சிறுகதை (தாய் வீடு மாத இதழ் - மார்ச் 2025 பிரசுரம்)
“இடிச்ச புளி”
உம்மணாம் மூஞ்சி… - அடுப்படியில் தன் வேலைகளைப்
பார்த்துக் கொண்டே கோபத்தோடு இந்த வார்த்தைகளை உதிர்த்தாள் யாமினி. உரிமையோடு எப்படி வேண்டுமானாலும் திட்டுவாள். வெளிப்படையாக அப்படித் திட்டுவதில் எனக்கும் ஒரு
திருப்திதான். பரஸ்பர அந்நியோன்யத்தின் அடையாளம் அது!
சற்று நேரத்திற்கு முன் நடந்த உரையாடலின்
தொடர்ச்சியாக அவள் சிந்தனையை ஆக்கிரமித்திருந்த எண்ணங்களின் இறுதி வெளிப்பாடுதான் அந்த
ஒற்றை வார்த்தை என்று தோன்றியது மந்திரமூர்த்திக்கு.
மனதுக்குள் இன்னும் என்னெல்லாம் முனகிக் கொள்கிறாளோ? அதுவும் தெரிந்தால் பரவாயில்லைதான்.
இதைப்போய்க் கேட்கவா முடியும்? திட்டினவரைக்கும் லாபம்!.
காதில் விழாததுபோல் இருந்து விடலாம் என்றுதான்
முதலில் தோன்றியது. அன்றாட நடவடிக்கைகளில் எத்தனை எத்தனையோ பேச்சுகள், கோபதாபங்கள்,
வார்த்தை விளையாட்டுகள்…இப்படி எல்லாவற்றையும் கரிசனையாகக் கட்டிக் கொள்ள முடியுமா
என்ன? இதுவும் கடந்துபோகும் என்பதுபோல் பலவும் வந்து வந்து போகின்றனதான். பொருட்படுத்தினால் வீடு
ரணகளம்தான். பிறகு சந்தோஷம் என்பதையே மறந்துவிட வேண்டியதுதான். சதா கர்ர்….புர்ர்ர்….தான்.
வெவ்வேறுவிதமான குண விசேடங்கள் கொண்ட மனிதர்களின்
தொகுப்புதான் குடும்பம். கதம்ப மணிமாலை. தொடுக்கப்பட்ட மலர்கள் யாவும் ஒன்றுகூடி அதனதன்
சொந்த குணமான மணங்களைத் தவிர்த்து ஒரு பொது,
புது மணத்தை நல்கும் நயம். அந்த மணம் சகிக்கக்
கூடியதாயும்…சமயங்களில் இயலாததாயும்…!
ஆனா அப்படியேவா கழிகிறது அன்றாடங்களின்
பொழுதுகள்? ஒன்று ஆட்டுக்கு இழுக்கிறது ஒன்று மாட்டுக்கு இழுக்கிறது. எதுவும் ஒத்துவராது
என்று எண்ணம் கொள்ளும்பொழுது ஒதுங்கிக் கிடக்கத்தான் வேண்டியிருக்கிறது. வயது அதைச்
செய் என்கிறதே! அதுவே ஒதுக்கிக்கொண்டுபோய் உட்கார்த்தி விடுகிறதே!
உங்களுக்கு யாரோடயும் ஒட்டாது. எதோடயும்
மிங்கிள் ஆக மாட்டீங்க நீங்க…! எப்படித்தான் உங்களை உங்க வீட்டுல சமாளிச்சு வளர்த்தாங்களோ…நீங்களும்
வளர்ந்து ஆளாகி இன்னிக்கு ஒரு குடும்பஸ்தனாவும் ஆயிட்டீங்க….உங்ககிட்டே வந்து வசம்மா
மாட்டிட்டு முழி முழின்னு முழிக்கிறேன் நான்…இதுதான் இன்றைய யதார்த்தம்….! -சொல்லி
முடித்து விட்டதுபோல் சூழல் இறுகிப்போய்க் கிடக்க, அந்த இறுக்கத்தைத் தளர்த்தினார்
மந்திரம்.
எந்தப் பேச்சு வந்தாலும், என்ன டிஸ்கஷன்
ஆனாலும் அதுக்குக் கடைசிப்பலி நான்தானா? கட்டக் கடைசியா என் தலைல கொண்டு வந்து தேங்காயை
உடைக்கிறே நீ..? இது சுத்த அபாண்டம்….நான் நான்பாட்டுக்கு இருக்கேன்…கிருஷ்ணா…ராமான்னு….என்னைப்
பலிகிடா ஆக்காதே…!
ஆமா…உங்களப் பலியாக்கி கோட்டை கட்டிக்
கொழிக்கப் போறேன் …அதுக்குத்தான் இத்தனை பேச்சு…! – என்னவோ நினைச்சிட்டுப் போங்க… இன்னிக்கு
நேத்திக்கா இப்டி? வருஷாந்திரமா இப்படித்தானே கழிஞ்சிட்டிருக்கு…நீங்க இருக்கிறபடி
இருங்க…யாரு யாரை மாத்த முடியும்?
மாத்த முடியுமோ இல்லியோ…மாத்திக்க முடியுமே…எதுக்கு
என்னை உம்மணாம் மூஞ்சின்னு சொன்னே…? அதச் சொல்லு இப்போ…!
பதில் பேசி ஒத்தைக்கு நின்றார் மந்திரமூர்த்தி.
என் மூஞ்சியே எப்பயும் அப்படித்தானே…இதுல ஸ்பெஷலாச் சொல்ல என்னயிருக்கு?அதான் கேட்கிறேன்?
-எப்போதும் தன்னைத் தாழ்த்திக் கொள்வதில் ஒரு
அபார திருப்தி.
யம்மாடீ…நான் ஒண்ணும் சொல்லல சாமி…உங்க
மலர்ந்த வதனத்த யாராச்சும் அப்படிச் சொல்வாங்களா? என்ன நானே சொல்லிட்டேன்…அதான்…
பார்த்தியா…பார்த்தியா…மாத்துறியே…உன்
மதி வதனத்தைத்தான் யாராலும் அப்படிப் பேர் வச்சுச் சொல்ல முடியாதே….ஒரு கோபத்துக்காகக்
கூட ஒருத்தர் உன்னை அப்படி விளிக்க முடியாதாக்கும்….என்னைச் சொன்ன பார்…அது பொருத்தம்தான்….ஏன்னா…நான்
சாதாரணமாவே அப்படித்தான் இருப்பேன்…திடீ ர்னு என்னைப் பார்க்கிறவங்களுக்கு ஒரு மாதிரித்தான்
தோணும். இந்தாளோட என்ன பேச்சு? ன்னு விலகிப் போயிடுவாங்க….அதுதான் இயற்கை. என் மூஞ்சியே
அவ்வளவுதான்…ஆனா ஒண்ணு இந்த மூஞ்சியை வச்சித்தான் முப்பத்து நாலு வருஷ சர்வீசை ஓட்டியிருக்கேன்.
இத வச்சுதான் சுத்தியிருக்கிற எல்லாரையும் பயமுறுத்தி வேலை வாங்கியிருக்கேன்.விரட்டி
ராஜ்யம் பண்ணியிருக்கேன். இந்தக் கோபக் கனலை முன்னிறுத்தித்தான் எங்கிட்டே அநாவசியமா
எவனும் வந்து நிக்காம என்னைக் காப்பாத்திட்டிருக்கேன்…மதிப்பு மிக்கதா ஆக்கி, எந்தச்
சிக்கல்லையும் மாட்டாம சாமர்த்தியமா வெளில வந்திருக்கேன்…இன்னைவரைக்கும் அதுதான் என்னைக்
காப்பாத்திட்டிருக்கு…அதுவே சத்தியம்.!என்னோட கிரடிட்டே அது ஒண்ணுதான்!
மேற்கொண்டு பதில் சொல்ல விருப்பமில்லையோ
என்னவோ? எதுக்கு பேச்சை வளர்த்திட்டு? வெட்டிக்கு….சொந்தப் பிராபல்யம் வெடிக்க ஆரம்பிச்சிடும்…!
மடில கட்டி வச்சிருக்கிறதை அவிழ்த்து விட்டார்னா தாங்க முடியாது யாராலேயும்…!
யப்பாஆஆஆ….போதும்ப்பா…கேட்டுக் கேட்டு
அலுத்து சலிச்சுப் போச்சு…காது அடைக்குது….!-
கல்யாணத்திற்கு முன்பே பையன் எடுத்த ஓட்டம்.
திடீரென்று வீடு அமைதியானது. என்னாச்சு?
பேசலையா, பேச விருப்பம் இல்லையா? திடீர்னு சைலன்ட் ஆயிட்டா எப்டி?
எனக்கு நிறைய வேலையிருக்கு…இன்னும் துவையலுக்கு
அரைக்கணும். அப்புறம் மாவுக்குப் போடணும்…துணிமணி உலர்த்தணும்….வேலைக்காரி வந்திருவா…பற்றுப்
பாத்திரம் ஒழிச்சிப் போடணும்…
அதுக்கு அச்சாரம்தான் இந்த “உம்மணாம் மூஞ்சியா…” ? விட்டு விலக விரும்பாதவர்போல் கேட்டார் மந்திரமூர்த்தி.
ஆமாம்…எப்பப் பார்த்தாலும் ரூமே கதின்னு
கிடக்கீங்க…உறாலுக்கு வந்து எல்லாரோடையும் நாலு வார்த்தை பேசினாத்தான் என்னவாம்? -இப்பொழுதுதான்
விஷயத்திற்கு வருகிறாள் போலும். கலகலப்பே கிடையாது….
நான் அப்படியிருப்பதில் இவளுக்கென்ன இடைஞ்சல்?
வயசானவர்களை இளசுகளுக்குப் பார்க்கப் பிடிப்பதில்லை. அப்பனானால் என்ன, ஆத்தாவானால் என்ன? கிழடு கிழடுதானே?
ஒதுங்கிக் கிடந்துட்டுப் போறோம்…எதுக்கு வம்பு? என்ன பேசி என்னவாகப் போகுது? – நான்
அலுத்துக் கொண்டேன்.
எனக்கு மனசு ஒதுங்கியேதான் கிடக்கிறது.
நம் காலம் முடிந்தது என்கிற எண்ணம் எப்போதோ வந்துவிட்டது. துள்ளல் பேச்சு நின்று போனது.
எள்ளல் பேச்சு அவ்வப்போது தலைகாட்டுகிறதுதான். அந்தச் சனியனையும் விட்டொழிக்க வேண்டும்.
ராம….ராம….ராம….
எதாச்சும் பேசினாத்தானே அவுங்களுக்கும்
ஒரு தெளிவு கிடைக்கும்? உங்க கிட்டே கேட்கணும்னு நினைக்கிறதையும் வேண்டாம்…அப்புறம்
பார்த்துக்கலாம்னு விட்டுட்டு ஒதுங்குறாங்க…இப்படி மயான அமைதி காத்தா? உங்க ரூமுக்கு
வர்றதுக்கே தயங்குறாங்க…பயப்படுறாங்களோன்னே ஒரு சந்தேகம் வருது…!-இவளாக எதற்குக் கண்டதையும்
நினைத்து மருகுகிறாள்?
நானென்ன புலியா, சிங்கமா? எதுக்கு ஒதுங்கணும்.
நான் இங்கதான குத்துக்கல் மாதிரி உட்கார்ந்திருக்கேன்…வந்து கேட்க வேண்டிதானே? பெத்த அப்பன்ட்ட என்ன பேசத் தயக்கம்? அதெல்லாம் சும்மா….நீயா
என்னவாவது நினைச்சிக்கிறே…!
எப்பயும் பிஸியா இருக்கிற மாதிரியே படிச்சிட்டேயிருந்தா?
எதாச்சும் எழுதிட்டேயிருந்தா? எதுக்கு டிஸ்டர்ப்
பண்ணிட்டுன்னு நினைக்க மாட்டாங்களா? இல்லன்னா கண்ணை மூடிட்டு சங்கீதத்துல மூழ்கிடுறீங்க…எதுவானும்
யோசனை கேட்போம்னு நினைச்சாக் கூட உங்ககிட்டே வரமுடிலைன்னா…என்ன பண்ணுவாங்க…சின்னங்சிறுசுங்க…?
அடேங்கப்பா…கரிசனத்தப் பார்யா? அதுக சின்னஞ்சிறிசுகளா…?
என்னவோ நாம யோசனை சொன்னா அது பிரகாரம் செய்துடறாப்ல…? நீ ஒரு கிறுக்கு…அப்டி நம்பிக்கிட்டிருக்கே…நம்மளக்
கேட்டுத்தான் செய்யணும்ங்கிற நிலைமைல அவுங்க இல்லை…ஏதாச்சும் தப்பா செஞ்சா அதையும்
பொருட்படுத்த மாட்டாங்க. உன்னையும் என்னையும் மாதிரி உட்கார்ந்து அழமாட்டாங்க…போனாப்
போகுதுன்னு விட்ருவாங்க….படட்டுமே…அனுபவப்பட்டு வெளில வரட்டுமே…அனுபவம் எய்தணும்னா
கொஞ்சம் கொஞ்சம் நஷ்டம் ஏற்படத்தான் செய்யும்…உடல் நோவு, மன நோவு, செயல் நஷ்டம், பண
நஷ்டம்…போயிட்டுப் போகுது…அப்புறம் எப்படி அனுபவம் சேகரமாகுறது? தனிச்சி இயங்கினாத்தான்
அது சாத்தியம்…! படட்டும்…படட்டும்….ஒண்ணும் பங்கமில்லே….!
சொல்லிவிட்டு உறாலிலிருந்து அறைக்குள்
புகுந்து கொண்டார் மந்திரமூர்த்தி. தனக்கெல்லாம் யார் துணை இருந்தார்கள் என்று நினைத்துக்
கொண்டார். கல்யாணம் ஆன கையோடு தனிக்குடித்தனம் வந்தாயிற்று. ஒரு ஆள் திரும்பிப் பார்க்கவில்லையே!
எல்லாமும் ஓடி ஓடிச் செய்தது நான்தானே! எவன் தலையைப் காட்டினான்? யாரை எதிர்பார்த்தோம்?
யார்ட்டப் போய் நின்னோம்?
அவருக்கு எல்லாவிதமான நம்பிக்கையும் போயிற்று.
வெகு நாளாயிற்று அப்படியாகி. என்னவோ இருக்கணும், சாப்பிடணும், தூங்கணும், எழுந்திரிக்கணும்…இவ்வளவுதான்.
கடவுள் கூப்பிடுறபோது போய்ச் சேரணும்…படுக்கைல மட்டும் விழுந்திடக் கூடாது…அதுக்குத்தான்
வேண்டிக்கணும்…வாய் மூடி மௌனியாகிப் பல நாள்
ஆகிறது.
பலரும் வெளியே வந்துவிடுகிறார்கள்தானே?
பூங்கா ஏன் நிரம்பி வழிகிறது? சீனியர் சிட்டிசன்ஸ் தங்கள் வயதொத்தவர்களைப் பார்த்து,
பேசி..மனச் சமாதானம் கொள்ளவா?
அவருக்கு நான் பெட்டர்….
என்னை விட அவர் நல்லாயிருக்கார்…நான்தான்
தளர்ந்து போயிட்டேன்…
பிள்ளையும், மருமகளும் தாங்குறாங்கப்பா…நடையைப்
பாருங்க…என்னா வீச்சும் விறைப்புமா?
யோகாப் பண்றான்யா அந்தாளு…வயசு எழுபத்தஞ்சு…விட்டானா
பார்…மகாத்மா யோகா மையமாம்…பனியன்ல தெரியுது பார்…பெருமைதான்….
வாசல்ல பார்.. அந்த வண்டிகிட்டக் கூட்டத்த?
பருப்பு போளி, தேங்கா போளின்னு வாங்கி அமுக்கிறதப் பார்…நாக்க அடக்க முடிலயே எவனுக்கும்?
அதென்னய்யா அப்படி ஒரு நப்பாசை? இவங்களுக்காகத்தான்யா அந்தாளு சாயங்காலம் ஏழுக்கே வண்டியக்
கொண்டாந்து நிப்பாட்ர்றான். எட்டரைக்கு எல்லாம் காலி….அட…அதுக்காக தெனமுமா திங்கிறது…?
என்னைக்கோ ஒரு நாளைக்கு ஆசைக்கு ஒண்ணு சாப்பிடலாம்…வச்சு வளைச்சு அடிச்சா? இந்த நாக்கு
இருக்கே….
ஒரு வகைல பார்த்தா பாவம்தான்யா எல்லாரும்….வீடுகள்ல
எதையும் வாய்விட்டுக் கேட்க முடியறதில்ல…கேட்டாலும் பொண்டாட்டி அடக்கிப்புடுறா…அதென்ன
பக்கித்தனமா? வாய அடக்கிட்டு இருக்க முடியாதா? பெரிசுக்கு இன்னம் நாக்கு அடங்கல்லே…வீட்டுலல்லாம்
ஒண்ணும் செய்ய முடியாது.வேணும்னா கடைல வாங்கிக் கொடுங்க…தின்னுட்டுக் கிடக்கட்டும்…
எப்டி எங்கப்பாவ மரியாதையில்லாம நீ பேசப்
போச்சு? கேட்கலையே பாவி! காமம் கண்ணை மறைக்குதோ? வச்ச கண்ணை எடுக்காம அவளையே பார்த்திட்டிருக்கானே?
மோகித்திருத்தல் என்பது சாட்சாத் இந்த சௌஜன்யம்தான். விலக்க ஏலாமல், ஒரே வீச்சாக, அமைதியாக,
கதியாக நோக்கித் தன்னை இழத்தல்….!
எல்லாமும் பார்த்தும், கேட்டும் பொங்கி,
அடங்கி, அமிழ்ந்து கிடக்கிறார் மந்திரமூர்த்தி. இப்படியும் தன் உயிர் ஜீவித்திருக்க
வேண்டுமா என்ன?
எது சொல்லி என்னவாகப் போகிறது? யாரை யார்
சொல்லி எது திருந்தணும்? எல்லாமும் அது அது அனுபவப்பட்டுத்தான் திருந்தும். யார் சொல்லியும்
எதுவும் இந்த உலகத்தில் மாறிவிடப் போவதில்லை. ஒருத்தர் சொல்வதால் எந்த மாற்றமும் வந்துவிடவும்
போவதில்லை. எல்லாமும் அனுபவப்பட்டுத் திருந்தினால்தான் பக்குவமாகும். சொல்லிச் சொல்லிச் செய்து பக்குவமாகப் போவதில்லை.
ஒரு முறை நஷ்டமடைந்தால்தான் மறுமுறை லாபம் ஆகும். நஷ்டமடையாமல் இந்த உலகத்தில் எந்த
லாபமும் வந்துவிடப் போவதில்லை. எதுவும் கைகூடவும் போவதில்லை. ஆயிரம் புஸ்தகத்தைப் படித்தவனைவிட
ஆயிரம் நிலத்தை உழுதவன்தான் அனுபவப்பட்டவன் என்பது முதுமொழி. அதுதான் பரி பக்குவம்.
அதனால் யாருக்கும் எதுவும் சொல்லியும்
பயனில்லை. புண்ணியமுமில்லை. ஒதுங்கியே இருந்தார்
மந்திரமூர்த்தி. எதையும் கண்ணிலும் போட்டுக்கொள்வதில்லை. காதிலும் கேட்டுக் கொள்வதில்லை.
தீரவும் விசாரித்துக் கொள்வதுமில்லை. ஆர்வமிருந்தால்தானே?
விசாரித்து என்ன செய்யப் போகிறோம் என்கிற
வெறுப்பு அல்லது விரக்தி வந்து விட்டது அவருக்கு. விசாரித்தால் அதை அப்படிச் செய்ய
வேண்டும் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொல்லத் தோன்றும். தோன்றிவிட்டால் பிறகு
சொல்லாமல் இருக்க முடியாது. மனசு கேட்காது. பிறகு அதன்படி அவர்கள் நடக்காவிட்டால் மனசு
வருந்தும். எதுக்கு எங்கிட்டக் கேட்கணும். அப்புறம் எதுக்கு இஷ்டம்போல் செய்யணும்?
என்று கோபம் வரும். இதென்ன புதுவிதமான அலட்சியம்? என்ன நடிப்பு? இந்தப் பொய் நடிப்பெல்லாம்
யாருக்கு வேணும்? இந்த வாதையெல்லாம் எதற்கு?
என்னவோ பண்ணிக் கொள்ளட்டும். அவரவர் வாழ்வு. அவரவர் வழி…!
எதுவும் என்னிடம் சொல்லவும் வேண்டாம்.
நானும் எதுவும் கேட்கவும் வேண்டாம். ஒதுங்கியிருந்தார் மந்திரமூர்த்தி. என்ன தவறு?
வெளியில் எட்டிப் பார்த்தார். யாமினி தலை தெரிகிறதா என்று. விடமாட்டாளே மனஸ்வினி!
வீட்டுல இருக்கிற பெரியவங்கள மதிச்சு
நடந்தது அந்தக் காலம். அவங்க சொன்னதுக்கு மேலே ஒரு துரும்பு அசையாது. இப்போ அப்டியா
இருக்கு? வேறே வழியில்லாமே பெரியவங்க…அதாவது பெற்றோர்ங்க கூட இருக்க வேண்டியிருக்கு.
அதுவும் ஒருவகை தண்டனைதான் சொல்லப்போனா! தனியாப்
பொங்கித்தின்னுட்டு அக்கடான்னு கிடக்க முடில…மனசு வரல…எங்ககூட இருக்கலாமே…?ங்கிற கரிசனம்.
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. குழந்தைகளப்
பார்த்துக்கத் துப்பில்ல. ஆளைப் போட வேண்டிர்க்கு. அவுங்களால ஆபத்தும் இருக்கு…நம்பிக்கையா
ஆளுக கிடைக்கிறதில்ல…சரியா வளரணுமேங்கிற பயம்…! என்னென்னமோ நடக்குது அங்கங்க…தினமும்
பேப்பர்ல, டி.வி.ல…செய்தி பார்க்கத்தானே செய்றோம்? அதுக்காகவாச்சும் பெத்தவங்க வேண்டிர்க்கு…பொம்மைகள்
மாதிரி…! அங்கங்க நகர்த்தி நகர்த்தி வச்சிக்கலாமே! வேண்டாம்னா மூலைல போட்ரலாமே?
வெறும் ஓட்டைக் கரிசனம். பொய்ம்முகம்.
எதுக்காக வீட்டுல மூத்தவங்க இருக்காங்க…வழிகாட்டத்தானே?வெறுமே காவல் காக்கவா? பேசாமத் தின்னுட்டுக் கிடக்க வேண்டிதானேன்னா என்னத்துக்குக்
கூட இருக்கணுமாம்? அடிமைங்களா? வெறும் சோற்றுக்கோ வந்ததிந்தப் பங்கம்?
நல்லது சொன்னாக் கேட்டுக்கத் தெரியணும்.
அதன்படி நடக்கத் தெரியணும். அப்பத்தான் எல்லாமும் வகை தொகையா அமையும்…நடக்கும்…அதுக்குத்தானே
அனுபவப்பட்ட பெரியவங்க உடன் இருக்கிறது? வெறுமே ஆட்டுக்கல் மாதிரி நிறுத்தி வைக்கவா?
அதனாலதான நான் உம்மணாம்மூஞ்சி…! சொன்னாச் சொல்லிக்கோ…! இனிமே எந்தத் திட்டு வாங்கி
என்ன கேவலம் வரப்போறது எனக்கு…! என்னைக்காவது ஒரு நாள் உனக்குத்தான் மனசு சஞ்சலப்படப்
போகுது…இந்த மனுஷன அநியாயமாப் பலமுறை திட்டியிருக்கமே..!எல்லாத்தையும் வாங்கிட்டுப்
போய்ச் சேர்ந்துட்டானே…பாவி…! தோணும் பாரு…கடைசில உணராத மனுஷன், மனுஷி எவரும் இல்லை
இந்த உலகத்துல…!!-சொல்லி முடித்தார் மந்திரமூர்த்தி.
அதுக்காக அந்தக் குழந்தை என்ன பாவம் பண்ணித்து?
அதைக் கூடவா தூக்கிக் கொஞ்சக் கூடாது? கிட்டவே வர விடுறதில்லையே! – எட்டிப் பார்த்துத்
தட்டி விட்டாள் வார்த்தைகளை யாமினி.
நானா வர வேண்டாம்னேன். அவங்க பிடிச்சி
நிறுத்தினா? நா என்ன பண்றதாம்?போய்க் குழந்தையப் பிடுங்க முடியுமா? கிட்ட வந்தா ஏதேனும் வியாதி ஒட்டிக்கும்னு நினைக்கிறாளோ
என்னவோ? யாரு கண்டா? மனசுக்குத் தோணத்தானே செய்யுது? …குழந்தையும் தெய்வமும் ஒண்ணு… கொஞ்சர்துலெல்லாம்
ஒண்ணும் குறைச்சல் இல்லதான்…. பாசம் விட்டுப் போகுமா? வெளில கூட்டிட்டுப் போன்னுது…
பயமாயிருக்கு…கையை உதறிட்டு ஓடிடுது…பிடிக்க முடியல்லை…எம்புட்டு வண்டிகள் வருது…நாய்கள்
திரியுது…மாடுகள் வருது….குலை நடுங்குதே…-தாத்தா கூடப் பேரன் போறாம்பாருன்னு ஊருக்குக்
காட்டவா? பாதுகாப்புதான் முக்கியம். நாம சின்னப் பிள்ளைகளா இருந்த காலத்தப் போல இப்ப
எதுவும் இல்லயாக்கும்…!-அப்போ மூணாமத்தவன் கூட நீ இன்னார் பிள்ளைதானேன்னு வீட்ல கொண்டு
வந்து விட்ருவான்…இப்போ எல்லாப் பயலுகளுமே களவாணியால்ல போயிட்டானுங்க..எவனை நம்பறதுன்னே
தெரிலயே? காசுக்காக எதுவும் பண்ற உலகமால்ல போச்சு? – இதையெல்லாம் உணர்ந்து எதுக்கு வம்புன்னு ஒதுங்கினா நீ என்னை உம்மணாம் மூஞ்சிங்கிறே…! கல்லுளிமங்கன்கிறே…!
உலகத்துல என்னெல்லாம் திட்டு இருக்குங்கிறதை உன் மூலமாத்தான் ரீவைன்ட் பண்ணிக்கணும்
போல…! நம்மால ஒரு சங்கடம் வந்துடக்கூடாதுன்னு
மனசு பயப்படுது…பதறுது…அதனால ஒதுங்கி ஒடுங்கிக் கிடக்கேனாக்கும்…
நானாவது ஒரு வாட்டிதான் சொன்னேன். உங்க
நாட்டுப்பொண் தினமும் சொல்றா? எப்பப்பாரு கடுகடுன்னுட்டுங்கிறா…!
கடுவம்பூனைனன்னு சொல்லியிருப்பாளே…?
– எதிர்க்கேள்வி போட்டார் மந்திரமூர்த்தி. அதுவும் ஒரு நாள் அவர் காதில் விழுந்திருந்ததுதான்.
கடுவம்பூனை எப்படி உறுமும் என்று அவரே தனியே செய்து பார்த்துக் கொண்டு சிரித்தார்.
இன்னும் அதுக்கு பேர் வேறே வச்சு சொல்லணுமா?
கடுகடுன்னாப் போறாதா? அந்தக் குழந்தையைப் பராமரிக்கிறதுக்குத்தானே…அவுங்களுக்கு உதவியாத்தானே
நாம இங்க இருக்கோம்…?சும்மா தின்னுட்டுத் தின்னுட்டுத் தூங்கறதுக்கா?
என்னாடீ…நீயே இப்டிச் சொல்றே? ஓசிச் சோத்துக்கா
உட்கார்ந்திருக்கோம். நம்ம பென்சன் பணம் பூராவும் அவுங்களுக்குத்தானே? உபகாரம் இல்லாட்டாலும்
உபத்திரவம் இருக்கக் கூடாதுடீ…! வயசானவங்க கூடியானவரைக்கும் தங்களை ஒதுக்கிக்கிறது
உத்தமம்! என் பாலிசி அதுதான்….!
அதுக்காக? கூட வச்சுக் கொண்டாடணும்கிற
அவசியமொண்ணுமில்லையே? – நாம இல்லாட்டா தாராளமா, இன்னும் கொண்டாட்டமாத்தானே இருப்பாங்க…?
நல்லா இருக்கட்டும்…யார் வேண்டாம்னாங்க…?
அப்ப விட்டுடச் சொல்லு. ஆளப் போட்டுக்கட்டும், பார்த்துக்கட்டும், சந்தோஷமா விலகிக்குவோம்?
இந்த வயசுல எதையும் நினைச்சு வருத்தப்படக் கூட உடம்பல தெம்பில்லையாக்கும்…எல்லாமும்
ஒரு வயசுதான். அப்புறம் அவுங்கவுங்க ஃபேமிலியை அவுங்கவுங்கதான் பார்த்துக்கணும்…பறவைக்கு
றெக்கை முளைச்சிடுச்சின்னா அதுகளாத்தானே இறை தேடிக்குது…தாய்ப்பறவையா கொண்டாந்து கொடுக்குது…?
அது கூட்டுல இருக்கிறவரைக்கும்தான்…அதான் கைநிறையச் சம்பாதிக்கிறாங்கல்ல…எதையும் பணத்தைக்கொண்டு
சாதிக்கலாம், விலை பேசலாம்ங்கிற திமிரு இருக்குல்ல? அப்போ இதையும் சேர்த்துச் செய்துக்கட்டும்…எதுக்கு
ஒட்டிட்டுக் கிடக்கணும்…விலகியே இருப்போம்…! கண்ணால் கண்டு, காதால் கேட்டு, வாயால்
பேசி…எதுவுமில்லை…பரப்பிரம்மம்…ஜெகந்நாதம்…!!
ஆனாலும் இப்படி விட்டுப் பேசி ஒருத்தரை
நான் பார்த்ததில்லே…கொஞ்சம் கூடப் பாசமேயில்லையா உங்களுக்கு? ஈரமெல்லாம் வத்திப் போச்சா?
வறண்டுடுத்தா?
ஆமாம்…அப்டித்தான் வச்சிக்கயேன்…என்று
ஒரு போடு போட்டார் மந்திரமூர்த்தி. யாமினியின் வாய் அடைத்துப் போனது அத்தோடு. அவள்
மனசு அநியாயத்துக்கு அலை பாய்ந்து கிடக்கிறது என்று உணர்ந்தார் இவர். தினமும் விழுந்து
விழுந்து சாமி கும்பிடுகிறாள். மணிக்கணக்காக ஸ்லோகம் சொல்கிறாள். மனம் பக்குவப்படவில்லையா?
சாமி கும்பிடக் கும்பிட பயம் அதிகமாகிறதோ?
மந்திரமூர்த்தி தன் அறையில் முடங்கிக் கிடந்தார். இருபத்திநாலு
மணி நேரமும் அந்த ஃபேன் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது இவருக்காக. அதுவே இவருக்குப் பெருத்த
உறுத்தலாயிருந்தது. கரன்ட் சார்ஜ் தன்னால்தான் அதிகமாகிறதோ? என்று. பில் வந்ததும் முந்திக்கொண்டு இவரே மின் கட்டணம்
கட்டிவிடுகிறார். மொபைலில் டான்ஜெட்கோ ஆப்…பை இதற்காகவே வைத்திருக்கிறார். டெபிட் கார்டு
போட்டு இறக்கி விடுகிறார். ரசீதை அவனுக்கு வாட்சப் பண்ணி விடுகிறார். இன்றுவரை ஒரு
தாங்க்ஸ் கூடச் சொல்லவில்லை படுபாவி! அட…ஓ..கே.ப்பா….என்றாவது
சொல்லலாமே? கெத்து…! அப்பன்ட்டத்தான் இதெல்லாம் காண்பிக்க முடியும்…வெளில செல்லுபடியாகாது!
எதற்கு வம்பு? ஏன் இவ்வளவு பில் வருது?
என்று என்றேனும் ஒரு நாள் பையன் கேட்டால்? அட…அந்தப் பெண்தான் கேட்டு வைத்தால்? தன்னால்தான்
என்று இவர் மனசு உறுத்தியது.
ராத்திரி பூராவும் ஏ.சி. ஓடுது…நானும்
உங்கம்மாவும் அப்டியா போட்டுக்கிறோம்? ஒரு மணி நேரம் போட்டுட்டு அணைச்சிடுவோம். பிறகு
ஃபேன்தான். முழு ராத்திரியும் தினமும் ஓடினா ஏன் இ.பி. பில் இவ்வளவு எகிறாது? பன்னெண்டாயிரம்,
பதினஞ்சாயிரம்னு வரத்தான் செய்யும்…இதுக்குன்னு ஒராள் தனியா வேலை பார்க்கணும் போல்ருக்கு...!
இப்போ ரெண்டாவது தடவையா கட்டணத்தை அதிகப்படுத்தியிருக்காங்க…அதனால
வருது…. – பையனின் பதிலுக்கு எதிர்க்கேள்வி போட்டார் இவர்.
அப்டியானாலும் இவ்வளவு வராதே…ஏ.சி.தான்
ஒரே காரணம் இதுக்கு. அதை சுருக்கமா பயன்படுத்தணும். உடம்புக்கும் கெடுதல்தானே? தாறுமாறாக்
கரன்ட் இழுக்கத்தானே செய்யும்..? நாம என்ன ஏ.சிலயே பிறந்து வளர்ந்தவங்களா? ஃபேன் கூட
இல்லாமத்தானே கெடந்தோம்….-சொன்னார் மந்திரமூர்த்தி.
அது அவர் வளர்ந்த விதம். பையன் அப்படியா
வளர்ந்தான். வசதியாய்த்தானே வளர்த்தோம். வறுமையையும்,
சிக்கனத்தையும், காட்டி, சொல்லி வளர்த்திருக்க வேண்டும். செய்யலையே? பிறகு இப்போ வருத்தப்பட்டு
என்ன புண்ணியம்? இருந்தாலும் அப்பனுக்கு இருக்கிற புத்தி கொஞ்சங் கூடவா பிள்ளைக்கு
இருக்காது? இல்லையா அல்லது பொண்டாட்டிக்கு பயந்து சாகிறானா? எவன் கண்டது? இவங்கள்லாம்
ஆம்பளைங்கதானா? ஒரு குடும்ப அளவுல கூட இதுதான் சரின்னு நியாயங்களை நிலை நிறுத்த முடிலன்னா இவனுங்கள்லாம்
என்ன ஆம்பிளைங்க?
வாயில்லை அவனுக்கு. பெண்டாட்டிதாசன்.
எப்படி வாய் திறக்கும்?முன்னயும் பின்னயும் பொத்திட்டுக் கிடக்கான் தடியன்…! இனிமே நானே கட்டிக்கிறேன் என்கிற பேச்சு மட்டும்
வரமாட்டேனென்கிறது? அந்த ரோஷம் வேண்டாமோ?மனசில்லயே…! இதுல என்னைச் சொல்ல வந்துட்டானுங்க…
வெளில பேரனக் கூட்டிட்டுப் போனா அதை வாங்கிக்
குடு…இத வாங்கிக் குடுன்னுது…ஆசைக்கு வாங்கிக் கொடுத்து வயித்தால போச்சின்னா? எவன்
பொறுப்பாறது? பாலு மகேந்திரா படத்துல ரோட்டுக்கடை வடையை வாங்கிக்கொடுத்து அந்தத் தாத்தா
திட்டுவாங்குவாரே! அந்த நிலமைதான் எனக்கு…அப்புறம்…!இவிங்ஞகிட்ட வார்த்தை கேட்கணும்னு
எனக்கென்ன தலவிதியா?
மாடில விளையாடக் கூட்டிட்டுப் போனா ஓட்டமான
ஓட்டம். துள்ளிக் குதிக்கிறதுல பேரபெட் வாலைத் தாண்டி வெளில குதிச்சிடும்போல்ருக்கு.
அடி வயிறு கலங்குது….பதிலுக்குத் துணையா கூடவேயா ஓட முடியுது…? அங்க போகாதே…எட்டிப் பார்க்காதே…விழுந்துடுவன்னா கேட்கவா செய்துங்க…?
பதறியடிக்குது மனசு…! கூட இருந்து குழி பறிக்கவா வந்திருக்கோம். சந்தோஷமா தனியா இருந்திட்டுப்
போகட்டுமே…யார் வேண்டான்னுது?
என்னத்தவோ பண்ணிட்டுப் போகட்டும். எப்டியோ
வாழட்டும். இதெல்லாம் நினைச்சு வருத்தப்பட்டிருக்க முடியுமா? அவுங்க வாழ்க்கை..அவுங்க
வாழட்டும். நாம எதுக்குக் குறுக்க…?
பேரன் பேத்தி பாசத்தைக் கூடத் தள்ளி வைத்துவிட்டார்
மந்திரமூர்த்தி. கீழ மேல விழுந்து காயம் பட்டிச்சின்னாக்
கூட நம்மளத்தான் சொல்வாங்க…-பயந்து போய்க் கொஞ்சுவதைக் கூட விட்டு விட்டார். தாத்தா…தாத்தா..என்று
வந்து நின்றால் என்னடி தங்கம்…என்று அருகே நிறுத்தி அகமகிழ்வதோடு சரி…..இருக்கையைவிட்டு
நகர்ந்தாரில்லை.
சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டாள் யாமினி.பலித்தபாடில்லை.
உனக்குத் தெரியாதுடி…அவுங்க எதுவும் சொன்னாலும்
உனக்கு உறைக்காது. நான் என்ன உன்னை மாதிரி மொண்ணையா? அதான் இப்டி இறுகிப் போய்க் கிடக்கேன்.
அது உனக்கு உம்மணாமூஞ்சியாத் தெரியுது…அதுக்கு நான் என்ன பண்ணட்டும்…? எப்டி வேணாலும்
நினைச்சிக்கோ…கவலையில்லை…என் மீதிக் காலம் இப்டித்தான். என் இருப்பு இதுதான்…இவ்வளவுதான்…இஷ்டம்னா
சொல்லு…இல்லையா ஆளவிடு…ஊர்ல போய் நான் தனியா இருந்துக்கிறேன்…நான் என்னைக்குமே தனிக்காட்டு
ராஜாதான்…நீதான் பிசினா அவனோட ஒட்டிண்டிருக்கியே? எனக்கு நீ கூட இல்லையேங்கிற கவலையும்
இல்ல…என்பாடு எனக்கு…உன் பாடு உனக்கு…அவ்வளவுதான்….நீ முந்திண்டா நோக்கு…நா முந்திண்டா
நேக்கு…!.. என் மனசு என்னிக்கோ விலகிப் போச்சு…! வாரணாசியோட மணிகர்ணிகாதான் அடிக்கடி
நினைவுல வருது இப்போ…அதுக்கெல்லாம் கொடுத்து வச்சிருக்கணும்…நான் இப்போ லௌகீக வளையத்துலர்ந்து
விலகி நிற்கிற சுத்த சந்நியாசி….
போதும்…போதும்…உங்க திருவாயை மூடுங்க…அவுங்க வர்ற சத்தம் கேட்குது…சுத்த
சந்நியாசி…பெத்த சந்நியாசின்னிட்டு…சரியான “இடிச்ச புளி“…அந்தப் பேர்தான் சாலப் பொருத்தம்..…சாபமிடுவதுபோல்
சொல்லியவாறே வாசலை நோக்கி ஓடினாள் யாமினி. எதுக்கு இந்த ஓட்டம்? ஐயோ பாவம்…! நினைத்துக் கொண்டே உறாலை விட்டு நகர்ந்தார் நம் நாயகர்.
இடிச்ச புளி…இடிச்ச புளி…! நல்லாயிருக்கே…!! தனக்குத்தானே அழுந்தச் சொல்லி சிரித்துக் கொண்டார்.
நண்டு மீண்டும் வளைக்குள் புகுந்து கொண்டது.
-----------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக