06 ஏப்ரல் 2024

 

விவேகம்   -   சிறுகதை - பிரசுரம் - உயிர் எழுத்து ஏப்ரல் 2024





                                                தையெல்லாம் சொல்ல வேண்டாம் என்று மனதில் போட்டு அமுக்கிக் கொண்டிருந்தாரோ அவைகளைத் தன்னை மீறிச் சொல்லி விடுவோமோ என்று பயந்தார் கனகவேல். கண்களால் காண்பவற்றிலெல்லாம் குறைகள்தான் தென்படுகின்றன. ஏனப்படி? தன் பார்வையே தவறோ?. நூல் பிடித்தாற்போல் இருந்து காலம் கடந்து வந்து விட்டவருக்கு இன்று அவர் கண் முன்னே நடப்பவையெல்லாம் தப்பாகவே தெரிகின்றன. மாற்றிக் கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்? என்றும் எதிர்பார்க்கிறது மனம். ஏக்கப் பெருமூச்சைக் கிளர்த்துகின்றது சிந்தனைகள். கூடியானவரை அமைதி காக்கிறார். அதுதான் அவரது ஆயுதம்.

                                                கம்முன்னு இருந்தே கொல்றாரே…! என்றும் நினைத்து விடக் கூடாதே…அதற்காக அவ்வப்போது ரெண்டொரு வார்த்தைகள் பேசிக் கொள்கிறார். சுமுகமாய்த்தான் இருக்கிறேன் என்று  தெரிய வேண்டுமே!

                                                மனதில் தோன்றுவதையெல்லாம் பேசி விட முடியுமா? மாற்றிக் கொள்வதற்கு மனப் பக்குவம் தேவை. அதை இளையவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. நரை கூடிக் கிழப் பருவம் எய்தும் நிலையில்தான் நமக்கே ஓரளவு பக்குவம் ஏற்படுகிறது. அதுவும் சீரான நிலையில் நிற்பதில்லை. அடிக்கடி தடுமாற்றம் காண்கிறது. சுற்றிலும் பிடிக்காத விஷயங்கள் நிறைய நடக்கின்றன. தலைமுறை இடைவெளி. அப்படித்தான் இருக்கும் என்று சமாதானம் செய்து கொள்கிறார்.

                                                  இடத்தை விட்டு அகன்று விடுவதுதான். ஓரளவு மனப்பக்குவத்தைப் பராமரிப்பது என்பது அதில்தான் சாத்தியமாயிற்று.  அதற்காகத்தான் அகலுகிறோம் என்று யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்ற ஜாக்கிரதையுணர்வும் இருந்தது. யதார்த்தமாய் விலகுவது போல் விலகி மறைந்து நின்று விட வேண்டும். கண்ணால் கண்டால்தானே தப்பும் தவறும் மனதில் தோன்றிக் கொண்டேயிருக்கிறது? நம்மால் எதற்குப் பிரச்னை? மௌனம் எவ்வளவு வசதியானது? அது கேடானதும் கூட.

                        எதையுமே அப்பா கண்டுக்கிறதில்லை. எதுக்குமே  பதில் சொல்றதுமில்லை….!-இதுவும் அவராகவே  நினைத்துக் கொண்டதுதான். யாரும் சொன்னதில்லை. மன ஓட்டங்களே மனத் தடைகளுக்குக் காரணமாகிவிடுகின்றன. அதுவும் ஒரு நன்மைதான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எல்லாவற்றையும் போட்டு உடைக்கும் மனப்பான்மையிலிருந்து தப்பிக்கலாமே!

                                                சண்டை, சச்சரவு இல்லாமல் இருந்தால் சரி. தான் ஏதேனும் சொல்லி வைக்கப் போக, அது குத்தமாய்ப்பட, அதற்கு சுரீர் என்று பதில் வர, அதனால், தான் டென்ஷனாக, எதற்கு இதெல்லாம்? தேவையா? நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போன இந்த வயதில் கமுக்கமாய் உட்கார்ந்திருப்பதுதானே சுகம்? தன் அமைதி வீட்டின் அமைதி. சண்டைக்காரன் தான் மட்டுமே…! எதற்கு அப்படிப் பெயர் வாங்க வேண்டும்?

                                            நான் சொல்றதச் சொல்லிட்டேன்…அப்புறம் உங்க இஷ்டம்…என்று வெட்டிக்கு வார்த்தைகளை உதிர்க்க இவர் மனம் இடம் தரவில்லை. எத்தனை முறைதான் இதைச் சொல்வது? நல்லதைச் சொன்னால் எடுத்துக் கொள்ளணும். ஓ.கே..அப்பா சொல்றதுதான் சரி…அப்டியே செய்திடுவோம்….என்று பின்பற்ற வேண்டும். நல்லவைகளாய் நியமங்கள் படிந்தால்தான் வாழ்க்கை ஒழுங்கு முறையாய்ப் பயணமாகும். ஏனோ தானோவென்றிருந்தால்  எதிலும் ஒரு திருப்தியோ, நிறைவோ இருக்காது.

                                                சும்மாவானும் தான் பேசப் போக, பிறகு ஏண்டா இதைச் சொன்னோம் என்று வருந்தணும். சொன்னபடி செய்யாவிட்டால் அது கௌரவக் குறைச்சலாயும் தோன்றும் வாய்ப்புண்டு. ஸாரிப்பா….இப்டித்தான் செய்ய முடிஞ்சிது…தப்பா எடுத்துக்காதே…என்று ஒரு சமாதான வார்த்தைகள் கூடச் சொல்ல மாட்டார்கள். நீ சொல்றதச் சொல்லிட்டே கிட…நாங்க செய்றதச் செய்திட்டே இருக்கோம்…

                                                வயசான இந்தக் கெழத்துக்கு இதுவேற சொல்லணுமா? என்று நினைப்பார்களோ? என்ன ஸாரி வேண்டிக்கிடக்கு? தான் சொன்னது நடக்கலேன்னா…பார்த்திட்டுப் பேசாம  கம்முனு இருக்க வேண்டிதான…ஒவ்வொண்ணுக்கும் இவர்ட்ட ஆலோசனை கேட்டுட்டு நிற்க முடியுமா? அல்லது ஒவ்வொண்ணையும் இவர் சொல்ற பிரகாரமே செய்திட்டுதான் இருக்க முடியுமா? அப்போ நமக்குன்னு விருப்பமே கிடையாதா? அவுங்க காலம் அவுங்க விருப்பம். அதுபோல இப்போ இது நம்ம காலம் நம்ம விருப்பம்… …!

                                                சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? சொல்லக் கேட்டு வேறு கேவலப்பட வேண்டுமா? அதற்கு முன்னால் நாமளே புரிந்து கொண்டு ஒதுங்கிக் கிடப்பதுதானே நன்று?   அனுபவம் என்பதன் விலைதான் என்ன? முதிர்ச்சி என்பதன் அடையாளம்தான் என்ன?

                                                இப்படியெல்லாம் தோன்றித் தோன்றித்தான் படிப்படியாக ஒவ்வொன்றிலிருந்தும் மெல்ல விலகி தனியனாகி விட்டார் கனகவேல்.

                                                பசங்களுக்கு ஏற்றாற்போல் தனக்குப் பேசத் தெரியவில்லை. அல்லது அவர்கள் பேசுவது  பிடிக்கவில்லை. ஏற்றாற்போல் பேசுவது என்பது அசடு வழிவது! அவர்கள் எது செய்தாலும் அது சரி என்று சொல்வது. அப்படியிருப்பது சரியா?  நல் வழி காட்டத்தானே நாம் இருக்கிறோம்? எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்றா  விட முடியும்? நினைத்துப் பார்ப்பதோடு சரி.

                                                எதுவும் சொல்லி எதுவும் ஆகிவிடப்போவதில்லை என்பதுதான் கிடைத்த விடை. யாரையும் யார் சொல்லியும் திருத்த முடியாது. அவரவர் அனுபவப்பட்டுத் திருந்தினால்தான் உண்டு என்பதே நிதர்சனம்.

                                                வீடு தன் பிடிக்குள் இல்லை என்று எப்போதோ தோன்றிவிட்டது. கண்களை மூடிக் கொண்டார். காதுகளைப் பொத்திக் கொண்டார். வாய்க்கும் பூட்டுப் போட்டார். எத்தனை வீடுகளில் என்னைப் போல் இருப்பார்கள் என்றும் பெருமையாய் நினைத்துக் கொண்டார்.

                                                ந்த தீபாவளிக்குப் புதுசுன்னு ஒண்ணு இருக்கட்டும்ப்பா…வேண்டாம்ங்காதே… ! வற்புறுத்தினான் சிவா.

                                                பசங்களுக்கு காசு செலவழிப்பதில்  தயக்கம் கிடையாது. ஆத்தோட போற தண்ணி…அய்யா குடி…அம்மா குடி…! எவனோ அள்ளித் தருகிறான். இவர்களும் அள்ளி விடுகிறார்கள். வந்தது தெரியும், போவது எங்கே…வாசல் நமக்கே தெரியாது…. என்ற வரிகள் இவர்களின் வரவு செலவுக்கு சாலப் பொருத்தம்.

                                                அதற்காக அள்ள அள்ளக் குறையாமல் போய் விடுமா? ஜாக்கிரதையுணர்வு வேண்டாமா?  பென்ஷனும் கிடையாது ஒரு புண்ணாக்கும் கிடையாது…இப்பவே சேமித்து வைத்துக் கொண்டால்தான் ஆச்சு. மாசா மாசம் இவ்வளவாவது சேமித்து விடுவது என்று எவனாவது யோசிக்கிறானா? வெறுமே வங்கி நடப்புக் கணக்கில் வைத்திருந்து என்ன பயன்? அதில் ஒரு தொகையை சேமிப்புக் கணக்கில் போட்டால்தானே வட்டி, கூடக் கிடைக்கும். அது எடுக்க முடியாமல் கொஞ்ச காலத்திற்கு சேமிப்பாய் நிற்கும்?

                                                சேரச் சேரத்தாண்டா மனசுக்கு ஆசை வரும். நீ சேர்த்துப் பாரு…அப்பத் தெரியும் அதன் வளர்ச்சி…என்று எவ்வளவோ சொல்லித்தான் பார்த்தார். சொன்னதற்குப் பஞ்சமில்லாமல் ஏதோ கொஞ்சம் போட்டான். பிறகு அதுவும் நின்று விட்டது. தார்க்குச்சி போட்டு இவர்களைக் குத்திக் கொண்டேயிருக்க வேண்டும். சண்டி மாடுகள். அப்பொழுதுதான் உருப்படுவார்கள்.  இளைய தலைமுறை இன்று அப்படித்தானே இருக்கிறது? செலவழிப்பதில் இருக்கும் இன்பம், இவர்களுக்கு ஏன் சேமிப்பில் வரமாட்டேனென்கிறது?

                                                அந்தக் காலத்தில் சீட்டுப் பிடிக்கிறேன் என்று பஸ்-ஸ்டான்டில் அலையும் அப்பணசாமியை நினைவுக்கு வந்தது இவருக்கு. சின்னச் சின்னக் கட்டம் போட்ட  தேதிவாரியான அட்டையில், அப்பப்போ  கொடுக்கும் பைசாவைக் கூட்டிக் கூட்டிப் பதிவு செய்வான் அவன். அவசரத்துக்கு சினிமா போகவென்றெல்லாம் அவனிடம் நாலணாக் காசு வாங்கிக் கொண்டு வீட்டுக்குத் தெரியாமல் சந்திரா டாக்கீஸில்  படம் பார்த்ததும் உண்டு. அப்பொழுதே நாலணா…நாலணாவாய்ச் சேர்த்து மொத்தக் கட்டமும் நிறைந்தவுடன் எதோ கொஞ்சம் பைசா கூடச் சேர்த்து அவன் தரும் பணத்தை வாங்கிக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்ததும்…எந்தங்கம்…கொள்ளச் சமத்து, கோட்டச் சமத்து…என்று அம்மா ஆரத் தழுவி முத்தா கொடுத்ததும்…!!

                                                . அந்தப் பழக்கம்லாம் சுட்டுப் போட்டாலும் இவனுங்களுக்கு வராது.  ஒரு உண்டியல் வாங்கி  சாமி முன்னாடி வைடா என்று ஆயிரம் தடவை சொல்லிவிட்டார். இன்னும் வாங்கி வைக்கிறான்…! மண் உண்டியல்லாம் வாங்க முடியாதுப்பா…இந்தக் கோயில் வாசல்ல வச்சு விப்பானே…அதத்தானே சொல்ற…ஊகும்…..

                                                போட்டா எடுக்க முடியாததுதான் உண்டியல். நிரம்பி வழிஞ்சதும், அதை உடைச்சுத்தான் பணத்த எடுக்கணும். மண் உண்டியலோட பெருமையே அதுதான். அந்தக் காசை ஏதாச்சும் கோயில் குளம் போகப் பயன்படுத்தணும். மீதியைக் கோயில்ல சேர்க்கணும்…அப்புறம் புதுசு ஒண்ணு வாங்கிப் போடணும். இதெல்லாம்  பெரியவங்க நம்ம கிட்டே சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தின எளிய வழிமுறை. வசதியில்லாதவங்க வேறே எப்படிச் செய்றது?வாழ்க்கையைப் புதுப்பிச்சிக்கிற வழிமுறைகள்.  நல்ல பழக்கங்கள் படிய சொல்லிக் கொடுத்த நடைமுறைகள்.   இப்ப நீங்க எங்க செய்யப் போறீங்க? என்றார் ஒரு நாள்.

                                                அது உண்டியல் என்கிற பெயரில் பூட்டுத் தொங்கும் ஒரு டப்பா வாங்கி வந்திருந்தான். மேல் மூடியில் ஒரு நீள் ஓட்டை. அது வழியாகக் காசு போட வேண்டுமாம். ரூபா நோட்டையும் மடிச்சுத் திணிக்கலாம்ப்பா…என்றான். உண்டியலுக்குப் பூட்டா? சாவி யார்ட்ட இருக்கும்?. சாமி படத்துப் பின்னால வச்சிடுவோம் என்றான். சரி வையி…அப்பப்போ பால் பாக்கெட், காய் வாங்கன்னு  பற்றாக்குறைக்குப் பயன்படட்டும். அவசரத்துக்கு உதவும்ல? என்னப்பா இப்படிச் சொல்றே? என்றான் சிவா. இந்த உண்டியலோட பெருமை அதுதான்…அவ்வளவுதான்…

                                                எது குடிக்க முடியாதோ அதுதான் சூடு. அதுபோல எது திறக்க முடியாதோ அதுதான் உண்டியல். சிறு சேமிப்புங்கிறது அந்த வழிமுறைலதான் இருக்கணும்…. நம்ம நடைமுறைக்கும் இவங்களுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?

                                                னக்கு எதுக்குப்பா அநாவசியத்துக்குப் புதுச்சட்டை? முன்னால் மேசையில் வைக்கப்பட்டிருந்த அதையே பார்த்துக் கொண்டிருந்தார். தொடவே பயமாய் இருந்தது.

                                                அதான் இன்னும் பார்சலே பிரிக்காத புத்தம் புது எட்டு முழ வேட்டி இருக்கு….வேண்டாம்…வேண்டாம்னு சொல்லியும் கேட்காம ஒரு குர்தா வேறே எடுத்துக் கொடுத்துட்டே….அதைப் போடணும்னு வச்சிருந்தே ஒரு வருஷம் ஓடிப் போச்சு…அது ரெண்டையும் இந்தத் தீபாவளிக்குப் போட்டுக்கிறேன்…போதாதா?  அதுக்குமேலே என்ன வேணும்.  நீங்க சின்னப் பிள்ளைக…போட வேண்டிதான் வித விதமா…!

                                                இந்த தீபாவளிக்கு நீங்க இதைப் போடுறீங்க… என்றான் சிவா. அன்புக் கட்டளை.

            புதுசு போடணும்ங்கிற ஆசையெல்லாம் என்னைக்குமே இருந்ததில்லப்பா…எத்தனையோ தீபாவளி அப்படிக் கழிஞ்சிருக்கு. ஆசைப்படவே தெரியாது. இருந்தாத்தானே  ஆசைப் படுறதுக்கு? வறுமைலயும், பட்டினிலயும், அவமானத்துலயும் கூனிக் குறுகி வாழ்ந்த, வளர்ந்த வாழ்க்கை….இப்ப நீங்கள்லாம் நல்லாயிருக்கீங்களே…அதுதான் சந்தோஷம்….

                                                இப்ப அப்படித்தான் சொல்லுவே…அப்புறம் குர்தா போடக் கூச்சமா இருக்குன்னு வச்சிடுவே….அதை ஷார்ட் குர்தாவா உயரம் சுருக்கித் தைச்சுத் தர்றேன்னு சொன்னேன். அதையும் வேணாம்னுட்டே…அதுக்காகத்தான் ஒரு புது ஷர்ட் எடுத்துக்கோன்னு சொல்றேன்….-விடாமல் பிடித்த பிடியாய் நின்ற மகனின் வற்புறுத்தலில் தளர்ந்துதான் போனார் கனகவேல்.

                        நாற்பதா இல்ல நாற்பத்திரண்டா….அளவு? என்று கேட்டுக் கொண்டிருந்தவன் ஒரு உத்தேசத்தில் நாற்பத்தியிரண்டு என்ற அளவினில் ஒரு சட்டையை அவனே வாங்கிக் கொண்டு வந்து நீட்டியபோது மகிழ்ச்சியும் கொஞ்சம் கோபமும் சேர்ந்தே வந்தது இவருக்கு.  அளவு என்னவோ கரெக்டாகத்தான் இருந்தது. விலையைச் சொன்னபோதுதான் பகீரென்றது. உடம்பு ஆடிப் போனது.

                                                என்னது, ரெண்டாயிரமா? இதென்னடா அநியாயமா இருக்கு? அப்படி என்னடா இருக்கு இந்தச் சட்டைல….? என்று கத்தினார். இவ்வளவு விலை கொடுத்தா வாங்குவாங்க…? காசென்ன மரத்துலயா காய்க்குது?

                                                ஏம்ப்பா இதுக்குப் போய்க் கத்துறீங்க? பிரான்டட்ப்பா…காலர்ல என்ன போட்டிருக்கு பாருங்க….? ஃபேமஸ் கம்பெனியாக்கும்…அவன்ட்ட எப்பவுமே விலை ஜாஸ்திதான். ஆனா சரக்கு நல்லாயிருக்கும்….ஸ்டான்டர்டா….! அங்க நிக்கிற கூட்டத்தப் பார்த்தேன்னா நீ இப்படிச் சொல்ல மாட்டே…! அவ்வளவு டிமான்ட்….!

                                                அப்போ விலை ஜாஸ்தின்னு தெரிஞ்சிதான் எடுத்திருக்கே… இல்லியா? இதுல நமக்கென்ன பெருமை? வெளில வந்து இப்படிச் சொல்லிக்கிறதுதானா?  வெட்டிப் பெருமை…! இவ்வளவு  காசு போட்டு எனக்கெதுக்குப்பா இந்த ஷர்ட்டு? சாதாரணமா ஐநூறு, அறுநூறுன்னு இருந்தாப் போறாதா? அதுவே என்னைப் பொறுத்தவரை அதிகம்தான்.

                                                ஐந்நூறுக்கு எடுத்து வந்தாலும் அதுவும் விலை ஜாஸ்தின்னுதான் சொல்வீங்க…நீங்க…!

                                                அந்தக் காலத்துல நாங்கள்லாம் இருநூறு முன்னூறுக்கு எடுத்த துணிகள்தான் இன்னைக்கு இந்த விலை விக்குது! என்ன பெரிய க்வாலிட்டி மாறியிருக்கு? அதே துணிதான்…. ஆறு மாசத்துல ஃபேடு ஆயிடுச்சின்னு ஈஸியாத் தூக்கிப் போட்டுடுறீங்க…நாலு ரூபா, அஞ்சு ரூபான்னு பாத்திரக்காரன் எடுத்துக்கிறான். வயித்தெறிச்சலா இருக்கு…! ஒரே சட்டையை அஞ்சாறு வருஷம் கிழியாம வச்சிருப்போம் நாங்கள்லாம்…லேசுல தூக்கியெறிய மாட்டோம். மனசாகாது. எங்கயாச்சும் லேசாக் கிழிஞ்சாலும், போய் தெச்சுட்டு வந்திடுவோம்.

                                                 இப்பத்தான் கிழிசல் தைக்கிற ஜோலியே இல்லியே..! அப்டி அப்டியே பழசு…பழசுன்னு ஒதுக்கித் தூக்கியெறிஞ்சிடுறீங்களே…கிழிசல் தைக்கிற தையக்காரன் எவன் இப்ப கண்ணுல படுறான். அங்கங்க கடை வாசல்ல அப்பல்லாம் உட்கார்ந்திருப்பாங்க…ரெடி ரெடியாத் தெச்சுக் குடுப்பாங்க…கொடுக்கிறத வாங்கிக்கிடுவாங்க…தெருத் தெருவா தையல் மிஷினைத் தோள்ல தூக்கிட்டு அலைவான்…அவுங்களையெல்லாம் இந்த சமுதாயம் எப்பவோ தூக்கியெறிஞ்சிடுச்சு. இதெவல்லாம் ஒரு பொழப்பான்னு உதறிட்டாங்க…சின்ன வேலையானாலும் அதையும் பொருட்படுத்தி செய்றதுக்கு ஆள் இருந்தது அப்போ….! இப்போ? எதையுமே பொருட்படுத்தாத வாழ்க்கை வாழ்றீங்க…யூஸ் அன்ட் த்ரோ…ன்னு ஒரு கலாச்சாரம். திருமண வாழ்க்கைலயும் இந்தக் கலாச்சாரம். புகுந்துட்டதா நீதி மன்றங்கள் வேதனைப்படுது.. நுகர்வுக் கலாச்சாரம். ஒரு பொருளைப் பயன்படுத்தின பிறகு தூக்கி எறியுறது!  இப்டியேதான் வயசான எங்களையும் நாளைக்கு நீங்க தூக்கி எறிஞ்சிடுவீங்க போல்ருக்கு?

                                                அவரின் நீண்ட பேச்சில் இந்தக் கடைசி வாக்கியம்தான் கனகவேலின் பஞ்ச். ஒரு “க்“ வைத்துதான் எந்தப் பேச்சையும் முடிப்பார். அதனால் மற்றவர்கள் மனசு சங்கடப்படுமே என்று நினைக்க மாட்டார். எழுபது வயசு எட்டப் போற எனக்கு இது கூடச் சொல்ல உரிமையில்லையா? இந்தச் சுதந்திரம் கூடக் கிடையாதா?  என்று நினைத்துக் கொள்வார். சமயங்களில் தன் அனுபவங்களை எப்படி வெளிப்படுத்துவது? அமுக்கியேவா வைப்பது என்று வெடித்து விடும்.

                                                வயசான ஆளு…அவர் அப்படித்தான்…இல்ல…அது அப்டித்தான்னு நினைச்சிட்டுப் போங்களேன்…என்று சற்று கர்வமாகவும் நினைத்துக் கொள்வார். வேகம் விவேகமாக மாறிவிட்டது இப்போது….!

                                                துக்கு இப்படி ரூம்லயே அடைஞ்சு கிடக்குறீங்க? உறால்ல வந்து உட்காருங்க…என்றாள் வேதவல்லி. மனசோடுதான் இதைச் சொல்கிறாளா என்றிருந்தது இவருக்கு. அவரால் வீட்டில் பப்ளிக்காக உட்கார முடியவில்லை. கலகலவென்று பேசினாலும் அதிகபட்சம் அஞ்சு நிமிஷத்திற்கு மேல் தாங்காது. அதிகம் சிரித்து விட்டால் கூட ரொம்ப சந்தோஷப்பட்டுட்டமோ? என்று மனசுக்குத் தோன்றும். இளம் பருவ வாழ்க்கை முழுவதுமாக சோகமாகவே கழிந்து விட்டதால் அதுவே நிலைத்துப் போனது.   பிடித்த ரசம்  சோக ரசம்தான்.

                                                அங்கு போய் உட்கார்ந்தால் பலதும் கண்ணில் படும். எதாவது சொல்ல வேண்டி வரும். சகஜமாய்ப் பேசுவதாக நினைத்துக் கொண்டு ஏதாச்சும் சொல்லப் போக அதுவே தப்பாகப் பட்டுவிட்டால்? தப்பாகத்தானே படுகிறது. சகஜமாக எடுத்துக் கொள்ள இளசுகளுக்குத் தெரியவில்லையே? முற்போக்கான சிந்தனையாம்! எதையும் கேள்வி கேட்கும் தன்மையாம்!  வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்கள் கேள்வி கேட்பதில் தவறில்லை. எந்த அனுபவமுமே இல்லாதவர்கள் கேள்வி கேட்பது என்ன லட்சணம்? அது கத்துக்குட்டித்தனமில்லையா? திண்டுக்கும் முண்டுக்கும் பேசுவது எப்படி புத்திசாலித்தனமாகும்? பேசுவதையெல்லாம் தப்பாகவே எடுத்துக்கொண்டு அதையே க்ளெவர்னெஸ் என்று அசட்டுத்தனமாய்ப் பெருமைப்பட்டுக் கொள்வது? என்ன கலாச்சாரமோ? கன்றாவியோ?

                                                விரித்த படுக்கைகளையே இவர்கள் மடக்குவதில்லை. மெத்தை என்றாலும் அழுந்தச் சுருட்டி வைத்தால் ஆகாதா? இதென்ன லாட்ஜா அல்லது வீடா? போட்டது போட்டமேனிக்குக் கிடக்க? அறையைக் கூட்டுவது என்பதே கிடையாது. பார்பர் ஷாப் மாதிரி மூலையெல்லாம் அடை அடையாய் தூசி, முடிக் கற்றைகள்…! அங்கு கூட இப்பல்லாம் சுத்தமாய்த்தான் வைத்துக் கொள்கிறார்கள். வீடுகள்தான் சீரழிகின்றன. விழுத்துப் போட்ட துணி குப்பலா மூலைல கெடக்கு. அங்கங்க தலை முடி கொத்துக் கொத்தாப் பறக்குது. பார்த்திட்டே தாண்டிப் போறாங்க.. அதை முடிஞ்சு குப்பைக் கூடைல வீசணும்ங்கிற சின்ன அறிவு கூட இல்ல. சொல்லிக் கொடுத்திருந்தாத்தானே வரும். உள்ளாடைகளெல்லாம் மறைவா உலர்த்தணும். காய்ஞ்சவுடனே மடிச்சு பீரோக்குள்ள தள்ளணும்னு கிடையாதா?  எதைச் சொல்றது, எதை விடுறது? எல்லாமே தப்பா இருக்கே? சகிக்க முடியாத அளவுக்கு? குளிக்காம காலை டிபன் சாப்பிடறது..மதியம் சோத்த அமுக்குறது…சாவகாசமா நாலு மணிக்கு மேலே போனாப் போகுதுன்னு ரெண்டு சொம்புத் தண்ணிய உடம்புல விட்டுக்குறது….இதெல்லாம் வியாதிக்கு வழி வகுக்காம என்ன செய்யும்? எதுக்கு நியமங்கள்னு வச்சிருக்காங்க…எல்லாம் என் இஷ்டம்தான்னு இருந்தா?

                                                எல்லாமே வெட்ட வெளிச்சமா இருக்கு. டிரெஸ் கோடும் மாறிப் போச்சு பெண்டுகளுக்கு. வீட்டுல இருக்கைல என்ன மாதிரி டிரஸ் போடணும், வெளில போகைல எந்த மாதிரி உடுத்தணும்னு யார்தான் கட்டுப்பாடா நினைக்கிறாங்க இன்னைக்கு…அப்புறம் அவன் தட்டினான், தடவினான்னா? எல்லாக் கண்றாவியும் வரத்தான செய்யும்! எத்தன பேர் கையை ஒடிக்கிறது? எத்தனை பேரப் போலீஸ்ல பிடிச்சிக் கொடுக்கிறது? தினம் ஈவ் டீஸிங் கேசப் பார்க்கவே நேரம் சரியாப் போகுதுன்னு புலம்புது போலீஸ். சமுதாயம் அந்தளவுக்குக் கெட்டுக் கிடக்கு. .ஊரே தத்தாரியாத்  திரியும்போது வீட்டுக்குள்ள மட்டும் எப்டி ஒளிவு மறைவு வரும்? காத்தாட இருக்காங்க போல்ருக்கு…! இன்னும் என்னெல்லாம் கண்றாவியக் காணனுமோ? இந்தக் கண்கள் செய்த பாக்கியம்…!

                                                இப்படிக் கண் பார்க்கும் பலதிலும் ஏதாவது சொல்லத் தோன்றும். கிண்டல் அங்கங்கே தெறிக்கத்தான் செய்யும். தாறுமாறாய்  வெடிக்கும். அதனால் அறையில் ஒதுங்கியே கிடந்தார்.  சுவற்றைப் பார்த்துத்தான் அமர்ந்திருப்பார். மற்றவர்களுக்கு  முதுகுதான் தெரியும். சீரியஸாய்ப் படித்துக் கொண்டிருக்கும்போது முகம் மாறுபடும். உணர்ச்சிகள் மாறுபடும். அவை இவரது பாவங்கள்…!

                                                உங்கப்பா என்ன எப்பப் பார்த்தாலும் முகத்தை உம்முன்னு வச்சிட்டிருக்காரு? என்று மருமகள் மாலா கேட்டால்? கேட்டாலென்ன ஒரு நாள் கேட்டுத்தான் விட்டது.

                                                அவர் முகம் எப்படியிருந்தா உனக்கென்ன? உன்ன ஏதாச்சும் சொன்னாரா? அவர்பாட்டுக்குத்தான இருக்காரு? விடு…என்று அடக்கி விட்டான் சிவா. அவனின் அந்த பதில் இவருக்குத் திருப்தி தந்தது.

                                                சும்மா சிவனே என்று இருந்ததற்கே இப்படியென்றால் உறாலில் போய் உட்கார்ந்து கொண்டு ஏதேனும் வாயைக் கொடுக்க…அது விபரீதம் ஆகி விட்டால்?  வெளியேதான் வம்பை விலை கொடுத்து வாங்குவார்கள். இப்பொழுதெல்லாம்தான் வீட்டிலேயே அது நடக்கிறதே?

                                                என்னை எதுக்கு உறாலுக்கு வரச்சொல்றே? எனக்குத் தனிமை வேணும், அமைதி வேணும்…நான் இங்கயே இருக்கேன்…என்றார் இவர்.

                                                நீங்க உறாலுக்கு வந்து அடிக்கடி உட்கார்ந்து சகஜமா அவுங்க கூடப் பேசினாத்தான் வீட்டுல ஒரு சுமுகம் இருக்கும்…அதுக்காகச் சொன்னேன். என்றாள் வேதவல்லி. என்னவோ கண்டுபிடித்துச் சொன்ன மாதிரியிருந்தது அவள் பேசியது. என்னால்தான் சகஜ நிலை கெடுகிறதா? இவ ரொம்பக் கலகலப்பா? இல்ல அந்தப் பொண்ணுதான் சிரிச்ச முகமா? எல்லாந்தான் ஏதோ கல்லைத் தலைல சுமந்திட்டிருக்கிறமாதிரி…அலையுது?

                                                என்னவோ நூறு நூத்தம்பது பவுனோட வந்து இறங்கின மாதிரி….தங்கத் தேர்லயா அவங்கப்பன் கொண்டு வந்து விட்டான்? இல்ல பேரழகியா கர்வப்படுறதுக்கு?? பெரிய திறமைசாலியா ஐ.டி.ஃபீல்டுல? நூறோட நூத்தி ஒண்ணு…அவ்வளவுதானே?சாதாரண நடுத்தரக் குடும்பம்தானே? அதுபோல சாதாரணமா இருந்திட்டுப் போக வேண்டிதானே? ஐ.டி.ல வேலை பார்த்தாலே அறிவாளின்னு நினைச்சுக்குவாங்க போல்ருக்கு? சம்பளத்த அள்ளிக் கொடுக்கிறான்ல…அந்த நெனப்பு வரத்தான செய்யும்? எல்லாம் காசு பண்ற வேல….என்னால தனிச்சு இயங்க முடியும்ங்கிற திமிரு. இருந்து பார்த்தாத் தெரியும் குடும்பமா இருக்கிறதோட அருமை!  அதனாலதான டைவர்ஸ் கேசுக தினமும் வரிச கட்டுது கோர்ட் வாசல்ல…? பெத்தவங்க குத்தமா…இல்ல வளர்த்தவங்க குத்தமா?  தலைய விரிச்சிப் போட்டுட்டு அலையுற கலாச்சாரம் எப்ப வந்திச்சோ…அன்னைக்கே எல்லாமும் கெட்டுப் போச்சுன்னுதான் சொல்லணும்….அந்தப் பொண்ணுதானே இந்த வீட்டுக்கு வந்தது. அதுதான் சகஜமா இருக்கணும். தன்னை மாத்திக்கணும்…இந்த வீட்டுக்குத் தகுந்தாப்ல….எனக்கொண்ணும் அவசியமில்ல…!! நான் இருக்கிறபடிதான் இருப்பேன்…!

                                                நீ சொல்றதெல்லாம் அந்தக் காலம்டீ…..! இப்போ தனித் தனியா இருக்கிறதுதான் ஃபேஷன்…நீ அடுப்படில…நான் இங்க…உறால்ல அவங்க ரெண்டு பேரும் தனிமையாப் பேசிக்கிறதை நாம ஏன் அநாவசியமாக் கெடுக்கணும்? அவங்க பிரைவசியைக் கெடுத்த மாதிரி ஆகி, அப்புறம் அதுக்கு ஒரு சண்டையா? போய் உன் சோலியப் பாரு…என்றார் இவர்.

                                                விவஸ்தையில்லாமல் அவள்தான் உறாலில் அமர்ந்து கொள்கிறாள்.

                                                வேலைய முடிச்சியா…பேசாம என் ரூமுக்கு வந்து கிட….பேப்பர் படி…ஸ்லோகம் சொல்லு….அநாவசியமா உறால்ல போய் ஏன் உட்கார்றே? என்றால் கேட்டால்தானே? நான்பாட்டுக்கு உட்கார்ந்திருக்கேன்…என் இஷ்டம்….என்கிறாள் கேட்டால். காலத்துக்கு ஏத்த மாதிரி இஷ்டங்களும் மாறும்ங்கிறது அவளுக்கு ஏன் தெரில?

                                                உறாலுக்கு எதிர் ரூமில் மருமகள் மாலா அமர்ந்து கொண்டு கணினியை நோண்டிக் கொண்டிருக்கிறது. அல்லது காதில் இயர்ஃபோனைச் செருகிக் கொண்டு கிளையன்ட்டுடன் பேசிக் கொண்டிருக்கிறது. Work from home…இவள் எதற்கு உறாலில் அந்தப் பெண்ணின் வேலையை, செயலை, இயக்கத்தை நோட்டம் இடுவது போல் போய் குத்துக்கல்லாட்டம் அமர வேண்டும்? இந்த இங்கிதம் வேண்டாமா அவளுக்கு?

                                                அது மறைவாய் ஒதுங்கி ஒதுங்கி சுவற்றோடு பல்லியாய் ஒட்ட, அதுவும் பலிக்காமல் அறைக் கதவைச் சாத்த….மூஞ்சில அடிச்சாற்போல….இது தேவையா?

                                                சாத்தினாச் சாத்திக்கட்டும்…எனக்கென்ன வந்தது? என்கிறாள் இவள். நீங்க நினைக்கிறீங்க…அது ஆபீஸ் வேலை பார்க்கிறதுன்னு…சினிமாவாக்கும் பார்த்திண்டிருக்கு…மொபைல்ல! அதுக்கு ஆபீசா…லீவான்னு யார் கண்டது? அவன்கிட்டயே அது சொல்றதில்லை…தெண்டம்…தெண்டம்….ஒரு துரும்ப நகர்த்தாது….உட்கார்ந்திருந்தே துருப்பிடிக்கப் போகுது….ஏதாச்சும் ஒரு சின்ன வேலை செய்தாக் கூட அப்பாடீ…அம்மாடீ…ன்னு மூச்சு வாங்குறதப் பார்த்தீங்கல்ல? கையையும் காலையும் அசைக்கிறதுக்கே காசு கேட்கும் போல்ருக்கு…!  இன்னொரு வீட்டுக்குப் போற பொண்ணை இப்படியா வளர்க்கிறது? வெட்கப்படணும் அவுங்க…! பெத்த வயித்துல பெரண்டையைத்தான் வச்சிக் கட்டிக்கணும்…! .எனக்கென்ன வந்தது? நான் என் பையனுக்காக என் பையன் கூட இருக்கேன்…அவனுக்குப் பிடிச்சதை சமைச்சுப் போட்டு திருப்திப் பட்டுக்கிறேன்…அதுலதான் எனக்கு  நிறைவு….அவன் நான் வேண்டாம்னு சொல்லட்டும். விட்டுடறேன் – கேட்டது கேட்காதது என்று எல்லாவற்றையம் சொல்லிப் புலம்பிக் கொண்டாள் வேதவல்லி.

                                                நல்லவேளை….என்னிடம்தான் புலம்புகிறாள் தனியாய். கொஞ்சம் சத்தத்தையும் குறைத்துக் கொள்கிறாளே,,,! பயம்தானே காரணம்? பயமா அல்லது எதுக்கு அநாவசியச் சண்டை என்கிற எண்ணமா? என்னிடம் புலம்பியவைகளை அவள் பையனிடம் சொல்ல வேண்டியதுதானே? அதுக்கு வாய் வராது. அவன் என்ன சொல்வானோ…யார் கண்டது? பிறகு பையனும் கையை விட்டுப் போய்விட்டால்? பெண்டாட்டிக்கு மசியாத பயல்கள்தான் யார்?

                                                பாவம் வேதவல்லி. என்னோடு வயசான காலத்தில் தனியாய் வந்து நிம்மதியாய் இருக்கலாம்தான். ஊரில் எந்தப் பரபரப்பும் இருக்காது. எந்த டென்ஷனும் கிடையாது. மனசில்லையே…! இங்கயே இருப்போம்….நம்ம பையன் நாம கூட இருக்கிறதைத்தான் விரும்பறான். தனிக் குடித்தனம்ங்கிற எண்ணமெல்லாம் அவன் மனசுல இல்ல…தங்கமான பையனாக்கும். புரிஞ்சிக்குங்க…பேசாம அடங்கிக் கிடங்க….!

                                                அடங்கித்தான் கிடக்கிறேன் நான். இன்னும் கொஞ்ச நாளில் எனக்கு  மொழி மறந்து போனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நான் சொல்வது பேச்சு மொழி….புரிகிறதா?  மௌன மொழியில்தான் இப்போது என் பயணம்!! என்னைப் போல் உங்களில் பலரும் இருக்கிறீர்கள், இருப்பீர்கள் என்பதை என்னால் நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறதுதான்.  கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பதுதானே நிஜம்…!

                                                                                    -------------------------------------

                                               

 

           

 

 

                             

தாய் வீடு - இணைய இதழ் - ஏப்ரல் 2024 பிரசுரம் 

காவலன் காவான் எனின்.....?                                                       

------------------------------------------------------




        ரசர் அப்படித் தன்னைக் காவலுக்கு அனுப்புவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை சம்புகன். மனம் அதிர்ச்சியடைந்தது. அதே சமயம் குதூகலமுமடைந்தது.. அரச கட்டளையின் அடையாளமாய் உடம்பில் அப்போதே  அசுர பலம் கூடிவிட்டதாய் உணர்ந்தான். தன்னையும் தகுதிப்படுத்தி விட்டார் அரசர். தன் மீதும் நம்பிக்கை கொண்டு பொறுப்பை அளித்திருக்கிறார். ஆஉறா.எனக்குமா இந்த ஏற்றம்? மெய் சிலிர்த்தது.

       கண்களை  அழுத்தமாய் ஓடவிட்டான் சம்புகன். அவனுக்கான கௌரவத்தை எண்ணி சுற்றிலுமிருந்த செடிகொடிகளும், காலங் காலமாய் நின்று நிழல் பொழியும் மரங்களும் தங்களைச் சிலிர்த்துக் கொண்டு தயாராகி, அவனுக்குத் தங்களின் ஒப்புதலையும், மகிழ்ச்சியையும்  தெரிவித்தன.

       என்னடாது...! தரையில் உட்கார்ந்தாலே ஐந்தடி உயரம் இருக்கிறோமே...! இந்த எழுச்சி எப்படி நிகழ்ந்தது? பாதம் முதல் கழுத்து வரை இந்தப் புஜ பல பராக்கிரமம் வியப்பாயிருக்கிறதே? ஒரு போர் வீரனுக்கான அடையாளங்கள்? வீரம் விளைந்த லட்சணங்கள். ஊர்க்காவல் உத்தரவு... எப்படி சாத்தியமானது? எந்த சக்தி எனை ஆட்கொண்டது? எந்த முன்செய் நல்வினை எனைப் பரிந்துரைத்தது? இந்தத் தாய்த்திரு நாட்டுக்கென்று பிறந்தவனா நான்? என் கடமையுணர்வும், கட்டுப்பாடும், வீரம் செறிந்த பராக்கிரமும் இந்த தேசத்திற்கே அர்ப்பணிப்பிற்கானதா? மாறுவேடத்தில் அலையும் ஊர்க்காவல் பணி என்னிடம் நம்பிக்கையாக அளிக்கப்பட்டிருக்கிறதா? ஆஉறாஎன்ன தவம் செய்தேன்? என் பாதம் பணிந்த சம்ஸ்காரங்களை பாதாதிகேச பரியந்தம் வழியவிட்டு இதோ புறப்பட்டு விட்டேன்!

       கட்டுக் குடுமியை சிலிர்ப்பி அவிழ்த்து விட்டு எழுந்து நின்றான் சம்புகன்.. வானம் தொட்டது போலிருந்தது. இந்த தேஜஸை வழங்கிய மாய சக்திக்கு என் பாதம் பணிந்த நமஸ்காரங்கள். புட்டம் வரை சாரைப் பாம்பாய் அவிழ்ந்து தொங்கும் அடர்த்தியான கட்டாத  குடுமியை அள்ளியெடுத்து  முடிந்து தலைப்பாகையை இறுக்கினான். ஈஸ்வரோ ரக்க்ஷது....

       திப்பு மிகு பைரவரே...நீ்ர் எமக்குத் துணையா அல்லது நான் உமக்கா? அருகில் பணிவோடு தயார் நிலையில் நின்றிருந்த புலிக்கு நிகரான தன் தோழனை இடக் கையில் அணைத்து கேள்விக்கான பதிலை எதிர்நோக்கி  அதனை முத்தமிட்டான் சம்புகன். அந்த அரவணைப்பில் குளிர்ந்து மெய் சிலிர்த்த பைவரத் தண்டகன் அடக்கத்தோடு பதிலுரைத்தான்.

       அரசர் ஆணை..மறுக்க முடியாது.  அதனால் வந்திருக்கிறேன். உங்கள் ஆணைப்படியே என் இயக்கம். நான் நன்றியுள்ளவன்…தங்கள் சித்தம் என்னவோ அதன்படியே என் பயணம்….அது என் பாக்கியம்.

       நல்லது. நாம் இப்போது எதன் பொருட்டு இரவு நேரத்தில் இந்த நகர்வலத்தை மேற்கொண்டிருக்கிறோம்...அறிவீர்களா?

       அறிவேன் ஐயா....எளிய மக்கள் மிகுந்த உடல் போதைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அதனால் குடும்பங்கள் சீரழிகின்றன. உழைக்கும் வர்க்கத்தினரின் ஊதியம் ஒழுங்காக வீடு போய்ச் சேருவதில்லை.பலரும் வேலைக்குப் போகத் திறனின்றி உடல் நலிந்து முடங்கிக் கிடக்கிறார்கள். புத்தியைப் பலி கொடுத்து இப்படிப் பூஞ்சையாகிப் போனோமே என்று மனதுக்குள் நொந்து போயிருக்கிறார்கள். வந்த வருமானத்தில் வலிய உடம்பைக் கெடுத்துக் கொண்டு மேற்கொண்டு உழைக்கும் திறனின்றி இப்படி ஆடிப்போனோமேகுடும்பம் பராரியாய் கெதியின்றி நிற்கின்றதே என்று புழுங்கிக் கிடக்கிறார்கள். மருத்துவச் செலவுக்கான வசதி வாய்ப்பின்றி மண்ணுக்குள் போகும் நாளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.   மந்திரிப் பிரதானிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அரசர்  எடுத்த முடிவாக ஒழுக்கக் கேடுகளை அழித்து ஒழிப்பதற்காக நாம் புறப்பட்டிருக்கிறோம்.

       ஆம்...மிகச் சரி. பகலில் உழைக்கச் செல்பவர்கள் இரவானதும் அவரவர் வீடு திரும்பி உறங்கி ஓய்வெடுக்காமல், பல இடங்களில் போதைக்கு அடிமையாகி  மயங்கி மண்ணடித்துப் போகிறார்கள். உழைக்கச் செல்பவர்களின் எண்ணிக்கையும் பெருவாரியாகக் குறைந்திருப்பதாக அறியப்படுகிறது. கேளிக்கை விடுதிகள் அதிகமாகி விட்டன. நகருக்கு உள்ளேயும், வெளியேயும் கால் பதிக்கும் இடமெல்லாம் போதை மண்டலங்கள். எங்கிருந்து தப்பிப்பது? எதிலிருந்து விலகுவது?  குதூகலமும், கும்மாளமும் கொக்கரிக்கின்றன. இன்று இந்த வேதபுரி நகரின் பகுதிக்கு மட்டுமே நாம் காவலை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும். குடும்பத்திற்குப் பயனுள்ளதாக வாழாதவர்களை இருந்தென்ன போயென்ன என்று சுற்றி வளைக்க வேண்டும். சொல்லிப் பார்த்து, எச்சரித்து எந்தப் பயனும் விழையவில்லை. என்ன கேடு வரினும் குடும்ப அமைப்புகள் சிதறி விடக் கூடாது என்பது நம் தாத்பர்யம். வீடு சிதறினால் நாடு சிதறும். வீட்டுக்குள் நாலு பேருக்குள் ஒற்றுமையும் அன்பும், அரவணைப்பும் இல்லையெனில் அந்தக் குடும்பம் தேறவே தேறாது. அங்கு மங்கல காரியங்கள் எழுச்சி பெறவே பெறாது. வாரிசு உற்பத்தி அறவே நின்று போகும் அபாயம். தேச முன்னேற்றத்திற்கான எதிர்காலத் தலைமுறை எண்ணிக்கையற்று நசிந்து போகும் மிகு அபாயம். இந்த மக்கள்தான் நம் தேசம். அவர்களின் நல்வாழ்வுதான் நம் சந்தோஷம்.   வேதபுரி சேதபுரியாகிவிடாமல் காப்பாற்ற வேண்டியது நம் தலையாய கடமை.

       நமக்கு அரசர் தந்த முதன்மைப்   பணி. செவ்வனே நிறைவேற்றுவது நம் கடமை. முக்கியமான ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் இங்கே. சொல்லலாமா?

       தாராளமாக...உடன் நின்று நிறைவேற்றுவது என் சித்தம். உங்கள் சொல் செயலாக என் உயிரையும் கொடுப்பேன். என் உதிரம் இந்த நாட்டுக்கானது.

       இந்தக் காவல் கண்காணிப்பை அமைதியாக, தடமின்றிப் பயன்படுத்த வேண்டும். நான் சொல்வதை உணர முடிகிறதா?

       சற்று விளக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாகும்...!-எளிமையாக ஒன்றை அறிந்து கொள்வதே இறைவன் எனக்கு அளித்த வரம். -பைரவர் கூர்ந்து கவனித்தது.

       அதாவது எந்தவொரு தடயமும் எந்த இடத்திலும்  நம்மிடமிருந்து வெளிப்பட்டு விடக் கூடாது. குறிப்பாக- ஆங்காங்கே  நடக்கும் தவறுகளைக் காணும்போது சட்டென்று நீர் குரல் கொடுத்து உலகறியச் செய்து விடக் கூடாது. என்னைப் பார்த்து, அமைதியாகச் சைகை செய்து, அருகே வந்து   என் கைகளைப் பற்றி இழுத்துப் பதுங்கி அழைத்து, மறைந்து, குறிப்பிட்ட இலக்கினை ரகசியமாய்ச்  சுட்ட வேண்டும்.....உமது இயல்பான பிறவிக் குணம் உம்மையறியாமல் உம்மையும் மீறி வெளிப்படாமல் நீர் உம்மை அடக்கி இருத்திக் கொள்ளுதல்  மிக மிக அவசியம். கருமமே கண்ணாகக் கடமையை ஆற்ற ஆயத்தமாக, சித்தம் தெளியத் துடிப்பாய் நிற்றல் வேண்டும். எம்மின் கருத்தும் கவனமும் இந்த தேசத்திற்கானது. அதன் சீரிய பாதுகாப்பிற்கானது என்பதை நீவிர் தெளிய அறிவீர்தானே?

       ஆகட்டும் ஐயா.....தங்கள் சித்தம் என் பாக்கியம்...! கை கோர்த்து தீமையை ஒழிக்க முன்னிற்பதே கருத்தான பணி. கடமையைச் செவ்வனே நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு நல்குவேன்.

       நல்லது.... பிரிந்து செல்லுங்கள். முதலில் நாம் அரண்மனைக்கு விலகிய தூரத்திலான   இந்த  வேதபுரியின் ஒதுங்கிய  பகுதியில் நமது சோதனையைத் துவக்குவோம். படிப்படியாக நகருக்குள் முன்னேறுவோம். அப்படியானால்தான் யாருக்கும் சந்தேகங்கள் வர வாய்ப்பில்லை. ஊர்சுற்றிப் பிரதானிகள் என்று கருதி விலகிவிடும் வாய்ப்புகள் நிறையவே உண்டு.  இரகசியங்கள் அடங்கிய பகுதி என்று நாம் கணிக்கும் பகுதியில் நமது நகர்தல் வெகு ஜாக்கிரதையாக இருத்தல் வேண்டும்.  எங்கு சென்றாலும் நீர் எம் பார்வையிலிருந்து விலகி விடக் கூடாது. அதை மனதில் கொள்ளுங்கள்....நீர் எங்கிருக்கிறீர் என்று எனக்கும் நான் எங்கு பதுங்கியிருக்கிறேன் என்று உமக்கும் புரிந்திருத்தல் மிக மிக அவசியம். நல்லது நாம் விலகலாம்.

                                        ( 2 )

        ம்புகன் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, பாதங்களைப் பதவாகமாக வைத்து சத்தமின்றி மறைவாக முன்னேறினான். ஓரிடத்தில் சற்றுத் துல்லியமான ஒலியில் நிலை பெற்றான். கண்ணுக்கெட்டிய தூரத்தில் பைரவரின் பார்வை எதிலோ நிலைகொண்டிருந்தது. மனிதனைவிடத் துல்லியமான அவதானிப்பு. ஆனால் மனிதன் உதவியோடுதான் எதையும் நிறைவேற்றியாக வேண்டும். அடையாளம் மட்டுமே காட்ட இயலும். ஆனாலும் அந்த அடையாளம், குறிவைத்த கணிப்பு என்றுமே தோற்றதில்லை. பைரவரின் ஒத்துழைப்பு நாட்டுக்கே இன்றியமையாதது. நினைத்துக்கொண்டான் சம்புகன்.

       பிட்சாடனைத் துணைக்கு அழைத்துச் செல் என்று உத்தரவிட்ட போது உடனடியாகத் தான் மறுத்திருந்ததும், அவனும் தனது விருப்பமின்மையை வெளிப்படுத்தியதும் எத்தனை நல்லதாய்ப் போயிற்று? அவனுக்கும் தனக்கும் ஒத்துவராது. எதிரணியிலிருந்து வந்தவன் அவன். அவனின் உண்மைத் தன்மை சந்தேகத்திற்குரியது. செல்லும் இடங்களில் குற்றங்களை வேரறுத்தல் தன் கடன். அவனோ அதில் தனக்கான பங்கு எந்த அளவுக்கு விஞ்சி நிற்கும் என்பதிலேயே குறியாய் இருப்பவன். தன்னையும் அந்தப் புதைகுழிக்குள் தள்ள யத்தனிப்பான். தான் வளர்ந்த, வளர்க்கப்பட்ட விதம் வேறு. அவனின் வளர்ப்பு அப்படியல்ல். சந்தேகத்திற்குரியது. அவன் வராமல் போனதே நல்லதாய்ப் போயிற்று. பிடித்தும் பிடிக்காமலும் தன்னோடு புறப்பட்டுப் பயணித்திருந்தால் உடன் இருந்தே கழுத்தறுத்திருப்பான். அதற்கு இந்த பைரவர் எவ்வளவோ மேல். வாயில்லா நன்றியுள்ள ஜீவன். அதன் உண்மைத்தன்மை தெய்வீகம் தழுவியது. நெருப்புக்கு நிகரானது. சொல்லுக்கும் செயலுக்கும் அடிபணிந்து செவ்வனே கடமையாற்றுபவனே சிறந்த வீரனாகிறான். அவன் வைத்த குறி என்றுமே தப்பியதில்லை.

       ந்தப் பேச்சுச் சத்தம் நிதானிக்க வைத்தது. அதிகாரிகள் அதிகமாகக் குடியிருக்கும் பகுதி. திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றுவது, அதன் முன்னேற்றங்களை எவ்வாறு மேலிடத்திற்குத் தெரிவிப்பது, பணியாளர்களை எவ்வாறு சாமர்த்தியமாய் வேலை வாங்குவது, சுணக்கமின்றி எப்படிப் பயன்படுத்திக் காரியத்தை சாதித்துக் கொள்வது என்பதான பேச்சின் போக்கு காதில் விழுந்த அளவு சம்புகனுக்குப் புரிய ஆரம்பித்தது. ஒரு வீட்டுக்கானதும், ஒரு நாட்டுக்கானதும் பல விஷயங்களில் பொருந்தி வருவதாய் பல சமயங்களில் நினைத்து நினைத்து உணர்ந்திடத் தலைப்பட்டிருக்கிறான் சம்புகன். இங்கே நடக்கும் பேச்சும் அதே ரீதியில் வளைய வருவதாய் உணர நேரும் அரிய சந்தர்ப்பம்.

       கேட்கக் கேட்க ஒன்று புரிகிறது. முழுப் பேச்சையும் கேட்டால்தான் துல்லியமாய் உணர முடியும். போதையில் விழுந்து கிடக்கும் மக்களைத் தேடி வந்தால், இங்கு வேறு ஒரு வகையான போதை பரவிக்கிடக்கிறதே! அதிகார போதை....! நிர்வாகம் நிச்சலனமற்று, குறிப்பிட்ட புள்ளியை நோக்கியல்லவா நகர வேண்டும். இங்கே நீ பெரியவன், நான் பெரியவன்  என்கிற கேள்விகள் எழுமானால் அது சீர்கேட்டை அல்லவா விளைவிக்கும்?

       அதிகாரம் எளிய மக்களை நசுக்குகிறது. ஏமாற்றுகிறது. நம்பிக்கையின்மையை வலுக்கச் செய்கிறது. அறிந்தும் அறியாமலும் அவர்களை அடிமையாக்குகிறது. வார்த்தை மயக்கங்களுக்குப் படிகிறது.. மேலிடத்தோடு நெருக்கத்தை போலி என்றறியாமல் உணர்ந்து எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கடுமையாக உழைத்து தங்களை நசித்துக் கொள்கிறது உழைக்கும் வர்க்கம்.

       “இங்க பாருங்க பி.ஏ., நமக்கு யாரு வந்திருக்கா, வரலைங்கிறது முக்கியமில்லை...காரியம் ஆகுதா, இல்லையாங்கிறதைத்தான் கவனிக்கணும். செக்ரட்டரி மீட்டிங்குக்காக அன்யூவல் ஸ்டேட்மென்டை ஊர் போனதும் அனுப்பி வெச்சுடறேன்னு டைரக்டர் கிட்டச் சொல்லிட்டு வந்தேன். நேத்து சிகாமணிகிட்டச் சொல்லிப் போடச் சொன்னேன். அவரே தயார் பண்ணி, கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி, பிரின்ட் அவுட் எடுத்து எங்கிட்ட ஒப்புதல் வாங்கி இ..மெயில்ல அனுப்பியும் வச்சிட்டாரு....யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்ங்கிறதைக் கவனிக்கணும். இத்தனைக்கும் நேத்து மாநில பந்த். ஊரே மூடிக் கிடக்கு. அங்கங்க கூட்டம் கூட்டமா போலீஸ்...பல இடங்கள்ல கலகம், கலாட்டா...கல்லெறி...அத்தனையையும் மீறி எப்படித்தான் ஆபீஸ் வந்தாரோ....கடமையுணர்ச்ச்சி அதீதமா உள்ளவன், புறச் சங்கடங்களையெல்லாம் பொருட்படுத்துறதில்லை. கொக்குக்கு ஒண்ணே மதி, வேலைகள் பென்டிங் இருக்கக் கூடாதுன்னு மைன்ட்ல வச்சிட்டு, வந்து உட்கார்ந்திருக்கான் பாருங்க அந்த ஆளு...சிகாமணி நிச்சயம் வந்திருப்பாருங்கிற எண்ணத்துல ஃபோன் போட்டேன். அந்தாளே எடுக்கிறான்னா பார்த்துக்குங்களேன். நினைச்ச மாதிரி வலைய வீசினேன். அவனுக்கு எதிர்த்துப் பேசத் தெரியாது....சரி...சரின்னு மட்டும்தான் தலையாட்டத் தெரியும். பாஸ் சொல்லிட்டாரு செய்துடணும்ங்கிற முனைப்புதான் அந்தாளுக்கு மூக்குக்கு முன்னால நிக்கும்...ரொம்ப தெய்வ பக்தி உள்ள ஆளு...ஆட்டத் தூக்கி மாட்டுல போட்டு, மாட்டத் தூக்கி ஆட்டுல போட்டு எவ்வளவு தகிடு தத்தம் பண்றோம் நாம....இது எதுலயும் தலையைக் கொடுக்காத, தூக்கத்துல கூடக் கை நீட்டாத சுத்தபந்தன் அவன். எந்த ஒரு சின்ன விஷயமும் அவனைச் சலனப்படுத்திட முடியாது. யாரு என்ன செய்றாங்கங்கிறதையும், கவனத்துலயோ, கருத்துலயோ வாங்கிக்க மாட்டான் அவன். அவனுக்குத் தெரிஞ்சது வேலை. ஆபீசுக்குள்ள நுழைஞ்சா, தனக்குக் கொடுத்திருக்கிற வேலையைச் சரியாய்ச் செய்தாகணும். அது மட்டும்தான் அவன் புத்தில நிக்கும். அவ்வளவு பயபக்தியோட வேலை செய்வான்.

       யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்னு கவனிக்கணும். அப்படியாப்பட்டவனை நம்மளோட அடிமையா வச்சிக்கிறது நம்பளோட சாமர்த்தியம். ஆனா தான் அடிமையா நடத்தப்படுறோம், நம்பளை அப்படித்தான் இங்க நினைக்கிறாங்கங்கிறதை அவன் உணரவே கூடாது. இந்த இடம் ரொம்ப முக்கியம். அவனைப் போன்ற விசுவாசிகள்தான் நம்ம முன்னேற்றத்துக்குக் காலத்துக்கும் துணையா இருப்பாங்க. கேள்வி எதுவும் கேட்க மாட்டாங்கதங்களுக்காகவும் எதுவும் கேட்கத் தெரியாதவங்களா இருப்பாங்கஇத்தனை விகல்பமற்ற மனிதர்களா? ன்னு நாமளே வியந்து போவோம்! அதான் யதார்த்தம்.! அந்த யதார்த்தம் காலத்துக்கும் நிலைச்சிருக்கும். அப்பப்போ அப்படியான சிலர் நம்மளச் சுத்தி வலம் வந்துகிட்டே இருப்பாங்கஅவங்களைக் கேட்ச் பண்ணனும். அதான் நம்ப சாமர்த்தியம்.

இந்த மாதிரி இடர்பாடான கால கட்டங்களில்  வராதவங்களைப் பத்திக் கேட்டு, பேசி, நேரத்தை வீணடிக்கிறதை விட இது பெட்டர் இல்லையா? இதைத்தான் சுருக்கமாச் சொல்லியிருக்காங்க.பெரியவங்கமுன் அனுபவப்பட்டவங்க..வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு...அல்லாதவனுக்கு சம்பளத்தைக் கொடுன்னு....என்ன நான் சொல்றது புரியுதா? இப்டித்தான் நீங்க நம்ம ஆபீஸ் ஸ்டாஃப்கிட்ட வேலை வாங்கக் கத்துக்கணும்....அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு...எம்.பி.ஏ.வுல என்ன சொல்லித் தர்றாங்க...? இதைத்தானே? நிர்வாகம்ங்கிறது இந்த மாதிரிப் பல்வேறு கூறுகளைக் கொண்டது. அதை கரெக்டாக் கடைப்பிடிக்கிறவன்தான் சிறந்த நிர்வாகியாக் கணிக்கப்படுறான்.....அதுதான் மாஸ்டர் ஆஃப் பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன்! அனுபவத்தில் சம்பாதிக்கிறதை அங்கே பாடமாக்கியிருக்கான்அவ்வளவுதான்

       சம்புகனுக்கு மனசே நடுங்கிப் போனது. அப்போ வேலை செய்றவங்க, செய்யாதவங்க, டபாய்க்கிறவங்க, டிராமாப் போடுறவங்க..சுருட்டுறவங்கசுருட்டாதவங்க .இப்படி எல்லாரும் கலந்து பயணம் பண்றதுக்குப் பேருதான் நிர்வாகமா? கஷ்டப்படுறவன், உண்மையா இருக்கிறவன், உழைப்பையே தெய்வமா மதிக்கிறவன் என்னைக்கும் உழைச்சிக்கிட்டே இருக்க வேண்டிதானா? ஏமாத்தித் திரியறவன் அதையே தன்னோட ஆயுதமா வச்சிக்கிட்டு தப்பிச்சிக்கிட்டே இருப்பானா? இதென்ன அநியாயமா இருக்கு?

       இங்க பாருங்க பி.ஏ., உங்கள இப்டிக் கூப்டே எனக்குப் பழக்கமாயிடுச்சி. இப்போ நீங்க என் பிள்ளைங்களை அன்றாடம் ஸ்கூல்ல விட்டுட்டு, திரும்பக் கூட்டிக் கொண்டாந்து வீட்டுல விட்டுர்றீங்கஎன்னைக்காச்சும் சாப்பாடு மறந்திடுச்சின்னா சங்கடப் படாமமறுபடி வீட்டுக்கு அலைஞ்சு கொண்டு கொடுத்திட்டு வர்றீங்கஎன்னைக்காச்சும் அந்த டிபார்ட்மென்டைப்பத்தி நான் ஏதாச்சும் கேள்வி கேட்டிருக்கனா உங்ககிட்டே? ஏன்னா நீங்க அதைக் கரெக்டா செய்திடுறீங்கஅப்போ அங்கே கேள்விக்கு இடம் ஏது? என் பிள்ளைங்களை உங்க பிள்ளைங்க மாதிரி நினைச்சு எவ்வளவு பொறுப்பா செயல்படுறீங்கவீட்டம்மா என்னைக்காச்சும் நொண்டு நொடை சொல்லியிருக்காங்களா? அப்படியெதுவும் என் காதுக்கு வந்திடப்படாதுன்னு நீங்க எத்தனை சின்சியரா செயல்படுறீங்க?

அதே மாதிரிதான் இதுவும்.. ஒவ்வொரு ஆபீஸ்லயும் இப்படி உண்மையா உழைக்கிறதுக்குன்னே ஒத்தன் ரெண்டு பேர் கண்டிப்பா இருப்பான்அவனை அடையாளம் காணனும். அதுதான் நம்ப திறமை. அப்படி ஆளைக் கப்புன்னு பிடிச்சிட்டுக்கிட்டோம்னு வச்சிக்குங்க.மொத்த ஆபீசைப் பத்தியுமே நாம கவலைப்பட வேண்டியதில்லைங்கிறேன்.தூக்கிச் சுமந்திடுவான் அந்த ஒத்த ஆளு!! அந்தாளுக்குஅவனுக்குத் தேவை நம்பளோட பாராட்டு.உன்னமாதிரி முடியுமாப்பாங்கிற புகழ்ச்சி. அதுல குளிர்ந்து போயிடுவான். மேலும் பணிஞ்சு வணங்குவான். அவனுக்குத் தெரிஞ்சது அந்த அநியாயப் பணிவு ஒண்ணுதான்.  வேலை வேலைன்னு தன் உயிரையே கொடுப்பான்.குடும்பம் குட்டிகளைக் கூட மறந்திடுவான்னா பார்த்துக்குங்களேன்அங்க நம்பளை எவ்வளவு உயர்ந்த பீடத்துல வச்சிருப்பான்னு நினைக்கிறீங்க? அப்படி மனுஷங்கதான் நமக்கு வேணும்!

       பி.ஏ. தன்னை மறந்து கடகடவெனச் சிரித்தார். அவரது அடிமைத்தனத்தைச் சுட்டிக்காட்டி அதிகாரி பேசியிருந்ததைப் பற்றி அவர் இம்மியும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. நீ இப்டியே நினைச்சிட்டிருஅதான் எனக்கு வேணும்என்று அவர் மனதுக்குள் வேறு என்ன எண்ணம் வைத்திருக்கிறாரோ என்று சந்தேகம் கொள்ள வைக்கும் சிரிப்பாய் இருந்தது அது. கள்ளனுக்குக் கள்ளன் பெருங்கள்ளன் என்கிற பழமொழிதான் ஞாபகத்திற்கு வந்தது சம்புகனுக்கு. இருட்டில் நிகழும் வஞ்சகம். ஆம்அவர்கள் மனங்கள் இருண்டு கிடக்கின்றன.இவர்களால் வெளிச்சத்திற்கு வரவே முடியாது. வெளிச்சம் என்றாலே அவர்களுக்குள் இனம் புரியாத பயம்!

தனிப்பட்ட உதவியாளராய் இருப்பவர்களெல்லாம் இப்படித்தான் இயங்கிக் கொண்டிருக்கிறார்களா? அடகடவுளே!! யாரை யார் நம்புவது? யாரை யார் சந்தேகப்படுவது? எதையாவது  நினைத்துப்பார்ப்பதற்கு இவர்களுக்கு நேரம் இருக்கிறதா என்ன? ஒன்றே குறிஒருவனே தேவன்! அதைக் கொள்ளை கொள்ளையாய்ச் சேர்த்து வைத்திருந்தால் அது என்ன ஆயுசை நீட்டிக்கப்  போகிறதா? அல்லது காட்டிக் கொடுக்காமல் இருக்கத்தான் போகிறதா? காணாமல் போய் தானே மண்ணுக்குள் புதைந்து கொள்ளும் மாயத் திறன் படைத்த பௌருஷம் அது! திக்குத் திசை தெரியாமல்  பயணித்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு மற்ற எதைப்பற்றித்தான் நினைப்பதற்கு நேரம்?

       சம்புகன் மனம் மிகுந்த வேதனைக் குள்ளாகியது. எல்லோருமே ஒரு பொறுப்பற்ற , விட்டேற்றியான மன நிலைக்குப் போய் விட்டார்கள். இன்னமும் கடமையுணர்ச்சியோடும், கஷ்டப்பட்டும் செயலாற்றுபவர்களை இது பாதிக்கக் கூடும். நம்ம கடமையை நாம செய்தோம்...அதுக்கு மேலே இதுல ஒண்ணும் இல்லை என்ற முதிர்ந்த நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்? அவர்கள் தங்களின் உண்மையான இருப்பைக் கூடக் காப்பாற்றிக் கொள்ள முடியாது போலிருக்கிறதே!

       எனக்குச் சம்பளம் வருது நான் பார்க்கிற வேலைக்கு. என் குடும்பம் ஓடுது அதில். நிறைவாயோ பற்றாக்குறையாவோஏற்றமும் இறக்கமுமாய் நிற்காத வண்டிஎங்கும் தடம் புரளாமல் செல்கிறதேஅதுவே எவ்வளவு பெரிய விஷயம்? .  அப்புறம் மற்றதைப்பற்றி, மற்றவர்களைப்பற்றி நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும்? ஒரு சராசரி மனிதனின் எண்ண ஓட்டங்கள் இந்த அளவில் இருந்தால் போதாதா? இந்த அளவுக்கு விஞ்சாமல் அவன் செயல்பாடுகள் இயங்கினால் பற்றாதா? அதற்கு மேல் ஏன் அகலக்கால் வைக்க வேண்டும்? அதற்கு மேல் ஏன் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்? முன்னிறுத்திக்கொள்கிறேன் பேர்வழி என்று ஏதாவது சிக்கலில் போய் மாட்டிக் கொள்ளவா? என் கெடுமதியினால்தான் இந்தக் கேடு விளைந்தது என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகவா? தங்களை மறைத்துக் கொள்ள என்னைச் சுட்டிக்காட்டி இவனால்தான் வந்தது இந்த வினைஎன்று தங்களை உத்தமர்களாகக் காட்டிக் கொண்டு விலகிச் செல்லவா?

       ஆசைகளினால்தான் கேடுகள் விளைகின்றன. தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போனால் அதற்கு ஒரு முடிவே இல்லாமல் போய்விடும் அபாயம் உண்டு. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படித்தவன் தொழிலாளி. எனக்கு இருப்பதே எனக்குப் போதும். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. எந்த நேரமும் கைகளைத் தலைக்கடியில் வைத்து உறங்கச் சித்தமாய் இருக்க வேண்டும். தரையில் ஒரு துண்டு விரித்து நீட்டி நிமிரும் மனோபாவம் வேண்டும். வயிற்றுக்குச் சோறிட வேண்டும். அதற்கு வேண்டிய அளவு கடவுள் கொடுத்திருக்கிறான் என்பதிலே அவனுக்கு நன்றி செலுத்தி அடங்கிக் கிடந்தால்தானே அவன் கருணை என்றும் நம்மீது நிலைக்கும்? அதை விடுத்து வேறு வழிகளில் செல்ல முனைந்து, ஆட்டம் போட்டால்? இந்த மண்ணில் விளைந்தது எல்லாமும் இந்த மண்ணுக்கே! எவனும் எதையும் கொண்டு செல்ல முடியாது. ஒரு நகத்தளவு பொருளைக் கூட நகட்டி மறைக்க முடியாது.

       உடல் ரீதியான ஒழுக்கக் கேடுகளை ஆய்வு செய்வதற்குப் புறப்பட்டு வந்தால் இங்கு மன ரீதியான ஒழுக்கக் கேடுகள் பரவலாக விரிந்து கிடக்கிறது. அதுவே செயல்பாடுகளாய் பரிணமித்துக் கிடக்கிறது.  அதிகார போதை சீரான நிர்வாகத்திற்கு வழி வகுக்காது சீர்கேட்டை ஏற்படுத்துவதும், நல்லவர்களை அடிமைப்படுத்துவதும் கூட தேசத்தின் நலனுக்கு உகந்ததாகாதே....! தர்மத்தை ஒடுக்குதல் தகுமா?

       என்னுடைய கடமையுணர்வும் இந்தப் பாதையில்தானே இத்தனை ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது? அன்றைக்கு  பந்த்தின் போது சிகாமணி மட்டும் ஆபீஸ் வரலேன்னா என் பில்லைக் கேஷ் பண்ணியிருக்க முடியாதே...! என் பெண்டாட்டி ஆபரேஷனுக்குப் பணம் கட்டியிருக்க முடியாதே...! என் வேலைதான் முதல்லன்னு எடுத்து செய்தாரே....அவரையா நம்ப அதிகாரி இப்படி ஏமாத்துறாரு...? இது அடுக்குமா? அதிகாரத்தைக் கைல வச்சிருக்கிறவங்க இப்படிச் செய்யலாமா? எல்லாப் பணியாளர்களையும் ஒரே மாதிரித்தானே ட்ரீட் பண்ணனும்? காலம் பூராவும் டபாய்க்கிறவனை கண்டுக்காம விடுறதா நிர்வாகம்? அவங்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்து விலக்கிட்டு நல்ல நிர்வாகத்தை நிர்மாணிக்கிறதுதானே ராசாவா இருக்கிறவருக்கு அழகு...!

                                 ( 3 )

        திரே பைரவர் சத்தமின்றிப் பாய்ந்து வருவது தெரிந்தது. சம்புகனின் கையைப் பிடித்துக் கவ்வி இழுத்து அது இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றது. மறைந்து நின்று காட்டிய திசையில் பார்வையை ஓட விட்ட போது அந்த அதிசயம்...தன் கண்களையே தன்னால் நம்ப முடியாத பேரதிசயம் ...சம்புகனை நிலை குலைய வைத்தது.

       அரசர் பிரதானமாய் மெத்தையில் வீற்றிருக்க.... சுற்றியிருந்த அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சூட்கேஸ்களைத் திறந்து கட்டுக் கட்டுகளாக அவர் முன்னே பரப்பிக் கொண்டிருந்தனர். இவ்வளவுதானா...மதிப்பீட்டிற்கு- அளவீடு குறைகிறதே? பங்கீடு பாதிக்குமே?இப்படிப் பற்றாக்குறையாகவே ஒவ்வொரு முறையும் பிரவேசம் செய்தீர்களென்றால் அதிருப்தி நாளுக்குள் நாள் அதிகரித்துக் கொண்டேயிருக்கும். பிறகு அவரவர் பொறுப்புக்களை இரண்டிரண்டாய்ப் பிரிக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படும். சர்க்கிள், டிவிஷன், சப்டிவிஷன் என்று ஏற்கனவே பிரித்திருப்பது இந்தப் பங்கீட்டில் குறைபாடுகள் நிகழ்க் கூடாது என்பதற்காகத்தான். நிர்வாக வசதிகளுக்காகச் செய்யப்பட்ட அவைகள் இந்தப் பங்கீடு வசதிகளின் படி நிலைகளை இதுகாறும்  செவ்வனே நடத்திச் சென்று கொண்டிருக்கையில் இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது இந்த இடர்பாடு? அவரவர் அதிகாரத்திற்குட்பட்ட நிலைகளில் மேய்க்கும் திறன் குறைந்து போனதா? அல்லது கீழ்நிலை இயங்குதளமே கண்கட்டி வித்தை நடத்துகிறதா? உங்களின் அடக்கி ஆளும் நிர்வாகத்திறன் சோம்பிப் போய்விட்டதா? -  அரசர் கொதித்தார். அவ நம்பிக்கை அதிகரித்துள்ளதாய் அறிந்து கொள்ள முடிந்தது.

       பைரவரே...வாருங்கள் போவோம்...நாம் வந்த சுவடு கூட இங்கே தெரியக் கூடாது...ஆபத்து..... மிகுந்த வேதனை...அரசுத் தலைமை ஆட்டம் கண்டிருக்கிறது. அதை அவர்களேதான் சரிசெய்து கொள்ள வேண்டும். அந்த அனுபவம் பெற்றவர்தான் மாமன்னர். .புறப்படுவோம்...காவலன் காவான் எனின்..!    இந்நிலை அவ்வப்போது ஏற்படுவது சகஜம் என்றுதான் தோன்றுகிறது. அல்லது அப்படி நினைத்துக் கொள்ள வேண்டுமா? என்பதுமே இப்போதைய சிந்தனை தர்மம்! காவலன் காவான் எனின்.எத்தனை அருமையான சொற்றொடர்?

       அறம் குன்றும்...நாட்டிலுள்ள பசுக்களின் மடியில் பால் குன்றும்...வானம் பெயல் ஒல்லாது....வேதம் ஓதப்படுதல் நின்று போகும்.....இப்படி இன்னும்...இன்னும்.....!!!

       ய்...சோமாறிப் பியூனு.......என்னா இன்னைக்கு இவ்வளவு தூக்கம்..அடிச்சிப்போட்ட மாதிரிக் கெடக்க? இன்னா ஆச்சு? ஒடம்பு கிடம்பு சரியில்லையா? ..ஆபீஸ்  லீவு விட்டுட்டாகளா...? - சத்தமாகக் கேட்டவாறே அருகே வந்து அவன் முகத்தில் சல்லென்று தண்ணீரை ஓங்கி அடித்தாள் அஞ்சலை....அலறிப் புடைத்து எழுந்த சம்புகன்....ஒன்றும் புரியாமல் பே...பே...என்று விழித்தவாறு மிரண்டு,  குன்றிப்போன தன் மெலிந்த திரேகத்தையே அதிசயமாயும் திடீர்த் துக்கமாயும் மிரண்டு பார்க்கலானான்.

                           ---------------------------------------------------.


26 மார்ச் 2024

 






நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து.




இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த ஆணின் கைபேசியிலும் ஒரு சசிகலாவின் அழைப்போ...எஸ்.எம்.எஸ்ஸோ இருக்கக்கூடும்...அதுபோல் எந்தப் பெண்ணின் கைபேசியிலும் ஒரு சீரங்கப் பெருமாளின் அழைப்போ...எஸ்.எம்.எஸ்ஸோ இருக்கக்கூடும்...என்ற கருத்தே. சபலம் உள்ளவர்கள் இப்படி மாட்டிக் கொண்டு நிம்மதியில்லாமல் அலைய வேண்டியதுதான். எடுத்த எடுப்பில் முறித்துப் பேசி விட்டால் எந்தப் பொம்பளை தொடருவாள்...இந்தக் கைபேசி காலத்தில் மாணவர்கள்தான் நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆசிரியப் பெரு (சிறு) மக்களும் நாங்களும்தான் என்று நிற்கிறார்கள் என்பதை இந்நாவல் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்துகிறது எனக் கொள்ளலாமா? இருப்புதான் பொழப்பக் கெடுக்குதும்பாங்க..அது எத்தனை உண்மை? இந்த நாவலிலும் இதற்கு முந்தைய நாவலான "இப்போது உயிரோடிருக்கிறேன்" நாவலிலும் ஒரே விஷயத்தை இன்னும் எத்தனை பக்கத்திற்குத்தான் நீட்டிப்பார் என்கிற அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.