24 ஜூன் 2016
10 ஜூன் 2016
சென்னை புத்தகக் கண்காட்சி 9.6.2016 எஸ்.ஷ மொழி பெயர்த்த யோசே சரமாகோவின் நாவல் “பார்வை தொலைத்தவர்கள்“–பாரதி புத்தகாலயம் வெளியீடு
ஒரு தேர்ந்த வாசகனுக்கே மொழிபெயர்ப்பு படிப்பது என்பது சற்றுக் கடினமான விஷயம். காரணம் கதை நடக்கும் களம், பழக்கப்படாத இடங்கள், அவற்றின் பெயர்கள், கதாபாத்திரங்களின் பெயர்கள், ஆணா, பெண்ணா என்பதில் அவ்வப்போது ஏற்படும் குழப்பங்கள், கதையின் தொடர்ச்சியை மனதில் வைத்துக் கொள்ள படித்து முடித்த பக்கங்களை அடிக்கடி புரட்டி நினைவு கூற வேண்டியிருப்பது, அதனால் பக்கங்கள் வேகமாய் கடக்க முடியாமை, என்று பலவுண்டு. இன்னொரு கஷ்டம் அப்படியே மொழியைப் பெயர்த்து எழுதி, அதாவது வார்த்தைக்கு வார்த்தை....வரிக்கு வரி...என்று பெயர்த்து எடுத்து தமிழில் நிறுவி விடும் அவலம். நம்ம ஆளுங்க எழுதினதையே இன்னும் படிச்சு முடிக்க முடில...இதுல மொழிபெயர்ப்புக்கு எங்க போறது? என்கிற சலிப்பு....இப்படிப் பல...
இதெல்லாம் எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க ஒரு நாவலை உணர்வுபூர்வமாய் உள்வாங்கி, காட்சிக்குக் காட்சி மனதில் நிறுத்தி, மொத்தக் கதையின் அனைத்து சம்பவங்களையும் ஒரு சினிமாவின் காட்சிகளைப் போல் உள்ளே விஷூவலாகப் படிய வைத்துக் கொண்டு, தனக்குக் கை வந்த தேர்ந்த மொழி நடையில் விறுவிறுப்பாக, ஒரு மொழி பெயர்ப்பைப் படிக்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல், இவரே எழுதினதுதானோ என்று நினைக்க வைக்கும் அளவு கதையில் ஆத்மார்த்தமாய் சஞ்சரித்து, தங்கள் திறமையைப் பளீரென்று வெளிப்படுத்துபவர்கள் ஒரு சிலர்.
அப்படி ஒரு அருமையான, மொழிபெயர்ப்பு நாவல் வந்திருக்கிறதென்றால் அது திரு எஸ்.ஷங்கரநாராயணன் அவர்கள் இப்போது புதிதாய் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டுள்ள “யோசே சரமாகோ” வின் “பார்வை தொலைத்தவர்கள்” என்ற நோபல் பரிசு பெற்ற நாவல்தான். கதையின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்படும் கதாபாத்திரத்திற்கு திடீரென்று பார்வை தொலைந்து போகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து அவனும் நாமும் மீள வேண்டும் என்கிற பதைபதைப்பிலேயே உடனடியாக அவனோடு கைகோர்த்து பயணம் செய்ய ஆரம்பித்து விடுகிறோம்....திரு எஸ்.ஷ விற்கென்று ஒரு தனி நடையழகு உண்டு. அந்த வசீகரம் நம்மை அயர வைக்கிறது....பேசப்பட வேண்டிய பல படைப்பாளிகளில் அவர் முக்கியமானவர்...காலம் அவரைக் கண்டிப்பாக உச்சியில் கொண்டு நிறுத்தும்....நாவல் தொடர்கிறது என் விடாத வாசிப்பில்...அவசியம் வாங்கிப் படியுங்கள். ஒரு முழுமையான தேர்ந்த மொழிபெயர்ப்பு அனுபவத்தை உணருங்கள்...
09 ஜூன் 2016
05 ஜூன் 2016
அஞ்சலி
பெரியவர் (திரு Hemalatha Balasubramaniam) இயற்கை எய்திய அன்று நான் புதுடெல்லியில் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். 2ம் தேதியிலிருந்து மேற்கொண்ட பயணம். 25 தான் முடிந்தது. அதன் பின் இரண்டு தினங்கள் கழித்துத்தான் சென்னை வந்தேன். சென்னையில் இருந்திருந்தாலும் வைகையில் புறப்பட்டு மதுரை வந்திருக்கலாம். மதுரையிலும் அந்த நேரத்தில் இருக்க வாய்ப்பில்லாமல் போயிற்று. பெரிய வருத்தமே...! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
என்னிடம் எப்போதும் ஒரு குணம். நெருங்கிப் பழகியவர்களைச் சடலமாய்ப் பார்க்க விரும்பாதது.அது இந்தப் பெரியவருக்கும் தற்செயலாய் அமைந்து போயிற்று. விபரம் அறிந்தாலும், அவர் இருக்கிறார் என்கிற உணர்வோடு, அவரோடு அளவளாவிய நாட்களை சுவையாக அசைபோடுவது எனக்குப் பிடிக்கும். நான் வாசலில் வந்து நிற்கிறேன் என்பது கண்டு படுக்கையில் இருந்து எழுந்து அமர முயலுவார். உள்ளே நுழைந்து, அப்டியே இருங்க...எதுக்கு எழுந்திருக்கிறீங்க...என்று அமர்த்துவேன். சிறு குழந்தையாய்ப் பேசுவார். அவரோடு நடந்து டவுன் உறாலில் வடை, காபி சாப்பிட்ட நிகழ்வு, என்.சி.பி.எச்.சில் புத்தகம் வாங்கியது...கூட்டத்திற்குச் சென்றது..என்று சில நிகழ்வுகள்... மனதுக்கு நெருக்கமாய் .அந்தப் பெரியவரின் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.
அவர் மலர்ப் பாதங்களில் என் இதயபூர்வமான அஞ்சலி.
எழுது எழுது என்ற உத்வேகம் இவரால்தான் -
எத்தனை புத்தகக் கண்காட்சிகள் நடந்தால் என்ன, எத்தனை புத்தகங்கள் புதிதாய் வந்தால்தான் என்ன? ஆயுசுக்கும் அலுக்காத திரும்பத் திரும்பப் படிக்க, ரசிக்க, உருக, உள்வாங்க, என்று ஒரு எழுத்து உண்டென்றால் அது
திரு.அசோகமித்திரன் அவர்களின் எழுத்துதான்.
அவரால்தான் நான் எழுதுகிறேன். உடம்பு பூராவும் எழுது எழுது என்று உத்வேகம் பெற வேண்டுமென்றால் உடனடியாக இவர் புத்தகத்தைத்தான் கையில் எடுப்பேன். மனசைக் கோயில் போலாக்கும் வல்லமை இவர் எழுத்துக்கு உண்டு. இந்த வாழ்க்கையின் எல்லாவிதமான முதிர்ச்சிக்கும் நம்மைக் கொண்டு நிறுத்தும் ஆன்மீக பலம் வாய்ந்தது இவரது எழுத்து.. இலக்கியம் மனிதனைச் செழுமைப்படுத்துகிறது என்ற கருத்து இவர் எழுத்தில் சத்தியமாகிறது.
அவரது “மணல்” குறுநாவல் தொகுதி இப்போது என் வாசிப்பில் மீண்டும். கீழே நாலு வரிகள் -
“தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூடக் கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக் கொள்வதற்கும்தானா?
“தலைமுறைகள்” கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில் ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகி விடும்”
“காந்தி” என்று ஒரு அற்புதமான தொகுப்பு. அதில் “அம்மாவுக்கு ஒரு நாள்” என்று ஒரு சிறுகதை. படிக்கவில்லையென்றால் தேடிப் படியுங்கள். பிறகு சொல்லுங்கள்...
LikeShow more reactions
29 மே 2016
21 நவம்பர் 2015
04 அக்டோபர் 2015
அக்டோபர் 2, 2015 காந்தி ஜெயந்தி விழா – மதுரை காந்தி மியூசியம் யோகா பயிற்சிக் குழு.
கடந்த ஆறு ஆண்டுகளாக மதுரை காந்தி மியூசியத்தின் யோகா வகுப்பிற்குத் தவறாமல் நான் சென்று வருகிறேன். காலை 4.30 மணிக்கு நடக்க ஆரம்பிப்போம். 5.40 வரை நடை. பிறகு 15 நிமிடம் ஓய்வு. சரியாகக் காலை 6.00 மணிக்கு யோகா வகுப்புகள் ஆரம்பிக்கும். ஏழு மணிவரை. பிறகு பத்து நிமிடங்கள் பிராணாயாமம். இந்த நியமங்கள் இன்று வரைசெம்மையாய் நடந்தேறி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி காந்திஜெயந்தி நாளன்று தவறாமல் எல்லோரும் கூடி அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கி, சமாதியில் மௌனம் அனுஷ்டித்து, பிறகு பிரிவது வழக்கம். அப்போது ஒரு பத்து நிமிடம் நான் உரையாற்றுவேன். இன்றுவரை என் மனதிற்குகந்த ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கிறது. மனம் தனிமையையும், அமைதியையும், விடுபடுதலையும் நோக்கி சதா பயணித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலிலும், விடுபடுதலிலும் இருக்கும் ஆனந்தம் உணர்ந்து அனுபவிக்க வேண்டியவை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
இந்த ஆண்டு 2015 அக்.2 வெள்ளியன்று காந்தி ஜெயந்திக்குக் கலந்து கொண்ட நிகழ்வு மேலே…