26 அக்டோபர் 2023

 

                                                                                                                                                                                                                                                                    ஒப்பனையில்லாத மனமொழி நடை                                                           உஷாதீபன்

 

ன் எழுதுகிறேன் என்பது  குறித்து சில எளிய தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.                                                                                                                                                                                   படிப்பனுபவத்திலிருந்துதான் படைப்பு அனுபவம் கிடைக்கிறது. எனவே இரண்டையும் பிரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.                    தொடர்ந்த வாசிப்பனுபவம் என்பது படைப்பனுபவத்திற்கு ஊக்கமளிக்கிறது.                                                                                                                                                                 ஓரு மனிதனுக்கு வாழ்க்கையில் இரண்டு விதமான அனுபவங்கள். ஓன்று அவனது சொந்த வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளக் கூடியவை. இன்னொன்று அனுபவப்பட்டு முதிர்ந்து, அதனை எழுத்தில் வடித்து வைத்திருக்கும் பெரியோர்களின் எழுத்துக்களை அவர்களது அனுபவங்களைப் படித்தறிதல்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             இந்தப் பயிற்சியை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமானால்தான் விஷய ஞானம் என்பது நமக்குக் கைகூடும். அறிவு ஜீவியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. உலகாயத அனுபவம் கைகூட வேண்டும்.                                                                                                                                                  அது எப்படிக் கிடைக்கும்? இந்த உலகத்தில் எதுவுமே சும்மாக் கிடைக்காது. ஓன்று கொடுத்தால்தான் ஒன்று கிடைக்கும். நிறைய  படிக்க வேண்டும் என்றால் நம் நேரத்தை அதற்குக் கொடுக்க வேண்டும். மூளையைச் செலுத்திப் படிக்கும் உழைப்பை அதற்கு வழங்க வேண்டும். மேலோட்டமான வாசிப்பில்லாமல், ஆழமாக வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கை கூடும். அப்படிக் கைகூடும்போது வேண்டாத புத்தகங்களை நிறையப் படித்து நேரத்தை வீணாக்கியிருக்கும் தெளிவு கூட ஏற்படும்.                                                                                                                                                                                                                                                நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்தல் மட்டுமல்ல. அதனைக் காசு கொடுத்துத் தயங்காமல் வாங்கிப் படித்திட வேண்டும்.        அது எங்கு ஓசியில் கிடைக்கும், யாரிடம் இரவல் பெற்று வைத்துக் கொள்ளலாம் என்று அலையக் கூடாது. ஓரு நல்ல எழுத்தாளனாக  இருப்பதைவிட, ஒரு நல்ல வாசகனாக இருப்பது மிகவும் கடினம். அது மிகப் பெரிய விஷயமும்கூட. வாசகனாய் இருப்பது கேவலமல்ல.         எழுத்தாளனாய் இருந்து மனசையும் உடலையும் கெடுப்பதுபோல் அசிங்கங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி எழுதிப் பெருமைப் பட்டுக்கொள்வதைவிட, அதன் மூலம் கிடைக்கும் விருதுகளைப் பெறுவதைவிட, அறிவுபூர்வமான வாசகனாய் இருப்பது சாலச் சிறந்தது.                                                                                                                        தேர்ந்த வாசகர்கள் மிகப் பெரிய அரிதான விஷயங்களை உள்ளடக்கியவர்களாக இருப்பார்கள். அவர்களை, நமக்கு மட்டுமேதான் தெரியும் என்கிற நோக்கில் அப்படி எளிதாக ஏமாற்றி விட முடியாது.                                                                                                                                                                                      நான்இலக்கிய வாசகன்என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது ஒரு முக்கியமான உள் உணர்வு. நான் பொழுதுபோக்கிற்காகப் படிப்பவனல்ல. வாழ்க்கையை அறிவதற்காகப் படிப்பவன். நான் வாசிப்பை உழைப்பாக எடுத்துக்கொள்ள அஞ்சாதவன் என்ற எண்ணம் வேண்டும். இதனை ஜெயமோகன் தன் அனுபவ சாரத்தில் வலியுறுத்திச் சொல்கிறார்.                                                                                                                                                                                                                                                                        இலக்கிய வாசிப்பு என்பது ஒரு இலக்கியப் படைப்பானது மொழியின் வழியாக வாசகனின் ஆழ் மனதுடன் தொடர்பு கொள்ளும் முறையாகும். இது அக மனத்தை முன்னிறுத்தி நடத்தப்படுவது. வாசிப்புப் பயிற்சி என்பது அக மனத்தை வாசிப்புக்குப் பழக்கப்படுத்துவதுதான் என்கிறார்.                                                                                                        

வாசிப்பு மனித குலத்திற்கு மட்டுமே வாய்த்த பெறும் பேறு. வாசிப்பு மூலம் மிகப் பெரிய விவேகத்தை அடைந்தவர்கள் இருக்கிறார்கள். ஆழ்ந்த வாசிப்பு நம் சளசளப்பைப் போக்கி மௌனத்தைத் தருகிறது. புத்தகங்களை மட்டுமல்ல, மனிதர்களையும், மரம், செடி கொடிகளையும், சகல உயிரினங்களையும் வாசிக்கக் கற்றுக் கொள்பவன்தான் மேலான வாசகன். இது மறைந்த முதுபெரும் படைப்பாளி திரு சுந்தரராமசாமி அவர்களின் அழுத்தமான கூற்று. எத்தனை சத்தியமான உண்மை என்பதை நம் அனுபவத்தில் நாம் உணர முடியும்.                                                                                                                                                                                                                                                                               இந்தப் படிப்பனுபவத்திலிருந்து, படைப்பனுபவம் கிடைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. மிகச் சிறந்த படைப்புக்களைப் படிக்கும்போதுஇதுபோல நம்மாலும் எழுத முடியுமா? என்ற ஆதங்கம் தோன்றுகிறது.  இந்த ஆதங்கம்தான் படைப்பை உருவாக்கும் சக்தியாகப் பரிணமிக்கிறது.                                                                                                                                                                                                            குடும்பச் சூழலில் அடக்கு முறைக்கு ஒடுங்கிப் போன வருத்தமும், கோபமும், நம் மனதில் படிந்து கிடக்கின்றன. அவை நம் நெறிபிறழாத ஒழுக்கமும், செம்மையுமான வாழ்க்கைக்கு அடிநாதமாக அமைந்தன என்பதை மறுக்க முடியாதுதான். என் வாழ்க்கை அப்படிப்பட்டதுதான். அந்த பாதிப்பில்தான் நான் எழுத வந்தேன்.                                                                                                ஆனாலும் அடிமனதில் படிந்து போன கோபங்களும,; வருத்தங்களும், நமது இருப்பையும், சுதந்திரத்தையும், நிலை நாட்டிவிட வேண்டும் என்ற ஆவேசத்தை நமக்கு ஊட்டி விடுகின்றன.                                                                                                                                                                                                                                   இதற்கு உகந்ததாக, மனித குலத்தின் நன்மையை ஒட்டு மொத்தக் குறிக்கோளாகக் கொண்டிருந்த சிந்தனைகள் என் மனதை வெகுவாகக் கவர்ந்தன. அச்சிந்தனை சார்ந்த கனவுகளும், அந்தக் கனவுகளிலிருந்த தர்க்கங்களும், என் எதார்த்த மனதுக்கு இசைவாக இருந்தன.                                                                                                                                                                                                                                         மேலான வாசகனாக இருத்தல் மேன்மையான படைப்புகளுக்கு வழிவகுக்கும் என்று சொன்னேன். வாழ்க்கைச் சூழல்கள் எல்லோருக்கும் மிதமான முறையில் அமைந்தால்தானே இது சாத்தியம்?                                                                                                                                                                                                               படிக்க வேண்டும் என்றால் நல்ல குடும்பச் சூழல் அமைய வேண்டும். அதுவேதான் எழுதுவதற்கும் என்பேன். மன அமைதி, இட அமைதி, சுமுக நிலை இருந்தால்தான் இது சாத்தியம். இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதார நிலை என்ற ஒன்றும் வெகு முக்கியமான ஒன்றாக அமைந்து போகிறதல்லவா?                     இப்படியான இக்கட்டுகளுக்கு நடுவேதான் நான் எழுத வந்தேன். வறுமைதான் என்னை எழுத வைத்தது. என் தாய் தந்தையரின் உழைப்பும் தியாகமும்தான் என்னை எழுதத் தூண்டியது. அதில் மற்றவர்களுக்குச் சொல்ல ஏராளமாய் இருப்பதாக உணர்ந்தேன்.                                                                                    எழுத்தாளர்களும் சராசரி நடப்பியல்புகளுக்கு உட்பட்டவர்கள்தான். ஆனாலும் சற்றே வித்தியாசப் பட வேண்டாமா? அதுதானே நியாயம்?                                                                                                                               இந்தச் சமுதாயத்திற்குச் செய்தி தரக்கூடியவன், மனித மனங்களை ஆட்டிப் படைக்கக் கூடியவன், மனிதச் சிந்தனைகளை மேம்படச் செய்யக் கூடியவன், சக மனிதனை, அவனது மென்மையான உணர்வுகளை, அவன் நெஞ்சின் ஈரப் பகுதியை, ஆழப் புதைந்திருக்கும் நன்னெறிகளை, சிறிதளவேனும் தட்டி எழுப்பிட வேண்டும்தானே? ஒரு படைப்பின் நோக்கம், அதுவாகத்தானே இருக்க முடியும்? இருக்க வேண்டும்? அதுதானே ஒரு படைப்பாளியின் அடையாளம்?                                                                                                                                                                                                                                என் அடையாளம் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இலக்கியம் என்பது அதுதான். இலக்கினை இயம்புதல். அந்த இலக்கு மனித வாழ்க்கைக்குப் பயன் தரத்தக்கதாக அமைய வேண்டும்.  என் எழுத்து அனுபவம் அப்படிப்பட்டதுதான். அன்றாடம் நாம் காணும் மனிதர்களிடையே எனக்கு ஏற்பட்ட அனுபவமே என் எழுத்து.                                                                                                                                                                                                                                           வாழ்க்கையில் மனிதர்கள் வெகு சகஜமாகக் காட்சியளிக்கிறார்கள். யதார்த்தம் மிளிரும் அவர்களின் இயல்புகளில் பண்பாடு அங்கங்கே தலைதூக்கி நிற்கிறது.          நிறை குணங்களுடனும், பற்பல குறைகளுடனும்தான் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையை ஆழ அறிந்து அதனுடன் உறவு வைத்துக் கொள்வதே நேசம். இந்த நேசத்தை உருவாக்குவது இலக்கியம். அதனை என் ஒவ்வொரு படைப்பிலும் வெளிப்படுத்திக்கொண்டேயிருப்பேன். இது என் அவா.                                                                                                                     வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது, அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம்.                                                                                                                                            இது புதுமைப்பித்தன் கூற்று.                                                                                                                                                                    ரசனையைச் சொல்லுவது என்பது இலக்கியத்திற்கு மிகவும் அவசியம்தான். ரசனை இல்லையென்றால் ஒருவன் எழுத்தாளனாக முடியாது. ஆழ்ந்த ரசனைதான் ஒரு படைப்பாளியை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.                                                                                                                 ஒரு சாமான்யர் ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும், அதையே ஒரு படைப்பாளி பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.                                                                                                                                      ஒரு பூவைப் பார்த்ததும் அதைப் பறிக்க நினைப்பவன், பறிப்பவன் சாமான்யன். ஆனால் அதைச் செடியிலேயே வைத்து, பச்சைப் பசுந்தளிர்களுக்கு நடுவே பட்டுப்போன்ற பளபளப்புடன் மலர்ந்து சிரிப்பதைக் கண்டு மயங்கி நிற்பவன் படைப்பாளி.                                                                                                                                                                                                                                                                                                            இதைத்தான் கலைத் தன்மை என்கிறார்கள். மிகுந்த ரசனையின்பாற்பட்ட விஷயம் இது.      கதைகளின் உள்ளடக்கம் முற்போக்காக இருந்தாலும், அவற்றின் கலைத் தன்மை வலுவாக இருந்தால்தான் எழுத்தாளன் பெயர் சொல்லும்.                                                                                                               இந்தக் கலைத் தன்மை, படைப்பின் நேர்த்திக்கு, வாசிப்பு அனுபவத்துக்கு, அதன் கட்டுக் கோப்புக்கு உதவும் என்கிற நிலையில், எழுத்தின் பயன் என்ன? எழுத்தாளனின் திறமை வெளிப்பட்டால் போதுமா? எழுத்தின் பயன்பாடு என்னாவது?                                                                                  அங்கேதான் எழுத்துக்கான அவசியம் அதிகமாகிறது. என் படைப்புக்களின் அடிநாதம் அங்கேதான் ஜனிக்கிறது என்று நான் நினைக்கிறேன்.                                                                                                              இலக்கியம் மனிதனை நெறிப்படுத்துவதாக அமைய வேண்டும். அப்படித்தான் நான் என் கதையுலகுக்கு வந்தேன்.                                                                                                                                                                                              என்னை எழுதத் தூண்டியது எனது அனுபவங்கள். என் தாய் தந்தையரோடு இயைந்த என் வாழ்க்கை.                                                                                                                                                                                                              என் படைப்புக்கள் முன்னிறுத்துவது மனித நேயம். என்னைப் பாதிக்கும் விஷயங்களை நான் எழுத முனைகிறேன். எழுதுவது போலவே இருக்கவும் முயல்கிறேன். இருந்துகொண்டுமிருக்கிறேன்.                                                                                                                                                                  எந்தவொரு நிகழ்வையும் அன்பு, கருணை, உண்மை, நேர்மை, நியாயம் என்ற வட்டத்திற்குள்ளிருந்துதான் என்னால் பார்க்க முடிகிறது. மனிதர்கள் அதிலிருந்து பிறழும்போது என் மனம் புழங்குகிறது. உள்ளுக்குள் நான் கோபம் கொள்கிறேன். மனசுக்குள் அழுகிறேன். எனது கோபத்தின், சோகத்தின் வெளிப்பாடாகவே அவற்றின் வடிகாலாகவே எனது படைப்புக்கள் உருவாகின்றன.                                                                                                                                                                                 எனது இந்த அனுபவங்கள் அன்றாட வாழ்வில் எதிர்ப்படும் சக மனிதர்களிடமிருந்துதான் எனக்குக் கிடைக்கிறது. அவர்களை நீங்களும் சந்தித்திருப்பீர்கள். ஆகையால் எனது கதையுலகம் வாசகனுக்கு மிக எளிமையாய் அமையும்.                                                                        சக மனிதர்களின்பாலான நேசமும், நிதானப் போக்கும், வாசகர்களிடம் மேம்படுமாயின், அதுவே எனக்குக் கிடைத்த வெற்றி.                                                                                                               எப்பொழுதுமே எனது எழுத்தில் நான் அதிக முக்கியத்துவம் அளிப்பது மனிதர்களின் மன உணர்வுகள்பற்றியே. உள்ளார்ந்த நெறிகள்பற்றியே. இவை எப்படியெல்லாம் ஒரு சராசரி மனிதனிடம் வெளிப்படுகின்றன, அந்த வெளிப்பாடு ஒருவனின் உணர்வுகளோடு, ரத்தத்தோடு கலந்து போன நன்னெறிகளின் அடையாளமாக எப்படியெல்லாம் பரிணமிக்கின்றன என்பதையே மையப்படுத்த முனைகின்றேன்.                                                                                                                                           நான் வளர்ந்த சூழ்நிலை, பார்த்த, பழகிய மனிதர்கள், அவர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அனுபவங்கள் இவைதான் எனக்குக் கதையைத் தருகின்றன.                                                                     இவர் படைப்புக்களில் பாவனை இல்லை. பகட்டு இல்லை. ஆடம்பரமில்லை. படாடோபமில்லை. இவரது மனமொழி நடையே எவ்வித ஒப்பனையுமில்லாமல் நேர்மையுடன் வெளிப்படுகிறது. மன உலகம் கதையுலகமாக விரிகிறது. அன்றாட அனுபவ எல்லைக்குள், மனசுக்குள் பதிவாகிற நிகழ்வுகளே கதைகளாயிருப்பவை. அதனாலேயே நேர்மையும், மன உண்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.     இது மேலாண்மை அவர்களின் என் எழுத்துபற்றிய கூற்று.                                                                                                                                                                                                        அவரது வரிகளிலேயே கூறி உறுதி செய்கிறேன். எனது அனுபவ எல்லைக்குட்பட்ட ஒரு சம்பவத்தை, சம்பவத் துளியை மட்டுமே சிறுகதையாக்குவது, உலுத்தாத மொழி நடை, வாசக மனதில் சிந்தனைப் பொறியைத் தெறிக்கச் செய்தல், சிறிய அழுக்கைத் துடைத்தல், சிறிய சோகம் கவிழச் செய்தல், வெளிச்ச நினைவு மின்னி மறைதல், என எல்லாச் சிறுகதைகளும் மனித நேயம் என்கிற உயர் பண்பை உயிர் வடிவமாகக் கொண்டிருத்தல். மத்திய தர வர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு இவையே என் கதைகளின் வழித்தடம். இப்படித்தான் நான் என் எழுத்துலகளில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் ஏன் எழுதுகிறேன்  என்பதற்கான எளிய காரணங்கள் இவையே…நன்றி…!

                                             --------------------------------               

உஷாதீபன், எஸ்2-ப்ளாட் எண்.171,172 இரண்டாம் தளம், மேத்தாஸ் அக்சயம், ராம்நகர் தெற்கு12வதுபிரதான சாலை, மடிப்பாக்கம், சென்னை-600 091.  (94426 84188)

 

                                                                                                                                                                                                                                                                                       

21 அக்டோபர் 2023

 

 

ஜெயந்தனின் நாடகம் “மனுஷா..மனுஷா..”வாசிப்பனுபவம்-உஷாதீபன்

வெளியீடு- கோடு வெளியீடு, 9பி, மனோகர் நகர் பிரதான சாலை, பள்ளிக்கரணை. சென்னை-600 100 (ஃபோன்-99622 44554)

-----------------------------------------------------------------------------------------------------


            ஜெயந்தனின் கதைகளைப் படிப்பதென்றாலே மனசு திக்…திக்…என்று இருக்கும். உண்மை உரக்கச் சொல்லப்படும்போது அதை மனசு ஏற்கும் அதே நேரத்தில் இப்படிப் பட்டவர்த்தனமாய்ப் போட்டு உடைக்கிறாரே…இவருக்கு ஏதும் சங்கடம், தொல்லைகள் வந்து விடக் கூடாதே என்ற மனசு பயப்படும்.

           


இங்கே எழுத்து சுதந்திரம் என்பது அந்த அளவுக்கு இருக்கிறதா…இப்படிப் பயப்படாமல் எழுதுகிறாரே….லஞ்ச லாவண்யம், அலுவலக நடைமுறைகள், சமுதாய நோக்குகள், ஜாதிப் பிரச்னைகள் என்று எதையெடுத்தாலும்…போற்றுபவர் போற்றட்டும், புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும், தொடர்ந்து செல்வேன், ஏற்றதொரு கருத்தை எனது உளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்…என்கிற கவியரசர் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப நெஞ்சை நிமிர்த்தி உரைக்கிறாரே என்று மனது பெருமைப் படும். அதே சமயம் இப்படி ஒரு தைரியமான எழுத்தாளருக்கு பாதகம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாதே என்று  அஞ்சும்.

            எனக்குத் தெரிய நா.பா.வுக்குப் பிறகு சமூக அவலங்களை, நடைமுறை அநியாயங்களை, நேர்மையற்ற  செயல்களை, பொய்யுரைத்து மேலெழுவதையே வாழ்க்கையாய்க் கொண்டவர்களின் ஊழல்களை, குரல் உயர்த்திப் பதிவு செய்தவர் ஜெயந்தன் ஒருவரே. நா.பா.வுடைய பதிவுகளில், படைப்புகளில் கொஞ்சம் இயல்புத் தன்மை மாறி நியாயம் கம்பீரமாகவும், தைரியமாகவும் உரத்துச் சொல்லப்படும் அதே வேளையில் ஜெயந்தன் அவர்களின் படைப்புக்களில் யதார்த்தப் பின்னணியில் மனிதர்கள் எவ்வளவு தடுமாறி நிற்கிறார்கள் தங்களின் தேவைகளின் பொருட்டும். வாழ்வியல் நடைமுறைகளின் பொருட்டும் என்றும், சூழல்கள் அவர்களை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது, எளிய மனிதர்கள் அதில் எவ்வளவு தவறிப் போகிறார்கள், அதிகாரம் படைத்தவர்கள் அதை எவ்வளவு தவறாக, தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆணியடித்ததுபோல், பொட்டில் அடித்ததுபோல், முகத்தில் அறைந்தது போல் என்பதாக அவரின் பார்வை தீட்சண்யமாய் விரிந்திருக்கும்.

            அதே கண்ணோட்டத்துடன்தான் இந்த மனுஷா…மனுஷா…நாடகத்தையும் மறைபொருளாக உருவாக்கி ஒரு அரசனின் படிப்படியான நிர்வாணக் கோலம் எப்படி அம்பலத்திற்கு வருகிறது என்பதை மாய யதார்த்தமாய்ச் சுட்டி, அது இந்த சமுதாயத்தின் பிரத்யட்ச நிலை என்பதைச் சொல்லாமல் சொல்லி, கேலி செய்து, கிண்டல் செய்து உணர்த்துகிறார். அதை உணர்கையில் நம் மனதும் திருப்தி கொள்கிறது, வேதனையும் விஞ்சுகிறது. ஒவ்வொரு எழுத்தாளராவது அங்கங்கே இப்படி நக்கீர தைரியத்தோடு தட்டுப்படகிறார்களே என்று மனது திருப்தி கொள்கிறது.

            நிஜ நாடக இயக்கமாய் ஒரு கூத்துப்பட்டறை நாடகம் பார்ப்பதுபோலான உணர்வினை இந்த நாடகத்தைப் படிக்கும்போது நமக்கு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அரசின் செயல்பாடுகள் எதையெல்லாம் அர்த்தமுள்ளதுபோல் நிகழ்த்துகின்றன, அதை ரசிப்பதுபோலான கூட்டம் எப்படி ஆஉறா, ஓஉறா….என்பதுபோல் வாழ்த்தி மகிழ்கின்றன, அதன் மூலம் தங்கள் வாழ்வை சிரமமின்றி நகர்த்திச் செல்ல எப்படிப் பொய்யாய்த் தங்களை முன்னிறுத்துகின்றன….அர்த்தமில்லாத செயல்பாடுகளெல்லாம் எப்படி அர்த்தமுள்ளதாய் வரிக்கப்படுகின்றன…அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் பொய்யான கூட்டம்  எப்படிக் குலவை பாடுகின்றன…என்று கிண்டலும் கேலியுமாய் மனதின் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கும் நக்கீர தைரியம் இந்த நாடகத்தின் முக்கிய அம்சம்.

            நாடகம் முழுக்க இந்த வாழ்க்கையின் நடப்பியல்களை விமர்சனங்களாய் முன் வைத்து, அர்த்தமற்ற போக்குகளைக் கிண்டல் செய்து, அதை ஏற்றுக் கொள்ளும் கோமாளித்தனங்களை பட்டவர்த்தனமாய் வெளிச்சம் போட்டு – மனுஷா…மனுஷா…இப்படியான நடப்புகளையெல்லாம் இவ்வாறுதான் கண்மூடிப் பார்த்துக்கொண்டு பிடித்த மண்ணாய் இருப்பாயா நீ, விழித்துக் கொள்….இது உன் சொந்த வாழ்க்கையை எவ்வாறெல்லாம் பாதிக்கிறது என்பதை நீ உணரவில்லையா? என்பதை நெஞ்சிலடித்துச் சொல்லியிருக்கிறது இந்த நாடகம்.

            ஒரு நாடகம் எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டு தன் கருத்தை முன் வைக்கிறது என்பது முக்கியமில்லை. குறைவான நேரமாய் இருந்தாலும், சொல்ல வந்த கால அவகாசத்தில், அமைத்துக் கொள்ளும் காட்சிகளில், பேசப்படும் நறுக், சுருக்…வசனங்களில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் எத்தனை எண்ணிப் பார்த்து உணரப்பட வேண்டியவை என்பதை கருத்தாய் உணர வைக்கும் ஜெயந்தனின் இந்த மனுஷா…மனுஷா…நாடகம்  மிகச் சிறிய நூலானாலும் இலக்கிய விரும்பிகள், நாடக ஆர்வலர்கள், தரமான வாசகர்கள் தேடிக் கண்ட படிக்க வேண்டிய புத்தகமாய் ஜெயந்தனின் இந்த நூல் அமைந்திருக்கிறது என்பதை சத்தியவாக்காக இங்கே முன் வைக்கிறேன்.

                                                ------------------------------------