சிறுகதை 'கருணை” தினமணி கதிர் 20.07.2025 பிரசுரம்
------------------
நான் என்ன செய்தேன் என்பது ப்ரியாவிற்குத் தெரியாது. இப்படித்தான் செய்ய வேண்டும் என்று உடனுக்குடன் முடிவெடுத்து விட்டேன். செய்தும் விட்டேன்.
அவளது
தேவையையும் பூர்த்தி செய்து விட்டேன். அத்தோடு முடிந்தது விஷயம். அவளைப் பொறுத்தவரை
அதுதான் சரி.
ஐயோ
பாவம்….என்றாள். அதற்கு மேல் உணர்ச்சி வெளிப்பாடு ஏதும் இல்லை. அது ஒரு செய்தி அவளுக்கு.
அவ்வளவே. பாவம் என்று மன ஆழத்தில் பரிதாபப்பட்டிருந்தால்
அதன் தொடர்ச்சியாக ஏதேனும் வெளிப்பட்டிருக்கும். அந்த நேரம் அவள் உள் வாங்கியது அவ்வளவுதான்.வீட்டு
வேலை டென்ஷனாகக் கூட இருக்கலாம். பாவம் சொல்லத்
தெரியாதவளா அல்லது பாவம் காட்டத் தெரியாதவளா?
குறைந்த
பட்சம்… அப்டியா…அப்போ இதை ஏன் வாங்கினீங்க? வெறுமே எடுத்திட்டுப் போகச் சொல்ல வேண்டிதானே?
என்றாவது கேட்டிருப்பாள். அப்படிக் கேட்பதற்கும் நெஞ்சில் ஒரு ஈரம் வேண்டும்தான். அந்தக்
கருணை அவளிடம் இல்லாமலில்லை. தாராளமாய் உண்டு. அவளை மீறி உண்டு.
கொடுக்க
வேண்டிதான். செய்ய வேண்டிதான். ஆனா அளந்து போடத் தெரியணும் …என்பேன் நான்.
அப்படி
நான் சொல்லும்போது சட்டென்று ஒன்றை உணரும் அவள் போனாப் போறது…என்பாள்.. நெஞ்சில் ஆழப்
படிந்திருக்கும் இரக்கச் சிந்தை. அது என்ன எனக்கு மட்டுமான சொத்தா?
ஏழு
கிலோ இருந்தது. எண்பத்தி நாலு ரூபா. இந்தா பிடி தொண்ணூறு…-நான் நீட்டியபோது சரி என்று
வாங்கி வைத்துக் கொண்டாள். சேரும் தினசரிகளை எடைக்குப் போட்ட காசு அது.
பின்னாடி
பிளாஸ்டிக்கெல்லாம் கிடந்ததே…அதையும் சேர்த்து எடுத்துப் போட வேண்டிதானே…?
கண்ணுல
பட்டதை எடுத்துப் போட்டேன். மற்றதை அடுத்தவாட்டி போட்டுக்கோ….
நா
வர்றதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு? இன்னைக்கு இல்லாட்டா நாளைக்குப் போட்டுக்கிறது…
ரொம்ப
நாளாச் சொல்லிட்டிருக்கே…இடத்தை ஒழிக்கணும்னு…பழைய பேப்பர் சேர்ந்து போச்சுன்னு…இன்னிக்குப்
பார்த்து அந்தப் பெரியவர் வந்தார். ஆள விட்டாப் பிடிக்க முடியாதுன்னு கூப்பிட்டுட்டேன்…!
அவர் குரலே கூப்பிட வச்சிட்டுது….-
அந்தக்
குரலில் எப்போதும் படிந்திருக்கும் ஒரு சோகம். அவர் முகத்தில் படர்ந்திருப்பதைப் போல.
ஏதோவொரு விதத்தில் என் தந்தையின் முகஜாடை அவருக்கு. முதன் முறையாகப் பார்த்தபோது கூட
புதிதாக என்று தோன்றவில்லைதான். ஏற்கனவே பழகியவரைப் போலத்தான் இருந்தார். பேசினார்.
லேசாய்த் தலை நிமிர்த்தி என்னை அரைப்பார்வை பார்த்து அவர் பேசிய விதம் என்னுள் என்னவோ
செய்தது. அந்தக் கண்களின் சோர்வு எவ்வளவு பேசுகிறது? வாழ்க்கையில் மிகுந்த துயரங்களை
எதிர்கொண்டவர்கள் அப்படித்தான் ஒடுங்கிப் போவார்கள்.அநேகமாக எல்லாவற்றிலும் ஒரு அமைதி
தவழும் அவர்கள் முகத்தில். அதுவே இயல்பு போல…!ஆனால் அது அனுபவம் தந்த பாடம்.
எல்லா
எடமும் கிலோ எட்டும்பாங்க…நான் அப்டிச் சொல்லமாட்டேன். இப்போ கிலோ பன்னெண்டு. கொரோனா
காலத்துல எட்டுக்குத்தான் போச்சி. அதையேதான் சொல்லி எடுப்பாங்க…அத்தோட தராசுலயும் கோளாறு
பண்ணுவாங்க….!
இவரிடம்
நிறுவை துல்லியம். பொய் கிடையாது. நீங்களே கணக்குப் பண்ணிக்குங்க…என்பார். நாம் சொல்வதைக்
கொடுத்து விடுவார். நம்பிக்கை. அதற்கு துரோகம் செய்யலாமா? ஒரு ரூபாய் ரெண்டு ரூபாயில்
என்ன அற்ப சந்தோஷம்? ஒரு எளிய மனிதன் நம் வார்த்தைகளை நம்புகிறானே? அது பெரிதல்லவா?
கூப்பிட்டு
மத்தியானம் வாங்கன்னு சொல்லியிருக்கலாமே? இல்லன்னா நாளைக்கு வாங்கன்னிருக்கலாம். இப்ப
அரையும் குறையுமாப் போட்டு…திரும்ப நான் ஒரு மாமாங்கம் காத்திருக்கணும்…. – அலுத்துக்
கொண்டாள் பிரியா. எதெதற்குத்தான் வருத்தப்படுவாளோ? எதையும் விட்டு உதறத் தெரியாத மனசு.
இந்தச்
சங்கடத்துக்காகத்தான் நான் உன் விஷயத்துல தலையிடுறதேயில்ல….என்னவோ பண்ணிட்டுப் போன்னு
விட்டுடறது…இப்ப இப்டிச் சொல்ற பார்த்தியா? அக்கறையாச் செய்தது தப்பாப் போச்சு ….-பதிலுக்கு
நானும்தான் அலுத்துக் கொண்டேன்.
ஆம்மா…இப்படிப்
பாதியப் போட்டுட்டு மீதியை வச்சிட்டா? அதென்ன பொக்கிஷமா? சேர்த்துச் சேர்த்து வைக்கிறதுக்கு?
இடத்த அடைச்சிக்கிட்டு…அப்பப்போ டிஸ்போஸ் பண்ணினாத்தானே? தேவையில்லாமப் பூச்சி பொட்டு
அடையவா? வீட்டுல எடம் எங்கயிருக்கு? கரப்பான் பூச்சி அடிச்சி மாளலை…! தினசரி அந்தக்
கொண்டாட்டம் வேறே!
எட்டடிக்
குச்சுக்குள்ளே முருகா எத்தனை நாளிருப்பேன்?..ஒரு மச்சு வீடு கட்டித் தாரும்….திருத்தணி
மலையின் வேலவனே…!
ஏண்டா
இதுல தலையக் கொடுத்தோம் என்று ஆகிப் போனது எனக்கு. அந்தப் பெரியவரிடம்தான் போடணும்
என்று சொல்வாள். வாசலில் எத்தனையோ பழைய பேப்பர்காரர்கள் போகிறார்கள்தான். பிடிக்காது
அவளுக்கு. இப்போதெல்லாம் யாரும் வாயால் கத்துவதில்லை. ரிக்கார்ட் பண்ணிப் போட்டு விடுகிறார்கள்.
அது நாலு தெருவுக்கு அலறுகிறது. போட நினைப்பவர்கள் அலெர்ட் ஆவார்களே!
பழைய
பேப்பர்…பழைய பிளாஸ்டிக்…பழைய மிக்ஸி, பழைய கிரைண்டர், பழைய டி.வி., பழைய லேப்டாப்,
பழைய வாஷிங்மெஷின், பழைய சைக்கிள், பழைய கம்ப்யூட்டர்….பழைய பாத்திரம்…
பழைய
தாத்தா….பழைய பாட்டி….என்பேன் நான். விழுந்து
விழுந்து சிரிப்பான் பேரன். அப்பா அம்மாவை விட்டு விட்டு எங்களோடு இருப்பவன். அந்தப்
பொடிப் பயலுக்கு எங்கிருந்துதான் என் காமெடி புரி
யுமோ? பழைய அம்மா, பழைய அப்பா…என்கும் அந்த மழலை….ச்சே…இதென்ன விபரீதம்…? என்று நிறுத்திக்
கொண்டேன். குழந்தைகள் படு புத்திசாலிகள் இந்தக் காலத்தில். அந்தக் காலத்தில் நாமெல்லாம்
மஷணையாய் இருந்தோம். மக்குப் பிண்டங்கள் அந்த வயசில்.
சத்தமான
சத்தம்தான் எங்கள் பகுதியில். மெயின்ரோடு கெட்டது போங்கள். எல்லாத் தள்ளு வண்டி வியாபாரிகளும்
எங்கள் ஏரியாவில்தான். போதாக் குறைக்கு குப்பை வண்டி வேறு. மக்கும் குப்பை…மக்காக்
குப்பை…! பிரிச்சுப் போட்டா நலமாகும்…! அது வராமல் முடியாதே…! எத்தனை பேர் பிரித்துப்
போடுகிறார்கள்? அவன்தான் பிரித்துக் கொள்கிறான்…!
சரி…விடு…நாளைக்குத்
திரும்ப வர்றாரா பார்ப்போம்…என்றேன் நான். ப்ரியா சமாதானமானதாய்த் தெரியவில்லை.
அவரே
ஆடிக்கொருவாட்டி அமாவாசைக்கொருவாட்டிதான் கண்ணுல படுவார். மாடில இருக்கிற நாம…அவர்தான்னு குரலறிஞ்சு கூப்டாலே
பெரிசு…நாம கூப்டுறது அவர் காதுல விழாமே எத்தனையோதரம் கடந்து போயிருக்கார்….எங்கேயிருந்து
கூப்பிடுறாங்கன்னு தெரியாம சுத்து முத்தும் பார்த்திட்டு போயிடுவார். பேப்பர் எடுக்க
வர்றாரா…சும்மா ஒரு ரௌன்ட் அடிக்க வர்றாராங்கிற மாதிரித்தான் இருக்கும். ஆனா ஒண்ணு…அவர்ட்ட
எடை கரெக்டா இருக்குமாக்கும். அதுதான் அவர எனக்குப் பிடிச்சுப் போச்சு. ஏமாத்த மாட்டார்….பழைய
ஆளு…வயசான மனுஷனா இருக்காரேன்னு வேற இரக்கமா இருக்குது…
.இன்னிக்கு
நா இருந்திருக்கலாம். கோயிலுக்குப் போயாச்சு….இனி எப்போ வர்றாரோ? ….?
பழசுகளப்
போட இம்புட்டு வியாக்கியானமா? அதான் சொல்றேன்ல…நாளைக்கு வந்தாப் பார்ப்போம்னு…! அத்தோட
விடு…..!!
எந்தவொரு
விஷயமுமே ரொம்பப் பேசி இழுத்தால் அலுத்துத்தான் போகிறது. நறுக்கென்று முடிக்காமல் ஜவ்வாய்
இழுப்பாள் சமயங்களில். நமக்கு அலுத்துச் சலித்து வரும்.
ப்ரியா
எங்கே என்று தேடினேன். பின்புறத்தில் மீதமிருந்த
பிளாஸ்டிக் பொருட்களைத் திரட்டி வாளியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
எடுத்து
வச்சிருக்கேன். அடுத்தாப்ல வர்றப்போ போடணும். அந்த எடத்தைக் கொஞ்சம் தண்ணி விட்டுப்
பெருக்கி அலசித் தள்ளிடுங்க….ஃபினாயில் கலந்து தெளிச்சு விடுங்க…
சரி
என்று தலையாட்டினேன். எதெல்லாம் சரியோ அவைகளுக்குத் தலையாட்டுவதுதானே சரி. வீட்டு மாமியை
மதிக்கவில்லையென்றால் அவன் என்ன மனுஷன்?
வாசலில்
பல்வேறு சத்தங்கள். அதே பழைய பேப்பர், பிளாஸ்டிக் சாமான், பழைய மிக்ஸி…..பழைய ….எத்தனை
பேர்தான வருவார்கள் இப்படி?
சத்தம்
கேட்குதே…போட்ருவமா இதையும்? – உற்சாகமாய்க் கேட்டேன். அவளைத் திருப்தி பண்ணுவது என்
வேலை.
ஒரு
நாளைக்கு ஒரு கொண்டாட்டம் போதும்….பேசாமக் கிடங்க….அவரே வரட்டும்…..-அடுப்பில் வைத்த
சட்டியில் சொய்ங்ங்ங்ங்……என்று பீறிடும் சத்தம். அடங்கிப் போனேன் நான்.
அடுத்த
முறை அந்தப் பெரியவர் வரும்போது என்னிடமுள்ள வார மாத இதழ்களையெல்லாமும் திரட்டிக் கொட்டிப்
போட்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
எல்லாத்தையும்
தூக்கிக் கிடாசுங்க….வீடம்புட்டும் புஸ்தகமா வச்சிட்டு…தூசி அடையுது…ஒரு தட்டுத் தட்டினா
அம்புட்டு தூசி அடையாப் பறக்குது….
அவள்
சொல்வதும் சரிதான். ஒரு இதழையாவது முழுதுமாய்ப் படித்திருப்பேனா? ஒவ்வொன்றிலும் தொட்டுத்
தொட்டு ஏதாச்சும் ஒண்ணு ரெண்டு. அத்தோடு சரி….கொடுக்கும் காசுக்கு அத்தனையையும் படித்தாக
வேண்டும் என்று கட்டாயமா?
எழுத்து
அழிஞ்சி போச்சுன்னா? படிங்க…படிச்சிடுங்க…என்று கிண்டல் செய்வாள் ப்ரியா.
அநியாயத்துக்குச்
சந்தாக் கட்டி, அநியாயத்துக்கு விரயம் பண்ணிக் கொண்டிருந்தேன் நான். பக்கத்து லைப்ரரியில்
கொண்டு கொடுக்க முனைந்தபோது அங்கேயும் சில வந்திருந்தன. வராததைக் கொடுக்க எத்தனித்தபோது
வேண்டாம் சார்…பிரச்னை வரும்…என்று விட்டது அந்தப் பொம்பளை லைப்ரரியன். எதுக்குப் பயந்ததோ?
ஒருவேளை இதழ்களின் அட்டைப் பட நிறங்கள் பயமுறுத்தினவோ என்னவோ?
அதுவே
பத்துப் பதினஞ்சு கிலோவுக்கு மேலே தேறும் போலிருக்கே…வர்ற
காசு வள்ளிசா எங்கிட்ட வந்திரணுமாக்கும்…நான் காய்கறி வாங்க வச்சிப்பேன்…தெரிஞ்சிதா?
உத்தரவு….!
உங்கிட்டக்
கொடுக்காம வேறே யார்ட்டக் கொடுக்கப் போறேன்? அந்தக் காசை வச்சிட்டு நான் என்ன செய்யப்
போறேன்? அதிக பட்சம் வெளில போனா ஒரு டீ குடிப்பேன். அதுக்கு மேலே எனக்கு செலவு பண்ணத்
தெரியாது. சேகரிச்சிதான் பழக்கம். செலவு பண்ணி இல்லே…!
போதும்
உங்க குலப் பெருமை…! உங்க ரூமை ஒழிங்க முதல்ல…! -அதிலேயே குறியாய் நின்றாள். புத்தகமாய்
வாங்கி அடுக்கியிருப்பது அவளுக்கு அநியாயத்திற்கு உறுத்தியது. அது பொக்கிஷம் என்று
ஏனோ தோன்றவில்லை.
முப்பது
வருஷத்திற்கு மேல் தாம்பத்யம் கழிந்து போனது. காலமும் கட்ட வண்டியாய் ஓடிப் போனது.
பையன் வயது இருபத்தைந்து. அவன் இருக்கிறான் வெளிநாட்டில் தன் மனைவியோடு. எப்பொழுதாவது பேசுவான். யாரிடம்? அவன் அம்மாவிடம்.
இவள் இங்கிருந்தே ஃபோனில் முத்தம் கொடுப்பாள்.
இதென்ன
அசிங்கம்? உன் பையனுக்கு கழுத வயசாச்சு….ரொம்ப செயற்கையா இல்ல? அந்தப் பொண்ணு வேறே
இருக்கு பக்கத்துல…அத நினை…!
இருந்தா
என்ன…காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு…..
அரதப்
பழசு…பொன் குஞ்சா இருக்கானோ அல்லது மண் குஞ்சா இருக்கானோ? விபரீதமா ஏதும் நினைச்சிக்காதே…சாப்பாடு,
தூக்கம், சூழ்நிலை, வானிலை ஒத்துக்காமே மண்ணு மாதிரிக் கறுத்து வாடிப் போயிருந்தான்னா?
அதச் சொன்னேன்….! அவன் பெண்டாட்டியும்தானே பாவம்…!
உங்க
திருவாய மூடிட்டு இருங்க…எல்லாம் நல்லாயிருப்பாங்க…சொல்லிக்கொண்டே கூட ரெண்டு தரம்
பச்சு பச்சு என்றாள். என்ன அம்மாவோ…என்ன பிள்ளையோ…?
அந்தப் பெண்ணுக்கு மனசு ஏங்காமல் இருக்க வேண்டும். இப்படித் தோன்றியது எனக்கு.
எடுத்து
வச்சாச்சா எல்லாத்தையும்? – கேட்டுக் கொண்டே என் அறைக்கு வந்தாள் ப்ரியா.
யப்பாடீ…இப்பத்தான்
இந்த ரூமுக்குள்ளயே காத்து நுழையறது நல்லாத் தெரியுது….வெராண்டாவுல கொண்டு வச்சிடுங்க…ஒதுக்கலா
இருக்கட்டும்…வேலைக்காரம்மா வந்தவுடனே உங்க
ரூமைக் கூட்டித் துடைக்கச் சொல்றேன்….
மெழுகச்
சொல்றேன்னு சொல்லு…!
மண்
தரையைத்தான் மெழுகுவாங்க…இது கூடத் தெரில….!! -ஒரு நாளைக்கு எத்தனை குட்டுத்தான் வாங்குவது
அவளிடம்.
படிக்காத
இதழ்களையெல்லாம் அள்ளி எடுத்துக் கொண்டு போய் வாசலில் மாடிப்படியருகே அடுக்கினேன்.
என்ன
அமிர்தம் சார்….உங்க சொத்தையெல்லாம் அள்ளிட்டு வந்திட்டீங்க…போல…? -பக்கத்து வீட்டு
முத்திருளாண்டி கேட்டுக் கொண்டே சங்கடத்தோடு பார்த்தார்.
என்ன
பண்றது? மனசில்லாமத்தான் போடறேன்…நீங்க வேணும்னா உங்களுக்கு வேணுங்கிறதை எடுத்துக்குங்க…!
இருக்கட்டும்
இருக்கட்டும்…உங்க புஸ்தகமெல்லாம் வேறே மாதிரியில்ல இருக்கும். நமக்கு வாரப் பத்திரிகைதான்…அது
போதும்….
வேறே
மாதிரின்னா? கோணின்டிருக்குமா? என்ன சொல்றார்? கேட்டதே தப்பாப் போச்சு…! -நினைத்துக்
கொண்டேன்.
அய்யா…மொத்தம்
ஏழு கிலோ இருக்குது…பார்த்துக்குங்க…எரியும் பச்சை விளக்கு எண்களைக் காண்பித்தார் அவர்.
ஏழு பன்னெண்டு எண்பத்தி நாலு….-என்றார் கூடவே….
பார்க்கிறதென்ன…நீங்க
சொன்னாச் சரிதான்…..அப்புறம்….?
அப்புறமென்னங்க…இன்னைக்குக்
காலைல ஒண்ணு நடந்து போச்சுங்கய்யா….ஊர்ல…
என்ன?
– கூர்மையாய் அவர் முகத்தைப் பார்த்துக் கேட்டேன்.
ரொம்பவும் வாடியிருந்த அந்த முகம் என்னவோ சொல்லிற்று.
என்னை
அவர் சற்றே நிமிர்ந்து நோக்கிய அந்தக் கணம் கண்கள் கலங்கியிருப்பதைக் கண்டேன்.
என்
பையனுக்கு ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சுங்கய்யா…..!
ஐயைய்யோ….அப்புறம்…..?-
எனக்கு உடம்பு பதறித்தான் போனது.
சொல்லியவர்
மேற்கொண்டு தினசரிகளை சாக்கில் அள்ளி எடுத்து வைக்க முடியாமல் அப்படியே உட்கார்ந்து
விட்டார். அத்தனையும் அவர் மடியில் சரிந்திருந்தன.. ஆள் சட்டென்று உடைந்து போனார்.
இப்பத்தான்
இந்தத் தெருவுல நுழையைல…ஃபோன் வந்திச்சு…..என்னா புள்ள ….இன்னைக்குக் காலைலதா நா வந்திறங்கினேன்…அதுக்குள்ளயும்
இப்டிச் சொல்றியேன்னேன்..ஆஸ்பத்திரில சேர்த்திட்டியான்னு கேட்டேன்….-சொல்லி முடிக்கவில்லை.
வார்த்தைகள் வராமல் தடுமாறினார். நெஞ்சு வெடித்து அழுதது என்னைக் கலங்கடித்தது.
சேர்த்திட்டாங்களா….?
என்ன சொன்னாங்க…மேற்கொண்டு ?
செத்துட்டானாம்ங்கய்யா….லாரி
அடிச்சி…தொலவுக்கு இழுத்திட்டுப் போயிடுச்சாம்…மொபெட்டே
நசுங்கிப் போயிடுச்சாம்…..
அடப்
பாவமே…! ஐயோ…கடவுளே….ஏன் இப்டி நடந்திது…? -என் உடம்பு பதறியது. வயிற்றைக் கலக்கியது.
திடீரென்று ஏதோ அமிலம் சுரந்தது போலிருந்தது. தலை திடீரென்று சூடானது. கண்கள் திரையிட்டன.
அப்பா ஞாபகம் வந்து விட்டது எனக்கு. துக்கமான நேரங்களில் சட்டென்று மனதில் வந்து நிற்பவர். அப்பா…அப்பா…..!!!
ஈஸ்வரா….!
ஏனிப்படி இவருக்கு இந்தத் துயரத்தைக் கொடுத்தாய்? என்ன சொல்வதென்று தோன்றாமல் வாயைப்
பொத்திக் கொண்டு கலங்கி நின்றேன் நான்.
துண்டை
முகத்தில் போட்டுக் கொண்டு அழுது கொண்டிருந்தார். அமைதியாய் எதிரே நின்றேன்.
இப்பத்தான்
டிரை சைக்கிளைக் கிளப்பிட்டு வந்தேன். அதுக்குள்ளயும் இப்டி…திரும்பவும் நா உடனே திருநவேலி போகணும்…எங்க இருக்கு பாருங்க…?
போகணுமே…போயாகணுமே…!
சரி…எல்லாத்தையும் எடுத்திட்டீங்களா…கிளம்புங்க….தாமதிக்காதீங்க…இப்போ உங்களுக்கு வண்டி
இருக்குமா?
மதியம்
ரெண்டு மணியப்போல இருக்குங்கய்யா…அதுலதான் போகணும்…ராத்திரி பத்துக்கு மேல ஆயிடும்….
கொஞ்சம்
இருங்க வர்றேன்…..சொல்லிவிட்டு உள்ளே ஓடினேன். பர்சில் இருந்த பணத்தை உருவிக் கொண்டு வந்து நீட்டினேன்.
இது போதுமா? என்றேன்.
நாலு
வீடு தள்ளி ஒரு அம்மா இருக்காங்க…அவுங்களும் கொடுத்தாங்க…போதும்ங்கய்யா….உங்க ஒதவிக்கு
ரொம்ப நன்றி….-கையெடுத்துக் கும்பிட்டு காலில் விழப் போனார்….தோளைப் பிடித்துத் தடுத்து
நிறுத்தினேன்.
நீங்க
என்ன…கால்லெல்லாம் விழுந்திட்டு? என் தகப்பனார்
வயசு உங்களுக்கு? கிளம்புற வழியப் பாருங்க….! கடவுள் உங்களுக்கு வேணுங்கிற மன தைரியத்தக்
கொடுப்பார்…பத்திரமாப் போயிட்டு வாங்க…! கவனம்….
இதுக்குப்
பைசாங்கய்யா…. – சொல்லியவாறே…பேப்பர் மூட்டையைக் காண்பித்தார். அந்த நேரத்திலும் அவரது
இந்தக் கேள்வி என்னை ஆச்சரியப்படுத்தியது.
அது
கெடக்கு விடுங்க…கொண்டு போங்க….என்றேன். அவர்
தடுமாறியவாறே கிளம்பினார். கவனமாப் படியிறங்குங்க…என்றேன் பயந்தவாறே…! பேப்பர் மூட்டை
முதுகில் ஆளைத் தள்ளியது.
பழைய
பேப்பரு…பொஸ்தகம், நோட்டு…இரும்பு…பிளாஸ்டிக்கு…..! – அந்தப் பகுதியில் அவரின் அந்தப்
பழகிப்போன பலகீனமான தழைந்த குரல் கடந்த நான்கு
நாட்களாய்க் கேட்கவில்லை. வேறு யார் யாரோ வந்து போகிறார்கள். டிரை சைக்கிளில் வழக்கம்போல் பாடல்கள் அலறிக் கொண்டே
தொடர்ந்து நகர வீதிகள் சத்தமாய் விரிகின்றன.
…..….ஒருத்தருக்கா
கொடுத்தான்…இல்லை ஊருக்காகக் கொடுத்தான்….-என்றும் அழியாத கண்ணீர் வரிகள்….!!.
என்
மனது அவரின் மறு வரவை எதிர்பார்த்துக் காத்துக்
கிடக்கிறது. தொலவிலிருந்து வர்றேன். எப்போதோ சொன்னது ஞாபகமிருந்தது. நெல்லையிலிருந்து
வந்துவிட்டாரா? அதுவே தெரியாதே?
வர்றபோது
வரட்டும்…அவர்ட்டத்தான் போடணும்…வேறே யார்கிட்டயும் போட்டுடாதீங்க….எனக்குத் தெரியாமே….!
– ப்ரியா உறுதியாய்ச் சொல்லியிருந்தாள். அவளுக்கு நடந்தது எதுவும் தெரியாது.
ஆனால்
அவர்பால் இருந்த கருணையை என்னால் நன்கு உணர முடிந்தது அந்தக் கணத்தில். நாங்கள் இருவருமே காத்திருக்கிறோம் அவரின் துயர்
கலைந்த அந்தக் கணத்தின் வருகைக்காக…!!
--------------------------