“கடமை “
சார்…தபால் திரும்பி வந்திருக்கு …..-ஒரு
வணக்கம் போட்டு சொல்லிக் கொண்டு வந்த போஸ்ட்மேனை நிமிர்ந்து பார்த்தார் கனகமணி.
நீட்டிய
தாளில் கையொப்பமிட, பியூன் செல்லச்சாமி வந்து சீல் வைத்து திருப்பிக் கொடுத்தார். .
தபாலை
நிதானமாக சிசர் வைத்து நுனியில் கட் பண்ணினார். உள்ளே இருந்த தாளை எடுத்தார். ஒரு மெல்லிய பதற்றம் அவரிடம் பரவியிருந்ததை
உணர்ந்தார்.
எழுத்தர்
அவிநாசிக்கு அனுப்பிய கடிதம்தான அதன் ஜெராக்ஸ்
இணைப்போடு திரும்பியிருந்தது. நாம அனுப்பிச்சதே
திரும்பிடுச்சு? என்றவாறே அந்தக் கடிதத்தையும் இணைப்போடு ஓரத்தில் கிழித்த தபால் கவரையும்
பின்னால் வைத்து ஸ்டாப்ளர் பின் அடித்தார்.
தேர்தல்
அலுவலர் - 3 க்கு அவரை நியமனம் செய்திருந்த ஆணை அது. அன்று புதன் கிழமை. முதல் வாரம் வெள்ளிக்கிழமை அனுப்பியிருந்த கடிதம்.
சனிக்கிழமை கொடுத்திருக்கலாம். அல்லது திங்கட்கிழமை டெலிவரி செய்யப்பட்டிருக்கலாம்.
அப்படி டெலிவரி செய்யும்போது வாங்க மறுத்து திரும்ப அனுப்பப்பட்டிருக்கிறது. அதானே?
ஆள்
வரும்முன்னே அனுப்பிய கடிதம் திரும்ப வந்து விட்டது. தேர்தல் பணி ஏற்றே ஆக வேண்டும்,
மறுத்தல் கூடாது என்கிற நோக்கில் ஒப்புதல் அட்டையோடு பதிவஞ்சலில் அனுப்பப்பட்ட தபால்
திரும்பியிருக்கிறது.
பொதுவாக
இம்மாதிரி தபாலில் அனுப்பும் நடைமுறை இல்லைதான். வெளியூரில் இருக்கும் ஆள் ஒருவேளை
வராமலே போய்விட்டால்? இந்த முக்கியமான ஆணையைக் கண்டாவது ஆள் வந்தே ஆக வேண்டுமே? இப்பணியை
மறுக்க முடியாதே…? அசல் தன்னிடம் இருப்பதை டிராயரைத் திறந்து பார்த்து உறுதி செய்து
கொண்டார்.
சொல்லப்போனால்
இம்மாதிரித் தபால்களை நேரடியாக வழங்கி, கையொப்பம் பெற வேண்டும். அதுதான் முறை. நடைமுறையே
அதுதான். ஆள் வெளியூரில் இருந்ததால் அவசரம் பார்த்து வந்து சேர வேண்டும் என்று இப்படிச் செய்யப்பட்டது. ஃபோனில் பிடிக்க முடியவில்லையே?
அப்படியும் தபால் திரும்பியிருக்கிறது. ஆளில்லையா? வாங்கவில்லையா? வெவ்வேறாக முயற்சித்தும்
பலனில்லை.
வந்த
தபாலைத் திருப்பித் திருப்பிக் கவனமாய்ப் பார்த்தார் கனகமணி. இவங்களோட பெரிய்ய்ய்ய
தொல்லையப்பா….என்ற எண்ணம் அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. …Door locked …என்று மூலையில் கிறுக்கப்பட்டிருந்தது.
இன்று
புதன் கிழமை ஆளும் பணிக்குத் திரும்பியிருக்க வேண்டும். நேற்றோடு விடுப்பு முடிந்தது.
அவநாசி வரவில்லை. ஒரு வேளை தேர்தல் பணிக்குப் பயந்து கொண்டு விடுப்பை நீட்டிப்பாரோ?
சந்தேகம் வந்தது.
மாவட்ட
ஆட்சியர் அலுவலகத்திலிருந்து தேர்தல் பணி ஒதுக்கீட்டு ஆணைகளை எடுத்துக் கொண்டு டெலிவரி
செய்ய வந்த பணியாளர் இன்று மீண்டும் வரக்கூடும். எல்லாத் தபால்களும் எல்லாருக்கும்
வழங்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்ய. என்ன பதில் சொல்வது?
திரும்பி
வந்த தபாலைத் திருப்பியளிக்க முடியுமா? ஆளில்லை என்று சொல்ல முடியுமா? தேர்தல் பணியை
மறுப்பது கூடாது. மறுக்கும் பணியாளர் மீது நடவடிக்கை உண்டு.
யோசித்தவாறே
அமர்ந்திருந்தார் கனகமணி. வேறு வேலை ஓடவில்லை.
எதிரே இருந்த எழுத்தர்கள், தட்டச்சர்களின் இருக்கைகள் காலியாயிருந்தன. அனைத்துப் பேரும்
தேர்தல் பயிற்சி வகுப்பிற்குச் சென்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் போடப்பட்டிருந்தது.
டவுனுக்குள்ளேயும், சற்று ஒதுக்குப் புறமாகவும்….வகுப்பு அரை நாளில் முடிந்து விடும்தான். மதியம் ஆபீஸ் வந்து விட வேண்டும். ஆனால் யாரும்
வருவதில்லை். வீட்டிற்குப் போய் சாப்பிட்டு
வருவதானாலும் இரண்டரை, மூன்றுக்குள் வந்துவிடலாம்தான். போனால் போனதுதான். குறைந்தது
நான்கு வகுப்புகளாவது இருக்கும். போகும் இடத்தில் எப்போது வகுப்பு ஆரம்பிக்கும், எப்போது
முடியும் என்றும் சொல்ல முடியாது. வகுப்பு எடுப்பவர் கொஞ்சம் முன்னே பின்னே வந்தால்
நேரம் ஆகத்தானே செய்யும்? அதனால் பணியாளர் ஏன் மதியம் ஆபீஸ் வரவில்லை என்று யாரையும்
கேட்கவும் முடியாது. கேட்டும் பயனில்லை. கொடுத்த ஆணைப்படி ஒழுங்காகத் தேர்தல் பணியைச்
செய்து முடிக்கட்டும் அதுவே போதுமானது என்று தோன்றிவிடும். இல்லையென்றால் அலுவலருக்குக்
கெட்ட பெயர். அவருக்குக் காரணங்கள் கேட்கப்படும்.
எனவே
மதியம் ஆபீஸ் வருவதைப்பற்றி பொதுவாய் யாரும் பொருட்படுத்துவதில்லை. அது அந்தந்த ஆபீஸ்
சம்பந்தப்பட்ட, அங்குள்ள அலுவலகம் சம்பந்தப்பட்ட நடைமுறை விஷயங்கள்.
கனகமணிக்கு
மதியம் இரண்டு மணிக்கு மேல் தேர்தல் வகுப்பு. பகல் அரைநாள் ஆபீஸ் போய் இருக்கும் வேலைகளை
முடித்து விடுவோம் என்று வந்திருந்தார் அவர். குறிப்பாய் அவர் மனதிலிருந்த விஷயம் இதுதான்.
அவிநாசி தபால் பெற்றாரா இல்லையா?
சந்தேகப்பட்டதுபோலவே
ஆகிப் போனது.
எதற்காக
தேர்தல் பணியை ஏற்க மறுக்கிறார்கள் அல்லது தயங்குகிறார்கள் அல்லது பயப்படுகிறார்கள்?
அங்கென்ன அடிக்கிறார்களா, பிடிக்கிறார்கள்? அப்படியென்ன அறிவில் ஏறாத விஷயமா அது? எவ்வளவு
எளிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்? ஒருவர் பெயர் படிக்க இன்னொருவர் பட்டியலில் அன்னாரின்
பெயரும் படமும் இருப்பதை உறுதி செய்து கொண்டு கையொப்பம் பெற, மூன்றாவது நபர் இடது கை
ஆள்காட்டி விரலை நீட்டச் சொல்லி நகத்திற்கும் சதைப் பகுதிக்கும் குறுக்கே சமமாய் விழுவது
போல் மையைத் தடவி அனுப்ப வேண்டியதுதான். இதில்
இந்த மை வைக்கும் வேலைக்குக் கூடப் பயந்தால் எப்படி?
முதல்
நாள் மாலையே எங்கு பணி செய்ய ஆணையிடப்பட்டிருக்கிறதோ அந்தப் பள்ளிக்கு அல்லது இடத்திற்குச்
சென்று விட வேண்டும். ஒரு இரவு மட்டும் அங்கேயே
தங்கி உண்டு உறங்கி எழுந்து மறுநாள் காலை தயாராக வேண்டும். இதற்கென்ன சுணக்கம்? இதிலென்ன
பயம்? புதுஇடத்தில் ஓர் இரவு படுத்திருந்தால்
தொலைந்து போவோமா? அப்படியே சரியான தூக்கம் இல்லையென்றாலும்தான் என்ன? நாட்டின்
பணிக்காக ஓர் இரவு தூக்கம் முழிக்கக் கூடாதா?
குடி முழுகி விடுமா?
வேண்டாம்
சார்…ஏதாச்சும் தகராறு…அடிதடி வரும்…எதுக்குப் பிரச்னை? எனக்கு எலெக் ஷன் டியூட்டி
வேண்டாம் சார்…. – கணக்குப் பிரிவு எழுத்தர் முனியம்மா இப்படிச் சொன்னது நினைவுக்கு
வந்தது கனகமணிக்கு.
அப்படியெல்லாம்
நினைச்சு பயப்பட வேண்டியதில்ல…எதுவும் நடக்காது. எல்லாம் பக்காவா ஏற்பாடு பண்ணியிருப்பாங்க…பாதுகாப்புக்குப்
போலீஸ் காவல் போட்டிருப்பாங்க… தேர்தல் பணியை வேண்டாம்னு சொல்ல முடியாது…செய்தே
ஆகணும். அது நம்மளோட கடமை…புரிஞ்சிக்குங்க…
சரி
சார்…நீங்க சொல்றீங்களேன்னுதான் சம்மதிக்கிறேன். எங்க வீட்டுக்காரரு வேண்டாம்னு சொல்றாரு…வாங்காதங்கிறாரு…..அப்புறம்
நான் என்ன சார் பண்றது? நாளைக்கு ஏதாச்சும் பூத்ல கலாட்டா கிலாட்டா அடிதடின்னு நடந்திச்சின்னா…காயம்
பட்டுப் போச்சின்னா…யார் சார் பொறுப்பாறது? நீங்களா வருவீங்க….?
இது
எனக்காக வர்றதில்லம்மா…நல்லாப் புரிஞ்சிக்குங்க…நான் சொல்றதுனால நீங்க ஏத்துக்க வேண்டாம்.
சொல்ல வேண்டியது என் கடமை…அதனால சொன்னேன். இது கலெக்டர் ஆர்டர்..இல்லன்னா உங்க பேர்ல
ஆக் ஷன் எடுப்பாங்க…பரவால்லியா? மெமோ கொடுப்பாங்க…ஏன் தேர்தல் பணியை ஏத்துக்கலைன்னு
காரணம் கேட்பாங்க….அலைய வேண்டியிருக்கும்… அதுக்கு கமுக்கமா ஏத்துக்கிட்டு செய்துட்டு
வந்துடறதே பெட்டர். நான் உங்களுக்கு நல்லதத்தான் சொல்லுவேன்…நம்புங்க…நம்மள மாதிரி
ஊழியர்களை நம்பித்தாம்மா எலெக் ஷனே நடக்குது…நாம செய்யாம வேறே யாரு செய்வாங்க…மகிழ்ச்சியா
ஏத்துக்கிட்டுப் போயிட்டு வருவீங்களா? எதை எதையோ சொல்லிப் புலம்புறீங்களே? செய்த வேலைக்குப்
பணமும் கொடுக்கிறாங்கல்ல…இந்தியா முழுக்க இது நடக்குது? உங்கள மாதிரி அங்கங்க இருக்கிறவங்க
உனக்கு வேண்டாம்…எனக்கு வேண்டாம்னு சொன்னா அப்புறம் யாரை நம்பிம்மா தேர்தல நடத்தும்
அரசாங்கம்…? கவர்ன்மென்ட் சர்வன்டா இருக்கோம்….தேர்தல் கமிஷன் அரசாங்க மெஷினரிய நம்பித்
தேர்தலை நடத்துறாங்க…நம்பள நம்பித்தான் முறையாத் திட்டமிட்டு இந்த வேலைல இறங்குறாங்க…செய்து
கொடுக்க வேண்டியது நம்ப கடமையில்லையா? அத விட வேறே வேலை என்ன நமக்கு? சந்தோஷமா ஏத்துக்கிட்டுப்
போயிட்டு வர வேண்டாமா? இப்டியா சீக்குப் பிடிச்ச கோழி மாதிரிச் சுணங்குறது? தப்பும்மா….ரொம்பத்
தப்பு….முதல்ல கையெழுத்துப் போட்டு எலெக் ஷன் டியூட்டி ஆர்டரைக் கும்பிட்டுக் கைல வாங்குங்க…
கலெக்டர்
ஆபீஸிலிருந்து வந்திருந்த அதிகாரி முன்னேயே இப்படி ஒரு நீண்ட லெக்சர் கொடுத்து அவரவர்
ஆணைகளை வாங்கச் செய்தார் கனகமணி. தன்னால் கூட இப்படி விளக்கிச் சொல்ல முடியாது என்று
அகமகிழ்ந்து தேர்தல் பணி ஆணைகளை வழங்கிவிட்டுப் போனார் அந்த அதிகாரி. போகும்போது மட்டும்
ஒன்று சொன்னார்….
மலைப்
பகுதிக்கெல்லாம் தேர்தல் வேலைக்குப் போறாங்கம்மா…தெரியுமா? கழுதை முதுகுல, குதிரை மேலே…எல்லாச்
சாமான்களையும் ஏத்திட்டு, மொத நா ராத்திரியே போய் கெதம் கெதம்னு கிடக்காங்க….அவுங்களும்
நம்மள மாதிரி கவர்ன்மென்ட் சர்வன்ட்கள்தான்…மனுசங்கதான்….கொஞ்சம் எல்லாத்தையும் நினைச்சுப்பாருங்க….
முனியம்மா
பயந்தது என்னவோ ஓரளவு நியாயம்தான் என்றும் தோன்றியது கனகமணிக்கு. ஏனென்றால் அவருக்கே
அப்படியான ஒரு அனுபவம் உண்டு. மானேஜர் ஆவதற்கு முன் இருபதாண்டு காலம் உதவியாளராகப்
பணி புரிந்த காலங்களில் மூன்று நான்கு தேர்தல் பணிகளுக்குச் சென்றுள்ளார் கனகமணி. அப்படிச்
சென்ற ஒரு இடத்தில் பெரிய கலாட்டாவே நடந்து போனது என்பதுதான் உண்மை. கும்பலாக வந்து
தேர்தல் நடக்கும் பூத்தை நோக்கி கற்களை விட்டெறிந்து, உள்ளே புகுந்து இருந்த ஆட்களையெல்லாம்
விரட்டி அடித்து மேஜை நாற்காலிகளை உடைத்து,
தேர்தல் ஆவணங்களைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டு, பிறகு மிலிட்டரி போலீஸ்
வந்து அவர்களை விரட்டி விரட்டிப் பிடித்த கதையும் காட்சியும் இப்போதும் அவர் மனதில்
அழியாது நிலைபெற்ற ஒன்றாக இருந்து கொண்டிருக்கிறதுதான்.
எங்கோ
என்றோ ஒன்றிரண்டு நடந்து விட்டது என்பதற்காக தேர்தல் பணிக்கே செல்ல மாட்டேன் என்று
சொல்வது என்ன நியாயம்? அப்படி மறுப்பது மனசாட்சிப்படி
நியாயமாகுமா? நாமெல்லாம் ஒன்று சேர்ந்துதானே தேர்தலை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க
வேண்டும்? அது நம் அத்யந்தக் கடமையில்லையா? ஓட்டுப்போடுவது எப்படி மக்களின் ஜனநாயகக்
கடமையோ அதுபோல தேர்தல் பணிக்கும் சந்தோஷமாக ஒத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் உற்சாகமாய்
அந்தக் கடமையை நிறைவேற்றுவது இந்த நாட்டின் பிரஜையாகிய நமது கடமையும் ஆகிறதுதானே?
பெரும்பாலும்
யாரும் வாங்க மாட்டாங்க சார்…அந்தந்த ஆபீஸ் சூப்பிரன்ட், மானேஜர்னுதான் நாங்க கொடுத்திடுவோம்.
அவரோட பொறுப்பு அதை அவரவருக்கு விநியோகிப்பதும், ஏற்றுக் கொள்ளச் செய்வதும்….இப்டி
ஒவ்வொரு ஆபீசா நாங்களே உட்கார்ந்து கொடுத்துக் கையெழுத்து வாங்கிட்டிருந்தோம்னா எங்களுக்கு
வேலை முடியாது சார்…ஒவ்வொரு ஆபீஸ்லயும் பாதிக்குப் பாதிதான் விரும்பி வாங்குறாங்களேயொழிய
எல்லாரும் சந்தோஷமா ஏத்துக்கிறதில்ல சார்…பயப்படுறாங்க…அதான் ஏன்னு தெரில…? அப்படியென்ன
கஜகர்ண வித்தையா இந்த வேலை? அதான் நாலஞ்சு வகுப்பு எடுக்கிறாங்களே…அதுலயே எல்லாமும்
நல்லாத் தெரிஞ்சி போயிடுமே…? பிறகென்ன சார் தயக்கம்? நம்ம ஊழியர்களை மாத்தவே முடியாது
சார்…இப்டி சோம்பின மனநிலைல இருக்கிற இவுங்களை உசுப்பிவிட்டு உசுப்பி விட்டுத்தான்
ஆள் சேர்த்து இந்தத் தேர்தலை நடத்தி முடிச்சாக வேண்டியிருக்கு….இதாச்சும் பரவால்ல….தேர்தல்
அன்னைக்கு வராம இருந்த ஆட்களும் உண்டு…அது தெரியுமா? ஒருத்தரே ரெண்டு பேர் வேலையைப்
பார்க்க வேண்டிய நிலமையும் வந்திருக்கு. எல்லாத்தையும்தான் சார் சமாளிச்சிக்கிட்டிருக்கோம்….
– ஆணைகளை வழங்க வந்து போன அதிகாரி குறைபட்டுக் கொண்ட ஆதங்கம் இது.
திரும்பி
வந்த தபாலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் கனகமணி. என்ன செய்யலாம்
என்கிற யோசனை அவர் மனதில் தீவிரமாக ஓடிக் கொண்டிருந்தது.
அவிநாசி
வேலைக்கு வரவில்லை. விடுப்பு நீட்டித்து விண்ணப்பமும் வரவில்லை. கதவு பூட்டப்பட்டிருக்கிறது
என்று எழுதி தபால் திரும்பி வந்திருக்கிறது. ஆளை எங்கே போய்த் தேடுவது? ஒரு வேளை தபால்
இன்று அலுவலகத்திற்குத் திரும்பக் கிடைத்து விடும் என்று தெரிந்து…ஒரு நாள் விட்டுத்
தாமதமாக அலுவலகம் செல்வோம் என்றிருப்பாரோ? நீட்டித்த ஒரு நாளைக்கு ஆபீஸ் போய் விடுப்பு
எழுதிக் கொடுத்துக் கொள்வோம் என்று முடிவு
செய்து கள்ள மௌனம் சாதிக்கிறாரோ? ஏற்கனவே அடிக்கடி காரணமில்லாமல் பொய்க் காரணங்கள்
சொல்லிச் சொல்லி விடுப்பு எடுக்கும் ஆசாமி. தாத்தா இறந்துட்டார்…பெரியப்பா போயிட்டார்….(எத்தனை
முறை இறந்தார்களோ!) என்று. வேறு ஏதேனும் வியாபாரம்
செய்கிறாரோ என்றெல்லாம் கூடச் சந்தேகம் வந்தது இவருக்கு. வெளியூர் ஆசாமி. தினமும் வந்து
செல்பவர். இதையெல்லாம் போய் உளவறிந்து கொண்டிருக்க முடியுமா? அதுவா வேலை? அவராய்ச்
சொன்னால் கேட்டுக் கொள்ளலாம்.
எதற்கு
இத்தனை யோசனை? இப்போது இந்த உத்தரவை யாருக்காவது கொடுத்தாக வேண்டும். அதற்கு பெயர்
மாற்றி எழுதி வாங்க வேண்டும். அதற்கு ஒரு பணியாளைப் பிடிக்க வேண்டும். யோசித்து யோசித்து
மண்டைதான் குழம்பியது கனகமணிக்கு.
திடீரென்று
ஏதோ தோன்ற அவநாசிக்கான தேர்தல் பணி ஆணையினைத் திரும்பவும் எடுத்துப் புரட்டினார். அவருக்கும் தான் செல்லும் பள்ளியில்தான் முதல் தேர்தல் வகுப்பு என்பது தெரிந்தது. சரி என்று மனதில் ஒரு முடிவுக்கு வந்தார். மணியைப்
பார்த்தார். பன்னிரெண்டு. கொண்டு வந்த டிபனை விலுக் விலுக்கென்று முழுங்கினார். அரை
பாட்டில் தண்ணீரை உள்ளே செலுத்தினார். அலுவலரின் அறைக்குள் நுழைந்தார்.
ஆச்சு…நீங்களும்
கிளம்பிட்டீங்களா? என்றார் அதிகாரி.
ஆமா
சார்…இப்போ போய் பஸ் பிடிச்சாத்தான் டயத்துக்கு வகுப்புக்குப் போய்ச் சேர முடியும்….அந்தப்
பகுதிக்கு அடிக்கடி பஸ் வேறே வராது. மேலூர் போற பஸ்ல த்ரூ டிக்கெட்தான் போடுவான்…இடைல
நிக்க மாட்டான்…அந்த ஊர் வண்டி அடிக்கடி வராது.
காத்திருந்துதான் ஏறணும்….
சரி…சரி…கிளம்புங்க…கேஷ்
செஸ்ட்லாம் பூட்டிட்டீங்கல்ல…ஞாபகமா ஒரு தரம் இழுத்துப் பார்த்துட்டுப் போங்க…அப்போ
இன்னைக்கு நாந்தான் இந்த ஆபீசுக்குக் காவல்…அப்படித்தானே…?
பதில்
சொல்லாமல் பார்த்துக் கொண்டு நின்றார் கனகமணி.
பியூன்
ரெண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தராவது இருக்காங்களா? என்றார். இல்ல சார்…அவுங்களுக்கும்தான்
டியூட்டி….
அவுங்களுக்குமா?
என்னாது…மை வைக்கிற வேலயா…?
ஆமா…சார்….பேரு
படிச்சிக் கூட கையெழுத்து வாங்குவாங்க…நம்மள விட நல்லாவே செய்வாங்க…அதெல்லாம் டிரெயினிங்
கொடுத்திடுவாங்கல்ல சார்….நாலு வகுப்பு எதுக்கு வைக்கிறாங்க…?
ஓ.கே….வாட்ச்மேன்
சரவணனை இங்க வந்து இருக்கச் சொல்லுங்க…பெல் அடிச்சா வர்றதுக்கு ஒரு ஆள் வேணும் எனக்கு…ஒரு
டீ சாப்பிடணும்னாக் கூட ஆள் இல்லேன்னா எப்டி?
வாசல்ல
பிள்ளையார் கோயில்ல படுத்திருப்பான் சார்…சொல்லிட்டுப் போறேன்….! – சொல்லிக்கொண்டே
வெளியேறினார் கனகமணி.
அரசமரப்
பிள்ளையார் கோயில். வெக்கயே தெரியாது. குளு குளுன்னு இருக்கும்….தூங்குறதுக்குக் கேட்கணுமா?
ஆளப் பத்தி விடுங்க…என்றார்.
அவிநாசிக்கு
ஒதுக்கப்பட்ட தேர்தல் பணித் தபாலிலேயே அவரின் முழுக் கவனமும் குவிந்திருந்தது. எப்படியாவது
தேர்தல் வகுப்பின்போது வந்திருக்கும் அதிகாரியிடம் விபரத்தைச் சொல்லி அந்தக் கூட்டத்தில்
வேறு யாருக்கேனும் அவர்களது அலுவலகத்தில் விருப்பமுள்ளவர்களுக்கு அந்தப் பணியை வழங்கச்
செய்ய வேண்டும். அங்கேயே அவநாசியின் பெயரை அடித்துவிட்டு புதிய பணியாளரின் பெயரை எழுதச்
செய்து வழங்கியாக வேண்டும் என்று உறுதி செய்து கொண்டார். அதுபோல் முன்னம் நடந்தது அவர்
மனதில் நிலைத்திருந்தது. அத்தோடு கலெக்டர்
அலுவலகம் சென்று அவிநாசியின் பணி வேறொருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டது என்கிற
விபரத்தைச் சொல்லி மேற்கொண்டு அவருக்கு ஏதும் ஒழுங்கு முறை நடவடிக்கை வராமல் தடுக்கச்
செய்ய வேண்டும். அதுவும் அவர் விருப்பமாய் இருந்தது.
அதற்கு
முதல் வேலையாக அவிநாசியை இன்னும் ஓரிரு நாட்கள் சேர்த்து விடுப்புக் கேட்டு மருத்துவச்
சான்றிதழ் வாங்கி வரச் செய்ய வேண்டும்.
வேறென்ன
செய்வது? தன் அலுவலகப் பணியாளரைத் தானே விட்டுக்
கொடுக்க முடியுமா? சமய சந்தர்ப்பங்களில் சேர்த்து அணைத்துத்தானே கொண்டு போயாக வேண்டும்?
அலுவலகத் தலைமைக்கு வேலை வாங்குவது மட்டும்தானா வேலை? அவர்களின் நலன்களில் அக்கறை கொள்வதும்தானே?
முடிவு
செய்து கொண்டு பஸ்ஸில் ஏறினார் கனகமணி. அவிநாசியின் தேர்தல் பணி ஆணையை இன்னொருவருக்கு
எப்படியாவது ஒதுக்கீடு செய்து விட்டால்தான் தனக்கு நிம்மதி என்கிற தீவிர சிந்தனையே
அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.
சார்….வந்திட்டீங்களா….? உங்கள எதிர்பார்த்திட்டுத்தான்
காத்துக் கிடக்கேன்….-சொல்லிக் கொண்டே எதிரே தோன்றிய அவிநாசியைக் கண்டதும் பிரமித்துப் போனார் கனகமணி.
என்னங்க இது…திடீர்னு கடவுள்
மாதிரித் தோன்றி நிற்கிறீங்க…உடம்பு சௌகரியமாயிடுச்சா…? – என்று தனது சங்கடங்களை வெளிக்காட்டிக்
கொள்ளாமல் கேட்டார் கனகமணி.
ஆயிடுச்சு சார்…இன்னைக்கு
டேரக்டா நீங்க க்ளாசுக்கு வருவீங்கன்னு செல்லச்சாமிதான்
எல்லா விபரமும் சொன்னாரு….அவரும் திருமங்கலம்தான சார்…என் தபால் கொண்டு வந்திருக்கீங்கல்ல
சார்….?
பின்னே? உங்களுக்கு அனுப்பிச்சதுதான் திரும்பிடுச்சே…? யாருக்காவது சர்வ் பண்ணி ஆகணுமே…அதுக்காகத்தான்
எடுத்திட்டு வந்திருக்கேன்…இல்லன்னா எம்பொழப்பு நாறிப் போகுமேங்க…கலெக்டருக்கு யாரு
பதில் சொல்றது? அது ரெண்டாவது….கலெக்டர் நம்ம பாஸைக் கேள்வி கேட்பாங்களே….? அதுக்கு
எடம் வைக்கலாமா? நம்ம ஆபீசுக்குத்தானே கெட்ட பேரு…? ஏங்க வர்றேன்…வரல்ல…விடுப்பு நீடிக்கிறேன்…ன்னு
ஏதாச்சும் ஒரு தகவலை அனுப்ப மாட்டீங்களா? இப்ப மட்டும் செல்லச்சாமி சொன்னார்ங்கிறீங்க…?
மத்த நேரத்துல ஆள் கண்ணுல படலையாக்கும்?
ஸாரி சார்…மன்னிச்சிடுங்க….உங்க
ரிஜிஸ்டர் தபால் வந்தன்னிக்கு மொத நாள் எங்க அப்புத்தா இறந்து போயிடுச்சி…அதுக்கு ஊருக்குப்
போயிருந்தோம் எல்லாரும்…அதான் தபால் திரும்பியிருக்கு…எனக்குத் தேர்தல் வேலன்னா ரொம்பப்
பிடிக்குமே சார்…விடுவனா….அதான் நேரா இங்க வந்திட்டேன். ஒரு எலெக் ஷன் ட்யூட்டி கூட
மிஸ் பண்ணினதில்ல சார் நான்…! கலெக்டர் ஆபீசுக்கு
போய் எனக்குக் கொடுங்கன்னு கேட்டு வாங்கியிருக்கேன்…! என் ராங்குக்கு பிரிசைடிங் ஆபீசர்-1
தர மாட்டாங்க…தந்தாங்கன்னா அதையும் சக்ஸஸ்ஃபுல்லா செய்து முடிச்சிடுவேன். நான் ஆபீஸ்
வர….நீங்க இங்க கிளம்பி வந்திருக்க…சந்திக்க முடியாமப் போச்சின்னா….சிக்கலாயிடுமே சார்…அதான்
த்ரூ வண்டில அட்வான்சாக் கிளம்பி வந்திட்டன்….எங்கூர்லர்ந்து டேரக்ட் வண்டி மேலூருக்கு
இருக்குல்ல சார்…அதப் பிடிச்சேன்….
அப்புத்தா இறந்ததாகச் சொல்கிறார்.
உண்மையோ பொய்யோ…நமக்கென்ன…ஆள் வந்தாச்சு. அந்தவரைக்கும் நிம்மதி.
அது சரிங்க…எதுக்கும் ஒரு ஃபோன் அடிக்க மாட்டீங்களா? இப்டியா கிணத்துல
போட்ட கல்லு மாதிரிக் கிடக்கிறது? நாங்க என்னன்னு நினைக்கிறது? இந்தத் தபால வச்சிட்டு
அல்லாடிட்டேன் தெரியுமா? எலெக் ஷன் டியூட்டிங்கிறது எவ்வளவு சீரியஸ் தெரியுமா? யாருமே
ரிஜெக்ட் பண்ண முடியாதாக்கும். டிஸிப்ளினரி ஆக் ஷன் எடுத்திருவாங்க…அனுபவப்பட்ட ஆள்
நீங்களே இப்டி செய்தா என்ன அர்த்தம்?
வெரி வெரி ஸாரி ஸார்…தப்பா
நினைக்காதீங்க…அப்புத்தா கடைசிக் காரியத்துக்குப் பணத்துக்கு அலைஞ்சிட்டிருந்தேன்…எங்கப்பாவால
எதுவும் ஆகாது…நாந்தான் எல்லாம் பார்த்து செய்யணும்…அதுனால அதெத் தவிர வேறே எந்தச்
சிந்தனையும் என் மனசுல இல்ல….மன்னிச்சிடுங்க….! டெத் வந்து முடக்கிடுச்சு…
சரி…விடுங்க…வந்திட்டீங்கல்ல…அது
போதும்…! ஒருவகைக்கு நல்லதாப் போச்சு நீங்க நேரடியா இங்க வந்தது. இன்னைக்கு உங்களுக்கும்
தேர்தல் வகுப்பு இங்கதான்….பாருங்க இந்த ஆர்டரை….-என்றவாறே அந்த ஆணையை நீட்டினார் கனகமணி.
ஆவலோடு வாங்கிக் கொண்டார்
அவிநாசி.
வாங்க…முதல்ல எலெக் ஷன் ஆபீசரப் பார்ப்போம்…உங்க ஆர்டரும் சர்வுடு…ஆளும்
வந்தாச்சுங்கிறதைப் பதிவு பண்ணுவோம்…
சந்தோஷமாக இருவரும் உள்ளே
நுழைந்தனர்.
மலை போலே வரும் சோதனை யாவும்
பனிபோல் நீங்கி விடும்…-பழைய பாடலின் வரிகள் சட்டென்று கனகமணியின் மனதில் ஒலிக்க யப்பா…பெரிய
இக்கட்டுலர்ந்து தப்பிச்சன்…..நரி முகத்துல முழிச்சேன் போல்ருக்கு இன்னைக்கு …சங்கடம்
நீங்கிருச்சு….-சிரித்தவாறே அவிநாசியைப் பார்த்துக் கூறிக்கொண்டேஉற்சாகமாக நடந்தார் கனகமணி.
அப்டியெல்லாம் உங்கள இக்கட்டுல
விட்ருவனா சார்…அதான் கன் மாதிரி டயத்துக்கு வந்திட்டன்ல…என்ற அவிநாசி, மானேஜரின் மீதான
மரியாதையில் ஒரு நிமிடம் நின்று அவர் கைகளை எடுத்துக் கண்களில் ஒற்றிக் கொண்டார்.
---------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக