பிரசுரம் - உயிர் எழுத்து - செப்டம்பா் 2026 இதழ் -முடிவு சிறுகதை
“முடிவு” -சிறுகதை - உயிர் எழுத்து - செப்டம்பர் 2026 பிரசுரம்
தனிக்குடித்தனம் வச்சிடலாம்…அதுதான்
நல்லது…-என்றார் வேதாசலம். அவரின் முடிவு அதுவாகவே இருந்தது. ஆரம்பத்திலிருந்தே அவர்
அந்த நினைப்பில்தான் இருக்கிறார். விசாலாட்சிதான் அதற்கு சரியாய் பதில் சொல்வதில்லை. அதுபற்றிப் பேச்சு வரும்போதெல்லாம் வேறு எதையாவது
சொல்லி கவனத்தைத் திருப்பி விடுகிறாள். இது வெகுநாளைக்கு இவருக்குப் புரியாமல் இருந்தது.
எப்படி இந்தப் பேச்சு தள்ளித் தள்ளிப் போகுது? என்று இவர் யோசித்திருக்கிறார்.
அவள்தான் இதை வீம்புக்கு ஒத்திப் போடுகிறாள் என்பதே அவருக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான்
புரிய ஆரம்பித்தது.
இந்த விஷயத்தை நான் எடுக்கிறபோதெல்லாம்
நீ நழுவிடறே…அல்லது வழுக்கிட்டு ஓடிப் போயிடுறே…? ஏன் இப்படி?-அவள் முகத்தைக் கூர்மையாய்ப்
பார்த்துக் கேள்வியை வீசினார்.
கொஞ்சம் போகட்டும் பார்த்துக்கலாம் என்றாள்
விசாலாட்சி.
அதென்ன கொஞ்சம் போகட்டும்? நாள், நட்சத்திரம் பார்க்கணுமா? அவுங்க இங்கதான
இருக்கப் போறாங்க…நாமதானே ஊரப்பார்த்துப் போகப் போறோம்? என்றார் இவர்.
அதற்கு அவள் பதிலே சொல்லவில்லை. எனக்கு
வேலையிருக்கு அடுப்படில….என்று நகர்ந்து விட்டாள்.
தன் மீதுதான் தவறு என்று தோன்ற ஆரம்பித்து
விட்டது வேதாசலத்திற்கு. கல்யாணம் முடித்த மூன்றாவது மாதம் ஒரு முறை மோகனே வலியச் சொன்னான்
இதை.
அப்பா…அம்மாவோட நீங்க ஊருக்குப் போய்க்குங்கப்பா….
அவன் சொன்ன விதம் இவரைத் துணுக்குறச் செய்தது.
அதென்ன… போய்க்குங்கப்பா?-நீ அந்தச் சலுகையை
எங்களுக்குத் தர்றியா?
ஐயய்யோ…நான் அப்படிச் சொல்லலைப்பா….உங்க
விருப்பம் அதுவாத்தானே இருக்கும்னு சொன்னேன்.
எங்க விருப்பம் அதுவா இல்லைன்னா…? வெளில
போங்கம்பியா? -சற்றுக் கோபமாகவே கேட்டார் இவர்.
இதென்னப்பா…விபரீதமான பேச்சு? இப்படிக்
கேட்டா நான் என்ன பண்றது? நானா இதைச் சொன்னது தப்பு. இப்பத்தான் அது எனக்குப் புரியுது…நீங்களாக்
கிளம்பறபோது சரின்னு அனுப்பியிருக்கணும்…தெரியாத்தனமா இப்படிக் கேட்டு வச்சேன்….எம்பேர்லதான்
தப்பு…..ஸாரிப்பா…
அத்தோடு விட்டார் வேதாசலம். தன் பெண்டாட்டியைக்
கிளப்பிக் கூட்டிப் போறது தன்னோட விருப்பம். இவன் என்ன நிர்ணயிக்கிறது?
இப்போது மறுபடியும் ஆரம்பித்தார் விசாலாட்சியிடம்.
தனியாக் குடித்தனம் பண்ணட்டும். அப்பத்தான்
அவுங்களுக்கு எல்லாமும் பழகும். சொன்னாக் கேளு. முதல் முதலா அவன் கேட்டபோதே கிளம்பியிருக்கணும்.
என்னவோ புத்தி வேல செய்யல அப்போ…அதைத் தவற விட்டாச்சு. இப்போ வருஷத்துக்கு மேலே ஆயிடுச்சு. இனிமேலும் நாம அவுங்க கூட இருக்கிறது
சரியில்லை. பிறகு கசந்து போகும். அதுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கிளம்புற வழியைப்
பாரு…. – என்றார் கண்டிஷனாக.
ஏன் கிடந்து இப்படித் துள்ளுறீங்க? பேசாம
அடங்கிக் கிடங்க…பார்த்துக்கலாம்… - சாவதானமாய்ச் சொன்னாள் விசாலாட்சி. அவளது நிதானம்
அவரைப் பிரமிக்க வைத்தது.
அடிப்பாவி…இவள் என்ன மனதில் நினைத்துக்
கொண்டிருக்கிறாள்? வேறு ஏதேனும் யோசனை வைத்திருப்பாளோ? செய்வதறியாது நின்றார் வேதாசலம்.
சரி…கிடக்கட்டும் பார்த்துக்குவோம் என்று ஊருக்குக் கிளம்பினார்.
சென்னைக்கு வந்ததிலிருந்து ரெண்டு மாசத்துக்கொருமுறை மதுரை போய்த் திரும்புவது அவரின்
வழக்கமாயிருந்தது. வீடு குப்பையாகிப் போகுமே? தூசியும் துப்பட்டையுமாய்…! நினைத்தாலே
அவர் மனசு நடுங்கியது. பூட்டிக் கிடக்கும் வீட்டைத் திறந்து யாரேனும் குடிபுகுநது விடுவார்களோ
என்கிற அளவுக்குப் பயப்பட்டார். .சென்னையில் அப்படிச் சில செய்திகளை இவர் கேள்விப்பட்டிருந்தார்.
அது போல் அங்கும் நடந்தால்? நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? நடந்தால் யாராவது
வந்து காப்பாற்றப் போகிறார்களா? வேடிக்கைதான் பார்ப்பார்கள். யாருக்கும் தெரியாமல்
தனக்குத் தகவல் வேண்டுமானால் சொல்வார்கள்.
போதாக்குறைக்குப் பக்கத்துப் பிளாட் வேறு
காலியாய்க் கிடந்தது. பிளாட் முழுக்கக் கருவேலஞ்செடி பரந்து வளர்ந்து சடை சடையாய் நின்றது.
அந்த இடத்தில் யாரோ வழக்கமாய் மாடுகளை வேறு கொண்டு வந்து கட்டிக் கொண்டிருந்தார்கள்.
சாணி மணம் மூக்கைத் துளைத்தது. அந்தக் காலத்தில் வாசல் தெளிக்க தெருவில் அங்கங்கே கிடக்கும்
சாணியைப் போய் எடுத்து வந்த கரைத்து வாசல் தெளித்து பசேல் என்று பூச்சி பொட்டு வராமல் பாதுகாப்பார்கள். இப்பொழுது
மாடு சாணி போடுவதே வீச்சம் தாங்க முடியவில்லையே? எப்படி சாணியின் சுகந்த மணம் மாறியது?
கண்ட தீனியும்தான் காரணமோ? நினைத்துக் கொண்டார்.
காலி பிளாட்டில் அப்படியே பக்கத்தில் நாளாவட்டத்தில்
ஒரு ஷெட்டைப் போட்டு விட்டார்கள். நாலைந்து பேர் தினசரி அங்கு வந்து அமர்ந்து அரட்டையடிப்பதும், சிகரெட் பீடி ஊதுவதும், ராத்திரியானால்
தண்ணியடிப்பதும், கஞ்சா புகைப்பதுமாய்க் கழித்தார்கள். அவர்களை யாரும் எதுவும் சொன்னதாய்த்
தெரியவில்லை. சுற்றிலும் உள்ள வீட்டுக்காரர்கள் பொறுமையாய்ச் சகித்துக் கொண்டு, காணாததுபோல்
இருந்தார்கள்.எதற்கு வம்பு? இவர் வீட்டின்
கொல்லைப் புறத்தில் காலி பாட்டில்களை வீசிவிட்டுப் போகாமல் இருக்க வேண்டுமே என்று இவர்
பயந்தார். அதற்காகவாவது ரெண்டு மாசத்துக்கொரு முறை ஊரில், வீட்டில் ஆள் இருக்கிறது
என்று தலையைக் காட்ட வேண்டும் என உறுதி செய்து கொண்டார். அந்த ரெண்டு மாச இடைவெளியில்
என்னமும் நடந்தால் நடந்ததுதான்.
அவர் அரசாங்க லோன் போட்டுக் கடன் வாங்கிக்
கட்டிய வீடு. ஆளில்லாமல் மாதக் கணக்கில் பூட்டிக் கிடந்தால் “பேய் வீடு” ஆகிவிடுமோ
என்பதாக ஒரு பயம் தேவையில்லாமல் வந்தது. சென்ற முறை போன போது ஒரு எலி செத்துக் காய்ந்து
கிடந்தது திண்ணையில். பூனை கொண்டு வந்து போட்டிருக்கும்போல…நாற்றம் குடலைப் பிடுங்கியது.
கதவைத் திறந்து, பெருக்கித் தள்ளி அள்ளி, தெருக்கோடியில் உள்ள குப்பைக் கிடங்கில் கொண்டு
போட்டு, இடத்தை ஃபினாயில் விட்டுக் கழுவி, அழுந்தத் துடைத்து நாத்தத்தைப் போக்குவதற்குள் போதும்
போதுமென்றாகிவிட்டது. வீட்டின் சுற்றுப் பகுதிகளில் வளமான குப்பை நிறைந்திருக்கும்.
அத்தனையும் கருவேலமரக் குப்பைகள், வேப்பிலைச் சருகுக் குப்பைகள். அடைந்து மழை நீர்
சேகரிப்பு சல்லடையை முழுதாக அடைத்து நிற்கும். கர்ம சிரத்தையாய்ப் பெருக்கி அள்ளிக்
கொண்டு போடுவார். மூணு வாளி நாலு வாளி தேறும். குறுக்கு விட்டுப் போகும். ஆள் போட்டு
எடுக்கலாமென்றால் ரெண்டாயிரத்தக் கொண்டா, மூவாயிரத்தக் கொண்டா என்கிறார்கள். மேனுவல்
லேபருக்குத்தான் இப்போது மதிப்பு ஜாஸ்தி.
தம்பிங்களா…தயவுசெஞ்சு இந்தக் கருவேல
மரத்தைக் கொஞ்சம் இந்தப் பக்கம் உள்ள பகுதியையாவது ஒட்ட வெட்டி விட்ருங்கய்யா…அநியாயத்துக்குக் குப்பை
விழுகுது…பெருக்கி அள்ளி முடில என்னால…..- என்று அவர்களிடம் பதவாகமாய்க் கேட்டுக் கொண்டார்.
மரியாதையாகத்தான் பதில் சொன்னார்கள்.
வெட்டிருவோம்ப்பா…இந்த வாரத்துல கண்டிப்பா வெட்டிருவோம்….என்றார்கள். அப்பா…அப்பா…என்று
அவர்கள் பேசிய விதம் அதற்கு மேல் இவரை வாய் திறக்காமல் செய்து விட்டது. அவர்கள் தண்ணியடித்தால்
என்ன, கஞ்சா இழுத்தால் நமக்கென்ன…மரியாதையாய்ப் பேசுகிறார்கள். அது போதும். பிறகு எதற்கு அவர்களைக் கண்டிக்க வேண்டும். கண்டிப்பது
போல் பேசினால் செய்ய நினைப்பதையும் செய்ய மாட்டார்கள். பக்கத்து வீடு. பிறகு எதுவும்
விபரீதம் பண்ணினால்? ஆளில்லாத இடத்தில் கேட்பதற்கு நாதியில்லை.
ஏற்கனவே வெராண்டாவில் வைத்திருந்த பிளாஸ்டிக்
வாளி, பிளாஸ்டிக் குப்பைக் கூடை, விளக்குமாறு என்று காணவில்லை. யாரிடமென்று போய்க்
கேட்பது? தொலையுது என்று விட்டு விட்டார். மீட்டர் பாக்ஸ் பெட்டி திறந்தே கிடக்கிறது.
அதில் கணக்கிலடங்கா எலிப்புழுக்கைகள். கரப்பான் ஓடுகிறது. அடையாய் ஒட்டடை. கணக்கெடுப்பவர்
திரும்பக் கதவைச் சாத்திக் கொக்கி போடுவதில்லை. வெய்யில், மழை என்று கெட்டுப் போகக்
கூடாது என்றுதான் பெட்டி போட்டது. அது இப்போது இந்த நிலையில். ஒவ்வொரு முறையும் சாத்திக்
கொக்கி போட்டுவிட்டுப் போவார். மறுபடி வரும்போது பப்பரப்பா…என்று திறந்தே கிடக்கும்.
யாரை என்னவென்று சொல்வது? திறந்தால் மூடணும் என்பதுதானே விதி?
எதிர் வீட்டுக்காரர் தினமும் வாசல் லைட்டைப்
போடவும் அணைக்கவுமாய் இருந்தார். அவருக்கும் அலுக்கத்தானே செய்யும். இப்போது செவ்வாய்
வெள்ளி மட்டும்தான் போடுறேன் சார்…என்றார். அதுவே பெரிசு. எல்லா நாளும் போடுங்க என்று
கண்டிஷனாகவா சொல்ல முடியும்? தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்ப்பதுபோல்?
வெளியாட்கள் யாரும் நுழையாமல் பார்த்துக் கொள்வதே பெரிது. அதுவே பெரிய உதவி.
வந்து, ஊருக்குத் திரும்பும்போது சந்தோஷமாப்
போயிட்டு வாங்க…வீ ட்டை யாரும் தூக்கிட்டுப் போயிட மாட்டாங்க…என்று தமாஷாய்ச் சொல்வார்.
சிரித்துக் கொள்வார் இவர். அந்த சிநேகம் நீடிக்கிறதே…அதுவே போதும்.
மாடிக்குப் போனால் மழைத் தண்ணீர் தேங்கிக்
கிடக்கிறது. இலைக் குப்பைகள் போய் நீர் வெளியேறும் சல்லடையை அடைத்துக் கொண்டு நிற்க,
தண்ணீர் குளமாகத் தேங்கி ….வீட்டிற்குள்ளே சீலிங்கில் ஈரம் பாலிக்கிறது. லாஃப்டில்
இவர் ஆசை ஆசையாய் வாங்கி அடுக்கி வைத்திருந்த எண்ணற்ற புத்தகங்கள் அனைத்தும் ஈரக் கசமாகி,
கருத்து நசிந்து போய்விட்டன. ஒரு முறை போன போது நுழைந்தவுடன் இந்தப் பேரதிர்ச்சி. மனசு
ஒடுங்கிப் போய்விட்டது இவருக்கு. நாள் முழுக்க சோகமாய் உட்கார்ந்திருந்தார். பெரிய
கண்ணாடி மர பீரோ வாங்கி நிறுத்தி அடுக்கலாம்தான். தம்பிடி வேண்டுமே? ஏற்கனவே புஸ்தகங்களுக்கு
அழுகுறது பத்தாதுன்னு இது வேறயா? விசாலாட்சி குரல் உயர்த்துவது போல் உணர்ந்தார்.
கொஞ்சம் கொஞ்சமாய்ப் படிப்போம் என்று
வாங்கி வாங்கி அடுக்கி வைக்கப் போக…வரும்போதும் போகும்போதும் சிலதைக் கொண்டு வைக்க,
பலதை எடுத்துச் செல்ல என்று சுமந்து சுமந்து செத்தவருக்கு…இந்த வேதனை தாள முடியாததாய்
இருந்தது.
இந்த மாச்சரியங்களுக்கெல்லாம் ஒரே தீர்வு
அங்கு திரும்ப வந்துவிடுவதுதான். ஆனால் நடக்க மாட்டேனென்கிறதே? தள்ளித் தள்ளிப் போகிறதே?
ஒரேயடியாய்த் தள்ளியே போய்விடுமோ?
அவனுக்கொரு கல்யாணம் பண்ணுவோம்…குடித்தனம்
வைப்போம்…நாம திரும்ப இங்க வந்திடுவோம்…. – இப்படிச் சொல்லித்தான் புறப்பட்டது. இப்பொழுது
என்னடாவென்றால் அந்த உறுதிமொழி காற்றில் கரைந்து விட்டது. அக்ரிமென்டா போட முடியும் இதற்கு?
பையன் அம்மா கோண்டு. தொட்டதெற்கெல்லாம்
அவனுக்கு அம்மா வேண்டும். ஆபீஸ் விஷயம் எல்லாமும் அம்மாவிடம்தான் பகிர்ந்து கொள்வான்.
தன் பெண்டாட்டியுடன் என்ன பேசுகிறான் என்பதே தெரியாது. அம்மாவிடம் இத்தனை நெருக்கமாய்
இருக்கிறானே என்பது அந்தப் பெண்ணுக்குப் பிடிக்குமோ என்னவோ? எந்தப் பெண்ணுக்குத்தான்
மாமியாரைப் பிடித்திருக்கிறது? அவ்வப்போது அர்த்தமில்லாத சண்டைகள் பின் ஏன் வருகின்றன?
வாரத்தில் ரெண்டு நாளாவது ரெண்டு பேரும் சண்டை போடாமல் இருந்ததில்லை. ஆனால் ஒன்று.
சண்டை இவளிடமிருந்து துவங்காது. அந்தப் பெண் லதாதான் எதையேனும் ஒன்றைச் சாக்குவைத்து
ஆரம்பிக்கும். மனசுக்குள் அதற்கு எரிச்சல்
என்பது துல்லியமாய்த் தெரியும். மனசுக்குப் பிடிக்கலைன்னா கை பட்டாக் குத்தம் கால்
பட்டா குத்தம்தானே?
ஏதாச்சும்
எனக்குப் பிடிச்சதைச் செய்துக்கலாம்னா கிச்சனுக்குள்ள நுழையவே முடியல….அங்க புழங்குறதுக்கு
ஸ்பேஸே இல்லை. எப்பப் பார்த்தாலும் நீங்க அங்கயே நின்னுட்டிருக்கீங்க…! இன்னொரு ஆள்
இருந்து வேலை பார்க்க முடியுதா அங்க? – என்று
ஆரம்பிக்கும். எந்தப் பொருள் எங்க இருக்குன்னு தேடித் தேடி எடுக்க வேண்டியிருக்கு.
என் இஷ்டத்துக்கு வச்சிக்க முடில…எதெதுக்குத்தான் அல்லல் படுறது? ஓயாத அலுப்பு. தீராத
புலம்பல்.
இவ்வளவும் தேவையா? பிடிக்கவில்லையென்றால் விட்டு
விலகி நிற்க வேண்டிதானே? அந்த இங்கிதம் வேண்டாமா? இங்கிதமாவது சங்கீதமாவது? என்றாள்
விசாலாட்சி.
இது உன் வீடு…நீ வேலை செய்றதை யாரு தடுத்தாங்க?
சுதந்திரமா வந்து நிற்க வேண்டிதானே? அதென்ன விலகல் மனப்பான்மை? கொஞ்சம் தள்ளிக்குங்கம்மா…நான்
இதைப் பண்ணிக்கிறேன்னா…உறாலுக்குப் போயிட்டுப் போறேன்…அதைச் சொல்ல உனக்கு ஏன் தயக்கம்?
நீ வர்றதப் பார்த்து நானா ஒதுங்கிக்கணுமா? உன் குறிப்பறிஞ்சு நான் நடக்கணுமா? இம்புட்டு
வயசுக்கு மேலே எனக்கு இது ஒண்ணுதான் குறைச்சல்…!சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலிதானே நீ…உனக்கு
என்ன இத்தனை ராங்கித்தனம்? அடக்க ஒடுக்கமா இருக்கத் தெரியாதா? நீ வந்தவ…நீதான் எங்களை அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கணும்…உன்
அடக்கமான இருப்பப் பார்த்து நாங்க உன்னை அட்ஜஸ்ட் பண்ணிப்போம். அந்தப் பக்குவம் எங்களுக்கு
உண்டு…முதல்ல நீ இந்த வீட்டுக்கேத்த மாதிரி நடக்கப் பழகிக்கோ…உன்னை மாத்திக்கோ..அதுதான்
உனக்கு நல்லது..இங்க உள்ளவங்களெல்லாம் உன் மனுஷாள்னு முதல்ல நினை… - சுள்ளென்று தெளிவாக,
விரிவாகத்தான் கூறினாள் விசாலாட்சி.
லதாவின் வாய் அடைத்துத்தான் போனது. மனசுக்குள்
புழுங்கிக் கொண்டேயிருக்கும் போல…! – என்று பெரிதாய் வெடிக்குமோ…? என்று எதிர்பார்த்திருக்க…அத்தனை
சீக்கிரம் ஆலாபனை ஆகும் என்று வீட்டில் யாரும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் ஆரம்பித்த
விதம்தான் தாறுமாறாய் இருந்தது.
என்னை உங்களுக்குப் பிடிக்கலை….உங்களுக்கும் பிடிக்கலை…அப்பாவுக்கும்
பிடிக்கலை…-எனக்குத் நல்லாத் தெரியுது…..
அப்டியா…இவ்வளவு நாள்ல இதுதான் நீ கண்டு
பிடிச்சதா? நீ மாறமாட்டே…! என்றாள் விசாலாட்சி. சண்டை ஆரம்பித்து விட்டது என்று உணர்ந்த
வேதாசலம் எப்போது உள்ளே புக வேண்டும் என்று காத்திருக்கலானார்.
பிடிக்கலேன்னா போயிட வேண்டிதானே…ஊருக்குப்
போயிடுங்கோ…நாங்க தனியே இருந்துக்கிறோம்…!
இந்த பாரும்மா…இதை நீ சொல்லக் கூடாது…அவன்
சொல்லணும்…புரிஞ்சிதா? கொஞ்சம் வாயடக்கமாப் பேசப் பழகிக்கோ….உன் நாக்குல வசம்ப வச்சித்தான்
தேய்க்கணும்…
வாயடக்கமா இருந்தாத்தான் தலைல ஏறி உட்காருவீங்க
போல்ருக்கே…?
ஓ…!அப்டியா? அத வேறே கண்டு பிடிச்சிட்டியா?
எத்தனை நாளைக்கும்மா அப்படி உன்னை விரட்டியடிச்சோம்…? இந்த வீட்டுக்கு வந்ததுலேர்ந்து
பொழுது பொழுதா நீதான் எங்க மேலே எரிச்சல் பட்டு பட்டுத் தெரிக்கிறே! அசூயையும் ஆங்காரமுமா…!
…புருஷன் இருக்கானே, அவங்க அப்பா அம்மான்னு ஒரு மரியாதை துளிக் கூட இல்லாம வாய்க்கு
வந்தபடி பேசுறே…! எங்களையே இப்படிப் பேசினேன்னா உன் புருஷனை எந்த அளவுக்கு மதிப்பேங்கிறது
தெரியுதே? அதான் அவன் ஒதுங்கி ஒதுங்கிப் போறான். எதிர்காலத்துல என்ன செய்வான்னு எங்களுக்குத்
தெரியாது. அதக் காப்பாத்திக்கோ…அப்ப நாங்க துணை நிற்க முடியாது…
சதா மூஞ்சியத் தூக்கி வச்சிக்கிறே? அதென்ன எப்பப்
பார்த்தாலும் கடு கடுன்னு எள்ளும் கொள்ளும் வெடிக்குது? மலர்ந்த முகமே கிடையாதா? இப்டித்தான்
உங்க பிறந்த வீட்லயும் இருந்தியா? நல்லா வளர்த்திருக்காங்கம்மா உன்னை….இன்னொரு வீட்டுக்குப்
போகுற பொண்ணை ரொம்ப லட்சணமாத்தான் வளர்த்திருக்காங்க….பிரமாதம்…..
என்னைப் பத்தி எது வேணாலும் பேசுங்க…எங்கப்பாம்மாவ
இழுக்காதீங்க….அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்….
இப்ப அப்டியா இருக்க? நல்லா யோசிச்சுப்
பாரு….உன்னை இந்த வீட்டுக்கு வந்த மகளா நினைச்சு எல்லாம் செய்திட்டிருக்கமே…அதுக்கு
நீ கொடுக்கிற மரியாதையும் மதிப்பும் இதுதானா?
அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்குத்
தனியா இருக்கணும்…இனிமே உங்களோட சேர்ந்து இருக்க முடியாது…அவ்வளவுதான்…!
யப்பாடீ…ஒரு வழியா முடிவுக்கு வந்திச்சே….அப்டியாவது
இது நடக்கட்டும். – அறைக்குள் ஒடுங்கியிருந்த வேதாசலம் திருப்தியடைந்தார்.
சண்டை அத்தோடு முடிந்தது. இனி மறு பேச்சின்றி
விசாலாட்சி தன்னோடு புறப்பட்டுத்தானே ஆக வேண்டும்…என்று மனசுக்குள் மகிழ்ந்திருந்தார்.
மறுநாள்……பொழுது விடிந்ததும் விடியாததுமாய் விசாலாட்சி ஒன்றைச்
சொன்னாள். அது யாரும் எதிர்பாராததாய் இருந்தது.
மோகன்….சீக்கிரம் ஒரு வீட்டை வாடகைக்குப்
பாரு….
எதுக்கும்மா….? இந்த வீடுதான் இருக்கே…அப்புறம்
என்ன? அதிர்ந்தவாறே வந்து அரக்கப்பரக்க நின்றான் மோகன்.
இந்த வீடு எங்க வீடு…நாங்க ரெண்டு பேரும்
சம்பாதிச்சு சேர்த்த பணத்துல வாங்கினது. நாங்க இங்கதான் இருப்போம். இங்கிருந்து கிளம்ப
முடியாது. இந்தச் சென்னைலதான் இருப்போம். உங்களுக்கு வேணும்னா நீங்க தனியாப் போயிக்கலாம்…ஆட்சேபணையில்லை…சீக்கிரம்
ஒரு வீட்டைப் பார்த்து கிளம்புற வழியைப் பாரு….இனி உன் பெண்டாட்டியோட நாங்க சேர்ந்திருக்கிறாப்ல
இல்லை….! உன் குடும்பம், உன் வீடு, உன் மக்கள்…கிளம்பு சீக்கிரம்…ரெடி ஜூட்…புரியுதா
நான் சொல்றது? – அதிர்ந்து நின்றான் மோகன்.
லதாவின் முகத்தில் ஈயாடவில்லை. அறையினுள் வேதாசலம் செய்வதறியாது சிலையாய் அமர்ந்திருந்தார்.
-----------------------------------




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக