06 மார்ச் 2025

 

சிறுகதை                     உயிர் எழுத்து மார்ச் 2025 இதழ் பிரசுரம்

“போட்டானே ஒரு போடு…!”






               ன்னாச்சு, இன்னிக்குப் பேச்சையே காணலை….- அமைதியாக நடந்து கொண்டிருந்த ராகவானந்தனை உசுப்பி விட்டார் திருமேனி. அப்பொழுதும் மீளாமல் நடையை எட்டிப் போட்டார் ராகவம். மனதில் ஓடும் எண்ணங்களுக்கேற்ப அவரது முக பாவனைகள் சட்டுச் சட்டென்று மாறிக் கொண்டிருந்தன.

பாதையையும் கொஞ்சம் பார்க்க வேண்டுமே…தடுக்கிக்கொண்டால்? என்று இடை இடையே நடைபாதையிலும் கண் வைத்து கால்களை நகர்த்தினார் திருமேனி.

எதுவானா என்ன? விடுங்க…மனசுல போட்டு உழப்பிக்காதீங்க…என்று பொதுவாகச் சொன்னார்.

அப்டியில்லீங்க…செய்யுறது அத்தனையும் நானு…ஆனா பேச்சைப் பார்த்தீங்களா? – நன்றி கெட்ட பயலுங்க…..என்றார் ஆக்ரோஷத்துடன்.

அடிக்கடி, எனக்குத் தனியா இருக்கிறதுதான் பிடிக்கும்…பிடிக்கும் என்று அவர் சொல்வதின் அர்த்தம் இப்போதுதான்  கொஞ்சமாக விளங்கியது திருமேனிக்கு.  விட்டு விலகி, விட்டு விலகி…என்பதைத் தாரக மந்திரம் போல் சொல்வார்.

என்ன சொல்லிப்புட்டான் அப்டி? உங்க பையன்தானே….சொன்னா சொல்லிட்டுப் போறான்…விட்டுத் தள்ளுங்க…-இதெல்லாம் மேலே போட்டுக்க ஆரம்பிச்சீங்கன்னா அப்புறம் உங்க உடம்பைத்தான் பாதிக்கும். அப்புறம் அதுக்கு இதுக்குன்னு டெஸ்ட் எடுக்கப் போக வேண்டிதான்….எதுவானாலும் சட்டுன்னு ஒதுக்கித் தள்ளிட்டு ஃப்ரீயா இருக்கப் பாருங்க…வயசாயிடுச்சில்ல…

எப்டித் திருமேனி…? அத்தனை எளிசாத் தூக்கி எறிஞ்சிட முடியுமா? மனுஷனுக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குல்ல…அதுல போய் எல்லாமும் பதிவாகிடுதுல்ல…மூளை அப்பப்போ அதை ஞாபகப்படுத்திட்டிருக்குதானே..நல்லது மட்டுமே பதிவாகியிருந்தா அது ஞாபகத்துக்கு வந்து நம்மை உற்சாகப்படுத்தும். வெறும் அவலமால்ல வந்து நெனப்புல நிக்குது….நன்றி கெட்ட பசங்க…..! நான் ரொம்ப சென்சிடிவானா ஆளுய்யா…தெரியாதா உமக்கு?

தெரியும்தான். ஆனாலும் …? குறைச்சிக்கத்தான் வேணும்.

பேச்சு முடியும்போது அந்த “நன்றி கெட்ட…“என்ற சொற் பிரயோகம் அவரே விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வந்து விழும்போலிருந்தது.

காற்று விர்…விர்…ரென்று அடித்தது. ராகவானந்தத்தின் எண்ணங்களை மேலும் உசுப்பி விடுவது போலிருந்தது அந்த வீச்சு. ச்சே…! நடப்போம்னு வந்தா என்ன உபத்திரவம் பாருங்க…என்றவாறே டீ சர்ட்டின் மேல் முதல் பட்டனை இழுத்துப் போட்டுக் கொண்டார்.

இயற்கை மனிதனின் செயல்பாடுகளுக்கு  அவ்வப்போது முக்கிய காரணமாக அமைகிறது.  தவிர்க்க முடிவதில்லை.

என்னாச்சு…? உங்க பையன் ஏதாச்சும் எதிர்த்துப் பேசிட்டானா? அதுக்குத்தான் வருத்தப்பட்டுட்டு இப்படி அமைதியா வர்றீங்களா? உங்களப் பார்த்தா நிச்சலனமா வர்ற ஆள் மாதிரித் தெரிலயே? உள்ளுக்குள்ள தள தளன்னு கொதிச்சிக்கிட்டு்ல்ல இருக்கீங்க? இப்டிக் கண்டதையும் போட்டுக் குழப்பிக்கிட்டீங்கன்னா பிரஷர் ஏன் ஏறாது? ஷூகரும் எப்படிக் கன்ட்ரோல் ஆகும் ? எகிறத்தான் செய்யும்?

ஏறினா ஏறிட்டுப் போவுது…அப்டியாவது சட்டுன்னு போய்ச் சேருவோம்… கதை முடிஞ்சிதுன்னு இருக்கும் ….! எவனுக்கு இருக்கணும்னு ஆசை இருக்கு? – அலுத்துக் கொண்டார்.

அருகில் வந்து முதுகில் கை வைத்துத் தட்டிக்கொடுத்தார் திருமேனி. அந்த நெருக்கம் அவர்களிடம் பல வருஷங்களாக உண்டு. முதல் அப்பாய்ன்ட்மென்ட் ஆகி திருச்சியில் ஒர்க் ஷாப்பில் வந்து ஜாய்ன் பண்ணிய போதிலிருந்து தொடர்கிறது. இறுதி ஸ்டேஷனாக இருவருக்கும் அந்த நகரமே வாய்த்தது. சுப்ரமணியபுரத்தில் ராகவானந்தம் ஒரு பிளாட் வாங்கி வீடு கட்டினார். அருகிலேயே திருமேனியும் வந்து விட்டார்.

என்னையே குறி வச்சு வந்திர்றயேய்யா…? ரெண்டு பேரும் போன ஜென்மத்துல சேர்ந்து பிறந்திருப்பமோ? என்பார் ராகவம்.

இப்ப மட்டும் என்ன.?  இப்பயும் ரெண்டு பேரும் ஒண்ணுதான் என்று கட்டிக் கொள்வார் திருமேனி. வீடுதான் தனி. மனசெல்லாம் ஒண்ணுதான். வாழ்க்கையும் ஒண்ணாத்தானே கெடக்கு? உனக்கும் ஒரு பையன்…எனக்கும் ஒருத்தன். உனக்கும் ஒரு பொண்டாட்டி…எனக்கும் ஒரே பொண்டாட்டி…நாம கொடுத்து வச்சது அவ்வளவுதான்…! ஆனா போதுமே…!

அட ஏண்டா…ஒண்ணக் கட்டிக்கிட்டே பெரும்பாடா இருக்கு? கடவுள் கிருபையால நல்லபடியா அமைஞ்சிதோ, நிம்மதியா இருக்கமோ? இல்லன்னா…என்னா பாடாப் போயிருக்கும்…? -சிரித்துக் கொள்வார்கள்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்ப்பா. நம்ம முன்னோர்கள்,பெற்றோர்கள் ஆசீர்வாதம்…அதான் நம்மளக் கட்டி ஆள நல்ல பெண்களாக் கிடைச்சிருக்காங்க…!

ராகவானந்தனின் முதல் நண்பர் திருமேனி. தனக்கு மனதிற்குகந்த நட்பு அவர்தான் என்று அந்த முதல் பார்வையிலேயே திருமேனியை உணர்ந்து கொண்டார் ராகவம்.

பொன்மலைப்பட்டி வளைவு நுனியில் இருந்தது அவர்கள் பணியாற்றிய பணிமனை.  வெறும் தகரக் கொட்டகை. அட…ஆபீசாவது காரைக் கட்டிடத்தில் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கொட்டகையின் ஒரு ஓரமாய்த் தடுப்பு எடுக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தது. வெந்து தணிந்தது காடு…வெப்பக் காற்று ஊ…ஊ…வென்று காதில் வந்து அறையும். ஊருக்கு ஒதுக்குப் புறம். உஷ்ணக் காற்றை ஒதுக்கி, கடமையாற்றுவது துரதிருஷ்டம்.

அநியாயச் சத்தம். காது கிழியும் இயந்திர ஒலிக்கு நடுவேதான் ஆபீஸ் வேலை செய்தாக வேண்டும். தலைக்கு மேலே ஓடும் காற்றாடி சூடான காற்றைத்தான் இறக்கும். நிரம்பியிருக்கும் ஆபீசில் அனைவரும் வேர்வையில் வியர்த்து வழிவர்.

 புஸ்ஸென்று பூதமாய் அமர்ந்து குட்டிப் பூதத்தை முன்னே அமர்த்தியிருப்பதுபோல் தட்டச்சுப் பொறியின் எதிரே அந்தக் காமாட்சி தட்டச்சர் இருந்து வேலை செய்யும் காட்சி…பார்ப்போரின் மனதைப் பதறடிக்கும்.  அவ்வப்போது புடவைத் தலைப்பை எடுத்து உஸ்ஸூ…உஸ்ஸூ என்று அந்தம்மா வீசிக்கொள்ளும் காட்சியும் இழுத்து இழுத்து மூச்சு வாங்கும் அவஸ்தையும்…சிரிக்கிறதா அழுகிறதா என்றே தெரியாது. பரிதாபம் தொனிக்கும்.

மாரீசன்னு ஒரு மானேஜர்.  எவன் ஸ்பெஷலாப் பேரு வச்சான் இந்தாளுக்கு. …இதமா ஒரு நாளைக்கு சிரிச்சிப் பேசியிருக்காரா? சரியான சிடுமூஞ்சி…-இப்படித்தான் திட்டுவார்கள் அவரை. ஆனால் அவர் அதிகமாய்த் திட்ட மாட்டார்.

பொம்பளைங்களை ரொம்ப அதிகமாச் சொல்ல முடியறதில்லை. எதுவும் கோபப்பட்டோம்னா லீவப் போட்டுட்டுப் போயிடுதுங்க…அப்புறம் இதுக்கும் சங்கடம் வந்திடும். முதலுக்கே மோசமாயிடும். போஸ்ட் காலியாக் கிடக்கும். எம்ப்ளாய்மென்ட்லர்ந்தும் எடுக்க மாட்டானுங்க…எங்கிருந்தானும் மாத்தியும் ஆள அனுப்ப மாட்டாங்க. எல்லாரும் நம்ப ராகவானந்தம் போலவா இருப்பாங்க…? இன்ன வேலைன்னு பார்க்காத ஒரே ஆளு இந்த ஆபீஸ்ல அவர் மட்டும்தான். ஆல் இன் ஆல். ஏதாச்சும் கௌரவம் பார்க்கிறாரா? ரெக்கார்டுல போய் குப்பையக் கூட்டணும்னாக்கூட அவரு தயங்கறதில்ல…தூசி மூக்குல ஏறி தும்மிக்கிட்டு அவஸ்தைப்படுறாரு…! அப்டியும் வேலையை நிப்பாட்டுறாரா? அப்டில்லய்யா ஆளுக இருக்கணும்…நாமெல்லாம் இங்க இருக்கம்னா ஒரே குடும்பம் போல…அத உணர வேண்டாமா? ஏதோ வந்தோம் போனோம்னு இருந்தா? ச்சே…நான் போகுற ஆபீஸ்லல்லாம் இப்டி ஏதாச்சும் ஒண்ணு ரெண்டு வந்து மாட்டிக்கிது….வண்டியத் தள்றது படு கஷ்டம் இதுகளெல்லாம் வச்சிக்கிட்டு…!

அந்த இளம் பிராயத்திலிருந்தே ராகவானந்தத்தைத் தெரியும் திருமேனிக்கு. அவர்கள் இருவரும்தான் ஒரே இடத்தில் அறையெடுத்துத் தங்கியிருந்தார்கள்.  .  கன்டோன்மென்டுக்கு எதிரே இருந்தது அவர்களின் தங்குமிடம். உள்ளூரிலேயே அலுவலகம் அலுவலகமாய் மாறினார்கள்.

இதுங்க ரெண்டுக்கும் வெளியூரே கிடையாதா? உள்ளூர் கழுதைங்க மாதிரி இங்ஙனவே சுத்துதுங்களே? என்று பொறாமைப் படுவார்கள். மானேஜர் பிரமோஷன் ஆகி, ஆளுக்கொரு ஆபீஸ் என்று அமர்ந்து கொடிகட்டிப் பறந்தார்கள். சில பேருக்கு அப்படி அமைந்து போனால் அது அவர்களின் அதிர்ஷ்டம்தான். பக்கத்து ஊர் கிளை ஆபீஸ்களுக்குக் கூட மாறுதல் என்று போனதில்லை. அதற்காக ஓய்வு பெறும் வரையா அப்படியே தொடரும்? தொடர்ந்ததே!

புதுப் புது அரசுத் திட்டங்கள் வந்து கொண்டேயிருந்தன. அதற்கு கட்டிக் காக்க அனுபவம் வாய்ந்த பெருமான்கள் வேண்டும் என்று முனைந்த போது அகப்பட்டவர்கள் ராகவானந்தமும், திருமேனியும்தான். டிபார்ட்மென்ட் ஜெம்ஸ். எல்லாம் முடித்து ரிடையர்டும் ஆயாச்சு. இப்போது அங்கே போய் நின்றால் எவன் மதிப்பான்?  திரும்பிக் கூடப் பார்த்ததில்லை இருவரும். என்னவோ ஒரு வெறுப்பு. இனி நமக்கிங்கு வேலையில்லை என்று தோன்றிய கணம் அந்த விலகல் வந்து விட்டது மனதில். முன்பு வேலை பார்த்த இடம் என்று எவரிடமும்  வாய் திறந்ததில்லை.

ரி, திரும்புவோம்…இப்டியே இன்னும் கொஞ்சம் போனோம்னா புதுக்கோட்டையே வந்திடும்….என்று சட்டென்று நின்றார் திருமேனி. இருவரும் காலை அந்த விமான நிலையச் சாலையில் ஓரமாய் ஒதுங்கி ஒதுங்கி நடைப் பயிற்சி செல்வது வழக்கம். அது புதுக்கோட்டை செல்லும் நீள் சாலை. குறைந்தது திருச்சி விமான நிலையம் வரையிலாவது நடக்காமல் திரும்புவதில்லை. அதற்கு மேலும் மூணு நாலு கி.மீ.கள் போனவர்கள்தான். இப்போதெல்லாம் முடிவதில்லை. வாழ்க்கையின் தூரம் தானே குறைந்து போனது.

திரும்பி நடந்து மறுபடியும் பொன்மலைப்பட்டி திருப்பம் வந்ததும் இருவரும் நின்றார்கள். எதிர் பணிமனைக் கொட்டகையில் வாட்ச்மேன் தென்படுகிறானா என்று பார்த்தார் ராகவானந்தம். அந்தச் சரவணன்தான் இருக்கிறானா அல்லது வேறு ஆளா என்று அறிவதில் ஒரு திருப்தி.

அவனுக்குக் குட்டு வைத்தது அவர்தானே? திருட்டு புத்தி.

மனதில் வைத்துக் கொண்டு பிறகு தன்னைப் பழி வாங்க அவன் என்னென்னமோ செய்து விட்டான். எழுதுபொருள் துறைக்கு மீள அனுப்ப என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைய உபயோகப்படாத தட்டச்சு மெஷினைத் தூக்கி பணிமனைக் கோடவுனுக்குள் மறைத்து வைத்து விட்டு அலற விட்டானே? இவன்தான் செய்திருப்பான் என்று நிச்சயமாகத் தெரியும் ராகவானந்தத்திற்கு.  எப்படி மெய்ப்பிப்பது என்றுதான் புரியவில்லை. ஆயுத பூஜை அன்றுதான் அது சாத்தியமாகியது. ஓல்டு ஸ்டாக் எல்லாம் சரி பார்க்கப்பட்டு வெரிஃபிகேஷன் பண்ணிய போது ஒளிந்து கொண்டிருந்த டைப் மெஷின் வெளியே வந்தது.

அதுவா நடந்து வந்திருக்குமோ இங்கே? என்றார் ராகவானந்தம். கல்லுளிமங்கனாய் நின்றான் சரவணன். அவன் முகம் போன போக்கைப் பலரும் கண்டனர்.  இன்னியோட ஆறு மாசம் ஆகுது…இது காணாமப் போயி…இந்த ஸ்டோர் ரூமுக்குள்ள இவன யாரு விட்டா? வாட்ச்மேனுக்கு அங்கென்ன வேலை? என்று வெளிப்படையாகவே கேட்டார் ராகவானந்தம். தவறைச் செய்தது அவன்தான் என்கிற முடிவிலேயே பேசினார். அப்போதும் அவன் வாயைத் திறக்கவில்லை. அவனுக்காக வேறு எவரும் பேசவுமில்லை. பயந்தார்கள். நமக்கு ஏதும் செய்து விடுவானோ? என்று. துறையின் திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிவடைந்தபோது நிறையப் பணியிடங்கள் முடிந்து போயின. அந்த நேரம் பார்த்து அம்பது மைல் தள்ளியிருந்த பண்ணைக்குத் தூக்கிப் போட ஏற்பாடு செய்தார். வாரத்தில் ஒரு நாள்தான் ஊர் வர முடியும். குடும்பத்தையே அங்கு மாற்றிக்கொண்டாலும், இவன் பண்ணைக் காவலில்தான் இருந்தாக வேண்டும்.

சரவணன் அலுவலரின் காலில் விழுந்து மன்றாடினான்.

வாட்ச்மேனாய் இருக்கிறவன்தான்யா திருட்டுப் புத்தி இல்லாம இருக்கணும்…நீ அப்படியில்லையே? எதுவானாலும் உன்னை இனிமே இங்க வைக்கிறதா இல்லை…ஸ்டோர்ல பேரிங்கு, போல்ட் நட்டு,  வெளில கண்டெம்டாக் கிடக்கிற இரும்பு ஐட்டங்கள்னு அடிக்கடி காணாமப் போகுது…உன்னை நம்புறாப்ல இல்லை. நிறையப் புகார் இருக்கு உம்மேல…-என்று சொல்லி ஆளைத் தள்ளியே விட்டார்கள். அதோடு போனவன்தான். இப்போது எங்கிருக்கிறான் என்பதே தெரியாது ராகவானந்தத்திற்கு.

எல்லாமும் பார்த்தாயிற்று. எத்தனையோ விதமான அனுபவங்கள். எத்தனையோ வகையான மனிதர்கள். எல்லாக் காலத்திலும் உற்ற நண்பனாய் இருந்தது திருமேனிதான்.

வ்வளவோ சகித்தாயிற்று. ஆனால் இன்று பெற்ற மகன் சொல்லும் வார்த்தைகளைச் சிறிதும் சகிக்க முடியவில்லையே? பார்த்துப் பார்த்துச் செலவு செய்து, மாதத்தின் முதல் செலவு சேமிப்பு என்று கட்டன் ரைட்டாகக் கடைப்பிடித்து….குருவி சேர்ப்பதுபோல் பணத்தைச் சேர்த்து, தன் செலவுகளையெல்லாம் சுருக்கிச் சுருக்கி, இவ்வளவு தேவையில்லாதது என்று கருதியவற்றின் அளவைச் சுருக்கி, கண்ணும் கருத்துமாய் வங்கிக்கு அலைந்து அலைந்து….அத்தனை வருடங்களாய் செய்த ஃபினான்ஷியல்  மானேஜ்மென்ட்டிற்கே தனக்குத் தனிச் சம்பளம் தர வேண்டும். அவனவன் செய்து பார்த்தால்தானே கஷ்டம் புரியும்? சொல்லக் கேட்டால் அத்தனை உறைக்காது எவனுக்கும்…!

இப்போதும்தான் என்ன வாங்கும் ஓய்வூதியத்தில் ஏதாவது செலவு செய்கிறோமா என்ன? அதிகபட்சம் ஐயாயிரம் கூடச் செலவு செய்வதில்லை ஒரு மாதத்தில். இ.பி.பில் கட்டியாகிறது. காய்கறிகள் வாங்கியாகிறது. தண்ணீர்க் கேனிற்கு இவர்தான் பணம் கொடுக்கிறார். மருந்து மாத்திரைகளுக்கு செலவு செய்கிறார். லாரித் தண்ணீருக்குப் பணம் கொடுக்கிறார். அவ்வப்போது வரும் ஏ.சி., ரிப்பேர், பராமரிப்பு, எலெக்ட்ரிகல் ரிப்பேர்ஸ்…வேலைக்காரி சம்பளம்…என்று எது எதற்குத்தான் நான் தயங்கியிருக்கிறேன்? பர்சை விரித்து விரித்துக் காண்பிக்கிறான் எங்கிட்டப் பணமில்லை என்று! எடுத்து வைத்தால்தானே இருக்கும்? அப்பன் மட்டும் வச்சிருப்பான்னு எப்படித் தெரியும்?

நான் கொடுக்கிறேன்…நான் கொடுக்கிறேன்…என்று முந்திக்கொண்டு எடுத்து நீட்டி விடுவார். அவன் என்ன சம்பளம் வாங்குகிறான்,  மாதா மாதம் ஏதேனும் சேமிப்பு செய்கிறானா? பணத்தை வெறும் சேவிங்கு பாங்குக் கணக்கில் வெறுமே போட்டு வைத்திருக்கிறானா அல்லது ஃபிக்சட் டெபாசிட் போட்டிருக்கிறானா? எதுவும் கேட்டதில்லையே? பாவி…அநியாயமாத் திருடுறாங்கப்பா…சைபர் கிரைம்ங்கிறான்…ஒரு நாளைக்கு பத்து பொய் ஃபோன் வருது…எதையும் ஆன் பண்றதில்ல நான்…வேணும்ங்கிறவன், கூட ரெண்டுதரம் பேசட்டுமே…உறலோ…நான்தான் பேசறேன்னு முந்திட்டு சொல்லட்டுமே…!

அவ அம்மாவுக்கு தீபாவளிக்கு நாலு புடவை எடுத்தானென்றால் தனக்கு ஒரு டீ சர்ட் வாங்குகிறான். வேட்டி? என்றால் அதான் போன வருஷம் வாங்கினதையே நீ இன்னும் ஒப்பன் பண்ணலையே? அப்புறம் எதுக்குப்பா இன்னொன்ணு? இதென்ன அநியாயம். பாதிக்குப் பாதி கூடவா மனசில்லை? ஏண்டா…வயசானா வெறும் உடம்போடதான் குந்திக் கிடக்கணுமா? நாங்கள்லாம் புதுசு புதுசாப் போட்டா ஆகாதா? நீங்க மட்டும்தான் மினுக்கிட்டுத் திரியணுமா? வெறும் பயலே…!!

அப்பா எங்கம்மா போடுறார்?…வீட்டுலயே வெறும் உடம்போடதான உட்கார்ந்திருக்காரு…? பனியனே போதுமே?  வெளிலயே போறதில்லையே? அவர்ட்ட இருக்கிறதையே எத்தனையோ துணிகளை அவர் போட்டதில்லை. மேலும் மேலும் புதுசு புதுசா வாங்கி என்ன செய்ய? ஆனாலும் அதைச்சொல்ல இவன் யார்? கேட்டால்தான் கிடைக்குமெனில் வேண்டாம்..! – தன் சார்பாக, தான் சொல்ல வேண்டியதையெல்லாம் அவனே சொல்லிக் கொண்டு கட்ஷார்ட் பண்ணி விடுகிறான்.  இப்டித்தான் பணத்த சேமிப்பாங்ஞ போல்ருக்கு!

தனக்குச் செலவழிக்கத் தெரியாதா என்ன? மனசு வரவில்லையே? காசை சேர்த்து வைத்துத்தான் பழக்கமேயொழிய செலவு செய்து பழக்கமில்லையே? கை வந்தால்தானே? எளிமையாய் இருப்பதுபோல் ஒரு நிம்மதி உண்டா? இருக்கும் துணிகளை நாமே பிளேடு போட்டுக் கிழித்தால்தான் உண்டு புதுசு வாங்க. பைத்தியமா பிடித்திருக்கிறது கிழித்தெறிய? மூவாயிரம், நாலாயிரம் கொடுத்து வாங்கிய துணிகளை ஆறுமாசம் கூடப் போடுவதில்லை இந்தக் காலத்துப் பசங்கள். ஃபேடாயிடுச்சாம்? நாம ஃபேடாகலையா? இல்ல ஆகமாட்டமா? ஃப்ரெஷ்ஷாவே இளமைத் துடிப்போடயே காலம் பூராவும் இருப்பமா? கிழியாத சட்டையைக் கொஞ்சம் ஃபேடாயிடுச்சின்னு தெரிஞ்சால் போடக் கூடாதா? கௌரவம் குறைஞ்சு போகுமா? அயர்ன் பண்ணிப் போட்டால் அப்படி ஒன்றும் பழசானமாதிரித் தெரியலையே? இத எவன் சொல்லிப் புரிய வைக்கிறது? ஏன் இப்படித் தூக்கி எறிகிறார்கள்? அநியாயத்துக்கு ஒரு ரூபாய்க்கும் ரெண்டு ரூபாய்க்கும் பழைய துணி வாங்கும் ஆட்களிடம் தூக்கி வீசி விடுகிறார்கள்.. காசையே விட்டெறிவதுபோலிருக்கிறது இவர்கள் செய்யும் காரியம். காசைக் கரியாக்குவது என்று தீபாவளிப் பட்டாசுக்குத்தான் சொல்வார்கள். இவர்கள் அந்த விதியைப் பரவலாக்கி விட்டார்கள்.

எதுவுமே கண்ணில் படக்கூடாது என்று ஒதுங்கியேதான் கிடக்கிறார் ராகவானந்தம். சகிக்க முடியவில்லை அவரால். விரயம்…விரயம்…அநியாய விரயம்.. வயிறெரிகிறது இவருக்கு. ஒரு காலத்தில் ஒரு வேளைச் சோற்றுக்கே தாளம் போட்ட கதையெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது. கோயிலுக்கு ஓடிப்போய் உண்டக்கட்டி வாங்கி வந்தது, பஜனை மடம் போய் பூஜை எப்போது முடியும் என்று காத்திருந்து வரிசையில் இடித்துப் பிடித்து பொங்கல் பிரசாதம் வாங்கி வந்தது, நவராத்திரியின் போது வீடு வீடாய் வலியப் போய் சுண்டல் சேகரித்து வந்து அம்மாவிடம் கொடுத்தது, காமாலைக்கு மந்திரிக்கிறேன் என்று பாட்டி அந்த வீடுகளுக்கெல்லாம் போய் மந்திரித்து இறக்கி, பாதிப்பைத் தன் உடம்பில் வாங்கிக்கொண்டு, அவர்கள் கொடுக்கும் தோசை மாவு, அரிசி, பழம், வாழைக்காய் என்று கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்து, ஆதங்கம் தீர குழந்தேளுக்கு சமைச்சுப்  போடு.. கொடு என்று தவதாயப்பட்டு நின்றது…படி முக்கால் ரூபாயாமே என்று சந்தையில் ஓலைப் பாய் விரித்து வைத்து மலையாய்க் கொட்டிக் கிடக்கும் அரிசியில் ஒரு படி அரிசி வாங்க நாள் பூராவும் வரிசையில் காத்துக் கிடந்தது… என்று எல்லாமும் நினைவுக்கு வருகின்றன இவருக்கு.

 செல்லம் சவுன்டு சர்வீசில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் மாயாண்டித் தேவரிடம் போய் நூறு ரூபாய் வட்டிக்கு வாங்கி வா என்று அப்பா சொல்ல, அந்தாள் போய் டீ வாங்கி வா என்று விரட்ட, அழுதுகொண்டே போய் டீ வாங்கி வந்து நீட்ட…ஏண்டா அம்பி அழுகுற…இந்தா பணம் என்று வட்டிக் காசு பத்து ரூபாயை அப்போதே எடுத்துக்கொண்டு மீதி தொண்ணூறு கொடுத்ததை அப்பாவிடம் சென்று கொடுக்க, அந்தாள் டீ வாங்கிட்டு வரச் சொல்றாருப்பா என்று அப்பாவிடம் சொல்ல..நீ சின்னப் பையன்னு சொல்லியிருப்பார்..அதனாலென்ன அவர் உனக்குப் பெரியவரில்லையா…வாங்கிக் கொடுத்தா ஒண்ணும் குறைஞ்சு போயிட மாட்டே…சரியா…அந்தாள்னெல்லாம் மரியாதைக் குறைவாப் பேசக் கூடாது..சரியா…?  ஏதாச்சும் வேலை சொன்னா மாட்டேன்னெல்லாம் சொல்லிடப் படாது…தெரிஞ்சிதா? என்று அப்பா விளக்கியபோது மனம் ஒடுங்கிப் போனது….இன்னும் என்னவெல்லாம்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது? சாகும்வரை மறக்காது போலிருக்கிறதே? எதற்கு மறக்கணும்? அதுதானே இன்றுவரை தப்பு செய்யாமல், செய்து விட நினைக்காமல் கூடத் தடுத்து வைத்திருக்கிறது? அந்த நாளெல்லாம் அடியோடு மாறிப் போச்சே…! நல்லவங்களா இருந்த காலம் போயி…

வாங்க போவோம்…நேரமாகுதுல்ல…இப்டி ஒரேயடியா நின்னுட்டா எப்படி? வெயில் ஏறிடுச்சி பாருங்க… - அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தார் திருமேனி.

அப்டி என்னதான் சொன்னான் உங்க பையன்…அதை இன்னும் சொல்லலையே? மனசுல போட்டு இப்படிப் புழுங்கிட்டிருந்தீங்கன்னா? உடம்பப் பாதிக்குமாக்கும்…சொல்லித் தொலைங்க….!-சற்று வேகமாய்த்தான் கேட்டு வைத்தார் திருமேனி.

அதச் சொன்னா….ப்பூ…இதுக்குத்தானா…இம்புட்டு இறுக்கம்னு நீங்க சொன்னாலும் சொல்வீங்க…வேண்டாம்….! சிலது நாமளே அனுபவிச்சாத்தான் தெரியும் – மறுதலித்தார் ராகவானந்தம்.

வீட்டோட கிளம்பி உங்க ப்ரதர், சிஸ்டர்லாம் பார்த்திட்டு வந்தோம்னு சொன்னீங்களே……அப்போ நடந்ததா?

எப்படியாவது கிளறி வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்று முயன்றார் திருமேனி.

அதான்…சென்னைக்குப் போயிட்டு வந்ததுலேர்ந்தே மனசு சரியில்லாமப் போச்சு….சொந்தங்களைப் பார்த்து வந்தா சந்தோஷம் இருக்கும்னு சொல்வாங்க…மனசு இலகுவாகும்னு கேள்விப்பட்டிருக்கோம்…இங்க என்னடான்னா தலைகீழா ஆயிப் போச்சு….அதுக்குக் காரணம் நம்ம பயபிள்ளதான்….

அவுங்க முன்னாடி வச்சு ஏதும் எதிர்த்துப் பேசிட்டானா?

அப்படின்னாலும் பரவாயில்லையே…? என்னடா அப்பாவையே எதிர்த்துப் பேசுற?ன்னு அவங்களே கேட்டுட மாட்டாங்களா? பதில் சொல்ல முடியாமே என் முகத்தைப் பார்த்து அவுங்களே கள்ளச் சிரிப்புச் சிரிக்கிற அளவுக்கு ஆயிப் போச்சு….ஒருவகைல பார்த்தா இவன் பேசினதுல அவுங்களுக்கும் ஒரு திருப்தி இருந்திருக்கும்.. அதான் உண்மை….

இதெல்லாம் மனுஷ இயற்கைய்யா…விட்டுத் தள்ளு…இப்படி எத்தனையோ நம்மளோட அன்றாட வாழ்க்கைல நடக்கும்….எல்லாம் கடந்தும் போகும்…நாளாக ஆக அத்தனையும் மறந்தும் போகும். ஒவ்வொருவரா மறைஞ்ச பின்னாடி எதுவுமே மிஞ்சாது கடைசில…அதுதான் யதார்த்தம்…வீட்டுலயும் சரி, வெளிலயும் சரி…ஒருத்தரோட மனசைப் புண்படுத்தாதவங்க யாருதான்னு நினைக்கிறீங்க….? அடுத்தவனச் சங்கடப்படுத்தாதவன்தான் யாரு இந்த உலகத்துல?  ஒரு பயலுமில்லே…எல்லா மனுஷனும் சராசரிதான். எல்லாமும் பேசினவன்தான் நல்லதும் கெட்டதுமா…! …ஆயிரம் புஸ்தகத்தப் படிச்சிருப்பான்…ஆனா சட்டுன்னு கோபப்பட்டுடுவான்…வார்த்தையை விட்ருவான்…அந்தப் படிப்பு அவனுக்குத் தந்த பக்குவம் அவ்வளவாத்தான் இருக்கும். தான்தான் பெரியவன்னும், கரெக்டானவன்னும், அறிவாளின்னும்  நினைச்சிப்பான்.  படிப்பு வேறே…உலக அனுபவங்கிறது வேறே…அதனாலதான் ஆயிரம் புஸ்தகத்தப் படிச்சவன விட, ஆயிரம் நிலத்தை உழுதவன் பெரியவன், அனுபவஸ்தன்னு மூத்தவங்க சொல்லி வச்சாங்க…! அவனோட அனுபவம்தான் மதிக்கத்தக்கதுன்னு சொல்வாங்க…! உங்க பையனுக்கு சின்ன வயசுதானே…ஏதோ சொல்லிட்டான்…அவ்வளவுதான்…! ஒன்றைச் சொன்னா அது இப்படியெல்லாமும், அர்த்தப்படும், பாதிக்கும்ங்கிறது அறியாத இள வயசு. நாமதான் ஒதுக்கித் தள்ளணும்…..! அதான் பெரியவங்களான நம்மளோட பரி பக்குவம்…!

என் முன்னாடியும் எம் பொண்டாட்டி முன்னாடியும் கூடச் சொல்லியிருந்தாப் பரவால்லியே…ஒரு மூணாமத்தவங்க முன்னாடில்ல சொல்லிட்டான்…அதுதான வயித்தெறிச்சலா இருக்கு.. ச்சே…இவனுங்களுக்காக இத்தனை வருஷம் பாடாப் பட்டு நாய்ப்பிழைப்புப் பிழைச்சு என்னடா புண்ணியம்னுல்ல மனசு புழுங்குது..! வெறுத்துப் போச்சுய்யா…! ஒரு தேர்டு பெர்சன் முன்னாடி அப்படி வார்த்தையை விடலாமா? மகாத் தப்பில்ல…அது தெரிய வேண்டாம்? இவிங்க என்ன படிச்சு என்ன செய்ய?

உங்க தங்கச்சி ஃபேமிலி தேர்டு பெர்சனா? உற்றார், உறவினர், சுற்றத்தார்னு சொல்லியிருக்காங்க…சுற்றத்தார் முன்னாடிச் சொல்லியிருந்தா நீ இவ்வளவு வருத்தப்படுறது நியாயம்…! உங்க தங்கச்சி முன்னாடிதான…விடுங்க…விட்டு ஒதுக்குங்க…எல்லாத்தையும் மேல போட்டுக்காதீங்க…அனுபவமில்லாத சின்னப் பையன் அவன்…சொல்றது ஒரு பொருட்டா? …அத்தோட விடுங்க…பிடிச்சுத் தொங்கிட்டே இருக்காதீங்க…!

கூட்டுக் குடும்பமாவா இருக்கோம்? வருஷக் கணக்கா தனிச்சிப் போனவங்க, தொடர்பே இல்லாம இருக்கிறவங்க… தேர்டு பெர்சன் மாதிரிதானே? மனசு கேட்கமாட்டேங்குதேய்யா…! எப்டி விடுறது? எனக்கு எல்லாமே எங்கம்மாதான்ங்கிறான்யா அவன்…! என்னையும் வச்சிக்கிட்டு?  என் தங்கச்சி முன்னாடி, மாப்பிள்ளை முன்னாடி வச்சு என் முகத்தைத் திரும்பிப் பார்க்காமே, என்னா தைரியமாச் சொல்றான்ங்கிறே? நொறுங்கிப் போய்ட்டன்யா நானு…! – திருமேனி அதிர்ந்து போய்ப் பார்த்தார் அவரை.

இந்த ஒத்த வார்த்தைல, மொத்தக் குடும்பத்துல என் மதிப்பையே சுக்கு நூறாக்கிட்டான்யா அவன்? அதுதான் தாள மாட்டேங்குது….எனக்கு…!! வாய்க்கு ருசியாச் சமைச்சுப் போட்டதைத் தவிர வேறென்ன செய்தா அவ?  பெத்துப் போட்டவளுக்குத்தான், தூக்கிச் சுமந்தவளுக்குத்தான் முதல் மரியாதையா? இத்தனை வருஷமா  அத்தனையும் பார்த்துப் பார்த்து  அலையா அலைஞ்சு, ஓடி ஓடிச் செஞ்சவன் நானில்ல? ஒரு நொடில கசக்கி எறிஞ்சிட்டானேய்யா…? என்னா அநியாயம்ங்கிறே? ச்சே…! நன்றி கெட்ட உலகம்யா இது…! கேட்டம்னு வையி…அம்மாதானப்பா தூக்கிச் சுமந்து பெத்தாங்க…நீயா பெத்தன்னுகூடக் கேட்பானுங்க…! அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு தாயாரத்தான முதல்ல வச்சிருக்காங்க…! ரெண்டுமே தெய்வம்தான்ங்கிறது ரெண்டாம் பட்சம் போல்ருக்கு!!

ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்…அவனை வெல்ல வைத்து என்னைக் கொன்று விட்டதோ? அவனுக்கு வெல்லும் சொல் எனக்குக் கொல்லும் சொல்லாகிப் போனதா?

அப்படியா சொன்னான்?  என்றார் திருமேனி. இப்போதுதான் அவரே அதிர்ந்ததுபோல் இருந்தது.  ராகவானந்தத்தின் முகத்தையே ஆதங்கத்தோடு பார்த்து  கண் கொட்டாமல் நின்றார். இதுக்கு பதில் இருக்கா என்ன? என்று கேட்பது போலிருந்தது அந்தப் பார்வை.

நட்ட நடு ரோட்டில் அவர்கள் அப்படி ஸ்தம்பித்து நின்றிருந்தது ரொம்பவும் வித்தியாசமாய் இருந்தது அவ்வேளையில். சூரியனின் உஷ்ணம் தகித்தது. சாலையோர மரங்களின் கிளைகள் காற்றினை மறந்து அசையாது நின்றன. அவைகளுக்கும் உணர்ச்சி உண்டே..!

அங்கே அந்தக் கணம் முதல் அவர்களுக்கிடையே அமைதி விழுந்து பரவிப் படர்ந்திருந்தது.

அவர்கள் இருவராய் நடக்க ஆரம்பித்திருந்தார்கள்.

                            ------------------------------------

 

கருத்துகள் இல்லை:

பேசும் புதிய சக்தி - ஏப்ரல் 2025 இதழில்   “கடைநிலை“  நாவல் அறிமுகம்