சிறுகதை பிரசுரம்-உயிர் எழுத்து நவம்பர் 2026
“கர்மா…”
நான் இப்போ தனியாத்தான்
இருக்கேன். துணைக்கு யாரும் இல்ல. உள்ளூர்ல இருக்கிற உறவுகளும் யாரும் என்னை வந்து
பார்க்கிறதில்ல. எங்கப்பாம்மா உட்பட. அவங்களுக்கு
என்னைப் பார்க்கப் பிடிக்கிறதில்ல. நானும் அவுங்களப் போய்ப் பார்க்கிறதில்ல. மதியாதார்
வாசல் மிதியாதேன்னு சொல்லியிருக்காங்க… அதனால நானும் போறதில்லதான். எங்க அப்பாவுனாலதான்
நான் இந்த கதிக்கு ஆளானேன். அத அவர் புரிஞ்சிக்கல. என்னையும் புரிஞ்சிக்க விடல. என்
புருஷன் வீட்லதான் படிப்படியா நான் எல்லாததையும் புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அத்தனையும்
காலம் கடந்த விஷயமாப்போச்சு. அதனாலதான் இப்பத் தனியே கிடந்து தவிக்கிறேன். இந்த தண்டனை
எனக்கு வேணும்தான். அனுபவிக்கட்டும்னுதானே விட்டுப் போயிட்டாங்க எல்லாரும்.
அவுங்களுக்கும் என்னைப் பிடிக்காமப் போயிருச்சே!
எனக்கு எப்படி வேணாலும் நினைக்க உரிமையுண்டுன்னா மத்தவங்களுக்கு இல்லயா? அவுங்களுக்கும்
குடும்பம், குழந்தை, குட்டி, கௌரவம்னு ஒண்ணு இருக்கும்தானே? ஒரு காலத்துல அவுங்க என்னை
மதிக்கத்தான் செய்தாங்க. அது நான் கல்யாணம் பண்ணின புதுசு. அப்புறம் என்னோட இருப்பு
தெரிஞ்சு படிப்படியா விலகிப் போயிட்டாங்க. அவுங்க என்கிட்டர்ந்து விலகுறாங்கன்னு எனக்குத்
தெரியும்தான். போனாப் போகட்டும்னு நானும் இருந்தேனே…!
அந்தளவுக்கு என்னை ஏதோ பிடிச்சு ஆட்டிச்சு.
இப்போ அது எங்கே போச்சு? தெரிலதான். எல்லாமும் அடங்கிப் போயி ஒத்தையாக் கிடக்குறேன்.
மனசு அடங்கலியே இன்னும்? ஒரு காப்பித் தண்ணி வச்சிக் குடிக்கணும்னாக்கூட எனக்கு நானேதான்
எழுந்து போய்ப் போட்டுக்கணும்….கூப்பிட்ட குரலுக்கு ஆளு கெடையாது. ச்சீ…ன்னு கெடக்கேன்னு
வச்சிக்குங்களேன். இது நானாத் தேடிக்கிட்ட செல்வம்!
யாரத்தான் மதிச்சேன் நான்? எதிர்ப்படுற
எல்லார்ட்டயும் ஒரு அலட்சியம். ஏளனம். இவங்கென்ன பெரிய்ய்ய்ய……ங்கிற அகங்காரம். இதெல்லாம்
எப்படிப் படிஞ்சிச்சு எங்கிட்ட? எப்படி விட்டுப் போச்சு? விட்டுப் போச்சா…இல்ல அடங்கிப்
போச்சா? உடம்புல ரத்தம் சுண்டுனவுடனே புத்தி வந்திடுச்சோ? அல்லது இந்தத் தனிமை என்னைப்
படிப்படியா இப்படி ஆக்கிடுச்சா? தனிமைல கெடந்து கெடந்து மனசு வக்கரிச்சுப் போச்சோ?
யாரும் எனக்குத் தேவையில்ல…எல்லாரும் போங்க…போயிடுங்க…என் கண்ணுல முழிக்காதீங்க…
யார்தான் எதுத்தாப்ல நின்னுக்கிட்டிருக்காங்க?
யாரப் பார்த்து இப்படி ஓ…ன்னு கத்துற? உன் குரலக் கேட்க இங்க எந்த ஜீவன் நிக்குது?
காத்துல கரைஞ்சு போகுதே…அதுவே உனக்குப் பெரிய
அவமானமாத் தெரிலயா?
சின்னவனோட பெங்களூர்லதான் இருக்காரு அவுரு.
அவனுக்குச் சமைச்சுப் போட்டுட்டு அக்கடான்னு கெடக்காரு. நானா போகச் சொன்னேன். இதுதான்
சாக்குன்னு அவுரு கௌம்பிட்டாரு. எப்படா இவகிட்டர்ந்து நழுவலாம்னு காத்துக்கிட்டுக்
கெடந்த மாதிரி ஓடிட்டாரு. சீ…மனுஷன் இருப்பானா இவ கூடன்னு வெறுத்துட்டாரு. நா போட்ட
சண்டையும், பேசின பேச்சும் அவரை அப்படி ஓட வச்சிடுச்சு…அர்த்தமில்லாமப் பேசி, அர்த்தமேயில்லாமக்
கோபப்பட்டு, எதுவுமே செய்யாம முடங்கிக் கிடந்து அவருக்குத் தீராத பாரமா வாழ்ந்திருக்கேன்.
தொட்டதுக்கெல்லாம் சிணுங்கினா? எங்கிட்ட ஒரு கெட்ட குணம் இருந்திச்சு. அவரு எதைச் சொன்னாலும்
அதை மறுத்துப் பேசுறது…என்னவோ அவர விட நான் அதிகமா சிந்திச்சு வச்சிருக்கிற மாதிரி…ஏன்
இப்டிச் செய்தா என்ன?ன்னு கேட்டிருக்கேன். மடத்தனமாயிருக்கு உன் கேள்வி…ன்னு கோபப்படுவாரு.
உடனே சண்டை வந்திடும். எனக்கு என் பேச்சை யாரும் மறுத்துப் பேசக் கூடாது. நான்தான்
புத்திசாலின்னு நினைச்சிட்டு, அதாவது எதிராளியை விடன்னு எதிர்த்து எதிர்த்துப் பேசுறது.
பிற்பாடுதான் படிப்படியா அந்தத் தப்பு புரிய ஆரம்பிச்சிது. அப்ப காலம் கடந்து போச்சு….
எனக்குத் தோணிச்சா பையன் கூடப் போய் இருக்கணும்னு…அவனுக்கே
பிடிக்குமோ என்னவோ? ஏம்மா அப்பாவ எதாச்சும் சொல்லிட்டேயிருக்க நீ? அவர்தான ஓடி ஓடி
எல்லாமும் பண்றார்..உட்கார்ந்த எடத்துலயே நீ கெடக்கே…வீட்டு வேலையாச்சும் உன்னால திருப்தியா
செய்ய முடியுதா? அதுலயும் ஆயிரத்தெட்டு சலிப்பும் அலுப்பும்…பாதி நேரம் மனப்பிராந்து
பிடிச்ச மாதிரி என்னத்தையாவது முனகிட்டுக் கிடக்கே…கோபப்பட்டு வயில வந்ததைச் சொல்லித்
திட்டுறே…உனக்கென்ன கிறுக்குப் பிடிச்சிருச்சா…? இப்படியிருக்கிற உன்னோட இத்தனை காலம்
அப்பா இருந்து கழிச்சதே பெரிய சாதனை. அவர் என் கூட வந்து இருக்கிறது எனக்கு ஒரு பாதுகாப்புதானே…அதை
நினை. இங்கதான் உனக்கு நிறைய உறவுகள் இருக்காங்கல்ல…அவுங்களோட சேர்ந்து கும்மியடிச்சிட்டிரு…உனக்கு
அதுதான் சரிப்படும்… - நான் இருந்த இருப்பு அவன அப்படிப் பேச வச்சிடுச்சு…
அவனுக்கும் விவரம் தெரிஞ்சு எத்தனையோ
வருஷமாச்சு. அம்மாட்ட இப்படியெல்லாம் பேசலாமான்னு அவனுக்குத் தோணலை. ஏன்னா நான் அப்படித்தானே
இருந்திருக்கேன். அதான் என்னோட தப்பான இருப்பைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டுறான்.
எத்தன தடவை அவனை அடிச்சிருப்பேன் அவன் இப்படியெல்லாம் பேசினதுக்கு? இப்ப அவனைக் கை
நீட்ட முடியுமா? திருப்பி அடிச்சாலும் போச்சு…அப்படியெல்லாம் செய்யமாட்டான் என் பிள்ளை…ஆனாலும்
மனசுக்குத் தோணுதே? ஏன் தோணுது…நான் இருந்த இருப்பு அப்படித் தோண வைக்குது. இப்போ நானே
கூட வர்றேன்னாலும் கூட்டிட்டுப் போக மாட்டாங்க…அதுதான் நான் சம்பாறிச்சது. என்னை விட்டு
ஒதுங்குறதுக்கு, ரொம்ப தூரம் போகுறதுக்குத் தயாராயிட்டாங்க. கடவுளாப் பார்த்து அவுங்களுக்கு
இந்த விடுதலையைக் கொடுத்திருக்காரு…அப்படித்தான் நினைக்க வேண்டிர்க்கு.
எனக்கு? எனக்கென்ன…இப்படித் தனியாக் கெடந்து
புழுங்கிச் சாக வேண்டிதான். அதுதான் எனக்கு லபிச்சது.
குடும்ப வாழ்க்கைக்கே இவ லாயக்கில்லே…ன்னு வீட்டுக்
வந்த உறவுகள்ட்டப் புலம்பிட்டிருந்தாரு…! எப்படிச் சொல்லப் போச்சுன்னு அன்னிக்குப்
பேய் பிடிச்ச மாதிரி ஒரு ஆட்டம் ஆடினேன். அவரும் அசரல…நா சொன்னது நூத்துக்கு நூறு உண்மைதான்.
அதுல எந்தச் சந்தேகமும் இல்லன்னு பிடியா நின்னாரு…எங்கப்பாட்டச் சொன்னேன் எல்லாத்தையும்.
எப்படிச் சொல்லப் போச்சுன்னு அவரும் வந்து மல்லுக்கு நின்னாரு….இந்த வீட்டுக்கு வந்து
என்னையே திட்டுறியா நீ…வெளிய போய்யான்னுட்டாரு…நீ பொண்ண வளர்த்த லட்சணம்தான் ஊர் சிரிக்குதே…அதான
உன் உறவுகள்லாம் உன் வீட்டுக்கு எவனும் எட்டிப் பார்க்கிறதில்ல…உன் பேச்சும் வெட்டி
பந்தாவும்…நீ ஒரு சல்லிப்பயன்னுதான் ஊருக்குக் காண்பிச்சிருக்கியே…! எவன்யா வருவான்
உன் வீட்டுப்பக்கம்…இப்பத்தான்யா உன் லட்சணம் தெரிஞ்சிது எங்களுக்கும்…உன் பொண்ணக்
கல்யாணம் பண்ணிட்டேன்…அத எப்படிச் சரி பண்ணிக்கணும்னு எனக்குத் தெரியும்…ஆனா இந்த வீட்டு
வாசப்படி நீ மிதிக்கக் கூடாது…அவ்வளவுதான். உன் பொண்ணைப் பார்க்கணும்னு தோணிச்சின்னா
வரச்சொல்லி உங்க வீட்டுக்கு அழைச்சு அங்க வச்சிப் பார்த்துக்கோ…நீயோ உன் சம்சாரமோ இந்த
வீட்டு வாசப்படி மிதிக்கக் கூடாது. நீங்க வர்றத இங்க யாரும் விரும்பல…நாங்க நிம்மதியா
இருக்க விரும்பறோம்…எந்த வம்பும் தும்பும் எங்களுக்கு வேண்டாம்…அவ்வளவுதான்.
ஒரே பிடியாப் பிடிச்சு விரட்டிப்புட்டாரு
எங்கப்பாவ. அன்னைலர்ந்து அவரும் எட்டிப் பார்க்கல. நான்தான் அப்பப்ப வெட்கமில்லாம அங்க
போயிட்டு வந்திட்டிருந்தேன். ஒரு நா எங்கப்பா சொன்னது எங்காதுல விழுந்திச்சு….எம்புட்டு
சோறு திங்குறா பாரு…இவளுக்குப் சமைச்சுக் கொட்டியே நம்ப சொத்து அழிஞ்சிடும் போல்ருக்கே…அப்டியும்
எனக்கு ரோஷம் வரல்லயே? இத்தனைக்கும் என் தம்பிக்கும் கல்யாணம் ஆகி ஒரு மருமகப் பொண்ணு
வீட்டுக்கு வந்திடுச்சு. அதப் பார்த்துக் கூட எனக்குப் புத்தி வரலை. அது எவ்வளவு பணிவா
இருக்கு. எங்கப்பாம்மா கிட்ட எத்தனை பணிவாப்
நடந்துக்குது. எவ்வளவு மரியாதையாப் பேசுது. நான் அப்படியெல்லாம் இருக்கவேயில்லையே?
ஏன் இருக்கலை? எங்கப்பா என்னை அப்படி வளர்க்கலை. விட்டேத்தியா, தான்தோன்றியா, பொறுப்பில்லாம
வளர்த்துப்புட்டு அவரும் சேர்ந்து என்கூட ஆட்டம் போட்டாரு. அதுதான் வாலை ஒட்ட நறுக்கிட்டாங்க…!
இந்த வீட்டு வாசப்படி மிதிக்கக் கூடாதுன்னு சொல்லிப்புட்டாரே என் வீட்டுக்காரரு…இதவிட
ஒரு கேவலம் யாருக்காச்சும் வேணுமா? அப்படியும் அந்த மனுஷனுக்கு ரோஷமில்லையே?
மூணார் டூர் போனோம்னு சொல்லிக்கிட்டு
ஒரு டீ பொட்டணத்தை எடுத்துக்கிட்டு என்னைப் பார்க்க வந்தாரு….எங்க வீட்டுல யாருமே அவரை
வாங்கன்னு ஒரு வார்த்தை சொல்லலை. அப்படியுமா ஒரு மனுஷன் வீட்டுக்குள்ள நுழைவான்? கொஞ்சமாச்சும்
ரோஷம் வேணாம்? நடு வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துக்கிட்டு நான் உன்னைத்தான் பார்க்க
வந்தேன். மாப்பிள்ளையைத்தான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். என் மாமனார், மாமியார்
முன்னாடி தில்லா சொல்றாரு….தெரிஞ்சு சொல்றாரா…தெரியாமச் சொல்றாரா? அது அவுங்க வீடு…நுழைஞ்சிருக்கிறது
என் வீட்டுக்காரரோட அப்பாம்மா பணம் போட்டுக் கட்டிக் குடி வந்த வீடு. அங்க வந்து உறால்ல
உட்கார்ந்துக்கிட்டு இப்படிப் பேசினா எப்படி? அந்த வீட்டுல நாங்க மட்டுமா இருக்கோம்.
உங்களோட எனக்குப் பேச்சில்ல…என் பொண்ணோடதான் பேச வந்தேன்னா…ஃபோன்ல சொல்லி, வீட்டுக்கு
வரவழைச்சுப் பார்த்து பேசிக்க வேண்டிதானே? இங்கயே வந்து உட்கார்ந்துக்கிட்டு இஷ்டத்துக்கு
அளந்தா?
எந்திரிய்யா….முதல் எந்திரிங்கிறேன்…வெளில
போ….கிளம்பு உடனே…படியேறி வந்து உட்கார்ந்துக்கிட்டு….திமிராவா பேசுற? இந்தப் பேச்சுதானய்யா
உன்னையும் உன் பொண்ணையும் கெடுத்து வச்சிருக்கு? உன் மாப்பிள்ளையே உன்னோட பேச விரும்பல.
உன்னைப் பார்க்கவும் விரும்பலன்னுட்டுத்தான் அவன் மாடில ரூம் கதவைச் சாத்திட்டு இருக்கான்.
புரியல…மர மண்டையா நீ? என்னவோ பெரிய உரிமையிருக்கிற ஆள் மாதிரி வந்து நின்னுக்கிட்டு
ஜபர்தஸ் பண்ற? முதல்ல கிளம்பு நீ…வெளில போறியா இல்.ல கழுத்தப் பிடிச்சுத் தள்ளட்டுமா?
முதலும் முடிவுமாச் சொல்றேன்…உன் பொண்ணோட திருமண வாழ்க்கை நீடிக்கணும்னா நீ இந்த வீட்டுக்கு
வரப்பிடாது. தெரிஞ்சோ தெரியாமலோ உன் பெண்ணை என் பையனுக்குக் கட்டி வச்சிட்டோம். அதை
எப்படிச் சரி பண்ணனும்னு எங்களுக்குத் தெரியும். உன் பொண்ணை எப்படி நிமித்தணும்னு நாங்க
அறிவோம். நிமித்தறதுன்னா அடிச்சு நிமித்துறதுன்னு நினைச்சிக்கிடாதே…உன் கோண புத்தி
அப்படித்தானே சேலை செய்யும்.? உன் மகளோட இம்மெச்சூரிட்டியை எப்படிச் சரிபண்ணனும்னு
எங்களுக்குத் தெரியும்னு சொல்றேன். நான் பெத்த பொண்ணுதானான்னு நீ ஒரு நாளைக்குச் சொல்லுவ…அப்படி
ஆக்கிக் காட்டுறோம்…பாரு…ஆனா ஒண்ணு அன்னைக்கு அவளே உங்களை இந்த வீட்டுக்குள்ள விட மாட்டா…!
ஒரு அப்பா அம்மாவா இருக்க உங்களுக்குத் தகுதியில்லே…திரும்பவும் வந்து என் புத்தியைக்
கெடுக்காதீங்க…ன்னு சொல்லி உங்களை வாசலோடயே விரட்டிடுவா…அந்தக் கேவலத்தையும் நீங்க
சந்திக்கத்தான் போறீங்க….இப்ப நீங்க போகலாம்…!
அன்னைக்கு வாசப்படி எறங்கினவர்தான் எங்கப்பா.
அதுக்கப்புறம் இந்தப் பக்கமே திரும்பிப் பார்க்கலை. அவருக்கும் கொஞ்சம் ரோஷம் வந்திருக்கும்தானே…!
உங்கப்பனுக்கு அதெல்லாம் எதுவும் கிடையாது.
அன்னைக்கு நடந்ததை எப்படித் திருப்பி விடலாம்னுதான் யோசிப்பான். என் பொண்ணை “மேல் டாமினேஷன்“
உள்ள வீட்டுல தெரியாமக் கொடுத்துட்டேன். அவ்வளவு தங்கமான குணம் அவ. இப்போ அங்க கிடந்து
கஷ்டப்படுறா…எங்களையே வெறுத்துட்டா…அல்லது எங்களை நினைச்சு ஏங்குறா…எங்களை இப்படிக்
கேவலப்படுத்தினவங்களைச் சும்மா விட மாட்டேன். என் பொண்ணு தங்கம். அவளைக் குத்தம் சொல்றவங்க
நல்லாவே இருக்க மாட்டாங்க…அவ மகராணியாக்கும். அவளோட யோகத்துக்கு எல்லாம் கிடைக்கும்
அவளுக்கு. நகை, நட்டு, பணம் பட்டுன்னு கிடைச்சிக்கிட்டேயிருக்கும். அவ காலடில வந்து
கொட்டுவாங்க…-அது இதுன்னு அந்தாள் உளறிக் கொட்டினான்னு எந்தெந்த வழிலயோ எங்க வீட்டுக்காரர்
காதுக்கு வந்திச்சு. ஆனா அவர் துளிக்கூட மாறல. தெளிஞ்சிட்டாரு. என் வளர்ப்பு சரியில்லை.
இன்னொரு வீட்டுக்குப் போகுற பொண்ணை எப்படி வளர்க்கணும்னு எங்கப்பாம்மாவுக்குத் தெரியலை…தப்புத்
தப்பாச் சொல்லிக்கொடுத்து ஒரு பொம்பளையைப் பாழாக்கியிருக்காங்க…அது நம்ம தலைல வந்து
விடிஞ்சிருக்கு..ங்கிற முடிவுக்கு வந்திட்டாரு….அப்போ அறுந்து போன உறவுதான். ஒரு முறை
உடைஞ்சா…திரும்ப ஒட்டாதுதானே…அதத்தான் இப்போ நான் அனுபவிச்சிட்டிருக்கேன்…
பிள்ளைங்களுக்காக
இத்தன காலம் பல்லக் கடிச்சிக்கிட்டு இருந்திருக்காருன்னு இப்பத்தான் புரியுது எனக்கு.
என் மண்டைல இது உறைக்க இ த்தன காலம் ஆகியிருக்கு. அப்போ நான் எவ்வளவு மடச்சியா இருந்திருப்பேன்னு
நீங்களே நினைச்சுப் பார்த்துக்குங்க…என்னோட எரிச்சலுக்கும், கோபத்துக்கும், சலிப்புக்கும்,
சோம்பேறித்தனத்துக்கும், பொருத்தமில்லாத பேச்சுக்கும், உளறலுக்கும் என எல்லாத்துக்கும்
ஈடு கொடுத்திட்டு வாழ்ந்து கழிச்சிட்டாரே…அதுதான் அவரோட பெரிய சாதனை. அதான் கடவுளாப்
பார்த்து அவர அவனோட அனுப்பி வச்சிட்டான்.
அட…பெரியவன் இருக்கானே…அவன்தான் அம்மாவ
நினைச்சிப் பார்க்கிறானா? ஆன் சைட் போறேன்…ஸ்டேட்ஸ் போறேன்…ஸ்டேட்ஸ் போறேன்னு சதா கனவு
கண்டுட்டிருந்தவன்…வசமா சந்தர்ப்பம் வந்தபோது ஆள விடுங்கடா சாமின்னு ஓடியே போயிட்டான்.
நா போறேன்…நீங்க சண்டை போட்டுட்டே இருங்க…ன்னு சொல்லாமச் சொல்லிட்டு ஓடிட்டான்.
அட…போனானே…ஒரு ஃபோன் பண்ணக் கூடாதா? அப்பா
எப்படி இருக்கீங்க…அம்மா நல்லாயிருக்கியா? ன்னு ஒரு வார்த்தை. அந்த அளவுக்கா நாங்க
அலுத்துப் போனோம்? அப்படி நலம் விசாரிக்கக் கூடத் தகுதியில்லாதவங்களா ஆயிட்டமா? ஒரு வேளை அவுங்க அப்பாகிட்டப் விசாரிச்சிருப்பானோ என்னவோ? அவர்தான அவனுக்கு வேணுங்கிறதெல்லாம்
செய்தாரு? அம்மா என்ன செய்தேன்? ரெண்டு பருப்புப் பொடி, கருவேப்பிலப் பொடி, மிளகாய்ப்
பொடி, ஊறுகாய்ன்னு செய்து நீட்டினேன்.
நானென்ன அங்க சமைக்கவா போறேன். எதுவும் வேணாம்? எதுக்கு
எங்கிட்டக் கேட்காமச் செய்தே…நீயே வச்சிக்கோ…ன்னு அலட்சியமாச் சொல்லிட்டு வண்டியக்
கௌப்பிட்டான். அவனுக்குன்னு செய்த அதுவெல்லாம் யாரும் தொடாம அப்படியே கெடக்குது. யாரு
இருக்கா…நா ஒருத்திதானே? இவுரு போகைல கூட எடுத்திட்டுப் போங்கன்னு சொன்னேன். பதிலே
சொல்லல…அந்தளவுக்கு என் மேல வெறுப்பு வந்திடுச்சு…நியாயம்தானே?
நானென்ன கொஞ்சமாவா ஆடினேன். புத்தி பெரண்டவ
கூட இந்த ஆட்டம் போட்டிருக்க மாட்டா! ஆனா ஒண்ணு…எதுவும்
நானாச் செய்யல. எல்லாம் எங்கப்பனால வந்த வினை. அந்தாளுதான் என்னை ஆட்டி வச்சாரு. பொம்மலாட்ட
பொம்மை மாதிரி கயிறு அவுருகிட்டதான் இருந்திச்சு. எப்படியெல்லாம் ஆட்டுவிச்சாரோ அப்டியெல்லாம்
ஆடினேன். ரோட்டுல வித்தை காட்டுற குரங்குமாதிரிக் குட்டிக் கரணம் போட்டேன். தலைகீழா விழுந்தேன். படுத்தேன்…புரண்டேன்…சிரிச்சேன்…அழுதேன்…கை
தட்டுனேன்…தல கிறுக்கிக் கீழே விழுந்தேன்.
எங்க அப்பாதான் என்னைக் கெடுத்தாரு. நா
அவரத்தான் சொல்லுவேன். எங்கள எதுவும் செய்ய விடாம…நீ சும்மாயிரு…நீ சும்மாயிரு…நா செய்றேன்…நா
செய்றேன்னு ஓடி ஓடி எல்லாத்தையும் அவரே செய்து செய்து எங்கள பிடிச்சு வச்ச மண்ணு மாதிரி
ஆக்கிட்டாரு. மரியாதை, அடக்கம், பொறுமை, சகிப்புத்தன்மை, பணிவு…இப்படி எதுவும் சொல்லித்தரலை
எங்களுக்கு. இதுக்கு நேர்மாறான அத்தனையையும் நேராகவும் மறைமுகமாகவும் கத்துக் கொடுத்துட்டாரு…அது
இதுதான்னு புரியாம, இது எஙகளோட எதிர்கால வாழ்க்கைக்கு உதவாதுங்குற புரிதல் இல்லாம நாங்களும்
கவனிப்பாரில்லாத காட்டுச் செடி மாதிரி வளர்ந்திட்டோம். எங்க முன்னோர் செய்த புண்ணியம்தான்
நான் இந்தக் குடும்பத்துக்கு மருமகளா வந்து சேர்ந்தது. பெற்றோர் செய்த பாவம் அனைத்தும்
பிள்ளைகள் தலையில்ங்கிற மாதிரி எங்கப்பாம்மா செய்த திருகுதாளங்கள் எங்க தலைல இப்ப விடிஞ்சிருக்கு.
எதத் தொட்டாலும் உனக்குத் தெரியாது…நீ
போ…நா பார்த்துக்கிறேன்னு ஒதுக்கி ஒதுக்கி ஒதுங்கியே போயிட்டோம். ஒரு காபி போடணும்னாலும்
எனக்கு அளவா, அழகாக் கலக்கத் தெரியாது.. என்னை வெறுமே சிலையா நிறுத்தி வச்சே கொன்னுட்டாருன்னுதான்
சொல்லணும்…எதாச்சும் எங்களை வேலை செய்ய விட்டு பழக்கினாத்தானே? காலைல எப்ப எழுந்திரிக்கணும்ங்கிறதுலேர்ந்து
காலைக் கடன்களை உடனுக்குடனே எப்படி முடிக்கணும், வீட்டு வேலைகளை எப்ப ஆரம்பிச்சு எத்தனை
மணிக்குள்ள முடிக்கணும்…அடுப்படில எப்படிப் பொறுமையா வேலை செய்யணும்…சமையலுக்கான பக்குவம்
என்ன, ஏதுன்னு எதுவும் எங்களுக்குக் கத்துக் கொடுக்கல. ஏதாச்சும் செய்றதுன்னாலும் பெரிய
பெரிய ஸ்டார் ஒட்டல்ல வைக்கிறதெல்லாம் மனசுல ஏத்திக்கிட்டு, அதச் செய்றேன்…இதச் செய்றேன்னு
கண்டது கழியதை வாங்கிட்டு வந்து….வயித்துக்கு உபத்திரம் கொடுக்கிற மாதிரி எதையாச்சும்
செய்து இறக்கிட்டு…சாப்பிடுங்க…சாப்பிடுங்கன்னு வற்புறுத்துவாரு…நல்லாயில்லாட்டாலும்…பிரமாதம்…பயங்கர
டேஸ்ட்ன்னு நாங்க சொல்லணும்..அதக்கேட்டுட்டு தனக்குத்தானே சந்தோஷப்பட்டு, அது இதுன்னு
புதுசு புதுசா ஓட்டல்கள்ல ஆர்டர் பண்ணுவாரு…அந்தத் தெருவுலயே டிபனும், சாப்பாடும் இன்னும்
புதுப் புது ஐட்டங்களும் அடிக்கடி ஆன் லைன் டெலிவரி பண்ற ஆட்கள் வந்திட்டும் போயிட்டும்
இருக்கிறது எங்க வீட்டுக்கு மட்டும்தான். இப்படிக் காசக் கரியாக்கி முடியுமா? சேமிப்புங்கிற
சிந்தனையே கிடையாது எங்கப்பாவுக்கு. எத எதன்னுதான் சொல்லுவேன்?
இல்லன்னா பையனை அம்பது லட்சம் பாங்க்
லோன் போடச் சொல்லி ஒரு .ஃப்ளாட் வீட்ட வாங்கிட்டு, அவனுக்கு ஒரு கல்யாணத்தையும் பண்ணி
வாழ்க்கையோட ஆரம்பத்துலயே இப்படி மாசா மாசம் கடனக் கட்ட விடுவாரா? ஒருத்தனோட வாழ்க்கை
இப்படிக் கடனோடவா துவங்குறது? ஒரு அப்பனுக்கு இந்தச் சின்ன அறிவுகூடவா கிடையாது? இதெல்லாமும்
என் புகுந்த வீட்டுல வந்தப்புறம்தான் எனக்கே உரைக்க ஆரம்பிச்சிச்சு. அவுங்களோட பொறுப்பான
பேச்சும் நடத்தையும் ஒவ்வொண்ணா எனக்கு வெளிச்சமாச்சு. அப்பத்தான் எங்கப்பா செய்த தப்பெல்லாம்
படிப்படியா எனக்கு விளங்க ஆரம்பிச்சது. நாங்க சரியா வளர்க்கப்படல. அதுதான் உண்மை. ஒரு
குடும்பத்துல என்னென்ன நடைமுறைகள் இருக்கக் கூடாதோ அதெல்லாமும் எங்க வீட்ல இருந்திருக்குன்னுதான்
நான் சொல்லுவேன். இவ்வளவா நீ தெளிஞ்சிட்டேன்னு கேட்காதீங்க…தெளிய வச்சவங்களே நான் வந்த
இடத்துக்காரங்கதான்.
பிடிச்சு வச்ச பிரம்மமா எனக்கு ஒரு அம்மா.
தத்தின்னு சொல்லுவாங்கல்ல. அது எங்கம்மாவுக்கு நூறு சதவிகிதம் பொருந்தும். எங்கப்பா
எதச் சொன்னாலும்…அதுக்கு கோயில்மாடு மாதிரித் தலையாட்ட மட்டும்தான் எங்கம்மாவுக்குத்
தெரியும். ஒரு வார்த்தை எதிர்த்துப் பேசத் தெரியாது. பதில் பேசுறதுக்கு மூளை வேலை செய்தாத்தானே?
கிரியேஷனே இல்லாத எடத்துல எந்த ரியாக் ஷன்தான் இருக்கும்? ஒரு காப்பி கலக்குறதுன்னாலும் கூட எங்கம்மாவுக்கு பக்குவம்
தெரியாது. பாலையும், டிகாக் ஷனையும் ஒண்ணாச் சேர்க்குறதுதான் காப்பிங்கிற மாதிரி கலந்து
கொண்டு வந்து நீட்டுவாங்க. அதச் சூடாக் கொடுக்கணும்ங்கிற சின்ன அறிவு கூட எங்கம்மாவுக்குக்
கிடையாது. அவுங்க பெத்த பொண்ணு நான் எந்த லட்சணத்துல இருப்பேன்னு சொல்லியா தெரியணும?
ஏதோ என் முன் ஜென்ம புண்ணியம் இந்த வீட்டுக்கு மருமகளா வந்திருக்கேன்.
இந்த வீட்டுக்கு நீ வந்து சேர்ந்தது நீ
செய்த அதிர்ஷ்டம். அத மனசுல வச்சிக்கோ…ன்னு ஒருவாட்டி எங்க மாமனார் சொன்னாரு. அன்னைக்கு
அவர் முன்னாடி எப்படி அலட்சியமாச் சிரிச்சேன்? உடம்புல அம்புட்டுத் திமிரு. ரத்தம்
சுண்டச் சுண்டத்தான் உண்மையும், நல்லதும் அறிவுக்கு எட்டும் போல!
அம்மா எங்கப்பாவுக்குப் பொண்டாட்டியா
வந்ததுலேர்ந்தே இப்படித்தான் இருக்காங்களா அல்லது அப்பா அப்படி மாத்தி வச்சி சிலையா
நிறுத்தி வச்சிருக்காரா தெரில…எங்க வீட்டுல பொழுது விடிஞ்சதுலர்ந்து எல்லாமே எங்கப்பாதான். எதையும்
எங்களச் செய்ய விட மாட்டாரு. அவர் சர்வீசுல இருக்கிற காலத்துலேர்ந்தே அப்படித்தான்
உறரிபரியா இருந்தாரு. அத்தனையும் செய்திட்டு, டிபன் பாக்சுல அவருக்கும் எடுத்திட்டு
ஆபீசுக்குக் கிளம்பிடுவாரு.
ஒரு நாளும் எங்கம்மாவச் சமைக்க விட்டதில்ல.
அம்மாவும் நல்லாதாப் போச்சுன்னு இருந்திட்டாங்க…ஏன்னா அதெல்லாம் முடியாது…நீங்க எதுக்கு
அடுப்படிக்குள்ள வர்றீங்க…நான்தான் இங்கன்னு எங்கம்மா அதிகாரமா எப்பயும் சொன்னதில்ல.
பண்ணினா பண்ணிக்கட்டும்னு விட்டுட்டாங்க…எதாச்சும் உதவி செய்யப் போனாலும் உன்னை யாரு
இங்க வரச்சொன்னா…போய் உறால்ல உட்காரு…வந்து வந்து இடைஞ்சல் பண்ணாதேன்னு கத்துவாரு.
ஒரு காய் நறுக்கன்னு கூட அம்மாகிட்டக் கொடுக்க மாட்டாரு…நீ தடி தடியா நறுக்கி வைப்பே…கொழம்புக்கு
தான் போடுறது வேறே…கறி சமைக்கிறது வேறே…ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாம உன்னை வளர்த்து
வச்சிருக்காங்கன்னு அம்மாவத் திட்டித் தள்ளுவாரு…மக்கு…மக்குன்னுவாரு. அவரை பெரிய அறிவாளின்னு
நினைச்சுக்குவார் போல….! எங்கயாவது பொண்ணாட்டி பிள்ளைகள இப்படி உட்கார்த்தி வச்சு முழுச்
சமையல் வேலைகளையும், டிபன் உட்பட எந்த ஆம்பளையாவது செய்து பார்த்திருக்கீங்களா.? என்னைக்காவது
ஒரு நாள், ஒரு மாறுதலுக்காக செய்றதுண்டுதான். நான்தான் அடுப்படி இன்சார்ஜ்…நீங்கல்லாம்
வெறும் மண்ணுக…ன்னு எந்த வீட்லயும் எந்த ஆம்பளையையும்
பார்க்க முடியாதுதான்.
எங்கம்மாவுக்கு சமைக்கத் தெரியுமா, டிபன்
பண்ணத் தெரியுமான்னு எனக்குச் சந்தேகம் உண்டு என் தம்பியும் எதையும் கண்டுக்க மாட்டான்.
எப்டியோ…தன் பாடு கழிஞ்சாச் சரின்னு அவன் காலேஜூக்கு ஓடிடுவான். அம்மா கை ருசிய நாங்க
பார்த்ததேயில்ல. அப்பாவோட கைபாகம்தான். நளபாகம்னுதானே சொல்லியிருக்காங்க…அதான் போல்ருக்கு
அப்பா இப்படி அசுரனா இயங்குறாருன்னு நாங்க நினைச்சுக்குவோம். ஆனா ஒண்ணு அவர் செய்ததை
எதுவும் நல்லா இல்லேன்னு எவனும் சொல்லிடக்
கூடாது. பழி கோபம் வந்துடும். எப்படிச் சொல்லப்போச்சுன்னு வெட்டுக் குத்து சண்டைக்கு
வந்திடுவாரு. நீங்க இல்லன்னா எங்களுக்கு ஏதுப்பா பசிக்கு சாப்பாடுன்னு பெருமையாச் சொல்லணும்…
வாசல்ல எது போனாலும் அப்பா கூப்பிட்டுடுவாரு…கொழாப்
புட்டு, இடியாப்பம், தோச மாவு, இட்லி மாவுன்னு கத்திட்டுப் போவான். அட இதெல்லாம் கூடவா
தெருவுல வந்து விக்க ஆரம்பிச்சிட்டாங்கன்னு நாங்க நினைச்சிட்டிருந்த காலத்துலயே அவுங்கள
ரெகுலர் கஸ்டமரா அப்பா ஆக்கிட்டாரு. அவரு கஸ்டமரா அல்லது கஷ்டமராருன்னு புரியறதுக்கு
ரொம்ப நாளாச்சு எங்களுக்கு. அவுங்க ஃபோன் நம்பர் மொதக்கொண்டு அப்பா சேவ் பண்ணியிருப்பாரு…வாசல்ல
காய்கறி விக்கிறவன் வந்தா அவன் ஃபோன் நம்பர் கூட அப்பாட்ட இருக்கும்.
மாடிலர்ந்து பேசி அதக் கொண்டு வா…இதக்
கொண்டுவான்னு இங்கருந்தே ஆர்டர் பண்ணுவாரு. பேரம் பேச மாட்டாரு…அவன் கேட்குற காசை எடுத்து
நீட்டிடுவாரு…அவன் சொன்னதுதான் விலை. அப்புறம் ஏன் மாடிக்குக் கொண்டு வந்து தர மாட்டான்?
நாங்க குடியிருந்தது அபார்ட்மென்ட். எந்த மென்ட்டா இருந்தா என்னங்க…எனக்கு வியாபாரம்தான்…முக்கியம்…ரெண்டு
மாடி ஏறிக் கொண்டு வந்து தந்தா என்ன குறைஞ்சிடவா போறேன்ங்கிறான் அவன். அப்பாவுக்குன்னு
ஆளு அமையுது பார்ன்னு நாங்க பேசிக்குவோம். அது சரி…கணக்குப் பண்ணாமல்ல..காசு கரையுது?
அவன் தாராளமா அப்பா தாராளமா? அவுங்க ரெண்டு பேருக்கும்தான் வெளிச்சம்.
வழக்கமான இட்லி தோசைன்னு எப்பவும் எங்க
வீட்ல இருந்ததே கிடையாது. அதெல்லாம் ரொம்பப் பழசுன்னு எங்கப்பா சொல்லுவாரு. பீட்சா,
பர்கர், நூடுல்சுன்னு பிரபல ஓட்டல்கள்ல ஆர்டர் பண்ணிடுவாரு…அதெல்லாம் எங்க வயித்துக்கு
ஒத்துக்குமான்னு கேட்கவே மாட்டாரு. அவரு சொல்றதுதான். செய்றதுதான். நகரத்துல உள்ள எல்லா
ஓட்டல் ஃபோன் நம்பரும் அவர்ட்ட இருக்கும். ஒவ்வொரு ஓட்டலா ஃபோன் போட்டு இன்னைக்கு என்ன
ஸ்பெஷல்னு கேட்டுட்டு உட்கார்ந்திருப்பாரு காலங்கார்த்தால. வீட்டுல காய்கறி வாங்கி,
கீரைகள் வாங்கி, ஆரோக்கியமா சமைச்சுச் சாப்டோம்ங்கிற நாமதேயமே ஒரு நாளும் இருந்ததில்ல.
அபூர்வமா நடக்குறது அது. அதெல்லாம் திடீர்னு ஒரு நாள் நின்னு போச்சு. என்னங்கய்யா இப்பல்லாம்
காயே வாங்க மாட்றீக?ன்னு வாசல் வண்டிக்காரன் கேட்டான். ஒரு ரவுண்டு சுத்திட்டு வர்றேன்.
பொறு…பொறு… - இதுதான் அப்பா சொன்ன பதில்.
எதுக்குப்பா காச இப்டிக் கன்னா பின்னான்னு
விரயமாக்குறீங்கன்னு கேட்டா பழி கோபம் வந்துடும் அப்பாவுக்கு. எனக்கு புத்திமதி சொல்றியா
நீ? எல்லாம் எனக்குத் தெரியும்…பேசாம நான் என்ன செய்றேன்னு வேடிக்கை பாருன்னு கத்துவாரு.
ரோட்டுல எதை எதையோ வித்துட்டுப் போற ஆளுகவரைக்குமான
ஃபோன் நம்பர் எங்கப்பாட்ட இருக்கும். ஆட்டோக்காரங்க…டாக்சிக்காரங்க…ஒண்ணு பாக்கியி்ல்லே.
செலவு செய்யலாம்…விரயம் பண்ணலாமாப்பான்னு ஒரு தடவ கேட்டுட்டேன். எனக்கே அது எப்படி
உறைச்சதுன்னு தெரில. விட்டார் பாரு ஒரு பளார்…! அம்மா அதிர்ந்து போயிட்டாங்க…வயசுக்கு
வந்த பொண்ணை இப்படிக் கை நீட்டி அடிக்கிறீங்களேன்னு அம்மா கத்துனதுக்கு அவளுக்கும்
ஒரு அடி விழுந்திச்சு. நான் சொல்றதக் கேட்டுட்டு, செய்றதப் பார்த்திட்டு அடங்கிக் கிடக்கிறதுன்னா
கிடங்க…இல்லன்னா எங்க போகணுமோ அங்க போயிடுங்க…எங்கூட யாரும் இருக்க வேணாம்னு முறிச்சு
சொல்லிட்டாரு. அதுலர்ந்து யாரும் வீட்ல வாயத் திறந்து பேசுறதேயில்லஅவர்ட்ட.
என் தம்பி அப்படியே அப்பாவுக்கு
முழு ஜால்ரா. அவரு என்ன சொல்றாரோ அத வாயை மூடிட்டுச் செய்திட்டு ஆள விட்டாச் சரின்னு
ஓடிடுவான்.அவன அவர் கண்டுக்கிறதே இல்ல. அவன் நம்ம பய…இது அப்பா அடிக்கடி சொல்ற வார்த்தை….
எங்க வீட்ல தாத்தா பாட்டி இருந்தாங்க…அதாவது
எங்கப்பாவோட அப்பா அம்மா. அவுங்க கொல்லப்புறம் பக்கம் இருக்கிற தனி ரூம்ல இருப்பாங்க.
அங்க பாட்டிம்மா தனியா சமைச்சுக்குவாங்க. அவுங்களுக்குன்னு ஒரு தனி சின்ன அடுப்பு வாங்கிக்
கொடுத்திருந்தாரு அப்பா. தனியார் காஸ் கனெக்
ஷனும் ஒண்ணும் இருந்திச்சு. அப்பாவோட மெனு எதுவும் அவுங்க வயசுக்கு ஒத்துக்காதுன்னு
பாட்டி தனி சமையல். அதுக்கு மட்டும் அப்பா எப்படி ஒத்துக்கிட்டாருன்னு தெரில.
அப்பா தன்னோட பெற்றோர்ட்டப் போய் உட்கார்ந்து
கலகலப்பாப் பேசினத நாங்க ஒரு நாள் கூடப் பார்த்ததில்ல. பாட்டி அது வேணும் இது வேணும்னு
கேட்டா…பதிலே சொல்ல மாட்டார் அப்பா. ஆனா வெளில போய்த் திரும்பும்போது வாங்கிட்டு வந்திடுவாரு.
இந்தா…நீ கேட்டது….ன்னு வேண்டா வெறுப்பா அந்த ரூம்லக் கொண்டு போடுவாரு. கம்முனு அவர்
மொகத்தையே பரிதாபமாப் பார்ப்பாங்க பாட்டி.. எங்களுக்குப் பாவமா இருக்கும். ஆனா ஒரு
வார்த்தை ஆதரவாப் பேச முடியாது. அந்த ரூம்ல என்ன போக்கு…பேசாம இங்க கெடக்க முடியாதான்னு
கத்துவாரு அப்பா. அவுங்ககிட்டப் போய் ஈஷிட்டு எதாச்சும் வியாதியை வாங்கிட்டு வர்றதுக்கா.
காலும் கையும் அடங்கிக் கெடக்காதா? இதக் கேட்டா அவுங்க மனசு எப்படிப் புண்படும்? அதெல்லாம்
அப்பா மைன்ட் பண்ண மாட்டார். மொத்த அதிகாரமும் அவர் கைலதான். அது புத்திசாலித்தனமானதா
அல்லது பைத்தியக்காரத்தனமானதாங்கிற சிந்தனைக்கே போனதில்ல. பாவம் பண்றமா இல்ல புண்ணியமாங்கிற
கேள்வியெல்லாம் எங்கப்பாட்ட இல்ல…
தாத்தாவுக்குப் பென்ஷன் வந்திச்சு. எண்பது
வயசுக்கு மேலே 20% அதிகம் கிடைக்கும்னு ஓடு ஓடுன்னு ஓடினாரு அப்பா. அவுங்க என்னடான்னா
பென்ஷனர நேர்ல கூட்டிட்டு வரணும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு ஆட்டோ வச்சிட்டுக் கூட்டிட்டுப்
போனாரு. வீடே அதிர்ந்திச்சு அப்போ. செந்தூக்கா அப்பாவத் தூக்கிட்டுப் போய் ஆட்டோல தொப்புனு
போட்ட காட்சி எங்களால மறக்கவே முடியாது. மெதுவா சாமி…மெதுவா…மெதுவா…ன்னு ஆட்டோக்காரன்
கத்துனான். வீட்டுக்குள்ளர்ந்து ஒத்த ஆளாத் தூக்கிட்டு வாரேன்…பின்ன என்னப்பா பண்றது?
என்று அவனிடம் கத்தினார் அப்பா. அவன் நம்பரை அப்பா சேவ் பண்ணித்தான் வைத்திருந்தார்.
ஆனால் அடுத்தாற்போல் அவன் வருவதை நிறுத்திக் கொண்டான்.
எல்லா எழவும் நான்தானே கூட்ட வேண்டிர்க்கு.
செத்துத் தொலையாம…ன்னு வாய்க்கு வந்தபடி கத்துனாரு அப்பா. வேண்டாம்ப்பா…விட்டிரு…எதுக்கு
வெட்டி அலைச்சல்…னு தாத்தா அழாக்குறையாப் புலம்பினாரு. இருக்கிற காசுக்கே செலவில்ல…ன்னு
தாத்தா நினைச்சிட்டிருந்தாரு. ஆனா அது அப்படியில்ல.
தாத்தாவோட பாங்க் அக்கௌன்ட் கணக்கு அப்பா கைலதான இருந்திச்சு. அவர்தான் பென்ஷன் வந்திடுச்சா
இல்லையான்னு போய்ப் போய் பாஸ்புக்குல என்ட்ரி போட்டிட்டு வருவாரு. தாத்தா பேருக்குன்னு
ஒரு சின்ன ஃபோன் இருந்திச்சுதான். நம்பர் நம்பரா இணுக்குற சாதா ஃபோன். அதுக்கு மெஸேஜ்
வரவே வராது. மாசா மாசம் அந்தப் பென்ஷனக் கண்ணால பார்த்து என்ட்ரி போட்டுட்டுத்தான்
அப்பா ஓய்வாரு.
எங்கப்பாவோட அப்பா அம்மாவப் பார்த்துத்தான்
ஏமாந்துட்டதா எங்க வீட்டுக்காரர் சொல்லுவாரு. மூத்த தலைமுறைக் குடும்பம்…பொறுப்பா இருந்து
பழகியிருப்பாங்க…குடும்பத்த அரவணைச்சுக் கொண்டு வந்திருக்காங்க…அவுங்க பெத்த பிள்ளைங்க
உருப்படாமயா போகும்…அதுகளும் நல்லபடியா கடமையுணர்ச்சியோட தன் குடும்பத்தக் காப்பாத்தத்தான்
செய்யும்…ன்னு நினைச்சிதான் ஏமாந்துட்டதா எங்க வீட்டுக்காரரும், என் மாமியார், மாமனாரும்
புலம்புனாங்க…
அதான் சொல்றனே…எங்கப்பாதான்
எங்களக் கெடுத்தாரு… இன்னொரு வீட்டுக்கு அனுப்பப் போற பொண்ணை எப்படியெல்லாம் வளர்க்கணும்ங்கிற
சென்சே எங்கப்பாவுக்கு இல்லன்னுதான் சொல்லணும்.
எங்க வீட்ல தினமும் காலைல நான் பத்துலர்ந்து
பதினோரு மணிக்குள்ளதான் படுக்கையை விட்டே எழுந்திரிப்பேன். வேலைக்கு போறதுக்கு முன்னாடியும்
அப்படித்தான்… வேலைக்குப் போனப்புறமும் அப்படித்தான். இப்பக் கல்யாணம் பண்ணி புகுந்தவீடு
வந்தப்புறமும் அப்படித்தான். ஆனா அங்கதான் பிரச்னையே ஆரம்பிச்சிச்சு….
நைட் டியூட்டி பார்க்கிறால்ல சார்…அதனால
காலைல இந்த ஐ.டி. பீப்பில்ஸ் எல்லாமே லேட்டாத்தான் எழுந்திரிக்கிறாங்க…அப்டியே பழக்கமாயிடுச்சி…-
இதுதான் அப்பா சொன்ன பதில்.
இருக்கட்டும் சார்….அதுக்காக வீட்டுல
துரும்பைக் கூடவா அசைக்காம இருப்பாங்க…வீட்டு வேலைகள்ல ஒத்தாசையா இருக்க வேண்டாமா?
முழுக்க முழுக்க அடுப்படியிலேயேவா கிடந்து மாயச் சொல்றோம். என் ஒய்ஃப்தான் எல்லா வேலைகளும்
பார்க்கிறா…அவளுக்குச் சின்னச் சின்ன உதவிகள் செய்யலாமே…ஒரு காய் நறுக்கிக் கொடுக்க…பால்
காய்ச்ச…டிகாக் ஷன் போட, காலை டிபனுக்கு தோசை வார்க்க…இப்படிக் கொஞ்சம் கொஞ்சம் உதவியா
இருக்கலாமே…எதையுமே கண்டுக்காம இருந்தா எப்படி? -மாமனார் வயித்தெறிச்சலைக் கொட்ட….
செய்வா சார்… செய்வா…போகப் போகச் செய்வா
பாருங்களேன்….
காலமும் வருடமும்தான் உருண்டோடின.
நீ இவ்வளவு அட்டச் சோம்பேறியா இருப்பன்னு
நான் எதிர்பார்க்கவேயில்ல…நீ படுக்கைய விட்டு எழுந்து ஆடி அசஞ்சு வர்றதுக்குள்ள இங்க
எல்லா வேலையும் முடிஞ்சி போகுமே…? – சொல்லிச் சொல்லி ஓய்ந்து போனார் என் கணவரும். நான்
ஒரு சோம்பேறிங்கிறதே எனக்குப் புரியல….ஆபீஸ் வேலைலயும் நான் மந்தம்தான். கூட வேலை பார்க்கிறவங்க
என்னை அடிக்கடி டீஸ் பண்றதும் என் மானம் போறதும்…மனசுக்குள்ள அழுகுறேன் நான்.
தனக்குத்தான் தலவிதி….பெற்றோர்க்கு என்ன
வந்ததுன்னு அவுங்கள சொந்த ஊர் அனுப்பிட்டார். அவுங்களும் போதுண்டா சாமின்னு கிளம்பிட்டாங்க…இந்தப்
பிசாசோட எவன் இருப்பான்? – இதுதான் என் மாமனார் கடைசியாச் சொன்ன வார்த்தை…அவுங்களும்
மனுசங்கதான…எப்பயாச்சும் ஒரு வார்த்தை வரத்தானே செய்யும். அதுக்காக அவுங்கள சுத்தமா
ஒதுக்கிட முடியுமா?
சொந்த ஊர்ல சொந்த வீட்ல சவுரியமா இப்ப
அவுங்க இருக்காங்க…சவுரியமான்னு சொல்றேன்…எப்படியிருக்காங்களோ…தள்ளாத வயசுல அவுங்கள
அப்படி அனுப்பி விட்டது பெரிய தப்புதான். அதுக்கும் நான்தான் காரணம்.
இதுக்குத்தான் அன்னைக்கே நான் சொன்னேன்…டைவர்ஸ்
பண்ணிடறேன்னு…நீதான் கேட்கலை… -ன்னு அவர் என் காது கேட்கவே புலம்பியிருக்கார் பலமுறை.
ஆனா அவுங்கப்பா…சும்மாச் சொல்லக்கூடாது. பக்குவப்பட்ட மனுஷங்க…தடம் புரள்றதேயில்ல….!
என்னடா இவ்வளவு அசால்டாச் சொல்றே? ன்னார்.
அந்த வார்த்தைலதான் எனக்கு நம்பிக்கை வந்திச்சு. அடுத்தாப்ல ஒரு கேள்வி கேட்டார் எங்க
வீட்டுக்காரரைப் பார்த்து…
உனக்கென்ன கேரக்டர் இல்லாத ஃபேமிலியாவா
பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிருக்கு? குண விசேஷங்கள்ல சற்று மாறுபாடு…அவ்வளவுதானே?
உனக்கு அவளப் பத்தி, அந்தக் குடும்பத்தப் பத்தி இஷ்டத்துக்கு நினைச்சுப் பார்க்க முடியும்னா,
அவுங்களுக்கு நம்ம ஃபேமிலியப் பத்தி நினைக்க எதுவுமே இருக்காதுன்னு நினைச்சிட்டியா?
அவுங்களுக்கும் நம்மளப்பத்தின குறிப்பா உன்னைப்பத்தின ஆதங்கம் இருக்கும்தானே? இதெல்லாம்
எல்லா எடத்துலயும் பொதுவானதாக்கும்- எதையும் சட்டுச் சட்டுன்னு முடிவு எடுத்திடக் கூடாது.
எல்லாத்துலயும் ஒரு நிதானம் வேணும்…மனசுல வச்சிக்கோ….
அவர் அப்பாவோட பேச்சு என்னை யோசிக்க வச்சிது.
அத்தோட நிறுத்தல…இனிமே என் வீட்டுக்காரர் அந்த மாதிரியான பேச்சை எடுக்கவே கூடாதுங்கிற
மாதிரி கண்டிக்கிற தொனில அவர் பேசினதுதான் என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு…
இந்த பார்…டைவர்ஸ்
பண்ணனும்னு ஒருத்தன் முடிவு பண்ணிட்டான்னா அவன் அப்பா அம்மா பேச்சை கேட்கவே மாட்டான்.
அதுதான் உண்மை. எதுக்கு அநாவசியமா வார்த்தையை விடுற? டைவர்ஸ்ங்கிற பேச்சை மட்டும் எடுக்காத…நெட்டையோ
குட்டையோ வச்சி வாழறதுதான் ஒருத்தனுக்கு அழகு. வாழ்க்கைங்கிறதே சமரசம்தான்டா. ஏற்ற
இறக்கம் யார் வாழ்க்கைலதான் இல்ல…எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு, கடந்து போறதுதான்
வாழறதோட அர்த்தம். டைவர்ஸ் பண்ணினேன்னா நிச்சயம்
அது ஒரு படி குறைவுதான். நாம நமக்காக வாழலை….! அது தெரியுமா உனக்கு? என்ன நெனப்புல
இருக்க நீ?
என்னப்பா இப்படிச் சொல்றே? நீ பேசறது
புரியலப்பா எனக்கு?
ஆமாண்டா..…அதிலென்ன சந்தேகம்? ஊருக்காகத்தான்
வாழறோம். அதுதான் உண்மை. நிறையப் பேருக்கு இது புரியறதில்ல. இந்த சமுதாயத்துக்காகத்தான்
நாம வாழறோம். உற்றார், உறவினர், சுற்றத்தார்ன்னு சும்மாவா சொன்னான்? இந்த சமுதாயம் எதை விரும்புறதுன்னு நினைக்கிறே? ஒண்ணா
வாழறதைத்தான். பிரிஞ்சு போறதையில்ல…பிரிஞ்சு போய்த் தனியாக் கிடக்கிறதையில்ல. தனியாக் கிடந்து பார்த்தேன்னாத்தான் அதோட அருமை
புரியும் உனக்கு. அது அருமையா என்ன? வெறுமை….! ஏற்றமில்ல…இறக்கம்! சத்தியமா அது கொடுமையான
வெறுமைதான்.! இப்ப வீட்டுக்குள்ள இருக்கிற
மனக்கிலேசமெல்லாம் வெளியாட்களால கண்ணு காது மூக்கு வச்சுப் பேசப்படும்போதுதான் அதோட தாக்கம் புரியும் உனக்கு.
ஊர் நாக்கு இருக்கே அது லேசுப்பட்டதில்லே…நாம ஒத்துமையா, ஒண்ணா இருக்கிறவரைக்கும் நம்மைக்
கண்டுக்கவே கண்டுக்காது. பிரிஞ்சு தனியாயிட்டோம், ஒவ்வொருத்தனா நம்மைத் தேடி வந்து
துக்கம் விசாரிப்பான். என்னவோ அவனுங்களெல்லாம் ரொம்பப் பக்குவப்பட்ட மேஸ்திரிகள் மாதிரி
வார்த்தைகளை விடுவான். ரெண்டாங்கல்யாணம் பண்ணினேன்னு வச்சிக்கோ…அது ஆயிரந்தான் ஆனாலும்
ஸ்வாரஸ்யப்படாது. ஒரு படி இறக்கம்தான். உன்
மனசுக்கே பிடிக்காது. ஒட்டியும் ஒட்டாமலும்தான் இருக்கும். புத்தம் புதுப்பொண்ணாக் கிடைக்கும்னு நினைச்சிருக்கியா?
அதெல்லாம் செல்வச் செழிப்புல திளைக்கிறவங்களுக்கு. நம்மள மாதிரி மிடில் கிளாசுக்கு…அப்படி
இப்படித்தான் அமையும். அது நாலு பேருக்குச் சொல்றமாதிரி நிச்சயம் இருக்காது. கோயில்ல
வச்சுத் தாலி கட்டி கமுக்கமா வீட்டுக்குக் கூட்டி வர்ற கதையாகிடும். எழுதி வச்சிக்கோ. வேண்டாம்ப்பா…தனியா இருந்து கழிச்சிடுவேன்னு
சொல்றியா? அது தப்பான கணக்கு! இப்பத் தெரியாது. வயசாக ஆகத்தான் தெரியும். ரத்தமும்
நிணமும் சுண்டுறபோதுதான் புரியும். ஆடி அடங்கும் வாழ்க்கைடா இது. அதனால அனுபவப்பட்டவங்க
சொல்ற நல்ல வார்த்தைகள மதிக்கக் கத்துக்குங்க…அதுக்குத்தான் வீட்டுல பெரியவங்க இருக்காங்க…ஆயிரம்
புஸ்தகங்களப் படிச்சவனவிட ஆயிரம் நிலத்தை உழுதவன் அனுபவப்பட்டவன்னு சொல்வாங்க….உலகானுபவம்ங்கிறது
சாதாரணமானதுல்ல..அது அகராதி. . அப்படிப்பட்டவங்க நம்ம கூட இருக்கிறது நாம செய்த புண்ணியம்.
அந்த மாதிரி ஞானி போன்ற மூத்தவங்களைக் கடந்துதான் நானும் வந்திருக்கேன். என் வார்த்தைகளைக்
கேளு….அம்புட்டுத்தான் சொல்லுவேன்…
நாங்க தனியாப் போய் இருக்கிறதுல எங்களுக்கொண்ணும்
பெரிய துக்கமில்லே. நீ பக்குவப்படணும். உன் மனைவி உனக்கு உகந்தவளா மாறணும். உன் கைக்கு
அடக்கமா ஆகணும். ரெண்டு பேரும் அன்பால பிணைஞ்சு நிக்கணும். அதுதான் எங்களோட விருப்பம்.
அது ஒரு நாள் நடக்கும். அந்த நல்ல நாளுக்காக நாங்களும் காத்திருப்போம். இப்ப நாங்க
புறப்படுறோம்…
எவ்வளவு அழகாச் சொல்லிட்டுக் கிளம்பிட்டாங்க….இதோ
இப்போ நான் எல்லாரையும் அனுப்பிட்டுத் தனியாக் கிடந்து தவிக்கிறேன். அதுதான் எனக்குத்
தண்டனையோ?முன் ஜென்ம வினை, மூத்தோர் செய்த வினை இதெல்லாம்தான் வாரிசுகளைப் பாதிக்கும்னு
சொல்வாங்க. இப்பலாம் உடனுக்குடனேயே வாரிசுகளுக்கு அனுபவ பாத்தியதை வந்து துரத்துது.
அதுதான் சத்தியமான உண்மை. இன்னும் எத்தனை நாளைக்குத்தான்
இந்தச் சித்திரவதை? சொந்த பந்தங்களைப் பிரிஞ்சு ஒரு ஜீவன் தனியாக் கிடக்கிறதுங்கிறது
எவ்வளவு கொடுமைன்னு இப்பத்தான் எனக்குப் புரியுது. ஒழுங்கான வளர்ப்பு இல்லைன்னு வச்சிக்குங்க…அதெல்லாம்
சீரழியத்தான் செய்யும். மூத்தவங்க அதையெல்லாம் பார்த்துப் பார்த்து வேதனைப் பட்டு விண்டு
விரிய வேண்டிதான். அதுதான் அனுபவ யோகம். பலதையும் நினைச்சு நினைச்சுப் பார்த்து இயக்கமில்லாம
உட்கார்ந்து கிடக்கேன்.
எதையும் காலங்கடந்து
புரிஞ்சும் உணர்ந்தும் எந்தப் பலனுமில்லங்கிறதுதான் சத்தியமான உண்மையோ?
--------------------------------------------------------



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக