அதற்காக கொடுக்கவேண்டிய விலையை நினைத்து அந்த ஆசையை ஒத்திப் போடுகிறார். ஒருநாள் கடைத்தெருவிலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு சிறுவன் ஓர் அட்டைப்பெட்டிக்குள் வைத்து ஒரு நாய்க்குட்டியை வைத்து விற்பதைப் பார்க்கிறார். ஏழரை ரூபாய்க்குப் பேரம் பேசி அந்த நாயை வாங்கிக்கொள்கிறார் அவர். அது பழுப்பு நிறத்தில் இருந்ததால் அதற்கு பிரெளனி என்று பெயர் வைக்கிறார். சின்னச்சின்ன கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் விதத்தில் அதற்குப் பயிற்சியளிக்கிறார்.
இப்படியே நாட்கள் கழிகின்றன. ஒரு நாள் அவர் கால் முரிந்த நாற்காலியிலிருந்து வேகமாக எழுந்திருக்கும் தருணத்தில் கீழே விழுந்து காயமடைந்துவிடுகிறார். அதைப் பார்த்து நாய் சிரிக்கிறது. அவர் ஆச்சரியத்தில் உறைந்துபோகிறார். ஆனாலும் அது நாயின் சிரிப்புத்தானா என்று சின்னதொரு சந்தேகம் எழுகிறது. அடுத்த முறை விழும்போது நாய் சிரிப்பதை நேருக்கு நேராகவே பார்த்துவிடுகிறார். நாய்க்கு இப்படி ஒரு குணம் இருப்பது பற்றி மேலதிகமான உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்காக பல புத்தகங்களைத் தேடிப் படிக்கிறார். பல மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கிறார். யாருக்குமே அக்குணத்தைப்பற்றி உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.
ஒருநாள் மாலைநடைக்கு பாபு தன்னுடன் நாயை அழைத்துச் செல்கிறார். திடுமென வழியில் மழை பிடித்துக்கொள்கிறது. இருவரும் ஒதுங்கி நிற்கிறார்கள். அப்போது சாலையில் நடந்துகொண்டிருந்த ஒருவர் தன்னிடமிருந்த குடையைப் பிரிக்கிறார். காற்றின் வேகத்தில் அக்குடையின் மேல்விரிப்பு மேற்புறமாக விரிந்து மடிகிறது. அதைப் பார்த்ததும் நாய் சிரிக்கிறது. எல்லோரும் பார்க்கும் விதத்தில் இருக்கிறது அச்சிரிப்பு. குடையைப் பிடித்துக்கொண்டிருப்பவரும் நாயின் சிரிப்பைப் பார்த்துவிடுகிறார். அதை நம்பமுடியாமல் பாபுவை நெருங்கி வந்து விசாரித்துத் தெரிந்துகொள்கிறார். அவர் ஒரு பத்திரிகையாளர். ஒருநாள் பத்திரிகையாளர் கிளபில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அனுபவத்தைச் சொல்லிப் பகிரிந்துகொள்கிறார். அதைக் கேட்ட ஆங்கிலப்பத்திரிகையின் ஆசிரியர் அதை ஒரு பெரிய செய்தியாக வெளியிடுவதற்காக, தன் நிரூபரை பாபுவின் முகவரிக்கு அனுப்பிவைக்கிறது. அவர் பாபுவிடம் நீண்டதொரு நேர்காணல் எடுக்கிறார். பாபுவையும் நாயையும் பல கோணங்களில் படமெடுக்கிறார். சில நாட்கள் கழித்து அச்செய்தி பத்திரிகையில் வெளிவந்து அவரைப் பார்ப்பவர்கள் எல்லோரும் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். எல்லோரும் வீட்டுக்கு வந்து நாயின் சிரிப்பைப் பார்க்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார்கள். கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக பாபு நாயை அழைத்துக்கொண்டு ஏதோ ஒரு வெளியூருக்குப் பிரயாணம் புறப்படுகிறார். எங்கெங்கோ அலைந்துவிட்டு இரவு நேரத்தில் வீடு திரும்புகிறார். ஆனால் அந்த நேரத்திலும் அவரைச் சந்திக்க விரும்பிய வெளிநாட்டுக்காரர் ஒருவருடன் ஒரு வங்காளி இளைஞன் வந்து நிற்கிறான். தவிர்க்கவியலாமல் அவர்களை உள்ளே அழைத்துப் பேசுகிறார் பாபு. அந்த வெளிநாட்டுக்காரர் அந்த நாயை விலைக்குக் கேட்கிறார். இருபதாயிரம் டாலர் கொடுக்கத் தயாராக இருப்பதாக காசோலைப்புத்தகத்தை பையிலிருந்து வெளியே எடுக்கிறார். அப்போது நாய் சிரிப்பதை எல்லோரும் பார்க்கிறார். எல்லாவற்றையும் பணத்தால் வாங்கிவிட முடியும் என எண்ணும் அவருடைய பேதைமையைப் பார்த்துத்தான் தன் நாய் சிரித்ததாகச் சொல்கிறார் பாபு. நாயை விற்க தனக்கு விருப்பமில்லை என்று அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுகிறார். ’பைத்தியக்காரன்’ என்று மனசுக்குள் திட்டியபடி அவர்கள் வெளியே சென்றுவிடுகிறார்கள். ‘உன்னைப்பற்றி நான் சொன்னது சரிதானே?’ என்று நாயிடம் கேட்கிறார் பாபு. சரியென்று சொல்வதுபோல நாய் மீண்டும் பாபுவைப் பார்த்துச் சிரிக்கிறது.
கருத்து வேற்றுமையை சண்டையிட்டுத் தீர்த்துக்கொள்ள விரும்பும் இருவர் ஒருவரையொருவர் குறிபார்த்துச் சுட்டு தாக்கிக்கொள்ளும் சண்டைமுறையைப்பற்றிய தகவலை முன்வைத்து அவர் வளர்த்தெடுக்கும் கதை கிட்டத்தட்ட ஒரு துப்பறியும் கதையைப்போல உள்ளது. இண்டிகோ செடித் தோட்டங்களை உருவாக்கிய ஆங்கிலேயர்களைப்பற்றிய தகவல், எண்களையும் எழுத்துகளையும் எழுதிக் காட்டும் அதிசய காகம், தொழில்நுட்பத்தின் துணையோடு ஆயிரக்கணக்கானோரின் மூளைத்திறன்களுக்கு இணையான திறமையை உடைய ஒரு கோளத்தை உருவாக்கி நிர்வகிக்கும் தகவல், நாடோடிக்கிழவி ஒருத்தி சொல்லிவிட்டுச் செல்கிற விசித்திரமான தகவல் என விதம்விதமான தகவல்களை மையப்படுத்தும் ரே தன் திறமையால் சுவாரசியமான கதைகளாக மாற்றிவிடுகிறார்.
படோல் பாபு ஒரு சினிமா நட்சத்திரம் என்னும் சிறுகதை மட்டுமே இலக்கியப்பரப்பில் முன்வைத்துப் பேசத்தக்க கதை. நடிப்பில் ஆழ்ந்த ஆர்வமுள்ளவர் பாபு. வாய்ப்புக்காக அலைந்து பல ஆண்டு கால வாழ்க்கையைத் தொலைத்தவர் அவர். பிறகு அதிலிருந்து விலகி வாழ்க்கையை நடத்துவதற்காக கடை நடத்திப் பார்க்கிறார். பிறகு ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதைத் தொடர்ந்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் முகவராக வேலை செய்கிறார். எப்படியோ காலம் நகர்ந்து முதுமை வந்து சேர்ந்துவிடுகிறது. அத்தருணத்தில் ஒரு நண்பரின் மகன் வழியாக திரைப்படத்தில் தலைகாட்டும் ஒரு சிறிய வாய்ப்பு அவருக்குக் கிடைக்கிறது. அதில் நடிப்பதற்காக அதிகாலையிலேயே எழுந்து அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று காத்திருக்கிறார். இயக்குநர் அவருக்குரிய காட்சியை விவரிக்கிறார். ஒரே ஒரு நொடிக்காட்சி அது. ஒரு வங்கிக்குச் செல்கிற நாயகன் ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த வேகத்தில் எதிரில் வந்த கிழவரின் மீது எதிர்பாராமல் மோதிவிடுகிறார். அதிர்ச்சியடைந்த கிழவர் ஆ என்றபடி கீழே விழுந்துவிடுகிறார். அவர் பேச வேண்டிய ஒரே ஒரு சொல் ஆ மட்டுமே. முதலில் அதை அவமானமாக உணர்கிறார். பிறகு அந்த ஒரு சொல் வழியாகவே தன் திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்னும் வேகத்தில் அச்சொல்லைச் சொன்னபடி எப்படியெல்லாம் விழலாம் என்று பலவிதமான கற்பனைக்காட்சிகளை தனக்குள் நிகழ்த்திப் பார்த்துக்கொள்கிறார். நடிகர் வருகிறார். காட்சி படமாகிறது. உடனே அடுத்த காட்சிக்கு எல்லோரும் தயாராகிறார்கள். தன்னுடைய வேலையை நன்றாகச் செய்த திருப்தியை மனத்தளவில் உணர்கிறார் அவர். இத்தனை ஆண்டு காலப் போராட்டம் தன் உணர்வுகளை மழுங்கடித்துவிடவில்லை என்பதில் அவருக்கு மனநிறைவாக இருக்கிறது. ஆனால் இந்த உழைப்பையும் கற்பனையையும் மக்கள் புரிந்து ரசித்து பாராட்டக்கூடியவர்கள் அரிதினும் அரிது என்று அவருக்குத் தோன்றுகிறது. மெல்ல எழுந்து அந்தக் கூட்டத்தைவிட்டு வெளியேறிவிடுகிறார். அவருக்கு ஊதியம் வழங்க பணத்தோடு வருபவர் அவரைக் காணாமல் ஆச்சரியத்தோடு சலித்துக்கொள்கிறார்.
ஒரு நடிகனாக ஒருவர் எதிர்பார்ப்பது தன் உழைப்புக்கான பாராட்டையும் அங்கீகாரத்தையும் மட்டுமே. காலம் முழுதும் அவர் காத்திருப்பது அவற்றுக்காகவே. ஆனால் பணம் மட்டுமே கிட்டும், அவர் விரும்பியவை கிட்டாது எனத் தோன்றும் கணத்தில் கைவிட்ட இந்த உலகத்தின் முன் மனம்குன்றி நிற்கிறான் ஒரு மானிடன். அத்தகு கையறு நிலை கணத்தையே ரே இக்கதையில் சித்தரித்துக் காட்டியிருக்கிறார்.
அற்புதராஜின் மொழிபெயர்ப்புக்கதைகள் காலந்தாழ்ந்து நூலாக்கம் பெற்றிருந்தாலும், இப்போதாவது வந்தனவே என ஆறுதலாக இருக்கிறது. சத்யஜித்ரேயின் கதைகளைப்போல தன் பிள்ளைகளிடமும் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்ள மேலும் சில படைப்புகளை அற்புதராஜ் மொழிபெயர்த்து வைத்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.. அவற்றை வெளியிட இதுவே நல்ல தருணம்.
(சத்யஜித்ரே கதைகள். மொழிபெயர்ப்பு. எஸ்.அற்புதராஜ், மலைகள் பதிப்பகம், 119, முதல் மாடி, கடலூர் மெயின் ரோடு, கடலூர் மெயின் ரோடு, அம்மாபேட்டை, சேலம்-3. விலை.ரூ.300)
Top of Form
Bottom of Form
13 அக்டோபர் 2016
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது-2016
shadeepan Sruthi Ramani and 3 others shared a link.
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது
2016 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருது வண்ணதாசனுக்கு வழங்கப்படவுள்ளது. வரும் டிசம்பர் இறுதிவாரம் விருதுவிழா நிகழும்.
JEYAMOHAN.IN·
-
வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது (2016)
-----------------------------------------------------------------அவருக்கும் பெருமை, விருதுக்கும் பெருமை
-------------------------------------------------------------------எனக்கு மிகவும் பிடித்த மன நெகிழ்ச்சியான படைப்பாளி. இவரின் கிருஷ்ணன் வைத்த வீடு மறக்க முடியாத சிறுகதை. அழிந்து போன ஒரு வீட்டின் பிம்பத்தை. அதன் வரலாற்றை அப்படியே மனதில் பாரமாக நிறுத்தி வைக்கும் கதை. என் சொந்த ஊருக்குப் போகும்போதெல்லாம் அப்படி ஒரு வீடு அங்கும் இருக்கக் கூடுமே என்று மனசு தேடும்...அந்த வீட்டின் அழிந்துபட்டவர்களின் கதை காட்சி ரூபமாய் விரியும். ஆனந்த விகடனில் அவ்வப்போது அப்படி வண்ணதாசன் எழுதிய கதைகள் அத்தனையும் உயர் தரம். பல்லாண்டு காலமாகக் கிளை விரித்துப் படர்ந்து முதிர்ந்து நிற்கும் ஒரு மாமரத்தை விலை பேசி வெட்ட வரும் நபர்கள், அந்த மரமும், அதை வளர்த்தெடுத்த பாட்டியின் நேசமும்.... செல்லுமிடமெல்லாம் அந்த மரத்தைத் தேட வைத்து விடுவார். சருகுகளின் ஒரு சிறு சலசலப்புக் கூட அந்தப் பாட்டியை உஷாராக்கி விடும்...அதை அவர் சொல்லியிருக்கும்அழகிருக்கிறதே...அப்படியொரு கதையை வேறு எவரிடத்திலும் நான் படித்ததில்லை...அவர் எழுதியுள்ள வரிகளை நினைத்து நினைத்து மனதில் ஏற்றி வியப்புக் கொள்ள வைக்கும் மிக உயர்ந்த தரத்திலான பல படைப்புக்களை வண்ணதாசன் தொடர்ந்து தந்துகொண்டேயிருந்திருக்கிறார். அவருக்கு ஜெயமோகனின் விஷ்ணுபுரம் விருது மிகத் தகுதியான ஒன்று...!
ஒரு உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும்.
எத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று. அதில் என்ன பெருமை...! ஒரு குறிப்பிட்ட தொகுதியை முன் வைத்து பரிசளிக்கப்படுகிறதென்றால் அந்தத் தொகுதியில் பத்துக்கு ஏழு அல்லது எட்டுச் சிறுகதைகளாவது மிகத் தரமானதாக உயர்ந்து நிற்க வேண்டும். சும்மா மூணு, நாலு என்பதில் அர்த்தமேயில்லை. அப்படியான ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்கப்பவதுதான் பரிசுக்குப் பெருமையாக அமையும். நாவல்களுமே அப்படித்தான். ஒரு காலகட்டத்தின் கதையை, ஒரு சமூக மாற்றத்தை, பெருமளவு உள்ளடக்கிய படைப்புக்களே சிறந்த நாவலாக அமையும். வெறும் சம்பவங்களாய், ஸ்வாரஸ்யமாய் இருந்தால் சரி என்று கோர்த்துக்கொண்டே போவதில் என்ன அர்த்தமிருக்கிறது. இன்றைய நாவல்கள் அப்படித்தான் வருகின்றன. பாதி படிக்கையிலேயே நேரம் வீண் என்கிற மன வருத்தம் வந்து விடுகிறது. அடுத்த புத்தகத்திற்குத் தாவ விழைகிறது. பெரும்பாலும் இப்படித்தான் விரவிக் கிடக்கிறது.
ஆனால் இப்படித் தகுதியாய்ப் பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது...விருதினால் அவருக்கும் பெருமை...விருதுக்கும் பெருமை...!!!Ushadeepan Sruthi Ramani ஒரு உண்மையான படைப்பாளிக்கு தான் வாங்கும் விருது அவனது மனசாட்சிக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அதற்கான தகுதிதான் என்கிற மன நிறைவு தனக்குத்தானே ஏற்பட வேண்டும்.
எத்தனையோ விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லோரும்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒண்ணு, உனக்கு ஒண்ணு என்று. அதில் என்ன பெருமை...! வெறும் பீத்தல்...!
ஆனால் இப்படித் தகுதியாய்ப் பெறுபவர்களைப் பார்த்து மனம் பூரிக்கிறது. தலைவணங்குகிறது...விருதினால் அவருக்கும் பெருமை...விருதுக்கும் பெருமை...!!!Like · Reply · 8 mins · Edited
10 அக்டோபர் 2016
ஜெயந்தி சங்கரின் “மிதந்திடும் சுய பிரதிமைகள்” (சீன இலக்கியம்)
எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கர் அவர்களை 2014 ல் நாமக்கல் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது நிகழ்ச்சியில் முதன்முதலில் சந்தித்தேன். அவரோடு சேர்ந்து என்னுடைய சிறுகதைத் தொகுப்பும் பரிசு பெற்றிருந்தது எனக்குப் பெருமை. சிங்கப்பூரிலிருந்து பறந்து வந்திருந்தார் அந்த விழாவுக்கு. என்ன ஒரு உற்சாகமும், ஊக்கமும்...அந்த ஊக்கமும், உற்சாகமும் இம்மியும் குறையாமல் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருக்கிறார். தலையணை தலையணையாகப் புத்தகங்கள்.எப்படித்தான் சாத்தியமாகிறதோ? எல்லாமும் ஆயிரம் பக்கங்களுக்கு மேல். நானும் படிக்கக் கூடியவன்தான் என்கிற நம்பிக்கையில் எனக்கும் ஒன்று விடாமல் வந்து கொண்டேயிருக்கிறது. அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கை எனக்குக் கூச்சத்தை விளைவிக்கிறது. இயன்றவரை முயல்பவன் நான். அவருக்கு என் நன்றி. அவரது முயற்சி வாழ்க...!
இப்போது கைக்குக் கிடைத்திருக்கும் நூல் “மிதந்திடும் சுய பிரதிமைகள்” (சீன இலக்கியம்) தமிழில் வடித்துத் தந்துள்ளார். இப்புத்தகத்தில் சீனத்துச் சிறுகதைகள்,சிங்கப்பூர் சீனச் சிறுகதைகள், என்று கண்டது எடுத்த எடுப்பில் என்னுள் உற்சாகத்தை வரவழைத்துவிட்டது. நிச்சயம் படித்து முடித்து விடுவேன் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியது. சீனக் கவிதைகள், சிங்கப்பூர் நவீன சீனக் கவிதைகள் என்று ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இந்நூலில். ஆழ்ந்து ரசிக்கத் தக்க புத்தகம்தான் கைக்குக் கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சி.
சங்கக் கவிதைகளுடனான ஒப்பியல் ஆய்வுக்குப் பொருத்தமானதாக அமைந்துள்ள ஆதிகால சீனக் கவிதைகளி்ல் தொடங்கி தற்காலக் கவிதைகள் வரை அறிமுகமாகி, காலத்தைக் கடந்து நிற்கக் கூடிய அரிய தொகுப்பு இது என்கிற அறிமுகம் இப்புத்தகத்திற்குப் பெருமை சேர்க்கிறது.
கம்யூனிச யுகத்திலும், அதற்குப் பின்னரும் சீனத்தில் நேர்ந்திருக்கும் மாற்றங்கள், அவை சமூகத்தில் கொணரும் கோட்பாட்டு ரீதியிலான குழப்பங்கள் , கோட்பாடுகள் நடைமுறையில் எதிர்கொள்ளும் அபத்தங்கள் போன்றவற்றை அடையாளும் காட்டும் சிறுகதைகளையும் உள்ளடக்கிய முக்கியமான மொழிபெயர்ப்பு நூல் இது என்கிற தகவல் அவர்களின் இடைவிடாத முயற்சியை நினைத்து பிரமிக்க வைக்கிறது. சென்னை காவ்யா பதிப்பகம் வெளியிட்டுள்ளது இப்புத்தகத்தை. அவர்கள் இம்மாதிரித் தேடித் தேடித்தான் நல்லவைகளை,தரமானவைகளைச் சேர்க்கிறார்கள்.
09 அக்டோபர் 2016
2.10.2016 காந்தி ஜெயந்தி, மதுரை.
மதுரை காந்தி மியூசியம் எதிரேயுள்ள ராஜாஜி பூங்காவில் நடக்கும் தினசரி யோகா வகுப்புகளில் கலந்து கொள்வது என்பது மனதிற்கும், உடலுக்கும் உகந்த ஒன்று.
புலன்களுக்கு வசப்படுதல் என்பது அக வலிமையை இழத்தல். இந்த மனம் மற்றும் உடல் மீதான கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் நம்மை வலிமைமிக்கவனாக மாற்றுகின்றன. இது அண்ணல் காந்திஜி தன் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கண்டுகொண்டே இருந்த உண்மை.
உண்மையும் அஉறிம்சையும் புராதனமான மலைகளைப் போன்றது. முடிந்தவரை நான் அவற்றைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். அதன் மூலம் நான் வலிமை அடைந்து கொண்டேயிருக்கிறேன் என்றார் காந்திஜி.
நாங்கள் அந்தப் பூங்காவில் யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது காந்தி மியூசியத்திலிருந்து அண்ணல் எங்களை நோக்கி நடந்து வருவதுபோல் எனக்குத் தோன்றும்.
திங்கள் - படுத்த நிலை ஆசனம்.
செவ்வாய் - அமர்ந்த நிலை ஆசனம்
புதன் - நின்ற நிலை ஆசனம்
வியாழன் - த்ராட்டகான் - அதாவது கண் பயிற்சி
வெள்ளி - கலவையான பயிற்சிகள்
சனி - சூரிய நமஸ்காரத்தை அதிக எண்ணிக்கை செய்தல் மற்றும் வேகமெடுத்து ஆசனங்களை மேற்கொளல்.
ஞாயிறு - விடுமுறை
காலை நாலரை மணி முதல் ஐந்து நாற்பது வரை தமுக்கம் சாலையில் நடைப் பயிற்சி...நான்கு ரவுன்டுகள். பிறகு பூங்காவிற்கு வந்து படுத்த நிலையில் சற்று ஓய்வு. ஆறுமணிக்கு யோகப் பயிற்சிகள் ஆரம்பம்...ஏழுக்கு முடியும். ஏழு முதல் ஒரு பதினைந்து நிமிடங்கள் பிராணாயாமப் பயிற்சி
ஒவ்வொரு வகையில்.
வந்து சேருங்கள்...செய்து பாருங்கள். பிறகு அங்கேயே ஒன்றி விடுவீர்கள். இது சத்தியம்.
29 செப்டம்பர் 2016
இரா.ராஜேந்திரன் (தில்லையாடி ராஜா) சிறுகதை ஆய்வுப் புத்தகம்
தில்லையாடி ராஜா” எழுதிய “சிறுகதை திறனாய்வுகள்” என்றொரு புத்தகம் வசந்தா பிரசுரத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் மொத்தம் 23 படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பு பற்றியும், அவற்றில் அவரது மனம் கவர்ந்த ஒரு சிறுகதையைப் பற்றியும் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது.
பின் அட்டையில் முனைவர் சு. தமிழ்வேலு அவர்கள் கூறியுள்ளதுபோல் ஒரு கட்டம் போட்டுக் கொண்டு அக்கட்டத்திற்குள் கொண்டு வந்து அடைக்க முயலும் பல்கலைக் கழக ஆய்வுகளைப் போலில்லாமல் தேர்ந்த கல்விப் புலமையாளர்களால் தரப்பெறும் இசங்களையும் கோட்பாடுகளையும் பேசி படைப்பாளியின் உண்மை முகத்தை வெளிக் கொண்டு வராத ஆய்வுகள் போல் இல்லாமல் மண்ணுக்கேத்த மகத்துவமாய்ப் போற்றும் வகையில் தன் மனப்போக்கில் படைத்துத் தந்துள்ள படைப்பாளியின் ஆய்வுப் புலமையைப் போற்றுவோம், பாராட்டுவோம்...
1) ஒரு தொழிலாளியின் டைரி - சூர்யகாந்தன்-என்சிபிஎச்
2) மஞ்சள் நிற ரிப்பன் - ஏகாதசி - எழுத்து பதிப்பகம்
3) மாலை சூடும் அரும்புகள் - அல்லி நகரம் தாமோதரன்-தாமரை பதிப்பகம்
4) வலி - கலைச்செல்வி - காவ்யா பதிப்பகம்
5) நாட்குறிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் - ஆசு - இருவாட்சி பதிப்பகம்
6) ஒரு துளி துயரம் - சு. வேணுகோபால் - தமிழினி
7) இச்சி மரம் சொன்ன கதை - விமலன் - ஓவியா பதிப்பகம்
8) பேசும் ஊமைகள் - சுப்ரியா சாந்திலால் - சொந்த வெளியீடு
9) ஒரு பாதையின் கதை - குப்பிழான் ஐ. சண்முகம் - காலச்சுவடு - ஸ்ரீலங்கா எழுத்தாளர்
10) டைனோசர் ஆயிரம் சூழ வலஞ்செய்து - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் - Shakespear's Desk பதிப்பகம்
11) மௌன மொழி - தேவவிரதன் - வசந்தா பிரசுரம்
12) நாயகன் - ம.வே.சிவகுமார் - அல்லயன்ஸ் பதிப்பகம்
13) பிரம்ம லிபி - எஸ்ஸார்சி - அன்னை ராஜேஸ்வரி பதிப்.
14) கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - இரா.கதைப்பித்தன்
15) பதிவு செய்யப்படாத மனிதர்கள் - வி.எஸ்.முகம்மது அமீன் - மனக்குகை பதிப்பகம்
16) வாழ்க்கை ஒரு ஜீவநதி - உஷாதீபன் - என்சிபிஎச்.
(திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் அமரர் ஜீவா-பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவில் பரிசு பெற்ற புத்தகம்)(மதுரை லேடி டோக் கல்லூரியில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்ட தொகுதி)
17) ஆண்கள் - ஜி.ஆர்.சுரேந்தர்நாத், சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
18) நோய் மனம் - கோவி.பால.முருகு -
19) வலையில் மீன்கள் - வளவ துரையன் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
20) தோற்றப்பிழை - தி.தா.நாராயணன்-என்சிபிஎச்
21) மகாதானபுரம் ரயில்வே கேட் - இசட்.ஒய்.உறிம்சாகர்
22) போன்சாய் மரங்கள் - ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்-உயிர் எழுத்து பதிப்பகம்
23) மனம் விளைந்த பூமி - நாகை கவின் - .இமயம் பதிப்பகம்
25 செப்டம்பர் 2016
கவிதா பப்ளிகேஷன் 40ம் ஆண்டு விழா
Ushadeepan Sruthi Ramani added 4 new photos — with Sivaji Peravai and கவிஞர் செல்வராஜா.
2 hrs ·
கவிதா பப்ளிகேஷனின் 40 ம் ஆண்டு விழா நேற்று (24.9.2016) கோடம்பாக்கம் அருகிலுள்ள மஉறாலிங்கபுரம் எம்.எல்.எம். கல்யாண மண்டபத்தில் சிறப்புற நடந்தேறியது. மிகப் பிரம்மாண்டமான விழாவாக இதை உணர்ந்தேன் நான். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட மிகப் பெரிய உறால் நிரம்பி வழிந்தது. நிறைய எழுத்தாளர்கள்...கலைஞர்கள், வி.ஐ.பி.க்கள், வாசகர்கள் என மேடையில் அ மர்ந்திருக்கும் முக்கியஸ்தர்களின் பேச்சைக் கேட்க ஆவலாய்க் காத்திருந்தார்கள்..
வாயிலில் நுழையும்போதே மணக்க மணக்க டிகாக் ஷன் காபி சப்ளை செய்ததுதான் Hi லைட்....... சூடான அந்தக் காபி தொண்டைக் குழிக்குள் இறங்கியதும், வந்த அலுப்பெல்லாம் மறைந்து போனது.
இந்த விழாவின் சிறப்பம்சம் 105 புத்தகங்களைக் கவிதா வெளியிட்டதுதான். அதனை மேனாள் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டது சிறப்பு. இந்த 105 ல் என்னுடையதும் இரண்டு என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். (1) நாவல் - லட்சியப் பறவைகள் (2) நின்று ஒளிரும் சுடர்கள் - கட்டுரைகள்
இத்தனை பிரம்மாண்டமான விழாவை நான் கண்டது இதுவே முதல் தடவை.....கவிதா பப்ளிகேஷன் நிறுவனத்தின் ஐயா சொக்கலிங்கம் அவர்களுக்கும் சகோதரி கவிதா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
22 செப்டம்பர் 2016
அற்புதமான நாவல்…by இந்திரா பார்த்தசாரதி
அமெரிக்காவிலிருந்து, ஒரு நல்ல யுனிவர்சிடியில் கிடைத்த ப்ரொபஸர் வேலையை விட்டுவிட்டு சொந்த நாட்டிற்கு வருகிறான் நாயகன் ஜெயராமன். அரசியலில் பங்கெடுத்து நாட்டு மக்களுக்கு உண்மையான சேவையாற்றுவதற்கு தன் அறிவுத்திறன் முழுதையும் பயன்படுத்த வேண்டும் என்கிற லட்சியம் அவனுக்கு. ஆனால் அதற்கு இங்கேயிருக்கும் நடைமுறை அரசியல் பொருத்தமாய் இருக்குமா என்கிற முடிவிலே எடுத்த எடுப்பிலேயே தவறி விடுகிறான். எதிர்க்கட்சியில் சேர்ந்து, பிறகு அங்கிருந்து உடனே விலகி ஆளுங்கட்சிக்கு வந்து, முக்கியஸ்தனாகக் கருதப்பட்டு, மந்திரியாகி, சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் மண் விழுகிறது. மந்திரியானவன், தந்திரியாக முடியாமல் தவிக்கிறான். தந்திரியானால்தான் சரியாகுமோ என்கிற தவிப்பிலேயே நடைமுறை அரசியல் அவலம் அவனைப் புரட்டிப் போட்டு விடுகிறது. கடைசியில் திரும்பவும் வந்த இடத்திற்கே சென்று விடுவது என்பதான புள்ளிக்கு அவனை இட்டுச் செல்கிறது.
எத்தனையோ நாவல்கள் இன்று வதவதவென்று வருகின்றனதான். ஒன்றும் புத்திசாலித்தனமாய் இருப்பதாய்த் தோன்றவில்லை. வளவளவென்று ஒரு அழுத்தமும் இல்லாமல் பக்கங்களை நகர்த்திச் செல்கிறார்கள். இதுதான், இப்படித்தான் என்கிற முடிவோடு , பாதி வழியில்வாங்கிய புத்தகத்தை அப்படியே மூடி மூலைக்குத் தள்ளுவதோ, யாரிடமேனும் கொடுத்துவிடுவதோ தொடர்ந்து நிகழ்கிறது. முன்பு இலைமறை காயாகச் சொல்லப்பட்டதெல்லாம் இன்று அப்பட்டமாய், அசிங்கமாய் (அசிங்கம் இல்லை என்கிற உணர்வோடு) மனசைக் கசடாக்கும் அநி-யாயத்தோடு கண்டதையும், கண்டமேனிக்கு எழுதிக் குவிக்கிறார்கள். இதுதான் நவீனத் தமிழ் இலக்கியம் என்று நிறுவியே விட்டார்கள். ஓஉறா...இப்டித்தான் போலிருக்கு என்று பலரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். என்ன கண்றாவியோ...கஷ்டகாலமோ....!!!
இந்திராபார்த்தசாரதியின் இந்த மாயமான் வேட்டை கையில் வைத்துப் படிப்பதற்கே ஒரு கௌரவமானது. புத்திசாலித்தனமான எழுத்து....ஆழ்ந்த கருத்துக்களை அதற்குத் தகுதியான கதாபாத்திரங்க ளின் ஆழமான விவாதங்களோடு கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு பல இடங்களில் வியக்க வைக்கிறது.
ஒரு கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது நாவலின் ஆரம்பத்தில் என்ன நோக்கில் ஆரம்பித்ததோ அதே புள்ளியில் சிறிதும் பிறழாது, அதன் செயல்பாடுகளால் தோன்றும் பிரச்னைகளை மையமிட்டு, புயலாய் நகர்ந்து சென்று, அதற்கான தீர்வினை மிகச் சரியான கோணத்தில் சென்றடைவது என்பதான மிக இயல்பான சம்பவக் கோர்வைகள், அவரது எழுத்து அனுபவத்தைத் தலைநிமிர்த்திப் பறைசாற்றுகின்றன.
இன்று இவரின் இந்த நாவலை நான் படித்தேன் என்று வெளியில் கம்பீரத்தோடு நாம் சொல்லிக் கொள்ளலாம். இந்திரா பார்த்தசாரதி போன்ற படைப்பாளிகளை நாம் ஆய்ந்துணர்ந்து நமக்குள் போற்றி மகிழ்வது, சிறந்த வாசகனுக்கான பெருமை என்றே சொல்லலாம்.
இப்பத்தான் படிக்கிறீங்களா? என்பார்கள் சிலர். அதெல்லாம் எப்பயோ படிச்சாச்சு என்கும் சிலதுகள். அதெல்லாம் பழசு என்போர் சிலர். வேறுமே படிச்சு முடிக்கிறது வேறே. ஆழ்ந்து அனுபவிக்கிறது வேறே... நான் சொல்கிறேன். Old is gold. அவர்களுக்கு இணை அவர்கள் மட்டுமே...!!! இவர்களின் புகழாரங்களை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் நிஜம்...
10 ஜூலை 2016
நன்றி…!
நா.பா.வைப் பற்றி திருப்பூர் கிருஷ்ணன் இந்திய இலக்கியச் சிற்பிகள்-சாகித்ய அகாதெமி நூலில்….
Ushadeepan Sruthi Ramani added 6 new photos.
நா.பா.வின் தீபம் மாத இதழ் 1965 ஏப்ரலில் தோன்றியது. 1988 ஏப்ரலில் மறைந்தது. தீபம் இரண்டாம் இதழில் அவர் எழுதிய வரிகள் குறிப்பிடத்தக்கவை -
“என்னிடம் சிந்தனையையும் எழுத்தையும் தவிர அதிகமாக வசதிகள் ஒன்றுமில்லை என்பதை நானே உணர்கிறேன். நான் ஒரு சாதாரண இலக்கியத் தொழிலாளி என்பதும் எனக்குப் புரிகிறது. நான் பணத்தினால் ஏழையாகவும் மனத்தினால் குபேரனாகவும் இருப்பதாக எனக்கே தோன்றுகிறது. உடல் நலமில்லாத கணவன் கட்டிலருகே - அவன் நிச்சயம் பிழைத்து விடுவான் - பிழைக்க வேண்டும் - என்ற ஒரே நம்பிக்கையை மனத்தின் தவமாகக் கொண்டு வேறுவிதமாக நினைப்பதைக் கூடத் தன் கற்பிற்குப் பங்கமாய் எண்ணும் ஒரு இந்துக் குடும்பத்து சகதர்மிணியைப் போல் என் முயற்சியின் வெற்றியை அன்றி வேறு அமங்கல நினைவை நினைக்கவும் செய்யாது வெற்றியே இலக்காகும் தியானமாக நான் இந்த இலக்கியத் தவத்தைச் செய்து கொண்டிருக்கிறேன்”
இந்திய இலக்கியச் சிற்பிகள் - சாகித்ய அகாதெமி தொகுப்பில் நா.பா.வைப்பற்றி தொகுத்தளித்துள்ள திரு திருப்பூர் கிருஷ்ணன் ஓரிடத்தில் தெரிவிக்கும் அழகான இக்கருத்துக்களைக் காணுங்கள்.
தமிழ் மொழியின் எல்லா நயங்களையும் தம் படைப்புக்களில் துலங்கச் செய்த ஓர் அபூர்வமான நடையமைப்பை உடையவர் என்ற வகையிலேயே நா.பா. வித்தியாசப்பட்டு நிற்கிறார்.
ஜானகிராமனின் பலம் அவரது பாத்திர வார்ப்பு
ஜெயகாந்தனின் பலம் அவரது விவாதக் கோணம்
புதுமைப் பித்தனின் பலம் அவரது கிண்டல் தொனி
அழகிரிசாமியின் பலம் அவரது அதிரச் சொல்லாத எளிமை.
அகிலனின் பலம் அவரது தேசியச் சிந்தனை
இந்திரா பார்த்தசாரதியின் பலம் அவரது கூர்மையான உரையாடல்
ராஜம் கிருஷ்ணனின் பலம் கள ஆய்வு
ஆர்.சூடாமணியின் பலம் உளவியல் கோணம்
கி.ராஜநாராயணனின் பலம் வட்டார வழக்கு
என்றால்
நா.பா.வின் பலம் அவரது நடைதான். நினைத்து நினைத்து மகிழ வைக்கிற நடை. தெளிந்த சிற்றோடை போன்ற பட்டறிவால் விளைந்த பிசிரற்ற, சீரான தங்கு தடையற்ற நடை. அவர் தடம் பதித்ததது அந்த வகையில்தான்.