01 நவம்பர் 2023

 

சிறுகதை                               'ர ண ம்“   (தமிழ்ப்பல்லவி இதழ்-அக். - டிசம்பர் 2023) 




      ன்று வீட்டை விட்டு அநாதைபோல் வெளியேறிய காட்சி கண் முன்னே அப்படியே நிற்கிறது. அதற்குப் பின் அம்மாவின் இறப்பிற்குக் காலடி வைத்ததுதான்.

      ஒரு நாள் இருந்திட்டுப் போகப்டாதா? அம்மா கேட்ட அந்தக் கடைசிக் கேள்வி. கடைசி ஆசை என்றும் சொல்லலாம்.

      எனக்கொண்ணும் இல்ல....அங்க சொல்லு....நா இருக்கிறதை அவன் விரும்பல....- அம்மாவைப் பார்த்து உட்கார்ந்திருந்தவன்...விரல்களால் சைகை செய்தான். அதை அவள் புரிந்து கொண்டாளா என்று தெரியவில்லை.

      கொண்டு தள்ளியாச்சு....அவ்வளவுதான்....பொறுப்பு விட்டுது....என்று கூட நினைத்திருக்கலாம். அல்லது பெரியவன்ட்ட இந்த நிலைமைல என்னால எப்படிச் சொல்ல முடியும்? எதுக்காக உடனே புறப்படுற? என்று மனதுக்குள் வேதனைப் பட்டிருக்கலாம். ஆனால் ஒன்று. அந்த நிலையிலும், தான் இருக்க வேண்டும் என்று அவள் மனம் விரும்பியிருக்கிறது. அது போதும். அது ஒன்றே சாட்சி...தான் அவளைத் திருப்தியாய்த்தான் வைத்துக் கொண்டிருந்தோம் என்பதற்கு. அதுதான் தனக்கு மட்டும் தெரிந்த ஒன்றாய்ப் போனதே...! எடுத்துச் சொல்லவே யாருமில்லையே...! சரியான கோணத்தில் புரிந்து கொள்ளப்படவில்லையே!. ஆனால் அம்மா மட்டும் புரிந்து கொண்டிருக்கிறாள்..! மூத்தவன் என்ன நினைக்கிறானோ அதுதான் சட்டம். அவன் என்ன பேசுகிறானோ அதுதான் உண்மை. மற்றதெல்லாம் பொய். மற்றவர்களும் பொய்.

      எப்படியோ....அவள் மனது விரும்பிய இடத்திற்கு அம்மா வந்து சேர்ந்து விட்டாள்...இனி ஆவி பிரிந்தாலும் நிம்மதியாய்ப் போய்ச் சேருவாள். ஆத்மா சாந்தியடையும். ஆனால் அப்படி அவள் வந்து சேர்ந்ததற்கு, தான் காரணமில்லை. ஆனால் நான்தான் காரணம் என்று அவன் சொல்கிறான். யார்...? பெரியவன். நான்தான் காரணம் என்று ஸ்தாபித்திருக்கிறான். உருவாக்கி நிலை நிறுத்துகிறான். அதில் ஒரு பதட்டம் தெரிகிறது. அவசரம் புலப்படுகிறது. பிறர் வாயை அடைக்கும் வன்மம் தெறிக்கிறது. யாரும் தன்பால் குறை சொல்லி விட நேருமோ என்கிற கவனம் தெரிகிறது.முரணாய் நினைத்துவிடக் கூடக் கூடாது என்கிற கவனம். உள்ளார்ந்த உண்மையை அறியக் கூடுமோ என்று அஞ்சுகிறான். அந்த ரகசியம் அவனுக்கு மட்டுமே ஆனது. அது அவன் மன நியாயம். அங்கும் அவன் வைத்ததுதான் சட்டம். அது பொது நியாயமா என்கிற கேள்விக்கு இடமில்லை.  அவனது இருப்பே அவனைக் காட்டிக் கொடுத்து விட்டது. அதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதி காத்தாயிற்று. பெரியவனுக்கு அந்தச் சலுகை கூட இல்லையென்றால் எப்படி? பெரியவா செஞ்சா பெருமாள் செஞ்ச மாதிரி...! வாயைத் திறக்கப்படாது யாரும்!

      உனக்கு நீ நினைத்தது நடந்து போனது. ஆனால் எனக்கு? ஏன் இந்தக் கேவலம்? எதற்கிந்த அவமானம்? நான் புறப்படுறேன்...அம்மாவிடம் கூடச் சொல்லிக் கொள்ள முடியவில்லை. அவள் தூங்குகிறாள் அல்லது உடல்நோவில் மயங்கியிருக்கிறாள். ம்...கிளம்பு...கிளம்பு...விரட்டாத குறை...கொஞ்சம் போனால் உன்னைக் கண் கொண்டு பாரக்கக் கூட எனக்குப் பிடிக்கவில்லை...என்று கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினாலும் போச்சு...!  கையில் சூட்கேஸை எடுத்துக் கொண்டு வெளிப் போந்தபோது வாசல் கேட் வரை பம்மியவாறே பின்னாலே வந்து சடாரென்று கேட்டை அடைத்துத் தாள்ப்பாளைப் போட்டானே? அந்தக் காட்சி மறக்குமா அல்லது மறையுமா? அந்தச் சத்தந்தான் அழியுமா?  பகைவனா நான்? அல்லது இழி செயல் செய்தவனா? இனி இந்தப் படி மிதிக்கக் கூடாது என்பதுபோல் வெளியேற்றினால்? அன்றைய அந்த அவமானம் வாழ்நாளில் மறக்குமா? கண் மூடும் வரை கூடக் கனவிலும் வந்து தாக்குமே? சபையில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்களே...! வாய் மூடியிருந்தார்களே...!!

      சுந்தர்...நீ இரு....நீ கௌம்பு....! கூரான அம்பு...நேராய் வந்து நடு நெஞ்சிலே பாய்ந்து, பின்புறமாய் வெளியேறி விட்டது. நானென்ன சூடில்லாதவனா...அல்லது சுரணையற்றவனா? பகைவனா? இதென்ன முகத்திலடித்தாற்போல்...? இப்படியும் நேரடியாக ஒருவனைப் பார்த்துச் சொல்ல  முடியுமா? ரெண்டு அடி கூட அடித்து விடலாமே? வார்த்தைச் சூட்டினை எவன் தாங்குவது? .-இரவு முழுவதும் தூக்கம் விழித்து, உட்கார்ந்தமேனிக்கே ஆம்புலன்ஸில் அம்மாவைக் கண்காணித்து விடிகாலை பொழுது புலரும் தருவாயில் கொண்டு வந்து  பாதுகாப்பாய்ச் சேர்த்தவனிடம் சொல்லக் கூடிய வார்த்தையா இது? உடனே வெளியேறவில்லையாயின் கழுத்தைப் பிடித்துத் தள்ளி விடுவானோ? நீ கிளம்பு... என்ற வார்த்தையின் தீர்மானம் அப்படியல்லவோ இருந்தது. அப்படி நான் என்ன தவறு செய்தேன்? என்னோடு சேர்ந்து வந்தவன்தானே அண்ணா சுந்தரும்? அவனுக்கு மட்டும் என்ன சலுகை? எனக்கு மட்டும் ஏன் இந்தக் கேவலம்? அந்த அவமானம் அவனுக்குமில்லையா? இவன் நினைப்பில் என்னை மட்டும் ஏன் குறி வைக்கிறான்? கண் கொண்டு பார்க்கக் கூடத் தயாரில்லை என்பதுபோல் வெளியேற்றி விட்டானே? இது ஏன் மற்ற எவருக்கும் பாதிக்கவில்லை? சே...சே...அப்டி அனுப்பாதே...வெளியேத்துற மாதிரி...! அது தப்பு...! – சொல்ல ஒருவர் இல்லையே?   வாழ்நாளில் மறக்குமா இந்தக் காட்சி? வீடே மயான அமைதி. அண்ணியோ, அண்ணாவோ ஒரு வார்த்தை சொல்லவில்லை. யாரும் தடுக்கவில்லை.. ஒரு வேளை அவர்களுக்கும் போனால் போகட்டும், தொலையட்டும் என்று இருந்திருக்குமோ? மனிதர்களின் முக்கியமான பிரச்னையே இந்த மனசுதான். எல்லாம் பௌதீக ரீதியிலானவை. இதில் இயற்கை எப்போதும் வெல்வதில்லை. அந்த மாதிரி ஒரு கேவலத்தை வாழ்நாளில் எப்போதும் எதிர்நோக்கியதில்லை. அதுவே முதன் முறை.

      டிக்கெட் கூட ரிசர்வ் செய்யவில்லை. திடீரென்று போனால் எப்படி?  போய் நின்றால் எப்பொழுது எந்த பஸ்ஸில் ஏற முடியுமோ? எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ? கிடைக்குமோ கிடைக்காதோ? ராத்திரி பூராவும் தூங்கவில்லை. பகலில் விரட்டியடித்தாயிற்று. ஒரு மணித் துளி கூட ஓய்வின்றி ஆளைக் கிளப்பியாயிற்று. கண்ணிலேயே முழிக்காதே என்பதுபோல்...!  கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ளக்கூட இல்லை. படுத்தால் நீட்டி நிமிர்ந்து விடுவான் என்றுதான் விரட்டி விட்டானோ?  நல்லவேளை சோறு போட்டான். அதையும் வெட்கமில்லாமல் தின்றேனே..... பாவி...! பசி பத்தையும் மறைத்து விடுமோ?  அதையும் வெளில பார்த்துக்கோ...என்று சொல்லவில்லை. சொல்லவில்லையா, சொல்லத் தெரியவில்லையா? தெரிந்திருந்தால் சொல்லியிருப்பான்தான்...!  அந்த மட்டும் நெஞ்சின் மூலையில் எங்கோ கொஞ்சம் இரக்கம் ஒட்டிக் கொண்டிருந்திருக்கிறது. அது பெரும் பாவமாகிவிடும் என்று தோன்றியிருக்குமோ என்னவோ? தன் மன நியாயத்தை நிலை நிறுத்தத் துடிப்பவனுக்கு மற்ற எவையும் ஒரு பொருட்டாயிருப்பதில்லை. அல்லது கோபம் கண்ணை மறைக்கிறது.! ஈகோ முன்னின் தடுக்கிறது. தன் தவறை மறைத்துக் கொள்வதில் ஏற்பட்ட முனைப்பு அது...! அதே சமயம் யாரும் அதைக் கண்டு பிடித்துவிடக் கூடாது. அதனால் பழியும், பாவம் ஓரிடத்திலேயே குவியும் அவலம்...!

சட்னு சோத்தப் போட்டு ஆள வெளில அனுப்பு என்று அண்ணியிடம் சொல்லியிருப்பானோ? எனக்கு மட்டும் தட்டை எடுத்து வைத்து சாப்பிட வா என்றார்களே...? எதற்கு அத்தனை அவசரம்? ஆளை வெளியேற்றவா? இத்தனை திட்டமிடலா இதற்கு? வந்து சேரும் முன்னே பேசி வைத்திருப்பார்களோ? அந்தச் சோற்றிலும் கை வைத்தேனே? என்னைச் சொல்லணும். அந்தப் பொழுது பட்ட கேவலத்தைவிடவா பசி பெரிது? கையை நனைக்காமல் ஏன் வெளியேற முடியவில்லை? அதுவும் அவன் மீது வைத்திருந்த மரியாதையா? அண்ணி மீது கொண்ட மதிப்பா?

  அறையில் சுந்தர் அண்ணா நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு இருக்கும் உடல் அயற்சிதானே எனக்கும்? அவனும் என்னோடு பயணித்து வந்தவன்தானே? நானும் சொந்தத் தம்பிதானே? அவனுக்குக் கிடைத்த அந்தச் சலுகை எனக்கு மட்டும் ஏன் இல்லை? சலுகை வேண்டாம். ஒரு மனிதாபிமானம் வேண்டாமா? மனித நேயம் வேண்டாமா?

எதை மறைக்க இந்த நாடகம்? எதை திருப்தி செய்ய இந்தச் செயல்பாடு? எந்தக் கேள்விக்கு பதில் சொல்லி இந்த நடவடிக்கை? முரணான நடவடிக்கைகளினால் ஒரு தவறான விஷயத்தை மறைத்து விட இயலுமா? இதுதான் சரி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு செய்வதனால் ஒரு விஷயம் நியாயமாகி விடுமா? மனசாட்சி ஒன்றைச் சொல்ல, செயல் வேறு மாதிரி இருக்க, அந்த மனசாட்சி மறைந்து விடுமா? உறங்கப் போய் விடுமா?  அல்லது அதற்கு ஒத்தடம் கொடுத்ததுபோல் ஆகி விடுமா? எது சரி என்று முடிவெடுப்பதிலும் மனிதனின் மனம் தடுமாறி அங்கேயும் சுயநலம் தலை நீட்டத்தானே செய்கிறது? அது சுயநலம் என்ற பேரில் இல்லாமல் நியாயம் என்ற பெயரிலான முத்திரை குத்தப்பட்டால் அது நியாயமாகி விடுமா? இதுதான் நியாயம் என்பது ஒருவன் தனக்குத்தானே நிர்ணயிப்பதா?  அவரவர் மனதுப்படிதான் நியாயங்கள் நிலை நிறுத்தப்படுகின்றன. அவரவர் மனதுப்படிதான் நியாயங்கள் வரையறுக்கப்படுகின்றன. மனிதன் என்றும் சுயநலமானவன். அவனைப் பாதிக்காதவரை உரக்கச் சொல்லும் நியாயம் வேறு, பாதிப்பு என்று வரும்போது விவரிக்கப்படும், சித்தரிக்கப்படும் அல்லது ஒதுங்கும் நியாயங்களும் உருவாக்கும் காட்சிகளும் வேறு வேறு. தன்னைப் பாதிக்காதவரை அது சரி. அடுத்தவரைப் பாதித்ததென்றால் பரவாயில்லையா? தனக்குத் தேடிக்கொள்ளும் நியாயத்தால் எதிராளி எந்நிலை அடைந்தாலும், எப்படிச் சீரழிந்தாலும் தேவலையா? அதுபற்றிக் கவலையேயில்லையெனில் அதுதானே சுயநலம்?

ஏன் ரமணனை உடனே அனுப்பிச்சே...? – அம்மா கேட்கவா போகிறாள்? அவளே சக்தியின்றிக் கிடக்கிறாள்.  தன் பாடே இன்றோ நாளையோ என்று கிடக்கிறது அவளுக்கு. பிராணன் ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. நாட்கள் எண்ணப்படுகின்றன. உயிர் ஆட்டம் கண்டு போனது. எதைக் கேட்டு என்ன நடக்கப் போகிறது? அல்லது கேட்டால்தான் மாறி விடப் போகிறதா? வந்து சேர்ந்ததே போதும். இவன் மன விளையாட்டுக்கு, ஊசலாட்டத்துக்கு, மனைவி சொல்லில் நியாயம் இருக்கு என்று மதி கெட்டவனுக்கு, இன்னும் கொஞ்ச நாட்கள் மிஞ்சிப் போனால்..! .அதற்குள் ஒரு மாற்றம் வேணுமா? இது தேவையா?  இதைச் செய்யணுமா?  என்று யோசியாமல், அம்மாவின் விருப்பத்தைக் கேட்காமல், அவளையென்ன கேட்கிறது, போ என்றால் போக வேண்டிதான் என்பதாய் தானே வீராப்பாய் தீர்மானமாய் ஒரு முடிவு செய்து கொண்டு, கடைசி நேரத்தில் கதியிழந்த தாயை “போய்ச் சின்னவனிடம்  இரு...” என்று விரட்டினால் அந்தத் தாய் மனம் என்ன பாடுபடும்? எவ்வளவு நொந்திருக்கும்? எத்தனை சாபமிட்டிருக்கும்?

இங்கே இறந்து, கடைசிக் காரியம் அத்தனையும் தங்கள் தலையில் விழும்...அதிலிருந்து தப்பித்ததுபோல் ஆகட்டும் என்று அதுநாள் வரை பொறுமையாய் வைத்துப் பாதுகாத்தது மறந்து, சரீர ரீதியாய் உதவிக் கரமாய் இருந்தது மறந்து, கடைசி நேரத்தில் வந்த பொருத்தமற்ற, காலம் ஒப்புக் கொள்ளாத யோசனையை,  காரியத்தை, படுக்கையில் விழும் நிலையில் தாயை இடம் மாற்றம் செய்யும் விபரீதத்தை  சரி என்று ஒப்புக் கொண்டானே? இதை என்னென்று சொல்வது? மனசு இணங்கிப் போனால் அறிவு வேலை செய்யாதோ? இக்கால கட்டத்தில் மனையாளின் ஆலோசனை சரியா? என்று ஏன் அவன் மனம் சிந்திக்கவில்லை? சரி என்று தலையாட்டி எதற்காகக் குருட்டுத்தனமாய் இப்படி ஒப்புக் கொள்ள வைத்தது? கேடு காலம் என்று வந்தால் புத்தி மந்தித்துப் போகும் என்பது எவ்வளவு உண்மை?

நானேதான் சாகிற வரைக்கும் வச்சிக்கணும்னு என்ன தலவிதியா? மூத்தவன்னா அவனுக்கு மட்டும்தான் பொறுப்பா? மத்தவங்களுக்கு இல்லையா? எம் பொண்டாட்டி மட்டும் கிடந்து சாகணுமா? அவங்களெல்லாம் சுகமா இருக்கணுமா? எங்களுக்குக் குழந்தை எதுவும் இல்லைங்கிறதுக்காக நாங்கதான் பொறுப்பா? நாங்க ஃப்ரீயா இருக்கக் கூடாதா? இருக்க வேண்டாமா?  எங்களுக்கு மட்டும் என்ன தலைவிதி?

இந்த யோசனை காலம் போன கடைசியிலா வருவது? தள்ளாத வயதில் தாயை அங்க போ, இங்க போ, அவன்ட்டப் போ, இவன்ட்டப் போ என்று தள்ளி விடுவது தப்பான செயலில்லையா? மனசாட்சியைக் கொன்ற காரியம் இல்லையா? எப்போதோ யோசித்து, முறை வைத்து செய்திருக்க வேண்டியது...அப்போது அதெல்லாம் வேண்டாம்...என்னிடமே இருந்துவிட்டுப் போகட்டும் என்று சொன்ன மனசுதான் இன்று இப்படிப் பேதலித்துத் தடுமாறுகிறது. அந்தத் தாயின் மனம் என்ன பாடுபடும்? மூத்தவன்ட்டத்தான் இருக்கணும் என்று வந்து சேர்ந்தவர்கள், ஆயிரந்தான் இருந்தாலும் அவனுக்குத்தான் பொறுப்பு, அவன்ட்ட இருக்கிறதுதான் எங்களுக்குப் பெருமை, நீங்க ரெண்டு பேரும் அவனுக்கப்புறம்தான் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்ட பெரியவனா இன்று சீவன் நிற்கும் காலத்தில் இந்தக் காரியத்தைச் செய்கிறான்? அப்பாவைக் கடைசிவரை வைத்துப் பாதுகாத்துக் கரையேற்றியவன், எனக்கு மட்டும் ஏனிப்படி மறுதலிக்கிறான்? தந்தை செய்த பாக்கியம் தாய் செய்யவில்லையா? பெற்றவளல்லவா நான்? என்னை மட்டும் ஏனிப்படி காலம் போன கடைசியில் மற்ற பிள்ளைகளிடம் அனுப்பப் பார்க்கிறான். இந்த அலைக்கழிப்பு தகுமா? படுக்கையில் விழுந்து விட்ட என்னைப் பராமரிப்பது கஷ்டம் என்று முடிவு செய்து விட்டானோ? பீ, மூத்திரம் எவன் எடுக்கிறது? என்று பழி சொல்கிறானே?

ரு நர்ஸ் சொல்லியிருக்கேன்...தினசரி வந்து அம்மாவுக்கு வேணுங்கிறதைச் செய்துட்டுப் போறதுக்கு...பெட் ஃபேன் வாங்கி வச்சிருக்கேன்....அந்த நர்ஸ் காலைல ஏழு மணிக்கு வந்து கவனிச்சி, எல்லாம் செய்திட்டுப் போய்டுவா...சாயங்காலம் ஒருதரம் வருவா....பதினஞ்சாயிரம்....நீங்க ரெண்டு பேரும் பணம் அனுப்பிடணும்....கரெக்டா...தாமதம் கூடாது.... – இப்படித்தானே சொன்னான். சொல்லியிருந்தான்? அவர்கள் மறுக்கவில்லையே? பின் ஏன் மாறினான்? இந்த யோசனையை ஏன் மாற்றினான்? தலையணை மந்திரம் தாமதமாக வேலை செய்கிறதா?. எது நியாயம், எது அநியாயம்? எது சரி, எது தவறு? என்று தொட்டதற்கெல்லாம் விலாவாரியாய்ப் பேசுபவனுக்கு, நியாயத்தை எனக்கு மட்டுமே கண்டுபிடிக்கத் தெரியும், என்னால் மட்டுமே செய்ய முடியும் என்று இறுமாப்போடு இருந்தவனுக்கு புத்தி ஏன் இப்படி மாறிப் போயிற்று? எதற்கு இப்படி பேதலித்தது?

சுந்தர்.....நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ...தெரியாது.....நான் இங்கிருந்து ஃபோன் பண்ணிப் பேசி ஃபிக்ஸ் பண்ணிட்டேன்.....கித்வாய் நகர் ஆஸ்பத்திரிக்கு அடுத்தாப்ல....நிறைய வாடகை ஆம்புலன்ஸ் நிற்கும். அதுல இந்த நம்பருள்ள வண்டியப் பேசி முடிவு பண்ணியிருக்கேன். டிரைவர் பெயர் முத்துப்பாண்டி...அவன்ட்டப் பேசின பணத்தைக் கொடுத்திரணும்...ராத்திரி எட்டரை மணிக்கு வீட்டுக்கு வந்திடுவான்...ஒன்பதுக்குள்ள அம்மாவோட நீங்க கிளம்பியாகணும். அப்டு மெட்ராஸ் வரைக்கும் சைரனோடதான் வருவான்....வண்டிலயே ஆக்ஸிஜன், டிரிப்ஸ்க்கு ஏற்பாடு பண்ணியிருக்கு. ஒரு நர்ஸூம் கூடவே வருவாங்க....அவங்க அம்மா கண்டிஷனக் கவனிச்சிப்பாங்க....காலைல அஞ்சரைலர்ந்து, ஆறுக்குள்ள மெட்ராஸ் ரீச் ஆயிடும். வீட்டுக்குக் கொண்டு வந்து பேஷன்டை இறக்கிட்டு வண்டி போயிடும். இதுதான் ப்ளான்....

எதுக்குண்ணா இப்டி திடீர்னு? நான்தான் பார்த்திட்டிருக்கேனே...டாக்டரை வீட்டுக்கே வரவழைச்சிப் பார்க்க வச்சு, மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்து, சரியாத்தானே போயிட்டிருக்கு....நா ஒண்ணும் முடிலன்னு சொல்லலியே...?

எங்க சரியாப் போயிட்டிருக்கு? ஒரு வாரமாச்சு......நான் தூங்கவேயில்ல....உடம்பு கண்டிஷன் அவ்வளவு மோசமாயிருக்கு...என்னால முடில....செத்துருவேன் போல்ருக்குன்னு புலம்புறே.....அதென்னவாம்.? அதுக்கு என்ன அர்த்தமாம்? ....அம்மாவக் கொண்டு விட்டு ஒரு மாசம் கூட  ஆகல....அதுக்குள்ளேயும் ஐயோ...அப்பான்னா என்ன அர்த்தம்? செத்துருவேன்னா என்ன அர்த்தம்? நான் வருஷக் கணக்கா அப்பாவப் பார்த்துக்கல? கரையேத்தல?  நாங்க இத்தனை வருஷமாச் செத்தது பரவாயில்லயா? செத்துத்தான் போயேன்....தாயாரைப் பார்த்துக்கிறதுல என்ன அத்தனை சலிப்பு? வெட்கமாயில்லே...! நீ மனுஷன்தானா? நாலு நாள் தூங்காட்டி என்ன, செத்துருவியா? அப்டியே உருகுற...? அப்போ வருஷக் கணக்கா நாங்க பட்டதெல்லாம் என்னவாம்?

இவன் அதிர்ந்துதான் போனான். எதற்காக ஒரு பேச்சுக்கு யதார்த்தமாய்ச் சொன்னதை இப்படிப் பெரிதாக்குகிறான்? பார்க்க மாட்டேன் என்று நான் சொல்லவேயில்லையே...? யாரேனும் ஒருவர் உதவிக்கு இருந்தால் தேவலை என்றுதானே சொன்னேன்...அது தப்பா? அதை அவனிடம் பகிர்ந்து கொள்ளாமல் வேறு யாரிடம்?  அதுதான் தகவல் சொல்லி சுந்தர் அண்ணா வந்தாயிற்றே...மாற்றி மாற்றி ஓய்வெடுத்துக் கொண்டு, நாங்களே பார்த்துக் கொள்ள மாட்டோமா? எதற்காக இந்த அவசரம்? ஏனிந்தக் கோபம்? என்னைப் பேசவே விடாமல் .போனை வைத்து விட்டானே...? என்ன காரணம்? அத்தனை வெறுப்பு வந்து விட்டதா? தேவையில்லாமல் எதற்கு இந்த விரட்டு விரட்டுகிறான்? அவனுக்கே செயற்கையாயில்லையா இது? குறுக்கே பேசவே விடவில்லையே? என்ன காரணம்? மனசாட்சியின் விரட்டல்...! அதன் படபடப்பு....

கூப்பிட்டுட்டான் பார்த்தியா? அவனுக்கு மனசு கேட்காது....எனக்குத்தான் தெரியும் அது. மெட்ராஸ்ல அவ்வளவு பழகியிருக்கேனாக்கும்....தினம் இருபது முப்பது பேர் வரிசையா வந்துண்டேயிருப்பா தெருவுல..என்ன மாமி...எப்டியிருக்கேள்...ன்னு வீட்டுக்குள்ளே நுழைஞ்சு விசாரிக்காமப் போகவே மாட்டா...அதுதான் மனசுக்கு ஆரோக்யம் எனக்கு. நீங்க ரொம்பப் புண்ணியம் செய்தவா...பெத்த பிள்ளை இப்டி பக்கத்துலயே வச்சிக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிறதுக்குக் கொடுத்து வைக்கணுமே...நல்ல பிள்ளையைப் பெத்துருக்கேள்....ன்னு வாயாரப் புகழ்ந்து சொல்லிட்டுப் போவா...அவனை வாய் நிறைய ஆசீர்வாதம் பண்ணிட்டுக் கிளம்புவா...அதை இழக்கலாமா? அவனுக்கு மனசு கேட்காது...உங்க மன்னியிருக்காளே...அவளும் நல்லவதான்...இரக்கச் சிந்தை நிறைய உண்டு அவளுக்கு....அவ என்ன சொன்னா கேட்டியோ...எங்கிட்டப் பேசினபோது....?

ரெண்டு மூணு நாளா என்னென்னவோ கெட்ட கனவா வருதுங்கிறார்....தூக்கத்துல கன்னா பின்னான்னு புலம்புறார்....தெரியாமத் தப்புப் பண்ணிட்டேனேன்னு எங்கிட்ட அழறார்..தவியாத் தவிக்கிறார்.....உன் பேச்சைக் கேட்டு இப்டி கடைசி நேரத்துல அசட்டுத்தனம் பண்ணிட்டனேன்னு புலம்பறார்..என்னைத் திட்ட ஆரம்பிச்சிட்டார்...இப்டியா யோசனை சொல்வேன்னு கை நீட்டிட்டார்....வர்றவா போறவால்லாம்....என்னது...அம்மாவ அனுப்பிச்சிட்டேளா....? தம்பிட்ட அனுப்பிச்சிட்டேளா....? இப்டித் தள்ளாத வயசுல இடமாற்றம் செய்யலாமா மாமா? யாரு உங்களுக்கு இந்த அசட்டு யோசனையைச் சொன்னா? என்று  ஆளாளுக்குக் கேள்வி கேட்டுத் துளைச்சிட்டா... எல்லாருக்கும் ஒரே வருத்தம். ஒரு மாமி உட்கார்ந்து அழவே ஆரம்பிச்சிட்டா...எங்கம்மாவப் பார்க்கிறாப்ல இருக்கும்...மனசுக்கு அவ்வளவு ஆறுதல் பாட்டிட்டப் பேசிட்டுப் போனா...அதக் கெடுத்துட்டேளேங்கிறா..... பாட்டியிருந்தா நமஸ்காரம் பண்ணி ஆசீர்வாதம் வாங்கிண்டு போலாம்னு வந்தேன். இப்டியாயிடுத்தேன்னு மூக்கைச் சிந்திண்டு போறா.....

அதுலேர்ந்து அவருக்கு மனசே சரியில்லை....ரெண்டு நாளா பைத்தியம் பிடிச்ச மாதிரியிருக்கார்....சரியாச் சாப்பிடுறதில்லை...தூங்குறதில்லை...ராத்திரி இருட்டுல ஒத்தையா நடமாடிண்டேயிருக்கார்...தப்பு செய்த மனசு குத்தறது...குத்திக் கிழிக்கிறது....இப்டியே போனா அவருக்கே என்னமாவது ஆயிடுமோன்னு எனக்கு பயமாயிருக்கும்மா....நீங்க இங்கயே திரும்ப வந்திடுங்கோம்மா....வண்டி ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்கேன்...பண்ணிடுவார்...உடனே கிளம்பி வந்திடுங்கோ...நர்ஸ் வச்சுப் பார்த்துக்கலாம்...ஒண்ணும் சிரமமில்லை....தயவுசெய்து தள்ளிப் போடாதீங்கோ....இப்டித் தப்பான யோசனையைச் சொல்ற புத்தி எனக்கு எங்கிருந்துதான் வந்ததோ...? கிறுக்கு மாதிரிச் சொல்லிட்டேன்...புத்தி மழுங்கிப் போச்சு...என்னை மன்னிச்சிடுங்கோ...நீங்க இங்க திரும்ப வந்தாத்தான் எங்களுக்கு நிம்மதி......ன்னு அடிச்சிக்காத குறையா அழுது தீர்த்துட்டா...தெரியுமோ? – அம்மாவின் முகத்தில் அப்படியொரு பெருமிதம். சந்தோஷம். பாதி வியாதி இப்பொழுதே குறைந்து விட்ட மாதிரி.

இப்பயும் சொல்றேன்...நீ இங்கயே இருக்கிறதானால் இருக்கலாம். கடைசிவரை நான் உன்னைப் பார்த்துக்கிறேன்...இது சத்தியம்.....

வேண்டாம்டா...எதுக்கு வீணா...? எனக்கு அங்கேயிருந்தாத்தான் மனசுக்கு சரியாயிருக்கும். கொஞ்சம் வியாதியே குறைஞ்சா மாதிரி ஆயிடும். நாலு மனுஷா வந்து போகுற இடமில்லையா? அதுவே ஆரோக்யம்... ஆயிரந்தான் ஆனாலும் பெரியவன்ட்ட இருக்கிறதுதான் சரி...அதுதான் எங்களுக்கு மதிப்பு..பெருமை..அவனுக்கு சிரமம்தான்...ஆனாலும் அதுதான் சரி...அதுதான் இடம்....அந்த வீடுதான் என்னோட கோயில்...அவர் உயிர் போன எடத்துலயே, அந்த வீட்டுலயே என் ஆவியும் பிரியட்டும்....

அம்மாவின் அந்தக் கடைசி வார்த்தைகள் இவன் வாயை அடைத்து விட்டது. அம்மா உயிரே அங்குதான் இருக்கிறது. வேற வழியின்றி, வக்கில்லையே என்றுதான்  வேதனையோடு கிளம்பி வந்திருக்கிறாள். ஒட்டாமல் கிடந்த வேளையில் மறு பயணம் சித்தித்து விட்டது. அதுவும் அவள் பிரார்த்தனையின் பலன்தானோ என்னவோ?   இப்போதுதான் திரும்பவும் அழைத்தாயிற்றே....! போ என்று சொன்னவன் இப்போது உடனே திரும்ப வந்து விடு என்கிறான். அந்தப் “போ“ இப்போது மறைந்து விட்டது. அதிலிருந்த வன்மம் செத்து விட்டது. மூத்தவனுக்கு எந்தச் சலுகையும் உண்டு. மற்றவர் எல்லாம் ஒரு படி கீழ்தான்.

 ண்டி எப்ப வரும்? கண்டிப்பா வந்திடும்ல...? ஒன்பதுக்குள்ள கிளம்பிட்டோம்னா, பொழுது விடியறதுக்குள்ள போய்ச் சேர்ந்துடலாம்....ஊர் முழிக்கிறதுக்குள்ள வீட்டுக்குள்ள புகுந்துக்கலாமே..! ஸ்டெர்ச்சர்ல படுக்க வச்சித் தூக்கித்தானே வேன்ல ஏத்துவா? இருக்கட்டும் பரவால்ல...நான்பாட்டுக்கு தூங்கிண்டே வந்துடுவேன்....நீ வர்றதானே? சுந்தரோடு நீயும் வா...அங்க கொண்டு போய் என்னைச் சேர்த்திடுங்கோ...புண்ணியமாப் போகும்...குழந்தைபோல் புலம்புகிறாள்.

எல்லாம் சரி...ஆனால்....ஏன் எனக்கு அந்தக் கேவலம், அவமானம்? நீ கிளம்பு என்று, இறங்கிச் சில மணி நேரத்தில்  சொல்லி, ஒரு அநாதையைப் போல் கையில் பெட்டியைத் தூக்கிக் கொண்டு யாருமே விடை கொடுக்காமல் அமைதியாக, தலைகுனிந்தவாறே ஏதோ கொலைக் குற்றவாளி போல் வாசலைத் தாண்டியபோது, ஆளை வெளியே தள்ளிய வேகத்தில் வெறுப்போடு அந்தக் கேட்டை டமால் என்று கண் முன்னே, சொந்தத் தம்பியின் மூஞ்சிக்கு முன்பு சாத்தித் தாழ்ப்பாளைப் போட்டானே...! அது ஏன்? ஏன் அப்படிக் கேவலப்படுத்தினான்? அப்படிச் செய்வது தவறு என்று ஏன் அன்று அவனுக்குத் தோன்றவில்லை? எது அவன் புத்தியை மறைத்தது? மழுங்கடித்தது?அப்படி என்ன பாவம் செய்தேன் நான்? என்ன தவறு செய்தேன்? சுந்தர் அண்ணாவும் இந்த மொத்த நிகழ்விலும் என் கூடவே இருந்திருக்கிறானே.....அவன் மீது ஏன் பொட்டுக் கோபம் எழவில்லை? அதெல்லாம் வேண்டாம்...நாங்க ரெண்டு பேருமே இங்க இருந்து பார்த்துக்கிறோம்...ஒண்ணும் பிரச்னையில்ல...-அவனும் சொல்லவில்லையே? அது குற்றமாகப் படவில்லையே? அவன் இந்தப் படத்திற்குள் வரவேயில்லையே? மொத்த நிகழ்விற்கும் பலிகடா நான்தானா? அவன் மனசாட்சிக்கு அவன் பதில் சொல்லிக் கொள்ள, ஒத்தடம் கொடுக்க, தன் தவறைத் தானே மறைத்துக் கொள்ள...நான் பலிகடா ஆக்கப்பட்டேனா...? கல்யாணமாகி, குடும்பம் உள்ள, ஒரு குழந்தைக்குத் தந்தையான என்னை, இந்த வயதில் இப்படிக் கேவலப்படுத்தி ஒரு அகதிபோல் வெளியேற்றி  அனுப்பி விட்டானே? ஆறுமா எனக்கு?

மறக்க முடியாதது...!.காலத்தால் அழியாதது....!! அந்த அவமானம் ஆயுசுக்கும் மறக்காது... மறையாது. உள்ளுக்குள் இன்றும் அழுது கொண்டுதான் இருக்கிறேன் நான். யாருக்குத் தெரியும் என் ரணம்?

 ஆறப் பொறுக்காத நிகழ்வுகளெல்லாம் இப்படித்தான் விபரீதங்களைத் தாங்கி நிற்குமோ?

                        ----------------------------------------------------------------

     

உஷாதீபன், (ushaadeepan@gmail.com)                                           எஸ்.2இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                               மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                    ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,          -            மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188).

 

 திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் அமரர் பி.இராமமூர்த்தி-ஜீவா நூற்றாண்டு விழாவில் சிறப்புப் பரிசு பெற்ற எனது “வாழ்க்கை ஒரு ஜீவநதி“ என்.சி.பி.எச். வெளியீடான - சிறுகதைத் தொகுதிக்கான பரிசையும் சான்றினையும் பெற்ற போது.....


 

சிறுகதை                         கணையாழி நவம்பர் 2023 இதழ் பிரசுரம்

“விண்ணுக்குள் பிரிவேது…?”





               நீ உன் பையனை மதிக்கிறேல்ல…? – எடுத்த எடுப்பில் கேள்வியை நேரடியாகத் தூக்கிப் போட்டார் சற்குணம்.

            அடுப்பில் குழம்பு தளதளவென்று கொதித்துக் கொண்டிருந்தது.

            அதை சிம்-முல வைக்க வேண்டிதானே? என்றார் தொடர்ந்து. தன்  கேள்வி வேறு அவளைச் சூடாக்குமே? என்கிற கவனம்தான்.

            தெரியும் எனக்கு….-என்றவாறே அடுப்பைக் குறைத்தாள் சியாமளா. குழம்பு கொதி அடங்கியது. அவள் மனது அடங்கியதா தெரியவில்லை. சிறு பிள்ளையைப் போல் சிணுங்கிக் கொள்ளும் குணம். அந்தந்த நேரத்துக்கு வெளிப்படும். பிறகு காணாமல் போய்விடும்.

முகத்தில் அந்தக் கடுகடுப்பு இப்போது மாறவேயில்லை.  அவள் முகமே அப்படித்தான். சிலபேர் சாதாரணமாய் இருந்தாலும் உம்முன்னு இருப்பது போல் தோன்றும். முக அமைப்பு அப்படி. பழகியவர்கள், தெரிந்தவர்கள் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்வார்கள். புதிதாய்ப் பேசுபவர்கள் தப்பாய்த்தான் நினைப்பார்கள்.

            எதற்குக் காலங்கார்த்தால இத்தனை கோபமா இருக்கே…? இப்ப என்ன நடந்து போச்சு? நீ உன் பையனை நம்புறதானா, மதிக்கிறதானா…உன் திருவாயை மூடிட்டிரு….அவ்வளவுதான் சொல்வேன். ஏன்னா வாயைத் திறந்தேன்னா…முத்தா உதிருது….அதனாலதான் சொல்றேன்….-இது அவள் கோபமாய்த்தான் இருக்கிறாள் என்பதை அறிந்து அவர் சொன்னது.

            ஒண்ணுமே தெரியாத மாதிரி நீங்களா ஒன்றை நினைச்சிட்டுக்  கேளுங்க…எதுலயும் உங்களுக்கு ஒரு விவஸ்தைங்கிறதே கிடையாது…நான் ஒண்ணு சொன்னா, நீங்க வேறொண்ணைச் சொல்றது…பேச்சை திசை திருப்புறது…இதானே உங்க வேலை….எப்போதும்….-

ஆரம்பிச்சாச்சு சண்டை என்று முனகிக் கொண்டார் சற்குணம். துடிப்பாய் இருப்பதற்கு இதுதான் வழி என்று நினைக்கிறாளோ?

            நான்தான் விவஸ்தை கெட்டவனாச்சே…உனக்குத் தெரிஞ்சிருக்கே…அதான் எதையும் இப்டித் திசை திருப்பிப் பேசுறேன்…என்ன விவஸ்தை கெட்டுப் போயி நிக்கிறேனாம் இப்ப? அதத்தான் சொல்லேன்…. – அவரது பொறுமை அவளை மேலும் கோபப்படுத்தியது.

காலையிலேயே அன்று சொற்போர் தொடங்கிவிட்டது அவரைப் பெரிதும் சங்கடப்படுத்தியது. பொறுமை…பொறுமை…என்று மனசு எச்சரித்தது.  சுண்டு விரலைத் தன் முகத்தை நோக்கி நீட்டி தன்னைத்தானே நொந்து கொண்டார். உனக்கு வேணும்…வேணும்…நல்லா வேணும்….ஏண்டா பேச்சுக்குப் போறே? கம்முனு உட்கார வேண்டிதானே? -தன்னைத்தானே திட்டிக் கொண்டார்.

            என்னவோ நீங்கதான் ரொம்பவும் பக்குவமானவர் போலப் பேசுறது? அதான் உங்ககிட்டே பேசவே  எனக்குப் பிடிக்கல்லே….

            இந்தப் பிடிக்கலே என்பதை தினமும்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாள். அந்த வார்த்தைக்கு அவளைப் பொறுத்தவரை நிரந்தர அர்த்தம் என்று இருப்பதாக இவருக்குத் தோன்றவேயில்லை. பிடிக்காதவர்கள் மூஞ்சியைக் கூடப் பலருக்குப் பார்க்கப் பிடிக்காது. ஆனால் சியாமளா வெறும் வார்த்தையோடு சரி். அதற்கு விலையில்லை அவளிடம்.

            இது ஒண்ணுதான் உனக்குப் பிடிக்கலையா? எத்தனையோ எங்கிட்ட உனக்குப் பிடிக்கலைதான். அதையெல்லாம் நினைச்சுப் பார்த்து வருத்தப் பட்டுண்டிருந்தா மனுஷன் இயங்கவே முடியாது….உனக்கு வெளிப் பழக்கம்ங்கிறதே இல்லை…அதுக்கு நான் என்ன பண்றது? என்னை மாதிரி ஆபீஸ்…வேலைன்னாவது போயிருந்தேன்னா…நிறையப் பேர் கூடப் பழகுற சந்தர்ப்பம்   கிடைச்சிருக்கும். இதெல்லாம் பெரிசாத் தெரியாது…அன்றாடம் கடந்து போகிற விஷயம்னு சகஜமாகியிருக்கும்…அப்டியில்லாததுனால, குண்டுச் சட்டிக்குள்ள குதிரை ஓட்டின மாதிரி….எப்பயாவது ஒண்ணு நடக்குற போது….அது உனக்குப் பிடிக்க மாட்டேங்குது…மனசு ஏத்துக்க மறுக்குது…..அர்த்தமில்லாமக் கோபப்படுது….

            ஃப்ரெண்டுன்னு ஒருத்தனை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திருக்கானே…..அவனுக்கு ஒரு லட்சணம் வேணாம்? யார் யார்கூடப் பழகுறதுங்கிறது தெரியாதா அவனுக்கு? கன்னங் கரேல்னு…கரிக்கட்டையா?.அவன் யாரோ…எவரோ…? காலிப்பய மாதிரி…இருக்கான். இருந்திருந்தும் பிடிச்சிருக்கான் பாருங்க ஃப்ரெண்டுன்னு…தேடியெடுத்தேனே திருவாழி மோதிரத்தன்னு….! பார்க்க லட்சணமா, புத்திசாலியா ஒருத்தன் கிடைக்கலியா இவனுக்கு?

            இந்தப் பழமொழிய பொம்பளைக்கில்ல சொல்வாங்க…இத நீ ஆம்பளைக்கு அப்ளை பண்ற? – என்னைக் கோபப்படுத்தவே முடியாது என்பதாய் இருந்தது அவரது கேள்வி. கூடவே அவள் சொன்ன இரண்டு வார்த்தைகள் அவரைச் சங்கடப்படுத்தின. எதற்கு இப்படியெல்லாம் பேசுகிறாள்? அவள் வயசுக்கு இது ஆகுமா?  இந்த வார்த்தைகளையெல்லாம் உபயோகப்படுத்தலாமா? அறிவு முதிர்ச்சி, மன முதிர்ச்சி இவற்றின் அடையாளங்களா அவைகள்? என்று தோன்றி வருத்தியது.

            அப்போ பார்க்க லட்சணம்னு நீ எதைச் சொல்றே? சிவப்பா இருக்கிறதையா? சிவப்பா இருந்தா அவன் புத்திசாலியாவும் இருப்பான்னு சொல்றாப்ல இருக்கே…? அப்படித்தான்னு நீ நம்புறயா? இதுதான் உன்னோட புரிதலா? நல்லாயிருக்கு…! – கொஞ்சம் ஏளனம் தொனித்தது அவரது குரலில்.

            உங்களுக்கு எல்லாமே விளையாட்டுத்தான். அதனாலதான் சொன்னேன் எதுலயும் ஒரு விவஸ்தை கிடையாதுன்னு….பேசறது எல்லாத்துக்கும் கை, கால், மூக்கு, வாய்ன்னு வச்சு பெரிசு பண்றது…ஒரு பேச்சுக்குன்னு உங்ககிட்டே எதுவுமே வாய்விட்றக் கூடாது…..ஆக்டோபஸ் மாதிரி ஆக்கிடுவீங்க….

            வாசலில் காய்கறி கூவி விற்றுப் போகும் சத்தம். அந்தம்மா நின்று உள்ளே நோக்குவது தெரிந்தது. இப்பொழுது இவள் இருக்கும் நிலையில் எங்கே காய் வாங்கப் போகிறாள்? நாளைக்கு…நாளைக்கு…என்பது போல் வாசலை நோக்கி சைகை காண்பித்தேன். சட்டென்று புரிந்து கொண்டு அம்மணி நகர்ந்தாயிற்று.

 இந்நேரம் அவளை அழைத்து வாசலில் உட்கார வைத்தால் கேட்கவே வேண்டாம். ஏன்டா கூடையை இறக்கினோம் என்று நொந்து போகும் அந்தம்மாள். பேரம் பேசுவதற்கும் ஒரு அளவில்லையா என்று தோன்றும். தோள் கடுக்கச் சுமந்து வந்து வீதியில் விற்கும் அவள் எவ்வளவு விலையைக் கூட்டி வைத்து என்ன பெரிதாகச்  சம்பாதித்து விடப் போகிறாள்? அன்றாடங் காய்ச்சி…அந்த உழைப்பே பெருமைக்குரியதாயிற்றே…?

            செம்புல கொஞ்சம் தண்ணி குடுங்க தாயி….ஒரே தாகமா இருக்கு…என்று கேட்கும்போது நெஞ்சம் உருகிப் போகும். இன்னும் வெயில் ஏறாத அந்த இளம் குளிர்ப் பொழுதில் தண்ணீர் தவிக்கிறதென்றால், அந்தச் சுமைதான் அவளுக்கு அந்த தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 இவளைப் போல இன்னும் எத்தனையோ பேர் என்னென்னவோவெல்லாம் விற்று வருகிறார்கள் இந்த வீதியில். இந்தப் பகுதியில். உலகில் இப்படிக் கஷ்டப்பட்டு உழைத்து மானத்தோடு  உண்பவர்கள்தான் அதிகம் என்பதை உணரும்போது மனசு எவ்வளவு பெருமைப்படுகிறது? இம்மாதிரி நல்ல ஜனங்கள்  ஆயிரம் ஆயிரமாய், லட்ச லட்சமாய் இருப்பதால்தான் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்று உருக்கமாய்த் தோன்றும் எனக்கு.

            மீன் விற்கிறவளுக்கெல்லாம் நாம அன்றாடம் புழங்குற  பாத்திரத்துல பிடிச்சுத் தண்ணி கொடுப்பீங்களா? இல்லன்னு ஒரே வார்த்தைல சொல்லி அனுப்ப வேண்டிதானே? கையால அளைஞ்சு அளைஞ்சு மீனத் தராசுல நிறுக்கிறா அவ. கத்தியால வெட்டி வழிச்சிப் போடுறா…தெருவே நாறுது… அந்தக் காட்சியைக் கண்கொண்டு பார்க்கவே சகிக்கலை. அந்தக் கைய உடனுக்குடனே கழுவவா போறா? அவ தொழிலே அதுதானே…அப்டியேதான போவா…அதே கையோட வந்துதானே தண்ணி வாங்கிக் குடிக்கிறா? இது தெரிய வேணாம் உங்களுக்கு? சுத்தம் சோறு போடும்னு படிச்சா மட்டும் போதுமா?

            அடிப்பாவி…! தண்ணி கேட்டா அது  தப்பா? தவிச்ச வாய்க்குத் தண்ணி குடுத்தது பாவமா? நல்லா அலம்பி வச்சாப் போச்சு…ஏண்டீ உன் மனசு இப்டியிருக்கு? இதுதான் உங்க அப்பா அம்மா வளர்ப்பா? நீயென்ன பெரிய டாட்டா பிர்லா பரம்பரைங்கிற நெனப்பா உனக்கு? உன் பேச்சுல ஒரு மெச்சூரிட்டியே இல்லையே?

             மீன் வாங்குற வீடுகள்ல வாங்கிக் குடிக்க வேண்டிதானேங்கிறேன்.  அதென்ன இங்க வந்து கேட்குறது? கிரமமா அப்புறம் வர ஆரம்பிச்சிடுவா.  அவ வந்து இந்த வாசல்ல வழக்கம்போல  நின்னா…நாமளும் மீன் வாங்கி சாப்பிடுறமோன்னு சந்தேகப்படமாட்டாங்களா? ஒரு கௌரவம் வேண்டாம்? இன்னும் அந்தக் கேவலம் வேறே வேணுமா?

            வந்து நின்னாலே உன் கௌரவம் போயிடுதா? நல்ல கதையா இருக்கு…! அப்போ காய்கறி சாப்பிடுறதுதான் கௌரவம்…மத்ததெல்லாம் கேவலம்ங்கிறே? அப்டித்தானே? புது சித்தாந்தமா இருக்கு நீ சொல்றது….

யாரோ என்னமோ பண்ணிட்டுப் போறாங்க…நம்மளுக்கு என்ன வந்தது? முன்னெல்லாம் காய்கறியத் தவிர வேறெதுவும் வீதில வராது. இப்பத்தான் எல்லாத்தையும் கொண்டு வர ஆரம்பிச்சிட்டாங்களே? காத்துல அதான் கம கமன்னு வீசுதே…! ஒரே நாராசம்….தாங்க முடியல….!  விதியேன்னுதானே இருந்தாக வேண்டிர்க்கு…பக்கத்து வீட்ல நான்-வெஜ் சமைக்கிறாங்கன்னா பட்டுப் பட்டுன்னு ஜன்னல சாத்தியாக வேண்டிர்க்கு. நாறித் தொலையுது….எங்க வீட்டுக்கு நாத்தம் வருதுன்னு சண்டைக்கா போக முடியும்? இல்ல…நான்-வெஜ்லாம் சமைக்காதீங்க…சுத்திவர ஆளுக குடியிருக்க முடிலன்னு சொல்ல முடியுமா? நிறுத்திறீங்களா இல்லையான்னு   குஸ்திக்கு நிக்க முடியுமா? எல்லா அநாச்சாரங்களும்தான் உள்ளே நுழைஞ்சாச்சே…! –

அடேங்கப்பா…என்னா பேச்சு…என்னா பேச்சு…தூள்  பறக்குது…அடங்காத நாக்கு…! எடுத்தெறிந்த பேச்சு…! உலகத்தோடு ஒட்டாத பேச்சு. என்ன படிச்சு என்ன பண்ண? – நொந்து கொண்டேன்.

            இதோ இருக்கிற உழவர் சந்தைல போனா அம்புட்டு விலை கம்மி…நீங்க என்ன யான வெல, குதிர வெல சொல்றீங்க? சுமந்திட்டு வந்து வீட்டு வாசல்ல விக்கிறீங்க…இல்லன்னு சொல்லலை…அதுக்காக விலை சொல்றதுக்கு ஒரு நியாயம் வேண்டாமா?.வரம்பில்லையா? ..என்று ஆரம்பித்து விடுவாள். அவள் என்னென்ன பேசுவாள் என்று எனக்கு அத்துபடி.

            இவள் என்னதான் தன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறாள்? இவளைத் தவிர மற்றதெல்லாம், மற்றவர்களெல்லாம்  மட்டம், கேவலம் என்கிற குருட்டு எண்ணத்தில் இருக்கிறாளோ?  பக்குவமேயில்லையே? இந்த லட்சணத்தில் என்னை விவஸ்தை கெட்டவன் என்கிறாள். இவளை என்னென்று சொல்வது? பதிலுக்கு பதில் நானும் மல்லுக்கு நின்றேன் என்றால் வீடே எப்போதும் நரகமாகி விடுமே?

            எனக்கு வயசு அறுபத்தஞ்சு…இனிமே எதுல விவஸ்தை வேணும்ங்கிறே…ரிடையர்ட் ஆனப்புறம் என்னோட சர்க்கிளே ரொம்பக் குறைஞ்சு போச்சு….மீதிக் காலத்தை எந்த வம்பு தும்பும் இல்லாம சந்தோஷமா நிம்மதியா ஓட்டிட்டுப் போனாப் போதும்னு நான் இருக்கேன். எதுக்கு அநாவசிய டென்ஷன்?

            அதுக்கில்லீங்க…அவன் நல்ல ஆட்களோட பழகறானா இல்லையா…அவன் ஃப்ரென்ட்ஸெல்லாம் எந்த டைப்ல இருக்காங்க….அவனோட போக்குவரத்து எப்டியிருக்குன்னு கண்காணிக்க வேண்டாமா? அது நம்ம கடமையில்லையா? நீங்கபாட்டுக்கு எனக்கென்னன்னு இருந்தீங்கன்னா? அதான் கேட்டேன்…..அதுக்குத்தான் இம்பட்டுப் பேச்சு…வேணுங்கிறது…வேண்டாததுன்னு….நீங்கதான் என் வாயைக் கிளறி விட்டுர்றீங்களே….?

            பயப்படாதே…பையன் போக்குவரத்து எல்லாம் சரியாத்தான் இருக்கும்….தப்பால்லாம் எதுவும் நடக்காது…நம்பு…….அநாவசியமாப் பயப்படாதே…நம்ம பையன் மேலே நாமளே நம்பிக்கை வைக்கலேன்னா எப்படி? .முதல்ல எனக்கு ஒரு அரை டம்ளர் டீயப் போடு….பிறகு பார்ப்போம் மத்ததையெல்லாம்…..-அலட்டிக்கொள்ளாமல்  சொல்லி கையில் தினசரியோடு அமர்ந்தார் சற்குணம்.

            கரிக்கட்டை…காலிப்பயல்….என்று அவள் சொன்னது இவரைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது.  மாடியில் இருக்கும் அவர்கள் காதில் விழுந்தால்? ரித்விக் காதில் கேட்டாலே கொதித்து விடுவானே? இவள்பாட்டுக்குச் சத்தமாய்க் கத்துகிறாள்? வந்திருக்கும் அந்தப் பையன் காதில் விழுந்தால் அவன் மனசு எவ்வளவு  சங்கடப்படும்? மகனுடைய  நண்பன் என்று வந்திருப்பவனை, ரெண்டே ரெண்டு நாள் இருந்து விட்டுப் போகக் கூடியவனை எதற்கு இவள் இப்படிப் பார்க்கிறாள்? மனது வக்கிரப்பட்டுப் போய்க் கிடக்கிறதா? வளர்ந்த விதம் அப்படி…வேறென்ன சொல்ல…..வறுமையின் கோரப்படியில், பசியின் அவலத்தை உணர்ந்திருந்தால், இளம் பிராயத்தில் கஷ்ட நஷ்டங்களைப் பார்த்திருந்தால், அனுபவித்திருந்தால் இப்படியெல்லாம் மனதிற்குத் தோன்றுமா? தோன்றினாலும் வெறுப்பதுபோல் பேச வாய் வருமா? சின்ன வயசிலிருந்து எளிய மக்களோடு பழகியிருந்தால் இந்த வெறுப்பு தலையெடுக்குமா? நல்ல வேளை…இந்த வீட்டில் மாடி என்று ஒன்று கட்டினேன். விருந்தினர்கள் என்று வந்தால் வசதியாய்த் தங்க வைக்க…அவரவர் சுதந்திரம் பராமரிக்க….!

            ஒருவனின் நிறம் அவன் பொறுப்பா? ஒருவனின் உருவ அமைப்பு அவனாக வரித்துக் கொண்டதா? அது தாய் தந்தையர் மூலம் கிடைத்ததல்லவா? அப்படியே இருந்தாலும் அதைக் கண்டு ஏளனம் கொள்ளலாமா? மனது வெறுக்கலாமா? உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்று இவள் படித்ததில்லையா? ஒருவனின் அழகுதான் அவனது மதிப்பா?  மனிதர்களுக்குக் குணம்தானே முக்கியம்? பண்பாடும் நன்னடத்தையும் அவன் அடையாளங்களாய் இருக்கின்றனவா என்றுதானே  பார்க்க வேண்டும்?

நேற்றிரவு வந்திருந்த அவர்களிடம் இன்னும் ரெண்டு வார்த்தை கூட நேருக்கு நேர் அமர வைத்துப் பேசியாகவில்லை…அதற்குள்ளுமா இப்படியெல்லாம் நினைப்பது? என்ன நினைக்கிறாள் இவள்? செக்கச் செவேல் என்று, படியத் தலைவாரி, நெற்றியில் விபூதியிட்டு,  வந்து நின்று வணங்கினால்தான் நல்லபிள்ளை, நமக்கேற்ற பிள்ளை, தன் பிள்ளையின் நண்பன் என்று நினைக்கிறாளா?  மத்தவனெல்லாம் வேஸ்ட் என்று கருதிவிட்டாளா? என்ன பார்வை இது? என்ன கண்ணோட்டம் இது? சியாமளாவை நினைக்கச் சங்கடமாய்த்தான் இருந்தது. ஆச்சாரங்கள், அனுஷ்டானங்கள் இவைதான் நியமங்கள் என்றால் இந்த வக்கிரங்கள் எங்கிருந்து முளைத்தன? இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி நிச்சலனமாய் நோக்கும் பரந்த பார்வை என்பது யாருக்கும் கைகூடுவதில்லையா? தனி மனிதச் சிந்தனைகள் என்பது அவரவர் வளர்ப்பு சார்ந்ததா? அதனைச் சீர்ர்தூக்கிப் பார்த்து, வேண்டியதை வைத்துக் கொண்டு, வேண்டாததை ஒதுக்கி விடும் பக்குவத்தை நியமங்கள் ஏற்படுத்துவதில்லையா? தனி மனித ஒழுக்கம் என்பது மனிதப் பக்குவத்தையும் அடையாளப்படுத்துவதுதானே?

            பையன் பிறந்தபொழுது அவனுக்குப் பெயர் வைப்பதில் ஒரு போராட்டம் நடந்தது இவர் நினைவுக்கு வந்தது. அவளிஷ்டத்துக்குத்தான் வைத்தாள். இவரொன்றும் குறுக்கே நிற்கவில்லைதான். ஆனாலும் யோசனை சொல்ல வேண்டியது தன் கடமையாயிற்றே என்று சிலவற்றை முன் வைத்தார்.

            ரித்விக் என்று பெயர் வைக்கும்போதே சொன்னேன். இதெல்லாம் ரொம்ப ஓவர்னு….என்ன பேருன்னு இதை செலக்ட் பண்றே…? ஒரு மிடில் கிளாஸ் பேரு, நார்மலா இருக்கிறமாதிரி  உனக்குக் கிடைக்கலியா?    முன்னோர்கள் பெயரை வைப்பாங்கன்னு கண்டிருக்கு….! அவங்களை நினைவு கூர்ற மாதிரி வச்சா….ஆசீர்வாதம் கிடைக்கும்னு…மாதவா, கோவிந்தா, விஷ்ணு,  மதுசூதனா, திருவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா….ன்னு தாத்தா பெயரான கிருஷ்ணனை நினைக்கிற மாதிரி எது வேணாலும் வைன்னு சொன்னேன்….காதுலயே வாங்க மாட்டேன்னுட்டே….அவங்கவுங்க வீட்டு முன்னோர்கள் பெயரை வைக்கிறதும், அதை நினைவுபடுத்திறமாதிரியான பெயர்களைத் தேர்வு செய்யுறதும்தானே முறை…வழக்கம். ரித்விக், ஸ்புட்னிக், கட்டக் புட்டக்னு  நாக்கு சுளுக்கிக்கிற மாதிரி பெயர்களை ரொம்ப நாகரீகமா நினைச்சு வைக்கிறீங்க. கூகுள்ல தேட வேண்டியது….அதுக்கு என்ன அர்த்தம்னே தெரியாம நாமகரணம் சூட்ட வேண்டியது…அப்புறம் அதுக்கு நாமளே ஒரு அர்த்தம் கற்பிச்சிக்க வேண்டியது…இதானே நடக்குது இப்போல்லாம்….நாம நம்ம பையனுக்குப் பேர் வச்சே வருஷம் இருபதுக்கு மேலே ஆகப் போவுது….அப்பயே நீ ரொம்ப ஃபார்வர்டு…அதானே பெருமை….ஒரு பேர் வச்சா…அதுல அவுங்க ஃபேமிலி, பரம்பரை  அடையாளம் தெரியணும்…அப்டித்தான் பேர் செலக்ட் பண்ணனும்…அந்த வழக்கமெல்லாம் போச்சு…  இப்ப எங்க இருக்கு இதெல்லாம்?…எல்லாருக்கும் எல்லாப் பேரையும்தான் வைக்கிறாங்க….

            ரித்விக்ங்கிறது நல்ல பேர்தான்….நாகரீகமான பெயர்…தன்னைச் சுத்தியுள்ளவங்களுக்கெல்லாம் உண்மையா இருக்கிறவன்னு போட்டிருக்கு…அப்போ அது நல்ல பேர் இல்லையா?

            கூகுள்ங்கிறது அதுவா உதிச்சதில்ல….எவனோ ஃபீட் பண்ணி வச்சிருக்கான். அதைக் காண்பிக்கிறது அது. அவ்வளவுதான். அப்போ அப்டிப் பேர் உள்ளவன் மட்டும்தான் உண்மையா இருப்பானா? பேருக்கேத்தமாதிரி உண்மையா இருப்பான்கிறதுக்கு என்ன கியாரண்டி? சங்கிலின்னு பேரு வச்சிருந்தா அவன் திருடனா இருப்பான்னு சொல்லுவே போலிருக்கே…? எல்லாச் சாமி பேரும் எல்லாருக்கும்தான் இருக்கு…சாமி பேரு உள்ளவன்லாம் யோக்கியனா? அமாவாசைன்னு பேர் இருந்தா அவன் அமாவாசையன்னிக்குப் பிறந்தவன்னு அர்த்தமா?  இருட்டுப் போல அவன் கன்னங்கரேல்னுதான்  இருக்கணும்னு சொல்லுவ போல்ருக்கு? எப்டியோ…நம்மளோட நல்ல பழக்கங்களெல்லாம் நாகரீகம்ங்கிற பேர்ல கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சிட்டே வருது…இதுதான் சத்தியமான உண்மை…!

            இதைச் சொன்னபோது அவள் வாயடைத்துப் போனது. இந்தாள்ட்டப் பேசி முடியாதுன்னு நினைச்சிருக்கலாம். கிறுக்குன்னு கூட நினைச்சிருக்கலாம். சிரிப்புதான் எனக்கு.

            காலை டிபன் ரெடியாகி விட்டது. பூரியும் மசாலாவும். ரித்வீக்க்க்க்…..டிபன் ரெடி…வரலாம்….என்று இங்கிருந்து மாடியை நோக்கிக் கத்தினாள்.

            பதிலே இல்லை அங்கிருந்து. விடுவிடுவென்று மாடிக்குப் போன சற்குணம் போன வேகத்தில் கீழே இறங்கி வந்தார்.

            இப்பத்தான் பள்ளியெழுச்சியே ஆகியிருக்கு….என்றார் இவளைப் பார்த்து.

            மணி பத்தாச்சு…இன்னுமா எழுந்திரிக்கல….என்னடா காபி குடிக்க வரல்லியே…ன்னு பார்த்தேன். சரி டிபனோட சாப்பிடட்டும்னு விட்டா…இந்தக் கதையா? பார்த்திட்டு வந்திட்டீங்களா? எழுப்ப மாட்டீங்களா? நீங்களும் போய் அவங்களோட படுத்துக்குங்க…போங்க…!

            யம்மா…யம்மா…எழுந்திரிச்சாச்சு…கத்தாதே…கத்தாதே…பல் தேய்ச்சிட்டு குளிச்சிட்டு ஒரேயடியா கீழே வந்திடறோம்…தயவுசெய்து கொஞ்சம் பொறுத்துக்கோ…ஸாரி…ஸாரி…ஸாரி….

            ஆயிரம் ஸாரி சொல்லிக் கொண்டு மாடியிலிருந்து குரல் அலறியது.

            சிரித்துக் கொண்டே உள்ளே போனாள். தான் சொல்லிக் கேட்கும் ஒரே ஜீவன் என்று நினைத்திருப்பாள். என் மீதுதான் நம்பிக்கை கிடையாதே…எல்லாத்துக்கும் கொடுத்து வைக்கணும்….!!

            ம்மா…நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளில போயிட்டு வந்திடறோம்….-மத்தியானம் அவன் அவுங்க ஊருக்குக் கிளம்பறான்…போற வழிக்குத்தான் இங்க வந்திருக்கான்…புரியுதா…-டிபனை அபக் அபக்கென்று அள்ளிப் போட்டுக்கொண்டு அவர்கள் இருவரும் கிளம்பியது பார்க்கவே வேடிக்கையாய் இருந்தது. ஆசை ஆசையாய்ச் செய்து வைத்ததை ரசித்துச் சாப்பிடாமல் இப்படி காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டது போல் பறக்கிறார்களே என்று அமைதியாய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள் சியாமளா. நல்லவேளை முகத்தைச் சுளிக்கவில்லை…எதையும் கோளாறாய்ப் பேசவில்லை.

எல்லா வீச்சும் விறைப்பும் நம்மகிட்டதான் போல்ருக்கு…பையன்ட்டப் பொட்டிப் பாம்பா  அடங்கிக் கிடக்காளே…அவன் எது செஞ்சாலும் சரிதான் போல்ருக்கு…! தாய்க்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு…!

அந்தப் பையன் இன்னொரு பூரி போடுங்க ஆன்ட்டி….என்று கேட்டு வாங்கிக் கொண்டது இவளை மகிழ்ச்சிப்படுத்தியது. உனக்காச்சும் பிடிச்சிருக்கே…ன்னு ஒண்ணுக்கு ரெண்டாகக் கொண்டு வந்து அவன் தாலத்தில் வைத்தாள் சியாமளா…! பெருமையோடு இவரைப் பார்த்துப் புன்னகை செய்து கொண்டாள்.

அவர்கள் கிளம்பிப் போன பிறகு கேட்டார் இவர். இன்னிக்கு நீ சுட்ட பூரி இந்த ஏழைக்கும் உண்டா இல்லையா? எதையாச்சும் பசங்க மிச்சம் வச்சிருக்கானுங்களா…இல்ல காலி பண்ணிட்டாங்களா? அவுக்கு அவுக்குன்னு உள்ள தள்ளினதுல….போன வேகமே தெரில…இதுல எத்தனைன்னு எப்டி கணக்குப் பண்ண முடியும்…? எண்ண முடிலயே….எண்ணி முடிலயா..என்ன முடில? என்று வசனம் பேசினார். உள்ளுக்குள்ளே சியாமளாவின் உபசரிப்பு கண்டு அவருக்குள் மகிழ்ச்சி கிளர்ந்திருந்தது.

எங்கயாச்சும் குழந்தைங்க சாப்பிடுறத எண்ணுவாங்களா? திருஷ்டி பட்டுடப் போகுதுவயசுப் பசங்கநன்னா சாப்டாத்தான திடகாத்திரமா இருக்க முடியும்நீங்கதான் சொல்வீங்களேஅந்தக் காலத்துல பன்னெண்டு தோசை சாப்பிடுவேன்னுஅத மாதிரித்தானே நம்ம பிள்ளைங்களும்….இந்த வயசுக்குச் சாப்பிடலேன்னா பிறகு எப்பவாம்? – பெருமை பிடிபடவில்லை அவளுக்கு. சரசரவென்று பூரி தட்டில் இறங்கிக்கொண்டிருந்ததும், இதோ வந்தாச்சு….எண்ணெய்லபோட்டிருக்கேன்பொறிஞ்சிண்டிருக்குபொறுபொறு….என்று ஓடி ஓடி வந்து பறிமாறியதும், மசால் பாத்திரத்தை அப்படியே அவர்கள் முன்னால் கொண்டு வைத்து, வேணுங்கிறதைப் போட்டுக்குங்க…என்று சொன்னதும்….- விருந்துகளை இப்படித்தான் விழுந்து விழுந்து உபசரிக்க வேண்டும் என்று மற்றவர்களுக்குச் சொல்லும் விந்தையாய் இருந்தது எனக்கு.

பொழுது விடிந்த வேளையில் அவள் பேசிய பேச்சுத்தான் என்ன…இப்போது இப்படிப் பம்பரமாய்ச் சுழலுவதுதான்  என்ன…என்று பெரு வியப்போடு  பார்த்துக் கொண்டிருந்தார் சற்குணம்.

பூரி காலி….மசாலா மட்டும் கொஞ்சம் மிச்சம். இன்னொரு நாளைக்குப் பண்ணிப் போடறேன் உங்களுக்கு….என்றாள்.

அதான பார்த்தேன். நம்ம ராசி அப்டித்தானே….உப்பில்லாப் பண்டம் குப்பையிலே….உவப்பான பண்டம் கற்பனையிலே….!

யப்பா…இந்த வாய் இருக்கே…ஆனாலும் ரொம்ப அதிகம்…சபிக்காதீங்கோ….நாளைக்கே பண்ணிப் போட்டுடறேன்…

சிரித்துக் கொண்டே மாடியை நோக்கிப் போனார் சற்குணம். அங்க என்ன களேபரம் பண்ணி வச்சிருக்கானுங்களோ இந்தப் பசங்க…போய்க் கொஞ்சம் சுத்தம் பண்ணுவோம்….என்று நினைத்துக் கொண்டே படிகளில் ஏறினார். மணி பன்னிரெண்டு நெருங்கிக் கொண்டிருந்தது.

மத்தியானம் சாப்டுட்டுக் கிளம்பறானா…இல்ல அப்டியேவா…? – சந்தேகம் தோன்ற படிகளில் நின்றவாறே கேட்டார் சியாமளாவை நோக்கி.

நார்மலாத்தான் சமைக்கப் போறேன். சாப்பிடுறதானா சாப்பிட்டுப் போகட்டும்…இல்ல இப்பயே வந்துட்டாங்கன்னா கிளம்பட்டும்…வேறென்ன பண்றது….? என்று காய்களை நறுக்க ஆரம்பித்திருந்தாள்.

 வாசலில் வண்டிச் சத்தம். இருவரும் உள்ளே நுழைவது கேட்டது.

விடுவிடுவென்று மாடி ஏறியவர்கள்….அப்பா…அப்பா…இப்பச் சுத்தம் பண்ணாாதே…நாங்க கிளம்பிடுறோம்….அப்புறம் பண்ணிக்கோ…ஒரேயடியா…! இப்ப பண்ணினேன்னா…திரும்பவும் குப்பை விழும்….

சரிப்பா….என்று இறங்கினார் சற்குணம்.

ஏய்…அந்தப் பையன் கிளம்பறான் போல்ருக்கு….நீபாட்டுக்கு அது இதுன்னு பண்ணிட்டிருக்காதே…இங்க சாப்பிடுறதுக்கு யாருக்கும் வயிறு இல்லே….-எச்சரித்தார் .

சரி…சரி…என்று நிதானித்தாள் சியாமளா.   

அள்ளிப் போட்டுக் கொண்டு இறங்கியாயிற்று. முதுகில் ஒண்ணு, கையில் ஒண்ணு என்று  பைகள். சக்கரம் சுற்றி இழுக்க வாகாக சூட்கேஸ். பார்க்கவே அழகாக இருந்தது.

பசங்க போடுற டிரஸ்ஸூம், ஷூவும், விலையுயர்ந்த வாட்சும், அந்த ஸ்டைலான கலைஞ்ச தலையும், , இளமைக்கு மெருகூட்டுவதாகத் தோன்ற மகிழ்ச்சியோடு நோக்கினார் சற்குணம்.

ஆன்ட்டி….நா போயிட்டு வர்றேன்…எங்க ஊருக்குத்தான் போறேன். அம்மா அப்பாவப் பார்த்து நாளாச்சு….கிளம்பறேன்….இந்தாங்க ஆன்ட்டி…நீங்க மறுக்காம வாங்கிக்கணும்…. – என்றவாறே அந்தக் கவரிட்டு சுற்றிய பார்சல் போலிருந்த ஒன்றை அவளிடம் நீட்டினான் அந்தப் பையன்.

இதெல்லாம் எதுக்குப்பா…? என்றவாறே உன் பேர் என்னன்னே கேட்டுக்கலை…தோணவேயில்லை…சொல்லேன்…..என்றாள் சியாமளா. முகத்தில் கொள்ளை மகிழ்ச்சி…அது ஒரு சாமி படமாக இருந்தது அவளைச் சிலிர்க்க வைத்தது. இது பூஜை அறைல இல்லியேன்னு நினைச்சேன். கரெக்டா வாங்கிண்டு வந்திருக்கே…நினைச்ச மாதிரியே ரவிவர்மா வரைஞ்ச படம்…ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்…உனக்குக் கோடிப் புண்ணியம்….                                                     

வணங்குறேன் ஆன்ட்டி…ஆசிர்வாதம் பண்ணுங்க…அங்கிள் நீங்களும் வந்து நில்லுங்க….என்றான் அவன்.

பேர் சொல்லலியே…! நன்னா இருக்கணும்….படிச்சு முடிச்சி நல்ல வேலைக்குப் போயி…அழகா கல்யாணம் பண்ணின்டு, குழந்தை குட்டிகளோட சௌக்கியமா, தீர்க்காயுசா இருக்கணும்….போயிட்டு வா…இன்னும் கொஞ்ச நேரம் இருந்தீ்ன்னா சமைச்சி முடிச்சிடுவேன்….அதுக்குள்ளேயும் கிளம்பறேள்…இருக்கட்டும் பரவால்லே….சௌக்கியமா சந்தோஷமாப் போயிட்டு வா….

சொல்லிக் கொண்டேயிருந்தாள் சியாமளா. அவள் வாயிலிருந்து வாழ்த்துக்கள் பொழிந்து கொண்டேயிருந்தன. சிலையாய் நின்று எதுவும் சொல்லத் தோன்றாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் சற்குணம்.

திடீரென்று இவருக்கு  ஞாபகம் வர….உன்னோட பேர் கேட்டாங்களே…சொல்லாமயே போறியே….என்று நினைவு படுத்தினார்.

திருவேட்டை….அங்கிள்…..எங்க ஊர் குலதெய்வம் சாமி பேரு…திருவேட்டை அய்யனார்…! அந்த வருடாந்திரத் திருவிழா வழிபாட்டுக்குத்தான் இப்பப் போயிட்டிருக்கேன்….. என்றவாறே பை அங்கிள்…பை ஆன்ட்டி….என்றவாறே மகிழ்ச்சியாய்க்  கையசைத்துக் கிளம்பிய அவனைப் பின் தொடர்ந்தான் ரித்விக்.

பஸ் ஏற்றிவிட்டுட்டு வந்துடறேன்…..-என்றவாறே அவனின் பைச்சுமையை முதுகில் ஏற்றிக் கொண்டான் ரித்விக்.

அவர்கள் நெருக்கமாய் கலகலப்பாய்ச்  செல்வதையே மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர் இருவரும்.

திருவேட்டை…திருவேட்டை – என்ற அதுநாள் வரை கேள்விப்படாத அந்தப் பெயரையே சியாமளாவின் வாய் திரும்பத் திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

                                                                       ------------------------------------

 

           

26 அக்டோபர் 2023

 

                                                                                                                                                                                                                                                                    ஒப்பனையில்லாத மனமொழி நடை                                                           உஷாதீபன்

 

ன் எழுதுகிறேன் என்பது  குறித்து சில எளிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.                                                                                                                                                                                   படிப்பனுபவத்திலிருந்துதான் படைப்பு அனுபவம் கிடைக்கிறது. எனவே இரண்டையும் பிரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.                    தொடர்ந்த வாசிப்பனுபவம் என்பது படைப்பனுபவத்திற்கு ஊக்கமளிக்கிறது.                                                                                                                                                                 ஓரு மனிதனுக்கு வாழ்க்கையில் இரண்டு விதமான அனுபவங்கள். ஓன்று அவனது சொந்த வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளக் கூடியவை. இன்னொன்று அனுபவப்பட்டு முதிர்ந்து, அதனை எழுத்தில் வடித்து வைத்திருக்கும் பெரியோர்களின் எழுத்துக்களை அவர்களது அனுபவங்களைப் படித்தறிதல்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             இந்தப் பயிற்சியை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமானால்தான் விஷய ஞானம் என்பது நமக்குக் கைகூடும். அறிவு ஜீவியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உலகாயத அனுபவம் கைகூட வேண்டும்.                                                                                                                                                  அது எப்படிக் கிடைக்கும்? இந்த உலகத்தில் எதுவுமே சும்மாக் கிடைக்காது. ஓன்று கொடுத்தால்தான் ஒன்று கிடைக்கும். நிறைய  படிக்க வேண்டும் என்றால் நம் நேரத்தை அதற்குக் கொடுக்க வேண்டும். மூளையைச் செலுத்திப் படிக்கும் உழைப்பை அதற்கு வழங்க வேண்டும். மேலோட்டமான வாசிப்பில்லாமல், ஆழமாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கை கூடும். அப்படிக் கைகூடும்போது வேண்டாத புத்தகங்களை நிறையப் படித்து நேரத்தை வீணாக்கியிருக்கும் தெளிவு கூட ஏற்படும்.                                                                                                                                                                                                                                                நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்தல் மட்டுமல்ல. அதனைக் காசு கொடுத்துத் தயங்காமல் வாங்கிப் படித்திட வேண்டும்.        அது எங்கு ஓசியில் கிடைக்கும், யாரிடம் இரவல் பெற்று வைத்துக் கொள்ளலாம் என்று அலையக் கூடாது. ஓரு நல்ல எழுத்தாளனாக  இருப்பதைவிட, ஒரு நல்ல வாசகனாக இருப்பது மிகவும் கடினம். அது மிகப் பெரிய விஷயமும்கூட. வாசகனாய் இருப்பது கேவலமல்ல.         எழுத்தாளனாய் இருந்து மனசையும் உடலையும் கெடுப்பதுபோல் அசிங்கங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி எழுதிப் பெருமைப் பட்டுக்கொள்வதைவிட, அதன் மூலம் கிடைக்கும் விருதுகளைப் பெறுவதைவிட, அறிவுபூர்வமான வாசகனாய் இருப்பது சாலச் சிறந்தது.                                                                                                                        தேர்ந்த வாசகர்கள் மிகப் பெரிய அரிதான விஷயங்களை உள்ளடக்கியவர்களாக இருப்பார்கள். அவர்களை, நமக்கு மட்டுமேதான் தெரியும் என்கிற நோக்கில் அப்படி எளிதாக ஏமாற்றி விட முடியாது.                                                                                                                                                                                      நான்இலக்கிய வாசகன்என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது ஒரு முக்கியமான உள் உணர்வு. நான் பொழுதுபோக்கிற்காகப் படிப்பவனல்ல. வாழ்க்கையை அறிவதற்காகப் படிப்பவன். நான் வாசிப்பை உழைப்பாக எடுத்துக்கொள்ள அஞ்சாதவன் என்ற எண்ணம் வேண்டும். இதனை ஜெயமோகன் தன் அனுபவ சாரத்தில் வலியுறுத்திச் சொல்கிறார்.                                                                                                                                                                                                                                                                        இலக்கிய வாசிப்பு என்பது ஒரு இலக்கியப் படைப்பானது மொழியின் வழியாக வாசகனின் ஆழ் மனதுடன் தொடர்பு கொள்ளும் முறையாகும். இது அக மனத்தை முன்னிறுத்தி நடத்தப்படுவது. வாசிப்புப் பயிற்சி என்பது அக மனத்தை வாசிப்புக்குப் பழக்கப்படுத்துவதுதான் என்கிறார்.                                                                                                        

வாசிப்பு மனித குலத்திற்கு மட்டுமே வாய்த்த பெறும் பேறு. வாசிப்பு மூலம் மிகப் பெரிய விவேகத்தை அடைந்தவர்கள் இருக்கிறார்கள். ஆழ்ந்த வாசிப்பு நம் சளசளப்பைப் போக்கி மௌனத்தைத் தருகிறது. புத்தகங்களை மட்டுமல்ல, மனிதர்களையும், மரம், செடி கொடிகளையும், சகல உயிரினங்களையும் வாசிக்கக் கற்றுக் கொள்பவன்தான் மேலான வாசகன். இது மறைந்த முதுபெரும் படைப்பாளி திரு சுந்தரராமசாமி அவர்களின் அழுத்தமான கூற்று. எத்தனை சத்தியமான உண்மை என்பதை நம் அனுபவத்தில் நாம் உணர முடியும்.                                                                                                                                                                                                                                                                               இந்தப் படிப்பனுபவத்திலிருந்து, படைப்பனுபவம் கிடைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. மிகச் சிறந்த படைப்புக்களைப் படிக்கும்போதுஇதுபோல நம்மாலும் எழுத முடியுமா? என்ற ஆதங்கம் தோன்றுகிறது.  இந்த ஆதங்கம்தான் படைப்பை உருவாக்கும் சக்தியாகப் பரிணமிக்கிறது.                                                                                                                                                                                                            குடும்பச் சூழலில் அடக்கு முறைக்கு ஒடுங்கிப் போன வருத்தமும், கோபமும், நம் மனதில் படிந்து கிடக்கின்றன. அவை நம் நெறிபிறழாத ஒழுக்கமும், செம்மையுமான வாழ்க்கைக்கு அடிநாதமாக அமைந்தன என்பதை மறுக்க முடியாதுதான். என் வாழ்க்கை அப்படிப்பட்டதுதான். அந்த பாதிப்பில்தான் நான் எழுத வந்தேன்.                                                                                                ஆனாலும் அடிமனதில் படிந்து போன கோபங்களும,; வருத்தங்களும், நமது இருப்பையும், சுதந்திரத்தையும், நிலை நாட்டிவிட வேண்டும் என்ற ஆவேசத்தை நமக்கு ஊட்டி விடுகின்றன.                                                                                                                                                                                                                                   இதற்கு உகந்ததாக, மனித குலத்தின் நன்மையை ஒட்டு மொத்தக் குறிக்கோளாகக் கொண்டிருந்த சிந்தனைகள் என் மனதை வெகுவாகக் கவர்ந்தன. அச்சிந்தனை சார்ந்த கனவுகளும், அந்தக் கனவுகளிலிருந்த தர்க்கங்களும், என் எதார்த்த மனதுக்கு இசைவாக இருந்தன.                                                                                                                                                                                                                                         மேலான வாசகனாக இருத்தல் மேன்மையான படைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று சொன்னேன். வாழ்க்கைச் சூழல்கள் எல்லோருக்கும் மிதமான முறையில் அமைந்தால்தானே இது சாத்தியம்?                                                                                                                                                                                                               படிக்க வேண்டும் என்றால் நல்ல குடும்பச் சூழல் அமைய வேண்டும். அதுவேதான் எழுதுவதற்கும் என்பேன். மன அமைதி, இட அமைதி, சுமுக நிலை இருந்தால்தான் இது சாத்தியம். இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதார நிலை என்ற ஒன்றும் வெகு முக்கியமான ஒன்றாக அமைந்து போகிறதல்லவா?                     இப்படியான இக்கட்டுகளுக்கு நடுவேதான் நான் எழுத வந்தேன். வறுமைதான் என்னை எழுத வைத்தது. என் தாய் தந்தையரின் உழைப்பும் தியாகமும்தான் என்னை எழுதத் தூண்டியது. அதில் மற்றவர்களுக்குச் சொல்ல ஏராளமாய் இருப்பதாக உணர்ந்தேன்.                                                                                    எழுத்தாளர்களும் சராசரி நடப்பியல்புகளுக்கு உட்பட்டவர்கள்தான். ஆனாலும் சற்றே வித்தியாசப் பட வேண்டாமா? அதுதானே நியாயம்?                                                                                                                               இந்தச் சமுதாயத்திற்குச் செய்தி தரக்கூடியவன், மனித மனங்களை ஆட்டிப் படைக்கக் கூடியவன், மனிதச் சிந்தனைகளை மேம்படச் செய்யக் கூடியவன், சக மனிதனை, அவனது மென்மையான உணர்வுகளை, அவன் நெஞ்சின் ஈரப் பகுதியை, ஆழப் புதைந்திருக்கும் நன்னெறிகளை, சிறிதளவேனும் தட்டி எழுப்பிட வேண்டும்தானே? ஒரு படைப்பின் நோக்கம், அதுவாகத்தானே இருக்க முடியும்? இருக்க வேண்டும்? அதுதானே ஒரு படைப்பாளியின் அடையாளம்?                                                                                                                                                                                                                                என் அடையாளம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது அதுதான். இலக்கினை இயம்புதல். அந்த இலக்கு மனித வாழ்க்கைக்குப் பயன் தரத்தக்கதாக அமைய வேண்டும்.  என் எழுத்து அனுபவம் அப்படிப்பட்டதுதான். அன்றாடம் நாம் காணும் மனிதர்களிடையே எனக்கு ஏற்பட்ட அனுபவமே என் எழுத்து.                                                                                                                                                                                                                                           வாழ்க்கையில் மனிதர்கள் வெகு சகஜமாகக் காட்சியளிக்கிறார்கள். யதார்த்தம் மிளிரும் அவர்களின் இயல்புகளில் பண்பாடு அங்கங்கே தலைதூக்கி நிற்கிறது.          நிறை குணங்களுடனும், பற்பல குறைகளுடனும்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையை ஆழ அறிந்து அதனுடன் உறவு வைத்துக் கொள்வதே நேசம். இந்த நேசத்தை உருவாக்குவது இலக்கியம். அதனை என் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பேன். இது என் அவா.                                                                                                                     வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம்.                                                                                                                                            இது புதுமைப்பித்தன் கூற்று.                                                                                                                                                                    ரசனையைச் சொல்லுவது என்பது இலக்கியத்திற்கு மிகவும் அவசியம்தான். ரசனை இல்லையென்றால் ஒருவன் எழுத்தாளனாக முடியாது. ஆழ்ந்த ரசனைதான் ஒரு படைப்பாளியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.                                                                                                                 ஒரு சாமான்யர் ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும், அதையே ஒரு படைப்பாளி பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.                                                                                                                                      ஒரு பூவைப் பார்த்ததும் அதைப் பறிக்க நினைப்பவன், பறிப்பவன் சாமான்யன். ஆனால் அதைச் செடியிலேயே வைத்து, பச்சைப் பசுந்தளிர்களுக்கு நடுவே பட்டுப்போன்ற பளபளப்புடன் மலர்ந்து சிரிப்பதைக் கண்டு மயங்கி நிற்பவன் படைப்பாளி.                                                                                                                                                                                                                                                                                                            இதைத்தான் கலைத் தன்மை என்கிறார்கள். மிகுந்த ரசனையின்பாற்பட்ட விஷயம் இது.      கதைகளின் உள்ளடக்கம் முற்போக்காக இருந்தாலும், அவற்றின் கலைத் தன்மை வலுவாக இருந்தால்தான் எழுத்தாளன் பெயர் சொல்லும்.                                                                                                               இந்தக் கலைத் தன்மை, படைப்பின் நேர்த்திக்கு, வாசிப்பு அனுபவத்துக்கு, அதன் கட்டுக் கோப்புக்கு உதவும் என்கிற நிலையில், எழுத்தின் பயன் என்ன? எழுத்தாளனின் திறமை வெளிப்பட்டால் போதுமா? எழுத்தின் பயன்பாடு என்னாவது?                                                                                  அங்கேதான் எழுத்துக்கான அவசியம் அதிகமாகிறது. என் படைப்புக்களின் அடிநாதம் அங்கேதான் ஜனிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.                                                                                                              இலக்கியம் மனிதனை நெறிப்படுத்துவதாக அமைய வேண்டும். அப்படித்தான் நான் என் கதையுலகுக்கு வந்தேன்.                                                                                                                                                                                              என்னை எழுதத் தூண்டியது எனது அனுபவங்கள். என் தாய் தந்தையரோடு இயைந்த என் வாழ்க்கை.                                                                                                                                                                                                              என் படைப்புக்கள் முன்னிறுத்துவது மனித நேயம். என்னைப் பாதிக்கும் விஷயங்களை நான் எழுத முனைகிறேன். எழுதுவது போலவே இருக்கவும் முயல்கிறேன். இருந்துகொண்டுமிருக்கிறேன்.                                                                                                                                                                  எந்தவொரு நிகழ்வையும் அன்பு, கருணை, உண்மை, நேர்மை, நியாயம் என்ற வட்டத்திற்குள்ளிருந்துதான் என்னால் பார்க்க முடிகிறது. மனிதர்கள் அதிலிருந்து பிறழும்போது என் மனம் புழங்குகிறது. உள்ளுக்குள் நான் கோபம் கொள்கிறேன். மனசுக்குள் அழுகிறேன். எனது கோபத்தின், சோகத்தின் வெளிப்பாடாகவே அவற்றின் வடிகாலாகவே எனது படைப்புக்கள் உருவாகின்றன.                                                                                                                                                                                 எனது இந்த அனுபவங்கள் அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் சக மனிதர்களிடமிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. அவர்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். ஆகையால் எனது கதையுலகம் வாசகனுக்கு மிக எளிமையாய் அமையும்.                                                                        சக மனிதர்களின்பாலான நேசமும், நிதானப் போக்கும், வாசகர்களிடம் மேம்படுமாயின், அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி.                                                                                                               எப்பொழுதுமே எனது எழுத்தில் நான் அதிக முக்கியத்துவம் அளிப்பது மனிதர்களின் மன உணர்வுகள்பற்றியே. உள்ளார்ந்த நெறிகள்பற்றியே. இவை எப்படியெல்லாம் ஒரு சராசரி மனிதனிடம் வெளிப்படுகின்றன, அந்த வெளிப்பாடு ஒருவனின் உணர்வுகளோடு, ரத்தத்தோடு கலந்து போன நன்னெறிகளின் அடையாளமாக எப்படியெல்லாம் பரிணமிக்கின்றன என்பதையே மையப்படுத்த முனைகின்றேன்.                                                                                                                                           நான் வளர்ந்த சூழ்நிலை, பார்த்த, பழகிய மனிதர்கள், அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அனுபவங்கள் இவைதான் எனக்குக் கதையைத் தருகின்றன.                                                                     இவர் படைப்புக்களில் பாவனை இல்லை. பகட்டு இல்லை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. இவரது மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது. மன உலகம் கதையுலகமாக விரிகிறது. அன்றாட அனுபவ எல்லைக்குள், மனசுக்குள் பதிவாகிற நிகழ்வுகளே கதைகளாயிருப்பவை. அதனாலேயே நேர்மையும், மன உண்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.     இது மேலாண்மை அவர்களின் என் எழுத்துபற்றிய கூற்று.                                                                                                                                                                                                        அவரது வரிகளிலேயே கூறி உறுதி செய்கிறேன். எனது அனுபவ எல்லைக்குட்பட்ட ஒரு சம்பவத்தை, சம்பவத் துளியை மட்டுமே சிறுகதையாக்குவது, உலுத்தாத மொழி நடை, வாசக மனதில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்தல், சிறிய அழுக்கைத் துடைத்தல், சிறிய சோகம் கவிழச் செய்தல், வெளிச்ச நினைவு மின்னி மறைதல், என எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயிர் வடிவமாகக் கொண்டிருத்தல். மத்திய தர வர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு இவையே என் கதைகளின் வழித்தடம். இப்படித்தான் நான் என் எழுத்துலகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் ஏன் எழுதுகிறேன்  என்பதற்கான எளிய காரணங்கள் இவையே…நன்றி…!

                                             --------------------------------               

உஷாதீபன், எஸ்2-ப்ளாட் எண்.171,172 இரண்டாம் தளம், மேத்தாஸ் அக்சயம், ராம்நகர் தெற்கு12வதுபிரதான சாலை, மடிப்பாக்கம், சென்னை-600 091.  (94426 84188)