25 ஜனவரி 2019

தி.ஜா.ரா. சிறுகதை-பசி ஆறிற்று - வாசிப்பனுபவம்- உஷாதீபன் கட்டுரை


       கட்டுரை - உஷாதீபன்,                        தி.ஜானகிராமன்                                                              சிறுகதை“பசி ஆறிற்று”                  வாசிப்பனுபவம் 
----               ,                   ----------------------------------               -----------------------------


       நாம எதுக்கு எழுதணும்…? எல்லாந்தான் எழுதித் தள்ளியிருக்காங்களே…எழுதினா இப்படி எழுதணும்… ஏதாச்சும் மிச்சம் வச்சிருந்தாத்தானே…!
      கதையைச் சொல்வதா? அல்லது எழுதியுள்ள அழகைச் சொல்வதா?
      தோன்றிய கதையினால் அழகு பிறந்ததா…? அல்லது அழகியலைச் சொல்வதற்காக கதையை உருவாக்கினாரா?
       என்னதான் கலாரசனையோடு, காதல் மொழியை, காம உணர்வுகளை விவரித்தாலும்….
      ஒழுக்க சீலங்களை விட்டுக் கொடுப்பதில்லை. காலத்திற்கும் அழியா கலாசார சம்பிரதாயங்களை இகழ்வதில்லை. மனித மேன்மைக்கு உதவும் நல்லியல்புகளைப் புறந்தள்ளுவதில்லை.
      மனித உணர்ச்சிகளின்பாற்பட்ட தடுமாற்றங்களுக்காக, அடிப்படை ஒழுக்கம், பண்பாடு சிதைந்து விடக் கூடாது என்கிற தீர்மானம்…! வியக்க வைக்கிறது எழுத்தின் வன்மை!
      ஒவ்வொரு கணத்திற்கும் மனசு என்னவெல்லாம் நினைக்கும் என்பதை, உடல் மொழியிலும், வார்த்தை விளையாட்டிலும் என்னமாய்  வெளிப்படுத்துகிறார்?
      க்ளாசிக் என்றால், மொத்தக் கதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெறிப்பதல்ல. வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை அப்படி மிளிர வேண்டாமா? இதுதான் க்ளாசிக்…
      வாழ்நாளுக்கெல்லாம் இவர் ஒருத்தர் போதும் போலிருக்கிறதே…!
      திரும்பத் திரும்பப் படித்தே ஆயுள் கழிந்து விடுமே…!
      “பசி ஆறிற்று…”   - என்னமாய் ஒரு தலைப்பு? உள்ளே எத்தனை அர்த்தங்கள்?
      வெறும் வயிற்றுப் பசியா…? இல்லை…சோற்றுப் பசியா…?
      இந்த உணர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லையே….எப்படி அடுத்த கதைக்குப் போவது?
      அடிப்படை தர்மங்கள் சிதிலமாவதில்லை. மனிதர்கள் தடுமாறலாம். வழுவுவதில்லை. பிறகு நிலைக்கு வரலாம். தவறில்லை. இந்த உணர்வுகளைப் படிப்படியாகச் சொல்லிச் செல்ல என்னவொரு பக்குவம் வேண்டும் இந்தப் படைப்பாளிக்கு?  
      வாழ்க்கை அனுபவங்கள்தான் ஒருவனை இப்படி எழுத வைக்கின்றன என்றால், இவ்வளவு அனுபவங்களும் ஒருவருக்கு எப்படி சாத்தியமாயின? இத்தனையையும் நுணுகிப் பார்க்கும் திறன் எப்படி வாய்த்தது?
      அந்த முதல் பத்தியிலேயே அவர் ஒரு செவிடு என்பதை எப்படி உணர்த்துகிறார் பாருங்கள்.
சொல்ல ஆரம்பித்தால் மொத்தக் கதையையும் வரிக்கு வரி சொல்லித்தான் வாசிப்பனுபவத்தை வெளிப்படுத்தியாக வேண்டும். காரணம் ரசனையின்பாற்பட்ட விஷயமாயிற்றே…இது…!
விமர்சனமா செய்கிறேன்…ஏற்ற இறக்கம் சொல்ல….? நகரும் வரிகள் இதைத்தான் பறைசாற்றுகின்றன.
மணி பன்னிரண்டாகப் போகிறது…சுருக்க வாங்கோ… - கத்தின கத்தில் குரல் விரிந்து விட்டது. போய்க் கொண்டிருந்த சாமிநாதக் குருக்கள், என்ன? என்று திரும்பி நெற்றியைச் சுருக்குகிறார். நாசமாப் போச்சு…..முற்றத்தில் வந்திருந்த வெள்ளை வெயிலையும், நிழலையும் காட்டி ஜாடை செய்கிறாள் அகிலாண்டம். புரிந்து கொள்கிறார் அவர்.
உடனே விட்டாரா பாருங்கள். அடுத்த வரி….
ஏனக்கா…ஏன் இவ்வளவு மெதுவாப் பேசுகிறாள் அடுத்த வீட்டு அம்மாமி? – இந்தக் கிண்டலை உள்வாங்கும் அகிலாண்டம்…
டமாரச் செவிடுக்கு மாலைபோட்டுவிட்டு இதையெல்லாம் சட்டை செய்ய முடியுமா? ஆதங்கம். பேச்சை சட்டை செய்யவில்லைதான்….ஆனால் அந்தக் குரல்….?
“நான் காவேரிக்குப் போய் குளித்து விட்டு வருகிறேன் அக்கா….“
காதில் விழுந்ததும் இருப்புக் கொள்ளாமல்…வாசலுக்கு ஓடுகிறாள் அகிலாண்டம். ஈர்ப்பு எப்படி ஆரம்பிக்கிறது பாருங்கள்….
வாசலுக்கு வந்த அவன் அகிலாண்டம் நிற்பதைப் பார்க்க…வெறுமே பார்க்க அல்ல…தைரியமாய்ப் பார்க்க….
“உடனே உள்ளே ஒருமுறை பார்த்தான். தெருவில் கிழக்கும் மேற்குமாக ஒரு முறை பார்த்தான். குரைக்கக் கூடச் சோம்பல்படும் நாயைத் தவிர வேறு ஈ, காக்காய் இல்லை. தைரியமாய் அவளைப் பார்க்க ஆரம்பித்து விட்டான்…“
நறுக்கென்று அவள் மறைகிறாள். ஆனால் ரேழிக்குப்போனதும் கால்கள் தயங்குகின்றன. காட்சியாய் மனதில் ஓடவிடுங்கள்…ரசனை மேம்படும்.
எல்லாவற்றிற்கும் மனசுதானே காரணம். அதுதானே ஒருவனைப் பாடாய்ப் படுத்துகிறது.
“உள்ளுக்கா, வாசலுக்கா என்று கேட்டுக் கொண்டிருந்த மனத்தைக் கடைசியில் வாசல் பக்கமே திருப்பி விட்டாள்…“ –
மனதைத் திருப்பி விடுகிறாளாம். எழுத்தின் அழகை ரசிக்கத் தவறலாமா?
சோப்புப் பெட்டியை ஆட்டிக் கொண்டு அவன் சென்று கொண்டிருக்க…உள்ளே வந்த இவளுக்கு…தான் செய்தது தப்பு என்று படுகிறது..
“வேறு என்ன செய்வது? பைத்தியக்காரப் பெண் ஜென்மம்…!அந்த சமயத்தில் வேறு என்ன செய்யும்?“
“மேல் வீட்டில் எல்லோருமே  அழகுதான். ருக்மணி மாமிக்கு நாற்பது வயது ஆனாற்போலவே இல்லை…“..என்று எழுதுகிறவர்…மேற்கொண்டு ஒரு வரி சொல்லுகிறார் பாருங்கள்….
கன்னமும் காலும் பட்டுத் துடைத்துவிட்டாற்போல இருக்கின்றன. தம்பியும் அப்படித்தான். ஓடுகிற பாம்புக்கு கால் எண்ணுகிற வயசு…..
அகிலாண்டத்தின் மனது எங்கெங்கோ சஞ்சரிக்கிறது. கல்யாணம் ஆவதற்கு முன் பிறந்த ஊரில் எதிர் வீட்டுக்கு வந்திருந்த ஒரு பையனை நினைக்கிறது.
“அவன் பார்த்த பார்வை…என்ன ஒரு குளுமை…விழுங்கி விழுங்கிப் பார்த்து விட்டு, கடைசியில் ஊருக்குப் போய்விட்டான்…“
உடனே மனம் ஆதங்கப் படுகிறது. பெருமூச்சு எழுகிறது.
இந்த டமாரச் செவிடுக்கு வாழ்க்கைப் பட்டாகி விட்டது. குருக்கள் பெண், குருக்களுக்குத்தான் வாழ்க்கைப்பட வேண்டும் என்றாலும் அப்பாவுக்கு இந்தப் பூ மண்டலத்தில் வேறு ஒரு வரன் கூடவா அகப்படவில்லை?
“கிடைக்கவில்லை“ இல்லை. …அகப்படவில்லை…என்கிறார். ஆதங்கத்தின் ஆழமான வெளிப்பாடு. படைப்பாளிக்கு வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணருவதற்கான இடம்.
“கட்டை குட்டையாய் கல்லுமாதிரி உடம்பு. காதிலே கடுக்கன்…எதற்காகவோ தெரியவில்லை….கேட்காத காதுக்குக் கடுக்கன் என்ன? மாட்டல் என்ன?“
காது கேட்கவில்லை என்றால் கடுக்கன் போடக் கூடாதா? அதற்குக் கூடத் தகுதியில்லையாம் செவிட்டுக் காதுகளுக்கு….! அகிலாண்டத்தின் மன ஆதங்கம் அப்படிப் பட்டுத் தெறிக்கிறது.
இவள் குரல் எப்படி இருக்குமென்று அவனுக்குத் தெரியுமோ என்னவோ? அவனிடம் கத்திக் கத்திப் பேசிப் பேசி…தொண்டை பெருகி விட்டது. ஊருக்குச் சென்ற போது தங்கைகள் கேட்கிறார்கள்….ஏண்டீ இப்படிக் கத்தறே எல்லாத்துக்கும்? ஊர் முழுக்கக் கிடுகிடுக்கணுமா?
அங்கேயும் ஆதங்கம் பிடுங்கித் தின்கிறது அவளை.
அத்திம்பேருக்கு நீங்க மாலைபோட்டிருந்தா தெரியும் சேதி…! அவர் காது கிட்டப் பீரங்கி வெடிச்சா…நெருப்புக் குச்சி கிழிச்ச மாதிரி இருக்கு அவருக்கு…. – சிரிக்கிறார்கள் எல்லோரும்.
கச்சேரி கேட்க நட்ட நடுவில் சென்று அமர்ந்திருக்கும் கணவனைப் பார்த்து மனது வெடிக்கிறது….இப்படி….
“போன வருஷம் எதிர்வீட்டில் ராதா கல்யாணத்தின் போது மதுரை மணி சங்கீதக் கச்சேரி நடந்தது. கூட்டத்திற்கு நடுவில் அவள் புருஷனும் உட்கார்ந்திருந்தான். பக்கத்தில் வாயைப் பிளந்தும், ஆகாரம் போட்டும் மெய் மறந்திருந்தவர்களை ஜடம் மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுநடுவே பெரிய வீட்டு வாயாடி கிட்டுச்சாமி…“கச்சேரி எப்படி?” என்று கண்ணைச் சிமிட்டி அவனிடம் ஜாடை செய்து கொண்டிருந்தான். ஸ்திரீகளுக்கு நடுவே உட்கார்ந்திருந்த அகிலாண்டத்திற்கு வந்த ஆத்திரத்திற்கும் துக்கத்திற்கும் அளவே இல்லை….

“காதுதான் இல்லையே….நடுக் கச்சேரியில் உட்கார்ந்து அசட்டுத் தனத்தை தப்படி அடித்துக் கொள்ளுவானேன்…?”
செவிட்டு ரசனையைப் பாருங்கள்…பாருங்கள்…என்று ஊருக்குச் சொல்வதைத்தான் “தப்படி” என்கிற அந்த ஒரு வார்த்தையில் உரைக்கிறார் தி.ஜா.ரா.
இந்த ஆதங்கம் வேறொரு ஆதங்கத்திற்கு வழி வகுத்து பெருமூச்சை ஏற்படுத்துகிறது.
“அகிலாண்டம் பாடகரைப் பார்க்க பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். ஆனால் கண் ராஜத்தின் மேலேயே திரும்பித் திரும்பி விழுந்தது. அவன் பாட்டை ரஸிக்கும் அழகைக் கண்டு வியந்து கொண்டிருந்தாள்”.
பக்கத்து வீட்டு ராஜம் முன் வரிசையில்….
ஸிக்கும் அழகு…… ரசிக்கும் இல்லை…..அந்த எழுத்து மாறக் கூடாது. அதுதான் அழகு….அங்கே.  மனம் என்ன பாடு படுகிறது பாருங்கள்….
“பிறகு இரண்டு நாளைக்கு அகிலாண்டத்திற்கு ஒன்றும் ஓடவில்லை. தேனீ மாதிரி அவன் நினைவே வந்து அவளை ஒட்ட ஒட்ட மொய்த்துக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு சாக்கைச் சொல்லி எதிர்வீட்டுக்கு, மணிக்கு ஏழு தடவை போக ஆரம்பித்தாள். ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த ராஜத்தைப் பார்த்தாள். அப்பொழுதுதான் அவன் கண்ணெடுக்காமல் இத்தனை நாளாக இல்லாத ஒரு பார்வை பார்த்தான். அவளைப் புரிந்து கொண்டுவிட்டதாகச் சொல்வதுபோல் இருந்தது…”
வீட்டுக்கு வந்தபோது…“காபி போட்டாச்சா…?” என்று கூடத்தில் துணியை விரித்துப் படுத்திருந்த அவள் புருஷன் தூக்கம் தெளிந்து கேட்க…அப்போதுதான் அவளுக்கு மறந்து போன காரியங்களெல்லாம் நினைவுக்கு வருகிறது. நினைவுகள் முழுக்க அங்கே பதிந்திருக்க…வீட்டுக் காரியங்கள் மறந்து போகிறது அகிலாண்டத்திற்கு.
ஊருக்குக் கிளம்புகிறான் ராஜம். சர்க்கரை கடன் கேட்கப் போன அகிலாண்டம், ஏக்கம் தாளாமல் திரும்புகிறாள். பார்த்து விடுகிறாள் மாமி. நன்னாத் திரும்பிப் போறாள்…அசடு…வாங்கிண்டு போயேன்….என்கிறாள். நிறையக் கொடுடி…ஒரு கரண்டி என்ன? என்று சகுனம் கழிந்த மகிழ்ச்சியில் வார்த்தைகளை நிறைவாக உதிர்க்கிறார் ராஜத்தின் தகப்பனார். (ஊருக்குக் கிளம்புகையில் சுமங்கலி எதிரே வந்த சகுனம் அவரை மகிழ்ச்சிப் படுத்துகிறது….சொல்ல மாட்டார் தி.ஜா.ரா.   புரிந்து கொள்ள வேண்டும்)
போயிட்டு வரேம்மா….அந்த மாமி கிட்டவும் சொல்லு…என்கிறான் ராஜம்.
போயிட்டு வரேன்னு சொல்லிக்கிராண்டி..என்று அகிலாண்டத்திற்கு அஞ்சல் செய்தாள் தாயார். அஞ்சல்…..வார்த்தையைக் கவனியுங்கள். படைப்பாளி பொறுக்கிப் போடும் வார்த்தைகளில் எப்படி மிளிர்கிறார் பாருங்கள்.
சரி…என்று வேதனையை அடக்கிப் புன் சிரிக்க…உடனேயே வாசலுக்கு வந்து விட… பார்த்தாயா….ஊஞ்சல்ல வச்சிருந்த புஸ்தகத்த மறந்துட்டேன்…என்று ராஜம் உள்ளே போக யத்தனிக்க…நா போய் எடுத்துண்டு வரேண்டா  என்று தகப்பனார் ஓட…அம்மா ஒரு கிராம்பு கொண்டு வாயேன்…என்று அம்மாவையும் ராஜம் திருப்பி விட….அது நல்ல சந்தர்ப்பமாய் அமைகிறது.
போயிட்டு வரட்டுமா? என்கிற பாவனையில் அகிலாண்டத்திடம் பேசுகிறான் ராஜம். தன்னிடம் தனியாகச் சொல்லிக் கொள்ள  அவன் எடுத்துக் கொண்ட பிரயத்தனங்கள் அவளுக்குள் பெருமையை ஏற்படுத்துகிறது. கண்களில் நிறைந்த ஜலத்தைத் விழாமல் தேக்கிக்  கொண்டு தலையாட்டுகிறாள்.
விழாமல் தேக்கிக் கொண்டு தலையாட்டினாள்…என்ற வரிகளில்தான் எவ்வளவு ஆழமான ரசனை.
கிராம்பும் புஸ்தகமும் வந்து விட்டன. சலங்கை ஒலிக்கிறது. ஒரு நிமிடத்தில் இடம் வெறிச்சோடி விடுகிறது. மனது அடித்துக் கொள்கிறது. பித்துப் பிடித்த நிலை. எதுவும்  செய்யவொண்ணாத தவிப்பு….மாலை வேலைக்காரி பற்றுப் பாத்திரம் தேய்க்க வருகிறபோது அவளிடம் பாய்கிறது….
விதியிடம் பட்ட ஆத்திரத்தை அவள் மீது திருப்பி விட்டாள்….என்கிறார் தி.ஜா.ரா. ஒரே வரி…முடிந்து போகிறது….
வேலைக்காரி பதிலுக்குக் கோபப்பட்டு….சர்தாம்மா…கணக்கை முடி…என்றுவிட்டுப் பறந்து விடுகிறாள்.
நடந்ததை நினைத்து அழுகிறாள் அகிலாண்டம். நிம்மதியிலிருந்து நழுவிவிட்ட மனம்…வேதனையில் துடிக்கிறது. ஊரிலிருந்து தகப்பனார் வருகிறார். அவரோடு பிறந்தகம் போய் பத்துப் பதினைந்து நாட்கள் இருந்து விட்டு வந்தபின்புதான் மனம் சமனம் கொள்கிறது.இரண்டு நாள் அவள் கற்பனையில் நாடகம் ஆடிவிட்டுப் போன ராஜத்தை மறந்து விடுகிறாள்.
இப்போது அந்த ஸ்தானத்திற்கு வந்து விட்டான் அடுத்த வீட்டு ருக்மணி அம்மாமியின் தம்பி. அவனுக்குப் பத்துப் பதினைந்து நாள் லீவு. இருந்தால் என்ன? அவள் அதிர்ஷ்டம் தெரிந்ததுதானே? இருந்தும் மனது கேட்கிறதா என்ன?
குளிக்கப்போனவனை மனம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. துடிக்கத் துடிக்கக் காத்திருக்கிறாள்.
 என்ன யோஜனை பலமாயிருக்கு? – குரல் கேட்டு அதிர்கிறாள். அவள் புருஷன் நைவேத்தியப் பாத்திரத்துடன்…புன் சிரிப்போடு….
ரொம்ப நாழி பண்ணி விட்டேனா…? பசி துடிக்கிறதாக்கும் அம்பாளுக்கு…?
செத்தான்யா மனுஷன் இந்த ஒரு வார்த்தைல….“அம்பாளுக்கு…”  - மனைவி மீது என்னவொரு அன்பு? அம்பாளாகவே பார்க்கும் தன்மையா? அல்லது அத்தனை பக்தியோடு, பிரியத்தோடு அவளை எதிர்கொள்ளும் ஆவலா…? தன் மனைவி அம்பாள் மாதிரி என்கிற பெருமிதமா? எப்படியான ஒரு அற்புதமான வெளிப்பாடு?
செவிடனின் சிறுகுரலில் எவ்வளவு பரிவு? எவ்வளவு கனிவு? எவ்வளவு நம்பிக்கை…? என்ன நிர்மாயமான, நிர்மலமான பார்வை…!
ஜன்மத்திலேயே போகத்தை அறியாத கண்ணும் உதடும் வழக்கம் போல் புன்சிரிப்பில்.
இதை விட என்ன வேண்டும்?-உணர்ந்து மயங்கிப் போகிறாள் அகிலாண்டம்.
எப்படிச் சொல்லி முடிக்கிறார் பாருங்கள்.   யாராவது எழுதியிருக்கிறார்களா? எங்கேனும் உணர்ந்திருக்கிறீர்களா? சொந்த வாழ்க்கையில் இப்படியான உணர்ச்சிகளுக்கு நீங்கள் ஆட்பட்டதுண்டா…? அட…படித்தாவது ரசித்திருக்கிறீர்களா…? அந்த பாக்கியமாவது கிட்டியிருக்கிறதா? தி.ஜா.ரா….முடிக்கிறார்…..
“சிரித்துக் கொண்டே நைவேத்தியப் பாத்திரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அவ்வளவு அன்பைக் காட்டிய விதியை உள்ளே அழைத்துப் போய்க் கதவைத் தாழிட்டு, அதன் உடல் வேர்வையைத் துடைத்தாள். அது, இலையில் உட்கார்ந்து சாப்பிட்டபோது அவளுக்கு…
எல்லாப் பசியும் தீர்ந்து விட்டது……”
எல்லாவற்றிலும் மேன்மையானது கள்ளம் கபடமில்லாத, விகல்பமில்லாத, மெய்மையான அன்பு….! அது அங்கே ஜெயிக்கிறது.
பசி ஆறிற்றா படித்த உங்களுக்கு…? தி.ஜா.ரா….இன்னும் நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருப்பார் தன் எழுத்தில்…!!!!
                  ------------------------------------------------------------------





21 ஜனவரி 2019

”இளமை வரும், முதுமை வரும்,வாழ்க்கை ஒன்றுதான்” கட்டுரை


கட்டுரை       உஷாதீபன், 
        
இளமை வரும், முதுமை வரும்,வாழ்க்கை ஒன்றுதான்”           
      ----------------------------------------------------

      தினமும் காலையில் யோகா வகுப்பிற்குச் சென்று வரும் நான் மாலை வேளைகளில் நடைப் பயிற்சி மேற்கொள்வது உண்டு. அம்மாதிரி நேரங்களில் அதிகம் போக்குவரத்து இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து, என் நடைக்கு உகந்த இடங்களாகக் கொண்டு வழக்கமாகச் சென்று வருவேன். வாகனங்களின் இரைச்சல் அதிகமில்லாத, குறுக்கீடுகள் இல்லாத பகுதியாக என்பது கூடத் தொடர்ந்த நடைப் பயிற்சி அனுபவத்தின்பாற்பட்டுத்தான். ஒரு சிறு விஷயத்திற்குக் கூட நமக்கு அந்தந்தச் செயலுக்கேற்றாற்போல் அனுபவம் தேவைப்படுகிறது. அப்படியானால்தான் நாம் அதிலே மன நிம்மதியை அடையும் வாய்ப்பு ஏற்படுகிறது.
     மனிதன், வயது ஆக ஆகத்தான் அனுபவங்களை அடைகிறான். வாழ்க்கையில் சந்திக்கும் மனிதர்கள், எதிர்கொள்ளும் நிகழ்வுகள், ஏற்படும் வெற்றிகள், தோல்விகள், நஷ்டங்கள், ஏமாற்றங்கள், அதனால் ஏற்படும் வருத்தங்கள், துயரங்கள், இழிவுகள், இப்படிப் பலவற்றாலும் பக்குவமடைகிறான். விட்டேற்றியாய் இருந்த தன்னிடம், காலம் எப்படியான மாற்றங்களையெல்லாம் தோற்றுவித்திருக்கிறது என்று அறுதியிட்டு நினைத்துப் பார்க்கும்போது அவனுக்கே அவன் நடத்தை வியப்பாய் இருக்கிறது. மனிதன் தனக்குத்தானே பக்குவம் அடையும்போது மனது பெருமிதம் கொள்கிறது. எதிராளியின் செயல்களைப் பார்த்து நிதானம் கொள்ள முடிகிறது. தவறுகளைப் பொறுத்துக் கொள்வது சாத்தியமாகிறது. இப்படித்தான் இருக்கும் என்றும், போகப் போகச் சரியாகும் என்றும் பொறுமை காக்க முடிகிறது. இப்படிச் செய்யலாமா என்று யோசியுங்களேன் என்று எதிராளிக்கு விவேகமாக அறிவுரை சொல்ல முடிகிறது. மற்றவர்களிடம் பேசும்பொழுது வார்த்தைகளை அளந்து பேச முடிகிறது. இதைச் சொல்லலாமா வேண்டாமா என்று பகுத்துப் பார்த்து தணிக்கை செய்து கொள்ள முடிகிறது. சொல்லுவதை விட சொல்லாமல் விட்டுவிடுவதே நன்று என்று உணர்ந்து கொள்ள முடிகிறது. காலம் கற்பிக்கும் என்று அமைதியடைய முடிகிறது. இம்மாதிரி நிதானம் இல்லாதோரின் நடத்தைகளையும், பேச்சுக்களையும் காணும்போது அமைதியாக நின்று மனதுக்குள் சிரிக்க முடிகிறது.
     மனிதர்கள் ஏன் இப்படி அவசரப் படுகிறார்கள்? என்று தோன்றுகிறது. யாரெல்லாம் பக்குவமானவர்கள் என்று நினைத்தோமோ அவர்களே நிலை தடுமாறும்போது மனது ரொம்பவும் சங்கடப்பட்டுத்தான் போகிறது. நம்மின் கணிப்பு எப்படித் தவறானது என்றும் எங்கே நமது சிந்தனையில் ஓட்டை விழுந்தது என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது. யானைக்கும் அடிசறுக்கும் என்பது முதுமொழி. யாருக்கும் அடிசறுக்கும் என்று நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
     மனிதன் காலம் பூராவும் பக்குவமடைந்துகொண்டேயிருக்க வேண்டியிருக்கிறது. அவனது செயல்களின் மூலமாகவும், அவனுக்குக் கிடைக்கும் அனுபவங்களின் மூலமாகவும். முழுக்க முழுக்க அனுபவ முதிர்ச்சி ஏற்பட்டு பழுத்த பழமாக யாரையாவது நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அப்படி ஒருவரும் இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. அப்படியான ஒருவர் உங்களுக்குத் தென்படுவதுபோல் இருந்தால் அவரது உள்ளே நன்றாக நீங்கள் நுழைந்து பார்த்திருக்க மாட்டீர்கள். பொது இடங்களில் அவர் அமைதி காப்பவராகக் காட்சியளிப்பார். அவரைச் சுற்றியுள்ள வளமான  சூழ்நிலையில் நழுவி ஓடி ஒளிந்து கொள்பவராக அவர் இருக்கக் கூடும். அதிகம் வாய்திறந்து பேசாது, எல்லாம் அறிந்து கடந்த ஞானி போல் மென்மையான புன் சிரிப்போடு மட்டுமே இருந்து உங்களை வசீகரம் செய்பவர்கள் இங்கே அநேகம். அவர்கள் வாயைத் திறந்தால்தான் தெரியும் வள்ளல்.
     இப்படியான பல்வேறுபட்ட நிலைகளிலும், சாதாரணச் சராசரி நிலையிலும், அன்றாடம் நம் வாழ்க்கையில் நாம் எத்தனையோ மனிதர்களைச் சந்தித்திருக்கக்கூடும். நமது மன ஓட்டங்களில் மனிதர்கள் அநேகரை நாம் உள் வாங்கியிருக்கலாம்.
     ஆனாலும் இப்படியான எல்லாவற்றிலிருந்தும் கடந்து மிகவும் பாவப்பட்டது முதுமை. மிகுந்த கருணையின்பாற்பட்டது. அன்பின் வழியிலானது. தியாகத்தின் அடிப்படையிலானது. நம் சமூகத்தால் கருத்தாகக் கவனிக்கப்பட வேண்டியது. கவனிக்கத் தவறியது. கவனிக்கப்படாமல் போனதால் பெருகியது. சொல்ல வந்த இந்த விஷயம்தான் என்னை எங்கெங்கோ இழுத்துச் சென்று விட்டது.
     எனது நடைப் பயிற்சியில் நான் அன்றாடம் சந்திக்கும் இடம் அந்த முதியோர் இல்லம். அந்த வழியைத்தான் தேர்ந்தெடுத்தது என் மனம். அவர்களை அனுதினமும் பார்ப்பதில் ஏதோ ஒரு திருப்தி. என்னவோ ஒரு நெருக்கம். என் தந்தையைப் போல் பலர் அங்கே. அதனாலேயே அந்த மானசீக விளைவோ? தினமும்தான் நினைத்துப் பார்க்கிறேன்.
     மிகப் பரந்த நீண்ட புல்வெளி. நடுவே அந்தக் கட்டடத்தை நோக்கிய நடைபாதை. கேட்டிலிருந்து வெளியே நின்று நேரே பார்த்தால் அந்த முதியோர் இல்லத்தின் நிர்வாகி அமர்ந்து கொண்டு தன் வேலையில் ஈடுபட்டிருப்பதைச் சில சமயம் காண முடியும். அது ஒரு பெண்மணி. அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் வாழ்க்கையை அந்த முதியோர் இல்லத்திற்கு என்று அர்ப்பணித்தவர். அங்குள்ள வயதான பெரியவர்களைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வதுதான், தான் பிறந்து வந்த வாழ்க்கைக்கான முழு அர்த்தம் என்று தன்னை வரித்துக் கொண்டவர்.
     நான் அந்தப் பகுதியில் நடக்கையில் என்னை அறியாமல் கால்கள் நின்று போகும் அங்கே. அந்தப் புல்வெளியை நோக்குபவனாய் நின்று உள்ளே நடமாடும் பெரியவர்களை, வயதான முதியவர்களைக் கவனித்துக் கொண்டிருப்பேன். புல்வெளிக்கு நடுவே போடப்பட்டிருக்கும் ஈஸிசேரில் அமர்ந்து வானத்தைப் பார்த்த மேனிக்கே படுத்துக் கிடப்பார் ஒருவர். இன்றைய தேதியில் இந்தப் பரந்த வானம் மட்டும்தான் எனக்குச் சொந்தம் என்று நினைக்கிறாரோ என்று தோன்றும் எனக்கு. ஒருவர் ஏதோ பலத்த சிந்தனையில் நீள நடந்து கொண்டிருப்பார். பார்வை முற்றிலுமாகத் தாழ்ந்திருக்கும். எவரையும் பார்க்க விருப்பமில்லை என்பதாகவும் தோன்றும்.  ஒருவர் அந்தத் திண்ணையில் அமர்ந்து போவோர் வருவோரைக் கூர்ந்து நோக்கிய வண்ணம் இருப்பார். இன்னொருவர் வழி மேல் விழி வைத்துக் காத்திருப்பதுபோல் வைத்த கண் வாங்காமல் மெயின் ரோட்டிலிருந்து பிரியும் அந்த இல்லத்திற்கான சாலையையே தீர்க்கமாய்ப் பார்த்துக் கொண்டிருப்பார். யாரை எதிர்நோக்குகிறார். தன் மகனையா? மகளையா? தன் மனைவியையா? உறவுகளையா? வருகிறேன் என்று சொன்னார்களே? ஏன் வரவில்லை? வழக்கமாய் இன்று வருவானே? இந்த நிமிடம்வரை தகவல் இல்லையே? முன்னதாக ஒரு தகவல் கொடு என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? கேட்கிறானா? என்றுதான் கேட்டிருக்கிறான் என் பேச்சை. வளரும் காலங்களில் அவன் அம்மாவின் பேச்சைக் கேட்டான். பிறகு மனைவியின் பேச்சைக் கேட்கிறான். இன்று என் பேரன்களின் பேச்சைக் கூட அவன் கேட்பதில்லையே?
     அப்பா, அப்பா, தாத்தாவ ஏம்ப்பா அங்க கொண்டு விட்டிருக்கே…? நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வந்திடுவோம்ப்பா….பாவம்ப்பா…தாத்தா அங்க இருக்கிறது எனக்குப் பிடிக்கவேயில்லை….அவர அங்க போய்ப் பார்க்கிறது எனக்கு என்னவோ போல இருக்குப்பா….மனசுக்குச் சங்கடமா இருக்கு…
     உங்கம்மாட்டச் சொல்லு…அவ ஓ.கே.ன்னா நானும் ஓ.கே…சரியா?
     இந்தக் கடன்காரன் அப்படித்தான் சொல்வான். பெண்டாட்டியின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு திரிபவன். அவள் குண்டிக்குப் பின்னாலேயே அலைபவன். அந்தப் பிஞ்சுக்கு இருக்கும் இரக்கமும் கருணையும் கூட இவனுக்கு இல்லை. டி.வி.க்கு முன்னால் அமர்ந்து சினிமாவைப் பார்த்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பான். ஆனால் சொந்த வாழ்க்கையின் தவறுகளை அவன் உணர்வதில்லை. அதன் தாக்கம் அவனிடமில்லை. நெஞ்சில் ஈரமில்லாமல் எப்படி வளர்ந்தான்? நிறையச் சொல்லி வளர்த்திருந்தும் ஏன் அவன் மனதில் எதுவும் படியவில்லை?
     இந்த பார்…அவர் என் அப்பா…என் கூடத்தான் இருப்பார்…அவரை வேறே எங்கேயும் கொண்டு விட முடியாது. அந்தத் தப்பெல்லாம் என்னால் செய்ய முடியாது.  எங்கப்பா அம்மா என்னை அப்படி வளர்க்கலே…அந்த மாதிரி ஏதாச்சும் எண்ணம் உன் மனசுல இருந்திச்சுன்னா அதைத் துடைச்சு எறிஞ்சிடு….. – நான் சொன்னேனே…இவன் ஏன் சொல்ல மாட்டேன் என்கிறான். இவனுக்கு ஏன் அந்த புத்தி இல்லை?
     நீங்க கவலைப் படாதீங்கோ…உங்க பொண்ணு எங்க பொண்ணு மாதிரி…எனக்குப் பெண் குழந்தை இல்லாத குறையை உங்க பொண்ணு தீர்த்துட்டா….இப்படிச் சொன்ன, நானா இங்கே தள்ளப்பட்டேன். அன்பின் உருவமாய் என் தாயைப் பார்ப்பதுபோல் என் வீட்டுக்கு வந்த திருவிளக்காய் அவளைப் பார்த்தேனே…? அவளுக்கு ஏன் இந்த எண்ணம் வந்தது? மொத்தமே நான்கு பேர் இருக்கும் அந்த அத்தனை பெரிய வீட்டில் நானும் இருப்பது அவளுக்கு ஏன் பாரமானது? அதைப் பாரம் என்று சொன்ன போது என் பையன் ஏன் அதற்குத் தலையாட்டினான்? ஏன் அப்படி மௌனமாயிருந்தான். அவள் நினைப்பது, சொல்வது தவறு என்று தெரிந்தும் ஏன் அவன் தடுக்கவில்லை? அவள் அழகில் மயங்கிக் கிடக்கிறானா? காமம் அவனைக் கட்டிப் போட்டிருக்கிறதா? அந்தப் படுகுழியில் விழுந்து கிடக்கிறானா? அந்தக் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள அந்த வீட்டில் நான் இடைஞ்சலாக இருக்கிறேன் என்பதாக எண்ணம் கொண்டு விட்டானா? ஒரு தந்தை தன் மகனின் சந்தோஷமான வாழ்க்கைக்கு என்றேனும் குறுக்கே நிற்க முடியுமா? சின்னஞ்சிறிசுகள், அப்படித்தான் இருக்கும் என்றுதான் கொள்வார் தந்தை என்று ஏன் அவனுக்குத் தெரியவில்லை?
     முதலில் அவனைக் கட்டி, பிறகு தன்னை வெட்டி விட்டிருக்கிறாளா அவள்? அடி பெண்ணே…உன் பெற்றோர்கள் உனக்கு இதைத்தான் சொல்லித் தந்தார்களா? புகுந்த இடத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீ பாடம் கற்று வந்தாயா? எந்தத் தாய் தந்தை தன் வாரிசுகளுக்கு இப்படிச் சொல்லித் தந்தாலும் அது தவறல்லவா? நான் அப்படி வளர்க்கவில்லையே என் மகனை? பின் எப்படி அவன் இப்படி மாறிப் போனான்? அவனுக்கு என்று சுய சிந்தனை ஒன்று இருக்கிறதா இல்லையா? மனசாட்சி என்ற ஒன்று அவனுக்கும் உண்டுதானே?
     ஆனாலும் அவனை இன்று நான் எதிர்நோக்குகிறேன். எனது  இந்த நிலையிலும் அவனை அவ்வப்போது பார்ப்பதில் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். நன்றாயிருக்கிறாயா? உடல் நலம்தானே? உன் மனையாள் எப்படியிருக்கிறாள்? குழந்தைகள் சௌக்கியமா? தீபாவளி சந்தோஷமாகக் கொண்டாடினீர்களா?  பொங்கல் நல்லாக் கழிஞ்சதா? குழந்தைகள் நல்லாப் படிக்கிறதா? அப்பப்பா…இந்த மனது ஏன்தான் இப்படி அடித்துக் கொள்கிறதோ? எதற்காக இப்படிக்கிடந்து தவதாயப் படுகிறதோ? என்று அமைதி கொள்வது? என்று ஆனந்தம் பெறுவது? என்று ஞானம் அடைவது? சாவு ஒன்றில்தான் எல்லாமும் சாத்தியமா?
     வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறார் அவர்.  அவர் அப்படியென்றால் அந்த இன்னொருவரைத்தான் பாருங்களேன். அடேயப்பா! கலங்காத மனதுடையவரோ இவர்? என்ன ஒரு கம்பீரம்? என்ன ஒரு தெளிவு அந்த முகத்தில்?
     எத்தனை  வயதானாலும் நான் எங்கிருந்தாலும் எனது நியமங்களை விட முடியாது என்பதுபோல் குளித்து, பளீரெனத்  தலைசீவி, பட்டையாக விபூதி பூசிக் கொண்டு அகலமாக நெற்றியில் குங்குமம் திகழ தன் வீட்டு வாசலில் விச்ராந்தியாக அமர்ந்திருப்பதுபோல் அந்த இல்லத்தின் வாயிலில் அமர்ந்து அன்றைய தினசரியை மேய்ந்து கொண்டிருக்கிறார்.  யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க…என்பதான தோற்றம். அவருக்கிருக்கும் தைரியமான மனநிலை மற்றவர்களுக்கு ஏனில்லை? முதிர்ச்சி என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி விளைவுகளைத்தானே ஏற்படுத்த வேண்டும். ஏன் மனிதனுக்கு மனிதன் அது வேறுபடுகிறது. எல்லாவற்றையும் கண்டும், கேட்டும் உலகம் இப்படித்தான் என்பதான சமநிலை ஏன் வரமாட்டேன் என்கிறது?
     முதியவர்களாகச் சேர்ந்து ஒரே இடத்தில் கூடியிருந்தாலும் அவர்களின் மனங்களும், எண்ண ஓட்டங்களும் வேறு வேறுதானோ? ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியிலான பற்றற்ற நிலை. அல்லது பற்றுள்ள நிலை. பற்றற்ற நிலையில்தான் இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? அத்தனை சுலப சாத்தியமா அது? அதற்கான பயிற்சியில் இருக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். நிலை கொள்ளாமல் தவிக்கும் இந்த மனதைக் கட்டுப்படுத்துவது என்பது என்ன அத்தனை சீக்கிரத்திலேயே முடியக் கூடிய ஒன்றாகவா இருக்கிறது. மனம் ஒரு குரங்கு. அதுவும் தனிமையில் அது எப்படியெல்லாம் தன் கட்டறுத்துக் கொண்டு பாய்கிறது? வெகு ஆழத்திற்குச் சென்று எப்படி வேகமாய் மேலெழும்புகிறது. தன் கயிற்றை அறுத்துக் கொண்டு வேகமாய் எங்கெல்லாம் பாய்கிறது? எந்த மனநிலையில் யார் இருக்கிறார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்?
     அந்த முதியவர்கள் வெளியில் சுதந்திரமாய் நடைப் பயிற்சி செல்லும் என்னை மாதிரிப் பலரையும் பார்க்கும்போது என்ன நினைப்பார்கள்?.
     என்ன போய் என்ன செய்ய? எல்லாம் வெறும் சுயநலம். அவனவன் அவன்பாட்டைக் கவனிப்பதில் கண்ணும் கருத்துமாய் இருக்கும் சுயநலமிகள்.  வீச்சும் விறைப்புமாய் நடந்து செல்கிறாயே? உனக்கும் என்னை மாதிரி ஒரு நாள் முதுமை வராமலா போகும்? என்னைப்போல் கண்கள் பஞ்சடைந்து, காதுகள் மந்தமாகி, கால்களும் கைகளும் தளர்ந்து, உடல் வெம்பி, உன்னை நீயே வெறுக்கும் நிலை உனக்கும் ஏற்படாதா என்ன? நீ என்ன மார்க்கண்டேயனா? அல்லது இளமை கழியாமல் இருக்க வரம் வாங்கி வந்தவனா? என்னவோ அந்நியனைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாயே? நாங்களும் மனிதர்கள்தான். உன்னைப் போல் இருந்து, வாழ்ந்து கழித்துக் கடந்து  வந்தவர்கள்தான். உனக்கு இன்று இருக்கும் இளமையை நானும் கண்டவன்தான். அதை வெகு நிதானமாய் நின்று ரசித்து அனுபவித்து அநாயாசமாய்க் கடந்து இன்று இந்த நிலையில் முதியவன் என்கிற பெயரில் இங்கு வந்து அநாதையாய்க் கிடப்பவன். காலம் என்னை இங்கு கொண்டு வந்து விட்டு விட்டது. நன்றி கெட்ட உலகம்.
     எப்படியெல்லாம் அவனை வளர்த்தேன். எப்படியெல்லாம் அவனின் ஆரோக்கியத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன். என்னென்னமாதிரியெல்லாம் கஷ்டப்பட்டு, உழைத்து, பணம் சேர்த்து அவனைப் படிக்க வைத்தேன். என் உடல் நலத்தைக் கொஞ்சமேனும் நோக்கியிருப்பேனா? என் ஆசைகள் என்று எதையேனும் நிறைவேற்றிக் கொண்டேனா? என் தேவைகள் என்று தோன்றிய எல்லாவற்றையும் எப்படியெல்லாம் விலக்கிக் கொண்டேன்? போதும், போதும் என்று எப்படியெல்லாம் என் வாழ்க்கையின் எல்கைகளைச்  சுருக்கிக் கொண்டேன். எல்லாம் அவனுக்காக. அவனின் உயர்ந்த வாழ்க்கைக்கு நான் கண்ட கனவுகள் அவைகள். ஈன்ற மகனைப் பெரிதுவந்து, அவனைச் சான்றோன் என்று கேட்பதற்காக. அன்று அது மட்டுமே எனது லட்சியமாக இருந்தது. அது மட்டுமே எனது ஆசைகளாக இருந்தது. அவனது அணு அணுவான வளர்ச்சிதான் என் கண்களில் மின்னிக் கொண்டிருந்தன. நான் நினைத்ததை அடைந்தேன். அவனை எங்கு அமர்த்த வேண்டும் என்று நினைத்தேனோ அது நடந்து விட்டது. என் லட்சியம் நிறைவேறியது. அது போதும் எனக்கு. அது போதும் எனக்கு.                                                                ஆனாலும் இந்த மனது ஏன் நிலை கொள்ள மறுக்கிறது? ஏன் இப்படிக் கிடந்து தவிக்கிறது? நானாகத்தானே இங்கு வந்தேன். யாருக்கும் நம்மால் இடைஞ்சல் கூடாது என்று நான்தானே இதைத் தேர்வு செய்து கொண்டேன். பின் ஏன் இப்படிக் கிடந்து மறுகுகிறது?
     அதெல்லாம் முடியாது. முதியோர் இல்லமா? என்னப்பா உங்களுக்குக் கிறுக்குப் பிடிச்சிருச்சா? நான் எதுக்கு இருக்கேன்? உங்களை அங்க விடுறதுக்கா? அதுக்கா நீங்க என்னைத் தயார் பண்ணினீங்க? அர்த்தமில்லாமப் பேசாதீங்க…நீங்க இல்லைன்னா நான் இல்லை…இத மறந்துட்டு நான் இருப்பேன்னு நீங்க எப்படி நினைச்சீங்க? – சொல்வான், சொல்லி நிறுத்துவான் என்று எதிர்பார்த்தேனே? நினைத்தமாதிரி இருந்தது. ஆனால் ஏன் சொல்லவில்லை? எது தடுத்தது அவனை? அவர்களின் சுதந்திரமான நல் வாழ்க்கைக்கு நான் எந்தவகையில் இடைஞ்சலாக இருப்பேன்? வீட்டுக்குக் காவல் போல் கிடந்திருப்பேனே? பொறு…பொறு…
     இங்கே வந்துதானே இப்படி நினைக்கிறாய்? அங்கிருக்கும்போது உன் நினைப்பு அப்படியா இருந்தது?
     நான் என்னைக்குமே ராஜாடா…? நா யாருக்கும் இடைஞ்சலா இருக்க விரும்பலை. எனக்கு இருக்கவே இருக்கு முதியோர் இல்லம். காசை விட்டெறிஞ்சேன்னா…இருக்க இடம் கொடுக்கிறான்…வயித்துக்கு சோறு போடுறான்…படுக்க எடம் கொடுக்கிறான்…அவ்வளவுதானே…என் பென்ஷன் பணம் இருக்கு…அது போதும் எனக்கு…காலை வீசிப் போட்டபோது யாருமே தடுக்கவில்லையே? ஏன்? நானாக வாயை விட்டு மாட்டிக்கொண்டேனோ? அவளும் ஒரு வார்த்தை சொல்லவில்லை. அவனும் வாயைத் திறக்கவில்லை. சரியான அமுக்குளி. அவன் அம்மாவைப் போல்தானே இருப்பான் அவனும். காலம் என்னை இங்கே கொண்டு வந்து போட்டு விட்டதே!
     நானாவது பரவாயில்லை. அந்தப் பென்ஷனுக்குக் கூட வழியில்லாமல் எத்தனை பேர் இங்கு வந்தும் மகனின் கையை எதிர்பார்த்துக் கிடக்கிறார்கள்? சீ! இது ஒரு பிழைப்பா? கொண்டு வந்து தள்ளியவனிடம் எப்படிக் கை நீட்டி வாங்குவது? அவன் என்ன தருவது? நானென்ன வாங்குவது? அப்படியா அவனை வளர்த்தேன்? பாவி, படு பாவி…! விளங்க மாட்டான் அவன்.
     சே…சே…!!!நம் வாயால் அதைச் சொல்ல வேண்டாம். எங்கே இருந்தாலும் நன்றாக, நலமாக, ஆரோக்யமாக, சந்தோஷமாக இருக்கட்டும். கோபத்தில் ஏதேனும் நினைத்துக் கொள்ளப் போக, அது பலித்து வைக்கப் போகிறது. நான் வாழ்ந்து முடித்தவன். அவன் வாழ வேண்டியவன். என் கண்ணெதிலே இல்லாவிட்டாலும், எங்கோ சௌக்கியமாய் இருக்கட்டும். அவ்வப்போதுதான் வருகிறானே. அப்பொழுதுதான் பார்க்கிறேனே…அது போதும் எனக்கு. அந்த சந்தோஷம் போதும். தீர்க்காயுஷ்யமஸ்து…!
     நா இல்லாம நீங்க சீரழியத்தான் போறீங்க…என்னை என்ன பாடு படுத்தினீங்க…? – பாவி அவள் பழியாய்ச் சொன்னாளே…அது பலிக்கிறதோ? அவளையும் நான் சந்தோஷமாகத்தானே வைத்துக் கொண்டேன். புண்ணியவதி. கச்சிதமாகக் கடமைகள் முடிந்ததும் அவளும் முடிந்து போனாள். நான்தான் கிடந்து சீரழிகிறேன். என்ன வாழ்க்கை இது? உள்ளுக்குள் குமைகிறாரோ அந்தப் பெரியவர்? தனக்குத்தானே அழுது மாய்கிறாரோ? சே! என்ன சோகம் இது? செயலால் தவறாத மனிதர்களுக்கு இப்படியெல்லாம் சீரழிவு வரலாமா? தியாகத்தையே அடிப்படையாய் கொண்டு வாழ்ந்து நின்றவர்களுக்கு இம்மாதிரியெல்லாம் துன்பங்கள் எழலாமா? என்னே கொடுமை இது!
    
     மனதில் அந்தப் பெரியவர்களைப் பற்றி என்னென்னவோ எண்ண அலைகள் எனக்கு. தினமும் ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் ஒவ்வொரு விதமாகக் கற்பனைகள் விரிகின்றன. இவையெல்லாம் வெறும் கற்பனைகளா என்ன? இன்றைய நடைமுறைகள்தானே? நிச்சயமாக அங்கிருக்கும் ஒவ்வொரு பெரியவர்களுக்கும் இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்தானே? அல்லாமல் அவர்கள் இங்கு வரவேண்டிய காரணம்தான் என்ன? இப்படி யாருடனும் பேசப் பிடிக்காமல் அவரவர்கள் தனித் தனித் தீவுகள் போல் ஒற்றையாய் நடமாடிக் கொண்டிருப்பதன் அர்த்தம்தான் என்ன? வெறும் நடை பிணம் போல் அவர்களின் செயல்கள் உணர்த்துவதுதான் என்ன?
     ஒரு நாள் அந்த முதியோர் இல்லம் போனேன். என் தந்தையின் நினைவு நாளை அவர்களோடு சேர்ந்து கொண்டாட வேண்டும் என்ற உந்துதல் எனக்கு. குறிப்பிட்ட அந்த நாளில் அவர்களோடு சேர்ந்து உணவு உண்ண ஏற்பாடு. தேவையான பணத்தைக் கட்டினேன்.
     அந்த நாளும் வந்தது. எல்லோரும் அமர்ந்தாயிற்று. எனக்கு முன்னே இலை விரிக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அவர்கள் வழக்கமாய் வைத்துக்கொள்ளும் தட்டு. திடீரென்று அந்தச் சத்தம்.
     தனக்கு முன்னே இருந்த தட்டை எடுத்து ஓங்கி அந்தச் சுவற்றைப் பார்த்து வீசினார் அந்தப் பெரியவர். அவர் உடம்பெல்லாம் அப்படியொரு படபடப்பு. நடுக்கம்.
     எனக்கு தட்டு வைக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் உனக்கு. அறிவில்ல….இலையைக் கொண்டாந்து போடு…நாயே….
     அதிர்ந்து போய் நின்றது அந்த அம்மாள்,
     ”அநாவசியமாப் பேசாதீங்கய்யா…உங்க வயசுக்குப் பொருத்தமாயில்ல….” சொல்லி விட்டு அமைதியாய் அவரைப் பார்க்கிறது. அந்த முகத்தில் எதிராளியைப் புரிந்து கொண்ட அனுபவ முதிர்ச்சி.
     எல்லாந் தெரியும்…இலையைக் கொண்டா….
     அந்த உறாலே அமைதி காத்தது. சற்று நேரத்தில் இலை வந்தது அவருக்கு.
     எல்லோரும் என் தந்தையின் பெயர் சொல்லி அவர் ஆத்மா சாந்தியடைவதற்கு இறைவனைப் பிரார்த்தித்து நின்றனர். கண்களை மூடி அங்கே நிலவிய அந்த மௌனக் கணங்கள் என்னால் மறக்க முடியாத தருணங்கள். தந்தையின் நினைவில் கண்களில் இரண்டு சொட்டுக் கண்ணீர்.
     அவர்களோடு அமர்ந்து சாப்பிட்ட என் கவனம் அந்தப் பெரியவர்கள் சுவைத்து உண்ட அந்தக் காட்சிகளையே மனக் கண்ணில் வாங்கின.
     பாயசம் உண்டா இல்லையா? மீண்டும் அந்தப் பெரியவர். சுற்றிலும் மௌனச் சிரிப்பலைகள்.
     உண்டு சாமி…உண்டு…ஜவ்வரிசிப் பாயசம்…
     கொண்டா…கொண்டா…
     எல்லாருக்கும் வாழைப்பழம் வச்சிருக்கியே…எனக்கு?
     இதோ கொண்டாரேன்…நீங்க சத்தம் போட்டீகள்ல…அதுல மறந்துட்டேன்…
     அந்த சாருக்கு இன்னொண்ணு போடு….சாப்டுங்க சார்…
     என்னைப் பார்த்துக் கூறினார்.
     வழக்கமா ஒரு காய்தான் இருக்கும் இன்னைக்கு உங்களால மூணு…அப்பளம் கிடையாது. அதுவும் இன்னைக்கு உங்களால….வாய் இனிக்க, மனசு இனிக்க பாயசமும் இன்னைக்கு மட்டும்தான்… - அவராகவே சொல்லிக் கொண்டு வாய் விட்டுச் சிரித்துக் கொண்டார். சிரித்த வேகத்தில் அவர் வாயிலிருந்து பருக்கைகள் வெளியே தெரித்தன.
     சற்று நேரத்திற்கு முன் அப்படித் தட்டைத் தூக்கி எறிந்தவரா இவர்?
     கையைக் கழுவிக் கொண்டு வெளியேற முனைந்தேன் நான்.
     நல்லாயிருப்பீங்க…ஆசிர்வாதம்….
     எல்லோரும் நன்றி தெரிவித்துக் கொண்டு அவரவர் இடங்களுக்குச் சென்றனர். கடைசியாக அவர்கள் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு நான் கிளம்பிய போது அந்தப் பெரியவர் சொன்னார் –
     ”இங்க நாங்க இருபத்தஞ்சு பேர் இருக்கோம். எங்க எல்லாருக்கும் சோப்பும், தேங்காயெண்ணையும், வாங்கிக் கொடுங்க…..உரிமையோட கேட்கறேன்…என் பையன்ட்டச் சொன்னா செய்யமாட்டான். காதுலயே விழாத மாதிரிப் போயிடுவான்…உங்களப் பார்த்தா சொல்லணும் போலத் தோணித்து….அதான்…
     அந்தப் பெரியவர் வாய்விட்டுக் கேட்டது ஏதோ என் தந்தையே என்னிடம் கேட்டது போலிருந்தது எனக்கு. உடனடியாகக் கடைக்குச் சென்று மொத்தமாக அவைகளை வாங்கி எல்லோருக்கும் வரிசையாக விநியோகித்தேன்.
     அங்கிருந்து நான் கிளம்பிய போது அவர் சொன்னார்.
     ”முதுமை எல்லாருக்கும் பொது. அதை மட்டும் மறந்துடாதீங்கோ…
     அவர் மனதின் பாதிப்பு ஏதோவொன்றை உணர்த்தியது எனக்கு. அமைதியாய் வெளியேறினேன் அங்கிருந்து.                              
    
     இரவும் வரும் பகலும் வரும்                                         உலகம் ஒன்றுதான்                                                       இளமை வரும் முதுமை வரும்          வாழ்க்கை ஒன்றுதான்…வாழ்க்கை ஒன்றுதான்

ஏனோ இந்தப் பாடல் அந்த நேரத்தில் என் நினைவில் வர வாய் தானாக முனகியது அந்த வரிகளை.
                     -----------------------------------------------------
      


20 ஜனவரி 2019

“மக்கள்-தேவர்-நரகர்-எஸ்.ஷ. சிறுகதை - வாசிப்பனுபவம்


கட்டுரை                     உஷாதீபன், 

“தருணம்” சிறுகதைத் தொகுதி – “மக்கள்-தேவர்-நரகர்“ –எஸ்.ஷங்கரநாராயணன்  

சிறுகதை வாசிப்பனுபவம்.(வெளியீடு =  நிவேதிதா பதிப்பகம், சென்னை)
     
 

புத்தகத்திற்கு வைக்கும் தலைப்பில், உள்ளே கதையில்லாமல் பார்த்துக் கொள்பவர் இவர். இப்படியான ஒரு முறைமையை, புதுமையை வகுத்துக்கொண்ட எழுத்தாளர் வேறு எவருமில்லை எனலாம். தலைப்பிலிருந்து உள்ளே அடங்கியுள்ள படைப்புக்கள் வரை எல்லாவற்றிலும் ஒரு புதுமை படிந்திருக்க வேண்டும் என்கிற இவரது எண்ணமும் முயற்சியுமே வித்தியாசமான இலக்கிய வகைமையைச் சார்ந்தவர் இவர் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது.  
தொகுப்பிற்கெனத் தேர்வு செய்யப்பட்ட எல்லாக் கதைகளும் எதை மையமிட்டுச் சொல்கிறதோ அந்தக் கருத்துக்கு அல்லது அந்த நிகழ்வுகளுக்குப் பொருத்தமான, அழகான ஒரு தலைப்பிட்டு தொகுதியின் தகுதியை நிர்ணயித்து, தூக்கி நிறுத்தும் வல்லமை கொண்டவர்
    . சாதாரண வாசகர்கள் என்ன இது, வச்சிருக்கிற தலைப்புக்கு உள்ளே கதையைக் காணோம் என்று தேடுவார்கள். அப்படித் தேடுபவர்கள் எதற்காக இந்தத் தலைப்பு என்ற அடுத்த கட்டத்திற்கு வரக் கூடும். அப்போது புரிபடும் இந்த சூட்சுமம். சம்பிரதாயமாக, தொகுதியில் அடங்கியுள்ள பத்துப் பதினைந்து கதைகளில்  சிறப்பாக, படைப்பாளி எதைக் கருதுகிறானோ அல்லது சிறந்த தலைப்பாக எதைத் தேர்ந்தெடுக்கிறானோ அதை வைத்துவிட்டுப் போவதுதான் இன்றுவரையிலான சடங்காக இருக்கிறது. அப்படித் தேர்ந்தெடுத்த சிறுகதை, தொகுதியின் சிறந்த கதையாக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. இல்லாமலும் போயிருக்கிறது. படைப்பாளிக்கே பெருமையாய் நினைத்துக் கொள்ளும் அளவில் அவரே எதிர்பாராத வகையில் சிறப்பாகத் தோன்றிவிட்ட ஒரு தலைப்பை, அதன் மீது ஏற்பட்டுவிட்ட மையலில், ஏதேனும் ஒரு கதைக்கு சற்றேறக் குறையயப் பொருத்தமாகச் சூடி அதுவே புத்தகத்தின் தலைப்பு என்று வரித்துக் கொள்ளும் அதிசயமும் நிகழ்ந்திருக்கிறது. இந்தத் தொகுதியின் வகைப்பாடு முற்றிலும்  அர்த்தம் பொருந்தியதாக அமைந்த ஒன்று.  
எண்ணற்ற வாசகர்களை எட்டுவது என்பது கேளிக்கை எழுத்தாளனின் நோக்கம். இலக்கிய எழுத்தாளனின் நோக்கம் எழுத்தாளர்கள் போற்றும் எழுத்தாளனாயிருத்தல் என்பது மரபு.  எங்கோ, எதிலோ படித்ததாக நினைவு.  அப்படியானால் இலக்கிய எழுத்தாளனுக்கு வாசகர்கள் வேண்டாமா? இருக்கும் மற்றைய எழுத்தாளர்கள் மட்டும் அவன் படைப்பைப் படித்தால் போதுமா? அதில் திருப்தி கண்டு விடுமா மனம்? வளமான வாசக எண்ணிக்கையை அவன் நாடுவதில்லையா?
     அது அப்படி அல்ல. படைப்பாளி முதலில் தன் திருப்திக்கு எழுத வேண்டும். அந்த திருப்தி இலக்கியத் தகுதியுடையதாய் இருக்க வேண்டும். அந்தத் தகுதியை அவன் வளர்த்துக் கொண்டு படைப்பவனாய் இருத்தல் வேண்டும். அப்படியானால் முதலில் அவன் ஒரு சிறந்த வாசகனாய் இருந்தாக வேண்டும். அவனே வாசகன் என்கிற நிலையில் இருந்துதானே கடந்து வந்து படைப்பாளியாய் மாறுகிறான்? படைப்பாளியாய் மாறிய பின்பும், தொடர்ந்த வாசகனாய் இருப்பதில்தானே தன் தகுதியைத் தக்க வைத்துக் கொள்கிறான்?
     ஆக, வாசகனைப் புறக்கணிப்பது என்பது சற்றும் சாத்தியமில்லை. அவனின் பாராட்டுதல்களுக்காக, அந்தச் சொல்லுக்கு ஏங்கும் அற்புதத் தருணங்களுக்காக தன்னை அடையாளப்படுத்தும், நிலை நிறுத்தும் கதையாடல்களுக்கு அவன் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறான்.
     அப்படி முயற்சித்து, அழியாது நிலை பெறுகிற சம்பவங்களையும், நிகழ்வுகளையும் உள்ளடக்கிய காத்திரமான சிறுகதைகளைக் கொண்ட முக்கியமான தொகுப்புதான் எழுத்தாளர் திரு.எஸ்.ஷங்கரநாராயணன் கொண்டு வந்துள்ள “தருணம்” என்கிற பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளடங்கிய  சிறுகதைத் தொகுப்பு.
     புதிய இலக்கு, புதிய தடம் என்கிற மெய்மொழியைச் சுமந்து வரும் சென்னை, நிவேதிதா பதிப்பகம் இத்தொகுப்பின் தகுதியறிந்து வெளிக் கொணர்ந்திருப்பது சாலச் சிறந்ததாய் அமைகிறது.
     பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.. எனும்போது அதை நிறைவேற்றும் நிமித்தம் இந்த நல்ல தொகுதிக்குக் காரணமாயிருந்த படைப்பாளி திரு.எஸ்.ஷங்கரநாராயணன் அவர்களின் கதையையே இந்தக் கட்டுரையின் வாசிப்பனுபவத்திற்கு எடுத்துக் கொள்வது என்று முடிவாயிற்று.
     எழுத்தில் சொல்லியதைவிட, சொல்லப்படாததைப் புரிந்து கொள்வதில்தான் ரசனை அதிகம். அப்போதுதான் படைப்பின் மகிமை தெரியவரும். அந்தச் சொல்லப்படாததைப் புரிந்து கொள்வதற்கு படைப்பாளிகள் ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தை அல்லது ஒரு சின்ன வாக்கியம்தான் உதிர்ப்பார்கள். மற்றது நம் கற்பனையில் ஓட வேண்டும். உள்ளொளி பரப்பும் விஷயம் இதுதான் என்பதை உணரும் அதிசயத் தருணங்கள் அவை. எஸ்.ஷ. இதைத்தான் செய்கிறார். யாரும் எழுதாத, யாராலும் எழுதப்படாத வரிகளை ஒரு படைப்பாளி எழுதியாக வேண்டும். அந்தக் கடப்பாடு ஒரு இலக்கியப் படைப்பாளிக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. அதை உணர்ந்து நகருவதே அவனுக்கு அழகு.
பெண் அனுபவிக்கும் பிரசர வலியைத் தானே அனுபவிப்பதுபோல் எழுதியுள்ளதுதான் இக்கதையின் சிறப்பு.  படிப்பவர்கள், எழுதியது ஒரு பெண் எழுத்தாளரோ என்று ஐயப்பட வாய்ப்பிருக்கிறது. அடிப்படை ஆழ்ந்த  ரசனைதான். அழகியல் ரசனை. இலக்கியத்தில் அழகியல் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம். இல்லையானால் அது வெறும் பிரச்சாரமாய்ப் படிந்து நிற்கும் அபாயம் உண்டு. அந்த வானளாவிய, வரிசையான மரங்களைப் பார்க்கும்போது இவனுக்கு இவன் மூதாதையர்களைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது என்று எழுதுவதுதான் அழகியல். வெறுமே வரிசையாக நின்ற பெரிய பெரிய மரங்களைப் பார்த்துக் கொண்டே நடந்தான் என்றால் அது என்ன ரசனை? பசுமை அடர்ந்த மரக்கிளைகளின் நடுவே இருள் படுத்துக் கிடந்தது என்று சொல்லத் தெரிய வேண்டும்…அப்போதுதான் வாசகனுக்கு அவன் அவ்வாறு ஏற்கனவே பார்த்து ரசித்திருந்த காட்சிகள் கண் முன்னே விரியும். ஆஉறா…ஆஉறா…என்று முன் நகர்த்திச் செல்லும். ஒரு சிறு விஷயத்தைக் கூடப் பெரிதாக்கிச் சொல்ல முடியும். உடம்பாலும் மனசாலும் அதை அனுபவிக்கத் தெரிந்திருந்தால்…!  
இந்தக் கதையைப் படித்தபோது பாலுவாய் நான் இருந்தேன். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். முடிவெடுக்க முடியாமல் திணறினேன். இதையெல்லாம் வாசகனாகிய நான் உணரும்போது அந்தப் படைப்பை ஆழ்ந்து படித்திருக்கிறேன் என்பதும், என்னை உள்ளே இழுத்துக் கொண்டு செல்லும் திறன் அந்த எழுத்துக்கு இருந்திருக்கிறது என்பதும், அதனால்தான் அந்தக் கதாபாத்திரத்தின் வலிகள் என் வலிகளாகி என்னை இம்சித்திருக்கின்றன என்பதும் சத்திய வாக்குகளாய் அமைகின்றன.
ஆண்கள் எப்போதுமே பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் பெண்களுக்குக் குழந்தை பெறும் பாக்கியத்தை இறைவன் வழங்கியிருக்கிறான். நம் வீட்டில் முக்கியமான கால கட்டங்களில் அவர்களின் செயல்பாடுகளில் உள்ள நிதானமும், நம்மின் இயங்கு முறையில் படிந்துள்ள பதற்றங்களும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். மனைவியின் பிரசவவலி, அவள் படும் அவஸ்தைகள் இவனைப் பாடாய்ப் படுத்துகின்றன.
இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்களும் தாயின் வயிற்றிலிருந்து வந்தவர்கள்தானே! அவர்கள் எத்தனை வயதை அடைந்தாலும், எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும், அம்மாவுக்கு அவர்கள் என்றும்  குழந்தைகள்தான். தாயின் மனம் அப்படித்தான் நினைக்கும்.
“அவனுக்குத் தூக்கம் வரவில்லை…அம்மாவின் பக்கத்தில் வெறுமே கண்மூடிப் படுத்துக் கிடந்தான். இந்த நெருக்கடியில் அம்மா கூட இருப்பது தெம்பாய் இருந்தது. பிரசவம் அறிந்த ஒரு ஜீவன். அவளை அணைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தான். என்றைக்கும் அவன் அவள் குழந்தைதான். எத்தனை வயதானால்தான் என்ன?”
மனைவி வலியில் திணறுவதைக் கண்டு அவன் மனம் பதறுகிறது. எந்தவகையிலும் உதவ முடியவில்லையே என்றும், ஏதோவொரு வகையில் அவளின் இந்த வலிக்குத் தானும்தானே காரணம் என்ற குற்றவுணர்வும் அவனை வாட்டுகிறது.
அம்மா அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள். அவனுக்கு வெட்கமாய் இருந்தது.
பல ஆண்களுக்கு இவ்வளவுதான் முடியும் என்பதே நடப்பியல் உண்மை.
மணி என்ன தெரியவில்லை என்றுவிட்டு வெளிவரத் துடித்துக் கொண்டிருக்கும் குழந்தை ஒரு முண்டு முண்டிவிட்டு, ஏதோவொரு அசதியில் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டதை, இரண்டு முறை வலி வந்து, தன்னைப் போல் அடங்கி விட்டது என்று  விவரிக்கிறார்.
அந்தந்த மக்களின் வாழ்வியல் கலாச்சாரச் சூழல், மனிதர்களுக்கு எவ்வளவோ விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது. பெரிய பெரிய பத்திகளாக, வியாக்கியானங்களாக, நம் படைப்பாளிகள் விளக்கிக் கொண்டிருப்பவைகளை ஓரிரு வார்த்தைகளில், வாக்கியங்களில், ஒரு சில சொற்களில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்துச் சென்றிருக்கிறார்கள். அப்படி வந்ததுதான் “தன்னைப் போல் அடங்கி விட்டது” என்ற சுருக்கமான விவரிப்பு. அந்த மூன்று வார்த்தைகளிலேயே எவ்வளவோ அர்த்தங்கள் உள்ளடங்கிக் கிடக்கின்றன. படைப்பாளியின் மிகுந்த ரசனையை வெளிப்படுத்தும் விதமாய் அமையும் எழுத்தின் போக்கை ஒரு தேர்ந்த வாசகன் தன்னுணர்வாய்ப் புரிந்து ரசித்து மகிழ்வான் என்பதுதான் இங்கே காணக் கிடைக்கும் உண்மை. குறிப்பிட்ட அந்த இடத்தில் அதைச் சொல்லும் திறமை படைப்பாளிக்கு வேண்டும். அதுதான் பாராட்டத் தக்கது.
திடுக்கென்று விழித்துக் கொள்கிறான் அவன். அவளுக்குத் திரும்பவும் வலியெடுக்கிறது. ஒரு கையால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு பெரிசு பெரிசாய் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறாள். இடுப்பு எலும்புதான் விரிந்து கொடுக்க வேண்டும். வில்லிலிருந்து
புறப்பட்ட அம்புபோல குழந்தை வெளிவர வேண்டும்…..
சற்றே அந்தப் பிரசவ வலியை மனதிற்குள் கொண்டு வந்து பாருங்கள். நீங்களும் உங்கள் சொந்த வாழ்க்கையின் இந்த அரிய, முக்கிய தருணங்களை உணர்ந்திருப்பீர்கள். ஆனால் எத்தனை பேர் மனைவியின் வலியைத் தன் வலியாய் உணர்ந்திருக்கிறோம்? என்பது கேள்வி.
இப்படி வாடா…நான் பார்த்துக்கிறேன்….என்று அம்மா அவளருகில் வந்து பூமாவின் வயிற்றை அமுக்கிப் பார்த்து, நல்லா நெகிழ்ந்திருக்கு….என்று ஒரு சூசகம் தெரிவிக்கிறாள். ஒரு தாயின் அனுபவம் பேசும் இந்தத் தருணம்….எத்தனை முக்கியமானது. அம்மா அருகிலிருப்பதும், ஆறுதலாய்த் திகழ்வதும், எவ்வளவு அனுசரணையான விஷயம். . அனுபவங்கள்தான் இந்த வாழ்க்கையின் பெரும் துணை என்கிற மகத்தான உண்மையை இம்மாதிரியான வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நம் வாழ்வின் கணங்களில் நம்மோடிருப்போரிடம், நாம் சந்திக்கும், அளவளாவும் மனிதர்களிடம்  உய்த்துணரும் தன்மை நமக்கிருந்தாக  வேண்டும்.
நர்ஸ் பூமாவை அழைக்க வாசலுக்கே வருகிறாள். அம்மாவும் சேர்ந்து கைத்தாங்கலாய் பூமாவை இறக்க, அவன் என்ன செய்வது என்று தெரியாமல் கையைப் பிசைந்தபடி நிற்கிறான். இப்படிப்பட்ட நேரங்களில் ஆண்களால் அவ்வளவுதான் முடியும். அதிகபட்சம் கடவுளை வேண்ட முடியும். அவ்வளவே. முடிந்தால் மனைவிக்குக் கண்களால் ரகசியமாக, அன்பான வார்த்தைகளால் தைரியம் சொல்லி, இறையருளை வேண்டி உள்ளே அனுப்ப முடியும்.
அவனின் நிலை கண்டு, அவனுக்கு ஆறுதல் போல், இணக்கமாய்  நர்ஸ் அவனைப் பார்த்துப் புன்னகைக்கிறாள். அவனும் பதிலுக்கு சிரிக்கத்தான் முயல்கிறான். அந்தப் படபடப்பில் அது முடியவில்லை. உதடுகள் இழுத்துக் கொள்கின்றன அவனுக்கு. ஆண்கள் பயந்தவர்கள். மன வலிமையற்றவர்கள்….இதெல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சீரான குடும்ப வாழ்க்கையை நடத்த நினைக்கும், நடத்தி வரும் ஒரு பண்பாளனுக்கு இயல்பாக அவனிடம் படிந்திருக்கும் இயக்கங்களின் அடையாளங்களே இவை.
முழுக்க முழுக்க ஒரு பெண்ணின் பிரசவ வலியையும், அவளைச் சுற்றியுள்ளோரின் மன ஓட்டங்களையும் நுணுக்கமாக, நெகிழ்வான முறையில்  சித்திரிக்கும் ஆசிரியர், படிக்கும் வாசகனின் முழுக் கவனமும் அதிலேயே படிந்திருப்பதைப் போலப் பண்ணி விடுகிறார்.
அந்த நேரத்தில் வாசகனுக்கு சொந்த வேலை என்று ஏதும் இருந்தாற்கூட எல்லாவற்றையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதல்ல இது முடியட்டும், பிரசவம் ஆகி குழந்தை நல்லபடியாப் பிறக்கட்டும் என்று இவனையும் அதற்காகக்  காத்திருக்கச் செய்து விடுவதில்தான் படைப்பாளியின் வெற்றியே அடங்கியிருக்கிறது என்று நம்மையும் சேர்த்துக் கதாநாயகனுக்குத்  துணையாக உள்ளே இழுத்துக் கொள்கிறார். எழுத்தின், படைப்பின் வெற்றி இங்கேதான் நிற்கிறது என்று சொன்னால் அது சற்றும் மிகையில்லை.
நேரமாக,நேரமாக அவனுக்கு பயம் அதிகரிக்கிறது. காத்திருத்தல் பெரிய இம்சை. எதிர்பாராததை எதிர்பார்த்துக் காத்திருத்தல்….உள்ளேயிருந்து சத்தமேயில்லை? ஏன் இல்லை…என்று சொல்லி நம்மை மேலும் பயமுறுத்துகிறார் படைப்பாளி. எதிர்பாராததை எதிர்பார்த்துக் காத்திருத்தல் என்று ஏன் எண்ண வேண்டும்? மனசு என்ன வேணாலும் நினைக்கும்….சரியாய்த்தான் நினைக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லையே? சரியாய் மட்டுமே நினைக்க வேண்டும் என்பதற்காகத்தானே அல்லது குரங்கான இந்த மனம் வேறு எவ்விதமாயும் நினைத்து விடக் கூடாது என்ற பாதுகாப்பிற்காகத்தானே இறைவனிடம் நாம் தஞ்சமடைவது? கையில் ஸ்லோகப் புத்தகத்தை வைத்துப் படித்துக் கொண்டிருக்கிறாள் அம்மா. முன்னோர்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம் அது. நீ சாதாரண மனிதன். வெறும் நரன். உன்னால் எதையும் உன் கட்டுக்குள் வைத்திருக்க ஏலாது. கட்டுத் தெறித்தது இந்த மனம்.அது ஒரு குரங்கு.  அதை அத்தனை எளிதாக உன் கட்டுக்குள் அடக்கி விட முடியாது. அதனால்தான் உனக்கு இந்த வழி….என்று தன் செய்கை மூலம் அமைதி காத்து அம்மா வழி காட்டுகிறாள். அந்த நேரம் மனம் படும் பாட்டில் நட்சத்திரங்கள் இல்லாத உம்மென்ற வானம் ஆளை மிரட்டுவது போல் இருப்பதைக் கண்டு பயம் கொள்கிறான் அவன்.
டாக்டரம்மா அறைக்குள் அவனை மட்டும் அழைத்து, அம்மாவைப் பிரித்து விடுகிறாள் அந்த நர்ஸ். எதற்காக இப்படி? குழந்தை இறந்தே பிறக்கவில்லை. அப்படியானால் அப்போதே தாதி சொல்லியிருப்பாள். அது அம்மாவுக்குத் தெரியக் கூடாத விஷயமொன்றுமில்லை. பிறகு ஏன் அம்மாவை மட்டும் தனியாக…? குழம்புகிறான் அவன்.
டாக்டர் வருகிறாள்.
பிரசவம் ஆயிட்டதா டாக்டர்…?-கேட்க…தலையாட்டுகிறாள்.
என்ன குழந்தை…?
பெண்…..
தாயும் சேயும் நலம்தானே?
நலம்….ஆனால்…..?
கேள்வி விழுகிறது.
என் கூட வாங்க….. என்று அழைக்கும் டாக்டர்… சூம்பிப் போய், வளர்ச்சி குன்றிய, சிறு காரட் அளவிலான கைகளையுடைய அந்தப் பெண்  குழந்தையைக் காண்பிக்கிறாள்.
இந்த இடத்திலிருந்து படிக்கும் வாசகர்களாகிய நீங்கள் உங்கள் கற்பனையில்தான் பிற எல்லாவற்றையும் நினைத்துக் கொள்ள வேண்டும்.  அது பெண் குழந்தை என்பதை மனதில் வைத்து சிந்தியுங்கள். என்ன பேசலாம், என்ன பேசுவார்கள், என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது….எல்லாமும் விவாதமும் சிந்தனையாகவும் உணர்ச்சிப் பிழம்பாய் நகர்கின்றன காட்சிகள். டாக்டருக்கும் மருத்துவருக்குமான டிஸ்கஷன் ஒரு கட்டத்தில் அந்த முடிவையும் எட்டுகிறது.
ஆனால் அதுதான் படைப்பாளியின் திறமை. அந்த முடிவை அவன் சொல்வதைவிட, அவள் சொல்வதுதான், அவன் மனைவி சொல்வதுதான் பொருத்தமாய் இருக்கும் என்பதும், பெற்றவளுக்கே அந்த உரிமை நூறு சதவிகிதம் பொருந்தும் என்பதும், அவளின் அந்த முடிவை எவரும் எதிர்க்க இயலாது என்பதும், அதுவே சாலச் சிறந்த முடிவாய்த் திகழும் என்பதும்…..அந்தக் கணங்களில் அங்கே தீர்மானமாகிறது.
ஐயோ…என்றாள் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு. உடம்பு ஒரு முறை தூக்கிப் போட்டது அவளுக்கு. “எப்படிங்க…அடுத்தவர் உதவி இல்லாம அதால…வயசாக ஆக..ஆக…அவ என்னங்க பண்ணுவா…..அதுலயும் பொண்ணு பெரியவளா ஆயிட்டா….முகஞ் சுளிக்காம யாருங்க அவளுக்கு உதவி பண்ணுவா…?அதை அவதான் எப்படி ஏத்துக்க முடியும்?
டாக்டர்……….என் பொண்ணைக் கொன்னுருங்க….மாசா மாசாம் அவகிட்டே என்னால சாபம் வாங்க முடியாது…..என் பொண்ணைக் கொன்னுருங்க…..கதறுகிறாள் பூமா…..!! 
ஏன் அவள் அப்படிக் கதறுகிறாள் என்கிற உண்மையின் வெப்பத்தைத் தாங்க முடியாமல் நாமும் பயந்து போய் பின் நகர்கிறோம்….
ஒரு படைப்பின் வலி….நம் சொந்த வலியாய்த் தொற்றிக் கொள்ள….நடுங்கி நின்று, நிதானிக்க முடியாமல் தடுமாறிக் கலங்கி, அந்தக் கொடுமையான  கணங்களோடு…ஐக்கியமாகி, வெகு நேரம் கழித்தே .நம்மைத் தேற்றிக் கொள்ள முயல்கிறோம்….!!!
இறைவா…இந்த உலகத்தில் யாருக்கும் இம்மாதிரி ஒரு கொடுமையை விளைவித்து விடாதே…என்று மனம் நம்மையறியாமல் கைகூப்பி மேல்நோக்கி இறைஞ்சுகிறது.
மனித நேயமும், மனிதாபிமானமும், அன்பும் கருணையும் உள்ள ஒருவனால் இதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்?
“மக்கள்…தேவர்….நரகர்…..” – எஸ்.ஷ. இந்தக் கதையில் ஏற்படுத்தியிருக்கும் பிரமிப்பை,  தவிர்க்க முடியாத அரிய பல  தருணங்களை, நம் வாழ்க்கையிலும்  வெவ்வேறு கோணங்களில், வேறு வேறு அனுபவங்களாகக் கடந்து வந்திருக்கலாம். ஆனால் இம்மாதிரியான கொடூரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் எங்கேனும் நடந்துவிடுகிறதுதானே…! அந்த அனுபவங்களை உணர்வு பூர்வமாய் உள்வாங்கி, ஆழமாய்ப் பிரதிபலிப்பவனே சிறந்த படைப்பாளியாகிறான்.
இச்சிறுகதை இத்தொகுதியின் தலையாய சிறப்பு வாய்ந்த படைப்பு என்பேன் நான்.
                 -----------------------------------------------------------------------------------







        


01 ஜனவரி 2019

“நிலைத்தல்“ சிறுகதைத் தொகுதி-காவ்யா பதிப்பகம், சென்னை- வெளியீடு விழா

காவ்யா பதிப்பகம், சென்னை எதிர்வரும் 10.01.2019 ல் சென்னை புத்தகக் கண்காட்சி  அரங்கில் மதியம் 3.30 மணிக்கு 20 புத்தகங்களை வெளியிடுகிறது. அதில் ஒன்று எனது சிறுகதைத் தொகுதி “நிலைத்தல்”


நிவேதிதா பதிப்பகத்தின் வழி உஷாதீபனின் “சபாஷ் பூக்குட்டி” சிறார் நூல் வெளியீடு.

30.12.2018 சென்னை இக்சா மைய அரங்கில் நிவேதிதா பதிப்பகத்தின் 20 புத்தகங்கள் (இருபதாண்டு நிறைவு முன்னிட்டு) வெளியிடப்பட்டன. அதில் எனது “சபாஷ் பூக்குட்டி”  சிறார் நூல்  ஒன்று.  இப்புத்தகம் சென்னை புத்தகக் கண்காட்சி (4.1.2019 முதல்)  நிவேதிதா அரங்கில் கிடைக்கும்.